அத்தியாயம் 6 :
காலை பத்து மணியளவில்…
வம்சி சொல்லியதை போல் படபிடிப்பு நடைபெறும் இடத்திற்கு தானே ஒருமுறை சென்று பார்த்து பாதுகாப்பை உறுதி செய்த வருண், காவல் நிலையத்திற்குள் நுழையும்போது அங்கு அத்தொகுதி எம்.எல்.ஏ ரத்தினம் நடுநாயகமாக அமர்ந்திருந்தார்.
முதலில் வம்சி தான் வந்துவிட்டானோ என்று கவனித்த ரத்தினம், வருண் என்றதும் அமைதியாக இருந்து விட்டார்.
அவருக்கு சல்யூட் வைத்த வருண், “என்ன விஷயம் சார்?” என்று கேட்க ரத்தினம் வாய் திறக்கவேயில்லை. ஐந்து நிமிடம் அவருக்கு அருகில் நின்றவன் அதற்குமேல் தன் பணியை கவனிக்க தனது இருக்கைக்குச் சென்றான்.
வருண் கண் காட்ட, கோப்புகளை அடுக்கிக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் முத்து அவனருகில் சென்றார்.
“இவரெதுக்குண்ணா வந்திருக்கிறார்?”
“தெரியலங்களே சார். எஸ்.ஐ சார் கூட அபிஷியல் மேட்டரா சாருன்னு கேட்டு பார்த்தார். மனுஷன் வாயே திறக்கவில்லை” என வருணுக்கு பதிலளித்தார்.
“சரிண்ணே… எப்போ வந்தாரு?”
“அவரு வந்து ஒரு மணி நேரத்துக்கு மேல இருக்கும் சார். வம்சி தம்பியை பார்க்க வந்திருப்பாருன்னு நினைக்கிறேன்” என்று தன் அனுமானத்தைக் கூறியவர், வருண் அனுமதித்ததும் தான் விட்ட பணியை தொடரச் சென்றார்.
முத்து அகன்றதும் உள்ளறையில் ஏதோ வழக்கு விசாரணையில் இருந்த உதவி ஆய்வாளர் விக்னேஷ் வருணிடம் வந்தான்.
“ஐ திங்க்… ஹீ இஸ் வெயிட்டிங் ஃபார் வம்சி சார்” என்றவன், “அவருக்கு போன் போட்டால் எடுக்கல… நீங்க ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க சார், அவரு(ரத்தினம்) வந்து ரொம்ப நேரமாச்சு” என்றான்.
“ம்” என்று தலையசைத்த வருண் வம்சிக்கு அழைக்க,
இறுதி ரிங்கில் சாவகாசமாக அழைப்பு ஏற்று காதில் வைத்தவன்…
“சொல்லுடா வருண்” என்றான்.
“சார் எம்.எல்.ஏ ரத்தினம் வந்திருக்கிறார்? ரொம்ப நேரமா உங்களுக்காக வெயிட் பண்றார்.”
வருண், சாரென்றதுமே வம்சியும் உறவை தள்ளி வைத்து தன்னுடைய பணிக்கு மாறியிருந்தான்.
“இன்னைக்கே வந்துட்டானா? நான் இன்னும் ரெண்டு நாள் அமைதியா இருப்பான்னு நினைச்சேன்” என்ற வம்சி,
“இங்க பாருங்க வருண், நான் ஸ்டேஷனுக்கு வரலான்னு தான் பார்த்தேன்… ஆனால் இப்போ எனக்கு ஷூட்டிங் பார்க்கணும் போல இருக்கே!” என்றான்.
“அய்யோ சார்…” வருண் பதறினான்.
“ஏற்கனவே அவரு முகம் கோபமா இருக்கு சார்?”
“சோ வாட்… மிஸ்டர்.வருண், வேணுன்னா நீங்க ஒன்னு பண்ணுங்க… அவரை நாளைக்கு வரச் சொல்லுங்களேன்” என்று சாதரணமாகக் கூறிய வம்சி ஷூட்டிங் நடைபெறும் இடத்தை தவிர்த்து தனது கட்டுப்பாட்டில் இருக்கும் மற்ற பகுதிகளுக்கு ரவுண்ட்ஸ் சென்று விட்டான்.
‘பய வசமா ஏதோ பண்ணியிருக்கான். இவன் ஒன்னொன்னும் பண்ணும் போது எனக்குத்தான் வயித்துல ஏதோ உருளுது’ என்று வம்சியை நினைத்து மனதில் புலம்பிய வருண் தன்னையே பார்த்திருந்த ரத்தினத்திற்கு உதட்டை இழுத்து வைத்து புன்னகைத்தான்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கடந்த நிலையில் காவல் நிலையம் வந்து சேர்ந்தான்.
ரத்தினம் உச்சபட்ச கொதிப்பில் இருந்தார்.
‘தான் வந்து இவ்வளவு நேரமாகிறது. இங்கு வேலை பார்ப்பவர் ஒருவர் கூடவா தனது வரவை வம்சியிடம் சொல்லியிருக்க மாட்டார்கள்.’ வேண்டுமென்றே வம்சி தன்னை காக்க வைப்பதாகவே நினைத்தார். உண்மையும் அதுதான் என்று அவருக்கு தெரியவில்லை.
உள்ளே வந்த வம்சி அங்கு அமர்ந்திருந்த ரத்தினத்தை கண்டுகொள்ளாது தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொண்டான்.
ரத்தினம் கோபத்தில் இருக்கையை விட்டு எழுந்து விட்டார்.
வருணுக்கு… வம்சி இப்படி நேரடியாக ரத்தினத்திடம் மோதுகிறானே என்று கவலையாக இருந்தது.
விக்னேஷ் தான் அவசரமாக வம்சியின் அறை கதவை தட்டி உள்ளே சென்றான்.
“சார்…”
“ஆங்… விக்னேஷ், இஃப் யூ டோன்ட் மைன்ட்… முத்தண்ணாவிடம் நான் காஃபி கேட்டேன்னு சொல்லிடுறீங்களா?”
வம்சியின் செயலில் விக்னேஷிற்கு கோபம் வந்துவிட்டது.
“அறிவிருக்காடா உனக்கு?”
“அதிருந்திருந்தா நான் ஏன் உன் ஃபிரண்டா இருக்கப்போறேன்.” வம்சியின் கண்கள் குறும்பில் மின்னியது.
“விளையாடாத வம்சி.” வம்சியின் பேச்சில் விக்னேஷிற்கு ஆயாசமாக வந்தது.
அப்போது உள் நுழைந்த வருண்…
“எனக்குத் தெரியாம ஏதாவது பண்ணி வச்சிருக்கியா வம்சி” என்றான். வருணிடத்தில் அவ்வளவு பதட்டம்.
“சொல்லுடா… என்ன வில்லங்கத்தை இழுத்து வச்சிருக்க. வந்ததிலிருந்து அந்த ஆளு முகத்தில் அவ்வளவு கோபம்.” நண்பனின் நலனில் அக்கறை கொண்டவனாக வினவினான் விக்னேஷ்.
அண்ணனும், நண்பனும் தன் மீது கொண்ட நலனால் பதற்றம் கொண்டிருக்க, வம்சியிடத்தில் சின்ன சலனம் கூட இல்லை. எப்போதும் போல் குறும்பு மின்னும் விழிகளுடன் அதே அழுத்தம்.
“இப்போ வாய் திறக்கப்போறீயா இல்லையா வம்சி.”
“வாய திறடா எருமை… உனக்கு அந்த ரத்தினத்தை பற்றி நல்லாத் தெரியும் தானே!” வருணுடன் விக்னேஷும் கோபத்தில் கத்தினான்.
“உயர் அதிகாரியிடம் கேள்வி கேட்கும் உரிமை உங்களுக்கு இல்லை.” கூர் பார்வையுடன் வம்சி கூற, அவன் இப்படி சொல்வதற்கான காரணம் அவர்களுக்கா தெரியாது.
“சாரி சார்.” வருண் மற்றும் விக்னேஷ் ஒரு சேர கூறினர்.
அவர்களின் பதட்டத்தை குறைத்து அமைதி படுத்துவதற்கே வம்சி அவ்வாறு கூறினான். அதனை புரிந்த அவர்களும் அடுத்த நொடி அவனுக்கு கீழ்படிந்த பணியாளர்களாக மாறியிருந்தனர்.
வருணும், வம்சியும் அண்ணன் தம்பி உறவாக இருந்தாலும். எப்போதும் நண்பர்களே! வம்சி வேலையில் சேர்ந்த புதிதில் அங்கு அவன் வயது ஒத்த ஒரே ஆள் விக்னேஷ் மட்டுமே. இருவருக்குள்ளும் பதவியை தாண்டி நட்பு மலர்ந்திருக்க, அந்நேரம் தான் வருணுக்கு பணி கிடைத்தது. தன்னுடைய சகோதரனின் மென்மையான குணம் அறிந்திருந்த வம்சி, எதிரிகளின் தொல்லையை கண்டு அவனால் மிரள மட்டுமே முடியும், எதிர்த்து நிக்க முடியாதென தனது அதிகாரத்தை பயன்படுத்தி தன்னுடன் பணி புரியுமாறு செய்தான். இது வருணுக்கே தெரியாது. அன்றிலிருந்து மூவரும் பணியைத் தாண்டிய நண்பர்களாக இருக்க, வம்சியை நினைத்தே மற்ற இருவருக்கும் கவலையாக இருக்கும்.
எப்போது எந்த உயரத்தில் கை வைப்பான் என்றே தெரியாது. அவற்றையெல்லாம் வம்சி எளிதாக கடந்து வந்துவிடுவான் என்கிற நம்பிக்கை இருந்தாலும்… அக்கட்டத்தை அவன் தாண்டி வரும்வரை அவர்களின் மனம் தடதடத்துக் கொண்டுதான் இருக்கும்.
அந்தவகையில் மீண்டும் இப்போது புதிய சிக்கலை வம்சி கொண்டு வந்துள்ளான். அதனை நினைத்து கவலை கொண்ட இருவரையும் அடக்கியவன், முத்தண்ணன் கொண்டு வந்த தேநீரை வழக்கம்போல் ஆழ்ந்து நாசி இழுத்து, மிடறாக விழுங்கத் தொடங்க… பார்த்திருந்த வருணுக்கும் விக்னேஷுக்கும் கோபம் மற்றும் கவலையைத் தாண்டி எரிச்சலாக வந்தது.
“பார்த்து கவனமா இரு வம்சி” என்ற வருண் வெளியேற திரும்ப,
ஏற்கனவே தன்னை கண்டு கொள்ளாது சென்ற கோபத்தில் இருந்த ரத்தினம்… வம்சி அறைக்குள் சென்று நேரமான பின்னரும்… தன்னை உள்ளே அழைக்காது போக, கொதிக்கும் மனதை அடக்கியவராக தானே உள் சென்றார்.
அவரின் வேக நடையே அவர் எவ்வளவு கொதிப்பில் இருக்கிறார் என்பதை காட்டியது.
வெளியில் செல்ல எத்தனித்த வருண் ரத்தினத்தின் கோபத்தை கண்டு அங்கே வம்சி அருகில் சென்று நின்று கொண்டான்.
வம்சி தனதிருக்கையில் நன்கு பின் சாய்ந்து கால் மேல் காலிட்டு அமர்ந்திருக்க, அவனின் இருபுறமும் வருணும், விக்னேஷும் நின்றிருந்தனர்.
“பாருடா பூனையெல்லாம் புலி மாதிரி நிக்குது.” வம்சி விக்னேஷின் காதில் கிசுகிசுக்க, சிரிப்பு எட்டி பார்த்த போதும் விக்னேஷ் முறைக்கவே செய்தான்.
“நான் பூனையாவே இருந்துட்டு போறேன்… கொஞ்சம் உன் வாலை சுருட்டிட்டு இருடா! அப்புறம் ஈஸ்வர் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கணும்.” வருண் வம்சிக்கு மட்டும் கேட்கும் வகையில் பேசினான்.
ரத்தினம் மூவரையும் தன் பார்வையால் சுழற்றி பார்த்து… வம்சியின் மீது நிலைக்கச் செய்தார்.
வருணும், விக்னேஷும் ஒரு சேர ரத்தினத்திற்கு சல்யூட் வைக்க, வம்சி தன்னிருக்கையிலிருந்து எழுந்து நிற்க கூடவில்லை.
‘தன் வேலை முடியட்டும் பிறகு இவனை பார்த்துக் கொள்ளலாம்’ என நினைத்த ரத்தினம், வம்சி சொல்லாத போதும் அவனுக்கு எதிரில் மேசைக்கு முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தார்.
வெண்ணிற வேட்டி சட்டையில் முறுக்கிவிட்ட மீசையுடன் அமர்ந்தவர் தோரணையில் வருணுக்குத்தான் கிலி பிடித்தது.
“நானொரு எம்.எல்.ஏ தெரியுமில்ல?”
“ஏன் தெரியாமல்…” என்ற வம்சி, “வந்த விஷயத்தை நேரடியா சொன்னால் நல்லாயிருக்கும்” என்றான்.
ரத்தினம் வருணையும், விக்னேஷையும் மாற்றி மாற்றி பார்க்க,
“அவர்கள் இல்லாமல் நானெந்த கேஸையும் டீல் செய்வதில்லை” என அழுத்தமாகக் கூறினான்.
பல்லை கடித்தபடி,
“என் பொண்ணை காணவில்லை.”
ரத்தினம் சொல்லியதும் வருணும் விக்னேஷும் வம்சியைத்தான் பார்த்தனர்.
“உங்க ஏரியா போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வேண்டியது தானே சார்.” சுழல் இருக்கையை இட வலமாக சுழற்றியபடி சாதரணமாகக் கூறினான்.
“வி.கே(வம்சி கிருஷ்ணா) நானொரு எம்.எல்.ஏ. நான் நினைத்திருந்தால் உன்னை என் இடத்திற்கு வரவழைத்து பேசியிருக்க முடியும்.”
“அப்போ அதையே செய்திருக்கலாமே சார். இங்கு ஏன் வந்தீங்க?” வம்சியின் உடல்மொழியில் முழுக்க முழுக்க தெனாவெட்டு.
“நான் வந்திருப்பது தெரிந்தும் என்னை காக்க வைத்த நீயா அழைத்ததும் வந்துவிடப்போற. அதனால் தான் நானே வந்தேன்.”
ரத்தினத்திற்கு காரியம் ஆக வேண்டுமே. ஆதலால் தழைந்து போனார்.
“இப்போது உங்களால் என்னுடைய புகாரை ஏற்க முடியுமா முடியாதா?”
“அப்போ சொன்னது தான் இப்போதும். உங்க ஏரியா போலீஸ் ஸ்டேஷன் போங்க.”
“காணாமல் போனது என்னுடைய பொண்ணு மிஸ்டர்.வி.கே.!”
“ஹோ…” அவ்வளவு தான் வம்சியின் பிரதிபலிப்பு.
தன்னுடைய பெண் விடயம் என்பதால் பாதுகாவலர்கள் கூட இல்லாது வம்சியை காண தனியாக வந்திருந்தார் ரத்தினம். முக்கியமாக ஊடங்கங்களுக்கு தெரிந்துவிடக் கூடாதென்று நினைத்தார். அதற்காகவே வம்சியிடம் மிகத் தன்மையாக பேசிக் கொண்டிருக்கிறார்.
“வேண்டாம் வி.கே நான் ரொம்ப பொறுமையா பேசிட்டு இருக்கேன். நீ ஒரு வழக்கை கையிலெடுத்தால் உடனடியாக விரைந்து முடிப்பன்னு தான் உன்னைத்தேடி வந்திருக்கிறேன்.”
“ஆனால் பாருங்க என் கட்டுப்பாட்டில் இருக்கும் கேஸ்களை பார்க்கவே எனக்கு நேரமில்லை சார்.”
“முடிவா என்ன சொல்றீங்க வி.கே?”
“அதான் சொல்லிட்டேனே சார்.”
“நீங்க ஏதோ உள்ள வச்சி பேசறீங்க வி.கே.”
“அப்படியே வச்சிக்கோங்க சார்.”
“நீங்களே இந்த கேஸை எடுப்பீங்க… எடுக்க வைக்கிறேன்.” கூறியவர் கோபம் சற்றும் குறையாது வேகமாக செல்ல…
“வன் மினிட் சார்” என்றழைத்தான்.
நடையை நிறுத்திய ரத்தினமும் நின்ற இடத்திலிருந்து வம்சியை திரும்பிப் பார்க்க,
“இப்போ புரியுதா சார்… வெளிய போன பொண்ணு வீட்டுக்கு வரலன்னா எப்படியிருக்குமென்று.
பொண்ணுக்கு என்னாச்சோங்கிற பயம் மனசுக்குள்ள குளுகுளுன்னு இருக்குமே!
உங்க பொண்ணுக்கு ஒன்றென்றதும் ஓடி வந்திருக்கீங்களே… இப்போ தெரியுமே அன்னைக்கு உங்க பையனால் சீரழிஞ்ச ஒரு பொண்ணோட அப்பாவோட தவிப்பு என்னன்னு…” வம்சி அர்த்தமாக சிரித்தான்.
“அப்போ என் பொண்ணு?”
“நீங்க வீட்டுக்கு போறதுக்குள்ள அவங்க வீட்டுல இருப்பாங்க” என்ற வம்சி, “உங்களுக்காவது உங்க பொண்ணு எந்த சேதாரமுமின்றி உயிரோடு கிடைச்சிட்டாள். ஆனால் அந்த அப்பாவுக்கு அவர் பொண்ணோட உடல் எப்படி கிடைத்தது தெரியுமா?” என வெடித்து சிதறியவன் மேசையை குத்த இரண்டாக பிளந்தது.
வம்சியின் இந்த முகத்தில் ரத்தினம் உட்பட அனைவரும் அரண்டு விட்டனர்.
“தப்பு பண்ண உங்க பையனை காப்பாற்ற என்னவெல்லாம் செஞ்சீங்க, அதேபோல் இப்போ செய்து உங்க பொண்ணு காணாமல் போனதை இல்லாமல் ஆக்கிடுங்க பார்க்கலாம்.”
ரத்தினம் வம்சியின் பேச்சில் குன்றிப்போனார்.
செல்வ செழிப்போடு வளர்ந்த ரத்தினத்தின் மகன், அனைத்து செல்வந்தர் வீட்டு பிள்ளைகள் போல் தவறானவனாகவே வளர்ந்தான். அதோடு தீய பழக்கங்களும்.
அவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து அவளின் இறப்பிற்கும் காரணமாக, தவறு செய்தவன் அவன்தான், அவனால் தான் தன்னுடைய மகள் இறந்துபோனாள் என்பதை அறிந்த அப்பெண்ணின் தந்தை புகார் கொடுக்க காவல் நிலையம் செல்ல,
“கல்லூரிக்கு போன இடத்தில் தானே உங்க பொண்ணு காணாமல் போயிருக்கிறாள். அப்போ அந்த ஏரியா காவல் நிலையத்தில் புகார் கொடுங்க” என்று அவர் வசிக்கும் பகுதி காவல் நிலையத்தில் சொல்லிவிட, அப்பெண்ணின் தந்தையும் கல்லூரிப் பகுதி காவல் நிலையம் சென்று புகார் கொடுக்க, “இது உங்க ஏரியா இல்லை” என்று அவர்களும் விரட்டிவிட… மேலும் தகாத வார்த்தைகளால் அவரை மனதால் மரிக்க வைத்திருந்தனர்.
மகளுக்காகவே வாழ்ந்த அந்த தந்தை மகளின் இறப்பிற்கு நியாயம் கூட கிடைக்காது, மகளுக்கு நேர்ந்த கொடூரத்தை தாங்கிக்கொள்ள முடியாது தூக்கிட்டு மரணித்துப்போனார்.
காவலர்களின் செயல்களுக்கு பின்னால், மகனை காப்பற்ற அரணாக இருந்தது ரத்தினம்.
என்ன செய்தாலும் ரத்தினத்தின் பதவியை மீறி அவரின் மகனுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க முடியாது என்று நினைத்த வம்சி, சுற்றுலா சென்றிருக்கும் அவரின் மகனை அங்கேயே விபத்தில் இறந்ததை போன்று அழித்து, அவனின் உடல் கூட கிடைத்திடாத வகையில் அனைத்தையும் முடித்துவிட்டு இங்கு வந்தான். இது வருணுக்கும் கூட தெரியாது.
ரத்தினத்தின் தவறை சுட்டிக்காட்ட அவரின் மகளின் சம்மதத்தோடு முத்தண்ணன் வீட்டில் இரண்டு நாட்களாக தங்க வைத்து அவரை தவிக்க வைத்தும் விட்டான்.
“என் பொண்ணை வைத்தே என்னை மிரட்டி பார்க்க நினைக்கின்றாயா… நான் நினைத்தால் உன்னை மொத்தமாக அழித்து விடுவேன்.” கொக்கரித்தவராய் முடிந்தால் செய்யும் என்பதை போல் பார்த்தவன், போய் வருமாறு அவரிடம் வாசலை நோக்கி கை காண்பித்தான்.
வருண் வம்சி செய்த காரியத்தில் தானொரு காவல்துறை அதிகாரி என்பதையும் மறந்து தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்.
“என்னடா பண்ணி வச்சிருக்க… அந்த ஆளுக்கு அரசியல்ல பெரிய செல்வாக்குடா!” விக்னேஷ் நண்பனை கடிந்து கொண்டான்.
“என்னடா நான் கேட்டுட்டே இருக்கேன் நீ அந்த ஆள் போனதையே பார்த்திட்டு இருக்க?”
“அது ஒன்னுமில்லைடா விக்கி… நான் அவன் பொண்ணை சும்மா பதுக்கி வச்சதுக்கே இந்த மிரட்டு மிரட்டுறானே… அவன் பையன் இறந்தது தெரிந்தால்” எனக்கூறி சாதாரணமாக வருண் மற்றும் விக்னேஷின் தலையில் அணுகுண்டை போட்டான்.
அதிர்ந்த இருவரின் மு
கத்தையும் பார்த்த வம்சி…
“அவன் பையன் இறப்பதற்கு காரணமே நான்தானென்று தெரிந்தால்!” என்று சொல்லி இருவரின் அதிர்ந்த முகத்தையும் திருப்தியாக பார்த்து ரசித்தவன், முத்தண்ணனை தேநீர் கொண்டுவரக் கூறினான்.
தொடரும்…