உயிர் உறை 51
மொழி 14
ஜார்ஜ் சென்ற பின்பும் பாசில் யோசனையோடு அமர்ந்திருந்தான்.
“இல்லாத உன் மூளைக்கு என்னடா வேலை கொடுத்திட்டு இருக்க?”
நிமிடங்கள் பல சென்றும் பாசில் அப்படியே இருக்க… யது பேச்சினை ஆரம்பித்து வைத்தான்.
“எனக்கென்னவோ இந்த ஜார்ஜ் மேலத்தான் டவுட்டா இருக்கு” என்றான்.
“நிச்சயம் அவரில்லை.” உடனடியாக யதுவிடமிருந்து மறுப்பு வந்தது.
“நீ அவரை நோட் பண்ணியா யது?” என்ற பாசில்… “ஆரம்பத்தில் உன்னை எலெக்ஷனில் நிற்க வைக்க உண்ணி அச்சனிடம் மறுப்பு தெரிவித்தவர் அவர். அப்போ நீ அரசியலில் வர அவருக்கு விருப்பமில்லை. அதுமட்டுமில்லாம எதிரி நீன்னு என்னை மிரட்டியது நம் ரெண்டு பேரைத் தவிர யாருக்கும் தெரியாது. ஆனால், ஏதோ மனசு நெருடலா இருக்குன்னு… இவரே நம்மை மிரட்டிட்டு நம்மளோட பிரதிபலிப்பு என்னவா இருக்குன்னு பார்க்க வந்திருப்பாரோன்னு தோணுது. அதோட சேத்தனை மாட்டிவிட இவர் ஏன் முயற்சி செய்யக்கூடாது. சேத்தன் கட்சியில் சேர்ந்த போது ரெண்டு பேருக்கும் அப்படி முட்டிக்குமாம். ஐயா சொல்லியிருக்கார். அந்த பகையை மனசில் வச்சு ஏன் செய்திருக்கக்கூடாது. மாட்டிக்கக்கூடாதுன்னு சேத்தனோடு நட்பா இப்போதிருக்கலாம் இல்லையா? பல வருஷமா கட்சியில் இருக்கார். அவருக்கும் முதல்வர் சீட் மீது ஆசை வந்திருக்கலாம் இல்லையா? நீ அரசியலில் அப்போ இல்லாத நிலையில் அச்சன் இடம் காலியானா, அதற்கடுத்த இடத்தில் இருக்கும் அவரைத்தானே முதல்வராக்க அனைவரும் நினைத்திருப்பர். அதனால் அச்சன் இறப்புக்கு வழி செய்துட்டு, இப்போ அதற்கு தடையா வந்த உன்னையும் கொலை செய்ய ஏன் நினைத்திருக்கக்கூடாது?” என்று தன்னுடைய மனதில் உள்ள சந்தேகங்கத்துக்கான காரணங்களையெல்லாம் வரிசையாக அடுக்கினான் பாசில்.
“இப்பவும் சொல்றேன், ஜார்ஜ் கிடையாது” என்ற யது, “நான் அப்போ சின்ன பையன். அரசியலில் ஒண்ணும் தெரியாத என்னை எடுத்ததும் எம்.எல்.ஏ எலெக்ஷனில் நிறுத்த வேண்டாம் என்பது மட்டும் தான் அவரின் எண்ணம். அதுக்காகத்தான் அப்போ அவர் என்னை மறுத்தார். இப்பவும் நான் செய்யும் எல்லாத்தையும் உள்ளுக்குள் பெருமையோடு பார்க்கிறார். என்ன வாய் திறந்து பாராட்டினா, பாராட்டு என்னை அதனுள் அமிழ்த்திடுமோன்னு பார்வையால் மட்டும் மெச்சிக்கிறார்.
சேத்தனும், மேனனும் இரு பிரிவுகளை கட்சிக்குள் உருவாக்கி வைத்திருக்கின்றனர். அந்த பிரிவால் கட்சிக்கு ஆபத்து வந்துடக் கூடாதுன்னுதான் ரெண்டு பேருக்கும் நெருக்கமா பழகி, அவங்க முன் தன்னை எதிர்ப்பா காட்டி மறைமுகமா கட்சியை பிரிய விடாது பிடித்து வைக்கும் பாலமா செயல்படுறார்.
ஜார்ஜ் அங்கிள் என்னுடைய தாத்தாவுக்கு மட்டுமல்ல, அச்சனுக்கும் மிகச் சிறந்த விஸ்வாசி. அவரால் ஒரு போதும் எனக்கு தீங்கு நினைக்க முடியாது” என்ற யதுவிற்கு அக்கணம் தெரிந்து தான் இருந்தது தன்னுடைய எதிராளி யாரென்று.
அவனை கையும் களவுமாக பிடிப்பதற்காகவே பத்து நாட்களுக்கு பின்னர் வைக்கப்பட இருந்த குழந்தையின் பெயர் சூட்டு விழாவை இரண்டு நாட்களில் ஏற்பாடு செய்திருந்தான்.
*******
“கூட்டம் எப்போன்னு முடிவாகிருச்சா தேஜ்?”
“நெக்ஸ்ட் வீக்.”
குட்டப்பனுக்கு பதில் வழங்கிய தேஜ் தனக்குள் எதையோ உருப்போட்டுக் கொண்டிருந்தான்.
“என்னப்பா யோசனை?”
“சரக்கு உள்ள வரவே பெரும் சிக்கலா இருக்கு டாட். எப்படியாவது இந்த கூட்டத்தில் கிடைக்கும் சரக்குகளை வைத்து இங்கு மீண்டும் தொழிலை சூடுபிடிக்க வைக்கணும். புதிதா தயாரிக்கப்பட்ட முறையில் விநியோகம் செய்தா எளிதா கண்டுபிடிக்கவே முடியாது. அதனை மற்ற நம் ஆட்களுக்கு இந்த கூட்டத்தில் அறிமுகம் செய்யணும்.
நம்முடைய கூட்டம் நடப்பதற்குள், அந்த ஆளு யதுவை போட்டு தள்ளிட்டா, நாம் சரக்கை எந்தவித பயமும் இல்லாம விற்கலாம். மீண்டும் தொழிலில் கொடிகட்டி பறக்கலாம்” என்றவனிடம் யது இல்லாமல் போக வேண்டுமென்கிற வெறி வெளிப்படையாகத் தெரிந்தது.
யது அனைத்து விதமான போதைப்பொருட்களுக்கு எதிராக கொண்டு வந்த அதிரடி நடவடிக்கையில் அதிகம் பாதிக்கப்பட்டது தேஜ் மற்றும் குட்டப்பன்.
அவர்களின் பிரதானமான தொழிலே இதுதான். இதில் மாட்டமால் இருப்பதற்காகவே குட்டப்பனை அரசியலில் புகுத்தியிருந்தான் தேஜ். இதுநாள் வரை குட்டப்பனின் அரசியல் பதவியை வைத்துதான் மாட்டாது செய்து வந்தனர்.
ஆனால் அதற்கும் யது, குட்டப்பனின் பதவியை பறித்து கட்சியிலிருந்து நீக்கி ஆப்பு வைத்திருக்க, அவர்களின் மொத்த கோபமும் யது இறந்திட வேண்டுமென்பதில் வந்து நின்றது.
யதுவிற்கு முன்பே உண்ணி குட்டப்பனின் தீய தொழிலை கண்டறிந்து, தனது கட்சியில் முக்கிய பதவியில் இருப்பவர் என்கிற எண்ணத்தில் எச்சரித்திருக்க,
அப்போது உண்ணிக்கு எதிராய் காய் நகர்த்திய உண்ணியின் எதிராளியிடம் கரம் கோர்த்தவர்களுக்கு இப்போது யது இல்லாமல் ஆக வேண்டும். அதில் மாட்டிக்கொள்ளவும் கூடாது. அதனால் அவனிடம் மேலும் நெருக்கம் கொண்டனர்.
அன்று உண்ணிக்கு அந்த நபர் உயிருக்கு கேடு விளைவிக்கக்கூடிய முதல் டோஸ் ட்ரக்ஸ் குளிர் பானம் வழியாக கொடுக்க முயன்ற போது குட்டப்பன் கண்டுகொண்டு அவருடன் இணைந்திருந்தார்.
“நான் வேணுன்னா பேசி பார்க்கட்டும்மா?”
குட்டப்பன் அந்த நபரிடம் யதுவை சீக்கிரம் முடித்துவிட வேண்டுமென்பதை ஒருமுறை சொல்லி பார்ப்பதாகக் கூறிட தேஜ் வேண்டாமென மறுத்துவிட்டான்.
“போனமுறை அவர் நம்மை சந்தித்த போதே, யது மீது அதீத வெறியில் இருந்தான், அதில் கிறுக்கத்தனமாக ஏதேனும் செய்து அவர் மாட்டிக்கொண்டால், அவருடன் பழக்கத்தில் இருக்கிறோமென்று நீயும் நானும் மாட்டிக்கொள்ளபோகிறோம். அதனால் கொஞ்ச நாட்களுக்கு நீயாக அவரை தொடர்புகொள்ள வேண்டாம்” என்று தன்னுடைய தந்தைக்கு விளக்கமாக எடுத்துக் கூறிய தேஜுக்கு, தமிழகத்தில் நடக்கவிருக்கும் அவர்களுக்கான கூட்டத்தின் மீதுதான் இப்போது கண்ணாக இருந்தது.
நாடு முழுவதும் தனக்கு கீழ் வேலை செய்யும் ஆட்களுக்கு முன் நான்தான் உங்களின் தலைவன் என்று சொல்லிக்கொள்ள அத்தனை பேராசை அவனுக்கு.
அப்போது அந்த நபரிடமிருந்து குட்டப்பனுக்கு அலைப்பேசி அழைப்பு வந்தது.
யதுவின் மகனுக்கு பெயர்சூட்டு விழாவுக்கு அழைப்பு வந்ததா என்பதை கேட்டு, இல்லையென்று பதலறிந்து வைத்திருந்தார் அந்நபர்.
“அந்த ஆளு தீவிரமா இறங்கிட்டாருன்னு நினைக்கிறேன். அந்த விசேடத்தில் யதுவை முடிச்சிடுவார்!”
தேஜ்ஜின் கணிப்பு தப்பாகாது என்ற எண்ணம் கொண்ட குட்டப்பனுக்கு சந்தோஷமாக இருந்தது.
அவர் பேசிய ஒற்றை வரியிலேயே யதுவின் எதிராளியாகிய அந்நபரின் திட்டத்தை யூகித்திருந்தான் தேஜ். அவனும் அறியாத ஒன்று, யதுவின் முன் அந்நபரின் கையறுநிலை.
******
அன்று கட்சியின் மொத்த தலைவர்களும் யதுவின் வீட்டில் தான் கூடியிருந்தனர்.
என்ன தான் ஜார்ஜ் அந்த மர்மநபர் இல்லையென்று யது நம்பிக்கையாக சொல்லியிருந்தாலும், பாசிலால் அவரை எளிதாக நம்ப முடியவில்லை.
அதனால் வந்திருப்பவர்களில் ஜார்ஜ் மீது தன்னுடைய முழு கவனத்தையும் வைத்திருந்த பாசில், உண்மையான எதிராளியை கண்டுகொள்ளாது தவற விட்டிருந்தான்.
இந்த விழாவிற்கு மீடியாவிற்கும் யது அழைப்பு விடுத்திருந்தான். தன் குடும்பத்தை முதல் முறையாக மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவும், தன்னை கொல்ல நினைக்கும் நபர் தப்பித்துவிடக் கூடாது என்பதற்காகவும் வரவழைத்திருந்தான்.
விழா தொடங்கியது.
ஷா தான் குழந்தைக்கு பெயர் சூட்டினாள்.
“அச்சோ எண்ட குட்டி மோனே” என்று தன்னுடைய தம்பியை கொஞ்சி முத்தமிட்ட ஷா, அவனது காதில் பெயரை உச்சரித்தாள்.
“உண்ணி நந்தன்” என்ற தன்னுடைய தந்தையின் பெயரைத்தான் யது ஷாவை முதலில் குழந்தையின் காதில் சொல்ல வைத்தான். அதன் பின்னர் பாசில் உட்பட அவனது குடும்பமாக நினைக்கும் ஆட்கள் அனைவரும் சொல்லியதும் வந்திருப்போருக்கு விருந்து உண்ண ஏற்பாடாகியது.
வந்திருப்போர் அனைவரும் பேசி சிரித்தபடி தோட்டத்தில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த வட்ட மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
தான் கூட்டத்தோடு இருக்கும்வரை அந்நபர் தன்னை நெருங்கிட மாட்டானென்று நினைத்த யது, வராத அழைப்பை ஏற்று அலைபேசியை காதில் வைத்தவனாக, யாருமில்லாமலிருக்கும் வீட்டிற்குள் சென்றிருந்தான்.
சில நொடி இடைவெளியில் யதுவை தனித்து சந்திக்க காத்திருந்த அந்நபர் அவனுக்கு பின்னால் சென்றார்.
முதலில் யதுவை கடத்துவதாகத்தான் திட்டம் தீட்டியிருந்தார். ஆனால் இங்கு வந்த பின்பு கூடியிருக்கும் கூட்டம், வந்திருக்கும் மீடியாவை பார்த்து யதுவை கடத்துவது அத்தனை எளிதல்ல என்பதை உணர்ந்து, இங்கேயே யதுவை மொத்தமாக முடிந்துவிட்டால் கூட்டத்தோடு கூட்டமாக தப்பித்து விடலாம். இத்தனை பேரில் அவ்வளவு எளிதாக மாட்டிக்கொள்ள மாட்டோமென்று நம்பிக்கை கொண்டு தன்னுடைய திட்டத்தை மொத்தமாக மாற்றியிருந்தார்.
அதற்காகவே யதுவின் தனிமையை எதிர்பார்த்திருந்தார்.
அவர் வீட்டிற்குள் செல்லும்போது, அவரைத்தான் எதிர்பார்த்து அமர்ந்திருப்பது போல், ஒற்றை கதிரையில் கால் மேல் காலிட்டு கன்னத்தில் கை குற்றி அமர்ந்திருந்தான் யது நந்தன்.
“வாங்க மிஸ்டர்.சேத்தன். உங்களைத்தான் எதிர்பார்த்து, உங்களுக்காக தான் தனியா வந்து அமர்ந்திருக்கேன்” என்றான் அமர்த்தலாக.
ஆம் அந்நபர்… உண்ணியின் சாவுக்கு காரணமான அந்நபர்… யதுவை அழிக்க நினைக்கும் அந்நபர்… சேத்தன்.
“நான்தான்னு தெரிஞ்சிகிட்ட போலிருக்கே?”
யதுவின் தோரணையும், சேத்தனை வரவேற்கும் விதமும் யது அவரை கண்டுகொண்டான் என்பதை அவருக்கு வலியுறுத்தியது.
“நீ அன்னைக்கு கால் பண்ணாம இருந்திருந்தா… மிரட்டாம இருந்திருந்தா நிச்சயம் உன்னை கண்டுபிடித்திருக்கமாட்டேன். அதற்கு முன் ஒரு யூகம் இருந்தது. ஆனால் நீயா எனக்கு உறுதிபடுத்திட்ட” என்ற யதுவை எப்படி எனும் விதமாக கண்கள் இடுங்க ஏறிட்டார் சேத்தன்.
“எப்படின்னு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கீங்கன்னு தெரியுது. சொல்றேன். அதுக்கு முன்னாடி எதுக்காக இந்த கொலைவெறி?” எனக்கேட்ட யதுவுக்கு அவரின் காரணம் தெரிந்துதான் இருந்தது.
ஆனால் தன்னுடைய சட்டை பொத்தானில் உள்ள காமிரா வழியாக உண்மையை அவர் மூலமாகவே மீடியாவுக்கு தெரியவைத்திட அவரிடம் தெரிந்த பதிலுக்கான கேள்வியை கேட்டான்.
“வேறெதுக்கு? எல்லாம் அந்த சிஎம் பதவிக்காகவும், அந்த சீட்டுக்காகவும் தான்” என்ற சேத்தன்… யதுவை நோக்கி துப்பாக்கியை நீட்டினார்.
“கதை கேட்டு முடிச்சிட்டு செத்திடு” என்றவர்,
“என் அப்பன் இருக்கானே அந்த ஆளு அவன்கிட்ட என்னை முதல்வர் ஆக்குன்னு கேட்டா, அந்த ஆளு உன் அப்பனுக்கு எதிரா குண்டூசியை கூட நகர்த்தமாட்டேன்னு என்கிட்டவே சொல்றான். என்னையும் அவனை மாதிரியே காலத்துக்கும் ஒப்புக்கு சப்பாணியா கட்சியில் இருன்னு சொல்றான். நான் அவனுக்கு மகன் தான். ஆனால் அவனில்லையே! அதான் அந்த சீட்டோட சூட்டை தெரிஞ்சிக்க கொஞ்சம் ஆடி பார்த்தேன். நேரா உன் அப்பன்கிட்டவே கேட்டுட்டேன். எனக்கும் நம்பிக்கையான ஆளு எனக்கடுத்து வேணும் சொன்னவரு திடீர்ன்னு என் பையனையே அரசியல் வாரிசு ஆக்குறேன்னு சொல்லிட்டாரு. உன் அப்பன் உயிரோடு இருந்தா என் கனவு நிறைவேறாதுன்னு தான், என் வீட்டில் பார்ட்டி வச்சு… அதில் என் அப்பனை கலந்துக்க முடியாம செய்து உயிரை கொஞ்சம் கொஞ்சமா சாவை நோக்கி கொண்டு செல்லும் ட்ரக்ஸை உன் அப்பனுக்கு கொடுத்தேன்” என்று சொல்லி நிறுத்தினார்.
“ஆமாம் உனக்கு என் அப்பன் யாருன்னு தெரியுமா?” என்று யதுவிடம் கேட்டார்.
சேத்தன் தன் தந்தை யாரென்று தெரியுமாவென யதுவிடம் கேட்டிருக்க, ஏற்கனவே அறிந்த விடயம் தான். இருப்பினும் சேத்தனின் இந்த பழியுணர்விற்கு காரணமே அதுதானே! அதனை அவர் சொல்லியே அனைவருக்கும் தெரியட்டுமென்று நினைத்த யது எதுவும் சொல்லாது அமைதியாகவே இருந்தான்.
அவனது சட்டை பொத்தானில் பொருத்தப்பட்டிருந்த காமிரா வழியாக ஊடகவியலுருக்கும், வந்திருந்த கட்சியின் மற்ற தலைவர்களுக்கும் விழா நடைப்பெற்ற தோட்டத்தில் திரையில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தான் பாசில்.
பாசில், ஜார்ஜ் தான் எதிரி என்று நினைத்திருக்க… அந்நபர் சேத்தன் என்று அறிந்ததும் அடுத்தடுத்து அவர் பேசியதை கிரகிக்க முடியாது அதிர்ந்து பார்த்திருந்தான். அவனுடன் மற்றவர்களும்.
ஜார்ஜ் மட்டும் இதை நான் யூகித்தேன் என்று மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
“யாருன்னு தெரிஞ்சிக்க உனக்கு ஆர்வம் இல்லை போலிருக்கே!” என்று தன்னுடைய கன்னத்தை தேய்த்துக்கொண்ட சேத்தன்…
“நான் சொல்ற மூட்ல இருக்கேன். அதனால் ஆரம்பிச்சதை முடிச்சிடுறேன்” என்று சொல்லத் துவங்கினார்.
“என்ன பெத்தவரு வேற யாருமில்லை உன் ஜார்ஜ் அங்கிள் தான்.”
திரையில் சேத்தன் சொல்லியதை… கேட்ட, பார்த்த அனைவரின் தலையும் ஒரே நேரத்தில் ஜார்ஜை நோக்கி திரும்பியிருந்தது.
ஜார்ஜ் ஆமோதிக்கும் விதமாக அமைதியாக நின்றார்.
பாசில் அவரின் அருகில் சென்று அவரது கைப்பிடித்தவாறு நின்றுகொண்டான்.
“உண்மை தெரியும் போது ஜார்ஜ் அங்கிளுக்கு துணையா அவரோட இரு.” விழா தொடங்குவதற்கு முன்பே யது பாசிலிடம் சொல்லியிருந்தான்.
“அப்பவே அந்த ஆளு மதம் மாற்றி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டார். தைரியமில்லாத கோழை. அவங்க அப்பாவுக்கு பயந்து என் அம்மாவையும் என்னையும் மறைச்சு தான் வச்சிருந்தார்” என்ற சேத்தன்,
“எனக்கு விவரம் தெரிந்த பின்னர், உன் அப்பா தான் இப்போ உயிரோடில்லையே இனியும் எங்களை வெளியுலகிற்கு காட்ட என்ன தயக்கம் கேட்டதுக்கு, திடீரென மனைவி, மகன்னு சொன்னால் அவருடைய அரசியல் மதிப்பு போய்டுமாம். அப்போ அவருக்கு சூடான வயது ரத்தமல்லவா, அரசியலில் உன் தாத்தா மீது அத்தனை பற்று. அரசியலில் அவருக்கு இருந்த ஆசையை பார்த்து தான் நானும் அரசியலில் இறங்கினேன். அந்த ஆளு சப்போர்ட் இல்லாம. அவர் போட்ட சீனுக்கு, கட்சியில் ஆள் இன் ஆளா இருப்பாருன்னு நினைச்சா இங்கு எல்லாமே உண்ணி தான். உண்ணியோட கெத்து யாருக்கும் வராது. அவரோட கண்ணசைவுக்கே இங்கு ஒவ்வொருத்தனும் அஞ்சுவான். அவரோட ஆளுமை, தோற்றம், அந்த சீட்டில் உட்கார்ந்திருக்கும் போது அவரோட கண்ணுல தெரியும் கம்பீரம், அதெல்லாம் பார்க்க பார்க்க எனக்கு அந்த சீட்டில் உட்காரனும் வெறியே வந்துச்சு. அதுவரை எதுவுமே கேட்டிடாத உன் ஜார்ஜ் அங்கிள் கிட்ட, தேர்தலில் என்னை முதல்வர் கேண்டிடேட்டா அறிவியுங்கள் கேட்டதற்கு முடியாதுன்னு மறுத்துட்டார். அப்புறம் உண்ணியை சம்மதிக்க வச்சிட்டேன். அப்பவும் என்னை பெத்தவரு உண்ணியிடம் எதையோ சொல்லி ஆட்டத்தை கலைச்சிட்டார். உண்ணி இருக்க வரை என் ஆசை நடக்காதுன்னு எனக்கு தெரிஞ்சுப்போச்சு. அதான் உண்ணியை கொலை பண்ண முடிவு பண்ணேன். அதுல எப்படியோ தப்பிச்சிட்டார். இருந்தாலும் நான் கொடுத்த மருந்து அவருக்குள் வேலை செய்ய ஆரம்பிச்சுது. அடுத்த டோஸ் கொடுக்க உன் பொண்டாட்டியை மிரட்டி ஏற்பாடு செய்தா, அவள் என்னையவே ஏமாத்திட்டாள். நடுவில் உமர் வேறு என்னை மோப்பம் பிடிச்சிட்டான். அவனை குட்டப்பன் மூலம் குடிக்கு அடிமைப்படுத்தி வச்சிருந்ததால, ஒருநாள் ஞானோதயம் வந்த மாதிரி எல்லாத்தையும் உண்ணிகிட்ட சொல்லிடுவேன்னு என்னையே மிரட்டினான். அவன் வேற எக்ஸ்ட்ரா டிக்கட் ஆகிட்டான். எப்படி இருந்தாலும் என் எண்ணப்படி உண்ணி இறந்திட்டார். சந்தோஷம் தான். என்ன ஒரு வருத்தம், அவர் இடத்துக்கு உன்னை கொண்டு வந்து நிறுத்தி… எனக்கு இப்போ உன்னை கொல்லுற வேலையையும் உண்டாக்கிட்டுப் போயிட்டார். இவ்வளவு தான் என்னோட கதை” என்ற சேத்தன் யதுவை நோக்கி குறி வைத்திட…
திரையில் தெரிந்த காட்சியை கண்டு பாவனா பதறினாள். வீட்டிற்குள் செல்ல முயன்றவளை, எப்படியும் யது அவனை பாதுகாத்துக்கொள்வான் என்கிற நம்பிக்கையில் ராதாம்மா பிடித்துக்கொண்டார்.
“ம்மா… விடுங்க.”
“இப்போ நீ போனா யதுவோட கவனம் சிதறும்.” ராதா சொல்வது சரியெனப்படவே கைகள் நடுங்க, உலகிலுள்ள அனைத்து கடவுளிடமும் தன்னுடைய கணவனுக்கு ஒன்றும் ஆகக்கூடாதென்று வேண்டியபடி நின்று கொண்டாள்.
துப்பாக்கியின் ட்ரிகரில் சேத்தன் விரல் வைத்து அழுத்தம் கொடுக்க முனைந்த நொடி, துப்பாக்கியை நகர்த்தியவராக,
“நான்தான்னு எப்படி கண்டுபிடிச்ச?” எனக் கேட்டார்.
“நீ போனதுக்கு அப்புறம், இன்னொருமுறை இதே மாதிரி எதாவது செய்யனுன்னா… இப்போ நீ கண்டுபிடிக்குற அளவுக்கு கேர்லெஸ்ஸா இருந்த மாதிரி அப்பவும் இருந்திடக் கூடாதுல்ல. செய்யுற தப்பை தடமில்லாம செய்யணும்” என்றார்.
யதுவும் முதலில் சேத்தனை மாட்டி விடுவதற்காக வேறு யாரோ செய்வதாகத்தான் நினைத்தான்.
அன்று பாசிலிடம் பேசிய கால் ரெக்கார்டரை மீண்டும் மீண்டும் கேட்கும் போதுதான், குரல் மாற்றி பேசியிருந்தாலும் பரிட்சயமான ஒலியென்று உணர முடிந்தது. அப்போது மீண்டும் பாவனா கொடுத்த காணொளியின் போது எடுக்கப்பட்ட படத்தை எடுத்து பார்த்தான்.
சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் அனைத்து புகைப்படங்களுமே தீயவற்றை மறைமுகமாக குறிப்பதாகவே இருந்தது. அனைத்தும் எதிர்மறையான கருப்பு வண்ணத்தில். கருப்பு சில நேரங்களில் உள்வாங்குவதை காட்டிலும் பிரதிபலிப்பதிலும் வல்லமை கொண்டது. அப்படித்தான் அந்த புகைப்படத்திற்குள் மாட்டப்பட்டிருந்த ஒரு சட்டத்தின் கருப்பு கண்ணாடி திரையில் அலைபேசியில் பின்பக்க காமிராவை காட்டியபடி பாவனாவுடன் பேசிக்கொண்டிருந்த சேத்தனின் முகம் நச்சென்று பதிந்திருந்தது.
முன்பு பதட்டத்தில் பார்த்தபோது தெரியாதது… இப்போது நிதானமாக பார்க்கும்போது தெளிவாக தெரிந்தது.
தன்மீது சந்தேகம் விழுந்திடக் கூடாது என்பதற்காகவே தன்னைப்பற்றிய க்ளூவை முன்வைத்து சேத்தன் செயல்பட்டார். எதிராளி எப்போதும் தன்னை காட்டிக்கொள்ள விரும்பமாட்டான் என்ற எண்ணத்தோடு.
அவரின் எண்ணப்படிதான் யதுவும் சேத்தனாக இருக்காது. அவரை மாட்டிவிட அவரே வாய்ப்பு கொடுப்பாரா என்று நினைத்தான்.
அனைத்தையும் பக்காவாக செய்த சேத்தன், தன்னுடைய பிம்பத்தை எதிரிலிருக்கும் பிம்பம் உள்வாங்கி பிரதிபலித்திடும் என்று அறியாது போனார். அந்த அறியாமையால் யதுவிடம் வசமாக மாட்டியும் கொண்டார்.
“சரி, நீ சொல்ல வேண்டாம். எனக்கு நேரமில்லை. உன்னை முடிச்சிட்டு கூட்டத்தோட கூட்டமா நான் போய் நிக்கணும். கொஞ்ச நாளில் அந்த ஜார்ஜையும் போட்டுத் தள்ளிட்டு, கட்சியை என் கட்டுப்பாட்டில் கொண்டு வரணும். எனக்கு நிறைய வேலையிருக்கு. உன்கிட்ட டைம் வேஸ்ட் பண்ண முடியாது” என்று சேத்தன் ட்ரிகரில் அழுத்தம் கொடுக்க இருக்கையில் அமர்ந்திருந்த யது அவரின் முன் பல்டி அடித்தவனாக நொடியில் நெருங்கி துப்பாக்கியை தட்டிவிட, பின்னாலிருந்து நடு மண்டையில் தாக்கியதால் ரத்தம் சொட்ட அப்படியே தரையில் சரிந்து உயிர் நீர்த்திருந்தார் சேத்தன். இமைப்பொழுதில் நேர்ந்திட்ட மரணம்.
“அங்கிள்…” யதுவின் பதட்டமான குரல் ஒலித்து அடங்கியது.
தன்னுடைய மகனை ஜார்ஜே கொன்றிருந்தார். நட்பிற்காக. உண்ணியின் மீது கொண்ட நட்பிற்காக.
உண்ணியை விட ஜார்ஜ் பல வயது மூத்தவராக இருப்பினும், இருவருக்குள்ளும் ஆத்மார்த்தமான நட்பு இருந்ததை தங்களுக்குள் மறைத்தே வைத்திருந்தனர். அது கட்சியின் நலனுக்காக. கட்சிக்குள்ளேயே அச்சுதனுக்கு ஒரு உளவாளி தேவைப்பட்டார். அதற்காக அச்சுதன் உருவாக்கிய விஸ்வாசமான உளவாளி தான் ஜார்ஜ். அவர் இன்று யது வரை தன் கடமையை சரியாக செய்து வந்திருக்கிறார்.
“என்ன அங்கிள் இப்படி பண்ணிட்டீங்க?” யது கேட்ட கேள்விக்கு ஜார்ஜிடம் விரக்தி புன்னகை.
“அவன் கொன்னது என்னுடைய நட்பை யது. கொல்ல நினைத்தது என்னுடைய உண்ணிக்கு உயிரான உறவை” என்றவர், “நானே போலிஸிடம் சரண்டர் ஆகிடுறேன்” என்றார்.
சேத்தன் தான் முகம் தெரியாத நபரென்று அறிந்த கணம், அவரெதற்கு இதனை செய்கிறாரென்று யது தெரிந்துகொண்டான். எல்லாம் முதல்வர் பதவிக்குத்தான் என்ற போதும், அவர் ஜார்ஜின் மகன் எனும் உண்மை உறுத்தலாக இருந்தது. உண்மையில் சேத்தன் ஜார்ஜின் மகனில்லை. ஜார்ஜின் நண்பரின் காதல் மனைவி தான் சேத்தனின் அன்னை. ஜார்ஜின் நண்பர் திருமணம் முடிந்த சில மாதங்களில், மனைவியை நண்பனின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு ராணுவத்திற்கு சென்றவர் சில தினங்களிலேயே இறந்து விட்டதாகத்தான் தகவல் வந்தது. அப்போது சேத்தன் கருவாக அன்னையின் வயிற்றில் வளர்ந்து கொண்டிருந்தார். அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜார்ஜ், நண்பன் இறந்ததை அப்போது சேத்தனின் அன்னையிடம் சொல்லவில்லை.
சேத்தன் பிறப்பதற்குள் ஜார்ஜின் குடும்பம் ஜார்ஜை சேத்தனின் அன்னையுடன் இணைத்து பேசி தப்பர்த்தம் புரிந்துகொண்டனர்.
தன்னை தன் குடும்பமே… அதிலும் தன்மீது உயிராய் இருக்கும் தந்தையே நம்பவில்லை எனும் விரக்தியில் ஜார்ஜ் உண்மையை விளக்க முற்படவில்லை. இதனால் தந்தையில்லா ஒரு சிறு குழந்தைக்கு தந்தை கிடைத்தால் மகிழ்வு தான் என்ற எண்ணத்தோடு சேத்தனுக்கு மட்டுமே தந்தையாகிப்போனார். அவனின் தாய் அவருக்கு வெளியில் சொல்லிக்கொள்ளாத தங்கை.
சேத்தன் தந்தையில்லாமல் வளரக்கூடாது… அத்தோடு தனது நண்பனின் மகன் தந்தையில்லையென வருந்தக்கூடாது என்பதற்காகவே ஜார்ஜ் அவரிடம் இதுநாள் வரை உண்மையை சொல்லாது விட்டார்.
நட்பிற்காக உறவாக ஏற்றுக்கொண்ட ஜார்ஜ்… இன்றும் நட்பிற்காகவே உறவை அழித்திருந்தார்.
நட்பில் என்றுமே அவர் ஒரு படி மேல் தான்.
உண்மைகள் அறிந்த யதுவிற்கு ஜார்ஜின் மீது அபரிமிதமான மரியாதை உருவாகியது. இப்படியொரு நம்பிக்கைக்குரிய பாத்திரம் வாய்க்கப்பெருவது அரிதல்லவா.
அவ்விடம் யது அரசியலில் ஒன்றை கற்றுக்கொண்டான். நம் கூட்டமாகவே இருந்தாலும், நம்மிடம் நேரடியாக சிலவற்றை பிறர் கூற முடியாத ரகசியங்களை உளவாளி வைத்துதான் தெரிந்துகொள்ள வேண்டுமென்று. இதில் ரகசியம் ரகசியமாகவே காக்கப்பட வேண்டும். அதனால் தான் உண்ணி தன்னுடைய கடைசி தருணத்திலும் ஜார்ஜ் நம்பிக்கைக்குரியவர் என்பதை ரகசியமாகவே வைத்திருந்தார். பாவனாவை கூட நம்பாதே என்று சொன்னவர், ஜார்ஜை பற்றி எதையும் சொல்லவில்லை. மகனிடமே ரகசியத்தை காத்திருக்கும் உண்ணி, லாரான்ஸிடம் சொல்லாமல் இருந்தது ஆச்சரியமில்லை.
சேத்தன், குட்டப்பன், அவர்களால் உமர் பாதிக்கப்பட்டது வரை ஜார்ஜ் உண்ணியிடம் உளவறிந்து கூறியிருக்கிறார். ஆனால் உண்ணியின் உயிருக்கு சேத்தன் உலை வைத்திருக்கிறான் என்பதை மட்டும் அவரால் கண்டறிய முடியாது போனது. அனைவரையும் விசாரித்தால் மனஸ்தாபம் ஏற்படும். அது பிரிவுக்கு வழிவகுக்கும். கட்சியின் பிளவை கருத்தில் கொண்டே உண்ணி அமைதியாக இருந்தார். தன்னுடைய அமைதி நிச்சயம் யதுவிடம் இருக்காது என்பதை அறிந்தே அவனை தன்னிடத்தில் அழகாய் பொருத்திவிட்டு சென்றிருந்தார்.
நிச்சயம் கட்சிக்கு ஒன்றும் ஆகாது களைகளை அகற்றிடுவானென்று மகன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை அவருள். இன்று அதனை யது உண்மையாக்கியிருந்தான்.
யது நினைத்திருந்தால் கட்சி எப்படியோ போகட்டுமென்று நினைத்து, ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக புலன் விசாரணை வைத்திருக்கலாம். ஆனால் அதனை செய்யாது, அமைதியாக காத்திருந்து தங்களுக்குள் ஊடுருவியிருந்த நச்சினை கண்டுபிடித்து கட்சியின் ஒற்றுமையை பாதுகாத்திருந்தான்.