நேச நெஞ்சங்கள் 34

உயிர் உறை 34

தேடல் 10

பால் நிலா வானில் உலாப்போக, மலை மோதிய குளிர் காற்று மேனியை தழுவிய போதும்… மனம் தீயாய் கனன்றிட, உடல் இறுகி நின்றான். தன்னுடைய அறை பால்கனியின் சுற்று கம்பியினில் கைகளை ஊன்றியிருந்தவனின் அழுத்தம் விம்மி புடைத்திருந்த அவனது புஜத்தில் தெரிந்தது.

விநோதன் இல்லையென்கிற இத்தனை நாள் வலியை மொத்தமாய் அவனது கண்கள் பிரதிபலித்தன.

விநோதனை கண்டது முதல் அவனை அணைத்திட துடிக்கும் மனதின் வதையை அனுபவித்தவனாக வேண்டுமென்றே தவித்து நிற்கிறான்.

தான் அனுபவித்த வலியை ஒட்டு மொத்தமாக தன்னுடைய அண்ணனுக்கு கொடுத்திட முனைந்தான்.

இல்லையென்ற வலியை விட, இருந்தும் இல்லாமல், உடனிருந்தும் பார்வைக்கூட தீண்டிடாது விலகி நிற்பதன் வலி இன்னும் இன்னும் கொடுமை என்று தெரிந்தே தனது விநோண்ணாவிற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறான்.

தானே தன்னுடைய அண்ணனுக்கு வருத்தமளிக்கிறோம் என்னும் தன்மீதான கோபத்தை பற்களை கடித்து, தாடை இறுகிட பொறுத்திட்டான்.

“துருவ்.”

விநோதன் தன்னைத்தேடி வருவானென்று துருவனுக்கு நன்கு தெரியும். அதற்காகவே பயணத்தினாலும் உண்டான அலுப்பையும், நள்ளிரவு கடந்ததால் கண்களை தழுவிடும் தூக்கத்தினையும் விரட்டியடித்தவனாக விநோவிற்காக காத்திருந்தான்.

தங்கள் இருவருக்குமான தனிமை கிட்டிடவில்லை என்பதாலேயே விநோ துருவனிடம் பேச முயற்சிக்கவில்லை.

விநோவின் ஒற்றை அழைப்பு தேகம் முழுவதும் சிலிர்ப்பூட்டியது.

தூக்கத்திலும் காதோரம் ஒலிப்பதாக அவனின் நினைவில் துள்ளி எழுந்து கலங்கிய இரவுகள் மனக்கண்ணில் தோன்றிட, கண்களை அழுந்த மூடி தலையை மேல்நோக்கி உயர்த்தியிருந்தான்.

துருவனின் கண்ணீர் காதோரம் வழிந்தது.

விநோவின் ஒவ்வொரு அடியின் ஓசையையும் துல்லியமாக அளவிட்டான்.

‘இன்னும் இரண்டே அடி தன் பக்கத்தில் வந்திடுவார்.’

விநோவின் நெருக்கத்தை துருவனின் மனம் கூக்குரலிட்டு சொல்லிட…

தம்பியை நெருங்கிவிட்ட விநோ, அவனின் தோளில் கரம் பதிக்க நீட்டிட… சட்டென்று திரும்பிப் பாய்ந்து அணைத்திருந்தான் துருவன்.

அத்தனை இறுகிய அணைப்பு. ஆரத்தழுவல்.

“விநோண்ணா…”

துருவனின் முகம் விநோவின் தோளில் புதைந்திருக்க, அவனின் உச்சரிப்பு விநோவின் காதில் இனிய கீதமென ஒலித்திட, எலும்புகள் நொறுங்கும் அளவிற்கு தன் தம்பியை கட்டிக்கொண்டிருந்தான் விநோதன்.

ஆழ்ந்த அணைப்பு.

நிமிடங்கள் கரைந்தது.

“கோபம் போயிடுச்சா?”

விநோ கேட்டிட, ஒரு கையால் விநோவின் கன்னத்தை அழுத்தமாக பற்றியவன், அவனின் மற்றைய கன்னத்தில் அழுத்தமாக பற்கள் பதிய கடித்திருந்தான்.

வலித்த போதும்… சிரிப்புடன் துருவனின் கன்னத்தில் உதடுகள் புதைய முத்தம் வைத்தான் விநோதன்.

“சாரி கேட்கணுமா?”

விநோவின் வாயில் கை வைத்து தடுத்தவன்,

“நீங்க  செய்தது சாதாரண விஷயமில்லை விநோண்ணா. இதுக்காக உங்கமேல கோபமா இருப்பது அர்த்தமற்றது” என்ற துருவன்,

“எனக்கென்னவோ நீங்களா வந்து பேசினால், என் மனதிலிருக்கும் அழுத்தம் போயிடும்ன்னு தோணுச்சு. அதுக்காக உங்கக்கிட்ட ஈகோலாம் இல்லை. என்னோட விநோண்ணா என்னைத்தேடி வரணும். வருவாங்கன்னு தெரியும்” என்றதோடு,

“ஐ மிஸ் யூ சோ மச் விநோண்ணா” என்று விநோவின் அணைப்பிலிருந்தபடியே திரும்பத்திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தான்.

“உங்கக்கிட்ட நிறைய சொல்லணும் விநோண்ணா” என்றவன் விநோவின் கையினை பிடித்து இழுத்துச் சென்று மெத்தையில் அமர வைத்தவன், அவனின் மடியில் தலைவைத்து படுத்தவனாக கிட்டதட்ட மூன்று வருடங்களாக தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாதுக் கூறினான்.

மறைமுகமாக எல்லாம் அறிந்திருந்தாலும், துருவனின் ஆறுதலுக்காக ஒவ்வொன்றையும் புதிதாய் தெரிந்துகொள்வது போல் கேட்டுக்கொண்டான் விநோதன்.

பேசிக்கொண்டே துருவன் உறங்கிட, அறையின் குளிரை சற்று குறைத்து, துருவனுக்கு போர்வையை போர்த்திவிட்டு, அவனின் தலை கோதி வெளியில் வந்தான் விநோதன்.

இன்னும் இரண்டு மணி நேரத்தில் பொழுது புலர்ந்துவிடும்.

அனைவரும் உறங்கிக்கொண்டிருப்பார்கள் என்று விநோ நினைத்திட,

யதுவும், பாசிலும் அந்நேரத்திலேயே கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.

“என்னடா இப்போவே கிளம்புற?”

“என்னவொரு அதிசயம்? நீ எங்களை விரட்டாம இருக்க சொல்ற மாதிரி கேட்குற” என்ற யதுவை விநோதன் முறைத்தான்.

“ஜோக்ஸ் அப்பார்ட்” என்ற யது, “போகணும் விநோ. அங்க ஏதோ ப்ரோப்ளம். பாவனா கால் பண்ணாள். என்னன்னு சொல்லல. ஆனால், ஒரு மாதிரி தவிப்பா இருக்கு” என்றான்.

“தவறா எதுவுமிருக்காது” என்று யதுவின் தோள் தட்டிய விநோ, “கவனம்” என்றான் பாசிலிடம்.

தூங்கிக் கொண்டிருந்த கோகிலாவை எழுப்பி தேநீர் கலக்கக் கூறிவிட்டு, யதுவிடம் வந்தான்.

“உனக்கு இங்கயே ஜாப் மாற்றியாச்சு விநோ. நீ இன்னைக்கே கூட டுயூட்டியில் ஜாயின் பண்ணிக்கலாம்” என்றான் யது.

“ம்ம்ம்… நேத்தே மெயில் வந்தது” என்ற விநோ… யதுவை இறுக்கமாக அணைத்திருந்திருந்தான்.

விநோவின் பெரிய செயலுக்கு பின்னால், பக்கபலமாக துணை நின்றது யதுவாயிற்றே. அவனில்லை என்றால், விநோவால் இத்தனை தைரியமாக அதனை செய்திருக்க முடியாதே!

நன்றி கூறினால் ஓடவிட்டு அடித்தாலும் அடிப்பான். அதற்காகவே தன்னுடைய நன்றியை அணைப்பில் காட்டிக்கொண்டிருந்தான் விநோதன்.

“அப்பப்போ நீங்க மட்டும் கட்டிபிடிச்சிக்கிறீங்க. போங்கடா உங்க பேச்சு கா” என்று திரும்பிய பாசிலை, ஒரே நேரத்தில் இழுத்து தங்களுக்குள் அடக்கியிருந்தனர் யதுவும், விநோவும்.

“டீ ரெடி” என்று வந்த கோகிலா,

“கிளம்பிட்டிங்களா யதுண்ணா?” என்றாலும் அவளின் பார்வை பாசிலை தொட்டு மீண்டது.

“பத்து நாள். துருவ் மேரேஜூக்கு வரப்போறோம்” என்றான்.

“யாரையும் எழுப்ப வேண்டாம் விநோ. நான் போயிட்டு ஃபிரீ ஆனதும் கால் பன்றேன்” என்ற யது, பாசிலுடன் கிளம்பிவிட்டான்.

“அப்புறம் டா. அண்ணா மேல் கோபமா இருக்க மாதிரி இருக்கே” என்றபடி கோகிலாவின் தோளில் கைப்போட்டு உள்ளே வந்த விநோ, மெத்திருக்கையில் அமர்ந்தான்.

“அது அப்போ சும்மா. உங்களை பார்த்ததுமே கோபம் போயிடுச்சு. உங்க செயலுக்கு பின்னாலிருக்கும் காரணம் நியாமானதா இருக்கும் போது கோபப்படுறது தப்பு” என்றவள், “நீங்க என்ன செய்தாலும் ஒரு காரணமிருக்கும்ன்னு தெரியும் விநோண்ணா” என்றாள்.

கோகிலா இப்படித்தான். வயதுக்கு மீறிய பக்குவமும் புரிதலும் அவளிடத்தில் இருக்கும். அதற்கு காரணம் அவள் தாண்டி வந்த வலியாகக்கூட இருக்கலாம்.

கோகிலாவின் உச்சியில் கை வைத்து அழுத்தம் கொடுத்தவன், அவளின் முகத்தையே பார்த்திருந்தான்.

‘உன்னை கஷ்டப்பட்டாவது சந்தோஷமா வாழ வச்சிடுவேன்’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.

“என்னண்ணா?”

“ஒண்ணுமில்லடா” என்றவன், “தூங்கு போ” என்றான்.

“ம்ம்ம்” என்றவள் “அண்ணியை உங்க ரூமுக்குத்தான் அனுப்பி வச்சேன்” எனக்கூறிச் சென்றாள்.

விநோ தாழிடாமல் மூடியிருந்த பூரணியின் அறை கதவினை திறந்து பார்த்துவிட்டு தன்னறைக்குச் சென்றான்.

குடும்பத்துடன் இணைந்துவிட்ட தாக்கத்தில், இங்கு வந்ததும் சுத்தமாக ஆதர்ஷினியை மறந்தே போனான். இப்போது கோகிலா சொல்லிய பின்னரே அவளின் நினைவு வந்தது.

‘ஏதும் தவறாக நினைத்திருப்பாளோ?’ என்ற கேள்வியோடு தான் அறைக்குள் வந்தான்.

ஆதர்ஷினி நல்ல உறக்கத்தில் இருந்தாள்.

அமைதியாக அவளுக்கு அருகில் சென்று படுத்துவிட்டான். அவனது அசைவில் உறக்கம் கலைந்து எழுந்தவள், அப்படியே கால் நீட்டி சரிந்து அமர்ந்தவளாக மணியை பார்த்துவிட்டு…

“துருவ் ஓகே ஆகிட்டாங்களா?” எனக் கேட்டாள்.

“ம்ம்” என்றவன், அவளின் மடியில் தலை வைத்துக்கொண்டான்.

“எல்லாரையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் ஆதும்மா. எனக்காக, காட்டிக்காம என்னை ஆறுதல் படுத்துறாங்க” என்றவன் அவளை இடையோடு கையிட்டு தன் முகத்தை அப்படியே அவளின் வயிற்றில் பதித்தவனாக மௌனமாக அழுதிட்டான்.

“அச்சோ வினு என்னதிது. தைரியமா எவ்வளவு பெரிய காரியமெல்லாம் செய்திட்டு. இதென்ன சின்ன பிள்ளை மாதிரி அழுகை” என்றவள் அவனின் முகம் நிமிர்த்தி, மீசையை முறுக்கிவிட்டு… “போலீஸ்ன்னா கெத்தா இருக்க வேண்டாமா?” என்றாள்.

“போலீசும் சாதரண மனுஷன் தான்ம்மா. எங்களுக்கும் அழுகை வரும். எல்லா உணர்வும் இருக்கு” என்றான்.

“ஆஹான்… அப்படியா?” என்றவள், “பார்த்தா அப்படி தெரியலையே?” என்று அவனின் முகத்தை குறுகுறுவென்று பார்த்திட்டாள்.

“என்ன அப்படி தெரியல” என்றவன் அவளின் பார்வையில் தடுமாறினான்.

“அந்த அப்படி என்னன்னா?” என்றவள் அவனை நெருங்கி அமர்ந்து அவனது நெற்றியில் தொடங்கி புருவம், மூக்கு, உதடு என தன் விரலால் வருடியவள்…

“உணர்வு இருக்குன்னு சொன்னீங்களே! என்ன உணர்வு அது?” என்று அவனின் காதில் கிசிகிசுத்திட,

‘மொத்தமா கவுக்க பார்க்கிறாள் விநோ’ என்று மனதிற்குள் அளறினான் விநோதன்.

“என்ன… என்ன பன்ற நீ?” அவனது நா தந்தியடித்தது.

“அதுவா” என்றவள், அவனின் முகத்தை தாங்கிப்பிடித்து… “நான் கிஸ் பண்ணிக்கட்டுமா?” எனக் கேட்க, அவன் மறுக்கும் நிலையிலா இருக்கின்றான்.

அவனது காந்த விழிகள் அவளை சுருட்டிக்கொள்ள…

“இப்போ வரும் அந்த உணர்வு” என்றவள், அவனது இதழ்களை சிறை செய்திருந்தாள்.

விடும் மனமின்றி நீண்டது.

பூவுக்குள் அத்தனை வன்மை இருக்குமென்று அவன் எதிர்பார்க்கவில்லை.

அவன் தான் அவளிடமிருந்து விலகியிருந்தான்.

“ரொம்ப கெட்ட பொண்ணும்மா நீ” என்றவன் முகம் வெட்கச்சிரிப்பில் பூரித்திருந்தது.

“புருஷன்கிட்ட கெட்ட பொண்ணா இருக்கலாம் தப்பில்லை.”

“தப்பில்லை… தப்பில்லை…” என்றவன்,

“ஆர்ஜே மேடமுக்கு தைரியம் ரொம்பத்தான்” என்றான்.

“எனக்கு உங்களை பார்த்தாலே கிஸ் பண்ணத் தோணுது” என்ன பண்ணட்டும். உங்கக்கிட்ட நீங்களா பண்ணுவீங்கன்னு அமைதியா இருந்தா ஒண்ணும் வேலைக்காகது. அதான் நான் என்னை தைரியமாக்கிக்கிட்டேன்” என்றவளின் பேச்சுக்கள் வேறு மாதிரி தெரிந்தாலும், அதில் அவன் உணர்ந்து கொண்டதெல்லாம் அவன்மீதான அவளின் அப்பட்டமான காதல். காதல் மட்டுமே.

“லவ் யூ டி” என்றவனின் சிறு விரல் தானாக அவளது விரலோடு பிணைய, அவளின் அதரத்தில் அழுந்த முத்தமிட்டு விலகினான்.

“ரொம்ப நிறைவா இருக்கு” என்றவன், “நான் கஷ்டப்படாமலே எனக்கு கிடைச்ச என்னோட சந்தோஷம் தர்ஷி நீ” என்றான்.

அவனது வார்த்தையில் மொத்தமாய் அவனுள் கட்டுண்டாள்.

மாய வார்த்தைகள் ஏதுமின்றி அவன் உரைத்திட்ட காதல் அவளை உயிர் உறைய வைத்தது.

“கொஞ்ச நேரமாவது தூங்கலாமா?” என்றவன், “இன்னைக்கே ஜாயின் பண்ணிடலாமா பார்க்கிறேன்” என்றான்.

ஆதர்ஷினியும் ஆமோதித்திட…

அவர்களின் அறை கதவு தட்டப்பட்டது.

ஆதர்ஷினி எழுந்து சென்று திறந்திட துருவன் தான் பாதி கலைந்த உறக்க நிலையில் நின்றிருந்தான்.

“அண்ணி… அண்ணா?” என்றவன் உள்ளே எட்டிப்பார்த்திட… ஆதர்ஷினி விலகி வழிவிட்டாள்.

“அண்ணி, யூ டோன்ட் மைன்ட்” என்றவன் வேகமாக உள்ளே நுழைந்து,

“விநோண்ணா இருக்கீங்களா?” எனக்கேட்டு மெத்தையில் அவனருகில் அமர்ந்தான்.

“துருவ் என்னாச்சு?”

“விநோண்ணா” என்றவன், விநோவின் முகம், தோள், கை என தடவிப் பார்க்க…

“துருவ்… என்னடா” என்று அவனின் இருபக்கமும் விநோ பிடித்து உலுக்கிய பின்னரே உறக்கம் முற்றிலும் கலைந்து அங்கு அவனையே ஆராய்வாக பார்த்திருந்த ஆதர்ஷினி மற்றும் விநோவை சங்கடமாக ஏறிட்டான்.

“எப்பவும் நைட் தூங்கும்போது நீங்க பக்கத்திலிருக்க மாதிரி இருக்கும். கண் திறந்தா, நீங்க இருக்க மாட்டிங்க. சுவற்றில் மாட்டியிருக்கும் போட்டோவில் தான் தெரிவீங்க. அப்புறம் தான் அது கனவுன்னு புரியும். இப்பவும், நான் தூங்கும்போது பக்கத்தில் இருந்தீங்க… எழுந்தா காணோம். எங்க இதுவும் கனவோன்னு பயம் வந்திடுச்சு” என்று சிறுப்பிள்ளையென கண்களில் சுரந்துவிட்ட கண்ணீரோடு சொல்லிய தம்பியை பாய்ந்து கட்டிக்கொண்ட விநோதன்…

‘எத்தனை தவிப்பிற்குள்ளாக்கிவிட்டோம்’ என்று வருந்தினான்.

தனக்கனா தேடல் தன்னுடைய தம்பியிடம் எத்தகைய பெரியதென்று அக்கணம் புரிந்துகொண்ட விநோவிற்கு துருவனின் பாசம் பொக்கிஷமாகவேத் தோன்றியது.

பார்த்துக்கொண்டிருந்த ஆதர்ஷினிக்கு அவர்களது அன்பும், நெருக்கமும் புரிவதாய்.

அவர்களுக்குள் எப்போதும் இந்த அன்பும், பாசமும் நிலைத்திருக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டாள்.

நிலைத்திருக்குமா? நீடித்திருக்குமா?

****************

அன்று துருவனிற்கு திருமணம்.

கடந்து சென்ற பத்து நாட்களும் அவர்களுக்கு சொர்க்கம் தான். ஆதர்ஷினி அழகாய் அவ்வீட்டின் மூத்த மருமகளாகப் பொருந்தி போனாள்.

நிரல்யாவிற்கு அக்கா என்கிற முறையில் அனைத்தையும் தன்னுடைய கணவனுடன் சேர்ந்து, பூரணியிடம் ஒவ்வொன்றையும் கேட்டு கேட்டு செய்தாள்.

அங்கிருப்பவர்களுக்கு ஆதர்ஷினி இன்றியமையாதவளாக மாறியிருந்தாள்.

விநோவின் செயலுக்காக போதை பொருள் கடத்தல் கும்பலை ஒட்டு மொத்தமாக அழித்ததற்காக உயர் பதவியுடன் சென்னையில் பணி கிடைத்திட, இதற்கு மேல் குடும்பத்தை விட்டு இருக்க முடியாதென, அதனை மறுத்து கொடைக்கானல் நகராட்சியில் துணை ஆணையராக விநோதன் பதவி ஏற்று ஒரு வாரமாகிறது.

விநோதனின் செயலை பாராட்டி, மாநில காவல் துறையின் உள்துறை அமைச்சர் பதக்கமும், கேடயமும் வழங்கியிருந்தார். அதனை குடும்பத்தினர் முன்னிலையில் பெற்றிருந்தான்.

வாரத்தின் சில நாட்கள் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். சொல்லப்போனால் அவனது பணியிடமே அதுதான். இரண்டு மணிநேர பயண தூரம்.

அவனின் அலைச்சல் கருதி அங்கேயே வீடு எடுத்து தங்கிக்கொள்ள சொல்லி பூரணி சொல்ல… நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டான். அவனுக்கு இனியும் குடும்ப சூழலின்றி வாழ விருப்பமில்லை.

தம்பியின் திருமணத்திற்காக நான்கு நாட்கள் விடுமுறை எடுத்துவிட்டு ஆரோனை உடன் சேர்த்துக்கொண்டு அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து முடித்திருந்தான்.

இப்போது நிரல்யாவுக்கு துருவனைவிடவும் விநோவிடம் அதிக ஒட்டுதல். கோகிலா எப்படியோ அப்படியே நிரல்யாவும் அவனுக்கு.

நிரல்யாவுக்கு சிறுவயது முதல் கிடைக்காத மொத்த பாசத்தையும் அந்த கூட்டில் வஞ்சனையின்றி பெற்றுவருகிறாள்.

திருமணம் அவர்களது ரிசார்ட்டின் தோட்டத்திலே பல வண்ண மலர்கள் கொண்டு அமைக்கப்பட்ட மேடையில் ஏற்பாடாகியிருந்தது. பார்ப்பதற்கு டெஸ்டினேஷன் வெட்டிங் என்று சொல்லும் வகையில் விநோ செய்திருந்தான்.

இவர்களுடனே விநோ, ஆதர்ஷினியின் திருமணத்தை வைக்கலாம் என்று பூரணி சொல்லிட விநோதன், ‘இயற்கை சாட்சியாக பால் நிலவு ஒளியில் நடந்திட்ட திருமணத்திற்கு மேல் ஒன்று வேண்டுமா’ என்ற எண்ணத்தில் மறுத்துவிட்டான்.

“சுற்றம் சூழ உன் கல்யாணத்தை பார்க்க எங்களுக்கு ஆசையிருக்காதா?” கேட்ட அன்னைக்கு, ஆதர்ஷினியை தங்களின் வீட்டு பூஜை அறைக்குள் அழைத்துச் சென்றான்.

என்ன செய்கிறான் இவனென்று அனைவரும் பின்னால் சென்று நின்றிட…

சாமிக்கு முன்னாலிருந்த குங்குமத்தை எடுத்து ஆதர்ஷினியின் வகிட்டில் வைத்தவன், தன்னுடைய சதியுடன் பூரணியின் பாதம் பணிந்தான்.

இருவரையும் மன நிறைவோடு ஆசீர்வதித்து தூக்கிய பூரணியிடம்,

“நாங்க நல்லாயிருக்கணும் அப்படின்னு இங்கிருக்கும் உங்க நாலு பேரை தவிர வேறு யார் அதிகமா நினைக்கப்போறாங்க? எனக்கு இந்த கல்யாணம் போதும். என் மனசுல இவளை என்னைக்கு நினைக்க ஆரம்பிச்சனோ அந்த நொடியிலிருந்தே இவள் தான் என் மனைவி. தாலிங்கிறது என்னை பொறுத்தவரை ஊருக்குத்தான். மனசால் சேர்ந்த பிறகு இதெதற்கு இன்னொரு முறை” என்றவனின் பதிலில் பூரணி வாயடைத்து நின்றார்.

பொண்ணு மாப்பிள்ளை மணமேடைக்கு அழைத்துவரப்பட… சரியாக அந்நேரம் பாசிலுடன் தகுந்த பாதுகாப்புகளுடன் வந்து சேர்ந்தான் யது நந்தன்.

நீயிப்படித்தான் இந்நேரம் தான் வரவேண்டும்… தாலி கட்டியதும் கிளம்பிட வேண்டுமென்பது விநோதனின் கட்டளை.

விநோவை மனதிற்குள் திட்டிக்கொண்டே தான் இதற்கு சம்மதித்தான் யது.

விநோவும் அவனின் பதவிக்காக யதுவிற்காக அனைத்துவிதமான பாதுகாப்புகளையும் ஏற்பாடு செய்திருந்தான். அவன் ஒருவனின் வருகைக்காகவே நெருங்கிய சொந்தங்களை மட்டுமே அழைத்திருந்தான்.

நூறு, நூற்றைம்பது பேர் மட்டுமே இருக்கும், வந்திருப்பவர்களின் எண்ணிக்கை.

மேடையில் சம்பிரதாயங்கள் நடக்கத் துவங்கின.

மாப்பிள்ளையை அழைத்துவர சொல்ல…

விநோ துருவனிருந்த அறைக்கு சென்றான்.

அங்கு ஆரோனும், பாசிலும் துருவனை தயார் செய்திருந்தனர்.

“விநோண்ணா…”

மாப்பிள்ளை கோளத்தில் தம்பியை கண்ட விநோவின் கண்கள் தலும்பியது.

பாலகனாக தன் பின்னால் சுற்றிய தன்னுடைய மூத்த மகனுக்கு திருமணம் என்ற எண்ணம் தான் விநோவிடம்.

தம்பியை அணைத்து விடுவித்தவன்,

“நீ வளர்ந்துட்டன்னு அப்பப்போ நடக்கும் சில விஷயங்களால் தான் தெரியுது துருவா” என்றிட, துருவன் விநோவின் கன்னத்தில் இதழ் பதித்தான்.

“லவ் யூண்ணா.” துருவனும் வெகுவாய் நெகிழ்ந்திருந்தான்.

“அங்க பொண்ணு வந்திருக்கும்.” ஆரோனின் குரலில் தான் இருவரும் விலகினர்.

துருவன் மேடைக்கு வரும் நேரம், நிரல்யாவும் ஆதர்ஷினி, கோகிலா, மாளு துணையுடன் மேடையேறினாள்.

துருவ் ஐயர் சொல்லியதை செய்யத் துவங்கியதும், விநோ யதுவின் அருகில் வந்து நின்றுகொண்டான்.

துப்பாக்கி ஏந்திய இரு பாதுகாவலர்களுக்கு நடுவில் யது அமர்ந்திருக்க, அவனின் அருகில் அவர்களுக்கு இணையாக விநோவும் நின்றிருந்தான்.

“என் மேல உனக்கும் கொஞ்சம் பாசம் இருக்குடா!” தான் வந்தது முதல் தன்னைவிட்டு பிரியாது உடன் நின்றிருக்கும் விநோவிடம் யது கூறினான். நடுவில் துருவனை அழைக்க மட்டுமே விலகி சென்றிருந்தான்.

“பாசமெல்லாம் ஒண்ணுமில்லை. உனக்கு எதாவது ஆச்சுன்னா என் தலை தான் உருளும். உன்னை யாருடா வரச்சொன்னா? உன்னால் பாரு கல்யாணத்துக்கு நிறைய பேரை கூப்பிடக்கூட முடியல” என்று விநோ அடக்கப்பட்ட சிரிப்பிடன் கூற,

“ஹோ…” என்ற யது, “அப்போ நான் கிளம்புறேன். போ” என்று எழுந்தவனை, கையோடு இழுத்துக்கொண்டு மேடை ஏறியிருந்தான் விநோதன்.

“சி.எம் சாருக்கு ரொம்பத்தான் கோபம் வருது” என்ற விநோ… “நீயில்லாம நம்ம வீடு முழுமையடையாதுடா” என்றான். அதனையும் எவ்வித பூசலுமின்றி கூறிய விநோவின் அன்பில் யதுவிற்கு எப்போதும்போல் இப்போதும் பிரமிப்பு தான்.

“எப்படிடா உன்னால் மட்டும் இப்படி?” என்று கேட்ட யதுவிற்கு தெரியும், அந்த கூட்டிற்குள் ஒவ்வொரும் சந்தோஷமாக அடங்கியிருப்பது விநோதன் என்பவனுக்காக மட்டுமே.

முதல் முறையாக ஆதர்ஷினி கணவனை மற்ற வண்ண உடையில் காண்கிறாள். காக்கிச்சட்டை அவனுக்கு அழகு தான் என்றபோதிலும், வேட்டி சட்டையில் முறுக்கிவிட்ட மீசையுடன் பார்ப்பதற்கு அத்தனை பிடித்தது அவளுக்கு.

“என்ன அண்ணி அண்ணனை பயங்கரமா சைட் அடிக்கிறீங்க போல?” மாளு கேட்டிட…

“அண்ணனை அண்ணி இப்போ சைட் அடிக்கலன்னா தான் தப்பு” என்ற கோகிலாவை பொய்யாக முறைத்த ஆதர்ஷினி,

“கல்யாணத்துக்கு துணி எடுக்க கடைக்கு போனப்போ, எங்க இதுக்கும் கருப்பு கலரைத்தான் தூக்குவாரோன்னு எத்தனை பயந்தேன் தெரியுமா? நல்லவேளை இவங்க நாலு பேரும் ஒரே மாதிரி சட்டை போடனும்ன்னு ஆரோன் கலர் சூஸ் பண்ணாங்க. இல்லைன்னா இன்னைக்கும் கருப்பு தான்” என்றதோடு, “இந்த கலர் அவங்களுக்கு எப்படி இருக்குன்னு பார்த்தேன். அவ்வளவுதான்” என்றவள் அப்படியே அவர்களிடமிருந்து நழுவி விநோவின் பக்கம் சென்று நின்றுகொண்டாள்.

மாளுவும் ஆரோன் பக்கம் சென்று நின்றிட…

கோகிலாவின் கண்கள் தன்னைப்போல் பாசிலிடம் நிலைத்தது.

கோகிலாவுக்கும் அன்று பாசில் வித்தியாசமாகத் தெரிந்தான். கோகிலாவின் பார்வையை உணர்ந்த பாசில் சட்டென்று அவளை பார்த்து கண்ணடிக்க, வேகமாக முகத்தை திருப்பிக்கொண்டாள்.

‘எத்தனை நாள் இந்த முகத்திருப்பல், நானும் பார்க்கிறேன்’ என நினைத்த பாசில், பார்வையை மாற்றிக்கொண்டவனாக அவளுக்கு இணையாக சென்று நின்றிருந்தான்.

அனைவரையும் கவனித்த யது…

“என்னடா எல்லாரும் ஜோடி ஜோடியா நிக்கிறீங்க?” எனக் கேட்க,

“நீயும் பாவனாவை அழைத்து வந்திருக்க வேண்டியது தானே?” என்றான் விநோ.

“ம்க்கும்… கூப்பிட்டதும், வந்துட்டாலும்!” என்ற யதுவின் முகத்தில் ஏக்கம் மண்டியது.

“சீக்கிரம் சரியாகிடும்” என்ற விநோ யதுவின் தோள் தட்டினான்.

ஐயர் தாலி கட்ட சொல்லிட… அனைவரின் கவனமும் மணமக்கள் மீது பதிந்தது.

தொலைத்து தேடிய தன் உயிரை மூன்று முடிச்சிட்டு தன்னில் சரிபாதியாக்கிக் கொண்டான் துருவன்.

காத்திருந்தது கை சேர்ந்திட்ட நெகிழ்வில் நிரல்யா.

அதன் பிறகு அங்கு கொண்டாட்டத்திற்கு சொல்லவும் வேண்டுமோ? சடங்குகள், ஆட்டம் பாட்டமெல்லாம் இனிமையாய் நிறைவுற்றது.

யதுதான் தன்னை விரட்டிய விநோவை முறைத்துக்கொண்டே, அவனுக்காக தயாராக நின்றிருந்த ஹெலிகாப்டரில் சென்று உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு அமர்ந்தான்.

“யதுண்ணா பேசாம ரெண்டு நாள் லீவ் போடுங்க. இங்கயே இருங்க.” துருவன் சிரிப்பினைக் காட்டிக்கொள்ளாது கூறிட, யது அவனை நன்கு முறைத்தான்.

“என் வேலைக்கு லீவு தானே” என்ற யது, “அதான் யார்கிட்ட கேட்குறதுன்னு தெரியல” என்றவனின் பாவனையில் மொத்த பேரும் சத்தமாக சிரித்தனர்.

“பார்த்து போயிட்டு வா யது.” பூரணியின் சொல்லுக்கு தலையசைத்தான்.

அவர்களின் சிரிப்பில் தன் சந்தோஷத்தை உணர்ந்த யது, புன்னகை முகமாக பாசிலுடன் பறந்து சென்று மறைந்தான்.

யதுவின் மகிழ்வான முகம் கண்ட விநோ, யதுவின் வாழ்வில் அவன் இழந்ததையெல்லாம் நினைத்து வருந்தினான்.

அவனின் இப்போதைய சந்தோஷமாவது எப்போதும் நிலைத்திருக்க வேண்டுமென ஆசைகொண்ட விநோதன், மிக மோசமான நிலையில் கண்ணீரோடு நிற்கும் யதுவைத்தான் மீண்டும் சந்திக்கப்போகிறோம் என்பதை அக்கணம் அறியவில்லை.

******

மணமக்களை ஆதர்ஷினிதான் வீதற்குள் ஆலம் சுற்றி வரவேற்றாள்.

பூஜை அறையில் விளக்கேற்றிய நிரல்யா பூரணியிடம் ஆசீர்வாதம் பெற, அடுத்தடுத்து வீட்டில் நடக்கும் சம்பிரதாயங்களை பூரணி சொல்ல செய்து முடித்தனர் புது தம்பதியினர்.

குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வீட்டிலிருந்தனர்.

துருவனையும், நிரல்யாவையும் பூம்பாறை கோவிலுக்கு சென்று வருமாறு அனுப்பி வைத்தனர்.

அனைவரும் கூடத்திலேயே அமர்ந்து கொண்டனர்.

ஆதர்ஷினியும் மாளுவும் சலசலத்துக் கொண்டிருக்க… விநோவின் பார்வை முழுக்க தன் மனையாளிடம் தான்.

சிறிது நேரத்தில் பூரணி உடல் அசதியாக இருப்பதாக ஓய்வெடுக்க சென்றுவிட்டார்.

“என்னண்ணா அண்ணியையே பார்த்துட்டு இருக்கீங்க?” கோகிலா விநோவின் அருகில் அமர்ந்தாள்.

“என் பொண்டாட்டி செம அழகுல” என்ற விநோ கோகிலாவுக்கு புதிது. அவன் வெளிப்படையாக இப்படியெல்லாம் பேசுபவன் கிடையாது.

“நீங்களா இப்படி பேசுறீங்க?” என்ற கோகிலாவின் ஆச்சர்ய பாவனையில்,

ஆதர்ஷினியின் காதல் குறித்து மேலோட்டமாகக் கூறியவன்,

“நான் யாருன்னு முழுசா என்னைப்பற்றி தெரியாம, என்னை எனக்காகவே ஏற்றுக்கொண்டவள் கோகி… அவளை ரொம்ப சந்தோஷமா வச்சிக்கணும்” என்றதோடு, சொத்துக்கள் சொந்தங்களென அனைத்தும் இருந்தும் எப்படியானதொரு சூழலில் அவள் வாழ்ந்தாள், வளர்ந்தாள் என்பதைக் கூறி, “அவள் இழந்ததெல்லாம் கொடுத்து அவளுக்கு எல்லாமாவும் இருக்கணும்” என்றான்.

அவனின் பேச்சே அவன் அவனது கட்டுப்பாட்டில் இல்லாது, உணர்வுகளின் பிடியில் நெகிழ்ந்திருக்கிறான் என்பதை புரிந்துகொண்டாள் கோகிலா.

“கண்டிப்பா அண்ணி உங்களோட ரொம்ப சந்தோஷமா இருப்பாங்கண்ணா.”

சொல்லிய கோகிலாவை ஆதுரமாக பார்த்தவன்,

“நெக்ஸ்ட் உன் மேரேஜ் தான்” எனக்கூறி அவளின் தடுமாற்றத்திற்கான காரணத்தை அவதானித்தான்.

கைகளை பிசைந்தபடி இருந்தாளே தவிர, விநோவின் பேச்சிற்கு மறு வார்த்தை அவளிடமிருந்து வராது.

அந்நேரம் ரிசார்ட்டில் அனைத்தும் செட்டில் செய்து முடித்து ஆரோன் வந்து சேர்ந்தான்.

“அங்க எல்லாம் ஓகேவா ஆரு.”

“பக்காவா முடிச்சிட்டேன் விநோண்ணா” என்ற ஆரோன் விநோவை பார்த்து இமை சிமிட்டினான்.

சிறிது நேரத்தில் மாளுவை கூட்டிக்கொண்டு ஆரோன் கிளம்பிட, கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியிருந்தனர் மணமக்கள்.

இரவு வரையிலுமே விநோவுக்கும், ஆதர்ஷினிக்கும் அவர்களுக்கான தனிமை கிட்டிடவில்லை.

இரவு உணவு முடித்ததும் துருவனிடம் வந்த விநோ…

“நம்ம ரிசார்ட்டிலே… லக்ஸ்கிலாம்ப் மூன் சூட் ரெடி பண்ணியிருக்கு துருவ்” என்று அதனின் சிரியளவிலான ரிமோட் கீயினை துருவனின் கையில் கொடுத்தான்.

“விநோண்ணா…” தம்பியின் வெட்கம் கலந்த முகம் விநோவின் ரசிப்பிற்குரியதாய்.

“நல்ல நேரம் முடியறதுக்குள்ள அனுப்பி வை விநோ” என்ற பூரணி நிரல்யாவின் கன்னம் வழித்து முத்தம் வைத்தார்.

அவர்கள் புறப்பட்டு சென்ற நேரமிருந்த இதம் நாளைய விடியலில் முற்றும் குலைந்தது.

அதீத வேகத்தில் பதட்டத்துடன் ரிசார்ட் நோக்கி சீறி சென்றுக்கொண்டிருந்தான் விநோதன்.

error: Content is protected !!
Scroll to Top