நேச நெஞ்சங்கள் 48

அத்தியாயம் 48

மொழி 11

வழக்கமான ஆளுமையான தோற்றத்தில், தனக்குரிய இருக்கையில் தோரணையாக அமர்ந்திருந்தார் அம்மாநிலத்தின் முதல்வர் யதுநந்தன்.

ஆம் யது முதல்வர் பதவி ஏற்று இரண்டு நாட்களாகிறது. அன்று விநோ சொல்லியதைப்போல் சேத்தனை தானாக பதவி விலக வைத்தவன், தனக்குரிய இடத்தை தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்திருந்தான்.

அன்றைய நடு இரவு கடந்த நேரத்தில் மேனன் தன்னை பார்க்க வந்திருப்பதாக காவலாளி சொல்லியதும், வீட்டின் பாதுகாப்பிற்காக உடனிருக்கும் பாதுகாவலர்களுக்கு அழைத்து எச்சரிக்கையாக இருக்கும்படி கூறிய பின்பே மேனனை உள்ளே அழைத்திருந்தான்.

உடன் ஜார்ஜ் வருவாரென்று யது எதிர்பார்க்கவில்லை. அப்போது மேனனை எதிர்பார்த்தானா என்றால், நிச்சயமாக. இப்படி அர்த்த ராத்திரியில் வருவாரென்று நினைக்கவில்லை. ஆனால், தனித்து தன்னிடம் பேசிட முயற்சி செய்வாரென்று நினைத்தான்.

யதுவிற்கு மேனனுடன் ஜார்ஜ் வந்திருப்பதை கண்டதும்,

‘இவர் யார் பக்கம்?’ என்று தான் தோன்றியது.

அன்றொரு நாள் குட்டப்பனுக்கு ஆதரவாக சேத்தன் பேசிட வந்தபோது அவருடன் ஜார்ஜ். இன்று மேனனுடனும்.

இதில் யதுவிற்கு புரிந்தது, அவர் அனைவரிடமும் தன்னை நடுநிலமையாகக் காட்டிக்கொள்கிறார் என்று.

அன்று சேத்தன் உடன் வந்ததற்கு பிறகு இன்று தான் ஜார்ஜ் அங்கு வருகிறார்.

“வாங்க அங்கிள், வாங்க மிஸ்டர்… மேனன்.” தன்னுடைய அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றவன்,

“குடிக்க எதாவது ட்ரிங்க்ஸ்?” என்று கேட்க, மேனன் ஆர்வமாக தலையாட்டுவதை தடை செய்த ஜார்ஜ்,

மேனனை பார்த்துக்கொண்டே, “இப்போ வேண்டாம்” என்று மறுத்தார்.

ஜார்ஜிற்கு இந்நிகழ்வு பழக்கமாயிற்றே. அதனால் மீண்டும் ஒருமுறை யதுவின் முன்பு அசடு வழிவதற்கு முன்பு மறுத்திருந்தார்.

“அங்கிள் பழசை மறக்கல போலிருக்கே?” என்ற யது, “மேனன் ஆசையா தலையாட்ட வந்தாரே… நான் போய் கொண்டு வரேன்” என்று யது எழுந்து செல்ல… “வித் ஐஸ்” என்றார் மேனன்.

“டீ, காபிக்கு எதுக்குடா ஐஸ் கேட்குற?”

ஜார்ஜ் பற்களை கடித்தார்.

“என்னது… டீயா?” மேனன் அதிர்ந்தார்.

“யது கேட்ட ட்ரிங்க்ஸ் இதுதான்” என்றார் ஜார்ஜ்.

“அதெல்லாம் எப்போ ட்ரிங்க்ஸ் லிஸ்டில் சேர்த்தாங்க” என்ற மேனனின் முகம் சுருங்கியது.

“ஒழுங்கா யது கொண்டுவரதை குடி” என்ற ஜார்ஜ், “வந்த வேலையை விடுத்து இது அவசியமா?” என்று கடுகடுத்தார்.

“சாரி…” என்றபடி உள் நுழைந்த யது, “ராதாம்மா தூங்கிட்டாங்க, எனக்கு டீ, காபி மிக்ஸ் பண்ணத் தெரியாது. சோ, ஜூஸ்” என்று இருவரின் முன்பும் பிரசர்வேட்டிவ் பழச்சாறு அடங்கிய குவளையை நீட்டினான்.

“எனக்கு இந்நேரத்தில் ஜூஸ் கோல்ட் ஆகிடும் யது” என்ற ஜார்ஜ், “இதையும் சேர்த்து குடிக்கிற!” என்று மேனனின் கையில் தன்னுடையதையும் சேர்த்து திணித்தார்.

“நான் நினைச்ச ட்ரிங்க்ஸ் வேறய்யா!” என்ற மேனனின் முணுமுணுப்பு கேட்ட யது…

“மக்களுக்கு முன் உதாரணமா இருக்க வேண்டிய நாமே அதெல்லாம் பண்றது தப்பில்லையா மேனன்?” என்று அவரை பார்த்து அழுத்தமாக வினவினான்.

“அடுத்து நம் மாநிலத்தில் கொண்டுவரப்போகும் சட்டம் மதுவிலக்கு தான்” என்றான்.

குடித்துக் கொண்டிருந்த பழச்சாறு அவருக்கு புரையேறியது.

அதில் தான் அவர் கொள்ளை லாபம் பார்த்து வருகிறாரே! அதனை எப்படி ஏற்பார்?

“யது…”

“எஸ் அங்கிள்?”

“அதில் நிறைய லாபம் வருதே யது. அரசாங்க செலவுக்கு முக்கிய வரவே அங்கிருந்து தான்” என்றார் ஜார்ஜ்.

“அதுக்காக அதை என்கரேஜ் பண்ண முடியாதே அங்கிள்” என்ற யது, “குடிச்சிக்கோன்னு கடையை நாமளே திறந்து வச்சிட்டு குடிக்காதே, குடி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடுன்னு சொல்றதலா இங்க எதுவும் மாற போவதில்லை. பெண்கள் எல்லாம் இதுக்காக களமிறங்கி போராட ஆரம்பித்த பிறகும் நாம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காம இருப்பது ஆளும் கட்சியில் பதவியில் இருக்கும் நமக்குத்தான் அசிங்கம்” என்றான்.

“இந்த துறை அமைச்சரா நீங்க இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கீங்க மேனன்?” கேட்டவன் கால் மேல் காலிட்டு இருக்கையின் பின் சாய்ந்தான்.

உள்ளுக்குள் ஜெர்க்காகி ஜார்ஜை ஏறிட்டார் மேனன்.

அவர்கள் பேச வந்த விடயமே வேறல்லவா! அதனை மற்றொரு பேச்சாக மாற்றியிருந்தான் யது. அவனின் சாமர்த்தியம் கண்டு ஜார்ஜ் தனக்குள் யதுவை மெட்சிக்கொண்டர்.

“இப்போ அது விஷயமல்ல யது” என்ற மேனன் மேற்கொண்டு எதையோ பேசவர அவரை கைகாட்டி தடுத்திருந்தான் யது.

“என் வயசுக்கு நீங்க பெயர் சொல்லி கூப்பிடுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் என் பதவிக்கு, நாளையே வெளியில் தொண்டர்கள் முன்பு இப்படி அழைத்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள், அதனால் நீங்க…” என்று அவன் இழுக்க,

“சரிங்க தலைவரே” என்று யது சொல்ல வருவது புரிந்தது எனும் விதமாக உடனே அழைத்திருந்தார் மேனன்.

“தலைவரேவா! இது ரொம்ப ஓல்டா இருக்கே. அதோட இதென்னவோ வயசான பீல் குடுக்குது. அதனால், கால் மீ சார்” என்றான்.

“சார்ர்… கட்சியில் இப்படி அழைத்து பழக்கமில்லையே.”

“எதுக்குமே தொடக்கன்னு ஒண்ணு வேணுமில்லையா மேனன். இந்த நல்லதுக்கு நீங்களே ஆரம்பமா இருங்களேன்” என்றவனின் மீது மேனனுக்கு கட்டுக்கடங்காத கோபம் எழுந்தது.

‘இவன் வயசுக்கு என்னை பெயர் சொல்லுவானாம். ஆனால் நான் அவனை சார் சொல்லணுமாம்.’ மனதோடு குமுறினார்.

“அப்புறம்” என்று ஜார்ஜ் பேச்சினை ஆரம்பிக்க…

“அதான் அங்கிள், கூடிய சீக்கிரம் நம்ம மாநிலம் முற்றிலும் மதுவிலக்கு அடங்கிய மாநிலமா மாறனும். அதுக்கான ஸ்டெப்ஸ் நாளைக்கே எடுத்திடுங்க” என்றான்.

ஜார்ஜிற்கு புரிந்து போனது. இறுதிவரை அவன் தங்களை வந்த விடயத்தை பேசவிடப்போவதில்லை என்று. மௌனமாக இருந்துகொண்டார்.

“என்னதான் கட்சியின் தலைவர் நீங்களாக இருந்தாலும், முதல்வர் சேத்தன் தானே. அதனால் அவர் சொல்லும் கட்டளைகளைத்தான் நாங்க ஏற்க முடியும். செய்ய முடியும்” என்றார் மேனன். அடக்கப்பட்ட கோபத்துடன்.

“அப்போ நாளையிலிருந்து நான்தான் சிஎம்.” அலட்டிக்கொள்ளாமல் யது சொல்லிய தோரணையில் மேனனின் கண்கள் அகல விரிந்தது.

அவர் ஒன்று நினைத்து பேசவர, இங்கு அவன் மொத்தமாக ஆட்டத்தையே அல்லவா மாற்றிவிட்டான்.

உடமைப்பட்டவனிடம் நீ உன்னிடத்தை கொடுத்துதான் ஆகவேண்டுமென்று எப்படி கேட்க முடியும். சேத்தனிடம் யது போட்ட ஒப்பந்தம் அறியாது, நாளை என் சார்பாக பேச வேண்டுமென்று கேட்க வந்துவிட்டார். ஆனால் யது அவரை அதைப்பற்றி பேசவே விடாது, அவரின் எண்ணத்திற்கே தீ வைத்திருந்தான்.

“இதென்ன ஆடுபுலி ஆட்டமா? நீ இல்லைன்னா நான், நானில்லை நீன்னு மாறி மாறி உட்கார” என்ற மேனனை பார்த்து நக்கலாக இதழ் பிரித்த யது…

“நேத்து நீங்க சிஎம் சீட் வேணுன்னு ஆர்க்யூ பண்ணிங்களே அப்போ இது தெரியலையா மேனன்” என்றதோடு,

“அங்கிள்… உங்களுக்குத்தான் எல்லாம் தெரியுமே! சொல்லுங்க” என்று மேனனை கை காட்டினான்.

“இது என்னுடைய கோட்டை… இங்கு ஒரு செங்கல் நகர்கிறது என்றாலும் என்னுடைய கண்ணசைவு இல்லாது நடக்காது” என்றான். அத்தனை அடர்த்தி அவனது வார்த்தைகளில்.

உண்ணி போல் விட்டுவிடும் ரகம் இவனில்லை என்பது ஜார்ஜிற்கு அக்கணம் புரிந்தது.

“எனக்கு விட்டு கொடுக்கவும் தெரியும், கொடுத்ததை என்னிடம் வரவழைக்கவும் தெரியும்” என்றவனிடம் மேற்கொண்டு பேச முடியாது இருவரும் கிளம்பியிருந்தனர்.

செல்வதற்கு முன்,

“உன் கணக்கு ஒண்ணும் பிடிபடவே மாட்டேங்குதே யது” என்றார் ஜார்ஜ்.

“என் கணக்கே வேற அங்கிள். பார்முலா எனக்கு மட்டும் தெரிந்தால் போதும்” என்று வழியனுப்பி வைத்தான்.

மேனன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கத்தான் வெளியேறினார்.

அடுத்த நாள் கட்சி அலுவலகம் வந்தவன்,

“இது ராஜா காலம் கிடையாது. வழிவழியா வாரிசுகளே ஆட்சி செய்ய. அப்படி வேண்டான்னு தான் சுழற் முறையில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருத்தரை முதல்வர் சீட்டில் உட்கார வைக்கலாம் நினைத்து எடுத்த முடிவு தான், சேத்தன் இப்போ சிஎம் ஆக அமர்த்தப்பட்டார். ஆனால் தலைவன் ஒருவனாக இருந்தால் தான், போட்டி பொறாமை இல்லாமல் இங்கு எதுவும் செய்திட முடியும் போலிருக்கு. அதனால் நானே அந்த சீட்டில் உட்காரலாம் முடிவு பண்ணிட்டேன். ஆளுநரிடம் பேசிட்டேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் பதவி ஏற்பு விழா. சேத்தன் சிஎம் போஸ்ட் மட்டும் தான் ரிஸைன் செய்றார். அவருடைய அமைச்சர் துறை அவரிடமே” என்றவன் பாசிலை ஏறிட, அவன் சேத்தனிடம் பத்திரம் ஒன்றை நீட்டினான்.

சேத்தன் நிச்சயம் ஒப்புக்கொள்ளமாட்டார். மறுப்பு தெரிவிப்பார் என்று மேனன் எதிர்பார்த்திட, சேத்தன் அமைதியாக அதில் கையெழுத்திட்டு பதவி விலகியது தான் மேனன் உட்பட அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

இம்மாதிரி நேரத்தில் எதிர்த்து ஒரு வார்த்தை பேசிவிடக்கூடாது என்பதற்காகத்தானே அன்று யது சேத்தனிடம் தன்னுடைய விதிகளைக்கூறி கையெழுத்து வாங்கியது.

வழக்கம்போல் ஜார்ஜ் அமைதியாக யதுவின் ஆட்டத்தை பார்த்திருந்தார்.

ஆளுநர் மாளிகைக்கு செல்வதற்கு முன்பு, தன்னுடைய கட்சி அலுவலகத்திற்கே நகரத்தின் அனைத்து மீடியாவையும் வரவழைத்திருந்தான் யது.

“சொந்த விருப்பத்தின் பெயரில் திரு.சேத்தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதால், கட்சியில் உள்ள அனைவரின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நானே முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்கிறேன்” என்று ஒரே பேச்சில், நிருபர்கள் யாவரும் அடுத்தடுத்த கேள்விகள் கேட்க முடியாதபடி வாயடைத்திருந்தான் யது.

மீடியா முன்பு தன்னுடைய எதிர்ப்பை காட்டலாமென்று மேனன் நினைத்திருக்க, அதுவரை சேத்தன் பதவி விலக வேண்டும் அவ்விடத்திற்கு மேனன் வரவேண்டுமென்று அவர் பக்கம் நின்றிருந்த பலரும், யதுவின் பின்னால் நின்றனர்.

மேனனால் முறைக்க மட்டுமே முடிந்தது.

‘தலை இருக்கும்போது வாலெல்லாம் ஆடாது.’ விநோ சொல்லியது அக்கணம் யதுவிற்கு நினைவு வந்தது.

‘விநோ சொல்லியது எத்தனை உண்மை.’

இப்போது மேனன், சேத்தன் என்று பிரிந்து இருப்பவர்கள் யாவரும், உண்ணியின் தலைமையில் ஒன்றாக இணைந்து நின்றவர்கள் தானே! அவரின் மறு உருவமாக யது நிற்கும்போது விட்டுவிடுவார்களா என்ன?

‘கலக்கிட்ட.’ பாசில் விநோவிடமிருந்து வந்திருந்த ஒற்றை வார்த்தை குறுந்தகவலை யதுவிடம் காண்பித்தான்.

யதுவின் மனம் அத்தனை புன்னகை கொண்டது.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் யது முதல்வராக பிரகடனம் எடுத்து தீயாய் தகிக்கும் இருக்கையில் முதலமைச்சர் யது நந்தனாக அமர்ந்திருந்தான்.

ஜார்ஜிடம் சொல்லியது போல் அன்றைய நாளின் மாலை வேளையில், மதுவிலக்கிற்கு ஆதரவாக கையெழுத்திட்டு, தன் கை பட தட்டச்சு செய்யப்பட்ட மின்னஞ்சல்களை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கும் பாசிலின் உதவியுடன் அனுப்பி வைத்தான்.

அவன் எண்ணிய காரியம் ஈடேறுவதற்கு முன்பே, பல பொறுப்புகள் அவனை இவ்விருக்கையில் அமர்த்திவிட்டன.

நெருங்கும் ஆபத்தை உணர்ந்தே கால் வைத்திருக்கிறான்.

அனைத்தையும் முறியடித்து, எதிராளியை கண்டறிந்து தந்தையின் இறப்பின் ரகசியம் அறிந்திடுவானா?

கூடியிருந்த அனைத்து தலைவர்களிடமும் சலசலப்பு.

அதையெல்லாம் பார்த்துக்கொண்டே கருத்தில் கொள்ளாத பாவனையில் இருக்கையில் அமர்ந்திருந்த யது கால் மேல் போட்டிருந்த மற்றொரு காலினை வேகமாக கீழிறக்கியவனாக எழுந்து நின்று அணிந்திருந்த சட்டையை அடியில் இழுத்துவிட்டு முதுகுக்கு பின்னால் கைகளை கட்டிக்கொண்டவனாக கால்களை அகட்டி நிமிர்ந்து நின்றான்.

“மதுவிலக்கு அமுல்படுத்தி ரெண்டு நாளாச்சு அவங்கவங்க தொகுதியில் நிலவரம் எப்படியிருக்கு?”

அங்கு நடந்து கொண்டிருந்த சலசலப்புக்கும் தனக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை என்பது போல் காரியத்தில் கண்ணாக வினவினான் யது.

“மக்கள் எல்லாம் போராட்டம் பண்றாங்க. குடிகார பசங்க போதைக்காக என்னென்ன பண்ணுவானுங்களோ. ஊருக்கு ஒண்ணுன்னாவது வைக்கலாம். இப்படி மொத்தமா மூடினால் நட்டம் நம்ம கஜானாவுக்குத்தான்” என்றார் ஒரு அமைச்சர்.

தாடையை ஒரு கையால் தேய்த்த யது…

“நம்ம மாநிலத்துக்கு, எங்கெங்கயிருந்து ட்ரின்க்ஸ் சப்ளை ஆகுது?” என்று வினவினான்.

குட்டப்பன் மூலமாக பல மாநிலங்களில் போதைப்பொருள் விற்பனையாவதை அறிந்தது முதல், அதனை மொத்தமாக அழித்திடத்தான் யதுவும், விநோவும் முயற்சித்து வருகின்றனர். அதனின் முதல் படி தான் இந்த பூரண மதுவிலக்கு.

மதுவிலக்கு கட்டுப்பாட்டில் வரும் துறை அமைச்சர், இறக்குமதி செய்யும் பகுதிகளின் பெயர்களை சொல்லிட…

அடுத்த நொடியே,

“இறக்குமதி அக்ரிமெண்ட்ஸ் எல்லாம் கேன்சல் பண்ணுங்க. இனி நம்முடைய மாநில எந்தவொரு எல்லைக்குள்ளும் மது மற்றும் கேடு விளைவிக்கும் புகை, பாக்கு போன்று போதை சம்மந்தப்பட்ட எதுவும் நுழையக்கூடாது. மீறினால் நீங்களாவே ராஜினாமா செய்திட்டு கட்சியை விட்டு வெளியில் போயிடலாம்.” என்று தயவு தாட்சண்யமே பாராது கூறினான்.

தவறு என்றால் அவனது அகராதியில் மன்னிப்பே கிடையாது.

யது சொன்னதை செய்வான் என்பதால் அந்த அமைச்சரிடம் அதிர்வு.

“ஊருக்கு ஒண்ணாவது…”அங்கு தொலைக்காட்சி திரையில் யதுவின் பூரண மதுவிலக்கை எதிர்த்து மது பிரியர்கள் நடத்தும் போராட்டத்தை பார்த்தவாறு முன்பு சொன்ன அதையே மீண்டும் அவர் சொல்லிட,

“ஊருக்கு ஒண்ணாவது இருப்பதற்கு அதென்ன பள்ளிக்கூடமா இல்லை கோவிலா… இப்போவெல்லாம் நல்லதுக்கு போராடுறதைவிட பிரபலத்தை எதிர்பார்த்து இந்த மாதிரி எதிர்மறை காரியங்களுக்குத்தான் போராட்டம் நடத்தப்படுது. உலகத்தையே எதிர்மறை எண்ணங்களா மாற்றி வைத்திருக்கின்றனர். இதற்கு பொறுப்பு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் நீங்களோ நானோ தான்.

பத்து நாள் கத்துவாங்க… அப்புறம் பழகிடும். நிதர்சனத்தை ஏத்து வேலையை பார்க்க போயிடுவாங்க.

நான் சொன்னதை மட்டும் செய்யுங்க” என்ற யதுவை ஜார்ஜ் கூட எதிர்த்து பேச முயல,

மற்றொரு செய்தி அலைவரிசையை மாற்றிய யது…

“எதிர்ப்பு இருப்பதை விட, இந்த திட்டத்தை வரவேற்று எத்தனை ஆதரவு உள்ளதென்று பாருங்க அங்கிள்.

நல்லது உடனே செய்ய முடியாது. பல எதிர்ப்புகள் வருமென்று தெரிந்துதான் களமிறங்கியிருக்ககேன். பின்வாங்கிட மாட்டேன்” என்றான்.

முன்பு உண்ணியின் ஆட்சியில் பாதியில் கைவிடப்பட்ட பள்ளி கட்டிடங்கள் சீரமைக்கும் பணியில் முழுமூச்சாக இறங்கி தன்னுடைய நேரடிப்பார்வையில் நன்முறையில் முடித்திருந்தான். இப்போது மதுவிலக்கு.

ஜார்ஜிற்கு யதுவின் ஆட்டம் புரிய ஆரம்பித்தது.

அனைத்து காய்களையும் ஒரே நேரத்தில் நகர்த்தாது, ஒவ்வொன்றாக குறி பார்த்து நகர்த்துகிறான் என்று.

“இனி மாநிலம் முழுக்க இருக்கும் அனைத்து எல்லை செக் போஸ்டும் சி.எம் ஆபீஸ் நேரடி கண்காணிப்பில் இருக்க வேண்டும்.” போக்குவரத்து துறை அமைச்சரின் மீது யதுவின் பார்வை பதிந்திருந்தது.

“மாநிலத்திற்குள் நுழையும் சிறு வண்டியையும் பரிசோதித்தே உள்ளே அனுப்ப வேண்டும். அது யாருடைய வாகனமாக இருந்தாலும் சரி. என்னுடையது உட்பட” என்ற யது, பாசிலிடம் திரும்பி…

“இதற்கென்று தனி குழு அமைத்திடு. அவை உன்னுடைய நேரடி கண்காணிப்பில் வைத்துக்கொள். மாநிலம் முழுவதுமுள்ள ஒவ்வொரு செக் போஸ்டிலும் இன்னும் ஒரு வாரத்திற்குள் கண்காணிப்பு காமிரா பொறுத்தப்பட்டிருக்க வேண்டும். பழுது, கோளாறு, திருடு போய்விட்டது இப்படி எந்தவொரு புகாரும் இருக்கக்கூடாது. அதன் காட்சிகள் யாவும், என்னுடைய அபிசியல் கம்ப்யூட்டருடன் லிங்க் செய்திடு பாசில்.

எந்தவொரு இடத்திலும் இரண்டு பேருக்கு மேல் பத்து நிமிடத்திற்கு அதிகமாக நின்றிருந்தால் விசாரித்து கைது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அது யாராகா இருப்பினும்.

இனி என்னை மீறி போதைப்பொருட்கள் எப்படி என் மாநிலத்திற்குள் பரவுதுன்னு பார்க்கிறேன்” என்று கூர் பார்வையோடு கூறியவன்,

கல்வித்துறை அமைச்சரிடம்…

“பள்ளி மற்றும் கல்லூரிகளில் தான் மாணவர்களை ஏமாற்றி அதிக விற்பனை செய்யப்படுகிறது, உங்களது அதிகாரத்தின் கீழ் அனைத்து பள்ளிகளும் இன்னும் ஒரு மாத காலத்தில் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் என் மேசைக்கு வந்திருக்க வேண்டும். காட் இட்” என்றான்.

அவனது நடையில், குரலில் ஆளுமையில் வேங்கையும் சிம்மமும் இணைந்த தோரணை.

வைத்த கண் எடுக்காது அவன் சொல்வதற்கு மறுத்து பேச முடியாத அளவிற்கு அவனது கர்ஜனையான பேச்சில் அனைவரும் சிலையாகியிருந்தனர்.

மகுடிக்கு கட்டுப்படும் பாம்பு போல், அவனது கட்டளைகளுக்கு பணிந்து அனைவரும் தலையசைத்திருந்தனர். மேனன், சேத்தன் உட்பட.

அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அமைச்சரிடம்…

“மாநிலம் முழுவதும் சிறு பெட்டி கடை முதல் பெரிய பல்பொருள் அங்காடி வரை உத்தரவு பிறப்பியுங்கள்” என்று யது சொல்ல வருவதற்குள், அத்துறை அமைச்சர் “என்னன்னு?” என்று வினவியிருந்தார்.

“செல்வதற்குள் என்ன அவசரம்?” என்ற யது,

“புகை மற்றும் போதை பாக்கு போன்றவை விற்பனை செய்யத்தடை” என்றான்.

அவர் அதிர்ந்துப் பார்க்க…

“நீங்க பாக்கு போடுவீங்களோ?” என்று நக்கலாகக் கேட்டான்.

முதலில் ஆமென்று ஆடிய அவரின் தலை பின்னர் அதிவேகத்தில் இல்லையென்று ஆடியது.

“அது…” என்றவன்,

“ஒரு வாரம் மட்டுமே அவர்களுக்கு கால அவகாசம், அதற்குள் அந்த மாதிரி பொருட்கள் யாவும் கடைகளுக்குள்ளிருந்து வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். வேறெந்த வழியிலும் விற்பனை செய்திட முயற்சித்திடவும் கூடாது. ஒரு வாரத்திற்கு பின் நீங்களே தொகுதிவாரியா சென்று தங்கள் குழு ஆட்களை வைத்து நேரடி பரிசோதனை செய்யணும். நம் திட்டத்தை மீறி விற்பனை செய்தால், சற்றும் யோசிக்காது கடையை இழுத்து மூடி சீல் வைய்யுங்கள். அவர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கே போனாலும், அந்த கடைகள் மீண்டும் திறக்கக் கூடாது” என்றான்.

“பேசமால் அதன் தயாரிப்பு நிறுவனங்களை மூடிவிடலாமே?” என்ற பாசிலை பார்த்து புன்னகைத்த யது,

“இதை நான் யோசிக்காமல் இருப்பனா?” என்று கேட்டு, “நல்ல வேலையாக அப்படி எந்தவொரு தொழிற்சாலைகளும் நம் மாநிலத்தில் இல்லை” என்றவன்,

“தொழில்துறை அமைச்சரிடம் இல்லைதானே?” என்று வினவினான்.

அவர் அரண்டு விட்டார். எங்கு தன்பக்கமும் ஆணைகள் பிறப்பித்து விடுவானோ என்று. அவசர கதியில் இல்லையென்று சொல்லியிருந்தார்.

அவர் பாவனையில் சன்னமாக சிரித்த யது,

“என்ன மிஸ்டர்.தாஸ்?” என்று உணவுத்துறை அமைச்சரின் பக்கம் திரும்பினார்.

அவரோ, “நீங்க சொன்ன மாதிரி செய்திடலாம் தம்பி” என்றார்.

“செய்திடலாம் இல்லை. செய்திருக்கணும். நான் சொல்லிய அனைத்தும் இன்னும் ஒரு மாதத்திற்குள் நடந்திருக்க வேண்டும். அதற்கு இந்த நான்கு துறை அமைச்சர்களும் பொறுப்பு. அவர்களின் பொறுப்பு ஜார்ஜ் அங்கிள்” என்றவன் சத்தமில்லாது அவரது தலையில் இடியை இறக்கியிருந்தான்.

‘என்னையும் விட்டு வைக்க மாட்டாயா?’ அவரின் பார்வை புரிந்தவன் அவருக்கு மட்டும் கண் சிமிட்டினான்.

ஜார்ஜ் வெளிப்படையாக புன்னகைத்தார்.

சேத்தனின் முகத்தில் அப்பட்டமாக கோபம் தெரிந்தது.

“சின்னப்பையன் ஏதோ விளையாட்டு போல சொல்லிட்டு இருக்கான். நீங்களும் அவனுக்கு சப்போர்ட் செய்யுற மாதிரி சிரிச்சிட்டு இருக்கீங்க. இங்கு என்ன தான் நடக்குது?” என்றார் ஜார்ஜிடம்.

“யது செய்வதெல்லாம் நியாயமானது. வேலையை சரியாக செய்பவனிடம் சென்று நீ செய்வது சரியில்லைன்னு சொல்வது முறை கிடையாதே” என்றார்.

“இப்போலாம் ரொம்பத்தான் அவனை தாங்குறீங்க?” சேத்தனின் கோபம் மட்டுப்பட மறுத்தது.

“நான் பார்த்து வளர்ந்த பையனின் திறமையை ரசிக்கிறேன். அவனை கண்டு  வியக்கிறேன். அவ்வளவு தான்” என்றார் ஜார்ஜ்.

சேத்தன் தீயாய் பெரியவரை முறைத்தார்.

“கோபம் கொள்ள வேண்டிய நான்கு துறை அமைச்சர்களும் அமைதியாக இருக்கும்போது நீயெதுக்கு இந்த குதி குதிக்கிற?” என்ற ஜார்ஜின் அர்த்தமான கேள்வியில் சேத்தன் வாயினை மூடிக்கொண்டார்.

“இன்னைக்கே வேலையை துவங்கிடுங்க” என்ற யது, கல்வித்துறை அமைச்சரிடம் தனி அக்கறையுடன், “மிகுந்த கவனத்துடன் செய்யுங்க. அவர்கள் தான் நாளைய சமுதாயம்” என்றான்.

“இப்போது நான் பேசிய அனைத்து தகவல்களும் மீடியாவிடம் சேர்க்கப்படும். அவை வெளியான மறு நிமிடம் நீங்கள் தனித்தனியாக உங்களின் செயல்பாடுகள் குறித்து மீடியாக்களிடம் பேட்டி கொடுத்துக்கொள்ளலாம்” என்றான்.

‘நாம் தப்பிக்க வழியே இல்லை போலிருக்கே!’ அமைச்சர்களின் மனக்குரல் இதுவாகத்தான் இருந்தது.

அனைவருக்கும் அவரவர்களது துறையில் கொள்ளை லாபம் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். யதுவின் இத்தகைய அதரிடி திட்டங்களால், மாற்றங்களால் அவர்களுக்கெல்லாம் அதீத வரவு நட்டம். இருப்பினும் யதுவை எதிர்த்து வாய் திறந்திட முடியாது அவன் சொல்லியவற்றை நிறைவேற்றிட ஆயத்தமாயினர்.

அரசன் வழியில் தானே மற்றவர்கள் சென்றிட வேண்டும். இல்லையேல் அவர்களது பதவி ஆட்டம் கண்டுவிடுமே. பின்னர் முதலுக்கே மோசமான கதைதான் அவர்களுடையது. அதனால் அவர்களுக்கும் யது சொல்வதை கேட்பதை தவிர்த்து வேறு வழியில்லை.

அனைவரும் கூட்டம் முடிந்து கலைந்திட…

“எல்லாமே ரெக்கார்ட்டட் தானே?” என்று பாசிலிடம் கேட்டான்.

“எதையெதை கொடுக்க வேண்டுமோ அவற்றை மட்டும் வெட்டி ஒட்டி மீடியாவுக்கு அனுப்பிடுறேன்” என்ற பாசிலின் தோளினை தட்டினான் யது.

“நீயும், விநோவும் எப்படித்தான் நான் சொல்ல வரதை கண்டுபிடிக்கிறீங்களோ?” என்றவனின் அலைப்பேசி சிணுங்கியது.

பாவனாவின் எண் திரையில் மின்னியது.

பாவனாவால் பேச முடியாததால் அவள் குரல் அழைப்பினை எப்போதும் பயன்படுத்தியது இல்லை. காணொளி அழைப்பு மட்டுமே. அதிகபட்சம் குறுந்தகவல்கள் தான். அப்படியிருக்கும்போது சாதாரண அழைப்பு அவனை யோசிக்க வைத்ததோடு சற்று படபடக்க வைத்தது.

மருத்துவர் சொல்லிய தேதிக்கு இன்னும் ஆறு நாட்களே இருந்தன. எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று மருத்துவர் கூறியிருந்தார். அதனால் பாவனாவிற்கு பிரசவவலி கண்டுவிட்டதோ என்று சிறு அச்சம் கொண்டவன், தன்னுடைய அலைபேசியில் அவளது ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு கண்காணிக்கும் செயலியை திறந்து பார்த்தான். அவற்றின் அளவீடு சீராகத்தான் இருந்தது. அதன் பின்பே ஆசுவாசம் கொண்டான்.

வலி வந்தால் அவளால் சொல்லிட முடியாது என்பதற்காகவே, அவளின் நுண்ணுணர்வுகளை கவனிக்கும்படி அவளிடம் சிறு மாற்றம் தெரிந்தாலும் தன்னுடைய அலைபேசிக்கு எச்சரிக்கை மணி வருமாறு சிறு அளவிலான கருவி ஒன்றை அவளது மணிக்கட்டில் அணிவித்திருந்தான்.

பாவனாவுக்கு அதிகப்படியாக வியர்த்தால் கூட, யதுவிற்கு காரணத்தோடு தகவல் வந்துவிடும்.

அதனை வைத்து பாவனாவுக்கு ஒன்றுமில்லையென நிம்மதி கொண்ட பின்னரே அழைப்பை ஏற்றிருந்தான் யது நந்தன்.

error: Content is protected !!
Scroll to Top