பார்த்திபனின் கயல்விழியாள்.
*சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.*
~~~~~~~~~~~~~~~~~~~~~
°விழிகள் நான்கு
உரசிக் கொள்ள
மனம் இரண்டில்
தெறிக்கும் மின்னல்
காதல்!°
அத்தியாயம் 🌾 1 :
புலர்ந்தும் புலரா அதிகாலை…
இருள் பிரியா அவ்வேளையில் வழம்மை போல் தன்னிருப்பைக் காட்டிட பட்டியில் கட்டியிருக்கும் பொன்னி “ம்மா” என்று சத்தமிட்டு… அவ்வீட்டின் இளவரசி கயல்விழியை துயிலிலிருந்து எழுப்பியது. பெயருக்கு ஏற்றார் போல் அழகிய நீண்ட நயனங்கள் காண்போரை எளிதில் தனக்குள் சுருட்டிக்கொள்ளும். அழகிற்கே அழகு சேர்த்தாள்.
மெத்தையில் சுருண்டு படுத்திருந்த ஏந்திழையவள்… தலையணையை சுற்றி படர்ந்திருந்த நீண்ட கார்குழலை அள்ளி முடிந்தவாறு எழுந்தாள். மூடியிருந்த இமைகளை மெல்ல பிரித்தவள், கடிகாரத்தை பார்க்காமலே மணி ஐந்து என்பதை கணித்திருந்தாள்.
தினமும் நொடி பிசங்காது பொன்னி அழைத்துவிட, பேதையும் எழுந்திடுவாள். அதனால் நேரத்தை பார்க்கும் அவசியமே அவளுக்கு இருந்ததில்லை.
குளியலறைக்குள் புகுந்தவள் குளித்து முடித்து… ஈர கூந்தலின் நுனியை முடிந்தவாறே தனது அறையை விட்டு வெளி வந்தாள்.
தேநீரின் மணம் நாசி நுழைய… அவளின் கால்கள் தன்னைப்போல் அடுக்கலையை நோக்கிச் சென்றது.
“குட்மார்னிங் அக்கா.”
தேநீர் வார்த்துக் கொண்டிருந்த முகிலன் தமக்கையின் அரவம் உணர்ந்து தேநீர் அடங்கிய குவளையை அவள் முன் நீட்டியவாறே திரும்பினான்.
“குட்மார்னிங் முகி” என்று நீண்ட புன்னகையுடன் கூறியவள், குவளையை வாங்கியவாறே வாசலை நோக்கிச் சென்றாள். தனக்குமான தேநீரை எடுத்துக் கொண்டவன் சகோதரியின் பின்னேச் சென்றான்.
வீட்டின் முன்னே இருக்கும் திண்ணையில் அமர்ந்து… பெரிய மண் வாசலைத் தாண்டி… வாய்க்கால் நீர் ஓடும் வயல்வெளியை கடந்து தூரம் தெரியும் மலை முகட்டில் மெல்ல துயில் கலையும் செங்கதிரவனின் அழகையும்… இரைத்தேடி தன் அன்றாட பணியை மேற்கொள்ள பரந்த வானில் கூட்டம் கூட்டமாக பறந்து செல்லும் பட்சிகளின் அணிவகுப்பையும்… இயற்கை காற்றின் சலசலப்பையும் ரசித்தவாறு, பல கதைகள் பேசி தேநீர் அருந்த அக்காவிற்கும் தம்பிக்கும் அதீத பிடித்தம்.
இந்நிகழ்வு தினமும் நடக்கும் ஒன்று.
காலை நேரம் மட்டும் இவர்களுக்கு உரித்தானது. அதனை விட்டுவிட அவர்களுக்கு மனமில்லை. சிறுவயது முதல் தொடரும் பழக்கம். அப்போது உடன் தாய் தந்தையும் அருகமர்ந்திருப்பர். ஆனால் இப்போது?
ஒருவருக்கொருவர் துணையாக அவ்விருவர் மட்டுமே. உறவென்று சொல்லிக்கொள்ள அவ்வூர் மக்கள் மட்டுமே. அவை இரண்டும் ரத்த சொந்தமின்றி தனித்து நிற்கும் இளங்குருத்துகள். அவர்கள் வீட்டில் வேலை செய்யும் மாணிக்கத்தின் பாதுகாப்பில் தங்களது வாழ்வின் பயணத்தை சந்தோஷமாகவே கடந்து கொண்டிருக்கின்றனர்.
குவளை காலியானதும் அவர்களின் ரசிப்பிற்கான நேரமும் முடிவடைந்தது.
வீட்டிற்குள் சென்றவள் தன் தாய் தந்தையின் புகைப்படத்தின் முன் இரு நிமிடங்கள் இமை சிமிட்டாது பார்த்து நின்றாள். அவளிடம் எவ்வித வேண்டுதலும் இல்லை. அவர்கள் வேண்டுமென்கிற ஏக்கம் மட்டுமே. அது முடியாத ஒன்றென்று நன்கு தெரிந்தும் ஏக்கத்தை தவிர்க்க முடியவில்லை.
பெற்றோர் நிச்சயம் அவர்களுடன் அரூபமாய் கலந்திருப்பர் என்பது திண்ணம். ஆனால் நினைத்த நொடி அவர்களின் சபரிசம் தீண்டி ஏக்கத்தை போக்கிக்கொள்ள முடியாதே. கண்களில் விழ காத்திருந்த கண்ணீரை கண் சிமிட்டி உள்ளே புதைத்தவளின் மனதில் அவளது தந்தையின் இறுதி வார்த்தைகள் காதில் ஒலிக்க மலைத்து நின்றாள்.
தமக்கையின் எண்ணவோட்டம் அறிந்த முகிலன்… அவளின் தோளில் ஆதரவாக கரமிட்டு தன்னோடு அணைத்துக் கொண்டான்.
“தேடுவோம் க்கா… நிச்சயம் கிடைப்பாங்க” என்றவனுக்கு புன்னகயையே பதிலாகக் கொடுத்தவளின் பார்வை… அங்கே சட்டத்தில் மாட்டியிருந்த புகைப்படத்தில் நிலைத்தது.
அவள் அவளது அன்னையின் வயிற்றில் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம். ஒருபுறம் அவளின் தந்தையும், அவரின் கையில் நான்கு வயதில் சிறுவன் ஒருவனும்… மற்றொருபுறம் அவளின் அத்தையும் மாமாவும் இருந்தனர்.
“எப்படியாவது உன் மாமனையும் அத்தையும் தேடி கண்டுபிடித்து என்னை மன்னிக்க சொல்லும்மா. அவங்களை சென்னையில் பார்த்ததா தகவல்.
கண்ணா தான் என்னோட மருமகன். அவனைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்.”
மரணப்படுக்கையில் அவளின் தந்தை சொல்லியது காதில் எதிரொலிக்க… மனதில் விவரிக்க முடியா தேடல். தொண்டைக்குழி ஏறியிறங்க வேதனையை உள் விழுங்கினாள்.
இருபத்தி நான்கு வயது பருவ மங்கையவள். அவளின் பதினேழு வயதில் அவளின் பெற்றோர் அழகர், மீனாட்சி இவ்வுலகைவிட்டும் தங்களது உயிரான பிள்ளைகளை விட்டும் மறைந்திருந்தனர்.
கிராமங்களில் உள்ளது போல் அக்கிராமமே அவர்களுக்கு முறை சொல்லியழைக்கும் உறவுகளாக இருந்தாலும் ரத்த சொந்தம் என்பது அழகரின் தங்கை மங்கை மட்டுமே. அவரும் உடனில்லாது தனித்துவிடப்பட்ட நிலையில் யாரிடம் சென்று உதவி கேட்பதென்று திக்கற்ற நிலையில் திணறி நின்றவளுக்கு தானாய் முன்வந்து அரணாக நின்றார் அழகரின் விசுவாசி மாணிக்கம்.
மாணிக்கத்தின் வீடும் அடுத்து இருக்க… இரவில் அழகரின் வீட்டுத் திண்ணையில் பிள்ளைகளுக்கு பாதுகாப்பாய் படுத்துக்கொள்வார்.
இருபது ஏக்கர் விவசாய நிலமும், இரண்டு டிராக்டர்கள்… பத்து பசு, இரு ஜோடி ஏர் உழும் காளை, முப்பது கோழி, பத்து ஆடுகள்… அவர்கள் வசிக்கும் பெரிய மாடி வீடு, வீட்டுக்கு பின்னால் இரண்டு ஏக்கரில் அமைந்திருக்கும் தோட்டம், கிணறு இவைதான் அழகர் தன் மக்களுக்கு விட்டுச் சென்றது.
“புள்ளைகளை ஒத்தையில விட்டு போனாலும், கையேந்த விடலையே” என்று ஒருசிலர் அக்கறையில் சொன்னாலும்… ஒருசிலர் பார்வையில் பொறாமையும் இருக்கத்தான் செய்தது.
என்ன தான் மாணிக்கம் காவலாக இருந்தாலும்… கொண்டதை உடையவன் பார்த்தால் தானே வளமை.
மீனாட்சி இருக்கும் வரை மகளை தண்ணீர் மோண்டு குடிக்கக்கூட அடுக்கலைக்குள் விடாது தங்கமாகத் தாங்கினார். அப்படி செல்லமாக வளர்ந்து பள்ளி படிப்பின் இறுதியில் இருக்கும் சிறு பெண்ணின் தலையில் சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்தால்? குருவி தலையில் பனங்காய் வைத்த கதைதான்.
என்ன செய்வதென்று தவித்து நின்ற நிலையில் அவள்.
மாணிக்கத்திற்கு அழகர் சொல்லுவதை அப்படியே செய்யத்தான் தெரியும். தானாக பண்ணையம் பார்க்கும் திறனில்லை. அதற்காக சோடைபோனவரும் அல்ல. நல்ல உழைப்பாளி. நிர்வகிக்கும் திறனில்லை அவ்வளவே.
“என்ன மாமா செய்யணும்?” உதடு பிதுங்கி அழுகுரலில் கேட்ட சிறுமியை தந்தையாய் மடி ஏந்தியவர்,
“எனக்கும் ஒன்னும் தெரியலையே ராசாத்தி. ஐயா பாதச்சுவடுலே நடந்துட்டேன்” என்று கலங்கினார்.
“இப்போ என்னத்துக்கு இப்படி வெசனப்பட்டு உட்கார்ந்திருக்கீங்க. நிலத்தை யாருக்கிட்டவாது குத்தகைக்கு விட்டுப்போட்டு பிள்ளையை பள்ளிக்கூடத்துக்கு போகச் சொல்லுங்க.”
மாணிக்கத்தின் மனைவி சரளா தக்கசமயத்தில் சரியானதொரு தீர்வை வழங்கினார்.
சரளா மாணிக்கத்தின் அத்தை மகள். பள்ளி படிப்பை நல்ல மதிப்பெண்களில் முடித்தாள். தன் மாமன் படிக்கவில்லையே, திருமணத்திற்கு பின் படிப்பு அவருக்கு குறையாகத் தெரிந்து அதுவே தங்களின் பிரச்சினைகளுக்கு காரணமாகிவிடக் கூடாதென்று படிப்பைத் தொடர மறுத்து விட்டார்.
மாணிக்கம் சொல்லியும் கேட்காது தன் பிடியில் நிலையாய் நின்றார்.
“நீ மேற்கொண்டு படித்தால் தான் நான் உன்னை கட்டிக்கிடுவேன்.”
“முடியாது. படிச்சபிறகு, நீ படிச்ச புள்ளை இந்த படிக்காதவனை கட்டிக்கிட்டு என்னத்துக்கு கஷ்டப்படணும் சொல்லுவீரு. நமக்குள்ள தடையா இருப்பது எதுவானாலும் எனக்கு வேணாம்” என்று உறுதியாக சொன்ன சரளாவின் மீது அந்நொடி மாணிக்கத்திற்கு காதல் முளைத்தது.
அன்று ஆரம்பித்த அவர்களின் வாழ்வு காதலோடு சீராக சென்று கொண்டிருக்கிறது.
படிப்பை பாதியில் நிறுத்தியிருந்தாலும்… அது கொடுத்த அறிவு சரளாவிற்கு சற்றே அதிகம். சமயோசிதமாக எதையும் பகுத்தறிந்து யோசிக்கும் திறனை அவருக்கு கொடுத்திருந்தது.
சரளாவின் யோசனைப்படி அவ்வூரின் பண்ணையார் ரத்தினவேலிடம் நெல் விளையும் ஏழு ஏக்கர் நிலத்தினை குத்தகைக்கு பேச, அவரோ மற்ற ஏக்கர்களில் இருந்த தென்னை, வாழை மற்றும் மாந்தோப்புகளையும் தானே பார்த்துக்கொள்வதாகக் கூற, சரளா யோசித்தாலும்… சிறு பெண் மீது சுமையை ஏற்ற விரும்பாது அரை மனதாக ஒப்புக் கொண்டார்.
முதல் வருடம் நெல் அறுவடையின் போது அவர்களுக்குரிய பங்கினை ரத்தினவேல் சரியாகக் கொடுப்பதைப்போல் காட்டிக்கொண்டாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒரு மூட்டை நெல் கூட அவர் கொடுக்கவில்லை.
இருமுறை வீட்டிற்கு வந்த ரத்தினவேல்,
“பருவம் தப்பிய மழையால் விளைச்சல் ஒன்னும் சரியில்லை. போட்ட முதலே எடுக்க முடியல. அதான் ரெண்டு தடவையா குத்தகை பணமும், நெல் மூட்டையும் தர முடியாம போச்சுது” என்று வருந்தினார். குத்தகை கொடுக்காமல் இருக்க ஒவ்வொரு முறையும் அவர் சொல்லிய காரணம் தண்ணீர் மட்டுமே. அதுவே கயல்விழியை யோசிக்க வைத்தது.
‘விளைச்சல் சரியில்லாததற்கு தண்ணீரை இவர் காரணம் காட்ட முடியாதே! நம்ம வயல்களைச் சுற்றி ஏரி இருக்கே.’
தினமும் அந்த எரிக்கரையின் மீதுதான் பள்ளிக்கு சென்று வருவதால் அதன் நீர்வரத்து பற்றி கயலுக்கு நன்கு தெரிந்திருந்தது.
‘அத்தோடு அங்கு வயலுக்கு நடுவுல ரெண்டு கிணறு நம்மளோடதே இருக்கே! மழையில்லாத அப்போ கூட கிணத்து தண்ணியில அப்பா பாசனம் செய்தாரே!’ மனதில் நினைத்தாலும் அவள் எதையும் வெளியில் சொல்லவில்லை.
சிறுவனான முகிலனுக்கு இவர்கள் பேசுவது ஒன்றும் புரியாததால் நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான்.
பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணில் தேர்ச்சிப்பெற்ற கயல்விழி என்ன படிக்கலாம் என்று யோசித்தபோது… சரளா தான் விவசாயம் படிக்கக் கூறினாள்.
“உடையவன் இருந்து பார்க்காமப்போனா அழிவு சீக்கிரம் கண்ணு. எத்தனை வருசத்துக்கு குத்தகையில வர கொஞ்சத்தை மட்டும் சேக்குறது. எல்லாம் இருந்தும் எதுக்கு இல்லாம இருக்கணும். நீ தலையெடுத்தாதான் உங்க அப்பாரு விட்டு போனதை பல மடங்கு பெருக்கலாம்” என்ற சரளா,
“உன் வயசுக்கு படிப்பு ரொம்ப முக்கியம் கண்ணு. அதனால விவசாயத்தையே பாடமா படி” என்று யோசனை வழங்கினார்.
கயல்விழிக்கும் அதுவே சரியாகப்பட வேளாண் பொறியியல் சேர்ந்தாள். மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் கயல். முகிலன் பள்ளி படிப்பு முடிந்து மருத்துவம் பயில விருப்பம் தெரிவிக்க, கல்லூரி சேர்க்கை கட்டணத்திற்கு பணமின்றி போன நிலையில் தான் ரத்தினவேலின் மீது அறிவாளியான கயல்விழிக்கு ஏதோ தவறாக நெருட… சரளாவிடம் கூறினாள்.
“உரிமைப்பட்டவ(ள்) நீதான் போய் கேட்கணும். எதுக்கும் பயப்படாம நேரடியாக் கேளு. உனக்குத் துணையா நாங்க இருக்கோம்.”
சரளாவின் வார்த்தையில் மனதிற்குள் திடம் கொண்டு வந்தவள், அப்போதே மாணிக்கத்தை கூட்டிக்கொண்டு ரத்தினவேலுவை பார்க்கச் சென்றார்.
வங்கியில் சேமிப்பு நிதியாக அழகர் விட்டுச் சென்றதிலிருந்து எடுக்கலாம் தான்… ஆனால் ரத்தினவேலுவின் செயலை கேட்டே ஆக வேண்டுமென்று கயலின் அறிவு அவளை உந்தி தள்ளியது.
ரத்தினவேல் நியாயமான முறையில் பதில் சொல்லாது மழுப்பிய போதுதான் இரண்டு வருடங்களாக, தான் ஏமாற்றப்பட்டது கயலுக்கு புரிந்தது.
அமோக லாபம் வர அதில் நிலத்துக்கான பங்கு கூட இல்லையென்றால் என்ன செய்வது?
“இத்தோடு குத்தகையை முடிச்சிக்கலாம்.” கயல்விழி வயல்விழியாய் நிமிர்ந்து நின்று ரத்தினவேலுவின் கண் பார்த்து நேருக்கு நேர் கூறினாள்.
சிறு பெண்ணிடம் இத்தகைய திடத்தையும் துணிவையும் சற்றும் அவர் எதிர்பார்க்கவில்லை.
“குத்தகையை முறிச்சிக்கிட்டு பொட்டல் நிலமா போட்டு வைக்கப்போறீயோ?” நக்கலாக வினவினார்.
கயலின் நிமிர்வு அவருக்குத் திமிராகவே தெரிந்தது. அதனால் அவளை மட்டம் தட்டவே எண்ணினார்.
“பொம்பளை புள்ள உன்னால மண்வெட்டி பிடித்து வரப்பு கொத்த முடியுமா முதலில்” என்றவர் “உன் தம்பிக்கு ஆயா வேலை தான் பார்க்க முடியும் உன்னால. ஒழுங்கா கொடுக்கிறதை வாங்கிட்டு தள்ளி நில்லு” என்றார்.
கயலின் பார்வையில் கூர்மை.
ரத்தினவேலிற்கு அப்பார்வையின் தீவிரம் உள்ளுக்குள் தன்னைப்போல் நடுக்கத்தை ஏற்படுத்தியது. சிறுபெண் தானே ஏமாற்றிவிடலாமென்ற அவரின் எண்ணம் மற்றும் கணக்கை கயலின் நிமிர்ந்த ஒற்றை பார்வை அடித்து வீழ்த்தியது.
தன் திட்டத்தை மறைப்பதற்காக கோபத்தை பயன்படுத்தினார்.
“விவசாயம் படிச்சா வயலில் இறங்கிடலாம் கனா காங்(ண்)கிறியோ. ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது. இனி வேணுன்னா குத்தகையை சரியா கொடுக்கிறேன்.”
அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஊரின் பெரிய தலைகள் எல்லாம் அங்கு வந்து சேர்ந்தனர்.
‘அவர்களெல்லாம் இங்கு ஏன் வருகிறார்கள்?’ என்பது போல் ரத்தினவேல் பார்க்க…
“என்ன ரத்தினம் வந்தவங்களை வான்னு கூப்பிட்டு உட்கார சொல்லமாட்டியா?” என்று குத்தலாகக் கேட்டார் ஒரு பெரிசு.
“ஆங்… ஏதோ சிந்தனை.” தடுமாறிய ரத்தினவேல் வந்தவர்களை வீட்டிற்கு முன்னிருக்கும் திண்ணையிலேயே அமர வைத்தார்.
“பெரியவங்கெல்லாம் என்ன விஷயமா வந்திருக்கீங்க?”
என்ன என்கிற யூகம் இருந்தபோதும் தெரியாததைப்போல் வினவினார்.
“ஏம்மா கயலு நீ விஷயத்தை இன்னும் சொல்லலையோ?” எனக் கேட்டார் கயலுக்கு பெரியப்பா முறை கொண்டவர்.
“நீங்கெல்லாம் வந்ததும் சொல்லிக்கலாம் இருந்தேன் பெரியப்பா. பெரியவங்கல முன்ன வச்சு பேசுறதுதானே முறை பெரியப்பா.”
கயலின் மரியாதையில் பெரிய தலைகள் மொத்தமும் அவள் பக்கம் சரிந்தனர்.
“எதுவாயிருந்தாலும் நியாயமா செஞ்சிப்புடலாம் கண்ணு. அதெல்லாம் அழகர் பெத்த புள்ளையை தவிக்க விடமாட்டோம்” என்று கயலுக்கு சித்தப்பா முறைகொண்ட ஒருவர் வார்த்தையால் நம்பிக்கை அளித்தார்.
“உங்களுக்குள்ளே பேசிக்கிட்டா ஆச்சா… என்னன்னு விஷயத்துக்கு வாங்க.” இப்போது ரத்தினவேலுவின் குரலில் அடக்கப்பட்ட சீற்றம் நன்கு தெரிந்தது. அதற்கெல்லாம் வந்தவர்கள் மலைத்து விடவில்லை.
ரத்தினத்திற்கு முன்னால் ஆறு லட்சத்தை எடுத்த வைத்த பெரிசு…
“கயலு குத்தகையை முடிச்சிக்கிடலாம் சொல்லுது” என்றார். ‘வங்கியில் வைப்பு நிதியில் இருந்த தொகையை எடுத்துக் கொடுத்திருந்தாள்.’
“அதுக்கு நான் சம்மதிக்கலன்னா?”
“பேச்சு சரியில்லையே ரத்தினம்.”
“தெனாவட்டா இல்ல இருக்கு.”
“சரி நான் முடிச்சிக்குறேன். ஆனால்,” என்று இழுத்தவர் கூட்டத்தை ஒருமுறை பார்வையால் வலம் வந்தார்.
“அந்த ஏரிக்கரையோரம் இருக்க அஞ்சு ஏக்கர் நிலமும் எனக்கு எழுதித்தர சொல்லுங்க” என்றார்.
“ஏய் என்னப்பா நீ உடைமைப்பட்டவனாட்டாம் உரிமையா கேட்குற?”
“முடியாதுன்னா நானும் குத்தகை பத்திரத்தை தர முடியாது” என்று கயலை முறைத்துக்கொண்டேக் கூறினார்.
ஒருவர் பேச முற்படுகையில்,
“நான் கொஞ்சம் பேசட்டுமா தாத்தா?” எனக் கேட்க…
“கொண்டவ நீதான். உனக்கான நியாயத்தை நீயே பேசுத்தா!” என்று கயல் பேச இடம் கொடுத்தார்.
“பெரியவங்க பஞ்சாயத்து பண்ணும்போது நான் இப்படி பேசுறேன்னு யாரும் தப்பா நினைக்க வேண்டாம். எனக்கு இருக்க ஒரேவழி இதுதான்” என்றவள், ரத்தினவேலுவின் புறம் திரும்பி…
“என்னால நீங்க கேட்டதை தர முடியாது” என்று திமிராகவேக் கூறினாள்.
“ஏய்…”
“அது எங்கப்பா எனக்கும் என் தம்பிக்காகவும் விட்டு போனது. அதை நீங்க எப்படி கேட்கலாம். சரி அதைவிடுங்க, நான் எப்போவாவது என் கழனியை விற்க போறேன்னு சொன்னனா?” என்று நக்கலாகக் கேட்டவள்…
“நான் கோர்ட்டுக்கு போவேன். அங்கு உங்க மிரட்டல் எல்லாம் வேலை செய்யாது.
இங்கவே சுமூகமா முடிச்சிக்கிட்டா நீங்க குத்தகைக்கு கொடுத்த ஆறு லட்சமாவது உங்களுக்கு மிஞ்சும். இல்லையா அதுவும் இல்லாம.. கோர்ட்டு கேசுன்னு உங்க காசுதான் வீணாகும்” என்றவள் “ஒருநாள் கூட இந்த கேஸ் நிக்காது. ஒரே நாளில் உங்க ஏமாத்து வேலைக்கு உள்ளே போயிடுவிங்க” எனக்கூறி ரத்தனத்தின் முன்னிருந்த பணத்தை எடுக்கப் போக,
“நான் பத்திரத்தை கொண்டு வாறேன்” என்று தன் சினம் மறைத்து உள் சென்றார் ரத்தினவேல்.
போன வேகத்தில் வெளியில் வந்தவர், பத்திரத்தை கயலின் முன் நீட்ட… அவளோ தாத்தா என்று அழைத்தவரை கை காண்பித்தாள்.
பற்கள் நரநரக்க பெரியவரிடம் பத்திரத்தை கொடுத்தார்.
“நம்ம ஊரில் வாய் வார்த்தையா குத்தகைக்கு எடுக்குறது தான் வழக்கம். அது நம்ம மக்கள் கிட்ட இருக்க வாக்கு சுத்தத்துக்காக, யாரும் பத்திரமெல்லாம் போடறது இல்லை. நீ பத்திரம் போட்ட அப்பவே எனக்கு உறுத்தல் தான்… சரி ஒத்தையில நிக்குற பிள்ளைகளுக்கு உதவியா இருக்குமேன்னு சம்மதிச்சேன். ஆனால் நீ மொத்தமா சுருட்ட பார்த்திருக்க” என்ற பெரியவர், பத்திரத்தை கயலிடம் அளித்தார்.
வாங்கி உண்மையானதா என்பதை சரி பார்த்தவள்,
“இவரு ரெண்டு வருஷத்துக்கு குத்தகை பங்கு தரவேயில்லை. அதுக்கு சாட்சி செங்கையன் அண்ணா, நான் மாணிக்கம் மாமாவையே சாட்சிக்கு சொல்லியிருப்பேன். ஆனால் இப்போ இவரு எனக்கு துணையா இருக்கிறதால, என் பக்கம் சொல்லுறாருன்னு சொல்லிடக் கூடாதுன்னு தான். அவங்க பக்க ஆளையே சொல்லுறேன்” என்றவளைத் தொடர்ந்த பெரியவர் செங்கையனை பார்க்க அவரும் அவள் சொல்லுவது உண்மையென தலையசைத்தார்.
செங்கையன் ரத்தினவேலுவின் கணக்கு வழக்குகளை பார்ப்பவர்.
“அதனால” என்ற கயல் ரத்தினவேலுவை அழுத்தமாக பார்த்துக்கொண்டே ” ரெண்டு வருஷத்துக்கு எனக்கு வரவேண்டிய நெல், தேங்காய், வாழை, பூந்தோட்டம் பங்குக்காக இவருக்கு சேர வேண்டிய பணத்திலிருந்து எனக்கு சொந்தமாக வேண்டிய நாலு லட்சத்தை எடுத்துக்கிறேன்” எனக்கூறி பணத்தை எடுத்துக்கொண்டாள்.
பெரியவர் கயலை மெச்சும் பார்வை பார்த்தார்.
“இதெல்லாம் சுத்த ஏமாத்து வேலை.” ரத்தினம் எகிறிக்கொண்டு வர,
“நீ நியாயமா கொடுத்திருந்தா இன்னும் அதிகம் கொடுத்திருக்கணும். ரெண்டு வருஷம் கொள்ளை லாபம் பார்த்திருக்க. தாய் தந்தையில்லா பிள்ளைகளை ஏமாத்தாத ரத்தினம்.” பெரியவர்கள் அனைவரும் கயலுக்கு பரிந்து ரத்தினத்திடம் பேச… கடைசியில் அவர் அடங்க வேண்டியதாகப் போயிற்று.
ரத்தினத்திடமிருந்து கயல் விலகிக்கொண்டாலும் அவன் கயலின் மீது விதைத்துக்கொண்ட வன்மம் வளரத் தொடங்கியிருந்தது.
“நீயெப்படி பண்ணையம் பண்ணுறேன்னு நான் பாக்குறேன்டி” என உள்ளுக்குள் கருவிக்கொண்டார்.
தனக்கு துணையாக வந்தவர்களுக்கு நன்றி சொல்லிய கயலிடம், “நீ அழகர் பெத்த புள்ளைடா… உன்னை அப்படியெல்லாம் விட்டுடமாட்டோம். உன் அப்பன் செஞ்ச நல்லது நிச்சயம் உங்களை வாழ வைக்கும்” என்று எல்லோரும் அவளுக்கு ஆதரவாக இருப்போமென்று பேச்சின் மூலம் நம்பிக்கை அளித்துச் சென்றனர்.
வீட்டிற்கு வந்தவளிடம் முகிலன் தன்னால் உதவ முடியவில்லையே என்று வருந்த, அவனை படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு சொல்லியவள்… சென்னை மருத்துவக்கல்லூரியில் முகிக்கு இடம் கிடைக்க விடுதியில் தங்கி படிக்குமாறு வழி செய்து கொடுத்தாள். மே மாத விடுமுறைக்கு மட்டுமே வீட்டிற்கு வர அனுமதித்தாள்.
அப்போதெல்லாம் வயலில் கயல் படும்பாட்டை பார்த்து முகில் மிகவும் வருந்துவான். வீட்டு வேலைக்கூட செய்யத் தெரியாமலிருந்த தன் தமக்கை கழனியில் உடல் வருத்தி வேலை செய்வது அவ்வளவு வலியை கொடுத்தது அவனுக்கு. அதனால் வீட்டில் தானிருக்கும் நேரம்… “வயல் வேலைக்குத்தான் விட மாட்டேங்கிற, சமையல் வேலையாவது தான் செய்றேன்” என்றவன் அவளுக்கு பிடித்ததையெல்லாம் செய்து கொடுத்து தன் மனதை தேற்றிக்கொள்வான்.
அப்படியும் அக்காவிற்கு பலமாய் உடன் துணை நிற்க முடியவில்லையே என்று கவலை கொள்பவனை அதட்டி உருட்டி அவனை கயல் தேற்றுவாள். முகிலன் மருத்துவராக வேண்டுமென்பதில் கவனமாக இருந்தவள், அவன் வீட்டிற்கு வரும் காலங்களில் கூட வயலில் இறங்க அனுமதிக்கமாட்டாள். அவன் மருத்துவனாக வேண்டுமென்பது அழகரின் ஆசை.
தன் சகோதரி படும் கஷ்டம் தாங்காது… “வேற யார்கிட்டவாவது கொடுத்துட்டு நீ மேற்பார்வை மட்டும் செய்யலாமே” என்ற முகியின் யோசனையை மறுத்துவிட்டாள்.
ரத்தினவேல் கொடுத்த ஏமாற்றம் அவளை யாரையும் நம்பச் செய்யவில்லை. மாணிக்கத்தை உதவிக்கு வைத்துக்கொண்டு தானே முன்னின்று எல்லாம் செய்தாள்.
தன் படிப்போடு சேர்த்து தங்கள் வயல்களையும் பார்த்துக் கொண்டாள்.
நான்கு ஏக்கர் நிலம் நெல் பயிரடலுக்கும், இரண்டு ஏக்கர் நிலம் மற்ற பயிர்கள் மாற்று முறைக்கும் விட்டு வைத்தவள் மற்ற வயல் அனைத்தையும் சரிக்கு சம பங்காக பிரித்து… மண் சோதனைக்கு உட்படுத்தி அவ்வூர் சூழலுக்கு நன்கு மகசூல் தரக்கூடிய பழக் கன்றுகள், காய்கறிச் செடிகள் வைத்து படிப்பு நேரம் தவிர்த்து மற்ற நேரம் அனைத்தையும் தன் பூமியுடனே செலவிட்டாள்.
பெண்ணாக முதலில் தடுமாறினாலும், தன் படிப்போடு சேர்ந்த இரண்டு வருடங்களில் முழு விவசாயியாக மாறிப்போனாள்.
நடுவில் ரத்தினம் எவ்வளவோ குடைச்சல்கள் கொடுத்த போதிலும் துவண்டு வீழ்ந்து போகாது மீண்டும் மீண்டும் எழுந்து நின்று இரண்டு வருடத்தில் யாரும் அசைக்க முடியாது தன் காலினை வயல் சேற்றில் (விவசாயத்தில்) ஆழ ஊன்றி நிமிர்ந்து நின்றாள்.
அதற்கு அவளின் படிப்பும் அவளுக்கு கைகொடுத்தது.
வயலில் அவள் மண்வெட்டி பிடிப்பதைப் பற்றி அன்று பேசிய ரத்தினமே இன்று அவள் வரப்பு வெட்டும் நேர்த்தியில் வியந்து போவார்.
பூமி மட்டுமே பிரதிபலனின்றி நன்மைகள் பல செய்யும். நாம் ஒன்று விதைத்தால், பூமி நமக்கு பல மடங்காகத் திருப்பிக்கொடுக்கும்.
பூமியின் அன்பிற்கு அடிமையாகிப் போனவளுக்கு எல்லாமே அவளின் வயல் என்றாகியது.
உழைத்து களைத்துப்போகமால்… உழைத்து உழைத்து உழுது கொண்டிருக்கின்றாள்.
கடந்த பாதையை நினைத்து பார்த்தவள் கொல்லைப்புறம் நோக்கிச் சென்றாள்.
அவளை கண்டதும் பொன்னி தன் ஆர்பரிப்பை “ம்மா” என்ற அழைப்பில் காண்பிக்க… சற்று முன் தோன்றிய மனதின் அலைப்புறுதலை பொன்னியின் முன் தொலைத்திட்டாள்.