நேச நெஞ்சங்கள் 19

உயிர் உறை 19

நேசப்பிழை 12

அதிர்ந்து நின்ற வாசுவிற்கு உலகம் சுற்றியது.

“வசீ என்னடா பண்ற?”

வாசுவிற்கு பயம் பீதியை கிளப்பியது.

“இந்த பொண்ணுங்களை யார் கேட்டாங்க தெரியுமா?”

“அடுத்து அவனுக்கு இருக்கு!” என்ற வசீ, “இவங்களை வீட்டில் விட்டுடு. எனக்கொரு முக்கியமான வேலை இருக்கு” என்றான் வசீ.

“என்னால் முடியாது. இது மட்டும் தெரிஞ்சுதுன்னு வச்சிக்கோ, உன்னை விட்டாலும், என்னை போட்டு தள்ளிடுவானுங்க.” உண்மையில் பாலாவை நினைத்து, முத்துச்சாமியை நினைத்து வாசுவிற்கு பயந்து வந்தது.

“இவ்வளவு பயம் இருக்கிறவன் எதுக்குடா இந்த கூட்டத்தில் சுத்திட்டு இருக்க?” கேட்ட வசீ, “ஆட்டோ கிடைக்குதா பாரு” என்றான்.

பின்னர் எதையோ யோசித்தவனாக, “ஆட்டோ இங்கு வேண்டாம்” என்று இரண்டு பெண்களை அழைத்துக்கொண்டு சாலைக்கு வந்தான்.

“நீ என் வண்டி எடுத்துட்டு பின்னாலே வாடா” என்று வாசுவிடம் தன்னுடைய இருசக்கர வாகனத்தின் சாவியை கொடுத்த வசீ, “கொஞ்ச தூரம் நடந்தால் மெயின் ரோடு வந்திடும். அங்கு எதாவது வண்டி கிடைக்குதா பார்க்கலாம்” என்றான்.

இப்போது வசீயின் மீது இருவருக்கும் நம்பிக்கை வந்திருந்ததால், அவன் சொல்வதற்கு சரியென மண்டயை உருட்டினர்.

வண்டியை தள்ளிக்கொண்டே அவர்கள் பின்னால் நடந்த வாசு,

“நான் பைக்கில் போய் ஆட்டோ பிடிச்சிட்டு வரேண்டா… எதுக்கு அம்புட்டு தூரத்துக்கு நடக்கணும்?” எனக் கேட்டான்.

“எல்லாம் காரணமாத்தான்” என்ற வசீ, “இந்த பொண்ணுங்க இங்கிருந்து எப்படி தப்பிச்சாங்கன்னு மண்டை வெடிச்சே அவனுங்க சாகணும்” என்ற வசீயிடம் அவர்களை சுத்தலில் விடும் தீவிரம்.

“நல்லா யோசிக்குறடா நீ…” என்ற வாசு, “போ…” எனத்தொடங்க வசீ பார்த்த பார்வையில் வார்த்தையை விழுங்கியவனாக, “உனக்கு சொல்லியாத் தரனும்” என்றிட… “உன் வாய் மூடலன்னா… நான் மூட வைப்பேன்” என்ற வசீயின் அதட்டலில் வாசு அடுத்து வாய் திறக்கவே இல்லை.

பத்திரமாக இருவரையும் வீட்டில் விட்டுவிட்டு, அவர்களின் பெற்றோரிடம் தங்களை அறிமுகம் செய்துகொள்ளாது… “தனியா நின்னுட்டு இருந்தாங்க கூட்டி வந்தோம்” என்று மட்டும் சொல்லி, அப்பெண்களிடமும் இதைப்பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாமென்று வலியுறுத்தி மற்றொரு இடத்திற்கு வரும் வரையிலும் வாசு பேசிடவில்லை.

பெண்களின் பெற்றோரும்… எவ்வித சேதாரமும் இல்லாமல் வீடு வந்து சேர்ந்ததே போதுமென்று மேற்கொண்டு எதையும் துருவவில்லை.

வசீக்கு அதுவே போதுமானதாக இருந்தது.

“வீட்டுக்கு போவோம் பார்த்தாக்கா… வேறெங்கையோ கூட்டி வந்திருக்க, யார் விடுடா இது?” வழக்கம்போல் வாசு வாயினை திறந்திருந்த்தான்.

“உன்னால வாய் திறக்கமா, கேள்வி எதுவும் கேட்காம இருக்கவே முடியாதுல” என்ற வசீ, “எல்லாம் எனக்கு வேண்டியவன் வீடு தான்” என்று சொல்லி மதில் சுவர் தாண்டி உள்பக்கம் குதித்தான்.

“அதான் வாட்ச்மேன் இல்லையேடா, நேராவே போலாமே” என்ற வாசுவை முறைத்த வசீ, “கொஞ்சம் கூட மண்டையில் இருப்பதை யோசிக்கவே மாட்டியாடா? எல்லாத்துக்கும் கேள்வி கேட்குற, காம்பவுண்ட் சுவரைவிட கேட் உயரம், போ குரங்கு மாதிரி ஏறி தாவு” என்று தன்னை பின்பற்றி உள்ளே குதித்திருந்த வாசுவை வாயில் நோக்கி தள்ளினான்.

“அதான் வந்துட்டனே… போகும்போது ட்ரை பண்ணுவோம்.”

வசீ தலையிலேயே தட்டிக்கொண்டான்.

“எங்கையோ போன ச..னை என் பனியனுக்குள்ள விட்ட மாதிரி, உன்னை கூட்டிட்டு வந்தது தப்பாப்போச்சு. இனி வீட்டுக்கு போறவரை வாய் திறக்கவேக் கூடாது. திறந்த” என்ற வசீ துப்பாக்கியை எடுத்து வாசுவின் நெற்றியில் வைத்து, “டப்புன்னு போட்டுட்டு போயிட்டே இருப்பேன்” என்க… அதன் பின்னரும் வாய் திறந்திட வாசுவிற்கு பைத்தியமா.

சிறு பிள்ளையென வாயில் விரல் வைத்தவனாக வசீயை தொடர்ந்தான்.

வீட்டையும், வீட்டின் சுற்றுப்புறத்தையும் பார்வையால் அலசிய வாசு, ‘இத்தாம்பெரிய வீட்டுக்கு ஒரு வாட்ச்மேன் இல்லை. ஏன்னு கேட்கணும் தோணுது, கேட்டால் இவன் மேல பாயுவான்’ என்று வாசு முனகிட…

“இது அந்த ஆளுக்கான ரகசிய காரியங்களுக்கு யூஸ் பண்ற வீடு” என்ற வசீ, “இனி நீ மைண்ட் வாய்ஸில் கூட பேசக்கூடாது” என மிரட்டினான்.

வாசு கேட்டுக்கொண்டதாக வேகமாக தலையை ஆட்டினான்.

‘இந்த மிரட்டு மிரட்டுறான்’ என நினைத்த வாசுவுக்கு, வசீயுடன் ஏண்டா வந்தோமென்று தான் இருந்தது.

‘இதுக்கு அந்த பாலா, குமாரே தேவலாம் போல.’

வீட்டின் முன் கதவில் பூட்டிற்கு பதிலாக, விரல் ரேகை வைத்து கதவினை திறக்கும் வழியில் டிஜிட்டல் லாக் இருந்திட…

“இந்த வீட்டில் மாடி வழியா எகுறி குதிக்க வழி இருக்கான்னு பார்த்துட்டு வரேன்” என்று வாசு நகர, அவனைத் தடுத்த வசீ… தன்னுடைய ஷார்ட்ஸ் பையிலிருந்து சிறு பெட்டியை எடுத்தான்.

அதிலிருந்த சிலிக்கான் தோலினை தன்னுடைய விரலில் ஒட்டியவன் பூட்டின் விரல் பகுதியில் வைத்திட, கதவு திறந்து கொண்டது.

“எப்புட்ரா…?” வாசுவிடம் ஆச்சரியம்.

“போன வாரம் இவன்கிட்டதான் முத்துச்சாமி பணப்பெட்டி வாங்கி வரச்சொன்னான். உதவுமேன்னு இவன் கொடுத்த பெட்டியிலிருந்த இவனுடைய பிங்கர் மார்க் எடுத்து வைத்தேன்” என்று சாதாரணமாக சொல்லிய வசீ வீட்டின் உள்ளே நுழைய, ஐம்பது வயதுடைய ஒருவர் மாடியிலிருந்து கீழ் இறங்கி வந்து கொண்டிருந்தார்.

“வசீ நீயெப்படி உள்ள வந்…(தாய்)?”

அவர் கேட்டு முடிக்கும் முன் வசீயின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த தோட்டா அவரின் இடது மார்பை துளைத்திருந்தது. நொடியில் கீழே விழுந்தவர் மொத்தமாக போய் சேர்ந்திருந்தார்.

படியில் உருண்டு வசீயின் காலுக்கடியில் வந்து விழுந்தது சடலம்.

தன் காலினாலே உடலை ஒரு எத்து எத்தினான். அவன் மீதான கோபம் அவனின் இறந்த உடலை கண்ட பின்னரும் வசீக்கு தீரவில்லை.

“வசீ… என்னடா கொலை பண்ணிட்ட?”

வாசுவிற்கு உடலெல்லாம் வியர்த்து நடுங்கியது.

“நான் பண்ணா, அது கொலையல்ல” என்ற வசீயிடம் மர்மப் புன்னகை.

“வா போவோம்” என்ற வசீ, அவ்வீட்டின் பாதுகாப்பிற்காக வைத்திருந்த கண்காணிப்பு காமிராவினை முற்றிலும்… அதிலிருந்து எந்தவொரு தகவலும் மீண்டும் எடுக்க முடியாத அளவிற்கு அழித்துவிட்டு வாசுவை கூட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

வாசுவிற்கு இன்னும் உடலெல்லாம் ஆட்டம் கண்டிருந்தது.

“பொசுக்குன்னு என் முன்னாலே அவனை சுட்டுட்டியே டா… நான் ஏதோ அடிதடி, தூக்கிட்டுவர சொன்னா ஆளுங்களை தூக்குவேன். அவ்வளவு தான். பாலாவே என்னை கொலை செய்யுற காரியத்துக்குலாம் கூப்பிட மாட்டான்” என்று அவன் போக்கில் புலம்பிக்கொண்டிருந்தான்.

“இந்த வயசுல கெழட்டு நா*க்கு காலேஜ் கேர்ள்ஸ் வேணுமாம்மா. மாசிலாமணி வீட்டிலிருந்து எடுத்த சிசிடிவி புட்டேஜ் பார்த்தேன். ரெண்டு பர**யும் இல்லாத ஆட்டமெல்லாம் போட்டிருக்கு. அதை ரெக்கார்ட் வேற பண்ணி வச்சிருக்கானுங்க. அதான் ச்சாப்டர் க்ளோஸ் பண்ணிட்டேன்” என்று சர்வ சாதாரணமாக வசீ சொல்லிட, என்னயிருந்தாலும் கண் முன்னால் ஒரு கொலையை கண்டுவிட்ட வாசுவால் இளகுவாக இருக்க முடியவில்லை.

இருவரும் மொட்டை மாடிக்கு வந்த போது, அவர்கள் விட்டுச்சென்ற நிலையில் தான் பாலாவும் குமாரும் இருந்தனர்.

படுத்தாலும் வாசுவால் உறங்க முடியவில்லை.

வசீயை ஒட்டிப்படுத்து அவனின் கையை  கட்டிக்கொண்டு படுத்தவன், “என்னை இந்த கூட்டத்திலிருந்து போன்னு சொல்லுவியே. அனுப்பி வச்சிடு வசீ” என்று கலங்கிப்போய்க் கூறினான் வாசு.

“கண்ணு முன்னால் கொலையை பார்க்கும் சக்தியெல்லாம் என்னிடமில்லை. ஏதோ அடிக்கிறது மிரட்டுறதுன்னு பார்த்தால்… இங்கிருந்தா நானும் பின்நாளில் இதை செய்யலாம். அப்படியொரு நிலை எனக்கு வேண்டாம். என்னை அனுப்பி வச்சிடு பிளீஸ்” என்று அரற்றியவனாக தூங்கிப்போனான்.

கிட்டத்தட்ட தன்னை அணைத்தவாறு ஒன்றி படுத்திருக்கும் வாசுவை பார்க்கையில், யாரோ ஒருவரின் நினைவு வசீயை பலமாகத் தாக்கியது.

கண்களை மூடி நினைவினை விரட்டியவன், பதிவு செய்திருந்த தர்ஷியின் நிகழ்ச்சியை ஒலிக்கச் செய்து கேட்டவனாக கண்களை மூடிக்கொண்டான். சிறிது நேரத்தில் உறங்கியும் போனான். அவளது குரல் அவனுக்கு மருந்தாகியது.

அவனுக்கு மருந்தாய் இருப்பவள் அங்கு காயம் பட்டு துடித்துக் கொண்டிருந்தாள்.

அவளால் வசீ கொடுத்த காயத்தின் வலியையே தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதில் நண்பனாக, ரத்த சொந்தமாக நினைத்து பழகிய பாலாவின் எண்ணத்தை ஆதர்ஷினியால் ஜீரணிக்கவே முடியவில்லை.

என்னதான் பாலாவிற்கான பதிலை திருப்பிக் கொடுத்திருந்தாலும், அவளின் மனம் ஆறவேயில்லை.

இப்படியொன்றை பாலாவிடம் அவள் எதிர்பார்க்கவே இல்லை.

‘மென் இஸ் அ மென்.’ திரும்பத்திரும்ப அவளுள் ஓடிக்கொண்டே இருந்தது.

வசீயின் மறுப்பினை ஏற்க முடியாது கடற்கரையில் தனக்குள் உழன்று தனித்து அமர்ந்திருந்த ஆதர்ஷினி “பாப்பா” என்கிற விளிப்பில் திரும்பி பார்த்திட பாலா நின்றிருந்தான்.

பாலாவை கண்டதும் தன்னை இயல்பாகக் காட்டிக்கொண்டாள்.

“நீயென்ன இங்கு?”

“அதை நான் கேட்கணும்” என்ற பாலா, “நம்ம உப்பளத்திற்கு இதுதான் வழி” என பாதையை காண்பித்தான்.

“ஹோ…” என்ற ஆதர்ஷினி, “சும்மா உட்கார்ந்திருந்துட்டு போகலாம் வந்தேன்” என்றவள் எழுந்துகொண்டாள்.

‘இனி இங்கு தனியா இருக்க முடியாது.’

“நான் கிளம்புறேன்” என்று ஆதர்ஷினி விடைபெற, “உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே பாப்பா?” என்று நிறுத்தியிருந்தான் பாலா.

“என்ன… என்ன பேசணும்?”

“நான் சுத்தி வளைக்கல பாப்பா. நேரடியா விஷயத்துக்கே வரேன்” என்றவன், “நான் உன்னை விரும்புறேன்” என்றிட, வசீ சொல்லியபோது கூட ஏற்படாத அதிர்வு ஆதர்ஷினியிடம். அப்பட்டமான அதிர்வில் இரண்டடி பின் நகர்ந்திருந்தாள்.

இத்தனை நாட்கள் அவன் பாப்பா என்று அழைத்தது தங்கையாக நினைத்து என்று அவள் எண்ணியிருக்க, அவன் அழைத்ததன் பொருளே வேறு என்று அக்கணம் உணர்ந்து, தான் வைத்த பாசம் பொய்யாகிப்போனதில் மனதோடு குமைந்தாள்.

பாலா காதலை சொல்லும்போது, தன்னுடையது ரத்த சொந்தமாக நினைத்த உறவென்று சொல்லி, தான் அவன்மீது கொண்ட பாசத்தை கொச்சைப்படுத்த விரும்பாதவள்,

அவனிடம் எவ்வித விளக்கமும் கேட்கவில்லை.

“எனக்கு அப்படியொரு எண்ணம் இல்லை பாலா” என்று தன்மையாகவே தன்னுடைய மறுப்பை தெரிவித்தாள்.

“ஏன் பாப்பா… உன்னை என் மனசில் எங்கு வச்சிருக்கேன் தெரியுமா?” என்றவன், “நான் சொல்லும்போது நீ மறுப்பன்னு எதிர்பார்க்கல. உனக்கும் என்னை பிடிக்கும் தானே பாப்பா” என்று ஒன்றும் அறியாதவனாக தன்னுடைய நடிப்பைத் தொடர்ந்தான்.

முத்துச்சாமியை அவன் ஆட்டி வைக்க வேண்டுமென்றால், ஆதர்ஷினி அவனின் கைப்பாவையாக வேண்டும். அதற்காக பொறுமையாக அவளிடம் வேண்டி நின்றான்.

உள்ளுக்குள் எரிமலையாய் கனன்று கொண்டிருப்பவனிடம், வெளியில் அத்தனை கனிவு.

“முதல்ல பாப்பான்னு சொல்றதை நிறுத்து” என்றவள் முகத்தில் வெளிப்படையாக எரிச்சலை காண்பித்தாள்.

“ஏன் சொல்லக்கூடாது. உன்னை மனசில் நினைக்கத் தொடங்கிய நாளா அப்படித்தான் கூப்பிடுறேன். இப்போ என்ன?” புரியாதவனாக வினவினான்.

“நான் அர்த்தம் எடுத்துகிட்ட பாப்பாவே வேற…” என்றவள், இதற்குமேல் அவனிடம் பேச ஒன்றுமில்லையென திரும்பி நடக்க, ஆதர்ஷினியின் கையை பிடித்துவிட்டான் பாலா.

************

முன்பென்றால் எப்படியோ… ஆனால், இப்போது பாலாவின் பிடி அருவருப்பாக இருந்தது ஆதர்ஷினிக்கு.

“விடு பாலா” என்று கையை வலுக்கட்டாயமாக அவனிடமிருந்து பிரித்தெடுத்து உதறினாள்.

“உன்னை எப்பவும் அப்படி நினைக்க முடியாது பாலா. அப்படி நினைத்தால் உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமப் போய்டும்” என்றாள். ஆதர்ஷினியின் குரலில் அடக்கப்பட்ட கோபம். இருப்பினும் நிதானமாகவே உரைத்தாள்.

“நீயும் நானும் கூட பிறந்தவங்க இல்லையே பாப்பா. எப்படி பார்த்தாலும் நமக்குள்ள நீ நினைக்கும் உறவுமுறை வராது.” பாலாவின் விளக்கம் அவனை முற்றிலும் இறக்கியது ஆதர்ஷினியின் மனதில்.

விவரம் அறியத் தொடங்கிய வயது முதல் ஒன்றாக இருக்கின்றனர். வசீ முத்துச்சாமியுடன் இணைந்து, வீடென்று தங்க ஆரம்பித்த பின்னர் தான் பாலா முத்துச்சாமியின் வீட்டை விட்டு வசீயுடன் சென்றது. அதுவரை ஆதர்ஷினியின் வீட்டின் பின்புறம் இருக்கும் சிறு வீட்டில் தான் தங்கியிருந்தான். என்னதான் அவன் சொல்வது போல் உறவுமுறை இல்லை என்றாலும், ஒன்றாக இருந்ததாலோ, வளர்ந்ததாலோ, வெளியில் சொல்லிக் கொள்ளாவிட்டாலும், ஆதர்ஷினியின் மனதில் பாலா சகோதரனாகத்தான் நின்றான்.

இன்று அதை கொச்சைப்படுத்தும் பாலாவின் முகம் காணவே அருவருத்துப்போனாள்.

“உனக்கெப்படியோ… உன்னை பொண்டாட்டியாக நினைக்கத் தொடங்கியதால் தான் உன்னை பாப்பா அப்படின்னே கூப்பிட ஆரம்பிச்சேன். நீ முகம் திருப்பினாலும் உன் பின்னே சுற்றினேன்” என்றவனின் கன்னத்தில் பளார் என்று ஒன்று கொடுத்திருந்தாள்.

“இனி ஒருவார்த்தை பேசினாலும் உன்னை கொன்னுடுவேன்” என்று விரல் நீட்டி எச்சரித்தவள்,

“உயிரை உயிரா மதிக்காம கொலை செய்யும் உனக்கெல்லாம், மனசு, அன்போட மதிப்பெல்லாம் எங்கு தெரியப்போவுது” எனக்கூறி முகம் சுளித்தவளாக, பாலா கூப்பிட கூப்பிட திரும்பியும் பாராது சென்றிருந்தாள்.

‘போடி போ… உன் மேல் கொஞ்சமே கொஞ்சம் அன்பு இருக்கிறதால்தான், உன்னை கஷ்டப்படுத்த வேணான்னு காதலுன்னு ஆரம்பிச்சேன். இந்த காதல் வழி ஒத்துவரலன்னா வேறவழி. உன்னை வச்சுதான் உன் அப்பன மடக்கணும்.’ குரூரமாக சிந்தித்தான்.

வீட்டிற்கு எப்படி வந்து சேர்ந்தாளென்றே தெரியவில்லை. பாலாவின் செயலை நினைத்து நினைத்து மருகினாள்.

‘எப்படி அவனால் முடிந்தது. இதனை வெளியில் சொல்லியும் யாரிடமும் ஆறுதல் தேடிட முடியாது.’

எளிதாக பெண்ணவளை குற்றம் கூறிவிடுவார்கள். நீ பேசியதால் தானே, பழகியதால் தானே! எத்தனை எளிதாக பெண்ணை குறை சொல்லிவிடும் இந்த சமூகம். நினைத்து நினைத்து குன்றினாள்.

தன்மீது தவறே இல்லையெனும் போதும்… இத்தனை வருடங்கள் அவனின் எண்ணம் அறியாது பழகிய தன் மடமையை எண்ணி எண்ணி தன்னையே நிந்தித்தாள்.

ஆதர்ஷினிக்கு ஓரளவிற்கு பாலாவை பற்றி அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு மூன்று தினங்களுக்கு முன்பு தெரியவந்தது.

இத்தொழிலில் அவர்களுக்குள் ஏதோ பழிவாங்கல் என்று நினைத்தாலும், பாலாவை அவளால் தவறாக எண்ண முடியவில்லை.

ஆனால் இன்று அவன் பேசியது முற்றிலும் அவளிடத்தில் அவனை தரம் தாழ்த்தியது.

அழக்கூடாது என்று திடமாக முடிவெடுத்தவள், நிமிர்ந்து அமர்ந்தாள்.

அந்த மாதத்திற்கு அனுப்ப வேண்டிய கட்டுரையை எழுத ஆரம்பித்தாள். ‘உண்மை மனிதன்’ என்கிற தலைப்பில்.

அவள் எழுதிய கட்டுரையின் சாராம்சம் இதுதான்…

‘மனிதன் சுயநலவாதி. உண்மை என்கிற முகம் மனிதனின் தேவைகள், அவனுக்கு சாதகமான விடயங்கள் எதிர்பதமாக நடக்குமாயின் தன்னை அறியாது வெளிப்படும். அவனின் சிரித்த முகத்திற்கு உள்ளேயும் ஒரு முகம் உண்டு. அதனை அத்தனை எளிதில் காட்டிவிடுவதில்லை. காட்டும் நேரங்களில் அவன்(ள்) மனிதனாகவே இருப்பதில்லை. மனிதம் என்ற சொல்லுக்கான உண்மை பொருள் விளங்காத நாமே மனிதர்கள். நிஜம் தொலைத்து நிழல் முகம் தேடும் உண்மை தன்மையற்ற மிருக இனம்.’

அப்போதே சம்பந்தருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியும் வைத்தாள்.

காலை வழக்கமான நேரத்திற்கு எழுந்து ரேடியோ ஸ்டேஷனிற்கு சென்றவளுக்கு எல்லாமே காலியாக இருந்த உணர்வு.

நிகழ்ச்சியை எப்படி துவங்குவது… என்ன சொல்லி பேசுவது என்று எதுவும் தெரியாது அனைத்தும் மறந்த நிலையில் இருந்தாள்.

“தர்ஷி… ஆன் டைம்” என்ற குரலில் ஹெட் செட்டினை மாட்டியவள், மைக் ஆன் செய்து பேசினாள்.

அவள் குரல் முற்றிலும் உற்சாகம் தொலைத்திருந்து.

தொண்டையை சரி செய்து, உதடு குவித்து காற்றினை வெளியேற்றியவள், கண்களை மூடி திறந்து… கட்டை விரலை உயர்த்தி காண்பித்தாள். அவளுடன் ஆன் ஏரில் இருந்த நபரிடம்.

“ஹாய்…
ஹலோ…
திஸ் இஸ் தர்ஷி.
நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது புத்தம் புது காலை.

ஒவ்வொரு விடியலும் ஒன்று போல் இருக்காது. பலவற்றை நமக்கு வைத்து காத்திருக்கும். ஆச்சரியம், சோகம், துக்கம், சந்தோஷம், மகிழ்ச்சி, அதிர்ச்சி என. இவையனைத்தையும் நாம் கடந்து வருவது தான் வாழ்க்கை. முடிந்தளவு சந்தோஷமோ, துக்கமோ, எதிர்பாரா நிகழ்வோ… எதுவாக இருந்தாலும், கடந்து வர முயற்சிப்போம். இதுவும் எதுவும் கடந்து போவதுதானே வாழ்க்கை” என்று பேசியவள்… அன்று நிகழ்ச்சியில் தனக்காகவே அனைத்தும் பேசினாள்.

தன் மனதை நடந்ததிலிருந்து திசைதிருப்பும் நோக்கிலேயே பேசினாள்.

அன்று அவள் ஒலிக்கச் செய்த பாடல்கள் கூட, வாழ்க்கையின் எதார்த்தத்தை, அது என்ன கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ரீதியிலேயே இருந்தன.

கேட்டுக்கொண்டிருந்த வசீக்கு…

‘அவளுள் ஏதோ சஞ்சலம் போல’ என்று நினைத்துக்கொண்டான்.

நிகழ்ச்சி முடிய, அலைபேசியை மின் இணைப்பில் போட்டவன் குளிக்கச் சென்றான்.

அதுவரையிலுமே மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டிருந்த பாலா அலைபேசி வழி கேட்ட தகவலில் அடித்து பிடித்து ஓடி வந்தான்.

வாசு தான் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் கையிலிருந்த ரிமோட்டை வேகமாக அவனிடமிருந்து பறித்த பாலா… செய்தி அலைவரிசை ஒன்றை வைத்தான்.

அதில் ஓடும் செய்தியை கண்ட வாசு, அச்சத்தில் பாலாவின் கவனத்தை ஈர்க்காது அறைக்குள் சென்று மறைந்தான்.

“பிரபல தொழிலதிபர் குற்றவேல் மர்மமான முறையில் அவரது விருந்தினர் மாளிகையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் முன்னால் கட்சியின் தலைவர் மாசிலாமணியின் நெருங்கிய நண்பர். இருவரது அடத்தடுத்த கொலைக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று காவல்துறை சந்தேகப்படுகிறது” என்ற செய்தி ஒளிர… “வசீ” என்று கத்தியிருந்தான் பாலா.

குளித்து முடித்து… ஆடை மாற்றிக்கொண்டிருந்த வசீ, பாலாவின் கத்தலுக்கான காரணம் தெரிந்த போதும்… மெல்ல தயாராகி வெளியில் வந்தான்.

“என்னாச்சு பாலா?” என ஒன்றும் அறியாதவன் போல் கேட்ட வசீ, “ரொம்ப பதட்டத்தில் இருக்க மாதிரி தெரியுது” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன். கோச்சில் நன்கு சாய்ந்து அமர்ந்து கால் மேல் காலிட்டான்.

“நியூஸ் பாருடா” என்று தொலைக்காட்சியை வசீயிடம் காண்பித்த பாலா… “எப்படின்னு தெரியல” என்றவனாக இருக்கையில் வசீயின் அருகில் அமர பாலாவின் அலைபேசி ஒலித்தது.

இறந்துபோன குற்றவேலை வைத்து தான் முத்துச்சாமியை முடிக்க நினைத்திருந்தான் பாலா. குற்றவேல் பாலாவிற்கு முத்துச்சாமியை எதிர்க்க மறைமுகமாக உதவி கொண்டிருந்தார். அவர் இறந்தது முத்துச்சாமியை விட பாலாவுக்கு பெரும் அதிர்ச்சி.

முத்துச்சாமிதான் என்று அசட்டையாக அலைபேசியை எடுத்து திரையை பார்த்தவன்,

‘இவன் எதுக்கு கூப்பிடுறான் தெரியலையே’ என்ற யோசனையோடு அழைப்பினை ஏற்க… சில நொடிகளில் குழம்பிய முகத்தோடு வசீயை ஏறிட்டான்.

“என்ன பாலா?”

“ரெண்டு பொண்ணுங்களை தூக்கியிருந்தோம். ரூம், வெளிக்கதவு எல்லாம் பூட்டியது பூட்டுனது மாதிரியே இருக்காம். ஆனால் அவளுங்களை காணோமாம்” என்ற பாலா நெற்றி பொட்டை விரலால் அழுத்திக்கொண்டு கண் மூடினான்.

“நடக்கிறது எதுவுமே சரியில்லை” என்றான் பாலா.

“பொண்ணுங்க… இதுக்கும் எனக்கும் ஒத்து வராது பாலா. இதில் உனக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது” என்ற வசீ வாசுவை அழைத்துக்கொண்டு வெளியேறினான்.

செல்லும் வசீயின் முதுகையே பாலா சில கணங்கள் வெறித்து பார்த்தான்.

“என்னடா வசீயையே பார்த்திட்டு இருக்க?” குமார் கேட்டிட,

“நைட் பால் குடித்த பிறகு என்னாச்சுன்னு புரியல” என்றான் பாலா.

“எனக்கும் மருந்து போட்ட மாதிரி முறுக்கேறிடுச்சுடா” என்று குமார் சொல்லிய பின்னர் தான், பாலாவிற்கு பொறிதட்டியது.

“வசீ மீது ஒரு கண் இருக்கட்டும்” என்ற பாலா, முத்துச்சாமியின் இல்லம் சென்றான்.

முந்தைய நாள் பாலா ஏன் தன்னிடம் ஆத்திரமாக பேசினான் என்று முத்துச்சாமியும் கேட்கவில்லை, ஏனென்று பாலாவும் விளக்கம் கொடுக்கவில்லை.

அதைவிட நடந்த நிகழ்வு அவர்களை பெரிதும் தாக்கியிருந்தது.

“வசீ வரலையா?”

“எனக்கு முன்னமே வந்தானே!” என்ற பாலாவின் பார்வையெல்லாம், அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்த ஆதர்ஷினியின் மீதே.

ஆதர்ஷினி தலையை அவர்கள் பக்கம் சிறிதும் திருப்பாது அப்பகுதியை கடந்து மறைந்தாள்.

“ஏன் இப்படி நடக்குதுன்னு ஒண்ணுமே புரியலையே பாலா, உனக்கு ஏதும் தோணுதா?”

கேட்ட முத்துச்சாமியிடம் இல்லையென்று கை விரித்தான் பாலா.

இருவருமே அடுத்து யாரோ என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர்.

அப்போது முத்துச்சாமியிடம் வந்த மகா,

“மாப்பிள்ளை வீட்டிலிருந்து எப்போ வர்றாங்கா?” என்று கையை அசைத்து வினவினார்.

“சாயங்காலம் வரேன்னு சொல்லியிருக்காங்கா” என்றவருக்கு, மகளின் திருமணத்தை காரணம் வைத்து, அனைவரையும் ஒன்று சேர்த்து சீக்கிரம் பேசவேண்டும் என்று தோன்றியது.

சில தினங்களாக நடப்பது எதுவும், அவருக்கு சரியாகப்படவில்லை. இத்தனை நாளாக, தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக சரிவதைப்போல் இருந்தது அவருக்கு.

“சீக்கிரம் எதாவது செய்ய வேண்டும் பாலா” என்ற முத்துச்சாமி, “இந்த சம்பிரதாயமெல்லாம் எதுவும் வேண்டாம் மகா. பையன் வீட்டில் கோவிலுக்கு வரச்சொல்றேன். நீயும், நானும் மட்டும் போய் பேசுவோம். சரிவருதுன்னா அங்கயே தேதி குறிச்சிட்டு வந்துடுவோம். தர்ஷி தான் பையனை போட்டோவில் பார்த்துட்டாளே! வேணுன்னா ரெண்டு பேரும் தனியா மீட் பண்ணி பேசிக்கட்டும்” என்றார்.

மகாவுக்கும் ஆதர்ஷினி இருக்கும் நிலையில் எப்போது இந்த திருமணத்தை வேண்டாமென்று சொல்லுவாளோ என்கிற பயம் உள்ளூர இருந்து கொண்டு இருப்பதால், இப்போதைக்கு அவள் பையனை பார்த்து பேசாமல் இருப்பதே நல்லது என நினைத்து முத்துச்சாமி சொல்லியதற்கு உடனே சரியென்றார்.

இவர்களின் பேச்சு வார்த்தையை கேட்டுக்கொண்டிருந்த பாலாவிற்கு கை முஷ்டி இறுகியது.

‘திருமணத்திற்குள் ஏதும் செய்ய வேண்டும். எல்லோரும் ஒன்று சேரும் நாளில் முத்துச்சாமி இடத்தில் தான் நிற்க வேண்டும்’ என வஞ்சகமாக நினைத்த பாலாவுக்கு, முத்துச்சாமிக்கும் மேல் ஒருவன் இருக்கிறான் என்பதை தவிர்த்து, அந்த தொழிலில் அவர்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் அனைவரையும் தெரியும்.

அதனால் முத்துச்சாமியே இறந்து போனாலும், அவரிடத்தில் இருந்து அனைவரையும் தன்னால் கட்டுப்படுத்திட முடியுமென்று உறுதியாக நம்பிய பாலா… மாலை கோவிலுக்கு கிளம்பிய முத்துச்சாமியின் காரில் பிரேக்கின் செயல்பாட்டை முறித்திருந்தான்.

அத்தோடு கார் எதிலாவது மோதியதும் தீ பற்றிக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்திருந்தான்.

error: Content is protected !!
Scroll to Top