நேச நெஞ்சங்கள் 57

உயிர் உறை 57

காதல் 5

சகுந்தலா வீட்டின் முன்பு ஊரையே கூட்டிவிட்டார்.

பெற்றோரின் நம்பிக்கையற்ற இழிவான சொற்களில், கோகிலா ஸ்தம்பித்து உறைந்தாள்.

அதற்கு மேல் அவளின் கண்களில் வழிந்த நீர் வற்றியது.

இவர்களின் வார்த்தைகாக அழ வேண்டுமா என்கிற எண்ணம்.

இந்தளவிற்கு தரமிறங்கி, தன்னுடைய ஒழுக்கத்தையே கேள்விக்குறியாக்கி பேசுவார்கள் என்று கோகிலா எதிர்பார்க்கவில்லை.

ஓர் ஆண் தன் முன்பு வந்து நின்ற ஒரே காரணத்துக்காக இவர்கள் இந்தளவிற்கு இறங்கிவிடுவார்களா? உள்ளத்தாலும், உடலாலும் முழுதாய் மரத்துப்போனாள்.

மரத்துப்போனவள் பாறையென இறுகி விறைத்து நின்றாள்.

பெற்றோரே நம்பாது பேசும்போது, ஊர் மக்கள் மட்டும் சும்மா விட்டுவிடுவார்களா என்ன?

ஆளுக்கு ஒரு விதமாக பேசினார்கள்.

அங்கு அனைவருக்கும் பேசும் பொருளாகினாள் கோகிலா.

‘இந்த மனிதர்களின் மத்தியில் தான் வாழத்தான் வேண்டுமோ?’ என நினைத்தவள், யாரும் எதிர்பாரா வண்ணம் அடுகளைக்குள் புகுந்து மண்ணெண்ணெய் எடுத்து தலையில் ஊற்றிக்கொண்டாள்.

தூற்றும் சொல் தாங்காது கோகிலா செய்த அச்செயலே அவளின் மானத்தை கேள்விக்குரியாக்கிவிட்டது.

“உண்மை தெரிஞ்சதும் அவமானத்தில் உயிரை மாட்சிக்க முடிவு பண்ணிட்டாள்.” சகுந்தலாவே அவ்வாறு சொல்லவும் சீ’யென்றானது.

‘இப்படிப்பட்டவர்களின் வார்த்தைக்காக என்ன செய்திட துணிந்துவிட்டேன்’ என தன்னையே நிந்தித்தவளாக வீட்டுக்கு வெளியில் வந்து திண்ணையில் அமர்ந்துவிட்டாள்.

அதற்கும் என்ன நெஞ்சழுத்தம் என்று பேசத்தான் செய்தார்கள்.

“ஊர் முன்னாடி இப்படி தலை குனிய வச்சிட்டியேடி பாவி. இதுக்கு நீ செத்து தொலையலாம்” என்று சகுந்தலா, தன் பலம் கொண்ட மட்டும் கோகிலாவை அடிக்க, அவளோ இவ்வளவு நேரமில்லாத அளவிற்கு அதீத அழுத்தத்தோடு உட்கார்ந்திருந்தாள்.

“இவள் எல்லாத்துக்கும் துணிஞ்சிட்டாங்க. எப்படி மலை மாதிரி அசையாம வாங்கிக்கிறாள் பாருங்க. ஒரு சொட்டு தண்ணி வருதா?” என்று சகுந்தலா கணவரிடம் பேசிக்கொண்டே கோகிலாவை விடாது அடித்தார். ஒரு நிலையில் அவர் தான் ஓய்ந்து போகவேண்டியது இருந்தது.

“பேசாமல் யாரு என்னன்னு விசாரிச்சு, அந்த பையனுக்கே கட்டிக்கொடுத்திடுங்கப்பா!” கூட்டத்தில் ஒருவர் சொல்லியது தான் தாமதம், கந்தசாமி பேயாட்டம் ஆடிவிட்டார்.

“யார் வீட்டுக்கு யாருடா மருமகனாவுறது” என்று எகிறியவர், “என் தலைமுறை என்னோட முடிஞ்சிப்போனாலும் எனக்கு கவலை இல்லை” என்று கோகிலாவை பார்த்து தீர்க்கமாக உரைத்த கந்தசாமி, “அதான் எண்ணைய ஊதிக்கிட்டு உட்கார்ந்திருக்காளே, பத்த வச்சிட்டா எல்லாம் முடிஞ்சிப்போவுது” என்றார்.

கோகிலா சடாரென்று அவரை நிமிர்ந்து காளியாய் முறைத்தாள்.

“யாரு யாருக்குடா தீ வைக்கிறது” என்று ஆக்ரோஷமாக எழுந்து நின்றவள், “நீ வச்சாலும் அந்த தீ என்னை ஒண்ணும் பண்ணாதுடா” என்றாள்.

“இப்போலாம் தீயோட சூட்டை விட உன்னை மாதிரி கௌரவ பேய்களின் வார்த்தைகள் தான் அதிகமாக புண்ணாக்குது. சுடுது” என்றவள், “ஒரு சூழலோட எல்லா பக்கத்தையும் ஆராயாமல் கடிவாளம் கட்டுன குதிரை மாதிரி உன் கண்ணுக்கு தெரிஞ்சது வச்சு மட்டும் ஏன் மானத்தை குறை சொல்ற நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷன். உன்னையும் இந்த ஊர் மதிக்குது பாரேன்” என்று ஏளனமாக சிரித்தாள்.

“ஏய் யாரடி மரியாதை இல்லாம பேசுற. அவரு உன் அப்பாடி” என்று அறைய வந்த சகுந்தலாவின் கையை பிடித்து தள்ளியவள், “மேல கை வைக்கிற வேலை வச்சிக்கிட்ட” என்று ஒரு விரல் ஆட்டி நாக்கை கடித்து எச்சரித்தாள்.

“என்னடி ரொம்ப திமிரா வாய் நீளுது…” என்று கேட்டுக்கொண்டே கோகிலாவின் முடியை பற்ற கந்தசாமி முயல…

“தப்பு செய்யாமலே அந்த சூழலில் மாட்டிக்கிட்டவங்களுக்கு மட்டுமே இருக்கும் இந்த திமிர்” என்றவள், “அப்டித்தாண்டா பேசுவேன்” என்று சீறியவளாக அவரின் கையை பிடித்து முறுக்கி வளைத்தாள்.

“என்னம்மா நீ பெத்த அப்பனையே அடிக்குற?” ஒருவர் கேட்டிட,

“இவ்வளவு நேரம் என்னை அடிக்கும்போது பேசாத வாயெல்லாம் இனியும் அப்படியே இருக்கணும்” என்றவள், “இவன் எனக்கு அப்பனா?” எனக்கேட்டு இழிவாக உதடு சுளித்தாள்.

“பெத்த பொண்ணோட நிலையை புரிஞ்சிக்க முடியாதவனெல்லாம் அப்பனில்லை” என்றவள், “என்ன நடந்துச்சுன்னு வாய் திறந்து என்கிட்ட ஒரு வார்த்தை கேட்காத இவரெல்லாம்…” என்ன சொல்ல வந்தாளோ வார்த்தையை விழுங்கிவிட்டாள்.

“இவங்களவுக்கு நான் தரமிறங்கி பேச விரும்பல” என்றவள், சகுந்தலாவை திரும்பி முறைத்து பார்த்தவளாக,

“உனக்கு மாசமாசம் சரியா ஒரே நாளில் வந்திடுதா என்ன?” எனக் கேட்டாள்.

“ஏய் ஊர் முன்னுக்க வச்சு என்னடி கேட்குற?” என்று கோகிலா தள்ளியதில் கீழே விழுந்து கிடந்தவர் ஆவேசமாக எழுந்து அவிழ்ந்திருந்த கூந்தலை கொண்டையிட்டவராக, கோகிலாவை அடிக்க வந்தார்.

அவரை முந்தியவளாக வேகமாக சகுந்தலாவை அடித்திருந்தாள்.

“உன் வாய் திறந்த அவ்வளவு தான்” என்றவள், “உனக்கெல்லாம் ஒரு வாரம் பத்து நாளுன்னு தள்ளி வந்ததே இல்லையா? ஒரு மூணு நாள் தேதி மாறனதுக்கு என் நடத்தையை இழிவுப்படுத்தி, இல்லாத ஒருத்தனோட பேசி… ச்சீய், நீயும் ஒரு அம்மாவா?” எனக் கேட்டவள் சகுந்தலா சுதாரிக்கும் முன் மீண்டும் அறைந்திருந்தாள்.

“என்னங்க!” கோகிலா திரும்பத்திரும்ப அடிப்பதில் அதிர்ந்த சகுந்தலா கந்தசாமியை அழைக்க,

“எதாவது பேசுனான், அவனுக்கு அடி விழும்” என்றிருந்தாள் கோகிலா.

அந்நேரம் ஒலித்த பலமான கைத்தட்டலில் எல்லோரும் திரும்பிப் பார்க்க, விநோதன் நின்றிருந்தான்.

விநோவை கண்டதும் கந்தசாமியை விட்டவளாக,

“விநோண்ணா” என்று ஓடிச்சென்று அவனை கட்டிக்கொண்டாள் கோகிலா.

ஐபிஎஸ் தேர்வு முடிவு வந்திருந்தது. விநோ நல்ல நிலையில் தேர்ச்சி அடைந்திருந்தான்.

பயிற்சிக்கு செல்லுமுன் குலதெய்வ கோவிலுக்கு போய் வருமாறு பூரணி சொல்ல அன்று அங்கு வந்திருந்தான்.

கோகிலாவை பார்த்து ரெண்டு மூன்று வருடங்களாகிறது பார்த்து செல்லலாம்  என நினைத்தவன், அவளை தொடர்புகொள்ளும் வழியின்றி வீட்டிற்கே சென்றுவிடலாமென்று வர கூட்டமாக இருப்பதைக் கண்டு என்னவென்று பார்க்க… அப்போதுதான் கோகிலா பேச ஆரம்பித்திருந்தாள்.

அவள் கந்தசாமிக்கும், சகுந்தலாவுக்கும் கொடுத்த பதிலிலே மேலோட்டமாக என்னவென்று தெரிந்து கொண்டான்.

கோகிலாவை ஆதரவாக தன் கைவளைவில் நிறுத்தியவன்,

“நீ வாடாம்மா, நம்ம வீட்டுக்கு போகலாம்” என்றவன், அங்கிருக்கும் யாரையும் பாராது திரும்பி நடக்க…

“யாரு பொண்ணை யாருடா கூட்டிட்டு போறது” என்று அருகில் வந்த கந்தசாமியை பார்வையாலே எட்ட நிறுத்தியிருந்தான் விநோ. தீயாய் சுட்டெரித்தான்.

“என்கிட்ட இந்த ஏகிர்ற வேலையெல்லாம் வச்சிக்காத. இன்னமும் நீ பார்த்த அதே சின்னப்பையன் விநோ இல்லை நான். ஐபிஎஸ் ஆபீசர் விநோதன். உள்ள தள்ளுனேன் வைய்… காலத்துக்கும் ஜெயிலில் தான்” என்றவனிடம் சொன்னதை செய்திடுவேன் என்கிறேன் பாவனை.

கந்தசாமியின் கால்கள் தானாக இரண்டடி பின் வைத்தன.

“கோகிலா என் தங்கச்சி. இனி ஆயுசுக்கும் என்னோட தான் இருப்பாள். மக(ள்)ன்னு உறவு கொண்டாடிட்டு யாராவது வந்தீங்க…” என்றவன், “யாரெல்லாம் ஜெயிலை பார்த்திருக்கீங்க?” என்றவனாக கோகிலாவை கூட்டிக்கொண்டு திரும்பி நடந்தான்.

அவனின் அழுத்தமான கம்பீர நடையே கந்தசாமியை பயம் கொள்ள வைத்தது.

அத்தெருவை கடந்து வந்ததும், நடக்க முடியாது கோகிலா அவஸ்தையாய் நிற்க… அவள் சொல்லாமலே அவளின் நிலையை புரிந்துகொண்ட விநோ, அங்கிருந்த மரத்தடியில் அவளை அமர வைத்தவன்…

“கார் கோவில்கிட்டவே இருக்குடா. நான் போய் எடுத்துட்டு வந்துடுறேன். அதுவரை பத்திரமா இங்கயே உட்கார்ந்திரு. அப்படியில்லை உனக்கு ஒகேன்னா என்னோடவே வா” என்றான்.

“முடியாதுண்ணா.” விநோவுக்கு புரிந்தது.

“பத்து நிமிடத்தில் வந்துடுறேன்” என்றவன், வரும்போது அவளுக்கு வேண்டியவையோடு வந்திருந்தான்.

ஆடை முதல் கொண்டு இருந்தது.

“பக்கத்து டவுனில் இதுதாண்டா கிடைத்தது” என்று விநோ கொடுக்க, அவன் வாங்கி வந்தவற்றை பார்த்தவளின் கண்கள் கலங்கிவிட்டது.

“ச்சூ… என்னடா இதுக்கெல்லாம் அழுவாங்களா?” எனக்கேட்டவன், அவளின் கண்களை துடைத்துவிட்டான்.

“ஒரு மூணு மணி நேரத்துக்கு முன்னாடி இது வந்திருந்தா…” என்றவள் கண்களை அழுந்த மூடி தான் வாங்கிய பேச்சுக்களை ஓட்டிப்பார்த்தாள்.

“முடியல விநோண்ணா…” அவனின் மார்பில் சாய்ந்து கதறி துடித்தாள்.

அழுவது மன அமைதி கொடுக்குமென நினைத்தவன், சிறிது நேரம் அழவிட்டு அவளை தேற்றி கொடைக்கானல் அழைத்து வந்திருந்தான்.

கோகிலாவை பார்த்ததும் பள்ளி இறுதி ஆண்டிலிருந்த துருவ்… “கோகிக்கா” என்று ஓடிவந்து அவளின் கைகளைப் பற்றிக்கொண்டு குதிக்க… அதுவரை வாடியிருந்த கோகிலாவின் முகம் புன்னகை பூசியது.

கோகிலாவின் தோற்றம் கண்டு ஏதோ சரியில்லை என்று கண்டு கொண்ட பூரணி, விநோவிடமிருந்து அறிந்த தகவலில் கோகிலாவை நினைத்து வேதனை அடைந்தார்.

அன்று முதல் தன் மகளாக அரவணைத்துக் கொண்டார்.

அவ்வீட்டில் கோகிலாவும் ஒரு உறுப்பினாராகினாள். அவளுக்கு ஒன்றென்றால் துடிக்கும் நபர்களாகியிருந்தனர் விநோ, துருவ், பூரணி.

அனைத்தையும் சொல்லி முடித்த கோகிலா, தன் தொலைதூரப் பார்வையை மாற்றாது…

“காதல் அப்டிங்கிற சின்ன வார்த்தை… என் வாழ்க்கையில் நுழையாமலே எனக்கு நிறைய வதை கொடுத்திருச்சு. அதனால் தான் எனக்கு காதல் மேல வெறுப்பு, கோபம். ஆனால் உங்க மேல இல்லை. உங்களை ரொம்ப பிடிக்கும். ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த பிடித்தம் தான் காதல்’ன்னா இருந்துட்டு போகட்டும்” என்றாள்.

நேற்றும் பாசில் வேறு மதத்தைச் சேர்ந்தவன் என்று கந்தசாமி தாம்தூமென்று குதிக்க, அங்கு அவரை கவனிப்பார் யாருமில்லை.

அவரின் பேச்சு வரம்பற்று போக, சகுந்தலா கோகிலாவிடம் “எங்களை மீறி இவனை எப்படி கட்டுறன்னு பாக்குறேன்” என்க,

“அப்போ நான் யாரையோ காதலிச்சு கெட்டுபோயிட்டேன்னு தான என்னை படுத்தி வச்சீங்க… இப்போ சொல்றேன், அவரை நான் காதலிக்கிறேன்” என்று பாசிலை சுட்டிக்காட்டிக் கூறினாள்.

“அவரைத்தான் கல்யாணமும் செய்துப்பேன்” என்றவள் பாசிலின் முன் சென்று, “இதுவரை உங்கக்கிட்ட நான் சொன்னதில்லை. இப்போ சொல்லணும் தோணுது. ஐ லவ் யூ” என்றிருந்தாள்.

யதுவும், துருவும் விசில் அடித்து ஆரவாரம் செய்திருந்தனர்.

கந்தசாமி குதித்துக் கொண்டு வர,

“என் தங்கச்சி உங்க பொண்ணாவே இருந்தாலும், அவளோட வாழ்க்கையை தீர்மானிக்குற முடிவு அவளுக்கு உண்டு. மீறி எதாவது பண்ணீங்க…”

விநோ எச்சரித்த தொணியிலேயே,

“இனி நமக்கு மகளே இல்லை. வா போவோம்” என்று சகுந்தலாவை கூட்டிக்கொண்டு கந்தசாமி புறப்பட்டுவிட்டார்.

அதன் பின்னர் கோகிலா அலங்கரித்து வர, பாசிலும் அவளும் மோதிரம் மட்டும் மாற்றிக்கொண்டனர்.

நேற்றைய நிகழ்வின் மிச்சத்தில் தன் கையிலிருந்த மோதிரத்தை கோகிலா வருடியவாறு…

“உண்மையா என் மனசாரத்தான் நேத்து உங்கக்கிட்ட லவ் யூ சொன்னேன்” என்றாள்.

“சரி போகலாம் வா!” பாசில் எதுவும் சொல்லாது எழுந்துகொள்ள…

“எதுவும் சொல்லாமப் போறீங்க?” என்றாள்.

“உன் பாஸ்ட் எனக்கு முன்பே தெரியும்.”

பாசில் சொல்லியதும் கோகிலா அதிரவெல்லாம் இல்லை… எப்படியென்று ஒரு பார்வை.

“நேத்து முன்தினம் நைட் உன் அழுகையை பார்த்துட்டு ஆது விநோகிட்ட பேசியிருக்காள். இனியும் உன்னை இப்படியே விட முடியாது, அதிரடியா ஏதாவது பண்ணனுன்னு ஆது சொல்லியிருக்காள். விநோவுக்கும் சரின்னு பட்டதால், நைட்டோடு நைட்… எல்லாம் பேசி முடிவெடுத்தாச்சு. அப்போவே விநோ என்கிட்டவும், அம்மாகிட்டவும் எல்லாம் சொல்லிட்டான்” என்றவன், “இப்போ உன்னை சொல்ல விட்டதுக்கு காரணம், நீ என்கிட்ட சொல்லிட்டன்னு உனக்கு வர திருப்திக்காகத்தான்” என்றதோடு, “உன்னோட கைகோர்த்து முன்னாடி பல வருஷம் செல்லத்தான் ஆசைப்படுறேன். அதுக்கு நம் காதல் மட்டும் போதும். முடிஞ்சிப்போன எதுவும் வேண்டாம்” என்றவனை ஓடிவந்து உரிமையாய் இறுக அணைத்துக்கொண்டாள்.

**************

அன்று விநோவின் வீடு மகிழ்வில் திளைத்தது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் நிரல்யா தன்னுடைய இரட்டை செல்வங்களை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்திருந்தாள். இரண்டு ஆண் செல்வங்கள். குடும்பத்தில் இருப்போருக்கு அத்தனை சந்தோஷம்.

அடுத்த நாள் பாசில் மற்றும் யது குடும்பத்தோடு விநோவின் இல்லம் வந்துவிட்டனர். குழந்தைகளை பார்ப்பதற்கு மற்றும் அதற்கடுத்த நாள் பாசில், கோகிலா திருமணம்.

தகுந்த பாதுகாப்போடு வர வேண்டுமென விநோதன் போட்ட கட்டளையில் எப்போதும்போல் யது நொந்திருந்தான்.

“கதையே முடிஞ்சுதுடா பாதுகாப்புன்னு சொல்லி என்னை ஓட வச்சு, நானில்லாம என்டு போட்டுடாதீங்கடா” என்று யது புலம்பிய பின்னரே விநோ அமைதியாக அவனை வர அனுமதித்திருந்தான்.

இன்று காலை திருமணத்திற்கு பதிவாளர் அலுவலகம் செல்ல கிளம்பிக்கொண்டிருந்த ஆதர்ஷினி திடீரென உணர்ந்த சோர்வால் மெத்தையில் அமர்ந்துவிட்டாள்.

கிளம்பி வந்த விநோ…

“இன்னும் நீ ரெடியாகலையா?” எனக் கேட்க, அவனை அருகில் அழைத்தவள், அவன் வந்ததும் இடையோடு கட்டிக்கொண்டு அவனின் வயிற்றில் முகம் பதித்துக்கொண்டாள்.

“இப்போலாம் அடிக்கடி சடனா டயர்ட் ஆகிடுதுங்க” என்றவள், “நிறைய தூக்கமா வருது” என்று கண்களை மூடிக்கொண்டாள்.

“மேரேஜ் முடிஞ்சதும் ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம். இப்போ தர்ஷிக்கு நான் போய் ஜூஸ் கொண்டு வரேன்” என்றவன் அவளின் முதுகை தட்டிக்கொடுத்து வெளியேறினான்.

இரண்டு நிமிடங்களில் ஜூஸுடன் வந்தவன், அவளின் கையில் கொடுத்து குடிக்க சொல்லிவிட்டு, அவளுக்கு கீழே குத்திட்டு அமர்ந்து, ஏனோதானோவென்று இருந்த புடவையின் மடிப்புகளை சரி செய்தான்.

“முடியலங்க…”

“குடிம்மா… டயர்ட் போயிடும்” என்றவன் எழ, ஆதுக்கு குமட்டிக்கொண்டு வந்தது.

அவள் குளியலறை நோக்கி ஓட, விநோவும் பின்னோடு சென்று மனைவியின் தலையை அழுத்திக் கொடுத்தான்.

“இப்போ ஓகேவாடா” என்ற விநோ ஆதுவை மெல்ல அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தான்.

“ஏன் திடீர்ன்னு வாமிட். சேராததை சாப்பிட்டியா?”

“இல்லை” என சொல்லியவள் அவன் மடியில் சுருண்டு படுத்துவிட்டாள்.

“எல்லாரும் ரிஜிஸ்டர் ஆபீஸ் போயிட்டாங்க தர்ஷி” என்றாலும் அவனது கைகள் அவளை தட்டிக்கொடுத்தது.

“போகட்டும் வினு…”

அவளின் இந்த குரலுக்கு எப்போதுமே எதிலும் அடங்காதவன் கட்டுப்பட்டிடுவான்.

“தர்ஷி… டெம்ப்ட் பண்ணாத! கோகி நம்மளை எதிர்பார்த்திட்டு இருப்பாள்.”

“ம்ப்ச் கொஞ்ச நேரம்… டூ மினிட்ஸ். அமைதியா இருங்க” என்றவள் அடுத்த சில வினாடிகளில் துள்ளி குதித்து எழுந்து அவன் மடியில் அதே துள்ளலோடு அமர்ந்தாள்.

“ஹேய் தர்ஷி… மெதுவா. என்ன பண்ற நீ? ஷர்ட் கசங்குது பார்.”

“கசங்கட்டும். வேற மாத்திக்கலாம் காக்கி.” விநோவின் சட்டை காலரை இரு கை விரல்கள் கொண்டு பற்றி, தன் முகம் நோக்கி இழுத்தாள்.

“வேணாம்… தர்ஷி, போகணும். லேட் ஆகிடும்… நீதான் ஸ்டார்ட் பண்ற. அப்புறம் நான் தான் ரீஸன் சொல்லக்கூடாது” என்றவன் அவளின் இதழ் தன்னிதழ் உரசும் அருகில் வந்ததும் கண்களை மென்மையாய் மூடிக்கொண்டான். மனைவியின் இடையோடு பின்னால் கையிட்டு கட்டிக்கொண்டான். அவனின் அணைப்பில் இறுக்கம் கூடிக்கொண்டே போனதே.

இருவரின் மூக்கும் ஒன்றோடு ஒன்று முத்தமிட்டு கொண்டது.

“வினு…” அவனின் இறுக்கத்தில், நெருக்கத்தில் அவளுக்கு குரல் கிறக்கமாகத்தான் வந்தது.

“என்னை என்னடி பண்ற? மயக்கப் பாக்குறியா?” அவளுக்கு மேல் அவன் மையல் கொண்டிருந்தான்.

“ஏன் இன்னும் பண்ணலையா? இல்லை நீங்க ஆகலையா?” மென்மையாய் அவனது கீழ் அதரத்தின் நுனியில் பற்களால் மெல்ல கடித்து வைத்தாள்.

“ஆனதால தான், தங்கச்சி கல்யாணத்தை வச்சிக்கிட்டு உன்னோட இப்படியிருக்கேன்!” கணவனின் பதிலில் சத்தமிட்டு சிரித்தவள், அவனின் மூக்கோடு மூக்கு உரசினாள். அணைப்பில் அவனது அழுத்தம் கூடியது.

அவனது உதட்டோடு தன் உதடு மோத…

“இனி இப்படியெல்லாம் இறுக்கமா பிடிக்கக்கூடாது வினு” என்றாள்.

“ஏன்… ஏன் பிடிக்கக்கூடாது? என் பொண்டாட்டி… என் உரிமை” என்றவனின் உதட்டில் முத்தம் வைத்தவள்,

“அப்பாவாகிட்டிங்க காக்கி” என்றாள். அவனது கன்னத்தோடு தன் கன்னம் வைத்து இழைத்தாள்.

ஆது சொன்னதை கிரகித்தவன், தன் கன்னம் தீண்டியிருக்கும் மனைவியின் கன்னத்தில் அழுந்த முத்தம் வைத்து, முகம் முழுக்க இதழால் கிளை பரப்பினான்.

“நிஜமாவா தர்ஷி…” முத்தம் வைத்துக்கொண்டே இருந்தான்.

“கண்ஃபார்ம் வினு. செக் பண்ணிட்டு வீட்டுல சொல்லிக்கலாம்.”

“ம்” என்றவன், “அதுக்குத்தான் இந்த டயர்ட், வாமிட் சிம்டம்ஸ் எல்லாமா?” என்று விநோ கேட்க, அவள் ஆமாமென்று தலையாட்டிட, அவளின் நெற்றியோடு நெற்றி முட்டியவன், அவளது இரு கன்னத்தையும் தன் கைகளில் தாங்கி…

“லவ் யூ தர்ஷி” என்றான்.

“பாருடா…”

“என்னடி?”

“காக்கி லவ் சொல்லி… பர்ஸ்ட் டைம் கேக்குறேன்.”

“ஆஹான்… சரி கிளம்பு. ஹாஸ்பிடல் போயிட்டு போகலாம்” என்றவன் சொல்லியது போலவே, மருத்துவமனை சென்று ஆதர்ஷினியின் கர்பத்தை உறுதி செய்த பின்னர் தான் பதிவாளர் அலுவலகம் சென்றான்.

எல்லோரும் இவர்களுக்காகத்தான் காத்திருந்தனர்.

“என்னடா… அப்போவே கிளம்பிட்டன்னு சொன்ன, இப்போதான் வர?” பூரணி தான் கேட்டார்.

“நல்ல நேரம் முடிஞ்சிருச்சாம்மா?” என்று பூரணியிடம் கேட்டவன், கோகிலாவின் பக்கம் திரும்பி, “சாரிடா” என்றான்.

“அதெல்லாம் இன்னும் முடியல. இருந்தாலும் நீ வராமல் பதட்டப்பட வச்சிட்டடா” என்று குறைப்பட்டுக்கொண்டார் பூரணி.

“ஆமாம் விநோ, அதுக்குள்ள இந்த துருவ், அண்ணனை கடமை அழைத்திருக்கும். சென்றிருப்பாருன்னு உன்னை கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டான்” என்று யது சொல்ல… “அச்சோ விநோண்ணா, யதுண்ணா அவர் சொல்லியதை நான் சொன்னன்னு மாத்தி சொல்லுறார்” என்று துருவ் வேகமாகக் கூறிட…

“அடேய்களா… என் கல்யாணத்தை முடிச்சு வச்சிட்டு அப்புறம் விளையாடுங்கடா” என்று அவர்களுக்கு குறுக்கே வந்து நின்றான் பாசில்.

“பாருங்கடா நீங்களெல்லாம் ஜோடி ஜோடியா நிக்கிறீங்க? நான் மட்டும் இன்னும் ஏண்டா சிங்கிளா நிக்கணும்” என்றான்.

“விட்டா அழுதிடுவான் போலடா” என்ற விநோ, “வாங்க உள்ள போகலாம்” என்க அடுத்த சில நிமிடங்களில் சட்டப்பூர்வமாக, தனது சொந்தங்களின் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் மற்ற ஆசீர்வாதத்தால் பாசில் மற்றும் கோகிலா திருமண பந்தத்தில் கணவன் மனைவியாக இணைந்திருந்தனர்.

பாசில் தன் கரத்தோடு கோகிலாவின் கரத்தை உரிமையாய் கோர்த்துக் கொண்டான்.

சில நாட்களுக்கு முன் அவனது வீட்டு தோட்டத்தில், குளத்து கரையில் நின்று, தன்னை அவனது திண்ணிய நெஞ்சத்தில் தாங்கி நின்றவனாக பாசில் சொல்லிய வார்த்தைகள் அக்கணம் கோகிலாவின் செவியில் ஒலித்தது.

தன்னுடைய கருப்பு பக்கத்தை கோகிலா சொல்லியதும், அதெல்லம் தனக்கு ஒரு பொருட்டே இல்லையென்று பேசி அவளை ஆறுதல் படுத்திய பாசில்…

“இப்போ உன்னை நெஞ்சில் சுமந்துகிட்டு இருக்க நான், என் வாழ்நாள் முழுக்க இறக்கி வைக்கமாட்டேன். நான் விரும்பியே ஏத்துக்கிட்ட சுகமான சுமை நீ. இது காதல் சுமை. என் நெஞ்சுக்குழியில் மட்டும் தான் பாதுகாப்பா இருக்கும்” என்றான்.

அந்நொடி முதல் பாசில் காட்டும் காதலில் சுகமாய் கரைந்து கொண்டிருக்கிறாள்.

இக்கணம்… ‘இவனால் மட்டுமே என்னால் உயிர்ப்புடன் இருக்க முடியும்’ என்பதை அவனது அருகில், கோர்த்திருக்கும் கையின் பிடியில், அவனது அரவணைப்பில் உணர்ந்து கொண்டாள்.

சூழல் மறந்து, உடனிருக்கும் குடும்பத்தாரை மறந்து, சட்டென்று எம்பி பாசிலின் கன்னத்தில் முத்தம் வைத்திருந்தாள்.

பாசில் விழி அகண்டு உயிர் உறைய…

“நாங்க கிளம்பறோம். இப்படியே எங்க போனாலும் போங்க” என்ற விநோ ஆதர்ஷினியை கரம் பற்றி அழைத்துச் சென்றவனாக செல்ல…

“ஒருநாள் நான் என் பொண்டாட்டிக்கு கிஸ் கொடுத்ததுக்கு என்னை வச்சி செஞ்சாங்க யதுண்ணா… இப்போ அவங்களே என்கிட்ட மாட்டிக்கிட்டாங்க” என்று கோகிலாவை துருவ் ஜாடையாக கிண்டல் செய்ய…

“அச்சோ துருவ்” என்று கோகிலா முகத்தை மூடிக்கொண்டாள்.

“நீ எதுக்கு வெட்கப்படுற கோகிலா. அவன் பண்ணாததை என்ன இப்போ நீ பண்ணிட்ட” என்று பாவனா தன் பங்கிற்கு கேலி செய்ய,

“யதுண்ணா…” என்று கோகிலா சிணுங்கினாள்.

இவர்களின் சீண்டல்களைப் பார்த்து சிரித்தபடி விநோவின் பின்னால் மூத்த பெண்கள் மூவரும் சென்றிட…

“போதும் விடுங்க. வீட்டுக்கு போய் பார்த்துக்கலாம்” என்று யது மற்றவரை இழுத்துக்கொண்டு சென்றான்.

பாசில் மனைவியுடன் தனித்து முதல் பயணம்.

தானே எதிர்பாராது முத்தம் கொடுத்துவிட்டாள். அதுமுதல் கணவனின் முகம் பார்க்க நாணம் தடுத்தது. சன்னல் பக்கமே தலையை திருப்பியிருந்தாள்.

“என்னை பார்க்கமாட்டியாடி?”

தன் கன்னம் உரசிட கணவனின் மூச்சுக்காற்று மோதிய பின்னரே, கார் நின்றதையும், பாசில் தன்னை நெருங்கியிருப்பதையும் பெண்ணவள் உணர்ந்தாள்.

“இன்னொன்னு கிடைக்குமா?”

“என்னது?”

“நச்சுன்னு…”

“அச்சோ…” என்றவள் அவனை தள்ளிவிட, தன்னுடைய இருக்கையில் வாகாக சென்று பொருந்தினான்.

“நீ கொடுத்தாதான் கார் மூவ் ஆகும்.”

“ரொம்ப தைரியம் வந்திருச்சு போல…”

“உரிமை இருக்கும்மா.”

“அப்போ கொடுக்க வேண்டியது தானே! எதுக்கு எதிர்பார்க்கணும்.”

“கோகி…”

“இதுக்குமேல ஓப்பனா கேட்க முடியாது போடா” என்றவள் சற்று தள்ளி அமர, அவளை இழுத்த வேகத்திற்கு தன்னுடைய முதல் அச்சாரத்தை மிக மிக அழுத்தமாக இதழில் பதித்திருந்தான்.

வீட்டிற்கு எப்படி வந்து சேர்ந்தான் என்பது அவனே அறியாதது. மொத்தத்தில் இருவரையும் அவர்களுக்குள் இணையின் மீதிருக்கும் காதல் ஆட்டிவைத்தது.

இருவரும் வீட்டிற்குள் நுழையும் போது, யது ஓடிவந்து இருவரின் வாயிலும் இனிப்பினை திணித்தான்.

“என்னடா?”

“நான் சித்தப்பா ஆகிட்டேன்.”

ஓடிவந்து பாசிலை தூக்கி சுற்றினான் துருவ்.

“ஆமாம் நானும் மாமா ஆகிட்டேன்” என்றான் யது.

“டேய் அப்போ நானும் மாமாடா” என்றான் பாசில். விநோவை அணைத்து விடுத்தான்.

“நானும் தான் அத்தை ஆகிட்டேன்” என்ற கோகிலா, விநோவின் கையினை பிடிக்க… அவளின் பார்வையை வைத்தே அவளது மனதை கணித்திருந்தான் விநோ.

தங்கையின் உச்சியில் உள்ளங்கையால் அழுத்தம் கொடுத்தவன்,

“நீ சந்தோஷமா இருப்படா” என்று துருவுடன் சேர்ந்து ஆட்டம் போட்டுக்கொண்டுருந்த பாசிலை நோக்கினான்.

சொந்தமென்றவர்கள் அந்நியர்களாகிட… மற்றவர்கள் அவளின் குடும்பமாகியிருந்தனர். இத்தனை பேர் அவளின் மீது அன்பை பொழியும் உறவுகள் அமைய ஒரே காரணம் விநோ அல்லவா. அவளின் நன்றியை அவளது கண்கள் பிரதிபலித்தன.

அதனை உள்வாங்கிய விநோ, அவளை மாற்றும்பொருட்டு…

“அத்தையாகிட்டடா” என்றிட, “நாங்களும் தான் சித்தி ஆகிட்டோம். பாவனா அக்காவும் அத்தை ஆகிட்டாங்க, மூணு அத்தைகளும் பாட்டி ஆகிட்டாங்க… நீங்க அப்பாகிட்டீங்க, ஆதுக்கா அம்மாவாகிட்டாங்க…” என்று மூச்சுவிடாது சொல்லி விநோவின் மீது ஆதுவை தள்ளிவிட்டாள் நிரல்யா.

“சரி சரி ஆட்டம் போட்டது போதும். எல்லாரும் கோவிலுக்கு போயிட்டு வாங்க. குழந்தைகளை நாங்க பார்த்துகிறோம்” என்றார் பூரணி.

கோவில் என்றதும் ஷமீம் என்ன சொல்வாரோ என்று பாசில் அன்னையை பார்க்க…

“கோகிலாவை கூட்டிட்டு போயிட்டு வாடா… இனி நீ அடிக்கடி அவளோட கோவிலுக்கு போற மாதிரி இருக்கும். ஒவ்வொரு முறையும் என் முகத்தை பார்த்துட்டு நிப்பியா? மதம் இனமெல்லாம் அன்பு என்ற ஒன்றை கடந்ததுன்னு இப்படி எல்லாரும் ஒண்ணா இருக்கும்போது புரியுது” என்றார் ஷமீம்.

எல்லோருக்குமே அவரது வார்த்தை உண்மை என்றே தோன்றியது.

அன்பு மட்டும் தானே இங்கு அனைத்தையும் மாற்றக்கூடிய ஆகப்பெரும் சக்தி. அதனை அங்கிருந்த ஒவ்வொருத்தரும் உணர்ந்து தெரிந்து வைத்திருந்தனர்.

நான்கு ஜோடிகளும் இணைந்து நின்ற காட்சி கதையின் உயிரோட்டமாய்.

தன்னலமற்ற, எதிர்பார்பற்ற அந்த அன்பே அவர்களை வாழ்வின் எல்லை வரை வழி நடத்திச் செல்லும்.

அன்பு… அதுதானே எல்லாம்.

வாழ்வில் எத்தனை வலிகளை அனுபவதித்தாலும் இவர்கள் எல்லாம் தன் இணையோடு இணைய காரணம், ஒவ்வொருத்தரும் இதயத்தோடு கொண்டிருக்கும் ‘உயிர் உறைந்த அன்பே!’ அந்த அன்பால் இணைந்தவர்கள் என்றும் இன்புற்றிருப்பராக!

சுபம்.

error: Content is protected !!
Scroll to Top