நேச நெஞ்சங்கள் 54

உயிர் உறை 54

காதல் 2

வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையாய் செய்திட… கோகிலாவுக்கு என்ன நடக்கிறது என்கிற நிலை தான்.

“ஆது என்ன நடக்குது இங்க?”

பலமுறை கேட்டும் ஆதர்ஷினியிடமிருந்து பதிலின்றி போக… கிச்சனில் நின்றிருந்த கோகிலாவின் நிலை அங்கு எரிந்து கொண்டிருந்த அடுப்பிற்கு நிகராக இருந்தது.

“இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களுக்கே தெரிஞ்சிடும் அண்ணி. உங்க அண்ணா சொல்லுவாங்க” என்ற ஆது பாயாசத்தில் இனிப்பை சரி பார்த்தாள்.

“விருந்து அமர்க்களமா இருக்கே! வீட்டுக்கு யார் வரா?”

“அண்ணி நீங்க எப்படி கேட்டாலும் என்னால் பதில் சொல்ல முடியாது” என்ற ஆது, செய்திருக்கும் உணவு வகைகளை அதற்குரிய பாத்திரங்களில் எடுத்து வைத்து, பாத்திரங்களை கழுவுவதற்காக சிங்கில் நிரப்பினாள்.

“ஆது எனக்கு தலை வெடிக்குது. சொல்லுவியா மாட்டியா?”

“தேவி அக்கா பாத்திரம் எல்லாம் கழுவிடுங்க. செஞ்ச டிஷ் எல்லாம் உங்களுக்கு அங்க எடுத்து வச்சிருக்கேன். போகும் போது கொண்டு போங்க” என்று பணியாளிடம் பேசியவள், ஆதுவின் பேச்சு காதிலே விழாததைப்போல்,

“இன்னொருவாட்டி குளிக்கணும் போல அண்ணி… பயங்கர ஸ்வெட்” என்றவளாய் கிச்சனிலிருந்து வெளியேற முயல,

“எனக்கு பதில் சொல்லிட்டு போ ஆது” என்று ஆதர்ஷினியின் கரத்தை பிடித்து நிறுத்தியிருந்தாள் கோகிலா.

ஆதர்ஷினி கோகிலாவிடமிருந்து தனது கையை விடுவிக்க முயல, கோகிலாவின் பிடியில் அழுத்தம் கூடியது.

கிட்டத்தட்ட சொல்லித்தான் ஆக வேண்டும் என்பதைப்போல் கோகிலா மல்லுக்கு நின்றாள்.

அந்நேரம் விநோவின் அழைப்பு. ஆதுவை முறைத்துக்கொண்டே விநோவிடம் சென்றாள் கோகிலா.

‘இதுக்கேவா! முடியல…’ என்று நினைத்த ஆது பூரணியிடம் வேறு ஏதேனும் செய்ய வேண்டுமாயென்று கேட்க,

அவருடனிருந்த துருவ்…

“நீ செஞ்சிருக்க ஐட்டம்ஸ் எல்லாம் கொண்டு வா ஆது. டேஸ்ட் எப்படியிருக்குன்னு டெஸ்ட் பண்ணிடுவோம்” என்றான்.

ஆரம்பத்தில் துருவ் அண்ணி என்று அழைக்க… இருவரும் சம வயதுடையவர்கள் என்றதும் பெயர் சொல்லி அழைக்கத் துவங்கினான். ஆதுவும் அதனையே விரும்பினாள். இருவருக்குள்ளும் நல்ல தோழமை. அதில் அவர்களின் துணைகளுக்கு மகிழ்வே.

“உனக்கு பசிக்குதுன்னு சொல்லுடா. வாசனை வந்தாலே பசிச்சிடுமே உனக்கு” என்றவள் அவன் கேட்டது போலவே செய்த வகைகள் அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சம் வைத்து கொண்டு வந்து கொடுத்தவள், அவனின் அருகில் அமர்ந்தாள்.

தட்டில் பழங்கள், இனிப்புகள் என எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டிருந்த பூரணி, ஒரு கவரை ஆதர்ஷினியிடம் நீட்டினார்.

“என்னது அத்தை?”

“கோகிலாவுக்கு புடவை” என்றவர், அவர்கள் வழக்கம் எப்படின்னு தெரியலையே… நாம் நம்முடைய வழக்கத்தை முறையா செய்வோம். அவங்க வந்து இப்படி அப்படின்னு சொன்னா செய்துக்கலாம்” என்றார்.

“மேட்சிங் ப்ளவுஸ் அத்தை?”

“போனதும் புடவை எடுத்து தைக்க கொடுத்தாச்சு ஆது. அதுக்கு அப்புறம் தான் மத்தது வாங்க போனோம். ஒன் ஹவர்ல வேலை முடிஞ்சுது. ப்ளவுஸ் மறந்து வந்துட்டு தான் துருவனை திரும்ப அனுப்பினேன்” என்றார்.

புடவையை பிரித்து பார்த்தவள், “நல்லாயிருக்கு அத்தை. அண்ணிக்கு சூப்பரா இருக்கும்” என்றிட, “நல்லாயிருக்குன்னு நீ ஆட்டைய போட்டுடாதே” என்றான் துருவன்.

துருவனின் தலையில் கொட்டியவள்,

“நான் கேட்டா, ஒண்ணு இல்லை பத்து புடவை வாங்கி தருவார்டா என்னோட காக்கி” என்றாள்.

கணவனை பற்றி பேசவும் சட்டென்று அவளின் முகம் தன்னைப்போல் சிவந்தது.

“புருஷனை பத்தி பேசினால் மட்டும் இந்த பொண்ணுங்க முகம் எப்படி இப்படி பிளஷ் ஆகுது தெரியல” என்றவனின் கேலியில் ஆதுவின் முகம் நாணம் கொண்டது.

“அவளை ஏண்டா சீண்டுற” என்று துருவனின் தொடையில் தட்டிய பூரணி, “வரவங்க முன்னாடி ஒழுங்கா அண்ணின்னு கூப்பிடு” என்றார்.

“நோ மாம்.” துருவன் உடனடியாக மறுத்தான்.

“அவங்களும் நம்ம குடும்பத்தில் ஒருத்தங்களா ஆக்போறாங்க, அவங்களுக்காக எப்பவுமே அப்படி இருக்க முடியாது. இப்படி இயல்பா இருக்கிறது தான் எங்களுக்கு பிடிச்சிருக்கு” என்றான். அவனின் கருத்தை ஆதுவும் ஆமோதித்திட…

“நல்ல அண்ணி, நல்ல கொழுந்தன்” என்று புன்னகைத்தார் பூரணி.

தன் மக்கள் பாகுபாடின்றி இப்படி ஒற்றுமையாய் இருப்பது எந்த தாய்க்குதான் பிடிக்காது.

“எல்லாமே டேஸ்டியா இருக்கு ஆது. வரவங்க சாப்பிட்டு மயக்கம் போடாம இருந்தால் சரி” என்றவனை கையிலே கிள்ளி வைத்தாள்.

“என்னை அப்புறம் கிள்ளிக்கலாம் இப்போ வா” என்ற துருவ் ஆதுவின் கையை பிடித்து விநோவின் அறை நோக்கி இழுத்துச் சென்றான்.

“எதுக்குடா இப்படி இழுத்துட்டு போற?”

“சத்தம் காட்டாம வா ஆது. செண்டிமெண்ட் சீன் மிஸ் ஆகிடும்” என்றவன் விநோவின் அறை திறந்திருக்க சற்று மறைந்து நின்று, ஆதுவையும் தன்னருகில் நிறுத்திக்கொண்டான்.

“என்னடா பண்ற?”

“என்னைவிட கோகிக்காகிட்ட விநோண்ணாவுக்கு கொஞ்சம் செண்டி ஜாஸ்தி. அதான் எப்படி நனையுறாங்கன்னு பார்க்கலாம்” என்றான்.

நெற்றியில் தட்டிக்கொண்டாலும், ஆதுவும் உள்ளே என்ன நடக்கிறதென்று கவனித்தாள்.

கோகிலா விநோவுக்கு எதிரில் அமர்ந்திருக்க… இருவருக்கிடையிலும் மௌனமே நிலவியது.

கோகிலாவை அழைத்த விநோ எதுவும் பேசாது அவளையே பார்த்திருக்க… கோகிலாவும் ஏனென்று கேட்காது அவன் பேசுவதற்காகக் காத்திருந்தாள்.

“காக்கியாடா துருவ் இது. பர்ஸ்ட் டைம் பேசுறதுக்கு தயங்குற விநோவை பார்க்கிறேன்” என்று மெல்ல கிசுகிசுத்தாள்.

“கோகிக்கா நோ சொல்லிடக்கூடாதே. அதுக்காகத்தான் இந்த முன் மௌனம்” என்று தன்னுடைய அண்ணனை நன்கு புரிந்தவனாக கூறினான் துருவ்.

தொண்டையை செருமிய விநோ, கோகிலாவின் கையை தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு மெல்ல பேசத் துவங்கினான்.

“இந்த அண்ணா மேல உனக்கு நம்பிக்கை இருக்குலடா?” எனக் கேட்டவன், அவள் தலையசைத்ததும், “அண்ணனா எனக்கிருக்கும் கடமையை செய்யலாம் முடிவு பண்ணியிருக்கேன். அதுக்கான அரேன்ஞ்மெண்ட்ஸ் தான் இப்போ நடந்திட்டு இருக்கு” என்றான்.

“புரியலண்ணா?”

அவளின் உச்சியில் தனது உள்ளங்கை வைத்து அழுத்தியவன்,

“என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணலாம் முடிவு பண்ணியிருக்கேன். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திட்டு இருக்காங்க” என்று சிந்தாமல் சிதறாமல் அவளின் தலையில் அணுகுண்டை வீசினான்.

அதிர்ந்து அகண்டு விரிந்த அவளின் விழிகளே பறைசாற்றியது அவள் பாசிலின் மீது கொண்டுள்ள காதலின் அளவை.

“மொட்டையா மாப்பிள்ளை வீட்டுக்காரங்கன்னு சொல்லி அண்ணியை அதிர வைக்கிறார். பாசிலண்ணா தான் பையன்னு சொல்ல வேண்டியதுதானே!” இங்கு துருவிடம் ஆது குறைபட்டாள்.

“அண்ணா இப்படி சொல்ல ரீஸன் இருக்கும் ஆது.” இருவரும் உள்ளே கவனிக்க ஆரம்பித்தனர்.

“விநோண்ணா… இப்போ… இது…த்…இது… எனக்கு வேணாமே!” அழும் குரலில் கூறினாள். அவளுக்கு தொண்டை அடைத்து வலி கூடியது.

“இப்போ வேணாமா இல்லை வேறெப்போமே வேணாமா?”

கோகிலாவிடம் பதிலில்லை.

“நீ வேண்டாம் சொன்னாலும் இந்த கல்யாணம் நடக்கும். உன்னை கட்டாயப்படுத்துறேன் நினைக்காதே! உனக்கு முதலில் பண்ணிட்டு தான் நானும் துருவும் கல்யாணம் பண்ணியிருக்கணும். ஆனால் சூழல் வேற மாதிரி அமைஞ்சிருச்சு. உனக்கும்  பழையதை மறக்க கால அவகாசம் வேணுன்னுதான் அமைதியா இருந்தேன். இனியும் அப்படி இருக்க முடியாது. காலம் மாத்திடாத உன் மனசை, உன்னை கட்டிக்கப்போறவர் மாத்துவாருன்னு நம்புறேன்” என்றான்.

“விநோண்ணா ப்ளீஸ்…” அவளின் குரலில் மன்றாடல்.

“நானும் ப்ளீஸ்டா… நீ குடும்பமா வாழணும் ஆசை எங்களுக்கு இருக்காதா?”

அவனின் நியாயமான கேள்வியில் உடைந்து போனாள்.

விநோவுக்காக எதுவும் செய்யும் மனம் தான் அவளுக்கு. ஆனால் மனம் முழுக்க அவளின் சொல்லாத காதல் பாசில் நிறைந்திருக்க… விநோவுக்கு சம்மதம் கொடுக்க முடியவில்லை.

அவளுக்குத்தான் வருவது பாசிலென்று விநோ சொல்லவில்லையே. அவளை அவள் வழியிலேயே மடக்குவதற்கு தான் சொல்லாதிருக்கிறான்.

“என்ன தின்க் பண்ற? என்னை நம்பி வந்த மாதிரி… இதுலையும் என்னை நம்பு கோகிம்மா” என்றான்.

“எனக்கு அழ வரும்போல இருக்கு. இப்படியெல்லாம் ரெக்வஸ்ட் பண்ணாதீங்க விநோண்ணா.” அவனின் உள்ளங்கையில் முகம் புதைத்து கண்ணீர் சிந்தினாள்.

“பாசிலண்ணா சொல்லியிருந்தா, அண்ணி அமைதியா நடப்பதை ஏற்றுக்கொண்டிருப்பாங்க. இப்போ பாரு அழறாங்க.” ஆது துருவனிடம் ஆதங்கப்பட்டாள்.

“போயிட்டு கண்ணு துடைச்சிட்டு வாயேன்!” துருவ் நக்கல் செய்தான்.

ஆது அவனின் காலை ஓங்கி மிதிக்க, துருவ் ஆவென்று கத்திட, ஆது அவனது வாயில் தன் கை வைத்து மூடினாள்.

“ரெண்டு பேரும் இங்கிருந்து போறீங்களா?” சிங்கமென கர்ஜித்த விநோவின் குரலில் இருவரும் அடித்துபிடித்து கீழே ஓடினர்.

“எப்படி நாம இருக்கிறதை கண்டுபிடிச்சாரு?”

“அதான் நீ கத்துனியேடா!”

“ஹேய்… அவர் நாம் போனதுமே ஸ்மெல் பண்ணிட்டார்” என்ற துருவனை எப்படி என்று பார்த்தாள்.

“கத்தியது நான்தான். ஆனால் ரெண்டு பேரும் அப்படின்னு திரும்பாமலே சொன்னாரு” என்று விளக்கம் கொடுத்தான்.

“ஓ…” என்று ஆது இழுக்க…

“என்ன ஓ. க்ளைமேக்ஸ் என்னன்னு தெரியலையே!” என்றான். கவலையாக.

“வந்து சொல்லுவார் இரு.”

“சுடச்சுட நியூஸ் தெரிஞ்சிகிட்டாதான் சுவாரஸ்யம்” என்றவனை முறைத்தவள், “அதுக்கு நீயே அண்ணிக்கிட்ட பேசியிருக்கலாமே?” என்றாள் ஆதர்ஷினி.

“விநோண்ணா மாதிரி பக்குவமா எனக்கு பேசவராது” என்றவன், “திடீரென இந்த ஏற்பாடெல்லாம்… காரணமே நீதான். கோகிக்காவுக்கு மட்டும் தெரிஞ்சிதோ வையேன்… நீ காலி… மொத்தமா நீ காலி…” என்று ராகமாய் இழுத்ததோடு, ஆது முழித்த முழியில் சத்தமாக சிரித்திட…

வெளியில் இரண்டு கார்கள் வந்து நின்றது.

பூரணி, துருவ், ஆது மூவரும் வாசலுக்கு சென்று வந்திருப்பவர்களை வரவேற்றனர்.

முதல் காரிலிருந்து யது ஷாவுடன் படு ஸ்டைலாக இறங்கிட… இரண்டாவது காரிலிருந்து இறங்கிய பாசில், யதுவை முந்திக்கொண்டு முன் வந்து நின்றான்.

‘என்னடா’ என்பதைப்போல் யது பார்க்க…

“இந்த கதையில் நான் தான் ஹீரோ. அதனால் நீ என் பின்னால் வா” என்றான்.

யது வாய்க்குள்ளே முணுமுணுக்க…

“உன் கதையில் நானெங்காவது முன் வந்தேனாடா? உன்னை முழுசா பெர்ஃபார்மென்ஸ் பண்ணவிட்டேன்ல. இப்போ நீ வழிவிட்டு நில்லு. இது என் கதை. என் காதல்” என்றான்.

“அண்ணா உங்க கதை தான். யாரு இல்லைன்னு சொன்னா. நடப்பது சரியா நடந்தாதான் உங்களை ஹீரோன்னு அக்செப்ட் பண்ணுவாங்க. அதுக்கு முதலில் உள்ள போகணும்” என்று கையில் உண்ணியை வைத்திருந்தவளாக பாவனா சத்தமில்லாது சொல்லி சிரிக்க… பாசில் அசடு வழிந்தான்.

“அச்சோ பாசிலண்ணா வெட்கப்பட்டுடாதீங்க… ஏற்கனவே இங்கு நிலவரம் கலவரம் தான். கொஞ்சம் அடக்கியே வாசியுங்க” என்ற ஆதுவின் கேலியில் யது பாசிலை பார்த்து சத்தமாக சிரித்திட… பாசில் ஆதுவின் தலையிலேயே வேகமாக கொட்டினான்.

“அய்யோ மாமா எதுக்கு கொட்டுறீங்க?” என்று பாசிலை அதட்டிய துருவ், வலியில் சுருங்கிய ஆதுவின் முகத்தை கண்டு, அவளின் தலையை தேய்த்தவனாக…

“விநோண்ணாகிட்ட உங்களை மாட்டிவிடுறேன்” என்றதோடு, “வீட்டுக்கு மாப்பிள்ளை ஆகிறதுக்குள்ள எங்க வீட்டு பொண்ணை அடிக்க செய்யுறீங்க. நீங்க எப்படி எங்க பொண்ணை நல்லா பார்த்துப்பீங்கன்னு நாங்க நம்புறது. இந்த மாப்பிள்ளை வேண்டாம் ‘ம்மா” என்று பூரணியிடம் முடித்து… பாசிலின் இதயத்தில் வெடி வைத்தான் துருவன்.

துருவ் பேசியதையெல்லாம் பாசில் கருத்தில் கொள்ளவே இல்லை. அவன் சொல்லிய மாமா என்கிற அழைப்பிலேயே பாசிலின் மனம் சந்தோஷ கூவல் கூவியது.

அதுநாள் வரை பாசிலை அண்ணா என்று அழைத்துக் கொண்டிருந்தவனின் விளிப்பு… இன்று அவனது அக்காவை மணம் முடிக்கப்போவதால், அக்காவின் கணவர் மாமா என்கிற முறையில் மாற்றம் பெற்றிருந்தது. அதில் பாசிலின் மனம் தன் காதல் நிறைவேறிவிட்டதாக நிறைவு கொண்டான்.

“முடிஞ்சா உன் அக்காவை என் கண்ணை நேருக்கு நேர் பார்த்து… இந்த கல்யாணம் வேண்டாம் சொல்ல சொல்லுடா பார்ப்போம்” என்று கூறிய பாசிலை மேலும் கீழும் பார்த்த துருவ்…

“காதல் மேலிருக்க நம்பிக்கையா மாம்ஸ்?” எனக் கேட்டான்.

“ம்ஹூம்” என்று இருபக்கமும் தலையசைத்த பாசில், “என் மச்சான்ங்க மேலிருக்கும் நம்பிக்கை” என்று சொல்ல…

“அய்யோ மாம்ஸ் சாச்சிப்புட்டியே!” என்று நெஞ்சில் குத்திக்கொண்டு சரிந்தவனை பாசில் தாங்கி பிடிக்க…

“போதும் உங்க விளையாட்டு” என்ற பூரணி, “பெரியவங்க எவ்வளவு நேரம் வெளியில் நிக்கிறாங்க. நீங்க போய் அப்படி ஓரமா உட்கார்ந்து அரட்டை அடிங்க” என்றதோடு, ராதா மற்றும் பாசிலின் அன்னை ஷமீமை வரவேற்றவர், பாவனாவின் கையிலிருந்த உண்ணியை வாங்கியவராக மூவரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

“ம்மா… மாப்பிள்ளையை வாங்கன்னு கூட சொல்லாமப் போறீங்க?” யது கூறிட,

“முதலில் எம்பொண்ணு ஓகே சொல்லட்டும். அப்புறம் வந்து உள்ளே கூப்பிடுறேன்” என்றார் பூரணி.

“மொத்தத்தில் உன்னை வச்சு செய்ய முடிவு பண்ணிட்டாங்கடா” என்று யது சொல்ல, அவனுடன் ஆது, துருவ் இணைந்து சிரித்தனர்.

“இது என் மாமியார் வீடு. என்னை யார் கூப்பிடணும். அதையெல்லாம் நான் எதிர்பார்க்கல” என்ற பாசில் மூவரையும் கண்டுகொள்ளாது உள்ளே செல்ல…

“மீசையில் மண்ணு ஒட்டலையாம்” என்ற துருவுக்கு, “அவனுக்கு மீசையே இல்லைடா” என்றான் யது.

“ரெண்டு பேரும் அவரை செஞ்சது போதும். உள்ள வாங்க. கோகி புயல் கரை ஒதுங்கிருக்கா தெரியல. முதலில் அண்ணி ரிசல்ட் என்னன்னு பார்ப்போம்” என்றவள் உள்ளே செல்ல, பூரணி வந்திருப்போருக்கு பானம் கொடுத்துக்கொண்டிருந்தார்.

“என்னை கூப்பிட்டிருக்கலாமே அத்தை” என்று அவரின் கையிலிருந்த ட்ரேவை ஆது வாங்க முற்பட…

“நீ போய் விநோவை வரச்சொல்லு. நிரல்யாவை எழுப்பி, ரெண்டு பேரும் கோகியை தயார் பண்ணி கூட்டிவாங்க”  என்று அனுப்பி வைத்தார்.

ஷமீம் வந்ததிலிருந்து வீட்டையும் அவ்வீட்டு மக்களையும் ஆராய்வாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

இருப்பது ஒரே மகன். கணவரும் உயிருடன் இல்லை. இச்சூழலில் மகனின் காதல் திருமணத்தை ஏற்றால் சொந்தபந்தங்களின் ஆதரவு கிட்டாது என்று முதலில் மறுத்தார்.

பாசில் தன்னுடைய காதலை சொல்லும்போது கூட… வேற்று மதம். நிச்சயம் ஒத்து வராதென்றே அவருக்குத் தோன்றியது.

அதனை மகனிடம் சொல்லவும் செய்தார்.

“சொந்தங்கள் இல்லாது காலத்துக்கும் தனித்து நிற்க முடியாது பாசில்” என்று ஷமீம் மகனுக்கு எடுத்து சொல்ல, மகனோ அன்னைக்கு தன் காதலின் ஆழத்தை உணர்த்தினான்.

“நம்ம சொந்தங்களுக்காகவா என் காதலை மறுக்குறீங்க? யாரும்மா அவங்கெல்லாம். அப்பா இறந்தப்போ எங்க போயிருந்தாங்க? அப்பா இருந்தப்பவும் சரி, இல்லாதப்பவும் சரி நம்மை தாங்கி பிடித்தது, தங்கச்சின்னு உங்களுக்கு எல்லாம் செய்தது மதமென்று இப்போ பிரிச்சி பாக்குறீங்களே அந்த மதத்தில் சேராத உண்ணி அச்சன் தான். இப்போ என்னை தாங்கி பிடிக்கிறதும் என் யது தான். யது எனக்கு எப்படியோ, அப்படித்தான் விநோ. ஒருமுறை எனக்காக அங்க வந்து பாருங்கம்மா, கோகிலாவை மட்டுமில்லை மொத்த குடும்பத்தையும் உங்களுக்கு பிடிக்கும்” என்றான்.

“என் சந்தோஷம் கோகிலாகிட்ட தா(ன்)ம்மா இருக்கு.”

இதற்குமேல் அவரால் எப்படி மறுக்க முடியும். அவருக்கும் மகனின் சந்தோஷம் தானே முக்கியமாக இருக்கும்.

“அவங்க வீட்டில் பேசிட்டு சொல்லுப்பா. நேரில் சென்று பார்த்து வருவோம்” என்று தன்னுடைய சம்மதத்தை வழங்கினார் ஷமீம். தாயை கட்டிக்கொண்டான் பாசில்.

அன்னையின் சம்மதத்தைக்கூட எளிதில் வாங்க முடிந்தவனால், அவனவளின் சம்மதத்தைதான் இந்நொடி வரை வாங்கிட முடியவில்லை. எங்கு தன் காதல் நிறைவேறாமலே போய்விடுமோ என்று பயந்தவனை கண்டு ஷமீமும் மனம் வருந்தினார்.

மகனின் காதல் காத்திருப்பிலே கரைந்திடுமோ என்று அவர் வருத்தம் கொண்ட நேரம் தான்… பூரணியே நேரடியாக ஷமீமிற்கு அழைத்து நாளையே பெண் பார்க்க வருமாறும், சிறியளவில் நிச்சயதார்த்தம் போல் செய்து கொள்ளலாமென்று சொல்லியிருக்க… கிளம்பி வந்திருந்தனர்.

என்னதான் மகனின் சந்தோஷத்திற்காக அவனது காதலை ஏற்று இங்கு வந்துவிட்டாலும், வந்த பின்னர் ஷமீமிற்கு வேற்று மதம்… குடும்பம் எப்படியோ? அவர்களின் பழக்க வழக்கங்கள், பேச்சுக்கள் எப்படியோ? என்று ஒவ்வொன்றிலும் ஆராய்ச்சி தான். ஆனால் பார்த்ததும் பாசிலுடன் அவ்வீட்டு பிள்ளைகள் காட்டும் நெருக்கும்… அண்ணி, கொழுந்தன் உறவு முறையாகவே இருந்தாலும் அவர்களிடையே உள்ள பேதமற்ற அன்பு… அதனை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காமல் சரியான கோணத்தில் ஆதரிக்கும் பூரணி அம்மா… யதுவை மட்டுமல்லாது பாசிலையும் அவர்கள் குடும்பமாகப் பார்ப்பது, மாமியார் மருமகளிடையே இருக்கும் புரிதல், அதுமட்டுமில்லாது அக்குடும்பமே விநோதன் என்கிற ஒருவனின் அன்பிற்கு கட்டுப்பட்டு நிற்பது என அனைத்தும் பிடித்துப்போக… சொந்தங்களுக்கு மத்தியில் மதிப்புடன் இருப்பதைவிட, இப்படியொரு பிணைப்பான குடும்பத்தில் நிறைவாய் வாழ்வதே சந்தோஷம் என்பதை புரிந்துகொண்டார்.

மொத்தத்தில் ஷமீமும் அவ்வீட்டில் இனி தானும் ஒரு அங்கம் என்பதில் ஏக பிடித்தம் கொண்டார்.

பூரணியுடன் சகஜமாக பேச ஆரம்பித்துவிட்டார். அதனை ராதா, யதுவிற்கு கண்காட்டிட, யது பாசிலிடம் சுட்டிக்காட்டினான்.

“அம்மா விக்கெட் ஆகிட்டாங்க!” யது சொல்லிட…

“அவுட் ஆக வேண்டிய ஆளு நின்னு படுத்துறாளே!” என்றான் பாசில்.

“கேட்டதும் கிடைச்சிட்டா மதிப்பு இருக்காது மாம்ஸ். ஆனால் இனி அக்கா ஓகே சொல்லிட்டாலும், பின்னாளில் எனக்காக என் புருஷன் எத்தனை வருஷம் காத்திருந்தார் தெரியுமா அப்படின்னு உங்க காதலை சொல்லி பெருமை பேசுவாங்க. அப்போ உங்களுக்கு ஒரு சந்தோஷம் கிடைக்குமே அதில் கிடைக்கிற சுகமே தனி” என்று எடுத்து சொல்லிய துருவனின் கூற்றை ஆமோதிப்பது போல் யதுவும் சிறு தலையசைப்போடு புன்னகை புரிந்திட…

“அனுபவம் பேசுது போல” என்ற பாசிலின் முகத்தில் கூட கோகிலா இப்போதும் மறுத்துவிடுவாளோ என்கிற பதட்டம் நீங்கி மெல்லிய கோடாக மென்னகை புரிந்தான்.

நிரல்யாவை எழுப்பி பழகலவையை ஒரு கிண்ணம் நிறைய கொடுத்த ஆது,

“எல்லாரும் வந்துட்டாங்க. பிரெஷப் ஆகிட்டு, இதை சாப்பிட்டு முடித்து தான் வெளியில் வரணும்” என்றவள் அடுத்து விநோவிடம் சொல்ல அவர்களது அறைக்கு விரைந்தாள்.

அத்தனை நேரமாகியும் கோகிலா தன்னுடைய முடிவென்னவென்று சொல்லாது கண்ணில் கலங்கி நிற்கும் நீரை கன்னத்தில் வழிய விடாது தவிப்புடனே அமர்ந்திருந்தாள்.

“இங்கு உன் சம்மதமில்லாம எதுவும் நடக்காது கோகிம்மா. ஆனால் இன்னும் எத்தனை காலத்துக்கு நடந்ததையே நினைத்து உள்ளுக்குள்ள மருகுவ. உனக்கு கல்யாணம் சொன்னதிலிருந்து அம்மா எத்தனை சந்தோஷமா எல்லாம் பார்த்து பார்த்து செய்துட்டு இருக்காங்க தெரியுமா?” என்றவன், எதுவாயிருந்தாலும் அவங்களாம் வரதுக்குள்ள சொல்லிடு” என்றான்.

“அண்ணா…”

“இந்த அண்ணன் மேல நம்பிக்கை வைடா… நிச்சயம் உன் வலி புரிந்து உன்னை தாங்குற பையனத்தான் உனக்கு பார்த்திருக்கேன்” என்றான்.

விநோ உனக்கு கல்யாணமென்று சொன்னது முதல் அவளின் உள்ளுக்குள் பாசிலின் உருவம் மட்டுமே நிறைந்திருந்தது.

இதயத்தின் இண்டு இடுக்கெல்லாம் பாசில் மட்டுமே பரவி விரவியிருக்க… வேறு ஒருவனுக்கு வாய் வார்த்தைக்காகக் கூட சரியென்று சொல்ல அவளுக்கு முடியவில்லை.

பாதி திறந்திருந்த கதவை தட்டிவிட்டு உள் வந்த ஆது…

“எல்லாரும் வந்தாச்சு விநோ” என்றாள்.

அத்தனை பேரிடரும் மொத்தமாய் தலையில் இறங்கியது போல் அதிர்ந்து எழுந்திருந்தாள் கோகிலா.

சாவின் விளிம்பில் நிற்பது போல் பரிதவித்த கோகிலா… தன்னுடைய கண்களை இறுக மூடிக்கொண்டு,

“நான்… ஃபாசிலை விரும்புறேன் விநோண்ணா” என்று சொல்லியிருந்தாள்.

“ஊஃப்…” காற்றை குவித்து ஊதியவனாக விநோ ஆசுவாசம் கொண்டான். இதற்காக எத்தனை போராட்டம். அவனுடைய காதலுக்காகக்கூட அவன் இத்தனை மெனக்கெட்டதில்லை. பேசியதில்லை.

‘ஷப்பா… ஒரு வழியா சொல்லியாச்சு’ என்று நினைத்த ஆதர்ஷினி… இருவருக்கும் தெரியாது பதிவு செய்த காணொளியை பாசிலின் எண்ணுக்கு அனுப்பி வைத்தாள்.

பாசிலின் காதலை மறுத்தவளால் இன்னொருவரின் முன்பு சென்று நிற்க பிடிக்கவில்லை. அதிலிருந்து தப்பிக்கவே தன்னுடைய மனதை கோகிலா வெளிப்படுத்தினாள்.

“நீ பாசில் சொன்னப்போ நோ சொல்லிட்டதா தர்ஷி சொன்னாளே!”

கோகிலா எந்தளவிற்கு உறுதியாக இருக்கின்றாள் என்பதை தெரிந்துகொள்வதற்காக விநோ அவளை சீண்டும் விதமாகி பேசினான்.

‘அவள் லவ் ஒத்துக்க என்ன ஏன் காக்கி கோர்த்துவிடுற.’ உள்ளே புலம்பிய ஆது வெளியில் ஈயென்று நின்றாள்.

அவளின் மைண்ட் வாய்ஸை கேட்ச் செய்த விநோ… அவளை பார்த்து கண் சிமிட்டினான்.

“நான் வந்து உன்கிட்ட சொன்னனா ஆது… எனக்கு ஃபாசிலை பிடிக்கலன்னு” என்று ஆதுவிடம் கோபமாகக் கேட்ட கோகிலா…

“எனக்கு ஃபாசிலை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவங்களைத்தான் நான் கல்யாணம் செய்துக்க ஆசைப்படுறேன்” என்று படபடவென்று மொழிந்தாள்.

“இதில் எப்போதும் மாற்றம் இருக்காதே?” விநோ அழுத்தமாக வினவினான்.

அதே அழுத்தத்துடன் கோகிலாவும் “மாறாது” என்றாள்.

கோகிலா திரும்பவும் தன்னுடைய மனதை வெளிப்படுத்த, ஆது மீண்டும் வீடியோ பதிவை ஆன் செய்திருந்தாள்.

“ஹ்ம்ம்… ஃபைன். இப்போ அவங்க வந்துட்டாங்க, போன்னு சொல்ல முடியாது. சும்மா வந்து நில்லு. நான் பக்குவமா பேசிக்கிறேன்” என்றவனிடம் வேகமாக மறுப்பு தெரிவித்தாள் கோகிலா.

“முடியாது விநோண்ணா. அதான் வேணான்னு சொல்லப்போறீங்க தானே, அப்புறம் நான் எதுக்கு வந்து நிக்கணும்?” என்றவள் தன் முடிவில் உறுதியாக நின்றாள்.

“ப்ளீஸ் விநோ…” உண்மையை சொல்லிடலாம் என்று கணவனுக்கு சமிக்ஞை செய்தாள் ஆது.

“போடி…” என்று மனைவியிடம் உதடசைத்தவன்,

“அது மரியாதை கிடையாதே கோகிம்மா… தர்ஷி, நிரல்’லாம் வந்து நிக்கிற மாதிரி நில்லு போதும்” என்றான்.

“முடியாதுன்னா… முடியாது தான் விநோண்ணா. வேணுன்னா ஃபாசில் வர சொல்லுங்க, ஃபுல் மேக்கப்பில் வந்து நிக்கிறேன்” என்றாள்.

“சரி நீ வர வேண்டாம். நான் பையனை மட்டும் இங்கு அனுப்பி வைக்கிறேன்.” இது தான் என் முடிவு என்று அவள் மறுக்கும் முன் அறையை விட்டு வெளியேறியிருந்தான் விநோதன்.

“அண்ணி…” ஆது கோகிலாவிடம் உண்மையை சொல்லப்போக…

“தர்ஷி” என்று அறைக்கு வெளியிலிருந்து அழைத்திருந்தான் விநோ.

வேகமாக வெளியில் வந்தவள்,

“திஸ் இஸ் அன்ஃபேர் விநோ” என்றாள்.

“எப்படியும் அவளுக்கு உண்மை தெரிந்த பிறகு தான் என்கேஜ்மெண்ட். டோன்ட் வொர்ரி” என்றவன் அவளுடன் கீழே செல்ல…

அறைக்குள் கோகிலா எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்தாள்.

‘வரட்டும்… யாரா இருந்தாலும் ஓடவிடுறேன்.’

பழங்கள் நிரம்பிய தட்டிலிருந்த கத்தியை கையில் எடுத்துக்கொண்டவள், மறைத்து வைத்துக்கொண்டாள்.

error: Content is protected !!
Scroll to Top