நேச நெஞ்சங்கள் 50

உயிர் உறை 50

மொழி 13

செவிலியின் படபடப்பு மருத்துவரையும் ஒட்டிக்கொண்டது.

வேகமாக பாவனாவின் அருகில் வந்த மருத்துவர்,

“சார் நீங்க கொஞ்சம் வெளியில் இருக்கீங்களா?” என்று பதட்டத்துடன் கூறினார்.

யதுவிற்கு என்னவோ ஏதோவென்று பயந்து வந்தது.

மருத்துவரின் அதிவேகம் கண்டு பாவனா யதுவை அனுப்ப முடியாது எனும் விதமாக அவனது கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். தலையால் தன் மறுப்பை காண்பித்தாள்.

“பாவனா புரிஞ்சிக்கோங்க. குழந்தையோட இதயத்துடிப்பு கம்மி ஆகிட்டே இருக்கு. குழந்தையோட தலையும் வெளியில் தெரிய ஆரம்பிச்சிடுச்சு, முடிஞ்சளவு நார்மல் டெலிவரியே ட்ரை பண்ணலாம். அதுக்கு நீங்க ஒத்துழைக்கணும்” என்ற மருத்துவர், பாவனாவின் முகம் கண்டு என்ன நினைத்தாரோ, யதுவை ஏறிட்டார்.

யதுவின் முகத்தில் தெரிந்த பரிதவிப்பில்,

“ஸ்டே ஹியர் சார்” என்று சொல்லிவிட்டு தன் வேலையில் கவனம் வைத்தார்.

“மேல் வயிற்றில் கை வைத்து, நல்லா புஷ் பண்ணுங்க பாவனா” என்ற மருத்துவர் தானும் சொன்னதை செய்தார்.

குழந்தையின் துடிப்பு குறைகிறது என்றதுமே பாவனாவிற்குள் அனைத்து எதிர்மறை உணர்வுகளும் அதிகரித்துவிட்டன. பதட்டம் பயம் அதிர்ச்சி என்று எல்லாம் கலந்த உணர்வில் சிக்கியவளுக்கு வலியின் சாயல் மேல் வலியை கூட்டி காட்டியது.

“ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்டாம்மா…” தன் பிடியிலிருந்த பாவனாவின் கையை தன்னிதழில் வைத்தவனாக ஜெபம் போல் சொல்லிக்கொண்டே இருந்தான். அவனது கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

மருத்துவருக்கு கணவனின் கண்ணீர் அதுவும் எத்தனை பெரும் பதிவியில் இருக்கிறான்… அவனது கண்ணீர் கவலையை கொடுத்தது. பாவனா கொஞ்சம் முயன்றாலும் குழந்தை வெளியில் வந்துவிடும்.

“ட்ரை பண்ணுங்க பாவனா.”

“முடியல டாக்டர்.” அவளால் சொல்ல முடியாததை யது புரிந்து கொண்டான்.

அவனால் அவள் படும் வலியை கண்கொண்டு பார்க்க முடியவில்லை.

“டாக்டர் ப்ளீஸ்… ஆப்பரேட் பண்ணிடுங்க.” குரல் அடைத்தது. கண்ணீர் கன்னம் தாண்டியது.

“சார் இப்போ அது இன்னும் காம்பிலிகேட்டட். குழந்தையோட தலை தெரியுது. நார்மல் ஆகிடும்” என்று பாவனாவை பார்த்தபடி சொல்லிய மருத்துவரின் பார்வை மானிட்டரில் படிந்தது.

“ஃபீட்டல் பீட் நார்மல் ஆகியிருந்தது.” தாயின் பயத்தில் குழந்தையும் பயம் கொண்டிருந்தது போல். பயத்தை உள்வாங்கியதாக குழந்தை இப்போது சாதாரணமாக வெளிவர முந்திக்கொண்டிருந்தது.

மருத்துவருக்கு ஆசுவாசம். இருப்பினும் அதனை காட்டிக்கொள்ளாது, குழந்தைக்கு ஒன்றென்று பயம் காட்டினால் தான் பாவனா வேகமாக செயல்படுவாள் என்று அவளின் மன ரீதியாக உணர்ந்து செயல்பட்டார்.

“குழந்தை உயிரோடு வேணுன்னா பயத்தை விடுத்து நீங்கதான் முயற்சி செய்யணும்.” எல்லாம் உன் கையில் என்பதைப்போல் சொல்லிவிட்டார்.

“எண்ட ப்ரீயே…” யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் யது பார்க்கவில்லை. மனைவியின் நெற்றியில் முத்தம் வைத்தவன்,

“என்னால முடியலடா… உன்னை இப்படி… நம்ம குழந்தை” என்று திணறி கூறியவன்,

“டாக்டர் ப்ளீஸ்” என்றவனாக வெளியேற அடிகள் வைத்தான்.

அந்நிலையில் அவளுடன் இருக்க வேண்டுமென்கிற உந்துதல் இருந்தாலும், அதனையெல்லாம் அவளின் அழுகையும் வலியும் உடைத்திருந்தது.

குழந்தை உயிரோடு என்கிற வார்த்தை… அத்துடன், தன்னுடைய நந்து ஆசைப்பட்ட குழ்ந்தையை அவனது கைகளில் ஒப்படைக்க வேண்டுமென்கிற எண்ணம் திடம் பாவனாவுக்கு வேகத்தை கொடுத்தது.

முதுகில் தெறிக்கும் வலியை செல்லும் யதுவின் முதுகையே வெறித்தவளாக பொறுத்துக்கொண்டவள், தன்னுடைய வயிற்றில் கையை வைத்து அழுத்தம் கொடுத்து தள்ளிட…

“இன்னும் ட்ரை பண்ணும்மா. குழந்தை போராடுற அளவுக்கு நீங்க போராட வேண்டாமா?”

குழந்தையின் போராட்டம். ஆம் வெளியுலகை காண தாயின் வயிற்றில் ஒரு யுத்தமே நடத்திக்கொண்டிருந்தது.

பாவனாவின் மனமும் மூளையும் ஒரே நேர்கோட்டில்… என் நந்துவின் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியாத என்ற அதிர்ச்சியை சந்திக்க..  உடல் முழுவதும் விரவிய வலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாது… வாயிலில் நின்று தன்னை திரும்பிப் பார்த்து, முன்னோக்கி அடி வைத்த கணவனை கண்ணீர் பொங்க ஏறிட்டபடி… ‘போகாத நந்து’ என்ற வார்த்தையை மனதில் உறுபோட்டவளாய்… தன்னுடைய வேதனையில் கணவனின் உடனிருந்திட வேண்டுமென்கிற தவிப்பில்… தான் அழைக்காவிட்டால் தன்னுடைய பார்வையிலிருந்து மறைந்துவிடுவானோ என்று அதிர்ச்சு கொண்டவளாய்…

“நந்து” என அவ்வறையே அதிர்ந்திட அடித் தொண்டையிலிருந்து கத்தியிருந்தாள்… யதுவின் வார்ப்பாக ஆண் குழந்தையும் இப்பூவுலகில் ஜனித்திருந்தது.

அவளின் ஆசை நிறைவேறியிருந்தது. குட்டி நந்து பிறந்திருந்தான்.

அறைவாயிலை கடக்க இருந்த வேளை, பாவனாவின் குரல் வழி அழைப்பு… யதுவின் தேகம் முழுக்க சிலிர்ப்பை உண்டாக்கியது. ஒருவித பரவசம் அவனுள். இரட்டிப்பு மகிழ்வு.

குழந்தையின் அழுகையையும் மீறி கேட்டிட்ட மனைவியின் கத்தலில்… அவளை இரண்டே எட்டில் நெருங்கியிருந்தான்.

“பேபி…” யதுவின் கண்களில் கண்ணீர் திரண்டு நின்றது.

“நந்து” காற்றாய் ஒலித்த குரலோடு மயங்கியிருந்தாள்.

“டாக்டர்!” யது பயந்துவிட்டான்.

“உங்க மனைவிக்கு இந்த அதிர்வில் தான் போன குரல் மீண்டு வரணும் இருந்திருக்கு. இந்த மயக்கம் நார்மல் தான்” என்ற மருத்துவர், “உங்க பேபியை விட்டுட்டு, உங்களுடைய பேபியை பாக்குறீங்களா?” எனக் கேட்டார்.

“கிண்டல் பண்றீங்க நீங்க…” யதுவின் முகம் சிரிப்பில் விரிந்தது.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இருந்த சி.எம் இவரில்லை போலிருக்கே” என்றவாறே குழந்தையை தாயின் மார்பு சூட்டை உணர வைத்த பின்னர் யதுவின் கையில் கொடுத்தார் மருத்துவர்.

தன்னுடைய இரண்டு பேபியுமே நலமுடன் இருக்கிறார்கள் என்றதும் நொடியில் தன்னை மீட்டிருந்தான் யதுநந்தன்.

மலருக்கும் நோகுமோ எனும் விதமாக தன் மொட்டு மகவை கைகளில் லாவகமாக ஏந்தியவன் தன்னுடைய மார்போடு அணைத்துக்கொண்டான்.

“பாருடா… சாருக்கு எப்படி பிடிக்கணும் தெரிஞ்சிருக்கே?” என்ற மருத்துவருக்கு புன்னகையை காட்டியவன்,

“இவன் எங்களுக்கு இரண்டாவது பேபி டாக்டர். பர்ஸ்ட் பேபி ஹேண்டில் பண்ணியிருக்கேன்” என்று யது சொல்லியதைக் கேட்ட மருத்துவருக்கு நன்கு தெரியும், பாவனாவுக்கு இது முதல் பிரசவம் என்று.

செய்தி சேனலில் அன்று ஒருநாள் யது ஷாவை தன்னுடைய பிள்ளையென்று அறிமுகம் செய்திருக்க… முதல்முறை பாவனாவை பரிசோதித்த மருத்துவருக்கு அதிர்ச்சி தான். இருந்தாலும் விளக்கங்கள் கேட்டுக்கொள்ளவில்லை.

ஷாவை தத்தெடுத்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டார்.

ஆனால் இப்போது கூட ஷாவை யது விட்டுக்கொடுக்காமல் பேசியது அவன் மீது மனிதனாய் உயர்வெண்ணம் கொண்டார்.

அரை மயக்கத்திலும் கணவனின் அவ்வார்த்தைகளை கேட்ட பாவனாவின் விழியோரம் நீர் கசிந்தது.

அக்கணம் மனதின் ஆழத்தில் தனக்கென்று குழந்தை வந்த பின்னர் யது ஷாவை எப்படி நடத்துவானோ என்கிற கலக்கம் முற்றும் முழுவதும் அவளது நெஞ்சத்திலிருந்து நீங்கியிருந்தது.

சொல்லப்போனால் அவளுக்கு தனக்கு குரல், ஓசை வந்துவிட்டது என்கிற மகிழ்ச்சியை விட யதுவின் வார்த்தைகள் தான் ஆயிரம் மடங்கு மகிழ்வை கொடுத்தது.

“நந்து…” மயக்கத்திலும் அவள் வாய் முணுமுணுத்தது.

யதுவிற்கு உலகயே வென்ற உணர்வு.

“கொஞ்ச நேரத்தில் வார்டுக்கு மாற்றிடுவோம். நீங்க குழந்தையை குடுத்திட்டு வெளிய இருங்க சார்” என்ற மருத்துவரிடம் தலையசைத்த யது, மார்போடு ஒட்டியிருந்த சிசுவை ஆழ்ந்து பார்த்தவன்… பட்டும் படாது கன்னத்தில் விரல் வைத்து வருடினான்.

இதழ் ஒற்றும் ஆவல் பொங்கி பெருகினாலும், தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால் வேண்டாமென்று செவிலியிடம் கொடுத்துவிட்டு, பாவனாவின் அருகில் சென்றான்.

குழந்தைக்கு கொடுக்க வேண்டிய முத்தத்தையும் மனைவிக்கு கொடுத்துவிட்டு வெளியேறினான்.

ஷாவை உறங்க வைத்துவிட்டு ராதாவும் பாசிலுடன் காத்துக்கொண்டிருந்தார்.

வெளியில் வந்தவன், “பையன் ராதாம்மா” என்று பாசிலையும் பார்வையால் தொட்டு மீண்டான்.

அந்நேரம் பாசிலின் அலைப்பேசி ஒலித்தது.

“விநோ!” ராதாவிற்கு கேட்டுவிடாது உதடு மட்டும் அசைத்தான்.

விநோவிடம் இருந்த நிலையில் யது சொல்லியிருக்கவில்லை. அதனால் எப்படி என்று புருவம் உயர்த்தினான் யது.

“மீடியாக்கு லீக் ஆகிடுச்சு யது. எல்லாரும் வெளியில் தான் இருக்காங்க. இந்த தளம் மட்டும் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது” என்றான் பாசில்.

“ஹோ” என்ற யது ஒலித்துக்கொண்டிருந்த அலைபேசியை ஏற்று காதில் வைத்தவனாக ராதாவிடமிருந்து சற்று நகர்ந்து சென்றான்.

“விநோ…” யதுவின் குரல் உடைந்திருந்தது. அவனது உணர்வுகள் வெளிப்படுவது விநோ மற்றும் பாவனா இடத்தில் மட்டுமே!

என்னதான் இருவரும் நலமுடன் இருக்கின்றார்கள் என்றாலும், அந்நேரம் மனதில் எழுந்த பயம் பதட்டம் யாவும் யதுவை இக்கணம் உடைய வைத்தது.

“ஹேய் யது… சில் டா. என் யது இதில்லையே!”

“விநோ… விநோ அப்பாடா… அப்பா பிறந்திருக்கிறார் டா.”

“சூப்பர் டா. கங்கிராட்ஸ் யது. பாவனா எப்படி இருக்கா?”

“நல்லாயிருக்காடா. மயக்கத்தில் இருக்காள்.”

“என் மருமகன் போட்டோ அனுப்பு யது” என்ற விநோ, “இனியொருமுறை நீயிப்படி உடைஞ்சு நிக்கக்கூடாது. என் யது எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும்” என்ற விநோவும் வெகுவாக நெகிழ்ந்திருந்தான்.

யதுவின் விநோ என்ற ஒற்றை அழைப்பில் நண்பனின் மன நிலையை அவதானித்திருந்தான் விநோதன்.

“இவ்வளவு அக்கறை இருக்கவரு நேரில் வரது!”

“டேய் வந்தன்னு வச்சிக்கோ பிச்சிடுவேன். என்ன சிட்டுவேஷனில் என்னை கோர்த்துவிட்டிருக்க தெரியுமா? இப்போவே எவண்டா ஒட்டு கேட்பானோன்னு பயந்து பயந்து உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்” என்ற விநோவின் புலம்பலில் யது சத்தமாக சிரித்துவிட்டான்.

“ஹான்… இப்படி நீ சிரிக்கிறது தான் நல்லாயிருக்கு. இப்படியே இரு. நான் வச்சிடுறேன்” என்ற விநோவின் அழைப்பு துண்டிக்கப்பட்டதும், பாசிலிடம் கண் காட்டிவிட்டு யது வரவேற்பு லான் பகுதிக்கு சென்றான்.

ஒட்டு மொத்த மீடியாவும் மைக் மற்றும் காமிராவை பிடித்துக்கொண்டு யதுவிற்காகக் காத்திருந்தனர்.

“சார் என்ன குழந்தை?”

“உங்க வைஃப் எப்படியிருக்காங்க?”

“குழந்தை ஆரோக்கியமா இருக்கு?”

மென் புன்னகையில் அனைவரின் கேள்வியையும் ஏற்றவன்…

“மகன் பிறந்திருக்கிறான். தாய், சேய் ரெண்டு பேரும் சூப்பரா இருக்காங்க” என்றான்.

“சார் குழந்தையோட போட்டோ கிடைக்குமா?” ஒருவர் கேட்டிட, சிரிப்புடன் தலையாட்டியபடி வந்துவிட்டான் யது.

அதற்குள் அம்மா, மகன் இருவரையும் அறைக்கு மாற்றியிருந்தனர்.

இருவருமே உறக்கத்தில் இருந்தனர்.

“இப்போ தான் தூங்கனாங்க யது. நீ வீட்டுக்கு போயிட்டு வறதுன்னா வா” என்றார் ராதா.

“இல்லைம்மா. நான் இருக்கேன்” என்ற யது, “ஷா கூட்டிட்டு வரலையா?” எனக் கேட்டான்.

“குழந்தை முழிக்கட்டும். கூட்டிட்டு வந்து காட்டுவோம்” என்றார் ராதா.

அப்போது உள்ளே வந்த பாசில்…

“யது… ஜார்ஜ், மற்ற தலைவர்கள் எல்லாம் குழந்தையை பார்க்கணும் சொல்றாங்க. என்ன சொல்லட்டும்?” என்று வினவினான்.

“இங்க வேண்டாம் பாசில். குழந்தை வீட்டுக்கு கூட்டிட்டு போனதும் சின்ன செலபிரேஷன் மாதிரி வச்சிடலாம்” என்றான்.

அந்த விருந்தில் தான் யதுவின் உயிருக்கும் எதிரி நேரம் நிர்ணயத்திருக்கிறான். அதில் யது மாட்டுவானா அல்லது யது எதிராளியை கண்டு கொள்வானா?

யது மற்றும் பாவனா தம்பதியருக்கு ஷா என்ற மகள் இருந்தாலும், இப்போது மகன் பிறந்தது தான் நாடறிந்தது என்பதால், மாநிலத்தின் முதல்வராக யதுவிற்கு பல தலைவர்களிடம் வாழ்த்துக்கள் வந்தது.

அனைத்தையும் சிறு புன்னகையில் ஏற்று, மௌனமாகக் கடந்துவிட்டான்.

குழைந்தை பிறந்த விடயம் அறிந்து, துருவன், பூரணி, கோகிலா மூவரும் வந்துவிட்டனர்.

கட்சியில், சமூகத்தில் உள்ள பெரும் புள்ளிகளுக்கு மறுக்கப்பட்ட வரவேற்பு, அவனது நட்பால் கிடைத்த உறவுகளுக்கு வழங்கப்பட்டது.

இவ்விடயம் ஊடகங்களில் க்கு வைத்து பேசப்பட்டது.

“தொழில் நட்பு வேறு, உறவுகள் வேறு. அவர்கள் என் குடும்பம்” என்று ஒரே வரியில் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்திருந்தான்.

துருவை கண்டதும் இறுக்கமாக அணைத்து விடுவித்த யது, பூரணியிடம் செல்லம் கொஞ்ச…

“உங்களுக்கே மகன் பிறந்தாச்சு இப்பவும் சின்ன பிள்ளை மாதிரி அம்மாகிட்ட கொஞ்சிட்டு இருக்கீங்க?” என்று கிண்டல் செய்த கோகிலாவை,

‘யாருடா இந்தப்பொண்ணு’ என்று ஏறயிறங்க பார்த்திருந்தான்.

‘விநோவுக்கு தம்பி மட்டும் தானே, ஆனால்… இந்த பொண்ணு இவங்களோடவே இருக்கு?’ கேள்வி தோன்றினாலும் அவளைப்பற்றி அறிய தனக்கு அவசியமில்லை என்று கோகிலாவை புறம் தள்ளினான். பின்னாளில் அவளின் நினைவுகளில் மட்டுமே தான் தவிக்கயிருக்கிறோம் என்பதை அறியாமல்.

அலைபேசி அழைப்பு வர பாசில் தள்ளிச் சென்றுவிட்டான்.

கோகிலாவின் தலையில் கொட்டிய யது,

“நீ உன் மருமகனை கொஞ்சுற வேலையை மட்டும் பார்” என்று குழந்தையை தூக்கி அவளின் கையில் கொடுத்தான்.

“வாவ் யதுண்ணா… குட்டி ரோஜா மாதிரி இருக்கான்” என்ற கோகிலாவின் கண்கள் குழந்தையின் அழகில் அகல விரிந்தது.

“கண்ணு வச்சிடாதீங்க கோகிக்கா” என்ற துருவ் மகவை, தான் வாங்கிக்கொள்ள… அவனின் மனம் தன்னுடைய அண்ணனின் இறப்பிலிருந்து வெகு நாட்களுக்கு பின்னர் அன்றுதான் லேசானது.

பாவனாவும் குழந்தையும் வீட்டுக்கு வந்த பின்னரும் கூட நான்கு நாட்கள் இருந்துவிட்டே விநோவின் குடும்பம் கிளம்பியது.

அவர்கள் கூடு சிறியது தான். ஆனால் அங்கு அன்பிற்கும் பாசத்திற்கும் பஞ்சமில்லை.

அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு அமர்ந்த யதுவின் அருகில் பாசில் தயங்கி தயங்கி அவன் முகம் பார்த்தான்.

“என்னடா… ஏதோ மென்னு முழுங்கிட்டு இருக்க?” என்ற யதுவின் விசாரணை தன்மையில் பாசில் அன்று துருவன் மருத்துவமனை வந்த முதல் நாள் தனக்கு வந்த அழைப்பை பற்றிக் கூறினான்.

சொல்லப்போனால் அது யதுவிற்கு வந்த அழைப்பு. யதுவின் அலைபேசி பாசிலின் வசம் அன்றிருந்தது.

பாசில் அழைப்பை ஏற்றதும் யது தான் பேசுகிறானென்று, அவனை பேசவிடாது எதிர்பக்கமிருந்து அதிரடியான சிரிப்பின் ஒலி.

‘எவண்டா அது போனை போட்டு இப்படி சிரிக்கிறது. லூசு மாதிரி.’ அலைபேசியை காதிலிருந்து தள்ளி பிடித்த பாசில் காதினை தேய்த்து விட்டுக்கொண்டான்.

“ஹலோ… யாருங்க?” என்ன முயன்றும் அவனது சிரிப்பின் கடுப்பில் பாசிலுக்கு குரல் அதிகமாக வந்துவிட்டது.

“பாருடா முதல்வருக்கு கோபமெல்லாம் வருது போலிருக்கே!” நக்கலான குரல்.

‘இந்த லூசு என்னை யதுன்னு நினைச்சிட்டான் போலிருக்கே!’

“என்ன சைலண்ட் ஆகிட்டிங்க தலைவரே?” எனக் கேட்டவன், “நீங்க தான் கூல் சி.எம் ஆச்சே, கோபமெல்லாம் வராதுன்னு கேள்விப்பட்டேன்” என்றான்.

‘எவனோ வேண்டாதவன் தான்’ என நினைத்த பாசில், ‘யதுவிடம் கொண்டு போகாது நாமே என்னன்னு பார்த்து பேசி வச்சிடுவோம்’ என்று எண்ணம் கொண்டவனாக…

“எதுக்காக கால் பண்ணீங்க?” என வினவினான். முடிந்தவரை யது போல் தன்மையாக பேசிட முயன்றான்.

“பையன் பிறந்திருக்கிறான் போல…” என்றவன், “கொள்ளி வைக்க ஆள் வந்தாச்சு” என்றான்.

பாசிலுக்கு சப்தநாடியும் உறைந்தது. உடல் சில்லிட்டது.

பேசியவன் நேரில் இருந்திருந்தால் பாசிலின் கோபத்திற்கு இரையாகியிருப்பான். அவன் யதுவின் உயிர் பற்றியல்லவா பேசியிருந்தான். பாசில் நொடியில் கண்டுகொண்டான், தங்களது எதிரி என்று.

“நீ என்னை தேடிட்டு இருக்கன்னு தெரியும். நானே உன் கண் முன்னாடி வரேன்.”

“என்ன பேச்சே காணோம்” என்றவன், “உன் பையன் பிறந்ததுக்கு பார்ட்டி வைக்கப்போறியாமே, அன்னைக்கு உன்னை தூக்குறேன். உன்னுடைய கடைசி நாள் அதுதான்” என்று கொக்கரித்தான்.

“என்னடா இத்தனை நாள் இல்லாம, இன்று நேரடியா நானே பேசியிருக்கேன்னு யோசிக்கிறியா?” என்று மிதப்பாகக் கேட்டு, “இருக்கும் நாளைவிட சாகும் நாள் தெரிந்துவிட்டால், வாழப்போகும் கொஞ்ச நாளும் நரகமாகுமாமே! அந்த நரகத்தை உனக்கு காட்டிடத்தான். எப்போ எவன் கடத்துவானோன்னு பார்க்குற எல்லாரையும் சந்தேக கண்ணோடு, பயம் கொண்டு நீ பார்த்து தவிக்கிறதை நான் பார்த்து ரசிக்கப்போறேன்” என்ற இணைப்பு, அவனின் எரிச்சலான கத்தல் சிரிப்பில் துண்டிக்கப்பட்டிருந்தது.

“போன் எடுத்தது யாருன்னு தெரிஞ்சிக்காம கூட மிரட்டுறான். இவனெல்லாம் வில்லன்” என்று வாய்விட்டு சொல்லிக்கொண்ட பாசில் யதுவிடம் சொல்வதற்கு வர, விநோ குடும்பத்துடன் சேர்ந்து ஒரு குடும்பமாக யதுவை சூழ்ந்திருக்கும் மகிழ்ச்சியை கெடுக்க நினைக்காது அவர்கள் செல்லும் வரை காத்திருந்து இன்று சொல்லியிருந்தான்.

யதுவின் முகத்தில் ஆழ்ந்த அமைதி.

“யது…”

“எனக்கு அன்னைக்கே தெரியும் பாசில். யூ டோன்ட் வொர்ரி” என்றான் யது.

பாசிலின் முகத்தில் சிந்தனை கோடுகள்.

“கால் ரெக்கார்டர் ஆக்டிவேட்டில் இருக்குடா. சோ, நான் கேட்டுட்டேன்” என்று விளக்கம் கொடுத்தான் யது.

“நெட் கால். ட்ராக் பண்ண முடியல. பட், நான்… யாருன்னு கண்டுபிடிச்சிட்டேன் நினைக்கிறேன்” என்றான்.

“யாரது யது. எப்படி?” பாசிலிடம் ஆர்வம்.

“சொல்றேன்” என்ற யது அமைதியாகத்தான் இருந்தான். அவனுள் ஏதோ யோசனை ஓடிக்கொண்டிருந்தது.

“நந்து…” பாவனாவின் விளிப்பில் சிந்தை கலைந்தவன்,

“வெயிட் பாசில்” என்றவனாக அறைக்குள் சென்றான்.

பாவனாவிற்கு பேச்சுக்கள் இன்னும் சரளமாக வரவில்லை. பேசுவதற்கு முன் கொஞ்சம் திணறுகிறாள். நந்து என்கிற உச்சரிப்பு மட்டும் அத்தனை தெளிவாகவும் அழுத்தமாகவும் வந்தது. பேச்சு பயிற்சிக்கு தினமும் அதற்குரிய பயிற்சியாளர் வீட்டிற்கே வந்து பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார். பாவனாவிடம் நல்ல முன்னேற்றம் தென்படுகிறது.

அறைக்குள் சென்ற யது…

“ரெண்டு பேரும் எழுந்தாச்சா?” எனக் கேட்டுக்கொண்டே மனைவியின் கையிலிருந்த தன் அச்சனை வாங்கிக்கொண்டான்.

“பசி ஆறிட்டான் நந்து… கொ.. கொஞ்ச நேரத்துக்கு அமைதியா இருப்பான். நான் குளிச்சிட்டு வந்துடுறேன்” என்றவள் குளியலறை நோக்கி நகர, அவளின் சேலை தலைப்பின் நுனியை பற்றியிருந்தான் யது.

“என்ன?” எனும் விதமாக பாவனா இடுப்பில் கை குற்றி புருவம் உயர்த்தி வினவ,

“நந்து சொல்லிட்டு போ” என்றான்.

நந்து என்று அவளது குரல் ஒலிக்கத் துவங்கியது முதல் யதுவிடம் குடிகொண்டுள்ள பிடிவாதம் இது.

பாவனா எத்தனை முறை கூறினாலும் அவனுள் சளிக்காது திரும்பத்திரும்ப சொல்ல சொல்லிக் கேட்டுக்கொண்டே இருக்கின்றான். அவனது பல வருட ஏக்கமாயிற்றே. சில நாள் விளிப்பில் அடங்கிவிடுமா என்ன? விழிகள் மட்டுமே பேசிக்கொண்ட மொழிகள் இன்று வார்த்தை வடிவம் பெறும் போது நெஞ்சம் தித்திக்கிறதே! அந்த சுகத்தை அனுபவித்திடவே அதிகம் விரும்பினான்.

“முடியாது சிஎம்.” சிரித்துக்கொண்டே சொல்லியவள், நாக்கை துருத்தி காட்டிவிட்டு ஓடி மறைந்தாள்.

“என்கிட்ட வந்துதான் ஆகணும்.”

“வந்ததும் பார்த்துக்கலாம் நந்து…” குளியலறை கதவை தாண்டி ஒலித்த அவளின் நீண்ட உச்சரிப்பில் சிரித்தவனாக, மகனது கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்து அறையை விட்டு வெளியில் வந்தான்.

“ராதாம்மா இல்லையா?”

“குட்டி சிஎம் வாங்க” என்று யதுவிடமிருந்து குழந்தையை வாங்கிய பாசில் கேட்டிருந்தான்.

“ராதாம்மாவும் ஷாவும் கோவில் போயிருக்காங்க” என்ற யது தன்னுடைய மகவுடன் ஐக்கியமாகி விட்டான்.

எதிரியை பற்றி யது எதுவும் பேசுவானென்று அவனது முகத்தையும் வாயையுமே மாற்றி மாற்றி பார்த்திருந்த பாசிலும் ஒருகட்டத்தில் குழந்தையுடன் ஒன்றிவிட்டான்.

தரையில் பெட்ஷீட் விரிக்கப்பட்டிருக்க அதில் சிதறி கிடந்த பொம்மைகளோடு பொம்மையாக யதுவும் பாசிலும் மாறியிருந்தனர். குட்டிக்கு விளையாட்டு காட்டுகிறேன் என்கிற பெயரில் குட்டிகரணம் எல்லாம் அடித்தனர்.

குளித்து முடித்து கீழ் வந்த பாவனா, அவர்களின் சேட்டையை பார்த்து…

“அச்சோ நந்து என்ன பண்றீங்க?” என்று கேட்டவள், “உங்க ரெண்டு பேரையும் இப்போ யாராவது பார்த்தால் சிஎம், அவரோட பிஏ’ன்னு ஒத்துக்கவே மாட்டாங்க” என்றாள்.

“நான் கூட ஒத்துக்க மாட்டேன் தான்.” வாயிலில் சத்தம் கேட்டு பார்க்க ஜார்ஜ் வந்திருந்தார்.

“சிஎம் அப்படின்னா தலையில் ரெண்டு கொம்பா முளைத்திருக்கு” என்ற யது, “எங்களுக்கும் குடும்பம் இருக்கும்மா” என்றான். மற்ற இருவர் அறியாது பாவனாவிடம் குறும்பாக கண் சிமிட்டினான்.

“இங்க ரெண்டு கொம்பு இல்லை… ரெண்டு வாலு தான் முளைச்சிருக்கு.” அருகிலிருந்த யதுவுக்கு மட்டும் கேட்கும் வகையில் முணுமுணுத்தாள்.

பாவனா விளையாட்டாக சொல்ல, யது உண்மையிலேயே தன் பின்னால் திரும்பி பார்த்துவிட்டு “இல்லையே” என்றான்.

“என்னது?”

“வால்.”

“ஹா… நந்து…” பாவனா அவனது சீரியஸான முக பாவனையில் தன்னுடைய பற்களை கடித்தாள்.

“பேபிக்கு கோபமெல்லாம் வருது.” யதுவிடம் ஒருவித உல்லாசம்.

“ஏன் வரக்கூடாதா?” அடிகண்களால் வினவினாள்.

“வரலாமே” என்று தோள் குலுக்கிய யது, “கோபம் வந்தால் அடிக்கவும் செய்யலாம். இதனால்” என்று தன்னுடைய கையிலிருந்த ட்ரெயின் பொம்மையை காண்பித்தவன், “நோ… இட்ஸ் அயர்ன்(Fe)” என கீழே வைத்தவனாக பஞ்சு பொம்மை ஒன்றை எடுத்து நீட்டி “அடிச்சிக்கோ ப்ரீயே… அடிச்சிக்கோ” என்று சொல்லிக்கொண்டே இருந்தான்.

“லவ் யூ சிஎம்.” அவனது வாயினை மூட வைப்பதற்காகக் கூறியவள் ஒற்றை கண்ணையும் அடித்திருக்க, யது உறைநிலைக்குச் சென்றிருந்தான்.

“பேபி…” என்றவன் ஜார்ஜூடன் பேசிக்கொண்டிருந்த பாசிலையும் சேர்த்து கண் காட்டிட…

“அது இப்போதான் தெரியுதா?” எனக் கேட்டவள், குழந்தையை தூக்கிக்கொண்டு ஜார்ஜிடம் தலை அசைத்துவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாள்.

பாவனா, யது சீண்டலின் போதே அவர்களை கவனிக்காது பாசில், ஜார்ஜை வரவேற்று அமரவைத்து, குடிக்க பானம் அளித்து உபசரிப்புகளை முடித்திருந்தான்.

மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் ஜார்ஜ் மட்டும் தனித்து வந்து ஒருநாள் குழந்தையை பார்த்துச் சென்றிருந்தார்.

ஜார்ஜ் இளையவர்களை கண்டும் காணாததைப்போல் கவனித்து இருந்தார்.

யது தங்களுக்கு அருகில் வந்து அமர்ந்ததும்…

“உண்ணி இருந்திருந்தா இந்நேரம் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பான்” என்றார்.

யது மௌனமாக அவர் சொல்லியதை உள்வாங்கியபடி இருந்தான்.

“யது நீ கொஞ்சம் கவனமா இருப்பா. எனக்கென்னவோ உன்னை நினைச்சாலே படபடப்பா வருது. உண்ணி இறப்பதற்கு முன்பும் மனசு ஒரு நிலையா இருக்காம தவிச்சுகிட்டே இருந்தது. உண்ணி கிட்ட சொன்னேன். அவன் கண்டுக்கல. நீயும் சாதாரணமா கவனக்குறைவா இருந்திடாத யது. கட்சியில் மற்றவர்களுடைய போக்கே சரியில்லை” என்றவர் யதுவின் கவனத்தை மட்டுமே முன் வைத்து பேசிச் சென்றார்.

ஜார்ஜ் சென்ற பின்பும் பாசில் யோசனையிலேயே உழன்று கொண்டிருந்தான்.

கன்னத்தில் கை வைத்து முகத்தை தாங்கியவனாக யது பாசிலையே பார்த்திருந்தான்.

error: Content is protected !!
Scroll to Top