நேச நெஞ்சங்கள் 23

உயிர் உறை 23

நேசப்பிழை 16

மேடையில் நின்றிருந்த தேஜ் தன் பார்வையை சுழற்றி ஒவ்வொருவரையும் தனக்குள் படம் பிடித்தவனாக பேச ஆரம்பித்தான்.

“மூளை, திட்டம் எல்லாம் நானாக இருக்கலாம். ஆனால் அதனை செயல்படுத்தி இந்தளவிற்கு லாபம் கொடுக்கும் நீங்கதான் என்னைவிட திறமையானவர்கள்” என்றவன்,

“இதுவரை நம் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யாது, யாரின் காண்பார்வைக்கும் சிக்காது உணவுப்பொருட்கள் வடிவத்தில் விற்பனை செய்து கொண்டிருந்தோம். அதனை சற்று மேம்படுத்தி இனி தண்ணீர் மூலமாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறேன்” என்று தன்னுடைய பேன்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு ஜான் அளவிற்கான சிறிய தண்ணீர் பாட்டில் ஒன்றினை எடுத்து காண்பித்தான்.

“இதில் ஒரே ஒரு சிப் செய்தால் போதும்… சொர்க்கம் தான்” என்றிட, “இதன் மூலக்கூறு எனக்கு மட்டுமே ரகசியமானது. ஆதலால் வேண்டுமென்பவர்கள் முத்துச்சாமியிடம் முன்பணம் கொடுத்துவிடுங்கள்” என்றவன் மற்றொரு பாக்கெட்டிலிருந்து மிகச் சிறிய அளவிலான சாக்லேட் ஒன்றை எடுத்தான். இருவிரலில் பிடிபடும் அளவுக்கே இருந்தது.

“சின்னதா இருக்கேன்னு நினைக்காதீங்க வீரியம் அதிகம். உங்களுக்கேத் தெரியும் நமக்கு இது மட்டும் தொழிலல்ல… இப்போலாம் பொண்ணுங்களை கேட்குற காலம் போய் ஆண்களையே கேட்க ஆரம்பிச்சிட்டாங்க… அந்த வகையில் ஆணையோ பெண்ணையோ நாம் போய் தூக்கத் தேவையில்லை. இதை சாப்பிட்டால் போதும்” என்றவன் அங்கிருந்த திரையில் அதனை காட்சியாய் காண்பிக்க, சாக்லேட்டினை சுவைத்த ஆணும் பெண்ணும் தங்களின் உணர்வுகள் இயல்பிலிருந்து பலமடங்கு அதிவேகத்தில் பாய்ந்தோட சுயம் தொலைத்து என்ன செய்கிறோம் என்பதே அறியாது தெரியாது அந்த சுழலுக்குள் தானாக ஒருவரைத் தேடி பிடித்து செல்லும் காட்சி பார்க்கவே வசீக்கு முகம் சுளிக்க வைத்தது. ஆனால் அங்கிருந்தோர் அதனை அத்தனை ரசனையோடு பார்த்திருந்தனர்.

துப்பாக்கியை எடுத்து டப் டப்பென்று சுட்டுத்தள்ள வேண்டும் போலிருந்தது வசீக்கு.

மொத்த நாடும் இதனை நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறது என்பது தெரியாது, மேலும் மேலும் காட்சிகள் ஓடிக்கொண்டே இருந்தது.

உப்பளத்தில் இந்த சாக்லேட்டைத்தான் மறைத்து மறைத்து தேஜ்ஜின் ஆலோசனைப்படி பாலாவை வைத்துக்கொண்டு முத்துச்சாமி தயாரித்துக் கொண்டிருந்தார். முக்கியமாக இக்கூட்டமே அந்த சாக்லேட்டினை விளம்பரப்படுத்துவதற்குத்தான்.

அன்று ஆதர்ஷினியை தன் வழிக்கு கொண்டுவர இந்த சாக்லேட்டினைத்தான் பாலா அவளுக்கு கொடுக்க இருந்தான். அது எப்படியோ நடக்காமல் போயிட, விசாலாட்சி இல்லத்தில் குழந்தைகளுக்கு கொடுத்திட்டான். அதனுடைய தன்மையை ஏற்க முடியாத குழந்தைகள் அப்படியே தலை தொங்கி மயங்கி சரிந்திருந்தனர். குழந்தைகள் என்றும் பாராது பாலா செய்ததால் தான், அவனின் இறப்பிற்கு வசீ சிறு வருத்தமும் கொள்ளவில்லை.

இப்போதும் அதனை நினைக்க…

‘இதையாடா குழந்தைகளுக்கு கொடுத்தாய்?’ என்று உயிருடன் இல்லாத பாலாவின் மீது அத்தனை கோபம் கொண்டான் வசீ.

அவ்வளவுதான் என்பது போல் மேடையைவிட்டு கீழிறங்கிய தேஜ் ஒய்யாரமாகக் குட்டப்பனின் அருகில் அமர,

வசீக்கு உடல் இறுகியது.

“போதும்… லெட்ஸ் ஸ்டார்ட் த கேம்” என்று தகவல் அனுப்பிவிட்டு அடுத்த நிமிடம் மேடையின் மீதேறி ஒலிவாங்கியை கையிலெடுத்த வசீ,

“சமுதாயத்துக்கு நல்லது செய்யும் நிகழ்வு இங்கு நடந்திட்டு இருக்கும்போது, சீஃப் கெஸ்ட் இல்லாமல் எப்படி?” என நக்கல் குரலில் கேட்க, இவன் என்ன பேசுகிறான் என்ற ரீதியில் அனைவரும் வசீயையே பார்த்திருந்தனர்.

தொலைக்காட்சியில் வசீயை பார்த்த பூமி,

“இருக்கிறதே கொள்ளைக்கூட்டத்தில் தான். இதுல மாஸ்க் எதுக்காம்?” என்று எரிந்து விழுந்தாள். பூமி தர்ஷியின் வாழ்க்கை குறித்த பயத்தால் முணுமுணுத்துக்கொண்டே இருந்தாள்.

“கெஸ்ட்டா யாரு வசீ? என்னை கேட்காம ஏன் அரேன்ஞ் பண்ண?” முத்துச்சாமி அமர்ந்திருந்த இடத்திலிருந்தே கேட்க,

“நீங்க சொல்றதை அவன் ஏன் கேட்கணும்?” என்றபடி உள் நுழைந்திருந்தார் வசீ ஹோட்டலில் சென்று சந்தித்த நபர்.

அவர் கேரளா முதலமைச்சர் யதுநந்தன். (யது முதல்வர் ஆகியது எப்படி என்பது அவனது பாகத்தில் வரும்.) இத்தனை நாட்களும் வசீக்கு வரும் ரகசிய அழைப்பு மற்றும் தகவலுக்கு சொந்தக்காரர் இவர் தான்.

அவரைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் ஹோம் மினிஸ்டர் மற்றும் கவர்னர் உள்ளே வந்தனர்.

யதுவை பார்த்ததும் குட்டப்பனின் முகம் வெளிறியது. கண்கள் பயத்தில் உருண்டது. தேஜ் தப்பிப்பதற்கான வழியை தேடத் துவங்கினான்.

முத்துச்சாமிக்கு புதிதாக அங்கு பிரவேசித்த மூவரையும் அரசியலில் இருந்ததால் நன்கு தெரிந்திருந்தது.

முகத்தில் அரும்பிய வியர்வையை தோளில் கிடந்த துண்டால் ஒற்றி எடுத்தவர்,

“வசீ என்ன காரியம் பண்ணிட்ட?” என்று அதட்டினார்.

“நீங்க அதட்டினால் அடிபணிய… சொன்னா சொன்னதை உடனே செய்திட நான் வசீகரன் இல்லை. விநோதன்… விநோதன் ஐ.பி.எஸ். Assistant commissioner of police and now, Narcotics Intelligence Officer (Undercover).” சிங்கமென உறும்பியவன் தன் முகத்திலிருந்த மாஸ்க்கினை அகற்ற, யதுவின் விசில் சத்தம் அவ்விடத்தை நிறைத்தது.

“அய்யோ இப்போ நீங்க சி.எம். அடக்கிவாசிங்க” என்ற பாசிலின் வார்த்தையில் தான் யது உணர்ச்சிவசப்பட்டுவிட்டதை எண்ணி பாசிலிடம் அசடு வழிந்தான்.

விநோதன் தான் யாரென்று அறிவிக்க… முத்துச்சாமி அப்பட்டமாக தன் அதிர்வை காட்டினார். குட்டப்பனின் நிலையோ சொல்லவும் வேண்டுமோ?

தங்கள் கைகளால் கொன்று கடலில் தூக்கியெறிந்த விநோதனை உயிருடன் கண்டுவிட்டதில் குட்டப்பன் பேயறைந்ததைப்போல் அரண்டு நிற்க… தேஜ் எப்படி எனும் ஆராய்ச்சியில் சுழன்றான்.

“என்ன குட்டப்பன் நானெப்படி உயிரோடுன்னு யோசிக்கிறியா?” என்ற வசீ, “அப்புறம் சொல்றேன்” என்றான்.

“நீ போலீஸா?” முத்துச்சாமி அதிர்வாய் வினவினார்.

“அஃப்கோர்ஸ் மிஸ்டர். முத்துச்சாமி” என்ற வசீ, “டேக் பொசிஷன் மை பாய்ஸ்” என்றிட…

முத்துச்சாமியின் ஆட்கள் போலிருந்த அனைவரும் பெரிய பெரிய துப்பாக்கிகளை கைகளில் ஏந்தியவர்களாக அறுபது பேரையும் சுற்றி வளைத்து நின்றனர். அங்கு பேரமைதி குடிகொண்டது.

தேஜ் கண்காட்டிட புரிந்தது எனும் விதமாக குட்டப்பன் அவசரமாக தன்னுடைய துப்பாக்கியை தேடிட… அவ்வறைக்குள் நுழைவதற்கு முன்பு வாயிலில் வைத்து பாதுகாப்பிற்காக என்று அலைப்பேசி முதல்கொண்டு உடமைகள் அனைத்தும் வாங்கி வைத்துக்கொண்டது அப்போதுதான் நினைவு வந்தது.

“எல்லாமே பிளான் தேஜ்.” குட்டப்பனின் மெல்லொலி அமைதியில் நன்கு எதிரொலித்தது.

“எஸ்… பிளான் தான். கிட்டத்தட்ட மூன்று வருட பிளான்” என்ற விநோதன் (இனி வசீ விநோதனாக) அங்கு வந்திருந்த தலைவர்கள் மூவரையும் மேடையில் அமர்த்தி ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தான்.

“தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு இங்கு நடந்தவை, நடக்கப்போவவை யாவும் அதிர்வாக, வருத்தமாக இருக்கும். ஆனால் நம் நாட்டின் நிலை இதுதான். இவர்கள் கையில் தான்” என்று விநோதன் தொடங்கியதுமே போதைப்பொருள் கூட்டத்தினர் ஒருத்தர் முகத்திலும் ரத்தம் இல்லை. பயத்தில் வெளிறிப்போயினர்.

அப்போதுதான் அங்கு நடக்கும் யாவும் நேரடி ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்து, அனைவரும் தங்களின் முகத்தினை மூடிட முயற்சிக்க,

“முழுசா நனைஞ்ச பின்னாடி முக்காடு எதுக்கு?” எனக் கேட்டு சத்தமாக சிரித்தான் யது.

“அடிக்கடி சின்ன பையன்னு ப்ரூவ் பன்றிங்க யதுநந்தன்” என்ற தமிழக ஆளுநர், “உங்களுடைய பதவியை ஞாபகம் வச்சிக்கோங்க” என்றார்.

“ட்ரை பன்றேன். முடியுறதில்லை” என்ற யதுவை பார்த்து அவரே சிரித்துவிட்டார்.

முதன் முதலில் விநோவிற்கு சந்தேகம் ஆரம்பித்தது, திருவனந்தபுரத்தில் இருக்கும் கேக் கடையில் தான். தன்னுடைய மகன் இறந்துவிட்டதாக ஒருவர் உடற்கூறு ஆய்வு அறிக்கையின் உடன் விநோவை நேரில் சந்தித்து போதைப்பொருள் கலந்த கேக் சாப்பிட்டதால் பையன் இறந்துவிட்டான் என்று சொல்லி புகார் அளிக்க… அன்றே அக்கடைக்கு நேரடியாக சென்று போதைப்பொருளை கண்ணுக்கு மறைத்து கேக் மூலமாக விற்பனை செய்கின்றனர் என்பதை உறுதி செய்தே கடையை மூடி சீல் வைத்திட்டான்.

அதன் பின்னர் தான், அது குட்டப்பனின் கடையென்றும், அவனக்கும் மேல் போதைப்பொருள் உலகம், நாடு முழுவதும் புற்றுசெல்கள் போல் பரவியிருக்கிறது என்பதும் தெரிந்து ஒரு திட்டம் வகுத்தான்.

அந்த திட்டம் படித்துக்கொண்டிருக்கும் வாசகர்களுக்கு தெரிந்திருக்குமே😁😜!

குட்டப்பனின் மறுபக்கத்தை ஆராய்ந்ததில், அவர் அதிகம் தொடர்பு வைத்திருந்தது தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் இருக்கும் முத்துச்சாமியுடன் தான். அது தெரிந்ததும், முத்துச்சாமியின் பின்புலத்தை அடி வரை தெரிந்துகொண்டதில் முத்துச்சாமி தான் இவர்களுக்கு எல்லாம் முதன்மை என்று விநோதன் அறிந்துகொண்டான்.

எப்படியாவது தமிழ்நாட்டிற்கு தூத்துக்குடிக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு செல்ல வேண்டுமென்று விநோ எதிர்பார்த்த தருணத்தில் தான், குட்டப்பனே அவனுக்கு மாற்றலுக்கு வழிவகை செய்வதாக சொல்லிட… அதனைக்கொண்டு தான் ‘தமிழகம் சென்று முத்துச்சாமி மற்றும் அவரது கூட்டத்திற்கு எதிரான ஆதாரங்களை சேகரிக்கின்றேன்… எப்படியும் வருடங்கள் ஆகலாம் அதுவரை குட்டப்பனை உன் பார்வையில் வைத்துக்கொள்’ என்று விநோ யதுவிடம் சொல்ல அந்த கூட்டத்தைப் பற்றித் தெரிந்து முதலில் மறுத்தாலும், மக்களின் நலனுக்காக என்று யதுவை விநோதன் ஒப்புக்கொள்ள வைத்தான்.

அந்நேரத்தில் தான் குட்டப்பன் தன் ஆட்களை வைத்து, விநோதனை மடக்கிட அவர்களை முறியடுத்து விநோதன் நேரடியாகவே குட்டப்பனை சிக்க வைத்திட முயற்சிக்க… விநோ எதிர்பாராத விதமாக பின்னாலிருந்து தாக்கப்பட்டான்.

பின் மண்டையில் விழுந்த சுளீரென்ற அடியில், நரம்பிற்குள் வலி பரவி கண்கள் சொருக அரை மயக்கத்தில் தனக்கு முன் வந்து நின்றவனின் முகத்தை கலங்களாகத்தான் விநோவால் பார்க்க முடிந்தது.

ஆனால் அவனது குரல் விநோவின் ஆழ் மனதில் நன்கு பதிந்து போனது.

குட்டப்பன் தேஜ் என்று விளித்தது அவனுடன் பேசியது, இருவரும் சேர்ந்து விநோவை மூட்டையில் கட்டி கடலுக்குள் போட்டதென்று அனைத்தும் விநோவின் ஆழ் மனதில் பதிந்து கொண்டு தானிருந்தது.

அன்றைய இரவு ஒரு பெண் கடத்தப்பட்டுவிட்டதாக கால் செய்ததுமே, அது குட்டப்பனின் வேலையென்று விநோ கண்டறிந்துவிட்டான். அங்கு செல்லும் தனக்கு என்ன வேண்டுமென்றாலும் ஆகலாம் என்று யூகித்து தன்னுடைய லைவ் லொக்கேஷன் யதுவிற்கு செல்லுமாறு செய்துவிட்டே குட்டப்பனிடம் சென்றான்.

யதுவால் வர முடியாத நிலை. அவனின் பதவி தடையாக இருந்திட, பாசிலை அனுப்பி வைத்தான்.

குட்டப்பன் ஒரு மூட்டையோடு படகில் ஏறும்போது தான் பாசில் அவ்விடம் வந்து சேர்ந்தான்.

அவ்விடத்தில் விநோவின் வண்டியை பார்த்ததும், அவன் ஆளில்லாததும் குட்டப்பனுடன் முதுகைக் காட்டிக்கொண்டு தேஜ் உடனிருந்திட, அவர்கள் தான் விநோவை ஏதோ செய்துவிட்டார்கள் என்று உடனடியாக யதுவிற்கு தகவல் அளித்தான் பாசில்.

குட்டப்பனின் படகு ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்திட… அவர்கள் சரிசெய்திடும் நேரத்தில் நண்பனுக்கு ஆபத்தென்று தனது உயரம், பதவி என அனைத்தும் மறந்தவனாக யது வந்து சேர்ந்திருந்தான்.

அவர்களை பின்தொடர்ந்து சிறு இடைவெளியில் இருவரும் சென்றிட…

“குட்டப்பனுடன் இருப்பவனின் முகம் தெரியவில்லையே” என்ற யது, “அவனின் பின் உருவம் எனக்கு பழக்கப்பட்டதா தான் தெரியுது” என்றான்.

“நாம் பின்தொடர்வது அவனுங்களுக்குத் தெரியாதா யது?” என்று சந்தேகமாகக் கேட்டிருந்தான் பாசில்.

“தெரியாமல் இருக்காது. இது குட்டப்பனோட இடம். அவனுங்க ஆட்கள் மட்டும் பயன்படுத்தும் இடம். அவன் என்ன செய்தாலும் காட்டிக்கொடுக்க மாட்டானுங்கிற தைரியம். இப்பவும் அவனுடைய ஆளு யாரோ மீன்பிடிக்க செல்வதாகத்தான் நினைத்திருப்பான்” என்ற யதுவின் எண்ணம் உண்மை எனும் வகையில் தான் குட்டப்பன் தேஜ்ஜிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

“நம்ம ஆளுதான் எவனோ மீன் பிடிக்க வரான் போலிருக்கு. அடுத்து மீனுக்குள் வைத்து பொருளை எப்படி கை மாத்துறதுன்னு பார்க்கணும்” என்ற குட்டப்பன் தேஜுடன் சேர்ந்து ஒரு மூட்டையை கடலுக்குள் போடுவதை பார்த்த யது, அவர்களது போட் மறுமுனை திரும்பிய அடுத்த கணம் நீருக்குள் பாய்ந்திருந்தான்.

நீருக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் மூட்டைக்குள்ளிருந்து வெளிவர விநோதன் முயற்சித்துக் கொண்டிருந்தான். அரை மயக்க நிலையிலும்.

கயவர்களை கூண்டோடு அழித்திட வேண்டுமென்கிற வெறியே விநோதனை போராட வைத்தது. அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது தான் மீட்கப்படுவோம். உயிர் பிழைப்போம் என்று.

கைகள் மற்றும் கால்கள் தான் கட்டப்பட்டிருக்கிறதே என்ற எண்ணத்தில் மூட்டையின் முடிச்சினை சாதாரணாமாக விட்டிருந்தான் தேஜ்.

விநோதனின் முட்டி மோதும் அசைவில்,  மூட்டையினை கட்டியிருந்த கயிற்றின் முடி அவிழ்ந்து, கோணியை உதறி தள்ளியவனாக விநோதன் வெளியில் வர… கட்டப்பட்டிருந்ததால் அவனால் நீந்த முடியவில்லை.

மூட்டையிலிருந்து வெளியில் வந்தும் திணறும் நிலை தான். கிட்டத்தட்ட உயிர் போராட்டம்.

கைகள் மற்றும் கால்கள் கயிற்றில் பிணைக்கப்பட்ட நிலையிலேயே, மூச்சுக்காற்றுக்கு தவித்தவனாக உயிர் சுவாசம் வேண்டி… நீரினை உந்தி தள்ளியவனாக மேலே வர போராடியவனை காக்கும் கரமாக தனக்குள் இழுத்திருந்தான் யது நந்தன்.

நீருக்குள் குதித்திருந்த யதுவிற்கு விநோவை கண்டுபிடிப்பது அத்தனை சிரமமாக இருந்தது.

வேகம் என்றால் அப்படியொரு வேகத்தில் தண்ணீரை வாலால் சுழற்றி அடிக்கும் மீனாக நீந்தி நுண் பார்வையால் கலங்களாக மங்கிய நீருக்குள் தன்னுயிரான நண்பனை கண்டுவிடமாட்டோமா என்ற பரிதவிப்பில், மூச்சுக்கு நுரையீரல் முண்டியடித்த போதும், சுவாத்திற்காகக்கூட நீருக்கு மேலெழும்பிடாது விநோவை தேடியவனின் கண்ணில் பட்டது, மேலெழும்ப முடியாது தண்ணீருக்குள் அமிழ்ந்தும் உடலை முயன்று மேல் வர முந்திக்கொண்டிருந்த விநோவைத்தான்.

விநோவின் உயிர் போராட்டம் சித்தம் கலங்கச்செய்திட, தண்ணீரை கையால் கிழித்து நீந்தியவன் சடுதியில் விநோவின் கரத்தினை பற்றி இழுத்தவனாக மேல்நோக்கி நீந்தினான்.

யதுவின் கையில் தான் அடைக்கலம் ஆகிவிட்டோம் என்கிற பெருத்த நிம்மதியில், அதுவரை மயக்கத்திற்கு செல்லாது சுயம் இழக்கத் துடித்துக்கொண்டிருந்த நினைவை இழுத்து பிடித்து வைத்திருந்த விநோதன் கண்களை மூடிக்கொண்டான்.

நீருக்கு மேலே படகிற்கு அருகில் வந்த யது,

“பாசில்” என்றழைக்க, யது குதித்த பக்கமே அவனது வருகைக்காகக் காத்திருந்த பாசில், எதிர்பக்கம் கேட்ட யதுவின் விளிப்பில் ஓடோடி வந்து, யது தூக்கிக் கொடுக்க முயற்சித்த விநோதனை படகிலிருந்தபடி பாசில் இழுத்தவனாக… படகின் தரையில் கிடத்தினான்.

“இவனுங்க எதுக்கும் அஞ்ச மாட்டானுங்க போல” என்றான் பாசில் படகில் ஏறி குதித்த யதுவிடம்.

காக்கி உடையில் தன்னுடைய பதவி தெரிந்தும் மிடுக்குடன் அச்சம் என்பதே சிறிதுமின்றி நேர்பார்வையாய் தன்னிடம் பேசிச்சென்ற விநோவின் கம்பீரத் தோற்றம் கண்முன் வந்து, தற்போதைய நிலையை ஒப்பிட்டு யதுவிற்கு கண்கள் கரித்துக்கொண்டு வந்தது.

“விநோ…” அழைத்தவனின் குரல் தழுதழுப்பாய்.

“உன்னை நான் விட்டிருக்கக்கூடாது. என்னை பாரு விநோ. துருவுக்கு நான் என்னடா பதில் சொல்வேன்.” யதுவின் அழுகை பாசிலை உலுக்கியது.

தன்னுடைய அப்பாவின் இறப்பின் போதுகூட திடமாக நின்றவன், விநோவிற்காக கலங்குவதை கண்ட பாசிலுக்கும் அழுகை வந்தது.

தானும் யதுவுடன் சோர்ந்து போயிடக் கூடாதென தனக்குள் உருப்போட்டு திடமாக நின்ற பாசில் யதுவின் அரற்றலை கனத்த மனதுடன் கேட்டபடி படகினை கரைக்கு கொண்டு வந்திருக்க…

“அடுத்து என்ன யது?” எனக் கேட்க, அப்போதுதான் நிகழ் மீண்டான் யது.

“என் விநோவுடைய இந்நிலைக்கு நான்தான் காரணம் பாசில். அவனை இங்கு வரவே நான் விட்டிருக்கக்கூடாது” என்று மேலும் புலம்பலைத் தொடர்ந்தவன், “நம்ம தனாவை வீட்டுக்கு வரசொல்லு பாசில். யாரென்ன என்று சொல்லாம விநோவின் நிலையை மட்டும் சொல்லி, தேவையான மெடிக்கல் கிட்டோடு வரச்சொல்லு. ஹய்லி கான்பிடன்ஷியல் மென்ஷன் பண்ணு” என்றவன் விநோவை தன்னுடைய வீட்டிற்கு தனக்கென்று இருக்கும் ரகசிய வழியின் மூலம் கொண்டுவந்திருந்தான்.

தனா யதுவின் தந்தையின் நெருங்கிய நண்பரின் மகன். ஒரு உறவினன் போல. யதுவின் மருத்துவ ஆலோசகரும் கூட.

“என்னடா யது… யாருக்கு என்னாச்சு?” பதட்டத்துடன் உள்ளே வந்த தனா, யாருக்கென்று சொல்லாது பாசில் காரணம் மட்டும் சொல்லியிருக்க, யதுவிற்குத்தான் அடிபட்டு விட்டதோ என்று பயந்து ஓடிவந்தவன், தன் முன்னால் நன்றாக நின்றிருக்கும் யதுவை பார்த்ததும் தான் பதட்டம் நீங்கியவனாக அவனுக்கு ஒன்றுமில்லை என்று ஆசுவாசம் கொண்டவனாக அப்புறம் ‘வேறு யாருக்கு?’ என்று கேட்டிருந்தான்.

கசங்கிய யதுவின் கண்கள் காட்டிய திசையில் பயணித்த தனா, விநோவை யாரென்றேல்லாம் கேட்கவில்லை.

யது அவனுக்காக கலங்கி நிற்கின்றான் என்றால் அவன் அவனுக்கு இன்றியமையாதவன் என்பதை யூகித்த தனா தன் பணியை செய்தான்.

விநோவை முழுதாக பரிசோதித்தவன்,

“பின் மண்டையிலும், முன் தலையிலும் தடிமனான இரும்பால் அடித்திருக்காங்க. மற்றபடி வேறெங்கும் காயமில்லை. பின் தலையில் மட்டும் ரத்தம் உறைந்திருக்கு” என்றவன் சுத்தம் செய்து தையலிட்டு, “முன்நெற்றி காயம் ஆழமில்லை” என்று மருந்திட்டு கட்டிட்டான்.

“காயம் பெரிதா இல்லைன்னானாலும், கான்ஷியஸ் மிஸ் ஆகியிருக்கு. ஸ்கேன் பண்ணி பாக்குறது பெட்டர். உள்ளுக்குள்ள பிளட் க்ளாட் எதுவும் இல்லைன்னா சேஃப் ஸோன் தான்” என்றதோடு, வலி நிவாரணி ஊசியையும், மருந்தினையும் ஐவி மூலமாகவே விநோவின் உடலுக்குள் செலுத்தி… விநோ கண் விழிக்கும் வரை உடனிருந்தான் தனா.

என்ன தான் தனா உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லையென்று சொல்லியிருந்தாலும், தண்ணீருக்குள் அந்நிலையில் விநோவை கண்டிருந்த யதுவிற்கு அவன் நினைவு மீளும் வரை அவனது உயிர் அவனிடமே இல்லை.

கண் திறந்து விநோவிற்கு முதலில் நினைவிற்கு வந்தது, தன்னை அடித்தும், அடுத்து ஒலித்த குரலும் தான்.

“விநோ…” வேகமாக வந்து கட்டிக்கொண்ட யதுவின் பிடியில் இருந்தபடியே,

“ஒவ்வொருத்தனையும் தூக்கணும் யது. உணவுப்பொருட்களில் அதற்கு ஏற்ற வகையில் கலப்படம் செய்றது போதாதுன்னு, போதைப்பொருட்களும் அதன் மூலம் கடத்த ஆரம்பிச்சிட்டானுங்க. இவனுங்கெல்லாம் கேன்சர் செல்ஸ் மாதிரி. அதிவேகத்தில் பரவிடுவானுங்க” என்றான்.

உணர்ச்சிவசத்தில் பேசியதில் பின் மண்டையில் வலி ஏற்பட, முகம் சுருக்கினான்.

பதறிய யது…

“காம் டவுன் விநோ. கொஞ்ச நாளாகட்டும். இப்போதான் மரணத்தை தொட்டு வந்திருக்க. உடல் தேரட்டும். வேறொரு திட்டம் போடுவோம்” என்று எவ்வளவோ எடுத்துக்கூறியும் விநோ தன் பிடியில் நிலையாக நின்றான்.

“முன்பு உன்னிடம் சொல்லிய அதே திட்டம் தான். குட்டப்பனை ஆட்டுவிப்பது முத்துச்சாமி. அவனைப்பற்றி விசாரித்தவரை அத்தனை எளிதா அவனை தொட்டுவிட முடியாது. அதனால் நான் அவங்களில் ஒருவனா முத்துச்சாமியிடம் இணைந்து தான் இவர்களை அழிக்க முடியும். அத்தோடு அந்த கூட்டத்தில் நானிருந்தாதான், அவர்கள் எதுவரை பரவியிருக்காங்கன்னு தெரிஞ்சிக்க முடியும். அதற்கு மாதங்கள் பல ஆகலாம். இங்கிருந்து டிரான்ஸ்பரில் போய் போலீசாக அவர்களை பிடிக்க வேண்டுமென்று தான் நினைத்தேன். ஆனால், போட்டில் போகும்போது குட்டப்பனும், அவனுடன் இருந்தவனும் பேசியவரை அவர்கள் நாடு முழுவதும் இருக்காங்கன்னு தெரியுது. அதனால் நிச்சயம் நான் அவங்க கூட்டத்தில் சேர்ந்தே ஆகணும்” என்ற விநோ தலையை தாங்கி பிடித்தவனாக மேற்கொண்டு தொடர்ந்தான்.

“குட்டப்பன் என்னை கொன்றது கொன்றதாகவே இருக்கட்டும். அப்போதுதான் முத்துச்சாமி இடத்தில் நானென்ன செய்தாலும் என்மீது சந்தேகம் வராது” என்ற விநோ, “உங்க மூன்று பேரைத் தவிர… நான் செத்தது செத்தது தான். துருவ் உட்பட” என்றிட, யது விநோவின் முகத்தில் தெரிந்த அழுத்தத்தில்… இனி என்ன சொன்னாலும் பின்வாங்கிடமாட்டான் என்று அறிந்து, அவனது திட்டத்திற்கு இசைந்தான்.

“இங்கு உன் பதவியை வைத்து நீதான் எல்லாம் செய்ய வேண்டும்” என்ற விநோ, அடுத்த நாள் தனாவுடன் யதுவின் மறைமுக பாதுகாப்பில் தமிழகம் வந்து சேர்ந்தான்.

அங்கு வைத்துதான் விநோவிற்கு அனைத்து பரிசோதனைகளையும் தனா செய்தான். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகின. சிறு வலியின்றி குணமாக. நடக்கும்போது தலையில் வலி உண்டாகிறதென்று விநோ அவஸ்தைப்பட, அதற்குரிய பரிசோதனைகள், சிகிச்சைகள் என்று மேலும் ஒன்றரை மாதம் சென்ற பின்பே விநோ முழுமையாக குணமடைந்தான்.

அதற்குள் விநோ இறந்துவிட்டதாக அங்கு யது நம்ப வைத்துவிட்டான். அன்றைய இரவில் விநோ அணிந்திருந்த ஆடை முதல் அனைத்தும், பாசில் ஏற்பாடு செய்து கொண்டுவந்திருந்த ஏற்கனவே இறந்த உடலுக்கு அணிவித்து அதனின் முகத்தை மீன்கள் சிதைத்தது போல் செய்து மூன்றாம் நாள் கடற்கரையில் போட்டு, அது விநோதன் தான் என்று ஊடகங்களின் மூலம் நம்பச் செய்திருந்தான்.

“கடலில் கல்லை கட்டி போட்டவன் எப்படி கரை ஒதுங்கினான்?” என்ற தேஜ்ஜின் சந்தேகத்தை, “அதான் மீனெல்லாம் சேர்ந்து அவன் முகத்தையே அடையாளம் தெரியாத மாதிரி மாத்திருச்சே. மனுஷனையே சிதைக்க தெரிந்த அதுங்களுக்கு கட்டிய கயிற்றை சிதைக்க தெரிந்திருக்காதா?” என குட்டப்பன் புறம் தள்ளினார்.

“எப்படியோ அவன் இறந்துவிட்டான்” என்ற தேஜ்ஜும் தன் வேலையில் கவனத்தை திருப்பிவிட்டான்.

இந்த இடத்தில் விநோதன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த தேஜ் முடிந்தவரை தன் தந்தை குட்டப்பனை முறைத்தான்.

“கொஞ்சம் கூட அறிவேயில்லாம நீயெப்படிய்யா அரசியலில் இருக்க?” எரிந்து விழுந்தான்.

“அரசியலில் இருக்க அறிவு வேண்டாம்ப்பா. பணமும், ஆசையும் போதும்” என்று சூழ்நிலை புரியாது ஜோக்கென்று கடித்து வைத்தவரை நாய்கள் விட்டு கடித்து வைக்க வேண்டுமென்று தோன்றிய எண்ணத்தை ஒதுக்கி மேலும் விநோதன் சொல்லிக்கொண்டிருந்த அவர்களின் திட்டம் அரங்கேறியவற்றை கேட்கத் துவங்கினான் தேஜ்.

விநோதன் முத்துச்சாமியிடம் எப்படி சேர்வது என்று யோசிக்க, அவனுக்கு உதித்த யோசனை, தானே ஆட்கள் வைத்து அவரை கொலை செய்திட நாடகம் நடத்தி, தான் காப்பாற்றுவது போல் நெருங்கலாம் என்பது.

அதற்கு அவசியமே இல்லையெனும் விதமாக பாலாவே அதற்கு வழியமைத்துக்கொடுக்க… அதனை வசீயாக களமிறங்கிய விநோதன் பாலாவின் முயற்சியிலிருந்து முத்துச்சாமியை காப்பாற்றி அவரின் கூட்டத்தில் இணைந்து கொஞ்சம் கொஞ்சமாக முத்துச்சாமிக்கு இன்றியமையாதவனாக மாறியிருந்தான்.

அப்படித்தான் அவர்கள் உப்பளத்தில் உப்பு என்கிற பெயரில் போதைமருந்துகளை பல வடிவங்களில் ஏற்றுமதி செய்வதை கண்டறிந்தான்.

முத்துச்சாமியின் உப்பளத்திலிருந்து பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதை அறிந்து அதற்குரிய ஆதாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்தான்.

விநோவிற்கு குட்டப்பனின் நடவடிக்கைகளைப்பற்றி அலைப்பேசி வாயிலாக தகவல் கொடுத்துக்கொண்டிருந்தது யது நந்தன் தான்.

விநோவிற்கு வரும் ரகசிய அழைப்புக்கு சொந்தக்காரன் யது தான்.

அப்படித்தான் ஒருமுறை குட்டப்பன் புதிதாக பெண்களை கடத்துவதைப்பற்றி அறிந்து விநோவிற்கு யது தகவல் கொடுத்திட…

“எனக்கும் பொண்ணிருக்கு. அதனால் அந்த தொழில் மட்டும் நான் செய்வதில்லை” என்று குட்டப்பன் சொல்லியது நினைவில் வர, இங்கு பாலாவின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஆரம்பித்தான் விநோதன்.

அதன் முடிவில் அவனறிந்த விடயம் தான் இப்போது தேஜ் அறிமுகப்படுத்திய புதியவகை போதைப்பொருள்.

error: Content is protected !!
Scroll to Top