நேச நெஞ்சங்கள் 44

உயிர் உறை 44

மொழி 7

யது நந்தனிடம் அப்படியொரு ஆழ்ந்த அமைதி.

எந்த பெண்ணும் கணவனிடம் இப்படியொரு வேண்டுதலை கேட்டிருக்கமாட்டாள்.

தனக்கென்று எத்தனை பிள்ளைகள் இருந்தாலும், இதற்குமேலும் வேண்டுமென்று சொல்வது தான் தாயின் மனம்.

ஆனால் பாவனா?

தான் தாய்மை கொள்ளாமலே, தன்னுடைய வளர்ப்பு மகளுக்கு தன் உதிரத்தில் மழலை வேண்டாமென்று சொல்வது சரியாகுமா?

இங்கு சரி தவறென்பதெல்லாம் பற்றி யது யோசிக்கவில்லை.

தன்னை உயிருக்கு உயிராக நேசித்தும், தன்னுடன் ஒன்றாக கலந்து தனது காதலை முற்றும் முழுதாக அறிந்த பின்னரும், நமக்கென்று ஒரு ஜீவன் வேண்டாமென்று பாவனா சொல்வதில், அவள் யதுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையின்மை தான் அவனுக்கு அதிக வேதனையாக இருந்தது.

இதில் நம்பிக்கை பெற வேண்டுமென்றால் அவர்களுக்கென்று குழந்தை வந்தால் மட்டும் தான், அது சாத்தியம்.

ஷா மட்டுமே மகளாக இருக்கும்போது, யது அவளை தன் மகள் போல் நடத்துவானா இல்லையா என்ற கேள்விக்கு உண்மையான விடை பாவனாவால் எப்படி அறிய முடியும்.

‘எத்தனை குழ்நதைகள் நமக்கென்று வந்தாலும், ஷா தான் முதல் குழந்தை. அவளை இன்னொருவரின் பிள்ளையாக பார்க்க மாட்டேன். என்னால் அப்படி செய்திட முடியவும் முடியாது.’ தொண்டை அடைத்த வார்த்தைகளை வலி நிறைந்த சிரிப்பால் மறைத்தான்.

‘இப்போது இதற்கு எத்தனை விளக்கங்கள் கொடுத்தாலும், விவாதம் செல்லும் திசை வீண் சண்டையில் தான் முடிவடையும்’ என நினைத்தவன்,

“நடப்பது நடக்கட்டும். உன் விருப்பம்” என்று சொல்லிவிட்டான்.

காதலித்தவளே மனைவியாய் அருகில். காதலின் சுவை அறிந்து சில மணி நேரங்கள் கூட கடந்திருக்கவில்லை. ஆனால் நெஞ்சம் முழுதும் இன்பத்தின் சுவடு சிறிதுமின்றி மனம் ரணமாய் வலித்திட… நன்றாகப் படுத்து கண்களை மூடிக்கொண்டான்.

யதுவை விளங்கா பார்வை பார்த்திருந்தவள், அவனுக்கு மறுபக்கம் சென்று படுத்துவிட்டாள்.

அவனின் சோர்ந்த முகம் அவளை வாட்டுகிறது… ஆனால் ஷாவை அவளால் விட்டுக்கொடுத்திட முடியாதே!

இது யதுவின் மீது அவளுக்கிருக்கும் நம்பிக்கையின்மை கிடையாது. அவளுக்கு அவள்மீதே நம்பிக்கையில்லை. தனக்கென்று ஒரு ரத்தம் வந்துவிட்டால், தானும் அப்படித்தான் நடந்து கொள்வேனோ என்கிற பயம். அதனை அவளால் யதுவிடம் வெளிப்படையாகக் கூற முடியவில்லை.

யது அவள் கேட்டதிலேயே உழன்று கொண்டிருக்க… தூக்கம் தூரம் போனது.

சட்டென்று ஏதோ நினைவு வந்தவளாக, யதுவை தொட்டு உறங்கிவிட்டானா என்று பார்த்தாள்.

அவளின் சிறு தோடுகைக்கே எழுந்து அமர்ந்தவன், “என்னம்மா?” என்று கேட்டவாறு மின்விளக்கை உயிர்பித்தான்.

“இன்னொரு விஷயம் உங்கக்கிட்ட சொல்லணும்.” சைகையால் மொழிந்தாள்.

‘கேட்டவரையே நெஞ்சம் மீள முடியாத பாரமா இருக்கு. இதில் இன்னுமா?’ யதுவின் மனம் அதிர செய்தது.

“இது உண்ணி ஐயா பற்றி.”

அவள் தட்டச்சு செய்து அலைப்பேசி ஒலித்திட, யதுவிடம் ஒரு தீவிர முகபாவனை.

ஷா நடப்பதற்கு தத்தி மெல்ல அடிவைத்த சமயம் அது.

பாவனா தான் பயின்ற சிறப்பு பள்ளியிலே, தன்னைப்போன்ற மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் பணியை செய்கிறாள். அவள் விருப்பப்பட உண்ணி தான் இதற்கு ஏற்பாடு செய்தார்.

அப்பள்ளி அவர்களது வீட்டிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் தான் இருப்பதால், நடந்து சென்றே வருவாள்.

அப்போது சில நாட்களாக யாரோ பின் தொடர்வது போல் உள்ளுணர்வு உணர்ந்திட, சுற்றிலும் எச்சரிக்கை பார்வை வைத்தே இருந்தாள்.

அப்படியொரு நாள் அவள் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த சமயம்,

இருசக்கர வாகனத்தில் அவளை உரசியவாறு வந்த ஒருவன், அவள் என்னவென்று உணரும் முன்பே, அவளது கையில் ஒரு காகிதத்தை திணித்துவிட்டு சென்று விட்டான்.

பிரித்து படித்தவளின் முகம் வெளிறிவிட்டது.

அக்காகிதத்தினை அப்படியே கொண்டு சென்று உண்ணியிடம் கொடுத்துவிட்டாள்.

“உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தருகிறோம். நாங்க சொல்றதைக் கேட்கணும்.”

அதில் இதுதான் எழுதியிருந்தது.
எதிரியின் குறிக்கோள் என்னவென்பது அதிலிருக்கும் வார்த்தைகள் வைத்து கண்டறிய முடியவில்லை.

“பயப்படாத பாவனா. நான் பார்த்துக்கிறேன்” என்ற உண்ணி, “இனி நீ காரிலே போயிட்டு வந்திடும்மா. நான் நம்ம ட்ரைவர்கிட்ட சொல்லி வைக்கிறேன்” என்றார்.

உண்ணியிடம் சொல்லிவிட்டதாலோ என்னவோ அதனை அதற்கு பிறகு பாவனா ஆராயவில்லை. உண்ணி சொல்லியது போல் பள்ளிக்கு காரில் சென்று வந்தாள்.

ஒரு வாரம் சென்ற நிலையில்…

பாவனாவின் அலைபேசிக்கு குறுந்தகவல் வந்தது.

“நாங்க சொல்றதை நீ செய்யலன்னா, உன்னோட குழந்தை உயிரோட இருக்காது.”

தகவல் வந்த சில நொடிகளிலேயே பிரைவேட் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

ஷாவை எதுவும் செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் உடல் நடுங்க அமர்ந்திருந்தவளுக்கு அழைப்பை ஏற்க வேண்டுமென்று கூட தோன்றவில்லை.

மீண்டும் மீண்டும் அழைப்பு வந்த வண்ணம் இருந்திட, அவள் அச்சம் அதிகரித்துக்கொண்டே சென்றது.

“கால் அட்டெண்ட் பண்ணல, உன் குழந்தைக்கு இன்னைக்குத்தான் கடைசி நாள்.” அலைபேசியில் எம்பி குதித்த தகவலில் விதிர்விதிர்த்து போனவள், அடுத்து வந்த அழைப்பினை முதல் ரிங்கிலே எடுத்திருந்தாள்.

“உனக்கு வாய் பேச வராதுன்னு தெரியும். அதனால் நான் சொல்றது மட்டும் கேட்டுக்கோ!”

‘என்ன சொல்லப்போகிறானோ?’ அவ்வாறு நினைத்த கணமே, எதுவாக இருந்தாலும் உண்ணியிடம் சொல்லிட வேண்டுமென்று முடிவு செய்துகொண்டாள்.

“ஒரு பொருள் உன் கைக்கு நாளை வந்து சேரும். அதை உண்ணியோட உணவில் கலந்து கொடுத்துடு” என்றவன், “செய்ய முடியாதுன்னா உன் பொண்ணு உனக்கில்லை” எனக்கூறி துண்டித்துவிட்டான்.

‘என்னது அது, எப்படி என் கைக்கு வரும்?’ இரவு முழுக்க உறக்கம் வராது தவித்தவள் அன்று பள்ளிக்கும் செல்லவில்லை. அலைபேசியையும் அணைத்து வைத்துவிட்டாள்.

ஷாவையும் ராதாவின் பொறுப்பில் விட்டவள், அறைக்குள்ளேயே முடங்கிப்போனாள்.

உண்ணி அரசியல் விஷயமாக வெளியூர் சென்றிருக்க, அவரிடமும் அவளால் சொல்ல முடியவில்லை.

மாலை ஷாவை அழைத்துக்கொண்டு ராதா பக்கத்திலிருக்கும் பூங்காவிற்கு சென்றிருக்க… பாவனா மட்டும் வீட்டில் தனித்து இருந்தாள்.

அந்நேரம், யாரோ கொடுக்க சொன்னதாக காவலாளி சிறு கவர் ஒன்றை பாவனாவிடம் நீட்டினான்.

அதனை வாங்கிடவே அவளுக்கு கைகள் நடுங்கின.

“யார் என்ன கொடுக்க சொல்லி கொடுத்தாலும், விசாரிக்காம வாங்கி வந்திடுவீங்களா?” சைகையால் கோபமாக அவள் சொல்லியது அவருக்கு புரியாமல் போக, தலையில் தட்டிக்கொண்டே உள்ளே வந்தவள் என்னவென்று எடுத்து பார்க்க, மிகச்சிறிய அளவில் கண்ணாடி பாட்டில், மஞ்சள் நிற திரவத்தால் நிரம்பியிருந்தது.

அதில் பெயரென்று எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அவளின் அலைபேசி ஒலித்தது. காணொளி அழைப்பு.

எடுக்காவிட்டால் எதாவது சொல்லி மிரட்டுவான், என்று எண்ணியே அழைப்பை ஏற்றிருந்தாள்.

காணொளியில் அவனது முகம் காட்டப்படவில்லை. பாவனாவுக்கு எதிரில் சுவர் மட்டுமே தெரிந்தது. சுவற்றில் ஆங்காங்கே சில பெயின்டிங்ஸ். அனைத்தும் கொடூரத்தை குறிக்கும் வகையில் இருந்தது.

பாவனா திரையில் எங்கேயாவது அவனின் முகம் தெரிகிறதா என்று பார்க்க முயல,

“உன்னை நான் பார்த்தால் மட்டும் போதும்” என்று திடும்பென ஒலித்த குரலில் பாவனாவிற்கு தூக்கிவாரிப்போட்டது.

“உன் கையிலிருக்கும் மருந்தை உண்ணிக்கு கொடுத்திடு. நீ மாட்டிப்பன்னு பயப்பட வேண்டாம். இது ஸ்லோ பாய்சன் மாதிரி தான். பொட்டுன்னுலாம் அவன் உயிர் போயிடாது. அப்படி போயிட்டா, எனக்குத்தான் டேஞ்சர்” என்றவன், “நாளைக்கு உண்ணி வந்திடுவான். நான் கால் பண்ணும்போது வேலையை முடிச்சிருக்கணும்” என்றிட, “என்னால முடியாது” எனும் விதமாக பாவனா தன் மறுப்பை தலையை அசைத்து தெரிவித்தாள்.

“என்ன அவனுக்கு விஸ்வாசமா?” என்று கேட்டவன், “சரி ஃபோனை வை” என்று துண்டித்துவிட்டான்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் பூங்காவில் ஷாவை காணவில்லை என்று ராதா கால் செய்திருந்தார்.

பாவனாவிற்கு கேட்ட செய்தியில் இதயம் அவளது துடிப்பை நிறுத்தியிருந்தது.

மீண்டும் அவனிடமிருந்து அழைப்பு…

நெஞ்சம் முழுக்க பயத்தில் உறைந்திருக்க, கண்ணில் கண்ணீரோடு அட்டெண்ட் செய்திருந்தாள்.

“காணாமல் போன குழந்தை மொத்தமா காணமல் போயிடும். இது சும்மா சாம்பிள் தான். நாளைக்கு நான் சொன்னதை நீ செய்திருக்கலன்னா, உன் குழந்தை உனக்கில்லை.” அழைப்பு அணைந்தது.

தரையில் மடங்கி சரிந்து அமர்ந்தவள் சத்தமின்றி கதறி துடித்தாள்.

சிறிது நேரத்தில் குழந்தையுடன் வீடு வந்த ராதா,

“புதருக்கு அந்த பக்கம் விளையாடிக்கிட்டு இருந்திருக்காள். அது தெரியாமல், குழந்தை காணுன்னு உனக்கு போன் பண்ணி பயம்காட்டிட்டேன்” என்றார்.

ஷாவை அள்ளி அணைத்துக்கொண்டவள், அவளை விடமாட்டேன் என்பதுப்போல் அன்றைய இரவு முழுக்க தன் மார்பிலே அணைத்து இறுக்கி பிடித்தவாறு வைத்திருந்தாள்.

“ரொம்ப பயந்துட்டாள் போல” என நினைத்த ராதா, அவளை அவள் போக்கில் அன்று விட்டுவிட்டார்.

அடுத்தநாள் உண்ணி வந்துவிட்டார்.

“சொன்ன வேலையை சரியா செய்து முடிச்சிடு.” அலைபேசியில் தகவல் வந்ததும், பாவனாவிற்கு உடலெல்லாம் ஆட்டம் கண்டது.

“ஒரு சின்னப்பொண்ணை நம்பி இவ்வளவு பெரிய வேலையை கொடுத்திருக்கீங்களே?”

அந்த முகம் தெரியாத நபரின் அல்லக்கை அவனிடன் வினவினான்.

“நமகிருக்கும் டிரம்ப் கார்டு அவள் தான். அவளைவிட்டாலும் வேறு வழியில்லை. வெளியில் நாமே செய்யலாம், ஆனால் அந்த உண்ணி தான் யாரையும் நம்பாம கட்சி அலுவலகத்தில் கூட தண்ணீர் குடிப்பதில்லையே. அதுக்குத்தான் இந்த ஏற்பாடு” என்றான்.

“ஆக்சிடென்ட் பண்ணி போட்டு தள்ளுறதைவிட்டுட்டு இது ரொம்ப இழுவையா இருக்குதுங்க” என்றான் அடியாள்.

“அவன் தானா செத்த மாதிரி தாண்டா இருக்கணும். விபத்துன்னு கடந்து போறதுக்கு அவன் சாதாரண இடத்திலில்லை. இந்த மாநிலத்தோட முதலமைச்சர். அவன் மேல் சின்ன துரும்பு பட்டால் கூட, விசாரணை கமிஷன் வைப்பாங்க. அதனால் இப்படித்தான் இதை பண்ணனும். அப்போதான் நான் மாட்டிக்காம இருப்பேன்” என்றான்.

இங்கு பலத்த யோசனைகளுக்கு நடுவில் அமர்ந்திருந்த பாவனா, அந்த பாட்டிலையும், தன்னுடைய அலைபேசியையும் எடுத்துக்கொண்டு உண்ணியின் அறைக்குள் சென்றாள்.

“எனக்கு பயமா இருக்குங்க ஐயா! என கையாலே உங்களை எதுவும் பண்ண வச்சிடுவாங்களோன்னு ரொம்ப பயந்து வருது. நானும், என் குழந்தையும் இந்த ராத்திரியோட ராத்திரியா எங்கையாவது போயிடுறோம்” என்றாள்.

கண்ணீரோடு சொல்லியவளின் செய்கை பாதி புரிந்தும் புரியாதும் உண்ணி குழம்பிப் பார்க்க,

தன் கையிலிருந்த மருந்து பாட்டிலையும், அவன் அனுப்பிய குறுந்தகவல்களையும் உண்ணியிடம் காண்பித்தாள்.

உண்ணியின் முகம் தீவிர சிந்தைக்குள் மூழ்கிட,

“நான் போறேன்” என்று போவது போல் கை காண்பித்தாள்.

“அது யாருன்னு எதாவது தெரிஞ்சுதா?”

உண்ணியிடம் கொடுத்த தன்னுடைய அலைபேசியை வாங்கியவள், அதில் அவனுடன் வீடியோ கால் பேசும் போது எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட் படத்தை அவரிடம் காண்பித்தாள்.

உண்ணியின் முகத்தில் யாரென்று கண்டுகொண்ட ஒரு வெளிச்சம்.

பாவனா காட்டிய படத்திலிருந்து அது யாராக இருக்குமென்று உண்ணி யூகித்திருந்தார்.

இருந்தாலும் அவரால் முழுவதுமாக அதனை கொண்டு சந்தேகம் கொள்ள முடியவில்லை.

அதற்கு காரணம் அவரின் மனம் கண்டு கொண்டது.

அத்தருணத்தில் தான் பாவனா போய்விடுவதாகக் கூறிட,

“இந்த மருந்தை நீ எனக்கு கொடுத்திட்டன்னு அவன் போன் பண்ணும்போது சொல்லிடு” என்றார்.

உண்ணிக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லை. ஒரு அட்டாக் வந்துள்ளது. அதனை யதுவிடம் கூட அவர் சொல்லவில்லை. மறைத்துவிட்டார். கொஞ்ச நாட்களாகவே அவருக்குத் தெரிந்துதான் இருந்தது. அவரது கட்சி ஆட்களுக்குள்ளேயே தன்மீதான காழ்ப்புணர்ச்சி உள்ளது என்று. தற்செயலாக செவி தீண்டிய செய்தி, அவரை யாரையும் நம்ப விடவில்லை.

“அவன் நேர்மைன்னு நம்மையும் சம்பாதிக்க விடமாட்டேங்கிறான். அவன் இல்லாம போனாலாவது எதாவது கிடைக்குதான்னு பார்ப்போம். இந்த கட்சியின் நல்ல பேருக்காக, இதிலிருந்தால் நிச்சயம் வெற்றி தான் என்பதற்காக மட்டுமே இங்கு இருக்கேன்.”

யார் பேசிக்கொண்டார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை. காட்சியில் தெளிவில்லை.

சேத்தன் வீட்டில் விருந்தென்று சென்றிருந்த சமயம், பழச்சாறு மட்டுமே அருந்தியவருக்கு சுவையில் வித்தியாசமாக ஏதோ தெரிய குடிக்காமல் வைத்துவிட்டார். இருப்பினும் சுயமிழந்து ஒருவித அரை மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அப்போது யாரோ பேசிக்கொண்டவை தான் அவை.

அன்று முதல் அவர் வெளியில் தண்ணீர் குடிப்பதையும் நிறுத்திவிட்டார்.

சில நாட்களில் உடல் நலம் குன்றிட மருத்துவரை பரிசோதித்த போதுதான், உடல்நிலையை கொஞ்சம் கொஞ்சமாக கேடு செய்யும் மருந்து உடலின் ரத்தத்தில் கலந்திருப்பதாகவும், குணப்படுத்தினாலும் உடல் நலனில் குறை ஏற்படும். முழுதாக சரி செய்திட முடியாது என்று மருத்துவர் தெரிவிக்க, உடனடியாகத் தனக்குள் திட்டம் வகுத்தவராக யதுவை அரசியலுக்கு அழைத்து வந்துவிட்டார்.

முதல் டோஸ் அந்த விருந்தில் உண்ணிக்கு கொடுக்கப்பட்டிருக்க… உண்ணி உஷாரானதால் பாவனாவின் மூலம் அடுத்த டோஸ் கொடுக்க கயவர்கள் முயன்றனர்.

உண்ணி சொல்லியது போலவே பாவனா மருந்தினை உண்ணிக்கு கொடுத்துவிட்டதாக அவர்களிடம் சொல்லியதோடு, “இனியொருமுறை இப்படிப்பட்ட காரியங்களுக்கு என்னை பயன்படுத்த நினைத்தால் உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்” என்றும் சொல்லியிருந்தாள்.

இதில் தனக்குத் தெரிந்தவற்றை பாவனா யதுவிடம் சொல்லிட…

உண்ணி ஏன் பாவனாவையும் நம்பாதே என்று அன்று சொன்னாரென்று யதுவிற்கு இன்று புரிந்தது.

என்ன தான் பாவனா உண்மையை உண்ணியிடம் தெரிவித்து அவருக்கு விஸ்வாசமாக நடந்து கொண்டிருந்தாலும், ஷா என்று வரும்போது அவளின் மனம் பலகீனப்படும் என்பதை அறிந்தே தந்தை அவள்மீதும் சந்தேகக்கண் வைத்திருந்தார் என்பதை யது அறிந்துகொண்டான்.

“நமக்கு நடுவில் இனியும் எந்த ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது நந்து. அதான் எல்லாத்தையும் இன்னைக்கே சொல்லி முடிச்சிட்டேன். இனி உன்கிட்ட எனக்கு எந்த ரகசியமும் இல்லை” என்றவள் நிம்மதியாக உறங்கிவிட்டாள்.

அவனுக்குத்தான் மேலும் சுமை கூடிபோனது.

யதுவிற்கு தெரியும் உண்ணியின் உடல் நலன் இயற்கையாக குன்றவில்லை என்று. ஆனால் இப்படி தங்கள் கூட்டத்திற்குள்ளேயே ஒரு சதிகாரன் இருப்பானென்று யது நினைக்கவில்லை.

‘பாவனா மருந்தினை கொடுக்காது உண்ணியிடம் உண்மையை சொல்லியிருக்க, என்னதான் அவள் கொடுத்துவிட்டதாக எதிராளியிடம் சொல்லியிருந்தாலும் பாவனாவின் மீது நம்பிக்கையற்றவர்கள் வேறெந்த வகையிலும் தந்தைக்கு தீங்கு இழைத்திருப்பர்’ என்று கொஞ்சம் கொஞ்சமாக தனக்குள்ளேயே ஆராய்ந்து விளங்கிக்கொண்டவன், அது யாரென்று விரைந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று வேகம் கொண்டான்.

யதுவிற்குள் ஒரு அனுமானம். உண்ணியின் சிந்தனையை கூட ஓரளவிற்கு யூகித்து இருந்தான். எதற்காக உண்ணி தன்னுடைய இறுதி நொடிவரை அமைதியாக இருந்தாரென்றும் கணித்திருந்தான். இப்போது அனைத்தையும் சரிசெய்திடும் பொறுப்பு தன்னிடத்தில் என்பதையும் உணர்ந்தே இருந்தான் அக்கணம்.

விடியலை நெருங்கும் தருணத்தில் தான் உறக்கம் கொண்டான். இருந்தபோதும் சரியான நேரத்திற்கு விழித்தவன், காலை நேர உடற்பயிற்சி முடித்து அலுவலகம் செல்ல கிளம்பிவிட்டான்.

அவனுக்கு முன்பே எழுந்து பாவனா கீழே சென்றிருந்தாள்.

யது தயாராகிய தருணம் தான் ஷாவுடன் அறைக்குள் நுழைந்தாள்.

“ஷா மோளே… எழுந்தாச்சா?” என்றவன் அன்னையிடமிருந்து தாவிய மகளை தன் கைகளில் ஏந்திக்கொண்டான்.

“இனிமே நாம மூணு பேரும் ஒண்ணா தான் இருக்கப்போறோமா?” மகளின் கேள்வியில் மனைவியை பார்த்தவன், ஆமென்று பிள்ளைக்கு பதில் வழங்கினான்.

“அப்போ அச்சா ரூம் இனிமே ஷா ரூம்” என்ற குழந்தை அவனது கைகளிலிருந்து இறங்கி ஓடி மெத்தையில் ஏறி துள்ளி குதித்தது.

ஷாவின் சந்தோஷத்தை ரசித்த பாவனா…

“இதைவிடவா நந்து இன்னொரு சந்தோஷம் கிடைச்சிடும். நமக்குன்னு ஒரு குழந்தை இருந்தால் கூட இவ்வளவு சந்தோஷம் கிடைக்காது.” அலைபேசி வாயிலாக மொழிந்தாள்.

ஷாவின் மீதிருந்த யதுவின் பார்வை பாவனாவின் மீது அழுத்தமாக படிந்தது.

யதுவின் பார்வையில் அவனை ஏறிட்டவள் என்னவென்று விழி மொழியாய் வினவிட…

“நீதான் அடிக்கடி நமக்குன்னு ஒரு குழந்தைன்னு சொல்லி, ஷா நம்ம குழந்தை இல்லைன்னு சொல்லாம சொல்லிட்டே இருக்க. உன் மனசில் தான் ஷா நமக்கு பொறக்கலன்னு ஆழமா பதிஞ்சுப்போச்சு” என்றவன், அவளின் அதிர்ந்த தோற்றத்தையும் பொருட்படுத்தாது வெளியேறியிருந்தான்.

யது சொல்லிய வார்த்தைகள் பாவனாவின் மனதை ஊசியாய் துளைத்திருந்தது.

யது சொல்வதும் உண்மை தானே எந்த இடத்திலும்… ஷா அவளின் மகள் இல்லை என்று தெரிவதற்கு முன்பும் கூட, ஷாவை தன் மகளென்று மட்டுமே கூறியிருக்கிறான். அவள் மட்டுமே ஒவ்வொரு தருணத்திலும் நமக்கென்று ஒரு குழந்தையெனக் குறிப்பிட்டு, ஷாவை மறைமுகமாக தங்களது பிள்ளையில்லை என்பதை மறைமுகமாக பறைசாற்றிக் கொண்டிருந்திருக்கிறாள்.

நினைக்கவே அவளுக்கு வலி எழுந்தது.

ஷா விடயத்தில் யதுவும் மற்றவர்கள் போல் நடந்துகொள்வான் என்று பயந்தவள் தான் உண்மையிலேயே தன்னையறியாது அப்படி நடந்திருக்கிறாள்.

உள்ளத்தில் ரணம் கூடிட ஷாவை ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள்.

காரில் சென்று கொண்டிருந்த யதுவின் முகத்தில் வேதனையின் சாயல். இருக்கையில் கண்மூடி சாய்ந்திருந்தவனின் மனமும், உடலும் வெகுவாய் களைத்திருந்தது.

“யது… எல்லாம் ஓகே தானே?”

“நாட் ஓகே.” பாசிலின் கேள்விக்கு துரிதமாக பதில் வழங்கியிருந்தான்.

பாசிலை எந்தளவிற்கு நம்புகிறானோ, அதேயளவிற்கு ஓட்டுநர் முகுந்தனையும் யது நம்புகிறான். அதனால் பாவனா கூறிய உண்ணியின் விடயத்தை மட்டும் கூறியவன் தனக்கு சந்தேகமிருக்கும் நபர்களின் பெயர்களைக் கூறி,

“அவங்களையெல்லாம் இன்னும் கவனமா கண்காணிக்கணும் பாசில்” என்றான்.

காணொளி அழைப்பில் எடுக்கப்பட்டு பாவனா காட்டிய புகைப்படத்தை, யது முன்னால் அமர்ந்திருந்த பாசிலிடம் காட்டினான்.

ஒரு ஆர்வத்தில் பாசிலின் கையிலிருக்கும் அலைபேசியை எட்டிப்பார்த்த முகுந்தன் வண்டியை சட்டென்று பிரேக்கிட்டு நிறுத்தியிருந்தார்.

சீட் பெல்ட் அணிந்திருந்ததால் சிறு குலுக்களோடு சீராகினர்.

“என்னாச்சு சேட்டா?”

“தம்பி… இது, இந்த சுவரை உண்ணி ஐயா கூட போகும்போது எங்கயோ பார்த்திருக்கேன். சட்டுன்னு பிடிபடமாட்டேங்குது” என்றவர் யோசனைக்குள் சென்றார்.

யதுவும், பாசிலும் அவரையே ஒரு எதிர்பார்ப்போடு பார்த்திருந்தனர்.

“ஒருமுறை நைட்ல விருந்துக்குன்னு யார் வீட்டுக்கோ போனோம் தம்பி. விருந்துல ஐயா எதையோ மாத்தி குடிச்சிட்டாரு போல. நடக்க முடியல, தள்ளாட்டமா இருக்கு. உள்ள வந்து கூட்டிட்டு போன்னு எனக்கு போன் பண்ணாருங்க. அப்புறம் நான் தான் உள்ள போயி கைத்தாங்கலா கூட்டியாந்தேன். அங்க இந்த படத்தில் தெரியுற சுவத்துல மாட்டியிருக்க மாதிரி பெயின்டிங்லாம் பார்த்தேன்” என்று அன்றைய நாளை தெளிவாகக் கூறியவர், “யார் வீடு…” என்று யோசித்தவாராக வண்டியை இயக்கினார்.

“அந்த விருந்துக்கு போயிட்டு வந்ததுல இருந்து ஐயா முகமே சரியில்லை தம்பி. ரெண்டு நாளா கட்சி ஆபிசுக்கு கூட போகாமல் உடம்பு முடியலன்னு வீட்டுலே இருந்தாரு. ராதாம்மா தான் சத்தம்போட்டு ஹாஸ்பிடல் போயிட்டு வரசொல்லுச்சு. நான்தான் கூட்டிப்போனேன்” என்று தன்போக்கில் பேசிக்கொண்டே இருந்தார் முகுந்தன்.

அவரின் பேச்சினை கவனித்த யது…

“எந்த டாக்டர்கிட்ட போனாங்க நினைவிருக்கா?” என்று கேட்டான்.

“நம்ம வழக்கமா காட்டுற டாக்டர் தான் தம்பி.”

“சரி சேட்டா. யார் வீடுன்னு நினைவு வந்தா சொல்லுங்க” என்றவன், அன்றைய தன் பணிகளை முடித்துக்கொண்டு பாசிலை மட்டும் அழைத்துக்கொண்டு உண்ணி வழக்கமாக காட்டும் மருத்துவரிடம் சென்றான்.

யதுவை கண்டதும் உற்சாகமாக வரவேற்றார் மருத்துவர் லாரன்ஸ்.

“ஹாய் அங்கிள்…”

“என்ன யது இந்த நேரத்தில், உடம்பு சரியில்லையா? சொல்லியிருந்தா நானே வந்திருப்பனே” என்றவர், “எஸ்கார்ட்ஸ்லாம் வரலையா?” எனக்கேட்டு, “உன் சேஃப்டியில் கொஞ்சம் கவனமா இரு” என்றார்.

“ஏன் அங்கிள், அச்சனுக்கு பண்ண மாதிரி எனக்கும் யாராவது எதாவது பண்ணிடுவாங்களா?”

எதை மனதில் வைத்து அவன் கேட்கிறான் என்பதை நொடியில் கிரகித்துவிட்டார்.

“அவருக்கு என்னாச்சு அங்கிள். எதையும் மறைக்காம சொல்லுங்க ப்ளீஸ்” எனக் கேட்டான்.

ஒரு மகனாக அவனின் தவிப்பு முகத்தில் பிரதிபலித்தது.

உண்ணி மாதிரி ஒரு தந்தை ஆச்சரியம் தான். அவரின் இறப்பிற்கு காரணமானவர்களை எளிதில் விட்டுவிட முடியுமா?

உண்ணி வேண்டுமானால் யாரென்று தெரிந்தும் மன்னித்திருக்கலாம். தனக்கு தீங்கு இழைத்தவருக்கும் நன்மையை மட்டுமே எண்ணும் உள்ளம் கொண்டவராக இருக்கலாம்.

ஆனால் யது, தன் தந்தையை இல்லாமல் செய்தவனை அவன் இல்லாமல் ஆக்க வேண்டாமா?

தனக்குள் அத்தனை பழிவாங்கலை அடக்கி வைத்திருக்கிறான். அடக்கப்பட்டதன் வீரியம் கட்டுக்குள் அடங்காது அல்லவா!

பதுங்கியிருக்கிறான் பாய்வதற்கு.

கயவர்கள் எல்லாம் வென்றுவிட்டால் வெற்றிக்கு மதிப்பென்பது இல்லையே!

வெற்றியை அனுபவித்திட விட்டுவிடுவானா யது நந்தன்?

யதுவின் முகத்தில் ரௌத்திரம் கூடிக்கொண்டே போனது. கை முஷ்டி இறுகியது.

பாசில் தான் அவனின் தோள் தொட்டு கட்டுக்குள் கொண்டு வந்தான்.

“உன்னுடைய கோபத்தை பார்க்கும்போது உன்னிடம் சொல்லலாமா வேண்டாமான்னு தோணுது யது.” அவ்வாறு சொல்லிய லாரன்ஸை அழுத்தமாக ஏறிட்ட யது…

“,அரசியலுக்காக உங்களோட பிரண்ட் உயிரை பறிச்சிருக்காங்க. அவங்களை எதுவும் செய்யனும் உங்களுக்கு தோணலையா அங்கிள்?” எனக் கேட்டான்.

ஒருவன் தன்னுடைய ஆதங்கத்தை இப்படியும் காட்டலாம் என்பதை லாரன்ஸ் யதுவிடம் தெரிந்துகொண்டார்.

யதுவின் முகம் என்னவோ சாதரணமாகத்தான் இருந்தது. ஆனால் வார்த்தையின் அடர்த்தி பன்மடங்காய்.

“ஏதோ பார்ட்டியில் எதையோ குடிச்சிட்டன்னு சொன்னான். டேஸ்ட் வித்தியாசமா இருக்கவும், பாதியிலே வச்சிட்டான். அப்பவே வந்திருந்தால் முழுசா குணமடைய செய்திருக்கலாம். என்கிட்ட மூணு நாள் கழிச்சு தான் வந்தான். அதுக்குள்ள அந்த மருந்து அவனோட ரத்தத்தில் முழுசா பரவியிடுச்சு. ஆன்டிடோன் கொடுத்ததாலும், திரும்ப செகண்ட் டோஸ் எதிரிகளால் கொடுக்க முடியாததாலும் தான் உண்ணி உயிர் கொஞ்ச வருஷம் இந்த பூமியில் தாக்குப்பிடிக்க முடிஞ்சுது. அதுக்குள்ள அவன் என்ன செய்யனும் நினைச்சானோ அதையும் அவனால் செய்து முடிக்க முடிஞ்சுது” என்ற லாரன்ஸ்…

“உண்ணியோட மொத்த நம்பிக்கையும் நீதான் யது. அவன் என்ன நினைத்து உன்னை அரசியலில் இறக்கினானோ அதை நிறைவேத்திடு” என்றார்.

   

error: Content is protected !!
Scroll to Top