உயிர் உறை 32
தேடல் 8
“ஐ லவ் யூ’வாம்!”
ஒரு சேர ஒலித்த கோகிலா மற்றும் மாளுவின் குரலில் நிரல்யாவிடமிருந்து தள்ளி அமர்ந்த துருவன் அவர்களை ஏறிட முடியாது தலை கவிழ்ந்து அசடு வழிந்தான்.
“டேய் தம்பி…” அவனின் முகத்தை உயர்த்திய கோகிலா…
“நல்லா இருக்குடா” என்று சொல்ல,
“போங்கக்கா” என்று சிணுங்கினான்.
“பாருடா தி கிரேட் ரிசார்ட் டிரைக்டருக்கு வெட்கமெல்லாம் வருது” என்று மாளு கூறிட…
“நீயுமாம்மா?” என்றான் துருவன்.
அவர்கள் இருவரும் துருவனை கேலி செய்து கொண்டிருக்க… மெல்ல நழுவ முயன்ற நிரல்யாவை அறை வாயிலில் வைத்து மறித்து பிடித்திருந்தான் ஆரோன்.
“கல்யாணம் வரை கொஞ்சம் பொறுமையா இருங்கடா… உங்க லவ் தொல்லை தாங்கல” என்றபடி நிரல்யாவை உள்ளே இழுத்து வந்தான்.
“உங்களுக்கு லவ் பண்ண தெரியல சொல்லுங்க” என்ற மாளுவை காதலாகப் பார்த்த ஆரோன்…
“ஆஹான்…” என்று கிட்ட நெருங்கினான்.
“வேண்டாம். எல்லாரும் இருக்காங்க” என்ற மாளு பின்னால் செல்ல…
“என்னவோ சொன்னியே! அவங்களும் பார்த்துட்டு சொல்லட்டும். உண்மையா இல்லையான்னு” என்றவன் மேலும் முன்னேற,
துருவன் கை தட்டி அட்டகாசமாக சிரித்தான்.
“கமான் ஆருண்ணா” என்று நிரல்யாவும் கொண்டாட்டத்தில் சேர்த்துகொள்ள,
“அடேய் ஒரு பச்சபுள்ளையை கூட வச்சிக்கிட்டு என்னடா பண்றீங்க” என்று கோகிலா அளறியதில், மாளு ஆரோனின் நெஞ்சிலேயே கை வைத்து முகம் புதைத்துக் கொண்டாள்.
ஐவரும் சிரித்த முகமாக அமர்ந்திருக்க,
“அப்படியே இருங்க” என்று உள் வந்த பூரணி,
“இந்த வீடு இப்படி கலகலன்னு இருந்து எத்தனை நாளாச்சு. நீங்கெல்லாம் இப்படியே இருக்கணும்” என்று துளிர்த்த நீரை சேலை தலைப்பில் ஒற்றியபடி ஐவருக்கும் ஒன்றாக திருஷ்டி சுற்றினார்.
“என் கண்ணே பட்டுடும் போல” என்றவரை ஐவரும் ஒன்றாகக் கட்டிக்கொண்டனர்.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் அவ்வீடு சந்தோஷ சிரிப்பில் மின்னியது.
அதற்கடுத்த நாட்களும் அங்கே சிரிப்பிற்கும் கொண்டாட்டத்திற்கும் பஞ்சமில்லாமல் கடந்தன.
துருவன் நிரல்யாவின் திருமண வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.
ஒவ்வொன்றையும் பூரணியுடன் நின்று ஆரோன் சிறப்பாகவே செய்தான்.
உடனில்லை என்றாலும் யது முடிந்த நேரம் கால் செய்து நடக்கும் ஏற்பாட்டுகளை கேட்டு அறிந்து கொண்டான்.
அன்று துருவனுக்கு கிருஷ்ணாவிடமிருந்து அழைப்பு வந்தது.
ஆரோனைக் கூட்டிக்கொண்டு கிருஷ்ணாவின் இருப்பிடம் சென்றான் துருவன்.
அவன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் துருவனின் வீட்டிற்கு நடுத்தர வயது தம்பதியினர் வந்தனர்.
பூரணி அவர்களைக் கண்டு, உள்ளே கோகிலாவின் அறையை எட்டி பார்த்துவிட்டு, அங்கே வரவேற்பறையில் அமர்ந்திருந்த நிரல்யாவை உள்ளே செல்ல சொல்லிவிட்டு அவ்விருவரையும் அழைத்து அமர வைத்தார்.
“எப்படி இருக்கக்கா?” என்று கேட்ட வந்திருந்த பெண்ணுக்கு தலையை மட்டும் அசைத்த பூரணி அடுக்களைக்குள் சென்று மோர் கலந்து எடுத்து வந்தார்.
இருவரிடமும் நீட்டிட, பெண் மட்டும் எடுத்துக்கொண்டார். ஆண் தன்னுடைய மீசையை நீவிவிட்டபடி கால் மேல் காலினை போட்டபடி கையாலே வேண்டாமென மறுத்தார்.
அவர் எடுத்துக்கொள்ளவில்லை என்று பூரணி வருத்தப்படவெல்லாம் இல்லை.
“மகனுக்கு கல்யாணம் வச்சிருக்க போல?” ஆண் கேட்டிட, அதற்கும் தலையை மட்டும் அசைத்தாரே தவிர்த்து பூரணி வாய் திறக்கவில்லை.
“வீட்டில் பொண்ணை வச்சிக்கிட்டு பையனுக்கு கல்யாணம் பன்றது எந்தவூரு முறை?” அவரின் வெண்கல குரல் வீட்டையே அடைத்தது.
“உன் பொண்ணா இருந்திருந்தா இந்த கூறு இருந்திருக்கும்.”
“உங்களுக்கு கூறு இருக்கா?” கோகிலாவின் குரலில் வீடே அதிர்ந்தது. காளியாய் நின்றிருந்தாள். விழிகள் சிவந்து ஆக்ரோஷமாக.
நிரல்யாவை பூரணி உள்ளே போகச்சொல்லியதும் கோகிலாவின் அறைக்குத்தான் சென்றாள்.
“என்னங்க மேடம் உங்க ஆளுக்கூட இல்லாம என் ரூமுக்கு வந்திருக்கீங்க?” நிரல்யாவிடம் கேட்ட கோகிலா துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.
“அவங்க வெளிய போயிட்டாங்க அண்ணி. வீட்டுக்கு ரெண்டு பேர் வந்திருக்காங்க. அவங்க வந்ததும் அத்தை என்னை உள்ளப்போக சொல்லிட்டாங்க” என்று நிரல்யா பதில் வழங்க…
யாரென்ற யோசனையில் வெளியில் வந்து பார்த்த கோகிலாவிற்கு கண்முன்னே ஏதேதோ நினைவில் எழ, அந்நேரம் அவர் பேசிய வார்த்தை அதீத கோபத்தைக் கொடுக்க கத்தியிருந்தாள்.
“அண்ணி என்னாச்சு?” அவளின் பின்னாலே வந்த நிரல்யா கோகிலாவின் கோபமுகம் கண்டு பயந்தவளாக அவளின் கையினை பிடித்தாள்.
“பொம்பள பிள்ளைக்கு என்னடி இவ்வளவு சத்தம்?” கணவனின் சீற்ற பார்வையில் அப்பெண் கோகிலாவிடம் எகிறினார்.
“இதுங்கெல்லாம் திருந்தாத ஜென்மங்கள். இங்கிருந்து போக சொல்லுங்கம்மா” என்று பூரணியிடம் கத்திய கோகிலா,
“கண்டவங்களையெல்லாம் வீட்டுக்குள்ள விட்டு, வீட்டை அசிங்கப்படுத்துறீங்கம்மா” என்றபடி திரும்பி உள் சென்ற கோகிலாவை வந்திருந்த பெண்மணியின் வார்த்தை தடை செய்தது.
“யாருக்கு யாருடி அம்மா? என்னவோ பத்து மாசம் சுமந்து பெத்தவலாட்டம் அவங்களை அம்மான்னு சொல்ற?”
“பத்து மாசம் சுமந்து பெத்திட்டா மட்டும் அம்மாவாகிட முடியாது. அது ஒண்ணு மட்டுமே அம்மாங்கிறதுக்கு தகுதியும் கிடையாது” என்ற கோகிலா இண்டர்காம் எடுத்து வீட்டு கேட்டில் காவலுக்கு இருக்கும் காவலாளியை உள்ளழைத்தாள்.
“உங்களுக்கு எத்தனை முறை சொல்றதுண்ணா. கண்டவங்களையும் உள்ளே விடக்கூடாதுன்னு” என்றவளின் கடிதலில் அவர் பூரணியை பார்க்க…
“அம்மாவே சொன்னாலும் இனி விடக்கூடாது” என்றாள் கட்டளையாக.
“சரிம்மா” என்றவர் வெளியேறிட…
“என்னடி திமிரா? நா அடக்கமில்லாம ரொம்ப நீளுது” என்ற ஆணின் பேச்சினை காதிலே வங்காததைப்போல் உள்ளே நுழைந்து கதவினை அடித்து சாற்றினாள்.
கோகிலாவை பூரணி அடக்கவுமில்லை, ஏன் இப்படி பேசுகிறாய் என்று கேட்கவுமில்லை. இப்படி பேசுவதன் மூலம் அவளுக்கு ஆறுதல் கிடைக்குமென்றால் பேசிவிட்டு போகட்டுமென்று அமைதியாகவே நின்றிருந்தார்.
“என்ன அவளை பேசவிட்டு வேடிக்கை பாக்குறியா நீ? ஒழுங்கா அவளை என்கூட அனுப்பி வச்சிடு. இல்லை நடப்பதே வேற.” அவர் விரல் நீட்டி பூரணியை மிரட்டிக் கொண்டிருக்க,
துருவன் உள்ளே நுழைந்தான்.
அவனின் கூரியப்பார்வை, நீண்ட எட்டுக்களிலே அம்மனிதர் மிரண்டவராக தன்னுடைய விரலினை மடக்கியவராக தனது மனைவியிடம்,
“வாடி போகலாம்” என்று நடந்தார்.
அவர்கள் இருவரும் தன்னை கடக்கும் போது…
“நாய் புகுந்துருச்சு போலம்மா… வீட்டுக்கு மாப் பண்ண சொல்லுங்க” என்றவன் நிற்காது கோகிலாவின் அறை நோக்கிச் சென்றான்.
துருவனின் பேச்சில் ஆத்திரம் வரப்பெற்ற அம்மனிதர் திரும்பி கைகளை முறுக்கிட,
“அவன்கிட்ட வம்பு வேண்டாங்க” என்று இழுத்துக்கொண்டு வெளியேறினார் அப்பெண்மணி.
“எத்தனை நாளுக்கு இந்த கூத்தெல்லான்னு நானும் பார்க்கிறேன்” என்று செல்வதற்கு முன்பு பூரணியை பார்த்து சொல்லிவிட்டே வெளியேறியிருந்தார் அவர்.
துருவன் உள்ளே நுழைந்ததும்…
“துருவ்…” என்று அவனைக் கட்டிக்கொண்டு கதறிவிட்டாள் கோகிலா.
அழுகையென்றால் அப்படியொரு அழுகை.
“முடியல துருவ்” என்றவளின் நினைவுகள் அன்றைய நாளுக்கு சென்றிருக்க… நினைத்து நினைத்து வெடித்து கதறினாள்.
கோகிலாவின் அழுகை சத்தத்தில் உள்ளே சென்ற பூரணி அப்படியே அறையின் கதவில் சாய்ந்தவராக நின்றுகொள்ள, நிரல்யா ஒன்றும் புரியாது வருத்தத்தோடு பார்த்திருந்தாள்.
“கோகிக்கா அவங்க போயிட்டாங்க. நீயேன் உன்னை வருத்திக்கிற” என்றவன் அவளை மெத்தையில் அமர வைத்து… “நானிருக்கேன் க்கா. நான் இருக்கும் வரை அவங்களால் ஒண்ணும் செய்ய முடியாது” என்று அவள் பருக நீரினை எடுத்துக்கொடுத்தான்.
வந்திருந்தவர்களின் முன் திடமாக பேசிவிட்டாலும், அவளுக்குள் இன்னமும் நடுக்கம் தென்பட்டது.
அவளின் நடுக்கம் உணர்ந்த துருவன் தானே அவளுக்கு நீரினை புகட்டினான்.
“கோகிக்கா இதுதான் உன் வீடு. அங்க நிக்கிறாங்க பாரு…” என்று பூரணியை கைக்காட்டியவன், “அவங்க தான் உனக்கு அம்மா. நம்ம அம்மா. புரியுதா?” என்று அழுத்தம் கொடுத்து வினவியவன்,
“இன்னைக்கு நாள் நினைவிருக்கா?” என்று கேட்டு அவளை திசை திருப்பினான்.
அப்போதுதான் நினைவு வந்தவளாக,
“துருவ்வ்வ்வ்வ்…” என்று கண்களை அகல விரித்தவள்,
“இன்னைக்கு போய் எரிச்சல்பட வச்சிட்டாங்களே” என்றவள் அழுத முகத்தை துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
“குட். கோகிக்கான்னா எப்பவும் தைரியமா இருக்கணும். பதினெட்டு வயசிலே தனக்காக போராடிய அந்த கோகிலாவுக்கு பயப்படவே தெரியாது. முக்கியமா அழத் தெரியாது” என்றவன், “நாங்க இருக்கோம்” என்றான்.
அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள், வந்தவர்கள் யாரென்று புரியாதபோதும், கோகிலாவின் முகத்தில் தெளிவை கண்ட பின்பு தான் நிரல்யாவுக்கு நிம்மதியாக இருந்தது.
கோகிலாவின் அருகில் வந்த பூரணி எதுவும் பேசிடாது, அவளின் கன்னங்களை பற்றி நெற்றியில் அழுத்தமாக இதழ் ஒற்றி விலகியவர், கண்களை துடைத்துக்கொண்டு வெளியேறினார்.
மேலும் கொஞ்ச நேரம் கோகிலாவுடன் இருந்து… அவளை உறங்க வைத்த பின்னர் தான் துருவன் அறையைவிட்டு வந்தான்.
வரவேற்பறையில் நிரல்யா தனித்து அமர்ந்திருக்க… அவளின் அருகில் அமர்ந்தவன்,
“என்னடா சேட்ஃ (sad) ஆகிட்டியா?” என்று கேட்டான்.
“ம்ப்ச்” என்றவள் அவனின் புஜம் பற்றி தோளில் சாய்ந்தவள்,
“எல்லாருக்கும் ஏதோவொரு சோகம் இருக்கத்தான் செய்யுதுல. கஷ்டமில்லாத வாழ்க்கையே இல்லை. ஒவ்வொருத்தருக்கு பின்னாலும் இன்னொரு வாழ்க்கை இருக்குல” என்றவளின் வார்த்தையில் அவள் அனுபவித்த வந்த பாதையின் கரடுமுரடு தான் அவனுக்குத் தெரிந்தது.
“முடிஞ்சது எல்லாம் இருக்கட்டும். இனி உனக்கு எல்லாம் சந்தோஷம் தான். பழைய வாழ்க்கையை நினைத்து பார்க்கவே கூடாது. அப்படியே உனக்கு எதையாவது நினைத்து பார்க்கணும் தோணுச்சுன்னா நம்மளோட கல்யாண வாழ்க்கை எப்படியிருக்கணும் கனவு காணு. உன்னோட கனவெல்லாம் நான் நிறைவேற்றி வைக்கிறேன்” என்றவன், “என்னோட நிரல் எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும்” என்றான்.
அவனின் காதலில் தினம் தினம் மகிழ்ந்து கொண்டிருப்பவளுக்கு அவனின் வார்த்தைகள் அதீத மகிழ்வை கொடுத்தன.
“லவ் யூ சீனியர்” என்று அவனை அணைத்துக் கொண்டவள், “எனக்கு எப்போ ஓகே சொல்லுவீங்க” என்று வழக்கம்போல் கேட்டிருந்தாள்.
“நீ என்னை இம்ப்ரெஸ் பண்ணு சொல்றேன்” என்றான்.
“அப்போ இதுவரை உங்களை நான் இம்ப்ரெஸ் பண்ணவே இல்லையா?” என்று கேட்டவள் இடுப்பில் கைகுற்றி புசுபுசுவென மூச்சினை வெளியிட…
“நம்ம கல்யாணம் வரை உனக்கு டைம். அதுக்குள்ள என்னை சொல்ல வச்சிடு. இலைன்னா எப்பவும் சொல்லமாட்டேன்” என்றவன் பூரணி வருவதை கண்டு நிரல்யாவிடமிருந்து தள்ளி அமர்ந்தான்.
தொலைக்காட்சியை ஆன் செய்துவிட்டு துருவனின் மறுபக்கம் வந்தமர்ந்த பூரணி,
“கோகிலா இப்போ ஒகேதானே துருவ்?” என்று கேட்டார்.
“தூங்குறாங்கம்மா” என்றவன், பூரணி செய்தி சேனல்கள் வைப்பதை பார்த்து, லாவகமாக அவரிடமிருந்து ரிமோட்டினை வாங்கியவனாக பாட்டு சேனல் வைத்திருந்தான்.
“நீ இதெல்லாம் பார்க்கமாட்டேன்னு நியூஸ் வச்சேன்” என்றவர் ரிமோட்டினை பறித்து சீரியல் வைத்துவிட்டார்.
“காய்ந்த ரோஜாவே சீரியல் போட டைம் ஆகிருச்சா நிரல்யா?” என்று கேட்டவர், அவளுடன் அக்கதையினை விவாதிக்க ஆரம்பித்துவிட,
“வுமன் இஸ் அ வுமன்” என்று சிரித்துக்கொண்டான் துருவன்.
அப்போதுதான் நேரத்தை அறிந்தவன்,
“நாம் ஒரு இடத்துக்கு போகணும்மா. ஒன் ஹவரில் கிளம்பணும்” என்றான்.
“இந்நேரத்திலாடா, எங்க?”
“போனதும் தெரியப்போகுது” என்றவன், கோகிலாவை எழுப்பி ஆயத்தமாகக் கூறினான்.
உண்மை அறிந்த கோகிலா மாலை நடந்த நிகழ்வையே மறந்தவளாக உற்சாகமாகக் கிளம்பியிருந்தாள்.
“அம்மாவிடம் சொல்லிட்டியா துருவ்?”
“நேரிலே தெரிஞ்சிக்கட்டும் கோகிக்கா” என்றவன், இரவு உணவை முடித்துக்கொண்டு மூன்று பெண்களையும் அழைத்துக்கொண்டு தூத்துக்குடி நோக்கி தன்னுடைய பயணத்தை தொடர்ந்தான்.
சூரியன் உதிக்கும் நேரம் விநோவின் முன் பூரணியுடன் நின்றிருந்தான் துருவன்.
இரவு பயணம்.
சொல்லாமல் கொள்ளாமல் திடீரென கிளப்பிக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டான்.
உறக்கம் வரும் வரையிலும் எங்கே போகிறோம் என்று எத்தனை முறையோ, பல வழியில் கேட்டும் துருவன் எங்கு போகிறோம் என்பதை சொல்லவில்லை. அவனைக் கேட்டால் கோகிலா தான் பதில் சொன்னாள்.
“போனால் தெரியப்போகுது. அலட்டிக்காம தூங்குங்கம்மா. போனதும் எழுப்பிவிடுறேன்.”
“அப்போ உனக்குத் தெரியுமா, எங்க போறோம்?” அடுத்து பூரணி கோகிலாவை பிடித்துக் கொண்டார்.
“நான் தூங்கிட்டேன்” என்று அவருக்கு பதில் சொல்ல வேண்டுமேயென கண் மூடியவள் உண்மையில் தூங்கியும் போனாள்.
நேரம் செல்ல பூரணியும் மகனிடம் கேட்டு பார்த்து சலித்தவராக, உறங்கிவிட்டார்.
பூரணி கேட்டே சொல்லாதவன் தான் கேட்டா சொல்லப்போகிறான் என்று நிரல்யா மட்டும் உறங்காது அவனக்கு துணையாக விழித்திருந்தாள்.
“உனக்கு தூக்கம் வந்தா தூங்கு நிரல்யா. போக விடிஞ்சிடும்” என்றான்.
“இருக்கட்டும் சீனியர். தூக்கம் வந்தா தூங்கிக்கிறேன்” என்றவள் அவனையே இமை சிமிட்டாது பார்த்திருந்தாள்.
பின்னால் திரும்பி தாய் மற்றும் சகோதரியை பார்த்தவன், அவர்களின் உறக்கத்தை உறுதி செய்துகொண்டு மென் குரலில் பேசினான்.
“பார்வையெல்லாம் புதுசா பலமா இருக்கே!”
“ஆஹான்… பார்க்கக்கூடாதா?”
“நான் அப்படி சொல்லலையே!”
“வேறெப்படி?” என்றவள், “எனக்குத் தோணுச்சுன்னா இப்படி கிஸ் கூட கொடுப்பேன்” என்று அவனின் கன்னத்தில் அழுந்த கடித்து வைத்தாள்.
“இதுக்கு பேரு கிஸ்ஸா?” எனக் கேட்டவன், “உங்களுக்கு ஒண்ணுமே தெரியல ஜூனியர். கல்யாணம் முடியட்டும் எல்லாம் சொல்லித் தர்றேன்” என்றான் விஷமத்துடன்.
எல்லாம் என்ற அவனின் வார்த்தையில் அவளுக்குள் குளிர் பரவியது.
முகம் பூசிய நாணத்தை மறுபக்கம் திரும்பி மறைத்துக் கொண்டாள்.
“டெம்ட் பண்ணுற பொண்ணே!” என்றவன் அவளின் கையினை பிடித்து தன்னுடைய நெஞ்சுக்குள் வைத்து தட்டியவன், அவளின் உள்ளங்கையின் பின்புறம் முத்தம் வைத்து விடுவித்தான்.
“நீ தூங்கிடுறது பெட்டர்டாம்மா” என்றவன், தான் முத்தமிட்டதும் கூசி சிலிர்த்த அவளின் தேக நடுக்கத்தில் மொத்தமாக உன்மத்தம் கொண்டான்.
காரிலிருந்து இறங்கியவன் காற்றினை வாய் வழி வெளியேற்றி, தன்னை சமன் செய்துகொண்டே காரினை கிளப்பினான்.
தன்னால் அவனின் கவனம் சிதறுகிறது என்பது அவனது செய்கைகளில் புலப்பட… கண்களை இறுக மூடிக்கொண்டு உறங்க முயற்சித்தாள்.
பயணத்தின் நடுவில் அவ்வவ்போது அலைபேசியை திறந்து எதையோ அடிக்கடி பார்த்துக்கொண்டான்.
அவர்களின் பயணம் முடிவை எட்டியது. அதிகாலையை தொட்டது. துருவனின் கார் தூத்துக்குடி எல்லைக்குள் நுழைந்தது.
முதலில் கண் விழித்த பூரணி,
“டீ கடையில் நிறுத்துடா!” என்று அதட்டினார். எங்கென்று சொல்லாமலே அழைத்து செல்கிற கோபம் அவரிடம்.
சாலையோர தேநீர் கடையின் அருகே வண்டியை நிறுத்தியவன் இறங்குவதற்கு முன்பே கடையின் முன்பு தொங்கிக்கொண்டிருந்த செய்தித்தாளினையும் அதிலிருக்கும் சாராம்சத்தையும் கண்டுவிட்டான்.
‘இப்படித்தான் தெரிய வேண்டுமென்றால் தெரியட்டுமே!’ நினைத்தவன் சாதரணமாகவே இறங்கிச் சென்றான்.
கார் நின்றதுமே கோகிலா மற்றும் நிரல்யா எழுந்துவிட்டனர்.
“விடியவே போகுதா?” எனக் கேட்டு கண்களை கசக்கிய நிரல்யா வெளியில் பார்வையை திருப்பிட, பார்த்த மாத்திரம் அதிர்ந்து “அத்தை” என கத்தியிருந்தாள்.
“எதுக்குடி இந்த கத்து கத்துற?” என்ற பூரணி நிரல்யா கைகாட்டிய திசையில், அவள் சுட்டியதை பார்க்க… பார்த்தது பார்த்தபடி உறைந்து போனார். கண்களில் கண்ணீர் மட்டும் வழிந்தது. ஒருவித ஸ்தம்பித்த நிலை.
மூன்று தேநீருடன் வந்தவன்,
கோகிலா தவிர்த்து மற்ற இருவரும் இருந்த நிலைகண்டு…
“பார்த்தாச்சு போல?” என்றான் அர்த்தமாக.
“துருவ்… இது, நம்ம வ்…”
“எஸ்… உங்க மூத்த மகன் விநோவே தான்” என்றான்.
“அதிலிருக்கும் நியூஸ்?”
“அதுக்காகத்தான் சார் செமயா பிளே பண்ணியிருக்கார்” என்றான் அடக்கப்பட்ட சீற்றத்துடன்.
அங்கு கடையின் முன் தொங்கிக்கொண்டிருந்த காகிதத்தில் விநோதன் போதைமருந்து கடத்தல் கூட்டத்தை கூண்டோடு பிடித்த செய்தி. முதல்முறையாக அவனது புகைப்படத்துடன் வெளிவந்திருந்தது.
“உனக்கு முன்னாடியே தெரியுமா?”
ஆமென்று தலையை அசைத்தவன்,
“டீ’யை குடிங்க. போகலாம்” என்று ஓட்டுநர் இருக்கையில் வந்தமர்ந்தான்.
“இப்போ விநோ மாமாவை பார்க்கத்தான் வந்திருக்கோமா?” நிரல்யா கேட்டிட ஆமென்றான்.
“டீ’யும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். சீக்கிரம் அவன்கிட்ட போடா” என்றவர் சேலை தலைப்பால் தன்னுடைய வாயினை பொத்தி தழுதழுப்பை மறைத்தார்.
“அங்கு போனதும் உங்களுக்கு இன்னொரு ஷாக் இருக்கும்மா. அதுக்கு இப்போவே பிரிப்பேர் ஆகிக்கோங்க” என்றவன், ஏற்கனவே கிருஷ்ணா மூலமாக கண்டறிந்திருந்த விநோதனின் முகவரியை கூகுள் மேப்பில் போட்டுவிட்டு அது காட்டும் வழியில் காரினை செலுத்தினான்.
“இன்னொன்னா, என்னடா அது?” கோகிலா வினவினாள்.
“அங்க போனால்…”
“தெரியப்போகுது” என அவன் ஆரம்பித்ததை கோகிலா முடித்து வைத்தாள். தன்னிடம் கூட சொல்லமாட்டேன் என்கிற ஆதங்கம் அவளிடம்.
பூரணிக்கு உயிருடன் இல்லையென்ற தன் மகனை கண்ணால் காணப்போகிறோம் என்ற எண்ணம் அவரின் மனதின் ஓரம் விநோவை நினைத்து முணுமுணுவென்று இருந்த வருத்தத்தை வலியை விலகி ஓட வைத்திருந்தது.
நகரமெங்கும் விநோவின் முகம் தான். ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருந்த செய்தித்தாள்களில். அன்றைய பேச்சே அவனைப்பற்றித்தான்.
“ரொம்ப பெரிய வேலை செய்திருக்கான் போல?” பூரணி பெருமையாகக் கேட்டார்.
“இன்னைக்கு தமிழ்நாடு உங்க பையனை பற்றித்தான் பேசுது. சாரோட பேரு டெல்லி வரை ரீச்சாகியிருக்கு” என்ற துருவனின் குரலில் இருந்த உணர்வினை அவதானிக்க முடியவில்லை.
“துருவ்… உண்மையாவே இது விநோ தானே?” என்றவர், “ஏன் கேட்கிறேன்னா, விநோ உயிரோடில்லைன்னு நமக்கு சொன்னது, விநோவின் உடலை கொண்டு வந்து நம்மோட இருந்து எல்லாம் செய்தது யது. யதுவை எப்படிப்பா சந்தேகப்படுறது?” என்று தன்னுடைய மனதைக் கூறினார்.
“அவரும் தான் இதில் கூட்டு களவாணி” என்ற துருவன், “எதுவாயிருந்தாலும் அங்கப்போய் உங்க மகன்கிட்ட கேளுங்கம்மா” என்றவன் தன்னை இறுக்கமாக வைத்துக்கொண்டான்.
இன்னமும் பூரணியால் தன் மகன் உயிருடன் இருக்கிறான் என்பதை நம்ப முடியவில்லை.
விநோவைப்பற்றி ஏதேதோ பேசி சலசலத்தபடியே இருந்தார்.
அவரின் மனநிலை மற்றவர்களுக்கு புரிபட, அவர் பேசுவதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டே வந்தனர்.
“அத்தைக்குள்ள மாமாவை எண்ணி நிறைய அழுத்தம் இருந்திருக்கு சீனியர்” என்ற நிரல்யாவின் வார்த்தையை துருவன் ஆமோதித்தான்.
“எனக்காக எல்லாம் மறைச்சிக்கிட்டாங்க” என்றவனுக்கு அந்தநொடி அத்தனை கசப்பாக.
‘விநோண்ணா’ என்று மனதோடு அழைத்தவனுக்கு அவன் மீதான பாசத்தையும் கடந்து சிறு கோபம் இருக்கத்தான் செய்தது.
கோகிலா பூரணியின் கையை பற்றியபடியே அமர்ந்திருந்தாள்.
கோகிலாவின் வாழ்வில் விநோதன் செய்தது அளப்பரியது. அதனால் தான் இந்த குருவிக்கூட்டில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவனின் மீது அவளுக்கு பாசத்தையும் விஞ்சிய நன்றி கடன் உள்ளது. அதன் தாக்கத்தில் விநோதன் உயிருடன் இருக்கிறான் என்பது தெரிந்தது முதல் அவனை பார்த்துவிட ஏங்கிக் கொண்டிருக்கிறாள்.
சிறிது நேரத்தில் விநோதன் தங்கியிருக்கும் வீடிருக்கும் வளாகத்திற்கு முன் வண்டியை நிறுத்தியிருந்த துருவன் உணர்வுகளின் பிடியில்.
“என்ன சீனியர்?”
கார் நின்றதும் மூவரும் இறங்கிவிட துருவன் அப்படியே அமர்ந்திருந்தான். அவன் பக்கம் சன்னல் வழி குனிந்த நிரல்யா, அவனை இறங்குமாறு கூறினாள்.
அவளால் அவனது உணர்வுகளை படிக்க முடிந்தது.
சில தினங்களுக்கு முன்பு விநோவின் புகைப்படத்தின் முன் துருவன் நின்றிருந்த தோற்றம் அவளுக்கு அன்றைய அவனின் மனநிலையை விளக்கியது.
“நீங்களே இப்படியிருந்தா, அத்தையைப் பாருங்க” என்றிட, “அம் ஓகே நிரல்யா” என்று அடைத்த தொண்டையை சரிசெய்தபடி கீழிறங்கினான் துருவன்.
“எந்த பிளாட்?” கோகிலா ஆர்வமாக வினவினாள்.
“லெவன்த் ஃப்ளோர்” என்றவன், தங்களை நோக்கி வந்த அப்பார்ட்மெண்ட் காவலாளியிடம் விடயத்தைக் கூறி மின்தூக்கியில் ஏறினான்.
பதினோராவது தளம் வந்தவன் எதிர் எதிராக இருந்த நான்கு வீட்டில் ஒன்றை காண்பித்து “இதுதான்” என்று முன் சென்றான்.
“அழுத்துப்பா” என்று அவனுக்கு அருகில் வந்து நின்ற பூரணி அழைப்பு மணியின் பொத்தானை காட்டிட,
“ஒரு மாதிரி நெர்வஸா இருக்கும்மா” என்றவன் தன் உயரத்திற்கு நிமிர்ந்து நின்று தன்னை நிலைப்படுத்தினான்.
சொர்க்கவாசல் திறந்து கடவுளை காண தவம் கிடக்கும் பக்தன் நிலையில் துருவன்.
கதவிற்கு அந்தப்பக்கம் இருப்பது அவனது உயிராயிற்றே. அவனது வாழ்க்கைத் துணையாகப்போகும் நிரல்யாவிற்கே அவனது உடன்பிறப்பிற்கு அடுத்த இடம் தான்.
நடுங்கும் விரலால் அழைப்பு மணியை அழுத்தியிருந்தான். பூரணி தன்னுடைய இளைய மகனின் கையினை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்.
“எமோஷ்னல் ஆகாதீங்கம்மா” என்றவன், அன்னையை ஆதரவாக தோளிட்டு அணைத்தபடி கதவு திறப்பதற்காகக் காத்திருந்தான்.
விநோதனின் திட்டம் எல்லாம் முடிந்த இரவின் அடுத்தநாள் காலை வேளை.
ஆதர்ஷினி சமையலறையில் வேலையாக இருந்திட, அழைப்பு மணி சத்தத்தில் எழுந்த விநோதன் கதவினை திறக்க வாயிலை நோக்கி அடி வைத்திட, யதுவும் சோம்பல் முறித்தவனாக உறக்கம் கலந்து எழுந்து வந்தான்.
அதற்குள் சமையலறையிலிருந்து வந்த ஆதர்ஷினியே வாயில் கதவினை திறந்திருந்தாள்.
விநோ கதவினை திறப்பானென்று ஆவலாக எதிர்பார்த்திருந்த பூரணி, குளித்து முடித்து தலையில் கட்டிய துண்டுடன், நெற்றியில் குங்குமம் வைத்து, நெற்றி கேசம் நீர் சொட்ட கதவினை திறந்த ஆதர்ஷினியினை எதிர்பார்க்கவில்லை.
“வீடு மாறி வந்துட்டோமா துருவா?” பூரணி ஏமாற்றமாகக் கேட்டிட,
“இல்லைம்மா” என்றவன், “இவங்க எனக்கு அண்ணி. உங்களுக்கு மூத்த மருமகள்” என்றான்.
பூரணிக்கு மட்டுமல்ல, கோகிலாவுக்கும் அதிர்ச்சி, ஆச்சரியம்.
அப்போதுதான் ஆதர்ஷினியின் கழுத்தில் மின்னிய புத்தம் புது மஞ்சள் கயிற்றையும் மீறி, அவளின் மார்பில் தவழ்ந்த சூர்ய வடிவ டாலர் பூரணியின் கண்ணில் பட்டது.
‘இவள் என் மருமகளே தான்.’ விநோதன் கழுட்டிடாது துருவனின் முதல் பரிசாக அணிந்திருந்த அந்த சங்கிலியை அன்னையால் மறக்க முடியுமா என்ன? விநோதன் உயிரோடு தானிருக்கிறான் என்பதை அக்கணம் தான் அவரின் உள்ளம் முழுமையாக நம்பியது.
“நீங்க சொன்ன ஷாக் இதுதானா? அத்தையையும் அண்ணியையும் பாருங்க எப்படி விழிச்சிட்டு நிக்கிறாங்கன்னு.” நிரல்யா கிண்டலாக சொல்லிட துருவன் வாயில் விரல் வைத்து அவளை அமைதியாக இருக்கக் கூறினான்.
எதிரில் நிற்பவர்கள் யாரென்று தெரியாது பார்த்த ஆதர்ஷினி வந்திருப்பவர்கள் தங்களுக்குள் பேசியபடி நிற்க…
“நீங்க… யார் வேணும்?” என்று கேட்டிருந்தாள்.
“வி…” சொல்ல வந்த துருவனை தடுத்த பூரணி…
“என் பேரு அன்னப்பூரணிம்மா” என்று அவர் சொல்லியதும்,
“அத்தை” என்று ஓசையின்றி சொல்லியிருந்தாள்.
அதனை செவி ஏற்ற கோகிலா,
“நம்மைப்பற்றி சொல்லியிருக்காருடா!” என்றாள்.
ஆதர்ஷினிக்கும் அதிர்வு தான். காலை விடிந்ததும், கொடைக்கானல் கிளம்ப வேண்டுமென்று துருவன் சொல்லியிருக்க… இப்படி அவர்கள் அனைவரும் இங்கு வந்து நிற்பார்கள் என்று அவள் நினைக்கவில்லை.
முதல்முறையாக தன் உறவுகளை பார்ப்பவள், அதன் தாக்கத்தில் தன்னை மறந்து நின்றிருக்க…
மேற்கொண்டு பூரணியே தொடர்ந்தார்.
“உனக்கு மாமியார். உன் புருஷனுக்கு அம்மா” என்றிட,
கதவினை திறக்க சென்ற ஆதர்ஷினி வாயிலில் அப்படியே நின்றிருக்கவும், தானிருந்த இடத்திலிருந்து சற்று தள்ளி வந்து ஆதர்ஷினியை தாண்டி வாயிலில் பார்த்த விநோதன் தன் குடும்பத்தைக் கண்டு வேக எட்டுக்களுடன் அவர்களை நெருங்கியிருந்தான்.
துருவனுக்கு பின்னால் வந்த யது அடியின் சத்தத்தில் அரண்டவனாக தன்னிரு கன்னத்தையும் கை வைத்து மறைத்தவனாக அதிர்ந்து நின்றான்.
“ம்மா… துருவ்…” தொண்டை கரகரக்க தேங்கி நின்ற இமைகளுடன் விநோதன் அழைக்க,
அதுவரை மகனை கண்டுவிடமாட்டோமா என்று துடித்த துடிப்பையெல்லாம் ஒதுக்கி வைத்தவராக விநோவின் கன்னத்தில் பளாரென்று அறைந்திருந்தார் பூரணி.