Skip to content
உயிர் உறை 42
மொழி 5
இரவு முழுக்கம் துளி உறக்கமில்லை. மகளை இறுக்கி அணைத்தபடி விழித்தே கிடந்தாள் பாவனா.
கண்ணை மூடினாலே இருட்டும், சிறுமியின் கதறலும் அவளின் செவியை நிறைத்து பதறி எழ வைத்தது.
‘யாருக்கும் உன்னை விட்டுக்கொடுக்கமாட்டேன்.’ தனக்குள் அரற்றியவளாக யதுஷாவின் முகம் முழுக்க ஆவேசமாக முத்தம் வைத்தாள்.
தூக்கத்தில் குழந்தை சிணுங்கவே தன்னுடைய கை வளைவில் மென்மையாக பொத்தி வைத்துக்கொண்டாள்.
நாளை திருமணம் என்று சொல்லிவிட்டான். எங்கு எப்படி என்று தெரியாது மனம் குழம்பினாள்.
வீட்டை விட்டு சென்றுவிடலாம் என்றால், சிறு பிள்ளையுடன் கயவர்கள் சூழ் உலகத்தில் எங்கு சென்று பிழைப்பது என்பதோடு, பெண் என்பதற்காகவே பிறந்த பிள்ளை முதல் இறுதி மூச்சினை நிறுத்திடக் காத்திருக்கும் வயது முதிர்ந்த கிழவி வரை அவர்களுக்கு தினம் தினம் நாட்டில் நடக்கும் அவலங்கள் கண்முன்னே வந்து அச்சம் கொள்ள வைத்தது.
யது தன் விடயத்தில் ஒன்றை கூறினால் கட்டாயம் நிறைவேற்றுவான் என்பது அவளுள் திண்ணம்.
‘என் விருப்பமில்லாம கட்டி தூக்கிட்டா போவான்?’ என்று நினைத்தவளுக்கு தன்னுடைய மறுப்பில் அதிக அழுத்தமில்லையோ என்று தான் தோன்றியது.
யதுவை பார்த்துவிட்டாலே வஞ்சனையின்றி அவளின் விழிகள் காதல் மொழி பேசிடும் போது, அவனெப்படி அவளின் மறுப்பிற்கு மதிப்பளிப்பான்.
நேரத்தை பார்க்க விடியல் தொடங்கவிருந்தது.
‘விடிஞ்சிருச்சா?’ அதிர்ந்தவள், ‘அறைக்குள்ளே இருந்து கொள்ளலாம். எப்படித்தான் சொன்னதை செய்றான் பார்ப்போம்’ என நினைத்தவள் அடுத்த ஒரு மணி நேரத்தில் காலை பணிகள் முடித்து மகளின் விழிப்பிற்காகக் காத்திருந்தாள்.
சில நிமிடங்களில் ஷாவும் கண்ணை கசக்கிக்கொண்டு எழுந்துவிட, அவளையும் குளிக்க வைத்து தயார் செய்து அறைக்குள்ளேயே அமர்ந்துவிட்டாள்.
நொடிக்கு ஒருமுறை தாழ்ப்பாள் போடப்பட்டிருக்கா என்பதையும் சரிபார்த்துக் கொண்டாள்.
‘யாரை குறித்து இந்த அச்சம்?’ மனதின் கேள்விக்கு அவளால் விடை கூறிட முடியவில்லை.
‘யதுஷா உன் வாழ்வில் வராமல் போயிருந்தால், உனக்கென்று ஒரு வாழ்க்கை அமைத்துக் கொண்டிருப்பாய்தானே?’
மனதின் கேள்விகளுக்கு காதுகளை இறுக மூடிக்கொண்டாள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் ஷா பசிக்குது என்று சொல்ல,
அதற்கு மேலும் அவளால் அங்கு உட்கார்ந்திருக்க முடியுமா என்ன?
அறையின் கதவினை திறந்து தலையை மட்டும் வெளியில் நீட்டி என்ன நடக்கிறது என்பதை ஆராய்ந்தாள்.
யது கூடத்து நீள்யிருக்கையில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருக்க… ராதா உணவு மேசையில் காய்கறிகள் வெட்டிக்கொண்டிருந்தார்.
‘ஊஃப்…’ உதடு குவித்து காற்றினை ஊதி ஆசுவாசம் கொண்டவள்,
‘எல்லாம் உதாறு’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டவளாக, ஷாவை தூக்கிக்கொண்டு அறையிலிருந்து வெளியில் வந்தாள்.
யதுவை கண்டதும் ஷா அவளிடமிருந்து இறங்கி அவனிடம் ஓடி அமர்ந்துகொண்டாள்.
“இவ்வளவு நேரம் நீ தூங்கமாட்டியே?”
ராதாவின் கேள்விக்கு தலைவலி என்று நெற்றியில் கை வைத்து காண்பித்தாள்.
பாவனாவை பார்த்தாலும் யது கண்டுகொள்ளவில்லை. இரவெல்லாம் உறங்கவில்லை என்பதை நொடிப் பார்வையில் புரிந்துகொண்டான். இதழுக்குள் புன்னகைத்தும் கொண்டான்.
‘நீ என்னென்ன திருகுதாளம் செய்தாலும், இன்னைக்கு நமக்கு கல்யாணம். நான் முடிவு பண்ணிட்டேன். உன் சம்மதம் கிடைக்கும்வரை வெயிட் பண்ணலான்னா நமக்கு அறுபதாம் கல்யாணம் கூட நடக்காது. தாலி கட்டிட்டு உன்னை சமாதானம் செய்வது ஈஸின்னு தோணுது எண்ட ப்ரியே.’ மனதோடு நினைத்தான்.
ராதாவின் முன் நின்றிருந்தாலும், பாவனாவின் விழிகள் ஏதோ கிசிகிசுப்பாக உரையாடி சிரித்துக்கொண்டிருந்த இரு யதுக்களிடமே இருந்தது.
“என்ன பாப்பா நின்னுட்டே இருக்க? பால் கலந்து வச்சிருக்கேன் பாரு. ஷாவுக்கு கொடுத்துட்டு, பூஜை அறையில் விளக்கு ஏத்து. ஐயா படத்துக்கு பூ மாத்திடு. பூ பிரிட்ஜில் இருக்கு.”
அவள் ஒன்றை செய்வதற்கு முன் பலவற்றை கூறினார்.
இது தினமும் அவளுக்கு அவர் இடும் பணி என்பதால் சாதரணமாகவே செய்தாள்.
ஷாவிற்கு பால் நிரம்பிய குவளையை கொடுத்தவள், பூக்களை எடுத்துக்கொண்டு பூஜையறை சென்றாள்.
ராதாம்மா யதுவிற்கு கண்காட்டிட… இருவரும் சில நொடிகள் இடைவெளியில் பூஜை அறைக்குள் நுழைந்தனர்.
அப்போது தான் உண்ணியின் படத்துக்கு பூ வைத்து, விளக்கு ஏற்றிவிட்டு கண்மூடி பிரார்த்திக்க ஆரம்பித்தாள்.
இந்நொடி தான் யது பாவனாவின் கழுத்தில் மங்களசூத்திராவை கட்டுவதற்கு தேர்ந்தெடுத்த தருணம்.
தமிழ்நாட்டில் தாலி கட்டு என்பதைப் போல், கேரளாவில் மங்களசூத்திரா.
பாவனா உணரும் முன்பே அவளின் கழுத்தில் மங்களசூத்திராவை கட்டியிருந்தவன்,
“வாழ்க்கையில் எந்தவொரு சூழலிலும் உனக்கு துணையா இருப்பேன்” என்று கூற, இமை திறந்தவள் தன் மார்போடு உரசிய தங்கத்தில் அதிரவெல்லாம் இல்லை.
யது சொன்னதை செய்திடுவான் என்பதால், அவள் எதிர்பார்த்த நிகழ்வு தான் இது. அதனால் அவளால் இயல்பாக ஏற்க முடிந்த போதிலும், தனக்கு நடந்த திருமணத்தில் அவளுக்கு விருப்பமில்லை.
விழிகள் கலங்க ஏன் என யதுவை கூர்மையாய் நோக்கியவள்,
வேகமாக வந்து ஷாவை கட்டிக்கொண்டாள்.
அவளின் அமைதி யதுவுடன் சேர்த்து, ராதாவையும் என்னவோ செய்தது தான். அதற்காக அவளுக்கு நடக்கும் ஒரு நல்லதை மறுக்க முடியாதே! தாயாக அவளெப்படி ஷாவிற்காக பார்க்கின்றாளோ, அப்படித்தானே ராதாவும் தன் மகளுக்கென்று பார்ப்பார்.
இனியெல்லாம் ஷா தானென்று யதுவின் மீதான நேசத்தை எப்போது தனக்குள் புதைத்துக்கொண்டாளோ அன்றே அவளின் வாழ்க்கை குறித்த பயம் ராதாவிற்கு வந்துவிட்டது.
அதன் பின்னர் யதுவும் பாவனாவை விரும்புகிறான் என்று அறிந்த பின்னர், உண்மையை அவனிடம் சொல்ல விழைந்தவரை தன் பார்வையாலே கட்டிப்போட்டுவிட்டாள் பாவனா.
இந்நொடி வரை பாவனாவின் வாழ்வில் என்ன நடந்தது, அவளுக்கெப்படி குழந்தை என்ற உண்மை எதுவும் யதுவிற்கு தெரியாது. அவன் நினைத்தால் நொடியில் தெரிந்து கொள்ளலாம். ஆனால், தன்னவளின் கடந்த பக்கங்கள், அவள் மூலமாக மட்டுமே அறிய வேண்டுமென்று அறிந்துகொள்ளாது இருக்கின்றான்.
‘இவளை இப்படியே விட்டால் சரிவராது’ என நினைத்த ராதா பாவனாவை நோக்கிச் சென்றார்.
“உன்னோட வாழ்க்கைக்கு ஷா தடையா இருப்பான்னா, அவளை உன் வாழ்க்கையிலிருந்தே என்னால் நீக்க முடியும்.” என்றுமே மகளிடம் அதிர்ந்து ஒரு வார்த்தை பேசியிராதவர், இன்று அவளின் மனதை பதம் பார்க்கும் வார்த்தைகளை கத்தியாய் இறக்கினார்.
“உன்னைவிட ஷா மேலான உரிமை, அவளை குறித்து எடுக்க வேண்டிய முடிவுகள் அனைத்துக்குமான அதிகாரம் எனக்கு அதிகமாவே இருக்கு.
யதுவுடன் நீ இணக்கமா வாழும் பட்சத்தில், ஷா இங்கயே இருப்பாள்.
இல்லை என்னால யதுவோட வாழ முடியாதுன்னா, நானும் என் பேத்தியும் இப்பவே இந்த வீட்டை விட்டு கிளம்புறோம்.”
பதறி அவரின் வாய் மீது கை வைத்தவள், கன்னம் வழிந்த கண்ணீரோடு வேண்டாம் என்று தலையை இருபக்கமும் ஆட்டினாள்.
யதுவை சுட்டி காட்டியவள் தன் இதயத்தில் உள்ளங்கை வைத்து அழுத்தினாள்.
“யதுவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை நான் நேசிக்கிறேன்” என்று சைகையால் கூறியிருந்தாள்.
பார்த்துக் கொண்டிருந்த யதுவிற்கு வானில் பறக்கும் உணர்வு.
“அப்புறம் என்ன தான் உன் பிரச்சனை?” ராதா குரல் உயர்த்தினார்.
“என்னுடைய கடந்த காலம் உங்களுக்குத் தெரியும் தானே?”
சைகாயால் பாவனா தொடுத்த வினா, ராதாவிற்கு ஆயாசமாக வந்தது.
“காலத்துக்கும் அதை மறக்கமாட்டியா நீ? ஷாவை வைத்து உன் வாழ்க்கையை தீர்மானிக்காத! அவளுக்கு நானிருக்கேன். உன்னை வளர்த்த எனக்கு அவளையும் வளர்க்கத் தெரியும்.”
இதென்ன பிடிவாதம். என்ன சொன்னாலும் புரிந்துகொள்ள மாட்டேனென்று.
“எல்லாருமே உன் அப்பாவைப்போல இருக்கமாட்டாங்க. அவனை போன்றவொரு மிருகத்தோடா யதுவை ஒப்பிடுற நீ. புரியுதா உனக்கு அது? யது மேல உனக்கு நம்பிக்கையில்லையா?”
இல்லை என்று வேகமாக கைகளாலும், தலையாலும் மறுத்தவள், ஓடிச்சென்று சற்று தள்ளி நின்றிருந்த யதுவை அணைத்துக்கொண்டாள்.
பாவனாவின் செயலை மற்ற இருவருமே எதிர்பார்க்கவில்லை.
பாவனா ஏதோ சொல்ல முயல உண்மையிலும் யதுவிற்கு புரியவில்லை.
“நிறுத்தி நிதானமா பண்ணுடா. எனக்கு புரியல.”
சுற்றி பார்த்தவள் டீபாயின் மீதிருந்த பேப்பர் மற்றும் பேனா எடுத்து வேகமாக எழுதி யதுவின் கையில் திணித்தாள்.
“நீங்க ரொம்ப நல்லவர். நான் யாரோடையும் கம்பேர் பண்ணி, உங்களை கெட்டவனா பார்க்கல. ராதாம்மா கேட்ட மாதிரி உங்கமேல நம்பிக்கை இல்லாமலும் இல்லை. எங்க எனக்கு நடந்த மாதிரி ஷாவுக்கும் நடந்திடுமோன்னு என்னை அறியாமலே எனக்குள்ள பயம் வருது. அந்த பயத்தை மீறி உங்களோட சந்தோஷமா வாழ முடியுமா தெரியல. அதனாலதான் உங்களை வேண்டான்னு சொன்னேன்.”
படித்து முடித்தவன்,
“இந்த வீட்டுக்கு நீ வந்த நிலை இன்னும் என் கண்ணுக்குள்ள அப்படியே இருக்கு. ஆனால் காரணம் இப்போவரை தெரியாது. உனக்கு என்ன வேணாலும் நடந்திருக்கலாம், ஆனால் அது என் மூலமா ஷாவுக்கு கண்டிப்பா நடக்காதுன்னு என்னால உறுதி கொடுக்க முடியும். சில விஷயங்களில் ஏன் எதுக்குன்னு ஆராயாம அப்படியே நம்பிக்கை வைக்கணும். நீயும் அப்படி என்னை நம்பு. நான் மட்டுமில்ல, நீ நான் நாம் சேர்ந்து ஷாவுக்கு அழகான வாழ்க்கையை கொடுப்போம். அதுக்கொரு வாய்ப்பு கொடுப்பியா எனக்கு?”
யதுவின் வார்த்தைகளை அவன் சொல்லியதைப்போல் ஆராயாது அப்படியே நம்பத் தோன்றியது அவளுக்கு. அது தான் அவளது காதல். அவளின் காதல் யதுவின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டுள்ளதே, அவன் கேட்டதற்கு மறுத்துவிடுவாளா என்ன?
சம்மதமாக யதுவின் கரத்தோடு தன் கரத்தினை பாவனா கோர்த்திட, அருகில் நின்றிருந்த ஷாவை யது தூக்கிக்கொண்டான்.
பாவனாவிற்கு யதுவின் சிறு செயலும் அவளின் பயத்தை நீக்குவதற்கான காரணியாக அமைந்தது.
அவளின் காயங்கள் அனைத்திற்கும் ஒரே மருந்து யதுவின் காதல்.
“உன் சம்மதமில்லாம உன் கழுத்தில் தாலி கட்டிட்டேன்னு வருத்தமில்லையே?”
இல்லையென பாவனா சொல்லிய பின்னர் தான் யதுவின் மனம் அமைதி கொண்டது.
இத்தனை நாள் திருமணம் வேண்டாமென்று மறுத்தவளால், இன்று அவனுடையவளான பின்னர் ஏனோ மறுக்க முடியவில்லை.
என்ன நடந்தாலும் யது உடனிருக்கிறான் என்பதே அவளுள் அதிக பலத்தை கொடுத்தது.
“என்னடா நான் வரதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சா?” வியர்த்து வழிய வந்து நின்றான் பாசில்.
“உனக்காக வெயிட் பண்ணியிருந்தா டைமிங் மிஸ் ஆகியிருக்கும்.” ராதாம்மா அவன் லேட்டாக வந்ததை குறிப்பிட்டு கொட்டு வைத்தார்.
“அம்மா காலையிலே என் கல்யாணப்பேச்சு எடுத்து ஒரே ஆர்க்யூ. அவங்களை சமாளித்து வரதுக்குள்ள இங்க எல்லாமே முடிஞ்சிருச்சு. நான் மிஸ் பண்ணிட்டேன்.”
பாசில் வருத்தமாகக் கூறிட,
“அதுக்காக இன்னொருவாட்டியாடா தாலி கட்ட முடியும்?” என்று அவனை வாரினார் ராதா.
“ம்மா… இன்னைக்கு செம ஃபார்மில் இருக்கீங்க போலவே?” என்ற பாசில், பாவனாவின் முகத்தில் தெரிந்த மகிழ்வை வைத்தே நண்பன் அவளை சரிசெய்துவிட்டான் என்பதை அறிந்துகொண்டான்.
இக்கணம் காதலாய் யதுவின் மீது பாவனா கொண்ட நம்பிக்கை இறுதிவரை உறுதியாய் நிலைத்து நிற்குமா?
அன்றைய இரவு…
திருமணத்தின் அடுத்த கட்டம். இயல்பான ஒன்றும் கூட. பெரியவர்களால் நடத்தி வைக்கப்படும் திருமணங்களில் புரிதலே இதிலிருந்து தான் துவங்குகிறது.
அனைத்து அம்மாக்களை போன்று ராதாவும் பல அறிவுரைகளை வழங்கியே பாவனாவை அனுப்பி வைத்தார்.
அதில் குறிப்பாக அதிக முக்கியத்துவம் அளித்து கூறியது…
“பழச மனசுல வச்சிக்கிட்டு கையிலிருக்க சந்தோஷத்தை நழுவ விட்டுடாதே!” என்பது தான்.
“இதுவரை எப்படியோ? யது உன் கணவனாகிய அப்புறம், அவன்கிட்ட நீயே எல்லாத்தையும் சொல்லிடுவது நல்லது.”
ராதா சொல்வது சரியென்றே பாவனாவுக்குத் தோன்றியது.
யதுவிடம் அனைத்தையும் சொல்ல வேண்டும். இறுதியில் அவனது வெளிப்பாடு என்னவாக இருக்கும் என்பதை நினைத்து இப்போதே அவளுள் ஒரு பயம் கிளம்பிவிட்டது.
மெல்லிய தயக்கத்தோடுதான் யதுவின் அறைக்குள் சென்றாள்.
ஷா’வை ராதா தன்னுடன் படுக்க வைத்துக்கொண்டார்.
கதவினை திறந்து பாவனா உள்ளே அடி வைத்ததும்,
“வரமாட்டேன்னு நினைச்சேன். கல்யாணமாகியும் பிரமச்சாரியா தான் வாழ்வேன்னு மனசு சொல்லுச்சு. ஆனால், என்னை காப்பாத்திட்ட” என்றவன் “இதுதான் நம்ம ரூம். பிடிச்சிருக்கா?” என்று அவளருகில் வந்து வினவினான்.
பல வருடங்கள் அந்த வீட்டிலிருந்தாலும், அவனவள் ஆன பின்னர் தான், அவனது அறைக்குள் முதல் முறை செல்கிறாள்.
பாவனாவின் விழிகள் அவ்வறையை சுற்றி வட்டமிட்டன. அவளின் முகத்தில் ரசனை குடியேறியது. என்றோ அவள் அவனிடத்தில் சொல்லியது. அவளுக்கு விருப்பமான வண்ணங்களில் சுவர் பூச்சு முதல் திரை சீலைகள் வரை.
பெருவிரல் மற்றும் சுட்டு விரலை சேர்த்து மற்ற மூன்று விரல்களை உயர்த்தி சூப்பர் என்னும் தன்னுடைய பிடித்ததை தெரியப்படுத்தினாள்.
அறையை சுற்றி மீண்டும் பார்வையால் வலம் வந்தவள், “ஐயா ஃபோட்டோ இல்லையா?” என்று சைகையால் வினவினாள்.
“நமக்கு பிரைவசி வேணுமே!” என்றவனின் மறைபொருள் உணர்ந்தவளின் முகம் முழுக்க குப்பென்று சிவந்துவிட்டது.
அதனை அவனுக்கு மறைக்கும் பொருட்டு திரும்பியவளின் கண்களில் விழுந்தது, யது அவளின் கழுத்தில் மங்களசூத்திராவை அணிவிக்கும் காட்சி புகைப்படமாக.
கண்கள் மூடி நின்றிருந்தவளின் முகத்தில் ஒரு பரவசம். அது இறைவனை வேண்டிய பிரார்த்தனை பாவனை என்றபோதிலும், யது கழுத்தில் அணிவிக்கும் தருணத்திற்கு மிகப்பொருத்தமாக அமைந்தது.
அவளே மனமுவந்து பூரிப்போடு அவனிடம் தாலி வாங்கிக் கொண்டதைப்போல் அத்தனை உணர்வுபூர்வமாக இருந்தது நிழலுருவம்.
பாவனா அதனை பார்த்தபடி அசையாது நின்றிருக்க…
அவளின் பின்னால் உரசியும் உரசாது நெருங்கி நின்றவன், அவளது இரு தோள்களிலும் தன்னிரு உள்ளங்கைகளை அழுத்தமாகப் பதித்து, அவளின் தோள் வளைவில் தன் நாடி பதிக்க, அவளின் தேகம் சிலிர்த்து அடங்கியது. அவனது முதல் தீண்டலில் அலை அலையாய் பெருகும் உணர்ச்சி பிரவாகத்தை தாங்க முடியாது கீழ் உதட்டை பற்களில் சிறை வைத்தவள், கால் விரல்களை தரையில் மடக்கி ஊன்றினாள்.
“பிடிச்சிருக்கா?”
காதோரம் தீண்டிய தன்னவனின் கிறக்க குரலுக்கு தன்னைப்போல் தலை அசைத்திருந்தாள்.
“எனக்கும்” என்றவனின் கரங்கள் இப்போது கீழே இறங்கி அவளது இடைச்சுற்றி வயிற்றில் இறுக்கமாகக் கட்டிக்கொண்டாது.
பாவனா அவனில் பின்பக்கமாக சரிந்தவளாக தலையை சாய்த்தாள்.
“எண்ட ப்ரியே (dear) … நோ, நோ… எண்ட பார்யே (bharye – wife)” என்றவனின் விளிப்பில் மொத்தமாக மயங்கித்தான் போனாள்.
“ம்.” அவளின் குரல் குழைந்து ஒலித்தது.
“செம கிக்கா இருக்கு. உன்னோட இந்த வாய்ஸ்.”
யதுவின் கூற்றில் சுற்றம் உறைக்க வேகமாக அவனிலிருந்து பிரிந்தவள்,
அவனின் முகம் காண முடியாது தலை கவிழ்ந்தாள்.
“ஏன்… நல்லாதானே இருந்துச்சு. எதுக்கு இந்த பதட்டம்? நீ ஓகே சொல்லாம இங்க எதுவும் நடக்காது” என்றவாறே மெத்தையில் சென்று அமர்ந்தான்.
அவள் விலகியதற்கு காரணம் வேறு.
யதுவிடம் கூறாது தான் தனக்குள் மறைத்து வைத்திருக்கும் பக்கங்கள் யாவற்றையும் அவனிடம் கூறிய பின்னரே, எவ்வித ஒளிவு மறைவின்றி தங்களது வாழ்க்கை தொடங்க வேண்டுமென்று நினைத்து அவனிலிருந்து விலகியிருந்தாள்.
ஆனால் அவனோ கூச்சம் கொண்டு பயத்தில் விலகினாள் என்று தப்பர்த்தம் கொண்டு பேசியிருந்தான்.
இல்லையென்று வேகமாக மறுத்தவள், தன் கையில் சேலை தலைப்போடு மறைத்து வைத்த சில காகிதங்களை அவன் முன் நீட்டினாள்.
“அடிப்பாவி… இந்த நைட்டுக்கு எல்லா பொண்ணுங்களும் கையில பால் சொம்பு இல்லைன்னா பாலை பிளாஸ்க்கில் ஊற்றி கொண்டு வருவாங்க. அப்படித்தான் நான் பார்த்த படத்திலெல்லாம் காட்டியிருக்காங்க. ஆனால் நீ… இந்த ரெண்டுல ஒண்ணும் இல்லாம வரும்போதே நான் சந்தேகப்பட்டிருக்கணும்” என்று படபடவென்று புலம்பியவன்,
“நிறைய டப்பிங் சீரியல் பார்ப்பியோ?” எனக் கேட்டான்.
அவன் பேச்சும் கேள்வியும் புரியாது அவள் விழித்து நிற்க…
“இந்த கண்ணை உருட்டுறதை மொத நிப்பாட்டு. அதுல தான் விழுந்துட்டேன்.” இடையில் ஒரு கை குற்றி, மற்றொரு கையால் நெற்றியை நீவிக்கொண்டான்.
“ம்ம்…”
அவள் தன் கையிலிருக்கும் காகிதங்களை அவன் முன் நீட்டி வாங்குமாறு செய்கை செய்தாள்.
“இங்க பாரும்மா… இதெல்லாம் சீரியலுக்கு வேணுன்னா ஒத்து வரலாம். நமக்கு… ம்ஹூம். சான்ஸே இல்லை. இந்த எண்ணத்தை இதோட விட்டுடு. உனக்கு நான். எனக்கு நீ. நமக்கு ஷா. நமக்குள்ள ஒண்ணுமே நடக்கலன்னாலும் கடைசி வரை இப்படியே ஒன்னா இருந்திடலாம்” என்று தனக்கருகில் மனைவியை அமர வைத்து நிதானமாக பேசினான்.
அவன் பேசுவது ஒரு வார்த்தைக்கூட விளங்காது அவள் தான் திருதிருத்தாள்.
“ம்ப்ச்…” என்றவள் மீண்டும் அவனிடம் காகிதங்களை நீட்டிட,
அது என்னவென்று கூட வாங்கி பார்க்காது…
“நீ ஓகே சொல்லலனாலும், நீயும் என்னை விரும்புறேன்னு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனால் கல்யாணம் ஆன அன்னைக்கே டைவோர்ஸ் பேப்பரை காட்டி கையெழுத்து கேட்கிறதெல்லாம், சீரியலுக்குத்தான் ஒத்து வரும். வாழ்க்கைக்கு இல்லை” என்று பட்டாசாய் பொறிந்தவனை வெட்டவா குத்தவா என்கிற ரீதியில் முறைத்தவள், தன் நெற்றியிலே தட்டிக்கொண்டாள்.
“நீயேன் உன்னையே தட்டிக்குற? நான் தான் என்னை அடிச்சிக்கணும். என்னென்னவோ எதிர்பார்த்து இந்த நைட் இப்படியா இருக்கணும்” என்றவனின் தலையில், அவன் சற்றும் எதிர்பாராத விதமாக ஓங்கி கொட்டியிருந்தாள் பாவனா.
“ஷ்ஷ்.. ஆஆ…” உண்மையிலேயே அவனது பேச்சினை ஜீரணிக்க முடியாது நன்கு பலமாக கொட்டிவிட்டாள். வலிதாங்காது அவன் கத்திட,
சத்தம் வெளியில் கேட்டால் வேறுவிதமாக நினைக்கத் தோன்றுமென்று கருதியவள்,
எதைப்பற்றியும் யோசிக்காது அவனது தடித்த அதரங்களை தன் பூவிதழ் கொண்டு மூடியிருந்தாள்.
எதிர்பாராத தாக்குதலின் தொடக்கம் மட்டுமே அவளுடையது. பயணத்தை தனதாக்கிக்கொண்டான் கள்வன்.
முதலில் விழிவிரித்தவனே தன்னவளை முழுதாய் தனக்குள் விழ வைத்தான்.
அவனின் இதழ் ஸ்பரிசத்திலே அவளின் தேகம் அவனது கைகளில் உருகி குழைந்துவிட, அவனுக்கு அவளின் சம்மதம் வாய் வார்த்தையாக வேண்டுமா என்ன?
அவளின் கையிலிருந்த காகிதங்கள் சிதறடிக்கப்பட்டு மூலைக்கு ஒன்றாய் பறக்க… இருவரது கைகளும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தது.
வெட்கத்துக்கு போட்டியாய் திரைகளும் விலகிட, இருவர் ஒருவராய் எழில் கோலம் தரித்து, காதலில் கரைகாணா பேரின்பத்தில் திளைத்து தாகம் தீர்த்தனர்.
அணு அணுவாய் தன்னவளை தனக்குள் உள்வாங்கி, தன்னை தன்னவளிடம் மிச்சமின்றி ஒப்படைத்து, தன்னில் அவளை சேர்ப்பித்து, அவளிள் தன்னை மூழ்கடித்து, இருவரையும் ஒருவராய் உயிர்பித்து, இருவரின் உணர்வுகளையும் மீளா சிறையில் கைது செய்து, மிச்சம் மிச்சமாய் மிஞ்சி உயிர்கள் கலந்து விலகினான்.
இறுதியில் தன்னவளை போற்றும் தேற்றலுக்குரிய ஆறுதல் இதழ் பரிசை, அவளின் உச்சியில் அழுத்தமாகப் பதித்தவன், அவளை தன் நெஞ்சில் தாங்கி களைத்தான்.
அவளின் இறுகிய அணைப்பு அவனுக்கு உணர்த்தியது, தன்னுடைய மென்மையை. ஆணாய் கர்வம் கொள்ளும் தருணமல்லாவா அது. தன்னைப்போல் அவனது கைகள் அவளை இறுக்கிக் கொண்டது.
“தேன்க்ஸ் எண்ட ப்ரியே.”
எதற்காக இதென்று பொருள் உணர்ந்தவள், அவனில் மேலும் ஒன்றி தன் நாணம் மறைத்தாள்.
“நிறைய பேசணும். என் காதல் உன்மேல எங்க எப்படின்னு எல்லாம் சொல்லணும் நினைச்சேன். ஆனால் இப்படி ஒத்த முத்தத்தில் சாய்ச்சிட்ட” என்றவனின் தேகம் சிரிப்பில் குலுங்க, அவனது மார்பின் மீது அடிகள் வைத்தாள்.
“இனி நீயா உன் லவ்வ சொல்லணும் கேட்கமாட்டேன். அதான் இப்போ பார்த்துட்டனே. என்மேல இவ்வளவு லவ் வச்சிக்கிட்டு, மேடம் டிவோர்ஸ் கேட்குறீங்க. எவ்வளவு கொழுப்பு உனக்கு” என்றவன் வலிக்க அவளின் கன்னம் கிள்ளினான்.
“ம்ப்ச்…” அவனின் கையை தட்டிவிட்டு, அவனிலிருந்து பிரிந்து எழுந்தவள், தான் வைத்திருந்த காகிதங்கள் எங்கென்று பார்த்து, அந்த மெல்லிய வெளிச்சத்தில் தேடி எடுத்தாள்.
“என்னத்த தேடி எடுத்துக்கிட்டு இருக்க?”
கேட்டவாறு எழுந்து சாய்ந்து அமர்ந்தான்.
மீண்டும் அவன் முன் காகிதங்களை நீட்டினாள்.
“ஹேய்… நமக்குள்ள எல்லாம் முடிஞ்ச பிறகுமாடி உனக்கு டிவோர்ஸ் வேணும்?” என்று அதிர்ந்து கேட்டவன்,
“அய்யோ என் வாழ்க்கை போச்சே… என்னை உருக உருக உனக்குள்ள கரைய வச்சிட்டு, அவள் ஈரம் என் மேல காயிறதுக்குள்ள இப்படி ஆன்ட்டி ஹீரோயின் மாதிரி டிவோர்ஸ் கேட்குறாளே! என் மானம் போச்சே! என் காதல் போச்சே!” என்று கண்களின் வராத கண்ணீரை துடைத்தவனின், கழுத்தை ஒற்றை கையால் பிடித்தவள்,
தன்னுடைய கண்களை உருட்டி,
வாயில் விரல் வைத்து அமைதியாக வாய் மூடுமாறு கணவனை மிரட்டினாள்.
‘உன்னலாம் எவண்டா ஒரு பெரும் கட்சிக்கு தலைவனாக்கியது?’
யது எப்பவும் அவளிடத்தில் அவனாக மட்டுமே இருக்க ஆசைப்படுபவன் என்பது அறியாது எண்ணினாள்.
அவனின் இயல்பே இந்த விளையாட்டுத் தோற்றம் தானே.
“ம்ம்ம்…”
பாவனாவின் கையை நகர்த்தியவன்,
“என்னால முடியாது. நீ கோர்ட்டுக்கு போனா, அங்க வந்து எனக்கு விருப்பமில்லைன்னு தான் சொல்லுவேன்” என்றவனின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.
எப்போதும் எக்கணமும் அவள் மட்டுமே வேண்டுமென்று சொல்லும் கணவனை அவளுக்கு பிடிக்காமல் போகுமா என்ன?
“முத்தமெல்லாம் நால்லாதான் கொடுக்குற. ஆனால், என்னை ஏன் பிரியணும் நினைக்குற?”
இன்னமும் அவளது கையிலிருக்கும் பேப்பர் என்னவென்று கூட தெளிவாய் பாராது உடைந்த குரலில் வினவினான்.
“ஒரு நிமிஷம்” என்று விரல் காண்பித்தவள், அவனது அலைபேசியை எடுத்து, வேகமாக டைப் செய்து அவன் முன் திரை காட்டினாள்.
“அடேய் மக்கு சேட்டா… என்னை ஏண்டா படுத்துற? நீயே சொன்னாலும் உன்னைவிட்டு போகமாட்டேன். இன்னும் உனக்கு நான் கொடுக்குற டார்ச்சர் எவ்வளவு இருக்கு. அதுக்குள்ள போய்டுவேனா? நான் என்னதான் சொல்ல வரன்னு வாங்கி பார்க்காமலே நீயா ஒண்ண புரிஞ்சிக்கிட்டு பேசினா நானென்ன பண்ண?
நான் என்ன சொல்ல வரன்னு பொறுமையா உன்னால கேட்க முடியாதா?
இப்படியிருந்தா நானொரு விஷியத்தை உனக்கு எப்படி சொல்றது.
என்னோட இந்த குறை நமக்குள்ள பெரிய இடைவெளியை உருவாக்கிடும் போல!”
படித்தவன் மனைவியை காற்று புகாத அளவிற்கு கட்டிக்கொண்டான்.
“சாரி! ரொம்ப ஆசைப்பட்டு உன்னை கட்டிக்கிட்டேன். நீ என்னை காதலிச்சாலும், கல்யாணம் வேண்டான்னு சொல்லிட்டியிருந்ததால, எங்க என்னைவிட்டு போயிடுவியோன்னு ஒரு பயத்தில் தான் நீ என்ன சொல்ல வரன்னு சரியா கேட்காம நானே ஏதோ…” தன் கன்னத்திலேயே அறைந்து கொண்டான்.
“இனி எப்பவும் உன்னால் பேச முடியலங்கிறதை, ஒரு குறையா நீ சொல்லக்கூடாது. உனக்கும் சேர்த்து நான் பேசுறேன்” என்றவனிடம்,
“ஐ லவ் யூ” என்பதை விரல்கள் மூலம் காண்பித்தாள்.

error: Content is protected !!