உயிர் உறை 29
தேடல் 5
“அன்னப்பூரணி.”
நிரல்யாவால் அவனிடம் பொய் சொல்ல முடியாதல்லவா! அத்தோடு அவனிடம் பூரணி சொன்னது போல் அவளால் நடிக்கவும் முடியாது.
அவன் கொடுத்த காதல் வலியை அனுபவித்தவளுக்கு, அதையே அவனுக்கு திருப்பி செய்திட மனம் வருமா என்ன?
‘அத்தை பேரு சொல்லியும் ஒரு ரியாக்ஷனும் இல்லை.’ அவள் தான் அவனின் எதிர்வினையற்ற முக பாவனையில் குழம்பினாள்.
துருவனிடம் கனத்த அமைதி.
துருவனுக்கு அவளை பார்த்துக்கொண்டே இருந்தால் போதுமென்ற நிலை. தேடிய தேடலுக்கான தவிப்பு அவளின் முகம் காணுவதில் முற்றுப்பெறுவதை உணர்ந்தான்.
எவ்வளவு நேரம் தான் அமைதியாக இருந்திட முடியும். யாராவது ஒருவர் பேசித்தானே ஆகவேண்டும்.
நிரல்யாவே துவங்கினாள். அவளுக்கு அவனிடம் இதுநாள் வரை மறைத்து வைத்ததே பெரிதெனத் தோன்றியது.
“அவங்க உங்க அம்மா தான்.” அவன் அதிர்வான், இல்லை எப்படி என்று ஏதும் கேட்பான் என்று அவனது முகம் பார்க்க,
“தெரியும்” என பதில் சொல்லி அவளை அதிர வைத்தான்.
துருவன் பெயர் கேட்டதும் நிரல்யா மாற்றியோ அல்லது சொல்லாமலோ விட்டிருந்தால், அவனும் எதுவும் தெரியாததைப்போல் நடந்து கொண்டிருப்பான்.
ஆனால் நிரல்யா பூரணியின் பெயரை சொல்லியதுமே, அவளால் தன்னிடம் எதையும் மறைக்க முடியாதென தெரிந்து கொண்டவன், இன்றே இக்கணமே அனைத்தையும் பேசிட முடிவு செய்திட்டான். அதனாலே தனக்கும் தெரியுமென்று சொல்லியிருந்தான்.
“சாரி…”
துருவன் தெரியுமென்றதும் அவனிடம் மாட்டிக்கொண்டோமே என்ற எண்ணத்தில் மன்னிப்பு வேண்டினாள்.
“நானும் சொல்லலாம்.”
“இல்லை… வேண்டாம்.”
அவளையே பார்த்தான்.
‘இவங்க கொஞ்சம் பார்க்காம இருக்கலாம்.’ சில்லிட்ட உள்ளங்கைகளை சிறுமியாய் ஸ்கர்ட்டில் தேய்த்து துடைத்தாள்.
துருவன் வெளிப்படையாக சிரித்து வைத்தான்.
“ஸ்வெட் ஆகிருச்சு.” அசடு வழிந்தாள்.
“வெளிப்படையா பேசலாமா?”
துருவன் அவ்வாறு கேட்பானென்று அவள் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அந்நொடி, அவன் சொல்லி தன் காதலின் நிலை அவனிடத்தில் என்னவென்று தெரிந்துக்கொண்டால் தன் இடம் அறிந்து நடந்து கொள்ளலாமே என நினைத்து அவன் கேட்டதற்கு அவளும் சரியென தலையசைத்தாள்.
“நான் உன்னை தேடினேன்.” துருவனுக்கு எதிலிருந்து ஆரம்பிப்பது என்று தெரியாமல், ஆரம்பித்திலிருந்தே தன்னை விளக்க நினைத்து சொல்ல ஆரம்பித்தான்.
“தெரியும்…”
“குறுக்க பேசக்கூடாது.” வாயில் விரல் வைத்து காண்பித்தான்.
“உன்னை திட்டியது… உன்மேல கம்ப்ளெயின்ட் கொடுத்தது எல்லாம் உன்னோட லவ்வை ஏற்க முடியாமதான். உன்னை காலேஜ் விட்டு அனுப்பனும் நினைத்து இல்லை” என்றவன் தொடர்ந்தான்.
நிரல்யாவை திட்டிவிட்டான். அன்று அவன் பேசிய வார்த்தைகள் சற்று அதிகப்படித்தான். அவன் அதை உணர்ந்தது நிரல்யாவின் கடிதத்தில் தான்.
அதனை விநோவும் படித்துவிட்டு, “அவள் உன்னை உண்மையா விரும்புறா(ள்)” என்று சொல்லியபிறகே துருவனிடத்தில் அதிர்வு. புறம் ஒதுக்கிவிட்டான். ஆராய முற்படவில்லை.
விநோவை பார்த்துவிட்டு கல்லூரிக்கு வந்தவனுக்கு ஆரோன் பேசிய பின்னர் அவனது குற்றவுணர்வு அதிகமாகியது.
அவளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால் குற்றவுணர்வு நீங்கிவிடுமென நினைத்தவன், அவளின் வீடு இருக்கும் இடம் பற்றி அவளது விடுதி அறை தோழியிடம் விசாரிக்க… அவளைப்பற்றி எதுவும் தெரியாது என்பதே பதிலாகக் கிடைத்தது. அவளது வகுப்பு மாணவர்களுக்கும் அவளைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை.
அதன் பின்னர் கல்லூரி அலுவலக பணியாளர் ஒருவரிடம் விசாரித்து, அவளது முகவரி தெரிந்து ஆரோனுடன் சென்று பார்த்தான்.
அப்போதுதான் துருவனுக்கு தெரிய வந்தது, அவள் தாய் தந்தை அற்றவள் என்று.
துருவனின் மனம் கனத்துப் போனது.
“நான் எப்போ சந்தோஷமா இருந்தேன்னு தெரியாது. ஆனால் உங்களைப் பார்த்த அப்புறம் நீங்கதான் என் மொத்த சந்தோஷமா இருப்பீங்கன்னு தோணுது” என்று அவள் கடிதத்தில் எழுதியிருந்த வரிகள் வேறு அக்கணம் துருவனின் நினைவில் எழுந்து அவனை வதைத்தது.
நிரல்யாவிற்கு பெற்றோரில்லை. வேண்டாவெறுப்பாக அத்தையிடம் வளர்கிறாள். துருவன் கொடுத்த புகாரால் கல்லூரி முதல்வர் அவளின் அத்தையை வரவழைத்து பிடிபிடிவென்று பிடித்துவிட, அன்றே நிரல்யாவின் படிப்பு முடிந்ததோடு அல்லாமல், இரவென்றும் பார்க்காமல், அவளை வேண்டா வெறுப்பாக உடன் வைத்திருந்தவர், இதுதான் சமயமென்று நிரல்யாவை வீட்டைவிட்டு அனுப்பிவிட்டார் அவளது அத்தை.
எங்கு போவதென்று போக்கிடம் அறியாது தவித்து நின்றவள், வீட்டிற்கு அருகிலேயே இருந்ததால் ரயில் நிலையம் சென்று அமர்ந்துவிட்டாள். அப்போதும் அவளது கண்ணில் கண்ணீரில்லை.
பிறந்தது முதலே அத்தையின் சுடும் வார்த்தைகள் கேட்டு வளர்ந்தவளால் கண்ணீரெல்லாம் வற்றியிருந்தது. ஒரு வயதிற்கு மேல் தன்னுடைய சோகம் மறைக்க சிரிப்பை பயன்படுத்திக்கொண்டாள்.
நிரல்யாவின் நிலையை தெரிந்துகொண்ட துருவன், அவன் அவனாகவே இல்லை.
முதல் முறையாக இதயத்தில் வலியை உணர்ந்தான்.
‘தன்னால் ஒரு பெண் இருக்க இடமின்றி நிற்கதியாகிப்போனாள்’ என்ற உண்மை துருவனை வதைத்தது.
அந்நொடி முதல் அவன் அவளை தேட ஆரம்பித்தான்.
தேடல் நீள… அவள் மீது அவன் கொண்டது காதலென்ற உண்மை நெஞ்சத்தில் அறைந்திட… உயிர் உறைந்து போனான்.
குற்றவுணர்வு எனும் திரை நீங்கி, அவள்மீது அவன் கொண்ட காதல் விருட்சம் பெற்றது. பரந்து விரிந்தது.
முழுக்க அவளது வாசமாகிப்போன இதயத்தின் தடம் ஒவ்வொன்றிலும், அவன் அவளை தேடி களைத்தான்.
தனக்குள் தன்னையே தொலைத்தவனாக அவள் கொடுத்து சென்ற வலியில் மூழ்கினான்.
இதற்கு… இந்நிலைக்கு முழு காரணமும் தானென்ற எண்ணம் ஒவ்வொரு நொடியும் அவனை குத்தி கிழித்தது. வதை கொடுத்தது.
காதலின் இன்னும் இன்னும் என்கிற ஏக்கத்தால்,
தன்னுடைய தேடலை தீவிரப்படுத்தினான். அதிகப்படுத்தினான்.
தினமும் அவள் நினைவில் பித்து பிடித்தான்.
ஒருமுறை கண்டுவிடமாட்டோமா! தவியாய் தவித்தான்.
அவனது தவிப்பும் தேடலும் தன்னிடத்திலேயே நிறைவு பெறுமென்று நினைக்கவில்லை.
அவனது தேடலை அவளும் அறிந்துதானே இருந்தாள்.
ஆனால் அதனை அவனது வாய் வார்த்தையாகக் கேட்கும்போது உள்ளுக்குள் வலித்தது அவளுக்கு.
தன்னுடைய இரண்டரை வருட நிலையை சொல்லியவன், எழுந்து நின்றவனாக நெற்றியை தேய்த்துக்கொண்டான்.
“நான் இப்போ இதெல்லாம் உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லை. உனக்கே என்னோட தேடல் தெரிந்திருக்கு. அப்படியிருந்தும் நீயேன் என் முன்னாடி வரலங்கிறது தான் என்னுடைய வருத்தம். நம்மை திட்டி விரட்டியவன் கஷ்டபடட்டும் நினைச்சியா?” தாங்கமாட்டாது கேட்டுவிட்டான்.
வலியின் ஆதங்கம் அவனிடத்தில்.
“உங்களுக்கு என்னை பார்க்க பிடிக்காதுன்னு தான் வரல. ஆனால் தினமும் உங்களை பார்த்திடுவேன். சம்டைம்ஸ் பார்க்க முடியலன்னா, அத்தை வீடியோ காலில் உங்களை காட்டுவாங்க” என்றாள்.
“இப்போ மட்டும் எதுக்கு வந்த?”
“நீங்களும் என்னை…”
“அப்படியா… நான் சொன்னேனா?”
அவள் முடிக்கும் முதல் அவன் கேட்டிருந்தான்.
சட்டென்று அவளது கண்கள் கலங்கி தெளிந்தது.
‘அழக்கூடாது… அழுதுடாத நிரல்’ உள்ளே அரற்றியவள், “அழமாட்டேன்” என்று வெளியே சொல்லியவளாக தலையை மேல் நோக்கி உயர்த்தி கண்களை அகில திறந்து மூடினாள்.
அவன் வேண்டுமென்றே இல்லையென்பதாய் பொய் உரைக்கின்றான் என்று தெரிந்தபோதும், ஏனோ வலித்தது. அவன் இல்லையென்றது.
கண்ணீரை அடக்குவதால் தொண்டை அடைத்தது.
அவளின் நிலை அவனை கொன்றது.
இருந்தும் அவனது தேடலின் வலி நிறைந்த தவிப்பு அவனை அவ்வாறு சொல்ல வைத்திருந்தது.
“நிஜமா இல்லையா?” என்னதான் அழக்கூடாதென்று நினைத்தாலும் அவளின் குரல் காட்டிக்கொடுத்தது.
“இருக்கணுமா?”
அவள் தலை ஆமென்று ஆடியது. மேலும் கீழும்.
“உங்களை கஷ்டப்படுத்தனும் நான் நினைக்கவே இல்லை.
உங்க முன்னாடி இனி வரவேக்கூடாதுன்னு தான் இருந்தேன். அப்போ, உங்களுக்குத்தான் என்னை பிடிக்காதே! இப்போ பிடிக்குமா நீங்கதான் சொல்லணும்” என்றவள்,
“எனக்கு படிப்பில் பெருசா ஆர்வமெல்லாம் இல்லை. எப்போ பாரு அப்பாவுடைய அக்கா என்னை திட்டிக்கிட்டே தான் இருப்பாங்க. சின்ன வயசில விளையாட விடமா வேலை செய்ய வைப்பாங்க. நிறைய அடிப்பாங்க. எனக்கு எங்கயாவது ஓடிப்போகனும் தோணும். ஆனால் எங்கபோறது தெரியாது. ஊர்க்காரங்க எதாவது சொல்லுவாங்கன்னு ஸ்கூல் அனுப்புனாங்க.
அவங்க பசங்களவிட மார்க் அதிகம் எடுக்கக்கூடாதுன்னு அடிப்பாங்க. அதனாலே படிச்சும் யூஸ் இல்லைன்னு, படிக்கிறது மேலிருந்த ஆர்வம் போச்சு. அப்படியிருந்தும் ஸ்கூல் எண்ட் நல்ல மார்க் எடுத்தேன். அவங்களோட நான் இருக்கிறது அவங்களுக்கு பிடிக்கல, நல்ல மார்க் எடுத்திருக்கா, படிக்க வையுங்கன்னு அக்கம் பக்கத்திலிருக்கவங்க சொன்னதால, அவங்க மதிப்புக்காக என்னை காலேஜ் சேர்த்து ஹாஸ்டலில் விட்டுடடாலம் அவங்க கணவர் சொன்னதும்… காலேஜ் ஹாஸ்டலில் விட்டுட்டாங்க.
அங்க தான் உங்களை பார்த்தேன். பார்த்ததும் எனக்குள்ள அப்படியொரு சந்தோஷம் நான் அதுவரையிலுமே அப்படியொரு சந்தோஷத்தை பீல் பண்ணாதே கிடையாது. நீங்க தான் லைஃப் அப்படின்னு அந்த செக் முடிவு பண்ணேன். உங்க பின்னால் சுத்தி வரது பிடிச்சி இருந்துச்சு.
ஆனால், நீங்க வேண்டான்னு சொல்ற பையன் பின்னால் அலைவது வெட்கமாயில்லையான்னு கேட்டதும் உயிரே போன மாதிரி வலிச்சுது. அப்போதான் உங்களுக்கு என் மேல லவ் வர சான்ஸே இல்லைன்னு புரிஞ்சி விலகியிருக்க முடிவு பண்ணேன்.
நீங்க கம்ப்ளெயின்ட் குடுப்பிங்க நினைக்கல. அதை காரணமா வச்சு அவங்க, என் படிப்பை நிறுத்தி என்னை வீட்டை விட்டும் அனுப்பிட்டாங்க” என்றவள் அதுவரை அடக்கி வைத்த கண்ணீர் மொத்தத்தையும் கன்னத்தில் வழிய விட, உட்கார்ந்திருந்தவளின் தலையை தன் வயிற்றில் அழுத்தியவனாக கட்டிக்கொண்டான்.
அவளுக்கு பின்னால் இத்தனை சோகமிருக்கும் என்று துருவன் நினைக்கவே இல்லை.
‘இது தெரியாம தானும் தன் பங்கிற்கு நிறைய வேதனைகளை கொடுத்துவிட்டோமே’ என வருந்தினான்.
அவளின் சோகம் நிறைந்த பக்கம் அவன் அனுபவிப்பதாய். நாம் நேசிப்பவரின் அனைத்து உணர்வுகளும் நாம் வாழ்ந்து பார்ப்பதாய் கொல்லப்படுவதை அந்நொடி நிஜத்தில் உணர்ந்தான்.
நிரல்யா தன்னவள். தனக்கு இன்றியமையாதவள் என்பதை உயிரில் சேர்பித்தான்.
அவளின் அழுகை அவனை காயப்படுத்தியது.
“போதும்மா… என்னால பார்க்க முடியலடி.”
“எனக்கு அழணும் சீனியர். அழுதா என்னோட பயம், வலி, சோகமெல்லாம் எல்லோருக்கும் தெரிஞ்சிடுமோன்னு, அழுததே இல்லை. இப்போ எனக்கு நீங்க இருக்கீங்கன்னு தோணுது. உங்கக்கிட்ட அழுது எல்லாம் சொல்லி, என்னோட வலியை கரைச்சிக்கணும் சீனியர்.” அவளின் தழுதழுப்பான குரலில் உடைந்து போனான்.
கலங்கி நின்றான்.
சாய்ந்திட மடி கிடைத்ததும், அதுவும் அவள் உயிராய் நினைக்கும் அவளவனின் நெஞ்சம் கிடைத்ததில் தன் மொத்த வலிகளையும் இறக்கி வைக்க நினைத்தவள்,
அவனிலிருந்து பிரிந்து சென்று விலகி நின்று அவனை ஏறிட்டாள்.
“எனக்கு உங்கக்கிட்ட சொல்றதுக்கு நிறைய இருக்கு சீனியர்” என்றவள், “அத்தைக்கு நான் அழுதா பிடிக்காது. அதனால் அவங்ககிட்ட என்னோட வலியை பகிர்ந்துக்க முடியல. இப்போ உங்கக்கிட்ட சொல்லத்தோணுது கேட்குறீங்களா?” என்று கேட்டவளை அள்ளி அணைத்து ஆறுதல் படுத்த விழைந்த கைகளை மடக்கி பேண்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டான்.
அவள் சொல்லி முடித்து தன் வலி மறக்கட்டுமென்று.
துருவன் தலையசைத்ததும், வீட்டை விட்டு கிளம்பியதற்கு பின்னான நிகழ்வுகளையும் கூறினாள்.
நிரல்யாவை பார்த்துக்கொண்ட அவளின் அத்தை “வெளியில் போ!” என்றதும் எங்கு போவதென்று தெரியாது ரயில் நிலையம் வந்தவள், எப்படியோ திருவண்ணாமலை வந்து சேர்ந்தாள். அன்று பௌர்ணமி என்பதால் சிவாலயம் வந்திருந்த பூரணி நிரல்யாவை சந்திக்க நேர்ந்தது.
கூட்டத்தின் காரணமாக குளத்தில் வழுக்கி விழ இருந்தவரை நிரல்யா தான் விழாது பிடித்து காப்பாற்றினாள்.
பார்த்த கணம் பூரணிக்கு நிரல்யாவை பிடித்துப்போனது.
ஏதோவொரு உந்துதலில் அவரிடம் அனைத்தையும் கூறிய நிரல்யா கண்ணீர் வடிக்க, “ஒருவயது பெண் பிள்ளையை எப்படித்தான் வெளிய அனுப்ப மனம் வந்ததோ” என்று நிரல்யாவின் அத்தையை பூரணி கடிந்து கொண்டிருக்கும்போது, அவரின் அலைபேசி ஒலித்தது.
திரையில் ஒளிர்ந்த புகைப்படத்தைக் கண்டு நிரல்யா உறைந்து சிலையென இருக்க,
மகனிடம் பேசி முடித்த பூரணி நிரல்யாவை தொட்டு உலுக்கி என்னவென்று கேட்க, அவள் அலைபேசியை சுட்டிக்காட்டினாள்.
“என் பசங்க” என்று அவர் சொல்ல…
“அத்தை” என்று கண்ணில் நீர் இறங்க கூறியவள், தான் சொல்லிய சீனியர் துருவன் என்று சொல்ல, ஒரு நொடி பூரணிக்குமே ஒன்றும் புரியவில்லை.
‘தன் மகனால் ஒரு பெண்ணுக்கு இந்நிலையா’ என்று மனதோடு வருந்தியவர், அவனால் நிராதரவாக நிற்கும் நிலையில் கூட, அவனின் அன்னையான தன்னை அவள் அத்தை என்றழைத்ததிலேயே… காதல் திருமணம் செய்து கொண்டவருக்கு, நிரல்யாவின் காதலின் ஆழம் உணர அவளை தன்னோடு அழைத்து வந்துவிட்டார்.
கோவிலில் நிரல்யாவை கண்டதால், இவள் தான் என் மருமகளென்று அந்த சிவனே ஆசி வழங்கியதாக நம்பினார். அன்றே நிரல்யா தான் தன்னுடைய மருமகளென்று முடிவெடுத்தவர், அவள் படிப்பினை தொடரவும் வழி வகை செய்தார்.
ஆரம்பத்தில் துருவனுக்கு தன்னை பிடிக்காதென்று நிரல்யா தான் தன்னைப்பற்றி அவனிடம் சொல்லக்கூடாதென்று சொல்லியிருந்தாள்.
எப்போது அவன் காதலாக தன்னை தேடுகிறான் என்று தெரிந்ததோ… அப்போதே அவன் முன் செல்ல நினைத்து பூரணியிடம் கேட்க, அவரோ மகனின் காதலின் ஆழம் அறிய அவளுக்கு இல்லாத யோசனையை வழங்கினார்.
நிரல்யாவிற்கு அவனின் கண்களில் கண்டுவிட்ட காதலே போதும். அவன் இல்லையென்று சொன்னாலும் அவனிடம் அவளுக்காக இருக்கும் காதலை, அவனின் தேடலில் தெரிந்துகொண்டாளே! அதற்கு மேல் அவளுக்கு என்ன வேண்டுமாம். மொத்தமாக தன் மனதை அவனிடம் ஒப்புக்கொடுத்திட்டாள்.
விழி மறைத்த நீரை அழுந்த துடைத்தவன், அவளின் எதிரில் சென்று நின்று தன் கைகளை அகல விரித்து, தன்னவளை நோக்கி வாவென்று தலையசைக்க…
“சீனியர்” என்ற கூவலோடு துருவனின் நெஞ்சில் தஞ்சம் புகுந்திருந்தாள் அவனின் நிரல்யா.
அங்கு அவன் அவனது அன்றைய பேச்சிற்காக மன்னிப்பு கேட்கவில்லை. அவளும் அதை எதிர்பார்க்கவில்லை. அவனின் தேடல் தெரிந்தும் விலகி நின்று தவிக்க வைத்தற்காக அவளும் அவனிடம் மன்னிப்பு வேண்டவில்லை.
இடைப்பட்ட நாட்களில் ஒருவரின் நினைவோடு மற்றவர் வாழ்ந்ததால் புதிதாக பார்க்கும் எண்ணமின்றி காதலால் கை சேர்ந்தனர். அதுமட்டுமில்லாமல் துருவனின் தேடலை நன்கு அறிந்திருந்தவளுக்கு அவனின் இப்போதைய நிம்மதி முக்கியமென பட்டது.
“ஐ ஸ்டில் லவ் யூ சீனியர். எனக்கு எப்போ ஓகே சொல்லுவீங்க?” அவனின் அணைப்பில் இருந்தபடியே வினவினாள்.
“இப்படி நிற்கும் போதுமா உனக்கு தெரியல?” துருவனின் குரல் குழைந்தது. அத்தனை காதல். நிமிடங்கள் கடந்தும் அவர்களின் அணைப்பு நீடித்தது.
“இதுக்குத்தான் என்னை லாட்ஜுக்கு துரத்துனியா நீ!” வெகு அருகில் கேட்ட ஆரோனின் குரலில் அவனை பார்த்தானே தவிர தன்னுடைய நிலையில் மாற்றமில்லை என்பதைப்போல் துருவன் நின்றிருந்தான்.
நிரல்யா விலக முற்பட…
“என் தவிப்பு அடங்கிட இதெல்லாம் பத்தாதுடி” என்றவன் தன்னுடைய அணைப்பை மேலும் இறுக்கி, அவள் நழுவுவதை தடுத்திருந்தான்.
“நீ நடத்துடா… நான் எதுவும் பார்க்கல” என்ற ஆரோன், “இது ஹனிமூன் கப்பில்ஸ் ஏரியா… யாரும் ஒன்னும் சொல்ல முடியாது” என்று புன்னகையோடு கூறியவன் அவர்களின் நிலையை படம் பிடித்து, உடனடியாக பூரணிக்கு, “உங்க பிளான் ஊத்திக்கிச்சு” என்ற கேப்ஷனோடு அனுப்பியும் வைத்திருந்தான்.
அடுத்த நிமிடம் பார்க்கப்பட்டு ஆரோனுக்கு அழைத்தும் விட்டார்.
“டேய் என்னடா நடக்குது அங்க?”
“லவ்சுதேன் பூரி” என்றவன், “துருவன் அவனோட காதலில் ஸ்ட்ராங்காத்தான் இருக்கான். நிரல்யாவை அவன் எவ்வளவு விரும்புறான்னு தெரியணும் அப்படின்னா, சீக்கிரம் கல்யாணம் பண்ணி வை. அவன் அவளோட வாழ்ந்து காட்டுவதில் உன் கேள்விக்கு பதில் கிடைக்கும். அதைவிட்டுவிட்டு டிராமா பன்றேன், அவளோட ஆழத்தை அவனுக்கு உணர்த்தப்போறேன்னு விளையாடிட்டு இருக்காதே” என்று ஒரே மூச்சாக முடித்தான்.
“என்னடா ரொம்ப பேசுற, வீட்டுக்கு வா பூரியில் அணுகுண்டை சொருகி உன் வாயில் வைக்குறேன்” என்றவருக்கு அப்படியொரு சந்தோஷம்.
அவர் காத்திருந்ததும் மகனை இப்படி பார்த்திடத்தானே!
“உன் பூரியே எனக்கு வேணாம்.”
“மாளுகிட்ட சொல்லி பழைய சோறு போட சொல்றேன்.”
“தெய்வமே…” ஆரோன் அளறியே விட்டேன்.
அவனின் அளறலில் தான் நிரல்யா துருவனை பிடிவாதமாக விலக்கியவளாக பிரிந்து நின்றாள்.
“அண்ணா என்ன நினைப்பாங்கா?” என்றவள் அவனின் புஜத்திலேயே குத்தினாள்.
“அவன் எப்பவும் அப்படித்தான். அம்மாகிட்ட விளையாடிட்டு இருப்பான்” என்ற துருவன்,
“உனக்கு எல்லாம் ஓகே தானே, வேறெதுவும் என்கிட்ட கேட்கணுமா?” எனக் கேட்டான்.
இருவருக்குமே எவ்வித உறத்தலுமின்றி உறவை தொடர வேண்டுமென நினைத்தான் துருவன்.
இல்லையென தலையசைத்தவள், துருவனின் கரத்தோடு தன்னுடைய கரம் கோர்த்து கொண்டாள்.
“ரெண்டு பேரும் அப்புறம் லவ் பண்ணுங்க” என்று பூரணியிடம் பேசி முடித்த ஆரோன்… “லக்ஸ்கிளாம்ப் டிசைன்ஸ் வந்திருக்குடா. நீ பார்த்து செலக்ட் பண்ணி ஓகே பண்ணிட்டா அவங்க வொர்க் ஸ்டார்ட் பண்ணிடுவாங்க” என்றான்.
“ம்ம்” என்ற துருவன் நிரல்யாவை அனுப்ப மனமே இன்றி அனுப்பி வைத்தான்.
“வீட்டுக்குத்தானே போற?”
துருவன் கேட்டிட உடனடியாக மறுத்தாள்.
“இப்போ போனா அத்தை உண்டில்லைன்னு பண்ணிடுவாங்க. நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது சொல்லுங்க. நானும் வரேன்” என்றவள் தன் காதல் தன்னிடம் வந்து சேர்ந்திட்ட மகிழ்வில் கண்களில் வர்ணங்கள் தேங்கிட, துள்ளலோடு துருவனுக்கு கையாட்டிவிட்டு சென்றிருந்தாள்.
அவளின் ஒவ்வொன்றையும் ரசித்தான். அனுபவித்தான்.
“சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும் ஆரு. இந்த கொஞ்ச நேரத்தில் கைக்குள்ள வச்சிக்கிட்டு விடவே மனசில்லை” என்று துருவன் காதலால் பிதற்றிட…
“கல்யாணத்துக்கு அப்புறமும் இதை நீ சொல்றியான்னு பார்க்கிறேன்” எனக்கூறி, துருவனிடம் குத்துகளை பெற்றுக்கொண்டான் ஆரோன்.
அந்நேரம் ஆளுக்கொரு திசையில் இருந்தாலும் அவர்களின் மனம் மகிழ்வில் ததும்பி நின்றது.
இந்த மகிழ்விற்கு ஆயுள் கொஞ்சம் என்பதை அக்கணம் யாரும் அறிந்திருக்கவில்லை.
நிரல்யா விடுதிக்கு வந்து தன்னுடைய அறைக்குள் நுழைந்த அடுத்த நொடி அவளின் அலைப்பேசி ஒளிர்ந்தது.
‘அத்தையாகத்தான் இருக்கும். சமாளிப்போம்.’ பையினுள் கைவிட்டு எடுத்தவள் அலைபேசியின் திரையினை பார்க்க… புது எண்ணாக இருந்தது.
“ஹலோ.”
“என்ன டார்லிங்… லவ்வெல்லாம் பன்ற போலிருக்கே. ஆளு பார்க்க செமயா இருக்கான்.” அக்குரலை கேட்ட நொடி உடல் நடுங்க அலைபேசியை இறுக பற்றிக்கொண்டாள்.
“யார்… யாரு நீ?” நா நடுங்க வினவியிருந்தாள்.
“என் குரலை வைத்தே நீ என்னை கண்டுபிடிச்சிட்ட. தெரியாத மாதிரி நடிக்காதடி. நேற்று நான் நேரில் வந்தும், உனக்கு என் மேல பயமில்லாமப்போச்சு” என்றவன், “உன் போனுக்கு குறும்படம் ஒன்னு அனுப்பி வச்சிருக்கேன் பாரு” என்று துண்டித்திருந்தான்.
பார்த்தவள் அருவருத்து மொபைலை தூக்கி எறிந்தாள். மெத்தையில் சென்று விழுந்திருந்தது. தரையில் விழுந்திருந்தால் அவள் எறிந்த வேகத்திற்கு சிதறியிருக்கும்.
மீண்டும் அழைப்பு ஒலிக்க…
தரையில் மடங்கி அமர்ந்தவள் அழைப்பினை தவிர்த்தாள்.
சில நொடிகளில் மற்றொரு வீடியோ வந்திருப்பதாக தகவல் திரையின் மேலே எம்பி குதித்தது.
விரல்கள் நடுங்க அலைபேசியை கையில் எடுத்திட…
“என் கால் நீ அவாய்ட் பண்ணும்போதெல்லாம் இப்படி ஒவ்வொரு வீடியோ வரும்” என்று அவனிடமிருந்து மற்றொரு தகவல் வந்தது.
அடுத்து வந்த அழைப்பை முதல் ரிங்கிலேயே எடுத்திருந்தாள்.
“குட்…” என்றவன், “அந்த வீடியோவில் இருப்பது நீயில்லைன்னு உனக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும். ஆனால் பார்க்குற மத்தவங்களுக்கு, அது நீதான். எவ்வளவு கத்தி சொன்னாலும், யாரும் நம்ப மாட்டாங்க” என்று சொல்லியவன், “இனி நான் எப்போ கால் பண்ணாலும் அட்டெண்ட் பண்ணு டார்லிங்” என்று வைத்திருந்தான்.
நிரல்யா மிரண்டு அமர்ந்திருந்தாள்.
மற்ற பெண்களுக்காக தைரியமாக முடிவெடுத்து செயல்பட்டவளுக்கு தனக்கு எனும் போது அந்த தைரியம் வரவில்லை.
தரையில் சுருண்டு படுத்தவள் சிறிது நேரத்திற்கு முன்பிருந்த சந்தோஷத்திற்கு மாறாக கண்ணீரில் கரைந்தாள்.
அதிலிருந்து தப்பிக்கும் மார்க்கம் தெரியாது… அடுத்து என்னவென்று யோசத்திட முடியாது தவித்து தனித்து நின்றாள்.
துருவனிடம் சொல்லலாம் என்று எண்ணி, எழுந்து அமர்ந்தவள், அலைபேசியை கையில் எடுக்க… மீண்டும் அவனிடமிருந்து அழைப்பு.
எங்கே மற்றொரு வீடியோ ஏதேனும் அனுப்பி விடுவானோ என்கிற பயத்திலேயே ஏற்றிருந்தாள்.
“யாருக்கிட்டயும் சொல்லலான்னு நினைச்ச… அவங்க அடுத்த நொடி உயிரோடு இருக்க மாட்டாங்க” என்றவன், “நான் சும்மா பூச்சாண்டி காட்டல… இப்போ உன் ஆளு துருவனிடம் சொல்லணும் நினைச்சதானே, அவனுக்கு அடி பட்டுடுச்சு. வேணுன்னா போன் பண்ணி கேட்டுக்கோ” என்று துண்டித்திருந்தான்.
பதட்டமாக துருவனுக்கு அழைக்க அவன் எடுக்கவில்லை.
ஆரோனுக்கு அழைக்க…
“அண்ணா அவங்களுக்கு என்னாச்சு?” என்று அழுகையில் ஒலித்த அவளின் குரலில், அவளுக்கு எப்படி அதற்குள் தெரியும் என்பதை சிந்திக்க மறந்தான்.
“ஒண்ணுமில்லை நிரல்யா. காலில் சின்ன அடி. டாக்டர் ரூமில் இருக்கான். ட்ரீட்மெண்ட் பண்ணிட்டு இருக்காங்க” என்று அவன் சொல்லி முடிக்க, மருத்துவமனையின் பெயரை தெரிந்துகொண்டு அங்கு விரைந்தாள்.
ரிசார்ட் தொடங்கும் இடம்… நுழைவு வாயிலின் வளைவில், தரை செடிப்பூக்கள் கொண்டு ரிசார்ட்டின் பெயர் வடிவமைத்திருக்க, அந்த செடிகள் யாவும் இன்று மஞ்சள் நிறத்தில் பூத்து… அன்னப்பூரணி எனும் பெயர் வெயிலில் தங்கமென மின்னிட, அதனை துருவனிடம் தோட்டக்காரர் கூறினார்.
பொதுவாக தரையில் தான் இம்மாதிரி வடிவமைப்பர். ஆனால் துருவனுக்கு மேல் வளைவில் செய்ய வேண்டுமென்று தோன்றிட அதனை தோட்டக்காரர் செல்படுத்தினார்.
ஆர்ச்சில் மின்னும் அன்னையின் பெயரை வெளியிலிருந்து ஆரோனுடன் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் தான் அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவன் துருவன் மீது உராய்ந்திடும் நெருக்கத்தில் வர, சுதாரித்து விலகிய துருவன் முன்னிருந்த கல்லில் இடித்துக்கொண்டான். கால் விரலில் நல்ல அடி. உடனடியாக ரத்தமும் வந்துவிட்டது.