உயிர் உறை 45
மொழி 8
மருத்துவர் லாரன்ஸ் முன்பு அமர்ந்திருந்த யதுவின் மனம் தீயாய் தகித்தது.
உண்ணியின் சாந்தமான அன்பு நிறைந்த முகத்தை பார்க்கும் யாருக்கும், அவருக்கு தீங்கு இழைக்கும் எண்ணம் சிந்தையிலும் உதிக்காது.
அப்படிப்பட்டவருக்கு பல வருடங்களாக உடன் பழகிய யாரோ ஒருவரால் தான் தீமை நேர்ந்திருக்கிறது என்பதை நினைக்க நினைக்க யதுவால் தன்னுடைய கோபத்தை அடக்கும் வழி தெரியவில்லை.
இருக்கையிலிருந்து எழுந்தவன்,
“சாரி அங்கிள்” என்றவனாக எதிரிலிருந்த சுவற்றில் முஷ்டியை மடக்கி ஓங்கி குத்தியிருந்தான்.
“யது…” இரு குரல்கள் அதிர்ந்து ஒலித்தன.
‘எத்தனை கலகலப்பானவன் யது.’ இன்றைய நிலையை நினைக்கையில் பாசிலுக்கு உள்ளம் குமுறியது.
யது நிதானத்தில் இல்லை என்பதை உணர்ந்த லாரன்ஸ்,
“கோபம் எல்லாத்தையும் மறக்கடிச்சிடும் யது. பகையாளியை கண்டுபிடிக்கணும் அப்படின்னா நீ நிதானமா இருக்கணும். ஆத்திரம் அறிவை மழுங்கடிச்சிடும்” என்றார்.
“புரியுது அங்கிள். ஆனால்,” என்றவன்… தன்னுடைய கரங்களை அவரின் முன்பு நீட்டி…
“இந்த கையில் தான் தலை வச்சு படுத்திருந்தார் அங்கிள். அப்படியே… அப்படியே, என்னைவிட்டு போயிட்டார். போகும்போது என்கிட்ட சொல்லக்கூட இல்லை” என்றவன் அப்படியே தரையில் மடங்கி அமர்ந்து வெடித்து கத்தினான்.
பார்த்திருந்த இருவருக்கும் உள்ளம் உருகியது.
“யது…” பாசில் அவனின் அருகில் செல்ல லாரன்ஸ் தடுத்துவிட்டார்.
“மனசில் அடக்கி வைக்க வைக்கத்தான் அழுத்தம் கூடும். அவன் கத்தட்டும், அவனுக்கு என்ன செய்தா மனம் லேசாகும் தோணுதோ அதை அவன் பண்ணட்டும். அவனுடைய கதறல் அடங்கும் போது அவனுக்குள் ஒரு தெளிவு வரும்” என்றவர் அமைதியாக அமர்ந்துவிட்டார்.
லாரன்ஸுக்கும் உண்ணியை நினைக்கையில் வேதனையாகத்தான் இருந்தது.
எத்தனை பெரும் நல்ல மனிதர் அவர். தொடர்ந்து நான்கு முறை… இருபது வருடங்கள் முதல்வராக இருந்திருக்கிறார் என்றால் மக்கள் மனதில் எந்தளவிற்கு சிம்மாசனமிட்டு மாமனிதனாக அமர்ந்திருந்திருப்பார்.
உண்ணிக்கு இரண்டு நண்பர்கள் தான். ஒன்று பாசிலின் தந்தை மற்றொன்று லாரன்ஸ்.
என்ன தான் உயரத்துக்கு சென்றாலும், எப்போதும் உங்களில் ஒருவன் என்று எவ்வித பாகுபாடுமின்றி பழகிய நண்பனை அன்று லாரன்ஸின் மனம் வெகுவாகவே தேடியது.
“நான், உண்ணி, உன் அப்பா மூணு பேரும் ஒண்ணா இருந்தா அந்த இடம் எப்படியிருக்கும் தெரியுமா?” மலரும் நினைவுகளின் லாரன்ஸின் முகம் ஒளிர்ந்தது.
“இப்போ நான் மட்டும் தான் இருக்கேன். உன் அப்பா உமரும் உண்ணி மாதிரிதான், அவன் சாவை தெரிஞ்சு வச்சிருந்தான்.”
லாரன்ஸ் தன்போக்கில் சொல்ல… பாசில் உட்பட யதுவும் அவர் சொல்லியதில் அதிர்ந்து எழுந்தான்.
“என்ன அங்கிள் சொல்றீங்க? உமர் அங்கிள் பள்ளிக்கூட கட்டிடம் இடிஞ்சு விழுந்துதானே இறந்துபோனார்?” யது தன்னுடைய சந்தேகத்தை வினவினான். பாசிலுக்கும் அதே சந்தேகம் தான்.
மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளை சீரமைக்க உண்ணி தனிக்குழுவை நியமித்து அதற்கு தலைவராக உமரை நியமித்திருந்தார். அப்போது சீரமைக்கப்பட்டு பணி முழுமையடைந்த பள்ளிகளை தானே நேராகச்சென்று பார்வையிட்டுக் கொண்டிருந்தார் உமர். அந்நிலையில் தான், உமர் பார்வையிடச் சென்ற புதிதாகக் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உமர் இடிபாடுகளில் சிக்கி உயிர் துறந்திருந்தார்.
வெளியுலகிற்கு உமரின் மரணம் விபத்து. ஆனால் அதன் மர்மம் அறிந்த ஒரே நபர் உண்ணி மட்டுமே!
“அவன் அன்னைக்கு அந்த விபத்தில் இறந்து போகாம இருந்திருந்தாலும் கொஞ்ச நாட்களில் தானாவே இறந்து போயிருப்பான். உமருக்கு ட்ரிங்க்ஸ் பழக்கம் இருந்தது. அடிக்கிட் ஆகுற அளவுக்கெல்லாம் இல்லை. அரசியல் விருந்துகளில் பெயருக்கு எடுத்துக்கொள்வான். அவ்வளவு தான். ஆனால் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு குடியில் மூழ்கிப்போனான். திடீர்னு எப்படி இந்தளவிற்கு குடிபழக்கத்திற்கு அடிமையானான் எங்களுக்குத் தெரியல. உண்ணி விசாரித்த போது தான். குட்டப்பன் உடன் நட்பு சேர்ந்திருக்கான் தெரிந்தது. குட்டப்பன் செய்யாத குற்றங்களே இல்லை” என்று நீளமாக பேசிய லாரன்ஸ்,
“உமர் விபத்தில் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ரத்தமாக வாந்தி எடுத்து மயங்கியிருக்கான். பகலில் வந்தா மீடியாவுக்கு தெரிஞ்சிடும் அப்படின்னு, உங்களை மாதிரி இந்நேரத்துக்கு தான் உண்ணி உமரை என்கிட்ட கூட்டி வந்தான். பரிசோதனை செய்ததில் அவனுடைய லிவர் முழுக்க பயங்கர டேமேஜ், மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம். நான் என்னோட சைட் கல்லீரல் கிடைக்க முயற்சி செய்துட்டிருந்த போது தான்,”
‘நானே அவனுங்க குழிக்குள்ள விழுந்துட்டேனே உண்ணி. என்னை காப்பாத்தாத லாரன்ஸ். உண்ணி நான் செத்து போயிடுவேன். என்னுடைய இந்த நிலமை என் குடும்பத்துக்கு தெரியக்கூடாது.’
சொல்லிய லாரன்ஸ் இப்போதும் உமரின் குரல் செவியில் ஒலிப்பதை போல் உணர்ந்தவர், கண்ணாடியை கழட்டி கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டார்.
“குட்டப்பன்?” யது கேள்வியாய் பாசிலை பார்த்தான்.
“நீ நினைக்கும் ஆள் தான். அவன் நம்ம கட்சி எம்.எல்.ஏ யது.”
“ஹோ… அவனை பற்றி நியூஸ் கேதர் பண்ணு பாசில்.”
(குட்டப்பனை கூண்டோடு மொத்தமாக விநோதன் பிடித்திட, யது விநோவிற்கு உதவிய காரணம் உமரின் மரணத்திற்காகத்தான். அப்படியென்ன அவன் நிழலுலகில் செய்கிறான் என்பதை அறிந்திடத்தான்.)
உண்ணியை கொலை செய்வதற்கு கூட அரசியல், பதவி என்று காரணங்கள் இருக்கலாம். ஆனால் உமர். அவர் அரசியலில் மேடை ஏறியது கிடையாது. அரசியல் பேசியது கிடையாது.
உண்ணிக்கு மறைமுக ஆலோசகர். மந்திரி.
‘உமரை கொலை செய்வதற்கு என்ன காரணம் இருக்கும்?’
“என் அப்பா சாவுக்கு பின்னாலும் மர்மம் இருக்குன்னு இப்போ தான் தெரியுது யது.” அடைத்த தொண்டையை சரி செய்து பேசினான் பாசில்.
“கண்டுபிடிச்சிடலாம் பாசில்.” யதுவிடம் அதீத திடம். எதுவாக இருந்தாலும் சமாளித்துவிடலாம் என்கிற பக்குவம்.
“கட்சிக்கு எதுவும் ஆகிடக்கூடாது யது. கட்சி உண்ணியோட கனவு மட்டுமல்ல, வரலாறு.” லாரன்சிற்கே நண்பனின் உழைப்பான கட்சியின் மீது இத்தனை அக்கறை இருக்கும்போது அவரின் மகன் அவனுக்கு இருக்காதா?
மென் புன்னகையுடன் பாசிலுடன் கிளம்பிவிட்டான்.
செல்வதற்கு முன்,
“பார்ட்டி யார் கொடுத்தாங்கன்னு அச்சன் ஏதும் சொல்லலையா அங்கிள்?” என்று அவன் கேட்ட கேள்விக்கு, லாரன்ஸிற்கும் விடை தெரிந்திருக்கவில்லை.
“இப்போ நம்ம கண்ணுக்கு தெரிஞ்ச ஒரு ஆதாரம் குட்டப்பன். அவனை நேரடியா டீல் பண்ணா உஷாராகிடுவான். உமர் அங்கிளுக்கும் குட்டப்பனுக்கும் என்ன தொடர்புன்னு முதலில் கண்டுபிடிக்கணும் பாசில்.” யது கூறிட பாசில் ஆமோதிப்பாக தலையசைத்தான்.
அடுத்த இரண்டு நாட்களில் தான் பள்ளி விடயமாக குட்டப்பனை விநோதன் அதிர வைத்தான் என்ற செய்தியை அறிந்த யதுவிற்கு விநோதன் என்கிற பெயரே இனிய படபடப்பை கொடுத்தது.
விநோதன் தன்னுடைய நண்பன் என்பதையும் அறிந்து கொண்டான்.
யது விநோதனைப் பார்த்து மூன்று வருடங்கள் ஆகியிருந்தது.
‘என்னை மறந்திருப்பானா?’
விநோவை பார்க்கும் ஆர்வம் முகிழ்த்தாலும், உள்துறை அமைச்சராக இருந்துகொண்டு தானாக ஒரு காவல்துறை அதிகாரியை தனிப்பட்ட முறையில் அழைத்து பேசுவது தன்னுடைய கட்சிக்குள்ளேயே பேசு பொருளாகும் என்று எண்ணியவன் தற்செயலான சந்திப்பிற்காகக் காத்திருந்தான்.
யதுவிற்கு நன்கு தெரியும். குட்டப்பனை குடைய ஆரம்பித்த விநோ அவனை வீழ்த்திட அனுமதி கேட்டு தன்னிடம் வருவான் என்று. அந்நாளுக்காக ஆவலாக இருந்தான் யது.
******
பாவனா நமக்கென்று குழந்தை வேண்டாமென்று சொல்லியதிலிருந்து யது தானாக அவளை நெருங்கவில்லை. பேசவில்லை.
அவளாக ஏதும் பேசினால் பதில் சொல்வான்.
யதுவிற்கு பாவனா மீது கோபமெல்லாம் இல்லை. கல்யாணத்திற்கு முன்பு எப்படியோ, இப்போது இருவரும் கணவன் மனைவியாக இரண்டற இணைந்த பின்னரும், இதென்ன நம்பிக்கை சிறிதும் இல்லாதப்பேச்சு என்ற வருத்தம். அந்த வருத்தம் வலி கொடுக்க…
“நீதான் அப்படி நினைக்கிற” என்று ஷா விடயத்தில் அவளை குத்தி பேசியது போல் மீண்டும் ஏதேனும் வார்த்தையை விட்டுவிடுவோம் என்பதற்காகவே அவளிடமிருந்து கொஞ்சமே கொஞ்சம் விலகி நிற்கிறான்.
முதல் இரு நாட்கள் அவனின் விலகளை உணராதவள், உணர்ந்த பின்பும் எதற்கு என்று ஆராய, காரணம் அறிந்த பின்னர்…
“நீ பேசலன்னா நானும் பேசமாட்டேன்” என்று இருந்துகொண்டாள்.
ஒரே அறைக்குள் வேறு வேறு திசையில் வாழ்ந்து கொண்டிருந்தனர். யதுவிற்கு இப்படி இருப்பது கசந்து வந்தது.
தன்னுடைய வருத்தத்தை மறுத்து யது இறங்கிப்போக, அவள் இதுதான் தனக்கு சமயமென்று மிஞ்சிவிட்டாள்.
அவளுக்கு யது அவளின் பின்னால் சுற்றுவது பிடித்திருந்தது. அதற்காகவே அவனை அவள் பின்னால் அலையவிட்டு ரசித்தாள். மனைவியின் மனம் புரிந்தவனும் அவளுக்காக வேண்டுமென்றே இன்னும் இன்னும் காதலாய் உயர்ந்து அவளிடம் அடிபணிந்தான்.
ஆக மொத்தத்தில் சண்டை என்கிற பெயரில் காதல் மட்டுமே செய்து கொண்டிருந்தனர்.
அன்று யது மாலை விரைவாக இல்லம் வந்துவிட்டான்.
பள்ளியிலிருந்து வந்த பாவனா வீட்டிற்குள் நுழையும் போது…
யது கூடத்து இருக்கையில் அமர்ந்து, தொலைக்காட்சியில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான். அவனருகில் யதுஷா.
இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு விளையாடியபடி இருக்க… வந்த பாவனாவை இருவருமே கண்டுகொள்ளவில்லை.
“சூட்… சூட்… டோன்ட் சூட் மீ.” சிறுமியின் சத்தம் வீட்டை நிறைத்தது.
உள்ளிருந்து ராதா குரல் கொடுத்தார்.
“யதுஷா சத்தபோடாம விளையாடு.”
“குழந்தைன்னா சத்தம் போடத்தான் செய்யும் ராதாம்மா.” தொலைக்காட்சியில் கண் வைத்தவனாக அவருக்கு பதில் கொடுத்தான் யது.
“குழந்தை சத்தம் போடுறது சரி… நீங்க ஏன் சார் கத்துறீங்க? கேட் வெளிய வரை கேட்குது உங்க சத்தம்” என்று அலைபேசி AI குரல் வாயிலாக பாவனா கூறிட,
அப்போதுதான் அவளின் வரவை உணர்ந்த இருவரில், யதுஷா “அம்மா” என்று அவளின் காலை கட்டிக்கொண்டாள்.
“நானும் குழந்தையா இருந்தவன் தான்.”
“முப்பது வருடத்திற்கு முன்னால்.” மீண்டும் அலைப்பேசி குரல் முறை ஒலித்தது.
“எதே… முப்பதா?” என்று அதிர்ந்த யது, “விட்டால் நாப்பது சொல்லுவ போலிருக்கே!” என்றான்.
அவனை மேலும் கீழும் பார்த்த பாவனா…
அலைபேசியில் தட்டச்சு செய்திட போக, அவளை கைகாட்டி தடுத்தவன்,
“இருக்கும். அதானே சொல்ல வர?” எனக் கேட்க… அவளின் தலை வேகமாக ஆடியது.
“அப்போ இந்த வயசானவனுக்கு வாழ்க்கை பிச்சை போடும்மா தாயே! கல்யாணம் பண்ணியும் தள்ளியே இருக்கேன். ஏதோ ஒருநாள் காட்டிய கருணையை தினமும் காட்டேன்” என்றான்.
யதுவை தீயாக முறைத்த பாவனா, பார்வையாலேயே அவனை வெட்டிச் சென்றாள்.
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் யது பாவனாவிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறான்… பாவனாவின் பிரதிபலிப்பு என்னவோ முறைப்பு தான். அவளின் எதிரில் சென்று பார்த்தால் கணவனின் காதலை கள்ளத்தனமாக ரசிக்கும் அவளின் வெட்க முகம் காணக்கிடைக்குமோ!
“அதிசயமா இன்னைக்கு ஏதோ சகஜமா பேசினாள். நானே கெடுத்துக்கிட்டேன்.” புலம்பிய யதுவின் விழிகள் செல்லும் தன்னவளிடம் காதலை வஞ்சனையின்றி மொழிந்தது.
**********************
அன்று காலையில் வழக்கத்திற்கு வரும் நேரத்திற்கு முன்பே பாசில் வந்துவிட்டான்.
சீக்கரமே எழுந்து தன்னுடைய அன்றாட காலை பணிகளை விரைந்து முடித்த யது, பாவனாவையும் துரிதமாக ஆயத்தமாகி கீழே வரச்சொல்லி சென்றுவிட்டான்.
ராதாவிடம் விடயத்தைக் கூறிய யது, பாசிலிடம் பேசிக்கொண்டிருந்தான்.
பாவனா வந்ததும் இருக்கையிலிருந்து எழுந்துவிட்டான்.
வாயிலை நோக்கி நகர்ந்திட,
“சாப்பிட வேண்டாமா?” ராதா வினவினார்.
“கொஞ்சம் படப்படப்பா இருக்கு ராதாம்மா. எனக்கு பசியில்லை” என்று யது சொல்லிக் கொண்டிருக்கும்போதே பாவனா உணவு மேசையில் சென்று அமர்ந்துகொண்டாள்.
பாசிலிடம் சாப்பிட்டாச்சா என்பதை விழிகளால் வினவியவள், அவன் தலை ஆடியதும் உணவினை எடுத்து வைத்து உண்ண ஆரம்பித்தாள்.
“புருஷனை சாப்பிடுன்னு சொல்ல முடியல…” அவள் அவனை கேட்காதா கடுப்பு யதுவுக்கு.
“என்னடா புகையுது?” பாசில் சிரிப்புடன் வினவினான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லடா! நான் முறுக்கிட்டு திரிஞ்சப்போ மேடம் சுத்தி சுத்தி வந்தாங்க. இப்போ நான் கெஞ்சுறேன். அவள் மிஞ்சுறாள்” என்றுகூறிய யது, “உட்காரு. அவள் சாப்பிட்டு வர டைம் ஆகும். நம்ம அவசரம் அவளுக்கு எங்க தெரியுது” என்றவனாக மீண்டும் அமர்ந்துவிட்டான்.
“இதுக்குத்தான் நான் அம்மா பாக்குற பொண்ணையெல்லாம் வேணாம் சொல்லிட்டு இருக்கேன். லவ், கல்யாணம் கமிட்மெண்ட்டுக்குள் நுழைஞ்சிட்டால் உன்னை மாதிரிதான் புலம்பிட்டு இருக்கணும்” என்ற பாசிலை யது ஏற இறங்க பார்த்தான்.
“உன்னை ஆட்டி வைக்கவும் ஆள் வருவாங்க. இது என் சாபம்” என்ற யதுவிற்கும் அப்போது தெரிந்திருக்காது, உண்மையில் பாசில் ஒருவளிடம் காதலுக்காக ஏங்கி நின்று, அவளால் ஆட்டுவிக்கப்படப்போகிறான் என்பது.
“அப்படி ஒண்ணு நடக்கும்போது பார்ப்போம்” என்ற பாசில், “நீ, நாம எங்குபோறோ(ம்)ன்னு பாவனாகிட்ட சொன்னியா?” எனக் கேட்டான்.
“அவள் எப்படி ரியாக்ட் பண்ணுவாள் தெரியல. அதனால சொல்லல. எப்படியும் தெரியத்தானே போகுது” என்றவன் பாவனா உணவு உண்டு எழுவதை கண்டு தானும் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டான்.
“கார் ஸ்டார்ட் பண்ண சொல்லுடா?” யது சொல்ல… பாசிலின் அலைபேசி ஒலித்தது.
யதுவிடம் “டிஜிபி மரியன்” என்ற பாசில் அழைப்பினை ஏற்று காதில் வைத்தான்.
கையில் குவளையுடன் வந்த பாவனா யதுவின் முன் நீட்டினாள். அவன் என்னவென்று கேட்க பதில் சொல்லாது தான் பிடித்திருந்த குவளையையே பார்த்திருந்தாள்.
“மேடம் புருஷன்கிட்ட பேசமாட்டிங்களோ?” எனக் கேட்டவன், “இந்த அக்கறைக்கெல்லாம் குறைச்சல் இல்லை” என்று அவள் காதுபடவே கூறி, குவளையை வாங்கிக்கொண்டவன், அதில் நிரம்பியிருந்த பழச்சாறினை ஒரே மூச்சாக குடித்திருந்தான்.
“இப்போ கிளம்பலாமா?”
யது கேட்டதும், அவனுக்கு முன் வெளியேறினாள்.
“ஷாவை பார்த்துக்கோங்க ராதாம்மா. கொஞ்ச நேரத்தில் வந்திடுவோம்.” யதுவின் குரல் வெளியில் நின்ற பாவனாவுக்கு நன்கு கேட்டது.
‘நானே மறந்தாலும் இவன் ஷாவை மறக்கமாட்டான்.’ அவளுக்கு சற்று பெருமையாகவே இருந்தது.
காரில் சென்று கொண்டிருக்கும்போது டிஜிபி அழைத்தற்கான காரணத்தை பாசில் யதுவிடம் தெரிவித்தான்.
“குட்டப்பன் மீது ஏதோ கேஸ் போலடா யது. பெர்ஸ்னலா உன்னை மீட் பண்ண மரியன் அப்பாயின்ட்மெண்ட் கேட்டார்.”
“இன்னைக்கே கொடுத்திடுடா!” யதுவின் குரலில் வழிந்த உற்சாகத்தில் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த பாசிலும், யதுவிற்கு பக்கவாட்டில் அமர்ந்திருந்த பாவனாவும் ஒரே நேரத்தில் அவனை திரும்பிப் பார்த்தனர்.
குரலுக்கு இணையாக அவனது முகத்திலும் ஒருவித துள்ளல் பாவனை.
“என்ன சடனா மூஞ்சில பிரைட்னெஸ்.” பாசில் தான் கேட்டான்
“குட்டப்பன் விஷயம்னா மீட்டிங்கிற்கு விநோ வருவான் தானே!”
யதுவின் முகத்தில் அப்படியொரு சந்தோஷம். முன்னெப்போதும் இந்த மாதிரி யதுவை இருவருமே பார்த்தது இல்லை.
“விநோ’ன்னா?” பாவனாவின் அலைபேசியிலிருந்த வாய்ஸ் மோட் ஒலித்தது.
யதுவை பார்த்து சிரித்த பாசில்…
“விநோ… வினோதினிம்மா. அவனோட திக்கெஸ்ட்…” என்று இழுக்க, பாவனா முகத்தில் தெரிந்த பொறாமையில் யது பாசிலை போதுமென்பது போல் கை காட்டி வாய் மூடச் செய்தான்.
யதுவின் முகத்தில் ஒரு பெண்ணுக்காக இத்தனை சந்தோஷம் என்பது உண்மையாகவே மனைவியாக பாவனாவிடத்தில் உரிமை உணர்வை தோற்றுவித்தது.
பாவனா யதுவை தீயாய் முறைத்தாள்.
“ஹேய் அவன் பொய் சொல்றாண்டி. விநோ மீன்ஸ் விநோதன். என்னோட காலேஜ்மேட் அண்ட் பெஸ்ட் ஃபிரண்ட்” என்று வேகமாகக் கூறினான்.
பாவனா உண்மையா எனும் விதமாக அவனை அழுந்த நோக்க…
“கூகுளில் நம்ம சிட்டி டிசி யாருன்னு பாருடி” என்றான்.
பாவனாவும் யது சொல்லியதை செய்தாள்.
விநோதன் என்கிற பெயர் திரையில் கருப்பு எழுத்துக்களால் பளபளத்தது.
“பார்த்து மூணு வருடமாச்சு. இன்னைக்கு மீட் பண்ணப்போறேன். அதுவும் ஒரு கேஸ் விஷயமாத்தான். நான் தான் உள்துறை அமைச்சருன்னு அவனுக்குத் தெரியுமா தெரியல. என்னை பார்த்ததும் எப்படி ரியாக் பண்ணுவாங்கிற, ரொம்ப நாள் கழிச்சு பார்க்கப்போறேங்கிற ஹேப்பி தான் ஓவர் எக்ஸைட் ஆகிட்டேன்” என்றான்.
பாவனா அவன் சொன்னதை நம்புவதாக தலையை ஆட்டிட,
“உனக்கு என்மேல் இவ்வளவு பொஸஸிவ்வா?” என்றவன், “இதுக்கூட நால்லாதான் இருக்கு எண்ட ப்ரீயே” என்று பாவனா பக்கம் நெருங்கி அமர்ந்திட…
“காருக்குள்ள நாங்களும் இருக்கோம்.” உடனடியாக ஒலித்த பாசிலின் குரலில் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த முகுந்தனும் பக்கென்று சிரித்துவிட்டார்.
“சீக்கிரம் கல்யாணம் பண்ணித்தொலைடா. என்னை டேமேஜ் பண்ணிக்கிட்டே இருக்க!” என்ற யது, சிரித்துக்கொண்டிருந்த பாவனாவை பார்த்து, “அவனுக்கு கண்டெண்ட் குடுக்காதடி” என்று அசடு வழிந்தான்.
“தம்பி வந்தாச்சு.” கார் நின்றதும் தான் எங்கு வந்திருக்கிறோம் என்று பாவனா பார்த்தாள்.
மருத்துவமனை.
பாசில் முதலில் இறங்கி முன் சென்றிட, வண்டியை அதற்குரிய இடத்தில் நிறுத்தியதும் முகுந்தன் கீழிறங்கியிருந்தார்.
“இங்கெதுக்கு?” காரிலிருந்து இறங்கிட முயன்ற யதுவின் கரத்தினை பிடித்து தடுத்தவளாக வினவினாள்.
“பேமிலி பிளானிங் பண்ண?” அவளை அழுத்தமாக அளவிட்டிபடி கூறினான்.
“யாருக்கு?” கையால் சைகை செய்து கேட்பதற்குள் அவள் திணறிப்போனாள்.
“எனக்குத்தான்.” யது சிறு தோள் குலுக்களுடன் கூறிட பாவனாவின் விழிகள் தெரித்துவிடும் அளவிற்கு அகல விரிந்தன.
“எதுக்கு? வேண்டாம்.”
“எங்க குழந்தை வந்திடுமோன்னு பயந்துதான, நான்தான் முதல்ல கோபமா விலகிப்போனேன்னு காரணம் வைத்து என் பக்கத்திலே வரமாட்டேங்குற. இதை பண்ணிட்டா, நாம எப்படி வேணாலும் ஒண்ணா இருந்துக்கலாம். ஈவன் ஃபிசிக்கலி.” இவ்விடத்தில் பாவனாவின் முகம் வெளிறிப்போனது.
“உனக்குத்தான் என்னை மாதிரி ஒரு குட்டி யது வேண்டாமே. இதை பண்ணிக்கிட்டா எப்பவுமே வராது தானே. பண்ணிக்கிட்ட அப்புறம் இனி நமக்கு குழந்தை வேண்டான்னு நினைவு வச்சிக்க நீ அடிக்கடி சொல்ல வேண்டாம் பாரு” என்றவன் அவள் கண்ணில் ஒற்றையாய் உருண்ட கண்ணீர் துளியை பார்த்துக்கொண்டே கீழிறங்கினான்.
‘பேச்சுக்கே அழறாள். இவளுக்கு குழந்தை வேண்டாமாம்.’ முணுமுணுத்துக்கொண்டான்.
‘குட்டி யது. என் நந்து.’ அவன் சொல்லிய வார்த்தை அவளின் இதயத்தை பலமாகத் தாக்கியிருந்தது.
தன் வயிற்றில் கை வைத்து குனிந்து பார்த்தவள்,
‘தன்னுடைய யதுவின் உயிர் எனக்குள்’ எனும் எண்ணமே சிலிர்ப்பைக் கொடுத்தது.
‘அதுக்குத்தான் வழியில்லாம பண்ணிட்டியே!’ அவளின் மனமே அவளை கொட்டியது.
‘அவன் முடிவு பண்ணிட்டான். இனி ஒன்னும் பண்ண முடியாது. உனக்குத்தான் உன் வயிற்றில் உன் காதலை சுமக்கும் விருப்பமில்லையே. அதெல்லாம் ஒரு வரம். கிடைக்கும் வரத்தை யாராவது வேணான்னு சொல்லுவாங்களா? நாளைக்கு இந்த விஷயம் வெளியில் தெரிந்தால், இப்படியும் ஒரு பெண் இருப்பாளான்னு உன்னைத்தான் உலகம் தூற்றும்.’
மனதின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சாட்டையாய் அவளை சுழற்றி அடித்தது. அன்று அவள் குழந்தை வேண்டாமென்று சொல்லியபோது யது பட்ட வலியை விட இன்று இக்கணம் பாவனா அதீத வலியை அனுபவித்தாள்.
யதுவின் சாயலில் ஒரு குழந்தை அவளின் மடியில் கை கால்களை அசைத்து ங்கா என்று பொக்கை வாய் பிளந்து சிரிப்பதைப்போல் அவளின் கண்களில் காட்சி விரிய…
“ஷாவோடு சேர்த்து எனக்கு என் யதுவின் மறு உருவமா குழந்தை வேண்டும். என்மீது உயிரே வைத்திருக்கும் என் யதுவின் உயிரை என்னுடைய வயிற்றில் நான் சுமக்க வேண்டும்” என்று வாய்விட்டு கதறி அழுதவள் கண்களை துடைக்க, அவள் பக்கம் கதவினை திறந்த யது…
‘இப்பக்கூட இது வேண்டான்னு சொல்ல மனசு வருதா பாரு’ என்று அவளின் அழுத முகத்தை பார்த்து மனதில் சாடியவன், வெளியில் தன்னை சாதாரணமாகக் காட்டிக்கொண்டான்.
“இங்க என்னை யாராவது பார்த்தா பிரச்சனை ஆகிடும். விஐபி என்ட்ரென்ஸ் வழியா நாம சீக்கிரம் போகணும் வா” என்று அவளின் கை பிடித்து இழுத்தான்.
பாவனா மறுப்பாக தலை அசைத்திட…
“விளையாடாத பாவனா. அப்பாயின்ட்மெண்ட் போட்டாச்சு. இனி ஒன்னும் பண்ண முடியாது. இறங்கி வா” என்றான்.
பாவனாவின் கை அவளின் வயிற்றை இறுகப்பற்றியது.
‘இங்க என் யது.’ ஏற்கனவே விதைக்கப்பட்டது அறியாது அவள் மனம் கதறியது.
“வேண்டாம் யது.” அவளின் தலை இருபக்கமும் மறுப்பாக ஆடியது.
“அதான் குழந்தை வேண்டான்னு தான் இந்த முடிவு. வா” என்றான்.
அவள் முழுதாக அவளின் மறுப்பை சொல்ல வேண்டிய அவசியம் அவனுக்கு.
பாவனாவின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
“இப்போ எதுக்கு அழற? உன்னையா பண்ணிக்க சொன்னேன். அந்த வலிக்கூட உனக்கு வேண்டான்னு தான் நான் பண்ணிக்கிறேன்” என்று இன்னும் தன் பிடியில் நிலையாக இருப்பதாக யது காட்டிக்கொண்டான்.
‘இப்போது வலிக்க செய்தால் தான் இனியொரு முறை இப்படியான எண்ணம் அவளுக்கு வராது’ என்று கருதினான்.
யதுவின் பிடிவாதம் பாவனாவுக்கு கோபத்தை கொடுக்க… தன்னுடைய அலைபேசியை எடுத்தவள் கண்ணில் வழியும் கண்ணீரை துடைத்தபடியே வேகமாக தட்டச்சு செய்து ஒலிக்கச் செய்தாள்.
“எனக்கு… குட்டி நந்து வேணும். என் நந்துவோட உயிர் எனக்குள்ள வேணும். எத்தனை குழந்தை வந்தாலும், ஷாவை நீயோ நானோ விட்டுகொடுக்கப் போறதில்லை. இந்த முட்டாளுக்கு இப்போ தான் அது புரியுது. ப்ளீஸ் நந்து பேமிலி பிளானிங் வேண்டாமே! வீட்டுக்கு போலாம். உன்னை நம்பாம விட்டதுக்கு என்னை மன்னிச்சிடு. ப்ளீஸ்.”
“இந்த கதையே வேண்டாம். நேத்து வேணாம் சொன்ன. இன்னைக்கு வேணும் சொல்ற. நாளைக்கே உன் வயிற்றில் ஒரு குழந்தை வந்த பிறகு, ஷாவுக்காக திரும்ப உனக்கு வேணான்னு தோணுச்சுன்னு வை… நீ கலைக்க முடிவு பண்ணுவ” என்று யது சொல்லி முடிக்கும் முன் அவனின் கன்னத்தில் பாவனாவின் மென் கரம் வன்மையாய் இறங்கியிருந்தது.
“என்னடா விட்டா அதிகமா பேசுற? எனக்கு உன்னை மாதிரி ஒண்ணு இல்லை பத்து குழந்தைங்க வேணும். உன்னால தர முடியுமா? குழந்தையை சுமக்க இன்னைக்கே நான் ரெடி.”
பாவனாவின் வார்த்தைகளை அவள் தன்முன் நீட்டிய அலைபேசியில் வாசித்தவன், காருக்குள் அமர்ந்து அவளை இறுக அணைத்துக்கொண்டான்.