அத்தியாயம் 5 :
காலை நேரம் எட்டு முப்பது.
காக்கி உடையில் கம்பீரமாக கீழிறங்கி வந்த வருண், அங்கு வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த தாத்தா மற்றும் தந்தைக்கு ஒன்றாக, “குட் மார்னிங்” என இன்முகத்துடன் கூற…
மகனை அத்தோற்றத்தில் கண்டதும் ஈஸ்வரின் முகம் பெருமையை பிரதிபலித்தது.
பதிலுக்கு “குட் மார்னிங்” சொல்லிய ஈஸ்வர் மகனை சாப்பிட செல்லுமாறு சொல்லியதோடு, தனது மாமனாரிடம் சிறு தலையசைப்போடு விடைபெற்று வருணுடன் சேர்ந்து உணவு மேசையை நோக்கிச் சென்றார்.
உணவு பரிமாற வந்த வசந்தியை தடுத்தவர் தானே மகனுக்கு உணவினை தட்டிலிட்டார்.
“விட்டால் ஊட்டியே விட்டுடுவார்.” தோள் பட்டையில் தாடையை இடித்தவர் அடுக்கலைக்குள் நுழைந்து கொண்டார்.
பின் அவர் தனது மூத்த மகனை கொஞ்சும் அழகையும் யார் பார்ப்பதாம். தினமும் நடக்கும் கதை தான்.
ஈஸ்வருக்கு வருண் என்றால் அவ்வளவு பிரியம். அவனிடம் மட்டும் அவர் எப்போதும் கனிவு தான். காலை நேரம் வருண் உணவு உண்ண வரும்போது கட்டாயம் அங்கு ஈஸ்வர் இருப்பார். பணி காரணமாக இருவருமே ஒருவரையொருவர் பார்த்து கொள்வது அரிது. ஆதலால் இந்த காலை வேளையை ஈஸ்வர் தவறவிட மாட்டார்.
இதனை பார்த்த திரிலோகருக்கு அத்தனை வருத்தமாக இருந்தது. வருணிடம் அவர் கொண்ட பாசத்தின் மீதல்ல… இதேபோல் வம்சியிடம் ஈஸ்வர் நடந்து கொள்வதில்லையே!. ஒரு பெருமூச்சு அவரிடம்.
வருணை விட வம்சி அனைத்திலும் உயர்ந்தவன் என்பதையும்… தன் இரு மகன்களும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் அல்ல என்பதும் ஈஸ்வர் அறியும் நேரம் வெகு தூரமில்லை. நினைத்தவர் நடக்க போகும் நிகழ்வுகளை எண்ணி மர்மமாகப் புன்னகைத்துக் கொண்டார்.
உணவு விழுங்கும் போது வருணுக்கு புரையேறிட… தற்செயலாக அச்சமயம் தூங்கி வழியும் முகத்தோடு, கசங்கிய இரவு உடையோடு மேலிருந்து கீழிறங்கிக் கொண்டிருந்தான் வம்சி.
“இவன் தான் நம்மை பார்த்து ஏதாவது முணுமுணுத்திருப்பான். அதான் உணவு பிரண்டிருக்கு” என்று சத்தமாகவே சொல்லியவர், வருணின் தலையை தட்டி நீரினை புகட்டி விட்டார்.
அவர் சொல்லியதையே வம்சி கண்டுகொள்ளவில்லை.
வருண் தான் மறுத்து, வம்சிக்கு துணையாய் ஏதோ பேசினான்.
“காலை வணக்கம் தாத்தா” என்று மலர்ந்து கூறிய வம்சி, அவர் மடியில் தலை வைத்து, அந்த நீள் இருக்கையில் தனது ஆறடிக்கு மேலான உடலை குறுக்கி படுத்துக்கொண்டான்.
அவனின் செய்கையை பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வருக்கு கடுகடுவென வந்தது.
“டேய் படவா எழுந்திருடா… நான் காலையில் குளிச்சு முடிச்சு பூஜையை முடிச்சிட்டு வந்து உட்கார்ந்திருந்தால், நீ முகம் கூட கழுவாது அப்படியே வந்து என் மீது படுக்குற” என்று விளையாட்டாய் கூறிய திரிலோகரின் கன்னத்தில் வேண்டுமென்றே முத்தம் வைத்து, அவரை ஒருமுறை இறுக்கமாக அணைத்து விடுவித்தவன்,
“எனக்காக இன்னொரு முறை குளிச்சிட்டு பூஜை பண்ணிக்கோங்க தாத்தா” என சொல்லிய பேரனை தானே தன் மடியில் சாய்த்துக் கொண்டார் திரிலோகர்.
அவரின் மனம் வம்சியின் செயலில் குளிர்ந்திருந்தது.
அவருக்கு வம்சியும் வருணும் ஒன்றுதான். ஆனால் வயதில் மூத்தவர், முக்காலத்தையும் கணிக்கும் வல்லமை வாய்ந்த மாமனிதர் என்று வருண் எப்போதும் அவரிடம் மரியாதை பண்புடனே நடந்து கொள்வான். அவன் மட்டுமல்ல குடும்பத்தில் இருப்போர் அனைவரும் அப்படியே.
அதில் வம்சி மட்டும் விதிவிலக்கு, “நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் முதலில் எனக்கு தாத்தா அப்புறம் தான் எல்லாம்” என்று சிறு வயதிலிருந்தே அவருடன் நெருங்கி பழகுவான்.
“வசு ஸ்ட்ராங்கா ஒரு காஃபி.” கிச்சனை பார்த்து குரல் கொடுத்தவன் கண்களை மூடிக்கொண்டான்.
“முதலில் அவனை பிரஷ் பண்ண சொல்லுடா!” வருணிடம் ஈஸ்வர் கூற, “நீங்களே சொல்லிக்கோங்க” என்று சாதாரணமாக சொல்லிய வருண் கை கழுவச் சென்றான்.
வருணும் எப்படியாவது வம்சியை பற்றிய எண்ணத்தை ஈஸ்வரிடத்தில் மாற்ற முயற்சித்துக் கொண்டுதான் இருக்கின்றான். ஆனால் ஈஸ்வர் தன் பிடியிலிருந்து இறங்குவதாக இல்லை.
ஆவி பறக்க மணக்க மணக்க பில்டர் காபி கொண்டு வந்து வசந்தி கொடுக்க… எழுந்து அமர்ந்து கையில் வாங்கிய வம்சி, “ம்” என்ற ஒலியுடன் ஆழ்ந்து வாசம் பிடித்து சொட்டு சொட்டாக மிடறு விழுங்க… ஈஸ்வர் தலையில் அடித்துக் கொண்டார்.
“ஏன்டா… அந்த மனுஷனை கோபப்படுத்தி பார்க்குற.” வசந்தி மகனை அடக்க நினைத்தார்.
“அப்பா நீங்களாவது சொல்லக் கூடாதா?”
“அவன்(ஈஸ்வர்) மகன் மாதிரி நடத்துனா இவன்(வம்சி) அப்பா மாதிரி நடத்தப் போறான்.” எப்போதும் எனது ஆதரவு வம்சிக்குத்தான் என்று மறைமுகமாக உணர்த்தினார்.
“என்னம்மோ பண்ணுங்க” என்ற வசந்தி குக்கர் சத்தம் கேட்க, கிச்சனிற்கு விரைந்தார்.
“சீக்கிரம் கிளம்பி வாடா!” வரவேற்பறையை ஒட்டி வீட்டிற்குள் நுழைந்ததும் இருக்கும் காரிடாரில் ஷூ அணிந்தபடி வம்சியிடம் வருண் சொல்ல, அவனோ அதை காதிலே வாங்கவில்லை.
“போலீஸ்னா பஞ்சுவாலிட்டி, டிசிப்ளின் இதெல்லாம் இருக்கணும். அது இல்லாதவனெல்லாம் போலீஸ்” என்று நக்கலாக முணுமுணுத்த ஈஸ்வர்,
“போலீசுக்கு அடையாளமே வருண் தான், அவனை பார்த்து கத்துக்க சொல்லுங்க மாமா” என்று வம்சியை வாற திரிலோகரிடம் கூறினார்.
“வம்சிக்கு ட்யூட்டி டைம் மாறியிருக்கலாம் ஈஸ்வர்.”
“நீங்க உங்க பேரனை விட்டு கொடுக்க மாட்டீங்களே!” ஈஸ்வருக்கு வம்சியை மட்டம் தட்ட முடியாத ஆதங்கம்.
ஈஸ்வரின் பேச்சினை தான் கவனித்ததாகவே வம்சி காட்டிக்கொள்ளவில்லை. ஒரு சொட்டு மிச்சம் வைக்காது கோப்பையை காலி செய்தவன், கோப்பையை தனக்கு முன்பிருந்த டீபாயின் மீது வைத்து, அதே டீபாயில் தன்னுடைய கால்களை நீட்டி, இருக்கையில் நன்கு சாய்ந்து அமர்ந்தான்.
“இதெல்லாம் திருந்தாத ஜென்மம்” என்றவராக ஈஸ்வர் சென்றுவிட, வம்சி அட்டகாசமான சிரிப்பு ஒன்றை வெளிப்படுத்தினான்.
வருண் கிளம்ப தயாராக,
“வருண் அங்காடித் தெருவில் ஹீரோ ஹரிஷ் படத்தோட ஷூட்டிங்காம். பந்தோபஸ்து கேட்டிருக்காங்க, என்னன்னு பாரு” என்றான் வம்சி.
சரியென வருண் சென்றுவிட, வம்சி தயாரவதற்காக மாடியேற…
“பொறுப்பே இல்லாத இவனுக்கு கீழெல்லாம் என் மகன் வேலை பாக்குறான்.” மாடி படிக்கு வலது புறமிருக்கும் அறை வாயிலின் வெளியில் நின்றவாறு ஈஸ்வர் உரக்கக் கூறினான்.
இவ்வளவு நேரமிருந்த வம்சியின் பொறுமை சுத்தமாக போயிருந்தது. எப்போதுமே வம்சி, வருண் தனக்கு கீழென்று நினைத்ததில்லை. வருணும் ஒருபோதும் வம்சியின் உயர் நிலையில் சுணக்கம் கொண்டதில்லை. தங்களுக்குள் சிறு இடைவெளியும் இல்லாது தாங்கள் இருக்க, தந்தைக்கு அவ்வெண்ணம் இருப்பது வம்சிக்கு வருத்தத்தோடு கோபத்தையும் அளித்தது.
“எனக்கு கீழ் உங்க மகன் வேலை பார்ப்பது கவலையாக இருந்தால், உங்கள் மகனை ஐ.பி.எஸ் எக்ஸாம் எழுத சொல்லி எனக்கு மேல் போக சொல்ல வேண்டியது தானே!” காட்டமாக உரக்கக் கூறினான்.
இதில் நிச்சயம் வருணை தரமிறக்கும் எண்ணம் வம்சிக்கு துளியும் இல்லை.
என்னவோ ஏதோவென்று கிச்சனிற்குள்ளிருந்து வசந்தியும், தன்னுடைய அறையிலிருந்து அழகும் அங்கு வந்து விட்டனர்.
திரிலோகர் அங்கு பார்வையாளராக மாறிப்போனார்.
வம்சியின் பொறுமைக்கான எல்லை முடிவுக்கு வந்துவிட்டதாகவே அவர் கருதினார்.
“அவன் உன் அண்ணன் என்பதை மறந்துவிடாதே!” என்றவர், “அண்ணன் என்ற ஞாபகம் இருந்தால் அவனுக்கு நீ வேலை வைப்பாயா?” என்று எகுறினார்.
வம்சி வருணுக்கு வேலையிட்டது ஈஸ்வருக்கு பிடிக்கவில்லை. தன் மகனுக்கு இவன் உயர் அதிகரியா என்கிற ஆத்திரம் ஈஸ்வருக்கு. அதனை வம்சி நன்கு புரிந்து கொண்டான்.
“நான் உங்கள் மகனாக இல்லாத போது, உங்கள் மகன் எனக்கெப்படி அண்ணனாக இருக்க முடியும்?” ஈஸ்வருக்கு திருப்பி கொடுக்க வேண்டுமென்றே பேசினான்.
வம்சியின் கேள்வியில் ஈஸ்வருக்கு அடுத்து என்ன பேசுவதென்று தெரியவில்லை.
“உங்கள் மகன் என்பதற்காகவெல்லாம் வருண் என் அண்ணனில்லை என்று நான் சொல்ல மாட்டேன். இனியொரு முறை, இப்படி பேசி வேற்றுமையை உண்டாக்கி எங்களை பிரித்திடலாமென்று நினைக்காதீர்கள்” என்றவன் முறைப்போடு சென்றுவிட்டான்.
வம்சி சொல்வதும் உண்மையே. தனக்கு பிடிக்காதவனிடத்தில் வருண் ஒட்டுதலாக இருப்பது ஈஸ்வருக்கு சற்று வருத்தமே. அதை சரியாக வம்சி கண்டு கொண்டதில் ஈஸ்வரின் முகம் சிறுத்து விட்டது.
“நிச்சயம் உங்களிடம் நானிதை எதிர்பார்க்கவில்லைங்க, ஏன் இப்படி ஒரு கண்ணில் வெண்ணையும், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்குறீங்க” என்ற வசந்தி சேலை தலைப்பில் அழுகையை மறைத்தவராக தன்னுடைய சின்ன மகனின் பின்னால் சென்றார்.
அழகுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. என்றோ சிறு வயதில் வம்சி செய்த தவறை மனதில் வைத்து இன்று வரை அவனிடம் வெறுப்பைக் காட்டும் தன் அண்ணனின் இந்த குணம் அழகுக்கே பிடிக்கவில்லை. எத்தனை முறை எடுத்து சொல்வது. இந்தவொன்றில் புரிந்துகொள்ள மறுப்பவரிடம் என்ன வாதிடுவதென்று அமைதியாக நின்று கொண்டார் அழகு.
“அவனுங்களுக்குள்ளே அவனுங்க வேற்றுமையாக நினைக்காத போது, நீங்க இப்படி நினைப்பது தவறு மாப்பிள்ளை.
வம்சியை உங்கள் மகனாக பெற நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்” என்றார் திரிலோகர்.
அனைவரும் தன்னை குற்றவாளியை போல் சாடுவது பிடிக்காத ஈஸ்வர் கடந்த காலத்தை நினைத்து பார்த்தார்.
அப்போதுதான் ஈஸ்வர் சென்னைக்கு வந்து தொழில் தொடங்கி வளர்ச்சியில் தடுமாறிக் கொண்டிருந்த தருணம்.
வருண் படு சுட்டி… வம்சி அமைதியானவன், அதே சமயம் அழுத்தமானவன். வருண் சுட்டியாய் செய்யும் எல்லாம் தவற்றிற்கும் பழியை வம்சி ஏற்றுக்கொள்வான்.
அப்படி சிறு சிறு தவறு செய்கிறானென்று வம்சியுடன் கண்டிப்போடு இருக்கத் தொடங்கினார். வம்சியை கண்டிப்பதைக் கண்டே வருண் அரண்டு விடுவான். அதற்காகவே வம்சி வருணை காட்டிக்கொடுக்காது கண்டிப்புகளை ஏற்கத் துவங்கினான். அது எல்லாவற்றிலும் பழகி போனது.
அதேபோல் ஒருமுறை தொழில் மேம்பாட்டிற்காக, ஈஸ்வர் பாத்திரம் சப்பளை செய்யும் நபரிடம் ஒப்பந்தம் போட… அதன் பத்திரத்தை வசந்தியிடம் கொடுத்து பத்திரப்படுத்தக் கூறியவர், கடைக்கு லோடு வருவதாக சொல்லி அவசரமாக கிளம்பி விட்டார்.
லாக்கரில் வைப்பதற்காக அறைக்குள் சென்ற வசந்தி வாசலில் ஏதோ சத்தம் கேட்க, பத்திரத்தை மெத்தை மீதே வைத்துவிட்டு சென்றுவிட, அங்கு காகிதத்தில் படம் வரைந்து கொண்டிருந்த வருண் பத்திரம் சாதாரண காகிதத்திலிருந்து மாறுபட்ட வண்ணத்தில் தெரியவும் அதனை கையிலெடுத்து பார்த்தவன் அதோடு விட்டுவிடாமல், தொகை குறிப்பிட்டிருந்த இடத்தில் பூஜ்ஜியத்திற்கு அருகில் தானுமொரு பூஜ்ஜியத்தை போட்டு மற்றொரு பூஜ்ஜியம் போடும் சமயம் வசந்தி வந்து விட்டார்.
பதட்டத்தோடு அதனை வாங்கி பார்த்தவர் கணவருக்கு பயந்து தொப்பென்று வேதனையுடன் அமர, வம்சி அவரருகில் ஓடி வந்தான்.
“என்னடா பண்ணி வச்சிருக்க, அந்த மனுஷன் உண்டில்லைன்னு ஆக்கிடுவாறு” என்று வசந்தி சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஈஸ்வர் திரும்பி வந்திருந்தார்.
வசந்தியின் முகத்தை வைத்தே ஏதோ பெரிய தவறென்று புரிந்து கொண்டான் வம்சி.
வசந்தி கலவரமாக இருக்க, “என்ன வசந்தி” என்றபடி ஈஸ்வர் அருகில் வந்தார்.
பத்திரத்தை மறைக்கும் பொருட்டு கையை தானாக வசந்தி பின்னுக்க கொண்டு செல்ல… கண்டுகொண்ட ஈஸ்வர் பிடுங்காத குறையாக வாங்கி பார்க்க, நொடியில் அவர் முகம் கோபமாக மாறியது.
“யார் பண்ணதிது.” விட்டால் அவர்களை கொன்றுவிடும் ஆத்திரம்.
அப்பாவின் அதட்டலில் வருண் வசந்தியின் பின்னால் மறைய,
“வருண் நீ தான் பண்ணதா” என்று ஈஸ்வர் கை ஓங்கிக்கொண்டு செல்ல…
“நான் தான் அப்பா அதை பண்ணது…”
என்ன தவறு அதில் நேர்ந்துவிட்டதென்று தெரியாமலே பழியை தன்மீது போட்டுக்கொண்டான் வம்சி.
ஈஸ்வர் ஆத்திரத்தில் கண் மண் தெரியாது சிறு பிள்ளை அறியாமல் செய்த பிழையென்று நினையாது அடி பின்னிவிட்டார். வசந்தி எவ்வளவோ தடுக்க முயன்றும் முடியாது போனது. வருண் பயத்தில் அரண்டு கட்டிலிற்கு கீழ் சுருண்டு விட்டான்.
ஆனால் வம்சி…
முதலில் சில அடிகளுக்கு வலி தாங்காது துடித்தவன்… அந்த வயதிலும், அடுத்த அடிகளில் தன்னை திடப்படுத்தி விறைத்து நின்றான். ஈஸ்வர் தான் அடித்து அடித்து ஓய்ந்து போனார்.
ஈஸ்வர் அங்கிருந்து நகர்ந்ததும், அடுத்த கணம் வம்சி தரையில் விழுந்திருந்தான். உடல் முழுக்க ரத்தம் கன்றி சிவந்திருந்தது. வசந்தி துடித்து போனார்.
மருத்துவமனைக்கு தூக்கிச்செல்ல… மருத்துவர் திட்டி தீர்த்தார். போலீஸிற்கு போகிறேன் என்றவரிடம் மன்றாடி மகனுக்கு வைத்தியம் பார்த்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.
வருணிற்கு எதுவும் புரியவில்லை என்றாலும்… தன்னால் தான் தன் உடன் பிறந்தவனுக்கு இவ்வளவு வலியென்று நினைத்தவன், வம்சியிடம் மன்னிப்பு வேண்ட…வம்சி வருணை அணைத்துக் கொண்டான்.
“எனக்கு வலிக்கவில்லை வருண்… இந்த அடி உனக்கு விழாமல் இருந்ததே எனக்கு போதும்” என்று அச்சிறு வயதிலும் தமயனுக்காக யோசித்தான்.
இரவு வீடு வந்த ஈஸ்வர் சோர்ந்து போனவராக இருக்கையில் அமர்ந்தவர், வம்சிக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த வசந்தியிடம்… அவர் கேட்காமலே பேசினார்.
“நல்லவேளை அந்த ஆளு நல்லவனாக போனதால் ஒப்பந்தத்தை மாற்றி எழுத ஒப்புக் கொண்டார். இல்லையென்றால் என்னவாகியிருக்கும்…
நினைத்து பார்க்கவே பயமாக இருக்கு வசந்தி.
அவ்வளவு தொகை… என் வாழ்நாள் முழுக்க உழைத்திருக்க வேண்டும்.” நிம்மதி மூச்சு அவரிடம் எழுந்தது.
“உங்களுக்கு ஒன்னுமில்லை… என் புள்ளையை பாருங்க, உடம்பு முழுக்க எப்படியிருக்குன்னு.” வசந்தி வெகுண்டு விட்டார்.
“அப்போ அவன் செய்தது தப்பில்லைன்னு சொல்ல வர்றீயா?”
“உங்களுக்கு பிள்ளையை விட பணம் முக்கியமா போய்விட்டதா? மாட்டை போட்டு அடிக்கிற மாதிரி அந்த அடி அடிக்கிறீங்க… என் பிள்ளைக்கு ஏதாவது ஆகியிருந்தால் உங்களால் திருப்பித் தர முடியுமா?”
வசந்தி கேட்க கேட்க ஈஸ்வருக்கு தன் தவறு புரிந்தாலும்… அதனை காட்டிக்கொள்ள அவர் விரும்பவில்லை.
“என்னையே எதிர்த்து கேள்வி கேட்கும் அளவிற்கு வந்து விட்டாயா?”
“அவன் தப்பு செய்தான்னு தானே அவனை அடிச்சீங்க… நீங்க செய்த தப்புக்கு உங்களை கேள்வி கேட்கக்கூட கூடாதா?”
வசந்தி கேட்டதில் ஈஸ்வரின் மனம் குன்ற அதனை மறைப்பதற்காக,
“என்னையே அடிக்கணும் சொல்ல வர்றீயா?” என்று வசந்தியை அடிக்க கையை ஓங்கிக்கொண்டு செல்ல இருவருக்கும் குறுக்கே மறித்து நின்றான் வம்சி.
“அம்மா மேல் உங்க கை பட்டுச்சு…”
வம்சி சொல்லிய தோரணையே ஈஸ்வருக்கு கிலி பிடிக்கச் செய்தது.
தன் மகனாகவே இருந்தாலும் தன்னையே மிரட்டியது ஈஸ்வருக்கு வம்சியின் மீது வெறுப்பை உண்டாக்கியது. அன்று முதல் ஈஸ்வருக்கு வம்சி வேண்டாதவனாகிப் போனான்.
“பெத்த அப்பாவையே அடிக்க வர்றான். இதெல்லாம் எங்க உருப்பட போகுது. இதுல போலீஸ் ஆவன்னு இந்த வயசுலே கனவு வேற… எப்போ என்னையே எதிர்த்து நின்னு பேசினானோ, இனி இவன் என் மகனில்லை” என்றவர் அன்று முதல் வம்சியை தன்னிடமிருந்து ஒதுக்கி வைத்தார்.
ஈஸ்வர் பேசிய பேச்சிற்காகவே நன்றாக படித்த வம்சி… தன் கனவை முதல்முறை தேர்வு எழுதிய போதே தேர்ச்சி அடைந்து ஈஸ்வரின் எண்ணத்தில் கரியை பூசினான். அதில் வம்சி மீது இன்னும் வெறுப்பை வளர்த்துக் கொண்டார்.
வம்சி காவல்துறை அதிகாரி ஆகிவிட்டான் என்பதற்காகவே… வருணிற்கு பிடிக்காத இவ்வேலையில் அவனை சேர்க்க, ஐபிஎஸ் தேர்வெழுத ஈஸ்வர் வற்புறுத்த… அவரின் பிடிவாதத்திற்காக எழுதிய வருண் இருமுறை எழுதியும் தேர்ச்சியடையாமல் போக… ஆய்வாளர் தேர்விற்கு அனுப்பி வைக்க அதில் தட்டு தடுமாறி தேர்ச்சி பெற்றான் வருண்.
“உனக்கு பிடிக்கலன்னா பிடிக்கல சொல்லுடா… எதுக்கு இப்படி கஷ்டப்படுற.” வம்சி சொல்ல வருணுக்குத் தெரியும் தன் தந்தையிடம் அப்படி சொல்லிவிட முடியாதென, அதனால் பிடிக்காத வேலையை பிடித்தமாக மாற்றிக் கொண்டான்.
நினைத்து பார்த்த ஈஸ்வருக்கு வம்சியின் செயலிகளில் இருக்கும் நியாயம் புரிந்தாலும் வெறுப்பு எனும் திரையில் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.
‘வேண்டாத பிள்ளை வேண்டாதவனாகவே இருக்கட்டும்.’ மனதோடு நினைத்தார்.
தொடரும்…