நேச நெஞ்சங்கள் 1

அத்தியாயம் 1 :

பகுதி : உயிர் உறை

கேரளா.
திருவனந்தபுரம்.


வாழ்வில் பலவற்றை…
சந்தித்து, சமாளித்து, சலித்து பின் சகித்து ஏற்று வாழும் ஜீவன் ஆண்!
                                          -அணங்கு.

தன் கையிலிருந்த காகித்தில் அச்சிடப்பட்டிருந்த கவிதையை இத்தோடு பத்து தடவைகளுக்கு மேல் வாசித்திருப்பான்.

காலை உணவிற்காக காவலர் குடியிருப்பு பகுதியில் இருக்கும் உணவகத்திலிருந்து தருவிக்கப்பட்ட, உணவு பொட்டலம் சுற்றப்பட்ட காகிதம் அது.

தமிழ் மாதாந்திர பத்திரிகையின் கவிதை பக்கம். ஆண் என்கிற தலைப்பில் இன்னும் மூன்று கவிதைகள் உடனிருக்க, அவனுக்கு ஏனோ இந்த கவிதையில் பொதிந்திருக்கும் உட்பொருள், ஆணின் மறைக்கப்பட்ட பக்கத்தை சொல்லிய விதம் என அத்தனை கவர்ந்திருந்தது.

கவிதைக்கு கீழிருக்கும் பெயரை வைத்து, எழுதியது ஒரு பெண்ணென்று அறிந்து கொண்டவனுக்குள் ஆச்சரியம்.

பொதுவாக பெண்கள் பெண்ணியம் என்கிற பெயரில் ஆணின் குற்றம் நிறைந்த பக்கங்களை மட்டுமே பேசி கேட்டிருக்கிறான். பார்த்திருக்கிறான்.

அதுவும் காவல்துறையில் இருப்பதால், தினமும் இல்லையென்றாலும், வாரத்தில் இரண்டு நாட்களாவது ஏதோவொரு மாதர் சங்கம், யாரோ ஒரு பெண்ணை அழைத்து வந்து அவளின் கணவன் சரியில்லை, பக்கத்து வீட்டு ஆண் பார்க்கும் பார்வை சரியில்லை, பேருந்தில் உடன் பயணிக்கும் பெண்ணை ஆண் பெண்ணாகப் பார்ப்பதில்லை, அலுவலகத்தில் சக ஆண் ஊழியரின் நடத்தை சரியில்லை, ஆண் சுயநலவாதி, கோபம் மட்டுமே நிறைந்தவன் என்று ஆணைப்பற்றி குறை மட்டுமே கூறி, நிறையை பாராது, பெண்ணுக்கு நீதி வேண்டுமென்று போர்க்கொடி தூக்கி நிற்பதை பார்ப்பதால், அத்தகைய பெண்கள் நிறைந்த சமுதாயத்தில் ஆணின் பக்கத்தையே மற்றைய கோணத்தில் பார்த்து சிந்தித்து எழுதியிருந்த அவ்வரிகள் அவனுக்கு அத்தனை பிடித்தது.

எல்லாவற்றிற்கும் இரண்டு பக்கம் என்பது நியதி. ஆனால் ஆணில் குற்றம் செய்பவர்களை மட்டுமே வைத்து ஆண் சமுதாயத்தை குறை கூறுபவர்களில், சமுதாயம் பார்க்கத் தவறிய நிறையை எடுத்து சொல்லியதால்,

எழுதிய பெண் யாரென்று தெரியாமலேயே அவனுள் அவள்  தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க… அதனை அவன் உணரவே செய்தான். அவள் மீது அவனுள் உண்டானது பெரும் மதிப்பு.

கவிதைக்கு கீழிருந்த பெயர் பெண் என்று காட்டிக்கொடுத்திட… அது அவளின் புனைப்பெயர் என்பதும், பார்த்ததும் தெரிந்தது.

அணங்கு என்றால் பெண்ணை குறிக்கும் சொல். தேவதை என்று பொருள்.

இணையத்தின் உபயத்தால் தெரிந்து கொண்டான்.

பெண் பெண்ணை பற்றி பெருமை பேசாமல், பிறர் பார்க்க மறந்த ஆணின் பக்கத்தை சொல்லியதால், அப்பெண்ணிடம் பேச வேண்டுமென்ற உந்துதல் தன்னைப்போல் அவனுக்கு எழுந்தது.

கையிலிருந்த காகிதத்தை திருப்பி திருப்பிப் பார்த்தான். மேலே மூலையில் பத்திரிகையின் பெயர் இருந்திட, மீண்டும் இணையத்தின் உதவியுடன் தமிழகத்தில் இருக்கும் அந்த பத்திரிகை அலுவலகத்தின் எண்ணை கண்டறிந்திட்டான்.

அடுத்த சில நிமிடங்களில் அலுவலகத்தில் பேசி பத்திரிகையின் ஆசிரியரின் எண்ணையும் பெற்றுக்கொண்டான்.

அழைக்க முயன்ற நேரம், கடமை அழைத்திட சொந்த விருப்புக்கு ஒதுக்கம் அளித்தவன், தன் வேலையில் கவனமாகினான்.


(உரையாடல்கள் மலையாளத்தில் இருக்க… இங்கு தமிழில்.)

“சார் வேண்டாம். இது காலேஜ். இங்க உங்க கோபத்தை காட்டிடாதீங்க.”

அவனுடன் வந்திருந்த இரு காவலர்களில் ஒருவர், அவனின் குணம் அறிந்து, வண்டியிலிருந்து இறங்கும் முன் கூறினார்.

“உங்க பொண்ணா இருந்தாலும் இதை சொல்லுவீங்களா?” அனலென தகித்தது அவனது குரல். அத்தனை சூடு. அது சொல்லும் அவனின் கோபத்தின் அளவை.

கல்லூரி வளாகத்தினை தன் பார்வையால் அலசியபடி வண்டியிலிருந்து இறங்கியவன், அணிந்திருந்த கூலர்ஸை கழட்டி சட்டையின் முன் மாட்டினான்.

இடம் காற்றில் அத்தனை புழுதியாக இருந்தது. போலீஸ் வாகனத்தின் சைரன் ஒலி கல்லூரியின் கேட்டினைத் தொட்டதும் நடந்து கொண்டிருந்த கலவரம் சடுதியில் நின்றிருந்தது. அதனை நொடியில் யூகித்து விட்டான்.

முழு உயரத்திற்கு கால்களை அகட்டி அவன் நின்ற தோற்றமே மற்ற காவலர்களுக்கு கிலி பிடிக்கச் செய்தது.

“உன் வாய் மூடிக்கிட்டு அமைதியா இருக்க வேண்டியது தானேய்யா. உன்னை யாரு அவரை பொறுமையாக போகச்சொல்லி வாங்கிக்கட்டிக்க சொன்னா?” மற்றொரு காவலர் வினவினார்.

“காலேஜ் பசங்க. இவரு பொசுக்குன்னு கை வச்சிட்டா, என்ன பண்றதுன்னு தான் எச்சரிக்கையா சொன்னேன்” என்று பதில் சொல்லியவரின் முகம் அவன் காட்டிய கோபத்தில் சோர்ந்திருந்தது.

“இறங்குங்கன்னு சொன்னாதான் இறங்குவீங்களோ?”

அவன் கேட்டிட மின்னலென அவன் பக்கத்தில் நின்றிருந்தனர் இருவரும்.

“இங்க கேண்டின் எங்கிருக்குன்னு கேட்டுட்டு வாங்க” என்று ஒருவரை அனுப்பி வைத்தான்.

அதற்குள் நகரத்தின் உதவி ஆணையரின் வருகை அறிந்து கல்லூரியின் முதல்வரே அவனைத்தேடி வேகமாக வந்திருந்தார்.

வந்தவர் பவ்யமாக அவனின் வருகை குறித்து கேட்டறிய முற்பட்டார்.

அவரை பார்வையாலே கடந்துவிட்டான்.

அவனைப்பற்றி, தவறு செய்பவர்களுக்கான அவனது அதிரடி நடவடிக்கைகள் பற்றி நகரத்தின் இண்டு இடுக்கெல்லாம் பேச்சாக இருந்திட… அவனின் வருகை கல்லூரி முதல்வருக்கு அச்சத்தை கொடுத்தது.

“சார் அந்தப்பக்கம் இருக்கு.” அவன் அனுப்பி வைத்த காவலர் அவர்கள் இருந்ததற்கு இடதுபக்கம் கை காட்டிட, தன்னுடைய நீண்ட எட்டுக்களை வைத்து கேண்டின் நோக்கிச் சென்றான்.

‘கல்லூரி முதல்வர் நான். மரியாதைக்கு கூட ஒரு வார்த்தை பேசல. திமிர் தான்.’ அவனின் நடைக்கு ஓடியபடி மனதில் நினைத்தார்.

“திமிர் கொஞ்சம் அதிகமாவே இருக்கு. இருக்கணும். நான் போட்டிருப்பது காக்கிச்சட்டை. அதற்குரிய திமிர் இது. இல்லைன்னா, நீங்க என் பின்னால் வருவீங்களா?”

முதல்வரின் எண்ணத்திற்கு பதில் கொடுத்தவன் அப்போதும் அவரை பார்த்தானில்லை.

அவர் தான் அதிர்வில் வாய் பிளந்து நின்றார்.

“நீங்க ஒன்றை நினைத்து முடிப்பதற்குள் அவர் செயல் வடிவம் கொடுத்திடுவார். கொஞ்சம் அடக்கியே வாசிங்க. ஃபர்ஸ்ட் போஸ்டிங். வேலைக்கு வந்து பத்து நாள் தான் ஆகுது. அதுக்குள்ள மொத்த ஊரையும் ஒரு ஆட்டு ஆட்டி வச்சிட்டார். இல்லைன்னா காலேஜ் சேர்மனை வர சொல்லுங்க.” அவனுடன் வந்திருந்த காவலர் சொல்ல, முதல்வருக்கும் அதுவே சரியெனப்பட்டது.

சண்டை போட்டுக்கொண்டிருந்த அனைத்து ஆண்களும் கேண்டினில் தான் இருக்கிறார்கள் போலும்.

கீழ் கண்ணில் அனைவரையும் அளவெடுத்தவனாக, ஒரு மேசையின் முன்னிருந்த காலி இருக்கையில் கால் மேல் காலிட்டு அமர்ந்தான்.

ஒரு மாணவன் கூட நேர்த்தியாக இல்லை. சட்டை கிழிந்து, அழுக்கு படிந்து, பரட்டை தலையுமாக காட்சியளித்தனர். அவசரத்திற்கு இங்கு வந்து ஒளிந்து கொண்டதைப் போலிருந்தது. சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள் போலீஸை கண்டதும் மின்னலென இங்கு வந்து சேர்ந்திருந்தனர்.

“உங்க காலேஜில் பொண்ணுங்களே படிக்கலையா?” தனக்கு முன்னிருந்த இருக்கையில் திருதிருவென முழித்தபடி அமர்ந்திருந்த மாணவன் ஒருவனிடம் வினவினான்.

‘பொண்ணுக்காகத்தானே இந்த கலவரமே!’ என நினைத்தவன்,

“கிளாசில் இருக்காங்க சார்” என்றான்.

“உங்களுக்கு கிளாஸ் இல்லையா?”

“சார்…” மாணவனுக்கு அவனின் முன்பு உதறல் எடுத்தது.

“இங்க எந்தெந்த டிப்பார்ட்மெண்ட் ஸ்டூடண்ட்ஸ் இருக்கீங்க?”

அவன் அங்கிருக்கும் இரண்டு துறையையும் சொல்லிட…

“இங்க ரெண்டு டிப்பார்ட்மெண்ட் தான் இருக்கா?”

அம்மாணவன் பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்தான். அவன் பார்த்த மற்றொரு மாணவன் தலையை இருபக்கமும் மறுப்பாக அசைத்தான்.

அதனை அவனும் பார்த்தான்.

“ஓகே ஃபைன் அந்த பொண்ணோட நேம் சொல்லு?” மீண்டும் வினவினான்.

அம்மாணவனோ விட்டால் அழுதுவிடும் நிலையில் இருந்தான்.

“யாரைக் கேட்டா சொல்லுவீங்க?” என்று அவன் இருக்கையிலிருந்து வேகமாக எழுந்திட… ஒரு மாணவன் பயந்தவனாக அப்பெண்ணின் பெயரைக் கூறினான்.

தன்னுடன் வந்திருந்த காவலரிடம், அப்பெண்ணை அழைத்துவரச் சொன்னான்.

“சார்… பொண்ணுலாம் வேண்டாம் சார்.” முதல்வர் அவசரமாக மறுத்தார்.

“நீங்க ஒழுங்கா நடந்திருந்தா, நானிங்கு வந்திருக்க வேண்டிய அவசியமேயில்லை. நான் வந்த வேலையை முடிக்காம போனதே இல்லை” என்றவன் உடன் நிற்கும் காவலரை அழுத்தமாக ஏறிட…

“இதோ போயிட்டேன் சார்” என்று அவர் ஓடினார்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் காவலருடன் இரண்டு பெண்கள் வந்தனர்.

அலுவலகம் சென்று கொண்டிருந்தவனுக்கு அப்பெண்களில் ஒருத்தி தான் அழைத்து கல்லூரியில் நடக்கும் கலாட்டாவை தெரியப்படுத்தி அதன் காரணத்தையும் சொல்லியிருந்தாள்.

இப்போது அது யாரென்று கேட்டு அவளை மாணவர்களிடம் மாட்டிவிட நினைக்காது நேரடியாக விசாரணையைத் துவங்க நினைத்தான்.

அதற்குள் வந்த பெண்களிடம்…

“நீங்க தான் கால் பண்ணிங்களாம்மா?” என்று அதட்டலாக வினவினார் முதல்வர்.

அதில் இருவருமே அரண்டு அவரை நோக்கினர்.

“ஸ்டூடண்ட்ஸை மிரட்டும் அதிகாரம் யாருக்குமில்லை சார்.” அவனின் அழுத்தமான குரலில் முதல்வர் அமைதியாகினார்.

“ஏன் எனக்கு கால் பண்ணது ஒரு மாணவனா இருக்கக்கூடாதா?” என்றான்.

“நீங்க சொல்லுங்கம்மா? யார் இதில் மாளவிகா, யார் உங்களை தொல்லை செய்தது?” என்று இரு பெண்களையும் பார்த்து வினவினான்.

“நான் தான் சார்” என்று முன்வந்த பெண், இரண்டு மாணவர்களை கை காண்பித்தாள்.

அப்பெண்ணின் முகமே அழுது சிவந்து வீங்கியிருந்தது.

நடந்தது இதுதான்…

மாளவிகாவை இரு மாணவர்கள் விரும்புவதாக சொல்லிட, அவளோ இருவரையும் கண்டு கொள்ளவில்லை.

இரண்டு மாணவர்களும் அவர்களுக்குள் அடித்துக் கொண்டதோடு, அது இரு துறை சண்டையாக மாற்றியிருந்தனர்.

இதற்கு நடுவில் மாளவிகாவை இழுத்து, யாரவது ஒருத்தருக்கு சரி சொல்ல வேண்டுமென்று மைதானத்தின் நடுவில் வைத்து அப்பெண்ணை இருவரும் வற்புறுத்திட, அவள் தன் பிடியில் நிலையாக இருந்ததால்,

“எங்க ரெண்டு பேரில் நீ யாருக்குன்னு நாங்க வோட்டிங் வைத்து தீர்மானித்துக் கொள்கிறோம்” என்றவர்கள், இரு துறை மாணவர்களுக்கும் இடையில் போல்(poll) வைத்திட, அதில் மாணவிகள் மறுத்து மாளவிகாவின் பக்கம் நிற்க, மாணவர்கள் தங்களுக்குள் அடிதடியை ஆரம்பித்தனர்.

முதல்வரிடம் சென்று புகார் அளிக்க, அந்த இரண்டு மாணவர்களில் ஒருவன் சேர்மனின் மகன் என்பதால், முதல்வர் மட்டுமல்லாது மற்ற பேராசிரியர்களும் கண்டுகொள்ளவில்லை.

அதனால் மாளவிகாவின் தோழி ஒருத்தி, காவல்துறைக்கு அழைத்து விவரத்தை தெரிவித்திருந்தாள்.

மாளவிகா கைகாட்டிய இரு மாணவர்களின் கன்னத்தையும் இமைக்கும் பொழுதில் வீங்கச் செய்திருந்தான்.

மற்ற மாணவர்கள் எல்லாம் தெரித்து வகுப்பிற்குள் ஓடியிருந்தனர்.

“சார், நான் யாருன்னு தெரியுமா?” சேர்மனின் மகன் எகிறிக்கொண்டு வந்தான். அவனின் கன்னத்தில் மீண்டும் ஒரு அடி வைத்தான்.

“தப்பு பண்ணிட்டு, என்கிட்டவே சவுண்ட் விடுறியா?” எனக் கேட்டவன், “இவனுங்க ரெண்டு பேரையும் வண்டியில் ஏத்துங்க” என மற்றைய காவலரிடம் கூறிட, இன்னொரு மாணவன் வீட்டிற்கு தெரிந்தால் அவ்வளவு தானென்று கெஞ்சினான்.

சேர்மனின் மகன் அப்போதும் திமிராக நின்றிட…

“என்ன சார் உங்க சேர்மன் எப்போ வர்றாராம்?” எனக்கேட்டு இருக்கையில் அமர்ந்தான்.

“இப்போ வந்திடுவார் சார்” என்று முதல்வர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் உள்ளே வந்தார்.

வந்தவர் ஏசி’க்கு வணக்கம் வைத்து, தன் மகனை முறைத்து பார்த்தார்.

“ஸ்டூடண்ட்ஸ்க்குள் இதெல்லாம் சாதாரணம் தானே சார். வார்ன் பண்ணி விட்டுடுங்க ஏசி சார்” என்றார் சிரித்துக்கொண்டே.

கெஞ்சிக்கொண்டிருந்த மாணவனை அவரிடம் சுட்டிக்காட்டியவன்,

“அவன் ஏன் கதறிட்டு இருக்கான் தெரியுமா? அவன் பண்ணது தப்புன்னு உணர்ந்திட்டான். அதோட போலீஸுன்னு கேஸ் ஆனால் காப்பாத்த அவன் வீட்டிலிருந்து முன்வர மாட்டாங்கங்கிற பயம். இவன் இனி இன்னொரு பொண்ணு பின்னால் சுத்த அவ்வளவு யோசிப்பான். உங்க பையனுக்கு அப்படி எதுவும் இல்லை. இப்போ நீங்க இவனை சேவ் பண்ணா, இனியும் இது தொடரும்.”

அவனின் வார்த்தைகளின் உண்மைத் தன்மை அவரை சுட்டது.

தப்பு செய்தால் பேருக்கு திட்டிவிட்டு மன்னித்து காப்பாற்றிவிடுவார்கள் என்கிற எண்ணம் தான் தவறு செய்திட முதல் காரணமா அமையுது  இன்றைய இளைஞர்களுக்கு.

அதனை பொட்டில் அறைந்தமாதிரி அவன் கூறிட…

“கூட்டிட்டு போங்க சார்” சேர்மன் ஒதுங்கி நின்றார்.

அதுவரை போலீஸ் தன்னை என்ன செய்துவிடுமென்று தெனாவெட்டாக இருந்தவன், தான் என்ன செய்தாலும் கண்டுகொள்ளாது ‘உன் இஷ்டம் போலிரு’ என்று சொல்லும் தந்தை கைவிட்டு ஒதுங்கிடவும் அவனை பயம் சூழ்ந்தது.

“அப்பா ப்ளீஸ். நான் இனி இந்த மாதிரி செய்யமாட்டேன்.” முதல் முறையாக தனது மகனின் வாயிலிருந்து இவ்வார்த்தையை அவர் கேட்கிறார்.

எத்தனை தவறுகள் அவன் செய்திருக்கிறான். எத்தனை முறை மன்னித்து அவனை அதிலிருந்து தந்தையாக மீட்டிருக்கிறார். ஒருமுறை கூட இனி தவறு செய்யமாட்டேன் என்று அவன் சொன்னதில்லை. எத்தனை பெரிய தவறு செய்தாலும், மகனென்று காப்பாற்றியவருக்கு, தான் காப்பாற்றுவது தான் தவறென அக்கணம் உரைத்தது.

மன்னிப்பு பெரும் தண்டனையாக இருக்கலாம். அதுவே மாபெரும் தவறுகளுக்கு தொடக்குமும் ஆகும்.

அதனை புரிந்து கொண்டவர்,

“கூட்டிட்டு போங்க சார். ஒரு அப்பாவா அவனை ஒவ்வொரு முறையும் காப்பாற்ற நினைத்தேனே தவிர, திருத்தணும் நினைக்க மறந்துட்டேன்” என்றவர்…

அங்கிருந்த மற்ற மாணவர்களை பார்த்து “வகுப்புக்கு போங்க. கூட்டம் சேர்த்து சண்டையிடுவது இதுவே கடைசியா இருக்கட்டும். இனி தவறென்றால் உடனடி டிஸ்மிஸ் தான்” என்றதோடு மாளவிகாவிடம் தன்னுடைய மகனுக்காக மன்னிப்பு வேண்டியவர் முதல்வருடன் அவ்விடம் விட்டுச் சென்றிருந்தார்.

தனக்காக தன்னுடைய தந்தை இனி எதுவும் செய்திட மாட்டார் என்பதிலேயே போலீஸை நினைத்து பயந்தவன், அவர் மாளவிகாவிடம் மன்னிப்பு கேட்டதில் மொத்தமாக தவறை உணர்ந்திருந்தான்.

‘தனக்கு, தான் செய்ததற்கு தண்டனையை அனுபவித்து தான் ஆகவேண்டும்’ என நினைத்தவன் ஏசி’யின் அருகில் சென்று “போகலாம் சார்” என்று சொல்லிட…

“கல்லூரி வாழ்வில் காதல், தவறு எல்லாம் சகஜம் தான். ஆனால் அதோட வீரியம் இந்த வயதில் புரியாது. கலாட்டா, கொண்டாட்டம் எல்லாம் கல்லூரி நாட்களில் ரசிப்புக்குரியதா இருக்கணும். மன்னிப்பு நல்ல தண்டனை தான், செய்யும் தவறை உணரும் பட்சத்தில். உன் முகமே நீ உணர்ந்துட்டதை சொல்லுது” என்றவன், “இனி இந்தமாதிரி செய்ய மாட்டிங்கன்னு நம்புறேன். அப்படி செய்தால் இதேமாதிரி பேசிக்கொண்டெல்லாம் இருக்க மாட்டேன்” என்றவன், அவ்விருவரையும் விட்டுவிட்டான்.

“என்ன சார் விட்டுட்டீங்க?”

“ஸ்டூடண்ட்ஸ் லைஃப்ல இதெல்லாம் சாதராணம். இதுக்கெல்லாம் அரேஸ்ட் பண்ணி அவங்களை குற்றவாளி ரேஞ்சுக்கு நடத்துணுமா என்ன?” என்றவன், அந்த காவலரின் முகத்தில் தொக்கி நின்ற கேள்வியை உணர்ந்தவனாக…

“அந்த பொண்ணு வெறும் ப்ரொபோஸ் மட்டும் பண்ணியிருக்கான் சொல்லியிருந்தா நானும் இங்க வந்திருக்க மாட்டேன். அதையும் தாண்டி அவனுங்க செய்தது. இதை இரண்டு துறை மாணவர்கள் பிரச்சினையா மாற்றியது. அதற்காகத்தான் வந்தேன்” என்றான்.

“நீங்க எல்லாத்தையும் பார்க்கும் கோணமே வித்தியாசமா இருக்கு சார்.”

‘கோணமே வித்தியாசம்’ என்று அவர் சொன்னதும், அவனுக்கு காலையில் படித்த கவிதையும் அதனை எழுதிய முகம் மற்றும் பெயர் அறியா பெண்ணின் நினைவும் தன்னைப்போல் தோன்றியது.

அந்த பத்திரிகையின் ஆசிரியருக்கு அழைத்து விட்டான். முகத்தில் தேங்கி நின்றது மென் முறுவல்.

 

error: Content is protected !!
Scroll to Top