அத்தியாயம் 7 :
வம்சி வழக்கம்போல் தேநீரை ஆழ்ந்து அனுபவித்து உள்ளிறக்கிக் கொண்டிருக்க, வருண் தன் தம்பி செய்த காரியத்தை எண்ணி கவலை கொண்டவனாக ஏதும் பேசாது ஓய்ந்த முகத்துடன் கன்னத்தில் கை வைத்து இருக்கையில் அமர்ந்திருக்க, விக்னேஷ் நண்பனை கொலை வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
“எவ்வளவு நேரம் என்னை சைட் அடிப்ப? வசுதாக்கு தெரிஞ்சுது உன்னை காய்ச்சி எடுத்திடுவாள்.” வசுதா விக்னேஷின் மனைவி, திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகின்றன.
“ஆமா அப்படியே இவரு அழகுல மயங்கி நிக்கிறாங்க இங்க…” என்ற விக்னேஷ் வேகமாக வம்சியின் அருகில் வந்து, அவன் அமர்ந்திருப்பதற்கு ஏற்றவாறு மேசையில் கை ஊன்றி, குனிந்து அவன் முகத்தை நேருக்கு நேர் பார்க்க…
“ஏன்டா, அங்கிருந்து சைட் அடிச்சு மயங்கலன்னு… கிட்ட வந்து மயங்குறியோ!” என்று வம்சி கேலி பேசினான்.
“நான் இப்போ சிரிக்கிற மூடில் இல்லை” என்ற விக்னேஷ், “உண்மையாவே அவனை போட்டுத் தள்ளிட்டியாடா?” எனக் கேட்டான்.
“ஆமா மச்சி.” படு கூலாக மொழிந்தான்.
“ஏன்டா இப்படி பயமுறுத்தி சாகடிக்கிற” என்று வேகமாக வினவிய வருண்,
“உன்னை கையெடுத்து கும்பிடுறேன் வம்சி… எனக்கு வேறெந்த ஊருக்காவது டிரான்ஸ்பர் வாங்கிக்கொடு” என்றான்.
“அப்படியே எனக்கும்.” விக்னேஷ் வருண் வார்த்தைகளை வழி மொழிந்தான்.
“அப்போ என்னோட இருந்தால் உங்களுக்கு பிரச்சினை வரும் அப்படித்தானே!” வம்சியின் குரல் அழுத்தமாக ஒலித்ததோ!
“உன்கூட மனுஷன் இருப்பானாடா?” வருணும் விக்னேஷும் ஒரு சேர ஒன்றாகக் கூற,
“டோன்ட் ஒர்ரி காய்ஸ்… அந்த ரத்தினமே எனக்கு டிரான்ஸ்பர் ஏற்பாடு பண்ணிடுவான். பிறகு நீங்க என் தொல்லையில்லாமால் நிம்மதியாக இருக்கலாம்.” சொல்லிய வம்சி கோப்பினை ஆராய, இருவரிடத்திலும் எவ்வித மாற்றமும் இல்லை.
“அம் சீரியஸ்… என்னால் யாருக்கும் பிரச்சினை வேண்டாம்.” எங்கோ சுவற்றை பார்த்துக் கூறியவன், அங்கிருந்து வெளியேறினான்.
“ஹர்ட் பண்ணிட்டமோ?” விக்னேஷ் வருணிடம் கேட்க,
“ஆமான்னு தான் நினைக்கிறேன்” என்றான் வருண்.
“சரி விடுடா, அவன் கோபம் எவ்வளவு நேரத்திற்கு” என்ற விக்னேஷ் வம்சியைத் தேடி செல்ல… லாக்கப்பில் ஒருவனை அடி வெளுத்துக் கொண்டிருந்தான் வம்சி.
“வலிக்கல…
வலிக்கவே இல்லை சார்!”
அடி வாங்கிக் கொண்டிருப்பவன் மூச்சு விடாது சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சொல்லுவதை நிறுத்தினால், வம்சியின் அடியின் வேகம் அதிகரித்தது.
“இன்னும் சத்தமா சொல்லுடா… எப்படி இருக்கு?”
“நல்லா இருக்கு சார். வலிக்கவே இல்லை.” வம்சியின் அடிக்கு பயந்து சத்தமாகக் கூறினான்.
“என்னது” என்ற வம்சியின் கர்ஜனையில் குற்றவாளி அரண்டு முழிக்க,
“எதுக்குடா வசனத்தை மாத்துற?” எனக் கேட்டு, அதற்கும் சேர்த்து அடி வெளுக்க,
குற்றவாளியோ முன்பை விட அதிக சத்தத்துடன்,
“வலிக்கல ஐயா!
வலிக்கவேஇல்லை ஐயா!” என்று மணிக்கு 120 கிமீ வேகத்தில் கூறினான்.
“இப்போ எதுக்கு எங்க மேல் இருக்கும் கோபத்தை அவன் மேல் காட்டிட்டு இருக்க?” வினேஷிற்கே வம்சி அந்த குற்றவாளியை அடிப்பது அதிகப்படியாகத் தோன்றியது.
“எனக்கு யார் மீதும் கோபமில்லை.”
வம்சி அவ்வாறு கூறினாலும், அவனின் கோபத்தின் அளவு அவனது அடியில் தெரிந்தது.
“ஆமா… ஆமா… கோபம் இல்லை தான். அதான் உன் அடியை பார்த்தாலே தெரியுதே!”
“ஏன் நான் யாரையும் அடித்து நீ பார்த்ததில்லையா?”
“சாதாரண பிக்பாக்கெட் கேஸ்.”
“ஏன் திருடுவது தப்பில்லையா?”
இதற்கு என்ன சொல்வதென்று தெரியாத விக்னேஷ் ஒரு பெரு மூச்சுடன் வெளியேறிவிட்டான்.
வெளியில் வந்த விக்னேஷ் வருணிடம் உதடு பிதுக்கி காண்பிக்க, வம்சியை சமாதானம் செய்ய வருண் லாக்கப்பிற்குள் சென்றான்.
“வம்சி சாரிடா… அது ஏதோ பயத்தில் அப்படி சொல்லிட்டேன்.” வருண் கேட்ட மன்னிப்பு காதில் விழுந்தபோதும் வம்சி அதனை கண்டுகொள்ளவில்லை. தன்னை எப்படி பிரித்து பார்க்கலாமென்கிற கோபம் அளவுக்கு அதிகமாகவே கனன்றது.
“நீ ஏன்டா நிறுத்திட்ட…” வருண் வந்து பேசியதும், தான் சொல்லிக் கொண்டிருந்ததை குற்றவாளி நிறுத்த அதற்கும் சேர்த்து அடி விலாசினான்.
“அவனை அடிப்பது என்னையே அடிப்பது போலிருக்கு.”
வருண் சொல்லி முடிக்கவில்லை… லத்தியை கீழே போட்ட வம்சி லாக்கப்பிலிருந்து விடுவிடுவென வெளியேறியிருந்தான். வருண் இதழ்க்குள் லேசாக புன்னகைத்துக் கொண்டான்.
“முத்தண்ணா உங்க தம்பி சாருக்கு ஒரு டீ கொண்டு போங்க” என்ற வருண், ரத்தினம் என்ன செய்வானோ என்கிற பயத்தை முயன்று புறம் தள்ள நினைத்தான்.
வருணுக்கு வம்சி செய்தது நியாயமாகவே பட்டது. இருப்பினும் இந்நிலையில் அவனால் ஒரு காவல் அதிகாரியாக யோசிக்க முடியவில்லை. தன் தமயனுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாதென்றே நினைத்தான்.
தன்னுடைய பணி முடிந்து வருண் வீட்டிற்கு கிளம்ப,
“நீ வரவில்லையா வம்சி?” எனத் தன் தம்பியிடம் கேட்டான்.
“என்னோடு வந்தால் உனக்குத்தான் பிரச்சினை… நீ போ, நான் அப்புறம் வர்றேன்” என்றவன் தன் வேலையில் கவனமாகினான்.
“வம்சி அம் ரியலி சாரிடா!”
“போடா” என்ற வம்சி எழுந்து சென்றுவிட்டான்.
‘இதிலிருந்து இவனை மலையிறக்குவது கடினம் போலிருக்கே’ என எண்ணிய வருண் , அவனே வந்து தன்னிடம் பேசுவான் என்பதை அறியாது கவலை படிந்த முகத்தோடு வீட்டிற்கு சென்றான்.
வருணுக்கு முன்பு வம்சி வீட்டிலிருந்தான்.
வருண் உள்ளே நுழைந்ததும், தாத்தாவிடம் பேசிக்கொண்டிருந்த வம்சி அழகுவின் அறைக்குள் புகுந்து கொண்டான்.
வருத்தம் தோய்ந்த முகத்துடன் தாத்தாவின் அருகிலமர்ந்த வருண்,
“ரொம்ப பண்றான் தாத்தா” என்று சிறுபிள்ளை போல் புகார் செய்தான்.
“வம்சி என்ன செய்தாலும் அதிலொரு நியாயம் இருக்கும் வருண். அவனில்லாமல் உன்னால் இருக்க முடியாதென்று தெரிந்த பிறகும், வீணாக அவனிடம் எதற்கு வார்த்தைகளை விடுற?” கேட்டவருக்கு அவனிடத்திலிருந்து மௌனமே பதிலாகக் கிடைத்தது.
“நீ உன் மனமறிந்து அவ்வாறு பேசவில்லை என்றாலும், வம்சி இந்த குடும்பத்தை விட்டு தனித்திருக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது.”
தாத்தா அவ்வாறு சொல்லியதும், வருண் பதறி இருக்கையிலிருந்து எழுந்து விட்டான். ஏனென்றால் திரிலோகரின் கணிப்பு எப்போதும் பொய்த்துப் போகாது. அவர் ஒன்றை கூறினால் அது நிச்சயம் நடந்தே தீரும்.
“ப்ளீஸ் தாத்தா நீங்க சொன்னதை இல்லையென்று மாற்றி சொல்லுங்களேன்.” வருண் மன்றாடினான்.
தாத்தா சொல்லியதை அப்போதுதான் அங்கு வந்த வசந்தியின் காதிலும் விழுந்துவிட, தன் தந்தையின் வார்த்தைகளின் உண்மைகளை முற்றும் முதலாக அறிந்தவர் உறைந்து விட்டார்.
‘என் மகன் என்னைவிட்டு பிரிந்து சென்றிடுவானா?’ ஊமையாய் அரற்றினார்.
“அப்பா… நீங்…க்..க… நீங்க… சொல்வது?” வசந்தி தடுமாறினார்.
“என்னால் அவன் இவ்வீட்டை விட்டு செல்லும் நேரத்தைக்கூட சரியாக சொல்ல முடியும்.”
வசந்தி மற்றும் வருணின் கண்களில் அவ்வளவு மிரட்சி. அவனின்றி தாங்கள் எப்படி!
இருவரின் நிலையையும் கண்ட திரிலோகர், ‘நடக்க வேண்டியது நடந்துதானே ஆகும்’ என்று அமைதியாக தனது அறை நோக்கிச் சென்றவர், அறை வாயிலில் நின்று…
“எங்கு போனாலும் வந்தாலும் மிகுந்த கவனத்துடன் பார்த்து இரு வருண்” எனக் கூறினார்.
வம்சி தங்களை விட்டு பிரிந்து சென்றிடுவான் என்பதிலேயே உழன்ற வருண், திரிலோகர் இறுதியாக சொல்லிச் சென்றதை கவனிக்கவில்லை.
வசந்தி மிகுந்த கவலையுடன் காணப்பட, தன் கவலையை ஒதுக்கி வைத்த வருண்… அவரைத் தேற்ற வம்சி செய்த செயலில் ரத்தினத்தின் மகனை கொன்றதை மட்டும் மறைத்து மற்றவற்றை சொல்லியவன்,
“நிச்சயம் தாத்தா சொல்லிய பிரிவு வம்சியின் வேலைக்கான இடமாற்றமாகத்தான் இருக்கும். கவலை படாதீங்கம்மா” என்றான்.
பிரிவின் காரணம் வம்சியின் முடிவாகவே இருக்கும் என்பது வருணும் அறிந்திடாதது.
****
“நிலாம்மா…”
ராஜராஜன் மிகுந்த கனிவுடன் அழைக்கும் அவ்வழைப்பில் ரேணுகாவிற்கோ ஏனோ உடலெல்லாம் காய்ந்தது.
‘அவருக்கு பிறந்த தன்னுடைய மகளை என்றாவது இப்படி அழைத்திருப்பாரா” என்று உள்ளுக்குள் பொருமினார்.
இத்தனை வருடங்களாக தேவிகா அனுபவித்த தந்தை பாசத்தை, இருபத்திரண்டு வயதில் தான் மென்னிலா உணரவேசெய்கிறாள். தேவிகா அனுபவித்ததில் கால் பங்குகூட மென்னிலா கண்டதில்லை என்பதை ஏனோ ரேணுகா மறந்துப் போனார்.
உள்ளறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த தேவிகாவிடம் சென்ற ரேணுகா,
“உன் அப்பா கூப்பிடுறார் பாருடி?” என்றார்.
“அப்பா அக்காவைத்தான் கூப்பிடுறார்ம்மா” என்ற தேவிகா மீண்டும் புத்தகத்தில் தலையை கவிழ்த்துக்கொள்ள, அவள் தலையின் மீதே நங்கென்று கொட்டினார் ரேணுகா.
“சொன்னா சொன்னதை செய்” என்ற ரேணுகா, வம்படியாக அவளை எழுப்பி அனுப்பி வைத்தார்.
காலை உதறிக்கொண்டு சென்ற தேவிகாவை பார்த்த ராஜராஜன்,
“வாடா… டவுனுக்கு போனேன். அப்படியே உனக்கும் அக்காக்கும் துணி எடுத்துட்டு வந்தேன். உனக்கு எது பிடிக்குதோ அதை எடுத்துக்கோ!” என்றார்.
தேவிகா இரு ஆடைகளையும் பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ரேணுகா, ராஜராஜன் வந்ததும் மென்னிலாவை அழைத்ததும் அவளுக்கு மட்டும் வாங்கி வந்திருக்கிறார் என நினைத்து…
“ஏன் வீட்டுல அவள் ஒருத்தி மட்டும் தான் இருக்கா(ள்)ன்னு நினைப்பா?” எனக் கேட்க,
“இதுல ரெண்டு ஆடைகள் இருக்கு.” நான் ஒருத்தியை விட்டுட்டு வாங்கி வரவில்லை என்ற அர்த்தத்தில் கூறினார் ராஜராஜன்.
அவர் சொன்னதன் பொருள் புரியாத ரேணுகா,
“அதேதான் நானும் சொல்லுறேன். அவளுக்கு ரெண்டு துணியா?” என்று கோபமாகக் கத்தினார்.
அந்நேரம், “அப்பா எனக்கு இது பிடிச்சிருக்கு” என்று ஒரு ஆடையை தேவிகா காண்பிக்க,
“அவளுக்கு வாங்கிட்டு வந்ததை உனக்கு பிச்சை போடுறார் உன் அப்பா” என்று ஆத்திரத்துடன் கூறினார்.
“ஏன் ரேணுகா இப்படியெல்லாம் பேசுற, ரெண்டு பேருக்கும் சேர்த்து தான் எடுத்துட்டு வந்தேன்.”
“பொய் சொல்லாதீங்க, உங்களுக்கு உங்க பொண்ணு… அந்த ஓடுகாலி பெத்ததுதான் முக்கியம்.” ரேணுகா சொல்லி முடிக்கவில்லை, ராஜராஜனின் கை இடியாய் அவரின் கன்னத்தில் இறங்கியிருந்தது.
அவர் அடித்த அடியின் மொத்த ஆத்திரமும் ரேணுகாவிற்கு மென்னிலா மீது திரும்பியது.
“அவளை சொன்னதுக்கு என்னை அடிச்சிட்டிங்கல… இதுக்கு நீங்க அனுபவிப்பீங்க!” என்ற ரேணுகா, அப்போது அங்கு வந்த மென்னிலாவை தீயாய் முறைத்துவிட்டு சென்றார்.
“உன் அம்மா இடத்தை ரேணுகா ஈடு செய்றாள்.”
அதுவரை அங்கு நடப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த ராஜன், வருந்தி நின்ற மகனிடம் கூறினார்.
“காலம் முழுக்க என் பொண்ணு இடிபட்டுட்டே இருக்கணுமாப்பா?” தான் உடனிருந்தும் மகளை தன்னால் உரிமையாய் கொண்டாட முடியவில்லையே என்கிற ஏக்கம் ராஜராஜனுக்கு.
“அவளை கட்டிக்கொடுக்கிற இடம் நல்ல இடமாக பார்த்து கொடுத்தால் அவள் நல்லா வாழ்ந்துட்டுப்போகிறாள்.” உடனே மகனுக்கு நல் யோசனை ஒன்றை வழங்கினார் ராஜன்.
ராஜன் அவ்வாறு சொல்லியதும் மென்னிலாவின் இதயம் ஒருமுறை அதிர்ந்து துடித்தது. கண்களில் அவள் வருணாக நினைக்கும் வம்சியின் முகம் மின்னி மறைந்தது.
‘என்ன உணர்விது?’ மென்னிலா தனக்குள் சுய அலசலில் ஈடுபட, அவளைத் தடை செய்தது ராஜராஜனின் பேச்சு.
“இத்தனை வருடம் என்னோடு இருந்தாலும், இப்போதுதான் என் மகளை கையில் தாங்கும் பாக்கியம் எனக்கு கிட்டியிருக்கு. அதை நான் கொஞ்சம் அனுபவித்துக் கொள்கிறேன் அப்பா.” சிறு பிள்ளையென மொழிந்தார்.
மென்னிலாவின் மனதில் ஒரு பெரும் நிம்மதி எழுந்தது.
“என்னம்மா யோசனை?”
ராஜன் பேத்தியின் தலையை ஆதுரமாக வருடியவாறு வினவினார்.
“என் படிப்பு முடிந்ததும் திருமணம் பற்றி பேசலாமே தாத்தா.” தயங்கியவாறு கூறினாள்.
“சரிடா” என்ற பெரியவர், தேவிகாவிடம் திரும்பி… “உனக்கும் நிலா மீது ஏதேனும் வெறுப்பு இருந்தால் தூர போட்டுடு. இவளை உன் அக்காவா மட்டும் பார்” என்க, தேவிகா தான் ரேணுகாவின் மகளல்ல ராஜனின் பேத்தி என்பதை தன் பேச்சில் காட்டினாள்.
“உடன் பிறந்தவளை அக்காகவாகத்தானே பார்க்க முடியும் தாத்தா.”
அப்படி சொன்ன தன் இளைய பேத்தியை அணைத்துக் கொண்டார் ராஜன்.
சிறியவர்களிடன் இல்லாத வேற்றுமை பெரியவளிடத்தில் மட்டும் ஏன் என்று தோன்றாமலில்லை. இருப்பினும் அதற்கு பதிலில்லை.
இவ்வளவு நேரமும் மென்னிலாவின் மனம் இங்கில்லை. வேறெங்கோ… ஏதோ நினைவில் உழன்றாள். வம்சியின் முகம் முன்னால் தோன்றி இம்சித்தது.
‘இவ்வளவு நாளில்லாது, இப்போது திருமணம் என்றதும் ஏன் அவரின் முகம் நினைவு வருகிறது.’ பலமுறை கேட்டும் விடையறிய இயலவில்லை.
யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் தன்னுடைய அறைக்கு வந்தவள், கட்டிலில் படுத்து விட்டத்தை பார்க்க… அவளை பார்த்து அழகாய் சிரித்தான் வம்சி.
அதேநேரம் வம்சியும் நிலாவைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
தொடரும்…