உயிர் உறை 26
தேடல் 2
காலையில் படுக்கைக்கு எதிரே மாட்டப்பட்டிருந்த விநோதனின் புகைப்படத்தை பார்த்தவாறு கண்விழித்தான் துருவன்.
“மிஸ் யூ விநோண்ணா…”
நிழலுருவத்தில் பார்வையை நிலைக்கவிட்டிருந்தவன், அலைப்பேசி ஒலியில் நிகழ் மீண்டான்.
“யதுண்ணா…”
யதுநந்தன் தான் அழைத்திருந்தான்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் அழைத்திடுவான். அவர்களுக்கு மட்டுமல்ல அவனுக்கும் உறவென்றால் அவர்கள்/அவன் தான்.
“என்னடா காலையிலே வாய்ஸ் டல்லா இருக்கு?”
“நத்திங் ண்ணா…”
“ம்ம்ம்,” அடுத்து என்ன பேசுவதென்று யது தயங்கினான்.
“என்ன விஷயம் யதுண்ணா. இவ்வளவு காலையில் கால் பண்ணியிருக்கீங்க?” துருவனே கேட்டிருந்தான்.
“அம்மா கால் பண்ணியிருந்தாங்க நேத்து. யார் சொல்லியும் கேட்கமாட்டேங்கிறியாம். ரொம்ப பீல் பன்றாங்கடா. ஓகே சொல்லலாமே!” என்றான்.
யது துருவனின் திருமணத்தை பற்றி பேசினான்.
‘இதை விடமாட்டாங்களா!’ என்று சலிப்பாக இருந்தது துருவனுக்கு.
“என்னைவிட பெரியவங்க நீங்கதான். உங்களுக்கு முதலில் நடக்கட்டும். நான் அப்புறம் ஓகே சொல்றேன்” என்று லாவகமாக யதுவின் பக்கமே பாலினை திருப்பி எறிந்தான் துருவ்.
“டேய் இது என் லிஸ்ட்லே இல்லைடா” என்ற யது, “விநோ சொன்னா கேட்ப தானே! அப்போ நான் யாரோவா?” என்று வேண்டுமென்றே கேட்டான்.
“யதுண்ணா… உங்களுக்கேத் தெரியும், நீங்க என்னோட அண்ணா தான். நீங்க சொல்லியும் கேட்பேன்” என்ற துருவ், நிரல்யாவை பற்றிக் கூறினான்.
“அவள் கிடைக்கட்டும். அடுத்த நாளே கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றவன், “உள்ள புகுந்துட்டு குடையுறா(ள்) யதுண்ணா” என்றான் காதலாக.
“அப்போ இதை அம்மாகிட்ட சொல்லுடா. அவங்க கொஞ்சநாள் கல்யாணத்தைப்பற்றி பேசாம அமைதியா இருப்பாங்களே” என்றான் யது.
“அச்சச்சோ… அது முடியாதுண்ணா. அம்மான்னா, இன்னும் கொஞ்சம் பயமிருக்கத்தான் செய்யுது. அவங்ககிட்ட லவ் அப்படி இப்படின்னு சொல்றதை விட, ஒரு பொண்ணை திட்டியே காலேஜ்விட்டு ஓட வச்சிட்டேன்னு சொல்ல பயந்து வருது” என்றவனின் குரல் பாவனையில் யது அட்டகாசமாக சிரித்துவிட்டான்.
“ஹா….”
“அண்ணா… போதும். போங்க நீங்க என்னை கலாய்க்கிறீங்க” என்று சிறுவனாக சிணுங்கினான்.
“ஓகே ஓகே… அம் கொயட்” என்ற யது, “நான் அம்மாகிட்ட பேசுறேன். கொஞ்ச நாள் உன்னைத் தொல்லை பண்ணமாட்டாங்க. அதுக்குள்ள உன்னுடைய ஜூலியட்டை தேடி கண்டுபிடிச்சிடு” என்றவனாக யது வைத்திட, விநோவை நினைத்து வருந்தும் போதெல்லாம் அவனின் இடத்தை யது நிரப்புவதைப்போல் உணர்ந்த துருவின் முகத்தில் கீற்று புன்னகை.
விநோவின் புகைப்படத்தை கையினால் வருடியவன், வேகமாக குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
விரைந்து கிளம்பி கீழே வந்த மகனை கண்டதும், பூரணிக்கு படபடத்தது.
“என்ன துருவ் சீக்கிரம் கிளம்பிட்ட?”
துருவிடம் காலை அவன் குடிக்கும் சத்து மாவினை கொடுத்தவாறு வினவினான்.
“லாட்ஜுக்கு போயிட்டு, ஹில் டாப் ரோட் ரிசார்ட்டுக்கு போகனும்மா. மேனேஜர் போஸ்டுக்கு செலெக்ஷன் இருக்கு” என்றவன் குவளையை வைத்துவிட்டு எழ,
“அய்யய்யோ…” என்றார் பூரணி.
“என்னம்மா… என்னாச்சு?”
‘இப்போ என்ன சொல்லி சமாளிக்கிறது…’ என நினைத்தவர் உதட்டினை இழுத்து பிடித்து சிரித்தார்.
“என்னன்னு சொல்லுங்கம்மா?”
“கோவிலுக்கு போகணும்டா” என்றார்.
“இன்னைக்கு பௌர்ணமியாம்மா?” என்று அவர் எப்போதும் அந்த நாளில் தான் கோவிலுக்கு செல்வார் என்பதால் கேட்டதோடு, “எப்பவும் தனியாத்தானே போவீங்க” என்றான்.
“உனக்கு ஒரு வேண்டுதல் டா. நீ வந்தே ஆகணும் ” என்றார்.
“என்னை எப்பவும் கூப்பிட மாட்டிங்களே?” சந்தேகமாக அவரை பார்த்தான்.
‘இவன் இப்படி ஆராய்ந்து பார்க்காமல் இருக்கலாம்’ என்று உள்ளுக்குள் அளறியவர்,
“அமாவாசைடா, விநோக்கு தர்ப்பணம் கொடுத்திட்டு வரலாம்டா” என்றார். முன்னர் தான் சொன்ன காரணத்தை மறந்து.
“அமாவாசையா… அம்மா என்ன மறைக்கிறீங்க. உண்மையை சொல்லுங்க?” என்றவன் அவரை கண்டு கொண்டவனாக மார்பிற்கு குறுக்கே கையினை கட்டிக்கொண்டு நின்றான்.
“நான் என்னடா மறைக்குறேன். அதெல்லாம் ஒன்னுமில்லை” என்று தடுமாறினார்.
“என்னடா என்னையே சந்தேகப்படுறியா?” என வினவினார். கண்களை உருட்டி.
‘நிச்சயம் ஏதோ இருக்கு’ என நினைத்தவன்,
“என்னம்மா பொய் சொல்லி என்னை எங்க கூட்டிட்டுபோகப் பிளான் பண்றீங்க? பொண்ணு பார்க்கவா?” என்றான்.
“ஐடியா நல்லாத்தான் இருக்கு. ஆனால் இப்போ அதில்லை. உண்மையாவே கோவிலுக்கு போகத்தான் கூப்பிடுறேன்” என்றார் பூரணி.
“பர்ஸ்ட் எனக்கு வேண்டுதல் சொன்னீங்க… அப்புறம் அமாவாசை ரீஸன், ஆனால் பாருங்க அமாவாசையில் நீங்க நான்வெஜ் குக் பண்ணமாட்டிங்கன்னு தெரிந்தும் கோகிலா அக்கா எவ்வளவு பெரிய மீன் வாங்கிட்டு வராங்கன்னு” என்றவன் அப்போது தான், கோகிலா உள் நுழைவதை சுட்டிக்காட்டினான்.
“நல்ல சால மீனு. பார்த்ததும் துருவ் தம்பி ஞாபகம் தான். தம்பி இந்த மீனுன்னா ரெண்டு வாய் கூட சாப்பிடுமே! அதான் வாங்கியாந்துட்டேன்” என்றவள் கிச்சன் பக்கம் செல்ல…
“தேன்க்ஸ் கோகிலாக்கா” என்றான் துருவன்.
பூரணி மகனின் முன் அசடு வழிந்தார்.
“இப்போ என்ன? நான் உங்களோட கோவிலுக்கு வரணும் அவ்வளவுதானே! வாங்க போகலாம்” என்றவன், ஆரோனுக்கு அழைத்து நேர்முகத்தேர்வினை அவனையே பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு பூரணியுடன் கோவிலுக்கு புறப்பட்டான்.
“நீ கேண்டிடேட் ரெஸ்யூம் எதுவும் பாக்கலையா?”
காரில் சென்று கொண்டிருக்கையில் பூரணி வினவினார்.
“இல்லம்மா. அதெல்லாம் ஆரோன் பார்த்து செலக்ட் பண்ணுவான். அவங்கள்ல ஒருத்தரை செலெக்ட் பண்ணனும். கேண்டிடேட் பைனல் லிஸ்ட் மெயில் பண்ணனினான். நான்தான் வொர்க் லோடில் இன்னும் பார்க்கல” என்று விளக்கம் கொடுத்த துருவ்,
“எப்பவும் ஸ்டாஃப் செலக்க்ஷன் பற்றி கேட்கமாட்டிங்களே!” என்று அர்த்தமாக அவரை ஏறிட்டான்.
“சும்மா… இனியாவது தெரிஞ்சிக்கலான்னு” என்றவர் முகத்தை சன்னல் பக்கம் திருப்பிக்கொண்டார்.
அடுத்து அவன் வேறெதுவும் கேட்டிடக்கூடாதே. அந்த எச்சரிக்கை தான்.
இருந்தும் துருவின் பார்வை அன்னையின் மீது யோசனையாக படிந்து சாலையில் மீண்டது.
அந்நேரம் துருவிற்கு ஆரோன் அழைத்திருந்தான்.
ப்ளூடூத் வழியாக காரில் துருவின் மொபைல் இணைக்கப்பட்டிருக்க, யார் என்ன பேசுகிறார் என்பது பூரணிக்கும் கேட்டது.
“துருவ் நீ வரலையா?”
“இல்லடா… நீயே பார்த்துக்கோ. முடிந்தால் எண்டில் ஜாயின் பண்ணிக்கிறேன்” என்றான் துருவன்.
“ஓகே” என்ற ஆரோன், “குவாலிஃபைட் லிஸ்ட் அனுப்பினேனே செக் பண்ணியா?” எனக் கேட்டான்.
“ஆபீஸ் வந்து செக் பண்ணனும் நினைத்தேன் ஆரு, பட் கொஞ்சம் மூட் ஸ்விங். மறந்துட்டேன்” என்றான்.
“நைட் இன்னொரு கேண்டிடேட் டீடெயில்ஸ் மெயில் பண்ணினேனே அதையும் பார்க்கலையா?” சற்று ஏமாற்றமாக வினவினான்.
“டேய்… இப்போ உனக்கு என்னடா. உன்னால அவன் சொன்ன வேலையை பார்க்க முடியுமா முடியாதா? என்னைக்கோ ஒருநாள் தான் அதிசயமா அவன் என்னோட டைம் ஸ்பெண்ட் பன்றான். அது உனக்கு பிடிக்கலையா?” என்று ஆரோன் மேற்கொண்டு எதுவும் சொல்வதற்கு முன் தடுத்த பூரணி, “எதுவா இருந்தாலும் அவன் ஆபீஸ் வந்து தெரிஞ்சிப்பான். வைடா நீ” என்று அதட்ட வேறு செய்தார்.
“அம்மா…” என்று இழுத்த துருவ்… “என்னவோ இருக்கு” என்றான்.
“என்ன இருக்கு? ஒண்ணுமில்லையே… ஆங்,” என்று தடுமாறியவர்… “சீக்கிரம் போடா” என்று தன்னுடைய தடுமாற்றத்தை மறைக்க அவனை விரட்டினார்.
கோவிலுக்கு வந்த பூரணி ஒவ்வொரு சந்நிதானத்திலும் எத்தனை பொறுமையாக நேரத்தைக் கடத்திட முடியுமோ அத்தனை நிதானமாகக் கும்பிட்டார்.
துருவிற்குத்தான் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக காணமல் சென்று கொண்டிருந்தது.
போதாக்குறைக்கு குருக்களிடம் பேச ஆரம்பித்துவிட்டார்.
பூரணி பழக்கம் என்பதால் அவரும் பல கதைகள் பேசிட,
“நீங்க பேசிட்டு பொறுமையா போங்க, நான் கிளம்புறேன்” என்று அவரை கோவிலிலே விட்டுவிட்டு ரிசார்ட்டிற்கு வந்தபோதும் அவனால் பாதியில் கூட நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள முடியவில்லை.
“என்னடா முடிஞ்சிடுச்சா?”
“ஹ்ம்ம்… டென் மினிட்ஸ் பிஃபோர்.”
“ஓ… பைன்” என்ற துருவ், “வெல் குவாலிபைட் தானே” எனக் கேட்டுக்கொண்டிருக்கும் போதே, ரிசார்ட்டில் ஹில் டைவிங்கிற்காக அப்ரூவல் கேட்டிருக்க அது சமந்தமான கால் ஒன்று வர அதில் அவனின் கவனம் திரும்பியது.
“ம்ப்ச்” என்று வெளியேறிய ஆரோன், நண்பனிடம் சொல்லிட முடியாது தன்னை மிரட்டி வைத்திருக்கும் பூரணியை மனதிற்குள் திட்டி தீர்த்தான்.
“இந்தம்மாவுக்கு எல்லாம் தெரிந்தும் மகனை சுத்த விடுது. இதுல நம்மளை வேற அந்த மிரட்டு மிரட்டுது. ஒரு வாரத்துக்கு வீட்டுக்கு போகக்கூடாது. அப்போதான், கண்ணு மூக்குன்னு செல்லம் கொஞ்சிட்டு வரும்” என்று சென்று கொண்டிருந்தவனின் எதிரே நிரல்யா வந்து கொண்டிருந்தாள்.
நேற்று பூரணியுடன் நடந்த உரையாடல் அவனுக்கு நினைவிற்கு வந்தது.
பூரணி வர சொல்லியதால் அவரை நேரில் சந்தித்தான் ஆரோன்.
“என்ன விஷயம் பூரி?” எனக் கேட்டவனுக்கு அவர் அமைதியாக இருப்பதே அதிசயமாக இருந்தது.
இந்நேரத்திற்கு அவன் பூரி என்று சொல்லியதற்கு அவனை வைத்து செய்திருப்பாரே! ஆனால் அமைதியாக இருக்கின்றார். அதுதான் ஆரோனுக்கு அதிசயம்.
“ம்ம்மா… நீங்க ஓகே தானே!” என்றவனின் குரலில் கலைந்தவர்,
“நான் நால்லாத்தாண்டா இருக்கேன்” என்றார்.
“அடுத்தவங்களைத்தானே நீங்க ஓட விடுவிங்க. அது தெரியாம கேட்டுட்டேன்” என்று சிரித்தவனை முறைத்தவர்,
“ஆனால், இதுக்கு அப்புறம் நீ நல்லாயிருக்கமாட்ட” என்றார்.
ஆரோன் அதிர்வாய் அவரை பார்த்தான்.
“உனக்கொரு ரெசியூம் அனுப்பியிருக்கேன் பாரு” என்றார்.
அலைபேசியை எடுத்து பார்த்தவன்,
“ம்மா…” என்று உச்சக்கட்ட அதிர்ச்சியை வெளிப்படுத்தினான்.
“இது… இது…”
“என் மருமக(ள்)டா.” புன்னகைத்தபடி கூறினார்.
“ம்மா…”
“என்னடா, ஒரு முறை ஷாக் ஆனா போதாதா. திரும்பத்திரும்ப… ஷாக்கை குறைடா” என்றவர்,
“எல்லாம் தெரியும். ரெண்டரை வருஷத்துக்கு முன்பே” என்றார்.
“தெரிஞ்சுமா துருவ் கஷ்டப்படட்டும் அமைதியா இருக்கீங்க?”
“நான் அவனுக்கு அம்மாவா இருந்தாலும், நானும் பொண்ணு தாண்டா” என்றவர், “இப்போ இதை பேசவெல்லாம் நேரமில்லை. நிரல்யா வருவாள். அவளுக்கு நீ வேலைப்போட்டு கொடுக்குற. அவ்வளவுதான்” என்றார்.
“நிரல்யா யூஜி தான் முடிச்சிருக்காள். மாஸ்டர், எம்பிஏ முடிச்சவங்கலாம் இதுக்கு அப்ளை பண்ணியிருக்காங்க” என்று முடியாது என்பதை மறைமுகமாகக் கூறியவனின் தலையில் கொட்டியிருந்தார் பூரணி.
“உன் ஜாப் எத்திக்சில் தீயை வைக்க” என்றவர்,
“துருவ் சந்தோஷமா இருக்கணுமுன்னா நான் சொல்றதை செய்டா” என்றார்.
“அவளால இவ்வளவு பொறுப்பை சுமக்க முடியாது” என்றான்.
“கொடுத்து பார்த்தால் தானே தெரியும்” என்றவர், “நீ எதுக்குடா இருக்க. சொல்லிக்கொடு. அவளால் முடியலன்னா, நீயே அவளோட வேலையையும் செஞ்சிடு” என்றார் வெகு சாதாரணம் போல்.
‘இருக்கும் வேலையே மூச்சு முட்டுது. இதில் இது வேறையா?’
“அதான் நிரல்யா கிடைச்சுட்டாளே. துருவிடம் கூட்டிட்டு போகலாமே!” என்று சந்தேகமாக வினவினான்.
“என் மருமகளை சுத்தவிட்டு காயப்படுத்தினான் தானே! இப்போ ரிவெஞ் டைம்” என்றவர், “கொஞ்சநாள் இவன் சுத்தட்டுமே” என்றார் இளகுவாக.
“இப்போவே ரெண்டு வருஷத்துக்கும் மேல அவளைத்தேடி சுத்திக்கிட்டுதான் இருக்கான்” என்ற ஆரோனிடம், அவர்மீது சிறு கோபம் எட்டிப்பார்த்தது.
“எனக்காக செய்யமாட்டியாடா?” என்று கெஞ்சலாகக் கேட்டவர், “செய்ற, இல்லை உன்னை மாளுவிடம் போட்டுக்கொடுத்திடுவேன்” என்று மிரட்டினார்.
******
மாளு… மாளவிகா… ஆரோனின் மனைவி.
பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணம். இருப்பினும் காதலாக அவனது வாழ்வு கடந்த ஆறேழு மாதங்களாக வெகு சிறப்பாகவே சென்று கொண்டிருக்கிறது.
மாளவிகா, ஆரோனின் அன்னையை விடவே, பூரணியிடம் நல்ல ஒட்டுதல்.
பூரணி என்ன சொன்னாலும் அப்படியே கேட்கும், நம்புவாள் மாளவிகா.
மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் வாழ்வில் எங்கே இவர் கும்பியடித்து விடுவாரோ என பயந்து…
“என்ன சொன்னாலும் கேட்கிறேன். நீங்களாச்சு உங்க பையனாச்சு. குறுக்கில் என்னை கோர்த்துவிடாம இருந்தா சரி” என்றவனுக்கு பூரணியின் சொல்லை கேட்பதைவிட வேறு வழியில்லை.
ஆரோனுக்கும் துருவனும் நிரல்யாவும் ஒன்று சேர்ந்தால் போதுமென்கிற மனநிலை. நடுவில் என்ன வேண்டுமானாலும் நடந்து கொள்ளட்டும் என்று பூரணி சொல்வதைக் கேட்டான்.
அப்படி இருந்தும் மனம் கேட்காமல் தான், நிரல்யாவின் படிவத்தை துருவனிற்கு அனுப்பி வைத்தான். இன்றே அவன் அவளை கண்டுகொள்ளட்டும் என்று.
துருவின் விதி செய்த சதியோ… அவனால் ஆரோன் அனுப்பிய தகவலை பார்க்க முடியவில்லை. இன்னும் இரண்டு நாட்களுக்கு பின்னர் தான் நிரல்யாவை காணவிருக்கின்றான்.
“எப்படியும் ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கத்தானே போறாங்க, அப்புறம் எதுக்கு துருவ் இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணக்கூடாது சொல்றீங்க?” எனக் கேட்டான் ஆரோன்.
“நிரல்யா அங்கு கொஞ்சம் ஃப்ரியா வந்து செட்டிலாகட்டுமே. அவனை பார்த்தால் அவள் பிரீஸ் ஆகிடுவாளாம். சோ, அவள் வரும்போது அவன் அங்கிருக்கக்கூடாது” என்று எல்லாம் நிரல்யாவுக்கு சாதகமாகவே செய்தார் பூரணி.
“நீங்கெல்லாம் என்ன மாமியார். இன்னும் மருமகளாவே வரல, அதுக்குள்ள மருமகளுக்கு சப்போர்ட் பண்ணி மகனை ஓடவிடப் பாக்குறீங்களே!” என்றவன்,
பூரணியின் “மாளு” என்கிற ஒற்றை வார்த்தையில் அமைதியாகிப்போனான்.
மூன்றாவது நாள் ஆரோன், துருவ் எப்படியும் இன்று வரப்போவதில்லை என்ற எண்ணத்தில் அவனிடமிருந்து வரப்போகும் அழைப்பிற்காகக் காத்திருந்தான்.
ஆரோனின் எண்ணம் தப்பாது அவனுக்கு அழைத்த துருவ், தான் வரவில்லை என்று சொல்லியதும், பூரணி தான் என்னவோ வேலை பார்த்திருக்கிறார் என்று புரிந்து கொண்டான்.
தான் அனுப்பியிருந்த மின்னஞ்சலை துருவன் பார்க்கவில்லை என்பதை ஆரோனால் யூகிக்க முடிந்தது. பார்த்திருந்தால் தான் துருவ் வேகமாக அவனைத்தேடி ஓடி வந்திருப்பானே! இருப்பினும் அவனிடம் சொல்லிவிடலாம், விடயம் தெரிந்தால் கண்டிப்பாக மறைப்பதற்காகத் தன்னை கடிந்துகொள்வான் என்ற எண்ணத்தில் தான் அவனுக்கு அழைத்து பார்க்கவில்லையா எனக் கேட்டிருந்தான்.
ஆனால் அங்கும் பூரணியின் தடையை எதிர்பார்க்கவில்லை.
‘சரி நடப்பது நடக்கட்டும்’ என நினைத்தவன், வந்துவிட்டவர்களை அப்படியே திருப்பி அனுப்பிட முடியாது எனும் காரணத்தினால், பெயருக்கு ஒவ்வொருவரையும் அழைத்து சில கேள்விகளைக் கேட்டு அனுப்பி வைத்தான்.
நிரல்யா வருவதற்காகக் காத்திருந்தான். இறுதியாகத்தான் அவள் உள்ளே நுழைந்தாள்.
பார்த்ததும் எழுந்து நின்றுவிட்டான்.
“ஹாய் ண்ணா… எப்படி இருக்கீங்க?” இதழ் மலர்ந்த புன்னகையோடு அவள் கேட்டிட, அவளுக்கு பதில் சொல்லவும் மறந்தவனாக பார்த்தபடி அப்படியே நின்றிருந்தான்.
“மாளு அண்ணி எப்படியிருக்காங்க?”
அவள் கேட்டதில் அவனுக்கு அப்படியொரு அதிர்வு.
“மாளுவை உனக்குத் தெரியுமா?” எனக் கேட்டிருந்தான்.
“தெரியாம இருக்குமா?” என்றவள் அத்தை என்னை பார்க்க வரும்போது அண்ணியும் வாரம் ஒரு முறையாவது வந்திடுவாங்க” என்றிட…
“மாளு என்கிட்ட உன்னைப்பற்றி சொன்னதில்லையே?” எனக் கேட்டான்.
“அத்தையை மீறி சொல்லிடுவாங்களா?” என்று எதிராக வினவியவள், “இதை வைத்து அவங்ககிட்ட சண்டையெல்லாம் போடாதீங்க” என்று உரிமையாக மிரட்டினாள்.
அன்று பார்த்த அதே நிரல்யா. ஆனால் கொஞ்சம் மாறுபட்டிருந்தாள்.
முன்பிருந்த துருதுருப்பு, வேகம், படபடவென பொரியும் தன்மை இன்றி… எல்லாம் சற்று குறைந்தது போலிருந்தாள்.
“ஹ்ம்ம்” என்றவன், “எப்படியிருக்க?” எனக் கேட்டவனாக இருக்கையில் அமர்ந்தவன், அவளையும் எதிரே அமருமாறு கை காண்பித்தான்.
“நல்லாயிருக்கேன்” என்றவளின் முகத்தில் அவ்வார்த்தைக்கான சாயல் கொஞ்சமும் இல்லை.
“பூரணி’ம்மாவை எப்படித் தெரியும்?”
“என்னண்ணா போட்டுவாங்க ட்ரை பண்றீங்களா?” என்று அவன் அவளைப்பற்றி தெரிந்துகொள்ள முனைவதை கண்டுகொண்டாள்.
“வந்த வேலையை பார்க்கலாமா?” என்றவள்,
“ரொம்ப தேன்க்ஸ் ண்ணா. அப்போ நீங்க பண்ணதுக்கு” என்றாள்.
“கொரியர் வேலை பார்த்ததுக்கா?” எனக் கேட்டவன்,
“துருவ் உன்னை இன்னும் தேடிட்டு இருக்கான் நிரல்யா. அவனுக்கான தண்டனை இதுவே அதிகம்” என நண்பனுக்காகப் பேசினான்.
“உங்க ஃபிரண்டுக்காக நீங்க இவ்வளவு யோசிக்கும்போது, அவர் என் வாழ்க்கை, அவருக்காக நான் யோசிக்கமாட்டனா?” என்ற நிரல்யா, “எனக்குத் திரும்ப அவர்கிட்ட லவ்வுன்னு போய் நிற்க பயமாயிருக்குண்ணா. திரும்ப அவர் ஏதாவது சொல்லிட்டா, இனி போறதுக்கு எனக்கு வேறிடமில்லை. தாங்கிக்கிற திடமும் இல்லை.
காதலை கொடுத்த இடத்தில் திரும்ப பெற நினைக்கிறேன். நாம விரும்புறவங்க நம்மை விரும்பி நம்மிடம் வரணும் எதிர்பார்ப்பதில் தப்பில்லையே!” என்றவளின் மனம் ஆரோனுக்கு புரியத்தான் செய்தது.
சரியென்பதைப்போல் தலையை மட்டும் அசைத்தான்.
“அப்புறம் அண்ணா எனக்கு இந்த மேனேஜர் போஸ்டெல்லாம் வேண்டாம். அத்தை சொன்னாங்கன்னு வந்தேன். எனக்கே தெரியும், நான் அதுக்கு தகுதியில்லாதவன்னு, அதனால் வேறெதாவது சின்ன வேலையா கொடுங்க” என்றாள்.
“பூரிகிட்ட அடிவாங்க என்கிட்ட தெம்பில்லை. நான் சொன்னதை செய்யுறேன். எப்படியும் கொஞ்ச நாளுக்குத்தானே. நான் ஹெல்ப் பன்றேன்” என்ற ஆரோனிடம்,
“எனக்காகவா… உங்க பிரண்டுக்காகவா?” எனக் கேட்டாள்.
“எனக்காகன்னு வச்சிக்கோயேன். நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்தால் அதிக சந்தோஷப்படுவது நானாதான் இருக்கும்” என்றவன், “மேடம் என்னை மறந்துட்ட மாதிரி தெரியுது. உன் பேச்சில் டிஸ்டன்ஸ் தெரியுது” என்றான்.
அப்படியெல்லாம் இல்லையென்று நிரல்யா சொன்னாலும், கல்லூரி நாட்களில் அவனிடம் உரிமையாக லெட்டர் கொடுத்து துருவின் பையில் வைக்க சொல்லும் சுட்டியான நிரல்யா இப்போதில்லை என்பது ஆரோனுக்கு புரிந்தது.
“காலம் எல்லாத்தையும் மாத்திடும் ஆருண்ணா” என்றவளிடம், சிரிப்பினூடே கை குலுக்கி, நாளை முதல் வேலைக்கு வந்துவிடுமாறு கூறினான்.
சரியென்று எழுந்துகொண்டவள்,
“மாளு அண்ணிக்கு நான் அத்தைக்கு உறவுன்னு மட்டும் தான் தெரியும். நமக்குள்ள இருக்க டச் எல்லாம் தெரியாது” எனக்கூறி வெளியேறினாள்.
அவள் சென்ற பத்து நிமிடத்திற்கெல்லாம் துருவ் வந்துவிட்டான்.
அவனிடம் பேசிவிட்டு வெளியில் வந்தால், எதிரே மீண்டும் நிரல்யா.
கண்ணாடி தடுப்பிற்கு அந்தப்பக்கம் துருவின் அறையை வேகமாக திரும்பிப் பார்த்த ஆரோன்,
“என்னம்மா…?” என்றான் பதட்டமாக.
“என்னண்ணா, அவங்க வந்துட்டாங்களா?” எனக் கேட்டவள், அறைக்குள் துருவனை பார்க்க முயல…
“அவன் அந்தப்பக்கம் தொழில் சம்மந்தம்மா பேசிட்டு இருக்கான்” என்றான்.
“ஹோ…” என்றவள் “மொபைல் விட்டுட்டு போயிட்டேன்” என்றாள்.
“எங்கு?”
“நீங்க இருந்த ரூம் டேபிளில் தான்” என்று நிரல்யா சொல்லி முடிக்கும் முதலே,
“போச்சு” என்றவனாக துருவ் இப்போதிருக்கும் அறை நோக்கி ஓடினான்.
அப்போதுதான் கால் பேசிவிட்டு திரும்பிய துருவன், மேசையில் புதிதாக பிங்க் வர்ணத்தில் மொபைலை பார்த்திட்டு யாருடையது எனும் யோசனையோடு அதனை கையிலெடுத்தான்.
சரியாக உள்ளே நுழைந்த ஆரோன் துருவனின் கையிலிருந்து வேகமாக பறித்திருந்தான்.
“உன் மொபைலா?”
“ஹான்… ஆம்… ம்.”
“புது மொபைலா? சொல்லவே இல்லை. கேர்ள்ஸ் கலரில் கவர் பண்ணியிருக்க” என்ற துருவ்… ” “மொபைல் எடுக்கும்போது சென்சார் டச் ஆகிருச்சு, லாக் ஸ்க்ரீன் என் பிக் மாதிரி இருந்துச்சு, காட்டு” என்றான்.
‘ஆனாலும் நீ இவ்வளவு ஷார்ப்பா இருக்க வேண்டாண்டா… நொடியில் எத்தனைய கவனிச்சிருக்க’ என்று உள்ளுக்குள் பீதியான ஆரோன்,
“பழைய மொபைல் தாண்டா. கவர் மாளுவோடது. மாத்தி போட்டுட்டாள் போலிருக்கு. அது உன் பிக் இல்லை. என் பிக்” என்று மடமடவென சொல்லியவன் துருவனின் சந்தேகப்பார்வையில் வேகமாக வெளியேறினான்.
“அம்மா தாயே நீ முதலில் கிளம்பு. அவன்கிட்ட என்னை இன்னைக்கே மாட்டிவிட்டு உதை வாங்க வச்சிடாதே!” என்று அளறினான்.
“தங்கச்சிக்காக கொஞ்சம் அடியும் வாங்கலாம். தப்பில்லை” என்றவள் சிரித்தபடி செல்ல… ஆரோனுக்கும் மனம் லேசானது.
பின் நண்பனின் உடனிருந்து அவனின் வேதனையை பார்த்தவனாயிற்றே. அவனின் வேதனை விலகுமென்றால் ஆரோனுக்கு அதைவிட மகிழ்வு என்னயிருக்கப் போகிறது.
“யாரை பார்த்துடா சிரிச்சிட்டிருக்க?” ஆரோனின் முதுகில் தட்டியபடி அவனுக்கு அருகில் வந்து துருவன் நின்றதும், ஆரோனுக்கு தூக்கிவாரிப்போட்டது.
“யாரு… யாரு… யாருமில்லையே!” என்று தடுமாறிய ஆரோனை துருவன் ஏற இறங்க பார்த்தான்.
“நான் வந்ததிலிருந்தே உன் பார்வை, பேச்சு ஏதும் சரியில்லையே!” என்றான் துருவன்.
“அதெல்லாம் இல்லையே… லக்ஸ்கிளாம்ப் டிசைன் பண்ணனும். அதுக்கு முன்னாடி இடத்தை பார்க்கணும், என்ஜினியர் வரன்னு சொன்னார். அதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்று ஆரோன் சமாளித்தான்.
லக்ஸ்கிளாம்ப்(luxeglamp), பபுள் ஹட் மாதிரி… இது இக்ளூ வடிவில் இருக்கும். தரையிலிருந்து சற்று உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும். சாதாரணமாக கூரைகள், கண்ணாடிகள் வேய்ந்த குடில்களை அமைப்பதற்கு பதிலாக, நீர்குமிழி வடிவத்தில் குடில்கள் அமைக்கலாம் என்று துருவன் திட்டம் வகுத்திருந்தான்.
“பார்க்க வாட்டர் பபுள் மாதிரியே இருக்கணும். சிலிக்கான் கிளாசஸ் யூஸ் பண்ணனும். உள்ளிருந்து பார்த்தால் வெளியில் தெரியணும். பட் வெளியிலிருந்து பார்த்தால் உள்ளே தெரியக்கூடாது. ஒவ்வொரு கிளாம்ப் வீவ்வும் பால்ஸ் கனெக்ட் ஆகியிருக்கணும். கப்புல்ஸ்க்கு ஏற்ற மாதிரி இன்ஸ்டன்ட் மினி ஸ்விம்மிங் ஃபூல் இருக்கணும். எதுவும் மிஸ் ஆகக்கூடாது” என்று துருவன் விவரித்துக்கொண்டே இருக்க… ஆரோன் கேட்பதைப்போல் தலையாட்டிக்கொண்டே இருந்தான்.
சட்டென்று துருவன் தன்னுடைய பேச்சினை நிறுத்திவிட்டு சுற்றுப்புறத்தை பார்வையால் அலசினான்.
“என்னடா…?”
“நத்திங்” என்ற துருவன், “யாரோ என்னை வாட்ச் பன்ற மாதிரியிருக்கு” என்று ஆரோனிடம் சொல்லிய துருவன், கல்லூரி நாட்களில் நிரல்யா அவனை மறைந்திருந்து பார்க்கும் தருணங்களில் தோன்றும் குறுகுறுப்பை இப்போது உணர்ந்தான். அதனை மனதோடு சொல்லியும் கொண்டான்.
துருவ் சொல்லியதில் ஆரோனுக்கு சட்டென்று வியர்த்துவிட்டது.
‘இன்னும் அவள் போகலையா?’ கேட்டுக்கொண்டவனுக்கு ஆரோனிடம் பயமெல்லாம் இல்லை. இருவரும் சந்திக்கும் தருணம் எத்தகையதாக இருக்குமென்ற படபடப்பு. அதுவும் நிரல்யா சொல்வதைக் கேட்டவனுக்கு, நிச்சயம் துருவனை பார்த்ததும் அவள் யாரோபோல் இருக்கப்போகிறாள் இவன் உள்ளுக்குள் தவிக்கப்போகிறான். அதனை நினைத்தே இந்த கலக்கம் ஆரோனிடம்.
“என் பக்கத்தில் தான் மச்சான் இருக்காள். பக்கத்தில் வச்சிக்கிட்டே தூரத்தில், அவளில்லாத இடத்தில் தேடிட்டு இருக்கேனோன்னு தோணுது” என்றவன்,
“ஷீ இஸ் வெரி நியர் டூ மீ. இப்போ கூட என்னை பார்த்துகிட்டு இருக்க மாதிரியே இருக்கு” என்று நெஞ்சத்தை தேய்த்துக்கொண்டவன், சுற்றி கருவிழியை சுழலவிட்டவாறே, கிருஷ்ணாவுக்கு அழைத்திருந்தான்.
“இப்போ என்னடா?” எனக் கேட்ட கிருஷ்ணாவுக்குமே, நண்பனுக்காக அவன் கேட்டதை இரண்டு வருடங்களாகியும் செய்ய முடியவில்லையே என்கிற வருத்தம் இருக்கத்தான் செய்தது. அது அவனின் குரலிலும் வெளிப்பட்டது.
“கிருஷ்ணா எனக்கொரு தாட்” என்ற துருவன், “நாம ஏன் கொடைக்கானலில் தேடி பார்க்கக்கூடாது?” என்றான்.
“புரியல துருவா. பட் நிரல்யா லாஸ்ட்டா போனது…” என்று கிருஷ்ணா இழுக்கும்போதே குறுக்கிட்ட துருவ்,
“எனக்காக தேடிப்பார் கிருஷ்ணா” என்றான்.
துருவின் ஏக்கம் இழையோடிய அந்த குரலுக்கு கிருஷ்ணாவால் பணிந்து போகத்தான் முடிந்தது.
*விநோ இனி வரமாட்டானான்னு கேட்கும் ரீடர்ஸ்க்கு… விநோ கண்டிப்பா வருவான், இன்னும் கதை முடியலையே, துருவன் பார்ட்டிலும் விநோவின் அதிரடி இருக்கு.