அத்தியாயம் 4 :
குளிர் காற்று உடலைத் தழுவும் வேளையிலும் மனதின் வெம்மை தீராது, வெதும்பி அமர்ந்திருந்த மென்னிலாவிற்கு தெரிந்திருக்கவில்லை… இத்தனை வருடங்களாக தான் வாங்கிய வசவுகளிலிருந்து விடுதலை கிடைத்து விட்டதை.
மனதில் அரும்பிய மொட்டு காதலை மொத்தமாக வாடிப் போகச் செய்தவள், மனதின் வலியை கண்ணீராகக் கூட வெளியேற்ற முடியாத தவிப்பில் இருக்க.. அவளையும் அறியாது உறங்கிப் போனாள்.
கொடைக்கானலுக்கு அருகே வண்டி செல்ல அரை மணி நேரம் இருக்க, அனைவரையும் உடன் வந்த ஆசிரியர் எழுப்பி விட்டார். வண்டியை கிளம்பும் போதே லேட் நைட் ஆகியிருக்க, வழக்கம்போல் மாணவிகள் எல்லோரும் கொட்டமடித்து உறங்கும் போதே மூன்று மணிக்கு மேல் ஆகியிருந்தது. இப்போது ஐந்து மணிக்கெல்லாம் எழுப்பி விடவும், எல்லோரும் முகம் சுளித்தபடி எழுந்தாலும் அடுத்த பத்து நிமிடங்களில் மீண்டும் அரட்டையை ஆரம்பித்திருந்தனர்.
அந்த பெட்டி முழுவதும் அவர்களுக்கானதாக இருக்க மற்றவர்களுக்கு அந்நேரத்தில் தொந்தரவில்லாது இருந்ததோடு, அவர்களின் ஆட்டத்திற்கு அது வசதியாகவும் அமைந்தது.
முகம் கழுவி சிகையை சற்று ஒதுக்கி தன்னை சரி செய்துகொண்டு வந்தமர்ந்த மென்னிலாவுக்கு வீட்டுக்கு செல்வதை நினைத்தே கடினமாக இருந்தது.
இதுவே முதல்முறை அவள் இப்படி தோழிகளுடன் வெளியில் வருவது. அதற்கு வீட்டில் ஒரு போரே நடந்தது. அவ்வளவு எளிதில் விசாலம் அவளை கல்விச் சுற்றுலா அனுப்ப அனுமதிக்கவில்லை.
ராஜன் தான் இறுதி வருடம், படிப்பை முடித்துவிட்டால் வீட்டை விட்டு வெளியில் போகக்கூட முடியாதென்று பேசி விசாலத்தை சமாளித்து பேத்தியை அனுப்பி வைத்தார்.
கிளம்பும் நேரமும், “ஆத்தாலாட்டம் எதுவும் செஞ்சிபுடாத” என்று எச்சரித்து, அறிவுரையென்று பல வசவுகளை மழையாக கொட்டிய பிறகே விட்டார்.
‘இவ்வளவையும் கேட்டுக்கொண்டு அங்கு போக வேண்டுமா’ என்று அவளுக்குத் தோன்றாமலில்லை… இருப்பினும் தன் வாழ் நாளிலேயே சுதந்திரமாக சுற்றித்திரிய கிடைத்த முதல் வாய்ப்பினை விட்டுவிட அவள் விரும்பவில்லை.
சுற்றுலாவுக்கு என்று வந்த பிறகுதான் பரந்த உலகில் சுவாசக் காற்றை ஆழ்ந்து சுவாசித்தாள்.
இந்த ஐந்து நாட்களும் மென்னிலாவாக மட்டும் இருந்தது அவளுக்கு அவ்வளவு பிடித்திருந்தது. இப்போதும் வீடு என்றதும் மீண்டும் தன்னை தன் கூட்டுக்குள் சுருட்டிக் கொண்டாள்.
கொடைக்கானலுக்கு முன்பே ஒரு சிற்றூரில் சிக்னல் விழுந்துவிட வண்டி நின்றுவிட்டது. அது இன்னும் மாணவிகளுக்கு கொண்டாட்டமாக அமைய, அதில் முயன்று தன்னை புகுத்திக்கொண்டாள்.
மீண்டும் வண்டி கிளம்ப வெகு நேரமாகியது.
அவர்கள் கொடைக்கானல் வந்து சேர்ந்தபோது பொழுது நன்கு புலர்ந்திருந்தது.
வண்டி சரியாக நிற்கக்கூடவில்லை அதற்குள் அவளிருந்த பெட்டிக்குள் தாவி ஏறியிருந்தான் மென்னிலாவின் தம்பி வினித்.
அந்த பெட்டிக்குள் மென்னிலாவை தேடியவன், அவளை கண்டதும்… அவள் தயாராக வைத்திருந்த அவளது உடைமைகளை எடுத்துக் கொண்டவன் முதன் முறையாக தன்னுடைய அக்காவின் கரம் பற்றி அழைத்துச் சென்றான்.
தம்பியின் உரிமையான செயலில் உண்மையிலேயே அவளுக்கு ஆச்சரியம் தான்.
“என்னக்கா அப்படி பாக்குற?”
அவன் அக்கா என்றழைத்ததில் அவளுக்கு மயக்கமே வரும் போலிருந்தது.
தான் கேட்டதற்கு பதில் சொல்லாது தன்னையே பார்த்தபடி வரும் மென்னிலா பேச போவதில்லை என்பதை உணர்ந்த வினித்தே மேற்கொண்டு பேசினான்.
“என்னை மன்னிச்சிடுக்கா… நானும் மற்றவர்கள் போல் உன்னை தள்ளி வைத்துவிட்டேன். சின்ன வயதலிருந்தே பாட்டி உன்னை எதாவது சொல்லி திட்டிக்கொண்டே இருப்பாங்க, அதனால் உன்னிடம் தான் ஏதோ தவறு என்று புரியாத வயதில் அறியாமல் புரிந்து கொண்டதால் நானும் உன்னுடன் பழகாது விட்டுவிட்டேன். இப்போதான் தவறு யார் பக்கம் என்பதே எல்லோருக்கும் தெரிந்தது. இனியும் உன்னை விலக்கி வைக்க என்னால் முடியாது. எல்லா விதத்திலும் உனக்கு துணையாக நானிருக்கின்றேன்” என்றான்.
வினித்… ராஜராஜனின் இரண்டாவது மனைவி ரேணுகாவிற்கு பிறந்த இரண்டாவது மகவு. முதலில் பெண் பிள்ளை தேவிகா.
ரேணுகாவிற்கு தன் கணவரின் மூத்த தாரத்தின் மகள் என்ற கோபம் மட்டுமே மென்னிலாவிடம். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொண்டதில்லை. என்னயிருந்தாலும் அவளும் சிறு பிள்ளை தானே ஓர் மூலையில் இருந்துவிட்டு போகட்டும் என்று விட்டுவிட்டாள். ஆனால் விசாலம் நாளுக்கு நாள் அந்த தளிரை தன் வார்த்தைகளால் வதைத்துக் கொண்டு தானிருந்தார். அந்நேரத்தில் மென்னிலாவுக்கு ஒரே ஆறுதல் தாத்தா ராஜன் மட்டுமே. ராஜராஜன் மீனாவின் மீதான வெறுப்பை கோபத்தை மறக்கவே தொழில் தொழிலென்று ஓடத் துவங்க, அவர் வீட்டிலிருக்கும் நேரம் அரிதாகிப் போனது.
அதனால் விசாலம் மகளுக்கு செய்யும் கொடுமைகள் ராஜராஜனுக்கு தெரியாமல் போனதோடு, தெரிந்தாலும் அதை மாற்றும் விதம் விசாலத்திற்கு எளிது.
மீனா ஓடிப்போனவள் என்ற ஒன்றை வைத்தே கணவர் மற்றும் மகனின் வாயினை அடைத்துவிடுவார்.
மென்னிலாவை வினித் மற்றும் தேவிகாவுடன் கூட சேர விசாலம் அனுமதிக்கவில்லை.
“உன் ஆத்தா புத்தியை என் வாரிசுகளுக்கு கத்துக்கொடுக்க பார்க்கிறாயா?” என்று கூறி தனித்து நிறுத்திடுவார்.
அவ்வார்த்தைகள் புரியத் தொடங்கிய வயதில் மென்னிலாவே அனைவரிடத்திலிருந்தும் தன்னை தள்ளி வைத்துக்கொண்டாள். ராஜனுடன் மட்டும் எதையும் பகிர்ந்து கொள்ளுவாள். அவள் பேசும் மற்றும் அவளிடம் பேசும் ஒரே நபர் அவர் மட்டுமே.
ராஜராஜனும் மென்னிலாவை பார்க்கும் போதெல்லாம் மீனாவின் நினைவு வருவதோடு, தன் காதல் பொய்த்துவிட்டதே என்கிற வலியும் ஒருங்கே எழுவதால் மென்னிலாவின் மீது பாசம் கொண்ட போதும் அவளருகில் இருந்து விலகியே இருந்தார்.
“உன் தாய் தந்தையே பேசாத போது நீங்களும் அவளிடம் பேசக்கூடாது” என்று விசாலம்… வினித் மற்றும் தேவிகாவை அடக்கி வைத்தார்.
அப்படியிருந்தும் மென்னிலாவை பார்க்கும்போது வினித்திடன் சிநேக புன்னகைத் தோன்றும். இருப்பினும் விசாலத்திற்கு பயந்து பேச முயற்சிக்க மாட்டான்.
விவரம் அறியும் வயதில் அவன் கேட்ட செய்திகளால் அவனுக்குள் எழுந்தது ஒரே வினா தான்.
“அம்மா செய்த தவறுக்கு மகள் என்ன செய்வாள்?”
இருந்தாலும் இதனை அவனால் அவ்வளவு எளிதில் யாரிடமும் கேட்டிட முடியாது. கேட்டாலும் திட்டு அவனுக்குத்தான் கிடைக்கும். ஆதலால் மறைமுகமாக மென்னிலாவுக்கு தன் ஆதரவு அளித்தான்.
‘தம்பி பேசாவிட்டாலும் தன்மீது அன்பு கொண்டுள்ளானே’ என்று மென்னிலாவுக்கு ராஜனுக்கு அடுத்து ஆறுதல் அளித்தான் வினித்.
அப்படி தள்ளியிருந்தவன் இன்று உரிமையாய் பேசவும் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
அவளின் விளங்கா பார்வையை கண்டுகொண்ட வினித், “பாட்டி இறந்துபோச்சுக்கா” என்றான் சாதாரணமாக. விசாலம் இறந்த பிறகு அவர்கள் அறிந்த செய்தியால் வினித் மட்டுமல்லாது, ராஜன் மற்றும் ராஜராஜனும் கற்பகத்தின் மீது கட்டுகடங்கா கோபத்தில் உள்ளனர். ஆனால் அவர்களின் கோபத்தை காட்ட அவர் தான் இப்போது உயிரோடில்லையே.
வினித் சாதாரணமாக சொல்லியிருந்தாலும் மென்னிலா விசாலத்தின் இறப்பு செய்தி கேட்டு கலங்கிப் போனாள். கண்கள் தானாக கண்ணீரை வெளியேற்றியது.
“இந்த கண்ணீருக்கான தகுதி அவங்களுக்கு இல்லைக்கா” என்று குரல் இறுகக் கூறிய வினித், முன்னே வேக எட்டுக்கள் வைத்து செல்ல, மென்னிலா தளர்ந்த நடையுடன் சென்று காரிலேறி அமர்ந்தாள்.
என்ன தான் விசாலத்திற்கு அவள் வேண்டாதவளாக இருந்தாலும், மென்னிலா ஒருபோதும் அவரை வெறுத்ததில்லை. அதனால் இறந்து போனவருக்காக வருந்தவே செய்தாள்.
வீட்டிற்கு அருகில் வரும்போது,
“அங்கே என்ன நடந்தாலும் மனதினை திடமாக வைத்துக்கொள் அக்கா” என்றான் வினித்.
எதற்காக சொல்லுகிறான் என்று தெரியாத போதும் சரியென்றாள்.
வீடு முழுக்க சுற்றமும் உறவினர்களும் மௌனமாக நிறைந்திருக்க, வரவேற்பறையின் நடுவில் விசாலத்தின் உடலை கிடத்தியிருந்தனர். அவருக்கு அருகில் ரேணுகா மட்டுமே அமர்ந்திருந்தார். மற்ற யாரும், ஏன் ராஜன் கூட மனைவியின் அருகில் அமர்ந்திருக்கவில்லை.
‘ஏன் இப்படி?’ மென்னிலாவின் மனம் கேள்வியெழுப்பியபடி உள் நுழைய, மகளின் காலில் நெடுசாண் கிடையாக விழுந்தார் ராஜராஜன்.
பதறி விலகியவள் கீழே அமர்ந்து “அப்பா” என்று விளிக்க,
‘இத்தனை வருடம் இதை கேட்க தனக்கு கொடுத்து வைக்கவில்லையே’ என்று நெஞ்சம் விம்பினார்.
“அப்பா, அப்பா எழுந்திருங்க.”
அவரின் செயலை கண்டு அங்கிருந்தோர் அனைவரும் அமைதியாக நின்றனரே தவிர யாரும் பதறவில்லை. அவரருகில் கூட வரவில்லை. உண்மை தெரிந்த பிறகு மன்னிப்பு வேண்டுவது நியாயம் தானே என்ற நிலை அங்கு.
“இந்த அப்பாவை மன்னிச்சிடுடா.” இதையே தரையில் முகம் பதித்து அரற்றினார்.
மென்னிலா எவ்வளவோ முயற்சி செய்தும் ராஜராஜனை எழுப்ப முடியாது போக, வினித்தை அழைத்து அவனுடன் சேர்ந்து தந்தையை உயர்த்தி நிறுத்தினாள்.
எதற்காக திடீரென்று இந்த மன்னிப்பு வேண்டல் என்று புரியாத போதும்,
“எது நடந்திருந்தாலும் பெத்த மகளிடம் மன்னிப்பு வேண்டி எனக்கு பாவத்தை சேர்த்துடாதீங்கப்பா” என்ற மகளை அவளின் இருபத்திரண்டாவது வயதில் முதல் முறையாக தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு கதறினார்.
அதன் பின்னர் அடுத்த அரை மணி நேரத்தில் நடக்க வேண்டியவற்றை நடத்தி விசாலத்தின் உடலை அவ்வீட்டை விட்டு வெளியேற்றியிருந்தனர்.
அவர் செய்த பாவத்தால், அவரின் முகத்தை பார்க்கக்கூட விருப்பமில்லை அங்கிருப்போருக்கு. அதனாலே விரைந்து உடலை தூக்கியிருந்தனர்.
மனைவி செய்த காரியம் ராஜனை வெகுவாக பாதித்திருந்தது. அதனால் விசாலத்திற்கு தான் செய்ய வேண்டிய இறுதி காரியங்களை செய்ய மறுத்துவிட்டார். ராஜனே அப்படியென்றால் ராஜராஜன் சொல்லவும் வேண்டுமோ, மகளின் அருகிலேயே அமர்ந்துகொண்டு சிறு பிள்ளை போல் அவளிடமிருந்து நகர்வேனா என அசையாது இருக்க, வினித்தும் மறுத்துவிட்டான்.
மென்னிலா சொல்லியும் மூவரும் கேட்பதாக இல்லை.
இறுதியில் அவர்கள் வழக்கப்படி தகணம் செய்யும் உடலை மண்ணில் புதைத்தனர். அவரின் பாவத்திற்கு தண்டனையாக இச்செயல் அமைந்துவிட்டது.
அனைத்தும் முடிந்து இரண்டு நாள் சென்றிருக்க,
மென்னிலா ராஜராஜனுடன் அமர்ந்திருக்க அங்கு வந்தார் ராஜன். கையில் அவரிடம் மீனா கொடுத்துச் சென்ற நாட்குறிப்பேடு இருந்தது.
அதனை கண்ட ராஜராஜனின் முகம் இறுகியது.
“தன் காதல் மேல் தனக்கே நம்பிக்கை இல்லாது போனதே” என்று தன் மீதே கோபம் கொண்டார்.
மீண்டுமொரு முறை நடந்ததை கேட்கும் திராணி இல்லாது மௌனமாக எழுந்து சென்றுவிட்டார். அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த வினித் அக்காவிற்கு ஆதரவாக மென்னிலாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.
மென்னிலாவின் கையில் குறிப்பேடை கொடுத்தவர் படிக்க சொல்லியதோடு அவளின் மறுபுறம் அமர்ந்து கொண்டார்.
விசாலம் இருந்தவரை ரேணுகாவிற்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இன்று வீட்டின் மூன்று ஆண்களும் மென்னிலாவுக்கு துணையாக நிற்பது, அவளுடன் இருப்பது என்று பார்த்ததும் இத்தனை நாளில்லாத ஒரு காழ்ப்புணர்வு அவள் மீது அவருக்குத் தோன்றியது.
எங்கு மென்னிலா வீட்டின் இன்றியமையாதவளாக ஆகிப்போவாளோ என்று பயந்தார். விசாலம் இருந்தவரை வீடு அவரின் கீழ் தான். இனி தான் தான் இங்கு என்று அவர் நினைக்க, அந்த நினைப்பு அரை மணி நேரம் கூட நீடிக்கவில்லை. ஆப்பாக மென்னிலா வந்து நின்றாள்.
இவளுக்கும் கீழ் தான் சென்று விடுவோமோ என்று தேவையில்லாது சிந்தித்து, மென்னிலாவை தனக்கு விரோதியாக பார்க்கத் துவங்கியிருந்தார் ரேணுகா.
நாட்குறிப்பேட்டில் அந்த வீட்டிற்கு தான் வந்தது முதல், அங்கிருந்த கடைசி நொடிவரை நடந்த நிகழ்வுகள், விசாலம் தன்னை நடத்திய விதம் ஆகியவற்றை எழுதியிருந்தவர்… கடைசியாக அவ்வீட்டைவிட்டு வெளியேறும் போது, ராஜனிடம் தான் கொடுத்த நாட்குறிப்பேடு அவரது அறை மேசை மீதே வீற்றிருக்க, அதனை எடுத்து தன்னுடைய பிரசவம் நடந்த முறை மற்றும் விசாலத்திடம் தான் பேசிய டீல் ஆகியவற்றையும் எழுதியே சென்றிருக்க… அதையும் மென்னிலா படித்து தெரிந்து கொண்டாள்.
அதனை படிக்க படிக்க அவளின் மனதின் கனம் கூடிக்கொண்டே சென்றது. கண்கள் நிற்காமல் கன்னம் நனைத்தபடி இருந்தன.
இறுதியில்… “என்னை மன்னித்துவிடு என் மகளே!” என்று முடித்திருக்க அவரின் கண்ணீர் கரை அங்கே அவரின் வலிக்கு சாட்சியாக காட்சியளித்தது.
விசாலாட்சி இறந்ததும், அவருக்கு மிகவும் பிடித்த கல்யாண புடவையை அவரின் உடல் மீது போர்த்த நினைத்து அதனை எடுக்க, தனது அறையில் இருந்த ட்ரங்க் பெட்டியை ராஜன் எடுக்க, அதன் மீது தூசி படிந்த நிலையில் மீனாவின் நாட்குறிப்பேடு இருந்தது.
மீனா ஓடிவிட்டாள் என்ற அவளின் மீதான கோபத்தில் இதனை ராஜன் மறந்து போயிருந்தார். இப்போது அதனை பார்க்கவும், அப்படி இதில் என்ன எழுதியிருப்பாள் என்ற ஆராய்ச்சியோடு படித்தவரின் உலகம் அப்படியே நின்று போனது.
‘தன் மனைவியா இப்படியென்று’ துவண்டு போனார்.
அதனை இனியும் மறைக்கக் கூடாது, இதற்கு மேலும் யாரும் மீனாவை தூற்றி பேசக் கூடாதென்று, பல பேர் வீட்டில் கூடியிருப்பது தெரிந்தும் மீனாவின் நாட்குறிப்பை ராஐராஜனின் முன்னிலையில் அங்கிருப்போர் அனைவருக்கும் கேட்கும்படி சத்தமாக படித்தார். அந்நொடி மீனாவின் மீதான கலங்கம் துடைக்கப்பட்டது.
“காதலித்து மணந்தவளுக்கு துணையாக இல்லாது போய்விட்டேனே” என்று அப்போதே நெஞ்சம் துடிக்க கதறி அழுதார் ராஜராஜன்.
மொத்த கோபமும் விசாலத்தின் மீது எழுந்த போதும்… தண்டனை அனுபவிக்கும் நிலையில் அவரில்லையே. அதனால் முயன்று தன் உணர்வுகளை அடக்கியவர் மௌனமாகிப்போனார்.
நடந்ததை பேத்தியிடம் சொல்லிய ராஜன்,
“வீட்டிற்கு வந்த மருமகளை மகள் போல் காக்க தவறிவிட்டேனே!” என்று தன் துக்கத்தை வெளிக்காட்ட,
“என் அம்மா ஓடிப்போகவில்லை தாத்தா… இனி யாரும் என்னை ஆத்தா மாதிரி ஓடிப்போயிடுவன்னு சொல்ல மாட்டாங்க இல்லையா தாத்தா” என்று கண்ணீரோடு கேட்டாள் மென்னிலா.
அதில் வெளியே அமர்ந்திருந்த ராஜராஜனின் இதயம் சுக்கு நூறாக உடைந்தது.
“இப்படி கேட்கிறாளென்றால் இவ்வார்த்தைகளால் மகளின் மனம் எவ்வளவு காயப்பட்டிருக்கும். ஒரு அப்பாவாக மகளை காக்கத் தவறினேனே” என்று வருந்தினார்.
குலுங்கி அழும் மென்னிலாவை தன்னோடு அணைத்துக் கொண்டார் ராஜன்.
“இதற்கு மேல் நீ அழக்கூடாதும்மா… இது நீ சுதந்திரத்தை அனுபவிக்கும் காலம்” என்று பேத்தியை தேற்றினார்.
வினித்தும் மென்னிலாவின் கரம் பற்றி தானும் உடனிருப்பதாக மொழிந்தான்.
என்ன தான் மென்னிலாவுடன் ஆண்கள் மூவரும் துணை இருப்பினும், அவளின் நிம்மதியை அழிப்பதற்காகவே விசாலத்தின் இடத்திற்கு இப்போது ரேணுகா வந்திருந்தார்.
இனியும் மென்னிலாவுக்கு துன்பம் தானா? காலத்திடமும் பதிலில்லாது போக… அவளை காக்கவேண்டியவனோ, அவளின் நினைவை துரத்த மனதிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.
தொடரும்…