நேச நெஞ்சங்கள் 40

உயிர் உறை 40

(மொழி 3)

யது நந்தன்.

கம்பீரமாக அமர்ந்திருக்கும் தோற்றமே அவ்விடத்தின் கூச்சலை அமைதியாக்கியது.

“என்னங்க ஐயா சின்ன பையன். ஈஸியா நம்ம வழிக்கு வந்திடுவான்னு சொன்னீங்க? இவன் உட்கார்ந்திருக்க தோரணையே தலைவரை (உண்ணி) நினைவுப்படுத்துதே!” சேத்தன் ஜார்ஜின் காதில் முணுமுணுத்தார்.

“ரத்தம் விட்டு போகாதே! உண்ணியோட ஆளுமை அப்படியே இவன்கிட்ட இருக்கு.” ஜார்ஜின் பேச்சினைக் கேட்ட சேத்தனுக்கு அதிர்வு.

“நீங்களே இப்படி சொன்னா?” என்ற சேத்தன், “அனுபவமே இல்லாத பொடி பையனுக்கு கீழ நாம வேலை செய்யணுமா?” அத்தனை கோபமாகக் கேட்டார்.

“உண்ணி அவனிடம் கட்சியின் பொறுப்பை கொடுக்கும்போது நீயும் சரின்னு தலையாட்டத்தானே செஞ்ச. அப்பவே உன்னோட மறுப்பை எதிர்ப்பா நீ காட்டியிருக்க வேண்டியது தானே?”

ஜார்ஜின் இக்கேள்விக்கு சேத்தன் என்ன பதில் சொல்வார். பதிலின்றி ஜார்ஜின் முகம் பார்த்தார் சேத்தன்.

“அவன் அதிகாரத்தில் உட்கார்ந்த ரெண்டு வருஷத்தில், தந்தையை மிஞ்சிய தனையன்னு நிரூபிச்சிட்டான். அவன் செய்ததில் கால் பங்கு கூட, மூணு முறை அதிகாரம் கிடைச்சும் நீ செய்தது இல்லையே. உனக்கு என்ன சேர்த்துக்கலான்னு பார்த்தியே தவிர, மக்களுக்கு என்ன செய்யணும் யோசிச்சிருக்கியா? நீயெல்லாம் பேசவேக்கூடாது.”

ஜார்ஜின் காட்டமானப் பேச்சில் சேத்தனின் தலை தொங்கிப்போனது.

‘இந்த கிழவனை புரிஞ்சிக்கவே முடியலையே!’ சேத்தனின் மனம் எண்ணியது.

“வோட் கவுண்ட்டிங் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க யது.” பாசில் யதுவின் காதில் முணுமுணுத்துவிட்டு செல்ல, அங்கே அந்த நீண்ட பெரும் அறையில் நடுநாயகமாக மாட்டப்பட்டிருந்த ஆளுயர இரு புகைப்படங்களையும் அழுத்தமாக பார்த்தான் யது.

ஒன்று யதுவின் தாத்தா அச்சுதன். மற்றொன்று உண்ணி. அவ்வுயரத்திற்கு ஏற்ற வாசமுள்ள மலர்கள் கோர்க்கப்பட்ட மாலைகள் மாட்டப்பட்டு இருந்தது.

“பாசில்.”

சற்று உரக்க அழைத்துவிட்டான் போலும், யதுவின் மீது அனைவரின் பார்வையும் படிந்தது.

பாசில் அருகில் சென்றதும்…

“தினமும் பூ மாலைகள் மாற்றப்படுதா?” எனக் கேட்டான்.

பாசில் பதில் வழங்குவதற்கு முன் வேறொருவர், யதுவிடம் இடம் பிடிக்க வேண்டுமென தானாக முன்வந்து பதில் வழங்கினார்.

“ஆமாம் தம்பி. தினமும் மாத்திடுவோம். வாடிப்போறதுக்கு முன்ன மாத்திடனன்னு நம்ம ஆளுங்ககிட்ட சொல்லி வச்சிருக்கேன்” என்றார் அவர். அவர் மேனன். அக்கட்சியில் சேத்தனுக்கு போட்டி அவர் தான்.

“ஒரு மாலை என்ன விலை இருக்கும்?”

இக்கேள்வி எதற்கு என்று ஜார்ஜ் யோசிக்க…

யதுவின் எண்ணமறிந்த பாசில், யதுவின் முன் பவ்யமாக பதில் சொல்லிக்கொண்டிருந்த மேனனின் முகம் மாறவிருப்பதை எண்ணி உதிர்க்க காத்திருக்கும் சிரிப்பை வாய்க்குள் மறைத்தான்.

“என்ன தம்பி பெரிய விலை. நம்ம ஐயாக்களுக்கு முன்னாடி விலையெல்லாம் சாதாரணம்” என்ற மேனனை கூர்ந்து நோக்கினான் யது.

“அப்போ ஐயாயிரம், ஏழாயிரம் இருக்குமா ஒரு மாலை?”

“அந்த மாதிரி மூணு மடங்கு தம்பி” என்ற மேனன் சத்தமாக சிரித்தார்.

“விலைவாசி பற்றி ஒண்ணுமே தெரியலையே தம்பி உங்களுக்கு.”

“மேனன் பார்த்து பேசுங்க. யது நம்ம கட்சித் தலைவர்.” ஜார்ஜ், மேனனை அடக்கப் பார்த்தார்.

“விடுங்க அங்கிள்” என்று ஜார்ஜிடம் கூறிய யது, மேனன் பக்கம் திரும்பி…

“அப்போ ஒருநாளைக்கு இந்த ரெண்டு போட்டோவுக்கும் மாலைக்கு மட்டுமே முப்பதாயிரம் செலவு பண்றீங்க இல்லையா?” எனக் கேட்டவன் எழுந்து நின்றான்.

“ஆமாம் தம்பி.” அவர் வாயெல்லாம் பல்லாகக் கூறினார்.

“இங்கிருக்கும் எல்லாருக்கும் இது தெரியுமா?”

“தெரியும் ப்பா!”

“இதுக்கு யார் யாருக்கிட்ட எவ்வளவு வசூல் பண்றீங்க? என்கிட்ட யாரும் எதுவும் கேட்கலையே?” என்றான்.

“அய்யோ இது நம்ம தனிப்பட்ட பணத்தில் செய்யுற செலவு இல்லை தம்பி. கட்சி நிதியிலிருந்து எடுத்து செய்வது” என்றார் அவர்.

“அப்போ கட்சிக்கு தேவைங்கிறப்போ என்ன செய்வீங்க. இந்த மாதிரி வெட்டி செலவுக்குலாம் கட்சி நிதியை சுரண்டினா, நம்ம கட்சி தெருவில் பிச்சை எடுக்க வேண்டியதுதான். மரியாதை மனசில் இருந்தா போதுமானது. இப்படி ஆடம்பர செலவில் தம்பட்டம் அடிப்பதால் உங்க தலைவர் மீது பற்றிருப்பதா எண்ணமில்லை. முடிந்தளவு நிதிகளை நல்ல முறையில் பயன்படுத்த முயற்சி செய்ங்க” என்று மேனனிடம் மொழிந்தவன், இது எல்லோருக்கும் எனும் விதமாக அனைவரையும் நோக்கி அழுத்தமாய் ஒரு பார்வை வீசினான்.

“பாசில் ஆர்டிபிசியல் மாலை ரெண்டு வாங்கி மாட்டு. அது போதும். எப்பவும் வாடாம, காயாம அது தொங்கும்” என்றான்.

“ஒரு மாலைக்கு இத்தனை அக்கப்போரா? முப்பதாயிரம் தானே!” சேத்தன் ஜார்ஜிடம் முணுமுணுத்தது யதுவிற்கு கேட்டுவிட்டது.

“அப்போ தினமும் உங்க சொந்த பணத்தில் ஆளுக்கு ஒரு வார கணக்கில் மாலை வாங்கி போடுங்க. சுழல் முறையில் தொடரட்டும். ஒரு நாளுக்கு வெறும் முப்பதாயிரம் தானே!” அசால்டாகக் கூறியவன் தோள்களை குலுக்கியவனாக இருக்கையில் அமர்ந்தான்.

“வாரத்துக்கு கணக்கு எங்கையோ போகுதுங்களே!” சேத்தன் தலையை சொறிந்தார்.

“அப்போ பொது பணம் அப்படின்னா மட்டும் தண்ணியா செலவு செய்யலாமோ?” என்ற யதுவின் கேள்வியில் அங்கே பேரமைதி.

கேள்வி கேட்ட சேத்தன் கப்சிப்.

“இனி கட்சி நிதியிலிருந்து எடுக்கப்படும், ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு காட்ட வேண்டும். கட்சிக்காக, அதனின் வளர்ச்சியின் நலனுக்காக என்ன செய்தாலும் தாராளமாக செலவு செய்யுங்கள். அவை யாவும் நேர் வழியாக மட்டுமே இருக்க வேண்டும்.”

சிங்கமென கர்ஜித்த அவனின் குரலில் ஜார்ஜ் மெச்சுதலாய் ஒரு பார்வை பார்க்க…

அவரை பார்த்து சட்டென்று கண் சிமிட்டியிருந்தான் யது.

இத்தனை நேரம் சீரியஸாக பேசிக்கொண்டிருந்தவனா இவனென்று நொந்து போனார் ஜார்ஜ்.

அந்த ஒரு செயலிலே நேரத்திற்கு தகுந்த குணத்தில் யது இருப்பானென்று ஜார்ஜ் புரிந்து கொண்டார்.

அவனுக்கு எங்கு எப்படி நடந்துகொள்ள வேண்டுமன்கிற பக்குவம் இருக்கிறது. அதற்காக அவனது வயதுக்கேற்ற மகிழ்வை உற்சாகத்தை அவன் இழக்க விரும்பவில்லை. இவ்வளவு நேரமும் ஒரு தலைவனாக சீரியஸாக பேசியதே மூச்சு முட்டுவதைப்போல் இருந்திட, ஜார்ஜை பார்த்து இயல்பாய் தன் குணத்தை காட்டி, தானும் ஆசுவாசம் கொண்டான்.

“ஓகே… எல்லாரும் தேர்தல் முடிவை எதிர்நோக்கி இருப்போம். ரிலாக்ஸ்டா இருங்க” என்றவன் அங்கு பெரிய திரையில் ஓடிக்கொண்டிருந்த வாக்கு எண்ணிக்கையின் புள்ளி விவரத்தை பார்வையிடத் தொடங்கினான்.

முதல் சுற்று முடிவுகளில் பாதிக்கு பாதி பின் தங்கியிருக்க… அங்கிருந்த அனைவரது முகமும் வாட்டம் கொண்டது.

“இன்னுமிருக்கே…” மூத்த தலைவராக ஜார்ஜ் தான் தேற்றினார்.

அலுவலகத்தின் வெளியில் ஆட்கள் நடமாட்டம் தென்பட, யது எதையும் காட்டிக்கொள்ளாது சாதாரணமாக எழுந்து நடப்பதைப்போல் சன்னல் பக்கம் சென்று என்னவென்று ஆராய்ந்தான்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் உருட்டு கட்டையோடு இருக்க, ஆங்காங்கே சோடா பாட்டில்கள், கற்கள், என்று பெட்டிகளில் ஒருசிலர் அடுக்கிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு நடுவில் நின்றிருந்த சேத்தன், மேனன் மற்றும் இன்னும் இரண்டு மூன்று அரசியல் தலைவர்கள்.

“நாம தோத்துட்டோம் தெரிஞ்ச அடுத்த நொடி, நீங்க உங்க கை வரிசையை காட்டணும். அவனுங்க ஜெயிச்சிட்டோம்ன்னு கொண்டாடிடக் கூடாது” என்றனர்.

“அங்கிள்.” ஜார்ஜை அழைத்து அவர்களை காட்டிய யது, “என்னதிது அங்கிள். அச்சா இபடிப்பட்டவங்களை உடன் வைத்திருக்க மாட்டாரே?” என்று இழுத்தான் சந்தேகமாக.

“உண்ணி இருக்கும்போது இந்த மாதிரி ஆளுங்கலாம், நம்ம ஆபீஸ் எரியாக்குள்ளே நுழைய மாட்டானுங்க யது. இது இப்போ புதுசா ரவுடிகளை கொண்டுவர பாக்குறாங்க. நான் என்னன்னு விசாரிக்கிறேன்” என்று ஜார்ஜ், வெளியில் செல்ல முனைய, அவரை முந்திக்கொண்டு யது சென்றான்.

யதுவை கண்டதும்,

“அவனுவ ஜெயிச்சிட்டா நம்மை வெறுப்பேற்ற, நம்ம ஆபீஸ் முன்னுக்க வந்து வேணுன்னே கொண்டாட்டம் போடுவானுவ தம்பி. அதான் முன்னேற்பாடு” என்றார் சேத்தன்.

“இதை பார்த்தா அடியாள் கூட்டம் அரசியல்வாதி ஆன மாதிரி இருக்கு. வெற்றியோ தோல்வியோ தலைக்கு ஏற்றாமல் சாதாரணமா ஏற்க முயற்சி செய்யுங்க. இப்போ ஜெயிக்கலன்னா அடுத்த முறை ஜெயித்துக்காட்டுவோம். தோல்விக்கு என்னைக்குமே வன்முறை தீர்வாகாது” என்றவனின் சீற்றம் முதல் முறை அனைவரையும் அவனிடத்தில் பயம் கொள்ளச்செய்தது.

“இன்னும் டூ மினிட்ஸில் இந்த இடம் க்ளியராகியிருக்கணும். இந்த மூஞ்சியெல்லாம் கட்சியோட தொண்டர்கள் சொல்லிக்கிட்டு இனி இந்தப்பக்கமே வரக்கூடாது” என்றவன், “அங்கிள் இனி இது உங்களுடைய பொறுப்பு” என்று ஜார்ஜிடம் கூறிட…

“உண்ணி ஐயா கட்சிக்காக நாங்க எங்க  உயிரையும் கொடுப்போம் தலைவா?” என்று அவர்கள் ஒருங்கே முழங்க…

“அடிதடி செய்ய நினைக்கும் யாரும் கட்சிக்கு வேண்டாம்” என்று திடமாக மொழிந்த யது,

“இவங்க இங்குதான் இருப்பாங்க அப்படின்னா போலீசை வரவழைத்து, அடிதடி வழக்கில் கைது பண்ணுங்க. அதை மீறியும் உயிரை கொடுப்போமுன்னு நின்னா, ஒருத்தனை விடாது கொளுத்தி விடு” என்று பாசிலிடம் கூறியவன் விடுவிடுவென உள்ளே சென்றுவிட்டான்.

யதுவின் பேச்சில் உறைந்தது தடியர்கள் மட்டுமல்ல, அவனின் கீழ் அரசியல் செய்யும் அரசியல்வாதிகளும் தான்.

“என்னங்க ஐயா இப்படி மிரட்டிட்டு போறான்?” மேனன் வாய்ப்பிளந்து கேட்டான்.

“அவனுக்கு எப்படி அரசியல் பண்ணனும் தெரிந்திருக்கு” என்ற ஜார்ஜ், “வயதில் சின்னவன் தான், ஆனால் அவனுக்கான தலைவன் என்கிற அடையளத்திற்காவது மரியாதை கொடுங்க. நான் அவன் இவன் சொல்வது வேற. நான் பார்த்து என் கையில் வளர்ந்தவன். அந்த உரிமை எனக்கிருக்கு. அதோட இக்கட்சியின் வயதைவிட என் வயது அதிகம். நான் மரியாதை கொடுக்காம பேசுறேன்னு நீங்க யாரும் மரியாதையின்றிப் பேசக்கூடாது” என்றார். மற்றவர்களுக்கு எச்சரிக்கையாகத்தான் தெரிந்தது.

“இவரு யார் பக்கம் பங்காளி?”

ஜார்ஜ் உள்ளே சென்றதும், மேனன் சேத்தனின் காதில் கிசுகிசுத்தார்.

“அதைத்தான் கண்டுபிடிக்க முடியல” என்ற சேத்தன்…

“எல்லாத்துக்கும் பொறுமையா காத்துக்கிடந்துதான் ஆகணும்” என்றார்.

தாங்கள் ஏற்பாடு செய்த அனைத்து ஆட்களும் யதுவின் பேச்சிற்கு கட்டப்பட்டு பயந்து வெளியேறுவது ஒருவித இயலாமையுடன் பார்த்திருந்தனர் அவ்விருவரும்.

“இந்தமுறை நாம ஆட்சி அமைக்கலன்னா அசிங்கமா போயிடும்” என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தவர்கள், திரையில் தெரிந்த புள்ளிவிவரங்களில் விழிவிரித்தனர்.

இப்போது பெருமான்மையான இடங்களில் அவர்கள் தான் முன்னிலை வகித்தனர்.

ஒருசில இடங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவுற்று இருக்க… அங்கெல்லாம் யதுவின் கொடி தான் வெற்றி பெற்றிருந்தது.

“இம்முறை வரலாறு காணாத வெற்றியாக இருக்கும் யது.”

கட்சியின் துவக்கம் முதல் உடனிருக்கும் ஜார்ஜிற்கு அப்படித்தான் தோன்றியது. மூன்று தலைமுறையாக தேர்தலை பார்ப்பவராயிற்றே! அவரால் கணிக்க முடியாதா என்ன?

“எல்லாம் மக்கள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கை அங்கிள். அதை எப்போதும் காப்பாற்ற வேண்டும்.”

விளையாட்டுப் பிள்ளையென நினைத்த யதுவிடம், இப்படியொரு முதிர்ந்தப் பேச்சு, பார்வை, செயல்களை ஜார்ஜ் எதிர்பார்க்கவில்லை.

“உண்ணியோட தேர்வு சோடைபோகவில்லை.” ஜார்ஜ் யதுவின் தோளில் தட்டிக்கொடுத்தார்.

எப்படியும் தேர்தல் முடிவுகள் வர இன்னும் சில மணி நேரமாகலாம் என்பதால், அனைவரும் மதிய உணவை உண்டு முடித்து காத்திருக்கத் துவங்க…

இம்முறை ஆட்சி தங்கள் கையில் என்பதை யது யூகித்துவிட்டான்.

அனைத்து தொகுதிக்கும் பாசிலின் உதவியுடன் தானே அழைத்தவன்,

“வெற்றியின் கொண்டாட்டம் புன்னகையோடு மட்டுமே நிற்க வேண்டும். உங்களின் நன்றி வெளிப்பாட்டை வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்து கொண்டாடிக்காட்டுங்கள். பொது இடங்களில் பட்டாசு வைப்பது, சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களை மறித்து வம்படியாக இனிப்புகள் வழங்குவது… உற்சாகத்தில் மதுபானம் விநியோகம் செய்வதென்று எதுவும் இருக்கக்கூடாது. வெற்றியை அமைதியாகக் கடப்போம்” என்று தன் உத்தரவில் அதிரடியை காட்டியவன், “என் உத்தரவை மீறுபவரின் வெற்றி பறிக்கப்பட்டு கட்சியிலிருந்து முற்றும் முழுதாக நீக்கப்படுவார்கள்” என்று அதிர வைத்தான் யது நந்தன்.

****************

யதுவின் எண்ணமும், ஜார்ஜின் கணிப்பும்… பொய்த்துப் போகவில்லை.

அத்தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும் பொறுப்பு யதுவின் கைக்குள் வந்தது. பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றியை சூடியிருந்தது யதுவின் கட்சி.

வெற்றியை கூட எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாது அமைதியாக ஏற்றுக்கொண்டவன், தனது கட்சியின் மற்ற தலைவர்கள் மற்றும் தொண்டர்களையும் அமைதி வழியை பின்பற்ற வைத்தான்.

உண்மையில் இன்று தான் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததா? எண்ணும் வகையில் அமைதி பூங்காவாய் மாநிலம் இருந்தது.

சிறு பட்டாசு சத்தமும் எங்கும் இல்லை.

மாபெரும் வெற்றி என்றே சொல்லலாம். அதனை தலைக்கு ஏற்றாது தன்மையாக இப்படியும் வெற்றியின் நிறைவை காட்டலாம் என்று அவனது ஆட்களுக்கு மட்டுமின்றி, மற்ற கட்சிக்கும் கற்றுக்கொடுத்தான் யதுநந்தன்.

வெற்றி பெற்ற அனைவரும் அன்றே வெற்றிக்கான சான்றிதழ்களை கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டனர்.

“அடுத்து முதல்வர் யாருன்னு பேசி ஒரு முடிவெடுங்கப்பா?”

சேத்தனின் தூண்டுதலில் ஒருவர் கூட்டத்தில் குரல் மட்டும் கொடுத்திட…

“யது தான் முதல்வர். அதிலென்ன சந்தேகம்” என்று உரக்க கேட்டிருந்தார் ஜார்ஜ்.

“இந்த கெழம் எப்போ என்ன பேசுன்னே தெரியல. நேத்து வரைக்கும் நம்ம ரெண்டு பேரில் யாராவது ஒருவர் முதல்வர் ஆனால் தான் கட்சி உடையாம இருக்கும். சின்ன பையனின் கீழ் ஆட்சி செய்ய, வயது முதிர்ந்த தலைவர்கள் சுணக்கம் காட்டுவாங்கன்னு நம்மளை மூளைசலவை செய்தவர், இப்போ அவன் தான் முதலைமைச்சருன்னு எத்தனை சத்தமா சொல்லுது!” மேனன் மூச்சு விடாது சேத்தனிடம் மனத்தாங்கலை கொட்டி கவிழ்த்தார்.

“பொறுமையா இருங்க மேனன். நம்மை மீறி எதுவும் நடக்கப்போவதில்லை” என்ற சேத்தன், “ஜார்ஜ் ஐயா சொன்னதுக்கு வழிமொழியிற எல்லாரும் கை தூக்குங்க” என்றார்.

கூட்டத்திற்கு இடையே சலசலப்பு.

யது பாசிலை ஏறிட்டான்.

பாசிலின் குரலுக்கு அவ்விடம் அமைதியாகியது.

“என் முடிவை நாளை சொல்கிறேன்” என்ற யது விடுவிடுவென அவ்விடம் விட்டு வெளியேறி வீட்டிற்கு புறப்பட்டிருந்தான்.

வீட்டிற்குள் நுழைந்ததும் எதிர்பட்ட ராதா அவன் வெற்றி பெற்றதற்கான வாழ்த்தைக்கூற, சிறு புன்னகையில் ஏற்றவன்…

“அச்சனை பார்த்துட்டு வரேன் ராதாம்மா” எனக்கூறி, உண்ணியின் அறைக்குள் வேகமாக புகுந்து கதவினை அடைத்துக்கொண்டான்.

அறையில் மாட்டப்பட்டிருந்த உண்ணியின் புகைப்படத்தின் முன் தன்னுடைய வெற்றிக்கான சான்றிதழை வைத்தவன், முன்னிருந்த இருக்கையில் கண் மூடி அமர்ந்துவிட்டான்.அவனது வெற்றியை அவனின் குருவிற்கே சமர்ப்பித்தான்.

‘அச்சா…’ அவனின் மனம் மத்தளம் கொட்டியது.

சன்னல் வழி குளிர் காற்று ஊடுருவி அவனது மேனியை சுற்றி தழுவியது. உண்ணியின் வருடல் அவனது தேகம் உணர்ந்து சிலிர்த்து படக்கென கண் விழித்தான்.

“அச்சா!” இதழ் பிரித்து முணுமுணுத்தான்.

சில மணி நேரங்கள் கடந்த பின்னரே அவ்வறையை விட்டு வெளியில் வந்தான்.

யதுவை பொறுத்தமட்டில் உண்ணி இன்னமும் அவனது உணர்வுகளில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.

உண்ணி உயிருடன் இருக்கும்போது, அன்றைய நாளின் நடப்புகளை முடிவில் தெரிவிப்பது போல், அவரது இழப்பிலிருந்து கடந்த மூன்று நாட்களாக அவ்வறையில் அவரது புகைப்படத்தின் முன்பு சொல்லிக்கொண்டுதான் இருக்கிறான்.

இப்போதும் கூட யதுவின் மனதில் ஒரு குழப்பம். அதில் தெளிந்து தீர்க்கமாக முடிவெடுக்க வேண்டியே தந்தையிடம் மனதோடு அலோசனை வேண்டி உண்ணியின் அறையில் தன் சிந்தனைகளில் மூழ்கியிருந்தான்.

யதுவிற்காகவே காத்திருந்ததைப் போல் வேகமாக அவனருகில் வந்த பாசில்…

“இது திட்டமிட்டு யாரோ செய்தது தான் யது” என்றான்.

“அது யாருன்னு எனி கெஸ்?”

யதுவின் கேள்விக்கு பாசில் தெரியாதென தலையாட்டினான்.

“என்னை கொல்ற அளவுக்கு யாருக்கு என்ன மோட்டிவ்?” வாய்விட்டு கேட்டுக்கொண்ட யதுவின் கேள்வி அவனுக்கானதே!

யது வீட்டிற்கு கட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பத்து நிமிடங்களில், அவனது கார் கட்டுப்பாட்டினை இழந்து ஓடு பாதையில் தடுமாறி, எதிரே வந்து கொண்டிருந்த கனத்த வாகனத்தின் மீது மோதவிருந்த நேரத்தில் சாலையிலிருந்து சரிந்து மணற்பரப்பில் இறங்கி, சக்கரம் மணலில் சிக்கி சுழலாது திணறி நின்றதால் யது, பாசில் மற்றும் ஓட்டுநரின் உயிர் தப்பித்தது.

‘வண்டி எப்படி கட்டுப்பாட்டை இழந்திருக்கும்?’

மெல்ல கதவினை திறந்து வெளியேறிய யதுவின் எண்ணம் தனக்குள் உழன்றது.

“நேத்து தான் சர்வீஸ் விட்டு எடுத்தேன். அதுக்குள்ள எப்படி?” என்று கேட்டுக்கொண்டே ஓட்டுநர் முகுந்தன் வண்டியை ஆராய, யது மற்றும் பாசிலின் பார்வை ஒருவரை ஒருவர் அர்த்தமாக ஏறிட்டது.

“எந்த வொர்க் ஷாப்’ண்ணா?”

“எப்பவும் விடுற ஷாப் தான் தம்பி. காலையில் விட்டு மதியம் எடுத்துட்டேன்!”

மற்றொரு காரினை வரவழைத்து வீட்டிற்கு வந்தவன், முகுந்தனுடன் பாசிலை வொர்க் ஷாப்பிற்கு அனுப்பி வைத்தான்.

அங்கு வேண்டுமென்றே யாரோ என்ஜினில் கோளாறு செய்திருப்பதாக தகவல் கிடைக்க, அதைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தவன்

“நம்ம கூட்டத்தில் ஏதோவொரு ஆடு தான்” என்றான்.

தன்போக்கில் யோசித்துக் கொண்டிருந்த யதுவின் தோளை தொட்டு சற்று தள்ளி கண் காட்டினான் பாசில்.

மூன்றரை வயது யதுஷா சிறு கிண்ணத்தை பிடிக்க முடியாது பிடித்துக்கொண்டு வந்து யதுவின் முன் நின்றது.

“ஷா மோளே! கையில் என்ன?”

உடனடியாக தன்னுடைய பேச்சையும், மனதையும் திசைத்திருப்பிய யது மழலையை அள்ளி தன் மடியில் கிடத்திக்கொண்டான்.

“அம்மை செய்தாங்க!” ஷா கிண்ணத்தை யதுவின் கையில் திணித்தாள்.

“அடை பிரதமன்” என்று கண்களை அகல விரித்த யது அதனை நன்கு மூச்சினை இழுத்து நுகர்ந்துப் பார்த்து, நாவால் சப்புக் கொட்டினான்.

“என்ன தான் பெரிய பெரிய பொறுப்பிற்கெல்லாம் போனாலும், சின்னப்புள்ளத்தனம் மட்டும் உன்னைவிட்டு போகமாட்டேங்குதுடா” என்று கூறிய பாசில் யதுவின் செயலில் சிரித்து வைத்தான்.

“சாப்பிடறதுக்கும் வயதுக்கும் என்னடா சம்மந்தம். பெரிய பெரிய ஆளுங்களெல்லம் பிரதமன் சாப்பிட மாட்டாங்களா என்ன?” எனக்கேட்ட யது, “இப்பவே நீ உனக்கு எப்போ தருவாங்கன்னு, கிச்சனை எட்டிப்பாக்குறது தெரியுது” என்று பாசிலை கேலி செய்தான்.

அடை பிரதமன். கேரளாவின் இனிப்புகளின் ராஜா. நம்மவூர் பால் பாயாசம் மாதிரி. அரிசி மாவில் அடை செய்து, சிறு சிறு துண்டுகளாக்கி வெல்லத்தோடு வேக வைத்து, ஏலக்காய் தூவி, காய்ந்த பழங்களான முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம் எல்லாம் நெய்விட்டு வறுத்து, கலவையில் சேர்த்து கொதித்து இறக்கும் தருவாயில் கெட்டி தேங்காய்ப்பால் விட்டு செய்வது. வாசனைக்கு இடமே மணக்கும். நாவின் தித்திப்பு அடிவயிறு வரை சிலிர்க்க வைக்கும்.

இந்த இனிப்பு என்றால் யதுவிற்கு கொள்ளைப்பிரியம்.

பிடிக்கும் என்பதற்காக ராதாவை அடிக்கடி செய்ய சொல்லி ரசித்து உண்பான்.

“இன்னைக்கு நான் கேட்கவே இல்லையேடா?” என்று கேட்டவன், ஷாவிற்கு ஒரு வாய் ஊட்டி, தானும் சுவைத்தான்.

“ம்ம்ம்…” என்று சுவைக்கும் யதுவின் ஒலி சமையலறையில் நின்று இங்கு கவனித்துக் கொண்டிருந்த பாவனாவின் செவி நுழைந்து அவளின் முகம் மலரச்செய்தது.

அன்று யது தன்னுடைய காதலை வெளிப்படையாக சொல்லியும் ஏற்காது சென்ற பின், அவனின் முன் வருவதையும் தவிர்த்தவளாக இருந்தாள் பாவனா.

யது வீட்டிலிருக்கும் நேரம் அவள் அறையை விட்டே வெளியில் வருவதில்லை.

எங்கே மீண்டும் காதலென்று சொல்லிவிடுவானோ என்கிற பயம், அவன் முன்னே அவள் வருவதை தடுத்தது. அந்த பயத்தை மீறி யதுவுக்கு வாழ்த்து சொல்ல அவளால் முடியாதென்று தோன்ற, தன்னுடைய மகிழ்வையும் வாழ்த்தினையும், அவனுக்கு பிடித்த இனிப்பு செய்து மறைமுகமாக வெளிப்படுத்தினாள்.

“நீங்க கேமில் வின் பண்ணிட்டிங்கலாம். அதான் அம்மை செய்தாங்க” என்ற யதுஷா, “எண்ட அச்சன் யதுக்கு, இந்த சுவீட் நெம்ப புதிக்குமாம். அம்மை சொன்னாள்” என்று கூடுதல் தகவல் வேறு கொடுத்தாள் குழந்தை.

“அப்படியா?” என்று யதுஷாவைப் போலவே, முகபாவனையோடு யது கேட்க, குழந்தை வேகமாக தலையாட்டியது.

எதற்காக இந்த இனிப்பு என்று தெரிந்த யதுவிற்கு, தன்னவள் நேரில் தெரிவிக்காத வாழ்த்து ஒருவித நிறைவை அவனுள் கொடுக்கத் தவறியது.

“எனக்கு இன்னொரு கப் வேணும். அப்படியே பாசிலுக்கும்.” இன்றாவது தன்னவளை கண்டுவிட வேண்டுமென்று சமையலறை நோக்கி உரக்க குரல் கொடுத்தான் யது.

பிரதமன் அடங்கிய கிண்ணங்களுடன் வந்தது என்னவோ ராதாம்மா.

யதுவின் முகம் சுருங்கி பின் நிர்மலமானது.

“பாவனா இல்லையா ராதாம்மா?”

யதுவை அழுத்தமாகப் பார்த்தவர்,

“அந்த ட்யூப்லைட் தான் உனக்கு வேணுமா யது?” எனக் கேட்டார்.

“என் மனசுக்கு அவளைத்தானே பிடிக்குது ராதாம்மா!” பாவனாவிடம் சொல்லி சொல்லியே களைத்த உணர்வில் ஒருவித அயர்வோடு ராதாவிடம் கூறினான்.

“எனக்கு புரியாமலில்லை” என்ற ராதா,

“யதுஷா…” என்று இழுக்க…

“அவளுக்கென்ன, அவள் என் பொண்ணு. உங்களுக்கு அதில் சந்தேகம் இருக்கா?” என அழுத்தமாகக் கேட்டான்.

ராதா பதில் சொல்லும் முன்னே…

“அவள் என் பொண்ணு” என்று அலைப்பேசி குரல் ஒலிப்பான் மூலம் சத்தமாகக் கூறியிருந்தாள் பாவனா.

வேகமாக வந்து முறைத்து நிற்கும் பாவனாவை கண்டுகொள்ளாத யது,

“ஷா குட்டிக்கு நான் யாரு?” என்று யதுஷாவிடம் கேட்டிருந்தான்.

“அச்சா… ஷாவோட அச்சன்” என்று குழந்தை சொல்லியது தான், அவளின் பட்டு கன்னத்தில் முத்தம் வைத்தான்.

பாவனா எள்ளும் கொள்ளும் வெடிக்க செந்தணலாக நின்றிருந்தாள்.

“நீ சொல்லித்தான் எனக்கு தெரியணுமில்லை” என்று பாவனாவிடம் கூறியவன்,

“ஒழுங்கா என்னை கல்யாணம் பண்ண சம்மதிக்க பாரு. நெக்ஸ்ட் மன்த் ஷாவை ஸ்கூல் சேர்க்கணுமே! இனிஷியல் என்னன்னு போடுவ? அப்பா நான் இருக்கும்போது, வேறொருத்தன் எழுத்து வர நான் விட்டுடுவேனா? ஊருக்கே நான்தான் ஷாவுடைய அப்பான்னு தெரியணும். அதுக்கு கல்யாணம் சீக்கிரம் நடக்கணும்.” என்று சொல்லியவனின் முகத்தில் தெரிந்த அனலில் பாவனாவிற்குள் குளிர் பரவியது.

“ம்மா…” பாவனா ராதாவை பாவமாக பார்க்க,

“எனக்கும் கல்யாண விஷயம் புதிது” என்றார் ராதா.

“உன் சம்மதத்துக்காக வெயிட் பண்ணா கிடைக்காது போலிருக்கே” என்று பாவனாவின் மறுக்கும் முகம் கண்டு நாடி தடவிய யது,

“இதுவரை இப்படியொரு எண்ணமில்லை. ஆனால் நீ என்னவேணா செய்துக்கோன்னு பாக்குறியே பார்வை, இது என்னை என் ஈகோவை ஏத்தி விடுது. என்ன பண்ணலாம்?” என்றதோடு, “அடுத்த வாரம் மேரேஜ் பிக்ஸ் பண்ணிடு பாசில். சும்மா சிம்பிளா இருந்தால் போதும். என் சைட் நீ ராதாம்மா மட்டும் போதும். அச்சனுக்கு முன்னால் நம்ம வீட்டிலே நடந்தால் இன்னும் பெட்டர்” என்றான்.

“கொஞ்சம் கிராண்டா செய்யலாமே?” பாசில் வினவிட,

“ஒரு குழந்தைக்கு அப்பா ஆனதுக்கு பிறகு கல்யாணம் செய்துக்க வெட்கம் வெட்கமா வருதுடா!” என்று வராத நாணத்தை வரவழைத்து, பாவனாவை வெறுப்பேற்றினான் யதுநந்தன்.

error: Content is protected !!
Scroll to Top