உயிர் உறை 25 (காதல் 2)
‘எந்தன் தேடல் உனைச் சேரும்!’
தேடல் 1
‘துருவ் கல்லூரி முடித்து முழுதாக மூன்று வருடங்கள் முடிந்திருந்தது. இன்றளவிலும் துருவ், அன்னபூரணியை பொறுத்தமட்டில் விநோதன் உயிரோடில்லை.’
தன்னுடைய அலுவலக அறையின் கண்ணாடி தடுப்பு சுவர் வழியே அவ்விடத்தினை இடுங்கிய கண்கள் வழியே பார்த்தவாறு தேநீர் பருகிக் கொண்டிருந்தான் துருவன்.
எப்போதும் உணரும் அவனின் அண்ணனின் வாசம் இப்போதும் அவனது நெஞ்சுக்குள் பசுமையாய். கண்களை மூடி மனதால் “விநோண்ணா” என அழைத்தவனின் காட்சியில் சிரித்த முகமாகத் தோன்றி விநோதன் மறைந்திட படக்கென கண்களை திறந்தான் துருவ்.
நெடும் மௌனத்தில் நெஞ்சத்தில் சுமக்கும் கனத்தோடு நின்றுவிட்டான்.
அந்நெடிய மௌனத்தை இருக்கையில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த மற்றொருவன் கலைத்தான்.
“என்னால உன்னை புரிஞ்சிக்கவே முடியலடா துருவ்!”
சலிப்பாக வந்தது ஆரோனின் குரல். இருவரும் சிறு வயது முதல் நண்பர்கள். படித்து முடித்து இணைந்து சொந்தமாக தொழில் தொடங்கி முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.
ஆம் துருவன் அவனது ஆசைப்படியே அன்னையின் பெயரில் கொடைக்கானல் மலையில் ரிஸார்ட் துவங்கிவிட்டான். சுற்றிலும் பசுமை. தனித்தனி குடில்கள், அருகில் ஓடும் ஆறு… சிறிது தூரத்தில் கொட்டும் அருவி என அந்த இடத்தின் இயற்கையை சற்றும் சேதப்படுத்தாது தொழிலுக்கு ஏற்ற வகையில் வடிவமைத்துக்கொண்டான்.
அவர்களது லாட்ஜிற்கு இருக்கும் நல்ல பெயரில் ரிசார்ட்டிற்கும் மவுசு கூடியது.
லாட்ஜ், ரிசார்ட் என்று எப்போதும் படு பிஸியாகவே இருப்பவனுள், வேதனையான பக்கம் இரண்டு உள்ளது. ஒன்று விநோதன். நினைத்தாலும் கூட்டி வரமுடியாது. மற்றொன்று நிரல்யா. அவளைத்தான் தேடிக் கொண்டிருக்கிறான்.
“நீ என்னை இதுவரை புரிஞ்சிக்கலைன்னு நினைக்குறியா?”
துருவன் கேள்வியில் ஆரோன் அமைதியாக இருக்க,
“என்னைப்பற்றி முழுசா புரிஞ்சி வச்சிருப்பதால் தான், இத்தனை வருஷமா என்னோட இருக்க” என்றான்.
துருவன் சொல்வது உண்மையும் கூட, எதிலும் நேர்மையை விரும்புபவன், கோபம் எளிதில் வந்துவிடும். இப்படித்தானென்று வரையறுத்து வாழ்பவன். எதையும் முகத்திற்கு நேராக சொல்லும் குணம் உடையவன். தவறென்று தெரிந்துவிட்டால் அவனிடத்தில் மன்னிப்பே கிடையாது. அது யாராக இருந்தாலும் தூக்கி எறிந்திடுவான். அவனின் நியாயம் அதுதான். இந்நியாயம், தர்மமெல்லாம் அவனின் அண்ணனிடமிருந்து கற்றுக்கொண்டது.
அப்படிப்பட்டவனே தவறு ஒன்றை செய்துவிட்டு, இன்றுவரை வருந்திக் கொண்டிருக்கின்றான்.
ஆரம்ப காலத்தில் தவறென்று சிந்தனையில் பதிந்த நிகழ்வு இன்று காதலாய் மாற்றம் பெற்றிருந்தது.
துருவின் மீதே பார்வையை வைத்து அவனின் நிகழ்வுகளை அலசிக்கொண்டிருந்த ஆரோன்,
“பிடிவாதம்…” துருவனுக்கு கேட்குமாறு சத்தமாகவே கூறினான். அதில் சத்தமாக சிரித்த துருவ்,
“டென் பெர்சென்ட் கரெக்ட்” என்றான்.
“இப்போ என்ன செய்யப்போற?”
“தேடனும்…”
“இத்தனை வருஷமாத் தேடியும் கிடைக்காதவள் இப்போ மட்டும் எப்படி கிடைப்பா(ள்)ன்னு நினைக்குற.” ஆரோனிடம் சுத்தமாக நம்பிக்கையில்லை.
“கிடைப்பாள்… கிடைச்சு ஆகணும்.” ஒருவித உறுதி துருவனின் குரலில். முடியாது என்று எல்லோரும் நினைக்கையில், உள்ளுக்குள் முடியுமென்று இறுதி வாய்ப்பாக ஒரு குரல் கேட்குமே, அந்த குரல் அவனிடத்தில். அக்குரலுக்கான அர்த்தம் புரிந்த ஆரோன் அமைதியாக இருக்கையில் அமர்ந்துவிட்டான்.
“என்னடா என்னை புரிஞ்சிக்க முடியலையா?”
“இதைத்தான் ஆரம்பித்திலே சொன்னேன்.”
“இந்த விஷயத்தில் மட்டும் என்னால உன்னை கணிக்கவே முடியல துருவ். கிட்டத்தட்ட ஃபைவ் மன்த்ஸ், அவள் உன் பின்னாடி சுத்தி சுத்தி வந்து சொன்னப்போலாம் வராத காதல் இப்போ எப்படி வந்துச்சுன்னு எனக்கு தெரியல.”
“அதுதான்டா எனக்கும் புரியல.” ஆரோனின் கூற்றிற்கு உடனடியாக துருவிடமிருந்து பதில் வந்தது.
“இங்கப்பாரு துருவ், உன் குற்றவுணர்விற்காக காதல் வரக்கூடாது.” நண்பன் ஏதோ தவறாக உணர்ந்து காதலென்று சொல்லிக்கொள்கிறான் என்று எண்ணிய ஆரோன் எப்படியாவது அவனுக்கு புரிய வைத்துவிட வேண்டுமென்று பேசினான்.
“நிச்சயமா இது குற்றவுணர்வினால் வந்த காதலில்லை ஆரு” என்று மெல்லிய குரலில் அழுத்தமாக சொல்லிய துருவன் நண்பனுக்கு தன்னை தனது காதலை புரிய வைக்க வேண்டுமென நினைத்தான். ஆதலால் துருவன் சொல்லியதற்கு மறுத்து ஆரோன் ஏதோ பேச முற்படுகையில் அவனை கை காட்டி தடுத்தான்.
“ஆரம்பத்தில் என்னால் தான், என்னுடைய ஆட்டிட்யூடால் தான் இப்படி ஆனதோ… அவளை நேரில் பார்த்து மன்னிப்பு கேட்டுட்டா இந்த குற்றவுணர்வு போயிடும் நினைத்துதான் அவளை பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, அவளோட அழுத முகம், இறுதியா அவளை நான் கண்ட தோற்றம்… ம்ப்ச் இங்க இம்சைடா” என நெஞ்சில் கை வைத்தான்.
“இது சொன்னா புரியாது. என்னன்னு எனக்கு ஆராயத் தோனல.
அப்பவும் எப்படியாவது அவளை நேரில் பார்த்து சாரி சொல்லிட்டா அவளோட முகம், அவளோட நினைவு எல்லாம் மனதிலிருந்து மறைந்திடும் நினைத்துதான் டிடெக்டிவ் வைத்து அவளை தேடத் துவங்கினேன். ஆனால் எப்போ அம்மா என் திருமணப்பேச்சை ஆரம்பித்தாங்களோ, அந்த நொடி என் கண் முன்னால் மின்னலெனத் தோன்றிய முகம் அவளுடையது. அன்னைக்கு நைட் கடப்பதற்குள் மனசுல முழுசா அவள், அவளோட முகம் தாண்டி வேறொரு பொண்ணோட முகத்தை என்னோட சேர்த்துப் பார்க்கவே அவ்ளோ வெறுப்பா இருந்துச்சு. அப்போதான் குற்றவுணர்வைத் தாண்டி அவகிட்ட என் மனசு என்னைக்கோ அவளை விரும்ப ஆரம்பிச்சிடுச்சுன்னு தெரிந்தது. அவள் மேல காதல் கொண்ட என் மனசு, அவளை தேடுறதுக்காக எனக்கே சொல்லிகிட்ட காரணம்தான் இந்த குற்றவுணர்வுன்னு புரிஞ்சுது. அவள் என்னை சுத்தி வந்தப்போ புரியாத காதல், அவள் என் கண்ணை விட்டுப்போனதும் புரிஞ்சதுதான் நான் அவளுக்கு பண்ண தப்புக்கான தண்டனை.”
நீண்டு இடைவிடாது ஒரே மூச்சாக தன்னுடைய மனதை ஆரோனிடம் எடுத்து சொல்லிய துருவன் ஓய்ந்து போனவனாகத் தொப்பென்று இருக்கையில் அமர்ந்தான்.
துருவனின் முகத்தில் அவ்வளவு வேதனை.
தோழனின் மனம் முற்றிலும் புரிந்ததும், அவனுக்காக ஏதேனும் செய்து அவளை கண்டுபிடிக்க வேண்டுமென்று நினைத்தான் ஆரோன்.
“துருவ்.”
எழுந்து துருவன் அருகில் வந்த ஆரோன், அவனை விளித்தவாறு தோளில் கரம் பதிக்க… ஆரோனை இடையோடு கட்டிக்கொண்டான் துருவன்.
“இந்த நொடி அண்ணா எனக்கு வேணும் ஆரு. அண்ணா இருந்திருந்தா என்னை இப்படி கலங்க விட்டிருக்கமாட்டாங்க.”
துருவன் அழுகிறான் என்பதை சட்டையில் உணர்ந்த ஈரம் சொல்லியது.
நண்பனுக்காக ஒன்றும் செய்ய முடியாத தன்னிலையை ஆரோன் அறவே வெறுத்தான். அவனுக்கும் இதுநாள் வரை தெரியாதே, அவளை இந்தளவிற்கு நேசிப்பானென்று…! இன்று தானே அவனின் மனமே ஆரோனுக்கு புரிந்தது.
“அண்ணா அவளை கண்டுபிடிக்கிறேன் சொன்னாங்க. இருந்திருந்தா என் குற்றவுணர்வையும் போக்கி, என் காதலையும் சேர்த்து வைத்திருப்பாங்க.” துருவனின் தோள் அழுகையில் குலுங்கியது.
‘வெறும் மன்னிப்பு கேட்பதற்காகவா மூன்று வருடங்களாக ஒரு பெண்ணைத் தேடுகிறான்?’ என்று அவ்வவ்போது மனதில் கேள்வி எழுந்தாலும், துருவனின் குணம் தெரிந்தவன், ‘அவன் இப்படி இல்லையென்றால் தான் ஆச்சரியம்’ என்று மனதில் எண்ணிக்கொண்டான்.
“அண்ணாக்கு அடுத்து அவளுக்காக அழறங்குற போதே தெரியுது அவள் உனக்கு முக்கியமானவளாகிட்டான்னு. கண்டுபிடிப்போம்.” ஆரோனின் கண்களும் லேசாக கலங்கி இருந்ததோ…!
ஆரோனின் இடையிலிருந்து முகத்தை நிமிர்த்திய துருவ், கண்களை அழுந்த துடைத்து… “டேய் ஆரு உனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் தானே, என்ன கேட்டாலும் அந்த கடவுள் தருவாருன்னு சொல்லுவியே… எனக்கு என் அண்ணாவை தர சொல்லுடா! அண்ணா எல்லாத்தையும் சரி செய்திடுவாங்க. எனக்காக அவளை என் கண் முன்னால் நிறுத்திடுவாங்க. அப்புறம் நான் தொலைக்கவே மாட்டேன். பத்திரமாக பார்த்துக்குவேன்” என்றான்.
தன் தோழன் இன்று மனம் கலங்கி புலம்புவதை பார்க்க ஆரோனுக்கு அவ்வளவு வருத்தத்தை கொடுத்தது.
“விடுடா… நீ ஃபீல் பண்ணாத, கண்டு பிடிச்சிடலாம்.” துருவனிடம் அவ்வாறு கூறினாலும் எப்படி நிரல்யாவை கண்டுபிடிப்பதென்று ஆரோனுக்கும் பெரும் குழப்பமே…!
ஒரு காலத்தில் அவளின் பெயரை உச்சரித்தாலே கனலை கக்குபவன் இன்று “என் நிரல்யா” என சொல்லுவதிலேயே துருவனின் மனதில் அவள் எந்தளவிற்கு வியாபித்திருக்கிறாள் என்று ஆரோனால் புரிந்துகொள்ள முடிந்தது.
அந்நேரத்திலும் ஆரோனுக்கு ஒன்றை நினைத்து இதழ் மெல்ல விரிந்தது.
“என்னிலை உனக்கு சிரிப்பா இருக்காடா?” என்று துருவன் சோகமாக வினவ,
“கெத்தா முரட்டு பீஸா சுத்திக்கிட்டு இருந்த உன்னையும் ஒருத்தி காதல்னு ஆட்டி படைக்கிறாளே! சத்தியமா நீ சொல்லும் வரை நீயும் இப்படி காதலில் பித்தாகிப் போவன்னு நான் கனவிலும் நினைத்ததில்லை” எனக்கூறி இப்போது சத்தமாகவே சிரித்தான் ஆரோன்.
அவனின் சிரிப்பில் துருவனும் நார்மல் மோடிற்கு மாறியிருந்தான்.
“டிடெக்டிவ் என்னடா சொல்றாங்க?”
“கோயம்புத்தூர் முழுக்க சல்லடை போட்டு தேடி பார்த்துட்டாங்கடா… அவளோட முப்பாட்டன் வரலாறு கூட கிடைச்சிருச்சு, ஆனால் நிரல்யாவை பற்றி ஒரு தகவல் கூட கிடைக்கலடா” என ஆரோனின் கேள்விக்கு பதிலளித்த துருவன்,
“நிரல்யா, அவளோட மாமா வீட்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷனுக்குத்தான் போறதா சொன்னதா அக்கம் பக்கத்துல சொல்லியிருக்காங்க, அவள் போன நேரம் பெங்களூருக்குதான் ட்ரெயின் இருந்திருக்கு. சோ பெங்களூர் ஃபுல்லா தேடியாச்சு. இனி எங்கிருந்து தேடன்னு ஒன்னும் தெரியல” என்றான்.
துருவன் சொல்லியதை உள்வாங்கிய ஆரோன் ஏதோ யோசனையிலேயே இருந்தான்.
சிறிது நேரத்திற்கு பிறகு, “நிரல்யா போன நேரத்துக்கு பெங்களூருக்குத்தான் ட்ரெயின் இருந்தது ஓகே… பட் அவள் அதுல போகமா வெயிட் பண்ணி வேற எதாவது ஊருக்கு போயிருக்கலாமே” என தனது சந்தேகத்தைக் கூறினான்.
“டிடெக்டிவ் அப்படி யோசிக்காம இருப்பாங்கன்னு நினைக்குறியாடா?”
துருவனின் கேள்வியிலேயே ஆரோனுக்கான பதில் கிடைத்தது.
“அடுத்து திருவண்ணாமலைக்குத் தான் ஒரு ட்ரெயின் இருந்திருக்கு. அங்கையும் சல்லடை போட்டு தேடியாச்சு” என்று துருவன் சலிப்பாகக் கூறினான்.
ஆனால் அவனின் நிரல்யாவை கண்டுபிடிக்க வேண்டுமென்ற வேகம் மட்டும் அவனிடம் குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
“திருவண்ணாமலையிலிருந்து வேறெங்காவது போயிருந்தால்?”
“லாஸ்ட் சிக்ஸ் மன்த்தா அப்படித்தான் தேடிட்டு இருக்காங்க” என்ற துருவனின் மனம் தன்னவளுக்காக ஏங்கி தவித்தது.
“ஐ திங்க், ஷீ இஸ் வெரி நியர் டூ மீ” என்ற துருவன், “எனக்கு அப்படி தான்டா தோணுது” எனக்கூறி இருக்கையின் பின்னால் சாய்ந்து கண்களை மூடினான். மூடிய அவனது விழிகளுக்கு நடுவில் பள்ளி முகம் மாறாத சிறு பிள்ளையின் தோற்றத்தில் அவனது நிரல்யா தோன்றினாள்.
அன்று அவன் உச்சரித்த பால்வாடி இன்று அவனுள் எதிரொலித்தது.
காதல் ஒருவனை பித்தனாக்கும் என்பதை ஆரோன் அன்று தன் நண்பனை பார்த்து உணர்ந்து கொண்டான்.
துருவன் நிரல்யாவை தேடுகிறானென்று தெரியும். ஆனால் நேசத்தால் தேடுகிறானென்று இன்று தான் தெரிந்துகொண்டான். நிரல்யா என்ற பெயரை சொன்னாலே துருவன் கோபம் கொள்வான் என்பதால், அவளைப்பற்றி ஏதேனும் தகவல் கிடைத்ததா என்று வார்த்தைக்காகக் கூட கேட்டுக்கொள்ள மாட்டான். அப்படி கேட்டிருந்தால் நண்பனின் காதல் என்றோ தெரிந்திருக்குமோ…! இவ்வாறு ஆரோனால் நினையாது இருக்க முடியவில்லை.
இன்று கூட ஆரோன் இப்பேச்சினை பேச காரணம் உள்ளது.
*********
திடீரென ஆரோன் துருவனிடம் அவனது கல்யாணம் மற்றும் நிரல்யாவை பற்றி பேசிடக் காரணம் அன்னப்பூரணி.
துருவனின் அம்மா அவனின் திருமணம் குறித்து ஆரோனிடம் பேசியிருக்க, அதனை நேரடியாக சொல்ல முடியாது சுற்றி வளைத்து நிரல்யாவின் பேச்சினை தொடங்கியிருந்தான். அதனாலே துருவனின் மனமும் ஆரோனுக்கு தெரிய வந்தது.
‘இப்போது அம்மாவுக்கு என்ன பதில் சொல்றது.’ மனதில் கேட்டவனுக்கு காலை துருவனின் அம்மா பூரணி பேசியது எதிரொலித்தது.
“துருவ் உன் பிரண்ட் தானே ஆரோன், உனக்கு கல்யாணம் ஆகிருச்சுல்ல… உன் நண்பன்கிட்ட நீயாவது எடுத்து சொல்லக்கூடாதா? அவன் பொண்டாட்டி புள்ளைன்னு வாழுறத பார்க்கணுமுன்னு உனக்கு ஆசையில்லையா?” என்றவரின் கண்கள் நொடியில் கலங்கியிருந்தது.
“விநோ இருந்திருந்தா இவன்கிட்ட நான் ஏன் கெஞ்சப்போறேன்” என்று மூத்த மகனின் நினைவில் கலங்கிய கண்களை சேலை தலைப்பில் ஒற்றி எடுத்தவர்,
“விநோவை என்னைக்கும் மறக்க முடியாது ஆரு. சிரிச்சிக்கிட்டே இருந்தாலும், விநோ இல்லைங்கிற கஷ்டம் இருந்துட்டே இருக்குடா. இவன் கல்யாணத்தை சாதகமா வைத்தாவது கொஞ்ச நாளுக்கு என்னை பிஸியா வச்சிக்கலாம் பாக்குறேன். வீட்டுக்கு ஒரு ஆள் புதுசா வந்தாலாவது, இந்த வீட்டுக்கு உயிர்ப்பு வருதான்னு பாப்போம்” என்றிருந்தார்.
துருவனின் அம்மா பேசியதை இப்போது நினைத்தாலும், அவரின் நிலையும் வருந்தத்தான் செய்தது.
காதல் வாழ்க்கையில் திளைத்திருக்கும் ஆரோனால், “உன் காதலை மறந்து அம்மா பார்த்திருக்கும் பெண்ணை கட்டிக்கோ” என்று அந்நொடி சொல்ல முடியாது போக, துருவனின் அம்மாவிடம் மானசீகமாக மன்னிப்பு வேண்டினான் ஆரோன்.
ஆரோன் அமைதியாக இருப்பதை கவனித்த துருவன்,
“என்னடா எதாவது யோசனையா?” என்று வினவினான்.
“ஒன்னுமில்லை” என தலையசைத்த ஆரோன் “உன்னை அம்மா சீக்கிரம் வர சொன்னாங்கடா! நீ மீட்டிங்கில் இருக்கும் போது உன் மொபைலுக்கு கால் பண்ணாங்க, நான் தான் அட்டெண்ட் பண்ணேன்” எனக்கூறி அலுவலக அறையிலிருந்து வெளியேறினான்.
எதற்கு என்று அறிந்த போதும், அம்மாவின் பேச்சை தட்டாத பிள்ளையாக அப்போதே வீட்டிற்கு கிளம்பியிருந்தான் துருவன்.
அம்மாவின் பேச்சை இதுவரை மீறிடாத அக்மார்க் நல்ல பையன் தான் துருவன். அதுவும் விநோதனின் இறப்பிற்கு பின் தான். விநோவின் நினைப்பு அன்னைக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே விநோவாக பூரணியிடம் தன்னை பிரதிபலித்தான் துருவன். அதில் ஒன்று தான் அவர் என்ன சொன்னாலும் தட்டாது செய்வது. தாய் சொல் மீறா தனயனான தன்னுடைய அண்ணனை பின்பற்றிய துருவனால் ஒன்றில் மட்டும் தாய் சொல்லை ஏற்க முடியவில்லை. அது அவனின் கல்யாணம்.
இவன் படிப்பை முடித்து தொழில் தொடங்கியது முதல், திருமணம் செய்துகொள்ள கெஞ்சிக் கொண்டிருக்கிறார் பூரணி. அவருக்கும் தெரியும், விநோவின் இறந்த வருத்தத்தை துருவ் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், உள்ளுக்குள்ளே மருகுகின்றான் என்று. மனைவி என்று அவனது வாழ்வில் நுழைந்துவிட்டால், மற்றைய வருத்தங்களுக்கு இடமின்றி போகுமென்று நினைத்து அப்போதிலிருந்தே அவனிடம் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்க கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.
“உன் அத்தை அவங்க பொண்ணுக்கு வயசாகுதுன்னு கவலைப்படறாங்க துருவ்.”
“அப்பா இறந்து நாம தனியா நின்னப்போ இந்த உறவெல்லாம் எங்க போயிருந்தாங்கம்மா. அண்ணா…” அவனின் தொண்டை அடைத்தது. சரி செய்து தொடர்ந்தான்.
“அண்ணா இல்லைன்னு தெரிந்தப்போ கூட, வரணுங்கிற கடமைக்காக வந்தவங்க எப்படி உறவாவாங்க” என்று கேட்டு,
அன்றே அன்னையின் முன்பே அவனின் அத்தைக்கு அழைத்து,
“உங்க பொண்ணுக்கு வேணும்னா திருமணம் செய்ய சரியான வயதாகியிருக்கலாம். எனக்கு இது இல்லை” என்றவன் “உங்க அண்ணனுக்கு மகனே இல்லைன்னா என்ன செய்திருப்பீங்களோ அதை செய்யுங்க” எனக்கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டான்.
மகனின் செயலில் பூரணி விக்கித்து நின்றார்.
“அண்ணனுக்குன்னு சொல்லிக்கிட்டிருந்த பொண்ணை, அண்ணா இல்லைன்னு எனக்கு பேசுவாங்களாம்மா. அப்போ அவங்களுக்கு விநோண்ணா பொருட்டே இல்லையா?” என்று கர்ஜித்தவன்,
“நான் இன்னும் ஒண்ணுமே சாதிக்கல, அதுவரை கொஞ்சம் பொறுமையா இருங்க” என்றவனின் மனமோ, ‘இதெல்லாம் நீ உன் நிரல்யாவிற்காக சொல்லிக்கொள்ளும் சப்பை காரணங்கள்’ என்று உண்மையை சொல்லியது.
அன்றுதான் அவனும் தன் காதலை உணர்ந்து, குற்றவுணர்விற்காக தேடலை தொடங்கியிருந்தவன் காதலுக்காக தேடலை தொடர்கிறான். அன்று மகனின் மன மாற்றத்திற்காக கோவிலுக்குச் சென்ற பூரணி அவன் போக்கில் விட்டுவிட்டு இன்றுதான் மீண்டும் திருமணப்பேச்சை எடுத்திருக்கிறார்.
வீட்டிற்குள் நுழைந்த மகனை சற்று தயக்கத்துடனே ஏறிட்டார் பூரணி.
“என்னம்மா திரும்ப பொண்ணுப் பார்த்திருக்கீங்களா?”
அன்னையின் தயக்கத்தை உணர்ந்தவன் தானே பேச்சினை துவங்கியிருந்தான்.
அவரின் மௌனமே அது தானென்று அவனுக்கு சொல்லியது.
“உங்களுக்கு ஒருமுறை சொன்னா புரியாதாம்மா.” முதல் முறையாக அன்னையிடம் கோப முகம் காட்டுகிறான். ‘வேண்டாமென்று சொல்லுவதை திரும்ப திரும்ப செய்கிறாரே! தன்னை புரிந்துகொள்ளாமல்!’ ஆற்றாமை அவனிடத்தில்.
“இன்னும் எவ்வளவு வருஷத்துக்கு இதையே சொல்லப்போற துருவ்?”
“அம்மா பிளீஸ்…”
“உன் பிரச்சனை தான் என்ன துருவ்?” பூரணி ஆற்றாமையாகக் கேட்டார்.
“எனக்கு அண்ணாவை இறுக்கமா கட்டிக்கணும் போலிருக்கும்மா. நீங்க டார்ச்சர் பண்றீங்கன்னு அவங்ககிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணனும். அண்ணா இல்லாம எனக்கொரு நல்லதான்னு தோணுதும்மா” என்றவன் சிறுபிள்ளையாய் அழுதுவிட்டான்.
“இது ஒரு காரணமா துருவ். கஷ்டமாயிருந்தாலும் உண்மை இதுதான், விநோ இப்போ உயிரோட இல்லை” என்றவர் துளிர்த்த கண்களை துருவனிற்கு தெரியாமல் துடைத்துக்கொண்டார்.
“இன்னும் கொஞ்சநாள் போகட்டும் ம்மா… ப்ளீஸ்” என்றான் கெஞ்சுதலாய்.
“பொண்ணு நான் முடிவு பண்ணிட்டேன். நீ வர, தாலி கட்டுற.” அவ்வளவுதான் பேச்சு என்பது போல் எழுந்து சென்ற பூரணி,
“உன் பிடிவாதத்தை பற்றி நல்லா தெரியும் துருவ். நான் உனக்கு அம்மாடா!” என்று துருவனை பார்த்து நேருக்கு நேராகக் கூறினார்.
‘உனக்கிருக்கும் பிடிவாதமே என்னிடமிருந்து வந்தது தான்’ என்று சொல்லாமல் சொல்லிச் சென்றார்.
தொப்பென்று இருக்கையில் விழுந்தவன், கழுத்து பட்டையை தளர்த்திவிட்டு, காலினை அகட்டி, தலையை பின்னால் சாய்த்து இருக்கையில் பதித்தவனாக… சீலீங்கில் சுழலும் மின்விசிறியை வெறித்தான்.
“எங்கடி இருக்க?”
‘தேடி தேடி ஓடி வந்தவளை துரத்திவிட்ட பாவத்திற்கு காலம் முழுக்க தன்னுடைய காதல் தேடலிலே கரைந்துவிடுமோ’ என்ற பயம் இப்பொதெல்லாம் துருவிற்கு எழத் தொடங்கியிருந்தது.
இதில் புது தொல்லையாக பூரணியின் திருமணப் பேச்சு வேறு.
டிடெக்டிவிற்கு கால் செய்தான்.
“கண்டுபிடிக்க முடியுமா முடியாதா கிருஷ்ணா?”
என்றுமே இத்தனை கடுமை காட்டியதில்லை துருவன். அதனை கிருஷ்ணா புரிந்து கொண்டவனாக தன்மையாகவே பதில் வழங்கினான்.
“முடிஞ்சவரை ட்ரை பண்ணியாச்சு துருவ். ரெண்டரை வருஷமா சந்தேகமிருக்கும் பகுதியெல்லாம் தேடியாச்சு… திசையை மட்டும் கணிப்பாக வைத்து ஒருவரை தேடுறது அத்தனை எளிதல்ல.”
“புரியுது கிருஷ்ணா. கிடைக்கலையேன்னு விட்டுட அவள் யரோயில்லை. என்னோட உயிர்” என்றவன் கட் செய்துவிட்டான்.
இதனை துருவ் சொல்லியிருக்க வேண்டிய அவசியமேயில்லை. உயிரென்று சொன்னாலாவது தேடுவது வீண் என்ற எண்ணத்தில் கிருஷ்ணா தேடலை நிறுத்திடலாம் எனும் விதத்தில் பேசிடமாட்டான் என்று கூறினான்.
ஹாலிற்கு பக்கவாட்டிலிருந்த அறையிலிருந்து துருவனின் பேச்சினைக் கேட்ட பூரணி தனக்குள் ஒரு திட்டம் தீட்டினார்.
‘எதுக்கு விரட்டனும். இப்போ உட்கார்ந்து தேடனும்.’ முணுமுணுத்தவர், தன் காய்களை நகர்த்த ஆரம்பித்தார்.
அதன் முதல் கட்டமாக ஆரோனுக்கு அழைத்து, நேரில் வருமாறு கூறினார்.
*****
“ஹாய் அத்தை.”
தன்னை பார்க்க வரும் ஒரே உறவான தன்னுடைய அத்தையை ஓடிவந்த கட்டிக்கொண்டாள் நிரல்யா.
“எப்படிடா இருக்க?”
“என் அத்தை இருக்கும்போது எனக்கென்ன…” எனக் கேட்டவள், அவர் அவளுக்காக கொண்டு வந்திருந்த பையிலிருந்த பாக்சினை எடுத்து அதிலிருந்த உணவினை உண்ண ஆரம்பித்தாள்.
“செமயா சமைக்கிறீங்க அத்தை. சான்ஸே இல்லை” என்று உணவினை ருசித்து விழுங்கியவளாகக் கூறினாள்.
“வீட்டுக்கு வந்திடு தினமும் என் கையால் சாப்பிடலாம் சொன்னா கேட்காம, ஹாஸ்டலில் தங்கியிருக்க” என்று குறைபட்டார் அவர்.
“எல்லாம் தெரிஞ்சும் இப்படி சொன்னா, நானென்ன பதில் சொல்றது அத்தை” என்றவள், “உங்க பிள்ளை எப்படி இருக்காங்க?” என்று பேச்சினை மாற்றினாள்.
“தினமும் அவனை அவனுக்குத் தெரியாம பார்த்துகிட்டுத்தானே இருக்க, அப்புறம் என்கிட்ட எதுக்கு கேட்குற?”
“ரொம்ப பிகு பண்ணாம சொல்லுங்க” என்றவள் உணவிலும் கவனமாக இருந்தாள்.
“இருக்கான்… இருக்கான்” என்றவர், “அவனுக்கும், உனக்கும் கல்யாணம் நடந்தாதான் எனக்கு நிம்மதி” என்று பெருமூச்சு விட்டார்.
“அதைவிடுங்க அத்தை. அதுதான் நடக்க வாய்பில்லையே” என்ற நிரல்யாவை முறைத்தவர், “நீ இப்படி ஒதுங்கியே இரு எல்லாம் நடந்திடும்” என்று அங்கலாய்த்தார்.
“நான் என்ன பண்ணட்டும் அத்தை” என்றவள், “அவங்க என்னைப்பற்றி நினைக்குறாங்களா?” எனக் கேட்டாள்.
“என்ன கேட்டால்? அவன் மனசில் நான் புகுந்தா பார்க்க முடியும்…” என்றவர்,
“எத்தனை நாளுக்கு இப்படி அவன் பின்னாடி சுத்திக்கிட்டு ஹாஸ்டலிலே இருக்கப்போற?” எனக் கேட்டார்.
நிரல்யா மௌனமாக இருந்திட,
“அவனும் உன்னை விரும்புறான் தான் தோணுது. அவன் முன்னால் போய் நில்லு. அவனே உன்கிட்ட வருவான்” என்றார்.
“அவர் என்கிட்ட கடைசியா பேசுனது இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு அத்தை. எப்படி என்னால் அவர் முன்னாடி போய் நிற்க முடியும்?” என்ற நிரல்யாவின் கண்கள் அன்றைய தின அவனின் பேச்சில் கலங்கியது.
“இன்னும் எத்தனை நாளுக்கு அதை நினைச்சே காலத்தை வீணாக்கப்போற?” எனக் கேட்டு, “நான் ஒரு முடிவெடுத்துட்டேன்” என்றவராக,
“புது ரிசார்ட்டுக்கு மேனேஜர் வேலைக்கு நாளைக்கு இன்டெர்வியூவ் இருக்கு. நீ அட்டெண்ட் பண்ணு” என்றார்.
“என்னது…” பதறியவள் எழுந்துவிட்டாள்.
“நானா… முடியவே முடியாது. அவங்களை பார்த்தாலே ப்ரீஸ் ஆகிடுவேன். எதுவுமே செய்ய முடியாது. நான் போமாட்டேன்” என்றவள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி முடியாது என்பதை மட்டும் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தாள்.
பெரியவளிடம் அமைதி.
“போகனுமா?” அவனுடன் இருக்கவே வாய்ப்பு கிடைக்கும்போது வேண்டாம் என்றா சொல்லுவாள்.
“கண்டிப்பா” என்றவர், “இந்த முறை நீ அவன் பின்னாடி சுத்த வேண்டாம். அவனை உன் பின்னால் சுத்த வை” என்றவரை முறைத்த நிரல்யா, “நீங்கெல்லாம் ஒரு அம்மாவா?” என்றாள்.
“எனக்கு என்ன?” என்றவர், “எனக்கு பொறந்துட்டு லவ் பண்ணத் தெரியல. நானெல்லாம் அப்போவே உன் மாமாவை என் பின்னால் சுத்த வைத்து, ஒரு வருஷம் அப்புறம் தான் ஓகே சொன்னேன். ஆனால் இவன்… அவனுக்கு நான் கல்யாணம் பண்ணி…” என்று இழுத்தவர் பெருமூச்சு விட்டாவராக, “ஒழுங்கா நாளைக்கு ரிசார்ட் போற. ஆரோனிடம் எல்லாம் பேசிட்டேன்” என்று அவளை பத்திரமாக இருக்க சொல்லி கிளம்பினார்.
நிரல்யாவுக்கு இப்போது அவனை நேருக்கு நேராக சந்திக்கப்போவதை நினைத்து படபடப்பு கூடியது.