நேச நெஞ்சங்கள் 17

உயிர் உறை 17

நேசப்பிழை 10

சில நாட்களாக மகாலட்சுமி தன்னுடைய மகளை கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றார்.

ஆதர்ஷினியின் பார்வை வசீயின் மீது காதலாய் படிவதை.

பெற்றோராய் பார்த்து திருமணம் செய்து கொண்டிருந்தாலும் காதலாய் கணவனுடன் ஒரு வாழ்க்கை வாழ்பவருக்கு காதலுக்கான பார்வை விளங்காதா என்ன?

வசீயின் மீது ஆதர்ஷினிக்கு காதல் என்பதை, அந்த இரவு நேரத்தில் அவனை நம்பிக்கையுடன் அழைத்து, உடன் தனியாக மருத்துவமனை சென்றது அறிந்தபோது உருவாகிய சந்தேகம், அவள் விழித்ததும் வசீயை தேடியதில் அழுத்தமாக வலுப்பெற்றது.

மகா முத்துவை பெற்றோரின் விருப்பத்தில் திருமணம் செய்து கொண்டிருந்தாலும், காதலித்தபோதும் சரி, திருமணம் முடிந்தும் பல வருடங்களுக்கு கணவனின் உண்மை முகம் தெரிந்திருக்கவில்லையே! தெரிந்த போது, அவர் கணவரை பிரியாததற்கு ஒரே காரணம் காதல். கணவன் மீது கொண்ட அளவற்ற காதல். அந்த காதலால் தான் தன்னுடைய கணவர் கொலைகாரன், கொள்ளைக்காரன் என்று அறிந்தும் விட்டுச்செல்ல முடியாது தவிக்கிறார்.

கணவருக்காக அவரின் தொழிலை ஏற்றுக்கொண்டிருந்தாலும், மகா தினம் தினம் உள்ளுக்குள் மருகிக் கொண்டுதான் இருக்கிறார்.

சொல்லப்போனால் வெளியில் முத்துச்சாமிக்காக காட்டிக்கொள்ளாது, உள்ளுக்குள் வேதனையை சுமந்து கொண்டிருக்கிறார்.

அத்தகைய நிலை தன்னுடைய மகளுக்கும் வேண்டாமென்று நினைத்தே திருமணத்தை விரைந்து நடத்த நினைக்கிறார்.

காதல் கண்களை மட்டுமல்ல, எதார்த்தத்தையும் மறைக்கும். காதலிக்கும் போது தெரியாத பல பக்கங்கள் திருமண வாழ்வில் கசப்பை உண்டாக்கும். அப்படியான கசப்பான ஒரு வாழ்வு, வலியோடு ஆதர்ஷினிக்கு வேண்டாம் என்பது அவரின் எண்ணம். மகளும் தன்னைப்போல் ஒரு வாழ்வு வாழாது, வெளியில் பெயர் சொல்லும் வாழ்வு வாழ வேண்டும்.

அதற்காகவே சிறிது நாட்கள் செல்லட்டும் என்ற முத்துச்சாமியை சரிகட்டி… பையனின் புகைப்படத்துடன் ஆதர்ஷினியின் அறைக்குள் நுழைந்தார்.

ஆதர்ஷினி கோச்சில் கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.

அருகில் சென்று அவளைத் தொட்டு தன்னிருப்பைக் காட்டினார்.

கண்களை திறந்தவள், அவர் அமர நகர்ந்து அமர்ந்தாள்.

“என்னம்மா… இப்போ உடம்பு எப்படியிருக்குன்னு பார்க்க வந்தீங்களா?” என்றவள் உற்சாகமாகவே காணப்பட்டாள்.

“இல்லை” என்று சைகையால் மொழிந்தவர், “உன்னிடம் பேச வேண்டும்” என்று கூறினார்.

“வசீயை பற்றியாம்மா?”

மருத்துவமனையில் வைத்து அவரின் பார்வை தன்மீது ஆராய்வாய் படியும் போதே இதனை எதிர்பார்த்திருந்தாள் ஆதர்ஷினி.

மகா அவளையே பார்த்திருக்க அவள் தொடர்ந்தாள்.

“எனக்கு வசீயை பிடிச்சிருக்கும்மா. அதற்காக அவரைத்தான் திருமணம் செய்ய வேண்டுமென்கிற எண்ணமெல்லாம் இல்லை” என்றவளின் தொண்டை அடைத்தது. கண்கள் கரித்தது. தடுமாறிய வார்த்தைகளை, நெஞ்சத்தின் மேலெழும்பிய காதலை விழுங்கி தெளிவாய் உதிர்த்தாள்.

“ஐ லவ் ஹிம் ம்மா. பட், காண்ட் லிவ் வித் ஹிம்” என்றாள். கடினப்பட்டு.

“பதிமூன்று வயதில் அப்பாவைப்பற்றி தெரிந்தது முதல் உன்னை பார்த்திட்டு இருக்கேன். எப்பவும் சந்தோஷமாக இருக்க மாதிரி நீ இருந்தாலும், உன்னோட உள்ளத்து சோகம் எனக்கு தெரியாம இல்லை. நான் உன் பொண்ணும்மா. உன்னை என்னால் உணர முடியும்” என்றவள், “உன்னைப்போல் ஒரு வாழ்க்கை எனக்கு வேண்டாம் என்பதில் உறுதியாக தெளிவாக நானிருக்கேன்.

காதல், அது எல்லா உயிர்களிடத்திலும் இயல்பான ஒன்று. யாருக்கு யார்மேல் வேண்டுமானாலும் வரும். இப்போ எனக்கு வசீ மீது வந்திருக்கு. அதை கடந்து என்னால் வர முடியும்” என்று கண்களில் துளிர்த்த நீரை சிரித்து உள்ளிழுத்தவள், “எல்லாம் கடந்து போகும் என்பது தானே வாழ்க்கை” என்றாள் இலகுவாக.

அவளின் அந்த இலகுவிற்குள் அத்தனை சோகம் குடி கொண்டிருந்தது.

தன்னுடைய சோகங்களை சிறு வயது முதலே மனதில் மறைக்க பழகியிருந்தவளுக்கு, மகாவிடம் மறைப்பதும் எளிதாக வந்தது.

ஆதர்ஷினி தெளிவாக இருப்பதை உணர்ந்தவர், தான் இதைப்பற்றி பேச வேண்டிய அவசியமில்லை என்று ஆறுதல் கொண்டார்.

ஆதர்ஷினியின் சிகையை வருடினார். மலர்ந்து காணப்பட்டார்.

அன்னையின் இந்த முகத்திற்காக எதுவும் செய்யலாம் என்றே அக்கணம் அவளுக்குத் தோன்றியது.

ஆதர்ஷினியின் கையில் புகைப்படத்தை வைத்தவர், “பிடிச்சிருக்கா பாரு” என்றார்.

காரணம் விளங்கியபோதும் ஏன் எதற்கு என்று எவ்வித கேள்வியும் கேட்காது படத்தை பார்த்தாள்.

தோற்றத்தில் நன்றாகத்தான் இருந்தான்.

அருகிலிருந்த நோட் பேடை எடுத்து, அவனின் பெயரை எழுதி காண்பித்தார்.

“நிர்மல்.”

“மேல சொல்லுங்க.” அவனைப்பற்றிய தகவல்களை கேட்டாள்.

“அப்பாவுடைய ஃபிரண்ட் எம்.எல்.ஏ முருகேசனின் மகன். வெளிநாடெல்லாம் போய் படிச்சிட்டு வந்திருக்கார். இங்கு சொந்தமா பிஸ்னெஸ் பார்க்கிறார்.

அப்புறம் முக்கியமா… ரொம்ப ரொம்ப நல்ல பையன். எந்த கெட்ட பழக்கமும் இல்லை. அப்பா அதெல்லாம் ஆள் வைத்து விசாரித்துவிட்டார்” என்று மகா சைகையால் சொல்லும் வரை பொறுமை காத்தாள் ஆதர்ஷினி.

“அவரு ஆளுங்களையே வச்சு விசாரிச்சாராக்கும்.” முகம் நொடித்தவளாகக் கூறினாள்.

“வசீகரன் தான் ரெண்டு நாளா கண்காணித்து தகவல் சொன்னான்.” மகா மகளை பார்வையால் அளந்தபடி கூறினார்.

எழுந்த ஆத்திரத்தை தனக்குள் அடக்கியவள்,

“எனக்கு ஓகேம்மா” என்று எதையும் யோசிக்காது சொல்லிவிட்டாள்.

சொல்லிய கணமே நெஞ்சத்தை ஏதோ அழுத்தும் உணர்வு. இதயம் தாறுமாறாக துடிப்பதை போல் படபடத்தாள்.

மகள் சரியென்றதை நம்ப முடியாது ஆச்சரியமாக மகா பார்த்திருக்க…

“நிஜமாத்தான் சொல்றேன். ஆக வேண்டியதை பாருங்க” என்றாள்.

ஆதர்ஷினியின் மனம் காதல் பக்கம் சரிந்துவிடும் முன் அவளின் திருமணத்தை முடித்திட வேண்டுமென்று அக்கணமே பரபரப்பாகினார் மகா.

“அப்போ நாளைக்கே பெண் பார்க்க வர சொல்றேன். அவர்கிட்ட முதல்ல சொல்லணும்” என்று மகா சிறு பிள்ளையின் துள்ளலோடு அறையை விட்டு வெளியேறினார்.

ஆதர்ஷினிக்கு ஒருபக்கம் அழுகை கண்ணை மறைக்க… மறுபக்கம் வசீயின் மீதான கோபம்.

‘அவனே உனக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது, உனக்கென்ன தர்ஷி. அன்னைக்கு ஏதோ அழுகை, காதல் அப்படின்னு டயலாக் விட்டான். இப்போ என்னடான்னா அவங்க ஐயா சொன்னாங்க ஆட்டுக்குட்டி சொன்னாங்கன்னு உனக்கு பையன் பாக்குறான். இவன் லவ்வெல்லாம் அவ்வளவு தான் தர்ஷி. அவரை(முத்துச்சாமி) எதிர்த்துலாம் இவன் எதுவும் செய்யமாட்டான்’ என்று தனக்குள் புலம்பியவளுக்கு, என்ன எதிர்பார்க்கிறோம் என்றே தெரியவில்லை.

காதலிக்கிறாள். ஆனால் அவன் வேண்டாம். திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டாள். ஆனாலும் வசீயினை அவள் மனம் தேடுகிறது.

அவளின் நிலையில் நிலையாக நிற்க முடியாது அறையை குறுக்கும் நெடுக்குமாக அளந்தவள், இந்தநேரம் அவன் இங்குதான் இருப்பானென்று சன்னல் வழி தோட்டத்தில் அவன் அமரும் இடத்தை நோக்கினாள்.

அவ்விடம் வெறுமையாக இருந்தது.

“இந்தநேரம் பாடிகார்டு வேலை பார்க்க, டா’ன்னு வாந்திருப்பாரே!” என சிந்தித்தவள் தனக்குள்ளே உழல ஆரம்பித்தாள்.

என்ன தான் காதல் இருந்தாலும், வசீயுடன் ஒரு வாழ்வு… அவளுக்கு தானே ரோலர் கோஸ்டரில் ஏறி அமர்ந்து கொள்ளும் நிலை தான்.

அவள் விரும்புவது… அமைதியான, நிம்மதியான, காதலான ஒரு வாழ்க்கை. அது அடிதடி, ரவுடிசம் செய்யும் வசீயுடன் சாத்தியமில்லை என்பதாலே அவன்மீது கொள்ளை கொள்ளையாய் காதலை சுமந்திருக்கும் போது அன்னையின் விருப்பத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டு தவித்திருக்கிறாள்.

தன்னுடைய இந்த தவிப்பிற்காக ஒரே ஒருமுறை வசீயிடம் பேசி பார்க்கலாம் என்று நினைத்தவள் அவனின் எண்ணிற்கு தொடர்பு கொண்டாள்.

அழைப்பு சென்றுகொண்டே இருந்தது. எடுத்தானில்லை.

******

ஆதர்ஷினியிடம் பேசிவிட்டு வெளியேறிய மகாலட்சுமி நேராக முத்துச்சாமியிடம் சென்று “தர்ஷி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டா. அவளுக்கு பையனை பிடிச்சிருக்கு” என்று சொல்லியவர், “எவ்வளவு சீக்கிரம் திருமணத்தை நடத்த முடியும் நடத்தி முடித்திட வேண்டும்” என்றார்.

“ஏன் இவ்வளவு அவசரம்?” என்றவரிடம், எதையும் சொல்ல முடியாது மன்றாடலுடன் பார்த்திருந்தார் மகா.

அவர் எதையோ சொல்ல முடியாது தவிப்பதை புரிந்துகொண்ட முத்துச்சாமி, “மாப்பிள்ளை வீட்டில் பேசிட்டு சொல்றேன்” என்று நல்ல பதிலாகவே கூறினார்.

அப்போது அவருக்குள்ளும் ஒரு யோசனை தோன்றியது.

வசீயையும், பாலாவையும் தங்களது இடத்திற்கு வருமாறு சொல்லியவர், தானும் அங்கு சென்றார்.

அங்கு பாலாவை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் இருந்தனர்.

“பாலா எங்கு வசீ?”

பாலா எங்கிருக்கின்றான். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது எல்லாம் வசீக்கு நன்கு தெரியும். இருப்பினும் அவன் பாலாவை காட்டிக்கொடுக்க எண்ணவில்லை. அவனின் திட்டம் வேறு.

அதில் வசீயே பாலாவை கொல்லவும் நேரும். அவனைப்பற்றி முழுதாக தெரிவதற்குள் நண்பனாக பழகிய சில காலத்திற்காக அதனை முடிந்தளவு தவிர்க்கப் பார்க்கிறான் வசீ.

“தெரியல… கால் பண்ணேன் அட்டெண்ட் பண்ணல.” அவன் சொல்லியது பொய் தான்.

“நான் பண்ணும் போது பேசினானே” என்ற முத்துச்சாமி, “அவன் குரல் ஒருமாதிரி இருந்துச்சு. உடம்பு ஏதும் சரியில்லையா?” என்று கேட்டார்.

“பாலாவுக்கு ஒண்ணுமில்ல. வந்துவிடுவான்” என்று வசீக்கு முன் பதில் சொல்லிய குமாரிடமும் அடக்கப்பட்ட கோபம் இருந்தது.

அது வசீயிடம் தப்பாமல் தட்டுப்பட்டிருந்தது.

வசீயை தவிர்த்து மற்ற அனைவருக்கும் நாசூக்காக ஒவ்வொரு வேலையை சொல்லி வெளியேற்றிய முத்துச்சாமி நீண்ட நேரம் மௌனத்திலேயே இருந்தார்.

தான் எடுத்திருக்கும் முடிவை சொல்லி செயல்படுத்துவதற்கு முன்னர், இது சரி வருமா வராதா என்று அத்தனை யோசித்தார்.

அதற்கே இந்த அமைதி.

முத்துச்சாமி பேசுவதற்காக வசீ ஆர்வமுடம் காத்திருந்தான். ஆனால், அவனது முகம் எப்போதும் போல் நிர்மலமாகத்தான் இருந்தது.

தொண்டயை கணைத்தவர்,

“தண்ணீ வேணும் வசீ” என்றார்.

‘எதுக்கு இந்த பில்டப்… எனக்கு சாதகமா அமைந்தா போதும்’ என நினைத்த வசீ, தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.

தண்ணீரை குடித்தவர், “எனக்கு ஒரு யோசனை வசீ. இது எந்தளவிற்கு சரி வரும் தெரியல. இதில் எனக்கு ஆலோசனை தேவைப்படுது. முன்பென்றால் மாசிலாமணியிடம் கேட்டிருப்பேன். இப்போ யாரிடம் கேட்பது தெரியல” என்றவர் மீண்டும் நீரினை அருந்தியவராக, “நம் தொழில் நடையமுறைப்பற்றி உனக்கு நன்றாகவேத் தெரியுமே! அதோட நீ சொல்றது எப்பவும் சரியா இருக்கும். அதனால்” என்று இழுத்தார்.

‘சீக்கிரம் சொல்லேண்டா… நீ சொல்றதுக்கு ஏற்ற மாதிரிதான் நான் வியூகம் அமைக்க வேண்டும்.’ வசீ அவருக்கு முன் இருக்கையில் அமர்ந்தான்.

“முடிவெடுத்த பிறகு யோசிக்காதீங்க. என்ன செய்யனும் நினைக்கிறீங்களோ, அதை செய்திடுங்க! எல்லாம் நமக்கு (எனக்கு) சாதகமாக அமையும்” என்றான் வசீ.

“ஆதர்ஷினிக்கு பையனை பிடிச்சிருக்காம்!” என்றவர்,

இவ்விடத்தில் தான் வசீக்கு ஆதர்ஷினியிடமிருந்து அழைப்பு வந்தது. முத்துச்சாமியை அனைத்தும் சொல்ல வைப்பதுதான் முக்கியம் என்று நினைத்தவன், அழைப்பினை துண்டித்திருந்தான்.

“மகா சீக்கிரம் திருமணம் நடக்கணும் சொல்றா. எனக்கும் திருமணத்தை வைத்து… அதன் காரணமாகக் கூட்டம் வைத்துவிடலாம் என்கிற எண்ணம்” என்றார்.

“என்ன கூட்டம், எதற்கு?”

தெரிந்துகொண்டே தெரியாததைப்போல், அறிந்து கொள்பவனாக வினவினான்.

முத்துச்சாமி வசீயிடம் அனைத்தும் சொல்லும் நிலையில் இருந்ததால், இதுவரை பாலா, வசீயிடம் சொல்லாத பல விடயங்களை வசீயிடம் முதல் முறையாகக் கூறினார்.

*********

“நாம அடிதடி, கட்டப்பஞ்சாயத்து மட்டும் செய்யல வசீ.” அவ்வாறு சொல்லிய முத்துச்சாமியிடம் ஏதோவொரு பெரும் ரகசியத்தை வெளியே சொல்லும் பாவனை.

“நம்முடைய உப்பளத்தில் உப்பு உற்பத்தி செய்யவில்லை. அதனை கண் துடைப்பிற்காக வைத்துக்கொண்டு, முழு நேர தொழிலா ட்ரக்ஸ் சப்ளை செய்றோம்” என்றார்.

வசீ இதனை ஏற்கனவே அறிந்திருந்தான்.

“இது உனக்கு இப்போது சில நாட்களுக்கு முன்பு தெரிந்திருக்கலாம்”  என்றவர், “போதைப்பொருள் அப்படின்னா வெறும் பவுடர் மட்டுமல்ல” என்றதோடு தாங்கள் விநியோகம் செய்யும் போதைப்பொருட்களின் வகைகளை அவர் சொல்லிட, வசீக்கு ஆச்சரியம்.

தானாக அவனது புருவம் உச்சி தொட்டு நின்றது.

“நமக்கு ஆளுங்க எல்லா மாநிலத்திலும் இருக்காங்க வசீ. அதிலும் குறிப்பா கேரளா, மஹாராஷ்டிரா தான் நமக்கு அதிக லாபம் கொடுப்பது. மூணு வருஷத்துக்கு முன்னாடி, கேரளாவில் ஒரு பிரச்சனை. அதிலிருந்து அங்கு கொஞ்சம் மந்தமாகிப்போச்சு. அதில் எவ்வளவோ நஷ்டம். இப்போ நடந்து கொண்டிருக்கும் கொலைகள், அதே நிலை மற்ற இடத்திலும் நடக்கும் தோணுது. அப்படி ஆகிட்டா, தொழிலில் சரிவு தான். எப்போடா என் இடம் காலியாகும்ன்னு பல கண்கள் என்மேல இருக்கு. அதை தடுப்பதற்கு, இந்தியா முழுக்க இருக்கும் நம் ஆட்களை ஒன்றிணைத்து கூட்டம் நடக்கணும். அந்த சந்திப்பில் பல கோடி சரக்குகள் கைமாற்றாம் செய்ய வேண்டும். நம்மிடம் இருப்பவற்றைக்கூட மொத்தமா ஒரே இடத்தில் மாற்றம் செய்து லாபம் ஈட்டிக்கொள்ளலாம். இந்த கூட்டம் நான்கு வருடத்திற்கு ஒருமுறை நடக்கும். இம்முறை இங்கு நம் தமிழ்நாட்டில்” என்றவர்,

“உனக்கோ, பாலாவுக்கோ மட்டுமில்லை… என்னுடன் இத்தொடர்பில் இருக்கும் யாருக்கும் தெரியாத ஒன்று, எனக்கும் மேல் ஒருத்தர் இருக்கார். அவர் தான் எனக்கு சரக்குகளை அனுப்புவார். சொல்லப்போனா அவருக்கு நான் பினாமி போலத்தான்” என்றார்.

‘என்ன சொல்கிறார் இவர்? இவருக்கு மேல் ஒருவனா?’ என சிந்தித்த வசீ,

“ஒருநாள என் மொபைலில் அழைத்து பேசுனீங்களே அவரா?” எனக் கேட்டான். தனக்குள்ளிருக்கும் ஆர்வத்தையோ, அறிந்துகொள்ள நினைக்கும் எண்ணத்தையோ முகத்தில் காட்டது வெகு சாமர்த்தியமாக வினவியிருந்தான்.

முத்துச்சாமி பல சிந்தனைகளில் இருந்ததால், தன்னை அறியாது ஆமென்று சொல்லிவிட்டார்.

“அவருக்கு மொத்த சரக்குக்கான கணக்கை நான் கொடுக்க வேண்டும். அத்தோடு இறந்த எல்லோரும் சாதாரணமானவர்கள் இல்லை, அவருக்கு நான் எப்படியோ அப்படித்தான் அவர்களும். அதனால் தான் இந்த கூட்டம் சீக்கிரம் நடைபெற ஏற்பாடாகுது” என்றவர், “எப்படியும் இந்த கூட்டத்தில் ஐம்பது பேராவது பங்குகொள்வோம். இத்தனை பேர் ஒரேயிடத்தில் கூடுவதற்கு காரணம் வேண்டும். அத்தோடு, வெளியில் தெரிந்தாலும் இயல்பான ஒன்றிற்கு இணைந்ததா இருக்கணும். அதற்குத்தான் தர்ஷி திருமணத்திற்கு அனைவரையும் அழைப்பது போல் வரவேற்று, முதல் நாள் இரவு வைத்துக்கொள்ளலாம் என்று யோசனை. இது ஒத்துவருமா சொல்லு?” எனக் கேட்டார்.

“நீங்க எல்லாரும் ஒன்று இணைவதற்கு உங்களுக்கெல்லாம் ஒரு காரணம் வேண்டும். அதற்கு உங்கள் மகள் திருமணத்தை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறீர்கள். இந்த வழி கண்டிப்பா ஒத்துவரும்” என்ற வசீ, “நான் வேணும்னா அரேஞ்சமெண்ட்ஸ் பார்க்கட்டுமா?” எனக் கேட்டிருந்தான்.

“என் பொண்ணுக்குன்னு இதுவரை நான் ஒண்ணுமே செய்தது இல்லை வசீ. அவளுடைய திருமணத்தையாவது நானே முன்னின்று அனைத்தையும் செய்திட வேண்டும்” என்று வசீயின் தோள் மீது கை வைத்தவர், “இதனை நீதான் ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.

“இதுவொரு பிஸ்னெஸ் மீட் மாதிரி இருக்கக்கூடாது வசீ.”

“ம்ம்ம்… கெட் டூ கேதர் மாதிரி அரே(ன்)ஞ்  பண்ணிடலாம்” என்ற வசீ, “நீங்க டேட் பிக்ஸ் பண்ணிட்டு… யார் யாருன்னு லிஸ்ட் கொடுங்க. நான் எல்லாம் பார்த்துக்கிறேன்” என்ற வசீயின் இறுதி வார்த்தைகளின் அர்த்தம் அவன் மட்டும் அறிந்தது.

அந்நேரம் தான் பாலா அங்கு வந்து சேர்ந்தான். அவனின் முகம் பார்ப்பதற்கே என்னவோ போலிருந்தது. கண்கள் ரத்தமென சிவந்திருந்தது.

“என்னடா இப்படி வந்து நிக்குற?”

“உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது இல்லையா?” அத்தனை ஆத்திரத்தில் கேட்டிருந்தான் பாலா.

“பாலா என்னதிது? கொஞ்சம் பொறுமையா பேசு!” வசீ பாலாவை அடக்க முயற்சித்தான்.

கையை தலையில் தடவி தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்திய பாலா, தலையிலேயே உள்ளங்கையால் முடிந்தளவு வேகமாக தட்டிக்கொண்டான்.

“பாலா… விடு… விடுடா! ஏன் இப்படி நடந்துக்குற?” என்று வசீ அவனின் கையை இறுகப்பற்றி தடுத்திருந்தான்.

“உனக்கு என்னாச்சு பாலா?” முத்துச்சாமிக்கு பாலாவின் இத்தகைய நடவடிக்கைக்கு பதில் தெரியவில்லை.

“எல்லாம் உன்னால் தான்…” என்று ஏதோ சொல்ல வந்த பாலாவின் வாயினை பொத்தியவனாக பாலா திமிர திமிர வசீ வெளியில் இழுத்துச் சென்றான்.

“விடு… விடுடா என்னை” என்று வசீயை உதறிய பாலா… “அவனை கொல்லனும்… என் கையால் துண்டு துண்டா வெட்டணும்” என்று கையால் வெட்டுவதைப்போல் செய்கையில் செய்தவாறு கூறினான்.

“போ… போய் வெட்டு” என்ற வசீ, “அடுத்த மாதம் எல்லா தலையும் ஒண்ணு கூடுறாங்க” என்றிட, பாலாவிடம் சட்டென்று ஒரு அமைதி.

எதையெதையோ கணக்கிட்டவனாக அப்படியே வெளி வாயில் படியில் அமர்ந்துவிட்டான்.

சற்று நிதானத்திற்கு வந்திருந்தான்.

‘கொஞ்ச நேரத்தில் என்ன செய்திட பார்த்தேன். உணர்ச்சிவசத்தில் கிடைக்கவிருக்கும் வாய்ப்பினை தவற விட்டிருப்பேனே!’ சிந்தித்தவனாக நெற்றியில் தட்டியபடி இருந்தவனின் மனவோட்டத்தை அவதானித்தவனாக வசீ நின்றிருந்தான்.

கோபத்தில் பாலா பட்டென்று உண்மையை போட்டு உடைத்திருந்தால் அனைத்தும் பாழாகியிருக்கும். வசீயின் இத்தனை ஆண்டு தவ வாழ்வு வீணாகியிருக்கும்.

ஆம் வசியுடையது ஒரு தவம் தான்.

சமுதாயத்தில் ஊடுருவி இருக்கும் புல்லுருவிகளை களையெடுப்பதற்கான வரத்தினை எதிர்நோக்கியிருக்கும் தவம்.

வரம் கை சேர்கையில் நழுவி போனால், மீண்டும் ஒரு தவம் செய்திட முடியுமா? இதில் எத்தனை உழைப்பு. வசீ இதற்காக கொண்ட இழப்புகள் அதிகம். கிட்டத்தட்ட இந்தநாளிற்காக அவனின் வாழ்வின் பணயம் இது.

சிறிது நேர அமைதிக்குப் பின்னர் தான், பாலாவிற்கு ஒன்று புரிந்தது. வசீ அவனை தடுத்ததன் காரணம்.

காரணம் என்னவாக இருந்திட முடியும்? அவனை சொல்லவிடாது தடுத்திருக்கிறான் என்றால், வசீக்கு பாலாவைப்பற்றி தெரிந்திருக்கிறது என்பது தானே! அதனை பாலா வசீயிடம் கேட்கவும் செய்தான்.

“நான் யாருன்னு தெரியுமா?”

“கொஞ்சமா!”

“நீ சொல்றதிலே எல்லாம் தெரியுமுன்னு தெரியுது” என்ற பாலா, “தெரிந்துமா அமைதியா இருக்க?” எனக் கேட்டான்.

“இல்லையே… நானெங்க அமைதியா இருந்தேன். முத்துச்சாமியை கொலை செய்றதுக்காக இதுவரை ஆறு முறை முயற்சி பண்ணியிருக்க. அதையெல்லாம் முறியடிச்சிட்டு இருக்கேன்” என்று சாதரணமாக சொல்லிட, பாலாவிடம் அதிர்ச்சி.

“நான் அவரை முதன் முதலில் காப்பாற்றியது. அந்த சீன் கிரியேட் பண்ணதும் நீதான்னு தெரியும்” என்ற வசீயும் இப்போது பாலாவிற்கு அருகில் அமர்ந்தான்.

“இவ்வளவு தெரிஞ்சும் நீ சும்மாயிருக்கன்னா…?” பாலா அர்த்தமாக இழுத்தான்.

“நீ இங்கிருக்க உனக்கொரு காரணம் இருக்க மாதிரி… எனக்கொரு காரணம். அவ்வளவுதான்” என்ற வசீ, “இதெல்லாம் எதுக்கு. நீ இதையெல்லாம் விட்டு வாழ உனக்கொரு சான்ஸ் கிடைச்சிருக்கு. அதை பயன்படுத்திக்கோ” என்றான்.

“உன்னுடைய இந்த அட்வைஸ் எல்லாம் வாசுவோட நிறுத்திக்கோ. பதினைந்து வயதில் இவனோடு வந்து சேர்ந்தது, யாருமில்லைங்குறதுக்காக இல்லை. இவனை அழிச்சு அந்தயிடத்தில் நான் உட்கார” என்றான். பாலாவின் கண்களில் பழவெறி அதிகமாகவே மின்னியது.

‘உன் முடிவு என் கையில் தான் அப்படிங்கிறப்போ, நான் என்ன பண்ண முடியும்?’ வசீ எடுத்ததும் கொன்றுவிடும் ஆளில்லை. அவர்களுக்கான வாய்ப்பளித்த பின்னரே தன் கையில் துப்பாக்கியை எடுத்திடுவான்.

இதுவரை அவன் கொன்றவர்கள் யாவரும், மன்னிப்பு என்ற வரையறைக்குள் வைத்திட முடியாதவர்கள்.

ஏன் கொலை செய்கிறான் என்கிற அவனின் பக்க நியாயங்கள் யாவும் அவனே சொல்லும்வரை காத்திருக்கத்தான் வேண்டும்.

“என்ன யோசனை?”

“நத்திங்…”

“என்ன படிச்சிருக்க வசீ?”

இப்போ இந்த கேள்வி எதற்கு என்பதைப்போல் வசீ ஏறிட்டான்.

“ஒரு விஷயத்தில் உன்னுடைய கோணமே வேறா இருக்கு. சில நேரம் நீ பேசுற இங்கிலிஷ் ரொம்ப ஸ்டைலா இருக்கு” என்றான் பாலா.

“படிப்புக்கும், அறிவுக்கும் சம்மந்தமில்லை பாலா. அதே மாதிரி தான், படிப்பு வேறு மொழி வேறு” என்று லாவகமாக பதில் சொல்லி பாலாவின் கேள்வியையே தவிர்த்திட்டான் வசீகரன்.

“ம்ம்ம்ம்… நெக்ஸ்ட் உன் பிளான் என்ன?”

“சொன்ன வேலையை செய்யுறது” என்ற வசீ எழுந்துகொண்டான்.

“நான் பாப்பாவை கல்யாணம் பண்ணிக்கலாம் நினைக்கிறேன்.”

பாலா சொல்லியதும் வசீ அதிர்ந்துவிடவெல்லாம் இல்லை. இதனை பாலாவிடம் வசீ எதிர்பார்த்தது தான்.

“ஏன் இந்த முடிவு?”

“முத்துச்சாமிக்கு இருக்கும் மகள் பாசம் தான் எனக்கு என்னுடைய கனவை கைசேர்க்க உதவும் கருவி” என்ற பாலா…

“எல்லாரும் வர அன்னைக்கு அவருக்கு அடுத்து எல்லாம் நான் தான்னு முத்துச்சாமி வாயாலே சொல்ல வைக்கிறேன்” என்றான்.

“இதுக்கு பாப்பா ஒத்துக்கணுமே!” என்று சிரித்தான் வசீ.

“ஏற்கனவே அவள் என்னை மோப்பம் பிடிச்சிட்டாள் நினைக்குறேன். அன்னைக்கு ஹாஸ்பிட்டலில் ஏதோ உள் அர்த்தம் வைத்து பேசினா(ள்). எனக்கு புரியல… அவளா என்னை நெருங்கனும் நினைச்சு தான், பாப்பா பாப்பான்னு பின்னாடியே அலைஞ்சேன். ஆனால் அவள் கண்டுக்குற மாதிரியே தெரியல… அதான் தூக்கிட்டு போய் தாலி கட்டிடலாம் பாக்குறேன்” என்றான். ஒருவித தீவிரம் அவனிடம்.

“என்னை நம்பி உன்னோட பிளானெல்லாம் சொல்ற!” வசீக்கு பாலாவின் மீது இத்தனை நாளிருந்த இளக்கம் இப்போது இந்த நொடி எங்கோ தூரம் சென்றிருந்தது.

ஒருவனை அழித்திட அவ்வீட்டின் பெண்களை அடக்கி ஆள நினைப்பது வசீக்கு தவறாகப்பட்டது. அதுவும் அந்தப்பெண் என்ன கண்ணோட்டத்தில் பழகுகிறாள் என்பது அறிந்தும்… தூய அன்பை கொச்சை படுத்தும் விதமாக எண்ணம் கொண்டிருப்பது, வசீக்கு உவப்பாக இல்லை.

“எதிரிக்கு எதிரி நண்பன் பார்முலா தான். நீ யாரு என்னான்னு எனக்குத் தெரியாது. கொஞ்சநாளா எனக்கும் உன் மேல் டவுட் தான். நீயும் முத்துச்சாமியை ஒழித்துக்கட்டத்தான் வந்திருக்கன்னு தெரிந்த பிறகு என் வேலை சுலபமானா சரியென்கிற எண்ணம் தான். யார் பழிவாங்கினா என்ன? எப்படியும் அடி வாங்கப்போவது முத்துச்சாமித்தானே” என்ற பாலா, “இருந்தாலும் அந்த முத்துச்சாமியை நான் கதறிட்டு ரசிக்கணும். அதுக்கு நான் அவள் பொண்ணை ஆட்டி வைக்கணும்” என்றான்.

“உன்னை ஆதர்ஷினி சகோதரனா பார்க்கிறாள்.”

“இப்போலாம் பொண்டாட்டியையே பாப்பான்னு தான் கூப்பிடுறானுங்க. நான் அந்த நினைப்புலத்தான் கூப்பிட்டேன். பழகினேன். அவளா ஒண்ணு நினைச்சிக்கிட்டா, நான் பொறுப்பாக முடியாது. பொண்ணுங்களும் பிரதர்னு கூப்பிடுறது அப்புறம் லவ்னு சொல்றதெல்லாம் சாதாரணமாகிடுச்சு ” என்றான் பாலா.

வசீ தன்னுள் பொங்கி வரும் கோபத்தை கட்டுப்படுத்த, கைகளை மடக்கி பேண்ட் பாக்கெட்டிற்குள் விட்டுக்கொண்டான்.

கோபத்தில் அவசரப்பட்டு சாதகமாக நடந்து வரும் நிகழ்வுகளை சிக்கலாக்கிக்கொள்ளக் கூடாதென்கிற எண்ணம் வசீயை இழுத்து பிடித்து பொறுத்துப்போக வைத்தது.

   

error: Content is protected !!
Scroll to Top