உயிர் உறை 21
பிழை 14
முத்துச்சாமி பதட்டத்துடன் வசீயின் அறைக்குள் நுழைந்தார்.
வசீ மடிகணினியின் முன்பு அமர்ந்திருந்தான்.
“வசீ… பாலா தர்ஷியை கடத்திட்டன்னு போன் பன்றான். பதட்டத்தில் எனக்கு என்ன பண்ணனும் தெரியல!” என்றார். கலங்கி நின்றார்.
‘உன் மகளுக்கு ஒண்ணுன்னதும் பதறுதோ?’ என்று எள்ளலாக நினைத்த வசீ…
“அவனால் எதுவும் செய்ய முடியாது. பயப்படாதீங்க” என்ற வசீயிடம் தன்னுடைய மனைவிக்கு ஆபத்து என்ற சிறு அதிர்வு கூட இல்லை.
முத்துச்சாமிக்கு பாலா யாரென்று அவன் காட்டிட வேண்டும். அதைவிட பாலாவின் கதைக்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தான் வசீகரன்.
“பதிட்டமில்லாம இதை பாருங்க… மற்றதை நான் பார்த்துக்கிறேன்” என்ற வசீ முத்துச்சாமியை இருக்கையில் அமர வைத்து அவர் முன்பு மடிகணினியை வைத்தான்.”
திரையில் ஆதர்ஷினியின் உருவம். கட்டப்பட்ட நிலையில். மயங்கியிருந்தாள்.
“வசீ என்னப்பா இது…” அதிர்ந்தவராக வினவினார்.
“இந்த மண்டபத்தில் தான் பேஸில் இருக்கும் ஒரு அறையில் வைத்திருக்கான். அவன் இப்போ உங்களுக்கு கால் செய்து என்ன டிமாண்ட் பண்ணாலும்… செய்றதா சொல்லுங்க” என்ற வசீ “நான் அங்கு போறேன்” என நகர்ந்தான்.
“வசீ…” அப்போதும் அவர் குறையாத பயத்தோடு அவனை அழைத்திட…
“எனக்கு என் பொண்ணுன்னா உயிர்” என்றார்.
அதில் வசீக்கு ஏளன சிரிப்பு உதயமாகியது.
‘மற்றவர்களுக்கும் இப்படித்தானே’ என நினைத்த வசீ…
“அவள் என்னோட மனைவி” என்று சொல்லிச் சென்றான்.
வசீ சொல்லியதில் அதிர்ந்தாலும், தன்னுடைய மகள் தான் இப்போது முக்கியம் என்பதுபோல் அவன் சொல்லிச்சென்றதை ஒதுக்கியவராக கணினியின் திரையைப் பார்த்தார்.
வசீ மண்டபத்தின் மொத்த சிசிடிவியையும் தன் கண்காணிப்பில் கொண்டு வந்திருந்தான்.
முத்துச்சாமியின் கூட்டத்திற்காக அல்லாது… அவனின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கு வரவிருப்பது சாதாரண ஆட்கள் இல்லையே. அவர்களின் பாதுகாப்பபிற்காக செய்தது, இப்போது அவனுக்கு உதவியது.
வசீ எதிர்பார்த்து செய்ததும் கூட.
திரையில் ஆதர்ஷினி மட்டுமே அவ்வறையில் இருப்பதாகத் தெரிந்தது. முத்துச்சாமி மகளின் முகத்தையே பரிதவிப்போடு பார்த்திருந்தார். அவளிடம் மெல்லிய அசைவு, மயக்கம் நீங்கி கண்களை திறந்தவள் தன் எதிரே நின்றிருந்தவனை தீயாய் முறைத்தாள்.
ஆதர்ஷினிக்கு நேராக மட்டும் விளக்கு ஒளிர்ந்ததால் அங்கு இருப்பது யாரென்று முத்துச்சாமிக்கு சரியாகத் தெரியவில்லை.
சட்டென்று யாரோ அதிரடியாக சிரிக்கும் சத்தம். பாலா என்று காட்டிக்கொடுத்தது அவருக்கு.
“என்ன… கல்யாணம் நடந்திடுச்சு போல!” எனக் கேட்ட பாலா வேகமாக ஆதர்ஷினியை நெருங்கி…
“கூடவே இருந்திருக்கேன். உங்களோட லவ்வு என் கண்ணுல சிக்கலையே!” என்றான்.
ஆதர்ஷினியிடம் எவ்வித பிரதிபலிப்பும் இல்லை. அவளுக்கு தெரியும். மனதின் ஓரத்தில் ஓர் நம்பிக்கை. வசீ வருவானன்று. திடமாகவே அமர்ந்திருந்தாள்.
“என்னடி திமிரா? உன் பார்வையில் பயமில்லையே!” என்ற பாலா, “வசீயிடம் பேசிவிட்டு இறங்கி வரும்போது நான்தான் உன்னைத் தூக்கிட்டு வந்தேன். பூ மாதிரி இருக்கடி” என்று கண்களை மூடி சொல்லிட… ஆதர்ஷினிக்கு அருவருத்துப் போனது.
“நான் இன்னொருத்தரின் மனைவி.” அடிக்குரலில் சீறினாள்.
“கட்டி ஒரு மணி நேரமாகல… அதுக்குள்ள அவனக்கு நீ மனைவியா?”
இருவரும் பேசுவது தெளிவாகவே முத்துச்சாமிக்கு கேட்டது. பாலா பேசுவதும் வசீக்கு வேண்டும். அதற்காக குரல்கள் தெளிவாக பதிவாகும் வகையில் செட் செய்திருந்தான்.
முத்துச்சாமிக்கு அழைத்தான் பாலா.
அவர் பயத்தோடு ஏற்றார்.
“உன் பொண்ணு உனக்கு வேணுன்னா… நாளைக்குவர எல்லார் முன்பும் உனக்கு பதில் இனி நான்தான் தலைமைன்னு நீ சொல்லணும். உன் வாயால் சொல்லணும்” என்றான்.
“சொல்றேன்… சொல்லிட்றேன்” என்றார் முத்துச்சாமி.
“தப்பாயிருக்கே… உன் பொண்ணு மேல அம்புட்டு பாசமா? சொன்னதும் சரின்னுட்ட” என்ற பாலா… ” என்ன உன் நம்பிக்கைக்குரிய வசீயை என்னைத்தேடி அனுப்பி வச்சியிருக்கியா?” என்று நம்பிக்கை என்கிற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தான்.
“வசீ யாருன்னு தெரியுமா?” என்று கேட்ட பாலா… “சொல்ல மாட்டேன்… உனக்கு அவன் கொடுக்கும் ஆப்பை நான் நேரில் ரசிக்கணும்” என்று கத்தி சிரித்தான்.
“நாளைக்கு நீ என்னை உன் தொழில் வாரிசுன்னு சொல்லிய அப்புறம் உன் பொண்ணை… இல்லையில்லை என் பொண்டாட்டியை நானே கூட்டிட்டு வரேன்” என்றவன் அழைப்பைத் துண்டித்திருந்தான்.
வசீ ஆதர்ஷினியை தன்னுடைய மனைவி என்று சொல்லி சென்றிருக்க… ஆதர்ஷினியும் அதனை ஆமோதிப்பதைப்போல் பாலாவிடம் பேசியிருக்க… இப்போதென்றால் பாலா என்னவோ அவளை மனைவி என்கிறானே என்று குழம்பியவர், மகளுக்கு அவனால் அசாம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என்று வசீ சொல்லியதையும் மீறி அவர்கள் இருக்கும் இடம் நோக்கி ஓடினார்.
தரை தளத்தில் இருந்த அந்த பகுதிக்கு வசீ வந்த போது… பாலாவின் ஏற்பாட்டில் அங்கு பத்துக்கும் மேற்பட்ட ஆட்கள் காவலுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களை எல்லாம் ஓரங்கட்டி வசீ அவ்வறைக்குள் நுழையும் போது குமார் குறுக்கே வந்து நின்றான்.
அதற்குள் பாலா முத்துச்சாமியிடம் பேசி முடித்திருந்தான்.
“குமார் என்னை விடு…”
“என்ன வசீ… அவங்களையெல்லாம் அடிச்சு வீழ்த்துன மாதிரி என்னையும் போட்டுடலாம் நினைக்குறியா?” என்று எகத்தாளமாக குமார் கேட்டிட… நீயெல்லாம் எனக்கொரு ஆளா எனும் பார்வை தான் வசீயிடம்.
“வழியை விடு குமார்…”
குமார் முடியாது எனும் விதமாக வசீயிடம் மல்லுக்கு நின்றான்.
அந்நேரத்தில் அங்கு வந்த முத்துச்சாமி உள்ளே நுழைந்திருந்தார்.
அப்போது ஆதர்ஷினி அவளை விட்டுவிடுமாறு பாலாவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“அவர் (வசீ) வந்தா அவ்வளவு தான். ஒழுங்கா உன் எண்ணத்தை மாத்திக்கிட்டு ஓடிப்போயிடு” என்றாள்.
பாலா தாலியை ஒரு கையால் சுழற்றியபடி அடிமேல் அடி வைத்து ஆதர்ஷினியை மெல்ல நெருங்கினான்.
“உன்னை பையன் மாதிரி பார்த்துகிட்டாரே அவருக்கு துரோகம் பன்றியே?” ஆதர்ஷினி அவ்வாறு சொல்லியதும் வெடி சிரிப்பு சிரித்தான் பாலா.
“பையன் மாதிரி பார்த்துகிட்டவங்கயெல்லாம் அப்பா ஆகிட முடியுமா? என் அப்பா யார் தெரியுமா?” என்ற பாலா, “சாமி… உங்க வீட்டில் ட்ரைவரா வேலை பார்த்து செத்துப்போனவர் என் சித்தப்பா” என்று ஆக்ரோஷமாகக் கத்தினான்.
“என் சித்தப்பாவை கொன்னதே உன் அப்பா தான். உன் அப்பா இடத்தை பிடிக்க, என் அப்பா ஆசைப்பட்டாருன்னு, முத்துச்சாமியை போட்டுத்தள்ளத்தான் என் சித்தப்பா உங்க வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். என் அப்பாவவிட எனக்கு என் சித்தப்பாவைத்தான் ரொம்ப பிடிக்கும். அவர் நினைச்சதை நான் முடிக்கணும் ஆசைப்பட்டுதான் உங்க வீட்டுக்கு வந்தேன். நாளைக்கு நடக்கப்போற கூட்டம் எவ்வளவு முக்கியம் தெரியுமா? அதுக்காகக் காத்திட்டு இருக்கும்போது தான் உன் அப்பா என் அப்பாவை கொன்னுட்டான்” என்றான். பழிவாங்கும் வெறியுடன்.
பாலா இப்படி நினைக்குமாறு… அதாவது சாமியை கொன்றது முத்துச்சாமி தான் என எண்ணும் வகையில் முத்துவிற்கு எதிராக தடயங்கள் விட்டு வந்தது வசீ.
“முத்துச்சாமியை கொல்லுவதற்கு எத்தனை பிளான் போட்டிருக்கேன் தெரியுமா? அதையெல்லாம் இந்த வசீ குறுக்க வந்து கெடுத்துட்டான்.”
“அதுக்காக நான் உன் அப்பாவை பழிவாங்க வேண்டாம். அத்தோடு அந்த வசீயையும் நான் பழிவாங்கணும். என்னையே மிரட்டி பார்த்துட்டான். அதனால் தான் இப்போ உனக்கு நான் ரெண்டாவது தாலி கட்டப்போறேன்” என்று சிரித்தவன், ஆதர்ஷினியின் முகம் நோக்கி குனிந்து தாலியை அவளின் கழுத்தைச்சுற்றி கொண்டு செல்ல… முத்துச்சாமி அவனை சுட்டிருந்தார்.
தொடர்ந்து மூன்று குண்டுகள் பாலாவின் முதுகை பதம் பார்த்திட, அப்படியே சரிந்து உயிரை விட்டிருந்தான்.
குமாரை வீழ்த்தி வசீ உள்ளே நுழையும் போதுதான்… பாலா பேசிய அனைத்தையும் கேட்டு சிலையென நின்ற முத்துச்சாமிக்கு, பாலா ஆதர்ஷியை நெருங்குகிறான் என்று உணர்வு வந்து அவனை நோக்கி குறி வைத்தார்.
வசீ தடுப்பதற்குள் முத்துச்சாமி சுட்டிருந்தார்.
பாலாவுக்கு தண்டனை கிடைக்க வேண்டுமென்று தான் வசீ நினைத்தான். இப்படி இறந்து போக வேண்டுமென்றல்ல.
இருப்பினும் காப்பக குழந்தைகளுக்கு அவன் செய்தது கண்முன் வர, அவனுக்கு சரியான தண்டனைதான் என்றே எண்ணினான்.
கண்முன்னே நிகழ்ந்த மரணம், ஆதர்ஷினி அதிர்ச்சியோடு முத்துச்சாமியையும், அவர் கையிலிருந்த துப்பாக்கியையும் பார்த்திருந்தாள்.
“எனக்கு வேறவழி தெரியலம்மா. அவன் உன் கழுத்தில் தாலி கட்டிடுவா(ன்)ங்குற பயத்தில் சுட்டுட்டேன். தடுக்க வேறென்ன பண்ணன்னு புரியல” என்று மகளிடம் மண்டியிட்டு கூறிய முத்துச்சாமி…
“அவன் எனக்கு இத்தனை துரோகம் பண்ணியிருக்கான்னு தெரியாமல் போச்சே வசீ” என்றார்.
தன்னுடைய காலுக்கு கீழ் இறந்து கிடந்த பாலாவை பார்க்கையில் ஆதர்ஷினிக்கு வருத்தமெல்லாம் இல்லை. மாறாக ஒரு அமைதி அவளிடத்தில். மயங்கிய சிறுவர்களின் நிலை நினைவிற்கு வர, ‘பாலா இருந்தா இன்னும் பல பேருக்கு அந்நிலை தான். அவன் இல்லாமல் போனதே நல்லது தான்’ என நினைத்தாள்.
ஒருவனின் இறப்பு வருத்தத்திற்கு பதில்… நிம்மதியை கொடுக்கிறது என்றால் அவன் எத்தகைய பாவங்களை செய்திருப்பான்.
பாலாவின் நிலை தான் நாளை முத்துச்சாமிக்கும்… அவரது ஆட்களுக்கும்.
வசீ ஆதர்ஷினியின் கட்டினை அவிழ்த்திட…
“இதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புங்க” என்று முத்துச்சாமி வசீயையும், ஆதர்ஷினியையும் அனுப்பி வைத்தார்.
அதுவே அவர் தங்களின் திருமணத்தை ஏற்றுக்கொண்டார் என்று வசீக்கு உணர்த்தியது.
அவர் வசீ தனக்குத் தெரியாமல் ஆதர்ஷினி கழுத்தில் தாலி கட்டியிருக்கிறான் என்றபோதும் வசீயை மருமகனாக ஏற்றுக்கொண்டதற்கு காரணம், அவன்மீது அவர் வைத்த நம்பிக்கையும், பலமுறை தனது உயிரை அவன் காப்பாற்றியதாலும், தங்களுடனே இருந்தாலும் தவறான தொழிலில் ஈடுபடாது இருப்பதாலும் தான்.
வசீ ஆதர்ஷினியை ஏறிட…
“நீங்களா நான் உங்க மனைவின்னு சொல்லாம உங்களுக்கு தொல்லை கொடுக்கமாட்டேன்” என்று முன்பு சொன்னதையே இப்போதும் ஆதர்ஷினி கூறினாள்.
எப்படியும் நாளை நடக்கவிருந்த திருமணத்தில்… மணமகனாக அவன் அமர்வதற்கு எல்லா ஏற்பாடுகளையும் வசீ செய்திருந்தான். ஆதர்ஷினி வலுக்கட்டாயமாக வசீயை அந்த இரவில் தாலி கட்ட வைக்கமால் இருந்திருந்தால் வசீயே நாளை அவளை மனைவியாக்கியிருப்பான். இப்போது அதற்கு அவசியம் இல்லாமல் செய்துவிட்டாளே ஆதர்ஷினி.
நிர்மலை முடிவு செய்தது வேண்டுமென்றால் முத்துச்சாமியாக இருக்கலாம். அவர்களுக்கு முத்துச்சாமியுடன் சம்மந்தம் வைத்துக்கொள்ள விருப்பமில்லை.
வசீ தான் சாகர் மற்றும் நிர்மலிடம் பேசி… நடக்கவிருக்கும் திருமண சூழல் எத்தகைய முக்கியம் வாய்ந்தது… அதைக்கொண்டு நடக்கவிருக்கும் நிகழ்வுகள் என எல்லாம் விளக்கிக்கூறி நடிப்பதற்கு சம்மதிக்க வைத்தான்.
வசீ தனது திட்டபடிதான் பாலாவை நடந்துகொள்ள வைத்தான்.
பாலாவின் மூலமாகவே முத்துச்சாமிக்கு அவனைப்பற்றிய உண்மைகள் தெரியவரவேண்டுமென நினைத்தான் வசீ. அப்படியே நடந்தது. அதிலும் அவன் வாயாலேயே, முத்துச்சாமியை கொல்லும் என்னுடைய முயற்சிகள் அனைத்தையும் வசீ முறியடித்துவிட்டான் என்று சொல்லும்போது, முத்துவிற்கு வசீயின் மீது நம்பிக்கை இன்னும் பல படிகள் அதிகரிக்கும். அந்நிலையில் மாப்பிள்ளை பையன் திருமணம் வேண்டாமென்று சென்றுவிட்டால், அந்த இடத்தில் முத்துச்சாமிக்கு வசீயை விட வேறொருவன் அவரது மகளுக்கு பொருத்தமாக தெரிந்திடமாட்டான். அப்போது அவரே வசீயை அழைத்து ஆதர்ஷினிக்கு மணம் முடித்து வைப்பார் என்று வசீ போட்டு வைத்த கணக்கை ஆதர்ஷினி மாற்றியிருந்தாலும், இப்போதும் வசீக்கு சாதகமாகத்தான் முடிந்திருக்கிறது.
அவனை பொறுத்தவரை முத்துச்சாமி தன்னுடைய சகக்காகளுடன் கூடும் நாள் அவசியம். நடுவில் இப்படி ஆதர்ஷினியின் திருமணத்தை ஏற்பாடு செய்வாரென்று அவன் எதிர்பார்க்கவில்லை. எதிர்பாராதது என்றாலும், தன்னுடைய காதலை அவனால் இழக்க முடியாதே. அதற்காக வகுத்த வியூகங்களும் அவனின் காதலுக்கு நன்மையாகவே முடிந்தது.
நடந்தவற்றை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்ட வசீ,
ஆதர்ஷினியை கரம் பற்றி அழைத்துச் சென்றான்.
வசீ உண்டாக்கிய நம்பிக்கை… முத்துச்சாமியை ஆட்டி படைக்கவிருக்கிறது.
*******
நிர்மல் குடும்பம் திருமணத்திற்கு ஏற்றவாறு ஒப்புக்கொண்டதே வசீயின் வார்த்தைக்காகத்தான். அதனால் திருமணம் நின்றது அவர்களுக்கு ஏமாற்றத்தையோ அவமானத்தையோ கொடுக்கவில்லை.
முத்துச்சாமியின் உறவினர்கள் மட்டுமே அங்கிருந்ததால், அவர்களையும் தானே பார்த்துக்கொள்வதாக முத்துச்சாமி கூறிட… வசீக்கு அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்வுகளை நோக்கி சிந்தனை சென்றது.
அதுவும் நன்றாக எண்ணத்தின்படி நடந்துவிட்டால்… வசீ எண்ணி வந்த காரியம் முடிந்துவிடும்.
மகாவிற்கு மட்டும் மகளின் மறை திருமணத்தில் உடன்பாடில்லை. அந்த இரவு நேரத்திலேயே விடயம் அறிந்த மகா எவ்வித விளக்கமும் தேவையில்லை என்று ஆதர்ஷினியுடன் பேசவே அவர் முன்வரவில்லை.
வசீ தான் அவர்களுக்கும் ஒருநாள் புரியும் என்று ஆதர்ஷினியை தன்னுடன் அழைத்துச் சென்றான்.
“எங்கப்போறோம்?”
வசீயின் பின்னால் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவள் கேட்டிட…
“நம்ம வீட்டுக்குத்தான்” என்றான்.
“நம்ம வீடு?” பாலா, குமார், வாசுவுடன் வசீ இருக்கும் வீட்டிற்கு இதுநாள் வரையிலும் வசீ தான் வாடகை கொடுத்து வருகிறான் என்பது தெரியாது… பாலா இறந்த நிலையில் அவ்வீட்டில் எப்படி என்கிற எண்ணத்தில் கேட்டாள்.
“நம்ம வீடுன்னா… நம்ம வீடுதான்” என்று அழுத்தி சொல்லிய வசீ…
“நமக்குள் காதல் இருந்தாலும், இருவருக்குமே ஒருத்தரைப்பற்றி ஒருத்தருக்கு முழுதும் தெரியாது” என்று சொல்லியதோடு, “நான் என்ன பண்ணாலும் நீ என்னை நம்பனும். இப்போதைக்கு உன்னிடமிருந்து நான் எதிர்பார்ப்பது அது மட்டும் தான்” என்றான்.
ஆதர்ஷினியும் தலையசைக்க…
“குட்… தட்ஸ் மை கேர்ள்” என்றவனாக வண்டியினை சீரான வேகத்தில் செலுத்தினான்.
என்ன தான் மணம் முடித்திருந்தாலும் இருவருக்குள்ளும் பேசப்படாதவை நிறைய இருந்தன. ஆதலால், இருவருக்கும் இடையிலும் இடைவெளி இருக்கவே செய்தது.
“பாலா உங்க பிரண்ட்… இறந்தது உங்களுக்கு கஷ்டமா இல்லையா?”
“அவனால் பல உயிர்கள் இறந்திருக்கே” என்ற வசீ அவளின் கேள்வியை தவிர்த்துவிட்டான்.
என்ன இருந்தாலும் இரண்டரை வருடம் உடன் இருந்திருக்கிறான். அந்த வருத்தம் மட்டுமே. நண்பன் என்கிற கவலையெல்லாம் சிறிதும் இல்லை. வசீயை பொறுத்தவரை அவர்கள் எல்லாம் அவனுக்கு கொடுகப்பட்ட டாஸ்க். அதனை சரியாகவே செய்து வருகிறான்.
“உனக்கு கஷ்டமா இருக்கா?” வசீ அவளிடம் திருப்பிக் கேட்டான்.
“இல்லைன்னு சொல்லமாட்டேன். உடன் பிறந்தவனா நினைச்சிட்டனே” என்றவள், “கொஞ்சமும் தகுதியே இல்லாதவன்” என்றாள்.
கண்ணாடி வழி அவளின் முகம் பார்த்தவன் எதுவும் சொல்லவில்லை.
வசீயை பொறுத்தவரை நடந்த யாவும் அவனுக்கு நன்மையே!
வீடு வந்ததும் வண்டியை நிறுத்திவிட்டு படிகளில் ஏற முயன்றவனை தடுத்தவள், “பதினோரு மாடி படியேறியா?” எனக் கேட்டாள். அவளின் மலைப்பு அவளது பாவனையில் தெரிந்தது.
அவள் கேட்ட அழகில் தடுமாறித்தான் போனான் வசீகரன்.
“எனக்கு பழகிருச்சு” என்றவன் மின்தூக்கியை நோக்கி நகர்ந்தான்.
பதினோராவது தளம் வரும் வரையிலும் மின்தூக்கியினுள் நெருங்கி நின்றிருந்தனரே தவிர இருவரிடையேயும் பேச்சென்பதில்லை.
எங்கு தனக்கு கிடைத்திடாதோ என்று ஏங்கிய வசீயின் முதல் அருகாமையை அமைதியாய் தனக்குள் உள்வாங்கியபடி ஆதர்ஷினி. அவளை மொத்தமாய் அவதானித்தபடி வசீ. இருவருக்குமே சிறு நேர நெருக்கம் பிடிக்கத்தான் செய்தது.
நேரம் இரண்டை தொட்டிருந்தது.
முத்துச்சாமி அதற்குள் மண்டபத்தையே சுத்தம் செய்தியிருந்தார். அங்கு ஒரு நிகழ்வு நடைபெற்றதற்கான சுவடே இல்லாமல் அனைத்தையும் நொடியில் சீர் செய்திருந்தார்.
மகா தான் மகளுக்கு கல்யாணம் என்று சென்று, அவளில்லாமல் வீட்டிற்கு அந்நேரத்தில் திரும்பி வந்ததை நினைத்து புலம்பி தள்ளிவிட்டார். அவரை சமாளிப்பதற்குத்தான் முத்துச்சாமிக்கு போதும் போதுமென்றானது.
பாலாவை பற்றியும் அவன் செய்யவிருந்ததை பற்றியும் சொல்லித்தான் மகாவை அமைதிப்படுத்தியிருந்தார்.
தன் மகளுக்கும் தன்னைப்போல் ஓர் வாழ்வென்று மனதில் துவண்டு போனார். அவரால் அதனை வெளிப்படையாகக் கணவரிடம் காட்டிட முடியவில்லை.
மகாவின் கோபமெல்லாம், தந்தையை ஒதுக்கி வைத்தவளால், அதே தொழில் செய்யும் வசீயை எப்படி காதல் கொண்டு மணக்க முடிந்தது என்பது தான். அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. யாரென்ன சொன்னாலும், அவர் அவரின் எண்ணத்தில் உழன்று கொண்டுதான் இருந்தார்.
வீட்டிற்குள் நுழைந்ததும் அன்று முதல்முறையாக அங்கு வந்ததும், வசீயிடம் காதலை வேண்டி நின்றதும் மனதில் தோன்றி அவளை வதைத்து.
“என்னை லவ் பண்றீங்களா?”
அன்றைய நாளின் தாக்கம் அவளை அவ்வாறு கேட்க வைத்தது.
வீட்டிற்குள் முன் நுழைந்தவன், அவள் புறம் திரும்பி தான் கட்டிய தாலியை அழுத்தமாக உற்று பார்த்தான்.
அவனின் பார்வைக்கான அர்த்தம் அவளுக்கு விளங்கியபோதும், அவனது வாய் வார்த்தையாகக் கேட்டிட ஆசை கொண்டாள்.
“சில விஷயம் சொல்லி கேட்பதைவிட, மனதால் உணர்ந்தால், அந்த பீல் இன்னும் நல்லா இருக்கும்” என்றவனாக கிச்சனிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான்.
அறைக்குள் சென்றவன் ஆடைமாற்றி வெளியில் வந்தான்.
“அந்த ரூமில் போய் படுத்துக்கோ. காலையில் பார்ப்போம்.” தான் சென்று வந்த அறையை கை காண்பித்தவன், “டோர் லாக் பண்ணிக்கோ” என்றவனாக வெளியேற, “எங்க போறீங்க?” எனக் கேட்டிருந்தாள்.
“என்னோட தனியா… உனக்கு ஓகேவா?” என அவளுக்கு பதில் சொல்லாது தானொன்றை கேட்டிருந்தான்.
ஆதர்ஷினி புரியாது பார்க்க…
“திடீரென என்னென்னவோ நடந்துப்போச்சு. முதல் முறை… நாம் இப்படி தனியா, ஒரே வீட்டில்…” என்று அடுத்து சொல்ல முடியாது அவன் தடுமாறினான்.
“எத்தனை நாளுக்கு மொட்டை மாடியில் படுப்பீங்க?” அவள் கேட்டதில் வசீ அமைதியாக உள் வந்து கதவினை சாற்றினான்.
ஆதர்ஷினி அறைக்குள் சென்று படுத்திட… வசீ ஹாலில் பெட் மேட்ரெஸ் விரித்து படுத்துவிட்டான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் வசீயின் அருகில் ஆதர்ஷினி வந்து படுக்க… வெறுமென கண்களை மட்டும் மூடி படுத்திருந்தவன்… உறங்குவது போல் அசையாது கிடந்தான்.
கண்கள் இருட்டுக்கு பழகிட…
வசீயின் புஜத்தினை தன்னிரு கைகளாலும் மெல்ல கோர்த்து பிடித்தவள் கண்களை மூடிட…
“என்ன பன்ற?” என்றவனின் திடீர் குரலில் உடல் தூக்கிப்போட அதிர்ந்தவள் மேலும் அழுத்தமாக அவனின் கையினை பற்றிக்கொண்டாள்.
“ஹேய்… ஆது, நாந்(ன்)தான்” என்றவன் அவளின் பிடியை விலக்கி… எழுந்து சென்று மின் விளக்கை ஒளிரச் செய்தான்.
சட்டென்று பரவிய வெளிச்சத்தில் கூசிய கண்களை தேய்த்தவாறு எழுந்து அமர்ந்தவள்,
“எதுக்கு இப்போ லைட் ஆன் பண்ணீங்க?” என்று வினவினாள்.
“எனக்கு கொஞ்சம் டைம் கொடு.” மொட்டையாக அவன் சொல்லியது அவளுக்கு விளங்கவில்லை.
இருவருக்குள்ளும் காதல் மலையளவு உள்ளது. திருமணமும் நடந்துவிட்டது. வாழ்க்கை அத்தோடு நிற்பதில்லையே. அடுத்தடுத்த அடிகளில் மெல்ல முன்னேறுவதுதானே மண வாழ்க்கை.
ஆதர்ஷினி அருகில் வந்தது அந்த அடிப்படையில் என நினைத்து வசீ பேசினான்.
“என்ன சொல்றீங்க புரியல?”
“லவ்… கல்யாணம்… ஓகே தான். ஆனால், இப்போ சரிவருமான்னு தெரியலையே. இப்போ என்னோட மைண்ட் ஃபுல்லா வேறொன்றில் இருக்கு. நான் நினைப்பது எனக்கு சாதகம நடந்து முடிந்தாதான், என்னால் நம் காதலையே வாழ்ந்தபார்க்க முடியும்” என்று தயங்கித்தான் கூறினான்.
வசீயின் தடுமாற்றமும் தயக்கமும் அவளுக்கு விடயத்தை பட்டவர்த்தனமாக்கிட…
“ரொம்ப ஆசைதான்… போயா?” என்றவள், மீண்டும் படுத்து கண்களை மூடிக்கொண்டாள்.
“என்னது போயாவா?” அதிர்ந்தாலும், அவனுக்கு பிடிக்கத்தான் செய்தது.
‘நான் இப்போ என்ன சொல்லிட்டேன். சரியாத்தானே பேசினேன்?” வசீ அப்படியே நின்றவாறு ஒரு பக்கமாக திரும்பி படுத்திருந்தவளின் முதுகையே பார்த்திருந்தான்.
“நீங்க நினைக்குற சீனெல்லாம் இங்கில்லை. இப்போயில்லை” என்றவள், “எனக்கு இருட்டுன்னா பயம். புது இடம் வேற, தனியா படுக்க பயந்து வந்தது. அதான் உங்க பக்கத்தில் வந்தேன்” என்றதோடு, “பயம் போகத்தான் உங்க கையை பிடிச்சேன். கண்டதை நினைக்காம ஒழுங்கா படுங்க” என்றவளின் சத்தத்தில், “எதே… நான் கண்டதை நினைக்கிறேனா?” என்று அதிர்ந்த வசீ, “சரிதான்” என்ற முனகலோடு விளக்கினை அணைத்து இடைவெளி விட்டு படுத்துக்கொண்டான்.
சில நிமிடங்களில் மீண்டும் ஆதர்ஷினி அவனை ஒட்டி படுத்து… அவனது கரத்தினை பிடித்துக் கொண்டாள்.
‘நிலைமை தெரியாம மனுஷனை கொலையா கொல்லுறாளே!’ மனதோடு புலம்பியவன், “இது ஆவறதுக்கு இல்லை” என்று எழுந்து விளக்கினை போட்டுவிட்டான்.
“ஏன் என்னாச்சு?”
“என்ன சூழல் இப்போ போயிட்டு இருக்கு… எனக்குள்ள அது மட்டும் தான் ஓடிட்டு இருக்கு.”
“இருக்கட்டும்.”
“எனக்கு பிடிச்சதானால பிடிச்சிக்கிட்டேன். உங்களுக்கு வேண்டான்னா நான் பிடிக்கல” என்றவள் “படுங்க… நான் டிஸ்டர்ப் பண்ணமாட்டேன். என்னை நம்பலாம். உங்க கற்புக்கு நான் கியாரண்டி” என்றிட…
“அடிங்க்…” என்றவன் அவள் சொல்லியதிலும், அவளது பாவனையிலும் பக்கென்று சிரித்துவிட்டான்.
அந்நொடி மனதில் ஓடிக்கொண்டே இருக்கும் அவனது யோசனைகள் மறைந்து, இறுக்கம் நீங்கி, உள்ளே தகித்துக் கொண்டிருக்கும் தணல் அடங்கி, அவனுள் புதைந்திருக்கும், அவன் தொலைத்த இளகுவான மனிதனாக மாறியிருந்தான்.
மனம் இறகாய் காதல் மனைவியின் அருகில் பறந்தது.
விரிந்த புன்னகையுடன் அவளின் முகம் பார்த்தவாறு படுத்தவன் இமை மூடிட, அவனது ஒற்றை சுண்டு விரலை தனது சுண்டு விரலால் வளைத்து பிடித்துக்கொண்டாள்.
வசீ இமை திறந்து என்னவென்று புருவ உயர்த்தலால் வினவிட…
“பிடிச்சிருக்கேன்… பிடிச்சதனால…” என்று, அவனின் மீசையோர சிரிப்பில் லயித்தவளாக, “ரவுடிக்கு என்னவாம்… கண்ணு, முகமுன்னு எல்லாம் சிரிக்குது” என்றாள்.
“நல்லா இருக்கு” என்றவன் அவள் பிடித்திருந்த விரல் பிணைப்பில் தன் விரலால் அழுத்தம் கொடுத்தான்.
“ஒருத்தருக்கொருத்தர் அதிகம் எதுவும் தெரியலன்னாலும்… மனசுக்குள்ள நெருக்கம். எல்லாம் நீ, நான்னு இயல்பா இருக்கு” என்று சில நிமிட அமைதிக்குப் பின்னர் கூறியவன், “தேன்க்ஸ் மிஸ்ஸஸ் ஆதர்ஷினி வ்…” எனத் தொடங்கியவன் எதையோ நினைத்து மந்தகாசமாகப் புன்னகைத்தவனாக தன்னுடைய பெயரை தொண்டைக்குள் ஒளித்தான்.
அவனுக்கு அவளைப்பற்றி… அவளுக்கு அவனைப்பற்றி முழுதாய், ஆழமாய் தெரிந்திடாதபோதும்… அவர்களுக்குள்ளான காதல், அங்கே இதழ்கள் விரித்து அவர்களின் மனமெங்கும் வாசம் பரப்பியது.
விடிந்தால் அன்றைய நாளின் இரவில் ஆதர்ஷினிக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது. ஆச்சரியம் என்றே சொல்லலாம். அந்த ஆச்சரியத்தில் ஆதர்ஷினியின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை நேரில் காண வேண்டும். அக்கணம் அவளின் முகம் காட்டும் உவகையை அவன் தன் கண்களால் விழுங்க வேண்டும்.
அதற்காக இக்கணம் முதல் காத்திருக்கத் தொடங்கினான்.
ஆதலாலே இப்போது தன்னுடைய பெயரை முடிக்காது முடித்தான்.
தினமும் எழும் பழக்கத்தினால் அதிகாலையே விழித்துவிட்ட ஆதர்ஷினி, குளித்து முடித்து பன்பலை நிலையத்திற்கு கிளம்பிவிட்டாள்.
அவள் எழும்போதே எழுந்துவிட்ட வசீயும், அவளை கவனித்தபடி தேநீர் வார்த்து, அவளுக்கும் கொடுத்து, அவனும் பருகினான்.
“என்னை ட்ராப் பண்றீங்களா?”
“பண்ணலாமே! எங்கன்னு சொல்லுங்க மேடம்” என்றவன் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டான்.
“சாரல் FM.”
அவன் கேள்வியாய் பார்த்திட…
“அங்கு தான் வொர்க் பன்றேன். மார்னிங் ஷோ. இன்னைக்கு லீவ் தான் போட்டிருந்தேன். இப்போ தான் அதுக்கு அவசியமில்லையே!”
வசீ நொடியில் கணித்தவனாக மனதில் துள்ளாட்டம் போட்டபடி அவளுக்கு பதில் சொல்லாது நின்றிருந்தான்.
“அங்க போனா மைண்ட் ரிலாக்ஸ் ஆகும்” என்று கூறினாள். அவன் வேண்டாமென்று சொல்லிவிடுவானோ என்று.
“ம்ம்ம்” என்றவன் பைக் கீயினை எடுத்துக்கொண்டு வெளியேறிட… அவளும் அவனுடன் பின் சென்றாள்.
தீர்க்கப்படாத… படவேண்டிய பக்கங்கள் நிறைய இருப்பினும், அவர்களின் எதிர்பாரா இணைவு, அதைத்தொடரந்த ஒவ்வொன்றையும் விரும்பியே ரசிக்கத் துவங்கினர்.