நேச நெஞ்சங்கள் 39

உயிர் உறை 39 (மொழி 2)

விடிந்தால் மாநில ஆட்சிக்காக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை.

அந்த இரவில் ஏனோ யதுவால் அமைதியான உறக்கம் கொள்ள முடியவில்லை. மனதில் மெல்லிய தவிப்பு சூழ, கண்களை மூடிட முடியாது எழுந்து அமர்ந்தான்.

தான் தந்தையுடன் இருக்க வேண்டுமென்று அவனின் மனம் ஓலமிட… வேகமாக உண்ணியின் அறைக்குள் நுழைந்தவன், உறங்கிக்கொண்டிருந்தவரின் மீது தான் கையினை போட்டு அணைத்தவாறு படுத்துக்கொண்டான்.

“என்டே குட்டிக்கு உறங்கான் கழியுன்னில்லே?”

உண்ணியின் குரலில் அவர் உறங்கவில்லை என்பதை அறிந்து மேலும் அவரை ஒட்டி படுத்தான் யது.

“ஒரு மாதிரி இருக்கு அச்சா” என்றவன், “நீங்க என்கூடவே இருக்கணும். நீங்களும் இல்லைன்னா என்னால் முடியாது” என்று தன் சுயமின்றி தன்னைப்போல் கூறியிருந்தான்.

உண்ணி மெல்லியதாக சிரித்துக் கொண்டார்.

யதுவின் பக்கம் திரும்பிப் படுத்தவர், அவனின் தோளில் தட்டிக்கொடுத்தவராக பேச ஆரம்பித்தார்.

“இங்க யாரும் யாரையும் நம்பி பிறப்பதில்லை நந்தா! பூமிக்கு நாம் வருவதற்கு கடவுள் அமைத்து கொடுத்த பாதை தான் தாய், தந்தை. கடைசி வரை உடன் வர முடியாததுதான் இங்கு அனைத்தும்” என்றவர்,

“நானில்லைன்னாலும் என் நந்தா திடமா இருக்கணும். என் கன்னுக்குட்டி அழுது கரைந்தால் இந்த அச்சனுக்கு பிடிக்காது. தெரியும் தானே?” என்றதோடு…

“உன் தலையில் பெரிய பாரத்தை வைத்துட்டு செல்லயிருக்கேன். அதையெல்லாம் நீ சரி செய்துடுவ நம்பிக்கை எனக்கு இருக்கு” என்றார்.

அன்றே தன்னுடைய இறுதி நாள் எனும் விதமாக நீண்டு பேசிக்கொண்டே இருந்தார்.

“உனக்கு அரசியல் வாழ்க்கை பிடிக்காது தெரியும். என்னுடைய சுயநலத்திற்காகத்தான் இப்போ நீ அரசியலில் இருக்க. உன்னால் சமாளிக்க முடியுது. உன் பணியை என்னைவிட நீ திறம்படவே நிர்வகிக்கிற. உனக்கு நிர்வாகத் திறமை இயல்பிலே உள்ளது. எனக்கு அடுத்து நீதான் முதல்வர் சீட்டில் அமர வேண்டுமென்பது என் ஆசையல்ல. சுயநலமில்லாத, மக்களுக்கு சேவை புரியும் குணம் கொண்ட எந்தவொரு நபருக்கும் உரித்தான இருக்கை அது. நாளை நானில்லாமப் போனால், நீயே முதல்வராக இருக்கணும் அவசியமில்லை.

தலைவனாக இருப்பவனைவிட தொண்டர்களோடு கலந்திருப்பவனக்குத்தான் எளியோரின் சூழல் புரியும். நல்லது செய்ய தலைமையில் இருக்க வேண்டுமென்றில்லை. நல்ல மனமிருந்தாலே போதும்.

அது என்னுடைய நந்தாவுக்கு நிறையவே இருக்கு.

அப்புறம் எதுக்கு உன்னை அரசியலில் நுழைத்தேங்கிற கேள்வி உனக்குள் வரலாம். அதுக்கு ஒரே காரணம்… தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே! எனக்கடுத்து நம்ம கட்சியை வழிநடத்த உள்நோக்கமற்ற யாரும் இங்கில்லை. எல்லாரும் ஏதோ ஒருவகையில் ஆசை கொண்டவர்கள். அவங்களை நான் தப்பு சொல்லவில்லை. மனித மனமே ஆசைகளுக்கு உட்பட்டது தானே. உயர செல்ல செல்ல, தேவைகளும், தான் என்கிற சுயநலமும் அதிகரிக்கும். இதையெல்லாம் கடந்த ஒரு ஆள் எனக்கு அடுத்து என்னிடத்தில் இருக்கணும் நினைத்தேன்.

என் ரத்தத்திற்கு மட்டுமே அத்தகைய குணமும் பண்பும் இருக்குன்னு என் மனசு சொல்லுது… அதனால தான் உனக்கு பிடிக்காத ஒண்ணுன்னு தெரிந்தும், உன்னை இதில் இழுத்து விட்டுட்டேன்” என்றார்.

உண்ணி சொல்வதையெல்லாம் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான் யது. இடையில் எங்கும் அவன் குறுக்கீடு செய்யவில்லை.

“உனக்கு எப்போ இந்த அரசியலிலிருந்து விலகிடணும் தோணுதோ, அன்னைக்கு உன்னைப்போல் ஒருவனிடம் நம் கட்சியை ஒப்படைத்துவிட்டு நீ உனக்கான வாழ்வை வாழ்” என்றார்.

பிடிக்காமல் தந்தைக்காக என்று அரசியலில் இறங்கியிருந்தாலும், மக்களுக்கு உதவி செய்யும் வாய்ப்பு அத்தனை எளிதில் அனைவருக்கும் கிடைத்திடாது என்பதை கொஞ்ச நாட்களிலேயே தெரிந்துகொண்டவன் தன்னுள் கொஞ்ச கொஞ்சமாக பிடித்தத்தை ஏற்படுத்திக்கொண்டான். மனம் ஒன்றி ஈடுபட்டால் தான் செய்வதை திருந்த செய்திட முடியுமென்று அரசியலில் ஈடுபாட்டினை வளர்த்துக்கொண்டான்.

“என்னை நம்பி ஒப்படைத்திருக்கும் பொறுப்பை அத்தனை எளிதில் விட்டுடமாட்டேன் அச்சா” என்ற யதுவின் பதில் உண்ணிக்கு போதுமானதாக இருந்தது.

‘இனி எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான்’ என்கிற நிம்மதி அவரின் கண்களில் ஒளிர்ந்தது.

சில நிமிட அமைதி.

இத்தனை நாட்களாக மனதில் உறுத்திக்கொண்டிருந்த ஒன்றை இன்று வெளிப்படையாகக் கேட்டுவிட்டான்.

“உங்கள் உடல் நலன் இயற்கையா பாதிக்கப்படலதானே அச்சா?”

அர்த்தமானப் புன்னகை மட்டுமே அவரிடம்.

“வஞ்சம் சூழ் கூட்டுக்குள் உன்னை தனியாளா போராட வைத்துவிட்டு போகயிருக்கேன் நந்தா! இங்க நம்பிக்கை என்பதன் உட்பொருள் பொய் மட்டுமே. எனது நம்பிக்கை நீ மட்டுமே!” என்றவர், “அரசியலில் உன் நிழலையும் நீ நம்பக்கூடாது” என்றார்.

“உங்களுக்குத் தெரியும் தானே. நீங்க… இப்படி… யார் காரணம்?”

ராஜாவாக வலம் வந்தவரை படுக்கையில் வீழ்த்தியது யாரென்று தெரிந்து கொன்று புதைத்திடும் வேகம் அவனுள்.

“தெரிந்து என்ன செய்யப்போற?” என்ற உண்ணி… “இங்க பல விஷயங்கள் தெரியாமல் இருப்பதுதான் நல்லது. உனக்கு தெரியாது என்கிற வரை மட்டுமே உன்னை மதித்து நடப்பர். தெரிந்துவிட்டது என்றால் உன்னால் என்ன செய்திட முடியும் என்கிற அலட்சியம் அவங்களுக்கு வந்துவிடும்.

யாரா இருந்தாலும் சந்தேகக்கண் கொண்டு மட்டுமே பார்.

சந்தேக மனம் கொள்வதும் நல்லதுதான். சந்தேகம் வந்தால் தான் ஏன் எதற்கு என்று ஆராயத் தோன்றும். ஆராய்ந்தால் தான் உண்மை விளங்கும்” என்றவர், “நாளை முடிவு என்னவா இருந்தாலும் ஏற்றுக்கொள். ஜெயித்தால் ஆர்ப்பரிக்கவும் வேண்டாம். தோற்றால் ஓய்ந்து அமரவும் வேண்டாம்” என்றார்.

“யூ ஆர் கிரேட் அச்சா” என்ற யது, அவரையே இமைக்காமல் பார்த்திருக்க…

“உறங்குடா” என்று யதுவின் நெற்றியில் முத்தம் வைத்து கண்களை மூடிக்கொண்டார்.

அதுவே அவரின் இறுதி உறக்கம் ஆனது.

மகனுக்கு அனைத்தும் புரிய வைத்தாயிற்று என்பது மட்டுமல்லாமல் என்ன நடந்தாலும் அவனால் சமாளிக்க முடியும் என்கிற திடம் அவரை நிம்மதியாக உறக்கம் கொள்ளச்செய்தது.

தனக்கென்ற ஒரே உறவான மகனின் அணைப்பில் அமைதியாக உயிர் துறந்திருந்தார்.

அதிகாலை கண் விழித்த யது உண்ணியின் உடல் சில்லிப்பை உணர்ந்து உண்மையை அறிந்தாலும், மனதால் ஏற்க முடியாது, மூளையால் கிரகிக்க முடியாது மருத்துவரை அழைத்து பரிசோதித்து அவரின் மரணத்தை மருத்துவர் உறுதி செய்த பின்னரே மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தினான்.

மருத்துவரை அனுப்பிவிட்டு உண்ணியின் அறைக்குள் வந்தவன் கதவினை தாழிட்டு, அவரின் காலுக்கு கீழே அமர்ந்து தன்னுடைய இருபத்தியேழு அகவை வரை அழுதிடாத மொத்த அழுகையையும் வெளிப்படுத்தினான். கதறினான். தாரை தாரையாக கன்னம் வழியும் நீரினை பொருட்படுத்தாது தன்னுடைய கண்ணீரால் தகப்பனின் பாதம் கழுவிக்கொண்டிருந்தான்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களுக்குப் பின்னர், தன் மொத்த உணர்வுகளையும் தனக்குள் புதைத்தவனாக கண்களை அழுத்தி துடைத்து உண்ணியின் முகம் பார்த்தவன், அவரின் கன்னத்தில் அழுத்தமாக ஆழமாக முத்தம் வைத்து விலகி நின்றவன், நிர்மலமாக துயில் கொண்டிருக்கும் அவரின் முகத்தையே பார்த்தபடி நின்றவன் பாசிலுக்கு அழைத்து வீட்டிற்கு வரும்படி சொல்லிவிட்டு… அறையிலிருந்து வெளியில் வந்தான்.

யதுவை கண்டதும்…

“சேட்டா எழுந்தாச்சா யது?” என்ற ராதாவிடம், சலனமற்ற முகத்துடன்,

“அச்சா மரிச்சு(இறப்பு) ராதாம்மா” என்றான்.

ராதா அழுதவராக உண்ணியின் அறைக்குள் ஓடிட, பாசில் வந்து சேர்ந்தான்.

விடயம் அறிந்தவன் சட்டென்று கன்னம் இறங்கிவிட்ட நீருடன் யதுவை ஏறிட…

யதுவின் முகம் காட்டிய ஆயிரம் சோகங்களில் தன்னுடைய கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டான் பாசில்.

“என்ன செய்யணுமோ செய்திடு பாசில்” என்றவன் இருக்கையில் தொப்பென்று அமர்ந்துவிட்டான்.

யதுவிற்கு வீட்டில் வைத்தே அவருடைய இறுதி காரியங்களை முடித்திட எண்ணம். தந்தையும் அதைத்தான் விரும்புவார் என்பது அவனுள் திண்ணம்.

ஆனால் உண்ணி சாதாரண மனிதர் அல்லவே.

இறப்பிலும் அவரை வைத்து ஆதாயம் தேடும் கூட்டத்தின் தலைவராயிற்றே அவர். அதைத்தான் அவரது ஆட்கள் செய்தனர்.

ஜார்ஜ் மற்றும் இன்னும் பிற தலைவர்கள் யதுவின் பேச்சினை கேட்காது கோட்டை வளாகத்தில் தான் உண்ணியின் உடலை வைக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு கிட்டுமென்று சொன்னதை செய்தனர்.

உண்ணியின் பூத உடலை கோட்டை பொது வளாகத்தில் மக்கள் மற்றும் பிற தலைவர்கள் காண வைத்த பின்னர் அங்கு திரண்ட மக்களின் கூட்டத்தை பார்த்து யதுவே திகைத்து விட்டான்.

‘உன் இறப்பு சொல்லும் நீ வாழ்ந்த வாழ்வின் அர்த்தத்தை.’

கடல் அலையென திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை காண்கையில் உண்ணியின் நிறைவான அர்த்தமுள்ள வாழ்வு யதுவிற்கு கண்முன்னே விரிந்தது.

பிறருக்காக வாழ்வது அத்தனை எளிதல்லவே!

அதனை முழுமையாய் வாழ்ந்து காட்டியிருந்தார் உண்ணி.

அரசு மரியாதைகளுடன் உண்ணியின் உடலுக்கு இறுதி காரியங்கள் நடந்து முடிந்தது.

வெறும் உயிரற்ற கூடாகத்தான் யது வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

உண்ணியின் இறப்பால் வாக்கு எண்ணிக்கை அடுத்த நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

தளர்ந்த உடலாய் உண்ணியின் அறைக்குள் நுழைந்திட்டவனின் இறுக்கம் அவனது தந்தையின் வாசத்தில் மெல்ல விலகியது.

மெத்தையில் அமர்ந்தவன் இறுதியாக அவர் தன்னிடம் பேசியது எல்லாம் மனக்கண்ணில் ஓட்டி பார்த்தான்.

அவனுக்கென்று இனி யாருமில்லையே! நினைப்பே நெஞ்சை அறுத்தது.

அவனது வேதனையை போக்கிடவே அறையின் கதவினை மெல்ல தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள் பாவனா.

ராதாவின் இரண்டாம் மகள். யதுவின் காதல் அவள்.

யாரென்று பார்த்தவனுக்கு, யாருமில்லை என்கிற கேள்வியின் விடையாய் உனக்கு எல்லாம் நானென்பதாய் அவன் முன் வந்து நின்றாள்.

“அழக் கூடாது” என்று தன் கண்களை துடைத்து செய்கையால் கூறியவள், அவன் முன் மண்டியிட்டு அமர்ந்தாள்.

பாவனாவின் இதழ்கள் திறந்து நா உச்சரித்திடாத வார்த்தைகளை காட்டிலும்… அவளது விழிகளின் மொழிகள் பல்லாயிரம் ஆறுதல்களை அவனுக்கு அளித்தது.

“முடியலடி” என்றவன் இரு கைகளாலும் முகத்தை மூடிட, அவனது தோள் குலுக்களில் அழுகிறான் என்பதை உணர்ந்தவள், வேகமாக எழுந்து அங்கு மாட்டியிருந்த உண்ணியின் புகைப்படத்தை கழட்டி அவன் முன் நீட்டினாள்.

அப்போதும் யது அழுதுகொண்டிருக்க…

அவனக்கு அருகில் மெத்தையை வேகமாகத் தட்டினாள்.

அப்போதுதான் தனக்கான ஆறுதலில் தன்னை மறந்து அழுதிட்டது உணர்ந்து கைகளை விலக்கி அவளை நோக்கினான்.

அவளையும் அவளது கையிலிருந்த படத்தையும் மாற்றி மாற்றி பார்த்தவன் புரியாது புருவம் உயர்த்திட…

“நீ அழுதா அச்சனுக்கு பிடிக்காது. அவரும் வருந்துவார்” என்று சுட்டுவிரல் கொண்டு அவனை காட்டி, தன் கண்ணை துடைத்து உண்ணியின் படத்தை தொட்டு காண்பித்து, தன் இதயப்பகுதியில் மடக்கிய உள்ளங்கை கொண்டு தேய்த்து அவனக்கு தன் மனதின் வார்த்தைகளை செய்கைகளால் விளக்கிக் கூறினாள்.

அவளின் மொழி புரிந்தவன்,

“இனி அழமாட்டேன்” என்றிட… பாவனாவின் இமை குடை மூடி திறந்தது.

தான் அழுதால் தந்தைக்கு பிடிக்காதென்று… என்ன தான் கண்ணீரை அடக்கி அழுகையை கட்டுப்படுத்தி யது அமர்ந்திருந்தாலும், அவன் மறைக்க நினைக்கும் சோகத்தை அவனது முகம் பளிங்காய் காட்டியது.

அவனையேப் பார்த்திருந்த பாவனாவுக்கு வாய் வார்த்தையாக ஆறுதல் சொல்லிட முடியாத தன்னிலை மேலும் வலியை கூட்டிட…

அருகிலிருந்த பேப்பர் பேனாவை எடுத்து எழுதி அவன் முன் நீட்டினாள்.

“இயற்கை நிகழ்வை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஐயா  உன்னை இங்கு நிறுத்தியிருக்கும் காரணம், நீ துவண்டு போனால் வீணாகிடாதா நந்து. ஏற்றுக்கொள்ள முடியாத, தாங்காத இழப்புதான். ஐயா யாருக்காக உன்னை அரசியலில் களம் இறக்கினாரோ, அவங்களுக்கு உன்னுடைய ஓய்ந்த நிலை சாதகமாகிவிடாதா? எந்தவொரு நிலையிலும் விழித்திருப்பவன் தான் உண்மையான அரசியல்வாதி. உனக்காக இல்லைன்னாலும், ஐயா உன்னை நம்பி ஒப்படைத்திருக்கும் பொறுப்புகளுக்காக திடமா நிமிர்ந்து நில்.

தகப்பனின் இறப்பில் சிறு பையன் துவண்டு விடுவான் என்கிற எதிரிகளின் எண்ணத்தை பொய்யாக்கிடு நந்து. இது நீ கவலையில் மூழ்கும் நேரமில்லை. அச்சன் உன்கிட்ட சொல்லாமவிட்ட காரணத்தை தேடு. விடை கண்டறி. அச்சனின் மரணத்திற்கு நியாயம் செய்.”

பாவனாவின் வார்த்தைகள் யதுவினுள் புது வேகத்தை தூண்டிட… தன் உயரத்திற்கு நிமிர்ந்து அமர்ந்தான்.

ஓய்ந்து போகும் நேரங்களில் நமக்கென்று ஒருத்தரை மனம் தேடுவது இயல்பு தானே. இப்போது அந்நிலையில் தான் யதுவும்.

தாயை இழந்து பிறந்தவன், அனைத்துமாகிய தந்தையை இழந்த நிலையில் தனக்குள் சரிபாதியாக வசிப்பவளின் துணை வேண்டி காதலை வெளிப்படுத்தினான்.

“இனி எல்லாம் நான் தான் பார்க்கணும்ல.” அவனின் குரல் உணர்ச்சி அவளுக்கு பிடிபடவில்லை. ஏதோ சொல்ல வருகிறான் என்பது புரிந்து, அவன் உதிர்க்கும் வார்த்தையை எதிர்பார்த்து நின்றாள்.

“எப்பவும் எனக்கு துணையா இருப்பியா? என்னோடவே எனக்காக?”

கேட்டுவிட்டான். சொல்லிவிட்டான். எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஆக மொத்தத்தில் வினாவாய், தன் வாழ்வின் விடை வேண்டினான்.

பாவனா இந்த வீட்டிற்கு வரும்போது பதினைந்து வயது சிறுமி. நிற்க முடியாது அவள் வந்த நிலை கண்டு அவளை அவ்வீட்டின் வாயிலில் தாங்கியது யது தான்.

அன்று கைகளில் தாங்கியவளை, நெஞ்சில் எப்போது சுமக்க ஆரம்பித்தான் என்று தெரியவில்லை. ஆனால் அவனின் ஆசைகள் யாவும் சேருமிடம் பாவனாவாகத்தான் இருக்கும்.

அவளுக்காகவே விடுமுறை தினங்களில் ஓடி வருவான்.

அவளின் இதழ் பேசாத மொழிகளை அவளது இரு மான் விழிகள் பேசிவிடும்.

தனிமையில் வளர்ந்தவனுக்கு, சொந்தங்களென்று உண்ணியை தவிர்த்து யாருமற்றவனுக்கு தன்னுடைய வீட்டிலேயே இருக்கும் ராதாவையும், அவரது மகளையும் தன்னுடைய உறவாகத்தான் பார்க்கத் தோன்றியது.

பாவனாவால் வாய் பேச முடியாது என்பதை யது அறிந்து கொண்ட கணம், அவனுள் அவள் சிம்மாசனமிட்டு அமர்ந்துகொண்டாள்.

ராதாவை சமையல் பணிக்காக நியமித்தது உண்ணி தான். வேலையோடு சேர்த்து, யதுவை மகன் போல் பார்த்துக்கொண்டார்.

திடீரென்று ஒருநாள் காலை வேலைக்கு வந்தவர் கையில் ஒரு சிறுமியை பிடித்துக்கொண்டு வந்தார்.

தோட்டத்தில் நாயுடன் ஓடிக்கொண்டிருந்த யது, ராதாவை கண்டுவிட்டு அருகில் வந்த பின்னரே, கை, கால் விரல்களிலெல்லாம் ரத்தக்கரை காய்ந்திருக்க தள்ளாடியபடி நடந்து வந்த பாவனாவை கண்ணுற்றான்.

“என்னாச்சு ராதாம்மா, யாரிந்த பொண்ணு?” யது கேட்பதற்கும், நிற்கமுடியாது பாவனா தரையில் சரிவதற்கும் சரியாக இருந்திட… ராதாவை முந்திக்கொண்டு தன் கையில் பிடித்திருந்தான்.

“என் பொண்ணு தான் யது” என்ற ராதா அதற்குமேல் ஒன்றும் சொல்லாது வீட்டிற்குள் சென்றிட…

“எப்படி அடி பட்டுச்சு?” என்று பாவனாவிடம் வினவினான் யது. அப்போது அவன் பள்ளி படிப்பை முடித்துவிட்டு அரசியல் எதிரிகளுக்காக உண்ணி யதுவை வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த சமயம்.

யதுவின் கேள்வியில் மிரண்டு விழித்த சிறுமி… உடல் நடுங்க வேண்டாமென்று கைகளை மட்டும் ஆட்டிட,

“ஓகே, ஓகே. நான் எதுவும் கேட்கல” என்ற யது அவளின் முகத்தில் தென்பட்ட பயத்திலும், உடல் நடுக்கத்திலும் மிரண்டு தான் போனான்.

மெல்ல அவனே வீட்டிற்குள் அவளை அழைத்து வந்தான்.

முதல் முறை அவளின் பாதம் அவ்வீட்டில் அவளுக்கானவனின் உடன் தான் பதிந்தது.

ராதா உண்ணியிடம் பேசிக்கொண்டிருந்தார்.

சில நிமிடங்களில் ஒருவனை அழைத்தவர், வீட்டிற்கு பின்புறம் இருக்கும் சிறு வீட்டை சுத்தப்படுத்துமாறு கூறினார்.

“அந்த வீட்டில் நீங்க தங்கிக்கலாம் ராதா” என்றவர், யதுவை பார்க்க…

அவனோ தன்மீது சாய்த்திருந்த பாவனாவை காட்டி,

“ஷீ நீட் ட்ரீட்மெண்ட் அச்சா” என்றான்.

உடனே அவர் தன்னுடைய தனிப்பட்ட குடும்ப மருத்துவரை வீட்டிற்கே வரவழைத்தார்.

பாவனாவை பரிசோதித்து வைத்தியம் பார்த்த மருத்துவர்,

“இவ்வளவு நடக்கும்வரை வேடிக்கை பார்த்திட்டு இருந்தீங்களா?” என்று ராதாவை கடுமையாக கடிந்துகொண்டார்.

ராதாவால் அழ மட்டுமே முடிந்தது.

காரணம் தெரியாவிட்டாலும், பாவனாவிடம் கண்ட பயம், அவளுக்கு எப்படி இப்படி ஆனது என்பதை யது அறிந்துகொள்ள தடையாக இருந்தது.

மேலும் ராதாவின் கண்ணீர் “நடந்தது என்னன்னு யாருக்கும் தெரிய வேண்டாம் ராதாம்மா. நீங்க அழாதீங்க” என்று யதுவையே சொல்ல வைத்தது.

பாவனா முற்றும் முழுதாக குணமாக ஒரு வாரமானது.

வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பவனுக்கு துணை கிடைத்துவிட்டதென்று பாவனாவுடனே சுற்றிக்கொண்டு, அவள் பேசாவிட்டாலும் தான் பல கதைகள் அவளிடம் பேசிக்கொண்டு இருந்தான் யது.

அப்படித்தான் ஒருநாள் இருவரும் தோட்டத்தில் நாய் ரிக்’உடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது,

“நீ பேசி நான் கேட்டதே இல்லை. நீ எப்பவும் இப்படித்தானா? பேசாம அமைதியாவே இருப்பியா?” எனக் கேட்டான்.

அவனது கேள்வியில் ரிக்கின் கழுத்தில் தடவி கொடுத்துக் கொண்டிருந்த பாவனாவின் கை அப்படியே நின்றுவிட்டது.

யதுவை நிமிர்ந்துப் பார்த்தவள் எவ்வித சலனமுமின்றி,

தன்னுடைய வாயில் ஒற்றை விரல் வைத்து, ஐந்து விரல்களையும் விசிறியாய் விரித்து காற்றில் அசைத்தவளின் மிடுக்கில் விழி விரித்தான் யது.

தன்னுடைய குறையையும் ஒருவர் இத்தனை கம்பீரமாக மொழிந்திட முடியுமா? யதுவிற்கு அவள் மீது அக்கணம் உண்டான ஆச்சரியத்தை வாய்விட்டு விவரித்திட முடியாது.

“நான் பேசுறது…” எப்படி கேட்பதென்று யது தடுமாறிட,

அவன் முடிக்காது விட்ட கேள்வியை யூகித்தவள்,

தன் காதினை சுட்டி காண்பித்து, பெருவிரலை மட்டும் உயர்த்தி காண்பித்தாள்.

“காது கேட்கும்போது எப்படி பேச்சு இல்லாமல்…”

பாவனாவின் முகத்தில் சட்டென்று தோன்றிய வியர்வையிலும், பதட்டத்திலும் கேட்டுக்கொண்டிருந்ததை அப்படியே தனக்குள் விழுங்கிக்கொண்டான்.

உண்மை அப்போதே தெரிந்திருந்தால் சரி செய்திருப்பானோ?

“கூல்… கூல்…” என்று அவளை அமைதிப்படுத்தியவன், அதன் பின்னர் அதைப்பற்றி வேறெப்போதும் கேட்டதே இல்லை.

காது நன்றாக கேட்பதால் பொதுவான பள்ளியிலேயே உண்ணியின் மூலம் அவளை சேர்த்துவிட்டான்.

அங்கு மற்ற பிள்ளைகளின் கேலி, கிண்டல்கள் தாங்காது ஒருநாள் கதறி அழுதவளை கண்டு துடித்தவன், அவர்களுக்கென பிரத்யேகமாக இருக்கும் பள்ளியில் அவளை பயில வைத்தான்.

அவளிடம் தடையின்றி அவனால் பேசிட முடியும். அவன் பேசுவதை அவளால் கேட்கவும் முடியும். ஆனால், அவள் சொல்ல வருவதை தான் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே சைன் லாங்வேஜ் கற்றுக்கொண்டான்.

அவளுக்கான அவனின் அக்கறையை சிறு சிறு விடயத்திலும் காண்பித்தான்.

தன்னுடைய எதிரிகளை மொத்தமாக அடக்கி வைத்த பின்னர், உனக்கு என்ன விருப்பமோ அதனை படியென்று உண்ணி சொல்லியதும், பாவனாவை பிரிய முடியாது என்பதை அப்போதுதான் உணர்ந்தான்.

அங்கேயே ஒரு கல்லூரியில் சேர்ந்திட, யது முதல்வரின் பிள்ளையென்று அவனுக்கு மணவர்களிடமிருந்தே பலவழிகளில் தொல்லை வந்தது. அவனது பெயரை வைத்து அவர்கள் பலவற்றை செய்தனர். பேரசியர்கள் உயர் பதவிக்காக அவனை அணுகினர். அதெல்லாம் அவனிடம் ஒருவித ஒவ்வாமை மற்றும் தொல்லையை ஏற்படுத்த, எங்கு சென்றாலும் பாவனா தன்வீட்டில் தானே இருக்கின்றாள் என்று வெளி மாநிலத்தில் தன் படிப்பை தொடர்ந்தான்.

பாவனாவின் அருகில் இல்லாத நாட்களில் தான் தன்னுடைய காதலையே யது உணர்ந்தான்.

தான் உணர்ந்தது முதல், தன்னுடைய பார்வை பேச்சு, செயலென ஒவ்வொன்றிலும் பாவனாவிடம் தன்னுடைய காதலை பறைசாற்றிக்கொண்டுதான் இருக்கின்றான். புரிந்துகொள்ள வேண்டியவள் புரிந்துகொண்டாளா என்பது அவளுக்கே வெளிச்சம்.

இன்று தனக்காக அவளின் துடிப்பை கண்டுகொண்டவன், இந்த கண்ணாமூச்சி ஆட்டம் போதுமென்று வெளிப்படையாகவே வார்த்தைகளை கோர்த்து கொட்டினான்.

அவனது வார்த்தையின் பொருள் புரிந்தபோதும், அவனது காதலை என்றோ அறிந்த போதிலும், அவளை அவனிடமிருந்து விலகத்தான் சொல்கிறது அவளது மனம்.

அவளுள் காதல் இல்லை என்பதே உண்மை. அவளின் நிலை அவனை நண்பன் என்கிற முறையில் மட்டுமே வைத்திருக்கிறது.

அவனுக்கும் அவளுக்கும் இடையே உள்ள தூரம் எத்தனை பாலங்கள் கட்டினாலும் இணைக்க முடியாததல்லவா!

அவனது காதல் உணர்ந்து… தன் வாழ்வில் நடக்கக்கூடாதவை நடந்த பின்னர், யதுவிடமிருந்து விலகியே இருந்தவளால், அவனை சோகத்தில் தனித்து வாட விடமுடியாதென்றே ஆறுதலாக அரவணைக்க தன்னிலை மறந்து அவனருகில் வந்துவிட்டாள்.

ஒரு காலத்தில் அவளுக்கு ஆறுதலும், அரவணைப்புமாக இருந்தவனை அவளால் அப்படியே விட்டுவிட முடியுமா என்ன?

அவனை தேற்றிட தான் வந்தால், தன்னை அவன் ஸ்தம்பித்துபோகச் செய்வானென்று அவள் நினைக்கவில்லை.

“போதும்… இனியும் என்னை விலக்கி வைக்கத்தான் போறியா? இப்போ நானொரு அனாதை. எனக்கு உன்னால உறவை கொடுக்க முடியுமா?”

யதுவின் உயிர் கரையும் கேள்வியில் இப்போது கண்ணீர் வடிப்பது பாவனாவின் முறையாயிற்று.

“என் காதல் உனக்கு அத்தனை கஷ்டமானதா?”

விலுக்கென நிமிர்ந்தாள் அவனது கேள்வியில்.

“இந்த விழி மொழியெல்லாம் எனக்கு வேண்டாம்.” பட்டென்று சொல்லியிருந்தான்.

யதுவின் கையிலிருந்த தான் கொடுத்த காகிதத்தை வேகமாக பறித்தவள், கடகடவென எதையோ எழுதி அவனிடம் நீட்டினாள்.

“நான் ஒரு குழந்தைக்கு அம்மா.”

“சோ, வாட்?” படித்ததும் மொழிந்திருந்தான்.

பாவனா யதுவை உருத்து நோக்க…

“தாய் நீன்னா தந்தை நான்தான்” என்றான். அத்தனை அழுத்தம் அடர்த்தி அவனது அவ்வார்த்தை குரலில்.

“இது எப்போதும் ஒத்துவராது” என்று இரண்டு கைகளையும் வெட்டுவது போல் வைத்து காண்பித்தவள், விடுவிடுவென அவ்வறையை விட்டு வெளியேறியிருந்தாள்.

செல்லும் அவளையே பார்த்திருந்தான். விரக்தியாக உதட்டில் எழுந்த சிரிப்புடன்.

“நான் அவளுக்கு வேண்டாமா(ம்) அச்சா!” மெத்தையில் கிடந்த உண்ணியின் படத்தை பார்த்து கூறியவன்… அவரின் மலர்ந்த சிரிப்பில் அடுத்து என்னவென்று சிந்திக்கத் தொடங்கினான்.

அடுத்தநாள் காலை தன்னுடைய திடம் மற்றும் கம்பீரத்தை பல மடங்கு அதிகரித்து, மிடுக்காய் வந்து நின்றான்.

மூலையில் முடங்கிக் கிடப்பான் என்று நினைத்தவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருந்தான்.

கட்சி அலுவலகத்திற்கு வந்தவன் உண்ணியின் இருக்கையில் ஒய்யாரமாக கால் மேல் காலிட்டு அமர்ந்து, தன் எதிரிகளுக்கு தான் சிம்மசொப்பனம் என்பதை கூரியப் பார்வையால் உணர்த்தினான்.

error: Content is protected !!
Scroll to Top