உயிர் உறை 35
தேடல் 11
“வாவ்… செமயா இருக்கு சீனியர்.”
ரிசார்ட்டில் லக்ஸ்கிளாம்ப் அமைப்பு சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்காக, மாதிரி வடிவம் போல் ஒன்றை முதலில் செய்து பார்க்க… அது அவர்கள் எதிர்பார்த்ததைவிடவே சிறப்பாக அமைந்தது.
இன்று அதில் தான் துருவன், நிரல்யாவிற்கான தனிமை இரவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரவு விளக்குகளால் கண்ணாடியால் ஆன நீர்குமிழி போலிருந்த அதன் தோற்றமும், பல வண்ண மலர்கள் கொண்ட செடிகளுக்கு நடுவில் அது அமைந்திருந்த விதமும் பார்த்ததும் நிரல்யாவை சிலாகிக்க வைத்தது.
“இதில் தான் தங்கப்போறோமா சீனியர்?”
“ஆமா” என்றவன், “இன்னும் என்னடி சீனியர்?” என்றான்.
“அது பழகிடுச்சு. நானென்ன பண்ணட்டும்” என்று அவள் கேட்க,
“உள்ள போனதும் நான் பண்ணுறதுல, உனக்கு நான் புருஷன்கிற எண்ணத்தை தவிர வேறெதுவும் நினைவுக்கு வராது” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு உள் நுழைந்தான்.
“இங்க பக்கத்தில் வேற கிளாம்ப் இருக்கா?” சுற்றுப்புறத்தை ஆராய்ந்தபடி வினவினாள்.
“இல்லை” என்றவன், “இது, மாதிரிக்காக அமைத்தது. இதை வைத்து தான் மற்றவை கட்டமைக்கப்படும். எந்தவொரு கிளாம்ப்புக்கும் தொடர்பு இருக்காது. பாதை கூட தனித்தனி” என்றான்.
பேச்சிற்கு இடையில் உள்ளே வந்தவள் உள்ளிருந்து வெளிப்புறம் தெரிந்த காட்சியில் விழி விரித்து நின்றாள்.
சுற்றி மலையின் காட்சி. அருகே வெள்ளி கம்பியாய் கொட்டும் அருவி. அதன் பேரிடி சத்தம் இசையாய். நீரோடும் ஓடையென கண் விரியும் பரப்புகள் யாவும் இயற்கையின் எழிலை காட்டிக்கிடக்க, கன்னத்தில் கை வைத்து ரசித்து நின்றவளை பின்னாலிருந்து கட்டிக்கொண்டான். தன் நாடியை, அவளின் தோளில் பதித்து, கன்னத்தில் சத்தமிட்டு முத்தம் வைத்தான்.
“துருவ்…”
“இப்போ என் பெயர் வருதே” என்றவனின் கைகள், அவளின் வயிற்றில் அழுத்தமாக பதிந்தது.
தன்னவனின் முதல் நெருக்கம். அத்தனை இறுக்கமாக, கண்மூடி கிறங்கி அவன்மீதே பின்பக்கமாக சாய்ந்தவள்…
“வெளியிலிருந்து பார்த்தா தெரியாதா?” எனக் கேட்டாள்.
“இதோட ஸ்பெஷலே அதுதான்” என்றவன்…
“ஷெல் வீ” என்றிட, அவனுக்கு முன்பக்கம் திரும்பி மார்பிலே கைவைத்து தன் முகம் அழுத்தினாள்.
“இதெல்லாம் கேட்பாங்களா?” வார்த்தைக்கும் நோகுமோ என்றிருந்தது அவளின் குரல்.
“நான் கேட்பேன்… ஒரு பெண்ணோட சம்மதம் எல்லா இடத்திலும் அங்கீகரிக்கப்படனும்” என்றவன், அவளின் நாடி பிடித்து முகம் உயர்த்தி தன் விழி பார்க்க செய்தான்.
“என் கண்ணை பார்த்து சொல்லு” என்று அவர்களின் வாழ்வின் துவக்கத்திற்கு சம்மதம் கேட்டு நின்றான்.
அடுத்து அங்கு நடந்த நிகழ்வில் கண்ணாடி கூரையின் ஊடே கண்ட காட்சியில் வானில் உலா போகும் நிலவும், தன் மேகக்காதலனில் தன்னை புதைத்துக்கொண்டாள்.
இயற்கையின் நடுவே இதமாய் ஓர் சங்கமம்.
நிரல்யாவை அணைத்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் துருவன்.
திடீரென விழிப்புத் தட்டியவள், தன்னவனை ஆழ்ந்து ரசித்தாள். தேடிய தேவதை தன் நெஞ்சத்தில் என்ற நிறைவால் ஆழ் உறக்கத்தில் துருவன்.
நழுவி கிடந்த புடவையை தன்னில் சுற்றியவள் எழுந்து குளியலறை சென்றுவர, அவளின் அலைப்பேசி மின்னி ஒளிர்ந்தது. மணியை பார்க்க, அதுவோ இன்னும் இரண்டு மணிகளில் விடிந்துவிடுவேனென்று காட்டியது.
என்னவென்று பார்க்க… புலனம் வழி ஏகப்பட்ட குறுஞ்செய்திகள் குவிந்திருந்தன. அனைத்தும் திவாகரிடமிருந்து.
சில வாரங்களாகவே அவனது தொல்லை இல்லையென்று நிம்மதியாக இருந்தவளிடம் சட்டென்று பயம் தொற்றிக்கொண்டது.
பதட்டத்துடன் திறந்துப் பார்த்தாள்.
சிறிது நேரத்திற்கு முன்னிருந்த மொத்த இன்பமும் வடிந்து தொலைந்தது போல் வாய்ப்பொத்தி துருவனை பார்த்தவாறு சத்தமின்றி கண்ணீர் வடித்தாள்.
அவள் தான் அனுப்பியவற்றை பார்த்துவிட்டாள் என்றதுமே திவாகர் அவளுக்கு அழைத்து விட்டான்.
சைலண்ட்டில் கிடந்த அலைபேசி விடாது ஒலித்துக் கொண்டிருக்க… குளியலறைக்குள் சென்று ஆன் செய்தாள்.
“என்னடி… எல்லாம் முடிஞ்சுதா?”
திவாகரின் இழிவான கேள்வியில் உடல் கூசிப்போனாள்.
“நீ…”
“நானே தான். எங்கயாவது காணமப் போயிடுவேன் நினைச்சியோ. உன்னை விட்டு அவ்வளவு சீக்கிரம் எங்கும் போகமாட்டேன்.
என்னை ஏமாத்திட்டு அவனோட நீ சந்தோஷமா வாழ்ந்திடுவியா? நான்தான் அதுக்கு விட்டுடுவேனா?” என்றவன், “இப்போ அவனோட இருந்ததானே… அதே மாதிரி என்னோடும் ஒரு முறை இருந்துட்டு போ. உன்னை விடுறேன்” என்று மனசாட்சியே இல்லாது பேசினான்.
“உனக்காகத்தான் ரொம்ப பெரிய ரிஸ்க்குக்கு நடுவில் வந்திருக்கேன்” என்றான்.
வெளியில் துருவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.
அவளால் இந்நிலையில் சத்தமிட்டுக்கூட அழ முடியாது போனது.
“என்னால் முடியாது.”
“முடியுமே… உன் ஃபோனுக்கு அனுப்பியிருக்கும் எல்லாம், நீ வரலன்னா கொஞ்ச நேரத்தில் உன் குடும்பத்து ஆளுங்க எல்லாருக்கும் போகும்” என்று மிரட்டினான்.
“என்னை விட்டுடு.”
அவளின் கெஞ்சலில் கெக்களித்து சிரித்தான்.
“உன்னை விடுவதா?” என்று பற்களை கடித்தவனின் கண் முன் துருவனும், ஆரோனும் அவனை அறைந்த காட்சி தோன்றி மறைந்தது.
“உன்னை வச்சு அவனுக்கு வலியை கொடுக்கணும்” என்று முழங்கியவனின் பேச்சு அவளுக்கு விளங்கவில்லை.
யாரை குறிப்பிடுகிறான் என்று தெரியவில்லை.
“என்ன அனுப்பிடட்டுமா?”
அவளை சார்ந்தவர்கள் யாரும் அவன் அனுப்பும் காட்சிகளை நம்பப்போவதில்லை என்பது திண்ணம். ஆனால் அவர்கள் இதனால் படும் கஷ்டம்… ஒவ்வொருவரின் மகிழ்ச்சி ததும்பும் முகத்தை கண்மூடி நினைவுபடுத்தி பார்த்தவள்,
‘திவாகருடமிருந்து தப்பிப்பது அத்தனை எளிதல்ல… அவன் வழியில் சென்றுதான் அவனை மடக்க வேண்டும். இது அழுவதற்கான நேரமில்லை’ என்று திடமாக நிமிர்ந்தவள்…
“எங்க வரணும்?” என்று கேட்டாள்.
“சபாஷ்… இதைத்தான் உன்கிட்ட எதிர்பார்த்தேன்” என்றவன், “நீயிருக்கும் இடத்தில் தான் நானும் இருக்கேன்” என்றவன் காட்டேஜின் எண்ணினை சொல்லி, “பத்து நிமிஷத்தில் நீயிங்கிருக்கணும்” என்றான்.
“உன் புருஷனை எழுப்பி சொல்லலாம் நினைக்காத! எதை வச்சு என்னை மாட்டிவிட்டியோ இன்னமும் அதெல்லாம் என்கிட்ட தான் இருக்கு. பொய் சொல்றன்னு நினைக்காதே. பேக்கப்புன்னு ஒண்ணு எதுக்கு இருக்கு…” என்றவன், “உன்னையும் ஒருமுறை அப்படி அப்படி எடுத்துட்டனா போதும்” என்றான்.
அவனின் பேச்சில் அருவருத்துப்போனாள்.
“உன் புருஷனை கூட்டி வந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை. அவன் அந்த கிளாம்ப்புக்குள் இருக்கும்வரை தான் சேஃப். என் வேலை முடியுறதுக்கு முன்னால், அவன் வெளிய கால் வைத்த அடுத்த செக் அவுட். நம்பிக்கையில்லைன்னா… கிளாம்ப் எதிரில் ஒரு புதரு இருக்கே அதை உத்துப்பாரு” என்றான்.
வேகமாக குளியலறைக்குள்ளிருந்து வெளியில் வந்தவள், கண்ணாடி கதவின் ஊடே அவன் சொல்லிய புதரை நோட்டமிட… தடியாக ஒருவன் கையில் துப்பாக்கியுடன் புதரிலிருந்து வெளிவந்தான்.
“அங்கிருக்கும் அத்தனை புதருக்குள்ளும் என் ஆளுங்க இருக்காங்க. அவன் சுதாரிக்கும் முன்பு என் ஆளில் ஒருவன் அவனது கதையை முடித்திருப்பான்” என்றவன் வெடிச்சிரிப்பு சிரித்தான்.
கட்டிலில் புன்னகை முகமாக உறங்கிக்கொண்டிருந்த துருவனை திரும்பிப் பார்த்தவள், சத்தமின்றி அழுதாள்.
“உன் போனை வச்சிட்டு வா. கையில் காதில் என்ன மாட்டியிருந்தாலும் கழுட்டி வச்சிட்டு வா. எந்தவொரு எலக்ட்ரானிக் டிவைசும் உன் கையில் கொண்டுவரக்கூடாது” என்றவன் “ரொம்ப காக்க வைக்காத” என அழைப்பை முடித்திருந்தான்.
ஓங்கி கத்த வேண்டும் போலிருந்த அழுகையை கட்டுப்படுத்தியவள், துருவனின் அருகில் சென்று நின்றாள்.
‘முடிஞ்சளவுக்கு போராடுவேன். முடியலன்னா திரும்பி வரவேமாட்டேன்’ என்று துருவனின் முகம் பார்த்து மனதோடு சொல்லிக்கொண்டவள்,
“லவ் யூ சீனியர்” என்று சத்தமின்றி உச்சரித்தவளாக மெல்ல வெளியேறினாள்.
அவள் கிளாம்ப்பை விட்டு வெளிவந்த அடுத்த நொடி, அவளது கை திவாகரின் பிடியிலிருந்தது.
அவனது தொடுகையில் அசூசையை உணர்ந்தவள் அதனை தன் உடல்மொழியிலும் பிரதிபலித்தாள்.
“நான் தொட்டால் பிடிக்கலையோ?” என்றவன், நிரல்யாவை இழுத்துக்கொண்டு அருவி பாதைக்கு சென்றான்.
அருவி பகுதியோடு ரிசார்ட்டின் எல்லை முடிவடைய, அதனை கம்பி வேலி கொண்டு தனியார் இடமென்ற பலகையை வைத்திருந்தான் துருவன்.
அதனை கடந்து மலைகாட்டுப்பகுதி.
ஏற்கனவே வேலியை உடைத்து வைத்திருந்தான். அந்த பக்கம் செல்வதற்காக.
“என்னை எங்க கூட்டிப்போற? காட்டேஜிற்குத்தானே வர சொன்ன?” அவனிலிருந்து தன்னுடைய கையை விடுவிக்க போராடியவளாக வினவினாள்.
“ஏன் உன் புருஷனுக்கு ஏதும் க்ளூ கொடுத்திட்டு வந்திருக்கியா என்ன?” எனக் கேட்டவன் அவளை தூக்கி தோளில் போட்டவனாக நடக்கத் துவங்கினான்.
மற்றொரு காலடி ஓசை கேட்க, சட்டென்று நின்று சுற்றுப்புறத்தை அலசினான்.
காட்டுப்பூனை ஒன்று எதிர் பக்கம் ஓட, தன் நடையை தொடர்ந்தான்.
என்ன முயன்றும் அவனது பிடியில் அவளால் கொஞ்சமும் அசைய முடியவில்லை.
சற்று தூரத்தில் குகை போன்று ஒன்றிருக்க… அதன் முன் பெரிய பள்ளம். கீழே விழுந்தால் எலும்புகூட மிஞ்சாது.
“நம்ம இடம் வந்தாச்சு” என்றவன்,
“இடம் எப்படியிருக்கு? இங்கதான் நமக்கு, அது நடக்கப்போகுது” என்று சொல்லிக்கொண்டே நிரல்யாவை தன் உடலோடு அழுத்தியவனாக கீழே இறக்கி விட்டான்.
“ச்சீய்…” என்று விலகியவளின் கன்னத்தை அழுத்தி பிடித்தவன்,
“அவன் தொட்* பிடிக்குதோ. எங்க தொட்** இங்கா, இங்கையா?” எனக் கேட்டுக்கொண்டே அவளின் ஒவ்வொரு அங்கமாக தீண்டினாள்.
“ப்ளீஸ்” என்றவள் தரையில் சுருண்டாள்.
சருகுகள் மிதிபடும் ஓசை கேட்டிட, தன் முதுகுக்கு பின்னாலிருந்து துப்பாக்கியை எடுத்தவன், அதனை முன்னோக்கி பிடித்தவனாக அவ்விடத்தை வட்டமிட்டான்.
யாரும் இருப்பதற்கான அறிகுறியே இன்றி… காற்றுகளின் சலசலப்பு ஓசை மட்டுமே அவ்விடத்தை நிரப்பிக் கொண்டிருந்தது.
விடியல் எட்டிப்பார்க்கத் துவங்கியது.
“நாம் வந்த வேலையை பார்ப்போமா?” என்று, சுருண்டு கிடந்த நிரல்யாவை தூக்கிக்கொண்டு பாறைகளுக்கு நடுவில் நுழைய… அவளோ அவனை முட்டி திமிறினாள்.
துப்பாக்கியினை அங்கிருந்த பாறை மீது வைத்தவன்,
“கொஞ்ச நேரம் அமைதியா இருந்தன்னா… எனக்கு வேண்டியதை எடுத்துக்கிட்டு, உனக்கு வேண்டிய வீடியோஸ் எல்லாம் உன்கிட்ட கொடுத்திட்டு நான் போயிட்டே இருப்பேன். நீயும் அமைதியா எதுவுமே நடக்காத மாதிரி உன் புருஷனோட போய் வாழலாம்” என்றவன், “நான் இப்படியெல்லாம் சொல்லுவன்னு எதிர்பார்க்காத… இனி நீ என்கிட்ட இருந்து தப்பித்து போகவே முடியாது. காலம் முழுக்க என் கூடத்தான். அவசரத்துக்கு இந்த இடம் தான் செட் பண்ண முடிந்தது. வந்த வேலையை முடிச்சிட்டு நம்ம இடத்துக்கு போயிடலாம். அங்க நீ, நான் மட்டும் தான்” என்றான்.
நிரல்யாவை கீழே விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் கிடத்தியவன்,
“எப்படி என் ஏற்பாடு?” என்றவன் வெளிப்படையாக அவன் நோக்கத்தை சொல்ல…
நிரல்யா முகத்தை சுளித்தவளாக வெட்டித் திருப்பினாள்.
“என்னடி ரொம்பத்தான் சீன் போடுற” என்றவன், “இப்போ அந்த துருவனோடு முடிச்சிட்டுத்தானே வர. என்னவோ ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிற” என்று அவளை நெருங்கியவன்,
“உன் கழுத்தில் இருக்க கயிறு என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. இனி என்கூடத்தான் நீயிருக்கப்போற. அப்புறம் இதெதுக்கு” என்றான்.
நிரல்யா தாலியை இறுகப் பற்றிக்கொள்ள…
கையை நீட்டியவனாக அவளின் கழுத்திலிருந்த கயிற்றை பற்ற முயற்சித்தான்.
“கழுத்தில் அவன் கட்டிய தாலியோடு, என்னோட எப்படிடி… நீயே கழுட்டி கொடுத்திடு” என்றவன் நிரல்யாவின் இரு கையையும் தட்டிவிட்டவனாக தாலியை பிடித்து தன் கையில் சுற்றியபடி அறுத்திட முயற்சிக்க… அருகிலிருந்த பாறையில் அவன் வைத்த துப்பாக்கியை, அவன் உணரும் முன் கையில் எடுத்திருந்தாள்.
அவனை நோக்கி குறி வைத்தவள்,
“தாலியிலிருந்து கையை எடுடா” என்க,
அவனோ அசராது நின்றான்.
“துப்பாக்கியை ஒழுங்கா பிடிக்கத் தெரியாமலே என்னை சுட்டுடுவியா?”
திவாகர் கேட்டு முடிக்கும் முன்…
டப்பென்ற சத்தம் அவ்விடத்தை அதிர வைக்க… திவாகரை துப்பாக்கி குண்டு துளைத்திருந்தது.
“நிரல்யா…”
துருவன் மற்றும் விநோதனின் குரல்கள் ஒரு சேர ஒலித்தது.
*************
காவல் நிலையத்தில் விநோவின் முன்பு விசாரணைக்காக அமர்த்தப்பட்டிருந்தாள் நிரல்யா.
விநோவிற்கு எப்படி துவங்குவதென்ற தடுமாற்றம். முதன் முறையாக.
சஸ்பெக்ட்ஸ் பெண் என்பதால் விநோவுடன் பெண் ஆய்வாளர் மல்லிகா உடனிருந்தார்.
விநோ கண் காட்டிட மல்லிகா தன் விசாரணையை துவங்கினார்.
“எதுக்காக அவனை சுட்டிங்க?”
நிமிர்ந்து விநோவைப் பார்த்தவள் மீண்டும் மௌனமாக தலை குனிந்து கொண்டாள்.
இன்னுமும் அவளது உடலில் நடுக்கம் இருந்தது. அவளாலே தான் செய்த காரியத்தை ஜீரணிக்க முடியவில்லை.
நிரல்யாவிற்கு தான்தான் திவாகரை சுட்டுவிட்டோம் என்பதில் அத்தனை உறுதி.
அங்கு அவள் கையில் மட்டுமே துப்பாக்கி இருந்தது.
ஒரு பயத்தில் துப்பாக்கியின் ட்ரகரை அழுத்தியிருந்தாள். அது இப்படி ஒருவனின் உயிரை காவு வாங்குமென்று அந்நேரம் அவளுக்கு சிந்தனையில் தோன்றவில்லை.
விநோ அவளின் அருகில் வந்த பின்னரே சுயம் உணர்ந்தாள்.
திவாகர் மிரட்டி அழைத்ததால் நிரல்யா வெளி சென்ற அரை மணி நேரத்தில் துருவன் விழித்துவிட்டான்.
நிரல்யா அங்கில்லாததால் அவ்விடத்தையே பத்து நிமிடங்களில் சல்லடையாகத் தேடியிருந்தான்.
இறுதியாக அவளின் அலைபேசியை எடுத்துப் பார்க்க… திவாகர் அழைத்திருக்கிறான் என்றதும் உடலோடு அவனின் திடமும் ஆட்டம் கண்டது.
நேரம் விரையம் செய்யாது விநோவிற்கு தகவல் கொடுத்திட்டான்.
வீட்டில் யாரிடமும் சொல்லாது ஆதர்ஷினியிடம் மட்டும் அவசர வேலையென்று சொல்லி கிளம்பியவன் அதிவிரைவில் ரிசார்ட்டிற்குள் நுழைந்திருந்தான்.
“விநோண்ணா” என்று நிமிர்ந்து பார்த்த துருவனின் கண்களில் அத்தனை வேதனை.
“கண்டுபிடிச்சிடலாம் துருவ்” என்று ஆறுதல் சொல்லிய விநோ, துருவன் அளித்த நிரல்யாவின் அலைபேசியை முற்றும் முழுதாக ஆராய்ந்தான். ஓரளவிற்கு விடயம் இதுதானென்று யூகித்துவிட்டான்.
“எத்தனை நாளா இந்த ப்ரோப்ளம் இருக்கு? ஏன் என்கிட்ட சொல்லல?” என்று கடிந்து கொண்டான்.
“என்கிட்டவே அவள் சொல்லல விநோண்ணா. ஒன் மன்த் முன்னாடி, ஒரு பார்க்கில் அவளோட அவனை பார்த்தேன். நான் எங்கிருக்கன்னு கால் பண்ணி கேட்டதுக்கு ஹாஸ்டலில் இருக்கேன் சொன்னாள்… அப்பவே ஏன் பொய் சொல்றான்னு டவுட். கிருஷ்ணா வச்சு அவளோட மொபைல் ஹேக் பண்ணதுல தான் எனக்கும் தெரியும். அப்பவும் இதோட ஆரம்பம் என்னன்னு கண்டுபிடிக்க முடியல. அப்பவே அவனை ஆரோன், நான் சேர்ந்து கடத்தி மிரட்டி கேட்டோம். உண்மையை சொல்ல முடியாதுன்னு அத்தனை உறுதியா இருந்துட்டான். அவனிடமிருந்து உண்மையை வாங்கவே முடியல. அப்போதான் நீங்க உயிரோட இருக்கிறது தெரிய வந்தது. அடுத்து கல்யாணம். அதனால் இவனை கொஞ்சம் பொறுத்து பார்த்துக்கலான்னு கிருஷ்ணா பொறுப்பில் தான் வைத்திருந்தோம். நேத்து எப்படியோ தப்பித்திருக்கான். கல்யாணம் என்பதால் கிருஷ்ணா என்கிட்ட செல்லல. அவனே எப்படியும் அவனை கண்டுபிடித்திடலாம் இருந்திருக்கான். அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு.”
தனக்கு தெரிந்த அனைத்தையும் துருவன் முழுதாக சொல்லி முடிக்க…
“வெளிய பெரிய ஆளுன்னா, நீங்களே என்ன வேணாலும் செய்வீங்களா? போலீஸ்லாம் எதுக்கு இருக்காங்க?” என்று கடிந்தவன்,
“அந்த ஸோனில் காமிரா இருக்கா?” என்று கேட்டான்.
“அது ப்ரைவசி ஏரியா?”
“யூ…” காலினை தரையில் ஓங்கி தட்டினான் விநோ.
நிரல்யாவின் அலைபேசியில் இருக்கும் தகவல்கள், காணொளிகள் யாவும் திவாகர் எப்படிப்பட்டவன் என்பதை காட்டிக்கொடுத்திட… அவனிடம் மாட்டிக்கொண்ட நிரல்யாவை நினைத்து விநோவிற்கு அத்தனை கவலையாக இருந்தது.
“அந்த ஏரியா என்ட்ரன்சில் ஒரு காமிரா இருக்கு” என்ற துருவன், “மேனேஜரை கூப்பிடுறேன்” என இண்டர்காமினை எடுக்க விநோதன் தடுத்தான்.
“நாமளே பார்ப்போம். இப்போதைக்கு யாருக்கும் இது தெரியக்கூடாது” என்றான் கட்டளையாக.
இருவரும் அந்த காமிராவில் பதிவாகிய காணொளிகளை பார்த்திட, திவாகர் உள் நுழைந்த காட்சி மட்டும் இருந்தது. இதுவரை அவன் வெளியில் வத்திருக்கவில்லை.
திவாகர் அது தனிமைக்கான பகுதி என்று அங்கு காமிரா பொறுத்தவில்லை என்பதை தெரிந்துகொண்டு தான் அங்கிருந்து நிரல்யாவை கடத்திச் சென்றான். ஆனால் அவன் அறியாது அப்பகுதியின் நுழைவில் வைக்கப்பட்டிருந்த காமிராவினை. இப்போது அதில் தெளிவாக அவன் மாட்டிக்கொண்டான்.
“விநோண்ணா… அவன், நிரல்யாவை… ஏதும்?” வார்த்தைகளை கோர்வையாக சொல்ல முடியாது துருவன் தடுமாறினான்.
“அவன் இங்கதான் இருக்கான். இந்த பகுதியில் தான். கண்டுபிடிச்சிடலாம்” என்ற விநோ, “அருவி சைட் போய் பார்க்கலாம்” என்றான்.
இருவரும் அந்த அதிகாலை வேளையில் நிரல்யாவைத் தேடி அருவி பக்கம் சென்றனர்.
அருவி ஆர்ப்பரித்தது. அதன் பேரிரைச்சல் எதையோ வலியுறுத்தியது.
விநோ அமைதியாக சுற்றுப்புறத்தை பார்வையால் அலசினான்.
“அருவிக்கு அந்தப்பக்கம் ஏதும் வழியிருக்கா துருவ்?”
“கம்பி வேலி போட்டிருக்குண்ணா. பால்ஸ் ப்ரைவேட்டா நம்மளோடது. தென், காட்டு விலங்கு ஏதும் வந்திடக்கூடாதேன்னு வேலி போட்டிருக்கு” என்றான்.
“ஹ்ம்…” என்ற விநோ வேலியோரம் சென்று ஆராய, வேலி சிதைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அதில் புகுந்து செல்வது கொஞ்சம் கடினம் தான். இருந்தும், பார்த்ததும் தெரிந்தது அது சமீபத்தில் தான் சிதைக்கப்பட்டு உள்ளது என்பது.
அதில் துணியின் நூலிழை மாட்டியிருக்க கையிலெடுத்து பார்த்தான்.
“துருவ்…” அழைத்த விநோ, துருவன் தனக்கருகில் வந்ததும், “இது நிரல்யாவுடையது தான” என்று காட்டி கேட்டான்.
ஆதர்ஷினியும் விநோதனும் தான் திருமணத்திற்கென்று நிரல்யாவிற்கும், துருவிற்கு ஆடைகள் தேர்ந்தெடுத்து வாங்கினர். அதனால் பார்த்ததும் வினோதனால் கண்டுபிடிக்க முடிந்தது.
“அவளோடதுதான் விநோண்ணா” என்றவன் முகத்தில் அறைந்து கொண்டு கதறினான்.
வக்கிரம் பிடித்தவனின் கைகளில் அல்லவா அவனது நிரல்யா சிக்குண்டு இருக்கின்றாள். அவனால் அழக்கூட முடியாது எப்படி அமைதியாக இருக்க முடியும்.
“கண்டுபிடிச்சிடலாம் துருவ். ட்ரஸ்ட் மீ” என்ற விநோ, “நீ வேணும்னா வீட்டுக்கு போ துருவ்” என்றான்.
“இல்லை… இல்லை விநோண்ணா. நானும் வர்றேன். என்னன்னு தெரியாம என்னால் போகமுடியாது” என்று விநோவின் கரங்களை பிடித்துக்கொண்டான்.
அவனது கையில் தட்டிக்கொடுத்த விநோதன்…
“இது வழியா போனால் வெறும் காடுதான் இல்லையா?” என்று கேட்டான்.
துருவன் ஆமென்று சொல்ல, அந்த வழியாக தன் நடையை வைத்தான் விநோதன்.
“இதோட முடிவு என்ன துருவா?”
“பெரிய அருவி விநோண்ணா. அதோட பள்ளத்தாக்கு” என்றான்.
“எவ்வளவு நேரமாகும்?”
“அரை மணி ஆகலாம்” என்றான் துருவ்.
விநோதன் தன் நடையை எட்டி போட்டான்.
அவர்களுக்கு அருவியின் இரைச்சல் சத்தம் கேட்டிட… ‘நெருங்கிவிட்டோம், இங்கில்லை என்றால் வேறெங்கு சென்று தேடுவது’ என்ற யோசனையோடு பார்வையால் அவ்விடத்தை வட்டமிட்டபடி விநோதன் முன்னேற, அருவி அவர்களின் கண்ணுக்குத் தெரிந்தது.
கண்ணுக்கு அருகில் குகை போன்ற அமைப்பில் பாறைகள் தென்பட, திவாகரின் சிரிப்பு சத்தமும், நிரல்யாவின் “சுட்டுடுவேன்” என்கிற குரலும் இருவரின் காதுகளை எட்டிட அடிகளை நீண்டு எட்டு வைத்தனர்.
இன்னும் சில அடிகள் இருக்கும் நிலையில் டப்பென்ற சத்தம் அவ்விடத்தை சூழ… மரங்களில் பறவைகளின் சலசலப்பு.
விநோதனும் துருவனும் முன்னோக்கி ஓடிட, எதிரில் ஒருபெண் வேகமாக ஓடிவந்து விநோவின் மீது இடித்து கீழே விழுந்தாள்.
“யார் நீ?” விநோதன் கேட்டதும் பயந்த அப்பெண்… “நான் மலைஜாதி பொண்ணுங்க, காட்டுக்குள் சுள்ளி பொறுக்க வந்தேன். ஏதோ சுடும் சத்தம் கேட்டுச்சுன்னு ஓடி வந்தேங்க” என்று மூச்சு வாங்கக் கூறியவள் அதே வேகத்தில் அங்கிருந்து ஓடியுமிருந்தாள்.
“இந்த பெண்ணை எனக்குத் தெரியும்” என்று துருவ் சொல்லிட விநோவும் அவளை விட்டுவிட்டு முன்னோக்கிச் சென்று குகைக்குள் பார்க்க, திவாகர் உயிரிழந்து மெல்ல தரையில் சரிய, அவனுக்கு முன்பு இரு கைகளாலும் துப்பாக்கியை இறுக்கி பிடித்தவளாக நிரல்யா உறைந்து நின்றிருந்தாள்.
“நிரல்யா…”
விநோ மற்றும் துருவ் அதிர்வில் சத்தமாக விளிக்க… சுயம் மீண்ட நிரல்யா வெடித்து கதறினாள்.
சூழலின் அதிர்வில் துருவன் நின்றயிடத்திலேயே மண்டியிட்டு தரையில் விழுந்திட…
விநோதன் தான் உள் சென்றான்.
விநோதனை அருகில் கண்டதும் துப்பாக்கியை கீழே போட்டவளாக, அவனை பசுவை கண்ட கன்றாய் கட்டிக்கொண்டவள்…
“மாமா… நான்… பயத்தில், பயத்தில்” என்று திக்கித்திணறினாள்.
“ஒண்ணுமில்லை… நான் பார்த்துக்கிறேன்” என்ற விநோ அவளை அமைதிப்படுத்தி வெளியில் அழைத்து வந்து கல்லின் மீது அமர வைத்தவன், தன் ஆட்களை வரவழைத்து, திவாகரின் உடலை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தவன் துருவனின் அருகில் சென்றான்.
அதுவரையிலுமே இருவரின் நிலையிலும் மாற்றமில்லாது எங்கோ வெறித்தபடி தான் இருந்தனர்.
“துருவ்…” விநோ தொட்டதும் எழுந்து நின்ற துருவன்…
“என்னண்ணா… அவளை அரேஸ்ட் பண்ணப்போறீங்களா?” என்று கேட்டிட, விநோவிற்குள் சுருக்கென்றது.
ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி, தன் சொந்தமாக இருந்தாலும் அதைத்தானே செய்வான். செய்தாக வேண்டும். அதனை புரிந்துகொள்ளாது வலியோடு கேட்ட துருவனிடம் ஆமென்று தலையை கூட விநோவால் அசைத்திட முடியவில்லை.
“அவன் ஒண்ணும் நல்லவனில்லையே! அவனெல்லாம் சாக வேண்டியவன் தானே! அவனுக்காக நிரல்யாவை அரேஸ்ட் பண்ணி ஜெயிலில் போடப்போறீங்களா?” கேட்ட துருவனிற்கு எப்படி எடுத்துக்கூறி புரிய வைப்பதென்று விநோதனிற்கு தெரியவில்லை.
“இதை செய்துதான் ஆக வேண்டும் துருவ்” என்ற விநோ மல்லிகாவை ஏறிட…
“இங்கு நடந்தது உங்களுக்கும் எனக்கும் தானே தெரியும். நீங்க நினைத்தால் இதிலிருந்து நிரல்யாவை விடுவிக்கலாம்” என்றான்.
“உனக்காக இதை செய்தால், அடுத்த நொடி நான் உயிரிருந்தும் பிணம் தான்” என்ற விநோவின் வார்த்தைகளால் துருவன் ஆடிப்போனான்.
துருவன் அறிந்தது தானே… இந்த காக்கி உடையின் மீதும் அதன் பணியின் மீதும் விநோதன் கொண்டுள்ள காதல். அதனை பக்தி என்றே சொல்லவேண்டும். அதனின் பெயருக்காக, தன் உயிரையே துறந்தல்லவா இத்தனை நாட்கள் வாழ்ந்தான். அப்படிப்பட்டவனை நிரல்யாவிற்காக உன் நேர்மையை கொஞ்சம் தளர்த்திக்கொள் என்று சொல்வது எப்படி நியாயமாகும்.
“இதுதான் உங்க முடிவா?” துருவனிடம் மரத்த நிலை.
இந்நிலையில் என்ன விளக்கம் கொடுத்தாலும், அவனால் ஏற்க முடியாது என்று உணர்ந்த விநோ மல்லிகாவுடன் நிரல்யாவை அனுப்பி வைத்தான். நிரல்யாவை ஜீப்பில் மல்லிகா ஏற்றிட,
“நான் வந்த பிறகு விசாரணையை வச்சுக்கலாம்” என்று மல்லிகாவிடம் சொல்லிய விநோ…
“இது தற்காப்பிற்காக செய்த கொலை. நிச்சயம் வெளியில் வந்துடலாம்” என்று துருவனின் தோளில் கை வைத்தான்.
தன் மீதிருந்த விநோவின் கையினை நகர்த்திவிட்ட துருவ்…
நிரல்யாவின் அருகில் சென்றான்.
“உன்னை எப்படியும் நான் காப்பாற்றிடுவேன்” என்றவன் அங்கிருந்து வேகமாக சென்றிருந்தான்.
அந்நிலையிலும் நடப்பதை கவனித்த நிரல்யா, தன்னால் அண்ணன் தம்பி இருவருக்குள்ளும் விரிசல் வந்துவிட்டதோ என்று கலங்கினாள்.
விநோவை பார்த்து இரு கரம் குவித்து தன்னை மன்னித்துவிடுமாறு பார்வையால் கெஞ்சியவள், தன் குவிந்த கரத்தின் மீதே முகத்தை வைத்து கதறினாள்.