நேச நெஞ்சங்கள் 47

உயிர் உறை 47

மொழி 10

“வீ ஹேவ் பிக்கம் பேரண்ட்.”

சொல்லிய யதுவிற்குள் சிறு நடுக்கம் இருக்கத்தான் செய்தது. அவளின் பதிலுக்காக உயிரை கையில் பிடித்துக்கொண்டு அவளின் முகம் பார்த்திருந்தான். அவனின் முகத்தில் அப்படியொரு எதிர்பார்ப்பு.

எங்கு ஷா மட்டும் போதுமென்று மீண்டும் தொடங்கிவிடுவாளோ அல்லது தன்மீது நம்பிக்கையற்ற சொல்லினை உதிர்த்துவிடுவாளோ என்கிற பயம் அவனுள்.

அதெல்லாம் வீண் எனும் விதமாக,

“நிஜமாவா?” என்று தலையசைத்து தன் வயிற்றில் கை வைத்து விழி மொழி பேசியவள், அவனின் கண்கள் ஆமெனும் விதமாக அழுந்த மூடிய பதிலில் அவனது மடியில் அமர்ந்திருந்தவள் கணவனின் கழுத்தினை இரு கரங்களாலும் இறுக்கிக் கட்டிக்கொண்டு அவனது இரண்டு கன்னங்களிலும் அழுத்தமாக முத்தங்கள் பல வைத்தாள்.

வேண்டாமென்ற மனம் கிடைக்கும் சமயம் வேண்டுமென்று ஏற்க சிறு கணமாவது விரும்பும். அத்தோடு அன்று யது கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் மற்றும் கவுன்சிலிங்கினால் கொஞ்சம் தெளிந்து இருப்பவளால் ஷா என்று மட்டும் நினைக்க முடியவில்லை.

குழந்தையை பற்றியும் கவுன்சலிங்கின் போது எடுத்துரைக்கும்படி யது மருத்துவரிடம் கேட்டுக்கொண்டிருக்க… அந்த வகையிலும் ஓரளவு சிகிச்சை பெற்றிருந்தவளால், முன்பு போல் நமக்கென்று குழந்தை வேண்டாம். ஷா மட்டும் போதுமென்று சொல்ல முடியவில்லை.

இருவரை பொறுத்தமட்டில் ஷா அவர்களின் மூத்த மகள். அதென்றும் மாறாது என்கிற எண்ணம் யது ஷாவின் மீது காட்டும் பாசத்தால் அவளுள் ஆழ வேரூன்றியிருக்க… தங்களின் மகவின் வருகையை சந்தோஷமாகவே வரவேற்றாள்.

“நிஜமாவா… எனக்கு ஏன் சிம்டம்ஸ் எதுவும் தெரியல?”

வேகமாக எழுதிகாட்டி வினவியவளின் நெற்றியில் முட்டியவன், “பிரக்னென்சி சிம்டம்ஸ் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காதுடி என் மக்கு ப்ரீயே” என்றான்.

அந்நொடி அவளின் கண்களில் இதுவரை கண்டிராத காதலை யது உள்வாங்கினான்.

ஒவ்வொரு நொடியையும் மனைவியை தன் நெஞ்சில் மலர் போல் தாங்கினான்.

ஆரம்பித்த கவுன்சிலிங்கை இதனைக்கொண்டு பாதியில் நிறுத்திட வேண்டாமென்று கூறியவன், தினமும் அவளுடன் தானும் சென்று வந்தான். அவளுக்கான ஒரு மணி நேரத்தில், காரிலேயே காத்திருப்பான்.

கர்ப்பகால பரிசோதனைகளுக்கும் சரியாக அழைத்துச்சென்று, மருந்துகளை தானே உட்கொள்ள வைத்தான்.

தினமும் மாலை தோட்டத்தில் அவளுடன் சேர்ந்து நடந்திட எங்கிருந்தாலும் வீடு வந்துவிடுவான்.

ஷாவிடமும் உனக்கு குட்டி தங்கையோ, தம்பியோ வரப்போகிறார்கள் என்று சொல்லி, அவளையும் வரப்போகும் புதுவரவை மனதால் ஏற்க வைத்திட சின்ன சின்ன நிகழ்வுகளையும் அவளிடம் பகிர்ந்துகொண்டான் யது.

முதலில் ஷாவிடம் சொல்ல பாவனா பயந்தாலும், இதுநாள்வரை தனக்கென்று இருக்கும் உறவில், அன்பில் பங்கு கொள்ள மாற்றொரு ஆள் வருகிறது என்றால் சட்டென்று அதனை ஏற்க முடியாதது என்பது அனைவரிடமும் உள்ள பொதுவான இயல்பு தான். அதனை ஷா போட்டி பொறாமையாய் பார்த்திடாது, அன்பு பாசமாய் பார்த்திட வேண்டுமென்று யது எடுத்துக்கொண்ட மெனக்கெடல், குழந்தை விடயத்தில் எதுவாக இருந்தாலும் ஷாவை முன்னிறுத்தி, அவள் விருப்பத்திற்கு செய்வதென்று, பிறக்காத குழந்தையின் மீது ஷாவின் மனதில் நேசத்தை விதைத்திருந்தான். அதனால் இப்போது பாவனாவும் குழந்தையின் அசைவு, துடிப்பு என்று அனைத்தையும் ஷாவுடன் சந்தோஷமாக பகிர்ந்து கொண்டாள்.

ஷாவையும் பரிசோதனையின் போது அழைத்துச்சென்று மானிட்டரில் குழந்தையின் உருவம் காட்ட, அவளிடம் அத்தனை ஆர்ப்பரிப்பு, மகிழ்ச்சி.

வீட்டிற்கு திரும்பும் போது,

“அச்சா, பேபி என்னைவிட குட்டியா இருக்கு. அம்மா வயித்திலிருந்து வெளிய வந்ததும் நான் பத்திரமா பார்த்துப்பேன். அ, ஆ’லாம் சொல்லிக்கொடுப்பேன். என்னோட சாக்கி, பொம்மையெல்லாம் கொடுப்பேன்” என்று யதுவின் மடியில் அமர்ந்து ஷா துள்ளலோடு சொல்லிட… யதுவை விட பாவனாவுக்குத்தான் அத்தனை சந்தோஷமாக இருந்தது. சொல்லப்போனால் நிம்மதியாக இருந்தது.

எதை நினைத்து பயந்து குழந்தையே வேண்டாமென்று தன்னுடைய தாய்மையையாயே மறுத்தாளோ அதை யது ஒன்றுமில்லாமல் செய்திருந்தானே.

முகுந்தன் கார் ஒட்டிக்கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாது, யதுவின் புஜத்தினை கோர்த்து பிடித்தவள் அவனது தோளில் காதலாக சாய்ந்து கொண்டாள்.

நாட்கள் செல்ல… கவுன்சிலிங் முடிந்து பேச்சு பயிற்சிக்கு வீட்டிற்கே தெரபிஸ்ட் வரவழைத்து பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்திருந்தான் யது.

எவ்வளவோ முயற்சித்தும் பாவனாவால் பேசிட முடியவில்லை.

மீண்டும் மருத்துவரை சந்தித்து அனைத்து பரிசோதனைகளும் செய்து பார்க்க…

“எல்லாம் நார்மலா இருக்கு. ஒருவேளை அதிர்ச்சியில் போன பேச்சு, திரும்பவும் அவங்க மனதையும், மூளையையும் ஒன்றாக அதிர்ச்சிக்குள்ளாக்கும் நிகழ்வை சந்திக்கும் போது மீண்டு வரலாம்” என்றார்.

‘அப்படியொரு நிகழ்வு தானாக நடந்தால் தான் உண்டு’ என நினைத்த யது மௌனமாக இருக்க…

“அவங்களுக்கு இது எட்டாவது மாதம் தானே?” எனக் கேட்டார் மருத்துவர்.

யது ஆமென்றிட…

“உங்க மனைவி பேசிடுவோன்னு ரொம்ப எதிர்பார்த்திருப்பாங்க போல… இப்போ அது நடக்கலன்னதும் கொஞ்சம் கொஞ்சமா அழுத்தத்துக்கு போறாங்க. இது டிப்ரஷனில் முடியும். இப்போ அவங்க இருக்கும் நிலைக்கு மன அழுத்தம் ஆபத்தானது பிரசவத்தை சிக்கலாக்கிடும். திரும்ப அவங்களுக்கு கவுன்சலிங் கொடுக்க வேண்டியதாகிடும். அதனால் பேச்சு பயிற்சியை கொஞ்சம் ஒத்தி வைப்போம். குழந்தை பிறக்கட்டும். கொஞ்சம் கேப் விட்டு ஸ்டார்ட் பண்ணலாம்” என்றார்.

“ஆரம்பத்திலே பேச்சு பயிற்சி பெற்றிருந்தால் சுலபமாக சரி செய்திருக்கலாம். அதிக இடைவெளி, அத்தோடு அவங்களுக்கு இயல்பா வரவேண்டும். நிச்சயம் ஒரு அதிர்ச்சியில் அந்த இயல்பு நிலை தானாக வரலாம்” எனக்கூறினார்.

மருத்துவருக்கு சரியென்று சொல்லி வந்தாலும், இதனை பாவனாவிடம் எப்படி சொல்வதென்ற தயக்கம் யதுவிற்கு இருக்கத்தான் செய்தது. இருப்பினும் சொல்லித்தானே ஆக வேண்டும்.

மெல்ல பாவனாவிடம் “குழந்தை பிறந்த பிறகு பயிற்சியை வைத்துக்கொள்ளலாம். இந்தநேரத்தில் நீ அதிக சிரமம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அது உனக்கும் குழந்தைக்கும் நல்லதில்லை” என்று பாதி மறைத்துக் கூறினான்.

குழந்தை என்றதும் பாவனாவும் அரை மனதாக சம்மதம் தெரிவித்தாள்.
   
என்னதான் யதுவிடம் திடமாக சம்மதித்து விட்டாலும், தன்னால் திரும்ப பேசிடவே முடியாதா என்ற பயம் மனதில் பதியத் துவங்க, பிரசவ நேரத்தில் எதிர்மறை எண்ணம் வேண்டாமென்று முயன்று விரட்டியடித்தாள்.

மனைவியின் மனப்போராட்டம் கணவனாய் யதுவும் அறிந்தே இருந்தான்.

அமைதியாய் இருக்கும் மனம் சாத்தானின் உறைவிடம். தேவையில்லாதவற்றை சிந்திக்கத் துவங்கும். அதனால் பாவனாவை ஒரு நொடியும் சும்மா இருக்கவிடாது, நல்ல நல்ல புத்தகங்கள் கொடுத்து வாசிக்க வைத்தான். இனிமையான இசையை கேட்க வைத்தான். காலை நேரங்களில் தானே யோகா கற்றுக்கொடுத்தான். அவளுக்காக தன்னுடைய ஜிம் பயிற்சியை விடுத்து தானும் யோகா செய்தான். அவளுடன் இருக்கும் தருணங்களில் தன்னுடைய கைவளைவிலேயே வைத்துக்கொண்டு பிறக்கப்போகும் குழந்தையைப்பற்றிய ஆசைகளை அதிகம் பேசினான். அவளை பேச வைத்தான். ஷாவுடன் அதிக நேரம் செலவழிக்கச் செய்தான்.

மனதால் அவளை உற்சாகமாக வைத்துக்கொள்ளும் வழிகள் அனைத்தையும் செய்தான்.

இரவில் அவனைவிட அவளின் தேடல்கள் தான் அதிகம் இருக்கும். புரிந்துகொண்டு செயல்பட்டான். மொத்தத்தில் மனைவிக்காக தன்னுடைய மொத்தத்தையும் அவளின் பாதங்களில் சேர்ப்பித்தான்.

ஒன்பதாவது மாதம் எளிமையான முறையில் வீட்டிலேயே மிக முக்கியமானவர்களை மட்டும் அழைத்து வளைகாப்பு செய்தான்.

வளைகாப்பிற்கு துருவன், கோகிலா, பூரணி மூவரும் வந்திருந்தனர். விநோதனின் இறப்பில் துவண்டிருந்தவர்களை மனமாற்றத்திற்காகக் கட்டாயப்படுத்தி வரவழைத்திருந்தான் யது.

அன்று தான் பாசில் முதன் முறையாக கோகிலாவை காண்கிறான். சில கணங்கள் அவனை கூர்ந்து பார்க்கச் செய்தாள். அவளின் அமைதியான அழகில் லயித்து நின்றான். இருப்பினும் அவள் அவனின் மனதில் அந்நாளில் ஆழப்பதியவில்லையோ. அடுத்தடுத்த நாட்களில் கோகிலாவை பாசில் மறந்தேவிட்டான்.

அதற்கு கட்சியில் நடக்கும் உட்கட்சி பூசல் மற்றும் உண்ணி மற்றும் உமரின் இறப்பிற்கான தேடலில் அவனும் யதுவும் தங்களை மூழ்கடித்துக் கொண்டிருந்ததால் இருக்கலாம்.

யதுவிற்கு தெரிந்துதான் இருந்தது மேனன் கிட்டத்தட்ட ஒரு வருடமாக அமைதியாக இருப்பது, எதற்கோ பாய்வதற்கு என்று.

அதேபோல் மெல்ல மெல்ல கட்சியின் ஆட்களை தன்பக்கம் திசை திருப்பிக் கொண்டிருந்தார்.

அடுத்தநாள் பதில் சொல்கிறேனென்ற யது, எதுவாக இருந்தாலும், எப்போதாக இருந்தாலும் மேனனே ஆரம்பிக்கட்டுமென்று யது தன் கவனத்தை மட்டும் அவரின் மீது பதித்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

பாவனாவிற்கு இன்னும் இரு வாரங்களில் பிரசவ தேதி அறிவித்திருக்க… எப்போது வேண்டுமானாலும் வலி வரலாம் என்று மருத்துவர் சொல்லியிருந்தார்.

ஆதலால் முடிந்தளவு தொகுதி வேலைகளை முடித்து தினமும் விரைந்து இல்லம் வந்திடுவான்.

அன்றும் மேனனின் விவாதத்திற்கு நாளை முடிவு சொல்வதாக தெரிவித்தி கட்சி ஆட்களிடையே எழுந்த சலசலப்பை தற்காலிகமாக ஒத்தி வைத்து வீடு வந்திருந்தான்.

ஷாவுடன் சிறிது நேரம் செலவழித்தவன், இரவு உணவிற்கு பின் பாவனாவை அழைத்துக்கொண்டு தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தான்.

ராதாம்மா ஷாவை உறங்க வைப்பதாகக்கூறி படுக்கை அறைக்குச் சென்றுவிட்டார்.

பாவனா அமைதியாக யதுவின் தோள் சாய்ந்து மெல்ல நடந்து கொண்டிருந்தாள். எப்போதும் பாவனா தான் குழந்தையைப்பற்றி ஏதேனும் யதுவிடம் கேட்டுக்கொண்டிருப்பாள்.

சில தினங்களாக அவளிடம் குடிகொண்டிருக்கும் மௌனம் யதுவை யோசிக்க வைத்தது.

“மேடம் ரொம்ப சலைன்ட் ஆகிட்டிங்க?”

சொல்லிய யதுவை நிமிர்ந்து பார்த்தாள்.

வழக்கம்போல் அவளின் விழி மொழியை வாசித்தவனுக்கு அவளின் அமைதிக்கான காரணம் புரிந்தது.

“டெலிவரி நினைச்சு பயப்படுறியாடாம்மா?”

அவளின் முகம் ஆமென்று காட்டியது.

“லேபர் வார்டில் கூட உன் பக்கத்திலே நானிருப்பேன். உனக்கு எப்போலாம் பயமா இருக்கோ, அப்போலாம் நீயென் கையை இப்படி இறுக்கமா பிடிச்சிக்கோ” என்று சொல்லியதோடு அவளது கையினை பிடித்தும் கொண்டான்.

சில அடிகள் நடந்திருப்பர். அங்கிருந்த மேடையில் அமர்ந்தனர்.

“உனக்கு வலி வந்த உடனே என்கிட்ட சொல்லிடனும் பேபி” என்றவன், “ஆமாம் எப்படி சொல்லுவ?” எனக் கேட்டவனுக்கு, வலிக்கும் போது எழுதிகாட்டவோ, அலைப்பேசி வாயிலாக தெரிவிக்கவோ அவளால் எப்படி முடியும் என்ற கேள்வியே இப்போதுதான் அவனுக்குத் தோன்றியது.

அவளால் சிறு ஒலியையும் குரல் வழி எழுப்ப முடியாதல்லவா?

நெற்றியிலேயே தட்டிக்கொண்டான்.

யதுவின் தனக்கான யோசனையை கண்டவளுக்கு, அந்நொடி தன்னுடைய குறை பூதாகரமாகத் தெரிந்தது.

யதுவிற்காக தனக்குள் மறைத்துக் கொண்டாள். அது எத்தனை அழுத்தத்திற்குள் தன்னை கொண்டு செல்லுமென்று அவள் அறியவில்லை.

“என்னம்மா?” அவளின் முகம் பார்த்து வினவிய யது, “இதுக்கு எதாவது வழி யோசிப்போம்” என்றான்.

‘நந்து’ மெல்ல உச்சரிக்க முயன்றாள். வாய் மட்டுமே அசைந்து, நா அவனது பெயரை உச்சரித்தது. ஆனால் ஓசை காற்றளவிலும் எழும்பவில்லை. நெஞ்சம் வெதும்பியது. தன்னிலை அவளுக்கே கழிவிறக்கம் கொண்டு மனதால் துவண்டாள்.

“டைம் ஆகிருச்சுடா. தூங்கப்போகலாம்” என்று யது பாவனாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் செல்ல, வாயிலிலே முகுந்தன் தயக்கமாக நின்றிருந்தார்.

“நீங்க இன்னுமா வீட்டுக்கு போகல?” வினவியவன் முகுந்தனின் பார்வை பாவனாவின் மீது படிய, புரிந்து கொண்டவனாக அவருக்கு கண்காட்டிவிட்டு மனைவியை படுக்க வைத்து, அவளின் காதில் ஹெட்போன் மாட்டிவிட்டு இதமான இசையை கசிய செய்து, அவள் கண்கள் மூடியதும் முகுந்தனைத்தேடி வெளியில் வந்தான்.

யது வெளியில் வருவதற்காகக் காத்திருந்த முகுந்தன், அவன் அருகில் வருமுன்னே யதுவை நோக்கி வேகமாக நெருங்கினார்.

“எதுக்கு இவ்வளவு பதட்டம் ஏட்டா” என்ற யது, “விடயம் ரொம்ப பெருசோ?” என்று வினவினான்.

“அந்த பெயின்டிங்ஸ், சுவர் யார் வீட்டில் பார்த்தன்னு நினைவு வந்திடுச்சு தம்பி” என்றவர், யார் வீடு என்பதையும் சொல்ல, யதுவிடம் ஆழ்ந்த யோசனை. ஆராயும் முகபாவம்.

சில நிமிடங்களில் நிச்சயம் அவரல்ல எனும் முடிவுக்கு வந்திருந்தான். அதற்கு அவனிடம் வலுவான காரணமிருந்தது.

“தேன்க்ஸ் ஏட்டா” என்றவன், அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.

அறைக்குள் வந்தவன் உறக்கம் வராது நடந்துகொண்டிருந்தான். அந்நேரம் விநோவிடமிருந்து அழைப்புவர தனக்குள்ளிருக்கும் விடயங்களை அவனிடம் பகிர்ந்துகொண்டான்.

“கண்டுபிடிச்சிட்டோம்… நெருங்கிட்டோம் அப்படின்னு நினைக்கிறதுக்குள்ள, அவங்க இருக்காதுன்னு முடிவாகிடுது விநோ. கட்சியில் ஒரு முடிவெடுத்திருக்கேன்” என்றவன், கட்சியில் மேனன் உருவாக்கிய உட்கட்சி பூசலையும் கூறி, “எந்தப்பக்கம் திரும்பினாலும் பிரச்சனைடா விநோ. பேசாம நானே அந்த சீட்டில் உட்கார்ந்துக்கலாம் போல” என்று பேச்சுவாக்கில் அவன் சொல்லிட

“சூப்பர். பண்ணிடு” என்று விநோ பட்டென்று சொல்லியிருந்தான்.

“ஹேய்… என்ன விளையாடுறியா?” எனக் கேட்ட யது, “அல்ரெடி இருக்குற பிரஷரே தாங்க முடியல, இதுல அந்த ஹாட் சீட் பிரஷரெல்லாம் என்னால் முடியாது விநோ. ஆள விடு” என்றான்.

“நீ இந்த வொர்க் லோடுக்காக பயந்து சி.எம் சீட் வேணான்னு சொல்லல… கட்சி ஆளுங்களோட ஆளாக இருந்து உண்ணி அங்கிள் சாவுக்கு யாரு காரணங்கிறதை கண்டுபிடிக்கத்தான் வேணான்னு சொன்னன்னு எனக்குத் தெரியும்” என்ற விநோ…

“நாளைக்கு நீ என்ன பேசப்போறன்னு தெரியல. ஆனால், நீ முதல்வராகுற” என்றான் கட்டளையாக.

யது எதுவும் பேசிடாது அமைதியாக இருந்தான்.

“உரியவன் வந்துட்டா வாலெல்லாம் ஆடாதே! சுருட்டிக்கிட்டு தலை சொல்றதை கேட்டுதான் ஆகணும். சேத்தன் கிட்ட எனக்கு அந்த சீட்டை குடுன்னு கேட்ட மாதிரி உன்கிட்ட மேனனால் கேட்க முடியாது. கட்சியோட தலைவர் நீ. சொல்லப்போனால் அச்சுதன் தாத்தா இடத்தில் நீ. கட்சியோட நிர்வாகியை எதிர்க்க, கட்சிக்குள் தைரியம் வருமா என்ன?” என்ற விநோ, “என்னுடைய யதுக்கு சீரியஸ் மோட் செட் ஆகாதே! எதையும் கூலா ஹேண்டில் பண்ற யதுவை மனசில் வச்சு யோசி. நான் சொல்றது சரிவரும்” என்றான்.

யதுவிற்கும் விநோ சொல்வது சரியாகத்தான் இருந்தது.

“அப்புறம் உன்னை அந்த சீட்டில் உட்கார வைக்க காரணம், கட்சி பிரச்சனையை சரிசெய்ய கிடையாது” என்ற விநோவின் பேச்சில் யது குழம்பினான்.

“என்ன சொல்ற விநோ? இப்போ நான் சிஎம் சீட் ஏத்துக்கவா வேணாவா?” என்று புரிந்தும் புரியா நிலையில் வினவினான் யது.

“ஏத்துக்குற இல்லை. எடுத்துக்குற. அது உனக்கான இடம். உரிமையானதும் கூட.”

“விநோ…”

“நான் இங்க வந்த வேலையில் முக்கியமான கருப்பு ஆடே அந்த குட்டப்பன் தான், இது என்னுடைய டவுட் தான். ஆனால், அவனாக இருக்கும்பட்சத்தில் எந்தவொரு அரசியல் இடையூறும் இல்லாம நாம அவனை கைது செய்யணும் அப்படின்னா, நீ முதல்வராகத்தான் இருக்கணும். முதல்வரே தலையிடும்போது குட்டப்பனை காப்பாற்ற மற்ற அரசியல் ஆட்கள் யாரும் முன்வர மாட்டாங்க. எடுத்த காரியத்தை முழுசா முடிக்கணும். அதுக்கு இன்னும் ஒரு வருஷம் கூட ஆகலாம். ஆனால் அதற்குள் தலைவனா நீ சிலவற்றை சரி செய்திருக்கணும். அவனுக்கும் மேல ஒருத்தன் இருக்கான்” என்றான் விநோ.

“நான் சிஎம் சீட்டில் உட்கார்ந்திட்டா, என்கிட்ட யாரும் ஃபிரியா மூவ் பண்ணமாட்டாங்கடா. அப்புறம் எப்படி அச்சன், உமர் அங்கிள் டெத் ரீஸன் கண்டுபிடிக்க?” என்று கேட்டான்.

உண்மையில் யது தெளிவான நிலையில் தற்போதில்லை. முகுந்தன் யாரென்று சொல்லும் வரையிலும் கூட உண்ணியின் இறப்பிற்கு அவர்கள் தான் காரணமாக இருப்பார்களோ என்று நினைத்திருந்தவன், முகுந்தன் சொல்லிய பின்னர் அவராக இருக்க வாய்ப்பில்லை என்று நூறு சதவீதம் உறுதியாக நம்பினான். அடுத்து… வேறு யார்? என்ற கேள்வியில் முற்றிலும் தலும்பிய நிலையில் தத்தளிப்பவனுக்கு, எவ்வளவு முயற்சி செய்தும் சிறிதும் பாவனாவால் பேச முடியவில்லை என்னும் வருத்தமும் அழுத்தத்தை மனதிற்குள் கூட்டியிருக்க, அவனால் விநோ என்ன சொல்ல வருகிறான் என்பதை சரியான கோணத்தில் கிரகிக்க முடியவில்லை. அதனாலே மீண்டும் மீண்டும் விநோவின் அர்த்தம் விளங்காது வினவினான்.

“விநோ…?”

“நேரில் இருந்தன்னா அறைஞ்சிருவேன் ராஸ்கல். பொறுமையா விளக்கம் கொடுத்திட்டு இருக்கேன். கேட்டுட்டு விநோ, விநோன்னு புரியாத மாதிரி ரியாக்ட் பண்ற? என்னதாண்டா உன் மண்டைக்குள்ள ஓடுது?” என்ற விநோ,

“முதல்ல பாவனா விஷியத்தை கொஞ்சம் ஒத்தி. அவள் சீக்கிரமே பேசிடுவாள். உன் முயற்சிக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். நம்பிக்கையா இரு. அவ்வளவு தான். ஒரே நேரத்தில் எல்லாத்தையும் போட்டு உருட்டிக்காத!” என்றான்.

யதுவிடம் மீண்டும் அமைதி.

“சரி நீ எப்படி சேத்தன் இல்லைன்னு கன்ஃபார்ம் பண்ண?”

யதுவை முற்றும் முழுதாக ஒரே விடயத்தில் கவனத்தை பதிக்க வைக்க, அவனின் எண்ணம் அறிந்த போதும், தனக்கு தெரியாததுபோல் கேட்டிருந்தான்.

முகுந்தன்… அது சேத்தனின் வீடு என்றும், அவரது மகள் சைக்காலஜி மாணவி என்பதால் ப்ரோஜெக்ட் விடயமாக, வீட்டிற்கு வரும் பலதரப்பட்ட மனிதர்களின் ரசனையை அறிவதற்காக, பல வகையான பெயின்ட்டிங்ஸை வீடு முழுக்க மாட்டி வைத்திருப்பதாகவும், அந்த சுவர் தான் பாவனா காட்டிய படத்தில் இருந்ததும் என்று சொல்லிட, “இது எப்படி இத்தனை விளக்கமா உங்களுக்குத் தெரியும்?” எனக் கேட்டான் யது.

“ஐயா வீட்டுக்குள் போனதும், மொபைலை காருக்குள்ளே விட்டுட்டு போயிட்டாருன்னு, நான் உள்ள போய் குடுக்கும்போது தான், சேத்தன் ஐயா கிட்ட அந்த பெயின்டிங்ஸ்க்கான காரணத்தை சொல்லிட்டு இருந்தாருங்க” என்றார் முகுந்தன்.

இவற்றை விநோவிடம் கூறிய யது,

“பாவனாகிட்ட முகத்தை காட்டக்கூடாதுன்னு தெளிவா இருந்தவன், ஒரு கருப்பு திரையை காண்பித்தோ அல்லது, வீடியோவை ஆஃப் செய்துட்டோ பேசியிருக்கலாம். ஆனால், இவன் தெளிவா அந்த சுவர், அதிலிருக்கும் பெயின்டிங்ஸ் எல்லாம் தெரியுற மாதிரி காட்டியிருக்கான். அப்போ அவனோட எண்ணம், அச்சன் சேத்தனை எதிராளியாக தவறா எண்ணனும். அப்போதானே அவன் ஃபிரியா அச்சனிடம் நெருங்க முடியும். இதை வைத்துதான் சேத்தன் இல்லைன்னு சொன்னேன்” என்றான் யது.

“நீயும் போலீஸ் ஆகிடலாம் போல யது. நல்லாவே அலசி ஆராயுற” என்று யதுவை கேலி செய்து, அவனை சகஜமாக்கிய விநோ…

“நல்லா கவனிச்சு பாரு யது, உண்ணி அங்கிள் சி.எம்’ஆ இருந்தது பிடிக்கமாத்தான் அவரை கொலை செய்ய முயற்சி பண்ணியிருக்காங்க. இப்போ நீ சி.எம் இல்லை. சோ, உன்னை விட்டு வச்சிருக்காங்க” என்றதோடு,

“நீ முதல்வர் பதவியில் உட்காரும் போது ஆபத்து உன்னை கட்டாயம் நெருங்கும். அப்போ அவன் யாருன்னு கண்டுபிடிச்சிடலாம். அதுக்குத்தான் நீ உனக்கான இடத்தை எடுத்துக்கோன்னு சொன்னேன்” என்றான்.

“புரியுது விநோ. இதை நான் யோசிக்காம இல்லை. கட்சி உடைஞ்சிடுமேன்னு பார்த்தேன்” என்றான் யது.

“உடைக்குறது யாரா இருக்கும் யது? கட்சிக்கு தீங்கு நினைக்கும், மக்களுக்கு நல்லது செய்யாம தனக்கு லாபம் பார்க்கும் கூட்டமாகத்தானே இருக்கும். அவர்கள் கட்சியில் இருந்தாலென்ன இல்லைன்னா என்ன? விஸ்வாசத்துக்கும் உண்மைக்கும் நேர்மையா இருக்கணும் நினைக்கிறவங்க நிச்சயம் உன் பின்னால் நிப்பாங்க. உண்ணி அங்கிள் தலைமை திறமைக்கு கட்சியில் பலர் அவரது வழியை பின்பற்றுபவர்களாகத்தான் இருக்கும். கெட்ட எண்ணம் கொண்ட ஒரு சிலருக்காக நீ தயங்காதே!” என்றான்.

விநோவின் பேச்சில் முழுதாக தெளிந்திருந்தான் யது.

“அப்போ எதிரியை சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம் சொல்லு” என்றான் யது.

“கண்டுபிடிச்சிட்டு சொல்லு” என்ற விநோ… “ஒவ்வொரு நொடியும் கவனமா இருக்கணும் யது” என்று அவனின் நலனில் அக்கறை கொண்டு வலியுறுத்தினான்.

“என்னைவிட நீதான் ஒரு பெரிய கூட்டத்துக்குள்ள இருக்க. நீயும் கவனமா இரு” என்ற யதுவிடம்,

யது சொல்லியதை வைத்து பார்த்து, தனது கணிப்பு யாரென்று கூறினான் விநோ.

யதுவின் முகத்தில் சிறு வெளிச்சம்.

“லவ் யூ விநோ.” தன்னுடைய பெரும் பாரம் குறைந்த மகிழ்வில் யது தன்னைப்போல் சொல்லியிருந்தான்.

“பாவனாகிட்ட சொல்லுடா” என்று சிரிப்பினூடே விநோ அலைபேசியை வைத்திருக்க… யது மென்னகையுடன் திரும்ப, பாவனா கணவனை முறைத்தபடி படுக்கையில் அமர்ந்திருந்தாள்.

“எதுக்கு இப்போ லவ் லுக் விடுற?” அவளின் முறைப்பில் கொஞ்சம் ஜெர்க்கானாலும் தைரியமாகவே வினவினான்.

வேகமாக எட்டி அலைபேசியை எடுத்தவள் ஒலிக்கச் செய்தாள்.

“நான் எப்போ முறைச்சலாம் உனக்கு முறைக்கிற மாதிரியே தெரியாதா?” எனக் கேட்டவள்,

“விநோண்ணா உயிரோடதான் இருக்காங்க இல்லையா?” என அழுத்தமாகக் கேட்டாள்.

‘போச்சு… எல்லாம் கேட்டிருக்காள். தூங்கிட்டிருக்கான்னு அலட்சியமா இருந்திட்டனே!’ நெற்றியை தேய்த்தான்.

“கவலாப்படாதீங்க நான் முழுசா கேட்கல. நீங்க விநோன்னு இழுத்தீங்களே அந்த சத்தத்தில் தான் முழிச்சிட்டேன். ரெஸ்ட்ரூம் போயிட்டு வந்து உட்கார்ந்தா ஐயா அவரு பாய் ஃபிரண்டுக்கு லவ் யூ சொல்லிட்டு இருக்கீங்க” என்றவள்,

“வளைகாப்புக்கு வந்த துருவ் உங்களை கட்டிக்கிட்டு எவ்வளவு அழுதாங்க. பூரணி ஆண்ட்டி… அவங்க முகத்தில எத்தனை வருத்தம். மறைக்கிறோமுன்னு உங்களுக்கு குற்றவுணர்வா இல்லையா?” எனக் கேட்டவள், யதுவின் முகத்தில் என்ன கண்டாளோ, அவனின் அமைதியில்… “பயப்படாதீங்க. நான் யாருக்கிட்டவும் சொல்லமாட்டேன்” என்றாள்.

யதுவிடம் பெரும் ஆசுவாசம்.

“ரெண்டு பேரும் ஏதோ பெரிய சிக்கலில் இருக்கீங்கன்னு மட்டும் தெரியுது” என்றாள்.

யது அவளையே பார்த்திருக்க…

“வயித்துல குட்டி நந்துவுக்கு பசிக்குதாம். எதாவது செஞ்சு கொண்டுவாங்க” என்றாள்.

“எதே… நானா?” என்று அதிர்ந்தவன்,

“எனக்கு சுடு தண்ணீ கூட வைக்கத் தெரியாதுடி” என்றான்.

“அது லவ் யூ விநோ சொல்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்.”

“அதுக்காடி… அவன் என் பிரண்ட் பேபி.”

“அப்போ நான் யாரு?”

“என் வைய்ஃப்.”

“என்கிட்ட சொல்லியிருக்கீங்களா?”

“நான் இங்க நினைச்சா உனக்கு கேட்காதா எண்ட ப்ரீயே?” இதயத்தை தொட்டு காண்பித்தான்.

அவளிடம் இப்போது நாணம் குடிகொண்டது. அதை மறைப்பதற்காக மீண்டும் பசிக்குது என்றாள்.

“சொன்னனேடி. எனக்கு தோசை ஊத்தக்கூட வராது.”

“அதுக்காகா நானா இப்போ கிச்சனில் போய் சமைக்க முடியும். உன் பையன் வேற நேரங்காலமில்லாம, வயித்தில் புட்பால் விளையாடுறான். தூங்கவே விடமாட்டேங்கிறான். கால் வேற வலிக்குது நந்து” என்றாள்.

அவள் முகம் சுருக்கிய அழகில் மொத்தமாக அவளிடம் விழுந்தவன் கீழே வந்து ராதாம்மாவை எழுப்பலாமா என்று எழுந்த எண்ணத்தை புறம் தள்ளிவிட்டு, ஆப்பிள் கட் செய்து, தேனால் டாப்பிங் செய்தான். ஏற்கனவே ராதாம்மா சுட வைத்து பிளாஸ்கில் ஊற்றி வைத்திருந்த பாலினை தம்பளரில் நிரப்பியவன், இரண்டையும் எடுத்துக்கொண்டு கிச்சனிலிருந்து வெளிவர, கூடத்து இன்டர்காம் ஒலித்தது.

“தம்பி சார், உங்களை பார்க்க நம்ம கட்சி மேனன் சார் வந்திருக்கார்” என்றார் வீட்டின் காவலாளி.

‘இந்நேரத்தில்?’ என்று மணியை பார்த்தவன், ‘மிட்நைட் கிராஸிங்’ என்று தனக்குள் சொல்லியவனாக… “உள்ள அனுப்புங்க அங்கிள்” என்றுவிட்டு, கையிலிருப்பதை பாவனாவிடம் கொடுத்து, உண்டு முடித்து உறங்குமாறு கூறியவன்…

“கொஞ்சம் அபிசீயல் வொர்க் டா. வந்துடுறேன். ஆபீஸ் ரூமில் தான் இருப்பேன்” என்றவனாக மீண்டும் கீழே வந்தவன், கார்ட்ஸ் அனைவருக்கும் கவனமாக இருக்குமாறு தகவல் அனுப்பிவிட்டு வாயில் கதவை திறக்க… மேனனுடன் ஜார்ஜூம் நின்றிருந்தார்.

error: Content is protected !!
Scroll to Top