நேச நெஞ்சங்கள் 24

உயிர் உறை 24

நேசப்பிழை 17

பாலாவைத் தொடர்ந்ததில், அவர்களுக்கு அடிபணிய வைக்கும் பெண்களுக்கு புதுவகை மருந்தினை உட்செலுத்தி அவர்களே அவர்களை நாடுவதைப்போல் செய்வதை கண்டறிந்த விநோ இதற்கு மேலும் பொறுமையாக இருந்தால், அம்மருந்தினை நாடு முழுவதும் பரப்பிவிடுவார்கள் என்று மொத்த பேரையும் விரைவில் ஒன்றுகூடச் செய்திட வேண்டுமென்று நினைத்த சமயம் தான் மற்றொரு விடயம் அவனது கண்ணில் பட்டது.

பெண்கள் மட்டுமல்ல… ஆண்களும் அவர்களால் இதுபோன்ற விடயத்திற்கு ஆட்கொள்ளப்படுகின்றனர் என்று.

படித்திருக்கிறான், கேள்விப்பட்டிருக்கின்றான். நடைமுறையில் பார்க்கும் போது ஏனோ மனம் ஒப்பவில்லை அவனுக்கு.

நினைத்த மாத்திரத்தில் விநோவிற்கு உடலில் அருவருப்பு. ஆணும் ஆணும் எப்படிடா என்று எண்ணும் போதே அவனுக்கு குமட்டிக்கொண்டு வந்தது.

அந்த வகையில் ஆராயும் போதுதான் மாசிலாமணியும், குற்றவேலும் பெண்கள் மீது மட்டுமல்ல அதுபோன்ற செயல்களுக்கு ஆண்கள் மீதும் ஈடுபாடு கொண்டு, பாலாவிடம் பொருள் வாங்கும் கால்லூரி மாணவர்களை அடிமையாக்கி, அவர்களுக்கு தேஜ் கண்டறிந்த புதிய மருந்தினை கொடுத்து பரிசோதிப்பது தெரிந்தது.

இப்படியே இன்னும் காத்திருந்தால் நாட்டை குட்டிச் சுவராக்கிவிடுவார்கள் என நினைத்த விநோ…

அவர்களுக்கு ஆபத்து என்றால் ஒன்று சேர்ந்து தானே ஆக வேண்டுமென, முத்துச்சாமிக்கு படபடப்பை உண்டாக்கிடவே, அவர் அச்சமயம் டீல் வைக்கும் ஆட்களை ஒவ்வொருத்தராக போட்டுத் தள்ளினான்.

ஒருநாள் உப்பளத்தில் பாலா ரத்தம் வழிந்த கத்தியோடு கையை உதறியபடி குடிலிலிருந்து வெளிவந்தது இன்றும் விநோவிற்கு நினைவு வந்தது. அவர்களின் மருந்தினை உட்கொள்ள மறுத்த ஒரு இளைஞனைத்தான் கொன்றிருந்தான்.

அன்றிரவே யாருக்கும் தெரியாது அங்கு சென்று முத்துச்சாமிக்கு எதிராக கிடைத்த ஆதாரங்கள் அனைத்தையும் சேகரித்திருந்தான்.

கேரளாவில் விபத்தில் மாட்டிக்கொண்ட லாரியை விநோ இங்கிருந்தே பொருளோடு கொண்டுவந்தது யதுவின் மூலமாகத்தான்.

இப்போது முத்துச்சாமிக்கு அன்று எப்படி என்று எழுந்த வினாவிற்கு பதில் கிடைத்தது.

முத்துச்சாமியின் முகம் வெளுத்து போயிருந்தது.

அங்கிருந்த அனைவருக்குமே பிடிபட்ட உணர்வு. இனி வாழ்நாள் முழுவதும் ஜெயில் தான் என்கிற பயம்.

அனைத்தையும் சொல்லி முடித்த விநோ யதுவை பார்த்திட…

ஏற்கனவே வாசுவின் மூலமாக விநோ தன்னிடம் சேர்பித்த அனைத்து ஆதாரங்களையும் யது தன்னுடன் வந்த மற்ற இரு அரசியல் தலைவரிடமும் ஒப்படைத்து, ஏற்கனவே தமிழக முதல்வருக்கு ஒரு காப்பி சென்றிருப்பதையும் தெரிவித்தான்.

அப்போது அந்த ஹாலிற்கு பக்கவாட்டில் ஒரு அறையில் கதவு தட்டும் ஓசை கேட்டிட,

“உங்களுக்கான நேரடி சாட்சியங்கள் இவர்கள் தான்” என்று அக்கதவினை விநோ திறந்தான்.

அதில் ஆணும் பெண்ணுமாக இருபது பேர் இருந்தார்கள்.

அவர்களை வைத்துதான் இன்றைய கூட்டம் முடிந்ததும், தேஜ்ஜின் மருந்தினை நேரடியாக பரிசோதிக்க, விநோவிற்கு இதில் உடன்பாடிருக்காதென்று முத்துச்சாமியே ஏற்பாடு செய்திருந்தார்.

ஆனால் விநோ எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டான்.

தானிருக்கும் போது அவர்களுக்கு ஒன்றும் நேர்ந்திடாது என்ற நம்பிக்கையில் தான், நேரடி ஆதரங்களாக அவர்களைக் காட்டிட விநோ முத்துச்சாமியின் ஏற்பாட்டில் பொறுமையாக இருந்தான்.

அந்நேரம் மேசையின் மீதிருந்த ஃபோர்க் வகை ஸ்பூனை கையிலெடுத்த தேஜ் ஹோம் மினிஸ்டரின் கழுத்தில் வைத்தவனாக, தப்பிச்செல்ல முயல… நொடியில் அங்கே பதட்டம் சூழ்ந்தது.

சுற்றி துப்பாக்கி ஏந்தியிருந்த காவல்துறை அதிகாரிகளை, துப்பாக்கியை கீழே போடுமாறு தேஜ் மிரட்ட… அதற்கெல்லாம் அசராதா விநோ,

“சார் டவுன்” என்று அமைச்சரை சட்டென்று குனிய சொல்லியவனாக துப்பாக்கியால் சுட்டிருக்க, தேஜ்ஜின் கழுத்தில் குண்டு பாய்ந்து இறந்திருந்தான்.

“தப்பிக்க வில்லங்கமாக யாராவது நினைத்தால் இதுதான் நிலை” என்ற விநோவின் அதிரடியில் அனைவரும் கப்சிப்.

ஜெயிலில் உயிரோடவாது இருக்க வேண்டும் என்ற பயத்தில் பலர் தானாகவே உண்மையை ஒப்புக்கொண்டனர்.

“நீங்கெல்லாம் தீவிரவாதிகளை விட மோசமானவர்கள்” என்ற ஆளுநர், “தீவிரவாதிகள் கூட அவர்கள் நாட்டின் நலனுக்காக மற்ற நாட்டை அழிக்க நினைப்பர். ஆனால் நீங்கள் சொந்த நாட்டுக்கே எத்தகைய மகாபாதகமான செயல்களை செய்து கொண்டிருக்கின்றனர்” என்று கோபம் கொண்டவராக அப்போதே அவர்களுக்கெல்லாம் தகுந்த தண்டனை கிடைக்க வழிவகை செய்து, வந்திருப்போரின் மாநில நீதிமன்றத்தில் அனைவரையும் ஒப்படைக்க ஏற்பாடு செய்தார்.

அந்த இரவே முத்துச்சாமியின் உப்பளத்தில் இருக்கும் பொருட்கள் மீட்கப்பட்டு உப்பளம் சீல் வைக்கப்பட்டது.

அத்தோடு அங்கு நேரடி கை மாற்றலுக்காகக் கொண்டு வந்தவை மற்றும், ஏற்கனவே மாசிலாமணி, சங்கர், என்று அவர்களிடம் விநோ சேகரித்தவை என எல்லாம் ஆளுநர் மற்றும் உள்துறை அமைச்சர் முன்னிலையில் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அவையெல்லாம் சாக்லேட், பிஸ்கட் போன்ற வடிவங்களில் இருந்திட…

“இவை நாட்டிற்குள் பரவியிருந்தால் எத்தனை பேரிழப்பு ஏற்பட்டிருக்கும்” என்ற அமைச்சர், “இவனுங்களுக்கு தூக்குதண்டனை கிடைக்காது நான் ஓயப்போவதில்லை” என்றார்.

கடத்தப்பட்ட ஆண்கள் பெண்கள் பெயர் மற்றும் முகம் வெளியில் தெரியாது அவரவர் வீட்டில் சேர்பிக்கப்பட்டனர்.

தன்னுடைய வேலை முடிந்தது என்று நிம்மதியாக மூச்சினை வெளியேற்றிய விநோதனை,

யது ஓடிவந்து கட்டிக்கொண்டான்.

“யூ மேட் இட் மேன்… டன் அ கிரேட் ஜாப்” என்று மனமார வாழ்த்தினான்.

இதற்காக இந்த நாளுக்காக விநோ இழந்தவை, செய்தவை கொஞ்சமல்ல. வேறொருவர் செய்திடவே யோசிக்கும் செயலை அஞ்சாது களமிறங்கி செய்து காட்டிட்ட விநோவின் செயலை அங்கேயே அவனது தோள் தட்டி ஆளுநர் மற்றும் அமைச்சர் இருவரும் பாராட்டினர்.

அக்காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த ஆதர்ஷினிக்கு எப்படியிருக்கிறதாம்?

உயிர் உறைந்த நிலை அவளிடம்.

“வசீ… ச்ச… இவர் தான் விநோதனா?”

விநோ மேடையிலேறி அனைவருக்கும் முன்பு தன் பெயரை சொல்லிய நொடி,

பூமி அதிர்ந்தவளாகக் கேட்டிருந்தாள்.

“அப்படித்தானே சொன்னாரு!” சொல்லிய ஆதர்ஷினியின் பார்வை தொலைக்காட்சித் திரையில் தெரிந்த விநோவின் முகத்தைவிட்டு கொஞ்சமும் அகலவில்லை.

“உனக்கு லெட்டர் போட்டவர்… அவர் ஒருத்தர் மட்டும் தான் விநோதனா?” பூமிக்கு அடுத்த சந்தேகம்.

“அவர் பேசியதை வைத்து இன்னும்மா உனக்கு விளங்கல, ஏசிபி, கேரளா சி.எம்… ரெண்டு பேரோட பிளான். ஊரு, பதவி, பெயர் எல்லாம் மேட்ச் ஆகுதே! அப்போ இவர் தான் அவர்.” ஆதர்ஷினியின் உதடுகள் மட்டுமே அசைந்து கொண்டிருந்தன.

அவள் எந்த மாதிரியான உணர்வில் இருக்கின்றாள் என்று அவளுக்கேத் தெரியவில்லை.

தன்னுடைய தந்தையின் கொடூரம் தெரிந்ததற்கு வருந்தாது… அவரை தன் தந்தையே இல்லையென நொடியில் மனதிலிருந்து தூக்கிப்போட்டிருந்தவள், விநோதன் கொடுத்திருந்த அதிர்ச்சியான ஆச்சரியத்திலிருந்து மீள முடியாது சிக்கிக்கொண்டிருந்தாள்.

“ஆதர்ஷினி சொல்வது கரெக்ட்” என்ற சூரஜ்,

“இந்த விநோதன் தான் தர்ஷிக்கு லெட்டர் எழுதியவர்” என்றிட, “உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டிருந்தாள் பூமி. ஆதுவிடமும் அதே வினா ஏந்திய பார்வை.

“விநோவை எனக்கு முன்பே தெரியும். போலீஸ் ட்ரெயினிங்கில் பார்த்திருக்கிறேன்” என்று சூரஜ் சொல்லிய பின்னர் தான் அவனொரு காவல்துறை அதிகாரி என்பதே இருவருக்கும் நினைவு வந்தது.

அன்று மண்டபத்தில் வசீயாக வந்திருந்த விநோவின் மீது சந்தேகம் வராது இருந்திருந்தால் நிச்சயம் ஒரு போலீசாக சூரஜ் அவர்களை என்னவென்று கேட்டிருப்பான். விநோவை பார்த்ததுமே தனது பதவி மறந்து, அவனைப்பற்றிய நடவடிக்கைகளில், அதுவும் ஐபிஎஸ் ஆபீசர் இப்படி ரவுடியாக என்று மனதில் எழுந்த குழப்பத்தில் அவர்களின் செயலை அங்கு போலீசாக தடுக்க முடியாது தனக்குள் விநோவைப்பற்றிய ஆராய்ச்சியில் உழன்று கொண்டிருந்தான்.

அதற்கான விளக்கம் இப்போது கொடுத்த சூரஜ், விநோவை நேரில் சந்தித்து பேசியதைக் கூறினான்.

விநோவை பூங்காவில் வைத்து சந்தித்த சூரஜ்,

“வாங்க ஐபிஎஸ் விநோதன்” என்று தான் அழைத்திருந்தான். இதனை மரத்திற்கு பின்னால் நின்று கேட்டு தான் வாசு அதிர்ந்தான்.

மண்டபத்தில் ஆதுவை பார்த்து தயங்கிய நடையை சீராக்கிய போதே அவளுக்கு பின்னால் நின்றிருந்த சூரஜ்ஜை விநோ கண்டுகொண்டான்.

எப்படியும் அவன் தன்னிடம் பேச முயற்சிப்பான் என்று ஏற்கனவே யூகித்திருந்த விநோவிற்கு அக்கணம் அதிர்வின்றி அவனை எதிர்கொள்ள முடிந்தது.

மேலோட்டமாக தான் இங்கு வந்ததற்கான காரணத்தை விநோ சொல்லிட, சூரஜ் தானும் உதவுவதாக சொல்லிட… இதில் ‘தான் நுழைந்தவரை போதும். தன்னால் மற்றவருக்கு ஆபத்து வேண்டாம்’ என விநோ மறுத்திருந்தான்.

அவர்களின் காதல் விடயத்தை அவர்களே பேசிக் கொள்ளட்டுமென்று அன்று ஆதர்ஷினியன் காதலை தான் சொல்லியதைப்பற்றி சூரஜ் எதுவும் சொல்லவில்லை.

சூரஜ் முடித்ததும் பூமியிடம் அத்தனை அதிர்வு.

“எவ்வளவு பெரிய ஆளு. கடமைக்காக உயிரையே பணயம் வைத்து பெரும் கேடிலிருந்து நாட்டையே காப்பாற்றியிருக்கிறார். அவரை என்னென்னவோ பேசிட்டனே” என்று பூமி வருந்தினாள்.

“யாரென்று தெரியாமதானே பேசினாய்” என்று ஆதர்ஷினி சொல்லியப் பின்னர் தான் பூமி சமாதானம் அடைந்தாள்.

“எப்படியோ… ஒருவரையே ரெண்டு முறை காதலித்து… காதலித்தவரையே கல்யாணமும் பண்ணிகிட்ட.” பூமி மகிழ்வில் ஆர்ப்பரித்தாள்.

அக்கணம்…

‘அவங்களுக்கு நான் தான் லெட்டர் எழுதுவேன்னு தெரியுமா?’ என்ற சந்தேகம் எழுந்தது.

‘தெரிந்திருந்தால்…

ஒருவேளை தெரியாமலிருந்தால்?’ தனக்குள்ளே குழம்பினாள்.

‘அவங்களே வரட்டும் கேட்டுக்கலாம்’ என்று தன்னுடைய குழப்பத்தை ஒதுக்கி வைத்தவளுக்கு அன்னையின் நினைவு.

“அம்மாவை எப்படி மறந்தேன்” என்று பதறியவளாக அவருடனிருக்கும் பணிப்பெண்ணிற்கு அழைத்தாள்.

“அம்மா… அம்மா என்ன பன்றாங்க?”

“மகாம்மா சாயங்காலம் தான் இல்லத்துக்கு போனாங்க” என்றவரின் செய்தி அவளுக்கு பதட்டத்தைக் குறைத்தது.

உடனே விசாலாத்திற்கு அழைத்திருந்தாள்.

“கவலைப்படாதே தர்ஷி. மகா ரொம்பவே திடமா இருக்காள். நீ நாளை வந்து பார்” என்று அவளுக்கு வேண்டிய தைரியம் சொல்லி விசாலம் வைத்துவிட்டார்.

அவ்வார்த்தைகளே ஆதர்ஷினிக்கு போதுமென்று இருந்தது. அன்னையை பாட்டி பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் சீரானாள்.

விநோவிற்கு வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது அவர்களுக்கு நடுவில் நாமெதற்கு நந்தி மாதிரி என்று நினைத்த சூரஜ், சிறிது நேரத்திற்கெல்லாம் பூமியை கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

‘எப்படியும் இந்நிகழ்வு தான் சில நாட்களுக்கு பேச்சாகக் கிடக்கும்’ என நினைத்து ஓடிக்கொண்டிருக்கும் செய்தியை பார்த்தவளுக்கு அதில் தெரிந்த விநோதனின் முகமும் பெயரும் அவளுள் சிலிர்ப்பை உண்டாக்கியது.

‘அப்போ நீங்க ரவுடி இல்லையா?’ திரையில் தெரிந்த விநோவின் நிழலுருவத்திடம் கேட்டவளுக்கு மனதின் ஓரத்தில் சொல்ல முடியாது ஒதுங்கி நின்ற பாரம் விலகிய உணர்வு. லேசானது போல்.

‘வீட்டுக்கு வரட்டும் ரவுடி சாருக்கு இருக்கு இன்னைக்கு’ என்று கையின் விரல்களை ஒரு வழி செய்துகொண்டிருந்தாள்.

நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இடத்திலிருந்து, போதைப்பொருள் கடத்தல் கூட்டத்தினர் அனைவரும் காவல் வாகனத்தில் ஏற்றப்படும் காட்சி.

வண்டியில் ஏறுவதற்கு முன்பு முத்துச்சாமி விநோதனிடம்,

“நம்ப வச்சு ஏமாத்திட்டியே?” என்று பற்களை கடித்தார்.

அதற்கெல்லாம் அஞ்சுபவனா விநோதன்.

“நம்பிக்கை… அதுதான் என்னுடைய ஆயுதமே! அதில்லைன்னா நீங்க இந்த அரேஞ்மெண்ட்ஸ் என்கிட்ட கொடுத்திருக்கமாட்டீங்களே! என்னால் இதை இப்படி முடித்திருக்க முடியாதே!” என்று சிரித்துக்கொண்டே சொல்லிய விநோதன்,

“போகுமிடத்திலாவது ஒழுங்கா இரு” என்றான்.

குட்டப்பன் பேசும் நிலையில் இல்லை.

மகன் இறந்ததிலேயே மௌனமாகிப் போயிருந்தார்.

*****************

அவரவர் அந்தந்த மாநிலத்தின் காவல்துறையிடம், அவர்கள் செய்தவற்றிற்கான ஆதாரங்களுடன் சேர்க்கப்பட்டு… அதிலிருந்து தன்னை முழுமையாக வெளியேற்றிக்கொண்ட விநோதன், வசீகரன் என்கிற அடையாளத்தை முற்றும் முழுதாக துறந்திருந்தான்.

“விநோதன் ஐபிஎஸ். சொல்லவே கெத்தா இருக்குடா. போலீஸ் மாஸ்’ன்னு நிரூபிச்சிட்டடா” என்று யது விநோவின் தோளில் கைபோட,

“செம விநோ. கலக்கிட்ட” என்று மற்ற பக்கம் தோளில் கையிட்டான் பாசில்.

“போட்டிக்குன்னே வரடா?” யது குறைப்பட்டான்.

“வருவேன் தான். ஒருமுறையாவது விநோவிடம் பேச விட்டியாடா நீ?” என்று பாசில் கோபமாகக் கேட்டிட, அவனுடன் சண்டைபோடத் துவங்கியிருந்தான் யது.

“டேய்… நீயொரு சி.எம் டா” என்று விநோ அடக்கினான்.

“நீயெப்போ கிளம்புற?” எனக் கேட்டான் விநோ.

“நீயும் வந்தா கிளம்பலாம்.” யது அசராது கூறினான்.

“அம்மாவையும், துருவ்வையும் பார்க்கணும் யது.” விநோவின் குரல் கரகரத்தது.

“ம்ம்ம்…” என்று மௌனமாக மொழிந்த யது,

“அதான் எல்லாம் முடிந்ததே… இப்போவே கொடைக்கானல் கிளம்புவோம்” என்றான்.

“நீ கேரளா போகலையா?”

“அங்கு போனால் பேக் டூ சி.எம் தான். உன்னோட ரெண்டு நாள் இருந்துட்டு போறேனே” என்று சிறுவனாய் கெஞ்சினான் யது.

“அரசியல் பிடிகல்லன்னா விடேண்டா!”

“முடியாதே!”

“இருந்து தொலை” என்ற விநோ, “என் வேலையை கொடைக்கானல் பக்கம் மாற்றி கொடுத்திடுடா. மூன்று வருடத்துக்கும் மேல துருவ்வை பிரிந்து இருந்ததே போதும்” என்ற விநோ… “நானில்லாம என்னை நினைத்து எப்படியெல்லாம் வருந்தினார்களோ?” என்று கவலைகொண்டான்.

அன்னையின் நினைவு கண்கள் கலங்கும் போலிருந்தது.

“எப்படியும் நியூஸ் மூலமா உண்மைத் தெரிந்திருக்கும்ல?”

“ஆமா. கால் பண்ணிப் பேசு” என்றான் பாசில்.

“நேரில் சென்று தான்” என மறுத்துவிட்டான் விநோ.

“எல்லாம் முடிந்ததே, வீட்டுக்கு போகலாமா?” யதுவிற்கு விநோவுடன் இழந்த வருடத்தை ஒரு இரவில் மீட்டிட வேண்டுமென்ற எண்ணம்.

“ஹோட்டலுக்கு போகலையா?”

“இப்போ தான் நான் யாருன்னு தெரிஞ்சிடுச்சே. ஹோட்டல் எதுக்கு உன்னோட தங்கிக்கிறேன்” என்று யது கூற, “ஆமா ஆமா” என பாசில் துள்ளினான்.

“வீட்டுக்கா… வெளிய தெரிஞ்சா, உன் பதவி… சிக்கலாகிடும்டா. அப்புறம் இங்கிருக்க மீடியா முழுக்க அங்கு வீட்டில் தான்” என்றான் விநோதன்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வான்னு சொல்லிட்டு இப்போ மாத்தி பேசுற நீ. போடா நான் போறேன்” என்று முறுக்கிக்கொண்ட யது, தன்னை சூழ்ந்த மீடியாக்காரர்களிடம், விமானத்திற்கு நேரமாகிவிட்டதாக தன்மையாக மறுத்துவிட்டு பாசிலுடன் விநோவை முறைத்தவனாக சென்றுவிட்டான்.

விநோ யதுவின் கோபத்தை நினைத்து சிரித்துக்கொண்டான்.

அடுத்து நடக்க வேண்டிய பார்மாலிட்டிஸ் அனைத்தும் அங்கு சரியாக முடித்து, ஏற்கனவே விடயத்தினை விநோ தெரிவித்திருந்ததால் அங்கு வந்து சேர்ந்த டிஜிபி’யிடம் அனைத்தும் ஒப்படைத்தவன், இனி இது முழுக்க நீதிமன்றத்தின் பொறுப்பென்று தன்மையாக ஊடகவியலாளர்களிடம் மொழிந்து கிளம்பும் போது மேலும் ஒரு மணிநேரம் சென்று, வீடு வந்து சேரும் போது நேரம் நள்ளிரவை கடந்திருந்தது.

எப்படியும் ஆதர்ஷினி உறங்கியிருக்கமாட்டாள் என்று நினைத்தவனுக்கு, தான் யாரென்று அறிந்து அவளெப்படி ரியாக்ட் செய்வாள் என்ற அலசலுடனே வீடு வந்தான்.

விநோ வீட்டின் அழைப்பு மணியை அழுத்த கதவினை திறந்ததோ பாசில். அதுவும் உணவு உண்டு கொண்டிருந்த கையுடன்.

“வா மச்சான். தங்கச்சி சமையல் சூப்பர். பசிக்குதுன்னு சொன்னது தான், சப்பாத்தியும் குருமாவும் சும்மா அதிருது” என்ற பாசில் மீண்டும் தன்னிடத்தில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தான்.

சாப்பிட்டுக்கொண்டிருந்த யது விநோவை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

யதுவிற்கு அருகில் வந்தமர்ந்த விநோவின் பார்வை வீட்டையே பார்வையால் ஆராய்ந்தது.

“தங்கச்சியை தேடுறியாடா?” எனக் கேட்ட பாசில், “கிச்சனில் இருக்கு” என்றான்.

கிச்சனில் சப்பாத்தி சுட்டுக்கொண்டிருந்த ஆதர்ஷினி விநோ வந்தது தெரிந்தும் வெளியில் வரவில்லை.

“நீ போகல?”

“போற மாதிரி போக்குக்காட்டிட்டு வந்ததனால் தானே உன் திருட்டுத்தனம் தெரிந்தது” என்ற யது, தன்னுடைய திருமணத்தை குறிப்பிடுகிறான் என்பது விநோவிற்கு புரிந்தது.

“எதிர்பாராம நடந்ததுடா!”

…..

யதுவிடம் பதிலில்லை.

“தண்ணீர் குடிச்சிட்டு வரேன்” என்று எழுந்த விநோ கிச்சனிற்குள் நுழைய,

“இங்கயே தண்ணீ இருக்குடா!” என்றான் பாசில்.

“எனக்கு ஐஸ் வாட்டர் வேணும்” என்று தடுமாறிய விநோவிடம், “இதுவும் ஐஸ்…” என்று பாசில் சொல்லவர, அவனின் வாயில் தன் கையிலிருந்த சப்பாத்தியை அடைத்தவனாக வாயினை மூடச் செய்திருந்தான் யது.

விநோ சிரிப்பினூடே கிச்சனிற்குள் நுழைந்து ஆதர்ஷினியை நெருங்க,

“வந்துட்டிங்களா? குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம். ஏற்கனவே ரொம்ப லேட்டாகிருச்சு” என்று எதுவுமே நடவாததைப்போல் அவனிடம் பேசிவிட்டு, அடுப்பை நிறுத்தி சப்பாத்தி நிறைந்த ஹாட் பேக்கை எடுத்துக்கொண்டு ஹாலிற்கு சென்றாள்.

தான் யாரென்று தெரிந்ததும் அவளின் சந்தோஷம் எப்படியிருக்குமென்று வெகு ஆர்வமாக வந்தவனுக்கு ஏமாற்றமே.

“இன்னொன்னு வைக்கட்டும்மாண்ணா?” எனக்கேட்டு இருவருக்கும் மாற்றி மாற்றி எடுத்து வைத்தவள் அவர்களுடன் சிரித்து பேசியபடி இருக்க விநோ கடுப்பாகிவிட்டான்.

மூவரையும் முறைத்துவிட்டு அறைக்குள் சென்று மறைந்த விநோ தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு படுக்கையில் விழுந்தான்.

“அவன் இன்னும் வரலையே” என்று அறைக்குள் எட்டிப்பார்த்த யது,

“படுத்துட்டா(ன்)ம்மா… நீ போய் பேசு. நாங்க தூங்கப்போறோம்” என்று அவர்களுக்காக அவள் ஏற்கனவே காட்டிய அறைக்குள் சென்று கதவடைத்தனர்.

செல்வதற்கு முன்,

“சேதாரம் ஏதும் ஆகாம பார்த்துக்கோம்மா” என கேலி பேசினான் பாசில்.

மற்றவர்களுக்கு கேரளா முதல்வர் திரும்பி சென்றதாகக் காட்டிவிட்டு, விமான நிலையம் செல்லாது விநோவின் பிளாட்டிற்குத்தான் வந்திருந்தான்.

எப்படியும் விநோ வரும்வரை வீட்டிற்கு வெளியில் தான் நிற்க வேண்டுமென யது நினைத்திருக்க, பூமி சென்ற பின்னர் கதவினை தாழிட மறந்தவளாக விநோதனின் எண்ணத்தில் அப்படியே ஆதர்ஷினி அமர்ந்திருக்க, கதவு பாதி திறந்த நிலையில் இருக்க… அதனை கண்டு, ‘விநோ அதற்குள் வந்துவிட்டானா?’ என்ற யோசனையோடு யது கதவில் கை வைத்திட நன்கு திறந்து கொண்டது.

“யாருடா இது பொண்ணு?” கூடத்தில் அமர்ந்திருந்த ஆதர்ஷினியை பார்த்து பாசில் ஆராய்ச்சியாக வினவிட அதே ஆராயும் பார்வை தான் யதுவிடமும்.

“இது விநோ வீடு தானா, மாற்றி வந்துட்டோமா?” என்று பாசில் பிளாட்டின் எண்ணை பார்க்க, “அவனோடது தாண்டா” என்றான் யது.

வாயிலில் நிழல் உணர்ந்த ஆதர்ஷினி யாரென்று பார்க்க…

நிச்சயம் யதுவை அவள் எதிர்பார்க்கவில்லை.

தொலைக்காட்சியில் பார்திருந்ததால், யது அண்டை மாநில முதல்வர் மட்டுமல்ல தன்னுடைய கணவனின் உற்ற தோழன் என்பதை அறிந்திருந்ததால்,

“வாங்கண்ணா… வாங்க” என்று தன்னுடைய யோசனைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து இன்முகமாகவே வரவேற்றவள், உள்ளே வந்த இருவரையும் கடந்து பார்வையை செலுத்தியவாறு, “அவங்க வரலையா?” எனக் கேட்டிருந்தாள்.

“அவங்க…” என்று பாசில் இழுக்க,

ஆதர்ஷினியின் கழுத்தில் மின்னும் புது மஞ்சள் கயிற்றை கவனித்து உண்மையை அவதானித்த யது,

“அவன் வர லேட்டாகும்மா” என்றான்.

“சரிண்ணா” என்றவள், அவர்களை உட்கார வைத்து, “சாப்பிட்டிங்களா?” எனக் கேட்டாள்.

யதுவின் விநோவின் மனைவி என்ற வார்த்தையில் தானாகவே உரிமை வந்துவிட,

“ரொம்ப பசிம்மா. இவனுவதான் வேலைன்னு பட்னி கிடக்குரானுவன்னா என்னையும் சேர்ந்து காய விடரானுங்க” என்ற பாசில் முகம் பாவமாக வைத்திருந்தான்.

“இந்த ராஸ்கல் லவ்வை சொன்னான். கல்யாணம் ஆனதை சொல்லவே இல்லை. வரட்டும் அவனுக்கு இருக்கு” என்று யது சொல்ல,

“அச்சோ அவங்க மேல தப்பில்லை” என்ற ஆது, திருமணம் நடந்த முறையை கூறிட,

“அவனையே மிரட்டி தாலி கட்ட வச்சிருக்க. அவனுக்கு ஏற்ற ஆள் தான்” என்ற யதுவின் சிரிப்பில் நாணம் கொண்டவளாக உணவு தயாரிக்க சென்றிருந்தாள்.

அறைக்குள் சென்ற யது நடந்ததை எண்ணி… “விநோவுக்கு சரியான ஜோடி தான்” என்று பாசிலிடம் சந்தோஷமாகக் கூறினான்.

தட்டில் உணவினை எடுத்து வைத்து அறைக்குள் நுழைந்த ஆதர்ஷினி, மேசையில் வைத்துவிட்டு,

“சாப்பிடலையா? எழுந்திருங்க” என்றாள்.

விநோ அசையாது அப்படியே படுத்திருக்க…

“எழுந்திருங்க…” என்று அவனைத்தொட்டு திருப்பினாள்.

“போடி” என்று அவளின் கையை தட்டி விட்டவனாக எழுந்து அமர்ந்தவன், எட்டி தட்டினை எடுத்து உண்ணத் துவங்க,

அவனிடம் ஆவென்று வாய் திறந்து காண்பித்தாள்.

தன்னுடைய வாயிற்கு கொண்டு சென்ற உணவினை அவள் வாயில் திணித்தவன்,

“சாப்பிடலையா?” எனக் கேட்டு மேலும் ஊட்டிவிட்டான்.

இருவரும் ஒன்றாகவே உண்டனர்.

கை கழுவி, தட்டினை கிச்சன் சென்று வைத்துவிட்டு வந்தவன், ஆதர்ஷினியின் முன் மெத்தையில் அமர்ந்து…

“என்ன கேட்கணுமோ கேளு” என்றான்.

“என்ன கேட்கணும்?”

“ஒண்ணுமில்லையா?”

“ம்ப்ச்.” உதட்டினை வளைத்தாள்.

“ஓகே… அப்போ தூங்கலாம்” என்று அவன் படுத்திட…

“யோவ் போங்கு… எழுந்திரு” என்று அவனை பிடித்து இழுத்தவள்,

“எப்படி என்ன கேட்கிறதுன்னு ஒண்ணும் தெரியல. ஆனால் நெஞ்சு அடைக்குற அளவுக்கு சந்தோஷமா இருக்கு. அதை எப்படி வெளிப்படுத்துறதுன்னு கூடத் தெரியல” என்று அவனின் கை விரல்களை பார்த்தவாறு கூறினாள்.

அவளின் உணர்வு புரிந்து… அவளின் சுண்டு விரலோடு தன்னுடைய சுண்டு விரலை பிணைத்து பிடித்தான்.

இறுகிய அணைப்பு காட்டிடும் இதம் அவர்களுக்குள். அவ்விரல் அணைப்பு போதுமானதாக இருந்தது, தங்களின் உணர்வுகளை காட்டிட.

அவளின் நாடியை ஒரு விரலால் நிமிர்த்தி தன் முகம் பார்க்க செய்தவன்,  அவளின் கண்களோடு தன்னுடைய கண்களை கலக்கச் செய்தான்.

“உனக்கே இப்போ நான் யாருன்னு தெரிந்திருக்கும்” என்றவன், “எனக்கும் உன்னை மாதிரித்தான் எங்கு எப்படி ஆரம்பித்துன்னு சொல்லத் தெரியல. ஆனால் மனசு முழுக்க நீயிருக்க. மிச்சமிருக்க வாழ்க்கைக்கு நம்ம காதல் மட்டும் போதுமென நினைக்கிறேன்” என்றான்.

ஆதர்ஷினியும் புரிந்தது எனும் விதமாக தலையசைத்தாள்.

நம்மை பிடித்தவர்களுக்கும், நம் மீது அன்பு வைத்திருப்பவர்களுக்கு, நாம் எந்தவொரு விளக்கமும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்குள் அதுதான் நடந்தது.

“நான் யாருன்னு தெரியுமா?”

“தெரியும்” என்றவன் அன்றொரு நாள் அவளின் மடிகணினி மற்றும் காகிதத்தில் எழுதியிருந்த கவிதைகள் மற்றும் அதற்கு கீழிருந்த அணங்கு என்கிற அவளின் பென் நேமினை பார்த்ததைக் கூறினான்.

“அப்போ தெரிந்துமா… அன்று… திதி” என்று அவள் சொல்ல முடியாது தடுமாறிட,

“எனக்கு அப்போ நீ என்மீது வைத்திருக்கும் காதல் தான் தெரிந்தது.  உனக்கெப்படியோ, அன்னைக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.

ஒரு பொண்ணு இந்தளவுக்கு என்னை லவ் பன்றா(ள்)ன்னு.

காதலிக்கப்படுவதில் இருக்கும் சந்தோஷமே வேற” என்று சொல்லியவனின் முகத்தில் அப்படியொரு பூரிப்பு.

விநோவின் சந்தோஷத்திற்கு முன்பு ஆதர்ஷினிக்கு எவ்வித விளக்கங்களும் தேவைப்படவில்லை. எப்படியிருந்தாலும் தங்களது இணையுடன் இணைந்ததே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.

கடந்த காலத்தைவிட நிகழும், வருங்காலமும் தானே முக்கியம். அதன் போக்கில் வாழ்வை ஏற்று வாழ்த் தெரிந்தவன் தான் நிம்மதியோடு வாழ்கிறான். அந்த வகையில் இருவரும் எதார்த்தவாதிகளாக வாழ்வை அதன் போக்கில் ஏற்றுக்கொண்டனர்.

இருவரிடமும் ஆழ்ந்த அமைதி.

விநோ… துருவ் மற்றும் அன்னையைப் பற்றிக் கூறினான்.

“நாளைக்கு இங்கிருந்து மொத்தமா கிளம்ப வேண்டியிருக்கும்” என்றவன் “போறதுக்கு முன்னாடி உன் அம்மாவையும், பாட்டியையும் பார்த்துட்டு, அவங்க விருப்பப்பட்டால் நம்மோடு அழைத்துச் சென்றிடலாம்” என்றான்.

அதற்கு தலையசைத்த ஆதர்ஷினி விநோவின் இதயத்தில் தலை சாய்த்துக்கொண்டாள். அவனது இறுதி விரலோடு தன் விரல் கோர்த்து.

அவர்களுக்குள் ஓர் மென் அணைப்பு.

காதலால் ஆழ்ந்த சிலிர்ப்பு.

இதயம் முழுக்க சேமித்த காதலை, மற்ற இதயத்திற்கு கடத்திக் கொண்டிருந்தனர்.

வசீயாகிய விநோதன் ரவுடியென்று அறிந்தும் அவனின் பிழையோடு அவன்மீது உயிர் உறைய நேசம் கொண்டவளின் காதலை, அவள் யாரென்று அறியும் முன்பே நெஞ்சம் முழுக்க காதலாக அவளை சுமந்து நியாயம் செய்திட்டான்.

இருப்பினும் தங்கள் காதல் இணைவதற்கு அவன் செய்த எதையும் அறியாதவள், அவன் ஒன்றுமே செய்யவில்லையே என்கிற வருத்தம் கொள்ளத்தான் செய்தாள். ஏனோ அந்நேரம் அதனை கேட்க அவளுக்குத் தோன்றவில்லை. கேட்டிருக்கலாமோ?

சிறிது நேரத்தில் உறக்கம் தழுவிட உறங்கியவர்கள் எழுந்த நேரம் அன்னபூரணியும், துருவ்வும் அவர்களின் முன் நின்றிருந்தனர்.

*****

விநோதன் பாகம் முடிந்தது.

இதன் தொடர்ச்சியாக ‘எந்தன் தேடல் உனைச் சேரும்.’ 

இதில் குழப்பமிருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆனால் கதையின் முடிவில் அனைத்தும் விளங்கும்.

மீண்டும் விநோதன் ஆதர்ஷினி.

error: Content is protected !!
Scroll to Top