நேச நெஞ்சங்கள் 55

உயிர் உறை 55

காதல் 3

வரும் புதியவனை குத்த வேண்டுமென்பதெல்லாம் கோகிலாவின் எண்ணமில்லை.

அவனிடம் முடியாதென்று தன்னுடைய மறுப்பை சொல்ல வேண்டும். அவன் ஒத்துவரவில்லை என்றால், கத்தியை காட்டி மிரட்டி ஓடவிட வேண்டுமென்று நினைத்து கத்தியை கையில் அணிந்திருந்த தாவணிக்கு உள்ளாக மறைத்து வைத்தவள்…

‘எந்த லூசு வரப்போகுதுன்னு தெரியல’ என்று அங்கிருந்த மேசைக்கு முன் இருக்கையில் அமர்ந்து இரு கைகளாலும் தலையை பிடித்துக்கொண்டாள்.

வாயிலுக்கு முதுகுக்காட்டி புலம்பியபடி இருந்தாள்.

மனைவியுடன் இணைந்து வந்த விநோ வந்திருப்பவர்களை வரவேற்று யது மற்றும் பாசிலுக்கு நடுவில் சென்று அமர்ந்தான்.

“நீ கோகிலாவை அழைச்சிட்டு வா ஆது.” பூரணி சொல்லிட ஆது கணவனைப் பார்த்தாள்.

ஷமீம் மீது பார்வை வைத்த விநோ…

“நீங்க தப்பா எடுத்துக்கலன்னா… பாசில் போய் கூட்டிட்டு வரட்டுமே” என்றவன், “அவங்களுக்குள்ளவே பேசிக்காத விஷயங்கள் நிறைய இருக்கு. பேசி தெளிவா ஒரு முடிவெடுக்கட்டும். அப்போதானே நடக்கப்போற நிகழ்வு, ரெண்டு பேருக்கும் நிறைவா இருக்கும்” என்றான்.

“இதுக்குத்தான் விநோண்ணா வேணும். உங்க காதலுக்கு நீங்கக்கூட இப்படி யோசிச்சுப் பேசல” என்று பாசிலுக்கு அடுத்த பக்கம் அமர்ந்திருந்த துருவ் அவனது காதில் கிசுகிசுத்தான்.

“போதுண்டா… உன் வாயினை கொஞ்சம் மூடிட்டு இரு” என்ற பாசில் அன்னையை ஏறிட்டான்.

அவர் விநோவின் தன்மையான பேச்சிலேயே மொத்தமாக அவர்கள் பக்கம் சாய்ந்துவிட்டார்.

புன்னகையோடு தன்னுடைய சம்மதத்தை வழங்கினார்.

பாசில் விநோவை அணைத்து விடுவித்து துள்ளலோடு மேலேறினான். தனக்கு நேர இருக்கும் அதிர்ச்சி தெரியாது.

கோகிலா விநோவிடம் பேசியதை ஆது பாசிலுக்கு அனுப்பி வைத்திருந்தாலும் அவன் இன்னும் அதனை பார்க்கவில்லை.

யது ஒருபுறம், துருவ் மறுபுறம். இருவருக்கும் இடையில் அதனை எப்படி பார்ப்பதென்று நினைத்து விட்டவன், இப்போது படிகளில் ஏறும் நொடி பார்த்தான்.

பார்த்தவனுக்கு அந்த ஆகாயம் தன் கைகளில் வசப்பட்ட உணர்வு. உள்ளத்து தவிப்பெல்லாம் ஒரு நொடியில் காணாமல் போன மாயம்.

‘இவ்வளவு லவ் வச்சிக்கிட்டு தான் என்னை சுத்தல்ல விட்டியா நீ?’ மனதோடு கேட்டவன், “நேரடியா வந்து கேக்குறேன். சொல்லுடி என் செல்லக்குட்டி” என்று முணுமுணுத்தவனாக அறைக்கு முன் வந்து நின்றான்.

தலையை கைகளில் தாங்கி கவிழ்ந்திருந்தவளின் பின் உருவம் தான் அவனுக்கு காண கிடைத்தது.

ஆள் அரவமற்ற இடத்தில் அவள் ஏதோ புலம்பிக் கொண்டிருக்கிறாள் என்பது மெல்லிய குரல் வழி உணர்ந்தவன், திறந்திருந்த கதவினை தட்டிட, விலுக்கென நிமிர்ந்தவள் திரும்பிப் பாராது எழுந்து நின்றாள்.

கோகிலா எழுந்து நின்றதே தனக்கான அனுமதியென நினைத்தவன், உள்ளே செல்ல அவனின் அரவம் உணர்ந்தவள்,

“நான் உங்கக்கிட்ட ஒண்ணு சொல்லணும்” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

மார்பிற்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டவன், கால்களை அகட்டி நின்று, அவளின் முதுகை கூர்விழிகளால் துளைத்தான்.

“ம்…” ஒற்றை ஓசையில் பாசிலின் குரலை அவளால் அடையாளம் கொள்ள முடியவில்லை.

உள்ளங்கை வியர்த்து பிசுபிசுப்பாய் இருக்க… இரு பக்கமும் பாவடையை இறுக்கி பிடித்து தன் பதட்டம் மறைத்தவளாக… உதட்டினை ஈரப்படுத்தியவள் கண்களை மூடிக்கொண்டு வந்திருப்பவனிடம் சொல்ல வேண்டுமென்று தயார் படுத்தி வைத்திருந்த வார்த்தைகளை கோர்வையாக வேகமாக ஒப்பித்தாள்.

“இங்க பாருங்க… எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை. யாருன்னே தெரியாத உங்க முன்னாடி நிக்கவே எனக்கு ஒரு மாதிரி இருக்கு. தயவுசெய்து நீங்களே என்னை பிடிக்கலன்னு சொல்லிட்டு கிளம்பிட்டே இருங்க” என்றாள்.

“இட்ஸ் டூ லேட். நான் வரதுக்கு முன்னாடி இதை நீங்க சொல்லியிருக்கணும். பார்த்ததும் உங்களை பிடிச்சிப்போச்சு.”

அதீத படபடப்பில் இருந்தவளால் பாசில் வாய் திறந்து பேசிய பின்னரும் அவனின் குரலை அவளால் யூகிக்க முடியவில்லை.

“ஒரு தடவை சொன்னால் உங்களுக்கு புரியாதா? நான் வேறொருத்தரை விரும்புறேன். புரிஞ்சிக்கோங்களேன்!”

“நான் ஏன் புரிஞ்சிக்கணும்?”

அவன் அப்படி கேட்டதும் அவளுக்கு எங்கு இருந்துதான் அப்படியொரு கோபம் வந்ததோ, பொறுமையாக தன்னுடைய நிலையை எடுத்து சொல்லியும் இப்படி சொல்கிறானே என்று வந்த ஆத்திரத்தில் துணி மறைவில் வைத்திருந்த கத்தியை எடுத்து வேகமாக திரும்பியவள், தன் எதிரே நிற்பவன் பாசில் என்று அவளின் கண்ணிலும் கருத்திலும் பதியும் முன்னரே சடுதியில் அவனது கழுத்தில் கத்தியை வைத்து பிடித்திருந்தாள்.

நூலிழை இடைவெளியின்றி பாசிலின் கழுத்தில் பதிந்திருந்தது கத்தி.

“இன்னும் கொஞ்சம் அழுத்திடு. காதலுக்காக பாசில் காதலி கையாலே உயிரை விட்டான்னு நாளை வரலாறு பேசட்டும்” என்றவனின் முகம் அவளின் எதிர்பாராத திடீர் தாக்குதலில் அரண்டு விரிந்தது உண்மை. என்ன தான் தைரியமாக கத்தியை நீட்டிவிட்டாலும் பயத்தில் அவளின் கைகள் நடுங்கவே செய்தன. அதில் தன்னவளின் திடத்தை கண்டுகொண்டவன் நொடியில் தன்னை மீட்டிருந்தான்.

உண்மையில் கோகிலாவின் இந்த செயல் பாசிலின் வறண்ட இதயத்தில் தண்ணீரை கொட்டியது போலிருந்தது. விட்டால் அந்த சுடு மணலில் பன்னீர் பூக்கள் பூத்தது என்றும் பிதற்றியிருப்பான்.

அவன்மீது கொண்டுள்ள நேசத்திற்காக அல்லவா… யாரோ ஒருவனென்று இந்த தாக்குதல்.

பாசில் சொல்லியதை கிரகித்தும், தன் முன்னால் நிற்பவன் பாசில் தானென்று உள்வாங்கிடவே கோகிலாவுக்கு சில கணங்கள் தேவைப்பட்டது.

தன்னுடைய கண்களை நம்பாது அழுத்தமாக மூடி திறந்தவள், பாசில் தான் என்பதை உணர்ந்து, அவன் கழுத்தில் கத்தியோடு இருந்த கையை சட்டென்று இறக்கியவள்,

“சாரி” எனக்கூறி தள்ளி நின்றாள்.

“ஜஸ்ட் மிஸ்டு. இல்லை” என்றவன் இரு கையையும் தூக்கி மேலே காண்பித்தான்.

அதில் பதறியவள்,

“அச்சோ… அப்படியில்லை. வேற யாரோ தான் மாப்பிள்ளைன்னு…” திணறினாள்.

“அப்போ நானா இருந்தா ஓகேவா?”

விநோ பார்த்திருக்கும் பையன் பாசில் தான் என்றதும், நொடியில் அவளை அழுத்திக் கொண்டிருந்த பாரம் நீங்கி மனம் லேசாகிட, பாசில் கேட்ட கேள்வியில் முகத்தில் தோன்றிய விகசிப்பை அவனுக்கு காட்டாது சட்டென்று திரும்பிக் கொண்டாள்.

“நான் வந்ததும் யாரையோ லவ் பண்றன்னு சொன்னியே, யாரது?” என தெரிந்துகொண்டே கோகிலாவை சீண்டுவதற்காக வினவியவன்,

“யாருன்னு சொல்லு. நான் வீட்டில் பேசுறேன். என் லவ் தான் இல்லைன்னு ஆகிருச்சு. நான் லவ் பண்ண பொண்ணோட லவ்வையாவது சேர்த்து வைச்சிட்டு போறேன்” என்றான். முகத்திலும் குரலிலும் அப்படியொரு சோகத்தை எப்படி அவனால் கொண்டுவர முடிந்ததென்றே தெரியவில்லை.

பாசிலின் பேச்சை கோகிலா உண்மை என்றே நம்பிவிட்டாள்.

கண்கள் நீரால் நிரம்பி விட்டன.

அவளுக்கு முன் வந்து நின்றவன்,

“சொல்லு கோகிலா?” என்றான்.

தலை கவிழ்ந்து இருந்தவளின் ஒரு பொட்டு கண்ணீர் தரையில் பட்டு சிதறும் முன்பே தன் உள்ளங்கையில் பிடித்திருந்தான் பாசில்.

“பிடிச்சிருக்கு…”

அவன் எதை கூறுகிறானென்று தெரியாது, தான் அழ… அவன் பிடித்திருக்கிறது என்கிறானே என்று விலுக்கென நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

கண்ணீரை வழிய விடாது அடக்குவதால் கண்கள் சிவந்து இருந்தன.

வலி நிறைந்த கண்களில் பார்வையால் ஆழ புதைந்தவனாக…

“எனக்காக நீ அழறது ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு” என்றான். ரசனையாய்.

கோகிலாவின் கன்னங்களை உள்ளங்கையில் ஏந்தியவன் தன்னிரு பெரு விரல் கொண்டு கன்னம் வழிய காத்திருந்த கண்ணீரை துடைத்து விட்டான்.

கோகிலாவின் விழிகள் அழுத்தமாக பாசிலின் விழிகளில் பதிந்திருந்தது.

அவனது கண்கள் அவனின் காதலை பளிங்காய் அவளுக்கு காட்டிக்கொண்டிருந்தது.

அலைப்பாய்ந்த அவளின் கரு விழிகளுக்கு ஏற்ப பாசிலின் மணிகளும் உருள… நிகழ் மீண்டவள் சடுதியில் அவனிடமிருந்து தள்ளி நின்றாள்.

‘கோகிலா என்ன பண்ற நீ?’ என மனதோடு தன்னையே கேட்டுக்கொண்டவள், ‘பழைய சுவடு மறந்து அவர் கூட உன்னால் நிம்மதியா வாழ முடியுமா?’ என்று நினைத்தவள்,

“நான் உங்களுக்காக அழல” எனக் கூறியிருந்தாள்.

“ஆஹான்…” என்றவனின் குரலில் அத்தனை நக்கல். இன்னும் எதற்காக மறு(றை)க்கிறாள் என்ற ஆதங்கம் அவனுள்.

“அப்போ சொல்லு யாரை லவ் பண்ற நீ? நான் வந்தும் அப்படித்தானே சொன்ன? சும்மா பேச்சுக்கு சொல்றதில்லை அது” என்றான்.

யாரென்று பார்க்காது தான் பேசியதை எண்ணி நொந்துபோனாள்.

சில நிமிடங்கள் அமைதியில் கரைந்தது.

“ஃபைன். நீ சொல்லமாட்ட! நான் சொல்லட்டுமா?” என்றவன், ஆது அனுப்பிய காணொளியை ஓடவிட…

‘இது ஆது வேலையாதான் இருக்கும்’ என நினைத்தவள், “ஆது…” என்று சத்தம் வராது பற்களை கடித்தாள்.

“நீ என்னை லவ் பண்றன்னு தெரிஞ்சும் நான் இத்தனை மாதங்களா உன் கோபம், வார்த்தை இதையெல்லாம் தாங்கிக்கிட்டு அமைதியா இருந்த காரணம், நீ சொல்லி நான் கேட்கணும் அப்படின்னு தான். என்ன இதை நீ என்கிட்ட சொல்லணும் ஆசைப்பட்டேன். அது நடக்கல. பட் இட்ஸ் ஓகே, நாளைக்கே கூட நடக்கலாம். இல்லையா நமக்கான வாழ்க்கையின் நீளம் நீண்டு இருக்கே! உனக்கா ஒருநாள் தோணும். அப்போ நான் கேட்டுக்கிறேன்” என்றவன்,

“இனி நீயென்ன சொன்னாலும், இந்த கல்யாணம் நடக்கும். இன்னும் பத்தே நாளில் இந்த பாசில் கையை என் மனைவியாய் உன்னை பிடிக்க வைக்கிறேன்” என்றான்.

“என்ன சவாலா?”

“அப்படியா தெரியுது உனக்கு?” என்றவன், “பொண்டாட்டிகிட்ட தோக்குறவன் வாழ்க்கையில் ஜெயிச்சிடுவான்னு சொல்லுவாங்கல… ஆனால் இந்த விஷயத்தில் உன்னை ஜெயிக்கணும் ஆசைப்படுறேன்” என்றான்.

“ஏன் புரிஞ்சிக்க மாட்றீங்க?” என்றவள் மெத்தையில் அமர்ந்து, இரு உள்ளங்கையையும் முன் தலையில் விடாது தட்டிக்கொண்டாள்.

கோகிலாவின் முன் மண்டியிட்டவன், அவளின் கைகள் இரண்டையும் தனது ஒற்றை கையில் அடக்கியவனாக, மற்ற  கையின் இரு விரலால் அவளின் நாடி பிடித்து முகம் நிமிர்த்தி தன் முகம் காணச் செய்தான்.

“என்னை லவ் பண்ற தானே?”

“ஆமா…ஆனா, கல்யாணம் பண்ணிக்க முடியாது.” உடனடியாக ஒப்புக்கொண்டு, தன் மறுப்பையும் காண்பித்தாள்.

“என்னை பார்த்தால் பாவமா இல்லையாடி குட்டி மோளே.” இன்னும் எவ்வளவு தான் எடுத்து சொல்லி புரிய வைப்பதென்று அவனுக்கு தெரியவில்லை.

அவனின் வலி அடங்கிய குரல் அவளை என்னவோ செய்தது.

இருப்பினும் வாய் திறக்காது அமைதியாகவே இருந்தாள்.

“ஓகே” என்று எழுந்தவன், மார்பிற்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு சில கணங்கள் தன்னவளை ஆழுந்து பார்த்தான்.

‘கொல்றாளே!’ இந்நிலையிலும் அவனின் காதல் கொண்ட நெஞ்சம் அவளை ரசித்து தொலைத்தது.

மேல்நோக்கி தலையை உயர்த்தியவன், நின்ற இடத்திலேயே ஒரு சுற்று சுற்றியவனாக, தனது பிடரியை அழுத்தமாக வருடிக் கொண்டான்.

அவனின் அவஸ்தையான செய்கைகளை விழிவிரித்து பார்த்தவளின் மனம், பாசிலுக்காக வருந்தியது.

‘ரொம்ப கஷ்டப்படுத்துற கோகி அவரை.’ அவளே அவளிடம் மல்லுக்கு நின்றாள்.

“உன்னோட இந்த பார்வையில் எனக்கான காதல் தெரியுதுடி. அப்பட்டமா தெரியுது. பாக்குற யாரும் கண்டுபிடிச்சிடுவாங்க. வெளிப்படையா எனக்கான காதலை கொட்டுது உன் முகம். இருந்தாலும் நான் உனக்கு வேணாம் இல்லையா?” என்றவன், தனது கீழ் உதட்டை கடித்து விடுத்தான். பொங்கும் கோப உணர்வுகளை கட்டுப்படுத்தினானோ.

“என் கண்ணை பார்த்து என்னை கட்டிக்க முடியாதுன்னு சொல்லு, நான் போயிட்டே இருக்கேன். ஆயுசுக்கும் உன் முன்னாடி வந்து நிற்கமாட்டேன்.”

சொல்லியவன் விறைத்து நிமிர்ந்து நின்றான்.

‘இதுதான் சாக்கென்று அவள் சொல்லிவிடக் கூடாது’ என்று அவனின் மனம் அடித்துக்கொண்டது.

‘இதுதான் வாய்ப்பு கோகி… சொல்லிடு. முடியாதுன்னு சொல்லிடு.’ காதல் கொண்டவள் விலகுவதிலேயே குறியாக இருந்தாள்.

அவனது முகத்தை பார்த்தாலே அவளுள் காதல் உணர்வு தான் பொங்குகிறது. எப்படி அவளால் அவனது கண்ணை பார்த்து வேண்டாம் சொல்ல முடியும்.

“சொல்லு கோகிலா… நீ சொல்லிட்டா நான் போயிட்டே இருப்பேன். நீ எதுவும் சொல்லாம இருந்தா, எல்லாருக்குமே கஷ்டம். டைம் வேஸ்ட் வேற” என்றான்.

“எனக்கு…” கோகிலா பதில் சொல்ல ஆரம்பித்த வேலை… கீழே கூடத்தில் யாரோ உரக்க பேசும் சத்தம் கேட்டு, ஃபாசில் என்னவென்று தலையை திருப்பிப் பார்த்து அறையின் வாயிலை நோக்கி அடி வைத்திட…

அது யாருடைய குரல் என்று அவதானித்த கோகிலா,

அவனை இடித்துக்கொண்டு, தாண்டி வேகமாக படிகளில் கீழிறங்கினாள். கிட்டத்தட்ட ஓடினாள்.

வேறு யாருமல்ல… வந்திருந்தது அவளின் பெற்றோர்.

துருவனின் திருமண நாள் நெருங்கிக் கொண்டிருக்கும்போது இங்கு வந்து சத்தம் போட்டு சென்ற தம்பதியினர் தான் அவர்கள்.

எப்போதாவது வந்து கோகிலா தங்களின் மகளென்று உரிமையை நிலைநாட்டிவிட்டுச் செல்வர்.

விநோ மீண்டும் இங்கு வந்ததிலிருந்து அவனுக்கு பயந்து அவர்களின் நிழல் கூட கோகிலாவின் மீது படவில்லை. ஆனால் இன்று எப்படியோ கோகிலாவை பெண் பார்க்க வருகின்றார்கள் என்பதை தெரிந்துகொண்டு பிரச்சனை செய்வதற்காகவே வந்துள்ளனர்.

என்ன இருந்தாலும் பெற்ற உறவு விட்டுப்போகாது என்கிற எண்ணம் அவர்களுக்கு. பெற்றால் மட்டும் தாய், தந்தை ஆகிட முடியாதென்று அவர்களுக்கு யார் சொல்லி புரியவைப்பது.

அவர் கந்தவேலு, மனைவி சகுந்தலா. ஆள் பார்ப்பதற்கே கரமுரடாய் விறைத்த தோற்றமாய் இருப்பார். கிராமத்தில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி யாவும் இவரின் தலைமையில் தான் நடைபெறும். பெற்ற அன்னையிடம் கூட கனிவை காட்டிடாதவர். மென்மையின் வாசம் கூட அறிந்திடாவர். எவரையும் அடக்கியே பழக்கப்பட்டவர். கோகிலா அப்பா என்று அழைக்கவே அத்தனை பயம் கொள்வாள்.

பெண்பிள்ளை அதை செய்யக்கூடாது. இதை செய்திடக்கூடாது. வெளியில் நடக்கும்போது அக்கம் பக்கம் பார்க்கக்கூடாது. பக்கத்து வீட்டுக்கு செல்லக் கூடாது. அளவாக பேச வேண்டும். இல்லையென்றால் வாயே திறக்கக்கூடாது. சத்தமிட்டு சிரிக்கக்கூடாது. முடிந்தால் சிரிக்காமலே இருக்க வேண்டும். வீட்டு ஆண்களிடமே எட்ட நின்று முகம் பார்க்காது தான் பேச வேண்டும். சொல்லப்போனால் ஆதி காலத்தில் கூட பெண்ணுக்கு சுதந்திரம் கொடுத்த ஆண்கள் இருந்திருப்பார்கள். ஆனால் இவர் அதிலும் சேர்த்துக்கொள்ளப்பட முடியாத மனிதர். மனைவியும் ஒரு உயிரென்று மதிக்காது தன் பார்வைக்கு ஆட்டி வைப்பார்.

சகுந்தலாவும் அவ்வளவு எளிதான ஆள் கிடையாது. கந்தனின் மறு பதிப்பு அவர். கணவர் என்ன சொன்னாலும் அவருக்கு அது வேதம். தானும் ஒரு பெண் என்பதை மறந்து, மகளை கணவரின் பேச்சுக்கு அடக்கி வைப்பார். அவரிடம் கூட கோகிலாவால் எளிதில் பேசிவிட முடியாது. அத்தனை கடுமை வாய்ந்தவர்கள் அவர்கள்.

வீட்டிற்குள் இருவரும் நுழையும் போதே… வீடிருந்த கலகலப்பில் கந்தனின் கோபம் பன்மடங்கானது. சகுந்தலாவின் வயிறு பற்றி எரிந்தது.

ஏதோ பெண் பார்க்க மட்டும் தான் வந்திருக்கிறார்கள் என்று இருவரும் நினைத்து இங்குவர, கூடத்தில் அனைவருக்கும் நடுவில் வீற்றிருந்த சீர் தட்டுகளை பார்த்ததும் கந்தசாமி நொடியில் கண்டுகொண்டார்.

“யார கேட்டு என் பொண்ணுக்கு நிச்சயம் பண்றீங்க?”

நடுவீட்டில் நின்றுகொண்டு சத்தமாக கத்தினார் கந்தசாமி.

அவருக்கு எப்படி விடயம் தெரியுமென்று தெரியவில்லை. ஆனால் சரியான நேரத்திற்கு வந்திருந்தார். அத்தனை பேரையும் முறைத்து ஓநாயின் பார்வையாய் முறைத்து நின்றார். அதில் அவரின் விழிகள் விநோவிடம் மட்டும் ஒதுங்கியே இருந்தது. அந்த வயதிலேயே தன்னை நேருக்கு நேர் முறைத்து நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு வேங்கையாய் உறுமி நின்றவனின் முகம் இன்னும் அவருக்கு நினைவில் வந்து அவன் மீதான அன்றைய பயத்தை நினைவு கூர்ந்துகொண்டிருக்கும் போது எப்படி அவரால் விநோவை நேருக்கு நேர் பார்க்க முடியும்.

ஆனால் விநோவின் பார்வை அரிமாவின் நேர்கொண்ட பார்வையாய் அவரைத்தான் துளைத்துக் கொண்டிருந்தது.

என்ன பேசட்டுமோ பேசட்டும் என்கிற அமைதி விநோவிடம்.

யது கோகிலாவின் பெற்றோரை பற்றி கேள்விப்பட்டிருக்கிறானேத் தவிர நேரில் பார்த்ததில்லை. அதனால் அவனுக்கு அவர் யாரென்று தெரியவில்லை. அவனுடன் பாவனா, ராதா, ஷமீமும் கூட அவரை பார்த்து, அவரின் பேச்சுத்தன்மை பிடிக்காது முகம் சுளித்து யாரென்ற வினாவுடன் பார்த்திருந்தனர்.

என்ன நடந்தாலும் தன்னுடைய மகன்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று, பூரணி வேடிக்கை பார்க்கத் தயாராகினார்.

ஆதர்ஷினி மட்டும் தன்னுடைய கணவனின் உள்ளப்போக்கை அவதானித்தவளாக இருந்தாள். அவனின் அமைதிக்கு பின்னர் வரும் சீற்றத்தின் விளைவுகளை எண்ணி.

“யாரை கேட்கணும்?” துருவ் அவருக்கு மேல் அழுத்தமாய் கேட்டிருந்தான்.

“பெத்தவன்னு ஒருத்தன் நான் உயிரோடிருக்கும் போது, என்னை கேட்டிருக்கணும்.” ஒரு அடி பாய்ந்து வந்தவர் விநோவின் ஒற்றை புருவ தூக்கலில் அப்படியே நின்றுவிட்டார்.

கந்தசாமியின் பேச்சில் கைகளை தட்டியபடி அங்கு வந்து நின்ற கோகிலா, சத்தமிட்டு சிரித்தாள்.

அவளின் சிரிப்பை பார்த்த சகுந்தலா…

“இத்தனை ஆம்பளைக்கு மத்தியில பொம்பளை புள்ளை இப்படித்தான் அடக்கம்மில்லாம சிரிப்பாங்களா?” எனக்கேட்டு, “இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருந்தாதான பொண்ணா லட்சணமா வளர்ந்திருப்ப. பெத்தவங்க வேணான்னு ஓடி வந்தவகிட்ட அடக்க ஒடுக்கத்தை எதிர்பார்க்க முடியுமா?” என்றார்.

விநோவை ஒரு பார்வை பார்த்த கோகிலா, அவனுக்கு அருகில் இருந்த காலி இடத்தில் அமர்ந்து, அணிந்திருந்த பாவாடை விசிறியாய் விரிந்திட கால் மேல் காலிட்டு, மேலிட்ட காலின் பாதத்தில் ஒற்றை கையை ஊன்றியவளாக நிமிர்ந்து…

“இந்த அடக்க ஒடுக்கம் போதுமா சக்கு?” என்றாள்.

துருவனும், யதுவும் அடக்க முடியாது சிரித்து விட்டனர். விநோவின் உதடு சிரிப்பில் துடித்தது. அதையும் மீசையை கடித்து மறைத்தான்.

பாசில் தன்னவளின் தோரணையை ஆவென்று பார்த்து நிற்க…

“உங்க பியூச்சர் ரொம்ப கவலைக்கிடம் போலவே அண்ணா” என்று அவனின் காதில் கிசுகிசுத்தாள் ஆதர்ஷினி.

“இவளுக்குள்ள இப்படியொரு ஜான்சி ராணி இருப்பான்னு நான் நினைக்கலையே ஆதும்மா” என்ற பாசிலின் அருகில் வந்த நிரல்யா, “செம ஆட்டிட்யூட்’ண்ணா” என்க, “ஏம்மா நீ வேற, எனக்கு இப்போவே பயந்து வருது” என்றவன் நிரல்யாவிடம் பார்வையை வைத்தவனாக சொல்லிக்கொண்டிருக்க, யாரோ அடித்த சத்தம் கேட்டது.

கோகிலா தான் கந்தசாமியை அறைந்திருந்தாள்.

பாசில் வேகமாக ஷமீமை தான் நோக்கினான்.

வந்திருப்பவர்கள் யாரென்று தெரியவில்லை. அதிலும் வயதில் முதியோரை கோகிலா அடித்ததை ஷமீம் எப்படி எடுத்துக்கொள்வாரோ என்கிற கலக்கம் அவனுக்கு.

அவரோ கோகிலாவை சுவாரஸ்யமாகப் பார்த்திருந்தார்.

பின்னே கந்தசாமி பேசிய பேச்சுக்கு இப்படித்தான் அடிக்க வேண்டும். ஷமீம் மனம் கூறியது.

கோகிலா அமர்ந்ததும், அவள் முன்னே வந்தே கந்தசாமி…

“என்னடி திமிரா? உன் ராங்கு தனத்தையெல்லாம் என்கிட்ட காட்டத! பெத்த பொண்ணுன்னு கூட பார்க்கமாட்டேன், வெட்டிப்போட்டு போயிட்டே இருப்பேன்” என்றவர்,

“உன்னையெல்லாம் இத்தனை வருசம் விட்டு வச்சதே தப்பு. அன்னைக்கே மொட்டை அடிச்சு மூலையில் உட்கார வச்சிருக்கணும் உன்னை. ஆளிருக்குன்னு தைரியம் கூடிப்போச்சோ” என்றதோடு,

“கிளம்பு போலாம்” என கோகிலாவின் கையைப்பற்றி இழுக்க, அவளோ கொஞ்சமும் அசையாது அழுத்தமாக அமர்ந்திருக்க… கழுத்தில் அவளின் முடியை கொத்தாக பற்றியவர், “வாடி” என அவளின் கன்னத்தில் அறைய போகும் முன், அவரின் கன்னத்தில் அவள் அடித்திருந்தாள்.

கந்தசாமி கோகிலாவின் கையை பிடித்து இழுத்ததுமே, வேகமாக இருக்கையிலிருந்து எழுந்த துருவ் மற்றும் யதுவை விநோ கண்காட்டி தடுத்துவிட்டான்.

ஒவ்வொரு முறையும் கோகிலாவுக்கு அரணாக யாரும் கூடவே நிற்க முடியாது. அவளுடைய பிரச்சனைக்கு அவளே தான் தீர்வு காண வேண்டுமெனும் எண்ணம் விநோதனுக்கு.

“போனா போகுதுன்னு நானும் பொறுமையா இருந்தா ஓவரா ஆடுற. உனக்கும் எனக்கும் எந்த உரிமையும் கிடையாது. என்னோட அம்மா அங்க நிக்கிறாங்க பாருங்க” என்று பூரணியை கை நீட்டி காண்பித்தவள், “அவங்க தான்” என்றாள்.

“உன்னை பெத்தவடி நான்.” சகுந்தலா முன் வந்தார்.

“பெத்தது மட்டும் தான் நீ!” கோகிலா இன்று அவர்களின் அத்தியாத்திற்கு முடிவு எழுதிவிடலாம் என்று தீர்மானித்துவிட்டாள் போலும். உடனுக்குடன் திருப்பிக் கொடுத்தாள்.

“நமக்குள்ள என்ன நடந்தாலும் நான் உன் அம்மாங்குறது மாறாது.”

“ஆஹான்” என்றவள்,

“என்ன விநோண்ணா பார்த்துட்டு இருக்கீங்க. விட்டா இப்படித்தான் வெட்கமேயில்லாம உரிமை கொண்டாடி பேசுவாங்க. சீக்கிரம் கிளம்பச் சொல்லுங்க இல்லன்னா கழுத்தை பிடித்து வெளிய தள்ளுங்க” என்றாள்.

“ஹேய் என்னடி பேச்செல்லாம் தினுசா இருக்கு. வாய்க்குள்ள துள்ளுற நாக்கை…” கந்தசாமி என்ன சொல்லியிருப்பாரோ…

ஏற்கனவே அவள் அடித்துவிட்ட வெறியில் இருந்தவர் இப்போது கோகிலாவின் முகம் நோக்கி ஆவேசமாக கையை ஓங்கிக்கொண்டு செல்ல, அவரின் கையை தடுத்து பிடித்திருந்தான் விநோதன்.

கோகிலாவுக்கு முன் வந்து நின்றவன்,

“மரியாதையா நீங்களே கிளம்பிடுங்க… இல்லை” என்றவன், தோளை குலுக்கிக்கொண்டான்.

“ஏய்” என்று அவர் ஏதோ பேச வரும் முன்பு…

“வந்ததுக்கு அவங்களும் கோகிக்கா நிச்சயத்தை பார்த்துட்டு போகட்டும் விநோண்ணா. நாம நடப்பதை கவனிப்போம்” என்ற துருவின் கூற்று சரியெனப்பட, பூரணி சூழலை தன் கையில் எடுத்துக்கொண்டார்.

கந்தசாமி, சகுந்தாலாவை அங்கு யாரும் கண்டுகொள்வதாக இல்லை.

கோகிலா அப்போதுதான் பாசிலின் நினைவு வந்து அவன் எங்கே என்று பார்க்க, அவனோ ஆது மற்றும் நிரலுக்கு நடுவில் அவளையே பார்த்தவாறு நின்றிருந்தான்.

“உங்க முறை, பழக்க வழக்கம் எப்படின்னு தெரியாது” என்று பூரணி ஷமீமிடம் கூற,

“அம்மா” என்று அழைத்த விநோ,

“நெக்ஸ்ட் வீக்… வெட்னஸ்டே ரிஜிஸ்டர் ஆபிசில் மேரேஜ். ஒன் மன்த் முன்னாடியே ப்ரோசிஜேர் முடிச்சிட்டேன். அன்னைக்கு அங்கவே மாலை மாற்றி, மோதிரம் போட்டுக்கலாம். அவங்க விருப்பப்பட்டா பாசில் கோகி கழுத்தில் தாலி கட்டட்டும். இல்லைன்னா அவங்க வழக்கப்படி கருமணி மாலை போடட்டும்.” அவ்வளவு தான் என்று முடித்தான்.

இரண்டு குடும்பத்துக்கும் இதன் மூலம் சிக்கல் வந்துவிடக்கூடாதென்று விநோ முன்னெச்சரிக்கையாக எடுத்த முடிவு ஷமீமுக்குமே பிடித்திருந்தது.

அவரும் மகிழ்வாய் விநோவின் முடிவுக்கு சம்மதம் வழங்கினார். அவருக்கு கந்தசாமி, சகுந்தலா பற்றிய குழப்பமிருந்தாலும், மகனின் ஆசையை முன்னிறுத்தி… கோகிலாவை பார்த்ததும் பிடித்ததாலும், அவளின் தைரியத்தில் கவரப்பட்டும் சரியென இருந்தார்.

தன்னுடைய பதிலை கேட்காது அனைவரும் முன்னோக்கி வேகமாக செல்வதாக நினைத்த கோகிலா, மீண்டும் தனக்குள் உழல ஆரம்பிக்க…

சகுந்தலா பேசிய பேச்சில் பாசிலின் முன் நின்று…

“ஐ லவ் யூ” என்றிருந்தாள்.

error: Content is protected !!
Scroll to Top