உயிர் உறை 33
தேடல் 9
வந்திருப்பவர்கள் யாரென்று அறிந்து ஆதர்ஷினி உறை நிலையில் அசையாது நின்றிருக்க…
துருவன் தான் கேட்டிருந்தான்.
“நாங்க உள்ள வரலாமா அண்ணி?”
துருவன் அண்ணி என்றதில் தான் சுள்ளென்று உண்மை தாக்கிட, நிகழ் மீண்டவள்…
“அச்சோ மன்னிச்சிடுங்க… வாங்க, வாங்க அத்தை” என்றவள் விநோதன் கோகிலாவைப்பற்றி மட்டும் சொல்லிருக்க, அவர்களுக்கு பின்னால் நின்றிருக்கும் இரு பெண்களில் யார் கோகிலா, இன்னொருவள் யாரென்று தெரியாது இருவரையும் பொதுவாக வாங்க என்று தலையசைத்தாள்.
அக்கணம் தான், ‘வாசலில் இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாள். யாரை வாங்கவென்று சொல்லிக்கொண்டிருக்கிறாள்’ என்று எண்ணிக்கொண்டே வாயிலுக்கு வந்தவன் தன்னுடைய உறவுகளை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.
உயிர் துடிக்க… ஆவி பறக்க உறைந்து நின்றான்.
எத்தனை நாட்கள் அவர்களின் நினைப்பில் எழும் தவிப்புகளை லட்சியத்திற்காக உள்ளக்கிடங்கில் பதுக்கி வைத்துக்கொண்டு புழுங்கியிருப்பான். எல்லாம் அவர்களை கண்டுவிட்ட நொடியில் மாயமாகிப்போயின.
விநோதனுக்கும் கண்ணீர் சுரக்கும் என்று அன்று தான் அவனது குடும்பமும் தெரிந்துகொண்டது.
முட்டி நின்ற நீரை இமை தாண்டி கசியவிடாது, “ம்மா… துருவ்…” என்று அவனது உதடுகள் சத்தமின்றி உச்சரித்திட,
இறந்துவிட்டான் என்று எண்ணி தவித்த மகனை உயிருடன் கண்டதும் தலை முதல் பாதம் வரை ஆதுரமாய் பூரணியின் பார்வை அன்னையாய் வருடியது.
தாயுக்கே உண்டான பரிதவிப்பு அது.
தன்னுடைய மகன் நலமுடன் இருக்கிறான் என்று அறிந்த நொடி,
“உன் முன்னாடி இதை பண்றதுக்கு என்னை மன்னிச்சிடும்மா” என்று ஆதர்ஷினியிடம் சொல்லிய பூரணியின் கரம் இடியென விநோதனின் கன்னத்தில் இறங்கியிருந்தது. ஆதர்ஷினி எதற்கு என்று யோசிக்கும் கணம் உண்மை விளங்கிற்று.
விநோவிற்கு பின்னால் வந்து நின்ற யது அதிர்ச்சியில் பூரணியிடமிருந்து தப்பிக்க இடம் தேடிட…
“இட்ஸ் டூ லேட். இதுக்குத்தான் நேத்து அவன் சொல்லும்போதே நாம கிளம்பியிருக்கணும். இப்போ பூரி ஆண்ட்டி நம்ம உடம்பை பூரியாக்கப்போறங்க” என்ற பாசிலின் காலினை யது ஓங்கி மிதித்திருந்தான்.
பூரணி அடித்ததில் விநோவின் முகத்தில் அப்படியொரு புன்னகை. மீசை காது வரை நீண்டது. வெண் மூரல்கள் பளிச்சென மின்னின. அவனது கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீர் அவனது சிரிப்புக்கு போட்டியாக வைரமாய் ஜொலித்தது.
அவனது அந்த மகிழ்விற்கு காரணம், இதுவரை பூரணி அவனை அடித்ததே இல்லை. ஏன் ஒரு சொல் கடிந்து கொண்டது இல்லை.
அவனுக்கு அவனது அம்மாவிடம் ஒருமுறையாவது அடி வாங்கவேண்டுமென்ற ஆசை நிறைவேறாமலே இருந்தது. அவன் கல்லூரி நாட்களில் வாய் திறந்து கூட கேட்டிருக்கிறான். பூரணி செய்ததே இல்லை.
இதெல்லாம் ஒரு ஆசையா என்று தோன்றலாம். அன்னையிடம் தோன்றும் எல்லாம் பேராசை தான். சின்ன சின்ன விடயங்கள் கூட அவளிடமிருந்து பெறப்படும் போது அத்தனை சுகமளிக்கும். அதில் அவளின் கோபம், திட்டு, அடி இவை யாவும் அடங்கும்.
“ம்மா…” முதல் முறை விநோதன் அம்மா என்று அழைத்த ஒலி பூரணியின் காதில் ரீங்கிராமிட்டது. அடி வயிற்றில் சிலிர்ப்பு ஓடி மறைய…
“விநோ” என்று மகனின் கன்னம் பற்றி குனிய செய்து… நெற்றியில் முத்தமிட்டார்.
சட்டென்று அன்னையை அணைத்துக்கொண்டவன் அவரின் தோளில் முகம் பதித்து அப்படியே அசையாது நின்றான்.
“உன் அண்ணன் நம்மளை இப்படியே தூரத்தி விட்டுடலாம் பார்க்கிறார் போல.” கோகிலாவிடம் துருவனின் குத்தலில் பூரணியிடமிருந்து விலகிய விநோ,
“துருவ்…” என்க,
அவனோ, “வழி விடுங்க அண்ணி” என்று ஆதர்ஷினியை இடித்து விடாது விநோவின் மீதும் கவனமாக உரசிடாது, இருவருக்கும் இடையில் புகுந்து உள்ளே சென்றான்.
“ரொம்ப கோபமா இருக்காங்க போல.” ஆதர்ஷினி விநோவின் காதில் கிசுகிசுக்க அவனது உதட்டில் இளநகை.
ஆதர்ஷினி சொல்லியது பூரணிக்கும் கேட்டிட…
“சும்மா சீன் போடுறான். அவனாவது இவன்கிட்ட கோபப்படுவதா” என்க,
“ஆமா அண்ணி… இன்னும் கொஞ்ச நேரத்தில் பார்க்கத்தானே போறீங்க. இங்க…
நம்மைப்போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னைப் போல என்னை என்னும்
நீயும் நானும் ஓர் தாய்ப்பிள்ளை.
தம்பி உந்தன் உள்ளம் தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றாய் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை.
அப்படின்னு சாங் ஓடினாலும் ஆச்சரியமில்லை” என்று விநோ மற்றும் துருவனை பற்றி அறிந்திருந்த கோகிலா ஆதர்ஷினியிடம் சொல்ல அங்கே அனைவரின் முகத்திலும் சிரிப்பு. துருவன் மட்டும் முறுக்கலுடன் அமர்ந்திருந்தான்.
“கோகிம்மா” என்று விநோ அவளின் கரம் பற்ற முனையை…
“நாங்களும் கோபமாத்தான் இருக்கோம். அவங்ககிட்ட சொல்லுங்க அண்ணி” என்றவள் வேண்டுமென்றே அவனை இடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.
“இந்த கோபம் பயங்கரமா இருக்கும் போலவே” என்ற விநோதன் பூரணி உள்ளே செல்ல வழிவிட்டு நகர்ந்து நின்றவனாக,
“வாம்மா நிரல்யா” என்று கனிவுடன் வரவேற்றான்.
நிரல்யா உட்பட அனைவருக்கும் அதில் ஆச்சரியம். யதுவிற்கு கூட.
“நினைத்திருக்கும் காரியம் முடியும் வரை, குடும்பத்தைப்பற்றிய சிந்தனை எனக்கு வரக்கூடாது யது. அப்படி அவர்களின் நினைவு வந்தால், பாதியில் விட்டுட்டு அவங்ககிட்ட போனாலும் போயிடுவேன்” என்று விநோ யதுவிடம் சொல்லியிருக்க,
ஒரே ஒருமுறை… அதுவும் உயிருடன் இருக்கும் விநோவிற்கு பூரணி திதி கொடுக்க, அவ்விடயம் கேள்விப்பட்டு அதிர்ந்த யது… “இந்த ஆட்டமே வேண்டாம். என்னால இதையெல்லாம் பார்க்க முடியல” என்று அவர்களைப்பற்றி சொல்லி வெடித்திருக்க, அன்றும் கல்லு மாதிரி கேட்டுக்கொண்டானேத் தவிர, தன் வேலையில் பின்வாங்கிடவில்லை.
அதன் பின்னர் யதுவும் இந்தநொடி வரை அவர்களைப்பற்றி எந்தவொரு தகவலும் சொல்லாதிருக்க, விநோவோ நிரல்யா வரை, அவளின் முகம் கூட அறிந்து வைத்திருக்கிறான்.
“எப்புட்ரா?” என்று தான் யதுவிற்கு கேட்கத் தோன்றியது.
யதுவின் முழியை வைத்தே அவனது எண்ணத்தை அறிந்த விநோதன்,
“எனக்கு பாவனா பற்றியும் தெரியும்” என்று அவனை அதிர்விற்குள்ளாக்கினான்.
உடனிருக்கும் பாசிலிற்கே இவ்விடயம் புதிது.
“என்னடா அது எனக்குத் தெரியாம?” என்று பாசில் கேட்டிட,
“உன்னைப்பற்றிக்கூட எனக்கொரு தகவல் வந்தது” என்று பாசிலிடம் சொல்லி விநோவின் பார்வை கோகிலாவை தொட்டு அவனில் நிலைத்தது.
பாசிலின் விழிகள் தெறித்து வெளியே குதித்தது.
“எம்மாடியோவ்… நான் இந்த ஆட்டத்துக்கே வரல” என்ற பாசில் அமைதியாக துருவனின் அருகில் சென்று அமர்ந்துகொண்டான்.
“எங்களை எல்லாம் வாட்ச் பண்ணிட்டுத்தான் இருந்திருக்க?” என்று பூரணி மகனின் காதினை திருக,
“நீங்க எல்லாரும் என் குடும்பம்மா! அப்படியே விட்டுடமாட்டேன்” என்று விநோ சொல்லிட…
“பொய் சொல்லி தவிக்க வைக்க மட்டும் தெரியும்” என பட்டென்று மொழிந்திருந்தான் துருவன்.
“துருவ்…” பூரணியே நொடியில் மாறிவிட்ட தன் மூத்த மகனின் முகம் கண்டு இளைய மகனை அதட்டினார்.
“அவன் சொன்ன பொய்யால் இன்னைக்கு நாட்டுக்கே எவ்வளவு பெரிய நன்மை நடந்திருக்கு தெரியுமா துருவ்? அவன் செய்தது உங்களுக்கு வலிதான். இல்லைன்னு சொல்லல. ஆனால் உங்களுக்கான வலியை மட்டும் பார்க்காம, நடந்திருக்கும் நன்மையைப் பார் துருவ்” என்று யது எடுத்துக்கூறிட அப்போதும் துருவின் முகம் உம்மென்று தான் இருந்தது.
பூரணி கூட விநோவின் சூழலை புரிந்துக்கொண்டார்.
வரும் வழியிலே செய்தித்தாள் வாங்கி அந்த குற்றம் பற்றியும், அதில் விநோவின் பங்கு எவ்வளவு, அதனால் நடந்தேற இருந்த விளைவுகள் என எல்லாம் தெரிந்துகொண்டவருக்கு, இப்போது யதுவும் அதனையே சொல்லிட, பெரிய மகனை நினைத்து அவனின் வேலையை எண்ணி பெருமையாகவும், கர்வமாகவும் உணர்ந்தார். தான் விநோவின் அன்னையென்று. விநோவின் மீதான பெருமிதம் அவரின் முகத்தில் தெரிந்தது.
கனத்த மௌனம் அங்கே!
ஆதர்ஷினி தான் சூழல் புரிந்து அதனை மாற்றிட பேசினாள்.
“நாங்களே கொடைக்கானல் வரத்தான் கிளம்பிட்டு இருந்தோம். நீங்கலாம் வருவீங்கன்னு எதிர்பார்க்கல” என்றவள், அறைகளை காண்பித்து “ரெபிரஷ் பண்ணிட்டு வாங்க” என்று அனுப்பி வைத்தாள்.
அப்போதும் துருவன் மட்டும் அப்படியே இறுக்கமாக அமர்ந்திருந்தான்.
துருவனின் வேதனையை விநோ அறிந்துதான் இருந்தான்.
‘அத்தனை சீக்கிரம் அவனின் வருத்தம் போகாது’ என்று நினைத்த விநோ,
“சாப்பிட்டுட்டு கிளம்பிடலாம் யது. எனக்கு இன்னும் இங்கிருக்கிறது மூச்சு முட்டுற ஃபீல்” என்று யதுவிடம் சொல்லியதோடு, “ஹவுஸ் ஓனர் பார்த்து பேசிட்டு எல்லாம் செட்டில் பண்ணிட்டு ஒன் ஹவரில் வந்துடுறேன். அதுக்குள்ள கிளம்பியிருங்க” என்றவனாக வெளியில் சென்றான்.
‘இவ்வளவு சொல்லியும் இதென்ன விநோவை புரிந்துகொள்ளாது பிடிவாதம்’ என எண்ணிய யது துருவனை முறைத்துவிட்டு அறைக்குள் சென்றுவிட்டான்.
எல்லோரும் கிளம்பி வரும் வரையிலும் கூட துருவன் அப்படியேதான் அமர்ந்திருந்தான்.
அதற்குள் காலை உணவு தயார் செய்திருந்த ஆதர்ஷினி அனைவருக்கும் உணவினை எடுத்து வைத்தாள்.
துருவனை பூரணி பார்த்தாரே தவிர எதுவும் சொல்லவில்லை. அவன் விநோவுடன் தனித்து மனம்விட்டு பேசாது மலையிறங்கமாட்டான் என்பதை அறிந்தவர் அமைதியாகவே உண்ண அமர்ந்தார்.
“குளிச்சிட்டு வாங்க துருவ். சாப்பிடலாம்.” ஆதர்ஷினி சொல்லிட, அவளிடம் அவனின் கோபத்தைக் காட்ட முடியாது எழுந்து சென்றான்.
“சொல்றவங்க சொன்னா கேட்பாங்க போலிருக்கே” என்ற யது அறையிலிருந்து எட்டிப்பார்த்த துருவனின் பார்வையில் கப்சிப்.
“முதலில் உங்களை போடணும். அப்புறம் அந்த அயர்ன்மேன் தானா வழிக்கு வந்திடுவார்” என்றான்.
யதுவிற்கு துருவனின் பேச்சில் உண்ணும் உணவு புரையேறிட, அவனுக்கு அருகிலிருந்த கோகிலா அவனின் தலையில் தட்டி பருக நீர் கொடுத்தாள்.
அடுத்த கணம் பாசிலும் இரும்பிட, ஆவலாக கோகிலாவை ஏறிட்டான்.
“அந்த சீனெல்லாம் இங்கில்லைண்ணா” என்று, பாசிலுக்கு அந்த பக்கமிருந்த நிரல்யா தண்ணீர் எடுத்துக்கொடுக்க, யது அவனின் தலையிலேயே நங்நங்கென்று கொட்டினான்.
“டேய்… டேய்… போதும்டா. நீ தட்டுற தட்டுல ரெண்டு இன்ச் உள்ள போயிடுவேன் போல” என்று பாசில் அலறிய பின்னரே யது கையை எடுத்தான்.
அதன் பின்னர் அனைவரும் துரித கதியில் அனைத்தையும் எடுத்து வைத்து பேக் செய்து வீட்டை காலி செய்திருந்தனர்.
பொருட்கள் ஒன்றும் அவ்வளவு கிடையாது. அதர்ஷினி வந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வரை அது பாச்சிலர் வீடு தானே. விநோவின் ஆடைகள் மட்டுமே அதிகம் எனுமளவு இருந்தது. அதுவும் அனைத்தும் கருப்பிலே பல ஷேட்ஃகள்.
‘இவங்க வேற கலர் போடமாட்டாங்களா?’ என்று தான் அவற்றை எடுத்து வைக்கும் போது ஆதர்ஷினிக்குத் தோன்றியது.
எல்லோரும் கிளம்பி விநோவிற்கு அழைக்க அரை மணி நேரத்தில் வருவதாக சொல்லியிருந்தான்.
மீண்டும் அங்கே ஓர் அமைதி.
விநோ வந்து சேர, நடந்தேற இருக்கும் அனர்த்தம் தெரியாது… கொடைக்கானல் நோக்கி அவர்களது பயணம் தொடர்ந்தது.
பூரணி, கோகிலா, நிரல்யா என்று துருவனை தவிர்த்து மற்ற யாவரும் ஆதர்ஷினியிடம் நன்றாகவே பேசினர்.
இந்த இரண்டு தினங்களிலே விநோ துருவனை பற்றித்தான் அதிகம் பேசியிருப்பான்.
துருவன் விநோவிடம் பேசாமலிருப்பது அவனுக்கு எத்தனை வலி கொடுக்குமென நினைத்த ஆதர்ஷினி, ஒருவேளை சொல்லாமல் திருமணம் செய்துகொண்டதால் கோபம் குறையாது இருக்கிறானோ என்று எண்ணி தன்னால் தங்களது திருமணம் எந்த சூழலில் எப்படி நடந்தது என்று துருவனிடம் கூறி,
“ப்ளீஸ், அவங்ககிட்ட பேசுங்க” என்றாள்.
“என்னாலதான் உங்க கோபம் அப்படின்னா, நான் வேணும்னா ம…”
மன்னிப்பு என்ற வார்த்தையைக்கூட ஆதர்ஷினியை துருவன் சொல்லவிடவில்லை.
“அண்ணி…” என கத்தி தடுத்திருந்தான்.
“இது சும்மா அண்ணி. அண்ணனுக்கே தெரியும். நான் நடிக்கிறேன்னு. அதான் அமைதியா இருக்காங்க” என்றான்.
“அப்போ உங்களுக்கு உண்மையாவே கோபமில்லையா?” ஆதர்ஷினி கேட்டிட…
“இருக்கு. இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனால், விநோண்ணா இல்லைன்னு எத்தனை நாள் வலி தெரியுமா அண்ணி. இனி திரும்ப பார்த்திடவே முடியாதுன்னு நினைச்ச அண்ணா, உயிரோடு இருந்தால்… அதைவிட வேறென்ன இருக்கப்போவுது. எங்ககிட்ட சொல்லியிருக்கலாம் என்கிற மனத்தாங்கல்தான்” என்றான் தன்னுடைய மனதினை குறித்து.
“நான் அப்போவே சொன்னேன்ல அண்ணி… அண்ணன் தம்பியை நம்பக்கூடாது” என்ற கோகிலா, “உண்மையிலே உங்க மிரட்டலுக்கு விநோண்ணா பயந்து தாலி கட்டிட்டாரா?” எனக் கேட்டாள்.
ஆதர்ஷினி ஆமென்று தலையாட்டிட…
“எனக்கென்னவோ… மாமா அக்காவுக்கு பயந்துலாம் தாலி கட்டியிருக்கமாட்டாருன்னு தோணுது. அவரோட கேரக்டர் தெரிஞ்சது வரை வச்சு சொல்றேன்” என்றாள் நிரல்யா.
“எனக்கும் அப்படித்தான் தோணுது” என்ற யது, “எப்படியும் காலையில் நடக்கப்போவது, நைட்டே நடக்கட்டும் நினைச்சிருப்பான்” என்றான்.
“எப்படியோ… அவன் ஆசைப்பட்ட பொண்ணையே கட்டிக்கிட்டான். அதுபோதும்” என்ற பூரணி, ஆதர்ஷினியின் முகம் வருடினார்.
கடித்தத்தின் மூலம் ஏற்பட்ட தொடர்பை ஆதர்ஷினி சொல்லவில்லை. அது அவர்களுக்கு மட்டுமே உரித்தான ரகசியமல்லவா. சொல்லிடாது தங்களுக்கே உரித்தான பக்கங்களில் பத்திரப்படுத்திக் கொண்டாள்.
பூரணி, ஆதர்ஷினி விநோவை மிரட்டி கல்யாணம் செய்து கொண்டதை சொல்லி சொல்லி அவளை மெட்சிக்கொண்டார்.
“அப்படியே என்னை மாதிரி. நானும் விநோ அப்பாவை மிரட்டித்தான் என் பின்னாடி சுத்த வச்சு, லவ் அக்செப்ட் பண்ணேன்” என்று.
“நீயும் கண்ணை கசக்கிட்டு ஊரை விட்டு வராம தர்ஷி மாதிரி அந்த பயல(துருவ்) ஓட விட்டிருக்கனும் நிரல்யா” என்று பூரணி துருவனை பார்த்துக்கொண்டே சொல்ல அங்கே சிரிப்பின் கூச்சல்.
அரை மணி நேரம் என்ற விநோ சற்று தாமதித்தே வந்தான்.
“சாப்பிட்டிங்களா?” ஆதர்ஷினி கேட்க, இமை மூடி பதில் வழங்கினான் விநோதன்.
“ஏன் விநோ இவ்வளவு லேட்?”
“ஹவுஸ் செட்டில்மெண்ட் கொஞ்சம் வேலையாகிடுச்சும்மா” என்றவன் ரெபிரஷ் செய்துவர வீட்டின் உரிமையாளரும் வந்து சேர்ந்தார்.
“உங்க பையனை பற்றித்தாம்மா ஊரே பேச்சா இருக்கு. தங்கமாட்டம் பிள்ளையை வளத்திருக்கீங்க” என்று அவர் சொல்ல பூரணி புன்னகையோடு நிறுத்திக்கொண்டார். ஆனால் அவர் தொடர்ந்தார்.
“தம்பி ரெண்டரை வருசத்துக்கு முன்னாடி என்னை பார்த்து வீடு கேட்கும்போது, ரவுடி நினைச்சு முடியாது சொன்னேன். அப்போ தம்பி என் மேல் நம்பிக்கை வச்சு கொடுங்க, உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராதுன்னு சொல்லுச்சு. அந்த பேச்சில் ஒரு நம்பிக்கை, வாடகைக்கு கொடுத்தேன். இப்போதான் தெரியுது தம்பியோட உயரம்” என்று அவர் தன்போக்கில் பேசிக்கொண்டே இருந்தார்.
அறைக்குள்ளிருந்த விநோதன், “ஆது” என்றழைக்க, பூரணியின் அருகில் அமர்ந்திருந்தவள் எழுந்து உள் சென்றாள்.
“ஆதுவாம்… போலீஸ் சாருக்கு செல்லப்பெயரெல்லாம் வைக்கத் தெரிந்திருக்கே!” கோகிலா மெல்ல கிசுகிசுக்க… யது விநோவிற்கு கேட்டுவிடப் போகிறதென்று அவளை அடக்கினான்.
துருவனின் முகத்தில் கீற்று புன்னகை.
தானில்லாமல் அண்ணன் திருமணம் முடிந்துவிட்டதே என்கிற வருத்தம் இருப்பினும், அவனுக்கு பிடித்த வாழ்க்கை என்பதில் நிறைவு கொண்டான் துருவன்.
“என் சர்ட்லாம் எங்க?”
“நீங்க சேன்ஞ் பண்ணனுமா?”
பேண்ட் மற்றும் உள் பனியனுடன் இடுப்பில் கை குற்றி அவளை பார்த்தான்.
முகம் கழுவியிருப்பான் போலும், முன்னால் நனைந்திருந்தது.
அவன் கூப்பிட்டதும் வந்துவிட்டாள். அவன் இப்படி சட்டை இல்லாமல் நிற்பானென்று எதிர்பார்க்கவில்லை. பார்வையால் அவனது தேகம் உணர்ந்ததும் அவளிடம் தடுமாற்றம், தலையை தாழ்த்திக்கொண்டாள்.
“அப்போ இப்படியே வரட்டுமா?”
அவனின் கேள்வியில் நிமிர்ந்தவள் சடுதியில் இமை இறக்கினாள்.
“என்னைப்பாரு தர்ஷி” என்றவன்,
அவள் நிமிர்ந்ததும்… “எல்லாம் பழகிடும்” என்றான்.
எந்த அர்த்தத்தில் கூறினானோ, அவளுக்கு குப்பென்று முகம் சிவந்து வியர்த்துவிட்டது.
“உங்க ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணிட்டேன். இருங்க கொண்டு வரேன்” என்று அவள் அவனை பார்க்க முடியாது அவஸ்தையாய் வெளியேற முயல… அவளின் கரம் பற்றி இழுத்திருந்தான்.
இருவருக்கும் முதல் நெருக்கம்.
நூலிழை இடைவெளியில் அவனது மார்பில் கரம் பதித்து விலகி நின்றாள்.
ஆதர்ஷினியின் கரம் விநோவின் பிடியில் இருக்க… அவளால் ஓரளவிற்கு மேல் நகர முடியவில்லை.
“வெளியில் எல்லாம் இருக்காங்க. விடுங்க.”
சுண்டி இழுத்தான். அவனில் மோதி நின்றாள்.
“உங்களுக்கு என்னாச்சு? ஏன் இப்படி பண்றீங்க?” வார்த்தை காற்றில் வெளிவந்தது.
“என்னென்னவோ ஆகுது” என்றவன் அவளின் வகிட்டில் இருக்கும் குங்குமத்தில் ஒற்றை விரல் வைத்து,
“அழகா இருக்கு” என்றான்.
அவனின் தொடுகையில் நாணம் மீதுற நெளிந்தவள், வெளியில் இருப்பவர்களை நினைத்து பதட்டமும் கொண்டாள்.
விநோவின் விரல் அவளின் நெற்றி தொட்டு கன்னம் வழி பயணித்து, தோள் தொடர்ந்தது.
மொத்தமாக தீண்டியிருந்தாலும் இந்த அவஸ்தை இருந்திருக்காது போல். கொஞ்சம் கொஞ்சமாக தன் வசம் இழந்து கண்கள் மூடிக்கொண்டாள்.
அவனின் கை அவளின் வெற்று இடையில் பட,
சட்டென்று அவனது கரத்தினை அழுத்தி பிடித்து தடை செய்தாள்.
அவனோ அவளின் கரத்தினை உதறி, அவளின் இடையில் சொருகியிருந்த சேலையின் தலைப்பை எடுத்து,
ஈரம் படர்ந்திருந்த தன் முகம் மற்றும் மார்பை துடைத்தான்.
அப்போதுதான் அவளுக்கு மூச்சே வந்தது.
“ஷ்ஷ்…” ஆசுவாசமாக இதழ் குவித்து ஊதினாள்.
அவளின் காற்று அவன் முகம் மோத கிறங்கி நின்றவன், சட்டென்று அவள் உணரும் முன்னமே இதழில் மதுரம் அருந்தி விலகியிருந்தான்.
அவள் தான் தன் ஈர உதட்டை தொட்டு பார்த்து,
‘இப்போ இவங்க கிஸ் பண்ணாங்களா இல்லையா?’ என குழம்பி நின்றாள்.
கழட்டி போட்டிருந்த சட்டையையே எடுத்து அணிந்தவன், அவளின் தலையில் தட்டி…
“ஓடு… அம்மா கூப்பிடுறாங்க” என்றான்.
கள்ளச்சிரிப்பை மீசையில் பதுக்கியிருந்தான்.
“ஹாங்… என்ன சொன்னீங்க?”
“எப்போ பாரு ட்ரீம்” என்றவன் முதலில் வெளியில் வர, திருத்திருத்தவாறே அவனுக்கு பின்னால் வந்தாள் ஆதர்ஷினி.
“என்னப்பா கிளம்பலாமா?” பூரணி கேட்க, “போகலாம்மா” என்றான்.
எல்லோரும் வெளியேறிட… வீட்டை பூட்டி சாவியினை உரிமையாளரிடம் கொடுத்த விநோ அவருக்கு நன்றி கூறி விடைபெற்றான்.
தூத்துக்குடியில் அவனது வாசம் முடிந்திருந்தது.
இல்லம் சென்று விசாலாட்சியையும் மகாவையும் தன்னுடைய குடும்பத்துடன் பார்த்துவிட்டே கொடைக்கானலுக்கு பயணித்தான்.
தன் மகள் வாழ்வு தன்னுடையது போலில்லாமல் சிறந்து விளங்குமென்று தெரிந்துகொண்ட மகா, தன்னுடைய கோபம் நீங்கி ஆதர்ஷினியிடம் சந்தோஷமாக பேசியே அவளை அவளது குடும்பத்துடன் அனுப்பி வைத்தார்.
மகாவிற்கு கணவனை பற்றிய வருத்தம் சிறிதுமில்லை. அதற்கு கூட அவர் தகுதியற்றவர் என்று மொத்தமாக முத்துச்சாமியை தன் வாழ்விலிருந்து நீக்கியிருந்தார்.
நள்ளிரவில் கொடைக்கானல் வந்து சேர்ந்தனர். உடன் யது, பாசிலும்.
“நீயொரு சி.எம். இப்படி நினைத்த நேரம் வெளியில் சுற்றக்கூடாது. இப்படியே கேரளா கிளம்பு” என்று விநோ எத்தனையோ எடுத்து சொல்லியும் மறுத்து அவர்களுடனே வந்திருந்தான்.
வரும் வழியிலேயே உணவை முடித்து வந்ததால், பயண அலுப்பால் வரவேற்பறையில் ஆளுக்கொரு இடம் அமர்ந்தனர்.
வீட்டின் வாசம் விநோவை வெகுவாக தாக்கியது. இருக்கையில் அமர்ந்தவன் கண்கள் மூடி அவ்வாசத்தை ஆழ்ந்து நுகர்ந்தான்.
காடு மலையெல்லாம் சுற்றி திரிந்தவன் தன்னுடைய கூடு வந்து சேர்ந்திட்ட நிம்மதி அவனுள்.
அத்தனை வருட இறுக்கம் அந்நொடி தான் அவனுள் தளர்ந்தது.
அவனின் மனம் புரிந்தவர்கள் அமைதியாக இருந்திட…
“விநோ அறையை சுத்தம் செய்திடலாம் கோகிலா” என்று பூரணி எழுந்தார்.
“அதெல்லாம் நேத்தே க்ளீன் பண்ணிட்டேம்மா. இப்போ நீங்க எல்லாரும் குடிக்க பால் கொண்டு வாங்க. டயர்டா இருக்கும். குடிச்சிட்டு தூங்கலாம்” என்றான் துருவன்.
“சரிப்பா” என்று பூரணி எழுந்து சென்றிட…
“விநோ உயிரோடு இருக்கான்னு எப்படிடா தெரிந்தது உனக்கு?” என்று அதுவரை கேட்க முடியாது தனக்கிருந்த சந்தேகத்தை அப்போது கேட்டிருந்தான் யது.
“லாஸ்ட் டைம் நீங்க வந்தப்போ, மேரேஜ் டேட் தள்ளி வைக்க சொன்னப்பவே கொஞ்சம் டவுட். ஏன்னு கேள்வி. அப்புறம் நைட் நீங்களும் பாசில் அண்ணாவும் பேசியதை நானும் கோகிக்காவும் கேட்டுட்டோம். நீங்க மறைக்கறீங்கன்னா எதாவது ரீஸன் இருக்கும்ன்னு, கிருஷ்ணா மூலமா நானே விசாரித்தேன். அப்போ தான் ஏ.சி சார் எங்கிருக்காரு, எப்படி இருக்காருன்னு தெரிஞ்சுது. அன்னையிலிருந்து கிருஷ்ணா மூலம் அவங்களை வாட்ச் பண்ணிட்டு தான் இருந்தேன். அப்படித்தான் கல்யாணம் ஆனதும் தெரிந்தது” என்றான்.
“கடைசியில நானே உனக்கு தெரிய காரணமா இருந்திருக்கனே!” யது பாசிலை முறைத்தான்.
“நான் வேணுன்னு அன்னைக்கு பண்ணல மச்சான்” என்று பாசில் யதுவின் முறைப்பில் பயந்தவன் போல் நடிக்க… “போடா” என்று அவனின் தலையிலேயே வேகமாகக் கொட்டியிருந்தான்.
“ச்சூ… உங்க விளையாட்டை அப்புறம் வச்சிக்கோங்க. தூக்கம் கண்ணை சுழட்டுது. முதலில் போய் படுங்க” என்று அனைவரின் கையிலும் பால் தம்ளரை நீட்டினார் பூரணி.
“விநோ…”
“ம்மா…” என்றவன் அப்போதுதான் கண் திறந்திருந்தான்.
“நன்மைக்காக எத்தனை கஷ்டங்களை கூட ஏற்கலாம் விநோ. தப்பில்லை. அதை நினைத்து நீ வருத்தப்பட தேவையில்லை” என்று மகனை ஆற்றுப்படுத்தினார்.
விநோவின் மனநிலையை மாற்றும் பொருட்டு,
“நிரல்யாவை எப்படித் தெரியும் உனக்கு?” என்று கேட்டார்.
“எல்லாம் தெரியும்மா. நீங்க துருவ்வை ஓடவிட அவளுக்கு சொல்லிக்கொடுத்த பிளான் எல்லாம் தெரியும். தினமும் வாட்ச் பண்ணிக்கிட்டே தான் இருந்தேன். நான் உயிரோட இருக்கேன்னு துருவுக்கு தெரிந்ததும் தெரியும். என்னைப்பற்றி கிருஷ்ணா விசாரித்ததும் தெரியும். மாளுவை வைத்து ஆரோனை நீங்க பிளாக்மெயில் பண்ணுவதும் தெரியும்” என்றவன், “நான் எங்கிருந்தாலும் என்னோட பார்வை உங்க மீது இருக்கும்மா” என்க, மகனை பரிவோடு பார்த்தார் பூரணி.
“ஏசிபி சாருக்கு எல்லாம் தெரியும்ன்னா நாம அழுததும் தெரிஞ்சிருக்குமே, நம்மோட வலி தெரிஞ்சிருக்குமே?” என்று இறுகிய குரலில் கேட்ட துருவ் அதுவரையிலும் கூட விநோவிடம் ஒரு வார்த்தை பேசியிருக்கவில்லை.
கண்ணில் தேங்கிவிட்ட நீருடன் வேகமாக எழுந்து சென்றுவிட்டான்.
துருவனின் இந்த முகம் விநோவை கசங்க வைத்தது.