நேச நெஞ்சங்கள் 43

உயிர் உறை 43

மொழி 6

பாவனா அளித்த காகிதங்களை கையில் வைத்து பார்த்தபடி இருந்தான் யது.

“ம்ம்…” யதுவின் தோளினை தட்டி படி எனும் விதமாக ஜாடை செய்தாள் பாவனா.

“என்னயிருக்கு இதுல?”

கருவிழிகளை ஒரு புறமாக புருவ தூக்கலுடன் மேலேற்றி கடந்த காலம் என்பதை பின்பக்கமாக உள்ளங்கை உயர்த்தி அவனுக்கு விளக்கினாள்.

அவளின் வாழ்வில் தனக்கு தெரியாமல் நடந்தேறிய பக்கங்கள் அவை.

தெரிந்துகொள்ளத்தான் வேண்டும்.

இதுநாள் வரையிலும் அவளுக்கு தன்னிடம் சொல்ல விருப்பமில்லாத ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்கிற எண்ணம்…

இருவரும் ஓர் உயிராக கலந்த நொடி,

தெரிந்து கொண்டிருக்க வேண்டுமோ என்ற எண்ணமாக மாற்றம் பெற்றது.

யது முதல் வருடம் பாவனாவை விட்டு பிரிந்திருக்க முடியாது என்பதாலே அங்கேயே கல்லூரியில் சேர்ந்தான். முதல்வர் மகன் என்பதால் அவனுடன் இயல்பாக பழகிடவே மற்ற மாணவர்கள் ஒருபுறம் தயங்க, மறுபுறம் அவனது பெயர் அவனை கொண்டு இல்லாமலே பயன்படுத்தப்பட்டது. அமைதியாக படிக்க வேண்டுமென்றால் இங்கு முடியாதென்று யது வெளி மாநிலம் செல்ல முடிவெடுக்க,

“வீட்டுக்குள்ளே பொத்தி வைத்த மகனை திரும்ப வெளியில் கொண்டு வந்திட்ட போலிருக்கே!” என்ற துண்டு சீட்டு ஒன்று உண்ணியின் காரில் இருக்க… அது யார் எழுதியிருப்பார் என்கிற அனுமானம் அப்போது உண்ணிக்கு இருந்தாலும், மீண்டும் மகனை சிறை வைக்க அவருக்கு விருப்பமில்லை.

தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு மகனின் முக்கிய காலத்தை இதற்கு மேலும் வீணடிக்க முடியாதென்று நினைத்தவர், யதுவை படிக்க வைப்பதற்கு வெளிநாட்டிற்கு அனுப்புவதாக போக்குக்காட்டிவிட்டு அண்டை மாநிலத்திற்குத்தான் அனுப்பி வைத்தார்.

நினைத்தால் இருவரும் பார்த்துக்கொள்ள கூடிய தொலைவில் இருந்திட வேண்டும். அதற்காகவே இந்த ஏற்பாடு செய்தார்.

இருந்தபோதிலும் உண்ணி ஒருவரைத் தவிர யாருக்கும் யது சென்னையில் தான் இருக்கிறான் என்பது தெரியாது. ராதா, பாவனா உட்படவே யது வெளிநாட்டில் இருக்கிறான் என்று தான் அறிந்திருந்தனர்.

யது அடிக்கடி வந்தால் எதிரிகளுக்கு அவனது இருப்பிடம் தெரிந்துவிடும் என்பதாலேயே உண்ணி யதுவை அத்தனை எளிதில் வீட்டிற்கு வந்துவிட அனுமதிக்கவில்லை.

வாரம் ஒருமுறை பாவனாவுடன் வீடியோ காலில் பேசுவான். அதுவும் சில மாதங்களில் நின்று போனது. ஏனென்ற பதில் யாரிடமிருந்தும் யதுவிற்கு ஒழுங்காக கிடைக்கவில்லை. பாவனா முற்றும் முழுதாக யதுவை தவிர்த்துவிட்டாள்.

ராதா அப்பேச்சினையே யதுவிடம் தவிர்த்தார்.

இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் இதற்கு மேலும் முடியாது என்று,

“என்னை பார்த்துக்க எனக்குத் தெரியும் அச்சா. எதிரியை ஒற்றை கையால் சுழற்றியடிக்கும் திடமும் வேகமும் எனக்கு இருக்கு” என்று பேசி உண்ணியை சரிகட்டி ஊருக்கு வந்தவனுக்கு பெரும் இடியாக இருந்தது பாவனாவின் தோற்றம்.

கையில் ஆறுமாத குழந்தையுடன் நின்றிருந்தவளை கண்டவனின் இதயத்தில் கூரிய ஈட்டியை அதிக விசையுடன் பாய்ச்சிய வலி. கண்களில் குருதி பொங்கி வழிந்தது.

தானாக ஒரு அனுமானத்திற்கு வரக்கூடாது என நினைத்த யது…

“பேபி யாரோடாது?” என்று வலியை மறைத்து வினவினான்.

“குழந்தைக்கு நான் அம்மான்னா, குழந்தை யாரோடதா இருக்கும் நந்து?” அலைபேசியின் துணைகொண்டு அவள் பேசிய வார்த்தைகள் அவனது காதலை கொழுந்து விட்டு எரியச் செய்தது.

“பொய்…”

“இதுதான் நிஜம்.” அவனது குரல் ஓங்கி அடங்கும் முன் அத்தனை வேகமாக தட்டச்சு செய்து ஒலிக்கச் செய்திருந்தாள்.

“உன்னால என்னைத்தவிர இன்னொருத்தனை நிச்சயம் திருமணம் செய்திருக்க முடியாது.” அழுத்தமாகக் கூறினான்.

அதற்கு பாவனா எவ்வித பதிலும் அளிக்கவில்லை. மௌனமாக குழந்தையுடன் அறைக்குள் சென்றுவிட்டாள்.

“அச்சா பாவனாவுக்கு எப்போ மேரேஜ் ஆச்சு? எப்படி?” உண்ணியிடம் கேட்ட யதுவிற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

“நாம அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பா வைத்திருக்கிறோங்கிறதுக்காக, அவங்க தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய முடியாது நந்தா.” உண்ணியின் பதில் நியாயமாக இருந்திட மேற்கொண்டு அவரிடம் அவன் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

மீண்டும் கல்லூரி வந்தவனுக்கு ஆறுதலாக இருந்தது விநோதன் மட்டுமே!

“கையில் குழந்தையோட பார்த்ததும் உன் காதல் இல்லாமப்போயிடுச்சா யது?”

விநோவின் கேள்வி சாட்டையாய் இறங்கியது அவனுள்.

“ஸ்டில் லவ் ஹெர் விநோ.” விநோவை கட்டிக்கொண்டான் யது.

“குழந்தையோட தனியா இருக்க பொண்ணை கல்யாணம் செய்துக்கக் கூடாதுன்னு சட்டமில்லையே யது! அதுவும் அவள் கணவன் இப்போ அவளோட இல்லையே.”

விநோ சொல்லியதில் யதுவின் முகத்தில் ஒளி.

அந்த வருடம் படிப்பை முடித்து வந்தவன், பாவனா குழந்தைக்கு வைத்திருக்கும் பெயரில் பெரும் குழப்பம் கொண்டான்.

ராதாவிடம் ஏதேதோ பேசி, ஷாவின் தந்தை எப்போதும் உடனிருக்க வாய்ப்பில்லை என்பதை தெரிந்துகொண்டவன், ஷாவை தன் மகளாகப் பார்க்கத் துவங்கினான்.

பாவனாவிடம் அதே அக்கறை காதல் பார்வையை உணர்ந்தாலும், அவளால் தன்னை விட்டு எப்படி இன்னொருவனை மணக்க முடிந்தது என்கிற கோபம் இருக்கத்தான் செய்தது. அதெல்லாம் நாளடைவில் மறைந்து போக, பாவனாவை எப்படியும் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்கிற அவனின் எண்ணம் வலுப்பெற்றது.

மேற்படிப்பு முடிந்ததும் உண்ணியிடம் சொல்லி மணம் முடிக்க வேண்டுமென்று யது நினைத்திருக்க, உண்ணியோ அவனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அரசியலில் இறக்கி விட்டுவிட்டார்.

அரசியலில் மூழ்கிப்போனவனுக்கு பாவனா உடனிருந்தாலும் அவளின் விடயங்கள் பின்னுக்கு சென்றுவிட்டன.

அதன் பின்னர் தான் காதலை வெளிப்படுத்தும் போதெல்லாம் பாவனா ஷாவை காரணம் காட்டி மறுக்க… ஷாவையே பற்றாக வைத்து பாவனாவை அதிரடியாக மணந்து கொண்டான்.

தன்னவள் மொத்தமாக தன்னை தனக்கு மட்டுமே சேர்ப்பித்திருக்கிறாள் என்பதை கூடலின் போது அவளிடம் ஏற்பட்ட தடுமாற்றம் மற்றும், இரண்டற கலந்தளில் அவனால் உணர முடிந்த அவளது உணர்வுகள் கொண்டு தனக்கு மட்டுமல்ல தன்னவளுக்கும் தாம்பத்யம் புதிது என்பதை கண்டுகொண்டவனுக்கு… ‘என்னுடைய பாவனா எனக்கு மட்டுமே உரித்தானவள்’ என்கிற சந்தோஷம் பெருகத்தான் செய்தது.

‘எதற்காக யாரோ பெற்ற குழந்தையை தன்னுடையது என்று சொல்லி, என்னை விலக்கி வைக்கணும்?’ அக்கணம் அவனுள் தோன்றிய கேள்விக்கு அவள் சொல்ல மறுத்திருந்தாலும், நானாக தெரிந்துகொண்டிருக்க வேண்டுமோ என்ற எண்ணம் விடையாக…

அவளே அவனது வினாக்களுக்கு பதில் வழங்கி நின்றாள்.

இம்முறை எவ்வித மறுப்புமின்றி பாவனா கொடுத்த காகிதங்களில் இருந்தவற்றை படிக்க ஆரம்பித்தான்.

பாவனா ராதா ஈன்றெடுத்த மகள் அல்ல. ராதாவின் தங்கையின் மகள். அவரின் கணவர் பாவனா பிறந்ததும் இறந்துவிட, வற்புறுத்தி ராதா தங்கை நர்மதாவிற்கு மறுமணம் செய்து வைத்தார்.

நர்மதாவை மணந்துகொண்ட நாயர் அவர்களுக்கு குழந்தையென்று ஒன்று வரும்வரை பாவனாவை சொந்த மகளுக்கும் மேலாக தாங்கினார். அவள் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுத்து பாசத்தை காண்பித்தார்.

ஆனால் நர்மதா கர்ப்பம் என்று அறிந்த நொடி முதல் பாவனாவிற்கு நரகத்தைக் காட்டத் துவங்கினார் நாயர்.

“என்னயிருந்தாலும் முதல் புருஷன் கொடுத்த குழந்தை மீதுதான் உனக்கு பாசம் அதிகம்” என்று சொல்லி சொல்லியே நர்மதாவை பாவனா அருகில் செல்வதையே தடுத்தார். இதனால் திடீரென்று அன்னை பாசமும் கிடைக்காமல் போன பாவனா, வீட்டிற்கு புதுவரவாக வந்த நர்மதா நாயர் குழந்தையுடன் நேரத்தை போக்க… அதுவும் பொறுக்காத நாயர் பாவனாவை அடிக்கவும் ஆரம்பித்தார்.

இரண்டு பிள்ளைகளும் வளர வளர அனைத்திலும் சுட்டியாக முதன்மையாக வந்த பாவனாவை நாயருக்கு மேலும் பிடிக்காது போனது.

‘அவளுக்கு அடுத்து என் மகளா’ என்கிற அவரின் எண்ணம் பவனாவின் மீதான வெறுப்பிற்கு மேலும் மேலும் வலுவானது.

நாயர் இல்லாத நேரங்களில் சூழலுக்கு ஏற்றவாறு எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று நர்மதா மகளுக்கு எடுத்துக் கூறினாலும், அன்னையாக மகளை அரவணைக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருக்கத்தான் செய்தது.

தன்னுடைய இரு மகள்களும் ஒன்றாக இணைக்கமாகி விட்டால், நாயரின் மனம் கொஞ்சமாவது மாறுமென்று கணக்கிட்ட நர்மதா தன்னுடைய இரண்டாவது மகளிடம் பாவனா உனக்கு அக்கா, இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று சொல்லித்தர… அவளோ அதனை அப்படியே தந்தையிடம் சொல்லிவிட்டாள்.

“யாருக்கு யாருடி அக்கா. கண்டவன் பெத்தது எல்லாம் என் மகளுக்கு இணையா?” என்று கத்திய நாயர், பாவனாவை அடி வெளுத்துவிட்டார்.

“உன் அம்மக்காரி சொன்னான்னு, என் பொண்ணு பக்கத்தில் போற வேலை வச்சிக்கக்கூடாது” என்று மேலும் அடிகள் வைக்க சிறுமி மிரண்டுவிட்டாள்.

தந்தைக்கு ஏனோ பெரியவளை பிடிக்கவில்லை என்று தெரிந்துகொண்ட சிறியவள் தான் செய்யும் தவறுக்கு எல்லாம் பாவனாவின் மீது பழிப்போட ஆரம்பித்தாள்.

உண்மையை விசாரிக்காது நாயரும் பாவனாவை திருத்துகிறேன் என்று அடியாலும் வார்த்தையாலும் நோகச் செய்தார்.

உண்மை அறிந்தும் கையறு நிலையில் நர்மதா, ராதாவிடம் புலம்புவதை மட்டுமே தன்னுடைய மன ஆறுதலாகக் கொண்டார்.

நித்தமும் ஏதோவொரு வகையில் நாயர் பாவனாவை துன்புறுத்தி மகிழ்வு கொண்டார். அது அவள் தன் மனைவியிடம் இன்னொருவனால் உண்டான குழந்தை என்னும் கோபம். நர்மதாவின் மீது பித்தாக இருப்பவருக்கு, அவரிடம் காட்ட முடியாத கோபத்தை அந்த பிஞ்சிடம் காட்டி வடிகால் தேடினார்.

இது நர்மதாவுக்கும் புரியாமலில்லை.

“பேசாமல் பாவனாவை என் அக்காகிட்ட கொடுத்துடுறேன்” என்று நர்மதா சொல்ல, “நானென்ன அவ்வளவு கொடுமையா செய்றேன். ஊர் என்னை தப்பா பேசணும். அதுதானே உனக்கு வேணும்” என்று ஒரு ஆட்டம் ஆடிவிட்டார். பின் அந்த முடிவையும் நர்மதா கைவிடுவதாகிப்போச்சு.

வளர வளர நாயாரால் பாவனாவுக்கு துன்பங்களும் அதிகமாகியது. வயது வந்த பெண் என்றும் பாராமல் கை நீட்டிவிடுவார். முன்பு புரியாத யாவும் இப்போது புரிய, பாவனா என்னதான் ஒதுங்கி சென்றாலும் நாயரின் மகள் எதாவது ஒரு வம்பை இழுத்து வைத்து பாவனாவின் தலையில் கட்டிவிடுவாள்.

அன்றும் அப்படித்தான். பாவனா பத்தாம் வகுப்பு. அறையில் படித்துக் கொண்டிருந்தவளிடம் சென்று வம்படியாக விளையாட அழைத்து வந்த நாயரின் மகள், மறைந்து விளையாடும் விளையாட்டு விளையாடலாம் என்று பாவனாவை கண்ணை மூட செய்து நாயரின் அறைக்குள் சென்று மறைந்து கொண்டாள்.

அவரது அறைக்குள் அவரில்லாத சமயம் யார் சென்றாலும் அவருக்கு பிடிக்காது.

சிறிது நேரம் தேடி பார்த்த பாவனா, நாயர் அறையை தவிர்த்து மற்ற இடங்களை மேலும் அலசிவிட்டு அவளை காணவில்லையென்று மீண்டும் படிக்கச் சென்றுவிட்டாள்.

நாயர் வரும்போது அவரது அறை திறந்திருந்தால் உண்டில்லை ஆக்கிவிடுவார் என்பதால், சின்னவள் உள்ளிருப்பது தெரியாது நர்மதா வெளியில் தாழிட்டு விட்டார்.

நாயர் கதவினை திறந்து உள் சென்றபோது இருளில் பயந்து மூலையில் மடங்கியிருந்தாள்.

நாயருக்கு பயந்தவள்,

“விளையாடலாம் கூட்டிவந்து, பாவனா தான் என்னை இருட்டில் தள்ளி கதவை பூட்டிட்டாள்” என்று பொய் சொல்லிவிட்டாள்.

“இவள் உள்ளிருப்பது தெரியாது நான் தான் கதவடைச்சுட்டேன்” என்ற நர்மதாவின் பேச்சினை காதில் வாங்காத நாயர்,

“என் பொண்ணையே கொடுமை பண்ணுறியா” என்று கேட்டு, பாவனாவை பெல்ட்டால் அடி விலாசிவிட்டார்.

தடுக்க வந்த நர்மதாவையும் ஒரே அடியில் எட்ட நிற்க வைத்தவர், சிறுமியென்கிற எண்ணம் கொஞ்சமுமின்றி காட்டுமிராண்டி போல் கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் எடுத்து அவளை அடித்து வதைத்தார். கை கால் என ரத்தம் சொட்ட நின்றவளை மேலும் வதைக்கும் விதமாக இருட்டு அறைக்குள் இரவு முழுக்க அடைத்து வைத்துவிட்டார்.

மறுநாளும் அவ்வறையை திறக்காது தண்ணீர் கூட கொடுக்கவிடாது தன்னுடைய கோபத்தை நாயர் காட்டிட, ஒன்றும் செய்ய முடியாத நர்மதா ராதாவிற்கு அழைத்து சொல்ல… அன்றே அங்கு வந்து தங்கை மகளின் கோலம் கண்டு பரிதவித்தவர் போலீசுக்கு சென்றுவிடுவேன் என்று மிரட்டி தன்னோடு கூட்டி வந்துவிட்டார்.

“தொல்லை பிடிச்சது எக்கேடோ ஒழிஞ்சு போகட்டும். விட்டது ச*.” அப்போதும் நாயரின் வாய் அப்படித்தான் பேசியது.

அந்நொடி முதல் பாவனா ராதாவின் மகளாகிப்போனாள்.

ராதா பாவனாவை உண்ணியின் வீட்டிற்கு அழைத்து வந்த பின்னர், பாவனா இனியாவது நிம்மதியாக இருக்கட்டுமென்று நினைத்தாரே தவிர, அன்றைய இரவில் அவள் அனுபவித்த கொடுமையால் அவளுக்கு ஏதேனும் குறை ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய மறந்து போனார்.

அவள் அனுபவித்த துன்பங்களை அவள் முற்றிலும் மறக்க வேண்டும் என்பதற்காகவே தன் மகளாகவே வளர்க்க நினைத்து… மற்றவர்களிடமும் தன் மகளென்றே அறிமுகம் செய்து வைத்தார்.

யதுவின் மூலமாக மருத்துவ சிகிச்சை அவளுக்கு அளிக்கப்பட்டாலும், அத்தருணத்தில் பாவனாவைவிட அவளின் நிலை கண்டு அதீத வருத்தத்தில் இருந்த ராதாவிற்கு, தன்னுடைய தங்கையின் வாழ்க்கைக்காக நாயரின் கொடுமையை எங்கும் சொல்லாது விட்டார்.

உண்ணி மட்டுமே அறிவார். அவரும் ராதாவின் மன்றாடலுக்காக மட்டுமே நாயரை விட்டு வைத்தார். இல்லையென்றால் அன்றே அவனுக்கு தண்டனை அளித்திருப்பார்.

“சின்னபொண்ணுன்னு கூட பார்க்காம இத்தனை கொடுமை செய்திருக்கான், அவனை எப்படி விட சொல்றீங்க ராதா?” அன்று சினந்த உண்ணியின் கோபம், தங்கையின் வாழ்க்கைக்காக ராதா சிந்திய கண்ணீரில் காணாமல் போனது.

ராதாவுடன் வந்ததிலிருந்தே பாவனா ஒரு வார்த்தை வாய் திறந்து பேசிட முடியவில்லை.

யது அவள் பின்னே பேசிக்கொண்டே திரிந்த போதுதான், பாவனாவிற்கு தன் பேச்சு அன்றைய நாளின் பயத்தில் தொலைந்து விட்டது என்பது தெரிந்தது.

நாயர் பாவனாவை அறைக்குள் தள்ளி, இருட்டில் கைக்கு கிடைத்த பொருட்கள் கொண்டெல்லாம் அடித்தவர்,

“நீ உயிரோட இருந்தா எனக்கு நிம்மதியே இல்லை” என்று அங்கு கிடந்த இரும்பு தடித்த கம்பி ஒன்றை எடுத்து…

“உன்னை மொத்தமா முடிச்சிடுறேன்” என்று அவளின் நடு மண்டையில் ஓங்கி அடிக்க கம்பியை இரு கைகளாலும் பற்றி தலைக்கு மேல் உயர்த்தி பிடிக்க…

இதுவரை பட்ட ரணமே உயிர்வலி கொடுத்து அசைய முடியாது நடுக்கம் கொடுக்க… எங்கே இவ்வளவு பெரிய கம்பியால் உண்மையில் அடித்துவிடுவாரோ என்று பயந்த சிறுமி…

பயத்தில் வெளிறி அடிவயிற்றிலிருந்து ஒரு பிரவாக ஒலியை தொண்டைக்கு கடத்தி,

கண்களை மூடி “அம்மா” என்று கத்திய கத்தலோடு மயங்கி சரிந்தாள்.

“நடிக்கிறியா” என்று அவள் மயங்கியது தெரியாது அதற்கும் இரண்டடி அடித்தவன், “இங்கேயே இந்த இருட்டில் கிடந்து சாவு” என்று அறையை பூட்டிவிட்டான்.

அவளின் அக்கதறல் நர்மதாவின் உயிர்வரை சில்லிப்பை கொடுத்தது. அதில் நடுக்கம் கொண்டவர் தான் மறுநாளே ராதாவை வரவழைத்திருந்தார்.

ஆனால் அந்த ஒலியே தன் மகளின் இறுதி ஓலம் என்று அத்தாய் அறியாது போனார்.

தன்னுடைய குரல் குன்றிப்போனது தெரிந்தால் ராதா மேலும் தனக்காக வருந்துவார் என்று அவரிடம் சொல்லாது மேலும் பாவனா தன் நாட்களை கடத்திட்டாள்.

அந்த நாளின் தாக்கத்தில் பாவனா மௌனித்து இருக்கின்றாள் என்று ராதா எண்ணியிருக்க…

“என்கிட்டவாவது மனசுவிட்டு பேசும்மா” என்று ராதா இரவில் அவளிடம் கெஞ்சிட…

“என்னால் முடியவில்லை” என்பதை ராதாவிற்கு புரிய வைப்பதற்குள் பாவனா மனதால் மரித்து மீண்டாள்.

உண்மை அறிந்து ராதா தலையில் அடித்துக்கொண்டு கதற, தன் துக்கத்தை தனக்காக அழும் ராதாவிற்காக மறைத்து அவரை தேற்றினாள்.

ஒருவருக்கு மற்றொருவர் ஆறுதலாக மீண்டு வந்தாலுமே, இருவருக்குமே மருத்துவரிடம் காட்ட வேண்டுமென்கிற எண்ணம் உதிக்காமல் போனது.

அந்தநாள் பாவனாவிற்கு பயத்தை மட்டுமல்ல… எதிலும் மீண்டுவர வேண்டுமென்ற தைரியத்தையும் கொடுத்திருக்க,

தன் குறையையும் ஒருவித திடத்தோடு ஏற்றுக்கொண்டு வாழ பழகினாள்.

அத்திடத்தால் தான் யதுவிடம் கூட அத்தனை மிடுக்காய் தனக்கு வாய் பேச வராது என்று கூறியிருந்தாள்.

பிறப்பிலிருந்தே அவளால் பேச முடியாதென்று தவறாக யூகம் கொண்ட யதுவும், அடுத்து அவள் வழியில் அவளுக்கு கற்றுக்கொடுக்க முயன்றானே ஒழிய, இது பயத்தால் தற்போது ஏற்பட்ட குறையென்று அறியாது போனான். இல்லையென்றால் அப்போதே சரிசெய்திடும் மார்க்கம் தேடியிருப்பானோ?

இவ்விடங்களில் படிக்கும்போது தன்னவளின் வலி நிறைந்த நாட்களை நினைத்து தன்னைப்போல் அவனது கண்கள் கண்ணீரை சொறிந்தது.

துடைக்க துடைக்க நிற்காது வழிந்திட, பாவனா கணவனை தன் மார்போடு அணைத்துக்கொண்டாள்.

“அப்போவே சொல்லியிருக்கலாமே? உன்னை எப்படியாவது பேச வைத்திருப்பனே!” அரற்றினான்.

“நீ சொல்லலைன்னாலும் நானாவது என்ன ஏதுன்னு நடந்ததை தெரிஞ்சிருந்திருக்கணும்” என்று தன்னையே அறைந்து கொண்டான்.

யதுவின் கையை பிடித்து தடுத்தவள், மேலும் தனக்குள் அழுந்த புதைத்துக்கொண்டவளாக மெல்ல அவனின் முதுகைத் தட்டிக்கொடுத்தாள்.

அவன் சற்று ஆறுதல் அடைந்ததும், மேற்கொண்டு படிக்குமாறு காகிதத்தை காண்பித்தாள்.

ராதாவின் மகள் சுந்தரி. அவள் காதலித்தவனையே ராதாவின் சம்மதத்தோடு திருமணம் செய்துகொண்டாள். ஆனால் சுந்தரியின் கணவனின் வீட்டில் பயங்கர எதிர்ப்பு. அதை மீறித்தான் சுந்தரியை கரம் பிடித்தான். பிடித்தம் சில நாட்களில் பிடித்தமின்மையாய் மாறுவதும் நியதி தானே. சிறுசிறு சண்டைகள் அவர்களுக்குள் வந்தாலும், அவன் எங்கேயும் சுந்தரியை விட்டுக்கொடுக்கவில்லை. காதலித்து மணந்ததால் தோற்றுவிடக்கூடாது என்பதற்காகவே சுந்தரியை அளவுக்கு அதிகமாக காதலித்துக்கொண்டே இருந்தான். அந்த காதல் தான் அவனது குழந்தை விடயத்தில் அவனுக்கு எதிரியாகிப்போனது.

சுந்தரியின் மாமியாருக்கு சுந்தரியின் மீது மகனை தன்னிடமிருந்து பிரித்துவிட்டாள் என்கிற கோபம். அவர் சுந்தரியை பற்றி என்ன குறை கூறினாலும், அவன் மனைவியின் பக்கமே நின்றான்.

சுந்தரி கருத்தரிக்க… உள்ளங்கையில் வைத்து தாங்கினான் என்று தான் சொல்ல வேண்டும். அதிலெல்லாம் அவனது அன்னைக்கு சுந்தரி மீது அதீத வெறுப்பு உண்டாயிற்று.

பிரசவத்தின் போது அதிக ரத்தபோக்கினால், வலிப்பு வந்து சுந்தரி இறந்து போக, அவள் மீது கொள்ளை நேசம் கொண்டவன் முற்றிலும் உடைந்து போனான்.

சுந்தரி இறந்து போயிருக்க அவனுக்கு தன் விருப்பப்படி இன்னொரு திருமணம் செய்து வைக்க அந்த குழந்தை இடைஞ்சலாக இருந்துவிடுமோ என நினைத்த அவனது அன்னை, அவன் சுந்தரி மீது வைத்திருந்த நேசத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்.

“அம்மாவை கொன்னு பிறந்திருக்கே இதிருக்க இடம் விளங்குமா? என் மருமகள் உயிரை காவு வாங்கிடுச்சே!” இப்படி அவன் காதுபடவே அவர் வேண்டுமென்று பேசிட… மனைவி மீது உயிரே வைத்திருப்பவனுக்கு ஒன்றும் அறியாத குழந்தை எதிரியாகிப்போனது.

“என் சுந்தரியை கொலை செய்த குழந்தை எனக்கு வேணாம்” என்று அந்நொடியே மருத்துவமனைவிட்டு வெளியேறிவிட்டான்.

அப்போது அங்கு உடனிருந்த ராதாவிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு அவரும் சென்றுவிட்டார்.

கலங்கி நின்றவரின் கையிலிருந்த குழந்தையை வாங்கிக்கொண்ட பாவனா,

தனக்கு வாழ்வளித்த ராதாவிற்காக, அவரின் மகளுக்கு அன்னையாகிப்போனாள்.

அந்நொடி யதுவின் மீது கொண்ட காதலெல்லம் அவள் கண்ணுக்குத் தெரியவில்லை.

சுந்தரியின் மாமியார் குழந்தையை பற்றி பேசிய வார்த்தைகள் தான் அவளின் மனம் முழுக்க பரவி நின்றது.

அவளும் இதுபோன்று ஓர் சாபம் பெற்ற வாழ்வு தானே சில வருடங்கள் வாழ்ந்தாள். இப்போது அவர் வீசிச்சென்ற வார்த்தைகள் அந்த குழந்தையின் வாழ்நாள் முழுவதும் தொடருமென்பது திண்ணம். அதனை போக்குவதற்கே அக்குழந்தையை தன் குழந்தையாக ஏற்றுக்கொண்டாள்.

ராதாவிற்காக, அந்த பிஞ்சுவின் முகத்திற்காக ஏற்க ஆரம்பித்தவளுக்கு சில மாதங்களில் அக்குழந்தையே அனைத்துமாகிப்போனது.

அவள் குழந்தைக்கு யதுஷா என்று யதுவின் பெயர் இணைந்து வருவதைப்போல் பெயர் வைத்த பின்னர் தான் ராதாவுக்கு பாவனாவின் மீது சந்தேகம் வந்தது.

‘ஒருவேளை யதுவை விரும்பியிருப்பாளோ?’

தன் சந்தேகத்தை கேட்கவும் செய்தார்.

“காதலா இருந்தால் மட்டும் தான் இப்படி செய்யணுமா? நன்றிக்கடனாக இருக்கக்கூடாதா?”

அவள் சொல்லிய பதிலில் ராதா வாயடைத்துப்போனார்.

யது திரும்பி வர, பாவனா தன்னை யதுஷாவிற்கு அன்னையாகவே காட்டிக்கொண்டாள்.

ஏனென்று ராதா கேட்டதற்கு,

“ரெண்டு பேருக்கும் இதுதான் நல்லது” என்று சொல்லிவிட்டாள்.

யது காதல் என்று அவள் பின்னால் சுற்ற,

ராதா, யதுவிடம் உண்மையை சொல்லப்போவதாகக் கூறிட… தன்னுடைய முந்தைய வாழ்வை காரணம் காட்டினாள்.

“இன்னொருவரோட பிள்ளைன்னு நான் அனுபவித்த கொடுமை இவளுக்கும் வேணாம்” என்றாள்.

ராதா “யது அப்படிப்பட்டவன் இல்லை” என்று எத்தனையோ எடுத்து சொல்லியும் பாவனா தன் முடிவில் ஸ்திரமாக இருந்தாள்.

“உங்க தங்கச்சியை கல்யாணம் செய்துகிட்டவர், அவருக்குன்னு ஒரு குழந்தை வரும்வரை என்னை தாங்கியவர் தான். எல்லாத்தையும் காலமும் சூழலும் மாத்திடும் ராதாம்மா” என்றவள், உண்மையை யதுவிடம் சொல்லிவிடக்கூடாதென்று சத்தியமும் வாங்கிக்கொண்டார்.

அவருக்கும் அவளின் பயம் நியாயமாகவேத் தோன்றியது.

அந்த சூழலை கடந்து வந்தவளுக்கு அதுகுறித்த பயம் இருக்கத்தானே செய்யும். எங்கு மீண்டும் அதுபோன்றொரு நிகழ்வு தன்னால் தனக்கு வாய்த்ததுபோல் யதுஷாவிற்கு கிடைத்துவிடுமோ என்கிற பயமே அவளை யதுவின் காதலை மறுக்க வைத்தது.

இது அவன் மீதான பயமல்ல. மொத்த ஆணின் மீது அவளது ஆழ்மனம் கொண்ட பயம்.

‘எதற்காக தன்னை வேண்டாமென்று அவள் கூறினாள்?’ என்ற அவனது ஒற்றை கேள்விக்கு இவ்வளவு பெரிய பதிலை யது எதிர்பார்க்கவில்லை.

மனம் கனத்து போனது.

படித்து முடித்த காகிதங்களை சுருட்டி அருகிலிருந்த மேசை இழுவையில் வைத்தவன், முகத்தை உள்ளங்கையால் அழுந்த தேய்த்துக்கொண்டான்.

பாவனா அவனின் தோளில் கை வைக்க, அவளின் கை மீது தன் கை வைத்தான்.

“என்மேல கோபமில்லையே?” சைகையால் அவள் வினவிட, இல்லையென்று இருபக்கமும் தலையாட்டினான்.

அவளிடத்திலிருந்து பார்க்கும்போது அவளது பயம் நியாயம் தானே. தன்மீது நம்பிக்கையில்லையா என்று எதிர்கேள்வியை இவன் முன் வைக்கலாம். ஆனால் இது வாதம் சமந்தப்பட்டது இல்லையே! உணர்வுகளால் மனம் சமந்தப்பட்டது. இங்கு நம்பிக்கை மட்டுமே அனைத்தையும் சரிசெய்திட முடியும்.

“லவ் யூ எண்ட ப்ரியே.”

யதுவிற்கு இதை தவிர்த்து என்ன சொல்வதென்று தெரியவில்லை. தன் காதலால் அவளுக்கு துணையாக இருப்பேன் என்ற உறுதியை அக்கணம் கொடுக்க நினைத்துக் கூறினான்.

பாவனாவின் முகம் பூவாய் மலர்ந்தது.

தன்னவன் உண்மைகள் தெரிந்தும், அவன்மீது தான் நம்பிக்கை வைக்கவில்லை என்பதை அறிந்தும் கோபம் கொள்ளாது காதல் சொல்கிறான் என்பதில் அவளுக்கு அகமும் முகமும் சந்தோஷத்தில் நிறைந்தது.

அக்கணம் யதுவிடம் பாவனா இன்னொன்றையும் யாசித்தாள்.

ஏற்கனவே அவர்களின் உயிர் விதைக்கப்பட்டுவிட்டது என்பது அறியாது, அவனிடம் தன் மனதிலிருக்கும் எண்ணத்தைக் கூறினாள்.

அலைபேசி வாயிலாக ஒவ்வொரு வார்த்தையாகத்தான் தடுமாற்றமாக ஒலிக்கச் செய்தாள்.

“நந்து நமக்கு ஷா மட்டுமே போதுமே!”

யதுவிற்கு என்ன சொல்கிறாள் என்று புரியவில்லை. அதனை விழிகளில் தேக்கினான்.

இம்முறை அவளிடம் தடுமாற்றத்துடன் பதட்டமும்.

“நமக்குன்னு தனியா ஒரு குழந்தை வேண்டாம்!”

‘அவள் தன்னிடம் முடிவெடுப்பதைப்பற்றி கலந்தாலோசிக்கவில்லை. முடிவெடுத்துவிட்டுக் கூறுகிறாள்.’

என்ன தான் ஷா மீது யது உயிரையே வைத்திருப்பினும், தன் உயிரில் ஓர் உயிர் முகிழ்க்க வேண்டுமென்ற சராசரி ஆசை அவனுக்கும் இருக்கத்தானே செய்யும்.

யதுவின் பதில் என்னவாக இருக்கும்?

error: Content is protected !!
Scroll to Top