உயிர் உறை 56
காதல் 4
அன்று நண்பகல் கடந்த வேளை பாசிலின் அலைபேசி ஒலித்தது. யாரென்று பார்க்க கோகிலா.
முதல் முறை அவளாக அழைத்திருக்கிறாள். இன்ப அதிர்ச்சி அவனிடம்.
யது மற்றும் மேனனுடன் முக்கிய விவாதத்தில் இருந்த பாசிலின் முகம் சட்டென்று மாறிய வானிலைபோல் குளிர்ந்து ஒளிர்ந்தது.
அழைப்பு ஒலித்துக்கொண்டே இருக்க, பாசில் நம்ப முடியாது பார்த்துக்கொண்டே இருந்தான்.
“பாசில்… அட்டெண்ட் பண்ணு, இல்லைன்னா கட் பண்ணிட்டு இங்க கவனி.” யதுவின் குரலில் சுயம் மீண்ட பாசில், அலைப்பேசி திரையை யதுவுக்கு முன் காட்டிவிட்டு, நொடியில் அவ்வறையிலிருந்து வெளியேறியிருந்தான்.
அழைப்பு நின்றுவிட, பாசில் தொடர்புகொள்ள… அதே சமயம் கோகிலா மீண்டும் பாசிலுக்கு முயற்சித்திருக்க… என்கேஜ்ட் ஒலி வர பாசில் சிரித்துக்கொண்டான்.
இம்முறை பாசில் அமைதியாக இருக்க கோகிலாவிடமிருந்து அழைப்பு வந்தது.
“நேப்பியர் மியூசமில் இருக்கேன். வர முடியுமா?”
பாசில் ஹலோ கூட சொல்லியிருக்கவில்லை. அவள் பேசியிருந்தாள்.
“மியூசியம்… இங்க, நீ திருவனந்தபுரத்தில் இருக்கியா?” ஆச்சரியமாக வினவினான்.
“ஆமாம். உங்களை பார்க்கத்தான் வந்தேன். உங்கக்கிட்ட பேசணும். வர முடியுமா முடியாதா?” அவள் டாம் தொனியிலிருந்து சற்றும் மாறவில்லை.
“முடியாதுன்னு சொல்வேன் தோணுதா?”
“அப்போ வந்திருங்க. வெயிட் பன்றேன்” என்றவள் வைத்துவிட்டாள்.
யதுவிருக்கும் அறையின் கதவை திறந்து பிடித்து தலையை மட்டும் உள்ளே நீட்டிய பாசில்,
“நான் கிளம்புறேன் யது” என்று பார்வையால் குறிப்பு காட்டிவிட்டு மறைந்தான்.
யது புன்னகைத்துக் கொண்டான்.
செல்லும் வழியில் விநோவுக்கு அழைக்க, அவன் கடமையில் கண்ணாக இருந்ததால் அழைப்பை ஏற்கவில்லை.
துருவனுக்கு அழைக்கச் சென்றவன்,
‘வேண்டாம். கிண்டல் பண்ணுவான்’ என்று நினைத்து ஆதுவுக்கு அழைத்தான்.
“என்னண்ணா லவ் ஓகே ஆனதுக்கு அப்புறமும் இந்த தங்கச்சி ஞாபகம்?” என்று ஆது சிரித்துக்கொண்டே வினவினாள்.
“கோகிலா என்ன மீட் பண்ணனும் வந்திருக்கா ஆதும்மா. உனக்கு ரீஸன் தெரியுமா?”
“வந்தாச்சா?” என்றவள், “பார்த்தாச்சா?” எனக் கேட்டாள்.
“நான் கேட்டதை நீ கவனிக்கலையா?”
“அப்போ இப்போ அண்ணியை மீட் பண்ண கிளம்பிட்டிங்க சரியா?” என்ற ஆதர்ஷினி, “உங்களை நேரில் பார்த்து பேசணும் அப்படின்னு மார்னிங் விநோகிட்ட கேட்டாங்க. நான் பாசிலை வரசொல்றேன் அப்படின்னு விநோ சொன்னதுக்கு, நான் போறேன் சொன்னாங்க. விநோ என்ன நினைச்சாரோ, அண்ணியையே ரெண்டு நிமிஷம் பார்த்தவரு, டிரைவர் அண்ணாவோட அனுப்பி வச்சிட்டாரு” என்றாள்.
“ஹோ…” என்றவன் பேசிக்கொண்டிருக்கும்போது இரண்டாவது அழைப்பு வர, கோகிலா தான்.
“உன் அண்ணி தான் கூப்பிடுறாள்.”
“ஓகேண்ணா… என்ஜாய்” என்ற ஆதர்ஷினி துண்டிக்க, பாசில் ஏற்றான்.
“நீங்க உங்க வீட்டுக்கே வந்திடுங்க” என்ற கோகிலா பாசிலின் பதிலை எதிர்பார்க்காது வைத்துவிட்டாள்.
“வீட்டுக்கா? அச்சோ அம்மா!” என்று அதிர்ந்தவன், ‘அவங்களுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் பிடிக்காதே’ என நினைத்தவன் படபடப்போடு ஷமீமுக்கு அழைத்தான்.
“ம்மா…” என்ன சொல்வதென்று தெரியாது இழுத்தான்.
“என்னடா திடீரென உன் வேலை நேரத்தில் இந்த அம்மாவுக்கு போன் பண்ணியிருக்க?”
“ம்மா… கோகி…”
“இப்போதாண்டா வந்தாள். நானே உன்னை வர சொல்லலான்னு போனை கையில் எடுத்தேன் நீயே பண்ணிட்ட. சீக்கிரம் வா” என்றவரின் பேச்சை நம்ப முடியாது காரின் வேகத்தை அதிகரித்தான்.
பாசில் வீட்டிற்குள் நுழையும் போது, ஷமீம் கோகிலாவின் நெற்றியில் முத்தம் வைத்து விலகும் காட்சியை காண நேரிட்டது.
“எனக்கு பொண்ணில்லை. பாசிலை கட்டிக்கிட்டு வந்தப்புறம், நீ எனக்கு மருமகள் இல்லை. மகள்.” நெகிழ்ந்து கூறினார்.
தன் வாழ்வின் நிகழ்வுகளை ஷமீமிடம் கூறியிருந்தாள் கோகிலா.
நேற்றைய நாளுக்கான விளக்கங்கள் அவள் கொடுத்திட வேண்டுமே! என்ன தான் கந்தசாமி, சகுந்தலாவை பொருட்படுத்தாது நேற்று நிச்சயம் முடிந்திருந்தாலும், ஷமீமுக்கும் தன் வாழ்வின் கடந்து போனவை தெரிய வேண்டுமென நினைத்தவள், பாசிலிடம் மட்டுமே பேச வந்துவிட்டு அவனுக்கு முன்னரே ஷமீமிடமும் கூறியிருந்தாள்.
கேட்டவருக்கு கோகிலாவை அரவணைக்கத்தான் தோன்றியது.
தன்னுடைய தாய் தன்னவளுக்கு அளித்த ஆதுற முத்தத்தில் பொறாமை கொண்டவனாக பாசில் அவர்களுக்கு அருகில் வர, மகனை கண்டுவிட்டவர்…
“வாடா… சாப்பிட்டியா?” எனக் கேட்டார்.
‘நீங்க கேட்கிறதுக்கு பதில் சொல்லத்தான் வேகமா வந்தேன் பாருங்க’ என உள்ளுக்குள் அங்கலாய்த்தவனின் பார்வை அவனவள் மீதே நிலைத்திருந்தது.
“நீ வா கோகிம்மா… நாம சாப்பிடலாம்” என்றவர் கோகிலாவை கைப்பிடித்து அழைத்துக்கொண்டு டைனிங் ஹால் சென்றார்.
“என்னடா நீ வர்றியா?”
ஷமீம் சத்தமாகக் கேட்டதும் ஓடிச்சென்று கை கழுவி வந்தவன், கோகிலாவுக்கு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
“என்னம்மா சாப்பாடு?” எனக் கேட்டவன், மூடியிருந்த பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் திறந்து பார்க்க…
“எல்லாம் சாப்பிடுற சாப்பாடு தான்” என்று நொடித்தார் ஷமீம்.
அதில் வந்த சிரிப்பை தலை கவிழ்ந்து மறைத்தாள் கோகிலா.
“சிரிப்பு வந்தா சிரிச்சிடனும். சிரிக்கிறதுக்கெல்லாம் நான் ஒண்ணும் சொல்லமாட்டேன்” என்று கோகிலாவை கவனித்தவராக கூறிய ஷமீம், “அவர் போனதுக்கு அப்புறம், வீட்டில் நானும் இவனும் தான். இவன் பாதி நாள் யதுவோட ஆபீஸே கதின்னு கிடப்பான். வீடு எப்பவும் அமைதியாத்தான் இருக்கும். நீ வந்த பிறகாவது உயிர்ப்போட இருக்கட்டும்” என்றார்.
கணவர் இல்லாத தனிமை அவரை அதிகம் வாட்டியிருக்கிறது என்பதை அவரின் பேச்சில் புரிந்துகொண்ட கோகிலா…
“பீல் பண்ணாதீங்க அத்தை. அடுத்த வாரத்திலிருந்து நாம் ரெண்டு பேரும் சேர்ந்து வீட்டையும் உங்க புள்ளையையும் ஒருவழி பண்ணுவோம்” என்றாள்.
கோகிலாவின் தலையை தடவி கொடுத்த ஷமீம், அவளுக்கு தட்டில் உணவிட ஆரம்பித்தார்.
கோகிலா ஷமீமிடம் சொல்லியதை உள்வாங்கிய பின்னர் தான் பாசிலுக்கு உயிரே வந்தது.
எங்கே நேற்று நடந்த நிச்சயத்தை மறுத்து சொல்ல வந்திருக்கிறாளோ என்று பயந்து ஓடிவந்தது அவனுக்குத்தானே தெரியும்.
நேற்று விநோவின் அறையில் பாசில் கேட்ட போதே கோகிலா தன்னுடைய காதலை ஒப்புக்கொண்டிருந்தால், அவனுக்கு இன்று இந்த பயம் வந்திருக்காதோ!
“என்னம்மா வெஜ் செய்யலையா?”
கோகிலாவின் தட்டில் வைத்து மிளகு கறி, மற்றும் மட்டன் பிரியாணியை பார்த்து பாசில் கேட்டிருந்தான்.
“இன்னைக்கு வெள்ளிக்கிழமைன்னு காலையிலே இதெல்லாம் வேணுன்னு ஆர்டர் போட்டுட்டு போனீயே மறந்துட்டியா?” என்றவர் நங்கென்று கரண்டியின் சத்தம் கேட்குமாறு பாசிலின் தட்டில் உணவை பரிமாறினார்.
“சாரிம்மா… மறந்துட்டேன்” என்று அசடு வழிந்தவன், “அது வந்து கோகிலாவுக்கு நான் வெஜ் விட, வெஜ் தான் பிடிக்கும். அதான் கேட்டேன்” என்றவன் உணவில் கவனம் வைத்தவனாக தலையை கவிழ்ந்து கொண்டான்.
தனக்கு எது பிடிக்குமென்பதை பாசில் அறிந்து வைத்திருப்பதில் இதம் உணர்ந்தவள் இரண்டாம் முறையாக அவனை ரசித்து பார்த்தாள். ஷமீம் இருப்பதை உணர்ந்து சில கணங்களில் பார்வையை மாற்றிக்கொண்டாள்.
இருவரும் ஒருவரையொருவர் அடிக்கடி பார்த்து மீள்வதை அறிந்த ஷமீம்,
“ரெண்டு பேரும் சாப்பிட்டு பேசிட்டு இருங்க. நான் குட்டியா ஒரு தூக்கம் போட்டுட்டு வந்துடுறேன். இல்லைன்னா நைட் படுக்குறதுக்குள்ள உடம்பு அசதியாகிடும்” என்றவர் தனது அறைக்குள் சென்று கதவை சாற்றிக்கொண்டார்.
ஷமீம் பகலில் தூங்குபவர் கிடையாது. இது தங்கள் இருவருக்குமான தனிமைக்காக விலகி சென்றிருக்கிறார் என்பதை பாசில் புரிந்துகொண்டான்.
பாசிலோடு தனித்து இருக்க கோகிலாவுக்கு தான் உள்ளுக்குள் குறுகுறுப்பாக இருந்தது.
அவள் உண்ணாது தட்டில் அலைந்து கொண்டிருக்க,
“சாப்பிடு” என்றான்.
“பெப்பர் ப்ரை ரொம்ப காரமா இருக்கு. சாப்பிட முடியல. நீங்க எடுத்துக்கிறீங்களா?” என்றவள், உரிமையாய் தன் தட்டிலிருந்ததை அவனது தட்டிற்கு எடுத்து வைத்துமிருந்தாள்.
எந்த ஒரு உறவுக்கும் உரிமை உணர்வு தானே அதன் ஆழத்தை அதிகரிக்கச் செய்கிறது. அவ்வுணர்வை சிறு செயலில் பாசிலுக்கு கொடுத்திருந்தாள் கோகிலா.
பார்ப்பவர்களுக்கு இதென்ன அத்தனை பெரிய விடயமா என்று தெரியலாம். ஆனால் நாம் உண்டதை அத்தனை எளிதில் ஒருவருக்கு பகிர்ந்தளித்திட முடியாது. பிறரை நாமாக உணர்ந்தால் மட்டுமே அது சாத்தியம்.
நீ, நான் என்பது நாமென்று ஆன பின்பே வேறுபாடின்றி அதனை உணர முடியும்.
இத்தனை நாள் கோகிலா காட்டிய பாராமுக தவிப்பெல்லாம் அவளின் ஒற்றை செயலில் அடங்கிப்போனது. அவளையே இமைவெட்டாது பார்த்திருந்தான்.
“என்ன, வேண்டாமா?”
“பிடிச்சிருக்கு” என்றவன், இருவரும் எதிரெதிர் அமர்ந்திருக்க, அவளின் இடது கரத்தை தனது இடது கரத்தால் இழுத்து கோர்த்துக்கொண்டவனாக சாப்பிடத் தொடங்கினான்.
அவளுக்கு பார்த்து பார்த்து பரிமாறினான். அவள் பக்க கிளாஸில் நீர் குறைய கவனித்து நிரப்பினான்.
அவளுக்கு முன் உண்டு முடித்த பின்னரும், அவளுக்காகக் காத்திருந்து ஒன்றாக எழுந்தான்.
கை கழுவி வந்த பின்னர் ஹேண்ட் டவல் நீட்டினான்.
அவளோ அவனை வெளிப்படையாக கண்களவு செய்தவளாக வாங்கி துடைத்துக்கொண்டாள்.
முதல் முறை அவளிடமிருந்து. அவளின் அப்பட்டமான காதல் பார்வையில் அவன் தான் தடுமாறி அவளிடம் தொலைந்தான்.
“உங்ககிட்ட பேசணும்.”
“என் ரூம் போலாமா?” அவன் எதர்த்தமாகத்தான் கேட்டான்.
“அடுத்த வாரம் நீங்க கூப்பிடலாமே வருவேன்” என்றவளின் வார்த்தையில் சாரலின் குளுமை அவனுள் சுகமாய் இறங்கியது.
“கார்டன் போலாமா?” அவளே கேட்டாள்.
“ம்ம்ம்… வீட்டு பின்னாடி நிறைய மரமிருக்கு. போகலாம்” என்றவன் ஷமீமிடம் சொல்லிவிட்டே அழைத்துச் சென்றான்.
அங்கு பலவகை பழ மரங்கள் இருந்தன. பூச்செடி ஒரு பக்கம், காய்கறி, கீரைகள் ஒரு பக்கமென இருந்தது.
“தோட்டம் சூப்பரா இருக்கு. நல்லா மெயின்டெயின் பண்ணியிருக்கு” என்றாள். அவனுடன் நடந்துகொண்டே.
“கார்டன் புல் கண்ட்ரோல் அம்மா தான். அவங்களுக்கான நேரம் இதில் ஓடிடும். ரொம்ப விருப்பமும் கூட” என்றவன் தோட்டத்தின் கடைசி எல்லைக்கு அழைத்து வந்திருந்தான்.
அங்கு சதுர வடிவில் நான்கு பக்கமும் படிகள் வைத்து குளம் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றி மரங்கள். பார்ப்பதற்கே அவ்விடம் அத்தனை ரம்மியமாய். வாத்துகள் மேய்ந்தபடி இருந்தன. அக்குளத்திலேயே ஒரு பகுதி தனியாக பிரிக்கப்பட்டு, பல வர்ண அல்லி மலர்களால் பூத்து நிரம்பியிருந்தது..
“இந்த குளம் உங்களோடதா?” விழி விரித்து வினவினாள்.
“நம்மளோடது” என்றவன், சில படிகள் இறங்கி ஆறேழு அல்லி மலர்களை ஒடித்து கொத்தாக இரு கரம் பிடித்து அவள் முன் நீட்டினான்.
“செமயா இருக்கு” என்று ஆர்ப்பரித்தவள் மலர்களை அவனிடமிருந்து வாங்கி தன் தலையை ஒரு பக்கமாக சரித்து அப்பக்க கன்னத்தில் மலர்களை வைத்து அழுத்தியவளாக, பூக்களின் மென்மை அறிய இமைகளை மூடி இதழ் விரிந்தவளாக லயித்து நிற்க, பூக்களோடு பூவாய் தன் மலர் பாவையை பார்வையில் சிறை பிடித்து சிப்பி இதயத்தில் முத்தாய் சேமித்து வைத்தவனாக சட்டென்று தன்னுடைய அலைபேசியிலும் பதிந்து கொண்டான்.
புகைப்படம் எடுக்கப்பட்ட சத்தத்தில் கண் திறந்தவள் என்னவென்று அவனை பார்க்க…
கோகிலாவின் அருகில் தோள் உரச நெருங்கி வந்து நின்றவன், அவளின் தோள் சுற்றி கரம் வைத்து தன் இடையோடு நெருக்கியவனாக, அவள் உணரும் முன்னே இருவரையும் சேர்த்து சுயமி எடுத்திருந்தான்.
என்ன செய்கிறான் இவனென்று பாசிலின் தோள் வரை உயரமிருந்த கோகிலா விழி உயர்த்தி பாசிலை பார்க்க, அவனது விழிகள் தாழ்ந்து அவளை நோக்கிட, இருவரின் முகத்துக்கும் கீழே அல்லி மலர்கள் விரிந்து நின்ற காட்சி இயற்கை சூழலில் கவிதையாய்.
தன்னைப்போல் இருவரின் அந்நிலையை சுயமி எடுத்திருந்தான்.
இருவருக்குமான முதல் நெருக்கம். வார்த்தையால் சொல்லிடாத அவளின் காதல் அப்பட்டமாய் விழி வழிந்து அவனுக்கு அவளின் மனதை படம் பிடித்தது போல் காட்டிக்கொடுத்தது. அத்தருணம் இருவருக்குள்ளும் எழுந்த இதம், சுகம், மகிழ்வு, துள்ளல் யாவும் கோகிலா தான் கடந்து வந்ததை பேசிய பின்னரும் நீடிக்குமா?
“பிடிச்சிருக்கு. ரொம்ப பிடிச்சிருக்கு.”
காதில் ஒலித்த பாசிலின் ஹஸ்கி குரலிலும், செவி மடல் தீண்டிய அவனின் மூச்சுக்காற்றின் தகிப்பிலும், இருவரின் நிலை உணர்ந்த கோகிலா, அவனின் மார்பில் ஒரு கரம் வைத்து தள்ளியவளாக இரண்டடி விலகி நின்றாள்.
அவளின் நாணத்தை சிவந்துவிட்ட கன்னங்கள் காட்டிக்கொடுத்தன.
“இந்த வெட்கம் இன்னும் ரொம்ப பிடிச்சிருக்கு.”
“அச்சோ சும்மா இருங்க” என்ற கோகிலா பாசிலுக்கு முதுகு காட்டியவளாக திரும்பி நின்று இரு உள்ளங்கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள்.
“நீ செய்யுற எல்லாமே பிடிக்குதே! நான் என்ன செய்யட்டும். இப்போ, இது கூட பிடிச்சிருக்கு” என்றவன் அவளை நோக்கி ஓரெட்டு எடுத்து வைக்க…
“அங்கயே நில்லுங்க. நான் உங்கக்கிட்ட பேச வேண்டியது இருக்கு. நீங்க கிட்ட வந்தா பேசவே வரமாட்டேங்குது” என்று படபடவென்றாள்.
“பாருடா… உனக்கு பேச வரலையா? நேத்து நீ பேசனது கேட்டு எனக்கு வாய் அடைச்சுப்போச்சு. வார்த்தையே வரல. உனக்குள்ள இருக்கும் கோவில்பட்டி வீரலட்சுமியை நேத்து நிறைய நிறைய பிடிச்சுது.”
“ப்ளீஸ்…”
“சரி என்ன சொல்லணுமோ சொல்லு. நீ சொல்லி முடிக்குறவரை நான் பேசமாட்டேன்” என்றவன் குளத்து முதல் படியில் சென்று அமர்ந்தான்.
சில நொடிகளில் தன்னை நிலைப்படுத்தி… காற்றினை ஆழ்ந்து உள்ளிழுத்து மனதை சமன் செய்த கோகிலா மெல்ல அவனருகில் சென்று அமர்ந்தாள்.
இருவரின் தோள்களும், கைகளும், கால் பாதங்களும் உரசியும் உரசா இடைவெளி அவர்களுக்கிடையே!
குளத்தில் நீந்திக்கொண்டிருந்த வாத்துக்களின் மீது பார்வையை பத்தித்தவளாக தன் பேச்சினை ஆரம்பித்தாள் கோகிலா. பாசிலின் பார்வையோ அவளின் பக்கவாட்டு தோற்றத்தில் லயித்திருந்தது.
“நேத்து அவங்களுக்காக (கந்தன், சகு) நான் அப்படி சொல்லல. உண்மையாவே நானும் உங்களை…” தடுமாறியவள், “ஐ லவ் யூ” என்றிருந்தாள்.
“தெரியும்.” இருவரின் உதடுகள் மட்டுமே அசைந்தன. அவர்களது நிலையில் மாற்றமில்லை.
“அவங்க தான் என் அப்பா, அம்மா” என்றவள் கண்களை மூடி திறந்தவளாக, “அந்த வார்த்தைக்கு அவங்க தகுதியானவங்களே கிடையாது” என்று தன்னுடைய நினைவுகளிலிருந்து மறக்க நினைக்கும் நிகழ்வை எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் கூறினாள்.
கொடைக்கானலிலிருந்து இரண்டு மணிநேர பயணத்தில் உள்ளது விநோவின் சொந்த கிராமம். அதுதான் கோகிலாவினது ஊரும். விநோவின் தந்தையும், கோகிலாவின் தந்தையும் சித்தப்பா, பெரியப்பா மக்கள். அதாவது விநோ, கோகிலாவின் தாத்தாக்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள். மிகவும் கட்டுப்பட்டியான கிராமம் அது. பெண்களுக்கான அனைத்து கட்டுப்பாடுகளும் கொண்ட இக்காலத்திலும் மிகவும் பிற்போக்கு சிந்தனை கொண்ட மனிதர்கள் வாழும் ஊர். அதில் தப்பி பிறந்தவர் விநோவின் தந்தை. அவர் அப்போதே ஊரை எதிர்த்து, தன் தந்தையின் துணை கொண்டு காதலித்து பூரணியை மணம் முடித்தார்.
காதல் திருமணத்தை வெகுவாக எதிர்த்த காலம் அது. என்ன தான் ஊருக்கு பெரும் மனிதராக விநோவின் தாத்தா இருந்தாலும், ஊர் கட்டுப்பாட்டை மீறி தன்னுடைய மகனுக்கு காதல் திருமணம் செய்து வைத்ததால் ஊரே ஒன்றுகூடி விநோவின் குடும்பத்தை ஒதுக்கி வைத்தது. அதில் பெரும்பங்கு கந்தசாமியின் தந்தையை சேரும்.
கந்தசாமிக்கு ஏற்கனவே விநோவின் தந்தை ஆகாதவர், இப்போது இன்னும் அவரை பிடிக்காமல் போனது.
துருவ் பிறந்ததும், விநோவின் படிப்பிற்காக குடும்பத்தோடு கொடைக்கானல் வந்துவிட்டனர். விநோவின் தாத்தா மட்டும், சொந்த கிராமத்தை விட்டு வர மறுத்துவிட்டார். ஆதலால் வார இறுதி நாட்கள் கிராமத்திற்கு வந்து செல்வர்.
விநோவின் தாத்தா இறந்த பின்னர் அவர்களது வருகை முற்றிலும் குறைந்துபோனது. பூரணியின் சொல்லுக்காக விநோ மட்டும் வருடம் ஒருமுறை அவ்வூரிலிருக்கும் தங்களது குலதெய்வ கோவிலுக்கு வந்து செல்வான். விநோவின் தந்தையும் இறந்துவிட அவ்வூர் வாசமே மறந்தது அவர்களுக்கு. அவரின் இறப்பிற்கு தகவல் அளித்தும், கந்தசாமி வரவில்லை.
விநோ ஊருக்கு செல்லும்போதெல்லாம் யாருக்கும் தெரியாது தன்னுடைய தங்கை கோகிலாவை பார்த்து வருவான். இவர்களின் சந்திப்பு சகுந்தலாவிற்கு கூடத் தெரியாது.
அச்சமயங்களில் விநோ “படிப்பு தான் உன்னை இக்கூட்டிலிருந்து வெளியில் பறக்க வைக்கும். எப்பாடியாவது படி” என்று சொல்லியதால் கோகிலாவும் படிப்பை மட்டுமே துணை கொண்டு படித்து வந்தாள்.
காலம் உருண்டு, மெல்ல மெல்ல பெண்கள் அவ்வூரிலிருந்து படிக்க வெளியுலகம் வந்திருந்தாலும், அக்காட்டுப்பாடுகள் மட்டும் அகலவில்லை.
கோகிலா ஒரே பெண். இருப்பினும் பெண் பிள்ளை அடக்கமாக இருக்க வேண்டுமென்று, கந்தசாமி அடக்கியே தான் வளர்த்தார். அத்தனை எளிதில் கோகிலாவை வாய் திறந்து பேசிட அனுமதித்திட மாட்டார். சகுந்தலா அதற்கு மேல், கணவன் சொல்வதை மகள் விடயத்தில் செய்து முடித்திடுவார்.
பள்ளி சென்று வரும் நேரம் மட்டுமே கோகிலாவின் முகத்தில் சிரிப்பை பார்க்க முடியும்.
பள்ளி படிப்பு முடிந்ததும், கந்தசாமி கோகிலாவுக்கு வரன் பார்க்க அவளோ முதல் முறை தந்தையின் சொல்லை மறுத்து தன் விருப்பத்தை தெரிவித்தாள்.
“நான் மேல படிக்கணு(ம்)ப்பா.”
அவ்வளவு தான் கந்தசாமி கோகிலாவை அடி வெளுத்துவிட்டார்.
அடுத்து, ஊரில் அவரது பண்ணையில் வேலை செய்யும் நபர் அவரது பிள்ளையை கல்லூரியில் சேர்க்க கந்தசாமியிடம் பண உதவி கேட்க, கூலிக்காரனெல்லாம் படிக்க வைக்கிறான் என்ற வீம்பிற்காக கோகிலாவை டவுனுக்கு அனுப்பி படிக்க வைத்தார்.
எட்டு மாதங்கள் கல்லூரி வாழ்க்கை கோகிலாவுக்கு இன்பமாக இருந்தது. அதில் யார் கண் பட்டதோ, பிரச்சனை தேடி வந்தது.
அன்று கல்லூரி முடிந்து டவுன் பேருந்து நிலையத்தில் தங்கள் கிராமம் செல்லும் பேருந்திற்காக கோகிலா காத்திருக்க, தீடிரென்று எத்திசையிலிருந்து வந்தானென்று அவதானிக்க முடியாதபடி கோகிலாவின் முன் நின்று ஒரு பையன் காதல் கடிதத்தை நீட்டினான்.
சட்டென்று பயத்தில் கோகிலாவுக்கு உடலெல்லாம் வியர்த்துவிட்டது.
அவள் அவனுக்கு முடியாதென்று தலையை அசைக்க முயன்ற நொடி, கந்தசாமியின் அடி இடியென அவளின் கன்னத்தில் இறங்கியது.
“இதுக்குத்தான் படிக்கிறன்னு அத்தனை அடம் பிடிச்சியோ” என்று மீண்டும் ஒரு அடி கொடுத்தவர், “இனி இவள் பின்னாடி உன்னை பார்த்தேன் எங்கவூரு அய்யனாருக்கு உன்னை வெட்டி பலி கொடுத்துடுவேன்” என அப்பையனையும் மிரட்டி, நின்றுகொண்டிருந்த பேருந்தில் கோகிலாவை இழுத்து ஏற்றியவராக தானும் ஏறிக்கொண்டார்.
“இன்னைக்கு வண்டி பஞ்சர் ஆகி, அந்த அய்யனாரு என்னை பஸ்ல வரவைச்ச காரணம் உன் லட்சணத்தை நான் தெரிஞ்சிக்கத்தானா?” என்றவர், பேருந்தில் தன்னூர் மக்கள் இருக்கின்றனர் என்ற எண்ணம் சிறிதுமின்றி, கோகிலாவின் முதுகில் இரு கை வைத்து அடித்தார்.
“பாவி மகள்… என் மானத்தை வாங்கிட்டாளே!” கோகிலா சொல்ல வருவதை கந்தசாமி கேட்கவே முயல வில்லை. அவளை வாய் திறக்கவிடாது செய்வதிலேயே இருந்தார். மீறி ஏதும் சொன்னால் இருக்கும் இடமென்றும் பாராது அறைந்தார்.
வீடு செல்லும் வரை அவரது கையும், வாயும் ஓயவில்லை.
கந்தசாமியின் பேச்சை வைத்து மக்களே ஒரு யூகத்திற்கு வந்து காதல் தப்பென்றும், அதனை செய்த கோகிலா தவறான பெண் என்றும் ஆளாளுக்கு அவளுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டேவர, கோகிலா நொந்துபோனாள். முற்றிலும் அமைதியாகினாள்.
பேச முடியாத இடத்தில்… தன்னுடைய நியாயத்தை கேட்க ஆளில்லாத இடத்தில் மௌனம் சிறந்த ஆயுதம். பொறுமை மிக பெரும் பலம். அதனை கோகிலா கையில் எடுத்துக்கொண்டாள்.
அன்று ஊரே கந்தசாமியின் வீட்டின் முன் கூடிவிட்டது. விடயமறிந்த சகுந்தலா தன்னுடைய கணவரே நேரில் பார்த்திருக்கிறார் என்ற கூற்றில் மற்ற எதையும் கோகிலாவிடம் கேட்கும் எண்ணமின்றி கந்தசாமிக்கு மேல் மோசமாக நடந்து கொண்டார்.
அதுமுதல் கோகிலா வீட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டது.
அறைக்குள்ளேயே முடங்கிப்போனாள். பசியை கட்டுப்படுத்த முடியா வேளை மட்டும் கொஞ்சம் உண்டாள். பெயருக்கு உயிர் வாழ்ந்தாள்.
வீட்டில் தங்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்ற எண்ணமே இல்லாது, கந்தசாமி மற்றும் சகுந்தலா நடமாடினர்.
கோகிலாவை பார்க்கும்போதெல்லாம் இருவரும் திட்டுவதையே வழக்கமாக வைத்திருந்தனர்.
கோகிலாவுக்கு செத்துவிடலாம் போலிருந்தாலும் அதனை ஒருபோதும் செய்திட வேண்டுமென எண்ணவில்லை.
அவளுக்கென்று எடுத்து சொல்ல, அவள் மீது பாச கொண்ட ஒரே ஜீவன் விநோ மட்டும் தான். அவனும் சில வருடங்களாக அங்கு வருவதில்லை.
விநோ முதுகலை படித்துக்கொண்டே, ஐபிஎஸ் தேர்விற்காக தயார் செய்துகொண்டிருந்த தருணம் அது. கோகிலாவின் இத்தகைய சூழலில் தான் அவன் தன்னுடைய தேர்வை முடித்திருந்தான். முடிவுக்காக காத்திருந்த சமயம்.
கோகிலாவின் உள்மனம் மட்டும் ஏதோவொரு வகையில் அவளுக்கு நம்பிக்கையை கொடுத்துக்கொண்டே இருக்க… கோகிலாவும் மெல்ல மெல்ல தானிருக்கும் சூழலுக்கு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டாள்.
கண்டுக்காத அன்னை திடீரென்று இரண்டு நாட்களாக தன்னையே நோட்டமிடுவதை உணர்ந்த கோகிலா,
‘என்ன தான் நடக்குது பார்ப்போம்’ என்று தன்னுடைய வேலைகளை செய்துகொண்டிருந்தாள்.
ஐந்தாம் நாள் கோகிலாவிடம் வந்த சகுந்தலா…
“தலைக்கு குளிச்சிட்டியா?” என்று மொட்டையாக வினவ, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“எதுக்கு கேட்குறீங்க? எனக்கு புரியல?” அப்பாவியாகக் கூறினாள்.
“உனக்கு புரியாதுடி… இப்பவே இந்த வயசுலே பையன் கூட சுத்துற உனக்கு நான் சொல்றது எங்க விளங்கப்போவுது” என்று அவளின் கன்னத்தில் பலமாக இடித்த சகுந்தலா,
“இந்த மாசம் தண்ணி ஊத்திக்கிட்டியா?” என்று மீண்டும் புரியாததைப்போலவே கேட்டு வைத்தார்.
“நிஜமா புரியலம்மா?” அழும் குரலில் வேண்டினாள் கோகிலா.
“அவள் விட்டால் ஊரையே வித்துபுடுவா(ள்). எப்படி நடிக்கிறா பாரு நம்மகிட்டவே” என்று முன் வந்த கந்தசாமி, பெண்ணாக இருந்தும் சகுந்தலா தனது மகளிடம் கேட்கவே தயங்கிய விடயத்தை அப்பட்டமாக வெளிப்படையாகக் கேட்டிருந்தார் கந்தசாமி.
(இது பெண்களுக்கு சாதரண விடயம் தான். இப்போது ஆண்கள் கூட இதனை எளிதில் புரிந்துகொண்டு இதைப்பற்றி நிறைய தெரிந்து வைத்துள்ளனர். இருப்பினும் இவ்விடத்தில் அதனை கந்தசாமி கேட்பது உணர்வு பூர்வமாக கோகிலாவை தாக்குவதைப்போல். அத்தனை வன்மையாக என்னால் எழுத முடியாது என்பதால், மேலோட்டமாகக் கூறியுள்ளேன். அதனால் இதனை பெண்களுக்கான இயல்பான ஒன்றென்று கடந்துவிடுங்கள் கதைக்காக மட்டுமே கடினமாகக் கூறியுள்ளேன்.)
தந்தையே தன்னிடம் இதைப்பற்றி கேட்கவும் அதிர்ந்து விரிந்த விழிகளில் கண்ணீர் சுரக்க, தரையில் மடங்கி அமர்ந்து கதறி துடித்தாள்.
“சொல்லுடி. அவர் கேட்குறாரு. நீபாட்டுக்கு அழுவுற. என்னடி வந்துச்சா இல்லையா?”
சகுந்தலா இன்னும் பல மோசமான வார்த்தைகளைவிட, அதற்கு மேல் பொறுக்க முடியாத கோகிலா இல்லை எனும் விதமாக தலையை அசைக்க, அவ்வளவுதான் மகளென்றும் பாராது கந்தசாமி கோகிலாவின் முடியை பற்றி சுழற்றி அவளின் வயிற்றிலேயே மிதி மிதியென மிதித்தார்.
“பையன் கூட சுத்தி இப்படி கெட்டு போய்… வயித்தை நிரப்பிக்கிட்டு வாந்திருக்காளே பாவி மவ” என்று சகுந்தலா வைத்த ஒப்பாரியில் மீண்டும் அவ்வீட்டு முன்பு ஊர் கூடியது.