உயிர் உறை 49
மொழி 12
மாநிலமே பற்றி எரிந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
தீய காரியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ இல்லையோ, நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது என்று நினைத்து ஒன்றை செய்திட முயலும் போது ஆயிரம் எதிர்ப்புகள் எதிர்பாராமல் கிளம்புகிறது.
இப்போதும் அப்படியே.
யது தன்னுடைய திட்டங்களை ஊடகத்திற்கு தெரிவித்து, அந்தந்த துறை அமைச்சர்களையும் தனியாக அவர்களது நடவடிக்கைகளை, இதுதான் செய்யப்போகிறோம் என்று பேட்டி கொடுக்க வைத்து, திட்டங்களில் யது கையெழுத்திட்ட அடுத்த நிமிடத்திலிருந்து மாநிலமே நடுக்கம் கொண்டது.
எதிர்ப்புகளும், ஆதரவுகளும் சம விகிதத்தில் பரவின.
பாவனாவின் அலைப்பேசியிலிருந்து ஷா அழைத்திருக்க… எப்போதும் மதிய உணவிற்கு வீடு செல்பவன், இன்று செல்லாததால் ஏனென்று கேட்டு வரசொல்லிய மகளின் பேச்சினை தட்டாத தந்தையாய் உடனடியாக இல்லம் சென்றவன், அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் அலுவலகத்திற்கு வரும்படி ஆனது.
எதிர்ப்பாளர்கள் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டிருப்பதாக தகவல் வர,
இப்போது அங்கு செல்ல வேண்டாமென்று பாசில் மறுப்பதையும் பொருட்படுத்தாது, அவனையும் இழுத்துக்கொண்டு அலுவலகம் வந்து சேர்ந்தான்.
அலுவலக கட்டிடத்தின் எல்லைக்குள் யதுவின் வாகனம் நுழைந்த அடுத்த கணம், கூட்டம் சூழ்ந்து வண்டி நகர முடியாது நின்றது. சுற்றி வளைத்திருந்தனர்.
மூடிய மதுக்கடைகளை திறக்க சொல்லி ஆர்ப்பாட்டம்.
படிப்படியாக குறைக்க முயற்சித்திருக்கலாம், ஆனால் அது நிச்சயம் சாத்தியமற்றதாக இருந்திருக்கும். இவ்விடயத்தில் சீரான திட்டங்களைவிட அதிரடியான செயல்கள் தான் ஒத்துவருமென்று யது ஆணித்தரமாக நம்பினான்.
யதுவை சூழ்ந்து மறித்து நின்றவர்களை விலக்கி அமைதிப்படுத்தி, கூட்டத்தின் பிடியிலிருந்து யது வெளிவர கிட்டத்தட்ட நாப்பது நிமிடங்கள் ஆகியது.
நகரின் மொத்த காவல் படையும் அங்குதான் குழுமியிருந்தது.
தடுப்புகள் பயன்படுத்தியும், தண்ணீர் அடித்தும் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் திணறிப்போயிருந்தனர்.
“எத்தனை போராட்டம் செய்தாலும் போட்ட திட்டம் திரும்ப பெறமாட்டாது. இப்போது போராடும் உங்களில் யாராவது ஒருவர், மதுபானம் அருந்தாதவராக இருந்தால் கை உயர்த்துங்கள் பார்க்கலாம்” என்ற யது இரண்டு நிமிடங்கள் காத்திருந்தான்.
யாரும் முன்வரவில்லை.
“இந்த திட்டத்தின் அறிக்கைக்கு பின்னர், உங்கள் வீட்டிலேயே எத்தனை நிம்மதி அடைத்திந்திருப்பார்கள் தெரியுமா? தெரிந்தே வாழ்வை அழித்துக்கொள்ளும் வழிமுறை தான் போதை. என் மக்களுக்கு தெரிந்தே அந்த பாதையின் கதவை என்னால் திறந்து வைக்க முடியாது” என்ற யது,
“போட்ட சட்டம் முற்றும் முழுதாய் நிறைவேற்றப்படும்” என்று அதீத அழுத்தத்துடன் கூட்டத்தை பார்த்து தெரிவித்தான்.
“விவசாயத்திற்காக வெயில், மழை, குளிருன்னு பார்க்கமால் பல நாட்கள் போராடிய விவசாயிகளையே வேடிக்கை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தோம். நல்லதுக்கான போராட்டத்தையே கண்டு கொள்ளாமல் இருந்த அரசியல்வாதிகளுக்கு, கெட்டதுக்காக போராடுற உங்களுடைய போராட்டத்தை காணவா நேரமிருக்கிறது” என்ற யது…
டிஜிபி மரியன் பக்கம் திரும்பி…
“இன்னும் ஐந்து நிமிடங்களில் இவர்களெல்லாம் கலைந்து சென்றிருக்க வேண்டும். செல்லமாட்டோம் என்றால் கைது செய்யுங்கள், முதல்வர் சட்டத்திட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோருக்கு நிச்சயம் இரண்டாண்டு சிறை தண்டனை அளியுங்கள்” என்றவன்,
“இது பெயருக்கு செய்யப்படும் கைது நடவடிக்கை கிடையாது” என கூட்டத்தின் பக்கம் கூறினான்.
இந்த செய்தி காட்டுத்தீ போல் மாநிலம் முழுவதும் பரவியது.
பாரத பிரதமிரிடமிருந்து யதுவிற்கு அழைப்பு வந்தது.
அவனின் திட்டத்தை வரவேற்பதாக தெரிவித்தவர், “எடுத்ததும் முழு அடைப்பு என்பதை மட்டும் கொஞ்சம் மாற்றியமைக்கலாமே! படிப்படியாக குறைத்திடுங்கள்” என்றார். (இப்பகுதி கற்பனையே! காட்சி, வசனங்கள் யாவும் கற்பனையே!)
யது அமைதியாக இருந்திட…
“போராட்டங்கள் குறையுமே” என்றார்.
“குஜராத்தில் போர்பந்தரில் மட்டும் மதுவிலக்கு இருப்பதால் நாட்டு மக்கள் நலமுடன் இருந்திட முடியாதே!” என்று வார்த்தையால் ஓங்கி கொட்டு வைத்திருந்தான் அந்த இளம் தலைவன்.
இளம் ரத்தம் பயமறியாதல்லவா! நாட்டின் மூத்த குடிமகனையே சொல் அம்பினால் பலமாகத் தாக்கியிருந்தான்.
நியாயமான நடுநிலையான கேள்வி. அவன்மீது குற்றம் சொல்லிட முடியாதே! பதிலின்றி மௌனித்தார் பிரதமர்.
“மகாத்மா போர்பந்தரில் பிறக்கவில்லை என்றால், அங்கும் மதுவிலக்கு இருந்திருக்காதில்லையா? மதுவிலக்கு நடைமுறைப்படுத்த காந்திஜியின் குளோனிங்கை ஒவ்வொரு நகரத்திலும் நாடு முழுக்க பிறப்பெடுக்க வைக்க வேண்டுமா. சாத்தியமற்ற ஒன்றை சாத்தியமாக்கும் போது… இதனை செயல்படுத்திட முடியாதா என்ன? நல்லது செய்யும் போது தடைகள் வரத்தானே செய்யும். நீங்க அறியாததா?” என்று அவர் பக்கமே லாவகமாகத் திருப்பி விட்டுவிட்டான்.
இனி அவரால் ஏதேனும் கூறிட முடியுமா என்ன?
அவருக்கு யதுவின் கட்சியின் பலம் வேண்டும். அவனது மாநிலத்தில் அவர் நிலைபெற வேண்டுமென்றால் யதுவின் கூட்டணி அவருக்கு அவசியம். ஆதலால், யதுவின் திட்டத்தை பாராட்டி பேசி வைத்துவிட்டார்.
‘இன்னும் யாரையெல்லாம் இதுபோல் சமாளிக்க வேண்டுமோ’ என்று காற்றினை உதடு குவித்து ஊதி தன்னை நிலைப்படுத்தியவன், முன் வைத்த காலை பின் வைத்திடக் கூடாது என்பதில் மட்டும் தெளிவாக இருந்தான்.
யதுவின் ஆணைக்கு பயந்து பல இடங்களில் போராட்டங்கள் குறைந்தாலும், வீம்புக்கென்று கூட்டம் கூடியவர்கள் கொஞ்சமும் இளக்கமின்றி கைது செய்யப்பட்டனர்.
அப்போதுதான் யது சொல்லியது வெறும் பேச்சுக்கல்ல என்பதை அறிந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சிறிதும் மிட்சமின்றி காணாமல் போயினர்.
அடுத்த இரு நாட்களில் மாநிலமே அமைதி பூங்காவாக மாறியது.
யது ஒரு வாரத்தில் மதுவிலக்கை மாநிலம் முழுவதும் சாத்தியப்படுத்தியிருந்தான்.
அமைச்சர்களுக்கு கட்டளையிட்டாயிற்று அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று அமர்ந்துவிடமால், ஒவ்வொருவரையும் ட்ரில் வாங்கினான். தனக்கு கீழிருக்கும் அரசியல்வாதிகளை வேலை செய்ய வைத்தான். முயன்று முயற்சித்தால் இங்கு எதையும் சாத்தியமாக்கலாம் என்பதை நடத்திக்காட்டியிருந்தான்.
அண்டை மாநில தலைவர்கள் மற்றும் இன்னும் பிற அரசியல் பெரும் தலைவர்களிடமிருந்தெல்லாம் யதுவிற்கு பாராட்டுக்கள் குவிந்தன. நாடு முழுவதும் யதுவின் பேச்சுதான்.
இளம் தலைமுறையினர் அரசியலுக்கு வந்தால், நிச்சயம் மாற்றம் உண்டு என்பதற்கு உதரணமாக யதுவை வைத்து பல மீம்ஸ்கள் சமூக வலைதளங்களை அதிர வைத்தன.
இந்த நேரத்தில் தான் தமிழகத்தில் தூத்துக்குடியில் பெரும் புள்ளியான முத்துச்சாமியின் உப்பள லாரி கேரளா செக் போஸ்டில் மாட்டிக்கொண்டது.
அந்த லாரியில் இருந்தவை அனைத்தும் போதைப் பொருட்கள். இந்த மாதிரி எதுவும் தன்னுடைய மாநிலத்திற்குள் வரக்கூடாது என்பதற்காகத்தான், அனைத்து எல்லை பகுதியையும் போக்குவரத்து காவல் துறையினரை வைத்து கண்காணிப்புக்கு உட்படுத்தினான்.
இந்த காரியங்களால் யது மீது கோபத்தில் இருந்த அந்த முகம் தெரியாத நபர், மேலும் அவன் மீது பழிவெறி கொண்டார்.
“அவன் ஏன் இதெல்லாம் பண்ணிட்டு இருக்கான்?” குட்டப்பன் கேட்டிட, அந்த நபர் அமைதியாக தன்னுடைய சிந்தனையில் உழன்றிருந்தார்.
“நமக்கு எவ்வளவு பெரிய நட்டம்!” தேஜ் தனக்கு முன்பிருந்த கண்ணாடி குவளையை எதிரே இருந்த மரத்தின் தண்டில் ஓங்கி அடித்திருந்தான்.
“உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தைப்பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. என் கணக்கு வேறு” என்ற அந்த நபர், “என்னுடைய காரியம் நடக்க உண்ணியின் எதிராளியான நீங்க உதவியா இருப்பீங்கன்னு தான் உங்களை சேர்த்துகிட்டேன். அதனால் இப்போ நடப்பதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை” என்றார் அவர்.
அவரின் பேச்சு குட்டப்பன், தேஜ் இருவருக்குமே கோபத்தை உண்டாக்கியது. இருப்பினும், தற்போது கட்சிக்குள் குட்டப்பன் இல்லாத நிலையில் இந்நபரின் நட்பை இழக்க அவர்கள் தயாராகயில்லை. வேறெந்த வகையில் தங்களுடைய தொழிலை செய்ய வேண்டுமென்று கணக்கீடு செய்தவர்களுக்கு கட்சியில், யதுவிற்கு அருகிலிருக்கும் அந்நபரின் உதவி தேவை. அதனால் அமைதியாக இருந்தனர்.
“அப்போ நீங்க உங்க வேலையை செய்யலாமே!” தேஜ் கூறியிருந்தான்.
“இவன் உண்ணி மாதிரி கிடையாது. உண்ணியை போட்டுத்தள்ளவே ரெண்டு வருஷமாச்சு. யது பல உண்ணிக்கு சமமா இருப்பான் போல, அசைக்கக்கூட முடியல. அவன் நிழலை தொடவே பல திட்டம் போடணும் போலிருக்கு. புத்தியில் சாணக்கியனா இருக்கான். என்ன செய்தாலும் நெருங்கவே முடியல” என்றவர், “உண்ணி மாதிரி கொஞ்சம்கொஞ்சமா இல்லை… இவனை மொத்தமா போட்றனும்” என்றார். பார்வையில் வஞ்சம். முகம் முழுக்க ஒருவித வெறி பரவியது.
“பேசுறதெல்லாம் சரிதான். சொல்றதுல இருக்க வேகம் செயலில் காட்டினால் நல்லா இருக்கும். அவன் கதை முடிஞ்சிட்டா திரும்பவும் இங்கு எங்க ஆட்டம் களைகட்டும்” என்று சத்தமாக சிரித்தார் குட்டப்பன்.
“முத்துச்சாமி நம்ம ஆளுங்க கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருக்கார். அதுக்குள்ள யதுவுடைய கதை முடிந்துவிட்டால் நன்றாக இருக்கும்” என்றான் தேஜ்.
இவர்களுடைய மொத்த கதையையும் முடிக்கத்தான் அங்கொரு புலி பதுங்கியிருக்கிறது, புலி பாயும் நேரத்திற்கு யதுவும் காத்திருக்கிறான் என்பதை அறியாது பேசிக் கொண்டிருந்தனர்.
“எப்படி அவன் கதையை முடிக்கப்போறீங்க?”
“சொல்லிட்டு செய்வதில் சுவாரஸ்யமில்லை” என்றார் அவர்.
“அந்த ஊமை பொண்ணை வைத்தே இப்பவும் ஸ்கெட்ச் போட்டுடலாமா?” குட்டப்பன் ஆர்வமாகக் கேட்டார்.
“இப்போ அவள் அவனுடைய மனைவி. அப்போவே உண்ணிக்கு விஸ்வாசமாத்தான் இருந்தாள். இப்போ சொல்லவே வேண்டாம்” என்றவர், “இவனை டப்புன்னு முடிச்சிடனும்” என்றார்.
“யோசிப்போம்… நிச்சயம் வழி கிடைக்கும்.”
அந்நபர் யாரென்று அறிய விநோ சொல்லியதைப்போல் தானே அவருக்கு வழி அமைத்துக் கொடுக்கவிருக்கிறான் யது. அதில் அவர் மாட்டப்போவது உறுதி.
எலிக்கு பொறி வைக்கும் கதையாய்.
அதன் முதல் கட்டமாக தன்னுடைய பாதுகாப்பின் காவலை சற்று தளர்த்தினான் யதுநந்தன்.
பாசில் கூட வேண்டாமென்று எவ்வளவோ சொல்லிட யது கேட்கவில்லை.
“அவனை என் முன்னால் வரவழைக்க இதுதான் ஒரேவழி” என்று முடித்துக்கொண்டான்.
****
தன்னுடைய மடியில் மனைவியின் காலினை எடுத்து வைத்து, பாதத்தில் மெல்ல அழுத்திக் கொடுத்துக் கொண்டிருந்தான் யது.
அவன் காரியமே கண்ணாக இருந்திட, பாவனாவின் பார்வை முழுக்க கணவனிடத்தில் மட்டுமே நிலைத்திருந்தது.
“என்ன இன்னைக்கு ரொம்ப அதிகமா சைட் அடிக்குற போல?” அவன் கேள்வி கேட்ட போதிலும் தான் செய்து கொண்டிருந்ததை நிறுத்தவில்லை.
யதுவின் முன்னுச்சி கேசத்தை களைத்துவிட்டவள், விரல்களால் ஐ லவ் யூ என்று காண்பித்தாள்.
“மேடமுக்கு லவ் மூட் போல!” இப்போது அவள் முகம் பார்த்தவாறு அமர்ந்தான்.
அவளின் கண்களில் அலைப்புறுதல். அவன் முகம் பார்த்திருந்த போதும், அவளது கருவிழி இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்தது.
படுக்கையில் அருகில் பார்த்த யது, மகளின் ஆழ்ந்த உறக்கத்தை உறுதிபடுத்திக்கொண்டு, பாவனாவின் கரத்தை தனது கரத்தோடு கோர்த்து முத்தம் வைத்தான்.
“என்னடாம்மா… என்ன யோசனை?”
“பயமா இருக்கு.” சைகையால் கூறியவள், அவனை நெருங்கி மார்பில் சாய்ந்து கொண்டாள்.
“எதுக்கு பயம்?”
சிகிச்சை பெற்றும் தன்னால் பேச முடியவில்லையே என்கிற பயம், கொஞ்சம் கொஞ்சமாக அவளுள் அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்ததை தன்னுடைய கவலையில் கவனியாதுவிட்டாள்.
இந்த அழுத்தம் அடுத்த நாள் யதுவின் கண்ணீருக்கு காரணமாக இருக்கப்போவதை பேதையவள் அக்கணம் அறியவில்லை.
இந்நொடி அவள் கணவனிடம் மனம்விட்டு பேசியிருக்க வேண்டுமோ?
பாவனாவின் அமைதி யதுவிற்கு ஏதோ சரியில்லை என்பதை காட்டியது.
யது பலவாறு கேட்டும் பாவனா வாய் திறக்கவில்லை. அக்கணம் வயிற்றில் குழந்தை தன்னிருப்பைக் காட்டிட, யதுவின் கையை எடுத்து தன்னுடைய வயிற்றில் வைத்தாள்.
குழந்தை அசைவை காட்டத் தொடங்கிய நாட்களிலிருந்து இது இருவருக்குள்ளும் இயல்பாய் நடக்கும் நிகழ்வு தான்.
ஒவ்வொரு முறையும் முதல் முறை போலவே யது தேகத்தில் சிலிர்ப்பை உணர்வான்.
இம்முறையும் கண்களை மூடி தன் மகவின் அசைவை உணர்ந்தவனின் முகம் கனிந்திருந்தது.
“நல்ல புட் பால் விளையாடுறான்…” என்ற யதுவின் அகமும் புறமும் பூரித்திருந்தது.
“உங்க மூணு பேரையும் பத்திரமா பார்த்துப்பேன். இப்போ இருக்கிறதைவிட இன்னும் அன்பா இருப்பேன்” என்றவன் பாவனாவின் வயிற்றில் தன் முத்திரை பதித்தவனாக, மனைவியை தன் கை வளைவில் படுக்க வைத்து தானும் உறங்கிப்போனான்.
அவனது கரங்களுக்குள் அடங்கியிருந்த பெண்ணவள் மட்டும் விழி மூடாது கணவனது முகத்தையே பார்த்திருந்தாள். மனதோடு மானசீகமாக உரையாடினாள்.
‘என்னால பேசவே முடியாதா நந்து? முடியாதுன்னா, எனக்கு எதுக்கு ஆசை காட்டின. பேச முடியும்ன்னு நம்பிக்கை கொடுத்து, ட்ரீட்மெண்ட்… கவுன்சிலிங்… தெரபி… இதெல்லாம் எதுக்கு பண்ண? பேச முடியாதுன்னு இருந்த என்னை அப்படியே விட்டிருக்கலாமே! இப்போ என்னால பேசவே முடியாதுங்கிறதை என் மனசுல பதிய வைக்க முடியலையே!’ என்றவள்,
‘குழந்தைகிட்ட நீ பேசுற மாதிரி என்னால பேச முடியலையே! வெளிய வரதுக்கு முன்பே அவனுக்கு அப்பாவை அடையாளம் தெரியுது. என்னை?’ முட்டிக்கொண்டு வெளிவந்த கண்ணீரின் கேவல் கணவனை தீண்டிடக்கூடாதென்று அடக்கியவளின் அழுத்தம் மொத்தமாய் அவளின் மனதோடு உடலையும் பாதித்தது.
குழந்தையின் நலனை மனதால் கெடுத்துக்கொண்டிருக்கோம் என்பதை அறியாது, அழுத்தத்திற்கு நடுவில் எப்போதென்று உணராது உறங்கியவள் காலை எழும்போதே அசௌகரியமாக உணர்ந்தாள்.
மூச்சுவிட சிரமம் கொள்ள… சட்டென்று அவளது உடல் முழுக்க வியர்வையில் நனைந்தது. முதுகில் சுளீரென்று ஒரு வலி எழும்பி தேகம் முழுக்க பரவி அடங்க, கைகளில் நடுக்கம் கண்டாள்.
பாவனாவிற்கு முன்னெழுந்த யது குளியலறையிலிருக்க, அவனது அலைப்பேசி அலர்ட் ஒலியை விடாது எழுப்பியது. பாவனாவின் துடிப்பு அதிகமாக அதிகமாக அலைபேசியின் ஒலியும் கூடியது. தண்ணீர் விழும் சத்தத்தை யது நிறுத்தியதும், செவி தீண்டிய எச்சரிக்கை சத்தத்தில் ஓடி வந்த யது நொடியில் அவளின் நிலையை அவதானித்துவிட்டான்.
வேகமாக மனைவியின் அருகில் வந்தவன், அவளை தன் இடையோடு சேர்த்து அணைத்தவனாக, கைக்கு எட்டிய உடையை எடுத்து அணிந்தபடியே மற்றொரு கையால் இன்டர்காம் மூலமாக ராதாவை அழைத்தான்.
“ஒண்ணுமில்லடா. இப்போ ஹாஸ்பிடல் போயிடலாம். ரிலாக்ஸ், ரிலாக்ஸ்…” என்றவனுக்கும் உள்ளம் அதிர்ந்தது.
முதல் முறை மனைவி வலியில் துடிப்பதை காண்கிறான்.
சிறுவயதில் அவளை கண்டபோது… அந்நிலையில் கூட அவளின் முகத்தில் அவன் வலியின் சாயலை அறியவில்லை. ஆனால் இன்று, அவளுக்காக அவனின் ஆவி துடித்தது.
‘நந்து…’ சத்தமிட்டு கத்த வேண்டும். வலியை தன்னுடைய கத்தலில் கடக்க வேண்டுமென்று நினைத்து முயற்சித்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அந்நொடி தன்னிலையை எண்ணி மீண்டும் குமைந்தாள். அவளின் அழுத்தம் கூடியது. ரத்த ஓட்டம் தாறுமாறானது. அவளின் இதயத்தின் ஓசை அவனது தேகம் தீண்டியது.
“எண்ட ப்ரீயே…” என்றவனின் குரல் வேதனையை உணரும் நிலையில் அவள் இல்லை.
அவனது வயிற்றிலேயே தலையை குத்தி, தன்னிதழை அழுந்த கடித்தவளாக தன்னிலை இழக்க இருந்த வேளை… அவளின் கன்னம் தட்டி கைகளில் அள்ளிக்கொண்டான்.
யது கீழே வருவதற்குள் வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு ராதாம்மா தயராக இருக்க, பாவனாவை காரில் தன் மடியில் படுக்க வைத்தவன், நினைவு வந்தவனாக மீண்டும் உள்ளே ஓடி… உறங்கிக்கொண்டிருந்த ஷாவை தூக்கிக்கொண்டு வந்து முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ராதாம்மாவின் மடியில் கிடத்திவிட்டு, பாவனாவை மடி தாங்கியவன் முகுந்தனை வேகமாக செல்லுமாறு கூறினான்.
‘ஷாவை தானே விலக்கினாலும் என் நந்து ஒருபோதும் அவன் அன்பில் தவறமாட்டான்’ என்று அந்நொடியும் கர்வம் கொண்டாள்.
‘நந்து முடியல…’ அவள் சொல்ல முடியாத வலியை அவளின் கரம் தன் கரத்தில் கொடுத்த அழுத்தத்தில் உணர்ந்தான் யது.
மனைவியின் தலை கோதியவன்,
“கொஞ்சம் பொறுத்துக்கோ பாவனா…” என்று யதுவின் கண்ணிலிருந்து கொட்டிய நீர் பாவனாவின் நெற்றி பொட்டில் தெறித்தது.
‘நந்து.’ இம்முறை காற்றாய் அவளின் ஓசை அவனின் காது உரசியது.
யதுவின் கண்ணில் மின்னல் வந்து போனது. அதனை அவளால் கண்டுகொள்ள முடியவில்லை.
“அவங்க மனமும் மூளையும் ஒரே நேரத்தில் அதிர்வுக்குள்ளாகும் போது மீண்டும் இழந்த ஒலியை அவர்கள் பெறலாம்.” மருத்தவர் சொன்னது நினைவில் உதித்தது.
‘இது தற்செயலானதாகக் கூட இருக்கலாம். இப்போது வெளிப்படுத்திட வேண்டாம்’ என நினைத்தவன் தன்னுடைய கவனத்தை மனைவி மீது வைத்தான்.
உண்ணி இறந்த அன்று கூட கல்போல் இறுகியிருந்தானே தவிர, அவனது கண்ணில் ஒரு துளி நீரை அவள் பார்க்கவில்லை.
அன்றைய இரவு அவளிடம் ஆறுதல் தேடி அவன் கண்ணீர் சிந்தியிருக்கலாம். அவள் தானாக மடி தந்ததால் தன்னுடைய பாரத்தை அவன் கொட்டியிருக்கலாம். இருப்பினும் நாள் முழுக்க தந்தையின் இறப்பை தாங்கி இரும்பென நின்றவனின் சட்டென்ற கண்ணீர் அவளை அவனுக்காக காதலில் கரையச் செய்தது.
அவனது கண்ணீர் அவள்மீது அவன் கொண்ட அளப்பரிய காதலின் சுவடு அல்லவா!
உண்ணி அவனுக்கு எத்தனை பாசமிகுந்த தந்தையென்று அவள் அறிவாள். அப்படிப்பட்ட அன்பு கொண்டவரின் இறப்பை தாங்கிக்கொண்டவனால் தன்னுடைய வலியை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பது அவளுக்குள் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
அவனது பலவீனம் தன்னுடைய கண்ணீர் என்பதை அக்கணம் தெரிந்து கொண்டவளுக்கு உண்மையில் பேரதிர்ச்சி. எதையும் சிரிப்பில் எதிர்கொள்பவனுக்கு தன்னால் தன்னுடைய வலியால் அழுகை வருகிறதா? முற்றிலும் அவளுள் அதிர்வாகத்தான் இருந்தது.
பிடித்திருந்த அவனது கையில் மேலும் அழுத்தம் கொடுத்தவள், அவனிடம் வேண்டாமென்று இரு பக்கமும் தலையசைத்து, மற்றொரு கையால் அவனது கண்ணீர் துடைத்தாள்.
அவள் துடைத்த பின்பே தன் கண்ணின் ஈரம் உணர்ந்தான் அவன்.
“நான் அழலயே!” என்றவன்,
“எனக்காக பொறுத்துக்கோடி. பயம்காட்டாத. என்னால முடியல” என்றான்.
அவனது மடியில் அவளது தலையிருக்க, தன் தலையை தாழ்த்தி சொல்லிக்கொண்டிருந்தவனின் கழுத்தில் கையிட்டு தன்னை நோக்கி அவனது முகத்தை இழுத்தவள் கணவனின் இதழோடு தன் இதழ் பொறுத்தினாள்.
முகுந்தன் கார் ஓட்டுவதிலும், ராதா ஷாவிடமும் கவனமாக இருந்ததால் இவர்களின் புறம் திரும்பவில்லை.
தன்னுடைய வலியையெல்லாம் அவனுக்குள் கடத்திக் கொண்டிருந்தாள் அவள்.
சட்டென்று வண்டி நின்றதில் யது தான் அவளை விலக்கினான்.
“பாசில் வந்திருப்பான். விஐபி என்ட்ரன்ஸ் போயிடுங்க ஏட்டா!”
சுற்றுப்புறம் பார்க்காது யது கூறிட, “பாசில் ஸ்ட்ரெச்சரோடு வருது தம்பி” என்றார் முகுந்தன்.
வீட்டில் கிளம்பும் போதே பாசிலுக்கும், பாவனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும் தகவல் அளித்திருந்தான்.
அவர்கள் மருத்துவமனை வந்து சேர்ந்த போது அனைத்தும் தயார் நிலையில் இருந்தது.
பாவனாவை கையில் ஏந்தியபடி இறங்கிய யதுவின் கண்களைத்தான் பாசில் உற்று நோக்கிக்கொண்டிருந்தான்.
‘அழுதிருக்கான்.’
யதுவின் அழுகை பாவனாவுக்கு அதிர்ச்சி என்றால், பாசிலுக்கு ஆச்சர்யம்.
பாவனாவை செவிலியர் அழைத்துச் சென்றதும், பாசில் நண்பனுக்கு துணையாக அருகே நின்றுகொண்டான்.
“அச்சா…” ராதாவின் கையில் கண்விழித்த ஷா யதுவிடம் தாவினாள்.
“இங்கயே ஒரு ரூம் அரேன்ஞ் பண்ணு பாசில்” என்ற யது, பாசில் “அல்ரெடி ஏற்பாடு பண்ணிட்டேன்” என்று சொன்னதும் ராதாவையும் ஷாவையும் பாசிலுடன் அனுப்பி வைத்தான்.
யதுவைவிட்டு போகமாட்டேனென்று அடம் பிடித்த ஷாவிடம்,
“ஷா மோளுக்கு தம்பி பாப்பா வரப்போறாங்க. அடம் பிடிக்காம, அழாம குட்டி பேபியை வெல்கம் பண்ண வேண்டாமா?” எனக் கேட்டான்.
பிஞ்சுக்கு என்ன புரிந்ததோ,
“பேபி வாங்கிட்டு வந்ததும் என்கிட்டதான் பர்ஸ்ட் காட்டணும்” என்கிற ஒப்பந்தத்தோடு ராதாவுடன் சென்றது.
அவர்களை அறையில் இருக்க வைத்துவிட்டு பாசில் திரும்பி வரும்போது, சுவற்றில் சாய்ந்து ஒரு காலை மடக்கி சுவற்றில் பதித்தவனாக கண்களை மூடி யது நின்றிருந்தான்.
“யது…”
“ஓவர் ஸ்ட்ரெஸ். எதையோ மனசுல வச்சிகிட்டிருந்திருக்காள். பிபி ஷூட்டப் ஆகியிருக்கு. பிபி குறையலன்னா, சி செக்ஷன் தான் பண்ணனுமாம். இப்போதான் டாக்டர் சொல்லிட்டு போனாங்க” என்றான் யது.
“இப்போ இது காமன் டா யது. ரெண்டு பேரும் சேஃப்’ஆ உன்கிட்ட வருவாங்க” என்றான்.
அந்நேரம் பதட்டமாக ஓடிவந்த செவிலி,
மருத்துவர் அழைப்பதாக யதுவை லேபர் வார்டிற்குள் அழைத்துச்சென்றார்.
“சார்… சிட்டுவேஷன் ரொம்ப காம்பிலிகேட்டடா இருக்கு. எவ்வளவோ சொல்றோம், நார்மலா ரிலாக்ஸ்டா இருக்க சொல்லி பட் அவங்க பிபி கண்ட்ரோல் பண்ணவே முடியல. எதையோ மனசுல வச்சிக்கிட்டு அவங்களையே வருத்தி அழுத்தி கொடுத்துக்கிறாங்க” என்ற மருத்துவர்,
“அவங்களுக்கு அல்ரெடி வலி வந்திருச்சு, வாட்டர் பேக் ப்ரோக் ஆகிருச்சு. நார்மல் டெலிவரிக்கே ட்ரை பண்ணலாம். அதுக்கு அவங்க கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகணும். இல்லையா ஆப்பரேட் பண்ணி பேபியை எடுக்க கோ-ஆப்ரேட் பண்ணனும். ரெண்டும் முடியாதுன்னு இருக்காங்க. நாங்க என்ன பண்ணட்டும்?” என்று கேட்டார்.
“இப்படியே டைம் வேஸ்ட் பண்ணா, ரெண்டு பேரில் ஒருத்தரைத்தான் காப்பாற்ற முடியும். நீங்க கொஞ்சம் பேசி பாருங்க சார்” என அவர்களுக்கான தனிமை கொடுத்து அவ்வறையிலேயே சற்று தள்ளி வந்தார்.
மருத்துவர் சொல்லிய ‘ஒரு உயிர் தான் காப்பாற்ற முடியும்!’ என்கிற வார்த்தை பாவனாவை அசைத்து பார்த்தது.
குழந்தை அவளுக்கு என்பதைவிட அவனுக்காகத்தான் ஏற்றுக்கொண்டாள்.
குழந்தையின் மீது யது எத்தனை பிரியமாக இருந்தானென்று நொடிக்கு நொடி பார்த்து அனுபவித்தவளாயிற்றே. அவனக்கு ஏமாற்றத்தை கொடுத்திடுவாளா என்ன?
“என்னதாண்டி உன்னை போட்டு வாட்டுது. நானிருக்கும் போது நீ இப்படி உள்ளுக்குள்ளே வச்சிக்கிட்டு மருகலாமா?” என்றவன் இப்போது இதனை கேட்டு அறிந்திட நேரம் இதுவல்ல என்று, அவளின் நெற்றியில் ஆழமாக முத்தம் வைத்தான்.
“உன் பக்கத்தில் தாண்டா நானிருக்கேன். பயப்படாத! ஆப்பரேட் பண்ணி எடுக்கிறது பியூச்சரில் ரொம்ப கஷ்டம் கொடுக்கும்டாம்மா. எனக்காக கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு. டேக் அ டீப் ப்ரீத். பேபி பாரு வெளிய வந்து உன்னையும் என்னையும் உதைக்க ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கு. நீ கூல் ஆனா நம்ம கைக்கு வந்திடும்” என்று பேசி பேசியே மனைவியை இயல்பு நிலைக்கு மீட்டெடுத்திருந்தான்.
காரில் அவன் தனக்காக அழுததை கண்டவள், அவ்வளவு நேரமும் அவனுக்காக கட்டுப்படுத்தி வைத்திருந்த வலியை அப்போதுதான் உணர்ந்து அவனது மார்புச் சட்டை இறுக்கி பிடித்து, பற்களை கடித்து வலியை பொறுக்க…
குழந்தையை மானிட்டரில் கவனித்துக் கொண்டிருந்த செவிலி பதட்டம் கொண்டவராக மருத்துவரின் அருகில் சென்றார்.
அதனை கவனித்த யதுவிடமும் பதட்டம் தொற்றியது.