உயிர் உறை 28
தேடல் 4
நாளை…
நிரல்யா துருவனின் முன்பு நீண்ட நெடு நாட்களுக்குப் பின்னர் செல்லவிருக்கிறாள்.
அதற்காக என்ன உடை அணிவது, எந்த மாதிரி தலை மற்றும் முகம் அலங்கரிப்பது என்று வழக்கமாக கிறுக்கத்தனமாக ஒருசில பெண்கள் செய்யும் விடயத்தை நிரல்யாவும் செய்து கொண்டிருந்தாள்.
மொத்த துணியையும் கட்டிலில் பரப்பி விட்டிருந்தாள்.
பூரணிக்கே அழைத்து என்ன உடை உடுத்துவது என்று கேட்டுவிட்டாள்.
அவர் சொல்லுவதில் எதிலும் அவளுக்கு திருப்தி இல்லை. சலித்துப்போனவர், “நீயெப்படி போனாலும் அவன் உன்னை பார்ப்பான். வச்சிட்டு தூங்குடி” என்று அதட்டியவர் வைத்துவிட்டார்.
அவளின் அறை கதவு தட்டப்பட, சென்று கதவினை திறந்தாள்.
“உனக்கு விசிட்டர்.” வந்த பணிப்பெண் சொல்லிவிட்டு செல்ல, நேரத்தைப் பார்த்தவள்,
இந்த நேரத்தில் யாரெனும் யோசனையோடே விசிட்டர்ஸ் காத்திருக்கும் பகுதிக்கு சென்றாள்.
பின் திரும்பி நின்றிருந்ததால் யாரென்று தெரியவில்லை.
“எக்ஸ்க்யூஸ் மீ!”
முதுகுக்காட்டி நின்றிருந்தவன் திரும்பிட,
‘இவனா’ என்றவள் முகத்தை முறைப்பாக வைத்துக்கொண்டாள்.
“லாஸ்ட் டே அன்னைக்கு சொல்லாமல் ஓடிட்ட. உன்னை எங்கெல்லாம் தேடுறது நிரல்யா?” எனக் கேட்டவன், “அழகா இருக்க” என்றிட, யாரென்று தெரியாமல் இரவு உடையிலேயே வந்த தன் மடமையை எண்ணி தன்னையே திட்டிக்கொண்டாள்.
“இப்போ எதுக்கு இங்க வந்திருக்க?” கோபமாகத்தான் கேட்க நினைத்தாள். அவளுக்கு வந்தால் தானே. கோபம் என்ற உணர்வையே அறிந்திடாதவளுக்கு எப்படி கோபம் வரும்.
“ஜாப் கிடைச்சிருச்சு போல?” கேட்டவன் அங்கிருந்த இருக்கையில் கால் மேல் காலிட்டு அமர்ந்தான்.
“உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்றவள் திரும்பி செல்ல முற்பட,
“நீ கொடுத்ததை நானின்னும் மறக்கல” என்று தன்னுடைய இடதுபக்க கன்னத்தை தேய்த்துக்கொண்டான்.
“அடி வாங்கியும் நீ திருந்தலையே” என்றவள், “என்ன திரும்ப கொடுக்கணுமா?” எனக் கேட்டிருந்தாள்.
“உனக்கு கோவப்படவே தெரியல டியர்” என்றவன்,
“உன்னை லவ் பன்றேன். அதுக்காகத்தான் பொறுமையா பேசிட்டு இருக்கேன்” என்றான்.
“லவ்வா…” நிரல்யாவின் உதடு ஏளனமாக வளைந்தது.
“இல்லைன்னா என்னடா பண்ணுவ?” என்று இம்முறை உண்மையான கோபத்தோடு வினவினாள்.
“என்கிட்ட இருந்து தப்பித்த ஒரே பொண்ணு நீதான். உன்னை விடமாட்டேன்” என்றவன், “உன்னை இப்படியே என்னால தூக்கிட்டுப்போக முடியும். ஆனால் அப்படி செய்யமாட்டேன்” என்றதோடு, “எங்கயும் ஓடி ஒளியனும் நினைக்காத. அது உனக்கு இன்னும் ஆபத்தா முடியும்” எனக்கூறினான்.
“என்னைப்பற்றித் தெரிந்தும் தைரியமா போலீஸிடம் போயிருக்க நீ. உன்னோட இந்த தைரியம் தாண்டி எனக்கு உன்கிட்ட அதிகம் பிடிச்சிருக்கு. ஒரு பொண்ணை பார்த்தோமா, லவ்வுன்னு ஆறு மாசம் சுத்துனோமா, வலையில் சிக்க வச்சு வீடியோ எடுத்தோமா, வேணுங்கிறப்போ மிரட்டி வரவச்சு சந்தோஷமா இருந்தோமான்னு நான் பாட்டுக்கு இருந்தேன். உன்னை பார்த்தேன், மொத்தமா காலிபண்ணிட்ட. உன்னை விடமாட்டேன். நான் திரும்ப வந்துட்டேன்னு உனக்குத் தெரியணுமே அதுக்காகத்தான் வந்தேன். வரட்டா டியர். சீக்கிரம் உன்னை சந்திக்கிறேன்” என்று சென்றிருந்தான்.
அவன் குரலில் அழுத்தமோ மிரட்டலோ இல்லை. இருப்பினும் மிரட்டிச் சென்றிருந்தான். அவன் வெகு சாதாரணமாக பேசிச்சென்றது நிரல்யாவுக்கு மிரட்டலாகத்தான் தெரிந்தது.
அவன் உண்மை முகத்தை தைரியமாக போலீசிடம் காட்டிக்கொடுத்தவளுக்கு, அவனின் அர்த்தமற்ற மிரட்டலில் பயந்து வந்தது. முகமெல்லாம் வியர்த்துவிட்டது. அவனின் மறுமுகம் அப்படியானது.
அறைக்கு திரும்பி செல்லும்போது எதிர்பட்ட காப்பாளர்…
“என்ன நிரல்யா இது இந்த நேரத்தில் ஒரு ஆம்பள பையன் வந்துட்டுப்போறான்” என்று அதட்டலாகக் கேட்டவர், “உன்னை நான் தப்பு சொல்லல, இருந்தாலும் இது பெண்கள் விடுதி. நமக்குன்னு சில கட்டுப்பாடுகள் இருக்கு. இதுவே கடைசியா இருக்கட்டும்” என்று நகர்ந்தார்.
அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றுகூட அவளுக்குத் தோன்றவில்லை.
வந்து சென்றவனின் முந்தைய நினைவில் வெகுவாக பயந்து போயிருந்தாள்.
பெண்கள் தங்களின் பயத்தை மறைக்கும் காரணி தான் கோபம், திமிர் எனும் முகம். இந்நேரம் அவளுக்கு அதுவும் துணை நின்று கைகொடுக்கவில்லை.
பூரணியிடம் சொல்லி அவரையும் பயம் காட்டிட வேண்டாமென நினைத்தவள், அச்சத்தோடே உறங்கிப்போனாள்.
துருவனை நேருக்கு நேர் சந்திக்கப்போகிறோம் என்கிற நேற்றைய சந்தோஷம் துளியும் இல்லாது ஏனோதானோவென்று கையில் கிடைத்த ஆடையை உடுத்தி, கற்றை கூந்தலை ஒரே பேண்டில் அடக்கி, நெற்றியில் சிறு பொட்டு மட்டுமே ஒற்றி கிளம்பிவிட்டாள்.
நிரல்யா சென்று கொண்டிருக்கும் போதே பூரணி அழைத்துவிட்டார்.
“ஆல் தி பெஸ்ட் மருமகளே!” என்று சந்தோஷமாகக் கூறியவர், “அவன் முன்னால் சொதப்பி வச்சிடாதே! கவனமா அவனை ஹேண்டில் பண்ணு” என்றவர் மேலும் அவளுக்கு தைரியம் கொடுக்குமாறு பேசி வைத்தார்.
அன்று வெகு விரைவாக கிளம்பிய துருவன், எப்பொதும் செல்லும் நேரத்திற்கு முன்பே அந்த ரிசார்ட்டிற்கும் வந்திருந்தான்.
வழக்கமாக லாட்ஜ், மற்ற ரிசார்ட்டிற்கெல்லாம் சென்று ஒரு விசிட் அடித்துவிட்டே இங்கு வருவான். ஆனால் இன்று நேராக இங்கே வந்துவிட்டான்.
காலை நேரத்தில் அந்த ரிசார்ட் மலைப்பகுதி ரம்மியமாக காட்சியளித்தது.
குளிர் காற்று உடலை துளைத்த போதும்… அவளின் வரவிற்காக அலுவலகக் கட்டிடத்தின் முன்பிருந்த சிறு பரப்பில் நின்றவாறு பார்த்திருந்தான்.
அவள் ரிசார்ட்டிற்குள் நுழைவது கண்டிப்பாக இங்கிருந்து பார்த்தால் அவனுக்குத் தெரியாது. இருப்பினும் நின்றிருந்தான்.
‘எப்படியும் ஜாயினிங் ரிப்போர்ட் பண்ண வந்துதானே ஆகணும்.’ எண்ணியவனாக குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.
“ஹேய் துருவ்… என்னாச்சு? எதுக்கு இப்படி நடந்துட்டு இருக்க?” என்றவாறு வந்து சேர்ந்த ஆரோனை மேலும் கீழும் ஆராய்ந்தவன்,
“என்னடா இன்னைக்கு என்னைவிட நீ ஸ்மார்ட்டா தெரியுற?” என்று ஆரோனை சுழல விட்டுப் பார்த்தான்.
“ஏண்டா… காலையிலே உனக்கு என்னாச்சு?” ஆரோனுக்கு அவனின் செயலின் காரணம் பிடிபடவில்லை. துருவன் எப்போதும் இப்படி இல்லை. புதிதாக அவனிடம் ஒருவித பதட்டம்.
கை விரல்களை கோர்த்து பிடித்தவன், மேல் உதட்டை உள்பக்கமாக பற்கள் பதிய மீசையோடு சேர்த்து கடித்து, பிணைந்த கரத்தினை அப்படியே தலைக்கு மேல் கொண்டு சென்றவன் பின்னந்தலையை அழுந்த கோதிக்கொண்டான்.
“ஹேய் மேன்…” என்ற ஆரோனிடம் அட்டகாசமானப் புன்னகை.
“என்னடா?”
“நல்லா இருக்கு.”
துருவன் இதழுக்குள் தோன்றிய சிரிப்பினை மீசையோரம் மறைத்தான்.
“இதுவும் நால்லாத்தாண்டா இருக்கு” என்ற ஆரோன் நண்பனை தோளோடு சேர்த்து அணைத்தவனாக, “உன்னை இப்படி பார்க்கவும் நல்லா இருக்குடா. ஆனால் புதுசா வெட்கமெல்லாம் படுற, எனக்கே என்னமோ பண்ணுது போ!” எனக்கூறி சிரித்தான்.
“போடா!”
“எங்கவாம்?”
“லாட்ஜ், மத்த ரிசார்ட்ஸ். மார்னிங் விசிட் போகவே இல்லை. நீ போயிட்டு வந்திடு” என்றான்.
ஆரோன் சரியென்று நகர,
“எப்போ வரசொன்ன?” என்று கேட்டிருந்தான்.
“யாரை?” ஆரோனுக்கு அந்நொடி உண்மையிலேயே அவன் யாரை கேட்கிறான் என்று தெரியவில்லை.
“ம்ம்ம்… உன் தொங்கச்சியை.”
“ஆஹான்… அதான் சார் இன்னைக்கு முகத்தில் என்னவோயெல்லாம் எக்ஸ்பிரஸ் பண்றீங்களா?” எனக் கேட்டவனை முறைக்க முடியாது முகத்தை ஒரு கை உள்ளங்கையால் மூடிக்கொண்டான்.
“நான் எதும் பார்க்கலப்பா” என்ற போதும், துருவனின் அந்த தோற்றத்தை புகைப்படம் எடுத்திருந்தான் ஆரோன்.
“செம பிக் மச்சான்” என்ற ஆரோன், “டைம் சொல்லல. பட் வந்திடுவாள்” என்றவனாக ஓடியே விட்டான்.
துருவன் சிரித்தவனாக இங்கும் அங்குமாய் நடந்தவனாக இருக்க…
பணிக்கு வந்து கொண்டிருந்த ஊழியர்கள், அவனை வினோதமாக பார்த்து கடந்து செல்ல…
அப்போதுதான் தனது முகம் பளிங்காய் தன் மனதை காட்டிக்கொடுகிறது என்பது உணர்ந்து தன்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டான்.
நிரல்யா மெல்ல அங்கு வந்து சேர்ந்தாள். உற்சாகம் சிறிதுமின்றி சோர்ந்து தெரிந்தாள். அந்த சோர்விற்கு காரணம் அவளின் மனம். நிலையில்லா பயம் கொண்டிருக்கிறது. அன்று ஒரு குறுட்டு தைரியத்தில் பின் விளைவுகள் பற்றி சிந்திக்காது செய்துவிட்டாள். செய்தது பலருக்கு நன்மை தான். ஆனால் அதில் இப்படி அநியாயமாக மாட்டிக்கொண்டாளே.
இரவு வந்து சென்றவனின் பேச்சும், பழிவெறியும் இன்னும் கண் முன்னே!
அதன் தாக்கத்தால் இன்று தன்னுடைய துருவனை சந்திக்கவிருக்கும் சந்தோஷமே காணாமல் போயிருந்தது.
‘தன்னை கண்டதும் எப்படி பார்ப்பான், என்ன பேசுவான்’ என்கிற அவளின் துள்ளலான எதிர்பார்ப்புகள் யாவும் மடிந்திருந்தன.
வாடிய முகத்தோடு வந்து சேர்ந்தவள், வரவேற்பில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, வரவேற்பிலிருந்த ஆண் சொன்னதின் பெயரில் துருவனின் அறை நோக்கிச் சென்றாள்.
ஏற்கனவே அதீத பயம் மற்றும் அழுத்தத்தில் இருந்தவளுக்கு, அறையின் கதவில் மாட்டியிருந்த துருவனின் பெயர் பலகையை கண்டதும் படபடத்து வந்தது.
கையின் நடுக்கம் அப்பட்டமாக வெளிப்பட, தோளில் மாட்டியிருந்த ஸ்லிங் பேக்கினை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.
மூச்சினை ஆழ்ந்து வெளியேற்றினாள்.
என்ன முயன்றும் அவளிடம் சீரற்ற நிலை தான்.
நிரல்யாவையேதான் துருவன் கணினி திரையில் விழி அகற்றாது பார்த்திருந்தான்.
அவளின் பயம், பதட்டம் யாவும் தன்னை நேரில் காண்பதற்காக உண்டானதென தவறாக எண்ணிக்கொண்டான். அவளின் இத்தோற்றம் கூட அவனுக்கு ரசிப்பதாய்.
இத்தனை நாட்களும் அவன் அவளை பார்க்கவில்லை என்றாலும், அவள் அவனை பார்த்துக்கொண்டுதானே இருந்தாள். இருப்பினும் மனதிற்குள் அவஸ்தையாய் ஒரு படபடப்பு.
கதவினை தட்ட கையினை கொண்டு செல்வதும், பின் இறக்குவதுமாய் இருந்தவள், திரும்பி இரண்டடி வைத்து, மீண்டும் கதவினை பார்த்து திரும்பினாள்.
அவளின் அவஸ்தை யாவும் அவனுள் குளிரூட்டியது. மலைப்பிரதேசத்தின் குளிர் தீண்டி சிலிர்த்திடாதவன் தன்னவளின் அருகாமை கொடுக்கும் குளிரில் உறைந்தான் உறை பனியாய்.
“அச்சோ என்ன இப்படி படுத்துது. காலேஜ் டேசில் எவ்வளவு தைரியமா சீனியருன்னு கத்தி லவ் சொல்லியிருப்பேன். இப்போ முன்ன போய் நிக்கவே ததிங்கிநத்தம் போட வேண்டியதா இருக்கே!”
புலம்பியவள் ஆரோனுக்கு அழைத்தாள்.
“என்னம்மா வந்துட்டியா? துருவ் இருப்பான். ரிப்போர்ட் பண்ணிடு” என்று அவள் பேசுவதற்கு வாய்ப்பே கொடுக்காமல் வைத்துவிட்டான்.
“டேய்… போன் பண்ணது நான். பேசிட்டு நீபாட்டுக்கு வச்சிட்ட.நேரில் சிக்கு, சீக்கு வந்த கோழியாய் மாத்திடுறேன்” என்று புலனம் வழி அனுப்பியவள் முறைக்கும் முக பொம்மைகளை சேர்த்து அனுப்பினாள்.
அடுத்து பூரணிக்கு அழைத்தவள்,
“அத்தை இதெல்லாம் ஆவதில்லை… நான் தள்ளி நின்னே லவ் பண்ணிக்கிறேன். எனக்கு உள்ள போகவே பயந்து வருது” என்று அழும் பாவனையில் கூறினாள்.
“உனக்கு அவன் வேணுன்னா நான் சொல்றதை செய். இல்லைன்னா இப்போவே அங்கிருந்து கிளம்படு” என்று வேண்டுமென்றே அதட்டியவர் அவள் பதிலினை எதிர்பார்க்காது வைத்துவிட்டார்.
“அத்தை…” இரு கைகளையும் முகத்திற்கு இரு பக்கமும் வைத்து, ஒற்றை காலினை தரையில் உதித்து பற்களை கடித்தவள், வாய் குவித்து ஊதியவளாக கதவினை தட்டி அனுமதி கேட்டாள்.
தன்னவளின் செய்கைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு சிரிப்பினை அடக்குவது பெரும்பாடாகியது.
உள்ளிருந்து துருவனின் குரல் கம்பீரமாக ஒலித்தது.
“கமீன்.”
அவ்வளவு தான். ஒற்றை வார்த்தையில் மொத்த உடலும் ஆடிப்போனது.
முகம் வியர்த்து விட்டது.
அவளின் நிலையை அவதானித்தவன், வேகமாக எழுந்து வந்து கதவினை திறக்க அவனின் கைகளிலேயே மயங்கி சரிந்தாள்.
நிரல்யா மயங்கியிருந்தாள்.
அவள் இப்படி விழுவாளென்று துருவன் எதிர்பார்க்கவில்லை.
நேற்று இரவு பார்க்கக்கூடாதவனை பார்த்தது. அவன் பேசியது. அதனால் உண்டான பயம். அழுத்தம். அன்று அப்படி பேசிய துருவனின் முன்பு நின்று எப்படி முகம் காட்டுவது என்கிற தவிப்பின் படபடப்பு, ஏற்கனவே அவளுள் இருந்த அழுத்தத்தை அதிகரித்திருக்க… வெகு நாட்களுக்குப் பின்னர் துருவனின் கர்ஜனையான குரலை கேட்டதும், இதயத்தின் துடிப்பு தாறுமாறாக எகிறிட மயக்கம் வந்திருந்தது.
கைகளில் சரிந்தவளை தாங்கி பிடித்த துருவனின் கைகளில் நடுக்கம். உணர்ந்தவனுக்கு ஆச்சரியம்.
அவளுக்கு ஒன்றென்றதும் தன் ஒவ்வொரு அணுவும் துடித்து நிற்பதை வியப்பாய் அறிந்துகொண்டான்.
எந்தளவிற்கு தன்னுள் உறைந்திருக்கிறாள் என்பதை அக்கணம் அவனின் மனம் அவனுக்கு எடுத்துரைத்தது.
“நிரல்…” பதட்டமாக அவளின் கன்னம் தட்டினான்.
அறைக்குள் தூக்கிக்கொண்டு சென்றவன், நீண்ட மெத்திருக்கையில் கிடத்தினான்.
தன்னுடைய கைக்குட்டையை தண்ணீரில் நனைத்து அவளின் கண்களில் ஒற்றி எடுத்தான்.
மெல்லிய அசைவு அவளிடம்.
விழி மலர்ந்தவள் தன் முகத்திற்கு அருகில் தெரிந்த துருவனின் முகம் கண்டு இமைகள் படபடக்க மிரண்டு பார்க்க, அவன் இதயத்தில் பட்டாம்பூச்சியின் சிறகு உரசும் குறுகுறுப்பு.
“ஆர் யூ ஓகே?”
“ஸ்..சீ…சீனியர்.”
துருவனின் மென்மையான அக்கறை குரலில், பூரணி சொல்லியதெல்லாம் மறந்திருந்தது.
அதுவும் அவள் முகம் பார்த்து அவன் குனிந்திருக்க…
‘கொஞ்சம் விலகினால் தேவலாம்’ எனும் இம்சை அவளுள்.
“பரவாயில்லையே! இன்னும் என்னை நினைவு வைச்சிருக்கியே?” என்றான். சீண்டலாக.
“அதை நான் கேட்கணும்.” முனகியவளின் குரல் அவன் செவி நுழைந்தது.
மறைத்த புன்னகை அவனிடம்.
துருவனின் மென்மையான பேச்சும் முகமும் அவளை சாதாரணமாக்கியிருந்தது.
“கேட்கலாமே!” சிரித்தபடி கூறினான்.
அவனின் விரிந்த இதழ் அவளுக்கு முற்றிலும் புதிது.
அவளின் தாழ்ந்திருந்த இமை, கன்னம் தொட்டது.
‘டோட்டல் ஃபிளாட்.’ தனக்குள் முணுமுணுத்தான்.
அவனருகில் ஏற்பட்ட துடிப்பில் அவளது இதழ் நடுங்கியது. பற்களால் கீழுதட்டை பற்றிக்கொண்டாள்.
காற்றில் அசையும் மலரை அவனுக்கு நினைவூட்ட,
“ஓ காட்” என்று வெளிப்படையாகவே அரற்றினான்.
“நான்… எழுந்துக்கணும்.”
“ம்ம்ம்… எழுந்திரு.” அவன் சற்றும் அசையவில்லை.
“இப்படியிருந்தா எப்படி?”
“இப்படித்தான்” என்றவன் நொடியில் அவளின் ஒரு கை மற்றும் முதுகில் கை கொடுத்தவனாக எழுப்பி அமர வைத்திருந்தான்.
அவளின் தேகம் சிலிர்த்து தவித்து அடங்கியது.
அவளின் அனைத்தும் அவனுக்கு ரசிப்பதற்குரியதாய்.
அவளிடம் தண்ணீரை நீட்டினான்.
“சாப்பிடலையா?”
“ஹாங்…”
“மார்னிங் சாப்பிடலையா, நிற்கக்கூட முடியாம விழுந்தியே?”
அவன் தன்னை கேலி செய்வதாக அவளுக்குத் தோன்றியது.
“அதெல்லாம் என் அத்தை எனக்கு நல்ல ருசியாவே செய்துட்டு வருவாங்க” என்று வேகத்தில் சொல்லியவள், சொல்லிய பின்பே நாக்கை கடித்து பேச்சினை நிறுத்தினாள்.
‘ஹோ… இது வேறவா… டேய் துருவா இன்னும் உனக்குத் தெரியாம மாமியாரும், மருமகளும் என்னென்ன கூட்டு வேலை பார்த்திருக்காங்கன்னு தெரியலையே!’ என நினைத்தவனுக்கு மகிழ்ச்சி தான்.
“கொண்டு வருவாங்களா, அப்போ நீ எங்க தங்கியிருக்க?” தெரியாததைப்போல் வினவினான்.
“அது… அது வந்து” தடுமாறியவள், “எனக்கு என்ன வேலைன்னு சொன்னா, நான் போய் செய்வேன்” என்றாள்.
அவள் முன் தன் முகம் காட்டும் ஜாலம் மறைக்க, தன்னிருக்கையில் சென்று அமர்ந்தான்.
“வேலையா?” எனக் கேட்டவன், “நீதான் நியூ ஜாயினி நிரல்யாவா? நீன்னு நான் நினைக்கல” எனக் கேட்டு கணினியை பார்த்தவன், “நீ குவாலிபைட் இல்லையே! வேற ஆள் போட்டாச்சு” என்றான்.
“ஷப்பா…” தளர்ந்தவளாய் நிம்மதி கொண்டாள்.
‘கொஞ்ச நேரத்துக்கே இவங்க பக்கத்தில் மூச்சு முட்டுது. வேலை கொடுத்து விழி பிதுங்கனுமோ நினைத்தேன். என்னை காப்பாத்திட்ட ஆண்டவா’ என்று மனதோடு இறைவனுக்கு நன்றி சொல்லியவள்,
“ஓகே… அப்போ நான் கிளம்புறேன்” என்றவள் அங்கிருந்து சென்றால் போதுமென்று வேகமாக எழ,
“ஓய்…” என்று நிறுத்தியிருந்தான்.
“மேல படிக்கலையா?”
‘என்னது படிக்கணுமா?’ அவளின் கண்களில் விருப்பமின்மை.
‘நான் இவங்கள கட்டிக்கிட்டு ஜாலியா லவ் பண்ணலாம் பார்த்தால், இவங்கென்ன இப்படி கேட்குறாங்க!’ அவனையே பார்த்திருந்தாள்.
அவளின் பிடித்தமின்மையை கண்டுகொண்டான்.
“ஒரு டிகிரி வச்சிக்கிட்டுலாம் வேலைக்கு போக முடியாது” என்றான்.
“ஓ… அது, வேலை பார்த்துக்கிட்டே படிக்கலான்னு.” வாயில் வந்ததை கூறியவள், பூரணியை நன்கு வறுத்தெடுத்தாள்.
“ம்ம்ம்…”
“கிளம்பவா?” அவன் முன்பு அவளின் உணர்வுகள் கூட்டும் அவஸ்தை அவனுக்கு எங்கே தெரியப்போகிறது.
“என்ன அவசரம்” என்றவன், “இந்த வேலை வைத்துதான் நீ படிக்கணும் சொல்லுற. என்னால் உன் படிப்பு கேட்டுப்போக வேண்டாம். உனக்கு இந்த ஜாப் கொடுக்கிறேன்” என்றான்.
‘ம்க்கும்… காலேஜ் விட்டு என்னை ஓடவச்சது மறந்துப்போச்சு போல.’ அவனின் மனமும் அவள் எண்ணுவதையே இடித்துரைத்தது.
‘படிக்கணுமா?’
அவள் விழித்து நிற்பதில் புன்னகைத்தவனாக,
“இன்னைக்கு ஃபுல்லா இங்க சுத்திப்பாரு. வொர்க் நாளையிலிருந்து பண்ணிக்கலாம்” என்றான்.
“நான்தான் இன்னாகிரேஷன் அப்போவே வந்து சுத்தி பார்த்துட்டனே” என்று சொல்லியவள், அதிர்ந்தவளாக அவனை பார்க்க… அவனோ அவளது பேச்சை கவனித்தபோதும், காதில் வாங்காதவனாக தாளில்லாத கோப்பிற்குள் தலையை விட்டிருந்தான்.
‘ச்சூ… கவனிக்கல.’ ஆசுவாசம் கொண்டவள்.
“வரேன் சீனியர்” என்று வெளியேற, அவளின் போனி டெயிலோடு சேர்ந்து அவள் அணிந்திருந்த ஸ்கர்ட்டும் சுழன்றதில் மொத்தமாக சிக்கிக்கொண்டான் துருவன்.
‘முதலில் இவளை ஸ்கர்ட் போடக்கூடாது சொல்லணும். என் முன்னால் ரொம்ப குட்டியா தெரியுறாள்’ என்றவனுக்கு, அவளை முதன் முதலில் பார்த்ததும் தன்னை அறியாது பால்வாடியென முணுமுணுத்ததும் நினைவில் எழுந்தது.
‘பால்வாடி தான். எவ்வளவு குட்டியா இருக்கிறாள்’ என்று சற்று நேரத்திற்கு முன்னால், தன் கைகளில் அடங்கியிருந்தவளை நினைத்து பார்த்தான்.
“லவ்லி.” வாய்விட்டு சொல்லிக்கொண்டான். இதழோடு கண்களும் விரிந்தது.
படாரென திறந்த கதவில் ஊழியரோ என்று சடுதியில் வரவழைத்துக்கொண்ட விறைப்புடன் ஏறிட்டான்.
நிரல்யா தான்.
ஓடி வந்திருப்பாள் போலும். மூச்சிரைக்க அவன் முன் மேசையில் இரு கை ஊன்றி நின்றாள்.
“ரொம்ப கன்ட்ரோல் பண்ண ட்ரை பண்ணேன். பட் முடியல. உங்களை பார்த்ததும் இதை கேட்கத்தான் தோணுது. நான் என்ன பண்ணட்டும். திட்டணும் அப்படினாலும் திட்டிக்கோங்க” என்றவள்,
இரண்டடி பின் நகர்ந்து, இரு காதுகளையும் விரல் வைத்து அடைத்துக்கொண்டவளாக,
“சீனியர்…” என்று ராகம் இழுத்து, “எனக்கு எப்போ ஓகே சொல்லுவீங்க?” எனக் கேட்டு சட்டென்று கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
அவனுள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் ஒரே நேரத்தில் படரும் முணுமுணுப்பு.
“வச்சு செஞ்சிட்டாள்.” இதயத்தை நீவி விட்டுக்கொண்டான்.
‘இவள் இப்படியெல்லாம் செய்யாம இருக்கலாம்.’
‘அம்மா போட்ட பிளானை மொத்தமா நாக் அவுட் பண்ணிட்டாள்.’
அவளையே அவனது கருவிழிகள் மொய்த்தன.
‘என்ன திட்டல’ என அறிந்தவள், காதிலிருந்து விரலை எடுத்து, கீழுதட்டை கடித்தவாறு ஒரு கண்ணை திறந்து அவனை பார்க்க…
“மொத்தமா காலி பன்றா(ள்)டா துருவா! ஸ்டெடி… ஸ்டெடி…” என்றான்.
துருவன் விழிகளில் என்ன கண்டாளோ… முழுதாக கண்களை திறந்து பார்த்தவள்,
“தேன்க்ஸ் சீனியர்… நோ, நோ.. பாஸ். அம் அ கரெக்ட்? தேன்க் யூ பாஸ். திட்டாததுக்கு” என்றதோடு, “உங்களை பார்க்கும்போதெல்லாம் கேட்கத் தோணும். என்னால் கேட்காம இருக்க முடியாது. அதனால், இதே மாதிரி எப்போ கேட்டாலும் திட்டாம இருக்கணும்” என்றவள் ஓடிவிட்டாள்.
துருவன் திட்டாமல் தன்னை ஆழ்ந்து பார்த்ததிலேயே… அவன் சொல்லவில்லை என்றாலும், ஏற்கனவே பூரணி மூலம் தெரிந்து கொண்டிருந்தாலும், நேரடியாக அவனுள்ளும் தன்மீது ஈர்ப்பு உள்ளது என்று அறிந்து கொண்டவளுக்கு தைரியமாக அவனிடத்தில் அடுத்து பேச வைத்தது.
“வாலு…”
வேலைகள் ஆயிரம் குவிந்து கிடப்பினும், அவள் வந்ததிலிருந்து நடந்தவற்றை மனதில் அசைபோட்டவாறு அமர்ந்திட்டான்.
முடிந்திடாத புன்னகை, முற்றுப்பெறும் எண்ணமின்றி அவனிடத்தில்.
‘இப்படியே இருந்தால் அவ்வளவு தான்’ என எழுந்தவன், ரவுண்ட்ஸ் கிளம்பிவிட்டான்.
அலுவலகம், கிச்சன், விருந்தினர் தங்கும் பகுதி என தன்னுடைய வேக நடையோடும் கூரிய பார்வையோடும் ஆராய்ந்து வந்தவன், கார்டர்ன் பகுதிக்குள் நுழைந்தான்.
சுற்றி கண்களால் வட்டமிட்டான்.
ஓரிடத்தில் தண்ணீர் வீணாக செல்வதை கண்டு, தோட்டம் பராமரிப்பவரை அழைத்து சரிசெய்திடக் கூறியவன், திரும்பிட ஒரு மரத்திற்கு கீழிருந்த மேடையில் அமர்ந்து அவனுக்கு முதுகுக்காட்டி யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் நிரல்யா.
அவளை பார்த்துவிட்டு அப்படியே செல்ல மனமின்றி, அவளை நோக்கி சில அடிகள் முன் வைத்தவனுக்கு அவளது பேச்சு தெளிவாகக் கேட்டிட,
“அம்மாவோடு பேசிட்டு இருக்காள் போல” என்று திரும்பி செல்ல முயன்றவன் அவள் சொல்லியதில் அப்படியே நின்றுவிட்டான்.
துருவன் சுற்றிப்பார்க்க சொல்லியதற்காக வந்தவள், நடந்ததை பூரணியிடம் சொல்ல வேண்டுமென அவருக்கு அழைத்து, எல்லாவற்றையும் சொல்ல கடுப்பாகிவிட்டார்.
“அவனை உன் பின்னால் விழ வைக்க சொன்னா, நீ அவன் முன்னால் விழுந்து வச்சிருக்க. இதில் அவனை தெரியுமுன்னு காட்டிக்கிட்டு, இன்னும் நான் உன்னை லவ் பன்றேன்னு மறைமுகமா சொல்லிட்டு வந்திருக்க. நீயிப்படி இருந்தால் அவன் உன்னை எப்போ புரிஞ்சிக்கிறது” என்று அவளை காய்ச்சி எடுத்துவிட்டார்.
“அச்சோ அத்தை… அவங்களை பார்த்தாலே கன்னத்தை பிடித்து கிள்ளி முத்தா கொடுக்கத்தான் தோணுது. இதில் எங்க தெரியாத மாதிரி நடிக்கிறது” என்று கேட்டிருந்தாள்.
‘அடிப்பாவி…’ துருவனுக்கும் வெட்கம் வரும் போலிருந்தது.
“நான் உன் அத்தைடி. என்கிட்டவே என் மகனுக்கு முத்தம் கொடுக்க தோணுதுன்னு சொல்ற… ஹாங்.” அலைபேசியின் எதிர்பக்கமிருந்த பூரணி போலியாக கடினமாக வினவினார்.
“உங்களுக்கு இந்த சீரியல் வில்லி மாமியார் மோட் செட்டாகலத்தை” என்றவள், “வேற யார்கிட்ட சொல்றதாம். இப்போ இருக்கிற நிலைமைக்கு உங்க மகன்கிட்ட சொல்ல முடியாது” என்று வருத்தமாகக் கூறினாள்.
“ஏன்… சொல்லேன். என்ன பன்றான்னு பார்ப்போம்.” அவரிடம் அப்படியொரு சிரிப்பு.
“ம்க்கும்… நான் சொன்னதும் அப்படியே அவங்க, இந்தா பண்ணிக்கோன்னு கன்னத்தை காட்டிடுவாங்க பாருங்க” என்று அலுத்துக்கொண்டவள், “என் கன்னத்தில் கையால வேணுன்னா நாலு கொடுப்பாங்க” என்றாள் ஏக்கமாக.
“ரொம்ப ஆசையோ…”
“ஆமா. உங்க பையனை ரொம்ப பிடிக்கும்” என்றவள் சொல்லிக்கொண்டே திரும்ப, மார்பிற்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு துருவன் நின்றிருந்தான்.
‘போச்சுடா’ என அவனை பார்த்து இளித்து வைத்தவள், “என் அத்தையோட பேசிக்கிட்டு இருக்கேன் பாஸ்” என்றாள்.
துருவன் பேசு என்பதைப்போல் கைகாட்டிவிட்டு அவளுக்கு எதிரில் அமர்ந்துவிட்டான்.
“துருவனா?”
நிரல்யா பாஸ் என்றதை வைத்து பூரணியே கேட்டிருந்தார்.
“ம்ம்ம்…”
‘பக்கா திருட்டு முழி.’ துருவனுக்கு அவள் முன் விறைப்பாக அமர்ந்திருப்பது சற்று கடினமாகத்தான் இருந்தது.
“உன் பக்கத்தில் இருக்கானா?”
“நான் அப்புறம் கூப்புடுறேன் அத்தை” என்றவள் அழைப்பை அணைத்து மொபைலை பைக்குள் போட்டுக்கொண்டாள்.
“உனக்கு அத்தை மட்டும் தான் இருக்காங்களா?”
“ஆ…ஆம்…மா, ஆமா பாஸ்.” திக்கித்திணறினாள்.
“அவங்க பெயர் என்ன? என்ன பன்றாங்க?”
துருவன் கேட்டதில் அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
‘அத்தை மாட்டிக்கிட்டோம்.’ அருகில் இல்லாதவரிடம் கூறியவளுக்கு, அவன் முன்பு பொய் சொல்ல வரவில்லை.
அவனின் அன்னையின் பெயரையே சொல்லியிருந்தாள்.