அத்தியாயம் 🌾 10 :
தன் நினைவில் இல்லாதவரை, தனக்கு அறிந்து தான் இதுவரை பார்த்தேயிராத அத்தையை அவளுக்காக இல்லையென்றாலும் தன்னுடைய தந்தையின் வார்த்தைக்காக கயல் தேடத் துவங்கி ஆறு மாதங்கள் ஆயிற்று.
வீட்டிலிருக்கும் ஒரேயொரு சட்டத்தில் அத்தையின் குடும்பத்தை பார்த்தது. பார்ப்பது.
அத்தையுடன் பழகியதில்லை பேசியதில்லை நேரில் பார்த்ததில்லை. ஆனால் தந்தை சொல்லி நிறைய கேட்டதுண்டு. அவரின் வாயிலாக தந்தைக்கு தங்கையென்றால் அலாதி பிரியமென்று அவர் சொல்லும் கடந்த கால நினைவுகளின் மூலம் கயல் அறிந்தது.
இனிய நினைவுகளை மட்டுமே மக்களிடம் பகிர்ந்திருந்த அழகர்… இவ்வளவு அன்பான தங்கையை பிரிந்ததற்கான காரணத்தை மட்டும் சொல்லியதில்லை.
நடந்ததை அவரே மறக்க முயற்சித்தாரோ! மறக்க வேண்டியதை பகிர்ந்து ஏன் நினைவில் மீட்ட வேண்டுமென்று பகிரவில்லையோ! அவர் மட்டுமே அறிந்த ஒன்று.
இருக்கும்வரை ஒரு குறையின்றி பிள்ளைகளின் ஆசையை விருப்பத்தை தன்னுடையதாக எண்ணி வாழ்ந்தவர் அவரின் இறுதி நொடியில் கேட்ட ஒன்றிற்காக… அதனை நிறைவேற்றிட இப்போது அலைந்து கொண்டிருக்கிறாள் கயல்விழி.
படிக்கும் காலத்தில் எப்படி அத்தையை தேடுவதென தெரியாமல் இருந்தவள், ஓரளவிற்கு உலகம் புரிந்த பின்னர் துப்பறியும் நிறுவனத்தை தொடர்புகொண்டு தேடத் துவங்கியிருந்தாள்.
முதலில் ஆர்வமாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அவர்களை தொடர்புகொண்டு ஏதேனும் தகவல் கிடைத்ததா என்று ஆர்வமாக கேட்பவளுக்கு இந்த ஆறுமாத முடிவில் அந்த ஆர்வம் அடங்கிப்போயிருந்தது.
நிகழ்காலமென்றால் கண்டுபிடிப்பது எளிது. எவ்வித அறிவியல் வளர்ச்சியும் ஆழமாக வேரூன்றாத கடந்த காலம்… அதுவும் ஐந்து வருடங்களுக்குள் என்றால் தொலைந்த ஒன்றை கண்டுபிடிப்பது சாத்தியம். எளிதானதும் கூட. ஆனால் இதுவோ கிட்டத்தட்ட ஒருதலைமுறை இடைவெளியில் உள்ளது. அதற்கே இவ்வளவு தாமதம். அதுமட்டுமில்லாது அவர்களது பெயர் மற்றும் பழைய புகைப்படம் ஒன்றை மட்டும் வைத்து தேடுவது அவ்வளவு சுலபமான விடயமல்ல என்ற அவர்களின் பதிலில் கயல் பொறுமையாக இருக்க வேண்டிய நிலை.
அதுவும் சென்ற மாதம் அவர்களை தொடர்புகொண்டு கேட்கக்கூட இல்லை.
வேறு வழியில் தான் முயற்சிக்க வேண்டுமென கயல் எண்ணியிருக்க… நேற்று துப்பறியும் நிறுவனத்திலிருந்தே அழைத்து நேரில் வரமுடியுமா எனக் கேட்டிருக்க… உடனடியாகக் கிளம்பியுமிருந்தாள்.
நேரே அவர்களின் அலுவலகம் செல்ல இருந்தவளை அழைத்த டிடெக்ட்டிவ் க்ரிஷ் கயல் சென்னை வந்துவிட்டதை அறிந்து,
மற்றொரு விடயமாகத் தான் வெளியிலிருப்பதாக சொல்லவும்…
“இப்போ மீட் பண்ணி விஷயம் என்னன்னு தெரிஞ்சிக்கிட்டா நான் நைட்டு ஊருக்கு பஸ் ஏறிவிவேன். தங்குமளவுக்கு இங்க யாரையும் தெரியாது” என கயல் சொல்லிய பதிலில் அருகிலிருக்கும் ஹோட்டல் ஒன்றிற்கு வருமாறு கூறியதால் தான் தி வாரியருக்குள் நுழைந்து… அதனால் வேண்டபட்டவனின் கண்ணுக்குள்ளும் கயல் படுமாறு நேரிட்டது.
ஹோட்டலிற்குள் வந்த கயல் முதலில் அதனின் பிரம்மாண்டத்தை கண்டு சற்று மிரளத்தான் செய்தாள். என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தபோதிலும் இதுபோன்ற பகட்டான இடங்களுக்கு கயல் சென்றதில்லை என்பதைவிட செல்ல விரும்பியதில்லை. அவளின் விருப்பமான இடம் வயல்வெளிகள் மட்டுமே.
தைரியமான பெண் என்றபோதும்… முதல் மற்றும் புதிது சிறிது தடுமாற்றத்தை கொடுக்க க்ரிஷ் சொல்லியபடி உணவுகூடம் சென்று ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.
சில நொடிகளில் இதயத்தில் படபடப்பு. யாரோ தன்னை கூர்ந்து கவனிப்பதைப்போல் தோற்றம். பார்வையை சுழல விட்டவளின் விழிகளுக்குள் அப்படி யாரும் விழாமல் போக… முயன்று தன்னை இயல்பாக்கி அமர்ந்திருந்தாள்.
க்ரிஷ் வந்ததும்…
“சாரி வெயிட் பண்ண வச்சிட்டேன்.”
“இட்ஸ் ஓகே. நாட் ஆன் இஸ்ஸுஸ்.”
அடுத்து க்ரிஷ் நேரடியாக விடயத்திற்கு வந்தான்.
“அவங்க கடைசியா சென்னையில் அண்ணா நகரில் இருந்திருக்காங்க. அங்க ஹோட்டல் ஸ்டார்ட் பண்ணதா தகவல். அதுக்கு பிறகு வெளிநாட்டுக்கு போயிட்டதா சொல்றாங்க.
விசாரித்தவரை எந்த நாடுன்னு தகவல் கிடைக்கல.
இதுக்கு அடுத்து எந்தவொரு புள்ளியிலும் அவர்களை கண்டுபிடிப்பதற்கான தொடக்கம் பிடிபடல. அதனால் அடுத்து முடியுமா என்பது சந்தேகம் தான்.
யாரோ நண்பர் மூலமா போயிருக்காங்க. அவரைப்பற்றி எந்தவொரு செய்தியும் இல்லை. ஒருவேளை அவரைப்பற்றி ஏதேனும் தெரிந்தால் மேற்கொண்டு தொடரலாம்.”
க்ரிஷின் பேச்சில் அவர்கள் கிடைப்பார்களென்ற நம்பிக்கையே கயலுக்கு சுத்தமாக விட்டுப்போனது. முதலில் ஆர்வமாக க்ரிஷிடம் செய்தி அறிய முனைந்தவள் முகத்தில் இறுதியாக ஏமாற்றமே மிஞ்சியது.
அதன் பிறகு நேரத்தை கடத்தாது…
“தகவல் இல்லையென விட்டுடாதீங்க… எப்படியும் கண்டுபிடிக்க முயற்சி செய்ங்க” என்று வலியுறுத்தினாள்.
“இதில் ஒருகண் வைத்துக்கொள்கிறேன். டோன்ட் வொர்ரி. முடிஞ்சளவுக்கு ஒரு கேசினை வெற்றிகரமா முடிக்கத்தான் பார்ப்போம்” என்ற க்ரிஷிடம் விடைபெற்று ஊருக்கு செல்லும் பேருந்தில் அமர்ந்தவளுக்கு மனம் முழுக்க எப்படி கண்டுபிடிக்க போகிறோம் என்கிற யோசனை மட்டுமே. அந்த யோசனையோடே ஊர் வந்து சேர்ந்தவள், இந்தநொடி அதனை முகியிடம் பகிர்ந்தபடி கயல்.
“அப்போ கண்டுபிடிக்கிறது கஷ்டமா கயல்?”
முகிக்கு வருத்தம் தான். இருக்கும் ஒரு உறவும் இல்லையென்ற நிலை.
“ட்வெண்ட்டி இயர்ஸ்க்கு மேல் சொந்த ஊர் நினைவு இல்லாம எங்கோ கடல் கடந்து இருக்குமளவுக்கு என்ன நடந்திருக்கும்?” தேடலின் நுனி அந்த பிரச்சினை தானே. அதுவே தெரியாமல் இருக்க, தெரிந்துகொள்ள ஆர்வம் முகியிடம்.
தனக்கே தெரியாதபோது தம்பிக்கு எந்த கதையை கூறுவாள்.
“கரும்பு வெட்ட ஆள் வந்திடும். அதுக்குள்ள வீட்டுக்கு போயிட்டு வரணும். வாடா.”
கயல் வீடு வந்ததும் அரைமணி நேரத்தில் மீண்டும் வயலுக்கு சென்று சுற்றி ஒரு வட்டம் வந்தவள்…
பூக்கள் நிறைந்த தோட்டத்தில் நின்றிருந்த சிவாவிடம்,
“நேத்து சாயங்காலம் பூவெல்லாம் சந்தைக்கு போயாச்சா?” என்று அன்றைய நாளின் தன் பணியை ஆரம்பித்தாள்.
“அந்தியில பூக்கும் பூவெல்லாம் நைட்டே போயாச்சு கயலு. நைட் பூக்கும் வகை இப்போ தான் அறுவடை முடிஞ்சு அனுப்பி வச்சேன்” என்றவன் அவள் சென்று வந்த விடயம் என்னவென்றும் கேட்கவில்லை. அவள் எங்கு சென்று வந்தாலென்று அறிந்தகொள்ளவும் முற்படவில்லை.
சிவாவை பொறுத்தமட்டில்… கயல் அவன் வணங்கும் கடவுளுக்கும் ஒருபடி மேல். அவளில்லை என்றால் சித்தியின் கொடுமையில் என்றோ உயிர் நீத்திருப்பான்.
இன்று அவனுக்கென்று படிப்பு… செய்ய வேலையென்று அனைவரும் பார்க்கும்படி வாழும் வாழ்வு அனைத்திற்கும் காரணம் கயல்.
தங்களைப்போல் யாருமற்றவன் என்று அடைக்கலம் கொடுத்தாலும்… சிவாவை தன் குடும்பத்தில் ஒருவனாக எண்ணி அனைத்தும் செய்பவளுக்கு எதை தன்னிடம் சொல்ல வேண்டுமென்று தெரிந்திருக்கும். அதனால் எப்போதும் அவளாக சொல்லாது தனிப்பட்ட எதையும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் அவளிடம் கேட்டிட மாட்டான்.
“இன்னைக்கு அந்த வயலை உழுதுடனும். நம்மகிட்ட நாளில்லை சிவாண்ணா. தண்ணீர் வரத்து குறைஞ்சிட்டா அப்புறம் நான் நினைக்கிறதை செய்ய முடியாது” என்றவளுடன் இணைந்து நடந்தான் சிவா.
“இது சாத்தியப்படும் தோணுதா கயலு?”
கயலின் அந்த புது முயற்சி எந்த வகையில் வெற்றியடையும் சிவாவிற்கு தெரியவில்லை. அவனறிந்து இதுவரை யாரும் இதனை செய்ததில்லை.
அதனாலே இத்தகைய கேள்வி சிவாவிடம்.
“எதுவுமே ஆரம்பன்னு ஒண்ணு வேணுமில்லையாண்ணா. அது நானா இருக்கேன்.” கயலின் குரலில் ஒருவித தீவிரம். அழுத்தமான நம்பிக்கை.
இப்படி நம்பிக்கையோடு கயல் ஈடுபாட்டுடன் செய்யும் யாவும் வெற்றியின் இலக்கை தொட்டுவிடும். கண்கூடாக அவளுடன் சிவா கண்டுள்ளான்.
“நீ முடிவு பண்ணிட்ட… இதையும் செய்து பார்த்திடுவோம்.”
கயலுக்கு உடன் தானிருப்பதாக மறைமுகமாகக் கூறினான்.
அடுத்தடுத்து தங்கள் வேலைகளில் மூழ்கிப்போயினர்.
*****
காலை நேர மெல்லோட்டத்தை கடற்கரையோரம் முடித்த பார்த்திபன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவனின் அலைபேசி சிணுங்கியது.
அழைத்தது அவனின் நண்பன் தினேஷ்.
“ஹாய் டா… “
அதன் பிறகு பொதுவான நலவிசாரிப்புகளுக்கு பின்னர்…
“நான் லொகேஷன் ஷார் பண்றேன், நேரா அங்க வந்திடு” என சொல்லியவன் வைத்துவிட்டான்.
அடுத்த நாற்பது நிமிடங்களில் தினேஷ் அனுப்பிய லொகேஷனில் பார்த்திபன் நின்றிருந்தான்.
‘குளோபல் டிடெக்ட்டிவ்.’
அந்த கட்டிடத்தின் முன்னிருந்த பெயர் பலகையை பார்த்தவாறு பார்த்திபன் காரில் இருந்தபடி தினேஷிற்காகக் காத்திருந்தான்.
அதிக நேரம் காக்க வைக்காது ஐந்து நிமிடங்களில் வந்து சேர்ந்தான் தினேஷ்.
நண்பனை கண்டதும் காரிலிருந்து இறங்கிய பார்த்திபனை அணைத்து விடுத்தான் தினேஷ்.
“சாரிடா ரொம்ப நேரம் வெயிட் பண்றியோ?”
“நோ நோ… ஜஸ்ட் பைவ் மினிட்ஸ்” என்ற நண்பனின் அந்த ஐந்து நிமிடங்கள் கூட விலைமதிப்பு மிக்கவையென்று நெருங்கிய நண்பனான தினேஷிற்கு தெரியாமலா இருக்கும்.
ஒரு மெல்லிய தலையசைப்புடன் பார்த்திபன் சொல்லியதை ஏற்ற தினேஷ் அவனை கூட்டிக்கொண்டு முன்னிருக்கும் யாரிடமும் எதுவும் அனுமதி கேட்காது நேராக தலைமை துப்பறிவாளரின் அறைக்கே செல்ல… தினேஷிற்கு இவர் ஏற்கனவே நன்கு பழக்கமென பாரத்திக்கு புரிந்தது.
“ஹீ இஸ் மை கிளாஸ்மெட் டா. வெரி க்லோஸ்.”
பார்த்திபன் கேட்காமலே விளக்கமளித்தான்.
அறையின் கதவை தட்டிக்கொண்டு உள்வந்த தினேஷை தலையசைத்து வரவேற்றவரின் பார்வை அவனை கடந்து பின்னால் வந்த பார்த்திபனின் மீது படிய,
“இவர்… நேற்று…” பார்த்திபன் நினைக்கையிலேயே,
“ஹாய் சார்… நீங்க…” என்று சற்று யோசிப்பதைப்போல் பாவனை செய்து, “தி வாரியர் பார்த்திபன். அம் கரெக்ட்?” என்றான் அவன்.
அவரின் வார்த்தையின் ஆமோதிப்பை சிறு புன்னகையுடன் ஏற்றான் பார்த்திபன்.
“உங்களைப்பற்றி மேகசினில் படித்தேன்” என்றவன் இருவரையும் இருக்கையில் அமர வைத்து, பழச்சாறு அளித்து உபசரித்தான்.
பொதுவான பேச்சுக்கள் முடிய,
“அன்னைக்கு நான் சொன்னேனே அது பார்த்திபனோட அம்மா அப்பாவைப்பற்றிதான்” என்று தினேஷ் விளக்கமளித்தான்.
அன்று வெறும் பெயரை மட்டும் தினேஷ் சொல்லியிருக்க… இன்று பார்த்திபன் அவர்கள் சென்னையில் வசித்தது… ஹோட்டல் துவங்கியது அத்தோடு சிங்கப்பூர் சென்ற வருடத்தையும் கூறி “என் பூர்வீகம் பற்றி தெரிஞ்சுக்கணும். ஐ மீன் என்னுடைய ஊர் எது?” என்று கேட்டு, தன் தந்தை எதனால் கிராமத்தை விட்டு வந்தார் என்கிற காரணம் தெரியாதபோதும், “ஏதோ உறவுக்குள் தகராறு அதனால் கிராமத்தைப்பற்றி சொல்லவே என்னோட டாட்க்கு விருப்பமில்லை. டாட் வார்த்தையை நாம் மீற முடியாததால அவங்களும் நடந்ததை சொல்லமாட்டேங்கிறாங்க. ஆனால் மாம்க்கு உறவுன்னு இருக்க அண்ணனைப்பற்றி தெரிஞ்சிக்க அவ்வளவு ஆசை. அதை நான் நிறைவேற்றி வைக்க நினைக்கிறேன். அதுக்கு நீங்க இந்த ஹெல்ப் பண்ணனும்” என்று தன் பக்கமிருந்து சொல்லக்கூடிய தகவல்கள் அனைத்தையும் கூறினான்.
பார்த்திபன் சொல்வதையெல்லாம் அமைதியாகக் கேட்டபடி, தன் மேசையிலிருந்த கோப்பிலிருந்து மங்கிய வண்ணத்தில் புகைப்படம் ஒன்றை எடுத்து பார்த்திபனின் முன் வைத்தான் க்ரிஷ்.
ஆம் தினேஷ் பார்த்திபனை அழைத்து வந்து க்ரிஷிடம்.
பார்த்திபன் தன்னுடைய பெற்றோரின் பெயரை சொல்லியதுமே லேசாக மூளைக்குள் பொறித்தட்டி யோசனை ஓட, அவன் தாங்கள் இடம்பெயர்ந்த வருடத்தையும்… ஏன் கிராமத்தை விட்டு வந்தோமென்கிற காரணத்தையும் சொல்லவுமே… ஏதோ ஒன்றுக்கொன்று தொடர்புடையதென மனம் வலியுறுத்த பார்த்திபன் தான் வந்ததற்கான காரணத்தை சொல்லி முடித்ததும் படத்தை முன் வைத்தவாறு பேசினான்.
“உங்களதான் ஒருத்தவங்க சிக்ஸ் மந்த்ஸா தேடிட்டு இருக்காங்க?”
“வாட்?” பார்த்திபனுக்கு க்ரிஷ் சொல்லியது ஆச்சரியம். க்ரிஷ் அளித்த புகைப்படத்தை கையில் எடுத்து பார்த்தவனுக்கு, அதிலிருக்கும் காட்சியின் தருணம் தெளிவில்லாது மூளையின் செயலின்றி கண்களுக்குள் தோன்றியும் தோன்றாமலும் அவனை படுத்தியது.
புகைப்படத்தில் இருக்கும் தன்னை மெல்ல விரல்கொண்டு வருடியவனின் விரல், அதில் மேடிட்ட வயிற்றோடு இருந்த பெண்ணின் வயிற்றில் நிலைத்தது.
இத்தனை வருடங்களாகத் தங்களைத் தேடாதவர்கள் இப்போது ஏன் தேட வேண்டுமென்கிற எண்ணம் எழுந்த வேகத்தில் அதனை ஒதுக்கியவன், மங்கையின் அண்ணன் தான் தேடுகிறார் என்று அந்நொடி நினைக்க அதில்லை எனும் விதமாக பதில் வழங்கினார் க்ரிஷ்.
“எனக்கு கொஞ்சம் டீட்டெயில்டா சொல்ல முடியுமா? யார் தேடுறாங்க?”
“கயல்விழி.”
“ஹு இஸ் ஷீ?”
க்ரிஷ் சொல்லிய கயல்விழி யாரென்று தெரிந்துகொள்ள ஆர்வம் அவனிடத்தில்.
“அதுக்கு முன்னாடி நான் கேட்கிறதுக்கு நீங்க பதில் சொல்லணும். எங்களுக்கு ஒவ்வொரு விடயமும் பாதுகாப்பானது. தவறான நபரிடம் இன்னொருவரைப்பற்றி சொல்லிவிடக் கூடாதல்லவா?” என்ற க்ரிஷ்,
“இந்த போட்டோவில் இருப்பவர்கள் யாரென்று தெரிகிறதா?” எனக் கேட்டான்.
அதிலிருந்த ஒரு தம்பதியரை சுட்டிய பார்த்திபன்… “தே ஆர் மை பேரண்ட் அண்ட்” என்றவன் மற்றொரு தம்பதியரில் ஆணின் கரத்தில் இருக்கும் சிறுவனை காண்பித்து “இட்ஸ் மீ” என்றான்.
“அப்போ இவங்க யாருன்னு தெரியலையா?”
புகைப்படத்தில் பார்த்திபன் குறிப்பிடாதவர்களை வினவினான் க்ரிஷ்.
பார்த்திபனின் தலை தெரியல எனும் விதமாக ஆடியது.
“இவங்க தான் உங்க அம்மாவோட அண்ணன். உங்க மாமா அழகர்” என்றான்.
“ஹோ…” அவ்வளவு தான் பார்த்திபனிடம் பிரதிபலிப்பு.
“அவருடைய பொண்ணு தான் கயல்விழி. அவங்க தான் இந்த போட்டோ கொடுத்து, நீங்க எங்க இருக்கீங்கன்னு கண்டுபிடிக்கணும் சொல்லி என்னை கான்டெக்ட் பண்ணாங்க. பட் ஏன் எதுக்குன்னு அவங்க என்கிட்ட எதுவும் சொல்லல. கேட்டதுக்கு இவங்க என் அத்தை. இப்போ அவங்க இருக்க இடம் தெரியணும் சொல்லி அத்தோட நிறுத்திட்டாங்க.
நாங்களும் என் டீம் வச்சு கிட்டத்தட்ட ஆறு மாதம் கண்டுபிடிக்க தீவிரமாத் தேடினோம். பட் நோ யூஸ். பலன் பூஜ்ஜியம். நீங்க ஃபாரின் போயிட்ட வரை கண்டுபிடிக்க முடிந்த எங்களால அதுக்குமேல முடியல.
ஆனால் பாருங்க நாங்க தேடும் நபரே இப்போ எங்க கண் முன்னால்” என்றான்.
“கயல்விழி பிக் ஏதும் கிடைக்குமா?”
“அவங்க ஃபோட்டோ என்கிட்ட இல்லையே!” என்ற க்ரிஷ், “நீங்க நேத்து இந்தநேரம் வந்திருந்தா இப்போ கயல்விழி உங்ககூட இருந்திருப்பாங்க. நேத்து தான் எங்களால இதுக்குமேல் முடியலன்னு அவங்ககிட்ட அப்பாலிஜிஸ் பண்ணேன்” எனக்கூறி கூடுதல் தகவலாக, “உங்க ஹோட்டலில் தான் மீட் செய்தோம். நைட்” என்றான்.
‘அப்போ நேத்து இவரோட இருந்தவள் தான் கயல்விழியா? என் மாமன் மகளா? அதனால் தான் அவளை பார்த்ததும் ஈர்ப்பா?’
அதுவரை நேற்று தன் கனவை திருடியவளை வேறொருவனின் காதலியென நினைத்து மருகிக் கொண்டிருந்தவனின் கண்களில் ஒரு பிரகாசம். முனுக்கென்று தைய்த்த வலி இப்போது எங்கோ சென்ற மாயம்.
‘சோ, ஷீ இஸ் மைன்.’ பார்த்திபனின் மனம் சொல்லிக்கொண்டது.
அதன் பின்னர் அவர்களின் ஊர் எதுவென்று அறிந்து கொண்டவன், கயலின் குடும்பத்தைப்பற்றி விசாரிக்க…
“அவங்க பேமிலி பற்றி எதுவும் சொல்லவில்லை. நான் கேட்டதை மட்டும் கண்டுபிடிங்கன்னு சொல்லிட்டாங்க. அவங்களைப்பற்றி எனக்குத் தெரிந்த ஒன்று, பிடெக் அக்ரி படிச்சிருக்காங்க” என்று கயலைப்பற்றி தனக்குத் தெரிந்ததை சொல்ல பார்த்திபனின் முகம் தானாக சுழித்தது.
‘அக்ரிகல்ச்சரா?’ நொடியில் தன் பாவனையை மீட்டுக்கொண்டான்.
“நான் எதிர்பார்த்து வந்தது உடனே முடியும் நினைக்கவில்லை. தேன்க்ஸ் அ லாட் மிஸ்டர்.க்ரிஷ்” என்று அவனின் கை பிடித்து குலுக்கிய பார்த்திபன் “டூ யூ ஒன் ஃபேவர் ஃபார் மீ?” எனக் கேட்டிருந்தான்.
யோசனையூடே பார்த்திபனுக்கு சரியென்று க்ரிஷ் கூற,
“நீங்க இப்போதைக்கு எங்களைப்பற்றி கயலிடம் சொல்ல வேண்டாம். முடியாதென்று சொன்னது முடியாததாகவே இருக்கட்டும். எனக்கு இன்னும் சில விஷயங்கள் தெரியணும். தெரிந்ததும் நானே நேரில் குடும்பத்தோடு போய் சொல்லிக்கிறேன்” என்க, அவர்களின் குடும்ப விடயம் தனக்கெதற்கு தன் வேலையோடு தான் இருப்போமென க்ரிஷும் ஒப்புக்கொண்டான்.
மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லியவன் தினேஷுடன் வெளியேறினான்.
வீடு வந்து சேர்ந்த பார்த்திபனால்… கயலை ஏற்க முடிந்த அளவிற்கு அவளின் படிப்பினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் அவளை உன்னால் விட்டுக்கொடுக்க முடியாதென்று சொல்லும் மனதை அடக்க முடியாது தவித்தவனின் யோசனைகள் கயலைச் சுற்றியே நகர்ந்தன.
‘எதுக்காக எங்களைத் தேடுறாள்? கண்டுபிடிப்போம். முதலில் அவளைப்பற்றி முழுதாக தெரிந்துகொள்வோம்.’ மனதில் நினைத்தவன் மறுநாள் தன்னுடைய கிராமத்திற்கு செல்ல முடிவெடுத்திருந்தான்.