நேச நெஞ்சங்கள் 20

உயிர் உறை 20

பிழை 13

இரு நாட்களுக்குப் பின்னர் இரு குடும்பத்தினர் சந்திப்பும் கோவிலில் உறுதியானது.

நிர்மல் வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டதாக தகவல் வர, முத்துச்சாமி மகாவை அழைத்துக்கொண்டு கிளம்பினார்.

வெளியில் வந்தவர், செல்லும் விஷயத்திற்கு முரட்டுத் தோற்றம் கொண்ட தன்னுடைய ஆட்கள் வேண்டாமென்று மறுத்து தானே ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தார்.

அவர் எத்தனை முயன்றும் காரினை ஸ்டார்ட் செய்திட முடியவில்லை.

சில நிமிடங்கள் பார்த்தவர், பாலாவுடன் பேசியபடி நின்றிருந்த வசீயை அழைத்து, அன்று ஆதர்ஷினிக்கு வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை என்றதும் அவன் உதவியது நினைவு வந்தவராக என்னவென்று பார்க்கக் கூறினார்.

எதையோ ஆராய்ந்தவனாக போக்குக்காட்டியவன், “வொர்க்ஷாப் தான் கொண்டு போகணும். நீங்க வேற காரில் போங்க” என்றான்.

முத்துச்சாமியும் நேரத்தைப் பார்த்தவர் மற்றொரு வாகனத்தில் சென்றுவிட்டார்.

முத்துச்சாமி வெளியேறியதும், வசீயின் முன் கோபமாக வந்து நின்ற பாலா…

“இது உனக்கு தேவையில்லாதது வசீ. அவரை முடிக்கத்தானே நீ வந்திருக்க? அதை  யார் செய்தா என்ன? எதுக்கு இந்த காரில் போகமுடியாது சொல்லி தடுத்த?” என்று எகிறினான்.

“நான் அவரை கொலை செய்யத்தான் வந்திருக்கேன்னு உன்கிட்ட எப்போவாவது சொல்லியிருக்கேனா?” என பாலாவுக்கு எதிராக மிக மிக பொறுமையாகக் கேட்ட வசீ, பாலவிடமிருந்து நகர…

“இந்த கொலையெல்லாம் நீதான் பண்றன்னு எனக்குத் தெரியும்” என்றான்.

“வாவ்… சூப்பர். கண்டுபிடிச்சிட்டியா? மாசிலாமணியை போட்டதுமே கண்டுபிடிச்சிடுவன்னு எதிர்பார்த்தேன். இட்ஸ் டூ லேட். பட், நாட் பேட்” என்ற வசீயிடம் அத்தனை நக்கல்.

“என்ன வசீ உன் பார்வையிலே ஒரு திமிர் தெரியுதே?”

“கூடவே பொறந்தது…” என்ற வசீயின் புருவ தூக்கலில் பாலாவே ஒரு நிமிடம் தன் வசம் இழந்து வசீயின் தோற்றத்தை ரசித்தான்.

“எப்படி கண்டுபிடிச்சன்னு கேட்கமாட்டேன்… உனக்கு என்னைத் தெரியப்படுத்தியதே நான்தான். நானா நினைக்காம உன்னால் என் நிழலைக்கூட நெருங்கிட முடியாது. எப்படின்னு பார்க்குறியா?” என்ற வசீ…

“நீயிருப்பது தெரிந்து தான் நான் பேசினேன்” என்று அந்நிகழ்வை பாலாவிற்கு வசீ நினைவூட்டினான்.

குற்றவேல் இறந்தது பற்றி பாலா முத்துச்சாமியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது வசீ தாமதமாகத்தான் தங்களது இடத்திற்கு வந்தான்.

அங்கிருந்த பெண்கள் எப்படி தப்பிச்சென்றிருக்க முடியும் என்கிற கேள்வி அனைவருக்கும் தோன்றினாலும், அதைவிட முக்கியமானது… நடந்துகொண்டிருக்கும் கொலைகளை தடுக்க வேண்டும். அல்லது செய்வது யாரென்று கண்டுபிடிக்க வேண்டும்.

அவ்விடமே ஆழ்ந்த அமைதியில் இருந்தது.

வசீக்கு பாலாவை தூண்டிவிட வேண்டும். அவசரத்தில் பாலா எதாவது செய்தால்தான், முத்துச்சாமியை வசீ இன்னும் நெருங்க முடியும்.

அதற்காகவே வராத அழைப்பு வந்ததாக, அனைவரையும் நோட்டம் விட்டவனாக வேண்டுமென்றே பதுங்கி பதுங்கி தோட்டத்து பக்கம் சென்றான் வசீ.

ஏற்கனவே வசீயின் மீது பாலாவுக்கு சந்தேகம் இருந்ததால்… வாசுவுடன் சென்றவன் திரும்பி வரும்போது தனியாக வந்திருப்பதே எதுவோ சரியில்லையென்று மனதில் பட, இப்போதும் மறைந்து பின் செல்லும் வசீ அப்படி யாரிடம் என்ன பேசப்போகிறான் என்பதை தெரிந்துகொள்வதற்காக பின்னாலே சென்றான்.

தான் பேசினால் கேட்கும் தூரத்திற்கு தனக்கு பின்னால் பாலா வந்து நின்றதும்… எதிர்பக்கம் ஆளே இல்லாதபோதும், இருப்பதைப்போல் பேசினான்.

“முடிச்சிட்டேன்…

ஒவ்வொருத்தனா முடிச்சிட்டு சொல்றேன்.

முத்துச்சாமியை போட்டதும் வந்த வேலை முடிஞ்சிடும்.”

பேசி முடித்து அலைபேசியை பையில் போட்டவனாக அருகிலிருந்த செடியின் இலையை கிள்ளியபடி எதிர்த்திசையில் சென்ற வசீயின் முகத்தில் கள்ளப்புன்னகை.

பாலாவிற்கு வசீ பேசியது அதிர்ச்சி என்றால், ‘வசீ யார்?’ என்ற கேள்வி எழுந்தது. கூடவே வசீ எதற்கு இதெல்லாம் செய்ய வேண்டும் என்கிற கேள்வியும் மனதில் ஓட, ஆகமொத்தம் வசீக்கும் தன் எண்ணம் தான், தன்னைப்போல் அவனின் முனைப்பு முத்துச்சாமியை அழிப்பது. அதற்காகவே வசீயைப்பற்றி தெரிந்ததுபோல் பாலா காட்டிக்கொள்ளவில்லை.

வசீக்கும் தன் எண்ணம் என்று நினைத்து அமைதியாக இருந்த பாலா, வசீயே தன்னுடைய திட்டத்தை முறியடித்து… முத்துச்சாமி செல்லும் காரினை மாற்றியது கோபத்தை உண்டாக்க, வசீயை மடக்குவதற்காக அவனைப்பற்றி தெரிந்ததை சொல்ல… பாலாதான் வசீயின் பேச்சில் அதிர்ந்தான்.

“எனக்கும் மறைஞ்சு விளையாடி போர் அடிக்குது. நேருக்கு நேர் நின்னோமா, ஒரே புல்லட்… நெத்தியில இறக்கினோமான்னு போயிட்டே இருக்கணும். மொத்தமா யாரெல்லாம் இருக்கான்னு தெரிஞ்சிக்கத்தான் ஒளிந்து மறைந்து போட வேண்டியதாப்போச்சு” என்ற வசீ, அங்கிருந்த மேடையில் கால் மேல் காலிட்டு அமர்ந்தான்.

“யார் நீ?”

“உன்னோட டார்கெட் தான் என்னோடதும்.”

“புரியல…”

வசீயிடம் வழமையான மர்மப்புன்னகை.

“உனக்கு சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை” என்று வசீ சொல்ல…

“உன்னைப்பற்றி முத்துச்சாமியிடம் நான் சொல்லிட்டா?” என்று கேட்ட பாலாவின் கேள்விக்கு வசீயிடம் அத்தனை சிரிப்பு.

“அவ்வளவு மக்கா நீ?” என்ற வசீ,

“என்னோட முதல் டார்கெட்டே நீதான்” என்றிட, பாலாவின் முகம் வெளிறியது.

“என்ன சொல்ற நீ?”

“பாப்பா உனக்கு நோ சொல்லிட்டாள் போலிருக்கே” என்ற வசீ, “சொல்லப்போனால் என்னுடைய ஸ்கெட்சில் நீயில்லவே இல்லை. நீயா மாட்டிக்கிட்ட” என்றான்.

பாலா புரியாது அப்படியே நின்றிருக்க,

“ஒருத்தங்கள அடிபணிய வைத்திட என்ன வேணாலும் செய்வீங்களாடா?” என்று கர்ஜித்த வசீயின் கண்முன் விசாலத்தின் காப்பகத்தில் மயங்கிய நிலையில் கண்ட பிஞ்சுக்களின் முகம் தோன்றி மனதை கனக்க வைத்து.

“எண்ணி இருபது நாளில் உங்களை மொத்தமா முடிச்சிக்காட்டுறேன்” என்றவனாக அங்கிருந்து நகர்ந்தான்.

ஆதர்ஷினி எப்படியும் தன்னுடைய காதல் என்ற வலையில் சிக்கிடமாட்டாள் என்பது பாலாவிற்கு திண்ணமாகிட… அவளை தன்வழிக்கு கொண்டுவர திட்டம் தீட்டினான்.

அதற்கு அவன் பயன் படுத்திக்கொண்டது விசாலத்தின் காப்பகத்தில் இருக்கும் குழந்தைகள்.

நினைக்க நினைக்க வசீக்கு இப்போதே பாலாவை கொன்றுவிடும் ஆத்திரம். ஆனால் அவனுக்கு நடக்கவிருக்கும் சந்திப்பு கூட்டம் முக்கியம். அதற்காகவே பாலா விடயத்தில் அமைதியாக இருக்கின்றான்.

வசீ அங்கிருந்து சென்றிட…

பாலா ஆவேசமாக ஆதர்ஷினி மட்டும் தனித்து இருப்பதால் வீட்டிற்குள் நுழைந்தான்.

ஆதர்ஷினி, பாலா அறைக்குள் கதவினை திறந்து கொண்டு அதிரடியாக உள் நுழைந்ததில் மருண்டவளாக எழுந்து நின்றாள்.

“என்னடி யாருக்கிட்டயும் சொல்லமாட்டேன்னு சொல்லிட்டு… அந்த வசீக்கிட்ட எல்லாத்தையும் சொல்லியிருக்க? அவனுக்கும் உனக்கும் என்னடி சம்மந்தம்?” என்று ஆதர்ஷினியின் முடியை கொத்தாக பிடித்தவனாக வினவினான்.

“நான் சொல்லல!”

“நீ சொல்லாம எப்படி? இது மட்டுந்தானா, இல்லை…”

“நான் எதுவும் சொல்லல. நம்புனா நம்பு, இல்லைன்னா போ” என்றவள் அவனின் கையை தள்ளியவளாக நகர்ந்து நின்றாள்.

“உன்னை வைத்து நான் போட்டு வைத்திருக்கும் திட்டத்தில் கொஞ்சமா பிசகினாலும், ஒரு குழந்தையையும் விட்டு வைக்க மாட்டேன்” என்று எச்சரித்தவனாக பாலா சென்றிட, அப்படியே தரையில் மடங்கிஅமர்ந்து மௌனமாக அழுதாள்.

ஒரு புறம் காதல் தந்த வலி. மற்றொரு புறம் இவன்(பாலா) படுத்தும் பாடு.

பாலாவால் தன்னுடைய காதலை காப்பாற்றிக் கொள்வதற்காகக் கூட எந்தவொரு முயற்சியும் செய்திட முடியாத நிலையில் தவித்து நிற்கிறாள் ஆதர்ஷினி.

******

நிர்மலின் வீட்டார் முத்துச்சாமிக்கு முன்பே கோவிலிற்கு வந்து காத்திருந்தனர்.

நிர்மலின் தந்தை ஒரு காலத்தில் முத்துச்சாமியுடன் இருந்தவர் தான். குடும்பதிற்காக இந்த பாவத்தொழிலிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.

“வாடா பார்த்து எவ்வளவு நாளாச்சு!” நிர்மலின் தந்தை சாகர், நண்பர் என்ற முறையிலேயே முத்துவை வரவேற்றார்.

அவரவர் நலன் அறிந்து, பொதுவான பேச்சிற்கு இடையே முத்து கல்யாண விடயம் பேசினார்.

சாகர் எவ்வித மேல்பூச்சுமின்றி திருமணத்திற்கு சம்மதம் வழங்கினார்.

“நிர்மலிடம் ஒருவார்த்தை…” முத்து இழுக்க…

அதுவரை பார்வையாளனாக மட்டுமே இருந்த நிர்மல்,

“எனக்கு சம்மதம் அங்கிள்” என்று முத்துவை பார்த்துக் கூறினான்.

மகாவிற்கு நிர்மலின் நேரடி விருப்பம் தெரிந்ததில் அத்தனை மகிழ்ச்சி.

“ஆனால்…” என்று ஆரம்பித்த நிர்மலின் அன்னை பாக்கியம், “பையனுக்கு குரு திசை பதினைந்து நாளில் முடியப்போகுதுன்னு, எங்க ஜோசியர் சொன்னார். அதனால் கல்யாணத்தை இன்னையிலிருந்து பதினாலாவது நாள் வைத்துக்கலாம். அன்னைக்கு நாளும் நல்லாயிருக்கு. தாலிகட்டுவதற்கு முன் தாம்பூலம் மாத்திக்கலாம்” என்று பேசிட…

‘இவ்வளவு விரைவாகவா’ என்று முத்து யோசித்தாலும், இருக்கும் சூழலில் தன் ஆட்களை விரைந்து சந்தித்தால் தான் தொழிலில் நிலை சீராகும் என்று கணக்கிட்டவர், மகாவின் முகம் பார்த்தார்.

மகளின் காதல் விடயத்தில் பயந்து இருப்பவருக்கு, எப்படா மணம் முடியும் என்ற எண்ணம் தான். அதனால் உடனே  ஒப்புக்கொண்டார்.

“அப்புறம் என்ன ரெண்டு பக்கமுமே ஆட்கள் அதிகம்… ஆளுக்கொரு வேலையா செய்தால் திருமணத்தை பெருசாவே பண்ணிடலாம்” என்று சாகர் சொல்ல, மேலும் சிறிது நேரம் யார் யாருக்கு என்னென்ன வேலையென்று பேசிவிட்டு நிறைந்த மனதுடன் வீட்டிற்கு புறப்பட்டனர்.

இவை யாவும் வசீகரனின் கணக்கு என்று அறியாமல், தன் கணக்கு சரியாக அமைய வேண்டுமென்று முத்துச்சாமி மனதில் நினைத்தார்.

வீட்டிற்கு வந்தவர் நொடியும் தாமதியாது, தனக்கு மேலிருக்கும் நபருக்கு அழைத்தார்.

முத்து விடயத்தை சொல்ல…

“என்ன முத்துச்சாமி ஒரு மீட்டிங்கை கூட உன்னால் ஒழுங்கா அரேன்ஞ் பண்ண முடியாதா?” என்று எதிர்பக்கம் காய்ந்தது.

“நானென்ன பண்ணட்டும். நடப்பது எதுவும் சரியாயில்லை. நான் ஒன்றை நினைத்து முடிப்பதற்கு முன், எதிரி அதை முடித்து விடுகிறான். இப்போதிருக்கும் ஒரே வழி எல்லாரும் ஒன்று சேர்ந்து இருப்பதை நேரடியாவே கை மாற்றிக் கொள்வதுதான்” என்ற முத்து, “எத்தனை நாட்களுக்கு தேக்கி வைத்திட முடியும்?” என்று கேட்டார்.

“அப்போ எதிராளியை உன்னால் கண்டுபிடிக்க முடியல, அப்படித்தானே?”

“ஏற்கனவே சொன்னனே! எப்படியும் நாம் ஒன்று சேரும் நாளில் அவன் மாட்டுவான்.”

“ம்ம்ம்ம்…” எதிர் முனையில் ஆழ்ந்த மௌனம்.

“உன் பொண்ணோட கல்யாணம் முடிந்ததும். அன்றைய இரவு வைத்துக்கொள்ளலாம்.”

சரியென்ற முத்துச்சாமி வேகவேகமாக தங்களுடன் தொழில் வைத்திருக்கும் அனைத்து பெரும் புள்ளிகளின் விவரத்தையும் ஒரு சிறு நோட்டில் எழுதினார்.

பாலாவிற்கு அழைப்பு விடுக்க முயன்றவர் வேண்டாமென்றவராக வசீக்கு அழைத்தார்.

பாலாவின் நடவடிக்கைகளில் முத்துவிற்கு சில நாட்களாக மாற்றம் தெரிய, இவ்விடயத்தை பற்றி அவனுடன் அவர் கலந்துகொள்ளவில்லை.

அத்தோடு பாலா சாமியின் இறப்பிற்கு சென்றவன் அடுத்தநாள் வரை அங்குதான் இருந்தான் என்பதும் அவருக்கு அவன் மேல் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

முத்துவிற்கு சாமி எதிராளி. அப்படியிருக்கையில் போனதும் வராது அவனக்கு இரண்டு நாட்கள் அங்கென்ன வேலை என்ற யோசனை ஒருபக்கம். அதனை தன்னிடம் மறைத்த கோபம் ஒருபக்கம் அவருக்கு.

வசீயை வீட்டிற்கு வரவழைத்தவர்,

ஒவ்வொருவரின் தகவல்கள் அடங்கிய பதிவேட்டை வசீயின் கையில் கொடுத்தார்.

“டேட் பிக்ஸ் பண்ணியாச்சு வசீ” என்றவர், இன்னையிலிருந்து பதினான்காவது நாள். காலை திருமணம், மாலை மீட்டிங். சொன்ன மாதிரி ஏற்பாடு பண்ணிடு” என்றவர், “நாள் குறைவா இருப்பதால் திருமண வேலையை நான் பார்த்தாக வேண்டிய சூழல். அதனால் தான் உன்னிடம்” என்றவர் ஏதோ சொல்ல தயங்கிட…

“என்னை நீங்க நம்பலாம்” என்று, அந்த நம்பலாமில் அதீத அழுத்தம் கொடுத்து கூறினான் வசீ.

“உன்னை ரொம்ப நம்புறேன் வசீ” என்றவர் அவனின் கரங்களை பற்றிக்கொண்டார்.

‘நம்பிக்கை…’ வசீயின் உதட்டின் ஓரம் நெலிந்தது.

நம்பிக்கை என்ற ஆயுதம் எத்தனை பலம் பொருந்தியது. அதனை முத்துவிடம் பெறுவதற்கு வசீக்கு இரண்டரை வருடங்கள் ஆகியிருக்கிறது.

இனி வசீயின்(….) ஆட்டம்.

****************

கடந்து சென்ற பனிரெண்டு நாட்களில் வசீயின் மூளையின் தீவிரமும் செயல்பாடுகளும் அதிகம்.

ஒவ்வொன்றிற்கும் அத்தனை நுணுக்கமாக யூகம் அமைத்திருந்தான். ஒருவரையும் விட்டுவிடக் கூடாது. கூண்டோடு தூக்க வேண்டும். அதற்காக அவன் பட்டப்பாடு, போட்ட உழைப்பு அனைத்திற்கும் பலன் கிடைக்க இன்னும் ஒரு நாளே!

இதில் அவனது காதலை எங்கிருந்து எப்படி காப்பாற்றிக்கொள்வான் என்று தெரியவில்லை.

பதிமூன்றாவது நாள் சூரியனின் உதயத்தோடு, வசீயின் வேட்கை வெம்மையோடு அழகாகவே புலர்ந்திருந்தது.

இடைப்பட்ட நாட்கள்…

வசீயுடனே இருந்தாலும், பாலா அவனிடம் ஒருவார்த்தை பேசவில்லை.

வாசு எங்கென்றே தெரியவில்லை. ஒருநாள் வசீயுடன் வெளியேறியவன், அதன் பின்னர் அங்கு வரவேயில்லை.

முத்துச்சாமி வாசுவைப்பற்றி வினவியதற்கு… வாசுவின் அம்மாவை காரணம் காட்டியிருந்தான் வசீ.

“அம்மாவை பார்த்துட்டே வரட்டும்” என்று முத்துச்சாமி முடித்துக்கொண்டார்.

வசீக்கு தெரியும் வாசு இனி சந்தோஷமான வாழ்க்கை ஒன்றை வாழ்வான் என்று. அனுப்பி வைத்தவனுக்கு தெரியாதா என்ன?

பாலாவிற்கு வசீயுடன் இருந்தால், அவனது திட்டங்கள் என்னவென்றாவது தெரிந்துகொள்ளலாம் என்கிற எண்ணம்.

வசீ மற்றவர்களின் எண்ணத்திற்கு அப்பாற்பட்டவன் என்பது அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.

வசீயிடமிருந்து அவனது துரும்பு அளவிற்கு கூட பாலாவிற்கு தகவல் கிட்டவில்லை.

பாலாவும் தனக்குள் திட்டமிட்டவனாக அன்றைய நாளின் முடிவிற்கு காத்திருக்கிறான்.

இங்கு யாருடைய திட்டம் வெல்லும் என்பதை முடிவு செய்வதுகூட வசீகரன் தான். அவனைத்தாண்டி சிறு பொருளும் அசைந்திடாது. அனைத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறான். பாலா உட்பட.

மாலை பெண் அழைப்பு முடிந்து இரு குடும்பம், உறவினர்கள் என அனைவரும் மண்டபத்தில் கூடிவிட்டனர்.

“தாலி கட்டுவதற்கு முன்பே பொண்ணு பையனை ஜோடியா மேடையில் நிற்க வைக்கும் பழக்கம் எங்க பக்கமில்லை” என்று பாக்கியா சொல்லியிருந்ததால், வரவேற்பு முன்தினம் இரவு ஏற்பாடு செய்யவில்லை. நிச்சயமும் காலை தாலி கட்டுவதற்கு முன்பு என்பதால், பெண் மற்றும் மாப்பிள்ளை அழைப்பு முடிந்ததும் அவரவர் அறைக்குள் அடைந்து கொண்டனர்.

அடுத்தநாள் திருமணம் முடிந்ததும், இரவு அதே மண்டபத்தில் தான் முத்துச்சாமியின் தொழில்முறை கூட்டம் ஏற்பாடு ஆகியிருந்ததால், முத்துச்சாமியின் ஆட்களும் அங்குதான் இருந்தனர்.

“உங்க ஆட்கள் இங்கெதுக்கு? மாப்பிள்ளை வீட்டில் தவறா எடுத்துக்கப்போறாங்க” என்று மகா கேட்டதற்கு, “எல்லாம் பாதுகாப்பிற்குத்தான்” என்று சமாளித்திருந்தார்.

“என்ன வசீ எல்லாம் ஓகே தானே?”

“எல்லாமே பக்கா… இப்போ இந்த நிமிஷம் கூட நீங்க ஆரம்பிக்கலாம்” என்ற வசீயை அதீத நம்பிக்கையுடன் ஏறிட்டார் முத்து.

அவரின் இத்தகைய நம்பிக்கையை ஒரு நொடியில் தகர்க்கப்போகிறோம் என்கிற கவலையோ குற்றவுணர்வோ வசீக்கு சிறிதும் இல்லை. மாறாக ஒரு நிறைவு அவனிடத்தில். ஆசுவாசம். நிம்மதி.

“பாலா நடவடிக்கையே சரியில்லையே வசீ?” முத்துச்சாமியிடம் வருத்தம்.

“இன்னைக்கு விளங்கிடும்.” வசீயின் அர்த்தம் அவருக்கு புரியவில்லை என்றபோதும், “அவனை என் பிள்ளையாய் பார்த்தேன்” என்றவாறு நகர்ந்தார்.

‘உங்களை கொல்லத் துடிப்பவன் தந்தையாக பார்க்கவில்லையே!’ என நினைத்த வசீக்கு, ‘உங்களைப் போன்றோருக்கெல்லாம், உங்கள் வழியில் தான் முடிவு’ என்று சொல்லிக்கொண்டான்.

பதினோரு மணியளவில், நெருங்கிய உறவினர்கள் தவிர்த்து மண்டபம் அமைதியாகக் காட்சியளித்தது.

பாலா தன்னை கண்காணித்துக் கொண்டிருப்பதை வசீயும் உணர்ந்தே இருந்தான்.

அவனின் திட்டம் என்னவென்று அறிந்த வசீ தடுக்கவெல்லாம் முயற்சிக்கவில்லை. மாறாக நடக்கட்டும் என்று காத்திருக்கிறான். நடந்தால் தான் அவனின் திட்டத்திற்கு வழி கிடைக்கும்.

மண்டபத்தின் ஆளரவமற்ற மாடிப்பகுதிக்கு வந்த வசீ, தான் வழக்கமாக அழைக்கும் எண்ணிற்கு அழைத்தான்.

“எப்போ கிளம்புற?”

“நான் தமிழ்நாடு சி.எம்’கிட்ட பேசிட்டேன். வாசுவிடம் நீ கொடுத்தனுப்பிய எல்லாம் காப்பி எடுத்து அனுப்பி வைத்துவிட்டேன். சரியான நேரத்திற்கு அங்கு இருப்போம்” என்றது எதிர்முனை.

“நீயே வரணுமா?”

“நான் தான் வரணும்.”

“அட்வென்ஞ்ர் அதிதுன்னு தனியா வராம, ஒழுங்கா கார்ட்ஸ் உடன் வந்து சேரு” என்றவனாக அலைபேசியை பையில் போட்டபடி திரும்ப ஆதர்ஷினி நின்றிருந்தாள்.

“தூங்கலையா நீ?”

அவளின் அழுத விழிகளே அவனுக்கு காரணம் சொல்லின. இருப்பினும் அப்பேச்சினை தவிர்த்தவனாக வேறொன்றை வினவினான்.

“எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்.” குரல் தழுதழுக்க கூறினாள்.

“நீ சொல்ல வேண்டியது உன் பேரெண்ட் கிட்ட.”

“அவங்ககிட்ட என்னால சொல்ல முடியாது” என்றவள், அவனின் மார்பில் சாய்ந்து கன்னம் பதித்து, ஒரு கையால் அவனின் இடைச்சுற்றி அணைத்து, மற்றொரு கையினை அவனது மற்றைய பக்க மார்பில் பதித்தவளாக…

“என்னால முடியல… முடியும் அப்படின்னு தோணல, மனசு முழுக்க நீதான் இருக்க. உன்னோட என் வாழ்க்கை நல்லாயிருக்காதுன்னு நான்தான் சொன்னேன். ஆனால், நீயில்லைன்னா என் வாழ்க்கையே இல்லைன்னு நல்லா புரியுது. உனக்கு அப்படி எதுவும் இல்லையா? அடிதடி சண்டைன்னு இருந்தாலும் பரவாயில்லை எனக்கு நீ வேணும். என் காதலால் உன்னை என்னால் மாற்ற முடியும். அப்படியே நீ மாறலன்னாலும் நான் உனக்காக என்னை மாத்திக்கிறேன். லவ் யூ… லவ் யூ  சோ மச். உன்னை தவிர்த்து இன்னொருத்தன் பக்கத்தில் போய் நிக்கணும் நினைத்தாலே உடம்பெல்லாம் கூசுது. நீயில்லாம முடியாதுடா” என்றவள் கண்ணீர் நிரம்பிய விழிகளோடு இறுதி வார்த்தைகளை முகம் உயர்த்தி அவனது விழிகளோடு கலந்து உரைத்திட… வசீ தன் கடமை உணர்ந்து இறுகி நின்றான்.

“என் அப்பாவை ஏத்துக்க முடியாத என்னால உன்னை ஒதுக்கி வைக்க முடியல…”

இப்படியே அவளை எங்காவது தூக்கிச் சென்றிட வேண்டுமென்று தான் தோன்றியது. ஆனால் அவனுக்காக காத்திருக்கும் வேலைகள் பல இருக்கின்றன. அதனை அவனால் மட்டுமே முடித்திட முடியும்.

வசீயின் அமைதி அவளை பயம் காட்டியது.

என்ன தான் முத்துச்சாமியிடம் அவள் விலகியே இருந்தாலும், அவரை மீறி நடக்கவிருக்கும் திருமணத்தை அவளால் நிறுத்த முடியாது.

அன்று ஏதோ வசீயின் மீதான, அவன் தன் காதலை நிராகரித்த மறுப்பில் திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டாள். ஆனால் இத்தனை விரைந்து நடக்குமென்று அவள் எதிர்பார்க்கவில்லை. அத்தோடு தனக்கு திருமண நாள் நெருங்கிய பின்னராவது வசீ தன்னைத்தேடி வருவானென்று அவள் எதிர்பார்த்திருக்க… மீண்டும் அவள் தான் அவனைத்தேடி வந்து ஏங்கி நிற்கின்றாள்.

வசீயின் இறுகிய நிலையே அவன் ஒன்றும் செய்யப்போவதில்லை என்பதை அவளுக்கு பறைசாற்றிட, இடுப்பில் மறைத்து சொருகி வைத்திருந்த தாலியை எடுத்து அவன் முன் நீட்டினாள்.

“இப்போவே என் கழுத்தில் கட்டு” என்றாள். இவ்வளவு நேரம் நீர் ததும்பி நின்ற கண்களில் ஒரு முடிவெடுத்துவிட்ட திடம். நான் சொல்வதை நீ செய்தே ஆக வேண்டுமென்கிற தீவிரம்.

“ஆதர்ஷினி என்ன பண்ற?” என்றவன், “தாலி கட்டுறது அவ்வளவு ஈஸி இல்லை” என்று பின்னால் நகர்ந்து சென்றான்.

“நான் உன்னை காதலிக்கிறேன்…” அவ்விடம் எங்கும் எதிரொலிக்க கத்தி சொல்லியிருந்தாள்.

கேட்கும் அவனின் தேகமெங்கும் சிலிர்த்து அடங்கியது. இறுகியவன் நொடியில் இளகி நின்றான். அவளுக்கு மறைத்தவனாக.

அவள் விடயத்தில் தானொன்று முடிவு செய்து நடத்திக்கொண்டிருக்க… ஆதர்ஷினி மொத்தமாக வேறொன்றையல்லவா செய்ய முனைகிறாள்.

“இப்போ நீ குழப்பத்தில் இருக்க. முன்பு தவறுன்னு பட்ட ஒன்று இப்போ உனக்கு சரின்னு படுற மாதிரி நாளைக்கு மீண்டும் தவறாத் தெரியலாம். அப்போ அவசரப்பட்டுட்டோன்னு நீ ஒரு நொடி நினைத்துவிட்டாலும், நம்ம காதல் அங்கு செத்துப்போயிடும் ஆதும்மா” என்றவனின் முந்தைய பேச்சுக்களை விடுத்தவள், அவன் சொல்லிய நம் காதல் என்ற ஒன்றே ஆயுளுக்கும் போதுமென்று உறுதியாக தன் நிலையில் பிடிவாதம் பிடித்தாள்.

“இப்போ தாலி கட்டுவியா மாட்டியா?” முறைத்துக்கொண்டு நின்றாள்.

“இந்த கல்யாணம் நடக்காது ஆதர்ஷினி.”

“நீ சொன்னா நின்னுடுமா?” நக்கலாக வினவினாள்.

கல்யாணப்பேச்சினை ஆரம்பித்தது வேண்டுமென்றால் முத்துவாக இருக்கலாம். ஆனால் அனைத்தும் வசீயின் திட்டம். அதனை இப்போது அவனால் அவளிடம் சொல்லிட முடியாதே.

“கண்டிப்பா நடக்காது. நீ போ!”

“மேடையில் எனக்கு இந்த கல்யாணம் வேண்டான்னு என்னால் சொல்ல முடியும். ஆனால் அதை உன் ஐயா ஏத்துக்க வேண்டுமே. அதுவும் அம்மா… அழுதே எமோஷ்னலா பிளாக் பண்ணிடுவாங்க. அம்மாவை எதிர்த்து என்னால் ஒண்ணும் பண்ண முடியாது. நிச்சயம் கல்யாணம் நடந்திடும்” என்றவள், “இன்னொருத்தவன் தாலி கட்டிய அடுத்த நிமிஷம் உயிரோட இருக்கமாட்டேன்னுலாம் சொல்ல மாட்டேன். ஆனால் நான் உயிர் இருந்தும் பிணம் தான்” என்றதோடு “மனசுல உன்னை வச்சிக்கிட்டு வேறொருத்தனுக்கு பொண்டாட்டியா வாழ்ந்தா, இந்த சமூகம் எனக்கு என்ன பெயர் வைக்கும் தெரியுமா?” என்று ஆதர்ஷினி கேட்டு முடிக்கவில்லை வசீயின் கை அவளது கன்னத்தில் இடியென இறங்கியிருந்தது.

அடியில் அழுகைக்கு பதிலாக அவள் முகம் புன்னகயை பிரதிபலித்தது.

அவளை அடித்துவிட்டு அவன் தான் தவித்து நின்றான். அடித்த கையினை பக்கச்சுவற்றில் ஓங்கி குத்தினான்.

“அப்படியொரு பேரோடுதான் நான் வாழணும் ஆசைப்படுறியா?”

“சொன்னா புரிஞ்சிக்கோடி… கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்காது.” கிட்டத்தட்ட அவளிடம் மன்றாடினான்.

“தாலி கட்டு நான் போயிட்டே இருக்கேன். ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணைக் கட்டிக்க உன் ஐயா பார்த்த மாப்பிள்ளைக்கு கிறுக்கு பிடிக்கலன்னு நினைக்கிறேன்” என்றாள்.

“கட்ட முடியாதா?”

“அப்போ நான்… அந்த மாதிரி பேரோடு வாழத்தான் நீ ஆசைப்படுற போல…”

அதை சொல்லியே அவனை வதைத்தாள்.

தன் திட்டத்தை அவளிடம் எப்படியும் அவனால் சொல்லிட முடியாது.

இக்கணம் அவள் முன் உண்மையை சொல்ல முடியாத தன்னுடைய கையறு நிலையை வெறுத்தவனாக, அவளின் பிடிவாதத்தின் முன் தோற்றவனாக, ஒன்றும் செய்திட முடியாத இயலாமையில், தன்னை இப்படியொரு நிலையில் நிறுத்திவிட்டாளே என்று அவளை தீயாய் உருத்தபடி அவளின் கையிலிருந்த தாலியை பறித்து இருளில் உலா வரும் சந்திரனின் சாட்சியில், நட்சத்திர ஒளி பூக்களின் அட்சதையில் ஆதர்ஷினியின் கழுத்தில் தாலி காட்டியிருந்தான்.

“இதுக்கெல்லாம் சேர்த்து அனுபவிப்படி.” பற்களுக்கிடையில் வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.

“அனுபவிக்கும் போது பார்ப்போம் மச்சான்” என்றவளின் முகத்தில் வீற்றிருக்கும் சந்தோஷத்திற்காக என்னவும் செய்யலாம் என்றுதான் அவள்மீது காதல் கொண்டிருக்கும் அவனின் மனதிற்கு தோன்றியது.

அதிலும் அவள் சொல்லிய மச்சான் என்கிற விளிப்பு அவனுள் தேன் சொட்டாய் இறங்கியது.

நொடி நேரத்திற்கு முன்பிருந்த கோபம் அவனிடத்தில் இக்கணம் சிறிதும் இல்லை.

தன்னவள், தான் மனதார நேசிப்பவளின் கழுத்தில் தாலி கட்டிய சந்தோஷம் அவனிடத்திலும் தோன்றியிருந்தது. அதனை அவளுக்கு காட்ட பிடிக்காதவன், விறைப்பாய் தன்னைக் காட்டிக்கொண்டான்.

“நான் சொன்னதுக்காக தாலி கட்டிட்டேன்னு பீல் பண்ணாத… நீயா என்னை ஏத்துக்குற வரை, நீதான் என் புருஷன்னு யார்கிட்டவும் சொல்லமாட்டேன்” என்றவள், “நாளைக்கு கல்யாணத்தை நிறுத்த எனக்கு வேற வழி தெரியல” எனக்கூறி திரும்பி நடக்க,

“ஆதர்ஷினி” என்று அழைத்திருந்தான்.

ஆதர்ஷினி நின்று… அவனருகில் வர,

தன்னுடைய கழுத்தில் கிடந்த தங்க சங்கலியை கழட்டி அவளின் கழுத்தில் அணிவித்தான்.

“கழட்டிடாத… இது பாவப்பட்ட பணத்தில் வாங்கினது இல்லை” என்றான்.

அவன் சொல்லியதன் அர்த்தம் என்னவென்று யோசித்தாலும் வாய்திறந்து கேட்கவில்லை.

சங்கிலியில் டாலராகத் தொங்கிக்கொண்டிருந்த முழு சூரியனை விரலில் பற்றியவளாக அவனுக்கு சரியென தலையசைத்து புன்னகையோடு சென்றாள்.

error: Content is protected !!
Scroll to Top