அத்தியாயம் 31
தங்கள் காதல் விடயம் அறிந்து அதிர்ந்து நிற்கும் வசந்தியை கண்ட வருண், வம்சியின் பின்னால் மறைய, அவனை தனக்கு முன் பிடித்து இழுத்து நிறுத்தினான் வம்சி.
வழக்கம்போல் தன் இரு காதுகளையும் பிடித்துக்கொண்டு முகம் சுருக்கி வம்சி மன்னிப்பைக் கேட்க,
“எனக்கு என் பிள்ளைங்க சந்தோஷம் தான் முக்கியம்” என்று மனம் நிறைந்து கூறியவர்,
“அப்பாவுக்கு உங்க காதல் விவகாரமோ, அல்லது அது அழகுவின் புகுந்த வீடென்றோ தெரிந்தால் கல்யாணம் நடப்பது சந்தேகம்தான்” என்றார்.
“அம்மா…” வருண் அதிர்வில் கத்தினான்.
“அது மட்டும் பிரச்சினை இல்லைம்மா” என்ற வம்சி ஜோடி மாற்றத்தை சொல்ல, வருண் சொல்லிய அதே யோசனையை வசந்தியும் சொன்னார்.
வருண், தான் சொல்லியதுதான் சரியென வம்சியைப் பார்த்தான்.
வம்சி தந்தைக்கு தெரிந்தால் என்னாவது என்று தன் மன கலக்கத்தை கூற..
“சும்மா இருடா… அதெல்லாம் உன் அப்பாவுக்கு தெரியாமல் முடித்து விடலாம்” என்று வசந்தி தைரியம் அளித்தார்.
அதன் பின்னர் மருத்துவர் வந்து அழகுவை பரிசோதித்து… “கைகள் இனி முன்பைப்போல் செயல்படும், கால்களுக்கும் ரத்த ஓட்டம் சீராக செல்லத் தொடங்கியிருக்கிறது. விரைவில் சரியாகலாம்” என்று கூறிச்செல்ல அனைவரும் சற்று இலகுவாக வந்தமர்ந்தனர்.
அப்போது ஈஸ்வர்,
முந்தைய நாள் ராஜன் போன் செய்து கேட்டுக்கொண்டதையும், தன் முடிவையும் கூற…
அவர் நினைத்தைப்போல் வருண் மறுத்து முன் போல் சண்டையெல்லாம் செய்யவில்லை. மாறாக அமைதியாக நீங்கள் சொல்லுவதற்கு உடன்படுகிறேன் எனும் விதமாக அவரையே பார்த்திருந்தான்.
“உன்னிடம் முதல் முறை ஒன்றை கேட்கிறேன்.”
உனக்கு சம்மதமா என்று கேட்காமல், நீ சம்மதம் சொல்லித்தான் ஆக வேண்டுமென்று மறைமுகமாக வம்சியிடம் கேட்டார்.
வம்சியும் பதில் சொல்லாது இருக்க,
“அப்போ எல்லோருக்கும் சம்மதம் தான். நான் அடுத்த வேலையை கவனிக்கின்றேன்” என்று சென்று விட்டார்.
“இந்த வீட்டில் எல்லாம் அவர் நினைப்பதுதான் நடக்க வேண்டும்.” அவ்வளவு நேரமும் அடக்கி வைத்த கோபத்தை வெளிக்காட்டினான் வருண்.
“இதை அவரிடமே சொல்ல வேண்டியது தானே!”
வம்சியின் கிண்டல் புரிந்தவன் அமைதியாகிவிட்டான்.
“இனிதான் நமக்கு அதிக வேலை இருக்கிறது” என்ற திரிலோகர் அன்றே “தான் ஊருக்கு சென்று நம் பூர்வீக வீட்டில் திருமணம் நடைபெறுவதற்கான வேலைகளை பார்க்கிறேன்” என ஊருக்கு கிளம்பிச் சென்றார்.
ஆனால் அவர் நேராகச் சென்றது ராஜனின் இல்லம்.
ராஜன் மற்றும் ராஜராஜனிடம் அழகுவை பற்றி எவ்வித பேச்சுமின்றி, மென்னிலா வம்சியின் முதல் சந்திப்பில் தொடங்கி இப்போது ஏற்பட்டுள்ள குழப்பம் வரை அனைத்தும் சொல்லி…
“ஈஸ்வருக்கு காதல் என்றாலே பிடிக்காது. அதனால் இளையவர்களின் காதல் தெரிந்தால் நிச்சயம் கல்யாணத்தை நிறுத்தி விடுவான்” என்றார்.
மென்னிலா வம்சியின் காதலை மட்டும் தான் குறிப்பிட்டார்.
தன் மகளின் காதலை அறிந்த ராஜராஜன்,
“அவளின் விருப்பத்தை சொல்லும் அளவிற்கு, தான் தந்தையாக நடந்துக் கொள்ளவில்லையே” என்று வருந்தினார்.
“இப்போ வருந்தி பலனில்லை. அடுத்து என்ன என்று பார்ப்போம்” என மகனை ஆறுதல் படுத்திய ராஜன், “அப்போ தேவிகாவின் திருமணம்” என்று கேள்வியாக திரிலோகரைப் பார்த்தார்.
ஏற்கனவே ஒரு பெண்ணின் காதலை கேட்டே மனம் வருத்தம் கொண்டவர்களை மேலும் வருத்தாது, வருணுக்கும் தேவிகாவுக்கும் கல்யாணம் நடக்கும் என்று சொல்லி தங்களின் திட்டத்தைக் கூறினார்.
“இது சரி வருமா?”
ராஜன் அவ்வாறு கேட்டதிலேயே அவரின் சம்மதம் கிடைத்துவிட,
“எல்லாம் நம் கையில் தான் சம்மந்தி” என்றவர் எல்லாம் சரியாகிவிட்டதென்று அவர்களிடம் விடை பெற்றார்.
ராஜன், திரிலோகர் வந்து சென்றதைப்பற்றி சொல்ல… ரேணுகா ஒரு ஆட்டம் ஆடிடுவார் என்று எதிர்பார்த்தவருக்கு எதுவும் சொல்லாமல் ஒப்புக்கொண்டது ஏமாற்றமாக இருந்த போதும், மறுக்காதது போதுமென்று இருந்தது.
ராஜன் மென்னிலாவின் காதலை சொல்லும்போது ரேணுகாவிற்கு கோபம் வந்தது உண்மை… ஆனால் அடுத்து சொல்லிய வருண் தேவிகா திருமண செய்தி கோபத்தை போக்கியிருந்தது.
ரேணுகாவை பொறுத்தவரை வம்சி மாதச்சம்பளம் வாங்குபவன்… வருண் முதலாளி. அதனால் தன் பெண் வளமாக வாழ்வாளென்று எவ்வித வாதாடலுமின்றி ஒப்புக்கொண்டார்.
அதன் பின்னர் அனைத்தும் துரித கதியில் நடைபெற்றன.
ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து ஏற்பாடு செய்தனர். ஈஸ்வர் கூட மிகுந்த உற்சாகத்தோடு அனைத்திலும் நடந்து கொண்டார்.
வம்சியிடம் சில வார்த்தைகள் பேசத் துவங்கியிருந்தார்.
“நம்ம மேட்டர் மட்டும் தெரிஞ்சிது ஈஸ்வர் தாண்டவத்துக்கு ரெடியாகிடுவார்” என்று வம்சி சொல்லும் போதெல்லாம் வருணுக்கு பயந்து வரும்.
நண்பர்களின் திருமண வேளைகளில் விக்கியும் கலந்து கொண்டான். உண்மை அறிந்த போது அவனும் ஈஸ்வரை நினைத்து பயம் கொள்ளத்தான் செய்தான்.
ஆனால், “என்ன நடக்குமோ என்ற ஒருவித த்ரிலில் கல்யாணம் நடக்கவிருப்பது நல்லாத்தான் இருக்கிறது” என்று அவனும் பார்வையாளனாக மாறிப்போனான்.
திருமணத்திற்கு இடைப்பட்ட நாட்களில் அலைபேசியிலேயே சகோதர்கள் தங்களின் காதலை வளர்த்தனர்.
இதற்கு நடுவில் ஒருமுறை ரித்திகா வம்சியை நேரில் சந்தித்து தன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டிருந்தாள்.
வம்சி அவளுக்கு செய்தது பெரும் உதவியல்லவா! இல்லையென்றால் இந்நேரம் அவள் ஜெயிலில். இப்போதும் திருந்தாமல் இருப்பதற்கு அவள் ரத்தினம் அல்லவே. எனவே தன் தவறை முற்றும் முதலாக உணர்ந்து மன்னிப்பை யாசிக்க, சிறு புன்னகையில் அவளை கடந்து விட்டான் வம்சி.
*****
திருமண நாள்…
முதல் நாள் இரவு திருமண அழைப்பு முடிந்து சில சடங்குகள் நடத்தி அனைவரும் உறங்கிய பின்னர் அழகு மண்டபத்திற்கு வரவழைக்கப்பட்டார்.
இறுதியிலாவது அவருக்கான நியாயம் கிடைக்க வேண்டுமென்று நினைத்த வம்சி அழகு வந்தே ஆக வேண்டுமென்று திடமாக இருந்து அவரை கொண்டும் வந்துவிட்டான்.
அழகுவிற்கு தன் மகளைக் காணப்போகும் சந்தோஷம்.
அந்த இரவில் மண்டபமே அமைதியாக இருக்க, மென்னிலாவை அறையை விட்டு வெளியில் வரவழைத்த வம்சி அவளை அழகுவிடம் கூட்டிச் சென்றான்.
மகளை கண்டதும் கண்களில் நீர் நிறைந்திடாது இருக்க அரும்பாடு பட்டுப்போனார் அழகு.
என்னுடைய அத்தையென்று மென்னிலாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். ஏற்கனவே அவரின் உடல்நிலைப் பற்றி தெரிவித்திருந்தான்.
மென்னிலா அவரின் காலில் விழ தலையில் கை வைத்து ஆசிர்வதித்தவர், அவளின் முகத்தை தன்னிரு கைகளாலும் வருடினார்.
அதன் பின்னர் வம்சியும் மென்னிலாவும் அழகுவிடம் சில மணிநேரம் பேசிவிட்டே தத்தம் அறைகளுக்குச் சென்றனர்.
பொழுதும் புலரும் தருவாயில் இருக்க நிச்சயத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தனர்.
அறையில் விக்கியுடன் கலாட்டா செய்தபடி வருண் மிகுந்த உற்சாகத்தோடு கிளம்பிக் கொண்டிருந்தான். அவனின் ஆர்ப்பாட்டம் எதுவும் வம்சியிடம் இல்லை.
எல்லாம் சரியாக நடந்து கொண்டிருந்தாலும் எதுவுமே சரியில்லாதது போன்று உணர்ந்தான் வம்சி.
“எனக்கு இது சரியாப்படல வருண்” என்ற வம்சியிடம் பதறி “கடைசி நேரத்தில் எதையும் கெடுத்து விட்டுடாதடா” என்றான் வருண்.
அதை காதிலேயே வாங்காத வம்சி ஈஸ்வரை அங்கு அழைத்து வருமாறு விக்கியை அனுப்பி வைத்தான்.
அதற்குள் வருண் திரிலோகரை கூட்டி வந்திருந்தான்.
“என்ன வம்சி இது கடைசி நேரத்தில்… இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் நடைபெறவிருக்கும் நிச்சயத்தில் ஈஸ்வருக்கு உண்மைத் தெரிய போகுது அதற்குள் எதையும் சொல்லி குழப்பிடாதே” என்று திரிலோகரும் எவ்வளவோ எடுத்து சொன்னார். ஆனால் வம்சி கேட்பதாக இல்லை.
“எனக்கு அப்பாவுக்கு தெரியாமல் செய்வது ஒரு மாதிரி கில்ட்டியா இருக்கு தாத்தா… அவர் இந்த திருமணத்தை நிறுத்தினாலும் பரவாயில்லை… அவர் சம்மதிக்கும் வரை காத்திருக்கிறோம். எனக்கு அப்பாவை ஏமாற்றும் குற்றவுணர்விலிருந்து விடுதலை கிடைத்தால் போதும்” என்று வம்சி சொல்லிக் கொண்டிருக்கும் போதே விக்கியுடன் ஈஸ்வர் அங்கு வந்தார்.
அனைத்தையும் தன் காதல், அழகுவின் குடும்பம் எது மென்னிலா யார் என்பது முதல் தங்களின் திட்டம்…
அதாவது தாலிகட்ட மணமகள் வந்து மணவறையில் அமரும் போது… மென்னிலா வம்சியின் அருகிலும், தேவி வருண் அருகிலும் அமர்ந்து கொள்வது. வம்சியும் வருணும் உருவத்தில் ஒன்றாக இருப்பதால் யாருக்கும் எவ்வித குழப்பமும் இல்லாமல் அதே சமயம் ஈஸ்வருக்கு சந்தேகம் வராமல் திருமணத்தை நடத்துவது வரை எல்லாம் சொல்லி மன்னிப்பு வேண்டியவன்,
“இப்பவும் உங்களுக்கு சம்மதமென்றால் சொல்லுங்கப்பா நானும் வருணும் மேடைக்கு செல்கிறோம்” என்றான்.
வம்சியைத் தவிர மற்றவர்கள் ஒருவித பயத்தோடு நிச்சயம் கல்யாணத்தை ஈஸ்வர் நிறுத்தப்போகிறார் என்று கைகளை பிசைந்துகொண்டு நிற்க, வம்சி மட்டும் தந்தையின் சொல்லுக்காகக் காத்திருந்தான்.
ஏதோ குற்றம் செய்துவிட்டு பாவமன்னிப்பு கேட்பவன் போல் தன் முகத்தையே பார்த்திருக்கும் வம்சியின் முகத்தை முதல் முறையாக நேருக்கு நேர் பார்த்த ஈஸ்வர்…
“எனக்கு எல்லாம் தெரியும்” என்றார்.
அதில் வம்சி உட்பட அனைவருக்கும் அதிர்ச்சி.
அன்று அழகுவின் அறையில் அனைவரும் பேசிக் கொண்டிருப்பதை கேட்ட ஈஸ்வருக்கு முதலில் கோபம் தான் வந்தது. இருப்பினும் முழு தகவலையும் அறிய பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போதுதான் தன் தங்கையின் விருப்பம் மற்றும் பிள்ளைகளின் மனமும் தெரிந்து கொண்டார்.
இருப்பினும் காதலினால் தான் அழகுவின் வாழ்வே வீணாகிவிட்டதாக இருப்பவரால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அப்போதுதான் வசந்தி வம்சியிடம் சொல்லிய… “எனக்கு என் பிள்ளைகளின் சந்தோஷம் தான் முக்கியம்” என்ற வார்த்தைகள் ஈஸ்வரை பலமாகத் தாக்கியது.
‘அப்போ தனக்கு தந்தையாக அவர்களின் விருப்பத்தின் மேல் அக்கறை இல்லையா?’ என்று சிந்தித்தவர் அவர்களின் விருப்பம் போல் நடக்கட்டும் என்று நல்ல முடிவை எடுத்தார்.
தன்னைத்தவிர மற்றவர்கள் அனைவரும் ஒன்றாக சந்தோஷமாக சிரித்து பேசுவதை கண்ட ஈஸ்வருக்கு அவ்விடத்தில் தானில்லையே என்று வருத்தமாக இருந்தது.
அப்போதுதான் எத்தகைய சொர்க்கத்தை தன்னுடைய வரட்டு பிடிவாதத்தால் இழந்திருக்கிறோம் என்று மனதால் உணர்ந்து சந்தோஷமாகவே பிள்ளைகளின் விருப்பம் ஈடேறும் வரை தனக்குத் தெரிந்ததைப்போல் காட்டிக்கொள்ளக் கூடாதென்று விறைப்பாகவே சுற்றினார்.
எல்லோருக்கும் இது பெரும் வியப்புதான். இப்போது தான் உண்மையான சந்தோஷம் மனதில் பரவுவதை அனைவரும் உணர்ந்தனர்.
தன் தந்தையை மனம் நெகிழ்ந்து வம்சி பார்த்திருக்க
“நீ மன்னிப்புக் கேட்க அவசியமில்லை வம்சி” என்ற ஈஸ்வர் தன் மகனை முதல் முறையாகக் கட்டிக் கொண்டார். அவரின் அணைப்பில் அவ்வளவு இறுக்கம். அதுவே சொல்லியது ஈஸ்வர் வம்சியிடம் கொண்டுள்ள அன்பை.
“அப்பா…” இருபது வருடங்களுக்கு மேலாக வம்சி சொல்ல முடியாது தவித்த விளிப்பு.
வம்சியின் ஒற்றை அழைப்பு ஈஸ்வருக்கும் கண்களில் கண்ணீர் சுரந்தது. பார்த்திருந்தோருக்கும் விழிகளில் ஈரம்.
“உங்க பையன் கிடைத்ததும் என்னை மறந்துட்டிங்களே டாட்.” வருண் சூழ்நிலையை மாற்ற அவ்வாறு பேச,
“வாடா பொறாமை பிடித்தவனே” என்று அவனையும் தங்களது அணைப்பிற்குள் சேர்த்துக்கொண்டான் வம்சி.
வருணும் ஈஸ்வரிடம் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்க, அங்கு சூழல் சீரானது.
எல்லாம் சரியானதில் திரிலோகருக்குத்தான் பரம சந்தோஷம்.
அடுத்து அனைத்தும் வேகமாக நடந்தேற அவரவர் இணைக்கு நேராக சரியான ஜோடியின் பெயர் எழுதி நிச்சய ஓலை வாசிக்கப்பட்டது. இரு ஜோடிகளிடையே பார்வையாலே ரகசிய சம்பாஷனைகள் நடைபெற்றன.
அப்போது வசந்தி சக்கர நாற்காலியில் அழகுவை அங்கு கூட்டிவர, ராஜன் மற்றும் ராஜராஜன் கண்கள் தெறித்து விடும் அளவிற்கு அதிர்வை உணர்ந்தனர்.
அழகுவை தெரிந்த ராஜனின் சொந்தங்களுக்கிடையே சலசலப்பு.
“இவங்க என் நாத்தனார்.” வசந்தி சொல்ல, ராஜன் திரிலோகரின் கரம் பிடித்து நன்றி கூறினார்.
ராஜராஜன் அழகுவின் காலடியில் முட்டியிட்டு அமர்ந்து… தன் அன்னையின் வார்த்தையில் தான் ஏமாற்றப்பட்டதையும், அதனால் அவரைத் தவறாக எண்ணி உண்டான வெறுப்பால் மறுமணம் செய்து கொண்டதையும் சொல்லி மன்னிப்பு வேண்டிட… அழகுவிடம் எல்லாத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம்.
“நடந்ததை மறந்து விடுங்கள். நான் என் அண்ணன் வீட்டில் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இனி என் பொண்ணோடு அந்த வீட்டில் என் வாழ்க்கை கழிந்துவிடும். நீங்கள் உங்கள் மனைவியோடு நல்லாயிருங்க” என்று ரேணுகாவை ஒரு பார்வை பார்த்தவர் மென்னிலாவின் பக்கம் திரும்பினார்.
அழகு சொல்லியதை அனைவருக்கும் புரியும்படி வசந்தி தான் கூறியிருந்தார்.
பேச்சினிலே அழகுவின் ஒதுக்கம் மற்றும், அவள் தன்னிடம் பேசுவதை கூட விரும்பவில்லை என்பதை உணர்ந்த ராஜராஜன், அழகு மன்னித்ததே போதுமென நினைத்து தன்னை தேற்றிக் கொண்டார்.
“அன்னையின் பேச்சை நம்பிவிட்டேன்” என்று ராஜராஜன் சொல்லியதே, இங்கு கோபப்பட்டும் வருத்தப்பட்டும் அர்த்தமில்லை என்பதை அழகு உணர்ந்திட, பந்தமில்லா உறவை விலக்கி வைப்பதற்கே மன்னித்துவிட்டார். அத்தோடு இந்த வயதிற்குமேல் இன்னொரு பெண்ணின் மனதை வருத்திட அவருக்கு மனமில்லை.
ராஜனை பார்த்து மட்டும் மெல்லியதாக புன்னகைத்தார் அழகு. அந்த வீட்டில் அவருக்கு இருந்த ஒரே ஆதரவு அவரல்லவா! அந்த நன்றி அழகுவிற்கு இன்றும் உள்ளது.
அழகு அவரின் முதல் மனைவி… இனியும் அந்த வீட்டில் ராணியாக, தான் உரிமை கொண்டாட முடியாதென்று கலக்கம் கொண்ட ரேணுகா அழகுவின் பேச்சில் நிம்மதியானர். யார் எப்படி போனாலென்ன தான் நல்லாயிருந்தால் போதுமென்று நினைக்கும் ரேணுகா போல் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை அப்படியே விட்டுவிடுவது தான் நல்லது.
முதல் முறையாக தாயை பார்த்து கண்ணீர் வடிக்கும் பெண் மென்னிலாவாகத்தான் இருக்கும். இவ்வளவு நாளும் அனுபவித்த வேதனைகள் யாவும் அவரின் அருகில் ஒன்றுமில்லாமல் போவதை உணர்ந்தாள்.
அன்று விசாலத்திடம் மென்னிலாவை விட்டுச் சென்றதற்காக அழகு கைக்கூப்பி மகளிடம் மன்னிப்புக் கேட்க… கண்ணீர் வழிய இல்லையென்று தலையசைத்து அவரின் கரத்தைப் பற்றி கீழிறக்கினாள்.
ராஜராஜன் இருவரையும் ஒருவித வலியோடு நோக்க,
“எல்லாவற்றிற்கும் காலம் மருந்தாகும். அதற்கு நீ காத்திருக்கத்தான் வேண்டும்” என்று திரிலோகர் சொல்ல அதனை ராஜராஜன் கேட்டுக்கொண்டார்.
அங்கு அந்நொடி அனைத்தும் சீரானது.
“அப்புறம் என்ன குடும்பம் சேர்ந்தாச்சு… நல்ல நேரத்தில் ஜோடிகளையும் சேர்த்திடுவோம்.” திரிலோகர் சொல்ல மணமக்கள் அவரவர் மேடையில் உட்கார வைக்கப்பட்டு மந்திரங்கள் ஓத அக்னி சீராக சுடர் விட்டது.
அனைவரின் மனமும் எவ்வித வேற்றுமையோ வருத்தமோ இன்றி சந்தோசத்தில் இருக்க…
வருண் தேவிகாவுடனும், வம்சி மென்னிலாவுடனும் அவர்களின் காதல் பந்தத்தை மஞ்சள் கயிற்றின் மூலம் அடுத்த அத்தியாயத்திற்கு கொண்டு சென்றனர். நால்வரின் இதயத்திலும் இனம் புரியா இதம்.
வருண் தேவிகாவின் கையில் அழுத்தம் கூட்டி இனி எல்லாம் நாமென்று உணர்த்த, வம்சி யாரையும் பொருட்படுத்தாது, மென்னிலாவின் நெற்றியில் தானிட்ட குங்குமத்தின் மேல் அழுந்த முத்தமிட்டான்.
பிள்ளைகளின் திருமணத்தால் மனம் நிறைந்திருந்த பெரியோர்களின் ஆசீர்வாதங்கள் மணமக்களை முழுமையாகச் சென்று சேர்ந்தனர்.
‘காதலால் தவித்த காதல் நெஞ்சங்கள் காதலோடு சேர்ந்தன.’
பல தடைகள் வந்திருந்தாலும் அவர்களின் இதயங்களை ஒன்று சேர்த்த பெருமை காதலையே சேரும்.
நெஞ்சோடு காதல் சேர்ந்திட்ட மகிழ்வில்…
வம்சி ❤️ மென்னிலா
வருண் ❤️ தேவிகா
இனி அவர்களின் காதலில் எப்போதும் இன்பம் மட்டுமே!
தேடலில்
நிறைந்திட்ட
மன்னவனின்
காதல்(கை)
சேர்ந்ததில்
நெஞ்சோடு
மூச்சு முட்டுதே!
சுபம்.
Thank you for everyone’s support 💞