Skip to content
பாகம் 3
°விழிகளே மொழியாய்.°
உயிர் உறை 38 (மொழி 1)
[பொறுப்பு துறப்பு: மொழி மலையாளமாக இருந்தாலும்… கதையின் உரையாடல்கள் அனைத்தும் தமிழில்.
‘கதையில், கதை மாந்தர்கள், நிகழ்வுகள், அரசியல் பேச்சுக்கள், வசனங்கள், களம் காட்சிகள் என யாவும்…* யாவும்* கற்பனையே*.’]
***********
இடம் : எழில் கொஞ்சும் கேரளா.
மாநிலத்தின் தலைநகரத்தின் பிரதான இடம் மிகுந்த பரபரப்புடன் காட்சியளித்தது.
பல ஆயிரம் தலைகள் அங்கே தென்பட்டன.
தங்கள் தலைவரின் இறந்த உடலை இறுதியாக ஒருமுறை கண்டுவிடத் துடித்தனர் தொண்டர்கள். விடயம் கேள்விப்பட்டு மக்கள் அலை திரளும் முன்னரே பாரத பிரதமர் நேரில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றிருக்க… அண்டை மாநில தலைவர்கள் ஒவ்வொருவராக வந்த வண்ணம் இருந்தினர்.
அனைவருக்கும் தன்னுடைய அழுத்தமான கரம் குவிப்பின் மூலம் இரங்கலுக்கான பிரதிபலிப்பை அளித்தபடி அமைதியாக நின்றிருந்தான் யதுநந்தன்.
இருபத்தி ஆறு வயது இளைஞன். மாநிலத்தின் முதல் இளம் வயது சட்டமன்ற உறுப்பினர். இந்த பதவி அத்தனை எளிதில் அவனது கைகளுக்கு வந்துவிடவில்லை.
அதற்கான… அவனது தந்தையின் போராட்டம், முயற்சி யாவும் அத்தனை கடினம் வாய்ந்ததாக இருந்தது.
கட்சியின் தலைவர். நிறுவனரின் வாரிசு. மாநிலத்தின் முதல்வர். அவருக்கே அவரது மகனை தன்னுடைய இடத்தில் அமர வைப்பது அத்தனை எளிதாக இருக்கவில்லை.
மாநிலத்தின் முதன்மை கட்சி. சிறியளவில் அச்சுதன் துவங்கி அதனை வளர்த்தார் என்றால், உண்ணி நந்தன் அதனை பெரும் புகழுக்கு உள்ளாக்கினார்.
அவர்களுக்கு என்று தனி கோட்பாடு. அதன் சாராம்சம் இதுதான். கடைநிலை மக்கள் வரை எளிதில் அவர்களை சந்தித்து தங்களது தேவைகளை தெரிவிக்கலாம். இதற்காகவே தனி குழு அந்தந்த தொகுதிகளில் தனித்தனியாக செயல்படுத்தப்பட்டன.
குறைகள் யாவும் துரித நிலையில் அல்லது மூன்று மாத இடைவெளியில் கட்டாயம் நிறைவேற்றப்பட்டிருக்கும்.
இதனால் மக்களிடையே அச்சுதனை விட, உண்ணி சிறந்த தலைவன் என்கிற பெயரை வெகு சீக்கிரமே எடுத்திருந்தார்.
அச்சுதனை பார்த்து வளர்ந்ததாலேயே உண்ணிக்கு அரசியலில் அத்தனை ஆர்வம். பிடித்தம். ஆனால் அவரின் மகனுக்கோ சுதந்திரமில்லா அரசியல் குடும்பத்தின் வாழ்க்கை எட்டிக்காய் தான்.
அதற்காகவே தன்னுடைய அடையாளத்தை மறைத்து வெளி மாநிலங்களில் தான் தன்னுடைய கல்வியை பயின்றான்.
கல்லூரி முதுநிலை படிப்பின் இரண்டாம் ஆண்டில் யது நந்தன்…
பள்ளி படிப்பை யது முடித்த நேரம், உண்ணியின் அரசியல் எதிரிகளால் அவனது உயிருக்கு ஆபத்து நேர்ந்திட, இரண்டு வருடங்கள் கல்வி நிலையத்திற்கு கூட அனுப்பாது வீட்டிற்குள்ளேயே சிறை வைக்கப்பட்டதால் இருபத்தி ஐந்தாவது அகவை முடியும் தருணத்தில் முதுநிலை பயின்று கொண்டிருக்கிறான்.
நடுநிசியில், விடுதியில் ஆழ்ந்த சயனத்தில் இருந்தவனின் அலைபேசி அதிர்ந்து ஒலிக்க…
“இந்த நேரத்தில் யாரது?” என்ற முனகலோடு, மெத்தையில் தன் காலுக்கு அடியில் கிடந்த அலைபேசியை கைகளால் துழாவி எடுத்து அரை கண்கள் திறந்து பார்த்தவன், திரையில் ஒளிர்ந்த தந்தையின் தனிப்பட்ட பிரத்யேக ரகசிய எண்ணை கண்டதும் மொத்த தூக்கமும் பறந்தோட ஒருவித மரியாதையுடன் நிமிர்ந்து அமர்ந்தவன், காற்றை உதடு குவித்து ஊதியவனாக தன்னை சமநிலை செய்த பின்னரே அழைப்பை ஏற்றிருந்தான்.
“டாட்…”
“நான் இப்போ உன் விடுதி வளாகத்தில்தான் இருக்கேன்.” உண்ணியின் குரல் நின்ற அடுத்த கணம் தனக்கு பக்கத்து படுக்கையில் அழுத்தமான உறக்கத்தில் இருந்த தன்னுடைய ஆருயிர் நண்பனை ஒரு கனம் ஆழ்ந்து நோக்கியவன், அவனது தூக்கத்தை உறுதி செய்த விநாடி அடித்து பிடித்து ஓடிவந்து அவரின் முன் நின்றிருந்தான் யதுநந்தன்.
இது தந்தையிடமான யதுவின் பயம் கிடையாது. மரியாதை. அவரின் நற்பண்புகளின் மீதான அதீதப்பற்று. அவனை பொறுத்தவரை அவனது தந்தையை போல் நேர்மையான அரசியல் சாணக்கியன் இதுவரை பிறக்கவில்லை. அந்த சாணக்கிய தனத்தில் மக்களின் நலன் மட்டுமே பிரதானமாக இருக்கும். அவனுக்கு அவர் ஹீரோ வெர்ஷிப் போலத்தான். முதலில் நாயகனாக ரசித்த பின்னரே தந்தையென்று நெருங்கிடுவான்.
இப்போதும் இருட்டில் வடிவம் தெரியாத கருப்பு நிற காரில் அமர்ந்திருந்த தந்தையின் அருகில் ஏறி அமர்ந்தவன்,
“அச்சன்” என்று விளிக்க, மகனின் தோளில் கையிட்டு தன்னோடு அணைத்து விடுவித்தார்.
“சுகமானோ நந்தா?”
“ய்யா, பைன் டாட். நிங்கள்?”
தந்தையின் முகத்தில் என்றுமில்லா ஒரு உணர்வை அனுமானித்தவனாக அவரின் நலனறிய வினவினான்.
“சொல்லிக்கிற அளவுக்கு இல்லை நந்தா!” உண்ணி எப்போதும் இப்படித்தான். வருத்தம், துக்கம், சோகம் யாவற்றையும் மகனிடம் மறைத்திட மாட்டார். சந்தோஷங்களை வெளிப்படையாகக் கூறுபவர் இதனையும் மறைக்காது சொல்லிவிடுவார். அவருக்கென்று இருக்கும் ஒரே உறவிடம் திறந்த புத்தகமாகவே இருந்தார்.
எப்போதும் யதுவை சந்திக்க உண்ணி இப்படியெல்லாம் வந்தது இல்லை. யது விடுமுறையில் வீட்டிற்கு வரும்வரை அவனை கண்டிட ஏக்கம் கொண்டாலும் காத்திருப்பார்.
ஆனால், இன்று இந்த நேரத்தில் தன்னை பார்க்க வந்தபோதே யது ஓரளவிற்கு தந்தையின் மனம் சஞ்சலத்தில் இருப்பதை கண்டுகொண்டான்.
அது அவரை கண்டதும் வலுப்பெற்றது.
தன்னால் முடியுமென்றால் தந்தையின் மனதிற்கு அமைதியை கொடுத்திட வேண்டுமென அந்நொடியே நினைத்தவன்,
“நான் எதுவும் செய்யணுமா அச்சா(ன்)?” என்று நேரடியாகக் கேட்டும் விட்டான்.
ஏதோ யோசனையிலிருந்து விழிப்பது போல் மகனை ஏறிட்டவர்…
“நீ… நீதான் செய்யணும். என்னுடைய இறுதி பிரம்மாஸ்திரம் நீதான்” என்றவரை புரியாது பார்த்தான்.
யதுவின் தோளை ஆதுரமாக தட்டிக்கொடுத்தவர்,
“பாசில் எல்லா பார்மாலிட்டிஸும் முடிச்சிட்டான். உனக்கு எது முக்கியமோ அதை மட்டும் எடுத்துக்கிட்டு சீக்கிரம் கிளம்பி வா! பதினொரு மணிக்கெல்லாம் நாம் கோட்டையில் இருக்கணும்” என்றார்.
‘நாம்?… நானா?’ நினைத்தபோதும் உண்ணியிடம் அதனை கேட்காது, தலையை ஆட்டிவிட்டு யது காரிலிருந்து இறங்கிட, பாசில் எதிர்பட்டான்.
“படிப்பை விட்டுட்டியா?”
பாசில் தன்னுடைய தந்தையுடன் என்ன செய்கிறான் என்பதை அறிந்துகொள்வதற்காக மறைமுகமாக வினா தொடுத்தான்.
“அங்கிளுக்கு நம்பகமான ஆள் வேணுன்னு என்னை உடனிருக்கக் கேட்டுக்கொண்டார்” என்ற பாசில், “காலேஜ் போயிட்டுதான் இருக்கேன்” என்றான்.
“ம்ம்…” என்று நகர்ந்த யதுவை, அவனின் வாழ்வின் ரசிப்புகளை அறிந்த பாசிலுக்கு அவனின் வாழ்வின் பாதை முற்றிலும் மாறவிருப்பதை ஒருவித பரிதாபத்துடன் பார்த்தான்.
“வாடர்னிடம் எல்லாம் பேசிட்டேன். நீங்க…”
யது திரும்பி முறைத்ததில் சட்டென்று பேச்சினை நிறுத்திய பாசில்,
“நீ உன் தின்க்ஸ் எடுத்துக்கிட்டு நேரா வந்துடு” என்றான்.
“இனி எப்பவும் இந்த பன்மை இருக்கக்கூடாது” என்று எச்சரித்தே விடுதிக்குள் சென்றான் யது.
‘மாநிலத்தின் வருங்கால முதல்வரை யான் ஒருமையில் விளித்தால், ஜார்ஜ் என்னை தூக்கிப்போட்டு மிதிக்கும். எண்ட பகவதி அம்மே!’ வேண்டிக்கொண்டவனுக்கு யதுவின் சூப்பர் கூல் குணம் மென்புன்னகையை தோற்றுவித்தது.
பாசிலின் தந்தை உண்ணிக்கு உற்றத்தோழன் மட்டுமல்லாது, அரசியலில் ஈடுபடாது நண்பனுக்கு அனைத்திலும் வலது கையாக செயல்பட்டவர். அவர் இப்போது இல்லையென்றானதும், அவரின் குடும்பத்திற்கு தேவைகள் அனைத்தையும் உண்ணி தானாக உவந்து செய்திட… அதனை ஏனோ இலவசமாக ஏற்றிட மறுத்த பாசில்,
“வேலை கொடுங்க. செய்றேன். ஊதியமா வாங்கிக்கிறேன்” என்றிட, யதுவை பற்றி ஒரு முடிவில் இருந்தவர், ‘தனக்கு இவன் தந்தை மந்திரி என்றால், என் மகனுக்கு இவன்’ என்று ஏதோ கணக்கிட்டு தன்னுடன் வைத்துக்கொண்டு அரசியலின் உள்குத்துக்களை கற்பித்துக் கொண்டிருக்கிறார். அவனும் நல்ல மாணவனாக கற்றுக் கொண்டிருக்கிறான்.
தன்னுடைய விடுதி அறைக்குள் நுழைந்த யது பக்கத்து படுக்கையில் படுத்திருந்த விநோதனை பார்த்தவாறு சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்துவிட்டான்.
‘விநோ…’ யதுவின் மனம் கூக்குரலிட்டது.
யது தன்னுடைய குடும்பம் அரசியலை சார்ந்தது என்பதால் யாரிடமும் அதிக நட்பு பாராட்டமாட்டான். தான் யாரென்று தெரிந்தால் தன்மூலம் கோரிக்கைகள் வரத்தொடங்கும் என்பதால். ஆனால் அந்த கட்டுப்பாடுகள் ஏதும் விநோவின் முன் யதுவால் கடைப்பிடிக்க முடியாது போனது.
தன்னைப்பற்றி எதுவுமே அறிந்துகொள்ளாது, தனக்கு வேண்டியது நீ மட்டுமே என்று எவ்வித எதிர்பார்ப்புமின்றி முன்வந்த விநோவை அத்தனை பிடித்தது அவனுக்கு. பாசில் சிறுவயது முதல் நண்பன். இருப்பினும் யதுவின் உயரம் அறிந்தவனுக்கு எப்போதும் அவனிடம் மரியாதை கலந்த விலகல் இருக்கும். அதில்லாமல் கரம் நீட்டிய விநோவின் நட்பு கரத்தை பட்டென்று இறுகப்பற்றிக்கொண்டான் யதுநந்தன்.
அப்படிப்பட்ட நட்பை இழக்கும் வலி அவனுள்.
யதுவிற்கு உள்ளுணர்வு இனி இங்கு தான் திரும்ப போவதில்லை என்பதை மனதில் அறிதிட்டு கூறிட, இன்றே தான் தன் விநோவை சந்திப்பது கடைசி என எண்ணி, விநோவின் உறக்கம் கலைந்திடாதவாறு அவனின் நெற்றியில் இதழொற்றிய யது,
“எமெர்ஜென்சி” என்று ஒற்றை வார்த்தையை ஸ்டிக்கி பேப்பரில் எழுதி விநோ எழுந்ததும் பார்க்கும்படியாக ஒட்டியவன், எதுவும் எடுக்காது வெளியேறினான்.
வெறும் கையுடன் வரும் மகனை கூர்ந்து நோக்கிய உண்ணி…
“விநோகிட்ட சொல்லலையா?” எனக்கேட்டு அவனை அதிர வைத்தார்.
யது அவனைப்பற்றி சொன்னதே இல்லையல்லவா! அப்போது அதிர்வு இருக்கத்தானே செய்யும். ஆனால் ஒரு மணித்துளிதான். மீண்டிருந்தான்.
தன்னுடைய நலனில் அதீ அக்கறை தந்தையிடம் உள்ளதென்று அவன் அறிவானே! அதற்காக தன்னைப்பற்றி, தான் சொல்லித்தான் அவர் அனைத்தும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றில்லை. தான் தும்மினால் கூட அவருக்குத் தெரிந்துவிடும் என்பதால் எப்படி என்ற கேள்வியை தவிர்த்திட்டான்.
“சொல்லிட்டு வந்திருந்தா உங்களுக்கு ஓகேவா டாட்?”
மகனை கூர்ந்து நோக்கினார்.
நண்பனை பிரியும் வலியைவிட, இத்தனை வருட நட்பில் தான் யாரென்று சொல்லிடாத வருத்தமே அவனுள் நிறைய தென்பட்டது.
“எப்படியும் இன்னும் சில தினங்களில் உன்னைப்பற்றி அனைத்தும் அவனறிவான்” என்று சொல்லிய உண்ணிக்கு, தன்னுடைய பிள்ளையின் ரசனையான இலகு வாழ்விற்கு அரசியல் ஒத்துவராது என்று அறிந்தும், அதில் அவனை உட்புகுத்தப்போவது வேதனையாகத்தான் இருந்தது. இருப்பினும் அவருக்கும் வேறு வழியில்லையே!
உடையவன் இருந்தால் மட்டுமே இங்கு உடமைகள் பாதுகாப்பாய் இருக்கும். இது அனைத்திற்கும் பொருந்தும்.
அச்சுதன் உயிரோடு இல்லாத நிலையில், உண்ணியின் உயிருக்கும் ஆபத்து இருக்கும் சூழலில்… அடுத்து கட்சியின் வாரிசு என்பதில் கட்சி தடுமாறிக் கொண்டிருக்க,
உண்ணி நம்பிக்கை வைத்த அனைவரும் பொய்த்துப் போனவர்களாகிய பின்னர், உண்ணியின் ஒரே பற்றுதல், ஆதாரம், நம்பிக்கை அனைத்தும் அவரின் மகன் ஒருவனே!
எப்போது தன்னுடைய உயிருக்கு தனது அரசியல் நட்புக்களாலே ஆபத்து காத்திருக்கிறது என்பதை அறிந்தாரோ அடுத்த நொடி, அதுவரை மகனின் அமைதியான வாழ்விற்காக அவனது ஆசைப்படி அரசியல் அவனுக்கு வேண்டாமென்று ஒதுக்கி வைத்தவர், அவன்தான் தன்னுடைய அரசியலின் ஆணி வேரென்று உறுதியாக நம்பி அவனின் முன்பு நின்றிருந்தார்.
உண்ணிக்கு எந்த நிமிடமும் எண்ணமும் ஆகலாம்.
அதனால் தான் உயிரோடு இருக்கும்போதே மகனை தனது கட்சியின் தலைவனாக உருவாக்கிட வேண்டுமென்ற முனைப்போடு, திட்டம் தீட்டி மெல்ல மற்ற அரசியல் தலைவர்களின் கண்களை உறுத்தாது காரியத்தை கணகட்சிதமாக செய்து முடித்திருந்தார்.
அதன் பலனாக நடைபெற உள்ள மாநிலத்தின் முக்கிய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருக்கான இடைத்தேர்தலில் உண்ணியின் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளராக மனுதாக்கல் செய்திட தேர்தல் ஆணையத்தின் முன்… இதுவரை தந்தையின் பெயரை உச்சரித்து மட்டுமே அரசியல் கோஷங்களை கேட்டுக்கொண்டிருந்த யது தன்னுடைய பெயர் பல அடைமொழிகளில் ஒலிப்பதைக் கண்டு, தீவிர முகபாவத்துடன் அழுத்தமாக இறுகிய தாடையுடன், உடல் விறைத்து நின்றுகொண்டிருந்தான் என்று நினைத்தால் அதுதான் இல்லை.
‘என்னங்கடா இது கோஷம்… காலத்துக்கும் இதை மாத்தமாட்டிங்களாடா? எனக்கு சிரிப்பு வருதுடா! அதுவும் வருங்கால பிரதமருன்னு சொல்றதெல்லாம் ரொம்ப டூ டூ மச் டா’ என்று உள்ளுக்குள் கவுண்ட்டர் கொடுத்து சிரித்துக் கொண்டிருந்தான்.
***************
தேர்தல் அலுவலகம் வரும் வரையிலுமே யதுவிற்கு, தான் தேர்தலில் வேட்பாளராக களமிறங்க இருக்கிறோம் என்பது தெரியாது.
உண்ணி படிப்பை நிறுத்தி அழைத்து வந்தது… கட்சியின் பொறுப்பை தனக்கு கற்று கொடுப்பதற்கு என்றளவில் யது நினைத்திருக்க, உண்ணியின் திட்டமே வேறாக இருந்தது.
அலுவலகத்தின் முன்பு காரிலிருந்து யது இறங்கியதும், அவனது பெயரை குறித்து அரசியல் கோஷங்கள் ஒலித்திட, யது தன் தந்தையை அர்த்தமாக ஏறிட்டான்.
மகனின் கை பிடித்து அழுத்தம் கொடுத்தவர், கண்களை மூடி திறந்திட, யது இலகுவானான்.
எத்தனை பெரும் அதிர்வு, ஆச்சர்ய தருணங்களில் கூட யதுவின் உணர்வு இப்படித்தான் எளிதாக இருந்திடும்.
எதையும் மென்மையாக கடக்க நினைத்திடும் குணம் உடையவன்.
தனக்கு மற்றைய பக்கம் நின்றிருந்த பாசிலின் தோளை சுற்றி கரம் போட்ட யது,
“இந்த கோஷத்தை நிறுத்த சொல்லுடா. எனக்கு ஒரே சிரிப்பா வருது!” என்றான்.
“எதே… சிரிப்பு வருதா?” என்று வாய்விட்டே கேட்ட பாசில்…
“இதில்லாமல் அரசியல்வாதி, அரசியல் இல்லையே யது. கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ” என்றான்.
“இன்னைக்கு ஒருநாள் மட்டும்” என்ற யது தன்னை நோக்கி வந்த ஜார்ஜை பார்த்து கையை தூக்கி ஆட்டினான்.
ஒரு இளைஞனின் இயல்பு அந்த வகையில் தான் இருக்கும்.
உண்ணி மற்றும் யதுவிற்கு அருகில் வந்ததும்,
“என்ன உண்ணி… பையன் இன்னும் சின்ன பிள்ளை மாதிரி நடத்துக்கிறான். வயதுக்கேற்ற முதிர்ச்சி இல்லை போலிருக்கே?” என்ற ஜார்ஜிற்கு சிரிப்போடு சேர்த்து… “வயதுக்கும் முதிர்ச்சிக்கும் சம்மந்தம் இல்லை அங்கிள். அரசியல்வாதின்னா எப்பவும் உர்ருன்னு தான் இருக்கணுமா என்ன? அப்போ காமெடி சீன் பார்த்தால் கூட முறைச்சிக்கிட்டு தான் பார்ப்பீங்களா நீங்க? அந்தந்த உணர்வை அந்தந்த நேரத்தில் காட்டிடனும் அங்கிள்” என்ற பதிலையும் வழங்கினான்.
ஜார்ஜிற்கு சிறு பையனிடம் கொட்டு வாங்கிய உணர்வு.
உண்ணிக்கு யதுவைப்பற்றி நன்கு தெரியும்.
விளையாட்டு பிள்ளை போல் இருப்பவனிடம் இருக்கும் அறிவு, ஆற்றல், திறமை அனைத்தும் தன்னைவிட பல மடங்கு அதிகம் உள்ளது.
எதையும் அதிகம் அழுத்தம் கொடுக்காது செய்து முடிப்பவன் என்று.
அரசியல் வேண்டாமென்று இருப்பவனிடம் அதற்கான நுணுக்கம் நிறையவே உள்ளதென்று அறிவார். அதனால் தான் யதுவை தன்னுடைய அரசியல் வாரிசாக முடிவு செய்திட சிறு நொடியும் அவர் யோசிக்கவில்லை.
ஜார்ஜிற்கு அவர் சொல்லிய ஆளினை வேட்பாளராக்கவில்லை என்கிற கோபம். அதனை யதுவை கண்டதும் வெளிப்படுத்திவிட்டார்.
தான் சொல்லிய ஆளினை காட்டிலும் யது அத்தனை நேர்த்தியான ஆளில்லை என்பதை உண்ணிக்கு உணர்த்திட முயற்சித்தார். யதுவின் நிதர்சன பேச்சால் தோல்வியை தழுவினார்.
ஜார்ஜின் நோக்கம் புரிந்த உண்ணி மகனை பெரியவர்களிடம் அப்படியெல்லாம் பேசிடக்கூடாதென்று கண்டிக்க முன்வரவில்லை. அமைதியாக யதுவின் பதிலை உள்ளுக்குள் ரசித்திருந்தார்.
“என்ன உண்ணி பெரியவங்ககிட்ட எப்படி பேசணும் கூட யதுவுக்கு தெரியலையே?”
மீண்டும் மட்டம் தட்டிட நினைத்தார்.
“அரசியலில் நுழைந்தாயிற்று… பேசக்கூடாதுன்னு சொன்னால் எப்படி அங்கிள்?”
மீண்டும் யதுவிடம் மூக்கு உடைந்தார்.
“யது விளையாட்டு பிள்ளையில்லை என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். எனக்கு பிறகு, யது தான் சரிவருவான்.” உண்ணி அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
“சரிவந்தால் சரிதான். யது திறமையா நடந்துகிட்டால் எனக்கும் அதுவே போதுமே உண்ணி. நானும் அதுக்குத்தானே ஆசைப்படுறேன்” என்று ஜார்ஜ்ஜின் உள்குத்து உண்ணிக்கு தெரியாதா என்ன?
அர்த்தமாகப் புன்னகைத்துக் கொண்டார் உண்ணி.
“நல்ல நேரம் முடியுறதுக்குள்ள கையெழுத்து போட்டுடலாங்க.” உண்ணிக்கு வலது கை என்று தன்னைத்தானே நினைத்துக்கொண்டிருக்கும் சேத்தன் கூறிட, உண்ணி பாசிலை ஏறிட்டார்.
“எல்லாம் ரெடி அச்சன்.”
பாசில் அவரின் பார்வைக்கான அர்த்தம் புரிந்து பதில் வழங்கிட,
உண்ணி யதுவை முன் அனுப்பி பின் தொடர்ந்தார்.
இனி உன் நிழலில் தான் நானும் நமது கட்சியும் என்று சொல்லாமல் செயலில் காட்டினார். பொருள் புரிய யதுவிற்கு எதனால் இத்தனை திடீர் மாற்றம் என்ற எண்ணம் தான்.
வேட்புமனு தாக்கல் செய்து, தன்னுடைய தந்தைக்காக மட்டுமே கையெழுத்திட்டு வெளியில் வந்தான்.
அதுவரை அடங்கியிருந்த கோஷம், மீண்டும் யதுவின் தலையை கண்டதும் அவ்விடத்தை நிறைத்தது.
“இது ஒண்ணை மட்டும் ஏத்துக்க முடியல அச்சன்.” முகத்தை ஒற்றை கையால் மறைத்து யது சொல்லிய தோரணையில் உண்ணியும் பாசிலும் சிரித்துவிட்டனர்.
ஜார்ஜ் வலுக்கட்டாயமாக சிரித்தார்.
“அவ்வளவு கஷ்டப்பட்டு சிரிக்க வேண்டாம் அங்கிள்” என்று யது சொல்ல, ஜார்ஜுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அடுத்து உண்ணி யதுவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட…
“தொகுதிக்கு செல்ல வேண்டாமா உண்ணி. மக்கள் மனதில் யதுவின் முகம் பதிந்தால் தான் ஓட்டு விழும். களத்தில் இறங்கி ஓட்டு கேட்க சொல்லு. ஒரு அரசியல்வாதி எப்படி மக்களிடம் நடந்துகொள்ள வேண்டும் என்று களத்தில் இறங்கி வேலை செய்தால் தான் யதுவால் கற்றுக்கொள்ள முடியும்” என்று, தான் இந்த கட்சியின் மூத்த தலைவர் என்பதை தன்னுடைய அறிவுரை பேச்சில் காட்டினார் ஜார்ஜ்.
“இன்னைக்குத்தானே வந்திருக்கான். போகப்போக அவனே கற்றுக்கொள்வான். நாம் சொல்லிக்கொடுக்கும் அவசியம் இருக்காது” என்ற உண்ணி ஓட்டுனருக்கு கண்காட்டிட கார் அதன் இயக்கத்தை தொடர்ந்தது.
“ஜார்ஜ் அங்கிளுக்கும் உங்களுக்கும் நடுவில் ஏதும் பிரச்சனையா அச்சா?”
மகன் தாங்கள் காட்டிக்கொள்ளாத விடயத்தில், கண்டுகொண்டதை நினைத்து உண்ணிக்கு மகிழ்வாகத்தான் இருந்தது. அரசியலில் முதல் பாடமல்லவா இது. ஒருவரின் முகம் கண்டு குறிப்பறிவது. அது யதுவிற்கு இயல்பாகவே உள்ளதென்று கண்டுகொண்டார்.
“அவர் சொன்ன கேண்டிடேட் நான் ஒத்துக்கல. அந்த வருத்தம் தான்” என்ற உண்ணிக்கு ஜார்ஜ்’ஜை எந்தளவிற்கு நம்புவது என்கிற குழப்பம் தெளிவு பெறாமல் நிலுவையில் இருப்பதால், யதுவிடம் இப்போது சொல்ல வேண்டாமென்று சொல்லாதுவிட்டார்.
அரசியல் குடும்பத்தின் வாரிசு என்பதால் யதுவிற்கு எதையும் சொல்லிக்கொடுக்கும் அவசியத்தை அவன் கொடுக்கவில்லை. தந்தைக்காக அரசியலில் தடம் பதித்தாலும், ஏற்ற பொறுப்பை சிரம் மேற்கொண்டு நிறைவாய் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் உண்ணி சொல்வதற்கு முன்பே, தேர்தலில் வெற்றிபெற என்னென்ன செய்ய வேண்டுமோ எல்லாவற்றையும் பாசிலின் உதவியுடன் தானே செய்தான்.
எதையும் செய்ய வேண்டுமென்று கடினப்பட்டு அவன் செய்யவில்லை. எளிதாக தனக்கு என்ன வருமோ அதனை செய்தான். பிறரை கவர வேண்டுமென்று எதையும் அடிகோடிட்டு நடைமுறை படுத்தவில்லை.
உண்ணியுடன் கட்சியில் இருப்பவர்களை சிறுவயது முதலே பார்த்து வளர்ந்தவனால், தன்னைவிட வயது பெரியோர் என்ற அடிப்படையில் தானே முன்சென்று இயல்பாக பேசி, அவர்களுக்கு அளிக்க வேண்டிய மரியாதை அளித்து, அரசியலில் தெரியாததை சொல்லி கொடுக்க வைத்து… ஒவ்வொன்றையும் தானே கேட்டு தெரிந்து கொள்வதென்று அவர்களையெல்லாம் தன்னை அவர்களில் ஒருவனாக பார்க்க வைத்திருந்தான்.
நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், கிணற்றில் குதித்துதான் ஆகவேண்டும். கற்றுக்கொடுப்பவரின் பிடி, கற்றுக்கொள்பவரின் கயிற்றில் அழுத்தமாக இருந்தால் மட்டும் போதுமானது.
யதுவிடத்தில் உண்ணியின் கோட்பாடும் அதுவாகத்தான் இருந்தது.
“உனக்கு தோன்றுவதை செய்” என்று தேர்தல் களத்தில் இறக்கிவிட்டுவிட்டார். என்ன செய்கிறான் என்பதை அவனை சொல்ல கேட்டு ஒவ்வொரு நாளின் முடிவிலும் தெரிந்து கொண்டவர், சரிவராது என்பதை மட்டுமல்லாமல் அவனது நிறைகளையும் குறிப்பிட்டு காண்பித்து வழிநடத்துபவராக மட்டுமே தன்னை அவனிடம் காட்டிக்கொண்டார்.
தன்னுடைய தந்தை எதையொன்றை செய்தாலும் அதில் அர்த்தங்கள் இருக்குமென்று நினைத்ததாலோ என்னவோ யது எவ்வித காரணமும் கேட்கவில்லை.
அந்த தேர்தலில் சொல்லிக்கொள்ள முடியாத அதிகளவு வாக்கு வித்தியாசத்தில் யது வென்றிருக்க, ஜார்ஜ்ஜை மிதப்பாய் ஒருபார்வை பார்த்தார் உண்ணி.
அப்பார்வையில் பொதிந்து கிடந்த ஆயிரம் அர்த்தங்களுக்கு ஒற்றை விடையாய் உயர்ந்து நின்றான் யது நந்தன்.
அவ்வெற்றிக்கு பின்னான இரண்டு வருட ஆட்சியில் தன்னுடைய தொகுதி மக்களுக்கு யது செய்தவை யாவும் இரண்டு வருடங்களில் சாத்தியமாற்றவை.
அசாத்தியமான பல நன்மைகளை சாத்தியமாக்கியிருந்தான்.
புலிக்கு பிறந்தது புலி என்பதை நிரூபித்திருந்தான்.
யது மேற்கொண்ட ஒரே கொள்கை…
யாரென்ன கூறினாலும் கேட்டுக்கொண்டான். ஆனால் முடிவு, தன் மனதோடு மட்டுமே தானென்று மட்டுமே எடுத்தான். நடைமுறை படுத்தினான்.
அரசியலில் மட்டும் சொல்புத்தியை விட, சுயபுத்தி அதிகம் இருக்க வேண்டும். சொல்புத்தியை கேட்க ஆரம்பித்தால் அங்கு மற்றவர்களுக்கு அவன் அடிமையாக நேரிடும். அதனை உண்ணியின் மூலம் கற்றிருக்க, தானென்று மட்டுமே தனது சிந்தனையில் கலந்திருந்தான்.
இரண்டு வருடங்களுக்கு பின்னான மாநில ஆட்சி தேர்தலில் உண்ணி களம் இறங்கவில்லை.
நாளுக்கு நாள் நலிவடைந்த அவரின் உடல்நலன் காரணமென்று மற்ற தலைவர்கள் நினைத்திருக்க, தன்னுடைய மகனுக்கு வழிவிட்டு விலகிக்கொண்டார் என்பதே உண்மை. யது அறிந்தே இருந்தான்.
அதனை அவரிடம் கேட்கவும் செய்தான்.
“எனக்கு பின் அனைத்தும் நீதான்” என்றவரிடம்…
“உங்களோட இறுதி நாட்கள் இவைன்னு உங்களுக்கு முன்பே தெரிந்திருக்குதானே அச்சா” என்றவனின் கலங்கிய கண்களை முதல்முறை காண்கிறார் உண்ணி.
பிறந்த நொடி கூட சிரிப்புடன் பிறந்தவன் என் மகன் என்ற அவரின் மொத்த மகிழ்வும், யதுவின் முதல் கண்ணீரில் பொசுங்கியது.
யதுவின் கையினை இறுகப் பற்றியவர்…
“இங்க யாரையும் நம்பாத யது. வெளியில் பாசில், வீட்டுக்குள் ராதா. இவ்விருவர் மட்டுமே உன் நம்பிக்கைக்குரிய நபர்கள். வீட்டில் செய்த உணவாகவே இருந்தாலும், ராதா கொடுத்தால் மட்டுமே நீ உண்ண வேண்டும். பாவனாவையும் உன் சந்தேக வட்டத்தில் தான் நீ வைத்திருக்க வேண்டும்” என்றதோடு, “இங்கு யாரும் உண்மையானவர்கள் இல்லை” என்பதை மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தினார்.
பாவனாவை சொல்வது மட்டும் யதுவிற்கு நெருடலாக இருந்தபோதும் பாவனாவை தான் விரும்புவது தந்தைக்கு தெரிந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டான்.
“நான் பாவனாவை திருமணம் செய்துகொள்ள நினைப்பதில் உங்களுக்கு விருப்பமில்லையா அச்சா?” நேரடியாகக் கேட்டிருந்தான்.
படுக்கையிலேயே இருப்பவர், நீண்ட நாட்களுக்குப் பின்னர் சற்று அதிகமாக சிரித்தார்.
“அவள் முழுமையாக உன்னவளாக ஆகும்வரை, உன் காதலியாகவே இருப்பினும் நம்பாதே!” அத்தனை அழுத்தம் அவரிடம்.
சரியென ஏற்றுக்கொண்டான்.
அடுத்த நாளே கட்சி தலைமை அலுவலகத்திற்கு கடினப்பட்டு சக்கர நாற்காலியில் வந்தவர்,
“தனக்கடுத்து கட்சிக்கு… என்னிடத்தில் என் மகன் தான்” என்று என் மகன் என்பதை அடர்த்தியாய் அறிவித்தவர், கட்சிக்குள்ளேயே இரு குழுவாக இருக்கும், அக்குழுவின் தலைவர்கள் இருவரையும் வளைந்த புன்னகையோடு ஏறிட்டார்.
“இந்த கட்சி… என்னுடைய தந்தையால் தொடங்கப்பட்டு, என்னால் வளர்க்கப்பட்டது. வளர்ச்சிக்கு தாங்கள் அனைவரும் காரணம். ஆனால் தலைவனின் வழிநடத்துதல் சரியாக இல்லாது போயிருந்தால், கட்சியே இல்லாமல் போயிருக்கும். ஆதலால், என்னுடைய இடத்திற்கு என் மகனை காட்டிலும் வேறொருவரை நியமிக்க எனக்கு விருப்பமில்லை” என்று நேராகத் தெரிவித்தவர்…
“கட்சிக்கு உண்மையானவர்கள், சின்ன பையனின் கீழ் வேலை செய்ய வேண்டுமா என்று நினையாது… கட்சி மட்டுமே முக்கியமென்ற அடிப்படையில் யதுவிற்கு துணை நிற்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
உண்ணியின் இத்தகைய பேச்சிற்கு பின்னருமா யாராவது யதுவிற்கு எதிராக மறுப்பு தெரிவிப்பர்?
முதல் ஆளாக ஜார்ஜ் ஏற்றுக்கொள்ளவதாக எழுந்து நின்று கூறிட…
மற்றவர்கள் வழி மொழிந்தனர்.
யதுநந்தன் அக்கட்சியின் தலைவராக அந்நொடி முதல் பொறுப்பேற்றான்.
error: Content is protected !!