நேச நெஞ்சங்கள் 30

உயிர் உறை 30

தேடல் 6

மருத்துவமனையைவிட்டு துருவனும், ஆரோனும் வெளியில் வர, கலைந்த கேசமும், அழுது வீங்கிய முகமுமாய் அவர்களின் முன் எதிர்பட்டாள் நிரல்யா.

அவளின் தோற்றமே அவள் அத்தனை பயந்திருக்கிறாள் என்பதை துருவனுக்கு விளக்கிட…

“உன்னை யாருடா அவகிட்ட சொல்ல சொன்னது” என்று ஆரோனை கடிந்துகொண்டான் துருவன்.

துருவன் நிரல்யாவிடம் வேக எட்டுக்கள் வைத்து சென்றிட,

‘அப்போ இவன் சொல்லலையா?’ என்ற யோசனையை ஆரோன் துருவனின் அழைப்பில் கைவிட்டான்.

“அச்சோ மெதுவா!” துருவனின் வேகத்தில் நிரல்யா பதறினாள்.

“சின்ன அடி தான் நிரல். ரத்தம் வந்ததால இவன் ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்துட்டான். நல்லா தான் நடக்கிறேன் பார்” என்ற துருவனின் பேச்சில் சமாதானம் அடையமால் அவள் கட்டிட்டிருந்த அவனின் கால் பெருவிரலையே பார்த்தபடி கண்ணீர் சிந்த…

“டேய் ஆரோன் இவகிட்ட சொல்லுடா” என்றான்.

அவளின் அழுகையை கவனிக்காத ஆரோன், “கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தாலும் பக்கத்தில் பள்ளத்தில் விழுந்திருப்பான். இவனை கண்டுபிடிக்கவே ஒரு நாளாகியிருக்கும்” என்று சொல்ல, அவனின் கழுத்தை நெறிப்பதைப்போல் பிடித்திருந்தான் துருவன்.

“ஏண்டா எருமை… அவள் அழறாள். சமாதானப்படுத்த சொன்னா, இன்னும் அழ வைக்கிற” என்று அவனின் விலாவில் இடித்த துருவன்,

“கொஞ்சம் கேர்லெஸ்ஸா இருந்துட்டேன். ஸ்லிப்பாகிடுச்சு. இதுக்குலாமா அழ செய்வாங்க” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தான்.

இருவரும் ஒன்றாக வருவதை கண்டு மனதிற்குள் மகிழ்ச்சி ஆர்பரிப்பு செய்தாலும், வெளியில் கோபமாகக் காட்டிக்கொண்டார் பூரணி.

“பாருடா… ரெண்டு பேரும் சேர்ந்து வறீங்க!” என்று அதிசயித்து சொல்லிய கோகிலா…

“என்ன நிரல்யா அம்மா சொன்ன மாதிரியே உன் ஆள பார்த்ததும், பிளானெல்லாம் மறந்துட்டியா” என்று கேலி வேறு செய்தாள்.

“எனக்குத் தெரியும் நேத்து நீ அவங்க கஷ்டப்படுறதை என்னால் பார்க்க முடியாதுன்னு சொல்லும்போதே இப்படி நடக்கும்ன்னு” என்ற கோகிலா, “ம்மா… பாருங்க, துருவ் முகத்தில் எவ்வளவு வெட்கம்” என்று முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டிருந்த பூரணியின் கன்னம் பிடித்து இருவரையும் பார்க்க செய்தாள்.

உண்மையில் துருவனின் முகம் கோகிலாவின் பேச்சில் சிவந்து தான் போயிருந்தது.

“கோகிக்கா…” என்று நீண்டு சிரித்த மகனின் முகத்தை காண்கையில் அன்னையாய் பூரணிக்கு அப்படியொரு இதம்.

எத்தனை நாட்களாயிற்று மகனை இப்படி விரிந்த புன்னகையுடன் பார்த்து, துருவனின் அருகில் சென்று வாஞ்சையாய் அவனின் கன்னம் வழித்தார்.

அருகில் இதிலெதிலும் ஒட்டாது கலக்கத்தோடு நின்றிருந்த நிரல்யாவின் கையை பிடித்துக்கொண்டவர்,

“என் மகனோட இந்த சிரிப்புக்கு நீதான் காரணம்” என்று அவளின் கன்னத்தில் முத்தம் வைத்தார்.

“ம்மா…” என்றவனின் கண்கள் நாணமாய் தன்னவளின் கன்னத்தை முற்றுகையிட்டது.

“அடப்போடா… கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நீ பண்ணிக்கோ” என்றவர் அப்போதுதான் நிரல்யாவின் மௌனத்தை கவனித்தவராக,

“உன் முகம் ஏன் டல்லா இருக்கு?” எனக் கேட்டார்.

‘தான் தடுமாறினால் கண்டுகொள்வர்’ என நினைத்தவள், “அவங்களுக்கு அடி பட்டிருக்கு” என்று பூரணியின் கவனத்தை மாற்றினாள்.

துருவனின் விரலினை ஆராய்ந்து அத்தனை பெரிய காயமில்லை என்று தெரிந்த பின்னர் தான் பூரணி மகனை விட்டார்.

“நீ கவனமில்லாம இருக்கமாட்டியே டா… அப்புறம் எப்படி ஆச்சு?” என்று கோகிலா கேட்டதற்கு பின்னரே ஏதோ நினைவு வந்தவனாக,

“நம்ம ரிசார்ட் ஏரியாவில் அவுட்சைட் வெஹிக்கில் அலோவ்ட் கிடையாதே ஆரு. அப்புறம் எப்படி? அவன் வேணுன்னே இடிக்க வந்த மாதிரிதான் இருந்தது. சிசிடிவி செக் பண்ணு” என்று ஆரோனிடம் துருவன் சொல்ல… ஆரோனும் சரியென்றான். நிரல்யாவுக்கு உடல் நடுங்கியது.

“நீயும் கூட வந்திருக்கியா?” என்ற பூரணி, “சத்தமே காட்டாம எப்போடா வந்து உட்கார்ந்த” என்று அவர் வழக்கம்போல் ஆரோனிடம் வம்பு பேச ஆரம்பித்துவிட்டார்.

துருவனின் அருகில் அவஸ்தையாய் அமர்ந்திருந்தாள் நிரல்யா.

“என்னடா… நீ இவ்வளவு பீல் பன்ற அளவுக்கு பெரிய காயமெல்லாம் இல்லை” என்று நிரல்யாவின் வாடிய முகம் பார்த்து துருவன் பேசிட, அவளோ அவனின் புஜத்தினை தன்னிரு கைகளாலும் கோர்த்து பிடித்தவளாக தோளில் சாய்ந்து கொண்டாள்.

“பயமா இருக்கு சீனியர்.”

அவள் சொல்வதன் காரணம் அவனுக்கு விளங்கவில்லை.

“இதுக்குலாம் பயப்படலாமா?” என்றவன் அவளின் தோளைச்சுற்றி கை போட்டிட… அவளோ அவனின் நெருக்கத்தை உணரும் நிலையில் இல்லை.

“எனக்கு எதாவது ஆகிடுச்சுன்னா என்ன பண்ணுவீங்க?”

அவள் ஏன் அப்படி கேட்கிறாளென்று தெரியாத போதும் பதில் கூறினான்.

“தெரியல. இப்போ தான் சேர்ந்து இருக்கோம். அப்படியொரு சிட்டுவேஷன் ஃபேஸ் பண்ணா(ல்) சொல்றேன்” என்றவன் அவளின் மூக்கை பிடித்து ஆட்டியவனாக, “என்ன உருளுது உன் மண்டைக்குள்ள?” எனக் கேட்டான்.

ஒரு கணம் சொல்லிவிடலாமா என்று யோசித்தவள், அடுத்த கணமே வேண்டாமென சொல்லிக்கொண்டாள்.

“எனக்கு உங்கக்கூட ரொம்பலாம் இல்லை… கம்மியா நூறு வருஷம் வாழ்ந்தால் போதும் சீனியர்” என்றவள், எப்பேர்பட்டவனிடம் தான் சிக்கொண்டிருக்கோம் என்ற எண்ணத்தில், துருவனை இறுக பற்றிக்கொண்டாள்.

“ஓய் வாலு… இப்போ நாம ஹாலில் இருக்கோம்” என்று சொல்லியவனின் குரல் கிசுகிசுப்பாய்.

“இருக்கட்டும். அத்தை இந்நேரம் மத்தவங்களையும் விரட்டிட்டு, அவங்களும் போயிருப்பாங்க” என்றவள் அவனிலிருந்து நிமிரவே இல்லை.

துருவன் வீட்டை அலச அவள் சொல்லியதுபோல் தான், வீடே அவர்களை தவிர்த்து யாருமற்று அமைதியாகக் காட்சியளித்தது.

“நல்ல மாமியார்” என்றவன், “எனக்கு நீ இப்படியிருக்கும் போது… நிறைய தோணுது. சேதாரமானா நான் பொறுப்பில்லை” என்று அவளின் நெற்றி முட்டினான்.

“கல்யாணம் பண்ணிக்கலாமா சீனியர்?”

அவளின் அக்கேள்வியில் இதயம் அதிர்ந்து தேகம் சிலிர்ப்பதை உணர்ந்தவனுள் ஜிவ்வென்ற இதம்.

“பண்ணிக்கலாமே!” என்றவன், “ரிசார்ட்டில் ஹில் டைவ், லக்ஸ்கிளாம்ப் வொர்க் முடிஞ்சதும்” என்றான்.

“ரொம்ப நாளாகுமா?”

அவள் கேட்ட பாவனையில் மொத்தமாக அவளுள் விழுந்திட பேராவல் கொண்டான்.

“மேக்சிமம் த்ரீ மந்த்ஸ்” என்றான்.

“ஹோ…” என்றவள், அப்படியே அவனின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டாள்.

நிரல்யாவின் மனதிற்குள் சூரைக்காற்று வீசிக்கொண்டிருக்கிறது. அதிலிருந்து மீளும் வழி தெரியாது தவிக்கிறாள். அவளுக்கு அவனால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்குள் தன்னவனுடன் காதலாய் ஒரு வாழ்வு வாழ்ந்து பார்த்திட ஏக்கம் கொண்டாள். தவிக்கின்றாள், துடிக்கின்றாள். இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

நிரல்யாவின் நெடுநாள் தவம் துருவனின் காதல், பல தடைகளுக்கு பின்னர் கை சேர்ந்ததை வாழ்ந்து பார்த்திட ஆசை அவளுள்.

அவள் என்னவென்று துருவனிடம் சொல்லிவிட ஒரு நொடி போதும். அதனால் துருவனுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்கிற அச்சத்தை அவளுள் சிறு செயலில் ஏற்படுத்தியிருந்தான் அவன்.

அந்த பயத்தினை கடந்து அவளால் வர முடியவில்லை. அதோடு அவன் அனுப்பிய வீடியோக்கள். நினைக்கவே உடல் கூசியது.

“நிரல்… என்னடா…”

தன்னுடைய நிலையை நினைக்க நினைக்க அவளின் தேகம் குறுகியது.

அதிலேயே துருவன் என்னவென்று வினவினான்.

“உங்களை விட்டு இருக்க முடியாது சீனியர்.”

துருவனின் அருகாமை அவள் வேண்டும் பாதுகாப்பினை அளித்திட… அவனுடனே இருந்திட வேண்டுமென்று நினைத்தாள் பெண்.

“ஹாஸ்டல் காலி பண்ணிக்கலாம்.” எளிதாகக் கூறினான்.

“இதை நான் எப்பவோ சொல்லிட்டேன்” என்று சிற்றுண்டி அடங்கிய தட்டோடு அவர்களிடம் வந்தார் பூரணி.

எழ முயன்றவளை தடுத்திருந்தான்.

“கல்யாணம் ஆகமா எப்படி அத்தை” என்றவள், “நான் சாப்பிட வேண்டாமா?” என்று துருவனின் கையை விலக்கிவிட்டு எழுந்து அமர்ந்தாள்.

“ஆரோன் போயிட்டானாம்மா?”

“அப்போவே” என்றவர், “என்னவோ மாதிரி இருக்க நிரல்யா!” என்றார்.

“எனக்கென்ன… நல்லாதான் அத்தை இருக்கேன்” என்றவள் அவரின் முகம் பார்ப்பதை தவிர்த்தாள்.

இருவரையும் மாற்றி மாற்றி பார்த்த துருவன், “இதோ வரேன்” என்று இருவருக்கும் தனிமை கொடுத்து தன்னறைக்கு சென்றான்.

“என்னடா… துருவன் பக்கத்தில் நீயிருக்கணும் எவ்வளவு ஆசைப்பட்ட. ஆனால் உன் முகத்தில் அந்த சந்தோஷமே இல்லையே” என்று அவளை கண்டுகொண்டவராக வினவினார்.

“திவாகர் வந்துட்டான் அத்தை” என்றாள்.

பூரணியின் முகத்தில் கலவரம்.

“எப்படி நிரல்யா. அவன் தான் ஜெயிலில் இருந்தானே!” அவன் வெளியில் வந்ததை நம்ப முடியாது வினவினார் பூரணி.

“எனக்கும் தெரியல அத்தை. நேத்து நேரிலே வந்துட்டான்” என்றாள் ஒருவித கலக்கத்துடன்.

“சரிவிடு பார்த்துக்கலாம். என்ன பண்ணிட முடியும் அவனால். நான் இருக்கேன்” என்றவர் அவளின் கையினை பிடித்து அழுத்தம் கொடுத்தார்.

“அவன் எப்போ உன்னைத்தேடி ஹாஸ்டலுக்கே வந்துட்டானோ… இனி நீ அங்க இருக்க வேண்டாம். இங்கயே வந்திடு” என்றார்.

“வேண்டாம் அத்தை” என்றவள், “அவங்களை கல்யாணம் சீக்கிரம் வைக்க ஓகே சொல்ல வையுங்க” என்றாள்.

நிரல்யாவின் பயம் பூரணிக்கு நன்கு புரிந்தது.

“அத்தையும் மருமகளும் ரகசியம் பேசி முடிச்சாச்சா?” என்றபடி வந்தான் துருவன்.

அதற்கு நிரல்யாவால் விளையாட்டுக்கும் பதில் சொல்ல முடியவில்லை.

“என்னை கவுக்க இதுக்கப்புறம் எந்த பிளானும் பண்ண தேவையில்லைம்மா. மொத்தமா கவுந்தாச்சு” என்றவன் தன்னுடைய வெட்கத்தை மறைத்திட வெகுவாகவே சிரமப்பட்டான்.

“டைம் ஆச்சு. நான் கிளம்புறேன்” என்றாள் பொதுவாக.

“டிராப் பண்ணிட்டு வரேன்” என்று பூரணியிடம் சொல்லியவன், இருசக்கர வாகனத்தின் சாவியை விரலில் சுற்றியவனாக வெளியேறினான்.

“அத்தை…” மளுக்கென நிரல்யாவின் கண்களில் நீர் நிறைந்தது.

“அழாதடா… அவன் கேட்டா எதாவது சொல்லி சமாளி. முடியல அப்டிங்கிறப்போ அவன்கிட்ட சொல்லிக்கலாம். அவன் கோபம் உனக்குத்தான் தெரியுமே. யோசிக்கவே மாட்டான். அவனையும் சிக்கலில் மாட்ட வைக்க வேண்டாம்” என்றவர் தைரியம் கொடுத்து அவளை அனுப்பி வைத்தார்.

வண்டியில் உட்கார்ந்தவாறு மொபைல் நோண்டிக்கொண்டிருந்த துருவன், நிரல்யா வந்ததும் மொபைலை சட்டை பையில் போட்டவனாக வண்டியை உயிர்பித்தான்.

நிரல்யா அவனுக்கு பின்னால் அமர்ந்ததும் வண்டி கேட்டினை தாண்டி சாலையில் பயணித்தது.

துருவன் ஏதேனும் கேட்பானென்று அவள் எதிர்பார்க்க… அவனோ சாலையில் கண்ணாக இருந்தான்.

நிரல்யா ஒருவித படப்படப்பிலேயே இருந்தாள்.

ரொம்ப தூரம் பயணிப்பதைப்போலிருக்க அப்போதுதான் வண்டி செல்லும் பாதையை கவனித்து,

“இது ஹாஸ்டல் போற வழியில்லை” என்றாள்.

“ஹாஸ்டல் கூட்டிட்டு போறேன்னு நானெப்போ சொன்னேன்” என்றவன் எங்கு போகிறோம் என்று சொல்லவில்லை.

சிறிது நேரத்தில் போகும் வழி வைத்து எங்கு செல்கிறோம் என்பதை கண்டுகொண்டாள்.

பூம்பாறை. முருகன் கோயில். (குழந்தை வேலப்பர்)

“இந்த கோயில் எனக்கும் விநோண்ணாக்கும் ரொம்ப ஸ்பெஷல். எதாவது கஷ்டம் அப்படின்னா விநோண்ணா என்னை இங்கதான் கூட்டிட்டு வருவாங்க. எதுவும் பேசாம கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்துட்டு போவார். எனக்கும் பழக்கமாகிப்போச்சு. இப்போ நீ கிடைச்சிட்ட, என் கை வந்து சேர்ந்துட்டன்னு இந்த வேலன் கிட்ட சொன்னா, அவர் விநோண்ணாவுக்கு சொல்லிடுவார்” என்றவனின் தொண்டை செறுமளில் தான் அவனின் அழுகையை உணர்ந்தாள் நிரல்யா. நானிருக்கிறேன் எனும் ஆறுதலை அவன் கைகளில் காட்டினாள்.

விநோவின் பக்கங்கள் யாவும் துருவனின் நெஞ்சத்தில் என்றும் அழியாதவை. அவன் உயிருடன் இருக்கிறான் எனும்போது துருவனின் எதிர்வினை என்னவாக இருந்திடும்?

*******************

அந்த பூங்காவிற்குள் மெல்ல அடி வைத்து நுழைந்தவளின் கண்கள் திவாகரைத் தேடியது.

பூங்கா என்று திடமாக வந்தவளுக்கு அங்கு நிலவிய அமைதி பெரும் அச்சத்தை கொடுத்தது.

நண்பகல் பனிரெண்டு மணிக்கு அந்த பூங்கா வெறிச்சோடி காட்சியளித்தது.

அப்போதுதான் அங்கு வைக்கப்பட்டிருந்த போர்டினை கவனித்தாள், பராமரிப்பு வேலைக்காக பகல் நேரம் மூடப்பட்டிருப்பதாக எழுதியிருந்தது.

‘போயிடலாம்!’ அவள் நினைக்கும் போது முன்னே வந்து நின்றான் திவாகர்.

“ஹாய் டார்லிங்…”

அவனது அழைப்பில் எரிச்சலாக வந்தது.

“வந்தா வீடியோ டெலிட் பண்ணிடுறேன் சொன்னியே. பண்ணு.”

“அதிகாரம் பண்ற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம். இப்போதான வந்திருக்க, இன்னும் நிறைய இருக்கே” என்றவன், “ஐ லவ் யூ சொல்லு” என்றான்.

முடியாதென்று அழுத்தமாக நின்றாள்.

“சரி வா! பைக்கில் லாங் ட்ரைவ் போயிட்டு வரலாம்” என்று அவளின் கையினை பிடிக்கச் சென்றான்.

லாவகமாக விலகிக்கொண்டாள்.

“நேத்து அவனை இறுக்கமா கட்டிக்கிட்டு” என்றவன் நொடியில் அவளின் கையை வளைத்து பிடித்தவனாக தன்னோடு சேர்த்து பத்தித்து… “இப்படித்தானே அவனை ஒட்டிக்கிட்டு திரிஞ்ச நேத்து” என்றதோடு நிரலின் கன்னத்தோடு தன் கன்னத்தை வைத்து தேய்த்தான்.

அவனின் பிடியில் இம்மியும் அசைய முடியாது அருவருத்தவள்,

“ப்ளீஸ்” என்று இரைஞ்சினாள்.

“பைக்ல அவனை கட்டிகிட்டு போகும்போது நல்லா இருந்துச்சோ?” என்றவன் அவளின் இடையில் கை வைத்திட… திவாகரை ஒன்றும் செய்ய முடியாத தன்னிலையை வெறுத்தவளாக கண்ணீர் வழிய அவனது பிடியில் உயிர் மரித்து நின்றாள்.

“இந்த ட்ரெஸ் நடுவில் டிஸ்டர்ப் பண்ணுதே!”

தான் கை வைத்திருந்த இடத்தை சுட்டிக் கூறினான்.

“விட்டுடு…”

“விடறதுக்கா… ரிஸ்க் எடுத்து வெளியில் வந்தேன்” என்ற திவாகர், “நீ வேண்டாம் வேண்டாம் சொல்ல சொல்லத்தாண்டி உன்னை கட்டிக்கணும் தோணுது” என்றவன்,

“இனி தினமும் நீ என்னை பார்க்க வரணும். வரல,” என்றவன் அவளை தனது பிடியிலிருந்து விலக்கியவனாக தன்னுடைய மொபைலை ஆட்டிக்காட்டினான்.

நிரல்யா அவன் கையிலிருக்கும் மொபைலை பறிக்க முயன்றாள். அவனோ உயர்த்திப் பிடித்து போக்குக்காட்டினான்.

“இப்போவே உன்னை தூக்கிட்டு போய் என்னால் தாலி கட்ட முடியும். ஆனால் அது உனக்கு போதாதே! உன் கண்ணுல என்னை பார்க்கும்போது தெரியுதே பயம் அதை பார்க்க பார்க்க போதையா இருக்குடி.

அன்னைக்கு உன் கண்ணுல தெரிஞ்சுதே ஒரு திமிரு அது இப்போ எங்கடி போச்சு. அதை நான் பார்க்கணும்” என்றவன்,

“வலிக்குதுடி… வலிக்குது…” என்றவன் தன் இடது பக்க கன்னத்தை தேய்க்க, “மொத்தமா உன்னை சுத்தவிட்டு எடுத்துப்பேன்” என்றவனின் கண்களில் ஓநாயின் பளபளப்பு. பழிவெறி.

“என்னை விட்டுடு… ப்ளீஸ்…”

“போதலடி… போதல… உன் கண்ணுல இன்னும் அழுகையை நான் பார்க்கணும்” என்றவன்,

“லவ் யூ டி… நீ அழுதால் எனக்கு ஜிவ்வுன்னு ஏறுதுடி. அழு, இன்னும் அழு… இன்னும் அழணும் நீ. நான் வாழ்நாள் முழுக்க உன் அழுகையை ரசிக்கணும்” என்றவன், “எதாவது கோக்குமாக்கா பண்ணலாம் நினைக்காத, அவனை உரச தெரிஞ்ச எனக்கு நொடியில் போட்டுத்தள்ளவும் தெரியும். அப்புறம் அவனோட அம்மா, அவள் தானே உனக்கு துணையா நிக்குறாள்? நீ எனக்கு எதிரா எதாவது பண்றன்னு தெரிஞ்சாலும், அவ(ள்) கதையை முடிச்சிடுவேன்” என்றான்.

“மிரட்டிக்கிட்டு தானே இருக்கான். ஒன்னும் பண்ணமாட்டான்னு நினைச்சிடாத, உன்னை என் கை வளைவுக்குள் கொண்டுவரத் தெரிஞ்ச எனக்கு, மொத்தமா அடக்க எத்தனை நேரம் ஆகிடும். ஆனால் எனக்கு அது போதாதுடி… உன்னை மொத்தமா அழ வைக்கணும்” என்று கெக்களித்தான்.

திவாகரை எதிர்த்து நிரல்யாவால் ஒருவார்த்தை கூட பேச முடியவில்லை.

பயம் அவளின் தைரியத்தை சிதைத்திருந்தது. கழுத்தை கவ்வி பிடித்திருந்தது.

“இன்னைக்கு இது போதும் நினைக்கிறேன்” என்றவன், “உன் முகத்தை மட்டும் ஒட்ட வச்சு பார்க்கவே…” அடுத்து என்ன சொன்னானோ உடல் கூசிட,

“போதும்… போதும்… எதுவும் சொல்லிடாத” என்று காதுகளை பொத்திக்கொண்டாள்.

“எல்லாம் நமக்கு கல்யாணம் ஆனதும் பேசிக்கலாம்” என்றவன், “நான் கூப்பிட்டதும் ஏன் எதுக்குன்னு கேட்காம வரணும். வரட்டா” என்று அழும் அவளையே வேட்கையான பார்வை பார்த்து பூங்காவிலிருந்து வெளியேறினான்.

எல்லாம் தளர்ந்து ஓய்ந்து போனவளாக கல்லிருக்கையில் அமர்ந்தவள் கைகளால் முகம் மூடி அழுதாள்.

அவளின் தவிப்பு அவளவனை தீண்டியதோ, அவளுக்கு அழைத்துவிட்டான்.

“மேடம் எங்க இருக்கீங்க? வரன்னு சொல்லி, டூ ஹவர்ஸ் ஆகுது” என்றான்.

…..

“நிரல்… லைன்ல இருக்கியா?”

“ஹாங்… சீனியர்” என்றவளின் குரல் மாற்றத்தை கண்டுகொண்டான்.

“என்னடா… எங்கிருக்க? ஏன் வாய்ஸ் ஒரு மாதியிருக்கு?” என்று வினவினான்.

அவன் பக்கத்திலிருந்து கேட்பதைப்போல் படப்படத்தவள், அவசரமாக கண்களை புறங்கையால் துடைத்துக்கொண்டு, “ஒண்ணுமில்லை சீனியர். நீங்க ஹாஸ்டல் வர்றீங்களா?” எனக் கேட்டாள்.

அவனுக்கு முன்பாகவே விடுதி வந்தவள், அவனுக்காக விசிட்டர் அறையில் காத்திருந்தாள்.

துருவன் வந்ததும் அவனை அணைத்திருந்தவள்,

“என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்க சீனியர்” என்றால், தன்னுடைய அழுகையை உள் விழுங்கியவளாக.

ஆனால் அவளின் கண்ணீர் அவனது மார்பை சுட்டது.

அடுத்து துருவன் எதுவும் அவளிடம் கேட்கவில்லை, ஹாஸ்டல் பார்மாலிட்டிஸ் முடித்து நிரல்யாவை அவளது உடமைகளுடன் கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

வீட்டிற்கு வந்தவளின் முகத்தில் தெரிந்த கலக்கத்தில் யூகித்தவராக பூரணி துருவனின் முன்பு எதையும் கேட்டுக்கொள்ளவில்லை.

அவளை இயல்பாக்கிட முயற்சித்தார்.

“நான் எத்தனை முறை சொல்லியிருப்பேன். கேட்டிருப்பியா?” என்ற பூரணியின் பேச்சில் குறுக்கிட்ட கோகிலா…

“கூப்பிட வேண்டியவங்க கூப்பிட்டாதான் வருவாங்கம்மா” என்று கேலி செய்தாள்.

“என்ன நிரல்யா தம்பி முன்னாடி பேச்சுவரலையா?” என்ற கோகிலாவுக்கு நிரல்யாவின் அமைதி புதிது.

எப்போதும் சலசலத்துக் கொண்டே இருப்பவளிடம் தெரியும் அமைதியை துருவனுமே அவதானித்துக் கொண்டிருந்தான்.

“ரூமிற்கு கூட்டிபோங்க கோகிக்கா” என்ற துருவன்,

கோகிலா நிரல்யாவை அழைத்துச் சென்றதும்,

“மேரேஜ்க்கு டேட் பிக்ஸ் பண்ணுங்கம்மா” என்று பூரணியிடம் கூறினான்.

“என்னப்பா… உன் வொர்க்லாம் முடியட்டும் சொன்னியே!” என சொல்லியவருக்கு மகன் எதையும் கண்டு கொண்டானோ என்று தடுமாற்றமாக வந்தது.

“வொர்க் எப்பவும் தான் இருக்கும்” என்றவன், “எனக்கென்னவோ அவளை இன்னும் என் பக்கத்தில் கொண்டுவரணும் தோணுதும்மா” என்றான்.

“சரிப்பா” என்றவர் நகர்ந்திட…

“யதுண்ணாவிடம் பேசிடுங்கம்மா. கொஞ்சம் சீக்கிரம் வையுங்க” என்றான். அவனின் வார்த்தையிலிருந்த பாவனை பூரணிக்கு கட்டளையாகத்தான் தெரிந்தது.

அன்றிரவு துருவன் தோட்டத்தில் நடை பயின்றவனாக கிருஷ்ணாவுடன் பேசிக்கொண்டிருந்தான். உடன் இணைப்பில் ஆரோனும்.

துருவனின் முகம் அத்தனை தீவிரமாக இருந்தது.

பேசி முடித்து துருவன் திரும்பிட…

கைகளை பிசைந்துகொண்டு தரையில் கால்கள் பதியாது, தயக்கத்தோடு நின்றிருந்தாள் நிரல்யா.

“வாங்க மேடம்” என்றவன் தோட்டத்தின் புல் தரையில் ஒரு கால் நீட்டி ஒரு கால் குத்திட்டு, பின்னால் இரு கைகளையும் ஊன்றியவனாக அமர்ந்தான்.

“எல்லாம் ஓகே தானே!” எனக் கேட்டவனின் பார்வை அவள் மீதுதான் அழுத்தமாக படிந்திருந்தது.

“என்கிட்ட எதாவது சொல்லணுமா?” என்று மீண்டும் அவனே கேட்டான்.

அவனின் அருகில் அமர்ந்தவள்,

“உங்க மடியில் நான் படுத்துகட்டுமா?” எனக் கேட்டிருந்தாள்.

நிரல்யாவின் ஏக்கம் அவளின் விழிகளில் மின்னியது.

அவள் இப்படி ஒன்றை கேட்பாளென்று அவன் எதிர்பார்க்கவில்லை.

“வா” என்று கை அசைத்தவன், அவளை தன் மடியில் சேயாய் தாங்கினான்.

நான்கு கரங்களும் ஒரு கரமாய் அடங்கியிருந்தது.

“நிம்மதியா இருக்கு சீனியர்.”

இதென்ன வார்த்தை? துருவன் அதிர்ந்தான்.

சந்தோஷமாக இருக்கிறேன் என்பதற்கும் நிம்மதியாய் உணர்கிறேன் என்பதற்கும் தான் எத்தனை வித்தியாசம்.

அவளின் கடந்த காலம் தோன்றி அவனின் மனதில் புழுங்கியது.

“முடிஞ்ச எதையும் நினைக்காத… நானிருக்கேன்” என்றவன், “உனக்கு என்மேல நம்பிக்கை இருந்தா, எதையும் நினைத்து மருகாத” என்றான்.

துருவனின் உள்ளர்த்தம் பொதிந்த வார்த்தைகள் துவண்டிருந்தவளின் அகம் நுழையவில்லை.

‘இப்பவும் என்கிட்ட சொல்லத் தோணலையா?’ நினைத்த துருவனுக்கு அத்தனை வேதனையாக இருந்தது.

‘என்கிட்ட சொன்னா நான் எல்லாம் சரிசெய்திடுவேங்கிற நம்பிக்கையை இதுவரை நான் உனக்கு கொடுக்கலையேன்னு என் மேலதான் கோவம் வருது. நான் சரி செய்றேன்.’

கண்கள் மூடியிருந்த நிரல்யாவின் முகத்தை பார்த்தபடி மனதில் சொல்லிக்கொண்டான்.

அந்நேரம் துருவனின் அலைபேசிக்கு கிருஷ்ணாவிடமிருந்து தகவல் வந்தது. எடுத்து பார்த்தவன் மர்மமாகப் புன்னகைத்துக் கொண்டான்.

“நாளைக்கு வர்றேன்” என்று பதில் அனுப்பிய துருவன் நிரல்யாவை பார்க்க, அவளோ ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.

“நிரல்…” மெல்ல கன்னம் தட்டிட, அவனின் காலினை இறுக பற்றியவளாக தூக்கத்தை தழுவியிருந்தாள்.

அலைபேசியிலிருந்து பூரணிக்கு அழைத்தவன், “குடிக்க தண்ணீ கொண்டு வாங்கம்மா” என்றான்.

“என்ன துருவ் தூங்கிட்டாளா?” என்றபடி வந்தவர், துருவனின் கையில் நீர் நிறைந்த போத்தலை நீட்டினார்.

“இதுக்கு அப்புறமாவது இவள் மனசு நிறைஞ்ச சந்தோஷத்தோட இருக்கணும் துருவ்” என்றவர் நிரல்யாவின் தலை கோதினார்.

“மொத்தமா அவ பக்கம் உங்களை இழுத்திட்டாள் போல…” அன்னையை சீண்டினான்.

“உனக்கு தெரியாது துருவ் இவளை எந்த நிலையில் ரெண்டரை வருஷத்துக்கு முன்னாடி பார்த்தேன்னு. இந்த வயசில் அப்படியொரு சோகம். கண்ணில் அப்படியொரு விரக்தி. அந்த நேரம் அவள் வயது பிள்ளைகள் எந்தவொரு கவலையுமின்றி சுற்றி வருவதை நினைத்து எனக்கு கஷ்டமாப்போச்சு” என்றவர், இப்போதுதான் மகனிடம் தன் மனம் திறந்தார்.

“அவளிடத்தில் நானிருந்திருந்தால் நிச்சயம் உன்னை மன்னித்து ஏற்றிருப்பேனா சந்தேகம் தான். என்னால் உன்னை மன்னிக்க முடிந்திருக்காது. அன்னைக்கு உன்மமேல அத்தனை வருத்தத்திலும், நான் உன்னோட அம்மான்னு தெரிந்ததும், எந்தவொரு தயக்கமும் இல்லாம அத்தைன்னு என்னை கட்டிக்கிட்டாள். எவ்வளவுதான் கஷ்டப்படுத்தினாலும் ஒண்ணுமே நடக்காத மாதிரி திரும்பி தேடிவர உறவெல்லாம் வரம் துருவ். என் பையனை எனக்கும் மேல் நேசிக்கிற ஒரு பொண்ணை எனக்கு எப்படி பிடிக்காமப்போகும்” என்றவர், “நாங்க பிளான் பண்ணதெல்லாம் உனக்குத் தெரிந்திருக்கும் நினைக்கிறேன். அப்போ, நான் எதுக்காக அவளை டிராமா பண்ண சொன்னன்னு தெரிந்திருக்குமே. அவளை ரொம்ப நல்லா பார்த்துக்கணும் துருவ்” என்றார்.

“கண்டிப்பாம்மா” என்ற துருவன்,

“என்னவோ இவளை உருட்டுது. என்னன்னு சொல்ல மாட்டேங்(ன்)கிறாள்” என்றான். எல்லாம் தெரிந்துகொண்டே!

“ஏதோ மறைக்கிறாள். அது மட்டும் நல்லா தெரியுது” என்றான் மீண்டும்.

பூரணியாவது தன்னிடம் சொல்கிறாரா என்று எதிர்பார்த்தான். அவரும் வாய் திறப்பதாக இல்லை.

“அவளாவது உன்கிட்ட மறைக்கிறதாவது” என்று தடுமாறிய பூரணி, “அவளுக்கு உன்கிட்ட பொய் சொல்லவே வராதுடா” என்றவராக எழுந்து கொண்டார்.

மேற்கொண்டு ஏதேனும் துருவன் கேட்டால், தானே எல்லாம் உளறிடுவோம் என்றே அங்கிருந்து வேகமாக சென்றிருந்தார்.

‘அவனுக்கு ஒருவழி பண்ணிட்டு உங்க ரெண்டு பேரையும் கவனிச்சிக்கிறேன்’ என்று சொல்லியவனுக்கு தன்னுடைய இரு பெண்களின் மீதும் அந்தநொடி அதீத கோபம் எழுந்தது.

மறைக்கக்கூடிய விடயமா இது.

அத்தனை ஆற்றாமை அவனிடத்தில்.

error: Content is protected !!
Scroll to Top