உயிர் உறை 41
மொழி 4
அனைவரும் யது தான் முதல்வர் என்று நினைத்திருக்க… அவர்களின் நினைப்பையெல்லாம் பொய்யாக்கும் விதமாக யது தன் முடிவை அறிவித்திருந்தான்.
உண்மையில் யதுவிற்கு முதல்வர் இருக்கையில் அமர விருப்பமில்லை.
முதல்வர் என்கிற பெயர்ப்பலகை தாங்கிய மேசைக்கு அந்தப்பக்கம் உண்ணி கம்பீரமாக இருக்கையில் அமர்ந்திருக்கும் காட்சி, இப்போதும் யதுவின் கண்ணைவிட்டு நீங்காது அவனை அலைப்புறச் செய்தது.
தந்தையைப்போல் விருப்பு வெறுப்புகள் துறந்து, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே மனதிலும், மூளையிலும் பதித்து, சிறந்த தலைவனாய் தன்னால் செயல்பட முடிந்திடுமா? அவ்வெண்ணமே யதுவிற்கு, அறவழியில் தவறிவிடுவோமோ, தானென்கிற எண்ணம் ஆட்கொண்டு நிலை பிழர்ந்து போவோமோ என்று அவனின் மனதை தடுமாறச் செய்தது.
பெரும் கூடத்திற்கே தலைவனாய் தலைமையில் அமர்வதற்கான வயதோ அனுபவமோ யதுவிடத்தில் கிடையாது. அதுவே அவனது பயத்திற்கு காரணம்.
தந்தையை அவரின் ஆட்சியை கண்கூடாகப் பார்த்திருக்கிறான். ஆனால் அருகிலிருந்து அனுபவித்தது இல்லை.
அவ்விருக்கையில் அமர்வதற்கு முன்பு தன்னுடன் இருப்பவர்களையே புரிந்துகொள்ள யதுவிற்கு அவகாசம் வேண்டியதாக இருந்தது.
அவன் ஒன்று நினைத்தால்… அது தங்கு தடையின்றி மக்களை சேர வேண்டும். நடுவில் இருப்பவர்கள் யாவரும் அவனது ஆட்கள். அவனின் எண்ணம் செயல்வடிவம் பெறாவிட்டால், அவனது ஆட்களையே அவன் கேள்வி கேட்டிட நேரிடும். அச்சமயம் மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டால், எதற்காக யதுவை அரசியலில் உண்ணி இறக்கினாரோ அவ்வெண்ணம் ஈடேறாது… கட்சி பிளவுக்கு யதுவே காரணகர்த்தாவாகிப்போவான். அதற்காகவே சில காலம் வெறும் பார்வையாளனாக இருக்க விருப்பம் கொண்டான்.
யதுவின் முடிவு ஜார்ஜ் மற்றும் இன்னும் சிலருக்கு மட்டுமே அதிர்வாக இருந்தது.
“உங்களில் ஒருவர் முதல்வராக விருப்பமிருந்தால் தெரிவிக்கலாம்.”
சொல்லியவனின் பார்வை ஒவ்வொருவரையும் கூர்ந்து அலசியது.
“உண்ணி நீ முதல்வராகத்தான் விருப்பம் கொண்டான்.”
ஜார்ஜ் மற்றவர்களுக்கு கேட்காது, யதுவின் காதில் மெல்லொலியில் கூறினார்.
“நான் அரசியலுக்கே புதிது அங்கிள். இதில் முதல்வர் சீட்டெல்லாம்…” தோளினை குலுக்கிக்கொண்டான்.
“அத்தோடு நான் முதல்வர் என்றால், நம் கட்சி நமக்குள்ளே பிளவுபட்டு இரு குழுவாக நிற்கும்” என்று நிதர்சனத்தைக் கூறினான்.
“இப்போது மட்டும் நிற்காது என்கிறாயா?” உன்னுடைய முடிவில் எனக்கும் உடன்பாடில்லை என்று காட்டமாகக் கேட்டான் பாசில்.
“நிற்கும்… ஆனால், யாரோ ஒருத்தர் நிச்சயம் விட்டுக்கொடுப்பர். ஆனால் நானென்றால்? அமைதியாக ஏற்க மட்டுமே செய்வாங்க. உள்ளுக்குள்ள ஒரு வஞ்சம் என்மேல அவங்களுக்கு இருந்துட்டே இருக்கும். அது எனக்கு மட்டுமல்ல, நம்ம கட்சிக்கே ஆபத்து.”
‘என்னவொரு தீர்க்கம். தெளிவு. சிந்தனை.’ ஜார்ஜால் யதுவை வியக்காமல் இருக்க முடியவில்லை.
தங்களுக்கு விருப்பம் இருப்பதாக, சேத்தனும், மேனனும் முன்வர…
“இவர்களில் ஒருவரை நீங்களே தேர்ந்தெடுங்கள்” என்று சொல்லிவிட்டு உள்ளறைக்கு சென்றுவிட்டான் யது.
ஜார்ஜ் மற்றும் யது இருவரில் யாருக்கு துணை நிற்கிறோம் என்று தெரிவிக்காத நிலையில், இருவரும் சம அளவு புள்ளி பெற்றிருந்தனர்.
ஜார்ஜ் யாரோ ஒருவருக்கு ஆதரவு தெரிவித்து, மற்றொருவரிடம் கோபத்தை பெற விரும்பாது,
“என் விருப்பம் யது தான்” எனக்கூறி சாமர்த்தியமாக விலகிக்கொண்டார்.
பாசில் யதுவிடம் சூழலை விவரிக்க…
“உங்கள் இருவரில் யார் விட்டுக்கொடுப்பது நீங்களே முடிவு செய்யுங்கள்” என்ற யது…
“முதல்வருக்கான இடம் மட்டுமே உங்களில் ஒருவருக்கு. கட்சியின் தலைமை, ஆளுமை அனைத்தும் என் கட்டுப்பாட்டில் தான். உங்கள் முடிவு கூட என் விருப்பமிருந்தால் மட்டுமே சபையேறும்” என்றான்.
“அப்போ பெயருக்கு நாங்கள் முதல்வர் அப்படித்தானே!” மேனன் கேட்டிட…
“அஃப்கோர்ஸ்… என்னிடத்தை வேறொருவருக்கு கொடுக்கும்போது, திரும்ப என்னோட இடம் எனக்கே வேணுங்கிறதில் நான் தெளிவா இருக்கணுமே!” என்றான் யது.
“யாருன்னு முடிவு பண்ணிட்டு உள்ள வாங்க” என்றவன், ஜார்ஜிற்கு கண்காட்டி அழைத்தான்.
மாநிலத்தின் முதல்வர் ஆகும் வாய்ப்பு அவனது விரல் நுனியில்…
இருப்பினும் அதனை ஏற்க அவனுக்கு ஏனோ மனமில்லை.
அரசியல் குடும்பத்தை சேர்ந்தவனுக்கு அரசியல் என்றால் கசப்பு தான். ஆனால் இன்று அவனது தாத்தா ஆரம்பித்த கட்சியை தன் தலையில் ஏற்றி காக்க வேண்டிய பொறுப்பு அவனிடத்தில்.
யதுவையே பார்த்தபடி அவன் முன் இருக்கையில் அமர்ந்த ஜார்ஜ், வெளியில் அவன் பேசியவற்றை மனதிற்குள் ஆராய்ந்து கொண்டிருந்தார்.
பார்ப்பதற்கு விளையாட்டு பிள்ளைபோல் இருப்பவனிடம் இத்தனை அறிவாளித்தனமான செயலை அக்கட்சியின் மூத்த தலைவரான ஜார்ஜ் எதிர்பார்க்கவில்லை.
“இது நம்ம ஆட்கள் மீது நமக்கே நம்பிக்கையில்லாத் தன்மையை காட்டுதே யது.”
யதுவின் தந்தையே ஜார்ஜின் பேச்சினை ஆலோசித்து எதுவும் செய்ய… அவனோ அவரின் பேச்சினைக் கேட்டாலும், தனக்கு தோன்றுவதை முடிவாக செயல்படுத்த ஜார்ஜுக்கு யது மீது சிறு அதிருப்தி.
என்ன தான் கட்சியின் மூத்த தலைவராக, பொதுச்செயலாளராக இருந்தாலும், இதுநாள் வரை அதிகாரம் அனைத்தும் யதுவின் தந்தையிடம் தான். அவருக்கு அதில் நிறைய மன வருத்தம் உண்டு.
யதுவின் தந்தை இல்லாமல் போக… இனி கட்சி தன்வசம் என்று நினைத்து அகம் மகிழ்ந்த ஜார்ஜிற்கு ஆப்பாக வந்து நின்றான் யது நந்தன்.
“இதுல நம்பிக்கை எங்கு வந்துச்சு அங்கிள்? நம்பிக்கை வேற. அதை நானே மற்றவர்களிடம் தெரிந்துகொள்கிறேன்” என்ற யது…
“இப்படித்தான் பக்கத்து மாநிலத்தில், கட்சியை கண்ட்ரோலில் வைத்திருந்த நபர் இறந்ததும், கட்சியே ஒன்னுமில்லாம ஆக்கிட்டாங்க. எதுக்காக… எல்லாம் அந்த சீட்’க்காகத்தான். ஹெவி ஹாட் சீட் அங்கிள். ஒருத்தர்கிட்ட கொடுக்கும் முன்னாடி யோசிப்பதோ, எனக்கு சாதகமா அனைத்தையும் என் கையில் வச்சிக்கிட்டு கொடுப்பதோ ரொம்ப முக்கியம். இது திருப்பி நான் எப்போ எடுத்துக்க நினைத்தாலும், எளிதா என் கைக்கு வரணும் என்கிற அடிப்படையில் நான் செய்வது எப்படி நம்பிக்கை அடிப்படையில் வரும்?”
யதுவிடம் காணப்பட்ட அரசியலின் தெளிவில் ஜார்ஜ்’ஜை வாய்ப்பிளக்க வைத்தது.
‘இவன் தன் கட்டுப்பாட்டில் அடங்கிடமாட்டான்’ என்பது ஜார்ஜுக்கு தெளிவாக விளங்கிற்று.
சில நிமிடங்களில்…
அலுவலக அறையில் தனக்கு முன் அமர்ந்திருந்த சேத்தனை அளவீடாக ஆராய்ந்தபடி இருக்கையின் ஒரு பிடியில் கை முட்டி பதித்து, உள்ளங்கையில் முகம் தாங்கி கால் மேல் காலிட்டு தோரணையாக அமர்ந்திருந்தான் யது நந்தன்.
சேத்தன் மேனனிடம் என்ன பேசினாரோ, எப்படி அவரை சம்மதிக்க வைத்தாரோ, கட்சியின் மற்ற சகாக்கள் அனைவரும் ஒருமனதாக சேத்தனை முதல்வராகத் தேர்ந்தெடுத்திருந்தனர்.
யது பாசிலை அழைத்திட, அவன் சேத்தனின் கைகளில் சில ஸ்டாம்ப் காகிதங்களை கொடுத்தான்.
“என்னதிது?” ஜார்ஜ் வினவினார்.
“அவர் படிச்சிட்டு சொல்லுவார் அங்கிள்” என்று அவருக்கு பதில் கொடுத்த யது, “நிதானமா பொறுமையா வாசித்துப் பாருங்க. இறுதியில் விருப்பமிருந்தா கையெழுத்திடுங்க” என்று சேத்தனிடம் கூறினான்.
அந்த தாள் இரண்டு மூன்று பக்கங்கள் இருந்தன.
படிக்க படிக்க சேத்தனின் முகம் இறுகியது. இயல்பாக முகத்தை வைக்க பெரும்பாடு பட்டார்.
அதிலிருந்த முக்கிய சாராம்சம்…
சேத்தன் முதல்வர் மட்டுமே. பவர் அனைத்தும் யதுவின் கையில்.
யது எப்போது விருப்பம் கொண்டு கேட்டாலும், கேள்வி எதுவும் கேட்காது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்திட வேண்டும்.
எந்தவொரு முடிவையும் யதுவின் ஆலோசனையின்றி அவர் எடுத்திடக் கூடாது.
யதுவின் விருப்பமின்றி சேத்தன் ஒரு முடிவை எடுக்கும் பட்சத்தில், அவரை பதவியிலிருந்து இறக்கும் அதிகாரம் யதுவிற்கு உண்டு.
தன்னுடைய கையெழுத்தாகவே இருப்பினும் யதுவிடம் கேட்காது சேத்தன் எந்தவொரு இடத்தில் உபயோகப்படுத்திடக் கூடாது.
உணர்ச்சிவசத்தில் எந்தவொரு வாக்குறுதியும் தனிநபருக்கோ, பொதுவெளியிலோ அளித்திடக் கூடாது.
“உங்களுக்கு சம்மதம் தானே?” கேட்ட யதுவை ஏறிட்ட சேத்தனின் முகத்தில் என்ன உணர்வென்று பிரித்தறிய முடியவில்லை.
இதனை யது மேலோட்டமாகக் கூறியிருந்தாலும், இப்படி வாக்குமூலமாக எழுதி வாங்குவான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. சொல்லப்போனால் இப்படியொரு கோணத்தில் யது சிந்திப்பான் என்று அவர் நினைத்தும் பார்க்கவில்லை.
யது என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், பதவி தன் கைக்கு வந்துவிட்டால், தான் சொல்வது தான் சட்டம் என்ற அவரின் எண்ணம் மண்ணாகியது. அவரின் கையில் காற்றுக்கு ஆடிக்கொண்டிருந்த காகிதத்தின் மதிப்பால்.
அது வெறும் ஸ்டாம்ப் பேப்பர் மட்டுமல்ல… நீதிமன்றத்தின் அரசியலமைப்பு முத்திரை வைக்கப்பட்ட காகிதம்.
பின்னாளில் சேத்தன் மாற்றி பேசிட முயற்சித்தாலும் தோல்வி தான்.
சேத்தனிடமிருந்து வாங்கி படித்த ஜார்ஜ் புருவ தூக்கலுடன் உள்ளுக்குள் சுபாஷ் சொல்லிக்கொண்டார்.
மூன்று தலைமுறையாக அரசியலில் இருக்கும் அவருக்கே யதுவின் இந்த அறிவு கிடையாது. அவரும் அதை மனதார ஒப்புக்கொண்டார்.
“இது அநியாயம் யது.”
என்ன முயன்றும் கோபத்தை மறைக்க முடியாது வெளிப்படுத்தினார் சேத்தன்.
“கட்சி.. என் அப்பன் வீட்டு சொத்து மிஸ்டர்.சேத்தன். ஒண்ணுமே இல்லாம உங்க கையில் தூக்கிக்கொடுக்க நானென்ன முட்டாளா?” அவரைவிடவும் மிஞ்சிய சீற்றம் அவனிடம்.
“இப்பவே என்னால் முதல்வர் சீட்டில் அமர முடியும். அதன் கனம் என்னால தாங்க முடியுமாங்கிற சந்தேகம் எனக்குள்ள இருக்கு. நான் என்னை தெளிவு மற்றும் உறுதி படுத்திக்க, எனக்கு கால அவகாசம் தேவைப்படுது. அதற்காக மட்டுமே இந்த முடிவு.
என்னுடைய ஆக்கமுறை உங்களுக்கு ஒத்துவராது அப்படின்னா தாராளமா நீங்க போகலாம்” என்று அறையின் கதவினை கைக்காட்டினான் யது.
‘அடிபொலி…’ பாசிலுக்கு கைதட்ட வேண்டும்போல் எழுந்த ஆர்வத்தை கைகளை மடக்கி பேண்ட் பாக்கெட்டில் விட்டவனாக அடக்கினான்.
“சம்மதம்.”
எல்லாத்தையும் யது கவனிக்கவாப்போகிறான் என்கிற அசட்டுத்தனம் சேத்தனை சம்மதிக்க வைத்தது.
யதுவின் நுண்பார்வை அறியாது அவனை ஏமாற்றி தனக்கு சாதகமாக கட்சியை தன்பக்கம் வளைத்துக்கொள்ளலாம். அதற்கு தான் பதவியில் முதலில் அமர வேண்டுமென்று உள்ளர்த்தம் வைத்து தன்னுடைய சம்மதத்தை தெரிவித்திருந்தார் சேத்தன்.
அரசியலின் வித்தகனான உண்ணியின் ரத்தம், சீடன்… யதுவிற்கா தனக்கு முன்னிருப்பவர் எதை நினைப்பார், எதை செயல்படுத்துவார் என்பது தெரியாமலிருக்கும்.
தனக்குள்ளேயே அர்த்தமாக சிரித்துக்கொண்டான்.
தன்னை கொலை செய்ய நினைப்பது யாரென்று ஆராய்ந்தவனுக்கு, எதிரி எதிரிலில்லை. தன் பக்கத்திலேயே என்பதை கண்டுகொண்டவனுக்கு, அது யாரென்று அறிந்திட வேண்டும். அதற்காகவே இந்த திட்டமென்று அவன் ஒருவனே அறிவான்.
யதுவின் முதல் சந்தேகம் சேத்தன். அவனுக்குத் தெரிந்து அவர் தான் கட்சியில் பெரும்பான்மையை தன் பிடியில் வைத்திருக்கிறார். அவருக்கு முதல்வராகும் ஆசை உண்ணி இருந்த போதிலிருந்தே உள்ளது. அதுக்கு தடை யது மட்டுமே. அதனாலேயே இந்த சந்தேகம்.
விட்டுக்கொடுத்து எதிரியை கண்டறிய வியூகம் வகுத்தான்.
அதற்காகவே உள்துறை அமைச்சர் பதவியை தனக்கெடுத்துக்கொண்டு, முதல்வர் பதவியில் சேத்தனை அமர வைத்திருக்கிறான்.
ஆசை நிறைவேறிவிட்டால், எதிராளி சேத்தன் என்பது உண்மையெனில், யதுவினை கொலை செய்யும் முயற்சி இனி தொடராதே! யதுவின் கணிப்பு இது.
சரியாக இருந்திடுமா?
******************
அடுத்த வாரம் திருமணம் என்று சொல்லியவன், அதற்கடுத்து அதைப்பற்றி எதுவும் பேசவில்லை.
திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடப்பதைப்போல எந்தவொரு அறிகுறியும் பாவனாவுக்கு தென்படவில்லை.
“அவங்க சொன்னது உண்மை தானா?”
திடும்பென ஒலித்த அலைபேசியின் AI குரலில் செய்துகொண்டிருந்த வேலையை பாதியில் நிறுத்தி திரும்பிப் பார்த்தார் ராதா.
கலக்கம் சூழ் விழிகளுடன் அவரது மகள் நின்றிருந்தாள்.
“ரொம்ப எதிர்பார்க்குற போல?”
“ம்மா…” சத்தமின்றி அவளது உதடுகள் மட்டும் பிரிந்தது.
“உனக்கு கிடைக்க இருக்குற நல்ல வாழ்க்கையை கெடுத்துக்காத பாவனா. யதுவை வேண்டான்னு சொன்னா, உலகத்திலே நீதான் முட்டாள் பொண்ணா இருப்ப.”
அவசரமாக அலைபேசியில் தட்டச்சு செய்தாள் பாவனா.
“யதுஷா…?”
கேள்வியாய் ஒலித்தது அந்த தொழில்நுட்பம்.
“அவளுக்கு யதுஷான்னு நீ பேர் வச்சதுலே தெரியலையா?” எனக் கேட்டார்.
என்ன சொன்னாலும் புரிந்துகொள்ள மாட்டேங்கிறாங்களே என்கிற ஆயாசம் அவளிடம்.
கடந்த காலத்தின் ரணம் அவளை திருமணம் வேண்டாமென்று சொல்ல வைக்கிறது. அத்தோடு அவளின் மகள், அவளுள் மிகப்பெரிய வினா அவள்.
யதுஷாவை விடுத்து திருமணம் செய்துகொண்டாள், தன்னால் நிம்மதியாக வாழ்ந்திட முடியுமா? அவ்வெண்ணமே யதுவின் மீது காதல் கொண்டிருந்த போதும், அவளை தள்ளி நிறுத்துகிறது.
மாற்றான் தாய் தந்தையின் வளர்ப்பு எப்படியிருக்கும் என்பதை கண்கூடாக கண்டவளாயிற்றே. வாழ்ந்து அனுபவித்தவளாயிற்றே. அதே நிலையை தன் மகவிற்கும் வர விட்டுவிடுவாளா என்ன?
“என் பிள்ளைக்கும் என் நிலை வரணுமாம்மா?”
“உன் வாழ்க்கையோட அவளோட வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்காத பாவனா!” ராதவிற்கு இதென்ன விதண்டாவாதம் என்று கோபம் வந்தது.
“நீங்க தானே சொல்லுவீங்க… சந்தர்ப்பம் கிடைக்கும்வரை ஒருவருடைய கெட்ட முகம் தெரியாதுன்னு…”
“யது மேல் உனக்கு அவ்வளவு தான் நம்பிக்கையா?” என்று காட்டமாகக் கேட்ட ராதா, “நீயும் யதுவை விரும்புறேன்னு தெரியாம நான்தான் தப்பு பண்ணிட்டேன். என்னால் தான் உனக்கு இந்த நிலை” என்று மொத்த பழியையும் தன்மீது போட்டுக்கொண்டவராக தலையில் அடித்துக்கொண்டார்.
“இருபது வயசில் எனக்கு கல்யாணம். அடுத்த வருசமே அம்மாங்குற பொறுப்பு. அதற்கடுத்த வருசம் கட்டிகிட்டவன் போய் சேர்ந்ததால வாழ்க்கையே முடிஞ்சிபோச்சுன்னு மூலையில் உட்கார வச்சிட்டாங்கா. துணையில்லாத வாழ்க்கை நரகம் பாப்பா. சொல்லி அழறதுக்கும், மனபாரம் நீங்க சாய்ஞ்சு பேச தோளும் இல்லாத வாழ்க்கை உனக்கு வேணாம் பாப்பா. இன்னொரு ராதாவா நீ இருக்க வேண்டாம். உனக்கொரு கல்யாணம் செய்து பார்க்குற கொடுப்பினைய எனக்கு கொடு.” பாவனாவின் முன் கிட்டத்தட்ட கையேந்தி நின்றார் ராதா. அவளது வாழ்விற்காக.
ஏற்றுக்கொள்ள முடியாது தவித்து நின்றாள்.
“எதுக்கு ராதாம்மா இவ்வளவு எமோஷ்னல். புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்கவகிட்ட பேசுறதே வேஸ்ட்” என்று, ஆரம்பத்திலிருந்தே கேட்டுக்கொண்டிருந்த யது ராதாவை தேற்ற கூறிய வார்த்தைகள் பாவனாவின் காதல் நெஞ்சத்தை பதம்பார்த்தது.
“இன்னைக்கு பதவியேற்பு விழா. முடிச்சிட்டு எப்போ வருவேன்னு தெரியல. போயிட்டு வரேன் ராதாம்மா” என்றவன் பாவனாவின் முகத்தை பாராது வெளியில் கிளம்பியிருந்தான்.
அப்போது, “யது அச்சா” என்று ஓடிவந்து அவனின் காலினை கட்டிக்கொண்டாள் யதுஷா.
“ஷா மோளுக்கு எந்தா வேணும்?” குழந்தையை குனிந்து கைகளில் அள்ளிக்கொண்டான்.
ஷா அவனது கன்னத்தில் முத்தம் வைத்து, தன் கன்னத்தினை காட்டிட, அவளின் இரு கன்னங்களிலும் இதழ் ஒற்றினான் யது.
“நானும் வத(ர)ட்டுமா?”
குழந்தையின் கேள்வியை கேட்டதும், பாவனா வேகமாக வந்து யதுவின் கையிலிருந்து அவளை பிடுங்குவதற்கு முயற்சி செய்ய…
குழந்தைக்கு மறுப்பு தெரிவிக்க நினைத்தவன், பாவனாவை வெறுப்பேற்றுவதற்காகவே, ஷாவுடன் காரிலேறி ஏறிய வேகத்திற்கு கதவினை படீரென அடித்து சாற்றியிருந்தான்.
யதுவின் இச்செயலில் பாவானவைவிட அதிகம் கலக்கம் கொண்டது பாசில் தான்.
பின்னே அவர்கள் போகும் இடத்தில், மாநிலத்தின் மொத்த மீடியாக்களும் இருக்கின்றனவே! இப்போது யது ஒரு குழந்தையுடன் அங்கு சென்றால், தேர்தல் வெற்றி, பதவியேற்பு, அடுத்த முதல்வர் என்பவையெல்லாம் பின்னுக்கு செல்லப்பட்டு, யது குழந்தையுடன் வந்திருப்பதுதான் நாட்டின் மிகப்பெரிய பிரச்சனை எனும் வகையில், இதற்கு முன்னுரிமை கொடுத்துவிடுவார்கள் அல்லவா?
யதுவும் சும்மா இருக்காமாட்டான். மீடியாக்களின் கேள்விகளுக்கு அவர்களது பானியிலே நறுக்கென்று பதில் கூறிடுவான் அல்லவா? அந்த கலக்கம் தான் பாசிலிடம்.
“இப்போ இந்த புது பிரச்சனை தேவையாடா?”
கார் சென்றுகொண்டிருக்க, பாசில் தலையில் கை வைத்தவனாக யதுவிடம் வினவினான்.
“நான் வேணுன்னா என் தங்கச்சி மகன்னு சொல்லட்டுமா தம்பி?” ஓட்டுநர் முகுந்தன் கேட்டார்.
யதுவின் குணம் அறிந்தவருக்கு, அவனது பெயர் கெடுவதில் விருப்பமில்லை. அதனால் பிரச்சனைக்கு தீர்வாக தானே முன் வந்தார்.
“உண்மை ஒருநாள் தெரியணுமே! அது இந்த நாளா இருக்கட்டும்.”
‘இந்த நேரத்திலும் இப்படி கூலா இருக்க இவனால் மட்டும் தான் முடியும்.’ பாசிலால் வெளியே சொல்ல முடியவில்லை. சொன்னால் அதற்கும் சிரித்து வைப்பான்.
‘சிரிச்சே ஆஃப் பண்ணிடுவான்.’
பாசில் வெளிபக்கம் திரும்பிக்கொண்டான்.
பாசில் எதிர்பார்த்தது போலவே, கையில் ஷாவுடன் யது காரிலிருந்து இறங்கியதும், அரசியல் கேள்விகள் தவிர்த்து அவனது சொந்த விடயங்கள் பற்றி வினாக்கள் முன்னால் அணிவகுத்தன.
“சார் குழந்தை?”
“உங்க குழந்தையா?”
“கல்யாணம் ஆகவில்லை தானே?”
ஆளாளுக்கு கேள்விகளை அள்ளி வீசினர்.
ஒலி வாங்கியின் முன் நின்றிருந்த யது, எப்பவும்போல் சிறு புன்னகையை இதழில் தவழவிட்டவனாக கேள்விகளை உள்வாங்கிக் கொண்டிருந்தான்.
“இதுக்குத்தான் சொன்னேன். கேட்டியா?” பாசில் தன் அதிருப்தியை காண்பித்தான்.
“இவனை யாரு யதுஷாவை தூக்கிட்டு வர சொன்னது?” என்று யதுவை திட்ட முடியாத ஜார்ஜ்… யது நிரூபர்களின் கேள்விக்கு பதில் சொல்லாது அமைதியாக நிற்கவும், ‘தான்தான் ஏதேனும் கூறி சமாளிக்க வேண்டும். இல்லையென்றால் கட்சியின் தலைவரே ஒழுக்கமில்லாதவரென்று செய்திகளை பரப்பிவிடுவார்கள்’ என கூட்டத்தை விலக்கிக்கொண்டு முனவந்தார் ஜார்ஜ்.
“பதில் நான் சொல்றேன்” என்றவரை மறுத்து, “கேள்விகள் எனக்கானது அங்கிள்” என்றான்.
ஜார்ஜ் பற்களை கடித்தார் அவனது பேச்சில்.
“உங்களுடைய எல்லா கேள்விக்கும் பதில்” என்றவன்,
தன் கையிலிருந்த ஷா’விடம், “மோளே யான் யாரானு?” எனக் கேட்டான்.
கூட்டத்தை பார்த்து மருண்டிருந்த குழந்தை யதுவின் கழுத்தை இன்னும் இறுக்கமாக கட்டிக்கொண்டவளாக,
“அச்சன்… யது அச்சன்” என்றாள்.
மொத்த இடமும் பரபரப்பானது.
“அப்போ உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?” என்றொருவர் கேட்டதற்கு,
“உங்க வீட்டில் வேலை செய்யும் பெண்ணுடன், திருமணம் ஆகாமலே நீங்கள் குடும்பம் நடத்துவதாக வெளிவந்த தகவல் உண்மை தானா?” என்று மற்றொருவர் கேட்டார்.
‘எதுக்கு பயந்தேனோ அது நடந்திருச்சு.’ பாசில் சலிப்பாக தலை அசைத்தான்.
“திருமணம் ஆகியிருந்தாலும் அதனை மறைப்பதற்கு என்ன காரணம்?” இன்னொரு கேள்வி பறந்து வந்தது.
“என் குழந்தைக்கு இப்போ மூணு வயசு. அப்போ எனக்கு எப்போ கல்யாணம் ஆகியிருக்கும் கெஸ் பண்ணுங்க. அப்போ நான் அரசியலிலே கிடையாது. கல்யாணம் என்னுடைய தனிப்பட்ட விஷயம் அதையேன் நான் உங்களுக்கெல்லாம் தெரியப்படுத்தனும்?”
யதுவின் கேள்வி அனைவரையும் வாயடைக்கச் செய்தது.
ஆம்… திருமணம் ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். அதனை ஏன் அவன் ஊர்க்கூடி சொல்ல வேண்டும்.
அங்கிருந்தோரின் முகங்கள் யாவும் சிந்தனைக்குச் செல்ல…
அதனை யது தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டான்.
“என்னுடையது லவ் மேரேஜ். எனக்கு எல்லாவுமான என்னுடைய அச்சன் முன்னிலையில் நாலு வருஷத்துக்கு முன்பே நடந்தாச்சு. இப்போ அதைப்பற்றிய பேச்சு வேண்டாம். இன்றைய தினத்துக்கான கேள்விகள் ஏதுமிருந்தா கேளுங்க?” என்று மீண்டும் இதுப்பற்றி பேசவிடாது செய்துவிட்டான்.
தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்து இதனை பார்த்துக்கொண்டிருந்த பாவனாவின் முகத்தில் எப்போதும் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை தன் அக்னியை கக்கிக் கொண்டிருந்தது.
“இது அவருடைய சொந்த விஷயம் நாம் பேச என்ன இருக்கிறது?” என்று மூத்த நிருபர் ஒருவர் சொல்லிட மற்றவர்களும் யதுவின் திருமணத்தை கிடப்பில் போட்டனர்.
“முதல்வராவதற்கு அனைத்து தகுதிகளும் உரிமைகளும் உங்களுக்கு இருக்கும்போது, வேறொருவரை சீட்டில் எதற்காக அமர்த்துகிறீர்கள்?”
“அனுபவம் போதாதே!” நச்சென்ற பதில்.
அடுத்து கேட்க யாருக்கும் கேள்விகள் இல்லை.
அனைவருக்கும் பொதுவாக கை அசைத்தவன் தலைமை செயலகத்தின் உள்ளே சென்றான்.
அடுத்த சில மணி நேரங்களில் பதவியேற்பு விழா அமைதியாக நிறைவுபெற்றது.
யது பதவியேற்கும் போது… பாசிலின் மடியில் அமர்ந்திருந்த ஷா, என்ன புரிந்துகொண்டாளோ? தன்னுடைய அச்சன் மேடையேறியதும் பாசில் உட்பட அனைவரும் கைகள் தட்டிட, தானும் சேர்ந்து தட்டினாள்.
யது மைக்கின் முன்பு நின்று சத்யபிரமானம் எடுக்கும் போது,
கைதட்டிக்கொண்டே, “யது அச்சா” என்று கத்தி ஆர்ப்பரிக்க… இதைவிடவும் ஒரு ஆசீர்வாதம் வேண்டுமா என்று யதுவின் மனம் நிறைந்தது.
பேசி முடித்து யது மேடையில் தன்னுடைய இருக்கையில் அமர்ந்திட, யது பாசிலுக்கு கண்காட்டிட, அவன் ஷாவை மடியிலிருந்து இறக்கியது தான் தாமதம், சுற்றியிருக்கும் அனைவரையும் கண்டுகொள்ளாது…
“யது அச்சா” என்று கத்திக்கொண்டே தளிர் நடையில் தள்ளாடி மேடையேறி, அகல விரித்த யதுவின் கரங்கள் பற்றி அவனின் மடியில் ஒய்யாரமாக அமர்ந்து களுக்கிச் சிரித்தாள்.
அக்காட்சி கவிதையாய் காமிராக்களில் சேமிக்கப்பட்டு, செய்தி சேனல்களில் மீண்டும் மீண்டும் ஒலிபரப்பப்பட்டது.
என்னதான் அக்காட்சியினை பாவனா ரசித்தாலும், மீடியா முன்பு யது பேசியதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.
கோபம் தலைக்கேற யதுவின் வருகைக்காக அமர்ந்திருந்தாள்.
யதுவின் பார்வையின் முன்பு தன் வார்த்தைகள் யாவும் மறந்து போகுமென நினைத்தவள், அவன் வருவதற்கு முன்பே அலைபேசியில் சேமித்து வைத்தாள்.
அவனுக்காகவே காத்திருந்தவள், யது வீட்டிற்குள் நுழைந்ததும் அலைபேசியை ஒலிக்கச் செய்தாள்.
“யாரை கேட்டு ஷா உங்க பொண்ணுன்னு சொன்னீங்க?”
“என் பொண்ணு. நான் யாரை கேட்கணும்?”
பாவனா அலைபேசியின் ஒலியை எத்தனைக்கு எத்தனை அதிகமாக கூட்டி வைத்தாளோ, அத்தனைக்கு அத்தனை யதுவின் குரல் மென்மையாக ஒலித்தது.
ஷாவை இறக்கிவிட்டவன்,
“ராதாம்மாகிட்ட போங்க” என்று ஷாவை அனுப்பி வைத்தான்.
“நானும், எம் பொண்ணும் நல்லாவே இருக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா?”
“நீங்க ரெண்டு பேரும் இல்லாம நானில்லை.” சொல்லியவன் கூலாக இருக்கையில் அமர்ந்தான்.
“கொஞ்சம் தண்ணீ கிடைக்குமா?”
யது கேட்டதும் வேகமாக சென்று பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தாள்.
“இதிலே உன் காதல் உனக்கு தெரியலையா எண்டே ப்ரியே?”
அவனது ப்ரியே என்ற வார்த்தை அவளின் உயிர் வரை ஊடுருவியது. அவன் பக்கம் சரியத் தொடங்கிய மனதை இழுத்து பிடித்தவள்,
“ஊர் முன்னால இப்படியெல்லாம் பேசிட்டு வந்துட்டா, நான் உங்களை கல்யாணம் செய்துப்பேன்னு நினைக்கிறீங்களா?”
“நான் அப்படி சொல்லலையே” என்று புருவத்தை உயர்த்தி இறக்கியவன்,
“நான் பொய் சொல்லமாட்டேன்னு உனக்குத் தெரியும். பொய்யை விரும்பாத நானே மிகப்பெரிய பொய் ஒன்னை சொல்லிட்டு வந்திருக்கேன். அதை உண்மையாக்காம என்னால உறங்கக்கூட முடியாது.
அதனால், இப்போ என்ன சொல்ல வரேன்னா?” என்று இழுத்தவன்,
பாவனாவின் எதிர்பார்ப்பை கண்டு தனக்குள் சிரித்தவனாக,
“நாளைக்கு நமக்கு கல்யாணம்” என்றான்.
பாவனா அவனுக்கு பதில் வழங்கிட, அலைபேசியில் தட்டச்சு செய்திட, அவளை தடுத்திருந்தான்.
“எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பேசிக்கலாம். ரோம்ப டயர்டா இருக்கு. ஐ நீட் ரெஸ்ட்” என்று அவளைத்தாண்டி உள்ளே சென்றவன், நின்று திரும்பி…
“நான் பொய்’ன்னு குறிப்பிட்டது நமக்கு நடக்காத கல்யாணத்தை நடந்ததா சொன்னதைத்தான். ஷா என் பொண்ணுங்கிறதை இல்லை” என்றவனாக வேகமாக சென்றுவிட்டான்.
அவனது அழுத்தத்தில் மறுத்து பேசிட முடியாது, வலியோடு நின்றிருந்தாள் பாவனா.