உயிர் உறை 31
தேடல் 7
இரண்டு வாரங்கள் சென்றிருந்தது.
“அவனை அதுக்கு அப்புறம் நீ பார்க்கலையா?”
“இல்லை அத்தை.” பாலினை பருகியபடி பூரணிக்கு பதில் வழங்கினாள் நிரல்யா .
“போன்…?”
“சின்ன மெசேஜ் கூட இல்லை.”
“எங்கபோய் தொலைந்தான். இவன் இருந்தாலும் இல்லைன்னாலும் நம்ம தலை உருளுது” என்றவர், “செத்துகித்து போயிருப்பானோ!” என்றார்.
“அத்தை…”
“அப்படித்தான் இருக்கும். இருக்கணும்” என்ற பூரணி, “எப்படியோ அவன் தொல்லை விட்டதே அதுவே போதும்” என்று நகர்ந்தார்.
பூரணியைப்போல் நிரல்யாவால் நிம்மதி கொண்டு கடந்து போக முடியவில்லை.
பூரணியை பொறுத்தவரை திவாகர் விடயத்தில் நிரல்யா அவனை மாட்டிவிட்டதற்கே பழிவாங்க மீண்டும் வந்திருக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவன் காதல் கல்யாணம் என்று, உண்மையில்லா காணொளியை வைத்து மிரட்டியது தெரிந்திருக்கவில்லை. நிரல்யா அவரிடம் சொல்லவில்லை. தன்னால் அவருக்கு வம்பு வேண்டாமென்று நினைத்தாள்.
‘தினமும் கால் பண்ணுவேன். நான் வர சொல்லும் இடத்திற்கு நீ வரவேண்டும். நாம் லவ் பண்ணுவோம் என்று அன்னைக்கு அப்படி பேசினான். ஆனால் அன்னையிலிருந்து மெசேஜ் கூட பண்ணலையே! என்னவாயிருக்கும்?’
திவாகரின் தற்போதைய நிலை அறிந்தால்தான் அவளால் அதிலிருந்து மீண்டுவர முடியும்.
தனக்குள் உழன்றபடி அமர்ந்திருந்தாள்.
“லவ் சொல்ற வரை பின்னாடியே சுத்திட்டு இருந்தீங்க. அக்செப்ட் பண்ணதும் மேடம் கண்டுக்கறதே இல்லை.” குறைப்பட்டவனாக அவளின் அருகில் வந்தமர்ந்தான் துருவன்.
“எப்போ பாரு அப்படி என்ன திங்க் பண்ணிட்டே இருப்ப?” அவளின் மண்டயை பிடித்து ஆட்டினான்.
அவளோ அவனின் கைகளை கோர்த்தவளாக அவனில் சாய்ந்து கொண்டாள்.
“இப்படி மேல சாய்ந்து சாய்ந்தே மனுஷனை ஆஃப் பண்ணிடு” என்று போலியாக முறைத்தாலும், அவளின் அந்த செயலில் அவன் கரைந்துதான் போனான்.
“ஆறுதலுக்கு பிடிச்சிக்க ஒரு கை, அரவணைப்பா சாய்ந்துக்க ஒரு தோள் இல்லாம எத்தனை நாள் அழக்கூட முடியாம வேதனைப்பட்டிருக்கேன் தெரியுமா?” என்று தழுதழுப்பாய் கேட்டவள், நொடியில் சீராகி… “இப்போதான் அதுக்கெல்லாம் நீங்க இருக்கீங்களே! இது என்னோட இடம் நான் எப்போ வேணாலும் சாய்ந்துப்பேன்” என்றவள் அவனருகிலிருக்கும் நிம்மதியான மகிழ்வில் தன்னிலை மறந்து, அவனது புஜத்திலேயே கடித்தும் வைத்தாள்.
துருவன் அவளிடமிருந்து துள்ளி விலகினான்.
“என்னடி பன்ற” என்றவனுக்கு கண்கள் கலங்கிவிட்டது.
அதன் பிறகே தன் செயலை உணர்ந்தவளின் முகம் அவனுக்கு வலிக்க செய்துவிட்டோமென்று கூம்பிப்போனது.
“சாரி… சாரி சீனியர். ஒரு எக்ஸைட்ல அப்படி பண்ணிட்டேன்” என்றவளின் குரல் கரகரத்து ஒலிக்க… துருவன் தன்னை சரிசெய்து கொண்டான்.
“ஹேய்… நிரல்’ம்மா! எனக்கு ஒன்னுமில்லை. வலிக்கவே இல்லை. சும்மா உன்னை பயங்காட்டி பார்த்தேன்” என்று துருவன் சொல்லியும் அவள் சமாதானம் அடைந்தாள் இல்லை.
“பொய் சொல்றீங்க!”
“நிஜமா வலிக்கலடா” என்றவன் எத்தனையோ சொல்லியும், அவள் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டபடி இருக்க… அவனோ அவள் உணரும் முன்பு அவளது அதரங்களை களவாடியிருந்தான்.
அவளின் மன்னிப்புகள் எல்லாம் அவனது தொண்டை சேர்ந்தது.
அவனது உதட்டின் ஈரம் உணர்ந்து கண்களை அகல விரித்தவளின் உயிர் உறைந்து கரைந்தது அவனின் மென் தீண்டலில்.
அவளும் அவனக்கு இசைந்து கொடுத்திட… அழகிய ஆத்மார்த்தமான முதல் முத்தம் அவர்களுக்குள் தித்திப்பாய் சுவை கூட்டியது.
“அய்யய்யோ…” என்ற அளறலில் தான் இருவரும் விலகினர்.
கோகிலா தான் கத்தியிருந்தாள்.
இரவு நேரம், பூரணியும் தன்னுடைய அறைக்குச் சென்றிருக்க… கோகிலாவும் அவளுடைய அறைக்கு சென்றிருப்பாள் என்று நினைத்திருக்க, அவளோ அப்போதுதான் சமையலறையை சுத்தம் செய்துவிட்டு தன்னுடைய அறைக்கு செல்ல வந்தாள்.
கோகிலாவின் அறை உணவு கூடத்திற்கு எதிரில் உள்ளது. எப்போதும் சமையலறையின் பக்க வழியாகவே சென்றிடுவாள். இன்று பூரணி அவள் சென்றுவிட்டதாக எண்ணி அக்கதவினை பூட்டியிருக்க முன் வழியாக செல்ல வேண்டுமென நினைத்து வந்தவளுக்கு, துருவனின் பின் பகுதிதான் தெரிந்தது. ஆனால் அவனது பின்பக்க தலையில் நிரல்யாவின் விரல்கள். பார்த்தவளுக்கு அவர்களின் நிலை விளங்கவில்லை.
‘ஏன் இப்படி நின்னுட்டு இருக்காங்க?’ என்று நினைத்த கோகிலா… அவர்களின் முன் சென்று பார்க்க அவர்களின் நிலையறிந்து, பார்க்கக்கூடாத காட்சியை பார்த்திட்ட பதட்டத்தில் கத்தியிருந்தாள்.
நிரல்யா துருவனின் பின்னால் ஒளிந்துகொள்ள…
“அய்யோ கோகிக்கா ஏன் இப்படி கத்துறீங்க?” என்று அவளை அடக்க முயன்றான்.
ஆனால் அவளோ விடுவதாக இல்லை.
“உன்னை ரொம்ப நல்லவன்னு நினைச்சேனே துருவ்” என்றவள், “உன்னை ஒண்ணும் தெரியாத புள்ளன்னு இனி சொல்லவே மாட்டேன்” என்று நிரல்யாவை துருவனிடமிருந்து பிரித்து முன் இழுத்தாள்.
கோகிலாவின் சத்தத்தில் பூரணியும் வந்துவிட்டார்.
“இந்தநேரத்தில் எதுக்குடி இப்படி கத்துற?”
“எதே நான் கத்துறேனா?” என்றவள், “சீக்கிரம் இதுங்களுக்கு கல்யாணம் பண்ணி வையுங்கம்மா. ஒரு வயசுப் பொண்ணு வீட்டில் நிம்மதியா நடமாட முடியுதா?” என்றாள்.
“யாருக்கா அந்த வயசுப்பொண்ணு?” துருவன் தெரியாதைப்போல் வினவினான்.
“ஏன் என்ன பார்த்தா தெரியலையா? எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல தெரியும்ல. அதைவிட உனக்கு ரெண்டு வயசு கூட இருப்பேன்” என்றாள்.
“சரி… சரி… நைட்ல இதென்ன ரகளை. போய் படுங்க” என்ற அதட்டலில் எல்லோரும் களைய, வீட்டின் அழைப்புமணி ஒலித்தது. கூடவே இன்டர்காமும்.
கோகிலா கதவினை திறக்க செல்ல, துருவன் இன்டர்காமினை எடுத்திருந்தான்.
“தம்பி, யது வந்திருக்கார். கதவு சாத்திட்டீங்களா? அவர் வெளிய நிக்கிறாரு” என்றார் வாயிலின் கேட்டிலிருந்து அவ்வீட்டின் காவலாளி.
அந்நேரம் கோகிலா கதவினை திறந்திட… இந்நேரத்தில் துருவன் தான் திறப்பானென்று நினைத்த பாசில் பயம் காட்டுவதாக எண்ணி ‘பே’ என்று கத்திட, சற்றும் அசராது அவனை மேலும் கீழும் முறைத்துப் பார்த்தாள் கோகிலா.
“வாங்க யதுண்ணா” என்று பாசிலுக்கு பின்னிருந்த யதுவை வரவேற்ற கோகிலா, “இது யாருண்ணா உங்க பிரண்டா? கொஞ்ச நேரத்தில் வீட்டுக்குள் மலக்குரங்கு ஏதும் வந்திடுச்சோன்னு நினைச்சிட்டேன்” என்று சொல்லிக்கொண்டே முன் சென்றாள்.
“எதே… மலக்குரங்கா!” அதிர்ந்த பாசில், “யாரு மச்சான் இந்த பொண்ணு இவ்வளவு திமிரா பேசுது” என்றான்.
“அவளும் இந்த வீட்டில் ஒரு ஆளு தான்” என்ற யது பாசிலுடன் உள்ளே நுழைய, துருவன் ஓடிவந்து யதுவை கட்டிக்கொண்டான்.
“வாங்க பாசில்” என்று அவனையும் வரவேற்று இருவரையும் அமர வைத்தான்.
“ம்மா…” யது அழைத்திட,
அவனை முறைத்து பார்த்த பூரணி முகம் திருப்பிக்கொண்டார்.
“சாரிம்மா… லாஸ்ட் வீக் கட்சி மீட்டிங் இருந்தது. அதான் வர முடியல” என்று தன்னுடைய பதவி உயரம் என எல்லாம் விடுத்து பூரணியின் முன்பு இரு காதுகளையும் பிடித்துக்கொண்டு சிறுவனாக மன்னிப்பு வேண்டி நின்றான் யதுநந்தன்.
துருவன் திருமணத்திற்கு ஏற்பாடு பண்ணுங்க என்று சொல்லிய அன்றே யதுவிற்கு அழைத்து விடயத்தைக் கூறியவர், மறுவாரமே நேரில் பார்த்து பேச வேண்டுமென வர சொல்லியிருந்தார். யது காலம் தாழ்த்தி வந்ததாலேயே கோபமாகக் காட்டிக்கொள்கிறார்.
“போடா… உன் பேச்சு கா தான்.” அப்போதும் அவர் முறுக்கிக்கொண்டார்.
“டேய்… துருவா நீயாவது சொல்லுடா?”
“உங்களுக்கு நடுவில் நான் வரலப்பா. நீங்களாச்சு அம்மாவாச்சு” என்ற துருவ் பாசிலுடன் பேச ஆரம்பித்துவிட்டான்.
“ம்மா அண்ணா பாவம். அவர் வேலை அப்படி. சும்மா ரிசார்ட், லாட்ஜுன்னு சுத்துற தம்பியே கூப்பிட்டதும் வராது. சீன் போடும். யதுண்ணாவை கேட்கவும் வேணுமா” என்றபடி வந்த கோகிலா…
“சாப்பாடு எடுத்து வச்சிட்டேன் வாங்கண்ணா” என்று அழைத்தாள்.
“உங்கண்ணா மேல் பாசம் இருக்க வேண்டியதுதான் கோகிக்கா. அதுக்காக என்னை டேமேஜ் பண்ணக்கூடாது. நான் சும்மா சுத்திட்டு இருக்கேனா” என்று அவன் பொய் கோபத்தோடு வினவ,
“அமைதியா இருந்தா உனக்கு எக்ஸ்ட்ரா ஆம்லெட் தருவேன்” என்றாள்.
“நமக்கு சோறு தான் முக்கியம்” என்ற துருவ் பாசிலிடம் திரும்பிக்கொண்டான்.
“அம்மா கோபம் எத்தனை நேரத்துக்கு, நீங்க வாங்கண்ணா” என்று கோகிலா மீண்டும் அழைக்க…
“ம்மா ப்ளீஸ் பேசுங்க. எனக்கு பசிக்குது. நீங்க பேசாமல் நான் சாப்பிடமாட்டேன்.” யது முகம் சுருக்கிட… அதன் பின்னரே பூரணி இறங்கி வந்தார்.
“கொஞ்சமாவது பெர்ஃபாமன்ஸ் பண்ண விடுறீங்களா” என்றவர், யது கன்னம் வருடினார்.
“வாப்பா பாசில்… உனக்கெல்லாம் போன் பேசக்கூட நேரமில்லாமப் போச்சு” என்றார்.
“ம்மா அடுத்து நானா?” என்று அதிர்ந்த பாசில், “அவன் என்னை ஃபிரியா விட்டாதானம்மா. எப்போ பாரு வேலை கொடுத்திட்டே இருக்கான்” என்று யதுவையே கோர்த்துவிட்டான்.
“இதுதான் தண்ணிக்குள்ள இருக்க அந்த பாசியா” என்று கோகிலா சற்று சத்தமாகவே யதுவிடம் கேட்டிட, அனைவரும் சத்தமாக சிரித்திருந்தனர்.
தனித்தனியாக இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு பிணைப்பு. நாம் என்கிற எண்ணம். சொந்தமென்ற நினைப்பு இயல்பாய் ஓங்கியிருந்தது. இதற்கு காரணம் விநோதன் மட்டுமே. விநோதன் என்பவனால் மட்டுமே இன்று இவர்களின் உறவு சாத்தியம்.
அவர்களின் பதவி வேலையென்று எவ்வித கர்வமுமின்றி அனைவரும் பாசத்தால் கட்டுண்டு இருக்க… இவர்களில் தானும் ஒரு அங்கம் என்பதில் அத்தனை நிறைவு கொண்டாள் நிரல்யா. மலர்ந்த முகத்துடன் அவர்களை பார்த்திருந்தாள்.
“எங்கடா உன் ஜூலியட்.” உணவு மேசையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த யது கூடத்தில் அமர்ந்திருந்த துருவனிடம் வினவினான்.
“துருவ் பக்கத்திலேயே பச்ச புள்ளையாட்டம் முகத்தை வச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்காள் பாருங்க. அவள் தான் நிரல்யா.” யதுவிடம் சொல்லிக்கொண்டே பாசிலின் தட்டில் கோகிலா சாம்பாரினை போட்டுக்கொண்டே இருக்க… “போதும்… போதும்” என்று பாசில் சொல்லியதை அவள் கவனிக்கவே இல்லை.
“ஏங்க போதுங்க…” அவன் சற்று சத்தமாக சொல்லிய பிறகே அவனது தட்டை கவனித்தாள்.
“ஹோ” என்றாளே தவிர, பாசிலை கண்டுகொள்ளவில்லை.
“ஒரு டென் மினிட்ஸ் முன்னாடி வந்திருந்தீங்கன்னா செம சீன் அண்ணா… பார்த்திருக்கலாம். நீங்க மிஸ் பண்ணிட்டிங்க” என்று யதுவிடம் உச்சுக்கொட்டினாள் கோகிலா.
“ஒன்னு கவனமா சாப்பாடு வையுங்க. இல்லைன்னா அவன்கிட்ட பேசுங்க. ரெண்டும் ஒரே நேரத்தில் பண்ணாதீங்க” என்ற பாசிலின் குரலில் அவனது தட்டினை பார்த்த யது சிரித்துவிட்டான்.
“சாம்பார் அதிகமா இருக்கேன்னு, கூட நாலு இட்லி வச்சேன். தப்புங்களா?”
“தப்பே இல்லைங்க” என்ற பாசில் சாப்பிட்ட வரை போதுமென்று எழுந்துகொண்டான்.
யது சாப்பிட்டுவிட்டு வருவதற்காகக் காத்திருந்த பூரணி நிரல்யாவை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
சில நிமிட பேச்சில் யதுவும் அவளிடம் நெருக்கமாகிவிட்டான். பாசில் அவர்களது பேச்சில் இணைந்து இருந்தாலும், அவனின் கண்கள் கோகிலாவையே வட்டமிட்டன.
கோகிலா உணர்ந்த போதும் அவனிடம் தெரிந்ததைப்போல் காட்டிக்கொள்ளவில்லை.
“நீங்க டெல்லி போறதா நீயூஸில் பார்த்தனே. அப்புறம் இங்கெப்படி யதுண்ணா?”
“நான் என்னோட பெர்சனல் விஷயமா எங்கயாவது தனியா போகணுன்னா இப்படி பொய் சொல்ல வேண்டியது இருக்கு. யாருக்கும் தெரியக்கூடாதுன்னு தான் நைட் வந்தேன்” என்றான்.
நீண்ட நாட்களுக்கு பிறகான சந்திப்பு. எல்லோருமே ஒருவிதத்தில் நெகிழ்ந்திருந்தனர். அக்கணம் தன்னைப்போல் எழும் விநோதனின் நினைப்பை, துருவ், பூரணி மற்றும் கோகிலாவால் தடுக்க முடியவில்லை.
அவர்களின் முகமறிந்து எண்ணப்போக்கை உணர்ந்துகொண்ட யது, துருவனின் திருமணப் பேச்சினை எடுத்திருந்தான்.
“வரும் முதல் முகூர்த்தத்திலே வச்சிடலாம் பார்க்கிறேன் யது. கல்யாணம் ஆகாம வயசுப்பொண்ணை எத்தனை நாள் வீட்டில் வச்சிருக்கிறது. பார்க்கிறவங்க தப்பா பேசுவாங்களே! நம்மகிட்ட தப்பே இல்லைன்னாலும், ஊருக்கு பயப்பட வேண்டியிருக்கே!”
யது துருவனின் திருமணத்தின் அடுத்தகட்டத்தைப் பற்றி பேசிட பூரணி ஆதங்கமாகிக் கூறினார்.
“இவனுக்கு முடிச்சிட்டா” என்று துருவனை காட்டியவர், “கோகிலாவுக்கு பார்க்கணும். முதலில் அவளுக்குத்தான் பண்ணனும். அவதான் பிடி கொடுக்க மாட்டேங்கிறாளே! பார்ப்போம்” என்று பெருமூச்செறிந்தார்.
“என் விஷயத்தை அப்புறம் பார்ப்போம். முதலில் இதுங்க கல்யாணத்தை முடித்து வைங்க. ஃபிரியா வீட்டுக்குள்ள நடமாட முடியல” என்று கலகலத்தவளாக தன்னுடைய மனதை மறைத்தாள்.
“அச்சோ, கோகிக்கா! அதை விட மாட்டியா நீ!” துருவன் கண்களை உருட்டிட…
“உன்னை நெளிய வைக்க ஒரு விஷயம் மாட்டியிருக்கு. அவ்வளவு லேசில் விட்டுடுவேனா என்ன?” எனக் கேட்டு அவனை பீதிக்குள்ளாக்கினாள்.
“அப்போ இன்னும் கலாய்ப்பீங்க சொல்லுங்க.”
“அஃப்கோர்ஸ் டா தம்பி” என்ற கோகிலா, “எங்களை கண்டுக்காம நீங்க பேச ஆரம்பிச்சதை முடியுங்க” என்றாள் தங்களையே மற்றவர்கள் பார்த்திருக்க.
“ஆரோனிடம் மட்டும் சொல்லிடாத” என்று துருவன் தலைக்குமேல் கும்பிட…
“இட்ஸ் டூ லேட்… அல்ரெடி மாளுவிடம் சொல்லிட்டேன்” என்றாள்.
“எந்த கேப்பில் சொன்ன நீ, இனி அவன் வேற ஓட்டுவான்” என்று துருவ் சிணுங்கிட அங்கே சிரிப்பிற்கு பஞ்சமின்றி நேரம் கழிந்தது.
“வர முகூர்த்தம் அப்படின்னா இன்னும் இருபது நாள் தான் இருக்கா?” எனக்கேட்டு யது எதையோ மனதிற்குள் கணக்கிட்டு பார்த்தான்.
“மேலும் ஒரு பத்து பதினைந்து நாட்கள் போகட்டுமே! அடுத்த வரும் முகூர்த்தம் செட் ஆகாதா?” எனக் கேட்டிருந்தான்.
யது ஏன் இப்படி கேட்கிறான் என்று பாசிலால் யூகிக்க முடிந்தது.
“அதான் எல்லாம் முடியப்போகுதே! இப்போவாவது உண்மையை சொல்லலாமே?” காதில் கிசுகிசுத்த பாசிலை பார்த்து யது சிரித்தானே தவிர, எதுவும் சொல்லவில்லை.
“இந்த முகூர்த்தம் விட்டா ஒரு மாசத்திற்கு அப்புறம் தான் நல்ல நாள் இருக்கு” என்றார் பூரணி.
“அப்போ அதிலே வச்சிக்கலாம்மா.” உடனடியாக துருவ் ஆமோதித்து சம்மதம் சொல்லியிருந்தான்.
“என்னடா நீதான் சீக்கிரம் வைக்கணும் சொன்ன, இப்போ இப்படி சொல்ற?”
“யதுண்ணா காரணமில்லாம சொல்லமாட்டாங்கம்மா. அவரால் வர முடியாத சூழலா இருக்கலாம். அவரும் என் கல்யாணத்துக்கு வரணும் தானே! அப்போதான என் கல்யாணத்துக்கு சி.எம் வராருன்னு பெருமை பேச முடியும்” என்று சிரித்துக்கொண்டே யதுவை பார்த்து கண் சிமிட்டினான்.
“என்னை எதுவும் டேமேஜ் செய்யலையே?” யது ஒரு விரல் காண்பித்து கேட்க, “ச்ச… ச்ச…” என்று எல்லா பக்கமும் தலையை உருட்டினான் துருவன்.
“போதும் உங்க விளையாட்டுப் பேச்சு” என்ற பூரணி, “உனக்கு எதுவும் வேலையா யது, இப்போ வைத்தால் உன்னால வரமுடியாதா?” எனக் கேட்டார்.
“நான் வருவது அடுத்ததும்மா… இப்போ எனக்கு சொல்லத் தெரியல, எனக்காக கொஞ்சம் தள்ளி வையுங்களேன். இதை போனிலே சொல்லியிருப்பேன். நீங்க தப்பா எடுத்துக்கக்கூடாதுன்னு தான் நேரில் வந்து சொல்றேன்” என்றான். அதற்கு மேல் வெளிப்படையாக அவனால் சொல்லமுடியாதே.
“சரிப்பா… காரணம் என்னவா வேணுன்னாலும் இருக்கட்டும். நாள் கூட இருந்தால், இன்னும் சிறப்பா செய்யலாமே” என்றார் பூரணி.
யதுவிற்கு தன்னையும் அவர்களது மகனாக ஏற்று தன் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பதை நினைத்து மகிழ்வாய் இருந்தது.
“உனக்கு என்மேல வருத்தமில்லையே நிரல்யா. என்னடா இப்படி தள்ளி வச்சிட்டானேன்னு.”
“அச்சோ… அப்படியெல்லாம் இல்லை. எனக்கு குடும்பமா உங்களுக்குள்ள ஒருத்தியா வாழப்போறேங்கிறதே சந்தோஷமா இருக்கு. எனக்குன்னு ஒரு குடும்பம் எத்தனை நாள் கனவு தெரியுமா? இப்போ அது நிஜத்தில் நடக்கப்போவுது. அதுவே போதும்” என்று ஆனந்தத்தில் கண்கள் கலங்கிய நிரல்யாவை பூரணியும், கோகிலாவும் இருபுறமும் தோள் பிடித்து அணைத்துகொண்டனர்.
துருவன் நிரல்யாவின் கண்ணீரை துடைத்துவிட்டான்.
யது தன்னுடைய அரவணைப்பினை அவளின் கையில் அழுத்தமாகக் காட்டினான்.
இப்படி உறவுகள் தாங்கி நிற்கத்தான் பல இடர்களை கடந்து வந்தாளோ!
“ரொம்ப லேட்டாகிப்போச்சு… போய் தூங்குங்க” என்ற பூரணி அனைவரையும் தத்தம் அறைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு தானும் சென்றார் உறக்கத்திற்கு.
“ஏன் யது சொல்லல… இப்போவே சொல்லியிருக்கலாமே! கொஞ்ச நேரத்துக்கு முன்பு கூட விநோ உடனில்லையேன்னு எப்படி பீல் பண்ணாங்க. மூன்று வருஷமாகியும் அதிலிருந்து மீண்டுவர முடியாம தவிக்கிறாங்கடா. விநோ உயிரோட இருக்கான்னு, சொல்லியிருக்கனும் யது” என்று ஆற்றமாட்டாமல் சொல்லிக்கொண்டிருந்தான் பாசில்.
“என்ன சொல்லியிருக்கனும்?”
அந்நேரம் துருவனை எதிர்பார்க்கவில்லை என்பது இருவரின் அதிர்விலும் தெரிந்தது.
பாசில் தடுமாறிட, “பால்டிக்ஸ் சீக்ரட்” என்று யது சமாளித்தான்.
“ஹோ…” என்ற துருவ் யதுவை சில நொடிகள் ஆழ்ந்துப் பார்த்தான்.
“என்னடா?”
“ம்ப்ச்” என்று தோள்களை உயர்த்தி இறங்கியவன் எதுவும் பேசாது, எதற்காக வந்தான் என்பதைக்கூட சொல்லாது சென்றிருந்தான்.
“விநோவுக்கு தெரிந்தது உண்டில்லைன்னு பண்ணிடுவான். டார்கெட் பிக்ஸ் பண்ணியிருந்தாலும், மிஸ்ஸாக சான்செஸ் இருக்கு. அதனால் விநோவைப்பற்றி சொல்லாம இருப்பதே நல்லது. முடிக்க முடியாமப்போயிட்டா விநோ மேலும் சில காலம் அங்க இருக்கிற மாதிரி அமைஞ்சிட்டா, உண்மை தெரிந்த இவங்களை சமாளிப்பது கஷ்டமாகிடும்” என்று தான் சொல்லாததற்கான காரணத்தை விளக்கிய யது,
“இன்னும் ஒரு மாதம் தானே விநோ போன வேலையை முடிச்சிட்டு வரட்டும். அவனே நேரில் வந்து சமாளிக்கட்டும்” என்று படுத்துவிட்டான்.
பாசிலும் தனக்கென கொடுத்த அறையை நோக்கிச் செல்ல…
“ஒரு நிமிஷம்” என்று அவனை தடுத்திருந்தாள் கோகிலா.
அவளது கையில் பால் இருந்தது.
“இதை குடிங்க” என்று அவள் அவன்முன் நீட்டிட,
“எதுக்கு?” எனக் கேட்டிருந்தான்.
“நீங்க சரியா சாப்பிடலன்னு தெரியும். சும்மா விளையாட்டுக்கு பண்ணா, சாப்பிடாம எழுந்துப்பாங்களா?” எனக் கேட்டவள், வலுக்கட்டாயமாக அவனின் கையை பிடித்து குவளையை திணித்தாள்.
அவளை பார்வையால் பருகியபடி பாலினை பருகியிருந்தான்.
“செம ஹாட்” என்றவன், அவளின் முறைப்பில், “நான் பாலினை சொன்னேன்” என்றான்.
“பார்த்து பாசி… வழுக்கிடப்போவுது. அப்புறம் ஒழுங்கா ஊர் போய் சேர முடியாது” என்றவள், வெடுக்கென அவனிடமிருந்து குவளையை பறித்தவளாகச் சென்றிருந்தாள்.
“உன் நிலைமை கஷ்டம் தாண்டா பாசில்” என்று சொல்லிக்கொண்டவனுக்கு கோகிலாவை பிடித்திருந்தது. அது அவனின் முகத்தில் தெரிந்தது.
அடுத்தநாள் இரவே வந்தது போல் யது கிளம்பியிருக்க… நான்கு நாட்கள் சென்றிருந்தது.
திருமணத்திற்கு ஒரு மாதமே இருக்க… ஒவ்வொன்றாக செய்யத் தொடங்கியிருந்தார் பூரணி.
வீட்டிற்கு ஆரோன் மற்றும் மாளவிகா வந்திருக்க,
மாளவிகா மற்ற இரு பெண்களுடனும் பேச்சில் ஆழ்ந்துவிட்டாள்.
பூரணி தான் ஆரோனுடன் திருமணத்திற்கு எந்த மண்டபம், சமையல் யாரென்று பேசிக்கொண்டிருந்தார்.
இரண்டு மண்டபங்களை மடிகணினியில் பூரணியிடம் காண்பித்த ஆரோன், “துருவனையே செலக்ட் பண்ண சொல்லுவோம்” என்று தனியாக அமர்ந்திருந்த துருவனிடம் மடிகணினியை தூக்கிக்கொண்டு சென்று காண்பித்தான்.
“ப்ளீஸ் ஆரு… எல்லாம் நீயே பைனலைஸ் பண்ணிடு. உனக்கு ஓகேன்னா, எனக்கு ஓகே தான்” என்றவன் எழுந்து சென்றுவிட்டான்.
“நீ வாடா… எல்லாம் நாமளே பார்த்துப்போம்” என்று பூரணி சொல்லிட,
“நாலு நாளா துருவ் இப்படித்தான் இருக்கான். எதையோ மண்டையில போட்டு உருட்டிட்டு இருக்கான்னு நினைக்கிறேன்” என்றாள் கோகிலா.
நிரல்யாவும் கடந்த தினங்களாக அவனை கவனித்துக் கொண்டுதானே இருக்கிறாள். எதையோ வெளியில் சொல்ல முடியாது தனக்குள் போட்டு மருகுகின்றான் என்பது வரை அவளுக்குப் புரிந்தது.
கோகிலா சமையலறை செல்ல மாளுவும் உடன். நிரல்யா துருவனைத்தேடி அவனது அறைக்குச் சென்றாள்.
முதல் முறையாக துருவனின் அறைக்கு செல்கிறாள். சிறு படபடப்பு இருக்கத்தான் செய்தது. பிரதானம் துருவன் ஏன் இப்படி இருக்கிறான் என்பதை கேட்டு அதனை சரிசெய்திட வேண்டுமென்கிற எண்ணம்.
கதவினை தட்டுவதற்கு கை உயர்த்திட தாழிடப்படாத கதவு திறந்து கொண்டது.
விநோவின் ஆளுயர புகைப்படத்தின் முன் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு நின்றிருந்தான் துருவன்.
மெல்ல அவனருகில் வந்து நின்றாள் நிரல்யா.
அவளின் அரவம் உணர்ந்தபோதும் அவனது நிலையில் மாற்றமில்லை.
விநோவின் உருவத்தின் மீது ஆழ்ந்து பதித்திருந்தான். தன் விழிகளையும் மனதையும்.
“விநோ மாமா உங்களைவிட செம ஹேண்(ட்)சம்.”
இத்தனை நாட்கள் அங்கு இருந்தாலும் இன்று தான் நேருக்கு நேர் விநோவின் முழு நிழலுறுவத்தை அத்தனை அருகில் காண்கிறாள்.
“சைட் அடிக்கிறியா?”
அவளை பார்த்திடாது வினவினான்.
“போலீஸ் ட்ரெஸ்ஸில் சும்மா மாஸ்ஸா இருக்காங்க” என்றாள்.
“போதும் போதும்” என்றவன் அங்கிருந்த மெத்திருக்கையில் சென்று அமர்ந்தான்.
“சாருக்கு பொறாமை எட்டிபார்க்குது போல.” வெகு நாட்களுக்குப் பின்னர் அவனிடம் அவள் இயல்பாய். சீண்டினாள்.
“விநோண்ணாவிடம் அந்த தாட்டெல்லாம் வராது” என்றவனின் பார்வை மீண்டும் அவன் படத்தில் பதிந்து மீண்டது.
‘விநோண்ணா… என் குரல் உனக்கு கேட்குதா?’ மனதோடு கேட்டுக்கொண்டவனுக்கு, இதயம் அதிர்ந்து துடித்தது.
நிரல்யா தன்னையே பார்த்திருப்பதை உணர்ந்தவன்,
“என்ன மேடம் என் ரூமுக்கெல்லாம் வந்திருக்கீங்க?” அவள் வந்த காரணம் யூகித்தே வேறு பேச்சிற்கு தொடக்கமிட்டான்.
“இனி நான் இருக்கப்போற ரூம் தானே! அதான் எப்படியிருக்குன்னு பார்த்துட்டு போலான்னு வந்தேன்” என்றவள் அவனுக்கு அருகில் சிறு இடைவெளிவிட்டு அமர்ந்தாள்.
“இது ரொம்ப தூரம் தான். தொடவே முடியாது.” அவளை கேலி செய்தான்.
“இருந்தாலும் சேஃப்டி முக்கியம் ல.” அவள் சொல்லியதில் பக்கென சிரித்து விட்டான்.
“அச்சோ சத்தமா சிரிக்காதீங்க யாரவது வரப்போறாங்க” என்றவள், “டேய் வாயை மூடுடா!” என்று அதட்டினாள்.
“எதே… டாவா!”
“நான் சொல்லக்கூடாதா?”
“சொல்லலாமே… தப்பேயில்லை…”
“அது” என்றவள், “உங்களுக்கு நம்ம கல்யாணத்தில் விருப்பமில்லையா?” எனக் கேட்டிருந்தாள். அவளின் குரலில் இருந்த வருத்தம் அவனை வெகுவாகத் தாக்கியது.
அதற்கு காரணம் அவன்தானே! அவன் தனித்து ஏதோ யோசனையில் உழன்றது தானே!
“அப்படியில்லடா” என்று அவள் பக்கமாக திரும்பி அமர்ந்தவன், “என்னவோ விநோண்ணா நினைவாவே இருக்கு. எதிலுமே கான்சென்ட்ரேட் பண்ண முடியல” என்று கூறினான்.
“நிஜமா…”
“ஐ ஸ்வேர்” என்றவன் அவளின் தலை மீதே கை வைத்து அழுத்தியிருந்தான்.
“ம்ம்ம்… எனக்கு எப்போ ஓகே சொல்லுவீங்க சீனியர்” என்று கேட்டிருந்தாள்.
“ஓகே சொல்லாமதான் கல்யாணம் வரை வந்திருக்கோமா?” என்று பதிலுக்கு கேட்டான். அவளிடம் பேசிய சில நிமிடங்களிலே உள்ளுக்குள் அடிக்கும் பெரும் காற்றை அமைதி படித்தியிருந்தான். அதனால் அவளிடம் அவனால் பதிலுக்கு பதில் பேச முடிந்தது.
“நான் ஐ லவ் யூ சொன்னா, நீங்களும் அப்படித்தான் பதிலுக்கு சொல்லணும். அதைவிட்டு கட்டிபுடிச்சேன், கையை புடிச்சு சம்மதம் சொன்னேன்னு சாம்பிராணி போடாதீங்க. ஒழுங்கா சொல்லுங்க” என்று மல்லுக்கு நின்றாள்.
“என்ன சொல்லணும்?” அவளின் முன் நெற்றியில் சிலுப்பிக் கொண்டிருந்த முடியை ஒதுக்கியவனாக ஹஸ்கி குரலில் அவன் கேட்டிட… பட்டும் படாமல் தீண்டிய அவனின் விரல் ஸ்பரிசத்தில் கண்மூடி கிறங்கி மோன நிலைக்கு ஆட்பட்டாள்.
“சொல்லுங்க…” அவளுக்கே அவளின் குரல் கேட்கவில்லை.
இதழ் குவித்து மூடியிருந்த அவளின் இமைகளில் ஊதினான்.
“என்ன சொல்லணும்?”
“ஐ லவ் யூ’வாம்” என்று ஒரு சேர கேட்ட குரல்களில் இருவரும் பிரிந்திருந்தனர்.