நேச நெஞ்சங்கள் 46

உயிர் உறை 46

மொழி 9

நம்பிக்கையற்ற தன்னுடைய வார்த்தைக்காக யது இப்படியொரு முடிவை எடுப்பானென்று பாவனா எதிர்பார்க்கவில்லை என்பதைவிட நினைக்கவுமில்லை என்பதே சரியாக இருக்கும்.

அதுவும் யதுவின் இளம் வயதிற்கு இத்தகைய செயல் பெரிய விடயம்.

பாவனாவுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு மூச்சு முட்டியது.

யதுவின் மார்பில் முகம் புதைத்திருந்தவளின் அழுகை கூடிக்கொண்டே போனது.

அவளின் மனதில் ‘என் நந்துவோட உயிர் எனக்குள்ள’ என்ற ஓலம் தொண்டையை கடக்க நினைக்க முடியாது தவித்தவள், தனது பேச்சற்ற குறையை முதல் முறையாக வெறுத்து வருந்தினாள்.

அவளின் ஆழ் மனதின் ஓலத்தைகூட வெளிப்படையாய் தடையின்றி தன்னவனிடம் சொல்ல முடியவில்லையே என்ற தவிப்பு அவளின் அணைப்பில் தெரிந்தது.

காதலியின் நுண்ணுணர்வுகளை அறிந்திடாது இருப்பானா யது நந்தன். வலிக்கட்டும் என்று சிறிது நேரம் அமைதியாகவே இருந்தான். வலி எனும் உணர்வு தான் மீண்டும் செய்த ஒன்றை செய்திட விடாது.

கொள்ளை ஆசை நெஞ்சில் சுமந்து கொண்டு இனியொருமுறை அப்படி அவள் சொல்லிடக்கூடாது என்பதற்காகவே வலிக்க வார்த்தையால் அடித்தான்.

தன்னைக் கட்டிக்கொண்டு அழுபவளின் முதுகை மெல்ல வருடியபடி இருந்தவன்,

“சொன்னதுக்கே இப்படின்னா, சொன்னதை செய்திருந்தா?” என்றான்.

விலுக்கென நிமிர்ந்தவள் அவனின் வாயில் கை வைத்து இருபக்கமும் தலையை அசைத்தாள்.

அவனது இதயத்தில் தன்னுடைய சுட்டு விரலை அழுத்தமாக பதித்தவள், தனது வயிற்றில் கை வைத்து கண்களில் ஆசையை வழியவிட்டு அவனது விழியோடு விழி மொழி பேசினாள்.

அவள் வார்த்தையில் வடிவம் கொள்ளாத பாஷையை விழிகளின் மொழியாய் உள்வாங்கியவன் அவளின் கண்களை துடைத்து, தன்னிரு கைகளில் மனைவியின் மதி முகத்தை ஏந்தினான்.

“உன்னோட எண்ணம் வருங்காலத்தில் நமக்கு எவ்வளவு வேதனையை கொடுக்கும். அதுக்காக நான் பொய் சொன்னேன். இப்போ ஷா’காக உனக்கு நமக்குன்னு ஒரு குழந்தை வேண்டான்னு நீ முடிவெடுக்கலாம். ஆனால் அது எத்தனை வலி நிறைந்ததுன்னு உனக்கு உணர்த்த தான் இந்த பொய். நாளைக்கு நமக்கு அப்புறம் ஷா’க்கு ஒரு துணை வேண்டாமா? அவளுக்காக, நமக்கு அப்புறம் நம்மை போல் அவளைத் தாங்குவதற்காக அவளுக்கு ஒரு தம்பியோ தங்கையோ வேணும் தானே?” எனக் கேட்டவனின் பேச்சில் பாவனாவுக்கு அவன் மீதான காதல் பல்கிப்பெருகியது.

இப்போதும் யது ஷாவை தங்கள் பிள்ளை என்று மட்டுமே அல்லவா குறிப்பிடுகிறான். இந்நிலையிலும் யதுவின் மீது நம்பிக்கை வரவில்லை என்றால் அவன்மீது அவள் கொண்ட நேசம் ஆழமற்றதாக அல்லவா தோன்றிடும்.

அவன் பொய் சொல்லியிருக்கான் என்ற கோபம் கூட அவளுக்கு எழவில்லை. தனக்கு இப்படியொரு வைத்தியம் தேவைதான் என்றே நினைத்தாள்.

“ஐ லவ் யூ!” விரல்களை காண்பித்தவள் அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

“எனக்கும் இப்படியே இருக்க ஆசை தான். ஆனால் பாசில் சென்று ரொம்ப நேரமாகுது. உள்ள போகலாம்” என்ற யது காரிலிருந்து இறங்க முற்பட…

“எதற்கு?” என்று பார்வை பார்த்தாள்.

“இப்போ ஹாஸ்பிடல் வந்த ரீஸன் வேற. உள்ள போனா உனக்குத் தெரியப்போகுது” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு, விஐபி என்ட்ரன்ஸ் வழியாக பார்க்க வந்திருக்கும் மருத்துவரின் அறைக்கு நேராகவே சென்றனர்.

பாசில் அங்கு அமர்ந்திருந்தான்.

யதுவை பார்த்ததும் மருத்துவர் எழுந்து நிற்க, அவருக்கு தன்னை முறையாய் அறிமுகம் செய்துகொண்டவன் பாவனாவை மனைவியென்று அறிமுகம் செய்தான்.

மேசையில் வீற்றிருந்த மருத்துவரின் பெயர் பலகையில், அவர் எந்த துறையில் சிறப்பு மிக்கவர் என்று குறிப்பிட்டிருப்பதை கண்டவள், யதுவை சிறு அதிர்வோடு ஏறிட்டாள்.

மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் பாவனாவை அவதானித்தவன் அவளது விரல்களோடு தனது விரல்களை கோர்த்து தானிருப்பதாக அழுத்தம் கொடுத்தான்.

“நான் எல்லாம் பேசிட்டேன் யது” என்ற பாசிலிடம் சிறு புன்னகையை கொடுத்தவன், தன்னுடைய திருப்திக்கு தானும் ஒருமுறை பாவனாவின் நிலையை விளக்கினான்.

ஆம் வந்திருப்பது தொண்டை சிறப்பு மருத்துவரிடம். பாவனாவின் குரல் சிகிச்சைக்காக.

“அவங்களுக்கு பேசும் திறன் போய் ஒன்பது வருஷமாகிருச்சு டாக்டர். சரி செய்திட முடியுமா?” எனக் கேட்டான்.

“பாசில் சொல்வதற்கு முன்பு டாக்டர்  லாரன்ஸ் எல்லாம் சொல்லிட்டாரு. நான் பார்த்துக்கிறேன்” என்று நம்பிக்கை கொடுத்தார். அது லாரன்ஸின் மருத்துவமனை.

பாவனா யதுவையேதான் பார்த்திருந்தாள். அவனது சிறு சிறு செயலிலும் தன் மீதான அக்கறை மற்றும் காதலை உணர்கிறாள்.

“எல்லா டெஸ்ட்டும் எடுத்து ரிப்போர்ட் பார்த்துட்டு சொல்றேன் சார்” என்ற மருத்துவர் பாவனாவை அழைத்துக்கொண்டு அதற்கென்று பிரத்யேகமாக இருக்கும் சிகிச்சை அறைக்குள் சென்றார்.

உள்ளே நுழைவதற்கு முன் பாவனா கணவனை திரும்பிப் பார்த்திட… அவனோ இரு கண்களையும் சிமிட்டி இதழினை விரித்து மலர்ந்தான். அவனது ஒளிர்ந்த முகம் அவளுக்கு திடம் அளித்திட உள் நுழைந்தாள்.

“எவ்வளவு நேரம் ஆகும் தெரியலையே யது. நீ ஆபீஸ் கிளம்பு. உன்னை யாராவது இங்க பார்த்தா நீயூஸில் வேற என்னத்தையாவது கொளுத்தி போட்டுடுவானுங்க” என்ற பாசில், “டெஸ்ட்லாம் முடிஞ்சதும் நான் கூட்டி வரேன்” என்றான்.

“அவளுக்குத் துணையா நான் இங்கு இருக்கன்னு தான் அவள் தைரியமா உள்ள போயிருக்கா! பரவாயில்லை வெயிட் பன்றேன். குடும்பம் வேற. தொழில் வேற. பாவனாவை பொறுத்தவரை நான் அவளுடைய கணவன் மட்டும் தான்” என்ற யது பாவனாவின் அனைத்து பரிசோதனைகளும் முடிந்து வர எடுத்துக்கொண்ட இரண்டரை மணி நேரமும் பொறுமையாகவே அமர்ந்திருந்தான்.

“நான் பார்த்தவரை திரும்ப பேச சான்சஸ் இருக்கு. பட் ரிப்போர்ட்ஸ் வரட்டும். பார்த்துட்டு சொல்றேன். டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் வர கொஞ்ச நேரமாகும். வெயிட் பண்றீங்களா? இல்லை…” என்று மருத்துவர் இழுக்க…

பாவனாவின் முன்பே ஏதேனும் தீர்க்க முடியாத குறை இருப்பின் அதனை மருத்துவர் சொல்லிவிடுவாரோ! அதனை அவள் எப்படி எடுத்துக்கொள்வாளோ? என அச்சம் கொண்ட யது…

“ரிப்போர்ட்ஸ் வந்ததும் லாரன்ஸ் அங்கிளுக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க டாக்டர். நான் உங்களை மீட் பன்றேன்” என்றவன் கிளம்ப…

பாவனா எதுக்கு இந்த பதட்டம் எனும் விதமாக அவனை பார்த்தாள்.

“கவர்னர் கூட மீட்டிங் இருக்கும்மா. டைம் ஆச்சு. முடிச்சிட்டு வரும்போது நான் டாக்டரிடம் பேசிட்டு வந்து உன்கிட்ட சொல்றேன்” என்றவன் பாசிலை பார்க்க… அவனோ வராத அழைப்புக்கு செவி மடுத்து,

“எல்லாரும் வந்துட்டாங்க யது” என்றான்.

அதன் பின்னர் பாவனாவும் ஏதும் சொல்லவில்லை.

அவளை வீட்டில் விட்டுவிட்டு ஆளுநர் மாளிகைக்கு விரைந்தான். தன்னுடைய ஆருயிர் நண்பனை மூன்று வருடங்களுக்கு பின்னர் காணும் ஆவலோடு.

விநோதன் பேக்கரியை மறைமுகமாக கண்காணித்து உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் அக்கடைக்கு சீல் வைத்த கையோடு குட்டப்பனுக்கு எதிரான ஆதாரங்களுடன், டிஜிபி மரியனுடன் சட்டம் மற்றும் ஒழுங்கின் உள்துறை அமைச்சாரான யதுவை காண வந்த சந்திப்புதான் அது. (இவ்விடம் நினைவு இல்லாதவர்கள் உயிர் உறை 6வது அத்தியாயத்தை ஒருமுறை வாசியுங்கள்.)

கூட்டம் முடிந்து விநோதன் கிளம்பியதும்…

“பய எம்மேல செம கோபத்தில் இருக்கான் போலடா” என்று பாசிலிடம் சொல்லிய யதுவின் முகம் சிரிப்பினை பிரதிபலித்தது.

அன்று விநோதன் மூலமாக குட்டப்பனை பற்றி மற்றொரு விடயம் அறிந்த யது,

“அவன் ரொம்ப பெருசா என்னவோ செய்யுறான் பாசில்” என்று சொல்ல வைத்தது.

அதன் பின்னர் லாரன்ஸ் மூலமாக பாவனாவை பரிசோதித்த மருத்துவரை தொடர்புகொண்டு அனைத்தும் அறிந்துகொண்டவன் இல்லம் வர இரவு வெகு தாமதமாகியிருந்தது.

பாவனா, ஷா உறங்கியிருந்தனர்.

அவன் வந்ததும் உணவு எடுத்து வைத்த ராதாம்மா பின்பக்கமிருக்கும் தன்னுடைய வீட்டிற்கு சென்றுவிட, யது விநோவை அழைத்து அந்நேரத்தில் சந்திக்க தன்னுடைய இல்லம் வரவழைத்திருந்தான்.

அன்றைய இரவு தான் குட்டப்பனின் சதியை மதியால் முறியடித்து, அவனது கூட்டத்தையே கூண்டோடு பிடிக்க திட்டம் வகுத்து, உயிருடன் இருக்கும் விநோவை இறந்துவிட்டதாக அனைவரையும் நம்பச்செய்து புது அத்தியாயத்தை தொடங்கியிருந்தனர் நண்பர்கள் இருவரும்.

மருத்துவரை சந்தித்துவிட்டு வந்து இரண்டு நாட்களாகியும் யது எதுவும் சொல்லாது இருக்க… அன்று யது காலை எழுந்துகொள்ளும் போதே பாவனா அவனை முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள்.

“காலையிலே என்னடி ரொமாண்டிக்கா லுக்கு விடுற” என்றவன், இரு கைகளையும் தலைக்கு பின்னால் கோர்த்து நன்கு சாய்ந்து படுத்தான்.

‘எதே இது ரொமாண்டிக் லுக்கா?’ என நினைத்தவள், அவனின் கால் மீதே அமர்ந்தாள்.

“ஏய் வலிக்குதுடி” என்றவன் அவளை இழுத்து தன்மேல் போட்டுக்கொண்டான்.

கணவனின் பிடியில் அவள் நெளிந்திட…

“கொஞ்ச நேரம் சும்மா இருடி எண்ட ப்ரீயே” என்று அவளின் முகத்தில் வழிந்த முன் நெற்றி கேசத்தை மெதுவாய் ஒதுக்கிவிட்டு, அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்து தனக்குள் அவளை இறுக்கிக்கொண்டான்.

“ஸ்பீச் தெரபி ரெகுலரா கன்ட்னியூ பண்ணா கொஞ்சம் கொஞ்சமா பேச முடியும் டாக்டர் சொன்னாங்க. உனக்கு தொண்டையில் அடிபட்டு பேச்சு போகல அதனால் இதுலே பேச்சு வந்திடுமாம். சர்ஜரி எதுவும் தேவையிருக்காதாம்” என்றவன், “எண்ட ப்ரீயே வாய்ஸ் எப்படி இருக்கும்?” என்று அவளின் முகம் பார்க்க… அவளின் கண்களில் ஆவல்.

தான் எப்போது பழையபடி பேசுவோமென்கிற ஏக்கம் அப்பட்டமாக தெரிந்தது.

“முன்னவே உன் வாய்ஸ் போனதுக்கு ரீஸன் தெரிஞ்சிருந்தா, இன்னும் ஏர்லியாவே ட்ரை பண்ணியிருக்கலாம்” என்றான்.

“உனக்கு எதனால் பேச்சு போச்சு தெரியுமா?” கேட்ட யதுவை மௌனமாக பார்த்தவள், சிறு இடைவெளிக்கு பின்னர்,

“பயம்” என்று சைகை செய்தாள்.

“எக்ஸ்சாக்ட்லி” என்ற யது, “ப்ளஸ் ஷாக்” என்றான்.

“அன்னைக்கு அந்த இருட்டில் ரொம்பவே பயந்திருக்க. அந்த ஆளு உன்னை அடிக்க கம்பியை தூக்கியதும் பெரிய அதிர்ச்சி உனக்கு. அதனால் தான் குரல் ஒடுங்கி போயிடுச்சாம். அந்த பயத்திலிருந்து நீ மீண்டு வந்தாதான் உன்னால் பேச முடியும். அதுக்கு அன்றைய நாள், அந்த நிகழ்வையே நீ மறக்கணும்” என்றான்.

அவளால் முயன்றாலும் மறக்க முடியாத கருப்பு பக்கம் அல்லவா அது.

முடியாது எனும் விதமாக உதடு பித்துக்கினாள் பாவனா.

“நைன் இயர்ஸ் ஆகிருச்சுடாம்மா. உன்னை கொஞ்சம் அதுல இருந்து வெளியில் கொண்டுவா. ப்ளீஸ். எனக்காக ட்ரை பண்ணு” என்றவன்,

“நீ அந்த இன்சிடெண்ட்ல இருந்து வெளிய வரனுன்னா கவுன்சிலிங் அவசியம். உன்னோட பயம் போனாதான், அந்தநாள் அதிர்ச்சி விலகி பேச்சு வரும். அப்போ தான் ஸ்பீச் தெரபி கொடுத்தாலும் பலன் கிடைக்கும்” என்றான்.

யது பாவனாவிடம் சொல்லிய அனைத்தையும் மருத்துவரிடம் கேட்கும்போது, இதற்கு எந்தளவிற்கு பாவனா ஒத்து வருவாள் என்கிற தயக்கம் அவனுக்கு இருந்தது. அதனாலேயே இரண்டு நாட்கள் இதைப்பற்றி அவளாக வந்து கேட்கட்டுமென்று அமைதியாக இருந்தான். அப்போதுதான் தான் சொல்வதை அவள் செய்திட சம்மதிப்பாள் என்று நினைத்தான்.

அமைதியாகக் கேட்டுக்கொண்டவள் சிகிச்சைக்கு ஒத்துழைப்பாளா?

******

ஆரம்பத்தில் தனக்கு ஏற்பட்ட குறையின் வீரியம் தெரியாது அதனை சரிசெய்திட வேண்டுமென்கிற எண்ணம் இல்லாது, ராதாவிற்கு மேலும் தன்னால் சுமை கூடிடக்கூடாது என்பதற்காக அமைதி இருந்தாள் பாவனா.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல எங்கு சென்றாலும், அவளால் பேச முடியாது எனும் குறை அவளை வெகுவாக தாக்கியது. அவளின் குறை அறிபவர்களின் பரிதாப முகம், தூற்றும் முகம், கேலி முகம் அவையெல்லாம் அதிக வலியோடு அழுத்தத்தையும் கொடுக்க மனதளவில் துவண்டு போனாள்.

அந்த வயதில் அதனை கடக்கும் பக்குவம் இல்லாததால் வெகுவாக காயம்பட்டவள், இதனை சரிசெய்திட முடியுமா என்று ஆராய்ந்து பார்க்கக்கூட தோன்றாது இருந்துவிட்டாள்.

நாட்கள் செல்ல செல்ல தன்னுடைய உள்ளத்து உணர்வுகளை கூட நினைத்த நொடி வெளிப்படுத்த முடியவில்லை எனும்போதுதான், பேச முடியாமல் இருப்பது எத்தனை பெரிய குறை என்று தெரிந்துகொண்டாள்.

இதைவிடவும் பெரிய பெரிய குறைகளோடெல்லாம் வாழ்ந்து சாதனை புரிகின்றனர். ஆனால் அவர்களுக்குள்ளும் எங்கோ ஓர் புள்ளியில் தனக்கிருக்கும் குறை குறித்து வருத்தம் இருக்கத்தான் செய்யும்.

தனக்கென்று வரும்போது தான் அதன் ரணம் புரியும்.

நினைப்பதை மற்றவருக்கு தெரியப்படுத்த, தனக்கு என்ன வேண்டும் வேண்டாமென்று பிடித்தம் மற்றும் வெறுப்பினை பறைசாற்றிடக் கூட பேச்சு அவசியமென்று உணர்ந்தவள் வலியோடு நாட்களை கடக்கத் தொடங்கினாள்.

உண்ணியிடம் அவர் உயிரை பறிக்க தன்னை பகடக்காயாக பயன்படுத்த நினைக்கின்றனர் என்பதைக்கூட அவருக்கு தன் செய்கையால் விளக்கிக் கூறுவதற்குள் மனதால் மரித்துப் போயிருந்தாள்.

ஷா அவளின் வாழ்விற்குள் வருவதற்கு முன்பு யதுவிடம் காதலை சொல்லிட பல முறை முயன்று தவியாய் தவித்திருக்கிறாள்.

உன் மௌனம் ஆயிரம் கதைகள் பேசலாம். ஆனால், உன் உள்ளத்தை தெரியப்படுத்திட பேச்சு அவசியம் என்று அவள் உணர்ந்த கணங்கள் அவை.

ஒவ்வொரு முறையும் தன்னுடைய உணர்வுகளையும் மனதின் எண்ணங்களையும் எதிரில் இருப்பவருக்கு தெரியப்படுத்துவதற்கு பேப்பர், பேனா மற்றும் அலைபேசியை தேடி எடுத்து எழுதியோ, தட்டச்சு செய்தோ முன்னிருப்பவருக்கு விளக்கும் நிலை இனியும் வேண்டாமென்று கருதியவள் அந்த வலிகளை கடக்க முடிவு செய்தாள்.

‘தான் பேசுவதற்கு அன்றைய பயமும் அதிர்ச்சியும் தான் காரணமென்றால், தனக்காக இத்தனை யோசித்து இவ்வளவு மெனெக்கெடும் யதுவிற்காக அவன் சொல்வதை செய்திட வேண்டும்’ என நினைத்தவள் மெல்ல தன் சம்மதத்தை யதுவிடம் தெரிவித்தாள்.

“நாளையிலிருந்து உனக்கு கவுன்சிலிங். டெய்லி ஒன் ஹவர். டைம் நீ முடிவு பண்ணிக்கோ. லாரன்ஸ் அங்கிள் ஹாஸ்பிடல் தான். முகுந்தன் தினமும் கூட்டிட்டு போவார்” என்றான்.

‘எல்லாம் பிளான் பண்ணிட்டு என்கிட்ட சம்மதம் கேட்கிறார்.’ மனதோடு நினைத்தாள்.

அவளுக்காக அவன் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திடும் போது அவளால் எப்படி மறுத்திட முடியும்.

பாவனா சரியென தலையசைத்தாள்.

அடுத்த நாளிலிருந்து பாவனா கவுன்சிலிங் சென்றுவரத் தொடங்கினாள்.

ஆரம்பகட்டம் அவளுக்கு அத்தனை எளிதாக இருந்திடவில்லை.

ஒன்பது வருடங்களாக மனதில் வேரோடி போயிருக்கும் அழுத்தம் அத்தனை எளிதில் மறைந்துவிடுமா என்ன?

ஷாவுடன் சேர்த்து மனைவியையும் தன் சேயாய் மடி தாங்கினான். அவள் கஷ்டப்படும் தருணங்களில்.

நடுவில் அவனுக்கு பணியின் சுமைகளும் கூடிப்போக… ஓய்வென்பது இல்லாமல் ஓடினான். உண்ணியின் இறப்புக்கான காரணத்தின் தேடலில் பாதை நீண்டுகொண்டே சென்றது.

விநோ சென்ற வேலையில் அவன் கண்டுபிடித்து சொல்லும் ஒவ்வொன்றிலும், தன்னுடைய கட்சியின் அமைச்சரான குட்டப்பனின் பாதகமான செயல்களை அறிந்து கவலைகொண்ட யதுவிற்கு, அவனது குற்றத்திற்கான தண்டனைகளை எந்த வகையில் பெற்று தருவது என்ற சிந்தனையும் அவனுக்கு சேர்ந்துகொண்டது.

நாட்கள் விரைந்தோடிக் கொண்டிருந்தன.

மூன்று மாதங்கள் சென்றிருந்த நிலையில் கவுன்சிலிங் விடாது சென்று கொண்டிருப்பதால், பாவனாவிடம் ஒரு தெளிவு காணப்பட்டது.

எப்படியும் அன்றைய நாளின் பயம் முழுமையாக தன்னைவிட்டு சென்றுவிடும் என்கிற நம்பிக்கை அவளுக்கே வர ஆரம்பித்திருந்தது.

இனி அந்நிகழ்வு தனக்குள் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அவளின் ஆழ் மனம் நம்பும் நேரத்தில் பேச்சு பயிற்சி கொடுத்தால் கொஞ்சம் கொஞ்சமாக இழந்த குரல் வளத்தை திரும்ப பெற்றிடலாம்.

இதிலே அவள் உழன்று கொண்டிருந்ததால், அவள் ஒன்றை கவனிக்க மறந்திருந்தாள். ஆனால் யது கவனித்து யூகித்து இருந்தான். அவளாக அறிகின்றாளா என்று பத்து நாட்களுக்கு மேலாக அவன் காத்திருந்தும் பலனில்லாது போக, இன்று அவனே சொல்லிட முடிவெடுத்து சொல்லியும் விட்டான்.

அன்று கவுன்சிலிங் செல்ல நேரமாகிவிட்டதால் வேகமாக அங்குமிங்கும் நடந்தபடி கிளம்பி கொண்டிருந்தவளை பிடித்து தன் மடியில் அமர்த்தி, தன்னுடைய கை வளைவில் வைத்துக்கொண்டவன்,

“இனி இப்படியெல்லாம் ஓடி ஆடி எதுவும் செய்யக்கூடாது” என்றான்.

ஏன் எனும் விழி வினா அவளிடம்.

“வீ ஹேவ் பிக்கம் பேரண்ட்.”

சொல்லிவிட்டு குழந்தையே வேண்டாமென்று முன்னர் சொல்லிக்கொண்டிருந்த அவளின் எதிர்வினை என்னவாக இருக்குமென்ற படபடப்புடன் அவளை ஏறிட்டான்.

**************

கட்சிக்குள்ளேயே பெரும் சலசலப்பு எழுந்தது.

சேத்தன் முதல்வராக அமர்த்தப்படுவதற்கு முன்னர் ஒப்புக்கொண்ட மேனன், இப்போது தனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு பிரச்சனை செய்யத் தொடங்கியிருந்தார்.

அதுமட்டுமில்லாது சேத்தன் முதல்வர் என்றால், நாங்கள் எதிர் கட்சியில் இணைந்து விடுவதாக பூச்சாண்டி காண்பித்தார்.

மேனன் மற்றும் அவருடன் துணை நிற்கும் அமைச்சர்கள் யாவரும் எதிர்கட்சிக்கு சென்றாலும், யதுவின் கட்சி தான் ஆட்சியில் இருக்கும். இருப்பினும் இக்கட்சி இப்படி உடைந்து போவது வெளியில் தெரிந்தால், கட்சியின் இத்தனை வருட மதிப்பும் மரியாதையும், பெயரும் புகழும் அல்லவா தகர்க்கப்படும். கேள்விக்குறியாகும்.

மேனனின் விளையாட்டில் ஜார்ஜிற்கு பயம் உண்டானது.

அச்சுதன் இக்கட்சியை ஆரம்பித்த நாள் தொட்டு ஜார்ஜ் இதிலிருக்கிறார். எப்போதுமே கட்சி இரண்டாக இப்படி பிளந்து நின்றதில்லை. அச்சுதனும் சரி, உண்ணியும் சரி இப்படியொரு சூழலை வரவிட்டதில்லை.

ஜார்ஜ் மேனனிடம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் மேனன் தன் பிடியில் நிலையாக நின்றார்.

“அன்னைக்கு உன் சம்மதமும் கேட்டுதானே சேத்தன் பதவியேற்றார். மாதங்கள் பல கடந்து இப்போ வந்து மறுப்பு தெரிவித்தால் என்ன செய்றது?” என்று ஜார்ஜ் காட்டமாகக் கேட்க,

“அப்போ எனக்கும் அவனுக்கும் சமவிகிதத்தில் தானே புள்ளிகள் இருந்தன. கொஞ்சநாள் போனதும், நீ இந்த சீட்டில் உட்கார்ந்துக்கோ. இப்போ நான். அடுத்து நீயென்று மாற்றி மாற்றி முதல்வராக இருந்து கொள்ளலாம் என்று சேத்தன் சொன்னதால்தான் அன்னைக்கு ஒத்துக்கிட்டேன். அதான் ஒரு வருஷம் நெருங்கப்போகுதே. இப்போ நானிருக்கிறேன்” என்றார் மேனன்.

“உங்க இஷ்டத்துக்கு ஏறி ஏறி இறங்க இதென்ன குருவாயூர் கோவில் படிக்கட்டுன்னு நினைச்சீங்களா? முதலமைச்சர் சீட்டுடா. உங்களுக்குள்ள இப்படியொரு ஒப்பந்தம் போட்டிருக்கீங்கன்னே இப்போ தானே எங்களுக்குத் தெரியும். யாரைக்கேட்டு இப்படியொரு திட்டம் போட்டிங்க. கட்சியின் பொதுச்செயலாளர் என்கிற முறையில் என்கிட்ட சொன்னீங்களா? இல்லை, கட்சியோட தலைவர் யதுவிடம் தான் கேட்டிங்களா? ஆளாளுக்கு உங்க இஷ்டத்துக்கு முடிவெடுத்து திட்டம் போட, கட்சி எதுக்கு அதுக்கு தலைவன், செயலாளர், தொண்டன்னு உருப்படிகள் எதுக்கு?” என்று தன் கோபத்தையெல்லாம் ஜார்ஜ் கொட்டி கவிழ்த்தார்.

அதுவரை அங்கு நடக்கும் பேச்சுக்களை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி கேட்டுக்கொண்டிருந்த யது, ஜார்ஜ் பேசி முடித்து மூச்சு வாங்கவும்…

“அங்கிளுக்கு தண்ணீ கொடு பாசில்” என்றதோடு, “வயசாகுதுங்களே அங்கிள். எதுக்கு இவ்வளவு கோபம்?” எனக் கேட்டான்.

அதுவரை வாயினைத் திறக்காது நடப்பதற்கும் தனக்கும் சம்மந்தமில்லை எனும் விதமாக அமர்ந்திருந்த சேத்தனை பார்வையால் அளவீடு செய்த யது…

“இன்னைக்கு ஆளாளுக்கு நிறைய பேசிட்டீங்க… நாளைக்கு நான் பேசுறேன். இப்போ எல்லாம் உங்க வேலையைப் பாருங்க” என்றான்.

‘இங்க முதல்வர் நானு. ஆனால் ஆளாளுக்கு நாட்டாமை பண்றானுங்க.’ சேத்தன் மனம் சொல்லிய அதே கணம், அவரின் மற்றொரு நியாய மனம், ‘பெயருக்குத்தான் நீ முதல்வரென்று சொல்லித்தானே உன்னை இந்த இருக்கையில் யது அமர்த்தினான்’ என உண்மையை நினைவூட்டியது.

சேத்தனின் பிடி யதுவின் கையில். அவனை மீறி அவரால் பேசிட முடியுமா என்ன?

முதல்வர் இருக்கையில் அமர்ந்த பின்னர் தான் சொல்வதுதான் சட்டம் என்று சேத்தன் நினைத்திருக்க… அப்படியில்லை… நீ தும்பினால் கூட  என் அனுமதி வேண்டுமென்று ஒவ்வொரு இடத்திலும் நினைவு கூர்ந்தான் யது.

குட்டப்பன் விடயத்தை விநோ ஆளுநர் மாளிகையில் கூட்டம் ஏற்பாடு செய்து சொல்லிய பின்பு, சேத்தன் நம்முடைய கட்சிக்காரனை நாமே எப்படி மாட்டிவிடுவது என்பதற்காக ஜார்ஜூடன் யதுவை நேரில் சந்தித்து பேசிட…

“அய்யோடா… எண்ட சி.எம் அங்கிள்… ஈ சீட்டில் நீங்க இருக்கான் முன்பு ஞான் சொன்னது ஓர்மையில்லே? இது எண்டே சீட்டானு, சி.எம் அங்கிள். ஞான் நிங்களுக்கு ஃப்ரீயாயிட்டு வாடகைக்கு கொடுத்ததானு” என்று இதழில் புன்னகையோடு விழியில் ஏளனத்தோடும் நினைவூட்டிய யது, “நீங்களே சி.எம் ஆனு எண்ட சி.எம் அங்கிள்… ஆனா நோக்கியோ” என ஒற்றை புருவத்தை உயர்த்தியவன், “ஆட்சியும் அதிகாரமும் என் கையில் தான்” என்பதை நேரடியாகவே சொல்லி அவரின் அதிருப்தியை பெற்றிருந்தான்.

(ஓர்மையில்லே – நினைவில்லையா?)

சேத்தனும் குட்டப்பனும் நண்பர்கள் என்பதை சில நாட்களுக்கு முன்பு அறிந்த யது… உமரின் இறப்பில் குட்டப்பனின் மீது சந்தேகம் இருப்பதால், அவருக்கு சாதகமாக சேத்தன் பேச வந்ததும், அவருக்கும் இதில் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தினாலேயே நேரடியாக உண்மையை கூறியிருந்தான்.

உண்ணியின் இறப்பில் உள்ள மர்மமும் விலகிடாது இருக்க… எங்கு திரும்பினாலும் சுவற்றில் முட்டிக்கொள்ளும் நிலையாக ஆரம்ப புள்ளியிலேயே வந்து நின்றிட, பார்க்கும் யாவரின் மீதும் யதுவுக்கு சந்தேகம் வந்தது.

“நம் கட்சி ஆளாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதுதான் நமக்கும் கட்சிக்கும் நல்லது” என்று கூறி இருவரையும் அனுப்பி வைத்தவன், குட்டப்பனால் விநோவுக்கு நேர்ந்த அனர்த்தத்திற்கு பின்னர் அவரின் நடவடிக்கைகள் அனைத்தயும் ஒன்றுவிடாது கவனிக்கத் துவங்கியிருந்தான்.

குட்டப்பன் தன்னுடைய அரசியல் பலத்தை வைத்துதான், பல தீய செயல்களை செய்து வருகிறார் என்பதை கண்டுகொண்ட யது அவரின் தொகுதியில் அவரால் நடந்திருக்கும் முறைகேடுகளை வைத்து, அவரை பதவியிலிருந்து நீக்கியது மட்டுமல்லாது, கட்சியிலிருந்தும் விலக்கியிருந்தான்.

“இது ஆரம்பம் தான். குட்டப்பனில் தொடங்கியிருக்கும் இந்த செயல், ஒவ்வொரு தொகுதியிலும் தொடரும்” என்றவன், மேலும் தகுதியில்லாத சில அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து, அத்தொகுதிகளின் இடைத்தேர்தலில் அரசியலில் விருப்பமுள்ள தங்களது கட்சியின் இளைஞர் அணியில் திறமையுள்ள இளம் வயதினரை நிற்க வைத்து வெற்றியும் கண்டான்.

யதுவிடம் இத்தகைய அதிரடியை எதிர்பார்க்காத மற்ற அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்… அடுத்து எங்கு தங்கள் மீது கை வைத்து விடுவானோ என்று பயத்தில் தங்களுடைய வேலைகளை அதிவேகத்தில் சரியாக செய்திட… யதுவின் ஆட்சி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

சேத்தன் முதல்வராக இருந்தாலும் அனைத்தும் யதுவின் செயல்பாட்டினால் தான் நடக்கிறது என்பதை அறிந்த மேனன்… இந்நிலையில் தான் முதல்வராக இருந்தால் கிடைக்கும் நற்பெயர் யாவும் தனக்குத்தான் என்று எண்ணியே அன்று சேத்தனுக்கு விட்டுக்கொடுத்த பதவியை இன்று தனக்கு தக்கவைத்துக்கொள்ள, சிலரை தன்னுடன் சேர்த்துக்கொண்டு பிரச்சனை செய்கிறார்.

இதற்கு தீர்வு நாளை சொல்கிறேன் என்று யது சொல்லிய நிலையில்…

மேனனுக்கு அப்படி என்ன முடிவு அவன் எடுப்பதாக இருக்குமென்ற ஆர்வம் அதிகமாகிட அன்று இரவு யதுவை சந்திப்பதற்காக முன்னறிவிப்பு மற்றும் முன்பதிவு எதுவுமின்றி தனித்து யதுவின் இல்லம் வந்திருந்தார்.

   

error: Content is protected !!
Scroll to Top