நேச நெஞ்சங்கள் 22

உயிர் உறை 22

பிழை 15

“அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
நேரம் சரியாக ஆறு.
இது புத்தம் புது காலை.
நான் உங்கள் தர்ஷி…”

கேட்டுக்கொண்டிருந்த வசீயின் முகத்தில் அப்படியொரு மலர்ச்சி. அவனது அதரங்கள் நீண்டு விரிந்திருந்தன.

தன்னுடைய இருசக்கர வாகனத்தின் மீது ஒரு பக்கமாக இரு கால்களையும் தொங்கப்போட்டு அமர்ந்திருந்தவனின் காதில் பன்பலையில் ஒலித்துக்கொண்டிருக்கும் அவனின் ஆதர்ஷினியின் குரல் மோதிக்கொண்டிருந்தது.

தான் காதலிக்கும் பெண்ணும், தனக்கு பிடித்த குரலின் பெண்ணும் ஒருவளே என்கிற சந்தேகம் அவனுக்கு இருந்தபோதிலும், அது உறுதியானதில் அப்படியொரு ஆனந்தம் அவனுக்கு.

வீட்டிலிருந்து கிளம்பியவன் ரேடியோ ஸ்டேஷனில் ஆதிர்ஷினியை இறக்கி விட்டதும்…

“ஆர்.ஜே தர்ஷிகிட்ட பேச முடியுமா? அட்லீஸ்ட்… ஆட்டோகிராப் வாங்கித்தர முடியுமா?” எனக் கேட்டிருந்தான். வேண்டுமென்றே. அவள் யாரென்று அறிந்தும்.

“ஏன்?”

“எனக்கு அவங்க வாய்ஸ் பிடிக்கும். ஷோ ஹோஸ்டிங் கூட நல்லா பண்றாங்கா… உன் மேல் லவ் வராம இருந்திருந்தா, கண்டிப்பா அவர்களைத்தேடி லவ் பண்ணியிருப்பேன்” என்று வந்த சிரிப்பை வெளியே சிதறவிடாது, முகத்தை தீவிரமாக வைத்துக் கூறினான்.

“அப்படியா?” என்று ராகம் இழுத்தவள்,

“நேரில் பார்த்துட்டு தான் இருக்கீங்க. பேப்பர் , பென் கொடுங்க ஆட்டோகிராப் போட்டுத்தரேன்” என்றாள்.

அவன் சொல்லுவது அவளைத்தான் என்றாலும், அவன் அப்பெண் தானென்று அறியாமல், இன்னொரு பெண் நிலையில் வைத்து கூறுவதாக நினைத்தவளுக்கு, அவனது பேச்சு ரசிக்கவில்லை. கோபத்தை தன் பேசும் தொனியில் காண்பித்தாள்.

அவளின் கோபத்தையும் அவன் ரசித்தான்.

“உன் பேரில் தர்ஷி வருதுங்கிறதுக்காக, நீ தர்ஷியாகிட முடியாது. போ போ… உன்னோட கூட்டி பெருக்குற வேலையைப் பார்” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.

“நான்… கூட்டி…” என்றவள் பற்களைக் கடித்துக்கொண்டு ஆவென்று வசீயின் கழுத்தை நெறிப்பதைப்போல் கையினை கொண்டு சென்றாள்.

“இவ்வளவு காலையில் வந்தால் அந்த வேலையைத்தான் பார்க்கணும்” என்றவன், “அதனால் தான் அன்னைக்கு நான் கேட்டப்போ என்ன வேலைன்னு சொல்லலையா?” என்று வேண்டுமென்றே வம்பு செய்தான்.

“போயா…!” என்றவள் வேகமாக உள்ளே சென்றிட… வசீயிடம் ரசனை பொங்கும் பார்வை.

அவன் மனம் காற்றில் பறப்பதாய். இன்று அனைத்தும் சரியாகிவிடும் என்ற நிலையில்… ஆதர்ஷினியுடன் காதலாய் ஒரு வாழ்க்கை வாழ்ந்துப்பார்க்க அவனின் உள்ளமும் உடலும் பேராவல் கொண்டது.

அங்கேயே கார்டன் எரியாவில் ஆதர்ஷினியின் குரலை கேட்டவனாக அவளின் வருகைக்காக அமர்ந்துவிட்டான்.

“வாழ்வில் சின்ன சின்ன எதிர்பார்ப்புகள், எதிர்பாரா தருணங்களில் நடக்கும் போது அதன் சுவை… சுகம்… இதம்… இன்பம்… எல்லாம் இரட்டிப்பானது. அலாதியானது. இப்போ நானும் அப்படியொரு ஆழ்ந்த ஆனந்த நிலையில் தான் இருக்கின்றேன்.

அப்படி என்ன எதிர்பாராத ஒன்று எனக்கு நடந்துருச்சுன்னு யோசிக்கிறீங்களா?

எனக்கு நேத்து மேரேஜ் ஆகிருச்சு. நான் விரும்பினவரோடவே. நடக்குமா நடக்காதா என்ற ஒன்று தவிப்புகளை கடந்து ஒண்ணு சேர்ந்தாச்சு.

வாழ்வில் எதிர்பாரதது மட்டுமல்ல எதிர்பார்ப்புகள் கூட எதிர்பார்ப்பில்லா நேரங்களில் சுவாரஸ்யம் தரும் வகையில் நடந்துவிடும்.

என்னோட சந்தோஷத்தை இங்கு உங்களோடு பகிர்ந்துகொள்ள தோணுச்சு.

எதிர்பார்ப்பு ஏமாற்றங்களை மட்டுமல்ல… சந்தோஷத்தையும் கொடுக்கும். அதன் முடிவு நமக்கு சாதகமாக அமையும் பட்சத்தில்.”

ஆதர்ஷினி பேச… பேச… வசீக்கு காதல் ஊற்று பெருக்கெடுத்தது. அவனே நினையாத சுவையூட்டும் பக்கங்களாக அவனது நெஞ்சில் தித்திப்பாய்.

“ரொம்ப பேசிட்டேன் நினைக்கிறேன். என் வேலையே அதுதானே” என்று தொடர்ந்தவள், “என்னோட சந்தோஷமான இந்த நாளின் தொடக்கத்திற்காக எனக்கு பிடித்த பாடல். உங்கள் அனைவருக்காகவும்.

கேளுங்க கேளுங்க கேட்டுட்டே இருங்க. புத்தம் புது காலை. இது உங்கள் ‘சாரல் FM 95.7’. நான் ஆர்.ஜே தர்ஷி” என்றவளின் குரலினைத் தொடர்ந்து பாடல் ஒலித்தது.

*உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…

உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…

உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!

நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்…

நான் போகின்ற வழியெல்லாம்

நீ அல்லவா!

உயிர் சுமக்கின்ற காதலும்

உனது அல்லவா!

‘உன் பிழை தாண்டி

நான் உன்னை நேசிக்கவா!’

இல்லை நீ இன்றி

நான் வாழ வழி தேடவா!

நான் பிழைக்கின்றேன் ஏனோ?

உன் விழிகளில் தானோ!*

கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு அகமும் முகமும் ஒருங்கே சிரித்தது.

பாட்டின் மூலம் அவளின் மனதினை அவனக்குத் தெள்ளெனக் கூறிவிட்டாள்.

அதிலும்,  ‘உன் பிழைத் தாண்டி நான் உன்னை நேசிக்கவா!’ வரி அவனுக்காகவே அவள் சொல்லுவதைப்போல் இருந்தது.

இரண்டு மணிநேரம் நிகழ்ச்சி முடித்து வெளியில் வந்தவள், தனக்காக அத்தனை நேரம் அவன் காத்திருப்பான் என்று நினைக்கவில்லை.

“நீங்க போகலையா?”

“போயிருக்கணுமா?”

வசீயின் ஒற்றை வார்த்தை அவளை சுருட்டி சாய்த்தது அவன் பக்கம்.

“சரி போகலாமா? இன்னைக்கு ஒரே சோகம். வீட்டுல போய் தண்ணி அடிக்கணும். ஐ மீன் புண்பட்ட மனதை சில்லுன்னு ஐஸ் வாட்டர் குடித்து ஆத்தனும்” என்றான்.

“ஏன் என்னாச்சு…?” அவளின் பதட்டம் அவனுக்கில்லை. மாறாக அவனுள் குறும்பு. அவளிடம் அவனுக்கு வம்பு செய்திட அத்தனை பிடித்தது.

“தர்ஷிக்கு மேரேஜ் ஆகிருச்சாம். அதுவும் நேத்து தானாம். மை பேட் லக்” என்றவன் பொய்யான வருத்தத்தோடு கூற,

“யோவ்… உன்னை கொல்லப்போறேன் பாரு” என்றவள் கீழே கிடந்த குச்சியினை எடுத்து அவனை அடிக்கப்போக…

“ஹேய்… அடிச்சிடாதடி! சும்மா உன்னை வெறுப்பேத்தி பார்த்தேன்” என்று போலியாக அலறினான்.

“போயா…” என்று குச்சியினை கீழே போட்டவள், வேகமாக அவனுக்கு பின்னால் வண்டியில் ஏறி அமர்ந்திட…

“நல்லா இருக்கு” என்றவன் வீட்டிற்குச் சென்றான்.

ஆதர்ஷினியை வீட்டில் விட்டுவிட்டு, அவளின் கையில் புது அலைப்பேசி ஒன்றை கொடுத்தான்.

மண்டபத்திலிருந்து வரும்போது அவள் அவளுடைய அலைப்பேசியை எடுக்க மறந்திருந்தாள்.

“வீட்டை லாக் பண்ணிக்கோ ஆது. நான் நைட் வர லேட் ஆகும். நடுவில் எதாவதுன்னாலும் எனக்கு மெசேஜ் பண்ணு. கால் பண்ணிடாத” என்றவன், “குக்கிங் தின்க்ஸ் எல்லாமே வீட்டிலிருக்கு முடிஞ்சா குக் பண்ணி சாப்பிடு, இல்லைன்னா ஆர்டர் பண்ணிக்கோ. பார்த்து பத்திரமா இரு” என்றவன் அவளின் கன்னம் தட்டி, “இருந்துப்ப தானே? சிட்டுவேஷன் கொஞ்சம் சரியில்லை” என்க, அவளோ அவனின் சுண்டு விரலோடு, தன் சுண்டு விரலை பிணைத்து, “ரவுடி சாருக்கு பயம் வருதுபோல” என்று சிரித்தவளாக, “நான் இருந்துப்பேன். போயிட்டு வாங்க” என்று கண்சிமிட்டிக் கூறினாள்.

அப்படியிருந்தும் வசீ, சூரஜ் மூலமாக பூமியை ஆதர்ஷினிக்கு துணையாக வரவழைத்து இருந்தான்.

வசீ கிளம்பிச்சென்ற ஒரு மணி நேரத்திற்கெல்லாம் முறைப்போடு வந்து சேர்ந்தாள் பூமிகா.

நேரம் நகர்ந்தும் பூமி முறைத்தது முறைத்தபடி இருந்தாளேத் தவிர, ஆதர்ஷினியிடம் பேச முற்படவில்லை.

“பூமி பேசுடி…” ஆதர்ஷினி கெஞ்சினாள்.

“நான் அவ்வளவு சொல்லியும் அந்த ரவுடியை கல்யாணம் செய்திருக்க. உன் அப்பா பார்த்த மாப்பிள்ளையுடன் உனக்கு கல்யாணம் அப்படின்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கல தர்ஷி” என்று தன்னுடைய ஆதங்கத்தை பூமி வெளிப்படுத்தினாள்.

“நீ என்னை கல்யாணத்துக்கு கூப்பிடாத போதே இப்படி ஏதும் இருக்கும் நினைத்தேன். ஆனால், இப்படி அவனோட ஓடி வந்திருவன்னு நினைக்கல” என்றாள்.

“ஓடிலாம் வரல” என்ற ஆதர்ஷினி நடந்ததை சொல்ல, பூமி வாய் பிளந்து பார்த்தாள்.

“அந்த பாலாவா இப்படி. அவனை போய் கொஞ்சமே கொஞ்சம் நல்லவன்னு நினைச்சிட்டேனே” என்ற பூமிக்கு ஆதர்ஷினி எத்தனை விளக்கங்கள் கொடுத்தும் மனம் ஆறவில்லை.

அவளே அவளது வாழ்க்கையை கெடுத்துக்கொண்டதாக வருத்தம் கொண்டாள்.

“இப்படியே வருத்தப்பட்டுகிட்டே இருக்காதே” என்ற ஆதர்ஷினி, “டைம் ஆச்சு பாரு. ஜூஸ் குடி. ரெஸ்ட் எடுக்கிறதுன்னா எடு. சும்மா டென்சன் ஆகி, உள்ளிருக்கும் பேபியை பயம்காட்டாதே” என்ற ஆதர்ஷினியின் பேச்சிற்கு பின்னரே, வயிற்றிலிருக்கும் குழந்தையின் நினைவு வந்து பொறும்புவதை பூமிகா நிறுத்தினாள்.

இருவருமே ஒன்றை கவனிக்கத் தவறியிருந்தனர்.

முத்துச்சாமி மகளின் திருமணம் நின்றது தான் பலருக்குத் தெரியும். எதனால் என்று காரணம் தெரிந்திடாத நிலையில், சூரஜிற்கு எப்படித் தெரிந்தது. அதுவும் வசீக்கும் சூரஜிற்கும் என்ன தொடர்பு. சூரஜிற்கு எப்படி வசீயின் வீடு தெரிந்தது என்பதையெல்லாம் ஆராயவே மறந்திருந்தனர்.

******

வீட்டிலிருந்து கிளம்பிய வசீ நேராகச் சென்றது நகரத்தின் மையத்தில் பிரமாண்டமாக இருக்கும் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலிற்குத்தான்.

அறை எண் ஏற்கனவே தெரிந்ததைப்போல் தன்னுடைய வேக நடையில் சென்றவன், அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருக்க, கதவினை திறந்த அடுத்த நொடி, திறந்த நபரின் கழுத்தில் கை வைத்திருந்தான் வசீ.

“அறிவிருக்காடா இடியட். எத்தனை தரம் சொன்னேன், இங்கு நீ உன்னோட பதவிக்கு ஏற்ற தகுதியோடுதான் வரணுன்னு. எதுக்குடா இப்படி தெரியாம வந்திருக்க. உன்னை எவனாவது மோப்பம் பிடித்தால் அவ்வளவு தான்” என்ற வசீ அவனுக்கு பின்னால் வந்த இன்னொருவனையும் பிடி பிடிவென பிடித்துத்துவிட்டான்.

“அவன் தான் விளையாட்டுத்தனமா எல்லாம் செய்வான்னு தெரியுமே. நீயும் அவனோடு சேர்ந்து என்னை டென்சன் பண்ணிட்டு இருக்க?” என்று வசீ காய்ந்தான்.

“ஹேய்” என்ற முதலாமானவன் வசீயை இறுக அணைத்தான்.

“எத்தனை நாளாச்சுடா!”

“நானும்… நானும்…” என்ற இரண்டாமவனும் ஓடிவந்து அவர்களின் அணைப்பில் தன்னை புகுத்திக்கொண்டான்.

“போதும்… போதும்… இதுக்கெல்லாம் இப்போ டைம் இல்லை. ஒழுங்கா வந்து சேரு. அவரையும் கூட்டிட்டு வந்திடு. டைமிங் மிஸ் ஆச்சு உன்னை கொன்னுடுவேன்” என்ற வசீ விரல் நீட்டி மிரட்டியவனாக, அறைக்கு உள்ளே கூட செல்லாது வேகமாக அங்கிருந்து வெளியேறினான். தன்னை யாரும் கவனிக்கின்றார்களா என்று சுற்றுப்புறத்தை பார்வையால் அலசியவனாக.

“ஆனாலும் இவனுடைய கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லைடா. ரொம்பத்தான்… ***ஆ இருக்கான்.”

“நல்ல வேலை அவன் என்னவா இருக்காங்கிற இடத்தில் மியூட் போட்ட… இல்லைன்னா, இப்போவே ரீடர்ஸ்க்கு வசீ யாருன்னு தெரிஞ்சிருக்கும்” என்றான் மற்றொருவன்.

“இப்போ மட்டும் என்னவாம். அவங்களுக்கு வசீ யாருன்னு அல்ரெடி தெரிஞ்சிருக்கும்” என்ற இன்னொருவன், “நாம் யாருன்னும் கெஸ் பண்ணியிருப்பாங்க” என்றவனாக உள் சென்றான்.

அங்கிருந்து கிளம்பிய வசீ முத்துச்சாமியின் ஆட்கள் கூடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபத்திற்கு விரைந்தான்.

இரவு ஒரு சம்பவம் நடந்ததற்கான எவ்வித அடையாளமும் இன்றி அமைதியாகக் காட்சியளித்தது.

மண்டபத்தையே முத்துச்சாமி தலைகீழாக மாற்றியிருந்தார்.

பாலாவின் உடலை அவர் என்ன செய்தாரென்று வசீக்குத் தெரியவில்லை. அவன் தெரிந்துகொள்ளவும் நினைக்கவில்லை.

வசீயை பொறுத்தமட்டில், மாசிலாமணி, சங்கரன், கமிஷனர், குணசேகரன், சாமி, குற்றவேல் இவர்களின் வரிசையில் பாலாவும் கொல்லப்பட வேண்டியவன். ஆதலால் அவனைப்பற்றி அறிய விருப்பம் கொள்ளவில்லை.

மாறாக, இரவு நடக்கப் போகும் நிகழ்விற்காக வெகு ஆவலாகக் காத்திருக்கிறான்…

வசீகரன்/விநோதன்.

*****

இரவு எட்டு மணி.

மண்டபம் இருக்கும் பகுதி யாவும் வசீயின் கட்டுப்பாட்டில் இருந்தது.

முத்துச்சாமி தன்னுடைய ஆட்களின் கீழ் அவ்விடம் உள்ளதென்று நினைத்திருக்க… வசீ தனது ஆட்களின் கீழ் ஒவ்வொரு மூலையையும் சுற்றி வலைத்திருந்தான்.

கடலில் மீன்கள் இருக்கும் பகுதி முழுக்க தன் கூர்மையான பார்வையை படரவிட்டு கொக்கு காத்திருப்பது போல். காட்டுக்குள் வலைக்கு மேல் தானியங்களை பரப்பி விட்டு பறவகைளுக்கு வலை விரித்து வேடன் காத்திருப்பது போல்.

இங்கு வேடன் வசீகரன். வலையில் சிக்கப்போவது…?

முத்துச்சாமி கொடுத்த குறிப்பேட்டில் இருந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் ஐம்பத்தியெட்டு.

அவர்களுக்கெல்லாம் தலைமை முத்துச்சாமி. அவருக்கும் மேலொருவன்.

மொத்தம் அறுபது. கூண்டோடு தூக்க வெறிபிடித்து வேட்டையாடிடத் துடித்துக் கொண்டிருக்கிறான்.

மொத்தமாக சிக்கிடுவார்களா?

முத்துச்சாமியின் நிலை?

எல்லாம் தன்னுடைய திட்டத்தின்படி சரியாக இருக்கிறதா என்று வசீ தனக்குள்ளே ஓட்டிப்பார்த்துக் கொண்டிருக்க… முத்துச்சாமி முதல் ஆளாக அங்கு வந்து சேர்ந்தார்.

“போலீஸ் பிரச்சனை வராதே வசீ?”

“எல்லாம் க்ளியர் பண்ணிட்டேன்.”

“ஏன் கேட்கிறேன்னா… முன்னிருந்த கமிஷனர் நம்ம ஆளு… இப்படின்னு சொல்லிட்டால் போதும், ஒரு காக்கி சட்டையையும் இந்த பகுதிக்கு வராமல் பார்த்துப்பான். இப்போ அப்படியில்லையே… அவனே இல்லையே!” என்ற முத்துச்சாமியின் பேச்சு வசீக்கு கேலிப் புன்னகையை கொடுத்தது.

அவனைப்பற்றி தெரியாது பேசிக்கொண்டிருக்கிறாரே!

“ஒவ்வொருத்தரும் இங்கு வந்து செல்லும்வரை உன்னோட பொறுப்பு வசீ” என்று, முடிக்க நினைப்பவனிடமே காக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.

‘வருவாங்க… ஆனால் போகப்போறது வேற இடம்.’ மனதோடு சொல்லிக்கொண்டான்.

“எல்லாரும் பாதுகாப்பாக வந்து சேர்ந்தாச்சு. அவங்கவளுக்கு புக் பண்ண ஹோட்டலில் இருக்காங்க. நம்ம ஆளுங்க தனித்தனியா கூட்டிட்டு வர போயிட்டாங்க. இன்னும் பத்து நிமிடத்தில் எல்லாரும் இங்கு இருப்பாங்க” என்ற வசீயின் வேலையின் நேர்த்தி முத்துச்சாமிக்கு ஆசுவாசத்தைக் கொடுத்தது.

“நான் முன்னின்று ஏற்பாடு செய்திருந்தாலும், இத்தனை கவனிப்பா செய்திருக்கமாட்டேன் வசீ” என்ற முத்து, ஏதோ பேச தயங்கியவராக பேசினார்.

“அப்புறம் வசீ…” என்று அவர் இழுத்திட…

அவர் என்ன பேசப்போகிறார், எதைப்பற்றி என்று அறிந்தவனாக,

“ஆதர்ஷினி என் மனைவி. என் மனைவியா அவள் எப்பவும் நல்லாவே இருப்பாள். நான் அவளை நல்லாவே பார்த்துப்பேன்” என்றவன், மேற்கொண்டு அவர் மகளென்று பேசுவதில் விருப்பமில்லாது உள்ளே சென்றுவிட்டான்.

வசீயைப் பொறுத்தவரை ஆதர்ஷினி என்பவள் அவனவளாக, அவளாகவே இருக்க விருப்பம் கொண்டான். முத்துச்சாமி என்கிற பாதகனின் பெயர் அவளுடன் இணைவதை அவன் அறவே ஒதுக்கினான்.

சிறிது நேரத்தில் வசீயிடம் வந்தவர்,

“தர்ஷியுடைய போன் வசீ. நான் அங்கு வரதையோ, என்னை பார்க்கிறதோ அவளுக்கு பிடிக்காது. இல்லைன்னா காலையில் நானே அங்கு வந்திருப்பேன். அத்தோடு மகாவும் அவள் மேல் கோபமாக இருக்காள்.” என்று விளக்கம் கொடுத்தவர், “நான் என்னென்ன செய்யனும் சொன்னா செய்திடுவேன்” என்றார்.

அவர் எதை குறிப்பிடுகிறார் என்பது அவனுக்கு நன்றாகவே விளங்கியது.

“எனக்காக வந்த பொண்ணை என்னால் நல்லாவே வச்சிக்க முடியும்” என்று மிக மிக அழுத்தமாகக் கூறிய வசீ, “நாம் நடக்கப்போவதை பார்ப்போம். எல்லாம் முடியட்டும்” என்று நகர்ந்தான்.

முடியட்டும் என்ற வார்த்தை அதிக அர்த்தத்தோடு ஒலித்ததை போலிருந்ததோ.

ஒவ்வொருவராக வர ஆரம்பித்திருந்தனர்.

ஒருவர் வந்து இரண்டு நிமிடங்களுக்குப் பின்னரே, மற்றொருவர் வருமாறு செய்திருந்தான் வசீ.

ஒருவர் வர, அவரைப்பற்றிய அனைத்தும்… செய்த, செய்கின்ற, செய்யும் என எல்லா தகவல்களையும் அவன் ஹோட்டலில் சந்தித்துவிட்டு வந்த நபருக்கு மின்னஞ்சல் மூலம் டாக்குமெண்டாக அனுப்பிக்கொண்டே இருந்தேன்.

“அடுத்து குட்டப்பனா, அவன் தான் அந்த பெரிய தலையா?”

வசீகரனுக்கு வந்த தகவலே அத்தனை அவசரமாக வந்தது.

“இல்லை” என்று அனுப்பிய வசீ, “TN ஹோம் மினிஸ்டர், கவர்னர் வந்தாச்சு” என்றும் அனுப்பியிருந்தான்.

“சி.எம்… லைவ் அப்டேட்டில் இருக்கிறார்” என்று பதில் வந்தது.

“கெட் ரெடி…” என்ற அனுப்பிய வசீ, முகத்தில் மாஸ்க்கினை மாட்டியவனாக முத்துச்சாமியின் அருகில் சென்று நின்றான்.

உள்ளே நுழைந்த குட்டப்பனை, வசீக்கு முத்துச்சாமி அறிமுகப்படுத்த, வசீயிடம் தலை ஆடியதா எனும் வரவேற்பு மட்டுமே.

“என்ன தம்பி மாஸ்க் கழட்டி முகம் காட்டமாட்டிங்களா? உங்களைப்பற்றி முத்து நிறைய சொல்லியிருக்கான். இப்போ அவன் மருமகனா வேற ஆகிட்டிங்க” என்ற குட்டப்பனின் பார்வை, வசீயின் கூர் விழிகளையே ஆராய்ந்தது.

அந்த விழிகள் அவரை நொடியில் கலங்க வைத்திருந்தது. வேறொரு முகத்தை நினைவுப்படுத்தியது. அவர் நினைக்கும் ஆள் அவரின் கண் முன்னே இறந்துவிட்டபோதும் அவன் மீது கொண்ட பயம் அவரைவிடவில்லை. அதனால் வசீயின் மாஸ்க்கினை கழட்ட வைப்பதிலேயே குட்டப்பன் குறியாக இருந்தார்.

“ஓவர் சினீஸிங். வந்திருக்கவங்கலாம் எவ்வளவு பெரிய ஆளுங்க… ஸ்ப்ரேட் ஆகிடக்கூடாதே” என்று நயமாக பேசிய வசீ, “கண்டிப்பா என் முகத்தை பார்ப்பீங்க” என்று குட்டப்பனை அவருக்குரிய மேசைக்கு அனுப்பி வைத்தான்.

சிறு சிறு வட்ட மேசைகள் போடப்பட்டு ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு உண்பதற்கு வேண்டியவை மேசையின் மீதே வைக்கப்பட்டிருந்தது.

முத்துச்சாமிக்கும் தலைமையான ஒருவனைத்தவிர அனைவரும் வந்து சேர்ந்திருந்தனர். அவன் மட்டுமே வர வேண்டும்.

“ஆரம்பிக்கலாமா வசீ?”

“நீங்க ஒருத்தரை சொல்லியிருந்தீங்களேஅவங்க வரலையே?” வசீக்கு இன்றோடு அனைத்தையும் முடித்துவிட வேண்டுமென்கிற எண்ணம்.

“அவர் வந்தாச்சு… இங்கு நடப்பதை பார்த்துட்டுதான் இருக்கார் வசீ” என்ற முத்துச்சாமி ஒலிவாங்கியுடன் மேடை ஏறினார்.

“வந்தாச்சா?” என்ற வசீயின் பார்வை அவ்விடத்தில் சூழ்ந்திருந்த மங்கிய வெளிச்சத்திலும் ஆராய்வில் மின்னியது.

ஒவ்வொரு மேசையாக சுழற்றிக்கொண்டே வந்தவனுக்கு, அவன் அழைத்த ஆட்கள் மட்டுமே இருப்பதாகத்தான் தெரிந்தது. அவன் அழைக்காத அந்த ஒரு நபர், யார்?

இந்த நாளுக்காக வசீ காத்திருந்ததே மொத்தமாக தூக்கிடத்தான். அதிலும் இதற்கு தலைமையே முத்துச்சாமி என்ற நிலையில் அவரை முடக்கிவிட்டால் வேரோடு இக்கூட்டத்தினை அழித்திடலாம் என்று இந்நாளுக்காக காத்திருக்க, முத்துவிற்கும் மேலொருவன் என்ற தகவல் புதிதாக இருந்ததோடு அவனைப்பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்றாலும், இன்று இங்கு வந்துதானே ஆக வேண்டுமென வசீ இருந்திட… அவன் வந்துவிட்டதாக முத்து சொல்லியது வசீயை குழப்பியது.

‘யார்… யார்… யார்? அப்போ நான் கணித்த நபர்?’ வசீக்கு தலை வெடித்துவிடும் போலிருந்தது.

“சார் கூல்ட்ரிங்ஸ்” என்று குரலில் சட்டென்று திரும்பிய வசீ, வெயிட்டர் உடையில் நின்றுருந்தவனை கண்டுகொண்டவனாக வழக்கமான புன்னகையை இதழில் படரவிட்டு மேடையில் முத்துவை கவனித்தான்.

வந்திருப்பவர்களில் சில பெண்களும் அடக்கம். அரசியலில், சுயத்தொழிலில் ஏதோ ஒருவகையில் பேரும் புகழும் பெற்றவர்கள் தான் ஒவ்வொருத்தரும்.

முத்துச்சாமி முதலில் தங்கள் கூட்டத்தில் நடந்த கொலைகளைப்பற்றி பேசி, அதற்கான காரணம் என்ன ஏதென்று தொடர்ந்து, இனி இப்படி நடக்காது தடுக்க என்னவழி, அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்று எல்லாம் பேசி… “இங்கும் அந்த கருப்பு ஆடு வரலாம், அவனை பிடிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்” என்று அவர் சொல்ல மற்றவர்கள் ஆமோதித்தனர்.

அடுத்து அவர்களிடம் புதிதாக வந்துள்ள போதைப்பொருளின் தன்மை, வீரியம் அதன் விளைவு, எத்தனை வகைகள் உள்ளன, அவை எந்த வடிவில் உள்ளன, அதனால் பெறும் லாபம் என்று ஒவ்வொருத்தராக மேடையேறி விளக்கி பேசியதோடு, தங்களிடம் எத்தனை அளவு இருப்பு இருக்கிறது, லாபம் எவ்வளவு, இன்னும் எவ்வளவு வேண்டுமென அனைத்தும் பேசி கீழிறங்கினர்.

உள்ளே அவர்களின் பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்க… அவை யாவும் நேரடி ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தது. வசீயின் திட்டத்தின்படி. அங்கு மண்டபத்தில் உள்ள அனைத்து காமிராக்களும் வசீயின் மடிகணினியின் மூலம், அனைத்து செய்தி சேனல்களிலும் லைவ்வாக ஓடிக்கொண்டிருந்தது.

நகரமே அதிர்வில் இருந்தது.

வெயிட்டர் வேடத்தில் இருந்தவன் தன்னுடைய உண்மை முகத்திற்கு வருவதற்காக அனைத்தும் அங்கு சீராக இருப்பதைப்போல் பார்த்துக்கொண்டான் வசீ.

அவர்கள் பேச பேச… உண்மையையெல்லாம் சொல்ல சொல்ல கொதிக்கும் மனதை அடக்கத்தான் வசீ பெரும்பாடு பட்டுப்போனான்.

வீட்டில் பூமியுடன் இதனை பார்த்துக் கொண்டிருந்த ஆதர்ஷினிக்கு தன் தந்தை தனக்குத் தெரிந்ததை விடவும் மோசமானவர் என்ற உண்மை சொல்ல முடியா வேதனையைக் கொடுத்தது.

“வசீயும் இப்படிப்பட்ட கூட்டத்தில் ஒருத்தன் தான். அவனை போய் கல்யாணம் பண்ணிக்கிட்டியே. இப்போ அவன் ஜெயிலுக்குப் போகப்போறான்” என்று பொறுமிய பூமி, “வசீ விஷயத்தில் அவசரப்பட்டுட்ட, கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்” என்று கடிந்து கொண்டாள்.

இரவு பூமியை அழைக்க வந்த சூரஜ், அவர்கள் பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து, கிளம்ப வேண்டியதை மறந்து அங்கேயே இருந்துவிட்டான்.

பூமி பேசுவதை கேட்ட சூரஜ்…

“முழுசா தெரியாம எதையும் பேசாதே பூமி” என்று அதட்டினான்.

“உண்மை இப்போ தானே வெளியவர ஆரம்பித்திருக்கு. முடிவு தெரிந்த பிறகு பேசலாம். அதுவரை அமைதியா இரு” என்று அடக்கினான்.

மூவரின் கவனமும் தொலைக்காட்சியில் பதிந்தது.

அனைவரும் தங்களின் தொழில் நடைமுறையை விவரித்து முடித்திருக்க…

முத்துச்சாமி அவருக்கு அருகில் ட்ரேவுடன் நின்றிருந்தவனை அழைத்துக்கொண்டு மேடை ஏறினார்.

“உங்க எல்லாருக்கும் நான் பாஸ்ஸாக இருக்கலாம். ஆனால் எனக்கு பாஸ் இவர் தான். மிஸ்டர். தேஜ். நம்ம குட்டப்பனின் மகன். இப்போதுதான் இவருக்கு நம்மை சந்திக்க எண்ணம் வந்திருக்கிறது” என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.

‘தேஜ்…’

வசீயின் உதடுகள் மெல்ல முணுமுணுத்தது. அவனது பின் மண்டையில் சுரீரென்று வலி பரவி நொடியில் அடங்கியது. அவனின் கை முஷ்டி இறுகியது.

‘அவன் உன்னிடம் போட்டு வாங்க ட்ரை பன்றான்.’ இரண்டரை வருடங்கள் ஆகியும், தெளிவில்லாமல் அன்றைய இரவில் அரை மயக்கத்தில் செவி நுழைந்த குரலும் வார்த்தைகளும், இப்போதும் எதிரொலித்தது.

மண்டபத்திற்கு வெளியில் காரில் ஹோம் மினிஸ்டர், மற்றும் கவர்னருடன் அமர்ந்தபடி பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கும், வசீ ஹோட்டலில் சந்தித்த நபருக்கும் அவர்கள் இத்தனை வருடமாகத் தேடியவன் தேஜ் என்பது அதிர்வே.

‘அவனோட கணிப்பு எப்பவுமே பொய்யாகாது.’ சில நாட்களுக்கு முன்பு அவன் யாராக இருக்குமென்று வசீ சந்தேகமாக சொல்லியது உண்மையானதில் வசீயின் புத்தி கூர்மையை மெச்சிக்கொண்டான் அவன்.

தேஜ் பேச ஆரம்பிக்க அவ்விடம் அமைதியை தத்தெடுத்தது.

தேஜ் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாது வெயிட்டர் போல் வந்திருந்த காரணம்…

எதிராளிகளின் தாக்குதல் இருந்தால் வெயிட்டர் என்ற பெயரில் தப்பித்துக்கொள்ளத்தான்.

அவர்களின் கூட்டத்திற்கான காரணம் ஓரளவு முடிந்திருக்க… அனைத்தும் நல்லவிதமாகவே சென்று கொண்டிருந்ததால், சந்தேகத்திற்கு இடமின்றி போக தேஜ் தன்னை வெளியில் காட்டிக்கொண்டான்.

தேஜ்’ஜினை மேடையில் விட்டுவிட்டு வசீயின் அருகில் வந்த முத்து…

“இங்கு நம்ம ஆட்களைத் தவிர்த்து யாரிருந்தாலும் சத்தமில்லாம தூக்கிடு வசீ… இது நாங்க ஒன்று கூடுவதற்காக மட்டுமல்ல, எதிராளி யாரென்பதை பிடிப்பதற்கும் தான்” என்று சொல்லி தன்னிருக்கையில் அமர…

‘திருடனிடமே சாவியா’ என்று சிரித்துக்கொண்டான் வசீ.

   

error: Content is protected !!
Scroll to Top