நேச நெஞ்சங்கள் 53

உயிர் உறை 53

பாகம் : 4

‘நின் காதல் எனதன்றோ!’

காதல் 1

இரவு நேரத்தில் கண்களை மூடி படுத்திருந்த பாசில் உறங்கவில்லை. தனது காதலுக்குள் மூழ்கி கரை சேர்ந்திட முடியாது தத்தளித்துக் கொண்டிருக்கிறான்.

‘கோகிலா.’ காதல் மனம் தன்னவளின் பெயரினை உச்சரிக்கும் போதே அத்தனை வலித்தது.

நெஞ்சுக்கூட்டில் காதல் என்ற மூன்றெழுத்து வார்த்தை இத்தனை வலியை கொடுக்குமென்று பாசில் நினைத்துப் பார்த்திருக்கமாட்டான்.

யது பாவனாவை காதலித்த தருணங்களில் அவனது பிதற்றல்கள் யாவற்றையும் உடனிருந்து கேட்டவன், மனதுக்குள் கிண்டலாய் சிரித்திருக்கிறான். பாவனாவிற்காக யது புலம்பும் போதெல்லாம்,

‘காதல் இத்தனை படுத்துமா’ என்று நினைத்திருக்கிறான்.

ஆனால் இன்று அவனே காதலின் கிறுக்குத் தனங்கள் அத்தனையையும் செய்து கொண்டிருக்கிறான்.

விடிவிளக்கின் வெளிச்சத்தில் படுக்கைக்கு முன்னே மாட்டப்பட்டிருந்த சுவர் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவன், நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தபோதும், அதனை கண்டுகொள்ளாதவனாக கோகிலாவிற்கு அலைபேசியின் வாயிலாக அழைத்திருந்தான்.

இரண்டு மூன்று முறை விடாது முயற்சித்தும் கோகிலா எடுக்கவில்லை.

“இப்போ கால் அட்டெண்ட் பண்றியா இல்லை நான் நாளை நேரா வீட்டுக்கே வரவா?” என்று புலனம் வழி தகவல் அனுப்பியவன் பின்னோடு,

“நீ தூங்கலன்னு தெரியும் கோகிலா” என்று தட்டியிருந்தான்.

அவள் பார்த்துவிட்டதற்கான அடையாளமாக நீலநிறக் குறி காட்டவும் மீண்டும் அழைத்தான்.

இம்முறை அவள் அழைப்பை ஏற்றிருந்தாள்.

அவன் அனுப்பிய மிரட்டலுக்கு பயந்து அல்ல. அவன்மீது கொண்டுள்ள மறைக்கப்படும் தன்னுடைய காதலுக்காக. அவளுமே அவன் நினைவில் தான் உழன்று கொண்டிருந்தாள்.

எத்தனை விதமாக மறுப்பை காட்டினாலும் பாசில் காதலில் தீவிரமாக இருந்தான். அவளின் மறுப்புகளை எல்லாம் புறம் ஒதுக்குவதிலே இருந்தான். கவனத்திலோ கருத்திலோ ஏற்கவில்லை.

காதலை காட்டுவதில் அவன் வள்ளலாக இருக்க… அவளோ கஞ்சத்தனம் செய்தாள்.

அவனது காதலை ஏற்கும் நிலையில் அவளில்லை என்பதே முற்றிலும் உண்மை. ஏனென்று பாசில் சிந்தித்தாலும் அவனாக கேட்டிட முயலவில்லை. எங்கே கடந்த காலமென்று முந்தைய காதல் அது இதுவென ஏதேனும் கூறிவிடுவாளோ என்கிற அச்சம் அவனுக்கு.

தன்னவளுக்கு தான் மட்டுமே என்கிற சாதாரண காதல் கொண்ட நெஞ்சத்தின் எதிர்பார்ப்பு அது.

பாசில் அவளிடம் வேண்டுவது காதல் மட்டுமே! வரம் வேண்டுபவனுக்கு கிட்டுவதெல்லாம் மறுப்புகளே!

அவளிடம் உள்ள காரணம் அவனுக்கு ஏற்புடையதாக இருந்திடுமா?

“கால் அட்டெண்ட் பண்ணலன்னா விடமாட்டிங்களா? இப்படித்தான் ராத்திரி நேரத்தில் கால் பண்ணி தொல்லை பண்ணுவீங்களா?” அவனிடம் கோபமாக பேசிடத்தான் முயல்கிறாள். முடியவில்லையே! அவளும் என்ன தான் செய்வாள்.

மனம் முழுக்க நிறைந்திருப்பவன் காதலை சொல்லிடும்போது, ஏற்க முடியாத துரதிஷ்ட நிலையில் காலம் தன்னை நிறுத்தி வைத்திருக்கிறதே என்று உள்ளுக்குள் நொந்து கொள்வதைத்தவிர அவளுக்கு வேறு மார்க்கமில்லை.

“மிஸ் யூ டி.”

ஆயிரம் முறை காதலை அவன் சொல்லி எளிதில் கடந்துவிட்ட நிமிடங்கள் யாவும் அவனின் இவ்வார்த்தைகளில் மொத்தமாய் உறைந்து நின்றது அவளுள்.

ஒரு ஐ லவ் யூ காட்டிடாத வீரியம், ஏற்படுத்திடாத தாக்கம், மிஸ் யூ என்ற வார்த்தைகள் ஏற்படுத்தியிருந்தன.

“இது வேண்டாமே பிளீஸ்.” கோகிலாவின் குரல் இறங்கி ஒலித்தது.

“ஓகே சொல்லவே மாட்டியாடாம்மா?” பாசிலின் கரகரத்த குரலில் அவள் இதயம் சுருண்டது.

“அதான் நோ சொல்றனே. அக்செப்ட் இட்” என்றாள். அடைத்த தொண்டை, வார்த்தையை சிந்த விடாது வலி கொடுத்தது.

“முடியலடி.”

உயிர் உருக்கும் இந்த குரலுக்கு அவள் என்ன பதில் சொல்வதாம்.

“நான் உங்களுக்கு செட் ஆகமாட்டேன்.”

பாசிலிடம் அமைதி.

சில நிமிடங்கள் தானும் மௌனத்தில் கரைத்தவள்,

“இருக்கீங்களா?” எனக் கேட்டிருந்தாள்.

அழைப்பின் ஆரம்பத்திலிருந்த கடுமை இப்போது அவளிடம் இல்லை.

“ஹான்…” பாசிலின் ஜீவனற்ற ஒலியை அவளால் கேட்க முடியவில்லை. மனம் துவண்டது. இருவருக்கும்.

“வச்சிடவா?”

“நான் வேணாமா உனக்கு?”

பாசிலின் அக்கேள்வியில், தன்னுடைய கீழுதட்டை அழுந்த கடித்தவள், கல்லென இறுகினாள்.

“எனக்கு காதல் அப்படின்னாலே, அந்த வார்த்தையால நான் அனுபவித்த கொடுமை தான் நினைவுக்கு வருது. எனக்கு இந்த காதலெல்லாம் ஒத்துவராது. இதுக்கு மேல எப்படி தெளிவா சொல்லணும் எனக்குத் தெரியல. நீங்க உங்களுக்கு பிடிச்ச வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க. அதுதான் உங்களுக்கு நல்லது” என்றாள்.

“முழுசா எனக்குள்ள உட்கார்ந்துட்டு இருக்க… வேற பொண்ணா?” விரக்தியாகக் கேட்டவன்,

“அப்பப்போ கால் பண்ணு. உன் குரலை கேட்டாவது உயிரோட நடமாடிக்கிறேன்” என்றவன் வைத்துவிட்டான்.

பாசில் இறுதியாக சொன்னதில் கோகிலா தான் உயிர் அதிர துடித்துக் கொண்டிருந்தாள்.

‘என்ன சொல்றார் இவர்? உயிரோடு நடமாடிக்கிறாரா? அப்போ இப்போ உயிரற்று இருப்பதா சொல்றாரா? எனக்காக இத்தனை வதையா?’ எல்லாம் புரிகிறது அவளுக்கு. அவனின் உள்ளமும் தெளிவாகிறது அவளுள். ஆனால்?

சத்தமிட்டு கத்தி அழ வேண்டும் போலிருந்தது.

இரவு நேரத்தில் யாராவது எழுந்து வந்துவிடுவார்களோ என்று அஞ்சியவள், நெஞ்சம் அடைப்பது போல் வலியை கூட்டிட எழுந்து குளியலறைக்குள் ஓடினாள்.

இருக்கும் அத்தனை குழாய்களையும் திறந்து விட்டுவிட்டு, கொட்டும் தூறல் குழாய்க்கு அடியில் நின்றவள் அடிவயிற்றிலிருந்து வெடித்து கதறினாள்.

உடல் சில்லிட்டு மரத்துப்போகும் வரை நின்றவள், கால்கள் வேரோடி நிற்க முடியாது ஆட்டம் காண… மெல்ல கதவினை திறந்து வெளியில் வந்தாள்.

அன்றைய வேலையை முடித்து விநோ வீட்டிற்கு வர வெகுவாகவே கால தாமதமாகியிருந்தது. விநோவிற்கு உணவெடுத்து வைத்து அவன் உண்ட பின்னர், தங்கள் அறைக்கு செல்ல மாடிப்படிகளில் கால் வைத்த ஆதர்ஷினிக்கு சட்டென்று கோகிலாவின் நினைவு.

‘அண்ணி நைட் சரியா சாப்பிடவே இல்லையே! தூங்கிட்டாங்களா பார்ப்போம். இல்லைன்னா பாலாவது காய்ச்சி கொடுப்போம்’ என எண்ணம் கொண்டவளாக ஆதர்ஷினி கோகிலாவின் அறைக்கு சென்று, கதவினை தட்ட முயற்சிக்க, தாழிடப்படாத கதவு பட்டென்று திறந்து கொண்டது.

உள்ளே எட்டிப்பார்த்த ஆதர்ஷினி, படுக்கை ஆளின்றி இருக்கவும்…

‘இன்னும் தூங்கலையா, எங்க போயிட்டாங்க?’ என்றவளாய் ஆதர்ஷினி உள்ளே நுழைய, குளியலறையில் தண்ணீர் விழும் சத்தம் அதிகமாய் கேட்டது. கூடவே கோகிலாவின் கத்தலும்.

குளியலறை கதவை ஆதர்ஷினி தட்ட நினைக்க, மெத்தையில் கிடந்த கோகிலாவின் அலைப்பேசி ஒலித்தது.

‘இந்த நேரத்தில் யாரது?’ ஆதர்ஷினி அலைப்பேசியை எடுக்க, பாசிலின் பெயர் மின்னியது.

“இந்த அழுகைக்கு காரணம் பாசில் அண்ணா தானா?” வாய்விட்டு சொல்லிக்கொண்டவள், இரண்டாம் முறை அடிக்கவே அழைப்பை செவி மடுத்தாள்.

பேசி வைத்துவிட்ட பின்னரும், இறுதியாக கோகிலாவிடம் தென்பட்ட அமைதி பாசிலை நிலைகுலையச் செய்தது. ஆதலால் மீண்டும் அவளுக்கு முயற்சித்திருந்தான்.

“அம்மு…”

‘ப்பா… என்ன வாய்ஸ் இது?’ கேட்ட ஆதர்ஷினிக்கே ஒரு மாதிரி இருந்தது. தலையை உலுக்கிக்கொண்டாள்.

“அண்ணா… நான் ஆது.”

“ஹோ… சாரிம்மா” என்றவன், ‘கொஞ்ச நேரத்துக்கு முன்பு என்கிட்ட பேசிய கோகிலா மொபைலில் இப்போ ஆது பேசுறாள். அப்போ கோகிலா?’ என சிந்தித்தவன்,

“ஆது… ஆதும்மா, கோகிலா… கோகிலாவுக்கு ஒண்ணுமில்லையே” என்று படபடத்தான்.

அவனின் பரிதவிப்பு ஆதர்ஷினியின் நெஞ்சில் பாரத்தை ஏற்றியது.

ஆதர்ஷினிக்கும் கோகிலாவின் கடந்த காலம் தெரியாது. ஆனால் அவள் பாசிலை அளவுக்கு அதிகமாகவே நேசிக்கிறாள் என்பதை கண்டுகொண்டிருந்தாள்.

எதற்கு வேண்டுமானாலும் அறிவுரை வழங்கலாம். இதை இப்படி செய், அப்படி செய்யென்று வழிமுறை காட்டலாம். ஆனால் காதலில்? இன்னொருவர் சொல்லி ஏற்கக்கூடிய விடயமல்லவே! அதனால் மட்டுமே ஆதர்ஷினி கோகிலாவின் காதல் தெரிந்தும் அமைதியாக இருக்கின்றாள்.

“அண்ணி நல்லாயிருக்காங்கண்ணா. நான் அவங்களுக்கு பால் கொடுக்கலாம் வந்தேன். பாத்ரூமில் இருக்காங்க போல, நீங்க திரும்பத்திரும்ப கூப்பிடவும் நான் அட்டெண்ட் பண்ணேன்” என்றாள்.

கோகிலா ஆதர்ஷினியை விட பெரியவளாக இருந்திட, முன்பு வயது தெரியாது அண்ணியென்று அழைத்துக் கொண்டிருந்த கோகிலாவை தன்னை பெயர் சொல்லி அழைக்குமாறு வற்புறுத்திய ஆதர்ஷினி, அவளை சீண்டுவதற்கென அண்ணியென அழைத்து அதுவே பழக்கமுமாகியிருந்தது.

“சரிம்மா” என்றவன் அடுத்து என்ன பேசுவதென்று தெரியாது அமைதியாக இருந்தான்.

“அண்ணா… நான் ஒண்ணு கேட்கவா?”

“ம்ம்ம்…”

“உங்களுக்கு இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?”

ஆதர்ஷினி கேட்ட மாடுலேஷனில் பாசிலுக்கு புன்னகை எட்டிப்பார்த்தது.

“லவ் பண்ணிட்டனே!” அவனது குரலில் தெரிந்த மென்மை, அவனது காதலின் ஆழத்தை அவளுக்கு காட்டியது.

“உங்களுக்கு இந்த லவ் மேரேஜ் தான் பண்ணிக்கணும் அப்படின்னு வேண்டுதல் ஏதும் இருக்காண்ணா?”

அவள் ஏன் அப்படி கேட்கிறாள் என்றெல்லாம் அவனுக்குத் தெரியவில்லை… இருப்பினும் இல்லையென சொல்லியிருந்தான்.

“அப்புறம் எதுக்கு திறக்கவே மாட்டேன்னு அடம் பிடிக்கிற கதவை தட்டிக்கிட்டே இருக்கீங்க? நாமயேன் உடைக்க ட்ரை பண்ணக்கூடாது?” எனக் கேட்டாள்.

“எனக்கு புரியலடா?”

“உங்களையெல்லாம் யாரு சிஎம்’க்கு பிஏ’வா போட்டது?” என்றாள்.

“அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?”

“யதுண்ணாலாம் பாருங்க, பொண்ணு சம்மதிக்கலன்னுதும் பொண்ணுக்கே தெரியாம தாலி கட்டிட்டார். நீங்க அவருக்கு ஃபிரண்டா இருந்துட்டு இவ்வளவு பொறுமையா இருக்கீங்க?” எனக் கேட்டாள்.

“ஆளானப்பட்ட விநோவையே மிரட்டி பயம்காட்டி தாலி கட்டிக்கிட்ட உனக்கு என்னை பார்த்தால் காமெடிப்பீஸ் போலத்தான் தெரியும்” என்று காமெடி போல் பேசினாலும், பாசிலின் உள்ளத்து வலியை அவளால் உணர முடிந்தது.

“நீ சொல்ல வந்ததை சொல்லும்மா?”

“அரேன்ஞ் மேரேஜ் ஏற்பாடு பண்ணிடலாமே! அண்ணி லவ் தானே வேணாம் சொல்றாங்க. உங்களையா? இதுவரை நீங்க வேணாம். உங்களை பிடிக்கலன்னு ஒருமுறையாவது சொல்லியிருக்காங்களா?”

“இல்லையே!”

“அவங்களுக்கு காதல் மேல் தான் ஏதோ கோபம். உங்களை மறுக்கவும் அதுதான் காரணம்” என்றவள், “ரெண்டு வீட்லையும் பேசி மேரேஜ் பண்ணிடலாம்” என்று ஐடியா வழங்கினாள்.

“பூரணி அத்தையும், விநோவும் சொன்னா நிச்சயம் அண்ணி சம்மதிப்பாங்க” என்றாள்.

“உன்னை மாதிரியே கார்னர் பண்ணி கல்யாணம் பண்ணிக்க சொல்ற” என்றவன், “அவள் அத்தைக்காகவோ, விநோக்காகவோ என்னை ஏத்துக்கக்கூடாது, எனக்காக ஏத்துக்கணும்” என்றான்.

“கல்யாணம் பண்ண மட்டும் தான் நான் வழி சொன்னேன். அதுக்கப்புறம் லைஃப் அண்ணி சம்மதத்தோட, அவங்க உங்க லவ் அக்செப்ட் பண்ண அப்புறம்… அது உங்க கையில்” என்றவள், “தூரம் எல்லா நேரத்திலும் அன்பை கூட்டிக்காட்டனும் அவசியமில்லைண்ணா. உங்களுக்கிடையே இருக்க இந்த தூரமே உங்க காதலை அண்ணிக்கு புரிய வைக்காம இருக்கலாம் இல்லையா. குடும்ப சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டு பக்கத்திலிருந்து காதலை காட்டுங்க. அப்பவும் அண்ணி அவங்க காதலை ஒத்துக்காம விட்டுடுவாங்களா என்ன?” என அவனுக்கு விளக்கிக் கூறினாள்.

“நீ இம்புட்டு பேசுவன்னு இன்னைக்குத்தாம்மா தெரியுது” என்ற பாசில், “ஐடியா நல்லாத்தான் இருக்கு. ஆனால் உன் புருஷன் ஒத்துக்கணுமே! யது பசங்களை சேவ் பண்ண வந்த அன்னைக்குக்கூட,

“உன் காதலுக்காக நீதான் போராட வேண்டும். கொஞ்சமில்லை ரொம்பவே போராட வேண்டியிருக்கும். உன் காதலோட கடந்த காலம் அப்படி. இதில் நானோ, யதுவோ செய்வதற்கு ஒன்றுமில்லை அப்படின்னு வெறப்பா டயலாக் விட்டுட்டு போறான். இவனுங்களை எல்லாம் நம்பி நான் என்னத்த காதல் கடலில் குதிக்கிறது” என்று புலம்பினான்.

குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்கவும்,

“அண்ணி வராங்க. நான் வச்சிடுறேன். ஒழுங்கா தூங்குங்கண்ணா. எல்லாம் சரி செய்திடலாம்” என்ற ஆதர்ஷினி பாசில் சரியெனும் முன்பே அழைப்பை வைத்திருந்தாள்.

ஈர உடையுடன், உச்சி முதல் பாதம் வரை நனைந்து வந்தவள் ஆதர்ஷினியை அந்நேரம் கண்டதில் அதிர்ந்து விழித்தாள்.

கோகிலா வந்த கோலம் கண்டு ஆதர்ஷினி ஒன்றும் சொல்லாது வெளியேறினாள்.

ஆதர்ஷினி மீண்டும் வருவதற்குள் கோகிலா ஆடை மாற்றி ஈர கூந்தலை தளர விட்டிருந்தாள்.

சூடான பாலில் மஞ்சள் மற்றும் மிளகு தூள் போட்டு கொண்டு வந்து கொடுத்தாள். மறுக்காது வாங்கி பருகிய கோகிலாவை கண்ணாடி முன்பு அமர வைத்து ஈர முடியை நன்கு துவட்டி விட்ட ஆதர்ஷினி ட்ரையர் மூலம் உலரவும் வைத்தாள்.

“குட் நைட் அண்ணி.”

ஆதர்ஷினி வந்த வேலை முடிந்தது என்பதைப்போல் கிளம்பிட…

“எதுவும் கேட்காமப் போறீங்க அண்ணி?” என்றாள் கோகிலா.

“என்ன அண்ணி கேட்கணும்?” கதவில் கை வைத்தபடி தலையை மட்டும் திருப்பி வினவினாள் ஆதர்ஷினி.

“நத்திங்.” இருபக்கமும் தலையாட்டினாள் கோகிலா.

“பாசில் அண்ணா கால் பண்ணியிருந்தாங்க. நான் தான் அட்டெண்ட் பண்ணேன்.” சொல்லியவள் கோகிலாவின் முகத்தை ஆராய்வாக உள்வாங்கினாள்.

“என்ன அப்படி பாக்குற?”

“ஏன் அண்ணி நான் உங்களை பார்த்ததே இல்லையா?” எனக் கேட்டவள்,

“நீங்களும் லவ் பண்றீங்க. ஆனா ஒத்துக்கத்தான் மனசு வரல இல்லையா?” என்றாள்.

“நீயா கற்பனை பண்ணிக்கிட்டு உளறாத ஆது.”

“எதே… நான் உளர்றேனா? சரிதான்” என்றவள், “தூங்குங்க அண்ணி” என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு ஏதும் பேசாது சென்றுவிட்டாள்.

படுக்கையில் விழுந்த கோகிலாவுக்குத்தான் உறக்கம் வருவேனா என்று சண்டித்தனம் செய்தது.

மனதில் பாசில் மீதான காதல் எழும்போதே… கடந்த கால நினைவுகளும் உடன் வர மொத்தமாக உடலாலும் மனதாலும் சோர்ந்து போகிறாள். பாசிலின் காதலை ஏற்க முடியாது தவிக்கிறாள்.

‘அனைத்தையும் மறந்துவிட்டு பாசிலை ஏற்றுக்கொள்’ என்று மனம் வாதிடும் போதெல்லாம், ‘வேண்டாம்’ என்று மூளை கட்டளையிடுகிறது.

இந்த காதல் என்ற வார்த்தையால் அவள் வாங்கியப் பேச்சுக்கள் அத்தனை எளிதில் மறந்திடுமா?

கண்களை மூடி படுத்தவளின் உவர்நீர் காது நனைத்தது.

ஏன்? எதற்கு? என்ற காரணங்கள் ஏதும் இல்லாமல் ‘சாரி’ என்று பாசிலுக்கு தகவல் அனுப்பியவள் அலைபேசியை மொத்தமாக அணைத்து கண்களை மூடிக்கொண்டாள்.

அவன் எதற்கு என்று காரணம் கேட்டு அழைத்துவிட்டாள் என்னவென்று சொல்வது என்கிற அச்சம்.

அவனை வருத்தி இவள் தான் வருத்தம் கொள்கிறாள்.

காதலின் வலியையும் விரும்பியே ஏற்கிறாள். இதைவிடவும் பெரிய வலிகளை கடந்து வந்தவளுக்கு இந்த வலி ஆறுதலாகவே இருந்தது.

கிட்டத்தட்ட அதிகாலையை நெருங்கும் நேரம் தன்னை அறியாது உறங்கியிருந்தாள். காலை தாமதமாகவே எழுந்து அன்றாட பணிகளை முடித்து அறையைவிட்டு வெளியில் வந்தவள், வேலைக்கு செல்லாது கூடத்து இருக்கையில் அமர்ந்து தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்த விநோவை ஆச்சர்யமாகப் பார்த்து வைத்தாள்.

“ட்யூட்டிக்கு போகலையா விநோண்ணா?” கேட்டபடி அவனருகில் சென்று அமர்ந்தாள்.

“மணி பத்தாகுதே! முதலில் சாப்பிட்டு வாடா” என்ற விநோ, “தர்ஷி” என குரல் கொடுத்தான்.

“கொஞ்சம் வேலையா இருக்கேங்க!” கிச்சனிலிருந்து ஆதர்ஷினியின் குரல் வந்தது.

“நானே போறேன்” என்று கோகிலா எழுந்து செல்ல… “நல்லா நிறைய சாப்பிட்டுவா” என்றான்.

ஏன் அவ்வாறு சொன்னான் என்று புரியாமலே சரியென தலையாட்டினாள்.

கோகிலா கிச்சன் உள்ளே செல்ல ஆதர்ஷினி வியர்வை விறுவிறுக்க பலவிதமான உணவு வகைகளை செய்து கொண்டிருந்தாள்.

“அண்ணி எழுந்துட்டிங்களா?” எனக் கேட்ட ஆதுவின் கவனம் அடுப்பின் மீதிருந்த பாத்திரத்தில் தான் இருந்தது.

“ஹாட்பேக்கில் டிஃபன் இருக்கு. சாப்பிடுங்க அண்ணி. வேணான்னா சூடா தோசை வார்க்கவா?” எனக் கேட்டவள் பரபரப்பாக சமையலில் ஈடுபட்டிருந்தாள்.

“நீ இன்னைக்கு ரேடியோ ஸ்டேஷன் போகலையா? விநோண்ணாவும் அதிசயமா அந்த கஞ்சி போட்ட காக்கியை மாட்டாம வீட்டிலிருக்கிறார்.” பேசியபடி கோகிலா உணவை தட்டிலிட்டு சுவைக்க துவங்கியிருந்தாள்.

சாரல் அலைவரிசையின் கிளை அலுவலகம் திண்டுக்கலில் இருக்க, அவர்களே அழைத்து வேலை கொடுத்திருந்தனர். அதற்கு காரணம் ஆதர்ஷினியின் குரல் மற்றும் தூத்துக்குடியில் அவள் நடத்திய நிகழ்ச்சியின் புகழும் தான்.

ஆதர்ஷினியின் மீது ஈர்ப்பு வந்ததற்கு அவளின் எழுத்துக்களையும் தாண்டி, வானொலி குரல் அலை தானே முக்கிய காரணம். ஆதலால் ஆதர்ஷினி விநோவிடம் வேலைக்கு செல்வதைப்பற்றி வினவிட விரும்பியே சம்மதம் வழங்கினான்.

விநோவிற்கு நேரில் கேட்கும் ஆதுவின் குரலைவிட, பண்பலையில் கேட்கும் தர்ஷியின் குரலில் ஒரு மயக்கம். தீரா மயக்கம். எப்போதும் நீர்த்துவிடாத மயக்கம். தெவிட்டிடா உள்ளத்து மயக்கம்.

அதனை அறிந்து கணவனுக்காகவே அதீத விருப்பத்தோடு வேலையில் சேர்ந்துவிட்டாள்.

இப்போது பண்பலையில் ஆதர்ஷினி ஆர்.ஜே மட்டுமல்லாது, கிரியேட்டிவ் ஹெட்டாக இருக்கின்றாள்.

ஆதலால் நிகழ்ச்சி நேரம் மட்டுமல்லாது முழு நேரமும் வானொலி நிலையத்தில் இருக்கும்படி இருக்கும். அதனாலேயே ஆதர்ஷினி வீட்டிலிருப்பதைப் பற்றி வினவினாள் கோகிலா.

“வீட்டுக்கு கெஸ்ட் வரும்போது எப்படி வேலைக்கு போறது?” என்ற ஆது, “நீங்க சீக்கிரம் சாப்பிட்டுட்டு, நல்ல புடவையா பார்த்து கட்டிக்கோங்க அண்ணி” என்றாள்.

“என்னது புடவையா?” கோகிலா ஆராய்ச்சியாய் வினவ,

“ஆமா அண்ணி புடவை தான். கட்டுங்க” என்று பின்னால் குரல் கேட்டு திரும்ப, தன்னுடைய மேடிட்ட வயிற்றை பிடித்தவாறு நிரல்யா நின்றிருந்தாள்.

“காலையிலே எங்க போயிட்டு வர்றீங்க? அம்மா எங்க?”

“வந்ததிலிருந்து வெறும் கேள்வியா மட்டும் தான் கேட்டுட்டு இருக்கீங்க” என்ற ஆது, “துருவ் எங்க?” என்று நிரல்யாவிடம் வினவினாள்.

“ஏதோ விட்டுப்போச்சுன்னு வீடு வந்தவங்களை அத்தை திருப்பி அனுப்பியிருக்காங்க ‘க்கா” என்றவளை கிச்சனிலிருந்து ஸ்டூலை எடுத்துப்போட்டு உட்கார வைத்த ஆது, அவள் கையில் பழச்சாறு அடங்கிய குவளையை திணித்தாள்.

“குடிச்சிட்டு அவங்களாம் வரதுக்குள்ள நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ நிரல்” என்றாள் ஆதர்ஷினி.

“அப்போ தனியா எல்லாம் நீங்களே செய்வீங்களா? நான் கூட இருக்கேன். எதாவது சொல்லுங்க நானும் ஹெல்ப் பன்றேன்” என்றவளை முறைத்த ஆதர்ஷினி…

“விநோ” என்றழைக்க,

“அக்கா இப்போ ஏன் மாமாவை கூப்பிடுறீங்க. இதோ நான் போயிட்டேன்” என்ற நிரல்யா ஒரே மூச்சாக ஜூஸினை குடித்துவிட்டு கிச்சனைவிட்டு வெளியேற, வாங்கி வந்த பொருட்களை பூரணியுடன் சரிபார்த்துக் கொண்டிருந்த விநோ மனைவியின் குரல் கேட்டு அங்கு வந்தான்.

வேகமாக தன்னெதிரே வந்த நிரல்யாவை பிடித்து நிறுத்தியவன், அவளின் வயிற்றை பார்த்து…

“மெதுவா நட நிரல்” என்றான்.

நிரல்யா விழிக்க…

“ஆமா உன்னை வந்ததும் ரெஸ்ட் எடுக்கத்தானே சொன்னேன். நீயென்ன கிச்சனிலிருந்து வர?” எனக் கேட்டான்.

“அது வந்து மாமா…” என்று அவள் இழுக்கும்போதே,

“உன் அக்காவுக்கு ஹெல்ப் பண்ண வந்தியாக்கும்?” என்றான். கண்டு கொண்டவனாக.

“மாமா…”

“ஒண்ணு இல்லை… ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. அவங்களுக்கும் சேர்த்து நீ கவனமா பாதுகாப்பா இருக்க வேண்டாமா?” என்ற விநோ, தானே அவளை அழைத்துச்சென்று அவளின் அறையில் விட்டுவிட்டு, “ஆரம்பிக்கும்போது வந்தா போதும்” என்றவனாக சென்றான்.

விட்டத்தை பார்த்து இரு கையையும் உயர்த்திய நிரல்யா…

“பாசத்தை காட்டியே கொல்றாங்க” என்று புன்னகை முகமாக புலம்பினாள்.

“இதுக்குத்தானே ஜூனியர் ஆசைப்பட்டிங்க. அப்புறம் என்ன?” அப்போதுதான் வந்த துருவன் மனைவியின் சந்தோஷ புலம்பலுக்கு கேள்வி தொடுத்தான்.

“இருந்தாலும் உங்களுக்கு மேல ரொம்ப பன்றார்?” என்று புகார் வாசித்தாள்.

“யாரு?” தெரியாததைப்போல் கேட்ட துருவனை நிரல் முறைத்தாள்.

“விநோ மாமா!” உர்ரென்று கூறினாள்.

“அண்ணா எப்பவும் அப்படித்தான். ரொம்ப கேரிங்” என்றவன், “உன் ஹெல்த்துக்கு ட்வின் பேபிஸ் கேரி பண்றது ரிஸ்க் அப்படின்னு டாக்டர் சொன்னதால… எல்லாருமே உன் விஷயத்தில் அதீத கவனமா இருக்காங்க” என்றான்.

“புரியுது… ஆனால் சும்மா உட்கார்ந்தே இருக்க போர் அடிக்குது” என்றவள் கணவனின் தோள் சாய்ந்தாள்.

எந்த அன்பு பாசமெல்லாம் கிடைக்காது தவித்தாளோ… அவையெல்லாம் தற்போது அவளுக்கு மூச்சு முட்டுமளவிற்கு திகட்ட திகட்ட கிடைக்கிறது. ஆதலால் இப்படியொரு குடும்பத்தை அன்பின் நிறைவாய் கொடுத்த கணவனை இன்னுமின்னும் காதலாய் பிடிக்கிறது.

“லவ் யூ சீனியர்.”

“லவ் யூ டூ ஜூனியர்.”

அச்சமயம் சரியாக வயிற்றில் அசைவு தெரிய இருவருரின் மனதோடு தேகமும் சிலிர்த்தது.

முகத்தில் கரை கானா மகிழ்வோடு தனது வயிற்றில் கை வைத்திருக்கும் கணவனை காதலாக பார்த்த நிரல் அவனின் கன்னத்தில் அழுந்த முத்தம் வைத்தாள்.

“நிறைய வேலையிருக்கு நிரல். லாஸ்ட் மினிட் அரேன்ஞ்மெண்ட், டெம்ப்ட் பண்ணாத” என்றவன் ‘அவளுடன் இருந்தால், சேதாரம் உறுதி’ என நினைத்தவன், “விநோண்ணா கூப்பிடுற மாதிரி இருக்கு” என்று வேகமாக எழுந்து சென்றான்.

அவனின் ஓட்டம் எது குறித்தென்று உணர்ந்த நிரல்யா சத்தமிட்டு சிரித்தாள்.

“சத்தமா சிரிக்காதடி. வயிறு பிடிச்சிக்கப்போகுது” என்று திரும்பி வந்து அறை வாயிலில் நின்றே சொல்லியவன் ஓடிவிட்டான்.

துருவ் கூடத்திற்கு வரும்போது விநோ யதுவுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான்.

“வந்துட்டாங்களா விநோண்ணா?”

“இன்னும் ஒன் ஹவர் ஆகும் துருவ்” என்ற விநோவிடம், எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டிருந்த பூரணி,

“அவங்களுக்கு சொல்ல வேண்டாமா?” எனக் கேட்டார்.

“யாருக்கு?” விநோ, துருவ் இருவருமே ஒருசேர வினவினர்.

“கோகிம்மா பெத்தவங்களுக்கு?”

“அவள் என் தங்கச்சி. துருவ்’வோட அக்கா. அப்போ அவளோட அம்மா நீங்களாதானே இருக்க முடியும்.” கத்தவில்லை, வார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை, ஆனால் பூரணியின் வாயினை அடைத்துவிட்டான் விநோ.

“உன் பொண்ணுக்கு செய்யுறதுக்கு யார்கிட்டவும் தகவல் சொல்ல வேண்டிய அவசியமில்லை.”

பெற்ற மகள் என்றும் பாராது அவர்கள் பேசிய பேச்சு, நடந்துகொண்ட முறை நினைக்க நினைக்க இப்போது நடந்ததைப்போல் விநோவின் மனம் உலைகலனாக கொதித்தது.

“பெத்த பொண்ணே இல்லைன்னு சொன்னவங்கதானே… இப்போ எங்கிருந்து வந்தாங்க? நல்லது நடக்கும் போது கெட்டதை பேச வேண்டாம்” என்ற விநோ இன்னமும் அங்கேயே நின்றால் மனம் ஆறாது பேசிவிடுவோமென்று அங்கிருந்து சென்றுவிட்டான்.

“ஏம்மா?” செல்லும் தன் அண்ணனின் கோபத்தை உணர்ந்தவனாக துருவ்.

“நான் சும்மா எதார்த்தமா கேட்டேன் துருவ். விநோ மனசில் இன்னும் ஆழமா அந்த சம்பவம் பதிந்திருக்குன்னு நினைக்கல” என்றவர், “அவங்களுக்கும் ஒரே பொண்ணு தானே! அன்னைக்கு ஏதோ புத்திகெட்டத்தனமா நடந்துகிட்டாங்க. அதுக்காக பெத்தவங்க இல்லைன்னு ஆகிடுமா? கோபத்தில் நாம சொல்லலாம். நாளை பின்ன பெத்தவங்க வந்து உரிமை கொண்டாடினா என்ன பண்றது. அவங்களுக்கு நடப்பது தெரியப்படுத்தவாவது வேண்டுமில்லையா?” என்றார்.

“கோகிக்காக்கு மட்டும் நீங்க இப்படி பேசுறது தெரிஞ்சுது அவ்வளவுதான். விநோண்ணா பொறுமையா சொன்னாரு, கோகிக்கா உங்களை உண்டில்லைன்னு பண்ணிடுவா” என்ற துருவனிடம்…

“போடா… போ, வேலையிருந்தா பாரு” என்றார்.

“நான் போறது இருக்கட்டும், கோகிக்காவுக்கு மேட்டரை சொல்லியாச்சா?” எனக் கேட்டான்.

“ஆதுவோட இருக்கா நினைக்கிறேன். அவள் சொல்லிப்பாள்” என்று பூரணி சொல்லும்போதே,

விநோ கோகிலாவை அழைக்கும் சத்தம் வீட்டை நிறைத்தது.

அதே சமயம் கோகிலா ஆதர்ஷினியிடம் மல்லுக்கு நின்றிருந்தாள்.

error: Content is protected !!
Scroll to Top