நேச நெஞ்சங்கள் 36

உயிர் உறை 36

தேடல் 12

விநோதன் அன்று இரவு போல் தான் வீடு வந்திருந்தான். உடன் நிரல்யா.

தற்காப்பிற்காக செய்த கொலை என்ற அடிப்படையில்… விநோ தன்னுடைய சொந்த ஜாமீனில் நிரல்யாவை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.

நிரல்யாவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டதுமே, அவளை மல்லிகாவின் பொறுப்பில் விட்டுவிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலுகத்தோடு இணைந்திருக்கும் ஆணையர் அலுவலகம் சென்றான்.

ஆணையரும் மாவட்ட ஆட்சியரும் அங்கு நடைபெற இருக்கும் கட்சி கூட்டத்திற்கான கலந்தாய்வில் இருக்க… இருவரையும் ஒன்றாகவே சந்திக்க நேர்ந்தது.

விநோதனை கண்டதும் மாவட்ட ஆட்சியர் அவனின் முந்தைய வழக்கிற்காக தானே எழுந்து வந்து அவனை பாராட்டினார்.

அவரது பாராட்டினை சிறு புன்னகையிலும், தலையசைப்பிலும் ஏற்றுக்கொண்டவன் தான் வந்த விடயத்தைக் கூறினான்.

நிரல்யா யாரென்பதையும், நடந்த கொலையையும், எதற்காக நடந்தது என்பதையும் கூறியவன், “நிரல்யா என்னோட சொந்தமாக இருக்கும்போது இதில் நேர்மையா நான் நடந்துகொள்வேனாங்கிற சந்தேகம் பலருக்கு வரலாம். அது என் நேர்மைக்கு இழுக்காக அமையலாம். அதனால் இந்த வழக்கை மற்றொரு காவல்துறை அதிகாரியிடம் மாற்றிடுங்க” என்றான்.

திவாகர் யாரென்பதை அறிந்துகொண்ட ஆணையர்…

“அவன் ஏற்கனவே இதுபோன்ற வழக்கில் மாட்டி, சிறையிலிருந்து தப்பித்தவன். அவனை காவல்துறை தேடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இப்படியாகும் எதிர்பார்க்கவில்லை” என்றவர், “இதனை உங்க நேர்மைக்கு ஒரு சவாலா எடுத்துக்கோங்களேன் விநோதன்” என்றார்.

மாவட்ட ஆட்சியரும் அதனையே அமோதிக்க… விநோதனின் கண் முன்னே துருவனின் முகமே வந்து போனது.

இதில் அவன் பக்கம் தான் நிற்கவில்லையோ என்கிற எண்ணம் அவனுக்கு சிறிதளவு தோன்றி விலகி சென்றாலும் விநோதன் உயிருடன் மரித்துப் போவானல்லவா!

அதனை கொண்டே இவ்வழக்கை கைமாற்றிவிடக் கூறினான். அது முடியாது போகவே, முயன்ற வரை சட்டத்தின் பக்கம் தான் நிற்க வேண்டுமென்கிற முடிவுடன், கொடைக்கானல் காவல் நிலையம் சென்று சட்டப்படி செய்ய வேண்டியவற்றை செய்து நிரல்யாவை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்தான்.

துருவன் இதனை எதிர்பார்த்தேன் என்பதைப்போல் நின்றிருந்தான்.

நிரல்யாவை கண்டதும் வீட்டின் மற்றைய மூன்று பெண்களும் அவளை சூழ்ந்து கொண்டனர்.

என்னவானதெனக் கேட்டு அவளை சங்கடப்படுத்தாது, “எல்லாம் சரியாப்போகும்” என்ற ஆறுதல் வார்த்தை அளித்து தாங்கள் உடனிருப்பதாக திடம் அளித்தனர்.

விநோதனின் அருகில் துருவன் வர,

“ஜாமீனில் தான் கூட்டி வந்திருக்கேன்” என்ற விநோ, “விசாரணைன்னா ஸ்டேஷன் வந்துதான் ஆகணும்” என்றான்.

“புரியுது” என்ற துருவன், “சாரி விநோண்ணா” என்றான்.

எதற்கென்று விநோ விளக்கம் கேட்காமலேயே கொடுத்தான்.

“காலையில அங்க, அவளை அப்படி பார்த்தும் என்னவோ போலாகிருச்சு. உங்க சைட் இருந்து யோசிக்காம விட்டுட்டேன்” என்றான்.

விநோவிற்கு தெரியும்… அந்நொடி துருவன் அமைதியாக சிந்திக்கும் மனநிலையில் இல்லையென்று. இருந்திருந்தால் அவன் அப்படி பேசியிருக்கமாட்டான். அதனாலே அப்போது விநோதன் அமைதியாக இருந்தான்.

“என் தம்பியை எனக்குத் தெரியும்” என்ற விநோ, “விசாரணையில் நிரல்யா ஒரு வார்த்தை பேசல. என்ன நடந்ததுன்னு முழுசா அவள் சொன்னாதான், என் சைட் நான் மூவ் பண்ண முடியும். அவளை முதலில் பேச வை” என்றவன் தன்னுடைய அறைக்குச் சென்றான்.

துப்பாக்கி நிரல்யாவின் கையில்… அவளுக்கு முன்பு குண்டு பாய்ந்து ரத்த வெள்ளித்தில் திவாகரின் உடல்.

பார்த்தக்காட்சி அவள்தான் குற்றவாளி என்பதை கட்டியம் கூறியது. அவள் தான் கொலையாளி என்பது ஊர்ஜிதம்.

ஆனால், அதையும் தாண்டி வேறொன்று விநோதனின் மூளைக்குள் சுற்றியது. சரியாக பிடிபடவில்லை.

நிரல்யா எதையும் வாய் திறந்து கூறாது, தன் மூளையின் வழி திறக்காது என்பதை அறிந்தவன் குளியலறையில் கொட்டும் நீருக்கு அடியில் சென்று நின்றான்.

மனதில் ஒரு முகம் மின்னி மின்னி மறைந்தது.

எளிதில் சந்தேகம் கொண்டுவிடக் கூடாது என்று பொறுமையாக தான் காட்டுக்குள் கால் வைத்த நொடி முதல் வரிசையாக ஆழ் மனதில் கூர்ந்து காட்சிப்படுத்தினான்.

துருவன் நிலர்யாவின் அருகில் வந்ததும், அவர்களுக்கு தனிமை கொடுத்து மூன்று பெண்களும் விலகிச் சென்றிருந்தனர்.

“துருவ்…” என்றவளின் கண்களில் சரமாய் நீர் கொட்டிட, தன் நெஞ்சில் சாய்த்திருந்தான் துருவன்.

“நான் கொலைகாரியா சீனியர்.” இதற்கு அவனால் என்ன பதில் சொல்லிட முடியும். கலங்கும் மனதினை அவளுக்குக் காட்டாது மறைத்தான்.

“நீ நடந்ததை சொல்லாம எதுவும் செய்ய முடியாதுடா. என்கிட்ட சொல்லலனாலும் பரவாயில்லை. விநோண்ணாகிட்ட எல்லாம் சொல்லு. ப்ளீஸ்” என்றான்.

“விநோண்ணா உன்னை விட்டுடமாட்டாங்க” என்றவன், “எனக்காகடி” என்றான்.

“அதெல்லாம் அவள் சொல்லுவாள். நீயும் நடந்ததையே பேசி அவளை வாட்டாத” என்ற கோகிலா குவளை நிறைய பழச்சாறு கொண்டு வந்து, “அவளை குடிச்சிட்டு, போய் குளிச்சிட்டு வர சொல்லு. மத்ததை அப்புறம் பேசிக்கலாம்” என்றாள்.

“இப்போ அடுத்து என்னன்னு தான் பார்க்கணும் துருவ். அவள் ரிலாக்ஸ் ஆகட்டும்” என்றாள் ஆதர்ஷினி.

சட்டென்று மின்னல் வெட்டியது போல் ஏதோ தோன்றிட… உடலை துடைக்கக்கூட தோன்றாது ஆடை உடுத்திய விநோதன் வேகமாக கதவினை திறந்து கொண்டு படிகளில் தாவி இறங்கினான்.

தலையில் நீர் சொட்ட… உடலெல்லாம் முத்து முத்தாய் நீர்த்துளிகள் படர்ந்திருக்க, விநோதன் வந்த கோலம் பார்த்தவர்களை பதற வைத்தது. சூழல் அப்படியானது அல்லவா.

“விநோ என்னப்பா இப்படியே?” பூரணியின் கேள்வியை எல்லாம் அவன் கருத்தில் கொள்ளவில்லை.

நிரல்யாவின் முன் மண்டியிட்டவன்…

அவளின் கைகளை பிடித்து,

“ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்…” என்று தனக்கும் சேர்த்து சொல்லியவனாக,

“நான் கேட்கிறதுக்கு ரொம்ப பொறுமையா யோசிச்சு பதில் சொன்னா போதும்” என்றான்.

அவனின் தோற்றம்… ‘எல்லாம் எனக்காக எனும் பதைப்பு’ என்பதை நிரல்யாவுக்கு உணர்த்திட தன் மௌனத்தை உடைத்தாள்.

“நீ திவாகர் பற்றி எதுவும் சொல்ல வேண்டாம்.”

அவன் சொல்லிக்கொண்டிருக்க, பூந்துவாலை கொண்டு வந்து அவனின் தலையை துவட்ட ஆரம்பித்திருந்தாள் ஆதர்ஷினி.

“அவங்களுக்கு குளிர் ஒத்துக்காது அத்தை.” பூரணியின் மெச்சுதலான பார்வையில் சிறு சங்கடத்துடன் பதில் கூறினாள் ஆதர்ஷினி.

“நல்லா தின்க் பண்ணு… நீ டிரகரை அழுத்தியதும் சத்தம் வந்துச்சா இல்லை பாயிண்ட் செகண்ட்… ஐ மீன் திரெட் டிஸ்டன்ஸில் சவுண்ட் வந்த பிறகு பயத்தில் டிரகரை அழுத்தியிருந்தியா?” என்று கேட்டான்.

“என்னாச்சு விநோண்ணா, எதுக்கு இப்போ இது?” துருவனுக்கு மட்டுமல்ல அங்கிருந்த யாருக்குமே விநோவின் கேள்விக்கான அர்த்தம் விளங்கவில்லை.

“நிரல் பதில் சொல்ற வரை யாரும் வாய் திறக்கக்கூடாது” என்றவன், “கண்ணை மூடி யோசிம்மா. அந்த சூழலை விஷுவலைஸ் பண்ணு” என்றான்.

விநோதன் சொல்லியதைப்போல் மனக்கண்ணில் அந்நிகழ்வை கொண்டு வந்தவளின் உடல், இப்போதும் தான் அந்த இடத்தில் இருப்பதைப்போல் நடுங்கியது.

“பீ ரிலாக்ஸ்… மெதுவா ட்ரை பண்ணு” என்று விநோ சொல்லிக்கொண்டே அவளின் கைகளை தட்டிக்கொடுத்தபடி இருந்தான்.

“துப்பாக்கி என் கையில் தான் இருந்துச்சு. கெட்டியா பிடிச்சிருந்தேன். டிரகரை அழுத்தனும் எனக்கு தோணவே இல்லை. டப்புன்னு சவுண்ட் கேட்டதில் தான் பயந்து நடுங்கி ட்ரகரை அழுத்தினேன்” என்று நிரல்யா சொல்லிட…

எழுந்து நின்று பின்னந்தலையை கோதியவன், இடுப்பில் கை குற்றியவனாக வாயினை குவித்து ஊதி தன்னை ஆசுவாசப்படுத்தினான்.

“என்னாச்சுங்க?”

கேட்ட ஆதர்ஷினியின் தோளின் இருபக்கமும் பற்றியவன், “நிரல் கொலை செய்யல தர்ஷி” என்று அவளை உளுக்கினான்.

“எப்படி சொல்றீங்க விநோண்ணா? நாமதான் நேரிலே பார்த்தோமே!” துருவன் சந்தேகமாகக் கேட்டான்.

“நிரல் கொலை பண்ணல. இப்போதைக்கு என்னால் அது மட்டும் தான் சொல்ல முடியும்” என்றவன், “பொறுமையா இருடா” என்று துருவனின் கன்னம் தட்டி சென்றான்.

“என்னம்மா இது? என்னன்னு தெளிவா சொல்லிட்டு போனா நிம்மதியா இருக்குமே” என்ற துருவனை பார்த்து சிரித்த பூரணி… “விநோவை நம்புறதை தவிர இப்போ நமக்கு வேறவழியில்லை துருவ்” என்றதோடு, “நிரல்யாவை கவனி” என்கூறிச் சென்றார்.

“அவளை சாப்பிட வைடா. நீ சோகமா மூஞ்சி வெச்சி, அவளையும் கஷ்டப்படுத்தாதே” என்று கோகிலாவும் நகர்ந்திட… இவர்களுக்கு முன்பாகவே விநோவின் பின்னால் அவனைத் தொடர்ந்து சென்றிருந்தாள் ஆதர்ஷினி.

அறைக்குள் வந்தவள் கதவினை வேகமாக சாற்றி தாழ்ப்பாள் இட… அதன் சத்தத்தில் திரும்பிப் பார்த்த விநோ,

“என்ன மேடம் ரொம்ப சூடா இருக்க மாதிரி தெரியுது” என்றான்.

“சூடாயிருந்தா சில் பண்ணப்போறீங்களா?” எனக் கேட்டவள், “சும்மா நாளிலே ஒண்ணும் நடக்காது. இப்போதான் நடக்கப்போகுதா?” என்று முணுமுணுத்துக்கொண்டே…

“ரவுடி போலீசுக்கு அறிவே கிடையாது, ஈரத்தை துடைக்காம கூடவா ட்ரெஸ் மாட்டிக்கிட்டு ஓடி வருவாங்க?” என்றுபடி அவனை இழுத்து ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் தள்ளியவள், “ஒழுங்கா துடைச்சிக்கிட்டு ட்ரெஸ் சேன்ஞ் பண்ணிட்டு வாங்க” என்றாள்.

“சாதரணமாவே இங்கிருக்கும் க்ளைமேட்டுக்கு குளிருது. இதில் ராத்திரியில் ஈர ட்ரெஸ்சோடவே உட்கார்ந்தாச்சு” என்றவளின் புலம்பல் அவனின் காதுகளில் விழுந்து சிரிப்பை உண்டாக்கியது.

“நீ என்னை இங்க தள்ளுறதுக்கு முன்னாடி முனங்கியதும் எனக்கு நல்லாவே கேட்டுச்சு தர்ஷி. உனக்கு ஓகேன்னா எனக்கு அப்ஜெக்க்ஷன் இல்லை” என்றான். சத்தமாக.

“என்ன… என்ன கேட்டுச்சு?” படபடத்துபோனாள்.

“ஹாட் அண்ட் சில்.”

ஆடை மாற்றி வெளியில் வந்தவன் சொல்லிக்கொண்டே அவளின் இடை வளைத்து தன்னோடு நெருக்கினான்.

அப்போதுதான் தான் பேசியதன் பொருள் உணர்ந்து, அவனது நெருக்கத்தில் லஜ்ஜையுற்றவளாய் அவனிலே தன் முகம் மறைத்தாள்.

“தர்ஷியை சில் பண்ணிடலாமா?” காதோரம் ஒலித்த அவனின் ஹஸ்கி குரல் உடல் முழுக்க என்னவோ செய்திட…

“விநோ… ‘நோ’…” என்றவளாக அவனிலிருந்து விலகி நின்றாள்.

அவனின் அட்டகாசமான சிரிப்பு அவ்வறையை நிரப்பியது.

“என்ன பண்றீங்க நீங்க” என்றவள் அவனின் வாயினை தன் கரம் வைத்து மூடிட… அவளின் உள்ளங்கையில் தன் இதழினை அழுத்தியிருந்தான்.

சட்டென்று தேகம் பரவிய குறுகுறுப்பில் கையை எடுத்துக்கொண்டவள்,

“உங்களுக்கு என்னவோ ஆகிருச்சு” என்றவளாக தூரம் சென்றாள்.

மெத்தையில் அவளை பார்த்தவாறு நேராகப் படுத்தவன்,

“என்னென்னவோ ஆகுது. மேடம் தான் கிட்ட வரமாட்டேங்கிறீங்க” என்றான். அவனது குரலிலிருந்தது ஏக்கமா, குறையா அதையும் மீறிய ஒன்றா என்று ஆதர்ஷினிக்கு பிரித்தறியத் தெரியவில்லை.

அறையின் கதவு தட்டப்படும் ஓசையில் சிந்தை கலைந்து திறந்தவள், கோகிலா உணவு தட்டுடன் நின்றிருக்க…

“நாங்களே வந்திருப்போமே” என்றபடி வாங்கிக்கொண்டாள்.

“இருக்கட்டும் அண்ணி… அம்மா தான் நேரமாச்சேன்னு கொடுத்திட்டு வரச்சொன்னாங்க” என்றவளாக சென்றுவிட்டாள்.

“எல்லாம் உங்களாலதான். அத்தை என்ன நினைச்சாங்களோ” என்றவள் கதவினை மூடிவிட்டு அவனருகில் டீபாயினை இழுத்துப்போட்டு தட்டினை வைத்தவளாக அவனுக்கு சற்று தள்ளி அமர்ந்தாள்.

விநோ அவளையே பார்த்திருக்க…

“சாப்பிடுங்க” என்று தட்டினை காண்பித்தாள்.

“அம்மா நினைக்கிற அளவுக்கு இப்போ இங்க என்ன நடந்துச்சு தர்ஷி?”

விநோதனின் பார்வையிலும், குரல் மாற்றத்திலும் ஆதர்ஷினியின் முகம் குப்பென்று குங்குமமாய் சிவந்துவிட்டது.

உணவு உண்டு முடிக்கும் வரையிலுமே இருவரிடமும் ஒரு ஆழ்ந்த அமைதி.

என்றோ ஒரு நாள் நடந்துதான் ஆகும். அதனின் எதிர்பார்ப்பு இன்று மனதில் எழுந்திருக்க… இருவராலும் நிலைக்கொள்ள இயலவில்லை.

இருவருக்குள்ளும் அத்தனை தவிப்பு. ஒருவருக்குள் ஒருவர் அடங்கிட உணர்வுகளின் ஆர்ப்பரிப்பு.

உணவு உண்ட பாத்திரங்களை கீழே சென்று வைத்துவிட்டு அறைக்குள் வந்தவளின் நடையில் தடுமாற்றம். கண்டுகொண்டவன் விஷமமாய் புன்னகைத்தான்.

“ரொம்ப பயப்படுற மாதிரி தெரியுதே!” மெத்தையில் கால் நீட்டி, மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நன்கு சாய்ந்து அமர்ந்திருந்தவனின் தோரணையிலும் பார்வையிலும் உள்ளுக்குள் சில்லிப்பாய் ஏதோ பரவுவதை உணர்ந்தவளின் தகிப்பு இன்னுமே கூடியது.

“யாரும் பயப்படல…” என்று திணறியபடி அவனின் பக்கத்தில் அமர்ந்தவளுக்கு அத்தனை அவஸ்தை.

அவளின் கையை எடுத்து தனது உள்ளங்கைக்குள் பொத்திக்கொண்டவனுள், அவளின் சில்லிப்பு சுகமாய் இறங்கியது.

“ஐஸ் மாதிரி ஆகிட்ட…” அவன் குறும்பாய் கண்சிமிட்டி சொல்ல அப்போதுதான் உணர்ந்தாள். அவனது கையிலிருந்து தனக்குள் கடத்தப்பட்ட சூட்டினை.

“அச்சச்சோ…” என்று பதறியவள், அவனின் கன்னம், நெற்றி, கழுத்தென கை வைத்து பார்க்க… விநோவின் உடல் அனலாக கொதித்தது.

“அதுக்குள்ள காய்ச்சல் வந்திடுச்சா?” என்றவள், “வாங்க ஹாஸ்பிடல் போகலாம்” என்று எழுந்து நின்றுவிட்டாள்.

“ஹேய் ஆது… எதுக்கு இப்படி பதட்டமாகுற?” என்றவன், “சில் க்ளைமேட். அதோட ஈரத்தில் நின்னுட்டேன். அதான் குளிருக்கு உடம்பு சூடாகிருச்சு. டேப்லெட் போட்டா சரியாகிடும்” என்று அவன் சொல்ல… அவள் கண்ணீர் சிந்திவிட்டாள்.

“உங்களை தொட்ட என் கையே இன்னும் சுடுது” என்றவளைப் பார்க்க, மடியில் வைத்து கன்னம் கிள்ளத் தோன்றியது அவனுக்கு.

தோன்றியதை செயல்படுத்த முயன்றிட, அவனது அலைபேசி தொல்லையாக ஒலித்தது.

ஏக்கம் சிந்தும் விழிகளோடு அதனை எடுத்தவன், சொல்லப்பட்ட செய்தியில் உடனடியாக வருவதாகக்கூறி வைத்திட்டான்.

“ஸ்டேஷன் போகணும் தர்ஷி” என்றவன் துரிதமாக ஆடை மாற்றி வருவதற்குள், கையில் பாலும் மாத்திரையுமாக நின்றிருந்தாள் ஆதர்ஷினி.

“வேலைன்னு வந்துட்டா உங்களைப்பற்றிய எண்ணமே இருக்காதே! எப்படியும் ஹாஸ்பிடல் போகப்போறதில்லை. பாலை குடிச்சிட்டு மாத்திரையாவது போட்டுட்டு போங்க” என்றவளின் பேச்சினை மறுக்காது செயதவன்…

“தூங்குறதுன்னா தூங்கிக்கோ… எந்த நேரம் வந்தாலும் எழுப்புவேன். ஆரம்பித்ததை முடித்துதான் எனக்கு பழக்கம்” என்றவன் அவளின் கன்னம் தட்டி குறும்பாக கண்ணடித்து வெளியேறினான்.

சிவந்த கன்னங்களை முகம் சுருக்கி மறைத்தாள்.

இருவருக்குள்ளும் விவரிக்க முடியாத இனிய அவஸ்தை.

இருவரின் இதழும் நிரந்தரமாய் விரிந்தே இருந்தது.

அலுவலகம் வந்த அடுத்த நொடி கனிந்திருந்த முகம் மற்றும் இதயத்தை கடினமாக்கியவன் தன்னுடைய இருக்கையில் கம்பீரமாக அமர்ந்தான்.

அடுத்த நொடி அவனின் முன்பு திவாகரின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வைக்கப்பட்டது.

“எதாவது மாற்றம்… ஐ மீன் நிரல்யா இதனை செய்திருக்க மாட்டாங்கன்னு தெரிந்ததா?” மல்லிகாவிடம் கேட்க அவரோ முழித்தார்.

“என்ன மல்லிகா திருதிருன்னு பார்க்குறீங்க?” என்று கேட்டவன் அறிக்கையில் தன் பார்வையை மேயவிட்டான்.

“நிரல்யா சுட்டதை நீங்களும், அவங்க கணவருமே நேரில் பார்த்திருக்கும்போது, நிரல்யா குற்றவாளியா இல்லாமலிருக்க என்ன வாய்ப்பு சார் இருந்திடும்?” மல்லிகா அவ்வாறு கேட்டதும் அவனிடம் எவ்வித எதிர்வினையும் இல்லை.

முழுமையாக அறிக்கையை  படித்து முடித்தே நிமிர்ந்தான்.

ஆதர்ஷினியிடமிருந்து அவனுக்கு அழைப்பு… கட் செய்தான்.

“என்ன சொன்னீங்க மல்லிகா?”

அவனது அக்கேள்வியில் மீண்டும் முன்பு சொன்னதை சொல்லியவர் அவனின் கூர்மையானப் பார்வையில் வியர்த்து விட்ட உள்ளங்கைகளை இறுக மூடினார்.

“அப்போ நீங்க அட்டாப்ஸி ரிப்போர்ட் படிச்சு பார்க்கல இல்லையா?” எனக் கேட்டவன், “சுட்டது நீங்களாவே இருந்தாலும், நாமதான் சுட்டோமான்னு உங்களுக்குள்ள கேள்வி வரணும். பிகாஸ், வீ ஆர் போலீஸ்” என்றவனின் கர்ஜனையில் மல்லிகாவின் உடல் வெளிப்படையாகவே நடுங்கியது.

“குற்றவாளி நிரல்யான்னு தெரியுமே சார். அதான் அதை படிச்சு என்ன ஆகப்போகுதுன்னு…”

“ஷட் அப்” என்று உறுமியிருந்தான்.

“சார்…” மல்லிகாவிற்கு பயத்தில் வெடவெடத்தது.

“கொலை செய்தது நிரல்யா கிடையாது. அதற்கு ஆதாரம் இந்த அட்டாப்ஸி ரிப்போர்ட் தான். உங்களைப்போல நானும் மெத்தனமா இருந்தா, நிரபராதி தண்டிக்கப்படமாட்டாரா?” எனக் கேட்டவன் “உங்களை டூ வீக்ஸ் சஸ்பெண்ட் பன்றேன்” என்றான்.

அவனது அதிரடியில் ஆடிப்போன மல்லிகா…

“சாரி சார்” என்க,

தயவு தாட்சண்யமே இன்றி, “கெட் அவுட் ஆஃப் மை சைட்” என்று கத்தியிருந்தான்.

எத்தனை பெரிய லீட் இது. இதனை தவறவிட்டிருந்தால் நிரல்யா சிறை சென்றிருப்பாளே. இதுபோன்றுதானே மத்த வழக்குகளிலும் அலட்சியமாக இருப்பார்கள் என்ற எண்ணமே விநோதனை அதிகம் கோபம் கொள்ளச்செய்தது.

நிரல்யாவிடம் துப்பாக்கி சத்தத்தை பற்றி கேட்ட நொடியே விநோவிற்கு தெரிந்துவிட்டது நிரல்யா கையிலிருந்த துப்பாக்கி திவாகரை துளைக்கவில்லை என்பது. அதனை ஊர்ஜிதப்படுத்த திவாகரின் உடற்கூறு அறிக்கை வேண்டும். நிரல்யாவிடம் கேட்டுவிட்டு அறைக்கு வந்தவன், திவாகரின் உடலை ஆய்வு செய்யும் மருத்துவருக்கு அழைத்து எந்நேரமாக இருந்தாலும் உடனடியாக வேண்டுமென்று தன்மையாகக் கேட்க, அவரும் நாளை தயார் செய்ய இருந்த ஆய்வு அறிக்கையை அப்போது சில மணிகளில் தயார் செய்து மல்லிகாவிடம் ஒப்படைத்துவிட்டார்.

ஆதர்ஷினி உண்ட பாத்திரங்களை கீழே வைக்க சென்ற போது, ஆய்வு அறிக்கை பற்றி கேட்பதற்காக மருத்துவருக்கு அழைக்க அவரோ எடுக்கவில்லை.

சில நிமிடங்களில் அவரே அழைத்து மல்லிகாவிடம் கொடுத்துவிட்டதாக சொல்லிய பின்பு தான், தன்னுடைய சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள உடனடியாக கிளம்பி காவல் நிலையம் வந்தான். அதுவரையிலுமே அறிக்கை வந்துவிட்டதை மல்லிகா அவனுக்குத் தெரிவிக்கவில்லை. இப்படியா ஒரு வழக்கில் அலட்சியமாக அசமந்தமாக இருப்பார்கள் என்கிற கோபம்… அதனோடு இவர் தான் குற்றவாளியென்று அவர்களா ஒரு முடிவுக்கு வந்து அதன்வழியில் குற்றறிக்கை எழுதியிருந்தது என்ற கோபத்தில் கொதி பிழம்பென கொதித்திருந்தான்.

அந்நேரம் ஆதர்ஷினியிடமிருந்து நான்காவது முறையாக அழைப்பு வந்தது.

அட்டெண்ட் செய்தவன்…

“எடுக்கலன்னா விட வேண்டியதுதான்டி. எதுக்கு சும்மா பண்ணிக்கிட்டே இருக்க” என்று அவளிடம் தன் கோபத்தை இறக்கியிருந்தான்.

சட்டென்று கண்கள் கலங்கி விட்ட போதும்…

“இப்போ டெம்பரேச்சர் குறைஞ்சிருக்கா. அதிகமாகற மாதிரி இருந்தா ஹாஸ்பிடல் போங்க ப்ளீஸ்” என்று சொல்லி வைத்துவிட்டாள்.

அவளின் தழுதழுப்பான குரல் அவனை கட்டுக்குள் கொண்டுவந்திருந்தது.

“ச்சைய்…” தன்னையே நிந்தித்தவனாக நெற்றியில் தட்டிக்கொண்டான்.

அப்போதுதான் உடல் சூட்டையே கவனித்தான். அதிகமானதை போலிருந்தது.

‘டேப்லெட் எடுத்து கொஞ்ச நேரம் போலதான் ஆகுது. நேரம் போனால் சரியாகிவிடும்’ என நினைத்தவன், ஆணையர் அலுவலகத்திலிருந்து எடுத்து வந்த திவாகரின் பழைய வழக்கு கோப்பின் தகவல்களை படிக்க ஆரம்பித்தான்.

எட்டு மாதங்களுக்கு முன்பு.

நிரல்யா கல்லூரியின் இறுதி ஆண்டில்…

திவாகர் அவளுக்கு சீனியர்.

பூரணி தான் நிரல்யாவை அக்கல்லூரியில் சேர்த்திருந்தார்.

பெண்கள் விடுதியில் பணி புரியும் ஒருவரை கைக்குள் போட்டுக்கொண்டு, பலவித தவறான வீடியோக்கள் எடுத்து வைத்து பெண்களை மிரட்டி தன் எண்ணத்தை தன்னுடைய நண்பர்களுடன் செய்து கொண்டிருந்தான்.

நிரல்யாவின் ரூம் மேட் அழுது கொண்டிருக்க, அவளிடம் விசாரித்து தெரிந்துகொண்ட நிரல்யா திவாகரின் மீது கல்லூரியில் புகார் கொடுக்க… அவன் பெரிய இடத்து பையன் என்பதால் அவர்கள் நடவடிக்கை எடுக்காது இருக்க… நிரல்யா காவல் நிலையம் சென்றாள்.

இதில் அவளுக்கு முழு துணையாக நின்றது பூரணி தான்.

எத்தனை நாட்களுக்குத்தான் பெண்களே பயந்து அடங்குவதென்று அவர் தான் அவளை கொம்பு சீவி விட்டார். அரணாகவும் உடன் நின்றார்.

நிரல்யாவின் தைரியமான செய்கை பாதிக்கப்பட்ட பெண்களையும் துணிந்து முன்வர வைத்திட… திவாகரால் தப்பிக்க முடியாது போனது.

கல்லூரியில் வைத்தே திவாகர் கைது செய்யப்பட…

காவல்துறை அதிகாரிகள் இருப்பதையும் பொருட்படுத்தாது.

“உன்னையும் அந்த மாதிரி வீடியோ எடுத்திருக்கணும். மிஸ் பண்ணிட்டேன்” என்றவன், “உன்னை நான் மட்டும் தாண்டி அதெல்லாம் செய்யணும். வரேன். நிச்சயம் உன்னைத்தேடி வரேன். லவ் யூ டி” என்க, அவனின் தகாத வார்த்தையில் கோபம் கொண்டவள் அத்தனை பேரின் முன்பும் அடித்திருந்தாள்.

திவாகர் என்ன தான் பெரிய இடத்து பையனாக இருந்தாலும், இவ்விடயத்தில் அவனுக்கு உதவ அவனது தந்தை முன்வரவில்லை. தப்பு செய்தது யாராக இருந்தாலும் தண்டனை பெற வேண்டுமென்ற அவரின் எண்ணம் மகனுக்கே எதிராக இருந்தது.

அதன்பின்னர் வழக்கு விசாரிக்கப்பட்டு திவாகருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அவனிடமிருந்த வீடியோக்கள் அழிக்கப்பட்டன.

சிறை வாழ்க்கை அவனுக்கு அத்தனை எளிமையாக இருந்திடவில்லை. நிரல்யாவை பழிவாங்கிட வேண்டுமென்பதற்காகவே சிறையிலிருந்து தப்பித்திருந்தான்.

திவாகரைப் பற்றி தெரிந்துகொண்ட விநோதன், ‘அவனுக்கு மரணம் சரியான தண்டனை’ என்று தான் நினைத்தான்.

கோப்பினை மூடி வைத்தவன்…

கண்களை கசக்கிக்கொண்டே எழுந்தான். உடலில் வலுவெல்லாம் எங்கோ சென்றுவிட்டதைப்போல் நடை தள்ளாடிட… காய்ச்சல் அதிகம் கண்டுவிட்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தான்.

இந்நிலையில் இனியும் இங்கிருக்க முடியாது என்று நினைத்தவனுக்கு உறங்க வேண்டும் போலிருந்தது.

அந்த அலுவலகத்தில் வந்த கொஞ்ச நாட்களிலேயே அவனுக்கு நெருக்கமாகியிருந்த உதவி ஆய்வாளர் விஸ்வத்தை அழைத்தவன்,

“என்னை கொஞ்சம் டிராப் பண்ணிடுடா. மார்னிங் ட்ரைவர் வந்ததும் என் பைக் கொண்டுவந்து வீட்டில் விட்டுடச்சொல்லு” என்றான்.

“உடம்பு சரியில்லையா சார். உங்க மேடம் கொஞ்ச நேரம் முன்ன எனக்கு கால் பண்ணி உங்களை பார்த்துக்க சொன்னாங்க. உங்க அறையை வந்து எட்டிப்பார்த்தேன். ஏதோ பார்த்துட்டிருந்தீங்க, சரியாகிட்டீங்க நினைச்சிட்டேன். ஹாஸ்பிடல் போவோம் சார்” என்றவன் முன்னே நடக்க அவனைத் தொடர்ந்தவனின் இதழில் இளநகை.

விஸ்வம் சொல்லிய “உங்க மேடம்” என்கிற வார்த்தை அவனை அனைத்தையும் மறக்கச் செய்திருந்தது.

‘சாரிடி… கொஞ்சம் கத்திட்டேன்’ மானசீகமாக தன்னவளிடம் மன்னிப்பு வேண்டினான்.

“உங்க மேல மேடமுக்கு ரொம்ப லவ்வுங்கண்ணா.” சொல்லிவிட்டு வெட்கப்பட்டான் விஸ்வம்.

அவனின் தலையில் தட்டிய விநோ, “நேரா பார்த்து வண்டியை ஓட்டுடா” என்று கண்களை மூடிக்கொண்டான்.

“உங்களுக்கும் இந்த வெட்கமெல்லாம் நல்லாயிருக்குண்ணா” என்றான் அவன் அப்போதும் விநோவை விடாது.

“உதை வாங்கப்போற நீ!” விநோ சுட்டுவிரல் நீட்டி மிரட்டினான். ஆனால் அவனது முகமோ மிரட்டலுக்கு மாறாக புன்னகையாக இருந்தது.

“மல்லிகா மேடம்கிட்ட நீங்க கத்துனதை பார்த்து நானே பயந்துட்டேண்ணா. ஆனால் அப்போ அய்யனார் மாதிரி விறைச்சு நின்னுது நீங்கதான்னு இப்போ சொன்னா யாரும் நம்பமாட்டாங்க” என்றவன் சொல்வதைப்போல் தான், தான் அப்படி கோபமாக கத்தியும் தன்மீது அக்கறை கொண்டு விஸ்வத்திடம் அழைத்து தன்னை பார்த்துக்க சொல்லி சொல்லியிருக்கிறாள் என்ற தன்னவளின் காதலில் விநோவின் முகம் விகசித்து செந்நிறம் பூண்டிருந்தது.

அதனை விஸ்வம் கண்டுகொண்டால் இன்னும் கலாய்ப்பான் என்பதால் சன்னல் பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டான்.

“கள்ளத்தனம் காதலில் அழகு தான்’ண்ணா” என்று விநோவை கண்டுகொண்டவனாக சொல்லிய விஸ்வத்தின் வார்த்தையில் வெளிப்படையாகவே நீண்டு புன்னகைத்தான் விநோ.

“இப்படிலாம் சிரிக்காதீங்கண்ணா. அப்புறம் நான் கன்னத்துல நச்சுன்னு ஒண்ணு கொடுத்திடுவேன்” என்று விஸ்வம் சொல்லியதில் அவனது புஜத்திலேயே இரண்டு குத்து வைத்தான் விநோ.

“காய்ச்சல் அதிகமாகிடுச்சு போலண்ணா. உங்க கை அதிகமா சுடுது” என்ற விஸ்வம் கேலிப்பேச்சினை ஒதுக்கி விரைந்து மருத்துவமனை வந்து சேர்ந்தான்.

விநோ மருத்துவரை பார்த்து சிகிச்சை பெற்று வீட்டிற்கு செல்ல மேலும் ஒரு மணி நேரமானது.

error: Content is protected !!
Scroll to Top