உயிர் உறை 27
தேடல் 3
துருவன் தன்னுடைய இன்ட்யூஷன் காரணமாக கிருஷ்ணாவை அழைத்து, கொடைக்கானலில் தேடிப்பார்க்கும்படி கூறிவிட்டான். அதேசமயம் மனம் சொல்வது உண்மையாக இருக்க வேண்டுமென்றும் ஆசைகொண்டான்.
இன்னமும் துருவனின் பார்வை சுற்றுப்புறத்தைதான் ஆராய்ந்தது.
“என்னடா துருவ். என்ன யோசனை?”
“நான் இந்த எண்ணத்தில், கோணத்தில் யோசிக்கவே இல்லை ஆரு.
அவள் பெங்களூர், திருவண்ணாமலை இப்படி எங்கவேணாலும் போயிருக்கட்டும். ஆனால், என்னை பார்க்காம அவளால் இருக்க முடியாது.
ரெண்டு நாள் என்னை பார்க்கலன்னு கிளம்பி வந்தவ(ள்)டா! இப்போ இரண்டு வருஷத்துக்கும் மேல என்னை பார்க்காம இருக்காங்கிறதை என்னால் நம்ப முடியல.
அப்பப்போ என்னை யாரோ வாட்ச் பன்ற மாதிரி பீல் ஆகும். நம்மிடத்தில் மட்டுமில்லை. எங்காவது வெளியிடங்களுக்கு போனாலும். அப்போலாம் இது எனக்கு ஏன் தோணாமப்போச்சு தெரியல” என்றவன், “என்னை தொடர்வது ஏன் நிரல்யாவா இருக்கக்கூடாது. நான் என் முன்னாடி வந்துடாதன்னு சொன்னதால மறைஞ்சிருந்து என்னோட இருக்காளோ?” என்று ஆரோனிடம் கேட்பதைப்போல் தனக்குத்தானே கேட்டுக்கொண்டான்.
“இருக்கலாம்” என்ற துருவ், “கண்டிப்பா அவள் இப்போகூட என்னை பார்க்குற மாதிரித்தான் பீல் ஆகுது. இருக்குமிடம் விட்டு இல்லாத இடத்தில் தேடினால் எப்படி கிடைப்பா(ள்). டூ இயர்ஸ் வேஸ்ட் பண்ணிட்டேன். இந்த தாட் ஏன் முன்னமே வரல?” என்றவன் நெற்றியில் தட்டிக்கொண்டான்.
“ஷீ இஸ் வெரி நியர் டூ மீ” என்ற துருவன், தன் நெஞ்சத்தில் குத்திக்கொண்டான்.
“இப்போலாம் அடிக்கடி அங்க குத்திக்கிறன்னு நினைக்கிறேன்” என்ற ஆரோனிற்கு புன்னகையையே பதிலாகக் கொடுத்தான்.
“இங்க இருந்துக்கிட்டு ரொம்ப படுத்துறா(ள்)டா” என்ற துருவின் கவனம் அங்கு வருகை தந்த என்ஜினியரிடம் செல்ல, ஆரோனும் வேலையில் கவனமாகினான்.
துருவ் பேசியதெல்லாம் புதருக்கு மறைவிலிருந்து கேட்ட நிரல்யாவுக்கு அவனது காதல் புரிவதாய். துளிர்த்த கண்களை இமைத்தட்டி சரிசெய்தாள்.
அவனிடம் தஞ்சம் அடைய முன்னேறிய கால்களை கடினப்பட்டு நகர்த்தி வெளியேறினாள்.
அங்கிருந்து நிரல்யா சென்றது துருவனின் வீட்டிற்குத்தான்.
வந்ததிலிருந்து நிரல்யாவை பார்க்கிறார் பூரணி.
கன்னத்தில் கை வைத்தபடி சோகமாக ஏதோ யோசனையிலே அமர்ந்திருந்தாள்.
கோகிலா கொண்டு வந்து கொடுத்திருந்த தேநீர் ஏடு படிந்து போயிருந்தது.
இரண்டு மூன்று முறை என்னவென்று கேட்டு பார்த்த பூரணி, நிரல்யா வாய் திறக்காததும், அவளே சொல்லட்டுமென்று கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்களாக அவள் முகம் பார்த்தே அமர்ந்திருக்கிறார்.
“என்னாச்சும்மா… ஏன் இப்படி உட்கார்ந்திருக்கு. எப்போ வந்தாலும் அடுப்படி வரை வந்து வாய் ஓயாம பேசிட்டு நிப்பாளே!” என்று பூரணியிடம் கேட்டவாறு, கோகிலாவும் அவர்களுக்கு முன் அமர்ந்தாள்.
“எனக்கும் தெரியல கோகிலா. நம்ம புது ரிசார்ட்டில் வேலையில் சேரச்சொல்லி அனுப்பி வச்சேன். அங்க என்ன நடந்துச்சு தெரியலையே!” என்றவர் பெருமூச்சினை வெளியேற்றினார்.
“நிரல்யா…” கோகிலாவும் தன் பங்கிற்கு அழைத்து பார்த்துட்டு மௌனமாகிவிட்டாள்.
“அடபோங்கம்மா! எனக்கு வேலை இருக்கு” என்று கோகிலா எழ,
“அத்தை இந்த ரிவென்ஞ் எடுக்குற வேலையெல்லாம் வேணாம். அவங்க பாவம். என்னை நினைச்சு எத்தனை வருத்தப்படுறாங்க தெரியுமா?” என்றவள் துருவ் ஆரோனிடம் பேசியதைக்கூற…
“அவன் உன்னை பேசியதெல்லாம் மறந்துப்போச்சா. ஒரு பொண்ணு முதலில் காதல் சொன்னால் இவனுக்கு அவ்வளவு இளப்பமா. இப்படியெல்லாம் அவன் பேசுறான்னு இளகிடாதே நிரல்யா. அவனை கொஞ்சம் சுத்தல்லவிடு, அப்போதான் இன்னொருமுறை அப்படி பேச யோசிப்பான்” என்று அவளுக்கு அத்தையாக பேசினார்.
“அவங்க உங்க மகன் அத்தை. எனக்காக கஷ்டப்படுறது ஒரு மாதிரியிருக்கு.”
“மகன் தான் இல்லைன்னு சொல்லலையே” என்ற பூரணி, “கஷ்டப்பட்டு கிடைச்சால் தான் அதை எப்படி பார்த்தக்கணும் தெரியும். அந்த வகையில் ஒரு அனுபவத்தை அவனுக்கு நான் உன் மூலமா கற்றுத்தர்றேன்” என்றார்.
“அம்மா சொல்றது தான் கரெக்ட் நிரல்யா. நானாயிருந்திருந்தா, பேசுன பேச்சுக்கு நீயே வந்தாலும் எனக்கு வேணாம் போடான்னு போயிருப்பேன். லவ் பன்ற பொண்ணுங்கெல்லாம் இந்த ஆம்பளைங்களுக்கு அலையுற மாதிரி தெரியுமாமா” என்று கோகிலாவும் சொல்ல… நிரல்யா பூரணிக்கு புரியுது என்பதைப்போல் தலையாட்டினாள்.
“நாளைக்கே அவன் உன்னை பார்க்கப்போறான். உன் பின்னாடி சுத்தப்போறான். கொஞ்ச நாளில் நீ சமாதானமாகி அவனை ஏத்துக்குற மாதிரி ஏத்துக்க. அப்புறம் என்ன லவ் சக்ஸஸ், கல்யாணம் தான்” என்று பூரணி உற்சாகமாகக் கூறினார்.
‘அவங்களாவது என் பின்னால் சுத்துறதாவது. இந்த அத்தைக்கு மகனைப்பற்றியே சரியாத்தெரியல’ என மனதோடு சொல்லிக்கொண்ட நிரல்யா சிறிது நேரம் இருந்துவிட்டு சென்றுவிட்டாள்.
அன்று மாலை வீட்டிற்கு வந்த துருவன்,
“அம்மா” என்று சத்தமாக அழைத்திட, அவன் கூப்பிட்ட குரலுக்கு பூரணியும் கோகிலாவும் கூடத்திற்கு அத்தனை வேகத்தில் வந்திருந்தனர்.
“என்ன துருவ், எதுக்கு இப்படி சத்தமா கூப்பிடுற?” என்றபடி அவனருகில் வந்து நின்றார்.
“எனக்கொரு பொண்ணு பார்த்திருக்கேன் சொன்னீங்களே! பெயர் என்ன? போட்டோ காட்டுங்க பார்ப்போம்?” என்றவன், “எனக்கு கல்யாணம் பண்ணிக்கலாம் தோணுது. பண்ணிக்கிறேன்” என்றான்.
துருவன் இப்படி சொல்வானென்று எதிர்பார்க்காதவர், கைகளை பிசைந்துகொண்டு கோகிலாவை பார்த்தார்.
‘துருவ்க்கு யாருன்னு தெரிஞ்சிடுச்சோ?’ கோகிலா சரியாக சிந்தித்தாள்.
கோகிலாவின் எண்ணப்படித்தான் துருவிற்கு நிரல்யா பற்றி அனைத்தும் தெரிந்திருந்தது.
துருவன் இருந்ததால் ஆரோன் என்ஜினியர் வந்ததும், அவன் உடன் செல்லட்டுமென்று மற்ற வேலையை பார்க்கச் சென்றிருந்தான். அதனால் இன்ஜினியருடன் இடத்தினை காட்டுவதற்காக துருவன் தான் சென்றான்.
“படி போன்ற அமைப்புகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தனிமை பாதிக்காத அளவில் குறிப்பிட்ட இடைவெளியில் ஒவ்வொரு கிளாம்ப்பும் இருக்க வேண்டும்” என்று துருவ் சொல்லிக்கொண்டே இருக்க,
“சிசிடிவி வைக்க வேண்டுமா?” எனக் கேட்டிருந்தார் அவர்.
“நோ நீட். இந்த இடம் பிரைவசி விரும்புறவங்களுக்காக அமைக்கப்படுவது. அதில் காமிரா வைத்தால், அத்தோடு இந்த மாதிரி ஹட் மோஸ்ட்லி ஹனிமூன் கப்பில்ஸ் தான் புக் பண்ணுவாங்க, அதனால் காமிராவெல்லாம் வேண்டாம்” என்றவன், “இந்த ஸோன் எண்ட்ரன்ஸ் அண்ட் எக்ஸிட்டில், அப்புறம் கீழே சரிவு பாதை முழுக்க பாரெஸ்ட், அதனால் அந்த ஏரியாவில் மட்டும் காமிரா வைத்தால் போதும்” என்றான்.
அப்போதுதான் துருவனிற்கு மூளையில் பளிச்சென்றது.
அங்கு வேலை பார்க்கும் ஊழியரை அழைத்து, “நீங்க இந்த இடத்தை முழுக்க அவருக்கு காட்டுங்க” என்று பணித்தவன், என்ஜினியரிடம் “எமெர்ஜென்சி” என்று சொல்லி தன்னுடைய அறைநோக்கி விரைந்தான்.
கணினியை உயிர்ப்பித்தவன் ரிசார்ட்டில் இருக்கும் மொத்த காமிராக்களையும் தன் இணைப்பில் கொண்டு வந்தான்.
தன்னை துளைக்கும் பார்வையை உணர்ந்த நேரத்தை கணித்து, அந்நேரத்தில் அனைத்து காமிராக்களின் பதிவுகளையும் ஓடச் செய்து கண்களில் கூர்மையைத் தேக்கி பார்த்தான்.
அந்த நேரம் அவள் மறைந்திருந்தாள் என்ற எண்ணம் எழ, சில காமிராக்களை அந்நேரத்திற்கு முன்பும், சிலதை பின்பும் ஓடவிட்டான்.
அலுவலக பகுதி தனி கட்டிடம். ரிசார்ட்டிற்கு ஏற்ற வகையில் சற்று பெரிதான குடில் என்றே சொல்லலாம். அங்கு துருவ், ஆரோனின் அறை எதிரெதிர் இருக்க, நடுவில் அக்குடில் கட்டிடத்தின் வாயில். சில படிகள் ஏறி சிறு சமதளபரப்பு மற்றும் அலுவலக ஊழியர்களுக்கான பகுதி மட்டுமே. கிச்சனுக்கு என்று தனி கட்டிடம். அறைகள் இருக்கும் கட்டிடம் தனி.
அதனால் அப்பகுதியை ஆராய்வதில் சிரமம் ஏற்படவில்லை.
முன்பு ஓடியதில், படிகளை கடந்த அந்த சமதளபரப்பில் ஒரு பெண் முதுகுக்காட்டி நின்றிருக்க, தன்னுடைய அறையிலிருந்து வெளியேறிய ஆரோன் அப்பெண்ணிடம் செல்ல, அவள் சரியாக காமிராவிற்கு முகம் காட்டியவாறு ஆரோனின் புறம் திரும்பினாள்.
“நிரல்…” துருவனின் கண்கள் ஒளி கூடிட, அவனது உதடுகள் பிரிந்து மெல்ல உச்சரித்தன.
அதே கணம், பின் ஓடிய காமிரா ஒன்றில், தான் என்ஜினியருடன் சென்ற பின்… படிகளுக்கு அருகிலிருந்த புதர் மறைவிலிருந்து வெளிவந்த நிரல்யா தென்பட, அவனக்கு மூச்சடைக்கும் உணர்வு.
இன்றும்… இக்கணம் அவளை முதல் முறை பள்ளிமுகம் மாறா தோற்றத்தில் பார்த்தது நினைவிற்கு வந்தது.
‘பால்வாடி.’ மௌனமாக மனம் உச்சரித்தது.
இரண்டு வருடமாக அவளை கண்டுவிடத் துடித்த அவனின் துடிப்பு, தவிப்புகள் யாவும் மனதில் ஒன்றுகூடி முட்டி மோதிட… மூச்சுக்காற்றிற்கு ஏங்கியவனாக அவனது இதயம் தாறுமாறாகத் துடித்தது.
ரத்தம் உடல் முழுக்க சீறிப்பாய்ந்தது.
“நிரல்யா” என்று அக்கண்ணாடி அறை சிதறி வெடிக்கும் அளவிற்கு உரக்க விளித்திருந்தான்.
சீரற்ற தன் உணர்வுகளை நொடியில் கட்டுக்குள் கொண்டுவந்தவன், தன்னிலிருந்து சிந்திக்க ஆரம்பித்தான்.
“ஆரோன்… நிரல்யா, எப்படி?”
‘ஆரோனிடம் கேட்க நொடி போதும். ஆனால் சொல்ல வேண்டுமென்றால் சொல்லியிருப்பான். என் தவிப்புகள் புரிந்தவனாயிற்றே. அப்படியிருந்தும் என்னிடம் நிரல்யாவைப்பற்றி தெரிந்துகொண்டதை சொல்லவில்லை. நிச்சயம் ஏதோ காரணமிருக்கு.’
நினைத்த மாத்திரம் கிருஷ்ணாவுக்கு அழைத்தான்.
“நிரல்யா ரிசார்ட் வந்துட்டு போயிருக்காள் கிருஷ்ணா. இதை வைத்து…” என்று அவன் இழுத்திட,
“டூ ஹவர்ஸ் டைம் கொடுடா. புல் டீடெயில்ஸ் நான் கொடுக்கிறேன்” என்ற கிருஷ்ணா அப்போதே தீவிரமாக தன்னுடைய வேலையை மேற்கொண்டான்.
என்னதான் பூரணி, “துருவனா நிரல்யாவை பார்க்கும்வரை அவனிடத்தில் நிரல்யா பற்றி எதுவும் சொல்லக்கூடாது” என்று சொல்லியிருந்தாலும், ஏனோ நண்பனிடம் மறைப்பது ஆரோனுக்கு என்னவோ போலிருந்தது
அதே நேரம் பூரணியின் வார்த்தையையும் மீறிட முடியவில்லை.
சிறிது நேரத்திற்கு முன்பு, கிருஷ்ணாவை அழைத்து நிரல்யாவை அவன் தேட சொல்லியபோது அவனது முகத்தில் வந்துபோன தவிப்பை கண்ட ஆரோனால் வேலையில் கவனம் பதிக்க முடியாதுபோக, துருவனின் அறைக்கு வந்தான்.
அப்போதுதான் கிருஷ்ணாவிடம் பேசிவிட்டு துருவன் அலைபேசியை வைத்தான்.
ஆரோன் அமைதியாக வந்து உட்கார்ந்ததும், அவனை ஆழமாக பார்த்த துருவன்…
“எதாவது சொல்லணுமா ஆரோன்?” எனக் கேட்டான்.
“ஆமாண்டா…” என்ற ஆரோன் பூரணி மிரட்டும் முகம் கண்ணில் தோன்றி மறைய, “இல்லைடா” என்று எழுந்துகொண்டான்.
கதவு வரை சென்றவன், திரும்பி நின்று…
“நான் செலக்ட் செய்த நியூ மேனேஜர் டீடெயில்ஸ் உனக்கு அனுப்பியிருக்கேன். செக் பண்ணுடா” என்றான்.
“நீ செலக்ட் பண்ண ஆளு. கிராஸ் செக்கிங் தேவையில்லை” என்றான் துருவன். அழுத்தமாக.
நண்பனுக்கு தன்மீதான நம்பிக்கை அந்நொடி வலியை கொடுக்க,
“என்னால் ஓப்பனா சொல்ல முடியல துருவ். மேனேஜர் நேம்… பூரிம்மா, ச்ச…” என்று பாதியில் நிறுத்தி, “எனக்காக பாரேன்” என்று முகம் சுருக்கி சொல்லிவிட்டு சென்றிருந்தான்.
“என்னாச்சு இவனுக்கு? அம்மான்னு ஏதோ சொல்ல வந்தானே!” சிந்தித்த துருவ், “எதுக்கு நியூ மேனேஜர் செக் பண்ண சொல்றான். பெயர் சொல்ல வந்து சொல்லல. அம்மா இவனிடம் என்ன சொன்னங்கா?” தனக்குள் உழன்றாலும், அவனது கை கணினியில் ஆரோன் நிரல்யா தான் மேனேஜர் என்பதற்காக அனுப்பி வைத்திருந்த மின்னஞ்சலை திறந்திருந்தது.
நியூ மேனேஜர் நிரல்யா என்றதும் துருவின் கண்கள் சாசர் போல் அகண்டு விரிந்தது.
நிரல்யாவின் படிவத்தை பார்த்த துருவன் என்ன மாதிரி உணர்கிறான் என்று அவனுக்கேத் தெரியவில்லை.
நிரல்யாவின் மின்னணு படிவத்தில் இருந்த அவளின் புகைப்படத்தை கணினி திரையில் மெல்ல வருடினான்.
‘என்னுடைய இடம் தெரிந்து வந்தியா நிரல், இல்லைன்னா?’ அவ்வரியை எப்படி முடிப்பதென்றே அவனக்குத் தெரியவில்லை.
“எப்படியும் என்னுடையதென்று தெரிந்திருக்கும். என்னை பார்த்துட்டுதானே போயிருக்க. என் முன்னால் ஏன் வரல? உன்னை ரொம்ப தேடினேன்டி” என்றவன் “ஆரோன் ஏதோ சொல்ல வந்து முடியாது விட்டமாதிரி தெரிந்ததே” என்று யோசித்தவன் கிருஷ்ணாவுக்கு அழைக்க அலைப்பேசியை எடுக்க, அதுவே கிருஷ்ணாவின் அழைப்பினை ஏற்று வந்தது.
“சொல்லு கிருஷ்ணா?”
“ரிசார்ட்டில் இருந்து நிரல்யா உன் வீட்டிற்குத்தாண்டா போயிருக்காங்க” என்று கிருஷ்ணா சொல்லியதில் அதிர்ந்தவனாக இருக்கையிலிருந்து எழுந்துவிட்டான் துருவன்.
“என்னடா சொல்லுற?”
“ஆமாம் மச்சான். உன் வீட்டுக்குத்தான் போயிருக்காங்க. ஒன் ஹவருக்கு மேல அங்க இருந்திருக்காங்க. அங்கிருந்து பூரணி ஆண்ட்டி காரில் தான் கிளம்பி போயிருக்காங்க. அடுத்து உங்க ட்ரைவரை விசாரிச்சிட்டு சொல்றேன்” என்று கிருஷ்ணா வைத்திட, துருவன் முகம் யோசனையை காட்டியது.
இப்போவே அழைத்து பூரணியிடம் விசாரிக்கலாம், ஆனால் நிரல்யாவை என்னவென்று சொல்லி கேட்பது? குழப்பமாக இருந்திட அப்படியே கண்களை மூடி இருக்கையில் சாய்ந்துவிட்டான்.
சில நிமிடங்களில் கண்களை திறந்தவன்,
நிரல்யாவின் விவரங்களை ஆராய, அதில் அவளது பெற்றோர் பெயர் இருக்குமிடத்தில் நில் என்று குறிப்பிட்டு, பாதுகாவலர் இடத்தில் அன்னப்பூரணியின் பெயர் நிரப்பப்பட்டு இருந்தது.
‘இதெப்படி சாத்தியம்?’
‘அம்மாவுக்கு நிரல்யாவை தெரியுமா?’
“எப்படி… எப்படி?’
துருவனின் மூளை அதிவேகத்தில் ஓடியது.
“ஹில் டைவிங் அப்ரூவல் கிடைச்சிருச்சு துருவ். மெயில் வந்திருக்கு” என்றபடி உள் வந்த ஆரோன், துருவனின் அசையாத பார்வையில் அவனின் விழிகளின் திசையில் பயணித்து நிலைத்தான்.
“சாரிடா… பூரிம்மா தான்” என்று ஆரோன் ஆரம்பிக்க துருவன் கைகாட்டி தடுத்திருந்தான். இருப்பினும் ஆரோன் சொல்ல வந்ததை தொடர்ந்தான்.
“எனக்கே எஸ்டர்டே ஈவ்னிங் தாண்டா தெரியும். நிரல்யாவை அனுப்புறேன் அப்பாயிண்ட் பண்ணிடு சொன்னாங்க. நான் உன்கிட்ட சொல்லலாம் சொன்னதுக்கு, ஏதேதோ பேசி சொல்லக்கூடாது, அவனா பார்க்குறவரைன்னு சொல்லிட்டாங்க. அப்படியிருந்தும் மார்னிங் உனக்கு கால் பண்ணி சொல்ல நினைத்தால் பூரிம்மா பேச்சை டைவர்ட் பண்ணி வச்சிட்டாங்கா” என்று குறைபட்டான்.
‘மார்னிங் இல்லாத காரணமெல்லாம் சொல்லி என்னை கோவிலுக்கு கிளப்பிக்கொண்டு போனதற்கு காரணம் இதுதானா?’ சன்னமாக சிரித்துக்கொண்டான்.
ஆரோனின் நிலை துருவனுக்கு புரிந்தது தான். இதில் தன் அன்னை ஏதோ பிளே பண்ண நினைக்கிறார் என்றவரையில் அவனுக்கு புரிந்தது.
“பூரிம்மாவுக்கும் நிரலுக்கும் எப்படி பழக்கம் தெரியலடா. ஆனால், வார்த்தைக்கு வார்த்தை என் மருமகள் சொல்றாங்கன்னா பார்த்துக்கோயேன்” என்றான் ஆரோன்.
“இதில் நிரல்யாவுக்கு மாளு ஃபிரண்டாம். இத்தனை மாதம் இது எனக்குத் தெரியல” என்று சோகம் போல் கூறினான்.
பூரணியின் மருமகள் என்ற வார்த்தையிலேயே துருவன் உறைந்து போயிருந்தான்.
‘அம்மாவுக்கு எல்லாம் தெரிந்திருக்கு. இவங்க ரெண்டு பேரும் எப்படி ஒண்ணு சேர்ந்தாங்கா. அப்போ அம்மா எனக்கு பார்த்திருக்கும் பெண் என்று சொல்லியது நிரல்யாவைத்தானா?’ துருவன் தனக்குள் எண்ணியபடி இருக்க, கிருஷ்ணாவே நேரில் வந்திருந்தான்.
“வா கிருஷ்ணா” என்ற ஆரோன் அவன் அமர இருக்கையை கொடுத்து தானும் அமர்ந்தான்.
“நிரல்யா இருக்குமிடம்…” என்று கிருஷ்ணா துவங்க, துருவன் ஆரோனை பார்த்தான். “எனக்குத் தெரியாதுடா” என்று ஆரோன் வேகமாக சொல்லியிருந்தான்.
“த்ரீ மன்த்ஸ் வரை காலேஜ் ஹாஸ்டல். கோர்ஸ் முடிந்ததும், லேடீஸ் ஹாஸ்டல்” என்று அந்த பெண்கள் விடுதியின் பெயரையும் முகவரியையும் கூறினான்.
“அப்புறம் நிரல்யா பூரணி ஆண்ட்டி கார்டியர்ன்ஷிப்பில் தான் இருக்காங்க” என்றான்.
துருவன் அமைதியாக இருந்திட…
“பக்கத்துல வச்சிகிட்டே இவ்வளவு நாள் அலைஞ்சிருக்கோமேடா!” என்றான் கிருஷ்ணா.
நிரல்யா சென்ற இடம் என்று அவர்களின் யூகத்தை வைத்து தேடுவது சாத்தியப்படாது என்று தெரிந்திருந்தாலும், நண்பனுக்காக முயற்சித்துக் கொண்டிருந்த கிருஷ்ணாவுக்கு, நிரல்யா இங்கு தான் எங்கோ இருக்கிறாள் என்கிற நம்பிக்கையானத் தகவல், நான்கு மணி நேரத்தில் அவளைப்பற்றி அனைத்தும் தெரிந்துகொள்ள போதுமானதாக இருந்தது.
“ஆண்ட்டி உனக்குத் தெரியாம பிளான் பன்றாங்கடா?”
கிருஷ்ணாவுக்கு யூகிக்க முடியும் எனும்போது, பூரணியின் மகன் அவனுக்கா முடியாது.
“அவங்க மருமக(ள்) பின்னால் நான் சுத்தனும் நினைக்கிறாங்கா…” என்று சரியாக கணித்துக்கூறி சிரித்தான் துருவன்.
கிருஷ்ணா அங்கிருந்து கிளம்பிட,
“இப்போ என்னடா பண்ணப்போற?” எனக் கேட்டிருந்தான் ஆரோன்.
“தெரிந்ததும் உன் பூரிம்மாவுக்கு சப்போர்ட் பண்ணி என்கிட்ட நீ சொல்லலைதானே. நான் மட்டும் உன்கிட்ட சொல்லிட்டு செய்யணுமாக்கும்” என்று சடைத்துக்கொண்டான் துருவன்.
“இதெல்லாம் ஓவர்டா” என்ற ஆரோன், “என்னமோ பண்ணு. ஆனால் எதிலும் நடுவில் என்னை இழுக்காதே! பூரிம்மா என்னை பூரிக்கு மாவா பிசைந்து எடுத்திடும்” என்றவனின் பாவனையில் வெகு நாட்களுக்கு பின்னர் மலர்ந்து சிரித்தான் துருவன்.
இந்த சிரிப்பிற்கு முழு முதல் காரணம் அவனவளன்றி வேறு யார்?
‘என்னை ஓடவிட பிளான் போடுறீங்களாம்மா. அவகிட்ட அதுக்குள்ள செட்டாகியாச்சா? மகனைவிட ஸ்பெஷல் ஆகியாச்சுப் போல’ என்று நினைத்தவன், ‘உங்களுடைய கணிப்பிற்குள் நான் அடங்கமாட்டேன்’ என சொல்லிக்கொண்டான்.
பூரணி மகனிடம் விளையாடிப்பார்க்க நினைத்திருக்க, துருவன் தன் விளையாட்டை அன்னையிடம் ஆரம்பித்திருந்தான்.
“சொல்லுங்க மாம், நீங்க எனக்கு பார்த்த பொண்ணோட நேம் சொல்லுங்க?”
பூரணி அதிர்ந்து நிற்பதை கண்டுகொள்ளாதவனாக தன் போக்கில் கேட்டுக்கெண்டே இருந்தான்.
“சொல்லுங்க மாம். ஏன் அப்படியே நிக்கிறீங்க? பெயர் தெரியாதா? மறந்துபோச்சா?” எனக் கேட்டான்.
“அதுவந்து துருவ்…”
‘எதாவது சொல்லி சமாளியேண்டி’ எனும் விதமாக பூரணி கோகிலாவை முறைக்க…
“தம்பி மதியமே நீ சாப்பிட வரலையே! ஸ்நாக்ஸ் செஞ்சேன். வா சாப்பிடலாம்” என்று அவனின் கவனத்தை மாற்ற திக்கித்தினறி அழைத்தாள்.
“வரும்போது அங்கயே சாப்பிட்டுதான் வந்தேன் க்கா” என்றவன், ‘கோகிலா தடுமாறுவதை பார்த்தால் இதில் அவங்களும் அடக்கம் போலவே’ என நொடியில் கண்டுபிடித்துவிட்டான்.
“நீங்க சொல்லுங்கம்மா. மறந்துட்டா கேட்டு சொல்லுங்க” என்றான் சிரியாது.
“துருவ்…”
“அம்மா துருவ் என்னோட நேம். நான் கேட்டது நான் கட்டிக்கப்போற பொண்ணோடது” என்றான்.
அன்னையின் பாவனை கண்டு உள்ளுக்குள் அத்தனை சிரித்து வைத்தான். ஆனால் அவனின் முகம் அதற்கு நேர்மாறாக அத்தனை தீவிரமாக இருந்தது.
“நேத்துக்கு முதல் நாள் தான் தம்பி தரகர் வந்து சொல்லிட்டு போனாரு. ஒரு தடவை தானே அம்மா பேர் கேட்டிருப்பாங்க அதான் மறந்திருக்கும்.” கோகிலா பூரணியை காப்பாற்ற சமாளிக்கும் விதமாக பேசினாள்.
“பொண்ணைப்பற்றி ஒண்ணுமே தெரியாமலாம்மா என்கிட்ட சம்மதம் கேட்டிங்க?” துருவனிடம் ஆச்சர்யம்.
“நீ சரின்னு சொன்னா மேல பேசலாம் நினைத்தேன்” என்றார்.
“ஓகேம்மா… எனக்கு சம்மதம். நீங்க காட்டுற பொண்ணையே கட்டிக்கிறேன்” என்றவன், “ரொம்ப டிலே பண்ணாதீங்க. ஒன் மன்த் ஆர் ஒன் வீக்கில் அரேன்ஞ் பண்ணிடுங்க” என்று பொங்கிவரும் சிரிப்பினை கட்டுப்படுத்தியவனாக மிக சாதாரணமாகச் சொல்லிச் சென்றுவிட்டான்.
“விட்டா நாளைக்கே வையுங்கன்னு சொல்லுவான் போல” என்ற கோகிலா மேவாயில் கை வைத்து அவன் முதுகை பார்க்க, பூரணி சுவாசம் சீரானவராக மெத்திருக்கையில் பொத்தென்று விழுந்தார்.
“அம்மா… என்னாச்சு?” கோகிலா பதறியவளாக கேட்டிட,
“எங்கடி என் போனு… இல்லைன்னா லேண்ட்லைனிலிருந்தே மருமகளுக்கு போனப்போடு” என்றார்.
அந்தப்பக்கம் நிரல்யா அழைப்பை ஏற்றதும், ரிசீவரை கோகிலா பூரணியிடம் கொடுத்தாள்.
“துருவ் உன்னை பார்த்துட்டானாடாம்மா?” தங்களின் திட்டத்தை மகன் கண்டு கொண்டுவிட்டானோ என்கிற கவலை அவருக்கு.
“இல்லையே அத்தை. அதுக்கு சான்ஸே இல்லை.” நிரல்யா அழுத்தமாகாக் கூறிட, ஆரோனுக்கு அழைத்து விசாரித்தார்.
ஆரோனும் துருவன் சொல்லியிருந்ததால், அவனுக்கு தெரியும் என்பதை மறைத்துவிட்டான்.
‘அப்புறம் எப்படி ரெண்டு வருஷமா தேடிய பெண்ணை விட்டுட்டு நான் பார்த்த பெண்ணுக்கு ஓகே சொன்னான்?’ பூரணி வெகுவாகக் குழம்பிப்போனார்.
“ஒருவேளை தம்பிக்கு நிரல்யா மேல விருப்பமில்லையோ என்னவோ?” கோகிலா தன்னுடைய சந்தேகத்தை முன் வைத்தாள்.
“இல்லாமலா ரெண்டு வருசமா தேடிட்டு இருக்கான்.”
“திட்டிட்டோமேன்னு குற்றவுணர்ச்சியா இருந்திருக்கும். நம்மளால ஒரு பொண்ணு படிப்பே போச்சேன்னு மன்னிப்பு கேட்க தேடியிருக்கலாமே” என்ற கோகிலா, “நம்ம துருவ்க்கு நான் சொன்னது தான். இந்த லவ்வெல்லாம் செட்டாகாது. நான்கூட உங்கப்பேச்சை நம்பி தம்பி லவ் பண்ணுதுன்னு சந்தோஷப்பட்டுட்டேம்மா” என்றாள்.
மாடியிலிருந்து இவர்களின் பேச்சினைக் கேட்டு, துருவன் சத்தமின்றி சிரித்தான்.
“கோகிக்கா செம ஷார்ப்” என்றவன் முகத்தில் இதழ்கள் நீண்டு விரிந்திருந்தன.
“போடி… நீ வேற என்னை குழப்பாதே!” என்ற பூரணி,
“எனக்கு மட்டும் அவனை கஷ்டப்படுத்திப்பார்க்கணும் ஆசையா என்ன? நீயே பார்த்தியே… நிரல்யா அவனை எந்தளவுக்கு விரும்புறான்னு. என்னதான் விருப்பமிருந்தாலும், நம்ம துருவ் பேசின பேச்சை இன்னொரு பொண்ணு இவளை மாதிரி கேட்டுட்டு சும்மா வந்திருக்கமாட்டாள். அந்த உறுத்தல் இப்போ இல்லைன்னாலும், பின்னாடி நிரல்யா மனசில் வர ஆரம்பிச்சுதுன்னா ரெண்டு பேரோட வாழ்க்கையும் வீணாப்போயிடும். அவளோட மன திருப்திக்காகத்தான், இந்த ரிவென்ஞ் பிளானே! நான் இதை சொல்லியிருந்தா அவள் நிச்சயம் ஒத்துக்கமாட்டாள். இப்போவே, இதெல்லாம் வேணாம், அவங்க கஷ்டப்படுவாங்கன்னு டயலாக் பேசுறாள்… இதில் இதையும் சொன்னால், காலத்துக்கும் அவனுக்கு அடங்கிப்போறவளா மட்டும் தான் அவள் இருப்பாள். பெண்ணுக்கும் சுயமரியாதை இருக்கணும் கோகிலா. அதுக்காகத்தான் அவளுக்காக யோசிக்கிறேன்” என்றார்.
அவர் சொல்லிய அனைத்தும் கேட்டுக்கொண்டிருந்த துருவிற்கு விளங்கியது.
இருப்பினும் அவர் நினைக்கும் அளவிற்கு ஆண்ட்டிஹீரோ வெர்சன் இல்லையே அவன்.
தன்னவளை இதயத்தில் தாங்கிக்கொள்ள தவம் கிடப்பவன், அவரின் எண்ணத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவன்.
‘உங்களுக்கான பதிலை நான் சொல்லுவதைக்காட்டிலும், என் நிரலோடு வாழ்ந்துக்காட்டுவதில் தா(ன்)ம்மா இருக்கு’ என்றவன், நாளை நிரல்யாவை நேரில் காணப்போகும் இனிய படப்படப்போடு மெத்தையில் விழுந்தான்.
“நான் கஷ்டப்படுறேங்கிற அளவுக்கு தெரிஞ்சிருக்கே உனக்கு. அப்புறம் ஏன் என் முன்னால் வரல? ஒருமுறை நீ சொல்லி கேட்கணும் போலிருக்குடி” என்றவன் இமைகள் மூடிட…
“சீனியர் எனக்கு எப்போ ஓகே சொல்லுவீங்க?” என்ற அவளின் சிரித்த முகம் அவனது அகக்கண்ணில் ஊர்வலம் போனது.
“நாளைக்கு என்னை பார்ப்பியே, அப்போ கேளேன்…
ஓகேடின்னு அந்த மலையே அதிரும் அளவுக்கு கத்தி சொல்றேன்” என்று தனக்குள் அதனை காட்சியாய் உருவகப்படுத்தி பார்த்தவனுக்கு அந்நிகழ்வே தித்திப்பாய் அவனது இதயம் தொட்டது.
“நீயெப்படி ரியாக்ட் பண்ணாலும் உன்கிட்ட கண்டிப்பா இறங்கிப்போகனும் தோணுதே! ஆனால் அப்படி பண்ணமாட்டேன். காதலுக்குள் ரிவென்ஞ், கில்ட்டினெஸ்லாம் இருக்காதுடி. நீ, நான், நாம் என்கிற உணர்வு தான். பார்ப்போம் உன் மாமியார் சொல்பேச்சைக் கேட்டு என்னை தெரியாத மாதிரி இருக்கியான்னு” என்றவன் நாளையை வெகுவாக எதிர்பார்த்தான் இப்போதே.