நெஞ்சோடு காதல் சேர 30

அத்தியாயம் 30

மென்னிலாவிடம் பேசிவிட்டு வம்சி அறைக்குள் வரும்போது வருண் தேவிகாவிடம் அனைத்தும் தெரிந்து கொண்டு பேச்சினை முடித்துக் கொண்டிருந்தான்.

வம்சியை பார்த்ததும் தேவியிடம் சொல்லிவிட்டு கால் கட் செய்தவன்,

“என்னால் நம்பவே முடியல வம்சி. மென்னிலா அத்தை மகள்” என்றவன் “அத்தை காதலினால் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காங்க!” என்று வருத்தம் அடைய,

“காதலினால் அல்ல விசாலத்தினால்” எனத் திருத்தினான் வம்சி.

“நீ சொல்லுவதும் சரிதான்” என்ற வருண் “இப்போ என்ன செய்யப்போகிறோம்?” எனக் கேட்டான்.

“தாத்தாவிடம் பேசிவிட்டு ஒரு முடிவு எடுக்க வேண்டும்” என்று வம்சி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர்களின் அறை கதவு தட்டப்பட்டது.

வருண் எழுந்து சென்று கதவினை திறந்து பார்க்க… திரிலோகர் நின்று கொண்டிருந்தார்.

“வாங்க தாத்தா.” அவர் உள்ளே வர வழிவிட்டு விலகி நின்றான்.

“ரூமில் லைட் ஒளிர்ந்ததேன்னு வந்தேன். இன்னும் ரெண்டு பேரும் தூங்காமல் என்ன பண்றீங்க?” கேட்டவர் அங்கிருந்த கோச்சில் அமர்ந்தார்.

“அத்தை” என்று ஒற்றை வார்த்தை மொழிந்த வம்சி, தன்னிடம் அழகு கொடுத்த புகைப்படத்தை திரிலோகரிடம் நீட்டினான்.

வாங்கி பார்த்தவரிடம் எவ்வித பாவனையும் இல்லை.

அவரின் அமைதியே அவருக்கு எல்லாம் முன்பே தெரியுமென்று யூகித்திருந்தான் வம்சி.

வம்சி யூகித்ததை வருண் அவரிடம் கேட்டு உறுதி செய்தான்.

“எல்லாம் உங்களுக்குத் தெரியுமா தாத்தூ.”

ஒப்புக்கொள்வதைப்போல் ஒரு பார்வை அவரிடம்.

“இந்த சம்மந்தம் வந்தது கூட உங்களால் தான் இல்லையா?” வம்சி உண்மையை கண்டு கொண்டான்.

வம்சி கேட்டதில் வருணுக்குத்தான் அதிர்ச்சி.

“தாத்தஆஆ…!”

திரிலோகரிடம் மௌனம் மௌனம் மட்டுமே! வம்சியும் அவரும் ஒருவரையொருவர் ஆழ்ந்து நோக்கினர்.

“ஏன் தாத்தா இப்படி செய்தீங்க… உங்களால் தான்… எல்லாம் உங்களால் தான், இப்போ பாருங்க ஜோடி மாற்றி தவிக்கிறோம்” என்று படப்படத்தான் வருண்.

“எல்லாம் சரியாகிவிடும் வருண்.” அமைதியான திடமான பதில் அவரிடம்.

“எப்படி?”

“காதல் செய்பவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் மார்க்கமின்றி இருக்கும்போது நான் தானே ஏதேனும் செய்தாகணும்” என்று வம்சியை குறிப்புட்டு சொல்லியவர்,

“அதுக்காக மட்டுமில்லை…” என்று இருவரையும் ஒருமுறை உற்று நோக்கியவர் “அழகு என்னிடம் கேட்டுக் கொண்டாள்” என்று விரிவாகக் கூறினார்.

திரிலோகர் ஒரு வருடத்திற்கு முன்பு மகள் வீட்டோடு வந்ததற்கு காரணமே அழகு தான். தன்னுடைய வரவு பேரன்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுதவிருக்கிறதென்று அவருக்கே அப்போது தெரியாது. ஈஸ்வர் குடும்பத்தை பொறுத்தவரை அவர்களின் மீது நலன் கொண்டு ஆலோசனை வழங்கும் ஒரே உறவு திரிலோகர் மட்டும் தான்.

அதனாலேயே அழகு அவரிடம் முக்கியமான விடயம் பேச வேண்டுமென்று வரவழைத்திருந்தார்.

ரயில் நிலையத்திற்கு தன்னை அழைக்க வந்த வம்சியின் முகத்தை வைத்துதான் அவன் பின்னாளில் காதலினால் தவிக்க இருக்கின்றான் என்பதை கிரகித்தார்.

திரிலோகர் தன்னுடைய அழைப்பை ஏற்று வந்ததில் தனது கவலைகள் எல்லாம் விரைவில் சரியாகி விடுமென்று சந்தோஷம் கொண்ட அழகு தன் காதல் மண வாழ்க்கையில் தான் பெற்ற அனுபவங்களை கூறி…

“என் மகளை நினைத்து தினம் தினம் என் நெஞ்சம் முள்ளாய் குத்துது மாமா! எப்படியாவது என்னுடைய கடைசி கால வாழ்க்கையில் எனக்கு மன நிம்மதி தாங்க” என்று அவரின் கரம் பற்றி அழுதார்.

“உன் மகளை நான் உன்னோடு சேர்த்து வைக்கின்றேன்” என்று உறுத்தியளித்தவர் அடுத்த பத்து நாட்களில் ராஜனின் குடும்ப வரலாற்றையே தன் கையில் கொண்டு வந்திருந்தார்.

மென்னிலாவைப் பற்றி அறிந்து கொண்டவர், “இப்போது அவள் அங்கு நலமாக இருக்கின்றாள். உன்னுடன் வரும் காலம் விரைவில்” என்று அழகுக்கு நம்பிக்கை அளிக்க… “என் மகள் நான் பிறந்த வீட்டில் வாழ வேண்டும்” என்று கேட்டுக்கொள்ள… அப்போது வம்சியின் காதல் மென்னிலா தான் என்று அறியாதவரின் அவளின் படிப்பு முடியும் வரை சற்று பொறுமையாக இரு என்று அழகுவை அமைதிப்படுத்தினார்.

ஆனால் அதற்குள் ரத்தினத்தால் அவர்களின் குடும்பத்தில் பல மாற்றங்கள் நிகழ திரிலோகர் அதில் மூழ்கிப்போனார்.

நாட்களும் விரைந்து சென்றிருந்தது.

அழகுவிற்கும் விபத்து ஏற்பட்டிட… அதில் அவர் தன் கை, கால்களின் செயல்களை இழந்தார். விபத்தில் தொண்டை பகுதியில் கண்ணாடி துகள் குத்தியதால் பேச்சினையும் இழந்தார்.

இந்நிலையில் அழகுவை எப்படி அவரின் குடும்பத்தார் முன்பு கொண்டு சொல்வதென்று திரிலோகர் கவலையில் இருக்கும் சமயம்… ஈஸ்வர் வருணின் திருமணப்பேச்சினை துவங்க அதனை அழகுவின் வேண்டுகோளுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டார் திரிலோகர்.

ஏற்கனவே ராஜன் மென்னிலாவுக்கு வரன் பார்க்க துவங்கியிருக்க… ராஜனின் தரகரிடம் சொல்லி வைத்திருந்தார் திரிலோகர்.

அதன்படி அனைத்தும் ஒத்து வந்து பெண் பார்க்கும் படலத்திற்கு முந்தைய நாள்… இறைவனின் துதியில் திரிலோகர் ஆழ்ந்திருந்த போதுதான் அவர் பெற்ற ஞானத்தால் வம்சியின் அடுத்தகட்ட வாழ்வைப் பற்றி அறிந்தவர் அதிர்ந்தார்.

அதுவரை வம்சியின் காதல் அன்று ரயில் நிலையத்தில் சந்தித்த ஏதோ ஒரு பெண்ணென்று அவர் நினைத்திருக்க இன்று அது மென்னிலா என அறிந்து கொண்டவருக்கு அவர்களின் நிலையும் தெரியவர… இதனை அதன் போக்கில் கொண்டு சென்று தான் தீர்வு காண வேண்டுமென எண்ணியவர் இறைவனின் மீது பாரத்தை ஏற்றிவிட்டு வருணிற்கு மென்னிலாவை பார்க்க அழைத்துச் சென்றார்.

இதில் அவரும் நினைத்திடாத ஒன்று வருண் தேவிகாவின் காதல்.

‘இவர்கள் காதலில் சேர்வதற்குத்தான் இந்த படலம் நிகழ்ந்ததோ’ என்று ஆறுதல் கொண்டார்.

அப்போதுதான் அவருக்கு ஒன்று புரிந்தது… வம்சி அமைதியாக இருக்கும் வரையில் அவன் நிலாவை தேடப் போவதில்லை என்பதால் தான் இவ்வழியில் அவர்களை சேர்க்க விதி நினைக்கிறது என நம்பினார்.

அதனால் நடப்பதை அதன் போக்கில் விட்டுவிட்டார்.

எல்லாவற்றையும் சொல்லியவர்,

“இதில் நான் நினைத்த ஒன்று தவறாகிப் போனது ஈஸ்வர் மட்டும் தான்.

என்ன தான் தங்கையின் காதலினால் காதல் என்றாலே வெறுப்பாக இருக்கும் ஈஸ்வர் மகனின் விருப்பம் என்று வரும்போது அதனை ஏற்றுக் கொள்வானென்று நினைத்தேன். ஆனால் இப்போது அவன் தான் தடையாக இருக்கின்றான். இல்லையென்றால் பெண் வீட்டாரிடம் எப்படியாவது எடுத்து சொல்லி மாறி நிற்கும் ஜோடிகளை சரியாக சேர்த்து விடலாம்” என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

“அத்தைக்கு திருமண ஏற்பாடு தெரியுமா?” வம்சி வினவினான்.

“அவர் உணர்ச்சிவசப்படும் நிகழ்வுகள் எதுவும் சொல்லக் கூடாதென மருத்துவர் சொல்லியிருக்கிறார். அதனால் அவள் மகளென்று குறிப்பிடவில்லை. எப்படியும் வசந்தி வருணுக்கு திருமணம் நிச்சயத்திருப்பதை சொல்லியிருப்பாள்” என்றவர், “உனக்காவது எப்படியும் அவள் மகளினை முடித்து வைத்து விடுவேனென்று என்னிடம் இதைப்பற்றி கேட்கவில்லை என நினைக்கிறேன்” என்றார்.

“அதனால் தான் நான் மென்னிலாவைப் பற்றி அறிந்து கொள்வதற்காக இந்த போட்டோவை காட்டியிருப்பார்கள்.” வம்சி அழகுவின் எண்ணத்தை கண்டு கொண்டான். திரிலோகரும் ஆமென்றார்.

அதுவரை ஏதோ யோசனையில் இருந்த வருண்,

“நாங்க ஆசைப்படுவது போல்… அப்பாவிற்கும் எவ்வித சந்தேகமும் வந்துவிடாமல் திருமணம் நடக்க என்னிடம் ஒரு யோசனை இருக்கிறது” என்று சொல்ல… திரிலோகருக்கும் அதுவே சரியெனப்பட்டது.

“தாலி கட்டி முடித்ததும் ஈஸ்வரால் ஒன்றும் செய்ய முடியாது” திரிலோகர் வருணின் திட்டத்திற்கு உடன்பட வம்சி யோசனையில் இருந்தான். இருப்பினும் அவனுக்கும் வேறு மார்க்கம் தெரியாததால் அவர்களின் யோசனைக்கு அரை மனதாக சம்மதித்தான்.

“எப்படியும் ஈஸ்வர் நாளை வம்சிக்கும் திருமணம் என்பதை தான் பேசுவான். அப்போது தெரிந்ததைப்போல் காட்டிக்கொள்ளாதீர்கள்” என்ற திரிலோகர் அவர்களை மேலும் சிந்தித்து குழப்பிக் கொள்ளவேண்டாமென்று சொல்லிச் சென்று விட்டார்.

“இது எனக்கு சரியாகப்படல வருண்.” திரிலோகர் சென்றதும் வம்சி தன் விருப்பமின்மையை கோடிட்டுக் காட்டினான்.

“எப்பா சாமி… எனக்கு அப்பாவின் மனம் மாறுமென்றெல்லாம் நம்பிக்கை இல்லை. இதுதான் சரி வருமென்று தோன்றுகிறது. அப்படி இல்லையென்றால் உனக்கு வேறு வழி இருந்தால் சொல்” என்ற வருண்,

“இது ஒன்று தான் வழி” எனக் கூறினான்.

வம்சியாலும் அதனை மறுக்க முடியவில்லை.

****

மறுநாள் காலை…

‘தன்னுடைய மனதிலிருப்பதை சொல்லுவதற்கு கூட தனக்கு ஆளில்லையே’ என்று எண்ணிய ஈஸ்வர் “அழகுவிடம் சொல்லலாம், இப்போதைக்கு அவள் மட்டும் தான் என்னுடைய பேச்சிற்கு எவ்வித மறுப்பும் சொல்லப் போவதில்லை” என்று அழகுவின் அறைக்குச் சென்றார்.

அத்தோடு அவருக்கும் தன் மகன்களின் திருமணத்தைப் பற்றி தன் தங்கையிடம் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று இருந்தது.

ஈஸ்வரை கண்டதும் அழகுவின் முகம் புன்னகையைக் காட்டியது.

காலை எப்போதும் அழகுவை பார்க்க வருவதைப்போல் இன்றும் வந்திருக்கிறாரென்று அழகுவிற்கு கஞ்சியினை புகட்டிக் கொண்டிருந்த வசந்தி எண்ணினார்.

தங்கையை பார்த்தவாறே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார்.

வசந்தி தன் வேலையை முடிக்க…

“நான் கொஞ்சம் அழகுவிடம் பேச வேண்டும்”  என்றார் வசந்தியிடம்.

வசந்தி என்ன ஏதென்று கேட்காது… உடனடியாக சென்றுவிட்டார்.

அழகுவின் அருகில் இருக்கையை இழுத்துப்போட்டு அமர்ந்தவர், “என் மனதில் இருப்பதையெல்லாம் யாரிடமாவது சொல்ல வேண்டும் போலிருக்கிறது” என்றார்.

சொல்லுண்ணா எனும் விதமாக அழகு வாயசைக்க ஈஸ்வர் பேசத் தொடங்கினார்.

“வம்சியின் மீது தனக்கு இருப்பது கோபமில்லை குற்றவுணர்வு தான்” என்று சொல்லியவர், “அவனிடம் இறங்கிச் செல்ல இன்றளவும் மனம் வரவில்லை” என உண்மையை ஒப்புக் கொண்டார்.

“இதை யாரிடமும் சொல்ல விருப்பமில்லாத எனக்கு உன்னிடமாவது சொன்னால் கொஞ்சம் மனபாரம் குறையுமென்று சொன்னேன்” என்றார்.

அழகுவும் புரியுது என்பது போல் புன்னகைத்தார்.

அதன் பின்னர் வருணுக்கு சென்று பெண் பார்த்ததை ஆரம்பித்தவர், பெண்ணின் குடும்பத்தைப் பற்றி சொல்ல சொல்ல அழகுவின் கண்கள் சந்தோஷத்தில் அகலமாக விரிந்தது. அதுவே அவரின் விருப்பத்தைக் காட்ட, நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கையின் முகத்திலிருக்கும் மகிழ்வை கண்டு தானும் மகிழ்ந்தார்.

ராஜன் அவர்களின் இரண்டாவது மகளையும் நம்ம வீட்டிற்கே அனுப்பி வைக்க கேட்டார்கள் என்றதோடு அவரின் மரியாதைப் பண்பையும், தன்மையான பேச்சினையும் சிலாகித்துப் பேச அழகுவிற்குள் சிறு அதிர்வு. கைகளில் நடுக்கம் ஓடியது.

‘தன் கணவருக்கு இரண்டாவது திருமணமாகி, அதில் பெண்ணும் இருக்கிறதா?’ மனதால் அதிர்ந்தவரின் விரல்கள் மெல்ல அசைந்து கொடுத்தன.

“உங்கள் மகனுக்கு உங்களது விருப்பப்படியே வேறு திருமணம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.” விசாலத்திடம் அழகு சொல்லிச் சென்ற வார்த்தைகள் தான். ஆனால் அது உண்மையாகியதை எண்ணி இன்று வருந்தினார்.

காதலித்து கரம் பிடித்த கணவன் இன்னொருத்திக்கும் கணவன் என்பதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

மனதில் ஒருவித வலி எழும்ப, கைகளினால் மெத்தை விரிப்பை இறுகப்பற்றினார்.

அப்போதுதான் அழகுவின் மாற்றத்தை கவனித்த ஈஸ்வருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. பின்னே செயல்களை நிறுத்தியிருந்த அழகுவின் கைகள் தன்னுணர்வு அடைந்திருந்தனவே!

ஈஸ்வர், “வசந்தி” என்று கத்திய கத்தலில் அங்கு வந்த அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால் அழகு மட்டும் வருத்தத்தில்.

“நான் இப்போதே டாக்டரை வர சொல்கிறேன்” என்ற ஈஸ்வர் போன் செய்ய அவ்விடம் விட்டு நகர்ந்தார்.

திரிலோகரை கை அசைத்து அருகில் வரச்சொல்லிய அழகு… தன் காற்றாகிப் போன குரலில், “அண்ணன் சொல்லுவது… என் பொண்ணு… வருண்” என்று தொடக்கமில்லாது திணற, அவரின் வாயருகே குனிந்து என்ன சொல்லுகிறாரென்று கேட்ட திரிலோகர் ஆமென்று கூறினார்.

ராஜராஜனின் இரண்டாவது திருமணத்தை அழகுவால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், தன் மகள் தன்னுடைய அண்ணன் வீட்டு மருமகள் என்ற ஒன்றே அழகுவை அமைத்திகொள்ள செய்து மனதிற்கு நிம்மதியை அளித்தது.

“அண்ணாவுக்கு அவர்கள் தான்… தெரியுமா?” அழகு இதனை கேட்பதற்குள் திணறிப்போனார்.

இல்லையென்று தலையசைத்த திரிலோகர்… தன்னுடைய பேரன்களின் காதல் கதையை மடமடவென்று சொல்லி,

“இப்போது ராஜராஜனைப் பற்றி தெரிந்தால் ஈஸ்வர் திருமணத்தையே நிறுத்தி விடுவான். அதனால் பாதிக்கப்பட போவது இவர்களது காதல் தான்.

எனவே, பிறகு மெதுவாக எடுத்து சொல்லிக் கொள்ளலாம்” என்றார்.

அழகுவும் அதனை ஏற்று… நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதில் எழுந்த நிம்மதியால் அமைதியாகக் கண்களை மூடி தன் சந்தோஷத்தை கிரஹிக்க முயற்சி செய்தார்.

ஆனால் தன் இரு மகன்களின் காதல் பற்றி அறிந்த வசந்தி வருண் மற்றும் வம்சியை அதிர்ச்சியாகப் பார்த்திருந்தார்.

error: Content is protected !!
Scroll to Top