உயிர் உறை 52
மொழி 15
ஜார்ஜ் சிறைக்கு சென்று இரண்டு வாரங்கள் கடந்திருந்தது.
கட்சியில் யாருமே சேத்தனிடம் இதனை எதிர்பார்க்கவில்லை. மேனனுக்கு கூட உண்ணி விடயத்தில் சேத்தன் நடந்துகொண்டது அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
உண்ணி போல் ஒரு தலைவர் மீண்டும் பிறந்து வர வேண்டும். அவரிடத்தை யாராலும் ஈடு செய்திட முடியாது. அவர் செய்த ஆட்சி அப்படி. எதிர்கட்சி கூட உண்ணியின் ஆட்சிமுறையை கண்டு மனதாரா பாராட்டியிருக்கிறார்கள். அப்படிபட்ட அரசியல் தலைவரை தன்னுடைய பேராசைக்காக கொலை செய்த சேத்தனின் மீது ஒவ்வொருவருக்கும் கட்டுக்கடங்கா கோபம் எழுந்தது.
மேனன் கூட யதுவை சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.
உண்மையில் அன்று மேனன் சேத்தனின் பேச்சினைக் கேட்டு விட்டுக்கொடுக்காது இருந்திருந்தால், யது மேனனைத்தான் முதல்வர் இருக்கையில் அமர்த்தியிருப்பான்.
மேனன் தனக்கென்று ஆட்களை சேர்த்துக்கொள்ள காரணம் கூட சேத்தன் தான். வார்த்தையால் அவரை சுழற்றியிருந்தார் சேத்தன். அதற்காக யதுவிடம் மன்னிப்பு கேட்டுச் சென்றார்.
அனைவருமே கட்சியில் கூடி ‘எப்போதும் யது மட்டுமே முதல்வர். அவன் சொல்வதை தட்டாது கேட்போம்’ என்று ஒரு மனதாக முடிவு செய்து உறுதி எடுத்துக் கொண்டனர்.
இவர்களுக்கு ஒரே வருத்தம். ஜார்ஜ் சிறைக்குச் சென்றது.
பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு யது அவரை காப்பாற்றிட முயற்சித்திட முடியாதே. இங்கு சட்டம் அனைவருக்கும் ஒன்று தானே! ஜார்ஜும் அதனை எதிர்பார்க்கவில்லை. தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு மனமுவந்து சிறை சென்றார்.
தந்தை தன்மீது ஏற்றி வைத்துச் சென்ற சுமை இப்போதுதான் நீங்கியதாக யது உணர்ந்தான். ஆசுவாசம் கொண்டான். அதிலிருந்து மீண்டு தெளிந்து அமர்வதற்குள் விநோ அழைத்து அவன் சென்ற காரியம் கூடி வருவதற்கான அவர்களின் கூட்டம் பற்றி தெரிவிக்க…
“டேய் என்ன நிம்மதியா மூச்சு விடவே விடமாட்டியாடா?” என்று விநோவிடம் அலறினான் யது.
“சிஎம் சீட்டில் உட்கார்ந்துகிட்டு நிம்மதியா மூச்சுவிடுவதைப் பற்றியெல்லாம் நீ நினைக்கக் கூடாது” என்ற விநோ, “நான் இங்க வந்திருக்கும் விஷயத்தின் அஸ்திவாரமே அங்கதான் போடப்பட்டிருக்கு. பொறுப்பு உன்னுடையது தான். நீ வந்துதான் ஆகணும். நீங்க தான் மிஸ்டர் கூல் ஆச்சே, அப்படியே கூலா வந்துட்டு போயிடுங்க” என்றான்.
“விநோ நீ என்னை கலாய்க்கிறியா?” யது அப்பாவியாய் வினவினான்.
“தெரியுதுல, அப்புறம் என்ன? உன் பிரச்சனை முடிஞ்சுதுல. என்னோடது முடிய வேணாமா? துருவனை பார்க்கணும்டா. முடியல. தகுந்த பாதுகாப்போட வந்து சேரு” என்றவன், குட்டி உண்ணியை விசாரித்த பின்னர் அழைப்பை வைத்திருந்தான்.
யதுவிற்கு அந்நேரம் ஷாவைப்பற்றிய உண்மையை விநோதனிடம் சொல்லாமல் இருப்பது ஒரு மாதிரியாக இருந்தது.
வெகு நாட்களுக்குப் பின்னர் யது மற்றும் விநோ சந்தித்துக் கொண்டாலும் அப்போது அவர்கள் உடனிருந்தது இரு நாட்கள் மட்டுமே! அதில் கயவர்களை அழிக்க திட்டம் போடவே சரியாக இருந்திட, தனது மண வாழ்க்கைப் பற்றி பகிர்ந்துகொள்ள யதுக்கு வாய்ப்பு அமையவில்லை. அதன் பின்னர் கடந்த மூன்று வருடங்களில் பேசுவதே அரிதாகியிருக்க எங்கனம் சொல்வது.
அவனாக தெரிந்துகொள்ளும் முன்பு தானாக சொல்லிட வேண்டுமென நினைத்தவனுக்கு தெரிந்திருக்கவில்லை விநோதன் அனைத்தும் அறிவானென்று.
******
“இந்த சூழ்நிலையில் கூட்டம் அவசியமா?”
கேட்ட குட்டப்பனை தந்தையென்றும் பாராது முறைத்தான் தேஜ்.
“நம்ம தொழில் திரும்ப தலை தூக்கணுமென்றால் இந்த கூட்டம் அவசியம். இங்கு முடியலன்னா மற்ற இடத்தில் எப்படி இந்த லாபத்தையும் சேர்த்து பிடிப்பதுன்னு பார்க்கணும். கூட்டம் முடித்து வந்து யதுவுக்கு ஒருவழி பண்ணனும். நாம் தொழில் பண்ணணுன்னா அவன் பதவியில் இருக்கக்கூடாது. அதுக்கு என்ன வழின்னு பார்க்கணும்” என்ற தேஜ் அங்கு கூண்டோடு மாட்டவிருப்பதை அறியாது தமிழ்நாடு செல்ல மிகுந்த ஆர்வத்தோடு ஆயத்தமாகினான்.
******
“எல்லாம் முடிச்சிட்டு இப்படி வெட்டியா உட்கார்ந்திருக்கிறதும் நல்லாத்தான் இருக்குல?”
கேட்ட யதுவை ஒரு மார்க்கமாக பார்த்த பாசில்…
“விநோ என்ன ஏழரையை கூட்டப்போறான்னு அங்க போனாதான் தெரியும். உன்னுடைய பதவிக்கு இந்த நிம்மதியெல்லாம் அப்பப்போ வந்திட்டு போகும். அவ்வளவு தான். அதனால் கொஞ்சம் அளவாவே சந்தோஷப்படு” என்றான்.
“ஏண்டா… ஏன்? விநோ மாதிரியே போட்டு படுத்துற. போங்கடா உங்க பேச்செல்லாம் கா விட்டுட்டு என் பேபிஸோட எங்கையாவது ட்ரிப் போயிட்டு வரணும்” என்று கண்ணில் கனவோடு சொல்லிய யதுவிடம்…
“இப்போ நாம ரெண்டு பேரும் போகப்போற ட்ரிப் பற்றி பாவனாகிட்ட சொல்லிட்டியா?” எனக் கேட்டான்.
“என்னை எப்பவும் கன்னி வெடில கால் வச்சவன் மாதிரி ஒரு பீதியிலேயே வச்சிருக்கீங்கடா” என்ற யது, “அபிசியல் சொல்லிட்டு கிளம்புவோம்” என்றான்.
“உன்கூட கிளம்பினா எனக்குதான் தலைவலி. விநோ கால் பண்ணி, அவன் சேஃப்டி முக்கியம்ன்னு ஆயிரம் தடவை சொல்லிட்டான். உன்னை கூட்டிட்டு போய் கூட்டிட்டு வரதுக்குள்ள விநோகிட்ட நான் என்னென்ன திட்டு வங்கப்போறனோ” என்று புலம்பியவனாக பாசில் சென்றிட, சின்ன சிரிப்புடன் யது தன்னுடைய அறைக்குள் வந்தான்.
மெத்தையில் விளையாடிக் கொண்டிருந்த ஷா’வை தூக்கி சுழற்றி தன்னுடைய நெஞ்சில் போட்டுக்கொண்டவனாக படுத்தவன், உண்ணிக்கு தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்த பாவனாவை இழுத்து தன் கை வளைவில் வைத்துக் கொண்டான்.
“டென்ஷன் எல்லாம் போனதும் தான் சிஎம் சாருக்கு எங்க ஞாபகம் வருது போல.” மனைவியாய் சடைத்து கொண்டாள்.
நாட்கள் சென்று பேச பேச பாவனாவின் பேச்சு தடையின்றி சீரானது. இப்போதெல்லாம் தெளிவாக சரளமாக பேசிகின்றாள்.
“அச்சு குட்டி தூங்கியாச்சா?”
தான் கேட்டதுக்கு பதில் சொல்லாது மகனைப்பற்றி வினவவும் கணவனை முறைத்தவள்,
“தூங்கியாச்சு தூங்கியாச்சு” என்றாள்.
“அதுக்கு எதுக்குடி அலுத்துக்கிற?” என்ற யது, “ஷா மோளே” என்று மகளின் கன்னத்தில் முத்தம் வைத்தான். மனைவியை அழுத்தமாக பார்த்துக்கொண்டே!
அவளுக்கு குப்பென்று வியர்த்துவிட, சேலை தலைப்பால் ஒற்றிக்கொண்டாள்.
“பசங்கள வச்சிக்கிட்டு என்ன வேலை பாக்குறீங்க?” எனக் கேட்டவள், மகனை தூக்கி தொட்டிலில் படுக்க வைத்தாள்.
ஷா அன்றைய கதையை தந்தையிடம் கைகளை விரித்து, விரல்கள் பிரித்து கூறிட… யது சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தான்.
‘இப்போதைக்கு இதுங்க கொஞ்சல் நிக்காது’ என மனதோடு சொல்லிக்கொண்ட பாவனா, அருகிலிருந்த ஷா’வின் மெத்தையில் படுத்துக்கொண்டாள்.
யது கண்கள் இடுங்க மனைவியை ஏறிட, அவளோ ஷா அறியாது புருவம் உயர்த்தினாள்.
“தூங்கிடாத!” உதடு மட்டும் அசைந்தது.
“ம்க்கும்” என்றவள் அப்போதே முகம் வரை போர்வையை இழுத்து போர்த்தியவளாக அவனை வெறுப்பேற்றிவிட்டு உள்ளே சிரித்தாள்.
“என் மொளேக்கு உறக்கம் வரலையா?” எனக் கேட்டவன், ஷா’வை மார்பில் அழுத்தி தட்டி கொடுத்தான். குழந்தை உறங்கிட அடம் பிடிக்க… கதை சொல்லத் துவங்கினான்.
பாவனாவுக்கு எப்போதுமே இருவரின் உலகமும் ரசனை மிகுந்தது. அழகானது. வைத்த கண் எடுக்காது பார்த்திருப்பாள். இன்றும் போர்வை இடுக்கில் ரசித்திருந்தாள்.
ஷாவை உறங்க வைத்த யது, உறங்கியதும் அவளுக்கான மெத்தையில் படுக்க வைத்து தட்டிவிட்டவன், உறங்கிக்கொண்டிருந்த தன்னுடைய ஆண் மகவின் நெற்றியில் இதழ் ஒற்றி விலகி… ஷாவின் படுக்கையில் தூங்குவதைப்போல் நடித்துக்கொண்டிருந்த பாவனாவை இரு கைகளிலும் அள்ளி எடுத்தான்.
“அச்சோ நந்து. என்ன பண்றீங்க?”
பதறி திமிறியவளாக கேட்டவளை,
“நான் இன்னும் ஒண்ணுமே பண்ணலடி” என்றவாறு மெத்தையில் கிடத்தி தானும் அவளோடு சரிந்தான்.
நீண்ட நாட்களுக்குப் பின்னர், அமைதியான மனநிலையில் அதீத காதலுடன் இருவருக்கும் ஆத்மார்த்தமான காதல் அரங்கேற்றம்.
மனைவியின் நந்து என்ற பிதற்றலும், கால் கொலுசின் ஒலியும் அவனை பித்தாக்கிட… மொத்தமும் அவளுள் தொலைந்து மீண்டான். நிறைவான முத்தம் ஒற்றி விலகியவன்…
“இப்போ தூங்குடி… தூங்காதன்னு சொன்னா உதட்டை சுளிக்கிற” என்று சொல்லியவாறே அவளின் கீழ் உதட்டை இரு விரலால் அழுத்தி பிடித்து இழுத்து தன் பற்கள் கொண்டு தேடலை தொடங்கியவன் மீண்டும் அவளுள் அடங்கி தன்னை மீட்டான்.
“நந்து…” கணவனின் மார்பில் தலை வைத்து அவனை கிறங்க வைத்துக் கொண்டிருந்தாள்.
“மேடமுக்கு போதலையோ?” விஷம சிரிப்புடன் வினவியவனின் மார்பிலே பற்கள் பதிய கடித்தவள் நிவாரணமாய் முத்தமும் பதித்தாள்.
“உன் பிரச்சனை எல்லாம் முடிஞ்சிருச்சா நந்து?” அவளுக்குத்தான் தெரியுமே உண்ணி விடயத்தில் தொடர்ந்த சிக்கல்கள் யதுவிடம் முடிவடைந்திருப்பது. அப்போது உண்ணி இருக்கும்போதும் சரி, இப்போது யதுவுடனும் சரி அனைத்தையும் உடனிருந்து பார்த்தவளாயிற்றே! அந்த கவலையில் வினவினாள்.
“என்னை கொல்ல நினைக்குற சேப்ட்டர் க்ளோஸ் பேபி.” சாதரணமாகக் கூறினான்.
“அப்போ இன்னும் வேற இருக்கா?” அதிர்வோடு கேட்டாள்.
“நானிருப்பது அரசியலில்… இங்கு எதிர்பாராம என்ன வேணாலும் நடக்கலாம். நாமதான் கவனமா இருக்க வேண்டும்” என்று கூறியவன், “அவ்வளவு சீக்கிரம் ஆபத்தை நெருங்க விடமாட்டேன்” என்று அவளின் பயம் போக்கினான்.
ஆனால் அவனை விடுத்து அவனது உயிரானவர்களை வதைத்து யதுவிற்கு பயம் காட்டிட ஒருவன் திட்டம் வகுத்துக் கொண்டிருந்தான். யதுவிடம் பயத்தை தோற்றுவித்திடுவானா?
“நான் அஃபிசியலா பக்கத்து ஸ்டேட் போறேன். கட்சியில் கூட யாருக்கும் தெரியாது. ரெண்டு நாளில் வந்துடுவேன்” என்றான்.
கணவனின் பணி எத்தனை பொறுப்பு வாய்ந்தது என்று அறிந்திருந்தவளுக்கு அவன் இரு நாட்கள் உடனிருக்கமாட்டான் என்கிற வருத்தம் சட்டென்று மனம் முழுக்க பரவினாலும், அதனை வெளிக்காட்டாது சரியென தலையசைத்தாள்.
“என்னடி இது… கல்யாணத்துக்கு அப்புறம் பர்ஸ்ட் டைம் உன்னை விட்டு வெளியூர் போறேன். போகாதீங்க, உங்களைவிட்டு இருக்க முடியாதுன்னு ஃபீல் பண்ணுவன்னு பார்த்தா சாதாரணமா போயிட்டு வாங்கன்னு சொல்ற?” என்று கேட்டான்.
“உங்க வேலை விஷயம். நான் வேணான்னு சொன்னா போகாம விட்டுடுவீங்களா?”
“அதெப்படி முடியும்?”
“அதுக்குத்தான் எதுவும் சொல்லல. அதுக்காக ஃபீலிங்ஸெல்லாம் இல்லைன்னு சொல்லாதீங்க. அது ஒரு ஓரமா இருக்கு” என்றாள்.
“ஓரமா…” என்று இழுத்தவன், “இருக்கட்டும் இருக்கட்டும்” என்று மனைவியை கட்டிக்கொண்டான்.
“நீங்க போற காரியம் நல்லபடியா முடிஞ்சிட்டா விநோண்ணா உயிரோட இருப்பது எல்லாருக்கும் தெரிஞ்சிடும்ல?” கேட்டவளை மெச்சுதலாய் பார்த்தான்.
“என்ன நந்து?”
“நான் விஷயம் என்னன்னு சொல்லாமலே கரெக்ட்டா கெஸ் பண்ணிட்ட?”
“நம்ம கதை முடியப்போகுது. உங்க பிரச்சனையெல்லாம் முடிஞ்சாச்சு. விநோண்ணா கதை இங்கிருந்து தான் ஆரம்பமானது. அப்புறம் இங்க அவரைப்பற்றி சொல்ல வேண்டியதை சொல்லணுமில்ல” என்றவளை அடுத்து பேச விடாது செய்திருந்தான்.
இரண்டு நாட்களில் பாவனாவிடம் சொல்லியது போல் பாசிலுடன் யாருக்கும் தெரியாது, விநோ சொல்லிய பாதுகாப்பின்றி தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி வந்து சேர்ந்தான்.
அவர்களின் திட்டம் அனைத்தும் அவர்கள் எண்ணப்படியே நடந்து முடிய, குட்டப்பன் மற்றும் தேஜ்ஜின் அத்தியாயம் தமிழகத்தில் அவர்களால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இதில் அவர்களே எதிர்பாராதது விநோவின் திருமணம். இருப்பினும் அவன் மனம் விரும்பிய பெண்ணே அவனுக்கு மனைவியாய் கிடைத்ததில் அவர்களுக்கு மகிழ்ச்சி தான்.
அடுத்த நாளே குட்டப்பன் மற்றும் தேஜ் சொந்த மாநில சிறைக்கு மாற்றப்பட்டனர். ஒட்டு மொத்த கூட்டமும் மாட்டியதால், இனி நாடு முழுக்கவே போதைப்பொருள் விற்பனை இருக்காது என்பதில் ஒரு மாநிலத்தின் முதல்வராக யது முழுமையாய் நிம்மதி கொண்டது, அந்த தருணத்தில் தான்.
அதன் பின்னர் விநோவை அவனது குடும்பத்துடன் சேர்ப்பித்து… துருவன் நிரல்யா திருமணத்திற்கு மீண்டும் ஒருமுறை கொடைக்கானல் வந்து சென்றான்.
பாவனா திருமணத்திற்கு வராத காரணம், பாதுகாப்பு கருதி, “நீயா அரசியல்வாதியா தான் வர. பிள்ளைங்களையும் கூட்டிட்டு வரவேணாம். புரோட்டோகால்ஸ் அதிகம் செய்ய வேண்டியதா இருக்கும்” என விநோ சொல்லியதால் யதுவும் பாவனாவிடம் வர வேண்டாமென சொல்லிவிட்டான்.
அவளுக்கு அந்த கோபம். சில நாட்கள் யதுவை படுத்தி வைத்திருந்தாள்.
திருமணத்திற்கு வந்திருந்த யது பாவனாவிடமிருந்து வந்த தொடர் அழைப்புகளால் அவசரமாக கிளம்பிச்சென்று கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பின்பு தான் விநோவை தொடர்பு கொண்டான். முற்றிலும் உடைந்த நிலையில்.
****************
யது நந்தன் மற்றும் விநோதன்…
இருவருமே மக்கள் பணியில் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள்.
பணிச்சுமையின் காரணமாக இருவரும் பார்த்துக்கொள்வதே அரிதாகிப்போனது. இரு வேறு மாநிலம் வேறு, இதுவும் அவர்களின் சந்திப்புக்கு தடையாக இருந்தது.
நண்பர்கள் பணியின் பின்னால் ஓடிக்கொண்டிருக்க… அலைப்பேசி வாயிலாக பேசிக்கொள்வதே மாதம் இருமுறை என்று அரிதாகப்போக… நாட்களும் நிற்காது விரைந்திருந்தது.
துருவ் கல்யாணத்தின் போது பாவனா தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்ததால், விரைந்து கிளம்பிச் சென்றிருந்தான்.
குட்டி உண்ணிக்கு காய்ச்சல். நேரம் செல்ல செல்ல யது திருமணத்திற்காக கிளம்பிச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாகத் துவங்கியது.
காய்ச்சலின் வீரியத்தில் குழந்தை கத்திக்கொண்டிருந்தது. உண்ணி அழ ஆரம்பித்ததும், அவனுக்கு என்னவோ ஏதோவென்று பயந்த ஷாவும் உதடு பிதுக்கி அழுகையை ஆரம்பித்திருந்தாள்.
யாரை கவனிப்பதென்று தடுமாறிய பாவனா, ராதாம்மாவிடம் ஷாவை ஒப்படைத்துவிட்டு முகுந்தனை அழைத்துக்கொண்டு மருத்துவமனை கிளம்பிவிட்டாள்.
காய்ச்சலின் வெப்பநிலை அதிகரித்து இருப்பதால் தான் குழந்தை அழுகிறான் என்று பாவனாவை சமாதானம் செய்த மருத்துவர், குழந்தைக்கான சிகிச்சியை மேற்கொண்டார்.
படுக்கையில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு கிடத்தப்பட்டிருந்த குழந்தையை அந்நிலையில் காண பாவனாவுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
தனித்து இருப்பது உள்ளத்தை நடுங்கச் செய்தது.
யது உடனே தன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தவள் விடாது அவனுக்கு அழைத்தாள்.
கல்யாண கலாட்டாவில் முதலில் கவனிக்காமல் விட்ட யது, மீண்டும் வந்த அழைப்பை ஏற்க…
பாவனா விடயத்தை சொல்லாது “சீக்கிரம் வா நந்து. நீ வேணும்” என்று மட்டும் சொல்லிவிட்டு வைத்துவிட்டாள். குழந்தையின் நிலை அவளை அதற்கு மேல் பேசவிடவில்லை. தான் அழுதால் யதுவின் மனம் எத்தனை வேதனை கொள்ளுமென அறிந்தவள் தன்னுடைய கேவலை மறைத்தபடி அவனின் வரவை மட்டும் உறுதி செய்துகொண்டு வைத்துவிட்டாள்.
என்னவோ ஏதோவென்று துரிதகதியில் வந்து சேர்ந்த யது, உண்ணியிருந்த நிலை கண்டு பாவனாவுக்கு மேல் துவண்டு போனான்.
லாரன்ஸ் எவ்வளவு முயன்றும் குழந்தையின் அருகே தவமிருந்தான் யது நந்தன்.
குழந்தை யதுவிற்கு மகன் மட்டுமல்ல… அவனிடத்தில் தன்னுடைய அச்சனின் உருவத்தை காண்கிறான் யது. இதுநாள்வரை மகனை பெயர் சொல்லி யது அழைத்ததே கிடையாது.
“அச்சா, அச்சு குட்டி” தான். தன்னைவிட்டுச் சென்ற தந்தையே தனக்கு மகனாகப் பிறந்திருக்கிறார் என்று தான் நினைத்தான். அப்படித்தான் மகனை நடத்தவும் செய்கிறான். டா போட்டு கூட விளித்தது கிடையாது. அவனை பொருத்தவரை அவன் உண்ணியின் மறுபிறவி.
யதுவின் நிலையை கண்டு பாவனா தான் நொந்து போனாள்.
‘இவங்களை வரசொல்லாமலே இருந்திருக்கலாம்’ என நினைத்தவள்,
“எனக்கு தைரியமா இருக்குமுன்னு உன்னை வரச்சொன்னா நீ எனக்கு மேல கவலையா உட்கார்ந்திருக்க” என்றவள், “குழந்தைக்கு ஒன்றுமாகாது. டெம்பரேச்சர் அதிகம் இருக்கிறதால தான் அட்மிட் பண்ணியிருக்காங்க. அவன் அழவும் தான் நான் பயந்து உனக்கு கால் பண்ணிட்டேன்” என்று தன்னை தேற்றிட அவன் வேண்டுமென நினைத்திருந்தவள் தான் இப்போது அவனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“ஹேய்… யங் ஃபாதர். ஹீ இஸ் ஆல்ரைட் நௌவ்” என்று லாரன்ஸ் சொல்லும்வரை யதுவிடம் சோகநிலை நீண்டது.
குழந்தையின் வெப்பநிலை குறைய ஆரம்பிக்க, அடுத்த நாள் காலை ஆனது. அதுவரையிலும் தனக்கு வரமாய் வந்த தன் தந்தையின் நிலையை எண்ணி உள்ளுக்குள்ளேயே மருகியவனின் துடிப்புகள் அருகில் அமர்ந்திருந்த அவனது பாவனாவும் அறிந்திருக்கவில்லை.
ஒரு நாள் முழு இரவு தன்னுடைய தந்தைக்கும் பயமென்றால் என்னவென்று உணர்த்தியே இயல்புக்கு வந்தான் உண்ணி.
யது அவசரமாக கிளம்பியதால், விநோ என்னவென்று அறிய அடுத்த நாள் கால் செய்திருந்தான்.
என்ன தான் காய்ச்சல் குறைந்து இருந்தாலும், குழந்தையை மருத்துவமனை படுக்கையில் காண காண யதுவிற்கு நெஞ்சம் வலித்தது.
தன் வலியை மறக்காது விநோவிடம் பகிர்ந்துகொண்டான்.
யதுவின் பேச்சில் விநோ புரிந்து கொண்டது, யதுவிற்கு குழந்தையின் மீதான அன்பு அவனது பலவீனமாக மாறி ரொம்ப நாளாகியுள்ளது என்பது.
அதனை யதுவிடம் சொல்லவும் செய்தான்.
“உன்னுடைய பதவிக்கு, உனக்கு பலவீனம் அப்படின்னு எதுவும் இருக்கக்கூடாது. அப்படி இருந்துட்டா, அது உன்னை எதிரா நிறுத்தி பார்ப்போருக்கு தெரிந்திட்டா, உன்னிடம் ஆட பகடைக்காயாக அவர்களுக்கு மாறுவது உண்ணி தான். இனியும் உண்ணி விஷியத்தில் இப்படி உடைந்து போகாத! அரசியலில் நீ அதீத உணர்வுகளை வெளிப்படுத்துவது உனக்கு ஆபத்தில் முடியலாம்” என்றான்.
விநோ சொல்லியவை ஏற்கக்கூடியவை.
“சாரி விநோ. கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்” என்று தன்னுடைய தவறை உணர்ந்தான் யது.
“கொஞ்சமில்லை… நிறையவே” என்ற விநோ, “குழந்தைக்கு ஒண்ணுனா தந்தையாய் துடிப்பது இயல்பு. எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும், நாமும் மனிதர்கள் தான், நமக்கும் உணர்வுகள் இருக்கு. அதை எப்படி கட்டுப்படுத்தி உள்ளேயே மறைத்துக்கொள்ள வேண்டுமென்பதை மட்டும் கவனத்திலும் கருத்திலும் வை” என்றான்.
“புரியுது விநோ” என்ற யதுவிடம், குழந்தையை பற்றி மேலும் விசாரித்துவிட்டு வைத்திருந்தான்.
இரண்டு நாட்கள் சென்றே மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருந்தனர்.
குடும்ப வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக நகர்ந்தது. அவனது உலகம் சின்னது. ஆனால் அதில் தனக்கென்ற உறவுகளை தன் இரு கரங்களில் பொத்தி வைத்து பாதுகாத்தான். நித்தமும் மனைவியிடம் காதலை கொட்டுபவன், அவளிடமிருந்து திரும்பப் பெறுவதிலும் வல்லவனாக இருந்தான்.
தன்னிரு குழந்தைகளுடன் குழந்தையாய் இருப்பவன், தன்னுடைய பணியில் முதுமை வாய்ந்தவனாக திகழ்ந்தான்.
தந்தையின் மரணத்தின் முடிச்சுக்களை கண்டறிந்து, அவரது ஆசைப்படி கட்சியை மீண்டும் ஒற்றுமையில் கொண்டு வந்துவிட்டான். அதனால் கட்சியையும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாது சீராகக் கொண்டு சென்றான்.
வாழ்க்கை பாதை எப்போதும் ஒரே நேர்கோட்டில் பயணிக்காதே!
யதுவையும் நிலைகுலையச் செய்திடும் நிகழ்வு ஒன்று நடந்தேறியது.
கட்சி தலைமையகத்தில் யது மற்ற தலைவர்களோடு கூட்டத்தில் இருந்த தருணம்… அவனுக்கு அழைத்தழைத்து ஓய்ந்து போன பாவனா, பாசிலுக்கு அழைத்திருந்தாள்.
“யது மீட்டிங்கில் இருக்காம்மா!”
பாசிலும் அங்கு தான் இருந்தான். அதனால் அவள் கேட்பதற்கு முன்பே பதில் அளித்திருந்தான்.
“அண்ணா…”
பாவனா அழைத்த விளிப்பிலே கண்டுகொண்டான். ஏதோ விபரீதம் என்று. அவளது குரல் கலங்கி ஒலித்தது.
“என்னம்மா என்னாச்சு?”
“அவங்களை கூட்டிட்டு வீட்டுக்கு வாங்க. ப்ளீஸ்…” பாவனா சொல்ல முடியாது தடுமாறிட, அவளது கையிலிருந்த அலைபேசியை வேகமாக வாங்கி ராதா பேசினார்.
“பசங்க ரெண்டு பேரையும் காணோம் பாசில். எவனோ போன் பண்ணி என்னென்னவோ சொல்றான்” என்று அழுதார்.
“பயப்படாதீங்க ராதாம்மா… இதோ இப்போ வர்றோம்” என்ற பாசில், “யது” என்று இருக்குமிடம் மறந்து கத்தியிருந்தான்.
மொத்த பெரும் அவனை நோக்கிட…
“சாரி… எமெர்ஜென்சி” என்றவனாக, யதுவை கை பிடித்து என்ன ஏதென்று கூறாது இழுத்துச் சென்றான்.
பாசில் இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் ஆளில்லை என்பது யதுவிற்கு தெரியும். அவனது இந்த செயலுக்கு பின்னால் ஏதோ உள்ளதென்று கணித்த யதுவிற்கு அதனை கேட்பதற்கு அச்சமாக இருந்தது.
வாழ்க்கை சீராக சென்று கொண்டிருக்கையில் இப்போது என்னவோ என்கிற பயம் தான் அவனுள்.
பாசிலுக்கு யதுவிடம் விடயத்தை எப்படி சொல்வதென்கிற பயம். உண்ணிக்கு காய்ச்சல் என்றதற்கே அத்தனை பதறி துடித்தவன், இப்போது இரு பிள்ளைகளையுமே காணோம் என்றால் எப்படி எதிர்வினை ஆற்றுவானோ என்று சொல்லாது தடுமாறினான்.
“எங்கப் போறோம்?”
“வீட்டுக்கு…”
“அப்போ வீட்டில் தான் பிரச்சனை இல்லையா?” எனக் கேட்ட யது அன்று குழந்தை விடயத்தில் பலகீனமாக நடந்துகொண்டதற்கு விநோ பேசியவற்றை மனதில் ஒருமுறை உருப்போட்டவனாக,
“என்னவாயிருந்தாலும் சொல்லு பாசில். எனக்குத் தெரிந்துதானே ஆகணும்” என்றான்.
“பசங்களை யாரோ கடத்திட்டாங்க” என்றான்.
“ஹ்ம்ம்…” யதுவின் பிரதிபலிப்பு பேரமைதி.
வீட்டிற்கு வந்தவன் பாவனா மற்றும் ராதா சொல்லியவற்றை கேட்டுக்கொண்டான்.
யதுவின் கல்லூரி தோழனென்று வீட்டிற்குள் வந்திருக்கிறான். வந்தவன் சாதரணமானவன் அல்ல. அவனது உயர்ரக காரும், தோற்றமும் அவனை சந்தேகிக்க விடவில்லை.
“யது மீட்டிங் முடிச்சிட்டு வர்றேன் சொல்லியிருக்கான். யது வரும் வரை நான் இங்கதான் இருப்பேன். அதனால ரிலாக்ஸா இருங்க” என்றவன் குழந்தைகளுடன் தோட்டத்தில் இருப்பதாக சொல்லி அழைத்துச் சென்றான்.
குழ்நதைகளின் சிரிப்பு சத்தத்தை உள்ளிருந்து அவதானித்துக் கொண்டுதான் இருந்தாள் பாவனா. சிறிது நேரத்தில் எவ்வித சத்தமுமின்றி போக, வேகமாக எழுந்து சென்று பாவனா பார்க்க, அவனது கார் வீட்டின் கேட்டைத்தாண்டி சென்று கொண்டிருந்தது.
மனைவிக்கு ஆதரவாக அவளின் கரம் பற்றியவன் எதுவும் பேசவில்லை.
பாசில் தான் டிஜிபி மரியனை வரவழைத்திருந்தான். எதுவும் கூறாது. வீட்டிற்கு வந்த பின்னர் தான் விடயத்தைக் கூறினான்.
“எவ்வளவு நேரமிருக்கும்?”
மரியனின் கேள்விக்கு பாவனா பதில் சொல்லும் நிலையில் இல்லை. ராதாதான் சொல்லியிருந்தார்.
“ரெண்டு மணிநேரம் ஆகப்போவுது.”
“கார்ட்ஸ் இல்லையா?”
அப்போதுதான் யது பாசிலை அர்த்தமாக ஏறிட்டான்.
“வீட்டுக்கு இருந்த கார்ட்ஸ் எட்டு பேரும், இன்னைக்கு ஒண்ணா லீவ் கேட்டிருந்தாங்க. அவர்களுக்குள் ஏதோ பார்ட்டின்னு” என்றான் பாசில்.
“கால் ஏதும் வந்துச்சா?”
“வந்துச்சு. ரெண்டு பேரும் பசியில் கத்திக்கிட்டு இருக்காங்க. சத்தம் கேட்டுச்சு. சீக்கிரம் என்னை கண்டுபிடிச்சு உன் புருஷனை என்கிட்ட வரசொல்லு அப்படின்னு வச்சிட்டான்” என்றாள் பாவனா.
‘இந்த புது எதிரி யார்?’ யதுவிற்கு மனம் கேள்வி கேட்க பதிலில்லை. அப்படி புதிதாக யாரும் இருப்பதாகவும் அவனுக்குத் தோன்றவில்லை.
நேரம் விரைந்தோடியது. முழு காவல் படையும் அனைத்து வழியிலும் முயன்று விட்டது. பலன் என்னவோ பூஜ்ஜியம். விநோவின் வார்த்தையால் திடமாகக் காட்டிக்கொண்டு யது கண்ணீர் துளிர்க்கும் விழிகளை மனைவிக்கு காட்டாது மறைத்திடவே பெரும்பாடுபட்டான்.
அன்றைய இரவு விடியலை நோக்கி சென்று கொண்டிருக்க, யதுவின் தைரியம் மொத்தமாக தரைமட்டமாகியது.
உடனடியாக விநோவிற்கு அழைத்து விட்டான்.
யதுவின் அழுத்தத்தின் அடர்த்தி விநோதன்.
‘நண்பன் வந்தால் எல்லாம் சரியாப்போகும்’ என்கிற எண்ணம் அவனது ஆழ் மனதிலிருந்து குரல் கொடுத்தது.
விநோவிடம் சுருக்கமாக தகவலை பரிமாறினான்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் வான் வழியாக யதுவிடம் வந்து சேர்ந்திருந்தான் விநோதன்.
பசுவை கண்ட கன்றாய் தன்னிடம் ஓடி வந்த யதுவை இறுக்கி அணைத்து கொண்டான் விநோ. யதுவின் முதுகை தட்டிக்கொடுத்தவனாக பவனாவின் அருகில் சென்றான்.
“யார் வந்தாலும் இப்படித்தான் பிள்ளைங்களை விட்டுடுவியா?”
விநோதன் கேள்வியில் அரண்டவளுக்கு, அதுவரை கண்களில் நிற்காது வழிந்து கொண்டிருந்த கண்ணீர் கூட சட்டென்று நின்று போனது.
“விநோ…”
“என்னடா உன் பொண்டாட்டியை அதட்டியதும் கஷ்டமா இருக்கோ? எனக்கு உரிமை இல்லையா? இப்படி கேர்லெஸ்ஸாவா இருப்பாள்?” என்றவன், “அழுதுகிட்டு இருந்தா கிடைச்சிருவாங்களா?” என்று ராதாவை பார்த்தவன், “ரெண்டு பேரையும் சாப்பிட வையுங்க” என்றான்.
யதுவை அழுத்தமாகப் பார்த்த விநோ, “சாப்பிடுற!” என்று ஒவ்வொரு எழுத்தாகக் கூறி, பாசிலை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியில் சென்றான்.
“மரியன் என்ன சொல்றார்?”
“கடத்தினவங்க எதுவும் டிமாண்ட் பண்ணல. மோட்டிவ் என்னன்னு தெரியல சொல்றார்” என்றான் பாசில்.
“கேட்டிலிருந்த காமிரா?”
“எல்லாம் செக் பண்ணியாச்சு. முகம் காமிராவில் பதியாத மாதிரி கவனமா வந்திருக்கான்.”
“கார் நெம்பர்?”
“ஃபேக்.”
“நைஸ்” என்ற விநோ, கேட்டிலிருந்த காமிரா பதிவை ஓடவிட்டு பார்த்தான்.
காரை பார்த்ததும் விநோ கண்டுகொண்டான். அது இம்போர்ட்டட். வெளிநாட்டு வகை, ரொம்பவே அதிக விலை கொண்ட ஹை ரேன்ஞ் கார்.
இங்கு இந்தியாவிலேயே இந்த வகை கார்களின் எண்ணிக்கை குறைவு. விரல்விட்டு எண்ணி விடலாம். அப்போ கேரளாவில்?
போக்குவரத்து கழகத்துக்கு அழைத்தவன், காரின் மாடலை சொல்லி, நகரத்தில் வைத்திருப்பவர்களின் விவரங்கள் கேட்டான்.
“டூ ஃபாஸ்ட்” என்றான் கட்டளையாக.
விநோ இங்கு வேலை செய்தபோது அவனைப்பற்றி அறிந்திருந்ததால் அடுத்த பத்து நிமிடங்களில் விநோவிற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மாநிலத்திலேயே இருவர் தான் வைத்திருந்தனர்.
அதில் ஒருவரின் விவரங்களை பார்த்ததும் அவன் தான் கடத்தியிருப்பானென்று சந்தேகத்திற்கு இடமின்றி விநோவால் கணிக்க முடிந்தது.
அந்நபர் சேத்தனின் மகன் நகுல்.
தந்தைக்காக பழிவாங்க வந்திருக்கிறான்.
அடுத்த அரை மணியில் குழந்தைகளை யதுவின் கையில் ஒப்படைத்திருந்தான் விநோதன்.
அன்று காய்ச்சலில் விழுந்த குழந்தைக்காக யது தவித்த தவிப்பு, எப்படியோ செய்திகளில் பரவியிருக்க…
அவனின் தவிப்பை பார்ப்பதற்கே, தன்னுடைய தந்தைக்காக நகுல் குழந்தைகளை கடத்தியிருந்தான். பலமுறை முயன்றும் முடியாது போக, யதுவின் காவலாளிகளை இம்முறை விலைக்கு வாங்கி தன் திட்டத்தை நிறைவேற்றியிருந்தான். இதற்கே அவனுக்கு யதுவின் பாதுகாப்பிலிருக்கும் குழந்தைகளை அவன் நெருங்கிட கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியிருந்தது.
விநோ நகுலின் இருப்பிடம் கண்டுபிடித்து சென்ற போது, நகுல் இரு பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
பிள்ளைகள் இல்லாமல் யது தவிப்பதை பார்க்க மட்டுமே நினைத்தான் அவன். பிள்ளைகளை வருத்த எண்ணவில்லை.
ஒரு தந்தைக்கு மகனாக மட்டுமே யதுவை கலங்க வைக்க நினைத்து செய்தான். அதனால் எவ்வித அதிரடி ஆக்ஷன் சீன்ஸும் இல்லாமல் விநோவை கண்டதும் குழந்தைகளை ஒப்படைத்திருந்தான் நகுல்.
விநோவை பார்த்ததும் ஷா “மாமா” என்று ஓடிச்செல்ல, அக்காவை பின் தொடர்ந்து உண்ணியும் தத்தி தத்தி ஓடி மாமனின் கைகளில் ஏறிக்கொண்டான்.
“சிஎம் வருவாருன்னு நினைத்தேன்.”
“நாங்க ரெண்டு பேரும் வேறு வேறில்லை” என்ற விநோவின் கைப்பற்றி வலுக்கட்டாயமாக நகுல் கை குலுக்கிட…
“பசங்க உன்னோட சிரித்து விளையாடுறாங்க அப்படின்னா, நீ எந்தளவுக்கு அவங்களை பார்த்துக்கிட்டுன்னு புரியுது. அதற்காக மட்டுமே உன்னை விட்டுச் செல்கிறேன்” என்றவனாக “இந்த மாதிரி செய்றது இதுவே கடைசியா இருக்கட்டும்” என்று எச்சரித்து சென்றான் விநோதன்.
நகுல் சிரித்துக்கொண்டான்.
விநோ பசங்களோடு வீட்டிற்கு வந்த பின்னர் தான், யது மற்றும் பாவனாவுக்கு உயிரே வந்தது.
சிறிது நேரம் அவர்களுடன் இருந்துவிட்டு விநோ கிளம்ப ஆயத்தமாக… பாசில் தயங்கி தயங்கி விநோவிடம் எதையோ கேட்க முனைந்தான்.
அவனின் மனதினை முன்பே அறிந்து வைத்திருந்த விநோ, பாசிலுக்கு வேண்டிய பதிலை வழங்கி,
“உன் காதலுக்காக நீதான் போராடனும். கொஞ்சமில்லை ரொம்பவே போராட வேண்டியிருக்கும். உன் காதலோட கடந்த காலம் அப்படி. இதில் நானோ, யதுவோ செய்வதற்கு ஒன்றுமில்லை” என்ற விநோ யதுவின் அருகில் வந்து…
“அடுத்து பாசில் கல்யாணத்தில் மீட் பண்ணுவோம் நினைக்கிறேன்” என்றவனாய் நண்பனை ஆரத்தழுவி விலகினான்.
பாவனாவிடம் குழந்தைகளின் பத்திரம் பற்றி இலவசமாக ஆயிரம் அறிவுரைகள் வழங்கிய பின்னரே ராதா உட்பட அனைவரிடமும் சொல்லிக்கொண்டு பிள்ளைகளுக்கு முத்தம் வைத்து விடைபெற்றான்.
விநோ செல்லும் கார் மறையும் வரை, யது ஷாவை தூக்கிக்கொண்டும், பாவனா உண்ணியை கையில் வைத்துக்கொண்டும் பார்த்திருந்தனர்.
கார் மறைந்ததும் பாசிலும் விடை பெற்றிட, ராதாம்மா வீட்டிற்குள் சென்று மறைய, மனைவியின் தோளில் கரம் பதித்து தன் அருகில் வைத்தவனாக தோட்டத்திற்கு அழைத்துச் சென்று கல் மேடையில் அமர்ந்தான்.
“லவ் யூ நந்து.” முதல் முறையாக தன் குரல்வழி தானாகக் கூறியவள் கணவனின் தோளில் தலை சாய்த்துக்கொண்டாள்.
ஒரு குடும்பமாய் நால்வரின் இணைந்த பிம்பம் நிறைவாய் அழகாய்.
வரும் கஷ்டங்கள் யாவும் வாய்க்கப்பெரும் நல்உறவுகளால் வந்த தடமின்றி பனிபோல் விலகிவிடும். நட்பும் அதுபோல் கிட்டும் நபர் பேரதிர்ஷ்டசாலி.
என்ன தான் விளையாட்டு பிள்ளையாக தன்னுடைய இயல்பிலிருந்து மாறாது இருந்தாலும், கடமை என்பதில் கருத்தாய் இருந்து தன்னுடைய ஆட்சியை மக்கள் விரும்பும் வகையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறான் யது நந்தன்.
அரசியலில் மட்டுமல்ல காதல் வாழ்விலும் அவனது விருப்பமே நிறைவேறிக் கொண்டிருக்கிறது.
பாவனாவின் குறைபாட்டால் விழி வழி மொழி வைத்து வளர்ந்திட்ட யதுவின் காதல் அவன் உள்ளத்தில் என்றும் பிருந்தாவனாமாய்!
********
அடுத்து பாசில், கோகிலா காதல் பகுதி.
LOVE AND LOVE ONLY.
உயிர் உறை பாகம் 4
குட்டி காதல் கதை தான். சில அத்தியாயங்களில் முடிந்து விடும்.