நெஞ்சோடு காதல் சேர 9

அத்தியாயம் 9

உறக்கத்திலிருந்து எழுந்த மென்னிலாவுக்கு அடுத்து உறக்கம் தூரம் சென்றிருந்தது. எண்ணங்கள் முழுக்க வம்சியை சுற்றியே வலம் வந்தது.

வருண் கிருஷ்ணா என்று தான் அறிந்து கொண்ட அவனின் தவறான பெயரை, மனதிற்குள் அடிக்கடி “கிருஷ்ணா” என்று சொல்லி பார்த்தாள்.

அவளுக்கு மிகவும் பிடித்த கடவுளின் பெயரே தன்னவனுக்கும் வாய்க்கப் பெற்றதில் அவ்வளவு மகிழ்வு அவளிடம்.

“கிருஷ்ணா.” பெயரைத் தவிர ஒன்றும் தெரியாது. போலீஸ் அவ்வளவுதான் அவள் அறிந்த அவனின் விவரம். போலீசில் கூட எந்த பதவி வகிக்கின்றான் என்று தெரியவில்லை.

மனதில் காதல் முளைத்ததும் அவனைப்பற்றி அனைத்தும் அறிந்துகொள்ள அவளின் மனமும் மூளையும் பரபரத்தது. ஆனால் மார்க்கம் தெரியவில்லை. சில நிமிடங்களுக்கு பிறகு, மூளையில் பளிச்சென்ற மின்னல்.

அரக்கப்பறக்க அலைபேசியை தேடி எடுத்தவள், அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் வருண் கிருஷ்ணா என்று தேட, பலனில்லை.

பயபுள்ள எதிலும் அக்கவுண்ட் வைத்திருக்கவில்லை.

சோர்ந்து போய் அமர்ந்தவள் அவனை கண்டு பிடிக்கும் வழி தெரியாது தவித்தாள்.

“கிருஷ்…” மனம் அரற்ற, எப்போது உறங்கினாள் என்று அந்த இருட்டுக்கு மட்டுமே வெளிச்சம்.

காலை எழுந்தவளுக்கு தலை வலிக்கும் போலிருந்தது.

“இந்த போலீஸ் மேல காதல் வந்தாலும் வந்துச்சு இப்போவே தலைவலி ஆரம்பிச்சிருச்சே!” மெத்தையில் அமர்ந்தவள் தனக்குள் முணுமுணுத்தாள்.

முயன்றவரை அவனை கண்டுபிடிக்க முயற்சி செய்தாள். ஆனால் பலன் என்னவோ பூஜ்ஜியம்.

“ரெண்டு நாளாக எப்படியெல்லாம் எந்த வழியிலெல்லாம் ஒருத்தரை கண்டுபிடிக்க தேட முடியுமோ எல்லாம் பண்ணியாச்சு. இந்த போலீசை கண்டுபிடிக்க முடியலையே! என்ன பண்ணலாம்.”

கல்லூரி மரத்தடியில் அமர்ந்து தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தாள்.

“என்ன நிலா உனக்கு நீயே பேசிட்டு இருக்க?”

கேள்வி கேட்டவாறே அவளுக்கு அருகில் வந்து அமர்ந்தாள் மென்னிலாவின் தோழி வைஷ்ணவி.

“வாடி வா, எல்லாம் நீ பார்த்த வேலைதான்” என்ற மென்னிலா தனக்குள் உதித்த காதலை சொல்ல வைஷ்ணவி ஆவென்று வாய் பிளந்து பார்த்தாள்.

“நிலா ஆர் யூ சீரியஸ். ஆர் யூ இன் லவ்?”

“எஸ்.”

“அடிப்பாவி அப்படி விழுந்து விழுந்து சைட் அடிச்ச எங்களுக்கே அந்த போலீஸ் ஞாபகம் இல்லை. உனக்கெப்படி நிலா?” வைஷ்ணவி ஆச்சர்யமாக வினவினாள்.

“சும்மா இருந்தவளை ப்ரொபோஸ் பண்ணு அது பண்ணு இது பண்ணுன்னு அடி வாங்கி வச்சிட்டு இப்போ என்ன கேள்வி” என்று சத்தமாக பேசிய நிலா, “என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது! எனக்கு அவரை பற்றி டீடெயில் கலெக்ட் பண்ணித்தர” என்று அதிகாரமாக சொல்லி அங்கிருந்து சென்றுவிட்டாள்.

செல்லும் மென்னிலாவையே பாவமாக பார்த்திருந்தாள் வைஷு.

“அய்யோ ஆண்டவா எனக்குமா இந்த நிலை… ஒருத்தி(தன்) லவ் பண்ண ஆரம்பிச்சிட்டால் கஷ்டப்படுவது என்னவோ கூடயிருக்கும் பிரண்ட் தான்.” வைஷ்ணவி தலையில் கை வைத்துக் கொண்டாள்.

இவர்கள் இங்கு வம்சியின் பெயரை வருண் என்று நினைத்து தேட வம்சி எப்படி கிடைப்பான்.

கூகுளிலும் தமிழ்நாடு போலீஸ் வரலாறையே அலசி பார்த்தும் வம்சியை கண்டு பிடிக்க முடியவில்லை. எங்கும் அவனது பிம்பம் இல்லை. பெயரும் இல்லை. வம்சி கிரைம் பிராஞ்சில் இருப்பதால் சில நேரங்களில் அவனைப்பற்றி யாருக்கும் தெரியாமல் இருப்பதே அவனது விசாரணைக்கு சரியாக இருக்குமென்பதால் எதிலும் தன்னைக் காட்டிக்கொள்ள மாட்டான். இதுவரை ஊடகங்களில் கூட அவனின் பெயரைத் தவிர்த்து, முகத்தை காட்ட அனுமதித்ததில்லை.

இவர்கள் பெயரையும் தவறாக தெரிந்து வைத்திருப்பதால் வம்சியை பற்றி எதுவும் அறிய இயலவில்லை.

“ப்ளீஸ்டா நிலா என்னை ஆளவிட்டுடு… என்னால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை” என்று வைஷ்ணவி மென்னிலாவிடம் கதறியே விட்டாள்.

“ஒருவேளை உன் ஆளு டம்மி போலீஸா இருப்பார் போல.”

இதனை சொல்லி நிலாவின் கோபத்திற்கு ஆளானாள் வைஷு. அவள் கதற கதற மொத்தி எடுத்த பின்னரே நிலா அமைதியாகினாள்.

“அவர் இருப்பது சென்னை… நீ இங்க இருந்துட்டு தேடினால் எப்படி நிலா?” வைஷு ஆற்றாமையுடன் கேட்டிட, நிலாவின் கண்கள் நிரம்பிவிட்டன.

“எனக்கு புரியாமல் இல்லை வைஷு. ஆனால் மனசு முழுக்க அவர் தான் இருக்காரு. எனக்குள்ள எப்படி இந்தளவுக்கு வந்தாருன்னு எனக்கேத் தெரியவில்லை.

அவரில்லாமல் முடியாதுன்னு தோணுது வைஷு.”

கல்லூரி என்பதையும் மறந்து வைஷுவின் மடியில் படுத்து கண்ணீர் வடித்தாள் நிலா. அந்த கண்ணீர் சொல்லியது நிலா எந்தளவிற்கு வம்சியை நேசிக்கின்றாள் என்று.

சற்று நேரத்தில் தன்னை ஆசுவாசப்படுத்தி எழுந்து அமர்ந்த நிலா அழுத விழிகளை அழுத்தி துடைத்தாள்.

“இனி அவரை நான் தேடப்போறதில்லை வைஷு.

காரணக்காரியமின்றி யாரும் நம் பாதையில் வருவதில்லை தானே! அதை நான் நம்புறேன்.

நான் காதலிக்க வேண்டுமென்றே அவரை கடவுள் என் கண்ணில் காட்டியதாக நினைக்கிறேன்.

என் காதல் நிஜமென்றால் அந்த கடவுளே என்னை அவரிடம் சேர்த்து வைப்பார்” என திடமாகக் கூறினாள்.

அதன் பின்னர் நிலா மனதால் வம்சியை இன்னும் ஆழமாக நேசிக்கத் துவங்கினாள். நாளுக்கு நாள் அவளின் தவிப்பு அதிகரித்ததே தவிர, சற்றும் குறையவில்லை.

ஒருமுறை அவனை கண்டிட மாட்டோமா என்று துடித்தாள். ஆனால் அதற்கான முயற்சி மட்டும் தான் கொண்ட நம்பிக்கையால் செய்யவில்லை. அவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்தால் அவளின் காதல் மீது.

இங்கு ஒருத்தி அவனை கண்டிட, அவனைப்பற்றி தெரிந்துகொள்ள துடியாய் துடித்து தவித்துக் கொண்டிருக்க… அங்கு அவனோ காதல் வந்த பின்னரும் அழுத்தமாக அமைதியாகவே இருக்கின்றான்.

ரித்திகா காதல் சொல்ல வந்த கணம் தன் காதல் யாரென்பதை உணர்ந்து காதலில் விழுந்தவன் தான் அவளின் பெயரைத் தவிர்த்து வேறொன்றும் தெரியாத போதும்…  அவளைப்பற்றி தெரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை.

எப்பொதெல்லாம் தன் மனதில் வாசம் வீசிக் கொண்டிருப்பவளின் எண்ணம் அதிகமாக எழுகிறதோ அப்போதெல்லாம் அவளை முதன்முதலாக பார்த்த இடத்தில் பார்த்த நேரம் சென்று அமர்ந்திடுவான். மனதின் பேரலை ஓயும் வரை அவளின் நினைவோடு, அவள் காதல் சொல்லியதை எண்ணி… கன்னத்து காதோர மச்சத்தை நினைவில் நிறுத்தி ரசித்திருந்து திரும்பி வருவான்.

அவளுள் காதலினால் மூழ்கிட நினைத்தானே தவிர அவளை கண்டறிய நினைக்கவில்லை.

அவன் நினைத்தால் சில மணி நேரங்களில் அவனவளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். ஆனால் அவன் அப்படி செய்யாதிருக்கவும் அவனிடத்தில் காரணம் உள்ளது.

அன்று விளையாட்டாக காதலை சொல்லியவளை அடித்ததோடு சில வார்த்தைகளால் அர்ச்சித்து இருக்க… ‘அவளுக்கு தன் நினைவு இருக்குமா?’ என்ற கேள்வி வம்சியிடம்.

அதோடு காதலென்று ஒரு பெண்ணின் பின்னால் சுற்றும் ரகம் அவனில்லை.

அவளைத் தேடிச்சென்று காதலை சொல்லுவதாகவே வைத்துக் கொண்டாலும், “நீங்கள் யார்?” என்று கேட்பது இருக்கட்டும்… தெரியாத முக பாவனையை காட்டிவிட்டாலும்… ‘அவள் மீது காதல் கொண்டிருக்கும் தன் இதயம் நிச்சயம் துவண்டிடும்’ என்று எண்ணினான்.

அதுமட்டுமில்லாது ஒரு பெண்ணை காதலிப்பதாக சொல்லி அவள் தன்னை காதலிக்காத பட்சத்தில், அவளின் நிலை அவளின் குடும்பத்தாரின் முன்னிலையில் எப்படியிருக்கும். அவளைப் பற்றி தவறாக அல்லவா செய்திகள் உலா வரும். அதற்காகவே அமைதியாக இருக்கின்றான்.

தன்னாலே என்றாலும் தன்னவளுக்கு ஒரு சொல் வந்துவிடக் கூடாதென்று நினைக்கின்றான்.

அவளைப்பற்றி அறிந்து கொண்டால் நிச்சயம் தன் மனம் பொறுமை காக்காது… காதலை சொல்லி சங்கடத்தில் ஆழ்த்தி விடுமோ என்று எண்ணியே மென்னிலாவைப் பற்றி அறிந்து கொள்வதில் மௌனமாக இருக்கின்றான்.

இதையெல்லாம்விட வலுவான காரணமும் ஒன்று உள்ளது.

‘ஏற்கனவே ஒரு காதலால் தன் குடும்பம் பட்டதே போதும். அந்த காதலினால் தன் வீட்டு பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமைகளும் போதும். வேறொருவரால் தன் குடும்பத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளைப் போன்று தன்னுடைய காதலால் தனது மென்மையானவளின் குடும்பத்தில் எதுவும் நடந்திட வேண்டாம்’ என்று எண்ணியே தன்னவளை ஒதுக்கி வைத்திருக்கிறான்.

தேடலின்றி காதலை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்.

தன்னவளைப் போன்றே தன் காதல் உண்மையென்றால் இருவரும் இணைவதை அந்த காதலே பார்த்துக்கொள்ளும் என்று அமைதியாக இருக்கின்றான்.

இன்றும் அவனின் நிலாவை பார்த்த அதே இடத்தில் அமர்ந்து தான் தன்னுடைய மனதை அசைபோட்டுக் கொண்டிருக்கின்றான்.

இரவு பதினொரு மணியளவில் அங்கு வந்து அமர்ந்தவன் நேரம் நள்ளிரவு தாண்டி மூன்றை நெருங்கும் வேளையிலும் அங்கிருந்து செல்ல மனமின்றி தன்னவளின் நினைவுகளில் மூழ்கிக் கொண்டிருக்கின்றான்.

சிமெண்ட் இருக்கையில் சாய்ந்து கண் மூடி வம்சி அமர்ந்திருக்க…

“ஐ லவ் யூ” என்று அவன் முன் ஒற்றை மலரோடு கை நீட்டி நின்ற நிலாவின் தோற்றம் வந்து போனது.

அன்று அவளின் முகத்தை நொடிகளுக்கு குறைவான அளவே பார்த்திருந்த போதும், அந்த காதோர கன்னத்து மச்சம் அவனின் விழிகளுக்குத் தப்பவில்லை. இன்றும் அதன் கருமையை ரசித்தான். ஒருமுறை அதனை தொட்டு பார்க்கும் ஆவல் எழுந்தது.

அவளை அந்த மச்சத்தை நினைக்கும் போதெல்லாம், ஆழிபேரலையாய் பொங்கும் உணர்வுகளை கட்டுப்படுத்தும் வழி அறியாது… இருக்கையிலிருந்து எழுந்து நின்றவன் தன் பின்னந்தலை கேசத்தை அழுந்த தடவினான். காலை தரையில் எத்தினான். பின் கழுத்தில் இரு கைகளையும் கோர்த்து பிடித்து மேல் நோக்கி வெறித்தான். அவனின் செயல்கள் அவனுக்கே வித்தியாசமாகப் பட்டது.

“என்னை என்னடி செய்கிறாய் நீ? ஓ காட்.”

தன்னை அறிந்தே புலம்பினான்.

“நினைத்தேன் நீ இங்குதான் இருப்பன்னு” என்று சொல்லியவாறே வம்சிக்கு பின்னால் வந்து நின்றான் வருண்.

“ஒரு பொண்ணை கண்டு பிடிப்பதெல்லாம் இப்போ அவ்வளவு கஷ்டமில்லை வம்சி. நீதான் தயங்கி நிக்கிற.” எப்போதும் கம்பீரமாக வலம் வரும் தன் தம்பி கடந்த சில மாதங்களாக காதலினால் படும் அவஸ்தையை பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றான்.

‘போலீசில் இருந்து கொண்டு… காதலிக்கும் பெண்ணை பற்றி விசாரிக்க இவ்வளவு தயங்குகின்றானே! அவளைப்பற்றி தெரிந்து விட்டால் சற்று லேசாக இருப்பானே’ என்று வருணுக்கு வருத்தமாக இருந்தது.

வம்சி அமைதியாக இருந்த போதும் வருண் ஒன்றும் சும்மா இருந்திடவில்லை.

என்று தன் தம்பி முழு விவரம் தெரியாது, சில நிமிடங்களே பார்த்த பெண்ணின் மீது காதல் கொண்டுள்ளான் என்று தெரிந்து கொண்டானோ அன்றே ரயில் நிலையத்திற்கு வந்து அந்த பெண்ணைப்பற்றி விசாரிக்க…

“சாரி சார் போன வாரம் கணினியில் வரைஸ் ஏறிவிட்டதால், மொத்த டேட்டாவும் போய்விட்டது. பேக்கப் எடுக்க முடியவில்லை” என்று அவர்கள் சொல்ல ஏமாற்றமடைந்து போனான்.

நாளுக்கு நாள் வம்சி அப்பெண்ணின் நினைவில் தவிப்பதை உடன் இருந்து பார்ப்பதால் “எப்படியாவது அவளை வம்சியுடன் சேர்த்து வைத்திட வேண்டும்” என்று நினைக்கிறான். ஆனால் பலன் தானில்லை.

சம்மந்தப்பட்டவனே அப்பெண்ணின் பெயரைக் கூட சொல்லாது அமைதியாக இருந்தால் வருணும் தான் என் செய்வான்.

“இப்படி அவ நினைவு வரும்போதெல்லாம் இங்கே வந்து உட்கார்ந்துக்கோ… இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி உட்காருவ?” வருணுக்கு வம்சியின் அமைதியில் கோபம் அதிகரித்தது.

“நான் சாகும் வரை.”

வருணின் கேள்விக்கு கூர் பார்வையோடு வம்சி சொல்லிச்சென்ற பதிலில் வருண் அதிர்ந்து நின்றான்.

error: Content is protected !!
Scroll to Top