நெஞ்சோடு காதல் சேர 8
இருள் படர்ந்த அந்த கருமையில் தனது நிலவை தேடிக் கொண்டிருந்தான் வம்சி. ஆனால் அவன் கண்களுக்கு புலப்படாமல் மேகங்களில் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தாள் நிலவுப்பெண்.
‘இதெப்படி சாத்தியம்?’
லட்சமாவது முறையாகத் தன்னிடமே கேட்டு பார்க்கிறான் பதிலில்லை.
மாலை வரை அவனுக்கு அப்படியொரு எண்ணம் இருப்பதாக அவனுக்கேத் தெரியாது. ஏன் சுத்தமாக அன்று பார்த்த அந்த பெண்ணின் நினைவே தனக்கில்லை என்று தான் இருந்தான். சொல்லப்போனால் அது உண்மையும் கூட.
ஆனால், ‘அவள் உன் மனதை மொத்தமாக கொள்ளைக்கொண்டு இடம் பிடித்துவிட்டாள்’ என்பதை அவனுக்கு அவன் மனமே மாலை தான் உணர்த்தியிருந்தது.
எம்.எல்.ஏ ரத்தினத்தின் மகள், வம்சியின் அதிரடியான செயல்களில் மட்டுமின்றி… தன் தந்தைக்கு பாடம் கற்பிக்க தன்னிடமே வந்து நடந்ததை சொல்லி உதவி கேட்டதோடு, தன்னை வைத்திருந்த இரண்டு நாட்களும் எவ்வித இடையூறுகளுமின்றி அவன் பார்த்துக்கொண்ட விதம் அவளை அவன்பால் கவர்ந்திருந்தது.
‘யாரோ ஒரு பெண்ணிற்காகவே இவ்வளவு செய்யும் வம்சிக்கு தான் கொண்டவளாகி விட்டால், தனக்காக எதுவும் செய்வான்’ என்று நினைத்தவள் அவன் மீது காதல் கொண்டாள்.
தன்னுடைய அண்ணன் மற்றும் தந்தையின் செயல்கள் பிடிக்காமல் அவர்கள் திருந்த ஒரு சந்தர்ப்பமாவது வாய்க்காதா என்ற நிலையில் தான் வம்சிக்கு உதவி செய்ய அவள் ஒப்புக் கொண்டாள். ஆனால் இப்படி வம்சியின் மீது காதலில் விழுவோமென்று அவளும் நினைக்கவில்லை.
எதிர்பாராமல் விழைவது தானே காதல்.
வம்சியை பார்க்க அவள் காவல் நிலையம் வந்திருந்தாள்.
முத்தண்ணன் வீட்டில் தான் அவளை வம்சி அந்த இரண்டு நாட்களும் தங்க வைத்திருந்தான் என்பதால் அவருக்கு அவள் நன்கு பரிட்சயம்.
வாயிலில் நின்றுகொண்டு காவல் நிலையத்தின் உள்ளே எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தவளை அடையாளம் கண்டு கொண்ட முத்து அவளிடம் சென்று விசாரித்தார்.
“வம்சி சார் இல்லையா?” என்று அவள் கேட்டதிலேயே, வம்சியைத்தான் பார்க்க வந்திருக்கிறாள் என்று யூகித்தவர் அவளை உள்ளே அழைத்து பெஞ்சில் அமர வைத்து வம்சியின் அறைக்குள் கதவை தட்டிவிட்டுச் சென்றார்.
“தம்பி சார், ரித்திகா பொண்ணு வந்திருக்குங்க.”
“யாருண்ணா?” வம்சி யோசித்தான்.
“ரத்தினத்தோடு பொண்ணு தம்பி.”
“ஹோ, அவங்க பெயர் ரித்திகாவா?” முதல்முறை தெரிந்து கொள்வதைப்போல் கேட்டான்.
“பெயர் தெரியாமலேவா தம்பி அந்த பொண்ண நேரில் பார்த்து பேசி, என் வீட்டில் தங்க வைத்தீங்க!” முத்தண்ணன் ஆச்சர்யம் மேலோங்க வினவினார்.
“எதுக்குண்ணா பெயரெல்லாம். அவங்க மூலமா திட்டம் போடணும் நினைத்து போட்டு ஒரு அப்பாவோட வலியை ரத்தினத்துக்கு புரிய வைக்க நினைத்தேன். அவ்வளவுதான் இதற்கு மேல் அவங்களை பற்றி தெரிந்துகொள்ள என்ன இருக்கு” என்ற வம்சி “அவங்களை வரச் சொல்லுங்கண்ணா” என அனுமதி வழங்கினான்.
உள்ளே வந்தவளை உட்காருமாறு கூறியவன் வந்த விடயத்தைக் கேட்க அவளோ தயங்கி தடுமாறினாள்.
“நீங்க எனக்கு உதவி செய்தீங்கன்னு உங்கப்பா உங்களை எதாவது சொல்லிட்டாரா?” வம்சியே ஒன்றை யூகித்து வினவினான்.
இல்லையெனும் விதமாக தலையசைத்த ரித்திகா, தன் கை விரல்களை ஆராய்ந்தபடி இருந்தாள்.
அவளுக்கு ஏதோ பிரச்சினை அதை தன்னிடம் சொல்ல தயங்குகிறாள் என்று நினைத்த வம்சி…
“லேடி கான்ஸ்டபிள் யாரையாவது கூப்பிடவா?” எனக் கேட்டான்.
“அச்சோ இல்லை” என்று அவனை நிமிர்ந்து பார்த்து வேகமாகக் கூறியவள், “உங்ககிட்டத்தான் பேசணும்” என்று துப்பட்டாவின் நுனியை திருகினாள்.
அவளின் குரலும்,பாவனையும் வம்சிக்கு சரியாகப்படவில்லை.
‘ஏதோ வில்லங்கமா சொல்ல வந்திருக்கிறாள்’ என எண்ணிய வம்சி…
“என்னன்னுசொல்லுங்க, இல்லைன்னா கிளம்புங்க. டோன்ட் வேஸ்ட் மை டைம்.”
வம்சி கடுமையாக மொழிந்தானோ. ஆனால் அவனின் முகம் அமைதியாகத்தான் காட்சியளித்தது.
“நான்…”
“யூ?”
“எப்படி சொல்லறது தெரியல?”
“சரி அப்போ வீட்டுக்கு போய் டெக்ஸ்ட் பண்ணுங்க.” வம்சிக்கு எரிச்சல் மூண்டது.
‘இப்பவே சொல்ல முடியலன்னா இனி எப்பவும் சொல்ல தைரியம் வராது. வந்ததே வந்தாச்சு இப்போவே சொல்லிடனும்.’ மனதிற்குள் முடிவெடுத்த ரித்திகா, வம்சியின் முகம் பார்த்து சொல்ல அஞ்சியவளாக… துப்பட்டாவை திருக்கிக் கொண்டிருந்த தன் விரல்களை பார்த்தவாறு,
“நான்… ஐ… ச்ச…”
வம்சியின் பார்வை கூர்மையானது.
“ஐ லவ்…”
“ஜஸ்ட் ஸ்டாப் அண்ட் கெட் அவுட் ஃஆப் மை சைட்.” அக்கட்டிடமே அதிர கத்தியிருந்தான்.
ரித்திகா ஐ என்று ஆரம்பிக்கும் போதுதான் வம்சியின் அறை உள்ளே நுழைந்த விக்னேஷ் அவனின் கெட் அவுட் என்கிற வார்த்தையில் தன்னைத்தானோ என்று அதிர்ந்து பார்க்க…
“ப்ளீஸ் வம்சி… ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ அண்ட் மை ல…”
காதல் என்ற வார்த்தையை கூட அவள் சொல்லிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த வம்சி, அவளை முழுதாக சொல்ல விடவேயில்லை.
அவ்வளவு கோபம் அவனிடத்தில்.
“வம்சி…
“லிஸன்… மிஸ்…?”
“ரித்திகா.”
“வாட்எவர்… உங்களுக்கு இப்படி ஒரு எண்ணம் இருந்தால் அதை இப்போவே அழிச்சிடுங்க.”
“ஏன்?”
“அம் கமிட்டட்.” சிறிதும் யோசியாது பட்டென்று கூறினான். சொல்லிய பின்னரே தான் உதிர்த்த வார்த்தைகளை அலசியவனின் மனதில் மென்னிலாவின் சலனமான முகமும், அவளின் கன்னத்து காதோரம் அமைந்த மச்சமும் தெளிவாகத் தோன்ற, ஒரு கணம் இதயம் அதிர்ந்தான்.
‘இதெப்படி சாத்தியம்?’ விடை தெரியா கேள்வி அவனிடத்தில்.
அவள் வம்சிக்கே தெரியாது அவன் மனதில் தடம் பதித்திருந்தாள். வேறொரு பெண் வம்சியின் மனதில் இடம் பிடிக்க, இதயம் தூண்ட அங்கு ஏற்கனவே தன் சுவடை பதித்திருந்த மென்னிலா அழகாய் தோன்றி…
‘உனக்குள் நானிருக்கிறேன்’ எனக் கூறினாள்.
வம்சி தான் ஒரு பெண்ணை விரும்புவதாக சொல்லியதில் ரித்திகாவை விட, அறை வாயிலில் நின்றிருந்த விக்னேஷிற்குத்தான் அதிர்வு அதிகம்.
‘பயபுள்ள எங்கேயோ சிக்கினதை என்கிட்டவே சொல்லலையே!’
“நீங்க பொய் சொல்றீங்க…”
“நான் ஏன் பொய் சொல்லணும். அதற்கான அவசியமும் எனக்கில்லை.” மிதமிஞ்சிய கோபம். ‘இவளுக்கு நான் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்.’
“ஆமாம் நீங்க பொய் தான் சொல்றீங்க” என்று குரல் கூட்டி சொன்னவள், “உங்களைப்பற்றி எல்லாம் டிடெக்ட்டிவ் வைத்து தெரிந்து கொண்டு தான் வந்திருக்கிறேன். நீங்க படிக்கிற காலத்தில் கூட ஒரு பெண்ணையும் காதலிக்கவில்லை, என்னை தவிர்ப்பதற்காக இப்படியெல்லாம் சொல்லாதீங்க” என்றாள்.
இருக்கையிலேயே தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து தோரணைக் காட்டியவன், ரித்திகாவை நோக்கி கூர் பார்வையை வீசினான்.
பார்த்துக் கொண்டிருந்த விக்னேஷிற்கு, ‘இந்த பொண்ணு இவன்கிட்ட வாங்கிக் கட்டிக்காம போகாது போலிருக்கே’ என்றிருந்தது.
விக்னேஷை ஒரு பார்வை பார்த்த வம்சி,
“ராணி மேடத்தை வர சொல்லுங்க” என்றான்.
வம்சி என்ன செய்யப் போகின்றான் என்கிற ஆர்வத்தோடு, பெண் காவலர் ராணியை விக்னேஷ் அழைத்து வந்தான்.
“சார் கூப்பிட்டீங்களா?”
“எஸ்… அரெஸ்ட் ஹெர்” என்றவன், மிரட்சியோடு எழுந்து நின்ற ரித்திகாவை கண்டுகொள்ளாது அறையிலிருந்து வெளியேறி, வழக்குகளை எழுதி பதிவு செய்யும் எழுத்தாளரிடம் வந்தான்.
“காவல்துறையில் உயர் பதவியிலிருக்கும் ஒரு அதிகாரியை துப்பறியும் நிறுவன ஆட்கள் வைத்து அத்துமீறி உளவு பார்த்த குற்றத்திற்காக எம்.எல்.ஏ ரத்தினத்தின் மகள் ரித்திகாவின் மீது நான் புகார் கொடுத்ததாக எழுதி எப்.ஐ.ஆர் பதிவு பண்ணுங்க… நான் எங்க கையெழுத்து போடணுமோ கொடுங்க போடுறேன்” என்றவன் அவருக்கு முன்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டான்.
ராணி, ரித்திகாவை கை பிடித்து அழைத்துச் சென்று கம்பிகளுக்கு பின்னால் அடைத்து அறையை பூட்டினார்.
“வம்சி வேண்டாம்டா, அந்தப்பொண்ணு ஏதோ தெரியாமப் பண்ணிடுச்சு விடுடா.” விக்னேஷ் ரித்திகாவை நினைத்து பாவம் கொண்டு வம்சியிடம் பேசினான்.
“என்ன தெரியாமலா?” என்ற வம்சி, “நான் நம்ம டிபார்ட்மெண்ட் ஆளுங்களுக்கே தெரியக் கூடாதுன்னு ரகசியமா பல வழக்குகளை கையாளுறேன்… இவள் என்னடான்னா எவனையோ ஒரு ஆள வைத்து அதையெல்லாம் மொத்தம் தெரிந்து வைத்திருக்கிறாள்.
அப்படி இவள் அதையெல்லாம் விசாரிக்கவில்லை என்றாலும் கூட, என்னைப்பற்றி அறிய அந்த டிடெக்ட்டிவ் அனைத்தையும் தானே ஆராய்ந்து வேவு பார்த்திருப்பான்.
நான் வழக்கு விசாரணையென்று திரிந்த இடமெல்லாம் இப்போது அவன் அறிந்திருப்பான் தானே.
அவனுக்கும் இருக்கு கச்சேரி” என்றான்.
“இருந்தாலும்…”
“நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணாதே விக்னேஷ். என்னை வேவு பார்க்க எவ்வளவு தைரியம் வேணும். ஏதோ இவள் எனக்கு உதவி செஞ்சிட்டால், நான் அவளுக்கு ஈஸியா!”
“வம்சி கூல்டா!”
“உனக்குத் தெரியும் தானே, காவல்துறை அதிகாரியை முறையா அனுமதியில்லாமல் கண்காணித்தால் தண்டனை உண்டென்று.”
ஆமாமென்று விக்னேஷ் தலையாட்டினான்.
“அப்புறம் என்ன, இருபத்தி நாலு மணி நேரத்திற்குள் அவளை கோர்ட்டில் ஆஜர்படுத்தும் வழியை பார்” என்றவன், எழுத்தர் நீட்டிய காகிதத்தை படித்து பார்த்து கையெழுத்திட்டு வெளியேறிவிட்டான்.
வம்சிக்கு யோசிக்க வேண்டும் போலிருந்தது. எப்படி தனக்குள் மென்னிலா என்று ஆராய வேண்டும், அதற்கு தனிமை வேண்டுமென்று கருதியவன் காவல் நிலையம் விட்டு கிளம்பியிருந்தான்.
ரித்திகாவிற்கு தன் தவறு புரிந்த போதிலும், தன் காதலை அவன் ஏற்கவில்லையே என்கிற வருத்தம் தான். அவன் லாக்கப்பில் அடைக்க சொன்னதெல்லாம் அவள் கண்டுகொள்ளவே இல்லை. அவள் அப்பாவிற்கு தெரிந்தால் ஒரு மணி நேரத்தில் வெளியில் வந்துவிடுவாள். ஆதலால் தன்னிலை பற்றி சிறிதும் கவலையின்றி, வம்சியை எப்படி கவிழ்ப்பதென்று யோசிக்கத் தொடங்கினாள்.
வீட்டிற்கு வந்து அறைக்குள் நுழைந்து கதவடைத்த வம்சி இரவு வசந்தி கதவினை தட்டிய பிறகே வெளியில் வந்தான். அதற்குள் தன்னைத்தானே முழுதாக ஆராய்ந்து மென்னிலா மீது வந்திருக்கும் உணர்வு வெறும் ஈர்ப்பல்ல என்று தெளிந்திருந்தான்.
காதலென்று அறிந்த பின்னர், மனம் முழுக்க மென்னிலா நிறைந்து கிடப்பது போல் உணர்ந்தான். அவளை இந்த நொடியே கண்டிட பேராவல் எழுந்த போதும் அவளின் பெயரன்றி வேறெதுவும் தெரியாதென்று மனதை கட்டுப்படுத்தி மாடிக்கு வந்தவனுக்கு நிலவுக்குள் நிலவுப்பெண்ணின் தரிசனம் கிட்ட அப்படியே சிலையாகிப் போனான்.
“உனக்கும் என் நினைவிருக்குமா?”
தன்னைப்போல் அவளும் காதலில் தவிக்கின்றாள் என்றறியாமல் மானசீகமாகத் தன்னவளுடன் உரையாடினான்.
“மென்னிலா.” காற்றுக்கும் நோகுமோ என்றிருந்தது வம்சியின் அழைப்பு.
“அன்று ஏதோ உந்துதலில் தன்னையும் அறியாது பெயர் கேட்டது நல்லதாகப் போயிற்று. இல்லையென்றால் காதலியின் பெயர் கூடத் தெரியாது காதலிக்கும் காதலனாகி இருப்பேன்” என்று சொல்லி தனக்குத்தானே சிரித்தும் கொண்டான்.
அதுவரை உறக்கம் வராது வம்சியை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த மென்னிலா தன்னையும் அறியாது அப்போது தான் உறங்கியிருக்க, யாரோ தன்னை அழைக்கும் குரல் கேட்டு அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள்.
உறக்கம் தொலைத்த அவளின் கண்களுக்குள், வம்சியின் ப்ரௌன் நிற விழிகள் மின்னின.